எவ்வாறு இன்றைய சிந்தனை முறை உருவாகி வந்தது ?

எவ்வாறு இன்றைய சிந்தனை முறை உருவாகி வந்தது ?




திருநெல்வேலியில் ஜெயமோகன் ஆற்றிய உரை மிகச் சிறந்த உரை.சு.ராவின் மொழியில் சொன்னால் ஆகச் சிறந்த உரை எனலாம்.எளிமையான வடிவத்தின் பால் அமைந்திருந்த அந்த உரை ஏராளம் கிளை வாயில்களை கொண்டு அமைந்திருந்தது.அதிலிருந்து கிளைத்து எந்த பக்கம் வேண்டுமானாலும் திரும்பலாம்.திரும்பும் ஒவ்வொரு திசைகளிலும் கண்டடைய பல விஷயங்கள் உண்டு. பன்முகத்தன்மையை தன் முழுமையில் நிறைத்திருந்த உரை அது.நவீனத்தின் குறுகிய சந்தில் இருந்து விடுபட்டு வெகுதூரம் பயணித்த உரை.பெரும் தரிசனம் என்றால் அதில் பிழையில்லை.இரண்டு மணிநேரம் அந்த உரையை கேட்டவர்கள் இருபது வருடங்கள் செலவு செய்தாலும் அடைய முடியாத தரிசனத்தைப் பெற்றிருப்பார்கள் .இதனை ஒரு அடிப்படை தரிசனம் என்பேன்.இதனை உணரும் ,காணும் தன்மை பெறாதவர்களின் விமர்சனங்கள் ,எதிர்வினைகள் ,செயல்கள் அனைத்தையும் வீணானவை அல்லது பொறுப்படுத்த லாயக்கற்றவை என்று சொல்லி விடலாம்.
சு .ராவின் பெரும்பாலான உரைகளை கேட்கும் வாய்ப்பினைப் பெற்றிருக்கிறேன்.கச்சிதத்தன்மையோடு , தான் கொண்ட பொருளில் விலகாத தன்மையுடன்; அவருடைய கட்டுரைகளுக்கு இணையாக நிற்கும் உரைகள் அவை.அது போல நாடகத்துறை பேராசிரியர் ராமானுஜம் ,பாதல் சர்க்கார் ஆகியோருடைய உரைகளும் கலை பற்றிய நவீன கண்ணோட்டங்கள் கொண்டவை.தெளிவானவை.நமது பார்வைகளை விரிவுபடுத்தக் கூடியவை.அவ்வுரைகள் எல்லாம் என்னை மிகவும் கவர்ந்திழுத்திருக்கின்றன.ஆனால் நான் இதுவரையில் கேட்ட உரைகளிலேயே கேட்டு வியப்படைந்த உரை ;திருநெல்வேலியில் ஜெயமோகன் ஆற்றிய உரை .சற்றும் மிகையாக நான் இதனைச் சொல்லவில்லை.இரண்டு மணிநேர உரைமூலமாக, தான் கண்ட தரிசனங்களை ஒருவர் இவ்வளவு கச்சிதமாக பிசிறின்றி முன்வைக்க முடியுமா ? என வியந்து போயிருந்தேன்.அவருடைய உரைகளையும் ஏற்கனவே கேட்டிருக்கிறேன்.உள்ளடக்கத்திற்கு ஏற்ற வடிவ ஒழுங்கு அவருடைய உரைகளில் எப்போதுமே இருக்கும்.இதுவரை அவர் ஆற்றிய உரைகளிலும் இது தலை சிறந்த உரை என்பதே என்னுடைய எண்ணம்.
