முஸ்லீம்கள் தான் பிறருக்கு இடம் தருவதில்லை

முஸ்லீம்கள் தான் பிறருக்கு இடம்  தருவதில்லை

முஸ்லீம்கள்  கூட்டாக சேர்ந்து வாழும் பகுதிகளில் பிறருக்கு வீடு கொடுப்பதில்லை என்பதே உண்மை.இந்துக்களுக்கு என்றில்லை .அது போன்று கூட்டாகவும் தன்னிறைவோடும் வாழும் பகுதிகளில் கிறிஸ்தவர்களுக்கும் அவர்கள் வீடு தர மாட்டார்கள். இதனைக் குறையாகச் சொல்லவில்லை.பொருளாதாரத்  தன்னிறைவு பெற்று ,குழுவாக வாழுகிற பல சமூகங்கள் பிறரை அனுமதிப்பதில்லை .இல்லையெனில் அனுமதிப்பதில் சுணக்கம் கடை பிடிப்பார்கள்.இதன் காரணங்களும் எளிமையானவை அல்ல.முஸ்லீம்கள் கூட்டாக இணைந்து வாழுகிற பகுதிகளில் பிறர் வாடகைக்கு அமர்த்த பட்டிருக்கிறார்களா ? நினைவைத் திரட்டி யோசித்துப் பாருங்கள் உண்மை விளங்கும்.நடைமுறை தெரியும் .திருவல்லிகேணியிலிருந்து ,மேட்டுப் பாளையம் ,இடலாக்குடி என எங்கு வேண்டுமாயினும் நீங்கள் சுற்றியலைந்தும் பார்க்கலாம்.நடைமுறை உண்மையல்லாத சில சுயவெறுப்புக்  கருத்துக்கள் பேரில் இங்கிருப்போரின் கவர்ச்சியை மையமிட்ட கழிவிரக்கக் கசடுகள் பொத்தாம் பொதுவாக உண்மைக்கு எதிராகப் பேசுகின்றன.இந்த கழிவிரக்கக் கசடுகள் பேசுவதில் , உண்மை நிலவரம் மறைக்கப்பட்டு பொது விருப்பம் பொங்கும் போது பரிசீலனைகள் தேவையின்றி குதூகலம் ஏற்படுகிறது.கழிவிரக்கக் கசடுகள் இந்த நம்பிக்கையை பயன்படுத்தி பிளவு மனோபாவத்தை பலப்படுத்துகின்றன.இந்துக்களின் வாடகைக்கான வீடுகளில் எங்கள் பகுதிகளில் எல்லோரும்தான் வாழ்கிறார்கள்

முஸ்லீம்கள் வீடு வாடகைக்கு அல்லாதோருக்குத் தருவதில்லை என்பது மட்டுமல்ல.தங்களுடைய சொந்த  வணிக நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளில் பிற சமயங்களை சார்ந்தவர்கள் எவரையுமே அனுமதிப்பதில்லை.பொதுவாக வணிகர்கள் தங்கள் நிறுவனங்களில் எல்லோரையும் அனுமதிக்கவே முயற்சிப்பார்கள்.ஏனெனில் வணிக நலனுக்கு எப்போதுமே அனைவரும் அவசியம் .இந்த கோட்பாட்டையும் எங்கள் பகுதிகளில் உடைத்தவர்கள் முஸ்லீம்கள்தாம்.பிறிதொரு சமயத்தைச் சார்ந்த ஒரு பொடி பையனைக் கூட இவர்கள் வேலைக்கு வைத்துக் கொள்வதில்லை.கிறிஸ்தவ பையன்களும் கூட இவர்கள் வேலைக்கு அமர்த்துவது கிடையாது.

எங்கள் பகுதிகளில் மூன்று வகையான வியாபாரங்கள் இப்போது முஸ்லீம்கள் கையில் உள்ளன.மருந்து விற்பனை,பேக்கரிகள் ,ரெடிமேட்ஸ் ஆகிய வியாபாரங்கள் இப்போது  முஸ்லீம்கள் கைகளில் உள்ளன.பேக்கரிகள் பத்தாண்டுகளுக்கு முன்பு வரையில் கிறிஸ்தவர்களின் கையில் இருந்தவை.இப்போது முஸ்லீம்கள் கைகளில் உள்ளது.இந்த நிறுவனங்களில் ஒரு சிறு மருந்திற்கு கூட பிற சமயத்தைச் சேர்ந்தவர்கள் கிடையாது.யாரேனும் ஒருவர் அப்படியொரு சிறுபொடியனை என் கண்முன் கொண்டு நிறுத்தினால் நான் சொல்லுகிற கசப்பான இந்த நடைமுறை   உண்மைக்காக உங்கள் ஒவ்வொருவரின் வீடுகளுக்கும் நேரில் வந்து மன்னிப்பு கேட்கிறேன்.முஸ்லீம்கள் தங்களை ஒரு தனித்த இறுக்கமான குழுவாக மாற்றிக் கொள்வதில் காட்டுற முனைப்பை வெளிப்படுத்துகிற காரியங்கள் இவை.

இது போன்ற பிற மத ,இன சுத்திகரிப்பு எனக்குத் தெரிந்தவரையில் எங்கள் பகுதியைச் சேர்ந்த பிற ஒரு சாதியினருக்கும் ,மதத்தவருக்கும் கிடையாது.பிற மதத்தவரிடமும் கிடையாது.ஒரு முஸ்லீமுக்கு வேலை தருவதற்கு எந்த இந்து நிறுவனத்திலும் அவர் முஸ்லீம் என்பதைக் காரணம் காட்டி மறுத்திருக்கவே மாட்டார்கள் .தங்கள் பகுதிகளில் வீடு அமைய பெறாத முஸ்லீம்கள் இங்கே இந்துக்களின் ,கிறிஸ்தவர்களின் வீடுகளில்தான் குடியிருக்கிறார்கள்.

முஸ்லீம்களே... நடைமுறைக்கு சம்பந்தமில்லாமல் உங்கள் தீமைகளையும் சேர்த்து அரவணைக்கிற ரட்சகர்களிடம் எச்சரிக்கையாயிருங்கள் .உங்களுக்கு உண்மையான எதிரிகள் இந்துக்களோ ,கிறிஸ்தவர்களோ ,பிற சமயத்தைச் சார்ந்தவர்களோ இல்லை.உங்கள் தீமைகளையும் சேர்த்து ஆதரிக்கிறவர்களே உங்களுக்கு அதிகம் ஆபத்து நிறைந்தவர்கள்.உங்களுக்கு இருக்கிற சிரமங்களில் அவர்கள் அரசியல் குளிர் காய நினைக்கிறார்கள்.

கழிவிரக்கக் கசடுகளின் கட்டுரைகளை நடைமுறையை  முன்வைத்து நீங்கள் விலகத் துணிய வேண்டும்.நீங்களோ அதற்குப் பதிலாக கழிவிரக்கத்தை ஏற்று குதூகலிக்கிறீர்கள்.உங்களில் ஒருவன்தான்  நான் ,ஆனால்  ஒருபோதும் உங்களுடைய அல்லாதவற்றிலும் உடன் நிற்கும் வேலை எனதில்லை. 

நான் யார் ?

நான் யார் ?

சில வருடங்கள் இருக்கும் .என்னை தொடர்பு கொண்ட ஒருவர் சிலேட் இதழுக்கு சந்தா செலுத்த வேண்டும்.நீங்கள் யார் ? என்று கேட்டார்.எனக்கு விளங்கவில்லை.நான் யாராக இருக்கக்கூடும் ? கொஞ்சம் அறிமுகம் உள்ளவர் எனில் நான் ஒரு பக்கிரியாக்கும் என்று சொல்லியிருப்பேன்.இதில் உள்ள ரி -யை எடுத்து விட்டு பக்கி என்றால் அதுவும் கூட சரியாகத்தான் இருக்கும் என்று சொல்லியிருப்பேன்.எனக்கு தெரியவில்லையே ! அதனால்தான் கவிதைகள் ,கதைகள் என்று எழுதி பார்க்கிறேன்.எப்படியேனும் தொடர்பு கொண்டு உங்களிடம் தெரிவித்து விடமுடியாதா என்கிற ஏக்கத்தில் .

அவருக்கு திருப்தி ஏற்படவில்லை .சில மாதிரிகளை தந்து இவற்றில் ஏதேனும் ஒன்றினைத் தேர்வு செய்து சொல்லுங்கள் என்றார்.நல்லது ஆனால் இது போன்ற பல அரசாங்கத் தேர்வுகளில் வெற்றிபெற இயலாமையிலும் சேர்ந்துதானே நான் எழுதிக் கொண்டிருக்கிறேன் ? இப்படியான ஒரு தேர்விலேனும் வெற்றிபெற இயன்றிருந்தால் இந்த இடத்தில் இருந்திருப்பேனா தெரியவில்லை.ஒருவேளை கடவுள் எல்லா தேர்வுகளிலும் தோல்பித்ததே இந்த முட்டுச் சந்திற்குள் வந்து சேருவதற்காகத்தானோ என்னவோ ? பள்ளி கல்லூரி படிப்புகளை பொறுத்தவரையில் ஒன்றில் கீழே கீழே இறங்கிப் போய்விட வேண்டும்.இல்லையெனில் மேலுயர்ந்து போய்விட வேண்டும்.இரண்டிற்கும் இடையில் மாட்டிக் கொண்டால் பிழைப்பு பலவந்தம் ஆகிவிடும்.எனக்கு கல்லூரியில் தமிழ் படிக்கும்  ஆசையிருந்தது.ஆனால் விதியேற்படுத்திய வாய்ப்புகள் சித்த மருத்துவப் படிப்பு அல்லது கணிப்பொறி விஞ்ஞானம் என்று இருந்தது.சித்த மருத்துவத்தைக் கைவிட்டு விட்டு கணிப்பொறியை தேர்வு செய்தேன்.கடைசி செமஸ்டர் தேர்விற்கு முன்னர் ஏழு பாடங்களில் தோல்வியுற்ற பளு இருந்தது.கடைசியில் முடித்துக் கொள்ளலாம் என்கிற திமிரின் மீது ஆண்டவன் ஓங்கியுதைத்தான்.அந்த வலி இடுப்பிற்கு கீழே பட்ட வலி போல இப்போதும் கூட இடையிடையே வலித்துக் கொண்டிருப்பது.கணித பாட தேர்விற்கும் முந்தைய நாளில் குடல் வால் அறுவை சிகிழ்ச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன்.இல்லையெனில் பழுப்பு இரத்தத்தில் கலந்து பிராணன் போய்விடும் என்றார்கள்.அப்படித்தான் இருந்தது நிலைமை.அப்போது இப்படியெல்லாம் காரணமில்லாமல் பயமுறுத்துகிற மருத்துவர்கள் கிடையாது அல்லது குறைவு.இப்போதுபோல ஊசியால் பழுப்பை அகற்றுகிற முறை அப்போது கிடையாது .வெட்டி கீறி குடல் வாலை அகற்ற வேண்டும் .இப்போதும் கூட கீறி பிள்ளை பெத்தவளுக்கு இருப்பதை ஒத்த அடிவயிற்றுத் தளும்பு வலது பாகத்தின் அடியில் உண்டு.என்னதான் இருந்தாலும் தமிழ்ப்படிக்கும் ஆவலைக் கடவுள் கண்டித்தது நல்ல காரியம் .அடிமுட்டாளாகப் போயிருப்பேன்.தமிழ் படைப்பாளிகளில் தமிழை விருப்ப பாடமாக எடுத்துக் படித்தவர்கள் மிகமிக சொற்பம்.பின்னர் மொத்தமாக தோல்வியுற்ற பாடங்களாக நிலுவையில் நின்றவை பனிரெண்டு பாடங்கள்.அதில் இதை பின்னர் முடித்தேன்.மீதமுள்ள பாடங்களை பார்த்து எழுதுவதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டபோது இனி தேர்வு எழுத வேண்டியதில்லை என்று முடிவெடுத்து மும்பைக்குச் சென்றேன்.இப்போது உள்ள மனநிலையில் எனில் சம்மதித்து எழுதியெடுத்திருப்பேன்.இளம்பிராயத்தில் இருக்கிற தேவையற்ற வைராக்கியங்கள் விதியோடு இணைப்பு பெற்றவை.

