ஐரோம் ஷர்மிளா நீங்கள் தமிழ்நாட்டின் கூடுதல் கவர்னர் அல்ல.

ஐரோம் ஷர்மிளா நீங்கள்  தமிழ்நாட்டின் கூடுதல் கவர்னர் அல்ல.

ஐரோம் ஷர்மிளாவின் திருமணம் இங்கே பிரச்சனையாகவில்லை.அவர் இந்தியாவின் எந்த இடத்திலும் தனது அமைதியான வாழ்க்கையைத் தொடரமுடியும் .இந்த போராளிகள் எங்கு சென்றாலும் தங்கள் விதியின் சுருளையும் எடுத்துக் கொண்டுதான் செல்கிறார்கள் .அதுதான் பிரச்சனையே.அவர்கள் கொண்டிருக்கும் தன் முனைப்பின் இருள் அவர்களை சும்மா இருக்க விடுவதில்லை.கொடைக்கானலிலும் ஒரு போர்ச் சூழலை ஏற்படுத்துவேன் என அவர்கள் சபதமேற்பதுதான் சிக்கலாகிவிடுகிறது. இயல்பான வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படுத்துவேன் என்கிற விதத்தில் ஊடகங்களில் இவர்கள்  ஏற்படுத்துகிற அச்சமே சிக்கலுக்கு காரணம்.மக்கள் இவற்றை ஏற்பதில்லை. பிரபலமான ஒரு மனிதர் தான் செல்கிற இடமெங்கும் தன் சாம்ராஜ்யத்தைக் கட்டியெழுப்புவேன் என கோசமிட்டுக் கொண்டே சென்றால் என்னவாகும் ?

இந்த போராளி மனோபாவத்தின் சிக்கலான அம்சம் ,தங்களை சாமானியர்கள்  இல்லை என கருதுவதிலிருந்து தொடங்குகிறது.அவர்கள் எப்போதும் தங்களை குட்டி சாம்ராஜ்யத்தின் எஜமானர்கள் என கருதுவதிலிருந்து தொடங்குகிறது.பல போராளிகளின் உளப்பாங்கு இதுதான்.நிலவுடைமையின் சாராம்ச மன உறுப்புகள் இவர்கள்  . குட்டி சாம்ராஜ்யத்தைக் கட்டியெழுப்பாமல் அவர்களால் உயிர் வாழ்தல்  இயலாது. இப்படி பத்து பிரபலங்கள் பத்து இடத்தில் எதற்கும் தயாராக இருக்கும் பத்து சீலிப்பர் செல்களை நம்பி களத்தில் இறங்கினால்; எந்த நிலத்தையும் துண்டு வேறு கண்டம் வேறாக சிதைத்து விட முடியும்.சீலிப்பர் செல்களுக்கா
இங்கே பஞ்சம் ? சீலிப்பர் செல்களில் இருந்து உருவாகிற அதிகாரத் தலைமைகள் எந்த ரூபத்தில் சமூகத்திற்குள் வந்தாலும் அது தீமையையே விளைவிக்கும்.ஏனெனில் இவர்களின் ஆழ்மனத் தாகம் தீர்வுகளை கோருவது அல்ல.புற சமூகத்தின் மீது தாங்கொணா அதிகாரத்தைக் கோருவது.புற சமூகத்தின் அனைத்து அதிகாரத்தையும் தங்கள் வயப்படுத்த விளைவது.மிகவும் ஆபத்தான மனோபாவம் இதுவே.குறிப்பிட்ட சில பிரச்சனைகளை மட்டுமே பேசி போராளிப் பாவனை கொள்கிற பலரும் இயங்குவது இந்த மனோபாவத்தின் அடிப்படையிலேயே ஆகும்.

நான் ஓரிடத்தில் அமைதியாக வாழ விரும்புகிறேன்.தவிர்க்க இயலாமல் அங்குள்ள நெருக்கடிகள் என்னைப் போராட தூண்டுகின்றன என்றால் அது வேறு விஷயம்.எங்கு சென்றாலும் நான் ரெடிமேடாக போராட தயாராகச் செல்கிறேன் என்றால் அது மற்றொரு விஷயம் .

மிகவும் இக்கட்டான சூழ்நிலைகள் ஏற்பட்டாலே தவிர; மக்கள் இயல்பு வாழ்க்கையை பறிகொடுப்பதை ஒருபோதும்  விரும்புவதே இல்லை என்பதை அறிந்து கொள்ளும் வரையில் இவர்களுக்கும் தங்கள் போராளி வேடத்தின் அலுப்பு குறைய போவதில்லை.

ஐரோம் ஷர்மிளா நீங்கள் பிரபல போராளிதான் இல்லையென்று சொல்லவில்லை.உங்கள் திருமணம் சாமானியர்களின் திருமணத்தைக் காட்டிலும் சிறப்பும் கொண்டதுதான் அதிலும் எனக்கு சந்தேகமில்லை.ஆனால் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் எளிமையானது .நீங்கள் தமிழ்நாட்டின் கூடுதல் கவர்னராக யாராலும்  நியமிக்கப்பட்டு இங்கு வந்து சேரவில்லை. நீங்கள் வந்துதான் ரட்ஷிக்க முடியும் என்றும் நாங்கள் யாரும் மனுப்போட்டு நீங்கள் இங்கு வந்து சேரவில்லை.சாமானியர்களுக்கு  உள்ள அதே வாயும் ,மூலமும்தான் உங்களுக்கும்.இங்குள்ள சீலிப்பர்   செல்களை  நம்பி முடிவுகளை எடுக்காதீர்கள் .அவர்கள் உங்களை இங்கிருந்து துரத்தாமல் விடவே மாட்டார்கள்.

அடையாளங்களை வழிபடுவது எப்படி?