இருநூறு வருட பழைமையான வீடு பற்றிய உருவகத்திலிருந்து அவர் தன்னுடைய உரையைத் தொடங்கினார்.இருநூறு வருட பழைய வீட்டில் வசிப்பவர் ,அதற்கு வெளியில் வாழும் தகுதியை இழந்தவராகவும் இருக்கலாம்.ஏனெனில் வீடு என்பது ஒரு சிந்தனையின் வடிவமைப்பு கொண்டது.ஒவ்வொரு வீட்டிலும் ஒருவித சிந்தனை புழங்குகிறது.பின் வந்த ஐரோப்பிய வீடுகள் வேறு விதமான சிந்தனையுடன் வருகின்றன.சமையல் அறை கூடத்திற்கு அருகில் வருகிறது.பழைய வீட்டில்,அது வீட்டின் முன்பக்கத்திலிருந்து வெகுதூரத்தில் கொல்லையில் வைக்கப்பட்டிருந்தது.பின்பக்கம் சந்தடியென்றால் முன்பக்கம் ஆணதிகாரம் .சந்தடியின்மை.தேநீர் விருந்தினர்களுக்குத் தருகிற பெண்கள் கூடத்திற்குப் பின்னால் அமைந்த கதவுகளின் பின்னிருந்து கைகளை நீட்டுகிற பழைய வீடுகள்.இவையெல்லாம் அவருடைய உரையில் இருந்தவை.எவ்வளவு புதியவராக இருந்தாலும் ஒருவரை பழைய வீட்டில் சில காலம் அடைத்து வைப்போமெனில் அவர் அப்படியே அந்த காலத்திற்குரியவராக மெல்ல மெல்ல முரண்டு பிடித்து பின்னர் மாறிவிடுவார் என என்னால் சொல்லி விட முடியும் .இருநூறு வருட பழைமையான வீட்டிற்குள் காலடி எடுத்து வைக்கும் போது நூறு நூறு ஆண்டுகளாக பின்னகர்ந்து செல்வது போலிருந்தது என்றார் உரையில் ஜெயமோகன்.
அந்த இருநூறு வருட பழைமையான வீடு மூவாயிரம் ஆண்டுகள் திரண்டு நம்மிடம் வந்து சேர்ந்தது.ஒரு உயிருள்ள ஜீவனுக்கு ஒப்பான பரிணாமம் கொண்டது.இதனை மரபான நம்முடைய மனதின் உருவகமாக நம் முன் நிறுத்தினார் ஜெயமோகன் .அது நம்முடைய மனம் ஏற்றெடுத்திருக்கும் சாராம்சம்.அது நம்முள் இருக்கிறது.இருக்கும்.
இந்த வீட்டில் பல்வேறு உணரப்படாத பிரச்சனைகளும் இருந்தன.தனி மனிதனுக்கு இங்கே வேலையில்லை.இந்த வீடுகள் தனி மனிதனுக்குரியவையும் அல்ல.குழுக்களுக்குரியவை.கூட்டங்களுக்குரியவை.சாதிகளுக்குரியவை.ஐரோப்பிய வீடுகள் தனி மனிதனுக்குரிய முக்கியத்துடன் இங்கே வந்து சேருகின்றன.நமது கலாச்சாரத்தின் மேலாடை போல அவை முதலில் வந்து சேருகின்றன.இன்று தவிர்க்க முடியாத உலகளாவிய குளோபல் வீடுகளாக அவை நம்முடைய மன அடுக்கில் ஏறி அமர்ந்திருக்கின்றன.இவ்வாறாக வீட்டினை ஒரு உருவகமாக கொண்டு நகர்ந்த படைப்பூக்கம் மிகுந்த அந்த உரை பேசியது என்ன ? அவற்றை எப்படி தொகுத்துக் கொள்வது ?
1
இந்திய சிந்தனை மரபுகள் பெரிய மரபு சிறிய மரபு என பிரிக்க இயலாதவாறு ஒன்றுடன் ஒன்று கலந்தவை .சிறிய மரபுகள் பெரிய மரபுடனும் ,பெரிய மரபுகள் சிறு மரபுக்களுடனும் இருவழிப்பாதைகளால் கலந்தவை.ஐரோப்பிய கருத்தாக்கங்கள் ,இவற்றையே எனது மொழியில் நான் பல சமயங்களில் கிறிஸ்தவ கருத்தாக்கங்கள் என்கிறேன்.ஐரோப்பிய கருத்தாக்கங்கள் இவற்றை இருநிலை கருத்தாக்கங்களாகப் பிரித்து உள் முரண்பாட்டை ஏற்படுத்தி ஒன்றிற்கொன்று முரணானவை என்பது போல நிறுத்த முயல்கின்றன.