மாதிரிகளை தந்து தேர்விற்கு அழைத்தவர் நீங்கள் ஒரு இடதுசாரியா ? என்றார் .பின்னர் வலதுசாரியா ? என்றார். பின்னர் இதுபோல பற்பல சோதனைகள் .இவ்வளவு சோதனைகள் செய்யப்பட்டு ஒருவர் சிலேட் இதழுக்கு சந்தாதாரர் ஆக வேண்டுமா ? என்று கூட தோன்றியது.அவர் ஆரியரா திராவிடரா ? டம்பளரா என்று ஏனோ கேட்கவில்லை .கால் நூற்றாண்டிற்கும் முற்பட்ட காலம் எனில் இதே நபர் அப்படியும் என்னிடம் கேட்டிருக்கக் கூடும்.

இங்கிருக்கிற பெரிய அக நோய் நீங்கள் யார் என்பதை நீங்களே சொல்லியாக வேண்டும்.அப்படியானால்தானே பணி எளிதாகும்.நான் ஒரு பின்நவீனத்துவவாதி ,நான் ஒரு கம்யூனிஸ்ட் .நான் ஒரு புடலங்காய் வியாபாரி இப்படி எதுவாக இருந்தாலும். இன்று நெடுங்காலத்திற்குப் பிறகு ஒருவர் வந்து என்னிடம் இப்படியொரு ராணுவ சோதனை நடத்திவிட்டுச் சென்றார்.இப்படி அப்பாவியாகவும் ஊரில் இன்னும் மனிதர்கள் வாழ்கிறார்களே என்று ஆச்சரியமாக இருந்தது.என்னிடம் சே படம் போட்ட பழைய பனியன் ஒன்றிருந்தது .அதனை எடுத்து அவரிடம் காட்டினேன்.புதிதாக வாங்கியது இப்படி ரெத்தம் கக்கி வண்ணங்கள் அனைத்தையும் இழந்து போயிருக்கிறது பாருங்கள் என்று அவருக்கு காட்டினேன்.வாடிப்போயிருந்த அந்த சட்டையில் சே - யின் படம் பிடலின் வயோதிகத்தில் இருந்தது.எப்படியிருந்தாலும் நீங்கள் உள்ளத்தில் ஒரு இடதுசாரிதான் என்று என்னை நோக்கி அவர் பல்லைக் காட்டியபோது அவ்வளவு பூரிப்பு  முகத்தில்  அவருக்கு.

என்னை நானே இடதுசாரியென்றோ வலது சாரியென்றோ ,பின்நவீனத்துவ வாதியென்றோ ,இல்லை எனக்கிருப்பது ஏதேனும் தீர்க்க இயலாத வியாதியென்றோ வாய் திறந்து சொன்னால் நம்பும் நிலையில் நீங்கள் இருப்பீர்களே ஆனால் உங்களை கருணாநிதி போற்றவர்களோ அல்லது ஜெயலலிதா போன்றோர்களோ  : மோடியும் சோனியாவும் வந்து ஆளாமல் புதுமைப்பித்தனா வந்து ஆளுவார் ? ஏன் பேராசை பிடித்தலைகிறீர்கள் ?

ஒருவேளை இவர்களால்தான் மழை பெய்கிறதோ என்னவோ ! ஒருவேளை இவர்களால்தான் இந்த வருட மழைநீர் பொய்த்தும் போயிற்றோ என்னவோ ! இரண்டுமே சரியாக இருக்க வாய்ப்புண்டு.

இரட்டையிலை முடக்கம் ஒரு அரசியல் பலாத்காரம் !

இரட்டையிலை முடக்கம் ஒரு அரசியல் பலாத்காரம்!

இரட்டையிலையை முடக்குவதற்கு ஆளும் மத்திய பி.ஜெ.பி அரசு முயற்சிக்கிறது,உட்கட்சி பிளவுகளில் அது அரசியல் லாபம் பெற முயற்சிக்கிறது என்பது போன்ற மக்களின் சந்தேகங்கள் உண்மையாகியிருக்கின்றன .தேர்தல் கமிஷன் நடவடிக்கைக்கும் எங்களுக்கும் என்ன தொடர்பு  ? என்ற மக்கள்  சந்தேகங்களை நோக்கி பி.ஜெ.பியினரும் கேள்வி கேட்டார்கள்.ஆனால் சந்தேகம் சரிதான் என்பது இப்போது வெளிப்படுகிறது. ஆளும் அரசின் தாக்கம் இன்றி முடிவுகளை எடுக்கும் தனித்த அமைப்புகள் என்று இந்தியாவில் தற்போது எந்த அமைப்பும் கிடையாது.நீதித்துறை,தேர்தல் கமிஷன் உட்பட .இன்னும் அரசாங்க தலையீடுகள் அற்ற அமைப்புகள் இந்தியாவில் உள்ளன என்று ஒருவர் கருதிக் கொண்டிருப்பாரேயானால் அவர் நிச்சயமாக கற்காலத்தைச் சேர்ந்தவராகத் தான் இருக்க முடியும்.அரசின் நேரடியான ,மறைமுகமான தாக்கங்கள் அனைத்தையுமே தலையீடாகவே கருத வேண்டும்.ஜெயலலிதா காலமான பின்னர் பி.ஜெ.பி தமிழ்நாட்டில் மேற்கொண்டு வருகிற அரசியல் சதிகள் "எரிகிற வீட்டில் பிடுங்குகிற வரைக்கும் லாபம் "என்கிற மனோபாவத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன

பி.ஜெ.பியின் இந்த அரசியல் பலாத்காரம் தமிழ்நாட்டில் முறியடிக்கப்பட ஆர்.கே.நகர் இடை தேர்தலில் எடப்பாடி அணியின் அ .தி.மு.கவினர் அமோக வெற்றியை மக்களிடமிருந்து வென்றெடுப்பது ஒன்றே வழி.எதிரிக்கு எது நடந்தாலும் பரவாயில்லை தங்கள் அரசியல் லாபம் மட்டுமே பிரதானம் எனக் கருதும் தி,மு.கவினரின் குதம் சரியவும் தற்போது வேறு வழிகள் இல்லை.மக்கள் பல்வேறு மாய குழப்பங்களை எதிர் கொள்ளும் வகையில்  நோக்கங்கள் கருதிய பல தரப்பினரும் சுழன்றடித்து  வருகிற சூழ்நிலையில் ; மக்கள் இந்த குழப்பங்களை விஞ்சத் தெரிந்தவர்களாக இருப்பார்கள் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.தற்போதைய தமிழ்நாடு அரசு தனது பதவி காலத்தை முழுமை செய்யவும் ,அதற்கு இடையூறான  பலாத்காரங்களும் சதி வேலைகளும் முடிவுக்கு வருவதும் இப்போது  மக்களின் கைகளிலேயே இருக்கிறது.

ஜெயலலிதா மறைவிற்குப் பின்னர் தொடங்கி பி.ஜெ.பி தமிழ்நாட்டில் தொடர்ந்து வருகிற அரசியல் அராஜகமும் ,சதிவேலைகளும் தமிழ்நாட்டில்  பலிக்குமேயானால் அவர்கள் அ.தி.மு.கவுடன் தங்கள் பலாத்காரப் பணியை நிறுத்தமாட்டார்கள். பின்னர் தி.மு.கவில் தொடர்வார்கள் என்கிற நினைவு தி.மு.கவிற்கு துளியும் இருப்பது போன்று தெரியவில்லை.தற்காலிக லாபத்தில் குளிர்காயலாம் என்று அவர்கள் கருதுவது முட்டாள்தனமானது.மட்டுமல்ல தி.மு.கவை மக்களிடம் இருந்து அந்நியப்படுத்துகிற முட்டாள்தனம் இது.சசிகலா கைதானதை ஒட்டி பி.ஜெ.பியின் மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் அ.தி.மு.க தமிழகத்தில் அழிந்து விட்டது,தி.மு.க அழிந்து கொண்டிருக்கிறது ,மாற்றை மக்கள் விரும்புகிறார்கள் என்று பேசியதை இந்த சமயத்தில் நினைவுபடுத்த விரும்புகிறேன். தமிழ்நாட்டில் சகல பிரிவு மக்களும் ஏற்கும் விதமான ஒரு தலைமையைக்கூட இன்னும் எட்ட இயலாத பி.ஜெ.பியினரிடமிருந்து அரசியல் ஆலோசனைகள் பெற வேண்டிய நிலைக்கு தமிழ்நாட்டு மக்கள் கீழிறங்கக் கூடாது.

ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் பி.ஜெ.பி இப்படியான ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முயற்சித்துக் கொண்டே இருக்கிறது.அ.தி.மு.க அழித்தாலும் சரி ,தி,மு.க அழித்தாலும் சரி எனக்கு அதனால் எத்தகைய பக்கவாதமும் ஏற்படப் போவதில்லை.ஆனால் எதுவாக இருப்பினும் அது சதி வேலைகளை அரங்கேற்றி நடைபெறக் கூடாது என்பது மட்டுமே என்னுடைய கவலை.இந்த இரு கட்சிகளும் காலத்தில் தேக்கமடைந்து விட்டன,தமிழ் நாட்டில் அரசியல் வெறுமை ஏற்பட்டிருக்கிறது என்பதெல்லாம் உண்மைதான்.தமிழ்நாடு நாற்பது வருடங்களுக்கு முன்னர் இருந்தது போன்ற ஒரு அரசியல் சூழ்நிலையில் மாற்றத்திற்கு இடைப்பட்ட காலத்தில் பிரவேசித்திருக்கிறது என்பதும் உண்மை.