அடையாளங்களை வழிபடுவது எப்படி?
இது நமக்குப் புதியதல்ல.புனித அடையாளங்கள் அனைத்தையும் வழிபட மட்டுமே அறிந்த மக்களாகிய நமக்கு இது முதல் அனுபவமும் அல்ல.
இந்திய அரசின் கொடூரமான முகம்,தன்னை மறைத்துக் கொள்ள உருவாக்கிக் காட்டிய கருணை முகம் அப்துல் கலாமுடையது.நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் இது ஒரு தனி மனிதனின் முகம் அல்ல.ஐரோம் ஷர்மிளாவிடமும் , கூடங்குளத்திலும் தனது ஈவிரக்கமற்ற முகத்தை உறுதியாக வெளிபடுத்திக் கொண்டிருக்கும் இந்த அரசின் கருணை முகம்.இந்த கருணை முகம் நிஜமானதுதானா? இந்த முகத்திற்கு பல சாயங்கள் உண்டு.அறிவு,தொழில் நுட்பம்,இந்தியாவின் வல்லரசு கனவு என்று பலவற்றையும் உள்ளடக்கியது இந்த கருணை முகம்.சிறுபான்மையினரின் தரப்பையும் கருத்திற் கொண்டு உருவாக்கப்பட்டிருத்தல் இதம் ,மகத்துவம்..இந்திய அரசு தனது பிரகடனமாய் உருவாக்கிய அடையாளங்களிலேயே ஆகச் சிறந்த சிற்பம் இது என்றும் சொல்லலாம்.ஆகச் சிறந்த கடவுள் சிற்பம்.வகுத்தெடுத்த பொது மனசாட்சி.
கழிந்த பதினைந்து வருடங்களில் இந்திய தேசியத்தின் தொழிநுட்பக் கடவுளாக கலாம் உருவாக்கப்பட்டார்.அது கருணையின் சாயலில் உருவாக்கப்பட்டது.இந்த கதாபாத்திரத்தை நிறைவு செய்யும் தகுதி வேறு ஒருவரும் அமையவில்லை என்பதே இந்த கடவுளின் தனிச்சிறப்பு .அவ்வளவு கச்சிதமாகப் பொருந்தியதுதான் இந்த கருணை முகத்தின் சிறப்பே ! ஒருவகையில் சொல்லிப் பார்த்தால் ஏவுகணை,அணு ஆயுதங்களின் தரப்பிலிருந்து அணுவுலைகளின் தரப்பிலிருந்து உருவாக்கப்பட்ட கருணைமுகம் இது.
தொழில்நுட்பத்தின் நேர்மறையான தாக்கங்களை மட்டும் குறிப்பதே இந்த கடவுள் உருவாக்கத்தின் நோக்கம்.அதனை கலாம் செவ்வனே செய்தார்.நாம் இந்த கடவுளின் நேர்மறையான தகுதிகளைப் பற்றி புளகாங்கிதப்பட்டு ,போற்றி ஒருபுறம் நெகிழ்ந்து போயிருந்த சமயத்தில்தான் ; இந்த கடவுளின் எதிர்மறையான அனைத்து கசடுகளும் ஏழைகளின் வீடுகளில் கொல்லைப்புறங்கள் வழியாகக் கொண்டு கொட்டப்பட்டன.எதிர்த்து கேட்க இயலவில்லை.ஏனெனில் இது கடவுள் கொண்டு கொட்டிய கழிவு.புனிதக் கடவுளின் ஏற்பாடு.
நாம் எதனைப் போற்றிப் பாதுகாக்கவிரும்பினோமோ அது கொண்டு வந்து கொட்டிய கசடு." இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டுமெனில் பரந்து கெடுக்க உலகியற்றியான் " என்ற தமிழ் முனியின் அறத்தை நாம் இதன் வாயிலிருந்து பரவசப்பட்டுக் கேட்டுக் கொண்டிருக்கும் போதேதான் இந்திய முழுவதிலும் உள்ள ஏராளமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டார்கள். ஏழைகளுக்கு எதிரான அரசாங்கத்தின் அனைத்துக் குற்றங்களும் கனிந்தன.வெளிநாட்டு வணிகம் செழிக்க அனைத்து வளங்களும் தாரை வார்க்கப்பட்டன.பூர்வகுடிகள் அகற்றப்பட்டார்கள்.கொல்லப்பட்டார்கள் .அவர்கள் குற்றவாளிகள் என நம் முன்னால் நம்ப வைக்கப்பட்டார்கள்.நம்மால் எதனையும் தடுக்க முடியவில்லை.இந்த கருணை முகத்தை நம் முன் காட்டித் தடுத்தார்கள்.ஏழைகள் கொல்லப்படுவதும் ,அகற்றப்படுவதும் ,தண்டிக்கப்படுவதும் ,குற்றவாளிகளாக ஆக்கப்படுவதும் ஒரு தேசத்தின் நலனுக்காக என உறுதியாக நம்மை நம்ப வைக்கும் கடவுளின் முன்னே நாம் என்ன செய்துவிட முடியும் ?
ஒருநாளில் நாமெல்லோருமே காணாமல் போய்விடவேண்டும்.ஏனென்றால் அது தேச நலனுக்காக என்று மிகத் தெளிவாக நமக்குப் போதிக்கப்பட்டது. .நமக்கெல்லாம் இங்கே இடமேயில்லை என்பது தெளிவாகப் புரிகிறது.அதுவும் தேச நலனுக்காகத்தான்.நீங்கள் சொல்வது எதையுமே கேட்கமுடியாது ஏன் என்றால் அது தேசநலனைக் கருத்தில் கொண்டிருக்கிறது.உங்களுக்கு இங்கே ஒரு பெறுமதியும் இல்லை ஏனெனில் தேசநலனே இங்கு முக்கியம்? யாருடைய தேசத்தின் நலன் இது? நீங்கள் இங்கே இடம் பெறலாகாது ஏனெனில் இங்கே நடை பெறுவது புனிதப் பயணம்.உங்களுக்கு இங்கு இடம் இல்லை.யாருடைய புனிதப் பயணம்?
இருபதாண்டுகளில் மிகத் தெளிவாக ஏழைகள் இரண்டாம் தர மக்களாக மாற்றப்பட்டிருக்கிறார்கள் .நீங்கள் எவரும் கேட்கக் கூடாது ஏனென்றால் அவர்கள் தேசநலனை முன்வைத்தே இரண்டாம் தரமான மக்களாக மாற்றப்பட்டிருக்கிறார்கள் .ஏழை மக்களே நீங்கள் கொல்லப்படுதலை,ஒடுக்குமுறைக்குள்ளாவதை ,நீங்கள் குற்றவாளிகளாகக் கருதப்படுவதை , தண்டிக்கப்படுவதை , அத்துமீறப்படுவதை சகித்துக் கொள்ளுங்கள்.பொறுத்துக் கொள்ளுங்கள்,உடன்படுங்கள்.ஏனெனில் உங்களைவிட இந்த நாட்டின் தேசநலனே முக்கியமானது.அதை நாங்கள் பராமரித்துக் கொண்டிருக்கிறோம் என்று கூறுகிற இந்த அரசாங்கத்தை நோக்கி எங்களைக் கொலை செய்யவும் துணிகிற உங்களுடைய தேசநலம் என்பது என்ன?,வெளிநாட்டுக்கு அனைத்து இந்திய வளங்களையும் விற்பதில் நீங்கள் அடைந்துள்ள சாதுர்யமா ? என்று கூட நாம் கேட்கத் துணிவற்றுப் போனமைக்கு அது நம் முன் வைத்த இந்த கருணை முகமே காரணம்.
தேசநலன் என்னும் போலிக் கருத்தாக்கத்தை முன்வைத்து ஆடப்பட்டும் இந்த சூதாட்டத்தில் எதிரிகள் ஏழைகள் என்பதை ஏழைகளின் கண்களிலிருந்தே மறைத்தது இந்த கருணை முகம்தான்.
எல்லாவற்றுக்கும் மேலான ஒரு கடவுளின் திருப்பணி நடந்து கொண்டிருக்கும் போது நம்மால் இடையூறு செய்ய இயலுமா? இந்திய அரசின் அனைத்து விதமான ஏழை மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளையும் கொள்கைகளையும் புனிதப்படுத்திக் கொள்ள இந்த முகம் தேவையாய் இருந்தது.
இன்று இந்த முகத்தின் புனிதத்தன்மைக்காக மக்கள் கண்ணீர் வடிக்கிறார்கள்.அரசியல்வாதிகளோ இனி இப்படி தீமைகளின் தரப்பிற்குக் கனகச்சிதமாகப் பொருந்தும் ஒரு முகம் தங்களைத் தற்காத்துக் கொள்ள எப்போது கிடைக்குமோ என்கிற கவலையில் ஒருமித்துக் கதறுகிறார்கள் .
வந்தே மாதரம்
ஜெய் ஹிந்த்

இடைவெளி இதழ் 2

இடைவெளி இதழ் 2 

வெளிவந்துள்ளது.எழுதுவதற்கும் ,படிப்பதற்கும் ஆசையைத் தூண்டுகிற இதழ்.என்னுடைய எட்டு கவிதைகள் இந்த இதழில் வெளிவந்துள்ளன.சில இதழ்கள் தான் கையில் வைத்திருக்கும் போது பெருமையாக உணரச் செய்பவை.இடைவெளியும் அவற்றில் ஒன்றாக இணைந்திருக்கிறது. முடிந்தவர்கள் விலைக்கு வாங்கி இதழை  படித்துப் பாருங்கள்.150  பக்கங்களில் நல்ல தாளில், நல்ல கட்டுமானத்தில் ,நல்ல படைப்புகளோடு இருக்கிறது இடைவெளி 2லக்ஷ்மி மணிவண்ணன் கவிதைகள்

1

எனது அறை திறந்துதான் இருக்கிறது
எப்போதும் போலவே

எப்போது வேண்டுமாயினும் நீங்கள் வரலாம்

நீங்கள் யார் என்று கேட்க மாட்டேன்
ஊர் பெயர் அவசியமற்றது
உங்கள் பாலினம் என்ன ? தேவையில்லை