2
ஜைனம் .பவுத்தம் போன்ற பெரு மரபுகள் கூட இந்து பண்பாட்டிலும் அவற்றிலும் கலந்தே இருக்கின்றன.விஷ்ணுவின் பத்தாவது அவதாரமாக புத்தர் அமைக்கப்பட்டுள்ள கோயில்களையும் ஜெயமோகன் தனது பேச்சில் குறிப்பிட்டார்.அது போல ஜைன கோயில்களில் உள்ள இந்து அடையாளங்கள் என்ன என்பதனையும் அவர் குறிப்பிட்டு பேசினார்.
3
மதங்களுக்கு அடிப்படையாக ஒரு தரிசனம் அமைந்திருப்பதும் பின்னர் அவை சடங்கியலாக உருமாற்றம் அடைந்து அன்றாட வழிபாட்டிற்குள் எவ்வண்ணம் பிரவேசிக்கிறது என்பதனை ஜெயமோகன் பேசிய விதம் வியப்பிற்குரியது.பௌத்தத்தின் மஹா தம்மம் எல்லா பிரபஞ்ச இயக்கத்திலும் ஒரேவிதமான ஒழுங்கு இருப்பதை ; அவ்வொழுங்கில் கோர்க்கப்பட்டிருப்பதை தரிசனமாக முன்வைத்தது. ஜெயமோகன் அதனை விவரித்த விதம் கவித்துவத்துடன் அமைந்திருந்தது.மழை கீழ் நோக்கி வருவதும் ,தீ மேல் நோக்கியெழுவதும் ஒரேவிதமான செயல்களே .அவை இரண்டுமே ஒரேவிதமான ஒழுங்கின் விளைவுகளே .நமது பார்வையில் இரண்டாக தெரிகின்றன.
4
ஐரோப்பிய சிந்தனைகளின் தாக்கம் குறிப்பாக தாராளவாதத்தின் தாக்கம் ; நம்மிடம் கொண்டு செலுத்தியுள்ள பங்களிப்புகள் என்ன என்ன ? அவற்றின் குறுகலான தன்மைகள் எப்படியேற்படுகின்றன ! அவற்றிற்கான காரணங்கள் என்ன ? இவற்றைப் பற்றி உரையில் நிறைய தெளிவுகள் இடம்பெற்று இருந்தன.
5
முடிவாக இங்கே ஒருங்கிணைக்கிற ஒரு தரப்பாரும் ,பிளவு படுத்துகிற ஒரு தரப்பாரும் தொடர்ந்து தொழிற்பட்டுக் கொண்டேயிருக்கிறார்கள்.விவேகானந்தர் முதல் வள்ளலார்,நாராயண குரு வரையில் தாராளவாதத்தின் ஏற்கக் கூடிய கூறுகளை ஏற்றுக் கொண்டு ஒருங்கிணைப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்கள் .வரலாறு முழுதும் இவர்கள் சிந்தனை மரபில் தொடர்ந்து இருந்து வருகிறார்கள் பணியாற்றுகிறார்கள்.பா.ஜ .க இந்திய மரபுகளை ஒற்றைச் சட்டகத்திற்குள் அடைத்து அரசியல் அதிகாரமாக மாற்ற விளைகிறது.ஐரோப்பிய வாதத்தை நம்பி நடப்போரும் ,அதன் பயனாளிகளான மார்க்சியர்களும் இருமை நிலையை பண்பாட்டின் அனைத்து தளங்களிலும் ஏற்படுத்துவதன் மூலமாக அதிகாரத்தை பெற முயற்சிக்கிறார்கள்
###
உரையை நேரில் கேட்டவர்களுக்கு நான் இங்கே எழுதியிருப்பதிலும் அதிகமாக தெளிவு உண்டாகியிருக்கும்.இருபது வருடங்கள் செலவழித்து தீவிரமாகத் தேடி அடைய முடியாத தெளிவு.நேரமின்மை காரணமாக இவ்வுரையை பற்றி மிகவும் சுருக்கமாக என்னுடைய மனப்பதிவை இங்கே எழுதியிருக்கிறேன்.இந்த உரை பற்றி பேச பல்வேறு விஷயங்கள் உண்டு.
உரையை கேட்காதவர்கள் மீண்டும் பழைய குதிரைகளிலேயே ஏறி அமர்ந்து கேள்விகளையும் கேட்கக் கூடும்.அதனை பரிதாபமான ஒரு நிலை என்றே என்னால் சொல்ல முடியும்

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்