கேரளாவில் காங்கிரஸ் ,கம்யூனிஸ்ட்கள் என மாறி மாறியிருந்தாலும் கூட அவர்கள் சாதியத்தின் பழைய உடும்புப் பிடியிலிருந்தே இன்னும் விடுபடவில்லை.கேரளா காங்கிரஸ் செரியன் கட்டுப்பாட்டில் உள்ள கட்சி எனில் கம்யூயுனிஸ்டுகள் நாயர்கள் ,ஈழவர்கள் என மாற்றி மாற்றி அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொண்டிருப்பவர்கள்.இந்த நிலை என்பது தமிழ்நாட்டில் காங்கிரஸ் அதிகாரத்தில் இருந்த போதுள்ள நிலையை ஒத்தது.தமிழ்நாடு அந்த நிலையிலிருந்து வெகுதூரம் விலகி வந்திருக்கிறது.முற்றிலுமாக என்று சொல்லாயிலாமற் போனாலும் கூட ,சகல குறைபாடுகளுடன் கூட சகல சாதியினருக்கும் பிரதிநித்துவத்தைக் கடைபிடிக்கும் கட்சிகள் என்று அ.தி.மு.க ,தி.மு.க என்ற இரண்டு  கட்சிகளையுமே சொல்ல முடியும்.இவர்கள் பழகிய பேய்கள்.சாதகமான பேய்கள்.புதிய தெய்வங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டிற்கு இந்த பழைய பூதங்களே தற்போது போதுமானவை.இப்போது தெய்வத்தின் தரப்புகளாக  இங்கே முன்னுறுத்தப்படுகிறவை தெய்வங்களின் தரப்புகள் அல்ல.தெய்வத்தின் அழுகிய முகமூடிகளின் சார்பானவை.

இந்தியாவில் இப்போது அரசும் ,அரசு எந்திரமும் முன் எப்போதும் கண்டிராத வகையில் பொய்மையின் கைகளில் அடைக்கலம் ஆகியிருக்கிறது.மாநில அரசுகளுக்கும் இந்த கூற்றுக்குப்  பொருத்தமானதே .இதனை உண்மையின் பக்கமாக திருப்புவது என்பது, பணி தொடங்கப்பட்ட பின்னர் நூறு ஆண்டுகளைக் குறைந்த பட்சம் கேட்கும் காரியங்கள்  .அந்த கற்பனையின் ஆசையின் காரணமாக  பலாத்காரத்தில்  ,சதிகளின் பக்கமாக ,ஜனநாயகத்திற்கு எதிரான திசைகளில் மக்கள் மனம் திரும்பக் கூடாது.

இரட்டையிலை சின்னம் என்பது மக்கள் சக்தியின் மனோபாவத்தை குறிப்பிடுகிற ஒரு வடிவம்.இதனை ஆளும் பி.ஜெ.பி.அரசு கண்டு அஞ்சுகிறது.இரட்டையிலை பாசிட்டிவான ஒரு பி.ஜெ.பி மனோபாவம் கொண்ட மக்கள் திரளையும் சேர்த்து குறிக்கக் கூடியது. அ .தி.மு.க வைக்  கண்டு பி.ஜெ.பி அஞ்சுவதற்கு இது முக்கியமான காரணம்.அவர்கள் தமிழ்நாட்டில் வேறு எவரையும் முக்கியமான எதிரியாகக் கருத வாய்ப்பு இல்லாமைக்கும் இதுவே காரணம்.அ .தி.மு.க அழிந்ததால் தங்களுக்கு தானாகவே இடம் உருவாகிவிடும் என்று அவர்கள் கணக்கு போடுகிறார்கள்.அதனை சதிகள் மூலம் அடைய முயற்சிக்கிறார்கள்.ஆனால் எதனை முன்னிட்டு இரட்டையிலையைக் கண்டு  அஞ்சுகிறீர்களோ ,அதே காரணத்தின் அடிப்படையில் மக்கள் அதனை எழுப்புவார்கள்.காத்திருந்து பாருங்கள்.இரட்டையிலை விட்டுத் தருகிற இடம் ஒருபோதும் தாமரைக்கு சொந்தமாகாமல் இருப்பதே தமிழ்நாட்டின் நலனுக்கு நல்லது.

குடியில் இருந்து வெளியேற முடியும்.

குடியில் இருந்து வெளியேற முடியும்.

உள்ளே நுழைந்து விட்டோம் வெளியேறும் வழி தெரியவில்லை என்னும் மனநிலையில் இருப்போருக்கு இந்த செய்தி முக்கியமானது.

குடிநோய்  முதலில் பழக்கமாக வந்து தொற்றக் கூடியது.ஒவ்வொரு பழக்கமும் வந்து சேருவதற்கு பல வாசல்கள் இருப்பது போலத்தான் குடிக்கும் .ஏதேனுமொரு விருந்தில் தொடங்கியிருப்பார்கள்.சாகசம் கருதி தொடங்கப் பட்டிருக்கலாம்.கவர்ச்சி  காரணமாக இருந்திருக்கக் கூடும்.செல்லமான வற்புறுத்தல்கள் சிலருக்கு குடியைக் கொண்டு வந்து சேர்த்திருக்கும்.பணியிடம் ,மனச் சோர்வு என வேறு பல காரணிகள் சரிவர பொருந்திப் போயிருக்கலாம்.இவையல்லாத பிற  காரணங்களும் இருக்கக் கூடும்.எப்படியிருந்தாலும் முதலில் பழக்கமாகத் தொற்றிக் கொள்ளும் குடி நாளடைவில் நோயாக மாறுகிறது.குடிநோய் என்பது மனம் சம்பத்தப்பட்ட உடல் சம்பந்தப்பட்ட இரண்டும் இணைந்த ஒரு வியாதி.ஒருவர் நான் ஏன் குடிக்கிறேன் என்பதற்கான காரணத்தை சொல்லத் தொடக்கி விட்டாரெனில் குடிநோய் அவருள் இறுகி விட்டதென்று அர்த்தம்.குடி பழக்கத்திலிருந்து நோயாக மாற்றமடைந்த பின்னர் குடிதான் காரணமேயன்றி சொல்லும் பிற காரணங்கள் பொய்யானவை.

நான் குடிக்கத் தொடங்கியது கல்லூரி இறுதியாண்டில்.பாண்டிச்சேரிக்கு சுற்றுலா சென்றபோது ஒரு கோப்பை மது எனது கைகளை வந்து அடைந்தது.பின்னர் அந்த ஒரு கோப்பை மது என்னிடம் அடைந்த விஸ்வரூபங்களை இப்போது எவர் கூறினாலும் நம்ப மாட்டீர்கள்.சுமார் இருபத்தைந்து வருட காலங்கள் அது என்னுடனேயே வசித்தது.எனது படைப்புகளில் அதன் தடயங்களும் நடமாட்டமும் அதிகம்.காலத்தை எனது கையிலிருந்து பிடுங்கி அது தன் வசத்தில் வைத்திருந்தது.என்னுடன் உடன் சேர்ந்து குடித்தவர்களில் இருபத்தி ஐந்திற்கும் அதிகமானவர்கள் குடியால் இறந்தார்கள்.இன்னும் இறந்து கொண்டிருக்கிறார்கள்.குடிநோயின் கடைசி புகலிடமாக இப்போது காணப்படுவது விநோதமானதொரு வலிப்பு நோய்.கடைசி எச்சரிக்கை மணியோசை அதுதான்.கழிந்த மாதத்தில் ஒருவர் இறந்தார்.அவர் என்னுடைய சகலையும் கூட.கால்நடை மருத்துவர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இரவிலேயே மருத்துவமனையிலிருந்து தப்பித்து விட்டார் .இறைவன் அவ்வளவு வலுக்கட்டாயமாக அவரைத் தேடி அழைத்திருக்கிறான் போலும் .விடியற்காலையில் ஏற்பட்ட வலிப்பில் அவர் விடைபெற்றுக் கொண்டார் .

குடிநோய் என்பது குடிப்பவரை மட்டும் குறிப்பதில்லை.மனைவி ,குழந்தைகள் அனைவரையும் துணை நோயாளிகளாகக் குறிக்கக் கூடியது.ஒரு பத்து நிமிட கோபத்தில் மனைவியைக் கொன்று விட்டு ஒன்பது ஆண்டுகள் சிறையில் காலம் தள்ளியவரை இந்த வளாகத்தில் சந்தித்திருக்கிறேன்.சொந்த மகளை மண்ணெண்ணெய் ஊற்றிக் கொழுத்த முயன்று உறவினர்களால் ஒரு கோவிலில் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்தவன் வலிப்பு நோயால் மறுநாளே உயிர்விட்டான்.அவன் என்னுடைய ஒரு குடி நண்பன்.ஒருவன் மின் கம்பத்தில் ஏறி தற்கொலை செய்து கொண்டான்.ஒன்றாக உடனிருந்து குடித்தவன்தான் அவனும்.இப்படி பட்டியல் நீளமானது.

குடிநோய்க்கு ஆளானவர்களில் பெரும்பாலோர் எப்படி வெளியேறுவது என்று விடைதெரியாமல் அதனுள்ளே சுற்றிக் கொண்டிருப்பவர்கள்தாம்.நமது உடலில் உறுப்புகள் அனைத்துமே வாய்ப்பும் சமயமும் கிடைத்து ஓய்வும் தரப்பட்டால் எவ்வளவு கேடு கெட்டுப்  போயிருந்தாலும் தளிர்த்து விடும் தன்மை கொண்டவை என்று உடற்கூறு தெரிந்தவர்கள் சொல்லுகிறார்கள்.இதில் மூளை மட்டுமே விதிவிலக்கு .மூளையின் அணுக்கள் இறக்குமாயின் அது பின்னர் உருவாவதில்லை.குடியால் இறக்கும் மூளை அணுக்கள் அமர்ந்திருந்த இடங்களை குடி பதிலீடு செய்யத் தொடங்குதலே குடிநோயின் தீவிர நிலை.அதன் பின்னர் அவரிடமிருந்து கோப்பையை கைபற்றியெடுப்பது என்பது அவ்வளவு எளிதில்லை.

எனக்குத் தெரிய ஆயிரக்கணக்கான குடும்பங்களை குடிநோயிலிருந்து கரையேற்றியவர்கள் நாகர்கோயில் ஏசுசபை போதை மீட்புப் பணிக்குழுவினர்.பெயரில் ஏசு சபை என்றிருக்கிறதே தவிர இது கிறிஸ்தவ நிறுவனம் அல்ல.இதனால் பலனடைந்த பலர் பிற சமயங்களைச் சார்ந்தவர்கள். ஆல்கஹால் அனானிமஸ் அமைப்பின் ஒரு கிளை அமைப்பு இது .ஆல்கஹால் அனானிமஸ் குடிநோய் மீட்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் உலகளாவிய அமைப்பு.அந்த அமைப்பின் கிளைதான் இந்த பெயரில் நாகர்கோவிலில் பணிபுரிகிறது.நாகர்கோயில் கார்மல் பள்ளி வளாகத்தில் வைத்து இது நடைபெறுகிறது.இருபத்தியொரு நாட்கள் இங்கே தங்கியிருக்க வேண்டும்.உடலுக்கும் மனதுக்கும் வளம் சேர்க்கும் ஒரு பயிற்சி இது.இது போன்ற திறன் கொண்ட மனிதவள பயிற்சி மையங்கள் தமிழ் நாட்டில் இரண்டே இடங்களில் மட்டுமே உள்ளன.கொடைக்கானலில் உள்ள குடி   நோய்க்கான மையமும் சிறப்பானது என கேள்விபட்டிருக்கிறேன்.