முதலில் கண்ட கனவில் திறக்கப்பட்டதிந்த கதவு
எட்டு பாழிகள் இருந்தன

நீங்கள் உங்கள் பெருமைகளை எடுத்து வந்தால்
இங்கே உங்களுக்கு சோர்வு தட்டக் கூடும்

திறக்கப்பட்ட எட்டு பாழிகள் வழியே
தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன்
தெருக்கள் சாலைகள் வீடுகள் கேந்திரங்கள்
கிளிகள் சிட்டுக் குருவிகள் என
எனக்கு ஒன்பது கண்கள் தெரியுமா ?
எட்டாவது பாழியிலிருந்து உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பது
எனது முதிர்ந்த ஆண்குறி
என்னுடைய மூன்றாவது கண்

எட்டு கண்களுடன் நீங்களும் வந்திணைந்தால்
நாம் ஒன்பதாவது கண் வழியே ஒன்றாகக் காண்போம்
நதிகளையும் ,மாமலைகளையும் ,தொடுவானத்தையும்

தேகம் இதில் முதல் கண்
தேக்கமற்றது இரண்டாவது கண்
பரலோகம் ஒரு கண்
பார்க்க இயலாதைவை இரண்டு கண்கள்
பார்க்க இயலாதவற்றைக் காணும் கண்கள் இரண்டு

நெற்றிக்கண் என்கிறார்களே
அது எப்போதும் கனவு பார்ப்பது எனக்கு

திறந்துதான் இருக்கிறேன்
உள்ளே வரலாம்
இல்லாத அறைக் கதவை தட்டுவதற்குப் பதிலாக
"சாப்பிட்டு விட்டீர்களா ?" என்று கேட்டு விட்டு வாருங்கள்
இல்லையெனிலும் எப்போதும் உங்களுக்கான உணவை
எடுத்துதான் வைத்திருக்கிறேன்
உடலின் அப்பம் போல

நீங்கள் திரும்பிச் செல்கையில் என்னிடம்
சொல்லத் தேவையில்லை

இரண்டு கண்களோடு மட்டும் இந்த அறைக்குள் உட்புகுந்தால்
கருக்கரிவாள் இன்னும் பதமாகத் தானிருக்கிறது
இரண்டு கண்கள் கொண்ட தலைகளை கொய்த்தெடுக்க
அது தயாராக இருக்கக் கூடும்
ஜாக்கிரதை


2

விடுதலைக்கான என்னுடைய முதல் அடியில்
எப்போதும் ஒரு சிறைச் சாலைக்குள் வந்து விழுகிறேன்
அதன் பின்னர் அங்கிருந்து சிகிரெட் புகைக்கக் தொடங்குகிறேன்

முட்புதரில் இறங்கி ஆற்றைக் கடக்கவேண்டும்
முட்புதரில் இறங்குதல் என் வேலை
பின்னர் ஆறு தன் வசம் என்னை அடித்துச் செல்லத் தொடங்குகிறது

என்மேலே உருண்டு விழுகிற சரளைக்கற்கள்
நாங்களும் இப்படித்தான் முட்புதரில் இறங்கினோம்
என்று ரகசியம் பேசுகின்றன

நாங்கள் ஒரு ஊரிலிருந்து மறு ஊருக்குள் செல்வதற்குள்
ஆகாசம் கண்டோம்
ஒரு இரவைக் கடப்பதற்குள்
உயிர்கள் ஜனிப்பதை பார்த்தோம்

ஒரு யுகத்திற்குள்ளிருந்து மறுயுகத்திற்குள் நுழையும் போது
நம்புவீர்களா தெரியவில்லை
நாங்கள் ஏன் முட்புதரில் இறங்கினோம்
என்பது
தெளிவாயிற்று

3

எவரைப் பார்ப்பதற்கும் வெறுங்கையோடு
சும்மா வருவதில்லை நான்

மடங்கி மடங்கிச் செல்லும் மலைத்தொடரில்
நடுவில் தோற்றங்காட்டும் பௌர்ணமியை கொண்டு வந்தேன்
நேற்று உங்களிடம்

மொய் எழுதாமல் சோற்றில் கைவைக்கும் பழக்கம்
எனக்கில்லை
வழிநெடுக உதிர்ந்து கிடந்த மஞ்சள் பூந்தரையை
மரங்களுடன் அள்ளியெடுத்து வருவது எனது வாடிக்கை

கைபிடித்து என்னை வரவேற்றுப் பாருங்கள்
நீங்கள் விட்டகலும் காட்சிகளின் வெப்பம் உண்டு என் கையில்

சிறுவர்கள் வசிக்கும் வீடுகளுக்கு பேருந்துக்கு வெளியே
ஓடிக்கொண்டிருக்கும் தாவரங்கள்
யுவதிகளுக்கோ பகலில் தருவேன்
இரவின் நட்சத்திரங்கள்

எனினும் குழந்தைகள் வசிக்கும் வீட்டில்
வேடிக்கையைத் தரயியலாமல் வெறுங்கையோடு செல்பவர்கள்
துரதிர்ஷ்டவசமானவர்கள்
கூர்ந்து என் கண்களை பார்க்கச் செய்தவர்களுக்குக்
கடல் காட்டுவேன்

4

பாமா இல்லத்தில்
யார் வாயிலில் நின்றாலும்
பாமாவே தோன்றுகிறாள்

முன்பக்க கேட் நான்கடியகலம்
ஒரு பக்கம் சற்றே திறந்திருக்க வேண்டும்
திறந்த ஒருபக்க கேட் மேல் நுனி பிடித்து
நிற்கவேண்டும் பாமா

ஒரு காலுயர்த்தி படியில் நிற்க
புறப்படும்
ஒரு நளின வில்லின் வளைவு

மேற்கு பார்த்த தெருவில் பாமா
மேற்கில் உடல் திரும்பி
கிழக்கில் முகம் பார்க்கிறாள்

இப்படி பாமா இல்லத்தில்
பாமாதான் நிற்கவேண்டும் என்பதில்லை
யார் வேண்டுமாயினும் நிற்கலாம்
நிற்க வேண்டும்
நின்றால் அவள்தான்
பாமா

பாமா நின்று நோக்கும் வீட்டில்
பாமா நோக்காத திசையிலிருந்து வந்து கொண்டிருப்பவன்தான்
கண்ணன் என்பது
பாமா அறியாததா என்ன ?

5

நீங்கள் வருவதற்கு தைரியப்படாத இடத்தில் இருந்து கொண்டிருக்கிறேன்
நீங்கள் தைரியப்பட்டால் இயலக்கூடிய இடம்தான் இது

தைரியப்பட்டதால்தான் இங்கு வந்து சேர்ந்தேன்
என்றும் சொல்வதற்கில்லை
கழுகின் கழுத்து வசீகரத்தில் குருடனாக ஏறி அமர்ந்து
வந்திங்கு சேர்ந்தேன்

இங்கே கொஞ்சம் சித்து கிட்டும்
ஜோதிடம் அகப்படும்
தரிசனம் தோன்றும்
வாக்கு பலிதமாகும்

ஐந்து கடல் ஏழுமலை
ஆயிரம் பூதங்கள் தாண்டியும் வரலாம்
நேரடியாகவும் வரலாம்
வழிப்பாதை தெரியவேண்டும்

ஆமை முட்டைகள் பொரித்து கடலுள் நகரும் பாதையில் தொடங்கி
யானைத்தடம் கடந்து
மலை மேல் பவனித்து
காற்று வரும் திசையில் வந்து சேரவேண்டும்

கடினமேதுமில்லை
ஒரு வண்ணத்துப்பூச்சியின் வழிப்பாதைதான் இது
என்று சொன்னால் நம்பவா போகிறீர்கள் ?
வந்து சேருங்கள் மேனியெல்லாம்
வண்ணத்தின் பிசுபிசுப்பு காண்பீர்


6

ஏரியுடல்

வற்றிக் கொண்டிருக்கும் ஏரிதான்
வற்றிக் கொண்டிருப்பதை தெரியப்படுத்த விரும்பாத கொக்குகள்
அதன் ஈரம் கொத்துகின்றன

அக்கரையிலிருந்து புறப்பட்டு வரும் வாத்துகள்
நீர்வளையங்களில் நெளிகிறது ஏரியின் சுடு முதுகு

