Posts

Showing posts from June, 2017

நீங்கள் என்னிடம் வேறு எதையோ எதிர்பார்க்கிறீர்கள்

Image
நீங்கள் என்னிடம் வேறு எதையோ எதிர்பார்க்கிறீர்கள் -கவிதைகள் 1 பாதி ஆயுள் முடிந்தது மூன்று கழுதை வயதும் ஆகிறது நீ கொல்லப்படுவதற்கான எத்தனை தகுதியை வளர்த்து வைத்திருக்கிறாய் இதுகாறும் ? நான் கொல்லப்படுவதற்கான அனைத்து தகுதிகளையும் கைக்கருகிலேயே வளர்த்து வைத்திருக்கிறேன் உனது தகுதியைச் சொல்லி விரைந்து வந்து எனது அறைக் கதவைத் தட்டு தேவைப்படும் ஆயுதங்கள் அனைத்தையும் உனக்கு நானே பரிசளிக்கிறேன் 2 படித்துறையில் சாயங்காலம் இறங்கிக் குளிக்கும் செல்ல மகளை இடுப்பில் எடுத்து கொஞ்சிக் கொண்டிருக்கிறது இந்த புனிதக்குளம் அவள் மூழ்க ஆடைகள் எழும்பி தாமரை வட்டம் குதூகலம் பக்கத்து படித்துறையில் இறங்கி கொண்டிருக்கும் பையனை ஏனென்று கூட கேட்க தயாராயில்லை 3 தள்ளாடி ஆட்டோவில் வந்திறங்கும் தந்தையின் கையில் பால் பாக்கட் கைக்குழந்தையை ஒரு கையால் தூக்கிச் செல்வது போல செல்கிறான் தள்ளாடுகிறது குழந்தை அத்தனைத் தள்ளாட்டத்திலும் அவன் கை குழந்தையை கைவிடவில்லை பால்பாக்கட் முனையை சுருட்டிப் பிடித்திருக்கிறான் பால்பாக்கட்டை எடுத்து கொண்டு தருகிறேன் என்று சொன்னவனை

இறந்த காலத்தைப் பேசுதல் அல்லது புணர்தல்

Image
இறந்த காலத்தைப் பேசுதல் அல்லது புணர்தல் நம்மில் பலருடைய பிரச்சனையே சதா நாம் இறந்த காலத்தைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறோம் என்பதுதான்.அப்படியொரு காலம் நாம் கருதுகிற அளவிற்கு சச்ரூபமாகக்  கிடையாது.இறந்த காலத்தை பற்றி பேசுவதில் மிகைக்கு அளவே கிடையாது.அது ஒரு கற்பனை காலவெளி.புனைவு வெளியும் கூட. அதிலிருந்து நிகழ் காலத்திற்குள் பிரவேசிக்கும் தரிசனங்களும் ,கண்ணோட்டங்களும் இருக்குமேயானால் அதுவே படைப்பூக்கம்  நிறைந்தது.நான் காணும் மனிதர்களில் பெரும்பாலோர் கடந்த காலத்தைப் பேசுபவர்கள்.அதனாலேயே புலன்கள் ,அறிவு,உடல் அவர்களிடம் செயலற்றுப் போகிறது. மன அழுத்தம் மித மிஞ்சுகிறது."முன்பு சரியாக இருந்தது இப்போது எல்லாமே கெட்டு விட்டது" ,என்கிற வாக்கியம் இத்தைகைய பலர் உபயோகிக்கும் பொது வாக்கியம்.இப்போது தின்ற இனிப்பு தித்திக்கவில்லையா ? இல்லை அது முன்னர் இருந்தது போல இல்லை.இந்த முன்பு என்பது ஒருவித மயக்கநிலை.கடந்த காலம் பயங்கரம் என்போரும் , கடந்த காலம் சுவர்க்கம் என்போரும் அடிப்படையில் ஒரே நபர்கள்தான் . குரல்கள்தான் வேறுபடுகின்றன.மயக்கத்தைத் தாண்டி செயலில் முன்னேற இயலாத அனைவருமே இத்தகைய

அரசுப்பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகள் அரசுப்பள்ளியில் பயிலவேண்டும்

