கோணங்கிக்கு பிறந்தநாள் வாழ்த்தாக... இக்கவிதை

ஊன்றுகோல்
குக்கரின் ஓசையும் கலந்து
பருகிய தேநீரில்
ஏழு எண்ணங்கள் காட்சிகளாயின
முதல் எண்ணத்தில் படிந்திருந்த தூசியைத்தட்டி
வெளியேற்றினேன்
ஒடுங்க மறுத்த சுய மரணத்தை
உள்ளே தள்ளி
கொலையின் எண்ணத்தைக் கையிலெடுத்துப்
பார்த்தேன்
பளபளப்புடன் மினுங்கியது அது
எல்லா புறங்களிலும் சவரக்கத்தியின்
கூர்மையில் இருந்ததை
உருளையாக்கிக் கைத்தடியாக்கிக் கொண்டேன்
குருதியும் பழியும் பாவமும்
ஊன்றுகோலானது
எடுத்து நடக்கத் தொடங்கியதும்
வந்து வழி மறித்தது
கொலையுண்டிறந்தவனின் ஒரு கவிதை
*
கொலையுண்டிறந்தவனின் தாயை
நீங்கள் பார்க்காமலிருக்கக் கடவது
முகமெல்லாம் ஆயுதமாக
கொலையைக் கண்களில் வைத்திருக்கிறாள்
மகனை நீங்கள் நோகாமலிருக்கக் கடவது
அவன் எல்லா பொழுதுகளிலும்
சவத்தைச் சுமக்கிறான்
பிரேத அறையின் முடுக்கம்
அவனில் நிறைந்திருக்கிறது .
மனைவியொரு பழந்தெய்வம்
அவளிப்போது
வைரமாயிருக்கிறாள்
மகளை நீங்கள் சலிக்காமலிருக்கக் கடவது
அவள்தான் இப்போது
அன்னையாயிருக்கிறாள்
[ கோணங்கிக்கு பிறந்தநாள் வாழ்த்தாக... கல்குதிரையில் முன்பு வெளிவந்த
இக்கவிதை ]

மலிவான சர்க்கஸின் கதை

மலிவான சர்க்கஸின் கதை

அங்கு நடக்கிற சர்க்கஸ் பார்க்க சகிக்கவில்லை என்று நண்பன் கூறினான் . அப்போதுதான் கண்டிப்பாக அந்த சர்க்கஸை சென்று பார்த்துவிடவேண்டும் என அவன் உறுதிஎடுத்தான்.அரவிந்தனின் " தம்பு"திரைப்படத்தைப் பார்த்திருப்பார்கள் பலர் என்று இக்கதை உத்தேசிப்பது மிகச் சிலரைத்தான்,தம்பு திரைப்படத்தில் வருகிற சர்க்கஸ் குழுவைக் காட்டிலும் சற்று மேம்பட்ட ஒரு குழுவினரே இந்த மலிவான சர்க்கஸை நிகழ்த்திக் கொண்டிருந்தார்கள் .தம்பு சர்க்கஸ் முதலீட்டலானைக் காட்டிலும் இந்த சர்க்கஸ் முதலீட்டாளன் சற்று மேம்பட்டவன் .எனினும் மடத்தனத்தில் இருவருமே சமதையானவர்கள் .போட்டி போடுபவர்களும்கூட .அழிவின் விளிம்பில் நின்ற வண்ணம் காலந்தவறிய இந்த இடத்தில கொட்டகையை அமைத்திருந்தார்கள் .
அவன் அந்த சர்க்கஸை ராவணனின் பத்து தலையோடு சென்று பார்க்கவே விரும்பினான் .காலை முதலே அதற்கான ஆயத்தத் தயாரிப்புகள் தொடங்கப்பட்டன . மீசை வைத்துக் கொள்வதில் தலைகளுக்கு உள்ள ஆர்வம் காரணமாக தகுதி வாய்ந்த ஒரு சவரக்கடையினுள் நுழைந்தான் .பத்து தலைகளின் பதிமுன்று ஆடி பிம்பங்களை ஒரே சமயத்தில் இளைஞன் சரி செய்தான்.அப்போது அங்கே உத்தேசக் கணக்குப்படி { ( 13*10=130) + (1*13=13) =147 } .நூற்று நாற்பத்தி முன்று பிம்பங்கள் அசைந்துகொண்டிருந்தன.இளைஞன் பத்து தலைகளுக்கும் சேர்த்து ஒரேயொரு மீசையை மட்டும்தான் உத்திரவாதப்படுத்தமுடியும் என்பதில் பிடிவாதமாக இருந்தான்.
மாலைவேளைக் காட்சிக்கு அவன் வீட்டிலிருந்து கிளம்பியபோது சமயம் ( 6.15) ஆறு பதினைந்து எனச் சொல்லியது .வேறொரு காலத்தில் நிகழ்கிற சர்க்கஸ் காட்சியைப் பார்ப்பதற்குக்கூட தற்காலத்தில் சரியான சமயத்தில் செல்லவேண்டும் என்பது அவனுக்கு வேடிக்கையாக இருந்தது .மேலும் காட்சியை காணச் செல்வதற்காக, முன்பதிவு செய்யப்பட்ட அனுமதி சீட்டும் அவனுக்கு மறுக்கப்பட்டு விட்டது .ஒரே உடல் மூலம் பத்து முகங்கள் காட்சிக்குச் செல்வதை அனுமதிக்க இயலாது என்பதில் உள்ள நடைமுறைச் சிக்கலையும் உணர்த்தினார்கள் .
அங்கே நுழைவுச்சீட்டு எடுக்க வேண்டிய இடத்தில் ,ஒரு தட்டியில் மூன்று வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கும் அனுமதிச்சீட்டு எடுக்கவேண்டும் என்கிற வாசகம் தென்பட்டது .சரியானதொரு வாசகம்தான் என்று நினைத்துக் கொண்டான் .குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை ,எவரும் ஒருப்போல சர்க்கசிலிருந்து காட்சிகளைத் தேர்வு செய்து கொள்ளலாம் என்பதால் கட்டணம் செலுத்தவேண்டியது நியாயம்தான் .
சர்க்கஸ் கூடாரத்தின் மீது மினுங்கும் சிறிய ,பலவண்ண மின்குமிழ் விளக்குகளில் ; இரண்டு விதமான குரல்கள் வெளிப்பட்டுக் கொண்டிருந்தன .
காட்சிகள் தொடர்பான செய்திகளைக் கூடாரத்துக்கு வெளியே சொல்லிக்கொண்டிருந்தது ஒரு குரல் .மற்றொரு குரல் காட்சிகளுக்குத் தாளமாக இசையுடன் கூடிய குரல் .குரல் வங்காள மொழி உச்சரிப்போடு தமிழைக் கையாண்டது . ஆக இசை,குரல் இரண்டுமே விசித்திரப் பொழுதையே சூழ்நிலையின் மீது ஏற்படுத்தின .
அவன் குரல்களைப் பற்றிப் பிடித்துக் கொண்டு காட்சிகளைப் பார்பதற்காக கூடாரத்தின் மேல்பகுதி நோக்கி முன்னேறினான் .அது சினை ஆடுகளையும்,குட்டிகளையும் பாதுகாப்பதற்கான சிறு கூடாரம் போன்று அளவில் விகாசமாக இருந்தது.
அவன் கூடாரத்தின் உச்சியில் முனைப்பகுதியை அடைந்து ,பத்து தலைகளையும் காட்சிகளைப் பார்க்கும் வண்ணம் சீரமைத்தபோது ,இருபது கண்களும் முதலில் பார்த்த காட்சியில் ,கலையரசி தலைகீழாக நின்று கொண்டிருந்தாள்.அவளைச் சுற்றி சைக்கிள் டயர்களையொத்த ஆறு வளையங்கள் பல நிலைகளில் அவளுடைய உடலைத் தொடாமல் சுழன்று கொண்டிருந்தன .அவற்றைக் களித்த முகங்கள் தற்காலத்தைச் சேர்ந்தவை.அவை ஒரு கண்ணால் மலிவான சர்க்கஸ் காட்சிகளைப் பார்த்த வண்ணம் , மறு கண்ணால் தொலைக்காட்சிகளை சொப்பனித்தன .ரிங் மாஸ்டர்கள் தோல்விவுற்ற தருணங்களை, ஊளையிட்டுக் கேலி செய்து நிதியாதாரத்தைச் சீர்குலைத்தவை இந்தச் சொப்பனங்காணும் கண்கள்தான்.ஆனால் ரிங் மாஸ்டர் தோல்வி தழுவிய பின்னணியில் கடுமையான பயிற்சிகளின் கம்பீரம் இருந்ததால் அவர்கள் உடனுக்குடன் நிலை கொண்டார்கள் .
குழந்தைகளுக்கான மிருகங்களை நீல சிலுவைக்காரர்கள் பெருமளவுக்கு சர்க்கஸ் கூடாரங்களில் இருந்து அபகரித்துக் காடுகளுக்குள் அனுப்பிருந்தார்கள் .எனவே அற்ப மிருகங்களே நுழைந்து திரும்பின.குரங்குகளால்கூட கூடாரத்துக்குள் நுழையும் வாய்ப்பில்லை .
அற்ப மிருகங்களில் பிரதானமாய் இருந்தது யானை .யானை தங்களைத் தெய்வங்களைச் சுமப்பதற்காக ஒப்படைத்திருப்பதால் ,பாகன்கள் பிச்சையெடுப்பதிலிருந்தும்,தங்களைத் தவிர்க்க இயலாமல் இருப்பதுவும்தான் : குழந்தைகளிடம் யானையை கொண்டு சேர்க்கிறது .மற்றபடி பொமரேனியன் நாய்க்குட்டிகளும் .ஒட்டகங்களும் பரிதாபமானவை .குதிரைகள் பரவாயில்லை .
பார் விளையாட்டுத் தொடங்கியதும் பத்து தலைகளும் உஷாராயின.காட்சிகளைக் கூடாரத்தின் மேலிருந்து பார்ப்பது பெரும் சுவாரஸ்யத்தைத் தந்தது .ஒருவேளை கீழிருந்து பார்ப்பதற்கான அனுமதி சீட்டு நடைமுறைப்பட்டிருக்குமாயின் எல்லாம் தலை கீழாய் போயிருக்கும் .பார் விளையாட்டின் சாகசங்கள் அனைத்தையும் தலைகீழாய் பார்க்க முடிந்ததில் தலைகள் பெருமைப்பட்டுக் கொண்டன .குறிப்பாக பார் விளையாட்டில் கீழிருந்து பார்ப்பவர்களுக்கு மிகவும் உயரத்தில் அமர்ந்திருந்த சாகச மேதைகள் ,பத்து தலைகளுக்கும் அண்மையில் தலைகீழாக இருந்தார்கள் .
கோமாளி பார் விளையாட்டுக் கம்பிகளையும் .ஊஞ்சல்களையும் பற்றி .மக்களை வேடிக்கை செய்துவிட்டு வலையில் மேல்நோக்கி விழுந்து சமதளத்தில் தலைகீழாகப் பூமியில் தொங்கியபடி நகர்ந்தபோது ,கோமாளித்தனம் அகன்று மேதமையோடும் , நிபுணத்துவத்தோடும் நகர்ந்ததை தலைகள் பார்த்தன .நிபுணனின் சிறப்பு அம்சங்களோடு அறிவிக்கப் பட்டுத் தோல்வியடைந்தவனை முதல் வரிசைக்காரர்கள் கேலி செய்ததும் மீண்டும் ,கயிற்று ஏணியைப் பற்றி மேலேறிச் சென்று ,விழுந்த அதே வேகத்தில் இருபது கண்களின் மீதும் பிடிவாதத்துடன் ,கீழே ,தலைகீழாக முன்னேறிக் கொண்டிருந்தான் .
பத்து தலைகளும் வியப்பு சூழ வீட்டிற்கு அழைத்து வந்தது ."நிபுணன் விழுந்து தலைகீழாகத் தங்கள் கண்களை நோக்கி
முன்னேறிய கடைசிக் காட்சியை மட்டும்தான்" .
க -2007