இந்த பயிற்சி மையத்தை நாகர்கோவிலில் தொடங்கியவர் தற்போது லயோலா கல்லூரி அதிபராகப் பணியாற்றும்
செ.ஜெயபதி.பாளையங்கோட்டை சேவியர் கல்லூரியில் அவர் பணிபுரிந்த போது ஒரு திட்டத்தில் நானும் அவருடன் பணி புரிந்திருக்கிறேன்.அப்போது அவர் கண்டால் பயப்படும் ஒரேயொரு குடிகாரன் நான் மட்டுமே.எனக்கு பார்த்தாலே ஓடிவிடத் தோன்றும் குடிகாரர் அவர் மட்டுமே.அவருடன் சேர்ந்து குடித்தால் கொலைப்பழியேற்க நேர்ந்து விடும் என்று அஞ்சியிருக்கிறேன்.நாங்கள் இருவருமே மொத்த தமிழ்நாடும் அறிந்த விளைந்த குடிகாரர்களும் கூட.எங்கள் இருவரையும் கண்டால் ஊரே தலைமறைவாகி ஓடி விடும். நாங்கள் அதிலிருந்து வெளியில் வந்திருக்கிறோம்.

ஒருமுறை குடிநோய் காரணமாக சுந்தர ராமசாமி என்னை ஒரு மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்றார்.நான் உள்ளே செல்கிறேன்,ஜெயபதி வெளியே வருகிறார்.இப்போது நினைத்தால் இந்த நிகழ்வு அபத்தமாக தோன்றுகிறது."நீயும் நான்  போகுமிடமெங்கும் வருகிறாயே ! எனக் கூறி நகர்ந்தார் ஜெயபதி.ஒரு மாதத்திற்காளாகவே முழுமையான போதையில் மீண்டும் இருவரும் சந்தித்துக் கொண்டோம்.ஆனால் ஜெயபதி செய்த காரியம் அளப்பெரியது .ஆயிரம் குடும்பத்தினரை அவர் இப்போது மீட்டிருக்கிறார்.மன நல உதவிகளும் கூட எங்களுக்கு செல்லுபடியாகவில்லை என்பதற்காக இதனைச் சொல்கிறேன்.

வெளிவரத் தெரியவில்லை என்னும் எண்ணம் மட்டும் உங்களிடம் இருக்குமேயாயின் வெளியில் வர முடியும்.அழைத்துச் செல்கிறேன் வாருங்கள்.  

" இடைவெளி " எண்பதுகளை நினைவூட்டும் சிற்றிதழ்

" இடைவெளி " எண்பதுகளை நினைவூட்டும் சிற்றிதழ்    

சம்பத்தின் பிரபலமான நாவல் தலைப்புடன் "இடைவெளி " சிற்றிதழ் முதல் இதழ் வெளிவந்திருக்கிறது.மரணம் பற்றிய விசாரணைகளால் நிரம்பிய இந்த நாவலை சம்பத் புத்தகமாகப் பார்க்கக் கொடுத்து வைக்கவில்லை.அந்த நாவல் அடைந்த பிரமிப்பு தமிழ் சூழலில் என்ன என்பதும் அவருக்குத் தெரியாது.அந்த காலத்தில் இடைவெளி நாவலை பிடித்த நாவல்கள் வரிசையில் சொல்வதென்பது ஒரு அறிவுஜீவிக் குறியீடாக இருந்தது.அது ஒரு நல்ல காலமும் கூட .அதுவொரு இறந்த காலம் என்பதால் மட்டும் அதனை ஒரு நல்ல காலம் என்று நான் சொல்லவில்லை.நவீன காலம்தான் ஆனால் இவ்வளவு தொழில்நுட்ப தாக்கம் அப்போது கிடையாது.அது இலக்கியத்திற்கு நிறைய அவகாசத்தைக் கொண்டிருந்தது.வெற்றுப்  பேப்பரில் கையெழுத்திடுவது போல எழுதித் தள்ளினால் யாரும் சீந்தவே மாட்டார்கள்.ஒரு கதை எழுதினால் கூட அது குறுகத் தறித்ததாக இருக்க வேண்டும்.இப்போதைய பெரும்புகழ்க்காரர்கள் பலருக்கு அப்போது நாதியிருந்ததில்லை.பெரியவர்கள் ஒரு கவிதையையோ கதையையோ பாராட்டிக் கேட்க அப்படியினிக்கும் .எளிதில் அது நிகழாது.பாராட்டும் ,மதிப்பும் வெற்றுச் சம்பிரதாயமாக மாறியிராத காலம் அது .

இடைவெளி இதழை பார்த்ததும் அந்த காலத்தின் தொடுவுணர்ச்சி மீண்டும் மேனியில் விழுவது போன்றிருந்தது.இது போன்ற இதழ்கள் தொடர்ந்து வருமாயின் நன்று.இது போன்ற இதழ்களில்  எழுதுவதில் ஒரு சுகம் உண்டு  

சபரிநாதனின் விரிவான நேர்காணல் இந்த இதழில் வெளிவந்திருக்கிறது.சபரிநாதன் மிகவும் விழிப்புணர்ச்சி கொண்டதொரு கவிஞன்.பின் வந்த தலைமுறையில் சபரிநாதன் மீது எனக்கு கவர்ச்சி அதிகம் . சபரியின் வால் கவிதைத் தொகுப்பு சமீபத்தில் வெளிவந்த கவிதை நூல்களில் தலைசிறந்தது.இந்த நேர்காணலில் ஏதோவொன்று பிசிறுகிறது.நன்றாகத்தான் இருக்கிறது ஆனால் ஏதோ ஒன்று இல்லை என்பது போல.உண்மையில் இந்த நேர்காணலில் பல புதிய விஷயங்களை அவர் சொல்லியிருக்கிறார்.அவருக்கேயுரிய சில கண்டுபிடிப்புகள் இந்த நேர்காணலில் நிச்சயமாக இருக்கிறது.பிறர் கண்ணின் படாத சில விஷயங்களை அவர் பேசியிருக்கிறார்.அப்படியானால் நேர்காணல் சிறந்தது என்றுதானே சொல்ல வேண்டும் ? ஆனால் அப்படி சொல்ல முடியாதபடி ஒரு பிசிறு ,துரு நெடியடிக்கிறது.மீண்டுமொருமுறை வாசித்துப் பார்க்க வேண்டுமென நினைத்திருக்கிறேன்.

நான் சொல்ல வரும் விஷயம் இதுவல்ல.பெருந்தேவியின் நான்கு கவிதைகள் இந்த இதழில் வெளிவந்துள்ளன.அதில் மூன்று கவிதைகள் சொக்கத் தங்கம்.நான் யார் ? ,நினைவுப் பழக்கம்,ஆள் மாறாட்டம் ஆகிய கவிதைகள் அவை.ஆள் மாறாட்டம் கவிதை கொஞ்சம் வசப்படாமல் போயிருந்தாலும் கூட செய்தியின் இடத்திற்குத் தரையிறங்கியிருக்கும்.கவிஞனின் நெடியே அதற்கு உயிர் கொடுக்கிறது.அழகியலால் ஒரு கவிதை சரிந்து விழுவதற்கும் ,ஒரு செய்தியேயாயினும் கூட கவிப்பொருளாக ஒரு கவிதை எப்படி உருவேறுகிறது என்பதற்கும் விளக்கம் சொல்லக்கூட உபயோகப்படக் கூடியதிந்த கவிதை.

கவிதையை எழுதிப்பார்த்தலும் ,கவியாக இருத்தலும் வேறுவேறான காரியங்கள்.பல்லாயிரக்கணக்கானவர்கள் எழுதிப்பார்க்கும் மொழியின் தொழிநுட்பம் கவிதை.இந்த பல்லாயிரக்கணக்கிலிருந்து ஓரிருவர்தான் கவியாக பரிணமிக்கிறார்கள்.கவி தொடுவதெல்லாம் கவிதையாக வேண்டும் .அவன் துருவி தெருவில் விட்டெறிந்த வெற்றுச் சிரட்டையைத் தொட்டாலும் கவிதையாகி விட வேண்டும்.அது எப்படியென்றால் தெரியாது .ஆக வேண்டும் என்பது மட்டும் தெரியும்.பெருந்தேவி இந்த கவிதைகளில் அந்த இடத்தில் வந்து நிற்கிறார் கவியாக .எழுதியெழுதி பின் கவியாக எழுச்சி கொள்கிறவர்களும் உண்டு.கண்டராதித்தனுக்கு இது வந்து கூடியது திருச்சாழல் கவிதைத் தொகுப்பில்.இதற்கு நேர்மாறாக நேற்று வந்த பொடியன் சூர்யா என்று பெயர்,  ஒரு நீள்  கவிதையிலேயே இந்த இடத்திற்குள் வந்து விழுவதுவும் நடக்கிறது.இவையெல்லாம்  கணித்து வரையறை செய்ய இயலக் கூடிய காரியங்கள் இல்லை.சபரி இதனை எட்டியது வால் கவிதைத் தொகுப்பில்.

ஆனால் ஒன்றை குறிப்பிட்டுச் சொல்ல முடியும் .எழுதியெழுதி திறமை ,நுட்பம் எல்லாவற்றிலும் ஜொலித்து அலுத்து ,இவையெல்லாம் ஒன்றும் வேண்டாமப்பா ! என்று கவி மனம் முடிவெடுக்கிறது பாருங்கள் அந்த இடமே பிறப்பிடம்.திறமை ,நுட்பம்,அழகுணர்ச்சி  ,ரசனை என்று எதிலும் பிடிகிட்டாமலிருக்கும் கவிதை அவற்றையெல்லாம் உதறி லெகுவானதும் ,புளுக்கத்திற்கு வெளியே சுகமான காற்று வந்து தொடுவதைப் போல மேனியில் வந்து ஒட்டிக் கொள்கிறது.அதனால் அவன் கடந்து வந்தவற்றிற்குப் பொருளில்லை என்று சொல்ல முடியாது.அதன் வழியாகவும் வந்துதான் இந்த சம்பவம் நிகழ்ந்தேறுகிறது.கடைசியில்தான் அவன் காற்றுப் போல மேனியில் வந்து தொடுகிறான் எல்லாவற்றையும் உதறியெழுந்த பிற்பாடு.அவன் அத்தனையையும் உதறினாலும் உதறித் தட்டினாலும் கூட உதறியதன் தடயம் இந்த காற்றில் இருக்கும்.கவிதை எழுதிப்பார்க்கும் இடத்திலிருந்து கவியாகும் சூக்குமம்.அதன் பிறகு அவனொரு சூக்குமப் பொருள்.