கரைக்குத் திரும்பியவை மீண்டும் நீர்வளையங்களில் நீந்துகின்றன

யோனியை வானுக்குயர்த்தும் தாமரைகள்
நீ எவ்வளவு வற்றினாலும் எனது வேர் உனது
ஊற்றில்தான் இருக்கிறது பாரேன் என்கிறது

முக்காலத்திற்குள் இந்த காட்சியை அழைத்துச் சென்றதொரு
பழம்பாடல்
ஒலிப்பெட்டிக்கு சொந்தக்காரக் குறவன்
வானம் பார்த்தபடி கரையில்
படுத்திருக்கிறான்

அவன் உனக்கு குறவனைப் போலே
தோற்றங்காட்டுகிறான்
ஏகன் அனேகன் இந்த நிமிடத்தில் அவன் தானென்று
எனக்கு சொல்லித்தந்ததோ
ஏரிக்கரை அரசமரம்

உடன்தானே
அரசின் இலைகளிலெல்லாம்
அனேகனின் தளிர் வசந்தம்
நான் ஏரியின் நீர்வளையங்களை
எடுத்துத் திரும்பினேன்

எனது வளை இடுப்பிலிருந்து
எதனை அப்படி எடுத்தாய் ? என்று கேட்டாயே
உனக்குத்தான் இந்த பதில்

7


வழிநெடுக பூக்களை சிதறி விட்டுப் போயிருக்கிறான்
இன்று சுடுகாட்டுக்குச் சென்றவன்
அதில் அவன் பார்த்த பூக்களும் உண்டு
பார்க்காத பூக்களும் உண்டு

எல்லோரும் திரும்பி களைத்த பின்னர்
வீதியில் கிடந்தது நசிந்து அழும் இந்த பூக்களை
மிதிக்காமல் செல்ல முயல்கின்றன என் கால்கள்

எல்லோருடைய கால்களும் இப்படித்தான் முயற்சித்திருக்கக் கூடும்
என்றாலும் நசுங்கி விடுகின்றன இந்த பூக்கள்

இதற்கு முன்னர் போனவனுக்கு இப்படித்தான்
இனி புறப்பட போகிறவனுக்கும் இப்படித்தான்
நேர்கொண்டு நாளை உனது சூரியோதயத்தை
அவசியம்
கண்டு விடு.

8

நீ வெளியேறிச் செல்லும் போது
ஒரு கொக்கு சாலையில் குறுக்கே பறந்து சென்றால் நீ
பாக்கியவான்

ஒரு செம்பருந்தைக் காணாமல் திரும்புவதை ஒருபோதும்
பயணமென்று கூறாதே

கூட்டமாக பறவைகள் நீலத்தின் உயரத்தில்
வரிசையாக நகரும் போது அப்படியே நின்று விடு

மரங்களில் இருந்து சப்தத்தில் விடற்கும்
சிறகுகள் மீண்டும் அமரும் வரையில் காத்திரு
செம்மறிகளை தொட்டுப் பார்த்து
பீதியுண்டாக்காதே

எதையும் தொட்டுப் பார்க்க விழையாதே
அது சம்சாரியின் வேலை

இரண்டு மைனாக்கள்
உனக்குக் காத்திருக்கும்
பேசிப் பழகி விடு.

நீ பேசுவது அவற்றுக்கும்
அவற்றின் மொழி உனக்கும்
எட்டும் போது பெரும்பாலும்
காக்கைகள்
உன் கையில் வந்து அமரத் தொடங்கி விடும்

இத்தனையும் செய்து விட்டு
வீடு திரும்பும் போது எங்கே போயிருந்ததாய் ?
என்று கேட்பார்கள்
சும்மா இங்கே தான் இருந்தேன் என்று
சொல் தைரியமாக
தவறில்லை

கொஞ்சம் அசதியாக இப்படித்தான் செய்கிறேன் என்றால்
கொலைமுயற்சி செய்வாளுன்
மனைவி
ஈவிரக்கமின்றி
மறைத்து விடு

வெளியே விஷயம் தெரிய வேண்டாம்
தீவிரவாதி என்பார்கள்

சிறைச்சாலைகள் வதைக்கூடங்களாக இருக்க வேண்டும் என்பவரா நீங்கள் ?

சிறைச்சாலைகள் வதைக்கூடங்களாக இருக்க வேண்டும் என்பவரா நீங்கள் ?

சசிகலா இருக்கும் கர்நாடகா சிறையில் வழக்கமாக நோயுற்ற ,வயதான கைதிகளுக்கு வழங்கப்படுகிற சலுகைகள்தான் சசிகலாவுக்கு வழங்கப்பட்டவை என்று இன்று வெளியாகும் தகவல்கள் பேசுகின்றன.பார்ப்பன அக்ரகாரச் சிறை மேனுவல் சிறை அதிகாரிகளின் அனுமதியோடு நோயுற்றவர்களுக்கும்  ,வயோதிகர்களுக்கும் சில சிறப்பு சலுகைகள் வழங்கலாம் என்று சொல்கிறது.தனியே அடுப்பு வைத்து சமைத்துக் கொள்வது,ஒரு உதவியாளரை நியமித்துக் கொள்வது ,மேஜை செய்தித்தாள்களுக்கான அனுமதி,புத்தகங்களை வருவித்துப் படிப்பதற்கான அனுமதி ஆகியவை சிறை மேனுவலில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.சசிகலா பெற்று வந்த சலுகைகள் சிறை மேனுவலுக்கு உட்பட்டவையே தவிர சட்ட திட்டங்களுக்குப் புறம்பானவை அல்ல.நமக்கு பொதுவாகவே அதிக பட்ச புனித பிம்பங்கள் தேவைப்படுவது போலவே அதிக பட்ச வில்லன் கதா பாத்திரங்களுக்கும் தேவையாக இருக்கின்றன.இந்த  இரண்டிற்கும் இடைப்பட்ட  வாழ்வை நம்மால் எதிர்கொள்ள முடிவதில்லை.நோயுற்ற குரங்கை மனநோயாளி பாதுகாப்பது போல இந்த நிலவரத்தை மனக் கோணல் அதிகாரிகள், ஊடகங்கள் சமமாக பங்கிட்டுக் கொள்கின்றன.

சிறைகள் பற்றிய நமது பொதுமனச் சித்திரம் அறுநூறு ஆண்டுகளுக்குப் பழமையானது.சாதாரணமான மனிதர்களுக்குரிய அத்தனை உரிமைகளும் கைதிகளுக்கும் பொதுவானவைதான்.பொதுச் சமூகத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கிறார்கள் என்பதால் மட்டும்தான் அவர்கள் தனித்து வைக்கப்படுகிறார்களே அன்றி அவர்களின் மனித உரிமைகள் எதையும் அப்புறப்படுத்துவதற்கான நியாயங்கள் கொண்ட அமைப்புகள் உலகில் எங்குமே கிடையாது.இந்திய சிறைகள் இன்னும் பலவிதங்களில் தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டிய நிலையில் இருப்பவை.சிறைகள் கடினமாக இருக்க வேண்டும் என்னும் எண்ணம் எதிரிகள் வதை   செய்யப்பட வேண்டியவர்கள் என்னும் எண்ணத்திலிருந்து கருக்கொள்ளக் கூடியது.

1998  வாக்கில் என நினைக்கிறேன் சிறைகளில் தொலைக்காட்சிப் பெட்டிகள் வைக்கத் தொடங்கியிருந்த காலம்.தினமலர் நாளிதழில்  ஒரு தலையங்கம் எழுதியிருந்தார்கள்."சிறை என்பதே தண்டனையை அனுபவிக்கத் தானே ? இவர்களுக்கு இரவு பனிரெண்டு மணிவரையில் தொலைக்காட்சி பார்க்க வேண்டுமாம் "என்று .இது மன்னர்கால மனோபாவத்தை பிரதிபலிக்கின்ற கண்ணோட்டம் .தொடர்ந்து தினமலர் போன்ற இதழ்களை வாசிப்பவர்களுக்கென்றே சில உடல் உபாதைகளும் மன உபாதைகளும் உண்டு.ஒருவர் பேசுகின்ற இரண்டு முதல் வாக்கியங்களைக் கொண்டே அறிமுகமற்ற ஒருவரைக் கூட   தினமலர் வாசகரா என அறிந்து கொள்ள முடியும்.அந்த அளவிற்கு அருதப் பழைய காலத்தின் மனோபாவங்கள் இவை.ஒருவர் கைதியாக அறிவிக்கப்பட்ட நொடியிலிருந்தே அவருக்கான மனித உரிமைகள் கூர்மையடைய வேண்டும் ஒரு நல்ல சமூகத்தில்.குற்றங்கள் பிற்காலங்களில் நியாயங்களாக   மாறிவிடுதலுக்கான அனைத்துவிதமான சந்தர்பங்களையையும் கொண்டவை.