சிலேட் அறிவிப்பு ,வேண்டுகோள்சிலேட் அறிவிப்பு ,வேண்டுகோள்
அடுத்த இதழுக்காக வேலைகளில் ஈடுபட்டு வருகிறோம்.டிசம்பர் மாதத்தில் இதழைக் கொண்டுவரவேண்டும்.சிலேட் இதழின் அவசியத்தை உணரும் நண்பர்கள் ,வாசகர்கள் ,இது தேவையெனக் கருதுவோர் அவசியம் சந்தா செலுத்தி விடுங்கள்.
வாசகர்கள் இந்த இயக்கத்திற்கு உறுதுணையாய் இருப்பதே முதன்மையானது.
ஆண்டு சந்தா ரூ 400/-
இரண்டாண்டு சந்தா ரூ 800/-
மூன்றாண்டு சந்தா ரூ 1200/-
வெளிநாட்டிலிருந்து இதழைப் பெற விரும்புகிறவர்கள் தபால் செலவை கருத்திற்கொண்டு அந்த தொகையை இணைத்து சந்தாவுடன் செலுத்துங்கள்.வெளிமாநிலங்களுக்கு அனுப்ப தபால் செலவு ஒரு இதழுக்கு ரூ 85 /- செலவாகிறது . இது இதழின் விலையில் முக்கால்வாசிக்கும் அதிகம்.நாங்கள் நிறுவனங்கள் எதனுடைய பின்புலமும் அற்றவர்கள் .ஏற்படும் நட்டங்கள் எங்களை நோக்கி மட்டுமே திரும்புபவை.திரும்பிக் கொண்டிருப்பவை.
வழக்கமாக இதழ் கேட்டுப் பெறுபவர்கள் இதழுக்காக தொகையையோ ,சந்தாவையோ செலுத்த மறந்து விடுகின்றனர்.நானும் நினைவுபடுத்துவதில்லை.அதிலும் ஆக்ரோஷமாகக் கேட்டுப் பெறுபவர்கள் செலுத்தவே போவதில்லை என்பது எனக்குத் தெரியும்.இருந்தாலும் இவற்றை ஏன் சொல்கிறேனென்றால் ஒவ்வொரு முறையும் புதிதாக முதலீட்டைத் திரட்டுவது என்பது கடினமான காரியம்.இலவசமாகப் பெறுகிறவர்கள் அப்படி செய்யாதீர்கள்.அதிலும் பிறருக்கும் சேர்த்து எங்களிடமிருந்து பெறுகிறவர்கள் ஏதோ எங்களைப் பற்றிய தவறான எண்ணத்தில் இருப்பது போல தோன்றுகிறது.இதழினை இலவசமாகப் பெறும் நிலையில் உள்ளோருக்கு நாங்களே ஒவ்வொருமுறையும் அனுப்பி விடுகிறோம்.
"ஆறிய கஞ்சி பழங்கஞ்சி " என்பது உள்ளூர் சொலவடை.செய்ய நினைப்பதை உடனடியாக செய்துவிடுங்கள்.செய்யலாம் என்று நினைப்பவை நடைபெறுவதில்லை.
எங்களோடு இதழின் பங்குதார்களாக இணைய விரும்புபவர்கள் , எங்களுக்கு ஏற்படும் நட்டத்தில் ஈடுகட்ட முடியும் .எங்கள் அயர்வையும் ,தளர்ச்சியையும் துணைகொண்டு தாங்கமுடியும்.
எங்கள் பயணத்தில் தங்களையும் இணைத்துக் கொள்ள விரும்புபவர்கள் புரவலர் நிதியாக ரூ 10,000 /- செலுத்துங்கள் . ஐம்பது புரவலர்கள் தயார் எனில் ஐந்து வருடங்களுக்கு தடையின்றி செல்ல முடியும்.
உங்கள் பங்களிப்பினை செலுத்த விரும்புவோர் கீழ்கண்ட கணக்கில் செலுத்தி விட்டு ,எங்களுக்கு தகவல் தெரிய படுத்துங்கள்.நன்றி.
LAKSHMI MANIVANNAN.A
AC NO - 183100050300648
TAMILNAD MERCANTILE BANK LID
IFSC CODE -TMBL0000183

தொடர்பு எண் - 8220386795

குறுங்கதை - கியூபின் சேம்

குறுங்கதை
கியூபின் சேம்
லக்ஷ்மி மணிவண்ணன்
கியூபின் சேம் ரெண்டாம் வகுப்பு பயிலும் மாணவன் .அவன் ஹெப்ரான் மெட்ரிக் பள்ளியில் படிக்கிறான் . முதலில் அவனை அழைத்துக்கொண்டு அவனது பெற்றோர் கிழப்பாதிரி ஒருவரை சென்று பார்த்தனர் . கிழப் பாதிரிக்குள் கிறிஸ்து பலமாக அலைக்கழிந்த வண்ணமிருந்தார் .அவர் ரோமன் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவர் .கிழப்பாதிரி தன்னுடனேயே கிறிஸ்த்துவை எப்போதும் பராமரிக்க வேண்டுமென விரும்புபவரும்கூட.கிழப்பாதிரி மதுக்குவளையைத் தொடும்போது கிறிஸ்து தள்ளாடுவார்.பொதுவாகவே தற்காலத்தில் தள்ளாடுகிற கிறிஸ்துவையே பெரும்பான்மை மக்கள் விரும்புகிறார்கள் .தள்ளாடும் கிறிஸ்துவிடம் கருணை சற்று அதிகம் என்பதும் உண்மை .கிழப்பாதிரி அவ்வாறாக கருணை மிகுந்திருந்த ஒரு சமயத்திலேயே கியூபின் சேம் கிறிஸ்துவின் முன்பாக நிறுத்தப்பட்டான்.கிறிஸ்து அப்போது தள்ளாடிய வண்ணம்
"உன் பெயரென்ன குழந்தை ?"
என்று கியூபின் சேமிடம் கேட்டார் .அதற்கு கியூபின் சேம் எந்த பதிலையும் தரவில்லை .அப்போது அவனது பெற்றோர் கிறிஸ்துவின் முன்பாகப் பதற்றமுற்றனர் .சில விஷயங்களைச் சொல்லத்தலைப் பட்டனர் .ஆனால் கிழப்பாதிரி அவர்களைப் பொருட்படுத்தாமல் மீண்டும் கியூபின் சேமிடம்
"உன் பெயரென்ன குழந்தை ?"
என்று கேட்டார்
"கியூபின் சேம்"
என்று பதில் சொன்னான் அவன் .
"நல்லது .
நீ என்ன படிக்கிறாய் ?"
என்று அடுத்த கேள்விக்குள் புகுந்த கிழப்பாதிரியிடம் கவனமற்ற நிலையில்
"இரண்டாம் வகுப்பு
ஹெப்ரான் மெட்ரிக் பள்ளி "
என்று சுரத்தின்றி பதில் கூறினான் சேம் .தள்ளாடிய வண்ணம் கிறிஸ்து பெற்றோர்களை நோக்கி
"இப்போது பறவையைப் போன்றிருக்கிறான் குழந்தை !"
என்று கூறியபோது பெற்றோர் மேலும் பதற்றத்துக்கு உள்ளாயினர் .
"பாதர்! எங்கள் குழந்தைக்கு என்னவோ ஆகிவிட்டது .கர்த்தர்தான் அவனைக் காப்பாற்றவேண்டும் .நீங்கள் அவனுக்காக கர்த்தரிடம் பிரார்த்திக்க வேண்டும் .அவனுடைய வகுப்பு ஆசிரியர்கள் அவனைப் பற்றி குறை கூறுகிறார்கள் .தங்கள் மகன் பிற குழந்தைகளைப்போல இல்லை .அவனுக்கு பாடம் சாதிப்பதில் ஆசிரியர்கள் தோல்வியடைந்து வருகிறார்கள் .அது பற்றி அவர்கள் கவலையும் தெரிவிக்கிறார்கள் .குழந்தையின் எதிர்காலம் குறித்து அச்சப்படுகிறோம்"
என்று தள்ளாடிய வண்ணமிருந்த கிழப்பாதிரியிடம் கவலை தெரிவித்தனர் .
"நீங்கள் அதிகப்படியாக கவலைப்படுகிறீர்கள் .பிற குழந்தைகளைப்போலவே அவனும் காணப்படுகிறான்"
என்ற கிழப்பாதிரியை அப்போது குறுக்கிட்ட கிறிஸ்து...
" தள்ளாடியநிலையில் எதையும் அவசரப்படாதே ! ஒருவேளை சேமின் பெற்றோர் கவலை கொள்வது போன்றே சாத்தான் குடி புகுந்திருக்கக் கூடும்.!"
என எச்சரித்தார் .திடுகிடலுக்கு ஆளான கிழப்பாதிரி ...
"சரி இருக்கட்டும் ,கியூபின் சேம் குறித்த உங்கள் கவலை என்ன ?"
என்று பெற்றோரைக் கேட்டார் .
"பாதர் ! அவனுக்கு ஒன்றாம் எண் [ 1 ] நினைவில் பதிய மறுக்கிறது .அதனால் எண்ணற்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன .குறிப்பாக ஒன்றாம் வாய்ப்பாடுகூட தெரியாது .பிற எண்களை எல்லாம் சொல்லிவிடுகிறான் .[ 1 ] ஒன்றாம் எண்தான் பிரச்சனைக்குரிய எண்ணாக இருக்கிறது .இது எவ்வளவு விபரீத விளைவுகளை அவனுடைய எதிர்கால வாழ்வில் ஏற்படுத்திவிடும் ?
எண்ணிப்பாருங்கள் பாதர் !
நீங்கள்தான் கருணை செய்யவேண்டும் .கர்த்தரைத் தவிர மாற்றுப் பாதைகள் எதையுமே நங்கள் அறிய மாட்டோம் "
எனக் கிழப் பாதிரியிடம் பெற்றோர் முறையிட்டபோது கிறிஸ்து தனக்குள்ளாகவே ஒருமுறை சிரித்து மகிழ்ந்தார் .அப்போது நிதானித்த கிழப் பாதிரி சற்று சிந்தனையை செலுத்தியவாறு ...
"குழந்தை எண்களைக் கற்பனை முலமாக எதிர்கொள்ள முயற்சிக்கிறான் .இது சாத்தானுடைய பிரதானமான பண்பு நலன்களில் ஒன்று.
பிரச்சனையை எதிர் கொள்வதற்கு இரண்டு வழிமுறைகளை ஒரே சமயத்தில் நீங்கள் பின்பற்ற முன்வரவேண்டும் .
முதலாவதாக ,சாத்தானுக்கான வேத வாக்கியங்களை நீங்கள் தினம்தோறும் குழந்தைக்குப் போதித்து வரவேண்டும் .
இரண்டாவதாக ,ஒரு குழந்தை மனநல மருத்துவரைக் கலந்தாலோசிக்க வேண்டும் ."
என்று பெற்றோரிடம் கிழப்பாதிரி கூறினார் .அப்போது அவரிடம் நிலவிய தள்ளாட்டம் குறைந்திருந்தது .
"சாத்தானுக்குரிய வேத வாக்கியங்கள் எங்களுக்குத் தெரியாது பாதர் !"
என்ற பெற்றோரைத் தீர்க்கமாக கிழப்பாதிரி பார்த்துவிட்டு ...
"தினம்தோறும் வேத வாக்கியங்களைப் பழகுங்கள் .அதிலிருந்து சாத்தான் தனக்குரிய வாக்கியங்களைத் தேர்வு செய்து கொள்வார் .அவருடைய தேர்வை நிச்சயிக்க முடியாது என்பதை மட்டும் தற்போது நீங்கள் அறிந்து வைத்திருந்தால் போதுமானது ."
என்றார் .
பின்பு  கியூபின் சேமைப் பார்த்து கிழப்பாதிரி ...
"அன்பு நிறைந்த உனது பெற்றோர் கூறுவதைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய் குழந்தை ?"
என்று கேட்டதற்கு சேம் பதில் ஏதும் சொல்லவில்லை .தள்ளாட்டம் குறைந்து எரிச்சலுற்ற கிழப்பாதிரி சேமை உலுக்கியபோது ...
"பாதர் ! உங்கள் அறைக்குள் உள்ள நீலம் குறைந்த வானத்தில் வெண்ணிறக் கொக்குகள் பறந்து செல்கின்றன பாருங்கள் "
என்றான்.
மறுநாள் காலை வழக்கம்போல விடியவில்லை .கியூபின் சேம் அறிய இயலாத [ 1 ]ஒன்றாம் எண்ணைச் சுமந்தபடி பெற்றோர் காலைவேளை தொலைகாட்சிகளில் துருதுருத்தனர் .அப்பா தேநீர் அருந்தும் போது ...
" இதனைத் தாமதப்படுத்தகூடாது '
நாம் இன்றைய பணிகளைக் கைவிட்டுவிட்டு குழந்தை மன நனநலக் காப்பகத்திற்கு அழைத்துச் சென்று விடுவோம் .
என்று அவசரமானார் .அம்மா ஒத்துக்கொண்டாள்.
ஒருவார காலத்தில் சிகிழ்ச்சை விளைவுகள் பெற்றோர் நினைத்ததற்கு எதிர்மறையானவை .
[ 1 ]ஒன்று என்ற எண் அவனுக்கு நினைவு திரும்பிவிட்டது .
துரதிர்த்டவசமாக பிற எண்கள் [ 2,3,4,5,6,7,8,9,0 ] இருந்த இடங்களை எல்லாம் கதைகள் நிரப்பிவிட்டன .
அலறி அடித்துக் கொண்டு மீண்டும் கிழப்பாதிரியிடம் கியூபின் சேமை அழைத்துச்சென்று முறை இட்டனர் .
தள்ளாட்டமின்றி கருணைக் குறையுடன் காணப்பட்ட கிழப்பாதிரி ...
"வேத பாடத்தையும்,மருத்துவத்தையும் ஒரே திசையில் சீராக மேற்கொள்ளுமாறுதானே நான் உங்களை உபதேசித்தேன் .முட்டாள்களே ?"
என்று திட்டினார் .
பின்பு கியூபின் சேமைத் திரும்பி ...
"எப்படி இருக்கிறாய் குழந்தை ?"
எனக் கேட்டார் .
"நன்றாக இருக்கிறேன் "
என்றான் .
"வேத பாடங்களைப் பயிலும் ஆர்வம் உனக்குள்ளிருக்கிறதா குழந்தை ?"
எனக் கேட்ட கிழப்பாதிரியைத் திரும்பி கேள்வியைக் கவனமற்று ...
"கடவுள் இப்போது என்னோடு நேரடியாகப் பேசிக் கொண்டிருக்கிறார் .தயவு செய்து குறுக்கிடாதீர்கள் ..."
என்றான் கியூபின் சேம்