இந்த இதழில் வெளிவந்துள்ள  பெருந்தேவியின் " நான் யார் நான் யார் நீ யார் " மேலோட்டமாகப் பார்த்தால் ஒரு விவாதப் பொருள் என்றே தோன்றும்.அது விவாதப் பொருளும் தான் .ஆனால் அது கவிதையாகியிருக்கிறது.இதனைத் தான் கவிதா வினோதம் என்கிறேன்.ரசனையை வண்டி வண்டியாக வந்து கொண்டு  இறக்கினால் கவிதையாகி விடும் என நினைப்பது ,கவிதையின் தொழில் நுட்பத்தில் உட்புகுந்த ஒரு மூட நம்பிக்கை.

கவிதையின் நான் என்பது வேறே .அது பொருளை நோக்கிக் குவிய வேண்டும்.நமது சொந்தப் பக்கறையை நோக்கிப் பொருள் குவிந்ததால் கவிதை விலகி ஓடிவிடும்.கவிப்பொருளின் "நான்" ஒரு திரவியம் .அது திரவியமாக உருமாற வேண்டுமெனில் கவிப்பொருளில் நான் கரைந்து காணாமல்   போய்விட வேண்டும்.புரிந்தோர் புரிந்திடுங்கோ ,புரியாதோர் போயிடுங்கோ  மக்கா .வேண்டுமானால்  உண்டி குறைத்து உருகிப்பாருங்கள்.என்னைக் குறைசொல்லி ஒருபயனும் இல்லை காண்பீர்  .பெருந்தேவியின் கவிதை ,காதல் வசப்பட்டேன் பெருந்தேவி

நான் யார் நான் யார் நீ யார்

என் கவிதையில் வருகிற
நானை நானென்று
நினைத்து விட்டீர்கள் பாவம்
அது சும்மா
நான் ஒரு கவித்துவ வசதி
அல்லது உயர் சித்தப்பிரமை
உண்மையில்
நான்
காற்று தள்ளி விட்ட
ஒரு சுரைக்காய்க் குடுவை
இல்லையில்லை
சுரைக்காய்க் குடுவையின்
தொன்ம ஆச்சார
மதிப்பெல்லாம் எனக்கில்லை
இப்போது சரியாகச் சொல்கிறேன்
கேளுங்கள்
நான்
ஒரு வழிப்போக்கன் விசிறியடித்த
காலி கோகோகோலா டின்
ஆமாம் டின்
இப்படியே உருண்டோடுவேன்
சொச்ச நாளும்
மிச்ச மீதியாய்
ஆமாம் நீங்கள் ?
காலி பெப்சி டின் என்றால்
தள்ளிப் போங்கள்
முட்புதர் நோக்கிச் சரிந்து
மண்ணில் மட்காமல்
புதையுண்டு கிடப்பதிலும்
போட்டிக்கு வந்து விடாதீர்கள்
  

இஸ்லாமியர்கள் அனைவரையும் கரித்துக் கொட்டாதீர்கள்

ஒரு கொலையை முன்வைத்து இஸ்லாமியர்கள் அனைவரையும்
கரித்துக் கொட்டாதீர்கள்

ஒரு தீய சம்பவத்தை முன்வைத்து ,அதற்கு காரணமானவரின் மொத்த சமூகத்தையும் பொறுப்பேற்கக் கோருவதை போன்ற மடத்தனம் வேறில்லை. உங்கள் மகனோ,மகளோ ஒரு தவறு செய்தால் ஒட்டுமொத்த குடும்பமுமே காரணம் என்று முடிவிற்கு வருவீர்களா ? இந்து மதத்தவருடனும் , பிறருடனும் இன்னும் திறந்த மனதுடன் இணக்கத்தை இஸ்லாமியர்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம்.அதேசமயத்தில் இப்போது நடைபெற்றிருக்கும் கொலையைக் காரணம் காட்டி மொத்த இஸ்லாமியர்களையும் குற்றம் சாட்டுவோரிடம் எச்சரிக்கை அவசியம்.இணக்கத்திற்கு எதிராகக் காத்திருப்போரை விட்டு அகலுங்கள்.அவர்கள் எல்லோருமே இஸ்லாமியர்கள் அனைவரையும் பயங்கரவாதிகள் என்று இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி முழக்கமிடுகிறார்கள்.அது உண்மையல்ல.அவர்கள் நமது சகோதரர்கள்.அவர்கள் அந்நியர்கள் இல்லை .நமது சொந்தங்கள்.அடுத்த தெருவில் வசிக்கிறார்கள் , அவ்வளவுதான் விஷயம்.

ஒரு திருடன் பிடிபடுகிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள் .அவனை திருடனாகக் காண்பது ஒரு வகை .திருட்டைச் செய்தவனின் இனமே ,சாதி முழுதுமே ,மதத்தை சேர்ந்தவர்கள் அனைவருமே திருடர்கள் என வாதிடுவது இரண்டாவது வகை .இந்த இரண்டாவது வகையில் நின்று வாதிடுபவர் எவர் ஒருவராக இருந்தாலும் அவர்தான் இனவாதி,சாதியவாதி ,மதவாதி என்பதை அடையாளம் காணுங்கள்.ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர் செய்யும் தவறுக்கு ஒட்டு மொத்த சமூகமும் பொறுப்பேற்க வேண்டுமெனில் இங்கே ஒரு சமூகம் கூட மிஞ்சாது.

அடிப்படைவாதிகளின் கைகள் எந்த மதத்தில் ஓங்கினாலும் சரி ,நாம் உடனடியாக சரி செய்ய வேண்டியது இணக்கத்தைத்தான்.இந்துக்கள் இஸ்லாமியர் இல்லங்களில் நடைபெறுகிற நிகழ்வுகளுக்கு அதிகமாகச் செல்லுங்கள்.அதுபோல இஸ்லாமியர்கள் எந்த நிகழ்வென்றாலும் இந்து நண்பர்களை அழைப்பதை கடமையாக வைத்திருங்கள். அடிப்படைவாதிகளைப் புறக்கணிக்க இது ஒன்றே ஆகச் சிறந்த வழி .இந்த முற்போக்கர்கள் புரோக்கர்கள். இருதரப்பும் இணையாமலிருந்தால்தான் அவர்களுக்கு பிழைப்பு ஓடும் .யார் இணைவது கடினம் என்று முற்போக்காளர்கள் கருதுகிறார்களோ அந்த இருதரப்பும் நேரடியாக இணையவேண்டும்.

நான் உங்களை அழைக்கிறேன்.உரிமையுடன் வந்து நில்லுங்கள்.உங்கள் அழைப்பில் நான் வந்து நிற்பேன் எனது சொக்காரனின் வீடு போல

கவிதை கேளுங்கள்

கவிதை கேளுங்கள் 

ஒன்று -1

எவரைப் பார்ப்பதற்கும் வெறுங்கையோடு 
சும்மா வருவதில்லை நான்

மடங்கி மடங்கிச் செல்லும் மலைத்தொடரில் 
நடுவில் தோற்றங்காட்டும் பௌர்ணமியை கொண்டு வந்தேன் 
நேற்று உங்களிடம்

மொய் எழுதாமல் சோற்றில் கைவைக்கும் பழக்கம் 
எனக்கில்லை 
வழிநெடுக உதிர்ந்து கிடந்த மஞ்சள் பூந்தரையை
மரங்களுடன் அள்ளியெடுத்து வருவது எனது வாடிக்கை

கைபிடித்து என்னை வரவேற்றுப் பாருங்கள் 
நீங்கள் விட்டகலும் காட்சிகளின் வெப்பம் உண்டு என் கையில்

சிறுவர்கள் வசிக்கும் வீடுகளுக்கு பேருந்துக்கு வெளியே 
ஓடிக்கொண்டிருக்கும் தாவரங்கள் 
யுவதிகளுக்கோ பகலில் தருவேன் 
இரவின் நட்சத்திரங்கள்

எனினும் குழந்தைகள் வசிக்கும் வீட்டில் 
வேடிக்கையைத் தரயியலாமல் வெறுங்கையோடு செல்பவர்கள் 
துரதிர்ஷ்டவசமானவர்கள்
கூர்ந்து என் கண்களை பார்க்கச் செய்தவர்களுக்குக்
கடல் காட்டுவேன்

இரண்டு - 2

பாமா இல்லத்தில் 
யார் வாயிலில் நின்றாலும் 
பாமாவே தோன்றுகிறாள்

முன்பக்க கேட் நான்கடியகலம்
ஒரு பக்கம் சற்றே திறந்திருக்க வேண்டும்
திறந்த ஒருபக்க கேட் மேல் நுனி பிடித்து 
நிற்கவேண்டும் பாமா

ஒரு காலுயர்த்தி படியில் நிற்க 
ஒரு நளின 
புறப்படும் வில்லின் வளைவு

மேற்கு பார்த்த தெருவில் பாமா 
மேற்கில் உடல் திரும்பி 
கிழக்கில் முகம் பார்க்கிறாள்

இப்படி பாமா இல்லத்தில் 
பாமாதான் நிற்கவேண்டும் என்பதில்லை 
யார் வேண்டுமாயினும் நிற்கலாம் 
நிற்க வேண்டும் 
நின்றால் அவள்தான் 
பாமா

பாமா நின்று நோக்கும் வீட்டில் 
பாமா நோக்காத திசையிலிருந்து வந்து கொண்டிருப்பவன்தான் 
கண்ணன் என்பது
பாமா அறியாததா என்ன ?

மூன்று - 3

அப்பா இறந்து போய்விட்டாரென
செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன 
யாருடைய அப்பா ?

அப்பா இறந்து போனாரென பேசிக் கொள்கிறார்கள்.
எல்லோருடைய அப்பாக்களும் ஒரேநாளில் எப்படி 
இறந்து போக முடியும் ?

யாரைக் கேட்டாலும் அப்பா இறந்து போய்விட்டார் 
என்று சொல்கிறார்கள்
அப்பா எப்படி இறக்க முடியும் 
நடுவயதுதானே ஆகிறது அவருக்கு ?
அம்மாவைக் காட்டிலும் ஓரிரு வயது அதிகம் 
அவ்வளவுதானே விஷயம்

அப்பா அவ்வளவு எளிதில் இறந்து போய்விடுவாரா 
என்னா
நடுவயதிற்குப் பிறகு வயதே ஆகாத 
அப்பா

நீ பெரியவனாயிருந்தால் இனியவர் உனக்குள் நுழைய போகிறார் 
நீ தாத்தாவாயிருந்தால் உனக்குள் இருந்து சற்றைக்கு முன் அவர் வெளியேறினார் 
நீ குழந்தையாயிருந்தால் உனக்குள் அவர் வளர்ந்து கொண்டிருக்கிறார்

நீ சத்ருவாக மாறினால் தொடர்ந்து அவர் 
கொலைமுயற்சியில் ஈடுபடுகிறார்

நான்கு - 4

நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான் யோக்கியரே 
ஆனால் அதற்கும் அப்பால் ஒரு பூஜ்யம் உண்டு

உங்கள் அர்த்தம் மட்டும்தானே நினைவென்று நினைக்கிறீர்கள் ?
நினைவிற்கு நூற்றைம்பது கால்கள் உண்டும் யோக்கியரே

மொத்தத்தில் நீங்கள் யோக்கியர் என்பதுதானே 
உங்கள் நிரூபணம் ?
உங்களில் வழுக்கி விழுந்த விலங்கை 
எடுத்து நகர்கிறது பாருங்கள் அந்த எட்டுக்கால் பூச்சி

நீங்கள் ஒரு பூஜ்யத்தையும் 
எட்டுக்கால் பூச்சியையும்
தவற விட்டதால்  
யோக்கியரானவர் என்பது உங்களுக்குத் தெரியுமா 
எல்லாமேயான யோக்கியரே ?