Image
அரசுப்பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகள் அரசுப்பள்ளியில் பயிலவேண்டும் இல்லையெனில் தமிழ் நாட்டில் அரசுப்பள்ளிகளை காப்பாற்றவே இயலாது. உங்கள் மதிப்பீடுகள் ,ஆர்வம் ஒரு திக்கிலும் பணி மறு திக்கிலும் இருந்தால்  நீங்கள் பணியை பாரமாகத் தான் பார்ப்பீர்கள்.ஒரே மருத்துவரை நீங்கள் சென்று அரசு மருத்துவமனையிலும் அவருடைய தனியார் கிளினிக்கில் போய் பார்ப்பதற்கும் இடையில் பெருத்த வித்தியாசங்கள் உண்டு.ஒரே மருத்துவர்தான்.ஒரே நபர்தான்.இரண்டு இடங்களிலும் இரண்டுவிதமாக சுபாவத்தில் அவர் மாறுபடுகிறார்.நீங்கள் காலையில் அதே நபரை அரசு மருத்துவமனையில் போய் பார்த்து விட்டு மாலையிலேயே தனியார் மருத்துவமனையில் சென்று பாருங்கள் புரியும். பள்ளியாசிரியர்கள் மட்டும் என்றில்லை .அரசுப் பணிபுரிவோர் அரசு சார்ந்த துறைகளில் பள்ளி ,மருத்துவம்,போக்குவரத்து இப்படி பயன்படுத்த வேண்டும் என்கிற நிலை உருவாகவேண்டும் .இல்லையெனில் சீர்கேடுகளை நாள் தோறும் புலம்பலாமே ஒழிய எந்த முடிவையும் எட்ட முடியாது. காலையில் தனது வாடகைப் பாடசாலையில்  ஐந்து முதல் எட்டு மணி வரையில் பாடம் நடத்துகிற ஒரு ஆசிரியர் பள்ளி வகுப்பை தூங்குவதற்கான இடமாத்தான் பயன்

டம்ளர் உரிமைகள் என்பது அரசியல் கபட நாடகம்

Image
டம்ளர் உரிமைகள் என்பது அரசியல்  கபட நாடகம் தமிழர்களை பன்னெடுங்காலமாக ஏமாற்ற பயன்படும் கபடநாடகம்.ஒரு அடையாளம் அரசியல் அதிகாரத்தைத் திரட்டுவதற்காக மட்டும் எப்போது   முன்வைக்கப்படுகிறதோ அப்போதிலிருந்து அது தனது கபட நாடகத்தின் முதற்காட்சியை தொடங்குகிறது.பூர்வீக அடையாளங்கள் அரசியல் ரீதியாக முன்வைக்கப்பட வேண்டியவை அல்ல.இன மேலாண்மைக் குரல்கள் எந்த அரசியல் பின்னணியிலிருந்து கிளம்பும் போதும் அவை இன மையவாதத்தை நோக்கி கீழிறங்கும் தன்மை கொண்டவை.தமிழன் கொண்டுள்ள தாழ்வுணர்ச்சியை அதிகப்படுத்தவே இது உதவும்.நிதர்சனமான பிரச்சனைகளில் இருந்து பின்னகர்த்திக் கொள்ள மட்டுமே இவை உதவும். தீவிர தமிழ் பற்றாளர்கள் என்று தங்களை முன்னிறுத்தும் பலரை சிறு வயது முதற்கொண்டு பார்த்து வருகிறேன்.அவர்களில் பலர் தமிழ் மொழி,பண்பாடு சம்பந்தமாக குறைந்தபட்ச  அறிவைக் கூட கொண்டிருந்ததில்லை.இப்படி தீவிர தமிழ் பற்றை ஜோடிப்பவர்களில் பலர் தமிழர்கள் அல்லாதவர்களாக இருப்பதையும் கவனித்திருக்கிறேன்.ஓங்கி இருந்த இனம் என்று தொடங்கி தன் சொந்த சொந்த சாதிக்குள் வந்து சரணடைவார்கள் பலர்.தங்கள் சொந்த சாதியினர் மட்டுமே தமிழர்கள் என்று அவர்க