சசிகலாவை ஒரு சராசரியான கைதியாகக் கொண்டே ஒரு கேள்வியைக் கேட்கிறேன்.சசிகலாவை பற்றிய பத்து நொடிக் குறும்படங்கள் கூட சந்தையில் அமோகமாக விற்பனையாகிறது.இரண்டு லட்சம் தொடங்கி ,பத்து லட்சங்கள் வரையில் .இதற்கென குற்றப் பின்னணி கொண்ட கும்பல்கள் ,ஊடகங்கள் தொழில்படுகின்றனர் .இதனைப்பற்றிய செய்தி ; நேற்றைய தமிழ் இந்து நாளிதழில் வெளியிடப்பட்டிருக்கிறது.அவர்களும் ஒருவர் பின்னால் இவ்வாறாக சூதுபடுகிற இழிவில் புகார் ஏதுமில்லாமல்தான் இந்த செய்தியை வெளியிட்டிருக்கிறார்கள். இவையெதுவுமே அரசியல் பின்னணியிலாதவை ,வெள்ளந்தியானவை என நம்புகிறீர்களா ? சசிகலா ஒருவருக்கும் ஆகாதவர் என்றே வைத்துக் கொள்வோம் .ஒரு சிறைக் கைதி சட்டவிரோதமாக குற்றப் பின்னணி கொண்ட கும்பல்களாலும் , ஊடகங்களாலும் இவ்வண்ணம் துரத்தப்படுவது நியாயமானது என்றுதான் நினைக்கிறீர்களா ? சிறைக்குள் இதற்கெல்லாம் எப்படி சட்டபூர்வமான அனுமதிகள் கிடைக்கின்றன ?

இப்போதுதான் இந்திய சிறைகளில் அவலங்கள் தெரியும் என்பது போல இவ்விஷயத்தில் உரக்க குரல் எழுப்புகிற அதிகாரிகளுக்கு வேறு நோக்கங்கள் உண்டு .அவர்கள் புனித பிம்பங்களை முன்வைக்க பயன்படுத்துகிற பிரதி பிம்பங்கள் மிகவும் பயங்கரமானவை.பிசியோதெரபி சிகிழ்ச்சை மருத்துவ உதவி பெறுகிற கைதிகளின் குறும்படங்களை வெளியிட்டு அவர்கள் பரபரப்பு ஏற்படுத்துவதற்கும் பின்னால் அவர்கள் திட்டங்களின் ஆயிரம் கால்கள் கொண்ட சிலந்திப் பூச்சிகள் ஒளிந்திருக்கின்றன.முதல் தகவல் அறிக்கைகளையே உண்மையென்று நம்புகிற மக்கள் மனோபாவமே அவர்கள் ஏறி விளையாட பயன்படுத்துகிற காலிமைதானம்.

ஊழலை மிகைப்படுத்துவதில் உயர்சாதித் தன்மை ஒளிந்திருக்கிறது

ஊழலை  மிகைப்படுத்துவதில் உயர்சாதித் தன்மை ஒளிந்திருக்கிறது

எங்கள் பகுதியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்த போது ஒருமுறை அவர் பேசிய விஷயம் என்னை வெகுவாகக் கவர்ந்தது .அவரை அவருடைய செயல்களால் எனக்குப் பிடிக்கும் .அவை எதுவும் வெற்றுப் பாசாங்கு வேலைகளாக இருந்ததில்லை.நடைமுறை சார்ந்து அனுபவத்துடன் பேசுபவர்.ஒருமுறை பேருந்து நிலைய வேலை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது ,அவரும் ஒற்றை ஆளாக வந்து நின்றார்.ஏராளமான ஆழ் துளைகள் மூலம் பேருந்து நிலையத்திற்குள் தண்ணீர் தேங்காமல் இருப்பதற்காக நடைபெற்ற பணி அது.அரைகுறையாக வேலையை செய்து வைத்திருந்தார்கள்.எவ்வளவு ஆழத்திற்கு குழிகள் அமைக்கப்பட வேண்டுமோ ,அந்த அளவு சரியாக அமைக்கப்படவில்லை . அவரிடம் ஒப்பந்தக்காரர் சரியாகத்தான் இருக்கிறது என்று காரணங்களை சொல்லிக் கொண்டே இருந்தார்.ஒரு அளவிற்கு மேல் பொறுமையற்று நானும் கொத்தனாக இருந்து இந்த நிலைக்கு இன்று வந்திருப்பவன்தான் என்று கூறிய அவர் நேரடியாக வேலையில் இறங்கி; எவ்வளவு குறைவான ஆழத்தில் குழிகள் இருக்கின்றன என்று நேரடியாக செய்து காட்டினார்.பின்னர் அத்தனை குழிகளும் மீண்டும் வேலைகள் செய்து சரி செய்யப்பட்டன.

மற்றொரு முறை நண்பர் ஒருவரோடு சந்தித்த போது இப்போதெல்லாம் ஊழல் அதிகமாகிவிட்டது என்கிறார்களே ? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று நண்பர் அவரை கேட்டார் .முந்தைய தலைமுறையில் அரசியல்வாதிகள் நாலு தலைமுறைக்கு செலவச்  செழிப்புள்ள குடும்பத்தில் இருந்து வந்தார்கள் ,அவர்கள் காரில் வருவது உங்கள் கண்களை உறுத்தவில்லை .இப்போது நான் முதல் தலைமுறை .நான் வருகிற கார் முழுவதிலும் என்னுடைய முழு உழைப்பின் வியர்வையும் நனைந்திருக்கிறது.ஆனால் இதனைக் காண உங்களுக்குப் பொறுக்கவில்லை.நான் இப்போது இந்த காரில் வருவது உங்கள் கண்களை உறுத்துகிறது .இவன் எப்படி காரில் வரலாம் ,இவன் அப்பன் மண் சுமந்தவன் ,இவன் அம்மை களை பறித்தவள் இவனுக்கு என்ன சொகுசு வேண்டியிருக்கிறது ? என்று நினைக்கிறீர்கள்.இதுதான் அடைப்படை பிரச்சனை என்று பதில் சொன்னார்.ஆனால் அந்த காரிடம் நின்று விசாரித்துப் பாருங்கள் ,நான் ஒருபோதும் நான்கு மணிநேரத்திற்கு அதிகமாக தூங்கியதில்லை என்பது அதற்கு நன்றாகத் தெரியும் என்றார்.சாக்கடை எல்லா இடத்திலும்தான் இருக்கிறது.அதுபோலத்தான் ஊழல்.அத்தனைக்கும் நானா பொறுப்பு ? என்றும் திருப்பிக் கேட்டார்.நான் கடினப்பட்டு சம்பாதித்தவற்றையெல்லாம் அரசியல் இழுத்துக் கொண்டு போகிறது என்பது உங்களுக்கு விளங்காது தம்பி.ஆனால் இதில் எனக்கு சந்தோசம் இருக்கிறது.பத்தாம் வகுப்பே தேறாத எனக்கு இதுதான் ஒரு சமூக அடையாளத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று சொல்லி நிறுத்திக் கொண்டார்.அவர் சொல்லியவை அனைத்தும் உண்மை என்பது எனக்குத் தெரியும்.