சிறுகதை - கொலையாளி விட்டுச்சென்ற சட்டை

சிறுகதை
லக்ஷ்மி மணிவண்ணன்
கொலையாளி விட்டுச்சென்ற சட்டை
அன்று எதற்காக அந்தச் சட்டையை முடிவு செய்தேன் என்பது சரியாக விளங்கவில்லை.எனது உடல்வாகுக்கு அது ஏற்றதாகவும் இல்லை .சற்று பெரியது . பச்சை வண்ணத்தில் தங்க நிறக் கோடுகள் குறுக்கு நெடுக்காக பதிக்கப்பட்ட சட்டை அது . தோளின் இருபுறமும் பட்டைகள் தைக்கப்பட்டிருந்தன .அதுபோல முழுக்கையை மடக்கி பொத்தான்களில் இணைத்துக்கொள்ளும் வண்ணம் ஒரு சிறப்பு அமைப்பும் இருந்தது . பச்சை வண்ணத்தில் தங்கக் கோடுகளின் பளபளப்பு அந்த சட்டைக்கு ஒரு வசீகரத்தை வீசிற்று .எப்படிப் பார்த்தாலும் அது வழக்கமான சட்டையாக இல்லை .தையல்காரர் அச்சட்டையில் தனது செயலை ஏற்றியிருந்தார் .தனது காதலியைப் பழிவாங்கும் நோக்கம் ;அவர் இந்த சட்டையை உருவாக்கும்போது ;அவரது மனதில் ஓடிற்று என்பதை சட்டை வெளிப்படுத்திற்று .பேரலன்காரம் என்றெல்லாம் சொல்ல முடியாது .எனினும் சட்டைக்கு தனிச்சிறப்பு இருந்தது .ஆனால் நீங்கள் நினைத்துக்கொள்வதைப் போன்று சட்டை தோல் போன்று விறைப்புத் தன்மை கொண்டதில்லை .மாறாக மிருதுவானது .
சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு ஒரு நள்ளிரவில் இளம் கொலையாளியொருவன் என்னிடம் இந்த சட்டையை விட்டுச் சென்றான்.அவன் அந்த நள்ளிரவில் எழுப்பியபோது தூக்கக் கலக்கத்தில் சொருகிக்கொண்டிருந்தன எனது கண்கள் .மாறாக அவனது கண்கள் சுடர் விட்டுக் கொண்டிருந்ததை ;பின்னிரவுவரை நான் களித்திருந்த மது உண்டாக்கிய தலைக்குத்தும்,நோய்த்தன்மையும் காட்டித் தந்தன .அவன் வந்தது தொடங்கியே என்னுடன் விவாதித்துக் கொண்டேயிருந்தான்.எனக்கு அச்சமயத்தில் அது பெரும் சலிப்பாக இருந்தது .
அப்போதைய அவனது சில அற்பத் தேவைகளை என்னிடம் உளறிக்கொண்டிருந்தான் . அது ஒரு வறபுறுத்தலைப் போன்றும் .அல்லாமலும் வளவளப்பாக வெளிப்பட்டுக் கொண்டிருந்தது .அவனது தேவைகளைக் கொடுத்து விரைவில் அவனை அகற்றிவிடவேண்டும் என்னும் எண்ணம்தான் எனக்கிருந்தது .அவனோ விவாதிப்பதைக் கைவிட தயாராக இல்லை . அவன் கேட்கும் பொருட்கள் ,' ஆசிர்வதிக்கப்பட்டு தரப்படவேண்டும்' என்பதை ஒரு நிபந்தனைபோல கூறினான் . இக்கூற்று என்னை அந்த தூக்கக் கலக்கத்திலும்கூட எச்சரிக்கையடையச் செய்தது . அவன் கேட்ட தொகையை அவனிடம் கொடுத்து இதில் ஆசிர்வதிக்க என்ன இருக்கிறது என்று கேட்டேன் ?அவன் இடம் பெயர்ந்து முதலில் தப்பிப்பதற்கான மிக சிறிய தொகை அது அவ்வளவுதான் .அச்சிறு தொகையைத்தான் அவனும் கேட்டான் .தர வைத்திருப்பதையே கைகளிலிருந்து பிடுங்கி ரெத்தம் கசியச் செய்பவர்களின் மனநிலையை ஓரளவுக்கு அப்போது அவன் வெளிப்படுத்தவும் செய்தான்.
அவன் எனது மேசையிலிருந்து பேனாவை எடுத்தான் .எனது பேனாவை எடுப்பவர்களை ஒருபோதும் நான் உவப்பானவர்களாகக் கருதுவதில்லை .சிறுவயதிலிருந்தே அது எனக்கு ஒத்துக்கொள்வதில்லை .எனக்கு வாகாக நான் தேர்வு செய்து வைத்திருப்பவையாக அவை இருக்கும் .அவற்றிற்காக நான் செலவு செய்யும் பொழுதுகள் அதிகம் .கண்டுகொள்ளாமல் விட்டு விட்டேன் .அப்போதைய அவனது தேவைகள் மேலும் ஒரு ஜோடி ஆடைகளும் ,காலணிகளும் என்பது தெரிந்தது . புத்தம்புதிதாக எடுத்து அவற்றை அவனிடம் நீட்டினேன் .உடனடியாக அவற்றைப் புறக்கணித்த அவன், ஏற்கனவே நான் அணிந்திருந்த ஆடையை கேட்டான் .முன்வந்து கொடுப்பவற்றை அவன் சந்தேகிக்கத் தொடங்கிவிட்டது தெரிந்தது ..
"இவ்வளவு எளிதிலேயே நீ சந்தேகத்திற்கிலக்காவது நல்லதல்ல ...
நீ செல்ல வேண்டிய தொலைவு அதிகம்
ஆரம்பத்திலேயே நீ சந்தேகத்திற்கிலக்கானால் இரண்டொரு நாளிலேயே நொறுங்கி வற்றி விடுவாய்
வைராக்கியம்,வீண் சந்தேகம் கொள்ளக்கூடாது ..."
என்றேன் .
"இந்த வார்த்தைகளைப் பெறுவதற்காகத்தான் புதிய ஆடைகளை நிராகரித்ததாக " அவன் கூறியதில் இருந்த பாசாங்கு மறைவதற்குள் ,நான் அவனுக்குத் தர விரும்பாத எனது காலணிகளை காலால் இழுத்து எடுத்தான் .
"அந்தக் காலணிகளின் பாதை உனக்கு வசப்படாது ...
அதனை நீ அணிந்த மாத்திரத்திலேயே அது உன்னை வழிநடத்தத் தொடங்கி விடும்...
புதிர்வழிப் பாதைகளையும் ,சந்நியாசத்தையும் தனது காலில் கொண்டிருப்பது அது . எடுத்து அணியாதே ...
எனது பல சுக்குமங்களை கதையெனக் கொண்ட 'தற்போதைய ஓய்வு நிலை அந்தக் காலணிகள்.ஏகதேசம் முள்ளாணிச செருப்புக்கு நிகரானவை அது "
என்றேன் .
"அதுதான் தற்சமயம் தனக்குப் பொருந்தக்கூடியது "
என்றவன் அணிந்தவண்ணம் கிளம்பிவிட்டான் .அப்போது அவன் விட்டுச் சென்றதுதான் இந்த தங்கக்கோடு நிரம்பிய பச்சை வண்ணச் சட்டை
மறுநாள் அவன் விட்டுச் சென்ற அந்தச் சட்டையை எடுத்து எறிந்து விடலாமென நினைத்தேன் .முன்பக்கத்தில் வயிற்றுப் பாகத்தில் மட்டுமே ,சன்னமாகத் தெளிக்கப்பட்டிருந்த ரெத்தக்கறை அவனது சுபாவத்தைச் சொல்வது போல பட்டது .மை தெளித்து விளையாடும் குழந்தைகள் தெளித்து விளையாடியதைப் போன்ற தடயம்.!மிகுந்த லாவகத்துடன் ,நடுக்கமின்றி அவன் இந்த கொலையைச் செய்திருக்கவேண்டும் என நினைத்துக் கொண்டேன் .மேலும் கொலை செய்யப்பட்டவனின் கதையையும்அந்தச் சட்டை பேசுவதுபோல பட்டது .அந்தக்கதை அத்தனை சுவாரஸ்யமாக இல்லை . பின்னர் நானே அந்தச் சட்டையை அழகாக ,சலவை செய்து பத்திரப்படுத்திக் கொண்டேன் . ஆனால் சுமார் இந்த பத்து வருடங்களில் நானதை திரும்ப எடுத்துப் பார்த்ததே இல்லை.அவனை நினைவு கொண்டதும் இல்லை .ஆனால் அந்த சட்டையின் மாங்கல்யம் மட்டும் நினைவில் அழியாமல் புதிதாகவே இருந்தது .
இன்று அந்தச் சட்டையை எடுத்து அணிந்தவண்ணம் வழக்கமாகச் செல்லும் தேநீர்க் கடையை சென்றடைந்ததும் ,ஏற்கனவே வார்த்தையை வாயில் தயாராக வைத்திருந்தவனைப்போல .
"வேறு யாரோ வருகிறார்கள் என நினைத்தேன் "
என்றான் டீ மாஸ்டர் .மாலையில் பெய்யவேண்டிய மழைக்கு வெயில் கடுப்பாய் விழுந்து கொண்டிருந்தது .உடுப்பின் அளவு பெரியதாய் இருந்ததால் அவனுக்கு அவ்வாறு தோன்றி இருக்கக்கூடும் என நினைத்துக் கொண்டேன் .
"நானும் அவ்வாறுதான் நினைத்தேன் "
என்று டீ மாஸ்டருக்கு ஒத்தூதியவன் ,காலையில் ஒருமுறை மனைவியைப் புணர்ந்து பின் வெளிவந்தவனின் முகக்குறியோடிருந்தான்.அவசியமற்ற குற்றவுணர்ச்சியை பிரதிபலித்தது அவனது முகம் .பின்பு அந்த சட்டையை அணிந்தவண்ணம் அன்றைய தினம் எங்கெல்லாம் அலைந்தேன் என்பதை இப்போது விவரிப்பது எனது நோக்கமில்லை .சட்டை என்னை ஒரு கருவியாய் பாவிக்கத் தொடங்கி இருந்த சற்று நேரத்திற்குள்ளாகவே நான் மயக்க நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தேன் என்பது மட்டும் எனது நினைவில் இருக்கிறது .
மறுநாள் காலை விடியலில் ,காவல் நிலையத்தின் ஒதுக்குப்புற தூண் கம்பத்தில் இரும்புச் சங்கிலியால் பிணைக்கப்பட்டு கிடந்த என்னையும்,எனது நண்பனையும் ; சூடான தேநீர் எழுப்பியது .தேநீரின் பார்வை ,கடும் சீற்றத்துடன் இருந்ததை ஏனென்று விளங்காமல் பார்த்தேன் .
"இவன்கூட எல்லாம் சேருவியா நாயே ?"
என நண்பனை ஒரு போலீஸ்காரன் அன்பு கலந்து எச்சரித்து விட்டுப் போனான் .தங்க வண்ணம் கொண்ட பச்சை நிறச் சட்டை கந்தலாக குதறப்பட்டு என் முன்னே கிடந்தது . இரண்டு போலீஸ்காரர்கள் அடிபட்டு மருத்துவமனையில் இருப்பதாகப் பேசிக் கொண்டார்கள் .
"மென்டலாக இருப்பானோ ?"
என்று என்னைத் திட்டியவாறே கடந்து சென்றான் மற்றொருவன் .
"கோர்ட்டுல அடிச்சதெல்லாம் சொல்லி எதாச்சும் மறிக்கலாம்னு நெனச்சே! சுட்டெ கொன்னுருவேன் நாயே !"
என்று கூறியவாறே,ஆய்வாளர் ஒரு புதுச் சட்டையை எனக்கு அணிவித்ததை , கந்தலான தங்கக்கோடு நிரம்பிய பச்சை வண்ணச் சட்டை பார்த்துக் கொண்டிருந்தது . எனக்கு மொத்த உடலும் புண்ணாய் வலித்தது .தங்க வண்ணக் கோடுகள் உடலோடு உள்நுழைந்து ,தோல் முழுவதும் பச்சை வண்ணமாகி விட்டதுபோல தோன்றியது .இடது தோள்ப்பட்டை மூட்டு கழன்று கை நீண்டு தொங்கிக் கொண்டிருந்ததையும் அப்போதுதான் கவனித்தேன்.
"அப்படிப்பட்டவன் இல்லையே?"
என்று தொடங்கிய எனது உறவினரின் சீபாரிசுக்கு வெடித்தான் ஒரு போலீஸ்காரன் .
"இன்னைக்கி ஒண்ணும் தெரியாத பச்சப்புள்ள போல இருக்கான் சார் !நேற்று நீங்க போன பிறகும் எவனையுமே இவன் தூங்க விடல சார் !
மருத்துவமனையில் இருக்கிறவன் பொண்டாட்டிக்கு எவன் சார் பதில் சொல்றது ?இவனை விடக்கூடாது சார் !"
என்று ஆய்வாளரிடம் முறையிட்டான் மற்றொருவன் .
அங்கேயே இருந்தால் ஒருவேளை இறந்துவிடுவேனோ என்றஞ்சி ஒரு எளிய வழக்கு பதிந்து நீதி மன்றத்தில் விட்டுவிடுவதில் குறியாய் இருந்தார் ஆய்வாளர் .தங்க வண்ணக் கோடுகள் உடலுக்குள் இறங்கிக் கிடந்த விதத்தை வைத்து அவர் இந்த முடிவுக்கு வந்திருக்கலாம் .எனக்கு உடலை மூடியிருந்த பச்சை வண்ணம் கொலை செய்யப்பட்டவனையும்,தோலினுள் இறங்கிய தங்க வண்ணம் கோடுகள் சூழ்ந்த மிருகங்களையும் நினைவுபடுத்தி அருவருப்பு உணர்ச்சியை ஏற்படுத்திக் கொண்டிருந்தது .
"எனக்கு எதுவுமே தெரியாது ,எல்லாவற்றுக்கும் தங்கக்கோடு நிரம்பிய பச்சைச் சட்டைதான் காரணம் "
என்று நீதிமன்றத்தில் நான் சொன்னதை உங்களைப்போலவே எவரும் நம்பத் தயாராக இல்லை .
கதையின் முடிவு பற்றின குறிப்புகள் :
1
என்னைப் பார்த்துவிட்டு நள்ளிரவில் இறங்கிச் சென்ற கொலையாளி ,மறுநாளே பிடிபட்டு விட்டான் .அந்தக் கொலைபற்றி ஒரு வாரத்திற்கு நாளிதழ்கள் செய்தி வெளியிட்டன.
அல்லது
அவன் ஒரு ஆசிரமத்தில் சேர்ந்து சாமியாராகிவிட்டான்.தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நீங்கள் அவனை அவ்வப்போது பார்த்து வருகிறீர்கள் .
அல்லது
கொலையாளியின் சகோதரனால் நீதி மன்ற வளாகத்துக்குள்ளேயே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டான் .
அல்லது
வெளிஊர்களிலேயே தலை
மறைவாக அலைந்து கொண்டிருக்கிறான் .
இல்லை
கேரளாவில் ஒரு உள் கிராமத்தில் உதிரித் தொழிலாளியாக வேலை செய்து கொண்டிருக்கிறான்
இல்லை
உங்கள் பகுதியின் தாதாக்களின் தலைவனே இப்போது அவன்தான் .
இதில் உங்களுக்கு அவனுக்குரிய முடிவாக எது சரியெனப்படுகிறதோ அதனைப் பொருத்திக் கொள்ளுங்கள் .முடிவு அவசியமில்லை என்பவர்கள் விட்டுவிடுங்கள்
2
நீதி மன்றத்தில் எனக்கு அபராதம் மட்டும் விதித்து விட்டுவிட்டார்கள் !அல்லது மனநல சிகிழ்ச்சைக்கு சிபாரிசு செய்தார்கள் !இதில் எது உங்களது முடிவோ அதுவே எனது முடிவும் .நன்றி

