பா.ஜ.கவின் வியூகங்கள் முறியடிக்கப்பட வேண்டியதே தற்போதைய தேவை

பா.ஜ.கவின் வியூகங்கள் முறியடிக்கப்பட வேண்டியதே  தற்போதைய தேவை

பா.ஜ.கவின் வியூகத்திற்குள் பன்னீர்செல்வம் வெளிப்படையாகத் தெரிந்து கொண்டிருக்கும் பிம்பம் எனில் தி.மு.க மறைமுகமாக இருக்கிறது.அதிகார போட்டியில் அது வெளிப்படையாக தன்னை வைத்துக் கொள்ளத்தான் தயங்குகிறதே அன்றி பா.ஜ.கவுடன் அது பேரத்தில் ஈடுபட்டுக் கொண்டுதான் இருக்கிறது.அதிகாரத்தை ஏற்படுத்தித் தருவதற்கு உதவும் பட்சத்தில் அது பா.ஜ.கவுடன் பல சமரசங்களுக்குத் தயாராகவே உள்ளது.அ.தி.மு.கவில் உள்ள குழப்பங்களுக்கு மத்தியில் தி.மு.க அதிகாரத்தைப் பிடித்தால் தங்களுக்கு சாதகமாக இருக்கும் என்று பா.ஜ.க கருதுவதாக விகடன் செய்திகள் பேசுகின்றன.அ.தி.மு.கவில் இருந்தும் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களிடம் வந்து சேர்வார்கள் ,எனவே  தங்களுக்கு ஆட்சியமைக்கும் வாய்ப்பை வழங்க வேண்டும் என்று தி.மு.க மறைமுகமாகக் கூறிவருகிறது..தங்களால் பெரும்பான்மையை சட்டமன்றத்தில் நிரூபிக்க முடியும் என்று பா.ஜ.கவிடம்  தி.மு.க பேரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது .

பன்னீரை இப்போது பா.ஜ.கவும் சரி ,பிற அதிகாரத் தரப்புகளும் சரி சாணக்கியத்தனம் நிறைவேறிய கையோடு கைவிட்டு விட்டது போன்ற தோற்றமே  ஏற்படுகிறது. ஆளுநர் தனது கைவசத்துக்கு மாநில அரசு அதிகாரத்தை கொண்டுவந்திருப்பதும் நேற்று முதற்கொண்டு நடைபெற்று வரும் கைது நடவடிக்களிலும் எடப்பாடியை உடனடியாக அழைத்திருப்பதிலும் விளங்குகிறது.பன்னீர் செல்வம் சட்டமன்ற உறுப்பினர்களை சந்திக்க இயலாமற் போனது வெறுமனே   சட்டம் ஒழுங்கு தொடர்பான விஷயம் மட்டுமே என்று கருதுவதற்கில்லை.ஆக   நிலவரங்கள் இப்போது முற்றிலும் வேறானவை.பன்னீர்  பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பு கோரினாலும் கூட அவரால் அது சாத்தியமாகாது என்றே தோன்றுகிறது.காப்பியடிக்க வாத்தியார் அதிக உதவிகள் செய்தும் பாஸாகாத மாணவனின் நிலை இப்போது அவருடையது.சில சாணக்கியத்தனங்கள் முடிந்தவுடன்  முடிந்து போய்விட்டது அவருடைய ரோல் .

இனியுள்ள நிலவரத்தில் பெரும்பான்மையிருக்கும் பக்கத்தில் சாயவே பா.ஜ.க விரும்பும்.எனினும் குழப்பங்களில் தனக்கு தரப்பட்டுள்ள தற்போதைய நீதிமான் வேடத்தை அது கைவிடாது.எடப்பாடி பெரும்பான்மையை எட்டக்கூடாது என்கிற அதிவிருப்பம் பா.ஜ.கவிடம் மேலும் நீடிக்குமேயானால் எடப்பாடி பெரும்பான்மை அடைவதில் சில சிக்கல்கள் உருவாகும்.அப்படியொரு நிலை ஏற்படும் பட்சத்தில் பா.ஜ.கவிற்கு தற்போது உதவப் போகிறவர்கள் தி.மு.கவாக இருப்பார்கள்.உறுதியான அதிகாரத்தை எவரேனும் ஒருவர் எட்டுவது வரையில் இந்த இழுபறி நிலையில் மாற்றம் உருவாகாது.தி.மு.கவைப் பொறுத்தவரையில் இந்த அதிகார போட்டியில் வெளிப்படையாக தங்கள் முகம் வெளுத்து விடக்கூடாது என்பதிலும் ,மறைமுகமாக எவ்வளவு   வெளுத்தாலும் பரவாயில்லை என்கிற நிலையிலும்தான் இருக்கிறார்கள்.

இந்த நிலையிலும் நேற்றே எடப்பாடியை முன்னிறுத்தியதை சசிகலாவின் புத்திசாலித்தனம் என்றே கருதுகிறேன்.ஏனெனில் பா.ஜ.கவின் வீட்டுப்பாடத்தை ,வியூகத்தை ; பன்னீர் ,தி.மு.க போன்ற தரப்புகளின் சக்கர வியூகத்தை எடப்பாடியின் நுழைவு முறியடிக்கிறது.பா.ஜ.கவின் வியூகம் முறியடிக்கப்படுகிற பிற எல்லா சம்பவங்களையுமே நான் நன்மையானவை என்றே இவ்விஷயத்தில்  கருதுகிறேன்.காரணம் காங்கிரஸாக இருந்தாலும் சரி ,பா.ஜ.கவாக இருந்தாலும் சரி ,இது போன்ற அரசியல் நிலவரங்களை பயன்படுத்தி மாநில அரசுகளில் விளையாடும் போக்கு பிற எல்லாவற்றையும் காட்டிலும் அநாகரீகமானது ,தீமை நிறைந்தது.இது முறியடிக்கப்படுதல் முதன்மையானது என்பதே எனது எண்ணம் .

அ.தி.மு.க அரசமைக்கும் வாய்ப்பை குழப்பங்களால் கைவிடக்கூடாது என்பது மட்டுமல்ல,மீதமுள்ள காலங்களை தமிழ்நாட்டில் மிகுந்த சாதுர்யத்துடன் கொண்டு செலுத்தவேண்டும்.இதில் ஏற்படுகிற பிழைகள் எதுவாக இருந்தாலும் வியூகங்கள் வெற்றிபெற அரசியல் எதிரிகளுக்கு வழியமைத்துக் கொடுக்கும்.தி.மு.கவில் இருப்பது போன்ற தலைமையில் உறுதிநிலை தற்போதைய அ.தி.மு.கவில் இல்லை.மக்கள் பிரச்சனைகளில் அக்கறைகள் எடுத்துக் கொள்வதன் மூலமாக அவர்கள் அதனை ஈடு செய்ய முடியும்.

ஆட்சியமைப்பதற்கான சாதுர்யத்தை இழக்காமல் இருப்பதும் ,மீதமுள்ள காலத்தை சீராக நிறைவேற்றுவதும் மட்டுமே இப்போது  அ.தி.மு.க முன்னர் உள்ள நேரடியான சவால்கள்.புத்திசாலித்தனத்துடன் நடந்து கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment

கடற்கரை கிராமங்கள் சிறை வைக்கப்பட்டுள்ளன.

கடற்கரை கிராமங்கள் சிறை வைக்கப்பட்டுள்ளன. இன்று காலையிலேயே வழக்கத்திற்கு மாறாக கன்னியாகுமரி மாவட்டம் விடிந்தது.கடற்கரைகளில் இருந்து ...