இங்கே ஊழலை மிகைப் படுத்துபவர்களிடம் நீங்கள் கூர்ந்து கவனித்தால் உயர்சாதித் தன்மை ஒளிந்திருப்பதைக் காண முடியும்.எனக்குத் தெரிந்த வரையில் இந்த தன்மை இல்லாமல் ஊழலைப் பற்றி பேசுகிற மனிதர்கள் மிகக் குறைவு.அப்படியில்லாமல் ஊழலைப் பேசுபவர்கள் அதிகார வெறி நிரம்பியவர்களாக இருக்கிறார்கள்.இதுபோலவேதான் திராவிட இயக்கத்தை முழுமையாக எதிர்ப்பவர்களும் .எனக்கு திராவிட இயக்கம் பேரில் நிறைய பராதுகள் இருக்கின்றன.நான் மதிக்கிற ஒரேயொரு மிகச் சிறந்த முட்டாள் பெரியார் மட்டும் தான்.நான் ஐயப்பன் நடையில் வேண்டுமாயினும் வந்து சத்தியம் அடித்துச் சொல்கிறேன்.ஆனால் நான் வைக்கிற விமர்சனங்களும் ,உயர் சாதித் தன்மையில் நின்று திராவிட இயக்கத்தைக் குறை கூறுகிற குரல்களும் ஒன்று அல்ல.அதிகாரத்தையும் ,அதன் நிமித்தம் பொருளையும் சகல சாதியினருக்கும் ஜனநாயகப்படுத்தியதில் திராவிட இயக்கத்தின் வழி வந்தவர்களுக்கு இணை தமிழ்நாட்டில் கிடையாது.நிறைய போலி செய்திருக்கிறார்கள்.இலக்கியத்தை ,கல்வியை ,அறிவை எல்லாவற்றையும் இவர்களை போன்று போலி செய்த இயக்கமும் கிடையாது.ஆனால் இவர்களை நிராகரிக்க முடியாது.

பிற்படுத்தப்பட்ட ,தலித் சாதிகளை சேர்ந்த தரப்புகள் அரசியல் அதிகாரத்திற்கு வரும்போது பரவலாக வேகமாக இந்த குற்றச்சாட்டை முன்வைக்கிறார்கள்.இது இவர்கள் பெற்று வரும் அதிகாரத்தின் மீதான குற்றச்சாட்டே தவிர ஊழல் மீதான குற்றச்சாட்டு அல்ல.

ஊழல் நீக்கமற நிறைந்திருக்கிறது எல்லா இடங்களிலும்.நமது அமைப்பு ஊழலை மேலாண்மை செய்யவும் பராமரிக்கவும் அதிக பட்ச சாத்தியங்களைக் கொண்டிருக்கிறது.இதில்  பலனடையாதவர்கள் யாருமே இங்கே இருக்கவே முடியாது.நீங்கள் பல சந்தர்ப்பங்களில் உயிர் பிழைத்து வெளியேற இந்த சாக்கடை பாதைகளே உதவி செய்கின்றன என்பது மறுக்கயிலா உண்மை .  பிரிட்டிஷ் காரனிடமிருந்து அப்படியே இந்த ஊழல் அமைப்பை இறக்குமதி செய்திருக்கிறோம்.நாம் எல்லோருக்குமே இதில் பங்கும் பொறுப்பும் இருக்கிறது.இந்த அமைப்பின்   முன்பாக பகுதி நேர்மையாக ஒருவர் இருப்பது மட்டும்தான் சாத்தியம்.நீங்கள் வெறுமனே பழி வாங்கப்படுகிறீர்கள் என வைத்துக் கொள்வோம் .ஊழல் மூலமாகத்தான் நீங்கள் தப்பித்து வெளியில் வர முடியும்.

அரசியல் என்பது கோடி நுண் துளை கண்கள் கொண்டதொரு மகாமிருகம் . நீங்கள் இங்கே  வேறு யாரேனும் ஒருவரின் குரலில் பேசிக் கொண்டிருப்பதற்கும் கூட வாய்ப்புகள் உண்டு.இனிக்கின்ற அனைத்திற்கும் இனிப்புதான் சுபாவமென்று சொல்லவே முடியாது.

அப்பைய்யா இந்திரா காந்தியை காட்டித் தந்தார்

அப்பைய்யா இந்திரா காந்தியை காட்டித் தந்தார்

நான் சொல்வது எழுபத்தைந்து அல்லது எழுபத்தாறாக இருக்கலாம்.கடைசி தம்பி பிறந்து நாகர்கோவில் கோபால பிள்ளை மருத்துவமனையில் இருந்தான்.எங்கள் ஊருக்கும் நாகர்கோவிலுக்கும் ஒன்பது கிலோமீட்டர் தூரம்தான் இடைவெளி .அப்பைய்யா அப்பம்மையுடன் சென்று காண்பதற்காக நாங்கள் குழந்தைகள் கிளம்பிக் கொண்டிருந்தோம்.அப்பைய்யா வெளியூர்களுக்கு செல்ல வேண்டுமெனில் ஏகதேசம் வெளிநாடுகளுக்குச் செல்வது போல கிளம்புவார்.அப்போதெல்லாம் நாகர்கோவிலுக்குச் செல்வது கூட தொலைதூரத்திற்குச் செல்வதை போன்றதுதான்.அப்பைய்யா குளிப்பது வரையில் சாதாரணமாக இருப்பார்.குளித்து முடித்து விட்டார் எனில் மிகவும் துருசமாக நடந்து கொள்வார்.அப்பைய்யா என்று நான் குறிப்பிடுவது என்னுடைய அப்பாவின் தகப்பனாரை .அதாவது தாத்தா .அவர் பெயர் ஆதி நாராயணன் நாடார்.அப்பம்மை என சொல்வது பாட்டி சீதா லட்சுமியை .
தாத்தா , பாட்டியை எங்கள் குடும்பத்தில் அப்பைய்யா ,அப்பம்மை என பேரக் குழந்தைகள் அழைப்பதே வழக்கம்.

சிறுவயது சிற்றூருக்கு என் வயதில் மிகப் பெரிய நிதானம் இருந்தது.பர பிரம்மம் சதா நிறைந்திருந்த ஊர் .சாலை கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிச் செல்லும் .தெற்குப் பக்கம் கிழக்கு நோக்கி வீடு. வேலியை தாண்டியதும் சில செந்தெங்குகள் ,அழகிய கிணறு தாண்டிச் செல்ல விரிந்த களம்.இசைக் கோலம் நிரம்பிய பகுதி இது.தூரத்தில்  கடலடி சத்தமும் கேட்கலாம். இந்த ஊருக்கென்றே இருந்த நிதானம் அப்பைய்யாவின் உடலிலும் இருந்தது.அவர் படுத்துறங்கும் நார் கட்டில்  தலை வைக்கும் இடம் சற்று வளைந்து உயர்ந்தது .சிறுவயதில் குழந்தைகள் அந்த கட்டிலில் புரள்வோம்.போர்வைகளில் அப்பைய்யாவின் நறுமணம் இருக்கும்.அது விஷேசமானதொரு நறுமணம் .அந்த சிற்றூரின் காட்டு நறுமணம் அது.அவர் கட்டில் மிகவும் தண்மையானது .

அப்பைய்யா அன்று சட்டையும் அணிந்தார்.பொதுவாக அவர் சட்டை அணிவதில்லை.வேட்டி ,தலை முண்டு ,முனை வளைந்த நீளமான  குடை இவைதான் அவர் ஆடைகள் .அவர் சட்டை அணிவது மிகவும் விஷேசம்.அவர் அன்றிருந்த பரவசத்தைக் குறிக்கிற விஷயம் அது.அப்பம்மையும் விஷேசமாகத்தான் கிளம்பியிருந்தாள்.

நாங்கள் நெடுநேரம் பேரூந்துக்காகக் காத்திருந்தது நினைவிருக்கிறது.எங்கள் ஊருக்கு ஒரு  பென்ஸ் பேருந்து மட்டுமே அப்போது உண்டு.ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறை ஊருக்கு வரும்.வந்து திரும்பும்.