மகிழ்ச்சியை ஏற்றுக் கொள்ள பழகுதல்

வெடிவழிபாடு -
மகிழ்ச்சியை ஏற்றுக் கொள்ள பழகுதல்

எல்லாவிதமான பண்டிகைகளுக்குப் பின்னரும் அதனைத் தாங்கிப் பிடித்த வண்ணம் நிற்கும் ஒருவனோ ஒருத்தியோ உண்டு.அப்படியான தியாகங்கள் இல்லாமல் மகிழ்ச்சியில்லை.மகிழ்ச்சிக்குப் பின்னிருக்கும் திருவுருவம் அது.பல சமயங்களில் அது வெளிப்டையாகத் தெரியாது.உள்ளடங்கியிருக்கும்.மகிழ்ச்சியின் உள்முகமாக இருக்கும் பிசின் அது.பதற்றமானதும் கூட . தானாக ஒன்றை உருவாக்க முயல்பவர்களுக்கெல்லாமே இந்த பதற்றம் பொதுவானது.வாழ்வை எந்த நிலையிலும் எதிர்கொள்ள துணை நிற்கும் சக்தி நிறைந்ததிந்த பதற்றம்.

கன்னியாகுமரி மாவட்டத்தைத் தாண்டி கேரளாவிற்குள் நுழைபவர்கள் குழித்துறை பாலத்தைக் கடக்கும் போது சாஸ்தா கோவிலில் இருந்து கேட்கும் வெடிவழிபட்டுச் சத்தத்தை போகும் போதும் , வரும் போதும் கேட்கமுடியும்.முழுநேர வெடிவழிபாடு கொண்ட கோவில் அது.சபரிமலையில் வெடிவழிபாடு விஷேசம் .ஒரு சத்தம் முடிய அடுத்த சத்தத்திற்கு மருந்தடைத்து திரி கொளுத்துபவனை ஒருமுறையேனும் கவனித்துப் பாருங்கள்.கரியடைந்து கசக்கிப் போயிருப்பான்.அது துன்பமெல்லாம் இல்லை.கரியடைந்து  கசங்காமல்  சப்தமில்லை.

திருமணங்களைத் தாங்கிப் பிடித்து நடத்தி முடித்ததும் மயங்கிவிழுகிற தகப்பன்மார்களை காணமுடியும் .அவன் மயங்கி விழுந்ததால் ஏற்று நடத்திய திருமணமும் ,சிறப்பும் தவறென்று ஆகிவிடாது.ஒரு சக்தியை செலவு செய்யாமல் மற்றொரு சக்தி உருவாகாது என்பதே தத்துவம். அவன் தன் மேனியிலிருந்து நெய்யை உருக்கியுருக்கி  வாழ்க்கையை  உருவாக்கியிருப்பான். சில இடங்களில் தாய்மார்களிடம் இந்த பணி ஒப்படைக்கபட்டிருக்கும்.சில இடங்களில் பொறுப்பெடுத்துக் கொள்கிற அண்ணன்மார்கள் தம்பிகள் உண்டு.மறைந்திருந்து நெய்யை உருக்கியொருவன் தராமல் நீங்கள் ஒரு அழகையும் புறத்தே காண முடியாது.மேனியை பிய்த்துக் கொடுக்காமல் மற்றொன்று வராது.எவனோ ஒருவனின் உடல் அப்பமாக மாறும்போதே அழகும் மகிழ்ச்சியும் கிடைக்கின்றன.  புறவயமாக வெடித்து ஒளிபெருக்கும் பட்டாசுகள் ;மறைந்திருக்கும் ஒருவனின் ஊன் உருக்கிச் சிதறுகிற எண்ணைய். அகப்புறத்தில் நின்றெரியும் நெய்யை ;அழகு மதிப்பு செய்ய வேண்டும்.வணங்க வேண்டும்.

இந்தப் பட்டாசுச் சத்தமெல்லாம் பின்னின்று இயங்கும்  கர்த்தாவின் நெய்விளக்கு .மகிழ்ச்சி

 

"விஷ்ணுபுரம் விருது" தொடர்பான ஜெயமோகனின் கோரிக்கை

"விஷ்ணுபுரம் விருது"

தமிழ்நாட்டில் படைப்பாளிகள் ,கவிஞர்கள்,வாசகர்கள் இவர்களை மட்டுமே முன்வைத்து ஆக்கப்பூர்வமாக செயல்படும் ஒரேயொரு விருது என்று "விஷ்ணுபுரம் விருது" என்பது எனது அபிப்ராயம்.

தன்னிச்சையான படைப்பாளிகளுக்கு வேறு காரணங்கள் எதுவுமின்றி படைப்பின் காரணத்தை மட்டுமே முன்வைத்து வழங்கப்படும் விருது இது.எனக்கு இவ்விருதின் பேரில் மதிப்பிருப்பதற்கான காரணம் இது ஒன்றுதான்.விருது வழங்குவதை ஒட்டி அவர்கள் படைப்புகளை வாசகர்களோடு விவாதிக்கும் விதம் அருமையானது.நேரடியாகவே இதனை உடனிருந்து பார்த்திருக்கிறேன்.

விருதிற்குரியவரை உண்மையாகவே படைப்பை முன்வைத்து அவர்கள் கௌரவப்படுத்துகிறார்கள்.படைப்புத் தேர்வுகளில் வேறுபட்ட எண்ணங்கள்,வேறுபாடுகள் இருக்கலாம்.இருக்கத்தானே வேண்டும் ? அதன் செயல்பாடு பொருள் சார்ந்த காரணங்களால் குன்றக் கூடாது.இதுபோல நமக்கு வேறு முன்னுதாரணங்கள் இல்லை . சொல்லப்போனால் இதுபோல தமிழுக்கு மேலும் சில உத்வேகங்கள் தேவை.இலக்கிய செயல்பாடுகள் பேரில் மதிப்பு கொண்டோர் உள்ளன்போடு இந்த விண்ணப்பத்தை கருத்திற்கொள்ள வேண்டுகிறேன்.

படைப்பாளிகளுக்கு உறுதுணை செய்தல் ஈடிணையற்ற புண்ணியம்.

விருது தொடர்பாக ஜெயமோகனின் விண்ணப்பம் இது
--------------------------------------------------------------------------------
அன்புள்ள நண்பர்களுக்கு,

இவ்வருடம் விஷ்ணுபுரம் விருது விழா வரும் டிசம்பர் 25 ஆம் தேதி மாலை கோவை பாரதிய வித்யா பவன் அரங்கில் நிகழவிருக்கிறது முந்தையநாள். 24 ஆம் தேதி காலைமுதல் உரையாடல்களும் எழுத்தாளர் சந்திப்புகளும் நிகழும்.

பரிசுபெறுபவர் குறித்த ஒர் ஆவணப்படமும் அவரைப்பற்றிய ஒரு நூலும் விழாவில் வெளியிடப்படும்.
வருபவர்கள் முன்கூட்டியே ரயில் முன்பதிவுகள் செய்து கொள்ளவேண்டுமென்று கோருகிறேன். பிற தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும்

தமிழகத்தில் இன்று நிகழ்ந்துவரும் மிகப்பெரிய இலக்கியவிழா இதுவே. இத்தனைபெரிதாக இதை உத்தேசிக்கவில்லை . இயல்பாகவே இது பெரிதாகி வந்தமைக்கு இளம் வாசகர்களுக்கு இது தேவையாக இருந்ததுதான் காரணம் என நினைக்கிறேன்
ஒவ்வொருவருடமும் இதன் செலவு அதிகரித்தபடியே செல்கிறது. பெரும்பாலும் நண்பர்களின் நன்கொடையால்தான் இவ்விழா முன்செல்கிறது. சென்ற ஆண்டு அது சற்றே சுமையாக ஆகிவிட்டது
ஆகவே இம்முறை விஷ்ணுபுரம் அமைப்பை ஒரு சிறிய டிரஸ்ட் ஆக பதிவுசெய்திருக்கிறோம். என் நண்பர்கள் நான்குபேர் கொண்ட இச்சிறிய அமைப்பு நிதிநிர்வாகத்திற்காக மட்டுமே.