நிலமும் விண்ணும் கொள்ளும் முயக்கம் போலே

Image
நிலமும் விண்ணும் கொள்ளும் முயக்கம் போலே பல கைகள் கிளர்ந்து எழுகிற அம்மன் பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்துகிறவளாக இருக்கிறாள் .நிலமும் விண்ணும் கொள்ளும் முயக்கம் போலே .அது சில நிமிடங்கள் மனதை விடுவதில்லை.கட்டியாகப் பிடித்துக் கொள்கிறது.சிதம்பரம் நடராஜர் போலே கிளந்தெழும் இத்தைகைய  அம்மன் வேறு ஒரு வகை .பிரபஞ்ச காஸ்மிக் நிலை உருவகங்கள்.  கவிதையில் அடைகிற கிளர்ச்சி போன்றதொரு கிளர்ச்சியை இத்தகைய அம்மன் உருவங்களும் ஏற்படுத்துகின்றன. பல்வேறுவிதமான நிலைகளில் உள்ள அம்மன் உருவங்கள் எல்லாமே சிலாகிப்பிற்குரியவைதான்.ஆண்டாள் ஒரு காலை உயர்த்திய வண்ணம் திருவீதி வரும் போது,தாயே எனக்கு மொழியைத் தா ,அருளைத் தா..  என கேட்பது துறந்து,கை  மறந்து  பலசமயங்களில் சரணடையவே மனம் விருப்பு கொள்கிறது.மதுரை மீனாட்சியின் கால்களில் விழாமல் ஏதேனும் பலனுண்டா ? மாஸான அம்மன் படுத்திருக்கும் வினோதம் என்ன சொல்கிறாள் இவள்  ! என்னும் திகைப்பு கொள்ளச் செய்வது . கழிந்த முறை மதுரை செல்லும் போது கூடல் அழகர் பெருமாள் கோவிலுக்குச் சென்றோம்.விக்ரமாதித்யன் நம்பி,அதீதன் ,ரோஸ் ஆன்றா,ரிஷி நந்தன் ஆகியோர் உடனிருந்தார்கள்.அந்த கோவிலு

அப்பா

Image
அப்பா என்னை வேகவேகமாக எதிலேனும் கரையேற்றி விடவேண்டும் என நினைத்தார்.பின்னாட்களில் வருகிற நாட்கள் அவ்வளவு இசைவானவையாக இருக்காது என்று அவருக்குத் தோன்றியிருக்க வேண்டும் .எதிலேனும் ஒன்றில் பற்றிக்கொள்ள மாட்டானா என்பதில் அவருடைய அத்தனை முயற்சிகளும் இருந்தன.அம்மா இறந்ததை உணர்ந்த அன்றிலிருந்தே கடுமையான பாதுகாப்பின்மை என்னை உள்ளத்தில் தொற்றிக் கொண்டது.பாதுகாப்பின்மையை தூண்டும் செயல்களில் இருந்து என்னை விலக்கிக் கொள்ள கடுமையாக முயன்றேன்.அவருடைய அக்கறைகளும் எனது பாதுகாப்பின்மையை தூண்டுவதாக அமைந்தது துரதிர்ஷ்டவசமானது.அம்மாவை இழப்பது என்பது எந்த ஒரு குழந்தைக்கும் தனது சொந்த இயல்பிலிருந்து துண்டிக்கப்படுதலுக்கு ஒப்பான காரியம் அம்மா அகன்று சென்ற அந்த தினத்தில் நாங்கள் குழந்தைகள் ; அம்மாவின் ஊரில் விளையாடிக் கொண்டிருந்தோம்.அவள் அகன்று விட்டாள் என்னும் செய்தி என்னை வந்தடைந்தது வினோத ஸ்பரிசம் மூலமாகத் தான்.அன்று என்னைத் தொட்டவர்கள் ,தூக்கி வந்திருந்தவர்கள் ,கொஞ்சியவர்கள் ,ஆறுதல் சொன்னவர்கள் எல்லோருமே மிகவும் மோசமானதொரு செய்தியை ஸ்பரிசம் மூலம் அருவெறுப்படையும் விதத்தில் உணர்த்திக் கொண்டிருந்தார்