நாங்கள் கிளம்பிச் சென்ற அன்றுதான் இந்திராகாந்தியும் நாகர்கோவிலுக்கு வருகிறார் என்பதை நாங்கள் அறிந்திருக்கவில்லை.வேப்பமூடு சந்திப்பில் இறங்கி எஸ்.எல்.பி மைதானம் கடந்து கோபால பிள்ளை மருத்துவமனைக்கு நாங்கள் செல்ல வேண்டும்.ஜனக் கூட்டம்.இவ்வளவு பேர் இங்கே இருக்கிறார்கள் என்பதை எனது அப்பைய்யா அன்றுதான் பார்த்திருப்பார்.வேப்பமூடு சந்திப்பிலிருந்தே வரிசை .மெல்ல மெல்ல நகர்ந்து எஸ்.எல்.பி வாயிலை வந்தடையும் போது திறந்த ஜீப்பில்  இந்திராகாந்தி வெளியே வந்து கொண்டிருந்தார் .ஒரு மலர் மாலையை எடுத்து அவர் கூட்டத்தின் நடுவில் வீசினார் .மக்கள் பரப்பிரம்ம லகரியில் லயித்து நின்றார்கள்.உண்மையில் தாத்தாவிற்கு அவர்தான் இந்திராகாந்தி என்பது  தெரிந்திருக்கவே இல்லை .தெரிந்திருக்க வேண்டிய அவசியமும் அவருக்கு அன்று இல்லை.பக்கத்தில் இருந்த ஒருவர் எனது கையை பற்றி இந்திராகாந்தி என்று பரவசப்படுத்தினார் .நானந்த  பேரழகிக்கு டாட்டா காட்டினேன் .

கமல் ஹாசனுக்கு உண்மையாகவே அரசியல் தெரியவில்லை.

கமல் ஹாசனுக்கு உண்மையாகவே அரசியல் தெரியவில்லை.

முழுதும் கற்பனையான தளத்திலிருந்து கான்வென்ட் குழந்தைகளின் அரசியல் பேசுகிறார் கமல் ஹாசன் .இங்குள்ள கள நிலவரத்திற்கும் அவர் பேசுகிற அரசியலுக்கும் தொடர்பில்லை.இந்த இடத்தில்தான் அ.தி.மு.க அமைச்சர்களோடு அவருக்கு முரண்பாடு ஏற்படுகிறது.கழிந்த ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க ஆட்சியைக் காட்டிலும் ,அதற்கும் முந்தைய கருணாநிதி தலைமையிலான தி.மு.க ஆட்சியை காட்டிலும் ஊழல் எடப்பாடி கே.பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க ஆட்சியில் குறைவு என்பதே உண்மை.இந்த ஆட்சியில் இருப்பவர்கள் ஆட்சியில் இருப்பதற்கே   வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு சதா போதத்தோடு இருந்தாக வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறார்கள்.ஊழலை பொறுத்தவரையில் கடந்த இரண்டு ஆட்சிகளை விட இப்போது சிறப்பு என்றுதான் சொல்ல வேண்டும்.ஆனால் இந்த உண்மைக்கு புறம்பாக கற்பனையான, யார் மீது வேண்டுமாயினும் சுமத்த தக்க  ,உயர் வர்க்க மிகை புகார்களை ; இந்த ஆட்சியின் மீது சொல்லும் போதுதான் பிரச்சனையாகிறது."நாங்களே பட்டினியில் இருக்கிறோம். நீ எங்களை ஸ்டார் கோட்டால் சாப்பாடு என்பாயா ? "என்கிற விதத்தில் அமைச்சர்கள் எதிர்வினையாற்றுகிறார்கள்.கமல் ஹாசனின் இத்தகைய நடத்தையை கிரண்பேடி போன்றோரின் எலைட் அப்பாவித்தனத்துடன் ஒப்பிடலாம்.இந்த அப்பாவித்தனத்தினுள் ஒளிந்திருப்பது வெற்று அதிகாரத் திமிர் கொண்டதொரு வேட்கை மிருகம் .

பொதுவாக எல்லாம் கேட்டு விட்டது ,ஊழல் மலிந்து விட்டது என்பது போன்ற பொது புகார்களை சொல்பவர்கள் ,அது யாருக்குப் பொருந்துகிறது என்பதை அறிந்து பேசுவதில்லை.கமலிடம் வெளிப்படுவது இது போன்றதொரு அப்பாவித்தனம்தான்.ஆசிரியர்கள் பணியிட மாற்றத்திற்கு இவ்வளவு,உதவி காவல் ஆய்வாளர் பதவிக்கு இவ்வளவு,பொதுப்பணித்துறை ஒப்பந்தங்களில் கட்சிக்கு இவ்வளவு என வரையறுத்து எம்.ஆர்.பி .விலையில் ஊழல் கருணாநிதியின் ஆட்சியில் தொடங்கப்பட்டு,ஜெயலலிதா காலத்தில் விலையில் மேற்படி மாற்றம் செய்யப்பட்டது.இது ஒருபுறம் எனில் சமூகத்தில் பொது புகாருக்கு உள்ளாக்கப்படும் பல விஷயங்கள் தேவைகளின் அடிப்படையில் வாழ்பவை .  ஊழலால் மக்கள் பாதிக்கப்படுகிறார்களா என்றால் உண்மைதான் பாதிக்கப்படுகிறார்கள் .ஆனால் அதனைக் காட்டிலும் அதிகமான அளவிற்கு பாதுகாக்கவும் படுகிறார்கள்.அதனால்தான் ஊழலின் இருப்பு சாத்தியமாகிறது.ஊழல் உள்ள அரசாங்கத்தைக் காட்டிலும் ஊழலற்ற அரசு கொடூரமானது என்கிறார் சாம்ஸ்கி.இதே எண்ணம் அமர்த்திய சென் போன்றோருக்கும் ஏகதேசம் இருக்கிறது.

இங்கே நீங்கள் ஒரு குற்றச்சாட்டை ஒருவர் மீது முன்வைக்கும் போது அது அவருக்குப் பொருந்துகிற வண்ணம் சொல்ல வேண்டும் ."இப்போதைய அ.தி.மு.க அரசு பா.ஜ. கவின் எடுபிடி அரசு என்று "ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தால் இருநூறு சாதமானம் அது பொருந்துகிற குற்றச்சாட்டு .அதனைச் சொல்லும் திராணி கமல் ஹாசனுக்கு ஒருபோதும் வராது.இது போன்ற கிளிப்பிள்ளை புகார்களை வேண்டுமாயின் அவர் வாழ்நாள் முழுதும் தெரிவித்துக் கொண்டே இருக்கலாம்.அதனால்தான் அவருக்கு அரசியல் தெரியவில்லை என்கிறேன்.

பொருந்தா புகார்களை தெரிவிப்பது என்பது நமது மக்கள் மத்தியில் குற்றத்தைக் காட்டிலும் அதிக வெறுப்பிற்கு உரியது.இதனை எவ்வாறு ?
என்று கமல் புரிந்து கொள்ள வேண்டுமெனில் , அவர் மீண்டும் குழந்தை பருவத்திலிருந்தே தவழ்ந்துதான் வந்தாக வேண்டும் பாவம் .

குண்டர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்வதே கூட தவறு எஜமானர்களே

குண்டர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்வதே கூட தவறு எஜமானர்களேவளர்மதி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டிருப்பது தொடர்பாக மூன்று நாள்களாக எழுத நினைத்து இயலாத மனநிலை .இது முற்றிலும் தவறானது என்பதை இங்கே புரியச் செய்வதில் ஒருவிதமான கடுமை சூழ்ந்திருப்பது தெரிகிறது.நமது கூட்டான மனநிலைகள் அசாதாரணமாக மாறிவருவதாக தொடர்ந்து உணர்ந்து வருகிறேன்.வளர்மதியின் அரசியல் பின்னணி காரணமாகவோ அல்லது அவருடையது போன்ற அதிருப்தி அரசியலின் உள்நோக்கங்கள் புரியாமலோ இதனை நான் சொல்லவில்லை.வழக்கமாக குண்டர்கள் மீது இவ்வழக்கைப் போடுவதே கூட சட்டத்திற்குப் புறம்பான செயல்.அந்த சட்டம் முறைப்படியான சட்டம் அல்ல.மனித உரிமைகளின் மாண்பைக் குலைக்கிற ,மனித உரிமைகளில் அளவிற்கு அதிகமாக அத்துமீறுகிற ஒரு சட்டம். அப்படியிருக்கும் போது இதுபோல மாணவர்கள்,அரசியல் இயக்கங்களில் உள்ளவர்கள் எதிரிகள் எல்லோர் மீதும் இதனை பிரயோகப்படுத்தலாம் என அரசு நினைப்பது மிகவும் ஆபாசமானது.முதலமைச்சர் இந்த வழக்கு பற்றி பேசிய விதம் மிகவும் அருவருப்பானது.அரசாங்கம் ஒருவிதமான காண்டாமிருகத் தன்மையை அடைந்து வருவதையே இச்செயல்கள் உணர்த்துகின்றன.இதனை கூட்டு மனங்களுக்கு புரியச் செய்வதில் ஏற்படுகிற இடர்பாடுகள் அவையும் காண்டாமிருகத்துடன் இணைந்திருப்பதையே சுட்டிக் காட்டுகின்றன .