இதுவரை வெளிப்படையாக நன்கொடைகள் பெற்றுக்கொண்டதில்லை, காரணம், முறையான அமைப்பு இல்லை என்பதுதான். இப்போது அவ்வமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது

விஷ்ணுபுரம் அமைப்புக்கு நிதிதவி செய்யும்படி நண்பர்களைக் கோருகிறேன். இது அனைவரும்கூடிச் செய்யும் விழாவாக நீடிக்கவேண்டும் என்பதே எங்கள் எண்ணம்

வங்கி விவரங்கள்
வங்கி ICICI BANK Ram Nagar Coimbatore
பெயர் VISHNUPURAM ILAKKIYA VATTAM TAMIL EZUTHALARGAL ARAKKATTALAI
கணக்குஎண் 615205041358
IFSC Code ICIC0006152- ஜெயமோகன்

தொல்.திருமாவளவன் + பொன்.ராதா கிருஷ்ணன்

தொல்.திருமாவளவன் + பொன்.ராதா கிருஷ்ணன்

தமிழ்நாட்டில் சமீபகாலங்களில் நடைபெற்ற அரசியல் நகர்வுகளில் எனக்கு ஆர்வம்முட்டுகிற விஷயமாகவும்   , புத்திசாலித்தனமாகவும் தெரிந்த ஒன்று என்று தொல்.திருமாவளவன் ,பொன்.ராதா கிருஷ்ணன் சந்திப்பைச் சொல்வேன்.அது வெறுமனே ஸம்ப்ரதாயமானதொரு  சந்திப்பாகக் கூட இருக்கலாம்.ஆனால் முக்கியத்துவம் கொண்டது. இன்று பா.ஜ.க.இடைநிலை சாதிகளின் அரசியல் அதிகாரத்தை கொண்ட ஒரு கட்சியென்பது உண்மைதான்.ஆனால் அது வருங்காலங்களில் தலித்துகளின் அரசியல்  அதிகாரம் நோக்கி சாயும் தன்மை கொண்டது என்பதில் சந்தேகமேயில்லை.இதனை ஒரு நல்ல நிலையென்றோ அல்லது கெட்ட நிலையென்றோ வகைப்படுத்துவது எனது எண்ணமில்லை.அப்படி வகைப்படுத்துவது அரசியல் ஸ்லீப்பர் செல்களின் வேலை.நிரந்தர ஒரு  கருத்தாளர்களின் நோய் அது.இந்தியாவைப் பொறுத்தவரையில் அடுத்த இருபது வருடங்களுக்குள் தலித்துகளின் அரசியல் அதிகாரம் வெகுசன அரசியல்  அதிகாரமாக மாறியாக வேண்டும்.அதற்கு காங்கிரஸ் கட்சியைக் காட்டிலும் அனுசரணையானது பா.ஜ.க மட்டும்தான்.

அரசியல் கட்சிகளை பொறுத்தவரையில் நிரந்தர கருத்தாக்கங்களையும்,நிரந்தர தரப்புகளையும் கொண்டவையே மிகவும் ஆபத்தானவை.பிற்போக்கானவை. அவை தங்களுக்குள் கருத்துக்களின் பின்னணியில் தங்கள் சுயரூபத்தை ஒளித்துக் கொள்ள, மறைத்து வேடமிட வல்லவை.பா.ஜ.க வைப் பொறுத்தவரையில் அது வெகுஜன மன ஓட்டத்திற்குத் தக்க அரசியல் அதிகாரத்தை மாற்றிக் கொள்ளும்தன்மை கொண்ட கட்சி.அதற்கு நிரந்தரமான சார்பு நிலைகள் கிடையாது.மேல்சாதிகளிடன் காலங்காலமாக பதுங்கியிருந்த அரசியல் அதிகாரத்தை அது கைவிட்டு விட்டு அது இன்று  இடைநிலை சாதிகளின் அரசியல் அதிகாரத்தை தன்வசப் படுத்தியிருக்கிறது.இதுவும் நிரந்தரமில்லை.அடுத்து அது தலித்துகளின் அரசியல் அதிகாரத்தை உறுதிப்படுத்தும் இடத்திற்கு நகர்ந்தாக வேண்டும்.காங்கிரஸ் ,கம்யூனிஸ்ட்கள்  ஆகியோர் இன்னும்  மேல்சாதிகளின் அதிகாரத்தையே தங்களிடமிருந்து கழற்றிக் கொள்ள இயலாத வண்ணம் நிரந்தர கருத்தாக்கங்களில் திணறிக் கொண்டிருப்பவர்கள்.மக்கள் அதிகாரத்தின் மீது மட்டுமே  சாய்வு கொண்டு தனது அரசியல் உறுதியை ஈட்டவேண்டும் என்கிற ஓர்மை பா.ஜ.கவுக்கு உண்டு.இந்திய அரசியல் களம் யார் விரும்பினாலும் இல்லையென்றாலும்  தலித்துகளின் அரசியல் அதிகாரத்தை வெகுஜனப்படுத்துவதிலேயே இனியுள்ள  காலம் அடங்கியிருக்கிறது.பா.ஜ.கவில் இடைநிலை சாதிகளின் அதிகாரம் விரைவில் வற்றி ,அது தலித்துகளின் அரசியல் அதிகாரமாக மாறுகிற சாத்தியங்களைக் கொண்டது.தமிழ்நாட்டில் நிரந்தர சாதி தரப்பை உள்ளில் கொண்டு பல்வேறு கொள்கை வேடமிடும் பா.ம.க போன்ற எதிர்மறை அரசியல் சக்திகளை கையாள விடுதலைச் சிறுத்தைகளுக்கு உதவக்  கூடியதும் பா.ஜ.கவோடு அது கொள்ளும் உறவில் மட்டுமே  சாத்தியமாகும்.

இப்போது ஒரு கேள்வியெழலாம்.பா.ம.க போலவே பா.ஜ.கவும் தற்போது  இடைநிலை அரசியல் அதிகாரம் கொண்ட கட்சிதானே என்று ?.பா.ஜ.கவின் சார்புநிலை ஒருபோதும் நிரந்தரமான மக்கள் அதிகாரத்தின் சார்பு நிலை கொண்டதல்ல என்பதை விளங்கி கொள்ள இயன்றோருக்கு இந்த கேள்வியின் பதிலை உணர முடியும்.   பா.ம.க எப்போதுமே இடைநிலை சாதிகளின் அதிகாரத்தை   மட்டுமே இலக்காகக்  கொண்டது ;அது வாய்ப்பேச்சில் எவ்வளவு ஸ்லீப்பர் செல்ஸ் கொள்கைகளைக் கூவினாலும் கூட.பா.ஜ.கவுக்கு அடுத்த கட்ட அரசியல் நகர்வுக்கு தலித்துகளின் அரசியல் அதிகாரத்தை ஏற்றெடுக்காமல் பிற வழிகள் எதுமே இந்தியாவில் கிடையாது.தமிழ்நாட்டில் அது மேல்சாதிகளிடம் இருந்து இடம்பெயர்ந்து இடைநிலை சாதிகள் வசம் வந்திருப்பதை போன்றே அடுத்து அடுத்து அது தலித்துகளின் வசம் வரும்.வந்தாக வேண்டும். தலித்துகளின் அரசியல் அதிகாரம் வெகுஜனமாவதை ஏற்காதவர்கள் மட்டுமே ஒதுங்கியிருந்து வெற்றுக் கருத்தாக்கங்களை பேசிக் கொண்டிருக்க முடியும்.இந்தியாவின் பிரதம மந்திரியாக ஒரு தலித் தலைமை அரசியல் அதிகாரத்தை வெல்வது பா.ஜ.க மூலமாக நிகழ்வதே சிறப்பானது.

தமிழ்நாட்டில் பா.ஜ.கவிற்கு ஒரேயொரு எதிரி உண்டெனில் அது ஜெயலலிதா ஒருவர் மட்டும்தான்.அ.தி.மு.கவும் கூட பா.ஜ.கவிற்கு எதிரியில்லை.தனியொருவராக ஜெயலலிதா என்கிற ஒரு தலைவரின்   இருப்பு மட்டுமே அவர்களுக்கு இடையூறு.பிறர் எவருமே பா.ஜ.கவுக்கு எதிரிகள் அல்லர். எதிரிகள் போன்று பாவனை செய்பவர்கள். பா  .ஜ.கவோடு கழிந்த பத்தாண்டுகளில் தெருவில் தொடங்கி அமைப்பின் அனைத்து தளங்களிலும்  உள்ளூர மோதிக் கொண்டிருப்பவரும் ஜெயலலிதா ஒருவர் மட்டுமே.பிறர் அனைவருமே வெற்று வாய்ச் சவடால்கள்தாம் .

அண்மையில் பால பிரஜாபதி அடிகளாரை சாமித்தோப்பில் சந்தித்துப் பேசிக்கொண்ட போது ; திருமாவளவன் ஒருவர் மட்டுமே வெகுஜன அரசியலில் புதிய தலைமைகளில் நம்பிக்கையூட்டுபவராக இருக்கிறார்.ஆனால் பொதுத் தலைவராக மாறுவதில் அவருக்கு  சில இடர்பாடுகள் உள்ளன என்றார்.பா.ம.க போன்ற கட்சிகளுடனும் அவருக்கு உறவு அவசியம் என்றார்.

"இல்லை பா.ம.க வுடன் நெருங்குவதைக்   காட்டிலும் அவர் நேரடியாக பா.ஜ.காவுடன் உறவு அமைத்துக் கொள்ளவேண்டும் என்று சொன்னேன் "பா.ஜ.க மூலமாக அவர் இடைநிலை சாதிகளுடன்   அதன் அரசியல் தலைமைகளுடன் தொடர்பு கொள்வதுதான் நல்லது என்றும் சொன்னேன்.நேரடியாக இடைநிலை சாதிகளின் அரசியல் தலைமைகளுடன் அவர்   தொடர்பு கொள்வது நல்லதல்ல என்றேன். நாங்கள் இருவரும் இதனை பேசிக் கொண்ட போது பொன். ராதாகிருஷ்ணனும் திருமாவளவனும் சந்தித்திருக்கவில்லை என்பதே எனது இந்த அரசியல் புரிதலுக்கு  அதிக வலுவூட்டுகிறது .

ஆனால் இந்த இணைவை அதாவது தலித் அரசியல் பா.ஜ.கவுடன் இணைந்து  வென்றாக வேண்டிய  அரசியல் அதிகாரத்தை  இந்தியாவிலுள்ள பிராமணர்கள் விரும்பவே மாட்டார்கள் என்பதுதான் இதனுள் அமைந்திருக்கும் சூப்பர்
மேஜிக் . பிராமணர்கள் என்று நான் குறிப்பிடுவது சகல அரசியல் தலைமைகளிலும் ஊடாடியிருக்கும் பிராமண கருத்தாளர்களையே அன்றி வெறும் பிராமணர்களை அல்ல. பிராமணர்களின்  மேஜிக்கும் இணைந்ததுதான் இந்தியாவின் ஒட்டுமொத்தமான அரசியல்.

பட்டணங்கள் ஒளிக் காடாய் ஜொலிக்கின்றன

பட்டணங்கள் ஒளிக் காடாய் ஜொலிக்கின்றன

பண்டிகைகளைக் கொண்டாட சிறு பட்டணமாக இருந்தாலும் கூட அது தயாராவதே அழகுதான்.முதலில் நாசுக்காக அது தொடங்கி பண்டிகையை நெருங்குங்குந்தோறும் நெருக்கடியுடன் கசங்குகிறது.பண்டிகை எந்த பண்டிகையாக இருப்பினும் அது கூட்டான ஜொலிப்பு.ஒருங்கிணைந்த மக்கள் மனோபாவம் பொங்கும் இடம் அது.கூடுதல் குறைவு , பொறாமை ,கசப்பு ,நிறைவு நிறைவின்மை எல்லாவற்றையும் அடக்கியதுதான் பண்டிகைகள்.இருப்பினும் ஒவ்வொருவரின் சிறகிலும் அது புதியதொரு வண்ணத்தை மெருக்கேற்றாமல் இருப்பதில்லை.