ஐந்து - 5

கீழுதட்டின் ஓரத்துக் கீறலில் 
ஒட்ட மறுக்குதடி உன் சாயம் என 
சிணுங்குகிறது நிலைக்கண்ணாடி 

ஒட்ட மறுத்த இடம்தான் என்னுடையது என்கிறாள் அவள்
அதனை மறுபடியும் நீ பாரேன் பாரேன் என்று குதிக்கிறாள் 
கண்ணாடியிடம்

கருப்பு மசி வரையும் புருவக்கோடுகளில் நீங்காத நிழல்கள்
இது கண்ணாடி 
அதுதானே என் உருவம் கூர்ந்து நோக்கு... என்கிறாள் அவள்

எப்படி மினுக்கினாலும் உனக்கு அவள் போல் வரவில்லையே முகம் !
வரவில்லையே அதுதான் என் சுய வரலாறு

இத்தனையும் கண்டுபிடித்தாயே 
நீ பார்த்ததெல்லாம் தாண்டிச் செல்கிறேன் பார் என்றவள் 
சிரிக்க 
புண்ணாகி பால் திரியும் நிலைக்கண்ணாடி

அந்த புதுக்தேவடியாள் 
யாரென்றுதானே கேட்கிறீர்கள் ?
அவளும் நானும் வேறு வேறு அல்லர்

ஆறு - 6

நீங்கள் வருவதற்கு தைரியப்படாத இடத்தில் இருந்து கொண்டிருக்கிறேன் 
நீங்கள் தைரியப்பட்டால் இயலக்கூடிய இடம்தான் இது

தைரியப்பட்டதால்தான் இங்கு வந்து சேர்ந்தேன் 
என்றும் சொல்வதற்கில்லை 
கழுகின் கழுத்து வசீகரத்தில் குருடனாக ஏறி அமர்ந்து 
வந்திங்கு சேர்ந்தேன்

இங்கே கொஞ்சம் சித்து கிட்டும் 
ஜோதிடம் அகப்படும் 
தரிசனம் தோன்றும் 
வாக்கு பலிதமாகும்

ஐந்து கடல் ஏழுமலை 
ஆயிரம் பூதங்கள் தாண்டியும் வரலாம் 
நேரடியாகவும் வரலாம்
வழிப்பாதை தெரியவேண்டும் 

ஆமை முட்டைகள் பொரித்து கடலுள் நகரும் பாதையில் தொடங்கி 
யானைத்தடம் கடந்து 
மலை மேல் பவனித்து
காற்று வரும் திசையில் வந்து சேரவேண்டும்

கடினமேதுமில்லை 
ஒரு வண்ணத்துப்பூச்சியின் வழிப்பாதைதான் இது 
என்று சொன்னால் நம்பவா போகிறீர்கள் ?
வந்து சேருங்கள் மேனியெல்லாம் 
வண்ணத்தின் பிசுபிசுப்பு காண்பீர்

ஏழு - 7

வழிநெடுக பூக்களை சிதறி விட்டுப் போயிருக்கிறான் 
இன்று சுடுகாட்டுக்குச் சென்றவன்
அதில் அவன் பார்த்த பூக்களும் உண்டு 
பார்க்காத பூக்களும் உண்டு

எல்லோரும் திரும்பி களைத்த பின்னர் 
வீதியில் கிடந்தது நசிந்து அழும் இந்த பூக்களை 
மிதிக்காமல் செல்ல முயல்கின்றன என் கால்கள்

எல்லோருடைய கால்களும் இப்படித்தான் முயற்சித்திருக்கக் கூடும் 
என்றாலும் நசுங்கி விடுகின்றன இந்த பூக்கள்

இதற்கு முன்னர் போனவனுக்கு இப்படித்தான் 
இனி புறப்பட போகிறவனுக்கும் இப்படித்தான்
நேர்கொண்டு நாளை உனது சூரியோதயத்தை 
அவசியம் 
கண்டு விடு.

எட்டு - 8

போவோர் வருவோருக்கு பயணத்தில் 
பார்க்கக் கொடுக்கும் அந்த பெருமரம் 
தனது அடிபாகத்தைப் பாறையென வைத்திருக்கும் 
இருளில் யானை எழும்பி நிற்பதை ஒப்பம் நெளிவு

கரடியென உயர்ந்து மலை போலும் கிளைகள் 
கிளைகள் முச்சூடும் தளிர்கள் 
நீலம் சிறு நீலம் சுருண்ட மலர்கள்

நீலம் சுருண்ட மலர்கள் தாமே என பயணம் திரும்புவதற்குள் 
ஒவ்வொரு நீலத்திலும் கிளைகளில் உட்கார்ந்து அமர்ந்திருக்கும் காக்கைகள்

காக்கை பூத்த மரமள்ளி கடக்கத்தான் 
வந்தேனோ இனியிந்த சிற்றூருக்கே
கிளையெல்லாம் காக்கைகள் தொங்கும் சிற்றூரில் 
கிளியின் வாய்ச்சொல் 
என் கவிதை 
வெறும் 
கீ கீ கீ ...

ஒன்பது - 9

ஏரியுடல்

வற்றிக் கொண்டிருக்கும் ஏரிதான்
வற்றிக் கொண்டிருப்பதை தெரியப்படுத்த விரும்பாத கொக்குகள் 
அதன் ஈரம் கொத்துகின்றன

அக்கரையிலிருந்து புறப்பட்டு வரும் வாத்துகள் 
நீர்வளையங்களில் நெளிகிறது ஏரியின் சுடு முதுகு 

கரைக்குத் திரும்பியவை மீண்டும் நீர்வளையங்களில் நீந்துகின்றன

யோனியை வானுக்குயர்த்தும் தாமரைகள் 
நீ எவ்வளவு வற்றினாலும் எனது வேர் உனது 
ஊற்றில்தான் இருக்கிறது பாரேன் என்கிறது

முக்காலத்திற்குள் இந்த காட்சியை அழைத்துச் சென்றதொரு 
பழம்பாடல் 
ஒலிப்பெட்டிக்கு சொந்தக்காரக் குறவன் 
வானம் பார்த்தபடி கரையில் 
படுத்திருக்கிறான்

அவன் உனக்கு குறவனைப் போலே
தோற்றங்காட்டுகிறான்
ஏகன் அனேகன் இந்த நிமிடத்தில் அவன் தானென்று 
எனக்கு சொல்லித்தந்ததோ 
ஏரிக்கரை அரசமரம்

உடன்தானே 
அரசின் இலைகளிலெல்லாம் 
அனேகனின் தளிர் வசந்தம்
நான் ஏரியின் நீர்வளையங்களை 
எடுத்துத் திரும்பினேன்

எனது வளை இடுப்பிலிருந்து
எதனை அப்படி எடுத்தாய் ? என்று கேட்டாயே 
உனக்குத்தான் இந்த பதில்

பத்து  - 10

விடுதலைக்கான என்னுடைய முதல் அடியில்
எப்போதும் ஒரு சிறைச் சாலைக்குள்தான் வந்து விழுகிறேன்
அதன் பின்னர் அங்கிருந்து சிகிரெட் புகைக்கக் தொடங்குகிறேன்

முட்புதரில் இறங்கி ஆற்றைக் கடக்கவேண்டும் 
முட்புதரில் இறங்குதல் என் வேலை 

பின்னர் ஆறு தன் வசம் என்னை அடித்துச் செல்லத் தொடங்குகிறது
என்மேலே உருண்டு விழுகிற சரளைக்கற்கள் 
நாங்களும் இப்படித்தான் முட்புதரில் இறங்கினோம் 
என்று ரகசியம் பேசுகின்றன

நாங்கள் ஒரு ஊரிலிருந்து மறு ஊருக்குள் செல்வதற்குள் 
ஆகாசம் கண்டோம் 
ஒரு இரவைக் கடப்பதற்குள் 
உயிர்கள் ஜனிப்பதை பார்த்தோம்

ஒரு யுகத்திற்குள்ளிருந்து மறுயுகத்திற்குள் நுழையும் போது
நம்புவீர்களா தெரியவில்லை 
நாங்கள் ஏன் முட்புதரில் இறங்கினோம் 
என்பது 
தெளிவாயிற்று

உங்களுக்கு அவமானமாக இல்லையா ?

உங்களுக்கு அவமானமாக இல்லையா ?  இந்திய பீனல் கோட் எத்தனையாவது பிரிவில் வருகிறது ! கனம் கோர்ட்டார்  அவர்களே !

இந்தியாவில் நீதிபதிகள் கொஞ்சம் கொஞ்சமாகப் பேசத் தொடங்கினார்கள்.முதலில் இவர்கள் பேசத் தொடங்கியதும் எல்லோரும் எழுந்து நின்று கரகோஷம் செய்தோம் .இனியொரு புதிய விடியல் தொடங்கப் போகிறது என்பது போல .போலீஸ் பீவர் சினிமாக்களில் வெளிப்படுவது போல ,இந்த அதிகார பீவர் ஏற்படுத்திய ஒரு வகையான புதிய விடியல் மனோபாவம் இந்தியாவில் பரவலாக, வைரலாக  மூக்கு சிந்த தொடங்கி பதினைந்து ஆண்டுகள் ஆகின்றன என நினைக்கிறேன்.தேர்தல் கமிஷனர்கள் பேசத் தொடங்கியதில் மயக்கமடைந்து நீதிபதிகளும் ஊதுபத்தி கொளுத்தினார்கள்.நீதிபதிகள் தங்கள் சொந்தக் கருத்துக்களை ,ஊதுபத்தி அபிப்ராயங்களை பேசிக்கூடாது என்பதல்ல. தனிப்பட்ட அவர்களின் உதிபத்திக் கருத்துக்களுக்கும் ,நீதிக்கும் ,சட்ட திட்டங்களுக்கும் இடைப்பட்ட வேறுபாடு தெரிந்து பேசவேண்டும்.நீதிமன்றம் என்பது இவர்கள் ஊதுபத்தி விற்பனை செய்வதற்கு உரிமம் வழங்கப்பட்ட இடம் அல்ல.நீதிபதிகள் அரசின் தரப்பாக உருமாற்றமடைந்து வரும் இதே காலகட்டங்களில்தான் அநேகமாக அவர்கள் குற்றவுணர்ச்சிகளை மறைத்துக் கொள்ள ஏராளமான அபிப்ராயங்களை நீதியின் போர்வையில் முன்வைக்கிறார்கள்.தனிமனிதர்களோ அல்லது அரசாங்கமோ நீதிபதிகள் என்ன விதமான தனிப்பட்ட கருத்துக்களைக் கொண்டிருக்கிறார்கள் ,அவர்கள் குடும்ப நலன் பற்றி கொண்டுள்ள அபிப்ராயம் என்ன என்பதையெல்லாம் அறிந்து கொள்ளவா நீதிமன்றத்தை நாடுகிறார்கள் ?

தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் மருத்துவப்படிப்பிற்கான நீட் தகுதித் தேர்வை எதிர்த்து சட்டம் தாக்கல் செய்திருக்கிறது.அதில் நீட் தேர்விற்கான பாட   திட்டமும்   ,தமிழ்நாட்டில் மாணவர்கள் பயிலும் பாட திட்டமும் வேறுபடுவது சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.சி.பி.எஸ்.சி பாட திட்டம் மட்டும்தான் தகுதியானது என ஒரு நீதிபதி தனிப்பட்ட முறையில் கருதுவாரெனில் அவருடைய பேரக்குழந்தைகளை சி.பி.எஸ்.சி யில் சேர்த்து விடலாம்.அப்படி செய்யும் பலர் இருக்கிறார்கள்.தமிழ்நாடு  அரசு சட்ட மன்றத்தில் நீட்டுக்கு எதிராக நிறைவேற்றியுள்ள சட்ட மசோதாவில் நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது என்பதை தெளிவுபட சொல்லியிருக்கிறார்கள்.தமிழ்நாடு சட்ட மன்றத்தில்  நிறைவேற்றப்பட்டிருக்கும்  சட்ட மசோதா  இதுவரையில்  நாம் காக்க விரும்புகிற  சமூக நீதியுடன் தொடர்புடையது .

சமூக நீதியென்பதே அவமானகரமானது என்று நீதியரசருக்கு  ஒரு அபிப்ராயம் இருக்குமெனில் இங்கே  சட்ட புத்தகத்தை  எழுதிய அம்பேத்கார் தொடங்கி சமூக நீதிக்காகப் போராடிய அத்தனை பேரிடமும் கேட்கவேண்டும் . உங்களுக்கு அவமானமாக இல்லையா ? ஏன் இன்னும் உயிரோடு இருக்கிறீர்கள் ? நீங்கள் ஏன் வாழ்கிறீர்கள் உங்களுக்கு அவமானமாக இல்லையா ?

கையில் பிடித்துக் கொண்டு போவது மத்திய அரசாங்கத்திற்கான குடை .இதில் நீதியரசர்கள் என்னும் பெயர் இன்னும் ஏன் காலத்தில் நிலைக்கிறது ? அரசர்கள் இன்னும் இந்தியாவில் இருக்கிறார்களா என்ன ? எனக்கொரு சந்தேகம் குடைபிடிக்கும் ,பல்லக்கு தூக்கும் உங்களுக்கு அவமானமாகவே இருப்பதில்லையா ? ஏன் ஒட்டுமொத்தமாக விலை போகிறீர்கள் ?

கமல் ஹாசனின் பேஸ் வாய்ஸ் அரசியல்

கமல் ஹாசனின் பேஸ் வாய்ஸ் அரசியல்

கமல் ஹாசன் தமிழில் எனக்குப் பிடித்த நடிகர்.அவர் நடித்த படங்கள் எவ்வளவு கோளாறாக இருந்தாலும் கூட எனக்கு பார்க்கப் பிடிக்கும்.திரும்பப் பார்க்கவும் பிடிக்கும் .நிறைய நுட்பமான அவதானிப்புகளை உடலில் வெளிப்படுத்தத் தெரிந்தவர்.மலையாளம் போன்ற மொழிகளில் இத்தகைய பண்பிற்கு உதாரணம் சொல்ல நிறைய நடிகர்கள் உண்டு.தமிழில் கமல் ஒரு அபூர்வம்.குரலிலும் நடிக்கத் தெரிந்தவர் கமல்.நான் அவருடைய ரசிகரும் கூட.கமல் சினிமாக்களில் கதாபாத்திரங்களை மெருகேற்றக் கூடிய அவருடைய குரலும் அவரது பேஸ் வாய்ஸும் ; அவருடைய அரசியல் பேச்சில் குளறுகிறது.உளறுகிறது.ஒரு துறையில் சிறந்து விளங்குவதற்கும் ,சம்பந்தமற்ற மற்றொரு துறையில் கருத்து சொல்வதற்கும் தொடர்பேதும் இல்லை என்பதற்கு கமலும் ஒரு உதாரணம்.இதனையே ஒரு சாமானியன் சொன்னால் அது ஒரு தேநீர்க் கடை பேச்சு போலத்தான் இருக்கும்.அவரே குறிப்பிடுவதை போல தமுக்கு அடிப்பவரைப் பொறுத்து மேளச் சத்தம் ஒலிக்கிறது ,அதுவே வேறுபாடு.
எல்லோருக்குமே அரசியல் ஆர்வமும் முதலமைச்சர் ஆசைகளும் நாட்டில் ஏற்படுவது நல்லதுதான்.தமிழ்நாட்டில் யாராக இருந்தாலும் ஒரு நாளேனும் முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்து விட முடியும் என்று மக்கள் எல்லோருக்குமே ஒரு நம்பிக்கை புதிதாக ஏற்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் எல்லா இளைஞர்களுக்குமே ஒரு நடிகனாகி விட வேண்டும் என்கிற கனவு இருக்கும்.ஏதேனும் மூலையிலேனும் அது அமர்ந்திருக்கும் .அது போல தமிழ்நாட்டில் பணி ஓய்வு பெற்ற அனைத்துத் துறை முதியோர்களுக்கும் திடீர் அரசியல் ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது.சினிமா என்றில்லை ,ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள் , தெண்டூழியம் செய்து ஓய்வு பெற்றிருக்கும் பேராசிரியர்கள்,அரசியல் கட்சிகளிலேயே ஓய்வை எட்டிவிட்ட பெரியோர்கள் ,வெளிநாடு சென்று முதுமையில் ஊருக்குத் திரும்பியிருப்போர் ,முதுமையில் செய்வதற்குப் பணியொன்றும் இல்லாதார் ,கவிதை கைவராத தமிழ் அரசியல் கவிகள் என பலருக்கும் முதலமைச்சர் ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது.இந்த ஆர்வத்தை தவறென்றும் சொல்வதற்கில்லை.நல்லதொரு பதவிதான் அது .போஷாக்கு அதிகம் நிரம்பிய பதவியும் கூட.
என்றாலும் ஒரு சாமானியனுக்குள் இந்த ஆசையின் உந்துதல் ஏற்படுவதற்கும் பிரபலங்களுக்கு ஏற்படுவதற்கும் இடையில் வேறுபாடு உண்டு.சாதாரண மனிதனுக்கு இந்த உந்துதல் ஏற்பட்டு இந்த பதவிக்கு வந்து சேரத் துடித்தால் அதனை ஒரு நல்ல உந்துதல் ,ஜனநாயகத்திற்கு வலிமை சேர்ப்பது என்று எடுத்துக் கொள்ளலாம்.பிரபலங்கள் இந்த ஆசைகளை மொய்த்து அப்பிராயங்கள் சொல்லும் போது கான்வென்ட் குழந்தைகள் இனிப்பு தின்று எச்சில் ஒழுகுவது போல அது உள்ளது.இது கமல் ஹாசனின் அரசியல் அபிப்ராயங்களுக்கும் விதிவிலக்கு அல்ல.
இரண்டு விஷயங்களை குறிப்பிடுகிறேன்.காந்தி ,திலகர் ,நேதாஜி ,சாவர்கர் எல்லோரையும் சம நேர்கோட்டில் புரிந்து வைத்திருக்கிற ஒரு மூளை முதலில் அரசியலுக்கு ஏற்புடையதல்ல.அரசியல் அறியாதது அது.கமல் சொல்லும் இந்த நேர்கோடு சிக்கலானது.அவரது ஆசான் சுஜாதா இதனை அவருக்கு சரியாக விளங்கச் சொல்லித் தரவில்லை போலிருக்கிறது.எத்தகைய அடிப்படை  அரசியல் புரிதலும் அற்ற கான்வென்ட் கேர்ள்ஸ்  புரிதலில் இருந்து அரசியல் பேசுவதற்கு Funny அரசியல் என்று பெயர் .இந்த Funny அரசியலுக்கு இங்கே ஏற்கனவேயுள்ள பெரிய உதாரணம் விஜய்காந்தின் அரசியல் என்பதறிக !
இரண்டாவதாக அரசியல் அதிருப்தியை வெளியிட்டு விட்டு , தான் விரும்புகிற தரப்பினர் மட்டுமே அரசியலுக்குப் பொருத்தமானவர்கள் என்பது போல பேசுபவர்கள் மிகவும் சிக்கலானவர்கள்.இவர்கள் அதிருப்தியை வெளிப்படுத்துவதே தனக்கு அல்லது விரும்பியவர்க்கு அதிகாரம் வந்தடைய வேண்டும் என்ற காரணத்தினால்தான்.அதிருப்தி மட்டுமே ஒரு அரசியல் தகுதி ஆகாது விஞ்ஞானிகளே ...
இங்கே எல்லாமே தவறாக இருக்கிறது என்பது அளவற்ற அதிகார தாகத்தின் மாயை .அதிருப்தி யதார்த்தமாவதில்லை. நாம் ஏற்றெடுத்து விரும்பி கொஞ்சம் கொஞ்சமாக உருமாற்றமடைந்து வரும் பாதைதான் நாம் காண்பதெல்லாம் என்பதே உண்மை.
இருபெரும் கட்சிகள்: தங்களின் தேக்கத்தில் வந்து நிற்கும் இன்றைய சூழ்நிலையில் கடந்த கால ,நிகழ் கால சமூகவியல் ,சமூக உளவியல் காரணங்களைப் புறந்தள்ளி விட்டு கமல் ஹாசன் வகையறா உண்மைபேசிகள் உண்மையில் பொய்பேசிகள் என்பதறிக நீலகண்டா !