தவம் பயிலுங்கள்

Image
                                                             தவம் பயிலுங்கள் தவம் என்பதற்கு ஏராளமான அர்த்தங்கள் உள்ளன.நான் அவற்றையெல்லாம் சுட்டவில்லை.எளிமையாக அமர்ந்து ஒரு அரை மணிநேரமேனும்  மனதை ஒருமையில் நிறுத்துவதைச் சொல்கிறேன்.அதற்கு பாடமும் பயிற்சியும் நிச்சயம் அவசியம் .அது முறையான  பாடமாக இருத்தல் வேண்டும்.தனிநபர்களிடம் கற்றுக் கொள்ளுதல் சிறப்பாகாது.இயற்கையின் இயங்கு நிறுவனத்தை நம்மில் கற்றுக் கொள்ளும் முறையியல் அது.தகுந்த பள்ளியில் அதனை கற்பதே நல்லது நானெல்லாம் நிறைய காலவிரயத்தை ஏற்படுத்திய பின்னர்தான் கற்க தொடங்கினேன் .அதனாலேயே இதிலும் நானொரு பின்தங்கிய மாணவன்.தொடர்ந்து பத்தாண்டு காலத்திற்கும் மேலாக தொடர்ந்தும், விட்டு விட்டும் பயில்கிறேன்.யோகமும் தவமும் எனக்கு உடல் பற்றிய தெளிவை ஏற்படுத்தியவை.வள்ளலார் உடலில் தெளிவு ஏற்படுதலே முதல் இன்பம் என்கிறார்.உடல் நம்முடையதல்ல அது இயற்கையின் ஸ்தாபனம் .புலன்கள் கொண்டு நடக்கும் ஆசைகள் மட்டுமே நம்முடையவை.உடல் என்பது  உலகைக் காணச் செய்யும்,உணர வைக்கும்  அகக்கருவி.புறத்தில் தூண்டப்ப பட்டு நிற்கும் அகக்கருவி அது.மேலை நாடுகளில் ஜப்பான் ,சீ

மாபெரும் நகரத்தின் ராணி தேனி-ஆறு கவிதைகள்

Image
மாபெரும் நகரத்தின் ராணி தேனி -ஆறு கவிதைகள் 1 என் பிணத்தை அழைத்துக் கொண்டு எனது கவிதைகளை காட்டித்தர சென்று கொண்டேயிருக்கிறேன் போகுமிடமெங்கும் நீங்களும் இணைந்து கவிதைகளை அடையும் போது பிணம் எழும்பி "ஆஹா" என்கிறது ஆச்சரியத்துடன் அடுத்த கவிதையில் தடுக்கி விழுகிறது எனது உயிர் 2 நானின்று மலை பார்த்தேன் சாரலில் நனையும் யோனிகள் கணக்கில்லை யோனித்தடமெங்கும் வழிநின்று கொண்டாடும் தாவரங்கள் ஊறும் சுனைகள் சூரியனும் வந்து இணையும் போது பெருங்காம நிர்வாணம் கண்களில் கூச்சம் எதற்கும் அஞ்சாமல் நிமிர்ந்து நிற்கிறது மாமலை கரையோரம் தேசிய நெடுஞ்சாலை பதற்றத்தின் ஹாரன் ஒலிகள் பிரம்மச்சரிய மயில்களின் அகம் பிளந்து கிழிக்கும் ஹாரன் ஒலிகள் காப்பாற்றுங்கள் ஈஸ்வரா ... மாமலையை தெய்வ யோனிச்சுரப்பை எங்களை ... ஒதுங்கிச் செல்கிறோம் இந்த பிரம்மச்சரிய மயில்களை கொஞ்சம் வழிவிடச் சொல்லுங்கள் அடைத்துக் கொண்டு நிற்கிறார்கள் 3 கோவிலைக் கைவிட்டோம் அவர்கள் எடுத்துக் கொண்டார்கள் சூதனமாக குளத்தைக் கைவிட்டோம் அவர்கள்  எடுத்துக் கொண்டார்கள் வளைத்து தவத்தைக் கைவிட்டோம் அவர்கள்