பண்டிகைக்கு பட்டணம் தயாராவது ஒருபுறம் எனில் தனிமனிதன் எவ்வாறு தயாராக வேண்டும்? உங்கள் வட்டத்திலுள்ள எவரேனும் ஒருவர் பண்டிகையை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருக்கலாம்.நிச்சயமாக இருப்பார்கள்.நீங்கள் பண்டிகைக்கு தயாராகும் ஒவ்வொரு கணத்திலும் அவர் நினைவையும் சேர்ந்தணைத்துக் கொள்ள வேண்டும்.நீங்கள் அவருக்கு ஏதேனும் செய்ய இயலலாம்.இல்லை இயலாமற்போகலாம்.அது பிரச்சனையில்லை.ஆனால் சிந்தையை மறுபக்கமாக சாத்திக் கொள்ளவே கூடாது.சாத்தினால் பண்டிகை முழுமையுறாது.பண்டிகையை ஏக்கத்துடன் அணுகும் ஒருவரை பற்றிய சிந்தை உங்களுக்கு நிச்சயம் இருக்க வேண்டும்.நீங்கள் மிகக் குறைவாக பண்டிகையை உபயோகப்படுத்தினால் கூட இது அவசியம்.அதற்கும் கீழே ஒருவர் ஏங்கியிருக்கக் கூடும்.பண்டிகையை திமிர்த்தனத்தோடு அணுகினால் அது திருப்பி ஒருநாள் அடிக்கும்.

என்னிடம் ஒருமுறை சமய பாதிரி ஒருவர் இப்படியெல்லாம் நீங்கள் ஒன்றிரண்டு பேர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள் . சொல்லிக் கொண்டு திரிகிறீர்கள்.எவ்வளவோ அநியாயங்களை செய்கிறவர்கள் இதனையெல்லாம் யோசிக்காமல் நன்றாகத் தானே இருக்கிறார்கள் ? என்று கேட்டார்."நீங்கள் அநியாயங்கள் செய்யாமல் வாழும் வகை பெற்றிருப்பதால் அது எவ்வாறு திருப்பியடிக்கும் என்பது தெரியாமல் இருக்கிறீர்கள் போலும்.நானெல்லாம் நிறைய அநியாயங்களை செய்திருக்கிறேன்.அதனாலேயே அது எவ்வாறு திருப்பியடிக்கும் என்பதையும் தெரிந்து வைத்திருக்கிறேன் "என்று சொன்னேன்.நீங்கள் ஒரு இன்பத்தை அதிகமாக எடுக்கும் போது அருகிலேயே ஒரு துன்பம் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறது.நீங்கள் எவ்வளவு தூரத்திற்கு அதிகபட்சமாக அத்து மீறுகிறீர்கள் என்பதை அது கணக்கிடுகிறது.அதிகபட்சம் உங்களை அனுமதிக்கிறது திருப்பித் தாக்கும் போது கனம் எவ்வளவு இருக்க வேண்டும் என்பதை பரிசோதித்து அறிந்து கொள்வதற்காக.

நீங்கள் எதனை அதிகமாக பிறர் எங்கும் வண்ணம் எடுத்தாலும் அதுதான் உங்களுக்கு சைத்தான்.பிறர் ஏங்காத வண்ணம் எடுத்தாலும் அதுதான் சைத்தான் . பத்து இட்லிக்கு பதிலாக நீங்கள் பதினைந்து எடுத்தால் அதிகம் எவ்வளவோ அத்தனையும் சைத்தான்.நீங்கள் காமத்தை அதிகம் எடுத்தால் அதிகமாக துய்க்கும் காமமே சைத்தான்.அதிகாரத்தை எடுத்தால் அதுதான் சைத்தான்.அற்பத்தனத்தை எடுத்தால் அது. பண்டிகையில் என்ன விஷேஷம் என்றால் பண்டிகைகள் கூடுதலாக நீங்கள் எடுத்துக் கொள்வதற்கு ஒருவிஷேஷ வாய்ப்பை வழங்குகிறது.என்றாலும் ஓர்மை முக்கியம்.

அதிகபட்சமான சில இலக்கிய விழாக்களை உருவாக்கும் போதே கோணங்கி ,நானெல்லாம் உள்ளுக்குள் கொஞ்சம் சுணங்கிப் போயுமிருப்போம்.விரும்பத் தகாதது எதுவும் நடைபெற்று விடக்கூடாது என்பதற்காக .ஒருமுறை பேயாட்டம் போட்டுவிட்டு இரவில் லாக்கப்பில் இருக்க வேண்டியிருந்தது.ஒருமுறை உடன் வந்த இளங்கவிக்கு முன்பல் வரிசை அத்தனையும் கழன்று போயிற்று .அதன் பின்னர் அதனை சரிப்படுத்தவே இயலவில்லை.அதனால் ஏதேனும் ; யாருக்கும் பாதிப்பற்ற சிறு தடங்கல்கள் ஏற்பட்டுக் கடந்து விட்டால் கொஞ்சம் லகுவாக இருக்கும்.தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போகிறது என்று.சிறப்பு விழா ஒன்றிற்கு முன்னால் சாமிக்கு நேர்ந்து விட்ட கிடாவை விபத்து அடித்துக் கொன்றது.சாமியோ கிடாவை பறிகொடுத்து மற்றொரு விபத்தைத் தடுத்தேன் என்றது.விழாவில் சேதாரமில்லை.

இப்போதெல்லாம் ஆண்டவன் வினையை அடுத்த தலைமுறைக்கு கடத்தும் பொறுமையுடன் இல்லை.முற்பகல் பிற்பகல் .பிற்பகல் முற்பகல்.பொருளென்றாலும் அருளென்றாலும் இங்கே இப்போதே நிரம்பியிருப்பதுதானே அன்றி பின்னர் எப்போதோ அல்ல.இவ்வுலகமும் ,அவ்வுலகமும் எல்லாமே இங்குதான்.ஒவ்வொரு கணக்கையும் நேர்செய்யாமல் இங்கிருந்து நீங்கள் யாராக இருந்தாலும் தப்பித்துச் செல்லவே முடியாது.சிலர் சிலரை இறந்து போவார்கள் என நினைத்து அலட்சியம் செய்திருப்பார்கள்.கணக்கு திரும்பி விடும்.வரும்.அலட்சியம் சைத்தானின் சொகுசு வாகனம். அலட்சியம் திரும்பி வருவதை கண்ணால் காண்பது என்பது மஹா தரிசனம். குற்றபோதம் உண்டாக்க இதனைச் சொல்லவில்லை.இது இயற்கையின் நியதி.விளங்கவில்லையெனில் விளங்கும் காலம் வந்தே தீரும் .

எனக்கு நல்ல பிரியாணி உண்ணும்போது எப்போதுமே கவி பாலை நிலவனின் நினைவு வந்து செல்லும்.சங்கரன்கோவில் பிரியாணி உண்ணும் ஒருசமயத்தில் எப்படியேனும் ஒருமுறை பாலை நிலவனுடன் சேர்ந்து வந்து உண்ண வேண்டும் என்று தோன்றியிருக்கிறது.மருத்துவ வசதிகளுக்காக செல்லும் போது இப்போதெல்லாம் ஜெ .பிரான்சிஸ் கிருபாவின் நினைவு வருகிறது.யானை ஆசிர்வதித்தால் கோணங்கி நியாபகம். தீபாவளிக்கு புதுக் துணியெடுக்கச் சென்றால் கைலாஷ் சிவனை நினைவு கொள்ளாமல் முடியாது.அவர் திடீரென வந்து நின்றால் அவருக்கு புதுக் துணிக்கு என்னிடம் வாய்ப்பில்லையெனில் நான் உடுத்துவதில் ஒருபலனும் கிடையாது.தமிழ்ச் சமூகம் பண்டிகைகளின் போது எழுதுகிறவனையும் ,கவியையும் மறதி கொள்வது தனக்குத் தானே தொடர்ந்து ஏற்படுத்திக் கொண்டு வருகிற பெருந்தீமைகளுள் குறிப்பிடும் படியானது.யூமா வாசுகியின் கவிதை ஒன்று உண்டு.கடற்கரையில் உட்கார்ந்தது எதையெதையோ நான் செய்து கொண்டிருப்பேன் என்பது போல; வந்து திரும்பி பசிக்கும் போது பார்க்கையில் சோறு இருக்க வேண்டும் என்கிற அர்த்தத்தில் அது முடியும்.பொதுப் பண்டிகைகளின் போது எங்கேனும் ஒரு கவி இல்லாமையால் பட்டினியிருந்தால் ஏக்கம் கொண்டால் அது அந்த ஒட்டுமொத்த சமூகத்திற்கும்
தீமையே ...ஏனெனில் அவன் அவள் இங்கே எல்லோராலும் புறக்கணிக்கப்படுவோம் என்பதை உணர்ந்து அதனைப் பொருட்படுத்தாமல் வாழும் விஷேஷ ஜீவிதம்.

ஜெயமோகன் மலையாளத்தில் தினத்தந்தி அளவிற்கு சமமான வணிக இதழ்கள் கூட ஓணம் பண்டிகைக்கு எவ்வாறு தயாராகின்றன என்பது பற்றி ஒருமுறை சொன்னார்.கவிகள் ,கலைஞர்கள் ,ஓவியர்கள் அந்த தினத்தில் கையில் காசில்லாமல் இருக்கக் கூடாது என்கிற எண்ணத்தின் அடிப்படையில் ; தங்களை சதா முழுநேரமும் எதிர்க்கும் எழுத்தாளனாக இருந்தாலும் கூட அதில் வஞ்சம் கொள்ளாது ஓணச் சிறப்பிதழ்களை அவை உருவாக்குகின்றன.பெரிய பெரிய நிறுவனங்களின் காசையெல்லாம் திரட்டி ,எழுத இயலா நிலையிலிருப்பவனிடம் ஒரு புகைப்படக் குறிப்பையேனும் வெளியிட்டு, அச்சமயம் அவனிடம் போதுமான காசு இருக்குமாறு செய்து விடுகின்றன என்று சொன்னார்.பகிரத் தெரிந்தவன் வழிப்பறி செய்தால் அதில் தவறில்லை.எப்படி வழிப்பறி செய்வது, யாரை வழிப்பறி செய்வது, எப்படி கொண்டு சேர்ப்பது இவற்றை சரியாக அறிந்தால் அவனும் தர்ம தேவனே.வழிப்பறி செய்து வீட்டில் கொண்டு முடக்கினால் கரையேறியது போல தோன்றும் கரையேறவே முடியாது.கரையேறுவது என்பது கரப்பான் பூச்சிகள் அதிகம் இரையாத மனத்தைக் கொண்டிருப்பது.

இந்த விஷயத்தைப் பொறுத்தமட்டில் தமிழின் அத்தனை பத்திரிகைகளின் ஆசிரியர்களையும் சரி , உடமஸ்த்தர்களையும் சரி குனிய வைத்து குண்டியில் விளாறு கொண்டடிக்கலாம் தவறே இல்லை.தீபாவளிமலர்கள் அத்தனையுமே வெறும் பாமாயில் பலகாரங்கள்.

கவிஞர் விக்ரமாதித்யனுக்கு சாகித்ய அகாதமி விருது வழங்குங்கள் .

சாகித்ய அகாதமிக்கு ஒரு கோரிக்கை.
"விக்ரமாதித்யன் தமிழின் அலங்காரம்"

தமிழ்க் கவிதையில் பாரதி இனி எப்படி சாத்தியமில்லையோ,அது போலவே விக்ரமாதித்யனும் .நிகழ்ந்த அற்புதங்கள்.மறுபடி மீண்டும் சாத்தியங்கள் அற்றவை.
குற்றாலம் கவிதைப் பட்டறையில் திருமேனியும் ,முத்து மகரந்தனும் ஆளுக்கொரு பக்கமாக கைத்தாங்கலாக விக்ரமாதித்யனை தூக்கிக் கொண்டு வந்த காட்சி இப்போதும் என்மேல் நிலவுகிறது. தள்ளாடிய மகா ராஜன் பல்லக்கில் வருவது போல அக்காட்சி.திருமேனியும் சரி , முத்து மகரந்தனும் சரி அப்போது இளைஞர்கள் மத்தியில் நம்பிக்கையூட்டிய கவிஞர்கள்.திருமேனியின் கவிதைகளை கைப்பிரதியாக ஒரு முறை சுந்தர ராமசாமி படிக்கக் கொடுத்து படித்திருந்தேன்.நிகழ்ச்சி நடைபெறும் திவான் பங்களா வாசலில் இருந்து தொடங்கிய இந்த பல்லக்கு பவனி ; திவான் பங்களாவின் உள்ளறைக்கு வர சாமி இறக்கி வைக்கப்பட்டார்.படையலுக்கு தினுசான பலவகை ரசாயனங்கள்.உண்டியை யாரும் பொருட்படுத்துவதில்லை.ஆனால் அவையும் வேடிக்கைக்காக வந்து உட்கார்ந்திருந்தன.