கொலைகளில்,தற்கொலைகளில் உற்சாகம் அடையாதிருங்கள்

கொலைகளில்,தற்கொலைகளில் உற்சாகம் அடையாதிருங்கள்

கொலைகள் ,விபத்துகள் ,தற்கொலைகள் ஆகியவற்றின் போது உற்சாகம் அடைவதைப் போன்றதொரு தீமை வேறில்லை.கையில் வைத்திருக்கிற அரசியலை நிரூபிக்க கடைசி சந்தர்ப்பம் இதுதான் என்பது போல நடந்து கொள்வது அபத்தம் .மனித உயிர் பெயரில் மதிப்பற்ற செயல் இது .இங்கே கொலைகள் நடைபெறும் போது தங்கள் அரசியல் திராணியை நிரூபிப்பதற்கான கடைசி வாய்ப்பு இதுவென ; கொலையை அரசியல் ஆகாரமாகப் பார்ப்பவர்கள் மிகவும் சிக்கலானவர்.இந்த நாடு கொலைகார நாடு ,கற்பழிப்பு நாடு என்றெல்லாம் வேகமெடுப்பவர்கள் பரிதாபத்திற்குரியவர்கள்.பல சமயங்களில் இவர்களே பிரச்சனையின் கொதிநிலையை வாட வைத்து நீர்த்துப் போகச் செய்கிறார்கள்.ஒரு பிரச்சனை ஏற்படும் போது மொத்த அதிருப்தியையும் கொண்டு எல்லாருடைய தலையிலும் கொண்டு கொட்டுவதற்கு தயாராக இருப்பவர்களிடம் எச்சரிக்கையாக இருத்தல் நலம்.ஒதுங்கி கொள்ளுதல் மேலானது.சகல பிரச்சனைகளிலும் அதிருப்தியின் அத்தனை சாறையும் கொண்டு இறக்குகிற அரசியல் குரல்களுக்கு கண்ணில் புலப்பட மறுக்கும் வேறுபல முகங்கள் உண்டு.

பிரச்சனைகள் தனித்து கையாளப்பட வேண்டுமே அல்லாமல் அதற்கு தொடர்பற்ற அரசியல்  பிரயாசைகளுடன் இணைக்கப்படுவது பிரச்சனைகளின் உண்மைப்பண்பிற்கு இழைக்கப்படுகிற துரோகமாக அமையும் .

ஒரு சமயம் இடிந்தகரை போராட்டம் நடந்து கொண்டிருந்த போது,பிரான்சிஸ் சகாயம் படுகாயமுற்று அவசரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார்.கடல் முற்றுகை போராட்டத்தின் போது என்று நினைக்கிறேன் ,கடற்படையின் அத்துமீறிய மிரட்டல் ,தாழ்ந்து பறந்த விமானத்தின் பேரிரைச்சலில் பிரான்சிஸின் மூளை நரம்புகள் வெடித்து சிதறி விட்டன.நாகர்கோயிலில் முதலில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார்."தகவல் எதுவுமே சொல்ல மாட்டேன் என்கிறார்கள்,இங்கே ஆட்களும் யாரும் இல்லை ,உடனடியாக வாருங்கள்" என்று வழக்கறிஞர் நண்பர் ஒருவர் தகவல் தெரிவித்தார்.நான் மருத்துவமனைக்குச் செல்லும் போது சகாயத்தின் சில உறவினர்களை தவிர்த்து வேறு யாரும் இல்லை.மேலும் சில வழக்கறிஞர் நண்பர்கள் வந்து கொண்டிருந்தார்கள்.எனக்கு அப்போது வலிப்பு ஏற்பட்டு  ஒரு சில நாட்கள் கடந்திருந்தன.இப்படி உடல்நலிவுறும் காலங்களில் கடவுள் அழைத்தாலும் கூட எனக்கு உடன் செல்லும் பழக்கம் கிடையாது.மருத்துவமனையில்  பிரான்சிஸ் சகாயம் அனுமதிக்கப்பட்டிருந்த பகுதிக்குச் சென்று அவருக்கு என்ன நடந்திருக்கிறது ,நீங்கள் என்னவெல்லாம் செய்து கொண்டிருக்கிறீர்கள் ? எனக்குச் சொல்லுங்கள் என்று கேட்டேன்.பொதுவாக நான் இது போன்ற சந்தர்ப்பங்களில் பெரிய உரிமைக் குரலிலோ ,அரசியல் குரலிலோ சென்று விசாரிப்பதில்லை.அதனால் ஒருபலனும் கிடையாது  மட்டுமல்ல,அது அத்தகைய சந்தர்ப்பங்களில் இடையூறும் கூட.சாதுர்யமாக காரியத்தை நகர்த்தும் விவேகம் இது போன்ற சந்தர்பங்களுக்கு அவசியம்.சிறிய தகவலைக் கூட அவர்களிடம் இருந்து பெற இயலவில்லை.அன்றைய நாள் இரவில் அந்த மருத்துவமனைக்கு வெளியே ஆறு நண்பர்கள் படுத்திருந்தோம்.அதில் நான்குபேர் வழக்கறிஞர்கள்.இன்னும் இருவர் உண்டு அவர்கள் உளவுத் துறையைச் சேர்ந்தவர்கள்.

பின்னர் மறுநாள் அவர் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டு பிணவறையில் மூன்று நாட்கள் காவலிருக்க வேண்டியதாயிற்று.நமது அரசு அமைப்பும் ,அதிகாரமும் எவ்வளவிற்கு குரூரமாக உருமாறியிருக்கின்றன என்பதனை எனக்கு கண்ணால் காட்டித் தந்த நாட்கள் அவை.பிரேத  பரிசோதனையை உரிய முறையில் செய்யும்படி அரசாங்கத்தை வலியுறுத்த மருத்துவமனையில்  நான்கு முறைகளுக்கு மேல் போராட வேண்டியிருந்தது .கலகம் செய்ய வேண்டியிருந்தது.அதனை மிகவும் நிதானமாகவும் விபரத்தோடும் கையாண்டவர்களில் ஒருவர் வழக்கறிஞர் நண்பர் ஜெரால்டு .அரசு மருத்துவமனைக்கு அவர் உடல் மாற்றப்பட்டதிலிருந்து அரசியல்வாதிகளும் நூற்றுக்கும் அதிகம் வந்து சேர்ந்தார்கள்.

மருத்துவமனை டீன் ஒரு பேச்சுவார்த்தையின் போது "நீங்கள் தான் அந்த போராளிகளா ? உங்களை பார்ப்பதில் சந்தோசம் , என்று இளகாரமாகவும், நமட்டுச் சிரிப்புடனும் எங்களுடன் பேசத் தொடங்கினார்."ஐயா நான் இப்படி இளக்காரம் பேசுவதில் பெரிய மன்னன்,இது போன்று நானும் பதில் பேசத் தொடங்கினால் நீங்கள் அமர்ந்திருக்கும் நாற்காலிக்கு கூட வலிப்பு ஏற்படுமளவு சிரிப்பு வந்துவிடும்.காலத்தை கருத்திற்கொண்டு காரியத்தை மட்டுமே நாம் இருவரின் தரப்பும் பேசுவதே நல்லது.அதற்காகத் தான் நம்முடைய தரப்புகள் இங்கே கூடியிருக்கிறார்கள்  என்று கருதுகிறேன்" என்று பதில் சொன்னேன்.நரம்பியல் நிபுணர் விடுப்பில் இருப்பதால் மேலுமொரு நாள் தாமதமாகும் என்றார் அவர்.

இறுதிநாளில் ஊருக்குத் திரும்ப வேண்டும் பிரான்சிஸின் இறுதி யாத்திரைச் சடங்குகளுக்காக .நாங்கள் சொல்லும் பாதையில் செல்ல முடியாது என மறுத்தது அரசாங்கத்தின் தரப்பு.பேசிப் பேசி பொதுவான ஒரு முடிவை எட்டினோம்.

வெளியில் நின்று கொண்டிருந்த கருப்பு கால்ச்சட்டை  அங்கி அணிந்த அரசியல்வாதி   ஒருவர் " தோழர் இந்த பிணம்தான் நமக்கு ,அரசியல் நடத்தவும் ,போராடவும் கிடைத்த அரிய வாய்ப்பு .நாம் நினைக்கும் பாதையில்தான் கொண்டு செல்லவேண்டும் ,சமரசத்திற்கு உடன்படாதீர்கள்  " என்றார் பாருங்கள் .இதனை அவர் ரகசியமாகவோ,நாசுக்காகவோ கூட சொல்லவில்லை. எனக்கு ஒரு எருமையின் பிணம் எழும்பி வந்து சென்னியில் அடித்தது போன்று வலித்தது.இறந்த பிரான்சிஸின் உறவினர்கள் சிலர் உடன் நிற்கிறார்கள்.இந்த குரல் அரசாங்கத்தின் குரலைக் காட்டிலும் எனக்கு அச்சுறுத்தும் குரலாக செவியில் துளைத்தது.அரசாங்கம் குரூரமாகத்தான் மாறிக் கொண்டிருக்கிறது அதில் சந்தேகமில்லை.தன்னை நிரூபிக்கும் அத்தனை வழிமுறைகளையும் முறைகேடாக உருவாக்க முடியும் என்று சமீப காலங்களின் அரசு அமைப்பிற்கு நம்பிக்கை ஏற்பட்டிருப்பதும் பட்ட வர்தனமாகத் தெரிகிறது.புலப்படுகிறது.என்றாலும்  அதனை காட்டிலும் அச்சம் தர கூடியதிந்த இறந்த எருமைமாட்டின் அரசியற்குரல்  

பல சந்தர்ப்பங்களில் கள நிலவரமும் ,வழக்கின் தன்மையும் பொது அபிப்பிராயமும் ஒன்றுபோலிருப்பதில்லை.

தலித்துகள் மீதான நெருக்குதல்கள் ,தாக்குதல்கள் எங்கு நடந்தாலும் எல்லோரும் இணைந்து அதனை எதிர்ப்பதும் ,அதனைக் களைய அடிப்படையில் இருந்தே தேவையான முயற்சிகள் அத்தனையும் எடுக்க வேண்டியதும்  மட்டுமே தார்மீகம்.தர்மம்.இதனை மிஞ்சும் தர்மம் ஏதும் கிடையாது.பழைய தர்மங்கள் எதனை வேண்டுமாயினும் இதன் பொருட்டு மீறலாம்.இதன் பொருட்டு மீறப்படும் அத்தனையும் இணைந்து தர்மமாகும்.

ஆனால் பிரச்சனைகள் ஏற்படும் போது இந்தியா சீரழிந்து விட்டது கொலைகார நாடாகிவிட்டது ,கற்பழிப்பு தேசமாகி விட்டது என்று கணக்கு வைத்து அலறுகிற குரலிடம் எச்சரிக்கையாயிருங்கள்.சகல பிரச்சனைகளையும் நீர்த்துப் போகச் செய்கிற தீமையின் குரல் அது.ஏனெனின் பிரச்சனைகளில் தொடர்பு பெறாத வேறு வகை அரசியலை இக்குரல்கள் உட்புகுத்துவதன் மூலமாக பிரச்சனைகளின் சுய ரூபம் சிதைந்து காணாமல் போய்விடுகிறது.

தேவை பிரச்சனைகளுக்கான தீர்வே அன்றி எல்லோருக்குமான தற்கொலைகள் அல்ல.

அப்பச்சி காமராஜர் ...

அப்பச்சி காமராஜர் ... காமராஜ் பற்றி "நீயா நானா " விஜய் டிவி ஷோவில் பேசுவதற்காக ஆன்டனி ஒரு வாரம் முன்னதாக அழைத்தார்.நான் வர...