அ. மார்க்ஸ் என்னும் கிறிஸ்தவ வெறியர் ,கருத்தியல் கோமாளி

Image
 அ. மார்க்ஸ் என்னும் கிறிஸ்தவ வெறியர் ,கருத்தியல் கோமாளி அ.மார்க்ஸின் உள்ளடக்கம் கிறிஸ்தவத்தின் கலாச்சார ஆக்கிரமிப்பு வெறி மட்டுமே .மார்க்சிய கருத்தியல்கள் வழியாக அவர் அதனை பூசி மெழுகி கவசமாக பயன்படுத்தி வருகிறார்.தனது கிறிஸ்தவ வெறியை ஸ்தாபித்துக் கொள்ள தீவிர  இஸ்லாம் ஆதரவு நிலை போன்று தன்னை புனைவு செய்து கொள்கிறார் .அது தனக்கு ராணுவம் போன்று பயன்படும் என்பது அவருடைய கணிப்பு.உறவிற்கு அது அவருக்கு சாதகமாக தங்கள் பாதுகாப்பின்மையின் கதி நிலை காரணமாக சாய்வு கொண்டிருப்பதும் உண்மை .ஆனால் அவருடைய கருத்தியல் வேஷம் கலையும் பட்சத்தில் இஸ்லாமியர்களுக்கு அவர் துரஷ்டமானவராக மாறிவிடுவார் என்பதில் சந்தேகமே வேண்டாம் .அவருடைய இதுவரையிலான பிரதிகளைக் கொண்டு அவருடைய கிறிஸ்தவ வெறியை வெளிப்படுத்துவது மிகவும் எளிது.அவருடைய கற்பனைகள் ஊர் கோமாளிகளின் கற்பனைகளுக்கு நிகரானவை.கார்ல் மார்க்ஸின் பெயரின் பின் பகுதியை சூட்டிக் கொண்டதால் ஒருவர் மார்க்சியர் என்றெல்லாம்   ஆகிவிடாது கருத்தியல் ரீதியாக எதிர்நிலையிலோ மாறுபட்டோ இருப்பவர்களைக் குறித்து வெற்று அவதூறுகளை எந்த எல்லை வரையில் வேண்டுமாயினும் சென்று சிந்தக

மடத்தனங்களின் அருமை

Image
மடத்தனங்களின் அருமை எப்போதும் ஒன்றிற்கும் அதிகமான மடத்தனங்களை கையில் வைத்திருப்பவர்கள் வாழ்வதை லெகுவாக்கி வைத்திருக்கிறார்கள்.காரண காரியங்களைத் தேடாமல் பிரயாணிக்கிற காரியங்களே மடத்தனங்கள்.எல்லாவற்றிலும் காரண காரியங்களை தேடித் கொண்டிருப்போருக்கு சிக்கலாகி விடும்.தடுக்கி விழுகிற போது ஓடிச் சென்று சரணடைய ஏதேனும் மடத்தனம் கையில் இருக்க வேண்டும்.சதா சந்தோஷங்களில் திளைக்கும் பலரிடம் ஏராளமான மடத்தனங்கள் கைகளில் இருப்பதை பார்த்திருக்கிறேன் .எல்லாவற்றிலும்   காரண காரியங்களை அலசிக் கொண்டே இருப்பவனுக்கு வாழ்க்கை மளிகை கடை வியாபாரம் போலாகி விடும் மடத்தனங்களுக்கு பலமடங்கு அழகுண்டு .அதன் ரகசியமே எல்லோருக்கும் பொதுவான மடத்தனங்கள் என்று ஒன்றுமே கிடையாது என்பதில் அடங்கியிருக்கிறது.ஒவ்வொருவரும் தங்களுடைய மடத்தனங்களை தங்களேதான் கண்டடைய வேண்டும்.சம்பாதித்துக் கொள்ள வேண்டும்.ஒன்றுக்குமே உதவாது என பிறர் கருதுகிற ஒரு மரமொன்றை வளர்த்துவது தொடங்கி ,ஒரு களைத் தாவரத்தைக் கொண்டாடுவது தொடங்கி, காரணிகள் ஏதுமற்ற பயணங்கள் என்று ,பொருந்தா காதலில் ஈடுபட்டு என  எதை வேண்டுமாயினும் ஒருவர் தேர்வு செய்யலாம் .எந்த மடத