திரவ ஆகாரத்தின் மீது மட்டும் நம்பிக்கை கொண்ட கூட்டமே அப்போது அவரை வட்டமடித்துக் கறங்குவது .அது வெறுமனே திரவத்திற்காக மட்டுமே என்று சொல்வதற்கில்லை.விக்ரமாதித்யனோடு சேர்ந்து அருந்தும் கள்ளிற்கும், சாராயத்திற்கும் தனிச்சுவை.திரவத்தின் மீது ஒருவித ஜலமயக்கத்தை அப்போது அண்ணாச்சி ஏற்படுத்தத் தொடங்கியிருந்த காலம்.ஜலமற்றது எதுவுமே கவிதையாகாது என்னும் திடக்கொள்கை ஸ்தாபிக்கப்பட்டு கொடி பறந்து கொண்டிருந்தது.நான் குறிப்பிடுவது தொண்ணு றுகளின் தொடக்ககாலம்.
சாமி பல்லக்கில் இருந்து இறக்கி வைக்கப்பட்டதும் "இன்று கவிதையாக வந்து கொட்டுகிறது " என்று கூற கொட்டிய கவிதைகளெல்லாம் எழுதி எடுக்கப்பட்டன.
விக்ரமாதியனிடம் ஒரு சகாயம் உண்டு அடிப்பொடியில் இருந்து யார் வேண்டுமானாலும் நிகராக நின்று மல்லுக்கட்ட முடியும்.மல்லுக்கட்டி கட்டி இலக்கியம் கற்கமுடியும். பிற படைப்பாளிகளிடம் எப்போதும் இந்த சகாயம் கிட்டும் என்று சொல்வதற்கில்லை.ஆரம்பநிலை சந்தேகங்கள் தொடக்கி ,ஆழங்கள் வரை செல்லும் மல்யுத்தம் அது.ஜலமயக்கதிற்கு ஒதுங்கிக் கொள்பவர்களுக்கு இந்த வாய்ப்பில்லை.ஜலமின்றி இந்த எந்திரம் ஓடாது.ஓடியதில்லை.ஜலம் தீருமிடத்தில் இலக்கியம் நிற்கும்.
குடிக்காத விக்ரமாதித்யனைக் காண இன்று வரையில் எனக்குப் பிடிப்பதில்லை.விக்ரமாதித்யன் எப்போது தனித்து வருகிறவர் இல்லை.அவரோடு இணைந்து பழைய கவிராயர்கள் எல்லாம் கூடவே வருகிறார்கள்.அவர் குடிக்காத வேளைகளில் அவர்கள் இவருடன் கூட்டு வைத்துக் கொள்வதில்லை."டேய் முட்டாள் "என அவர் ஒருவராக நின்று கூறினால் அதற்கு மதிப்பு வராது.திடுக்கிடாது. அவருக்கும் கூறும் தைரியம் கிடையாது. அவர் குடித்திருக்கும் வேளையில் மொத்த கவிராயர்களும் ஒட்டுமொத்த குரலில் நின்று திட்டுகிறார்கள் என்பதுதான் பிரச்சனையே !
தனியாக வருகிற போதும் அவர் தனியாள் இல்லை.அவர் ஒரு மாயக்கூட்டத்தையும் அழைத்துக் கொண்டு வருவது போலவே தோன்ற இதுவே காரணம்.ஒரு ஊர்வலம் வருவது போல வரக்கூடியவர்.தூரத்திலிருந்து வரும்போதே தெரியும் அண்ணாச்சி வருகிறார் என்பது.விக்ரமாதித்யன் வருகிறாள் என்றாலே அது ஒரு ஊர்வலம் வருகிற திக்கைக் குறிப்பது.குடிக்காத விக்ரமாதித்யனின் தனிமை காணக் கூடாதது.கண்டால் அடித்து விடும்.பிசாசின் கை ஓங்கி அடித்தது போல வலியெடுக்கும்.அது பல நூற்றாண்டு காலசாமிகள் ஏற்கிற தனிமை.காணக் கூடாதது.அவரும் அந்த தனிமையின் அகோரத்தை மறைக்கத்தான் பொதுவில் குடித்துக் கொண்டே இருக்கிறார்.பல சாமிகள் பண்டிகைகளில் தங்களைக் காட்டி பின் மறைந்து விடுதலைப் போல.குடியற்ற விக்ரமாதித்யன்தான் விக்ரமாதித்யனின் சவம்.
ஆரம்பகாலங்களில் அண்ணாச்சி குடிக்கிறார் என்பது கருதி ஒதுங்கிக் கொள்கிறவர்கள் பலர் இருந்தார்கள்.இப்போது பலர் டாஸ் மாக்கிலேயே அடையாளம் கண்டு நலம் விசாரிப்பது பார்க்க நன்றாகத்தான் இருக்கிறது.முன்பு ஒதுங்கியவர்களுக்கு குடித்து விட்டு அவர் உளறுவதாக கற்பனை இருந்தது.அது உண்மையில்லை.குடித்து விட்டு அவர் பேசுவதுதான் பேச்சே.குடிக்காமல் பேசுவதெல்லாம் நப்பாசை.திரும்பத் திரும்ப சில விஷயங்களை ஒரே அலைவரிசையில் பேசுவார் .சில வேளைகளில் அது அலுப்பூட்டும்.ஆனால் உங்கள் அகத்தின் பூட்டுகள் அத்தனையையும் அவர் உடைத்து நொறுக்கிவிடுபவர் .ஸ்திரமாக மனதில் நாம் ஏற்றி வைத்திருக்கும் தீர்மானங்களை அழிக்க வல்லவர் அவர்.அகம் உடையும் சத்தத்திற்கு அஞ்சுபவர்களே அவரது போதையைக் காரணம் காட்டினார்கள் என்பதே நிஜம்.அவரது போதையின் முன்பாக எந்த கம்பீரத்திற்கும் கதி கிடையாது கலையையும் இலக்கியத்தையும் தவிர . ஒரே ஒரு கவிதையை மட்டும் தீர்க்கமாக எழுதிவிட்ட இளைஞனோடு அவர் உரிமையோடிருப்பார்.
எனக்கு விக்ரமாதித்யனைக் காண்பது என்பது முதலில் ஆனந்தம்.பாதிக்குப் பின்னர் நரகம்.அவரைப் பார்க்கப் போகிறோம் என்பது மிகுந்த உற்சாகத்தைத் தருவது எப்போதும் .பின்பு மெல்ல மெல்ல உற்சாகம் கழன்று இனி இவரைப் பார்க்கவே கூடாது எனத் தோன்ற வைப்பது.ஆனால் மீண்டும் பார்க்கக் கிளர்த்துவது.
எனது வயதை ஒத்தவர்களில் அவரைக் காணாமல் மல்லுக்கட்டாமல் வாழ்ந்தவர்கள் எதோ ஒருவகையில் ஏதோ ஒன்றை இழந்தவர்கள் என்னும் எண்ணம்தான் எனக்கு..சமகாலத்தின் சாறை அவர்கள் ஏதோ ஒரு விதத்தில் தவற விட்டவர்களே.கவிதையிலும்,இலக்கியத்திலும் சிந்தனை திரண்டு உருவமாகி உடலாகுதல் என்பதைக் காண வாய்க்காதவர்கள்.நீங்கள் இறுக்கத்தில் கொண்டிருக்கிற இறுகிய அதிகாரம் அத்தனையும் கழன்று விழுகிற இடத்திற்குச் செல்லுதல் அது.பாக்கியமற்றவர்கள் அந்த இடத்திற்கு செல்லுதல் கடினம்.
பல படைப்பாளிகளைப் படைப்புகளை மட்டும் படிப்பதோடு நின்று கொள்ள முடியும் என்பது போல தோன்றும்.அப்படி பலர் இருக்கிறார்கள்.அப்படி இல்லாதவர்களில் ஒருவர் விக்ரமாதித்யன் .பார்க்காமல் தீராத கணக்கு.பார்க்காமல் புரிபடாது.சில விஷயங்கள் அகத்தின் முன்பாக தெளிந்த பின்னர்தான் பார்க்கவே முடியும்.தனது சுயத்தின் அகத்தை உடையாமல் தூக்கிச் சுமக்க நினைப்பவனுக்கு இது வாய்க்காது.அவரை சந்திக்கும் இடம் என்கிற ஒன்று முதலில் அகத்தில் கூடி வரவேண்டும்.இல்லாமல் சந்திப்பு சாத்தியமில்லை.அப்படி கூடாத சந்திப்பிலும் பலனில்லை.அவர் ஒரு இழிவு எனக் கருதுபவர்களுக்கு பாக்கியம் கெட்டுவிடும்.அவர் கொண்டு நடக்கும் காமம் என்பது உலகியலின் பாற்பட்டது என்று தோன்றினாலும் அது அதன் பாற்பட்டதல்ல.கவிதை கொண்டிருக்கும் உலகியலின் பாற்பட்டது.அதனால்தான் அவரோடு அருந்தும் சாராயமும் தனிக் குணம் கொள்கிறது.டாஸ்மாக்கிலோ ,உயரிய மதுவிடுதிகளிலோ அவருடன் அருந்துகிற மதுவை விலைபேசி எவரும் வாங்கக் முடியாது.கிடைக்காது.அப்படி ஒரு சாராயம் அது.விஷம் ஊற்றி நிரம்பிய சாராயம்.அகம் உடைந்தவனுக்கு அமுது.
ஆரம்ப காலங்களிலிருந்தே இப்போது வரையில் அவருடன் தொடர்பு பெற்று வருகிறேன்.தொண்ணுறுகளில் நடந்த குற்றாலம் கவிதைப் பட்டறையில் மேற்கத்திய தர்க்க முறைகளை ஆதிக்கம் செலுத்திய போது "கண்ணதாசனைப் பற்றி என்னப்பா சொல்றிங்க ? முதலில் அதைச் சொல்லுங்கள் பிறகு மற்றதை பேசிக் கொள்ளலாம் என்று திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டிருந்தார்.அப்போது மேற்கத்திய தர்க்க முறைகளை எதிர்த்துப் பேசுவதே கடினம்.ஏராளமான கருவிகள் கொண்டு கொட்டப்பட்டு பீதி ஏற்பட்டிருந்த காலம்.இந்த கேள்வியின் முன்பாக அவை திகைத்ததைப் பார்த்தோம்.கண்ணதாசனை தமிழ் நவீனத்துவதுடன் தொடர்பு கொண்டவர் என்றும் சொல்ல முடியாது.ஆனால் எவரும் அவரை தமிழில் நிராகரிக்கவும் முடியாது.தொடர்பும் கிடையாது ,விடவும் முடியாது எனத் தோன்றும் ஒரிருவரில் கண்ணதாசனும் ஒருவர்.அப்போது கண்ணதாசனைப் பற்றி பேசினாலே சூழலில் தவறாகப் பார்ப்பார்கள்.இந்த கேள்வி அந்த உறைந்த நிலையில் கேட்கப்பட்ட கேள்வி.எளிமையின் முன்நின்று கேட்கப்படும் கேள்விகளை எதிர் கொள்ள முடியாதவர்களே விக்ரமாதித்யன் உளருவதாகச் சொன்னார்கள்.
அண்ணாச்சி போதையில் பேசிய பல விஷயங்கள் முக்கியமானவை.ஒரு கவிதை விமர்சனத்தின் போது ஒருவர் சம்பந்தப்பட்ட கவிதையில் நுட்பமிருக்கிறது என வாதிட "சினிமா போஸ்டர்லயுந்தாண்டா நுட்பமிருக்கு ? அப்ப சினிமா போஸ்டரும் கவிதை என்பீர்களா ? என முற்றிய போதையில் கேட்டதை சமீபத்தில் குறிப்பிட்டு போதையில் ஒருபோதும் அண்ணாச்சி உளறியதில்லை என்று அண்ணாச்சி பற்றிய அவதானிப்பை ஜெயமோகன் பகிர்ந்து கொள்ளக் கேட்ட போது ;அண்ணாச்சியின் பல வாக்கியங்களை மீண்டும் அசைபோட்டு பார்க்க இயல்பவர்களுக்கு இது புரிந்துவிடும் என்று தோன்றியது. ஒரு கூட்டத்தில் சுந்தர ராமசாமியை நோக்கி "Why are you more obsessed in your poems rama sami ? " எனக் கேட்டார்.சுரா எனக்கு ஆங்கிலம் தெரியாது தமிழில் கேளுங்கள் எனக் கூற "எனக்கும்தான் ஆங்கிலம் தெரியாது நான் கேட்கவில்லையா ? எனத் திருப்பிக் கேட்டார் விக்ரமாதித்யன்.இது பகடிதான் ஆனால் வெறும் பகடி மட்டுமில்லை.