அண்ணன்கள் என்று சொல்லிக் கொள்ள இருவர்

Image
அண்ணன்கள் என்று சொல்லிக் கொள்ள இருவர் உண்டெனக்கு ஒருவர் தமிழ்ச் செல்வன் ,மற்றொருவர் சி.சொக்கலிங்கம் .இடப்பக்கமும் வலப்பக்கமும் என இருவர். இருவரைப்பற்றியும் எழுதுவதற்கு பல உண்டு .சொக்கலிங்கம் லஹரியில் ஒரு பூர்வ புருஷன் .அன்றாடத்தில் தேர்தல் அதிகாரி.அப்படியிரு அவதாரங்கள் சொக்கலிங்கம்.எனக்கு பொருத்தமெல்லாம் அந்த முதல் அவதாரத்தோடுதான்.பின்னதில் நிறைய சங்கடங்கள் .முதல் அவதாரத்தின் நிறைய மகிமைகள்  தற்போது  எழுதக் கூடாதவை.முற்றும் முதுமை அதற்குத் தேவை. தமிழ்ச்செல்வனுக்கு அப்பா சண்முகத்தின் சாயல்.உள்ளும் புறமும்.உள்ளும் புறமும் இரண்டில்லாதவர் தமிழ்ச்செல்வன் .மாறுபாடுகள் வேறுபாடுகள் என எவ்வளவோ வந்தாலும் இருவரிடமும் காரியங்களில் விலக உள்ளூர ஒன்றும் கிடையாது.செயல்படும் பணியிடங்களும் பேசும் மொழியும் வேறென்பது உண்மையே தவிர ஆற்றும் செயல்களில் வேற்றுமைகள் கிடையாது."நம்மப் புள்ளைங்க " என்பது தமிழ்ச்செல்வன் எங்களை போன்றோரைக் குறிக்கும் சொல். தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டே இருப்பவர் தமிழ்ச்செல்வன்  .தொடர்ந்து செயல்படுபவர்கள் எவ்வளவு நம்பிக்கை  இழப்புகளையும் சேர்ந்து சந்தித்திருப்பார்கள்

நான் ஒரு இந்து

Image
நான் ஒரு இந்து பச்சையான இந்து.இந்துமதம் நிச்சயமாக ஒரு சார்பான சித்தாந்தங்களையோ,தத்துவங்களையோ ,வழிபாட்டு முறைகளையோ கொண்ட ஒரு மதம் அல்ல.ஏற்கத்  தெரிந்த மதம் இந்து மதம்.இந்துமதத்தின் எல்லா கிளைகளும் தனியானவை தனித்தன்மை வாய்ந்தவை.எல்லா கிளைகளும் சம முக்கியத்துவம் வாய்ந்தவை.இந்து மதத்தின் இந்த பகுதிதான் ஆகச் சிறந்தது,மற்றதெல்லாம் ஆகக் குறை என்கிற வாதங்கள் போக்கற்றவை.அப்படியேதும் கிடையாது.வேதங்களும் முக்கியம் ,வேதங்களை எதிர்ப்போரும் இங்கே முக்கியம் .இந்துமதத்தின் பிரதானமான பிரிவுகளில் இருந்தபடியே  வைதீக கழிவுகளை சாடியிருப்பவர்கள் ஞானிகள் இந்துமதத்தில் ஏராளம்பேர்.கடைசியில் வருபவர் ஸ்வாமி விவேகானந்தர்.இந்துமதம் பற்றிய கண்ணோட்டங்களை ஒருவர் பரிசீலிக்க விரும்பினால் விவேகானந்தரை நோக்கி முதலில் செல்வதே சிறப்புடைய செயல். எங்கள் ஊரில் ஒரு தேர்தலின் போது பா.ஜ.கவிற்கு எதிராக நாங்கள் தெருமுனைகள் தொடங்கி பொது இடங்கள் அனைத்திலும் பரப்புரையில் ஈடுபட்டிருந்தோம்.அப்போது ஒருவர் நீங்கள் நல்ல இந்துவாக இருக்கிறீர்கள் .பின்னே எதற்காக பா.ஜ.கவை எதிர்க்கிறீர்கள் ? என்று கேட்டார்.பா.ஜ.கவை எதிர்க்காமல் எனக்கு தூக