அமைப்பியல் கிறக்கங்கள் படைப்பாளி இறந்தது விட்டான் என்கிற சங்கை தமிழ் கவியின் காதில் கல்வியாளர்களின் துணையுடன் வந்து கிசுகிசுத்த போது;விக்ரமாதித்யனைதான் அடக்கம் செய்ய முடியும் விக்ரமாதித்யனின் கவிதைகளை அடக்கம் செய்ய முடியாது என்று பதிலுரைத்ததையும் ஜெயமோகன் நினைவுபடுத்தினார்.
பழைய இந்திய மற்றும் வங்காள இலக்கியங்களைக் கற்க எப்போதும் அவர் ஒரு இலக்கிய மாணவனுக்கு வழிகாட்டியாகத் திகழமுடியும்.லட்சிய ஹிந்து ஹோட்டல் ,நீலகண்ட பறவையைத் தேடி போன்ற நாவல்கள் நான் அவ்வாறு அவர் கூறிப் பயின்றவை.இன்றுவரையில் புதிதாக நம்பிக்கையேற்படுத்தும் விதத்தில் கவிதை எழுதுபவர்களை அறிய விக்ரமாதித்யனைத்தான் கேட்கிறேன்.புதிதாக புதுமையுடன் ஒன்றிரண்டு கவிதை எழுதியவனாக இருந்தாலும் கூட அவனை அறிந்து வைத்திருப்பது மட்டுமல்ல அவனோடு நேர் பழக்கத்திலும் இருக்கிறார்.கையில் ஒரு சல்லிக்காசு இல்லாமல் தமிழ்நாடு முழுதும் சுற்ற நினைப்பவனுக்கும் இன்றும் அவர்தான் வழிகாட்டி.தமிழ்நாட்டின் ஒவ்வொரு குக்கிராமத்திலும் ஏதோ ஒரு இளைஞனோடு கவிதையை மையமிட்ட ஒரு தொடுப்பு அவருக்கு உண்டு.நீங்கள் யாரேனும் பெருஞ்சபை ஒன்றிலிருந்து அவரைத் தூக்கி வெளியேற்றி எறிந்தால் அவர் சென்று விழுவது ஏதேனும் கிராமத்தில் கவிதையுடன் தூங்கச் செல்லும் ஒருவனின் மடியாகத் தான் இருக்கும். உங்கள் பெருஞ்சபை அவன் மடியைக் காட்டிலும் மிகச் சிறிது என்பதை அனுபவத்தில்,அலைச்சலில் கண்டுபிடித்துக் கொண்ட ஆங்காரமே விக்ரமாதித்யன்.
ஒருமுறை கும்பகோணத்தில் ஒரு மகாசபைக் கூட்டம்.விடுதியில் அறைகள் பேணப்பட்டிருந்தன.சபையில் என்ன நடகிறதென்றே எங்களுக்குத் தெரியாது.சபைகளுக்கு முன்காலங்களில் சென்றதெல்லாமே சபைகளுக்கு வெளியே கூடுவதற்காகத் தானே ?பேச்சுமுற்றி பேச்சு .கடைசியில் விகாரமாகிவிட்டது எப்போதும்போலவே .விடுதியில் அறையை விடுவிக்கும் போது நள்ளிரவு.நாங்கள் இருவருமே இரவிற்கு மிஞ்சினோம்.நெடுஞ்சாலையில் நடக்க பசி.சில நாட்களாகவே சாப்பிடாத உணவை எல்லாம் ஒரே சமயத்தில் வேண்டும் என உடல் கேட்கிறது. எங்கு செல்கிறோம் என்பது தெரியாது. அவர் யாரோ ஒருவரின் பெயரைக் கூறி அருகில்தான் போய்விடலாம் என்கிறார்.இப்படி அவரது எத்தனையோ பொய்களைக் கேட்டுக் கேட்டுத் தான் தமிழ்நாடு என்பது என்ன என்பதை அறிந்து கொண்டேன்.நான்கைந்து கிலோ மீட்டர்கள் கடந்தபிறகு நள்ளிரவில் திறந்திருந்த கல்யாண மண்டபத்தில் சாப்பிட்டு விடலாம் என்றேன்.அவரோ இனியும் எவரோ குடிவாங்கித் தரவிருக்கிறார்கள் என்கிற நம்பிக்கையின் அன்ன பூரணியின் கையால் பிச்சை அமுது உண்டால்தான் சிவனின் கபாலத்தில் இணைந்திருக்கும் திருவோடு அகலும் என வழிநடைப் பாசாங்கு .எனக்கு அவரது சிவனோடு சண்டை ஏற்படுவது இது போன்ற தருணங்களில்தான்.
என்னுடைய இலக்கிய வாழ்வு தொடங்கியதிலிருந்து நான் உள்ளும் புறமுமாக இணைந்தே இருக்கும் ஐந்தாறு பேர்களில் விக்ரமாதித்யனும் ஒருவர்.அவரின் கோலம் கண்டோ,பழக்கம் கண்டோ என் வீட்டில் குழந்தைகள் உட்பட யாருக்கும் சுணக்கம் கிடையாது.என்னுடைய இல்லறத்தில் முதல் நான்கு வருடங்கள் குழந்தைகள் இல்லை.திருவண்ணாமலைக்கு கிரிவலம் போகச் சொன்னவர் அவர்.கிரிவலம் போய் வந்த பின்னர் பிறந்தவன்தான் ரிஷிநந்தன் . கிரிவலம் சென்று நந்தன் பிறந்தான் என்பதைக் காட்டிலும்,அதனைப் பொதுவெளியில் உரக்க அறிவிக்கும் தைரியத்தை ஏற்படுத்தியிருக்கிறாரே அது முன்னதைக் காட்டிலும் அருங்காரியம்.பல காரியங்களை அவரைக் கேளாமல் முடிவு செய்வதில்லை.அப்படி செய்கிறோமா என்பது வேறு விஷயம்.என்றாலும் இப்படி செய்யலாமா அண்ணாச்சி என கேட்கும் பழக்கம்.கவிதைகள் வழியாகவும்,பழக்கத்திலும் என்னிலிருந்து பல்வேறு இறுக்கங்களை அகற்ற எனக்குத் துணை புரிந்த மகான்
அவரிடம் இருந்து கற்றுக் கொண்ட பண்புகளில் முக்கியமானது எதிரியே ஆனாலும் கூட ஒரு நல்ல கவிதையையோ,படைப்பையோ ஒருவன் உருவாக்கிவிட்டால் சகலத்தையும் மறந்து அவனை ஒத்துக் கொள்ளவேண்டும் என்பது.அவன் என்றால் அவளும்தான்.தொண்ணுறுகளின் தொடக்கத்தில் திருநெல்வேலியில் நடந்த பிரமிள் பற்றிய கூட்ட அரங்கிற்கு வெளியே "பனையேறிக்கு எப்படியடா கவிதை வரும் ? என ஓங்கிக் கேட்டவர்தான் அவர்.பின்னாட்களில் எனது கவிதைகள் பற்றி அதிகம் பேசியதும் எழுதியதும் அவர்தான்.போக்குவரவின் அனைத்து பாதைகளிலும் பேசித் திரிபவரும் அவர்தான்.சாதியை சச்சரவை உண்டாக்குவதற்கான வழிமுறையாக அவர் நண்பர்களுடன் கையாள்வதில் எனக்கு இடர்பாடு உண்டு.ஆனால் அவரால் பெயர் உச்சரிக்கப்படாத ஒருவனும் தமிழில் கவியானதில்லை என்பது தெளிவு .பிரான்சிஸ் கிருபா,யவனிகா ஸ்ரீராம்,ஷங்கர்ராமசுப்ரமணியன்,என்.டி.ராஜ்குமார் என நாங்கள் பலர் அவர் உச்சரிப்பிலிருந்து எழுந்து தோன்றியவர்கள்தாம்.
அவரது அடாவடித்தனங்கள் ,நிஜ கலகங்கள் அத்தனையும் தமிழ் அம்மை விரும்பி அணிந்து கொண்டிருக்கிற அலங்காரங்கள் என்பதை தமிழ் கூறும் நல்லுலகு அறிய இன்னும் நிறைய காலங்கள் ஆகுமோ ? என் பொன் அன்பர்களே ?
ஒரேஒரு கவிதை மட்டுமே முழுமையான போதையில் தள்ளாடிய வண்ணம் என்னால் எழுதப்பட்டது .போதையில் ஒருபோதும் எனக்கு எழுதும் திறன் கிடையாது.அந்த ஒரு கவிதை விக்ரமாதித்யனைப் பற்றியது.இந்த கவிதையை மனநல மருத்துவர் ருத்ரனின் அறையின் முன்னிருந்து எழுதி அவருக்குப் பரிசளித்து விட்டுத் திரும்பினேன்.இரண்டாயிரத்தில் என நினைவு.
கலகக் கவிஞனின் சரிதம்
எல்லோரும் விரும்பும்
இல்லாத எதிரியின் கோலத்தை
பலாச் சக்கையாய் வெட்டிப் பிளந்து
பாவனை செய்யும் கவிஞன்
கருணை யேசு மூன்றாம் நாள் உயிர்த்தெழாத வருடத்தில்
பிறந்தான்.
இயற்கையின் ஓலைகள் அசைந்தன
பிறந்த அன்றே விதியின் முற்றுப்புள்ளி வரையில்
குழந்தையுடலைக் கிழித்தெறிந்தான்
ஈவிரக்கமற்ற கடவுள்
குழந்தையுடல் சாபமாய் சிரித்தது
"குழந்தையுடலைக் கிழித்தெறிந்த கடவுளே
இனி என்ன செய்ய வேண்டும்?
முகம் சரியில்லை
நடத்தை பிழை
என்கிற மொழி உடலைச் சுற்றி
முளைத்த போது
திருமணம் செய்து கொண்டான்
கலகக் கவிஞன்.
"பட்டினி பற்றி அவன் கவிதை எழுத வேண்டும்
கடன்காரர்களுக்கு ஒளிப்பதை வெளிப்படுத்த வேண்டும்
இற்று விழப் பார்க்கும் உத்திரத்தைப் பாட வேண்டும்"
கடவுளின் நற்செய்தியைப் பந்துருட்டி
அவன் மீது எறிந்தார்கள் சக குமாஸ்தா புலவர்கள்
"டேய் பிச்சைக்காரா
டேய் குடிகாரா
டேய் வேசியின் மகனே "
படித்துறையில் கட்டிய ஈரச் சேலையாய்
அவனைப் பற்றிய படிமங்கள் படபடத்தன.
அவனது தாய்,சந்தியில் விற்ற சூடான இட்லிகள்
உலர்ந்து
கவிதை வரிகளில் அமர் எய்த
ஊளையிட்டான்.
மெல்லிய மனசுக் காரன் நான் என்றான்
அதிகாரிகளிடம் சென்று பணிந்தான்
அதனால் மேலும் பணிய வேண்டியிருந்தது.
தன்னை நேசிக்க இயலாத தன்னிலை கொண்டு
குழந்தைகள் வளர்த்தான்
தாடி வளர்க்காத அவனைக் கொலை செய்யும்
கத்திகளின் எண்ணிக்கை அதிகரித்த போது
தாடி வளரத் தொடங்கியது.
கத்திரித்து நேர் செய்யப்படாத நேர்ச்சைத் தாடியில்
குற்றவுணர்ச்சிகள் கொத்தாய் பூத்தன
"அதிகாரிகளே உங்களைத் தொந்தரவு செய்துவிட்டேனா?
நண்பர்களே தவறிழைத்து விட்டேனா?
மதுவற்ற நிலையில் தொங்கிய தலை
ஒருபோதும் நிமிரவில்லை
"நகர்ந்து விட்ட கிராமத்திற்கு த் திரும்பவேண்டும்
சாதித் தலைவனாய் மீள வேண்டும்
புத்திமதிகள் சொல்லவேண்டும்
நிலத்தின் மன்னனாக வேண்டும்
அடிமைகளை,பசியால் நிறைந்தோரை
கடவுளின் பிரநிதியாய் கொல்லவேண்டும்
வேறு வழியில்லை
உங்கள் கனவுகளை ஆமோதிக்கிறேன்.
நானொரு பிழை
குழந்தையாய் பிறந்தது ஒரு தற்செயல்
அடிபணிந்த கலகக்காரனை
எடுபிடியாய் நடத்த
உத்தரவு செய்கிறேன்"
தொடர்வண்டியில் சத்தம் தட்டிப்பாடும்
பாடகனாய் மரணமடைந்த பின்
அவன் குடித்தெறிந்த மதுப்புட்டிகளில்
செடிகள் முளைத்தன.
கடலை நோக்கிக் காதல் கடிதங்கள் எறிய
மதுப்புட்டிகள் துடி கொண்டன
அவை யார் கையிலேனும் கிடைக்கக் கூடும்
கிடைத்த செய்தியை வெளிச்சொல்ல ,
மறைக்காமலிருக்க
வரலாறு அவர்களுக்கு 
மனம் தரவேண்டும் 

அப்பச்சி காமராஜர் ...

அப்பச்சி காமராஜர் ... காமராஜ் பற்றி "நீயா நானா " விஜய் டிவி ஷோவில் பேசுவதற்காக ஆன்டனி ஒரு வாரம் முன்னதாக அழைத்தார்.நான் வர...