காண்டாமிருகம் நாடகம் படித்தவர்களுக்கு தெரிந்திருக்கும் .அது ஒரு ஜெர்மன் நாடகம்.க்ரியா வெளியிட்டிருக்கும் முக்கியமான மொழிபெயர்ப்பு நாடகங்களில் ஒன்று அது.அந்த நாடகத்தில் இங்கே எல்லோரும் காண்டாமிருகமாக மாறிக் கொண்டிருக்கிறார்கள் என்று ஒருவன் கத்திக் கொண்டே ஓடுவான்.அவன் அப்படியோடிக் கொண்டிருக்கும் போதே அவனுடைய கரங்கள் காண்டாமிருகமாக மாறிக் கொண்டிருப்பதனையும் அவன் பார்ப்பான்.இதுவொரு குறியீடுதான்.ஆனால் சர்வாதிகாரத்தை நோக்கி அரசு வேகமாக நகருவதை உணர்த்துகிற குறியீடு அது.திருமுருகன் காந்தி ,வளர்மதி போன்றோரின் அரசியல் பின்னணிகள் பேரில் எனக்கு கிஞ்சித்தும் மதிப்பில்லை. ஆனால் இவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து ஒடுக்குவது என்பது மகா கேவலமான வழிமுறை.அதிலும் முதலமைச்சர் போராட்டங்களை தூண்டினால் இதுபோல செய்யத்தான் செய்வோம் என சூழுரைப்பது சட்டம் அறியாத ஆபாசமான நிலை.ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது.ஊர் நாட்டாமை முழக்கம். மோதல் கொலைகளை ஒரு முதலமைச்சர் நியாயம் செய்து பேசுவதற்கு ஒப்பானது , இது போன்ற குண்டர் தடுப்பு கைதுகளை நியாயம் செய்வது.போராட்டங்களை சட்டவிரோதமாக ஒடுக்கி வெற்றியை நிலைநாட்டுவதல்ல அரசாங்கத்தின் வேலை.

போலீசார் கூட்டமெனில் அரசியல் பேசுவீர்களா ? மோடிக்கு எதிராகப் பேசுவார்களா ? என்றெல்லாம் இப்போது கேள்விகள் எழுப்புகிறார்கள்.நாங்கள் என்ன பேச வேண்டும் ? எதனைப் பேசக் கூடாது என்பதை முடிவு செய்யும் வேலையை இப்போது புதிதாக போலீசாரிடம் பணித்திருக்கிறோமா என்ன ? இங்கே என்ன நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பது சரியாக விளங்கவில்லை.ஆனால் ஏதோ தொடர்ந்து தவறாக நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது என்பது மட்டும் உறைக்கிறது. நடைபெறுகிற இத்தகைய அரச செயல்கள் மிகவும் ஆபத்தானவை. மனித உரிமைகளுக்கு குந்தகம் விளைவிப்பவை.

தமிழ் ,மலையாள கவிஞர்கள் சந்திப்பு

தமிழ் ,மலையாள கவிஞர்கள் சந்திப்பு

இடம் :
லெனின் பாலவாடி,வழுதக்காடு, திருவனந்தபுரம்-14
16.07. 2017 ஞாயிறு காலை 9.30

தமிழ்,மலையாள கவிஞர்கள் சந்திப்பு முதற்கட்டமாக நாளை திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ளது.தமிழில் இருந்து ஆறு கவிஞர்களும் , மலையாளத்தில் இருந்து ஒன்பது கவிஞர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்கிறார்கள்.மூன்று மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் இதன் அடுத்த கட்ட சந்திப்பு நடைபெறும்.

வெறும் ஸம்ப்ரதாயமானதொரு நிகழ்வாக அல்லாமல்,தமிழ் கவிதைகளை மலையாள மொழியிலும் ,மலையாள கவிதைகளை தமிழுக்கும் இந்த சந்திப்புகள் கொண்டு செலுத்தும்.இரண்டு மொழிகளின் இந்த பரிவர்த்தனை இரண்டு மொழிகளின் வளத்திற்கும் புதிய ஊட்டம் சேர்க்கும்.மலையாள கவிஞர்கள் இதில் பெரிய ஆர்வம் கொண்டிருக்கிறார்கள்.நாமும் நமதார்வம் கொள்வோம்.

இந்த சந்திப்பின் கவிதைகளும் இரண்டு மொழிகளிலும் மொழிபெயர்ப்பாக உள்ளன.ஓராண்டு காலத்திற்குள் தமிழின் இயங்கிக் கொண்டிருக்கும்  எந்த கவிஞனும் விடுபட்டு விடாத வண்ணம் இந்த சந்திப்புகளில் இடம்பெறச் செய்து விட வேண்டும் என்கிற முனைப்பு எனக்கு உண்டு.அதுபோலவே இதுவரையிலான தமிழ்,மலையாள பரிவர்த்தனை நிகழ்வுகளில் இருந்த குழு மனப்பான்மையைக் கொண்டிருக்கக் கூடாது என்பதில் இரு மொழி தரப்பினருக்கும் இப்போது அதிகமான கவனத்துடன் இருக்கிறோம்.

கவிதை பற்றிய உரையாடல்கள்,மொழிபெயர்ப்பு முயற்சிகள் என்பதாக இந்த சந்திப்புகள் அமையும்.

நாளைய நிகழ்வில் பங்குபெறுகிற கவிஞர்கள்

தமிழ் கவிஞர்கள்
________________
லக்ஷ்மி மணிவண்ணன்
ஜி.எஸ்.தயாளன்
நட.சிவகுமார்
சுதந்திரவல்லி
ரோஸ் ஆன்றா
ராஜன் ஆத்தியப்பன்


மலையாள கவிஞர்கள்
______________________
ஸ்ரீதேவி எஸ்.கர்த்தா
விஜிலா
களத்தர கோபன்
ஏசுதாஸ் டி
அனில்குமார் டி
பி.ஒய் .பாலன்
வி.எஸ்.ராஜிவ்
ஜார்ஜ்
சந்திரமோகன்.எஸ்

நிகழ்ச்சி ஏற்பாடு - Triva Contemporary

தமிழ்நாட்டு மாணவர்கள் பேரில் நீதிமன்றம் போர் தொடுக்கிறது


  • தமிழ்நாட்டு மாணவர்கள் பேரில் நீதிமன்றம் போர் தொடுக்கிறது
NEET -
தமிழ்நாட்டு மாணவர்கள் பேரில் நீதிமன்றம் போர் தொடுக்கிறது
இப்போதைய கெடுபிடிகள் கல்வியில் நீடித்தால்; இப்போது நடைபெற்று வருகிற காரியங்களின் எதிர்விளைவு அறியப்படுவதற்கு இன்னும் ஐந்தாறு வருடங்கள் ஆகும் . தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் வெளி மாநில மாணவர்கள் ஆக்ரமித்து இங்குள்ள மாணவர்கள் விறுதே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் அப்போதுதான் இப்போதைய கெடுபிடிகள் என்ன ,வேதனை என்ன ? என்பது விளங்கும்.குஜராத் போன்ற மாநிலங்களில் ஆறோ,ஏழோ மருத்துவக் கல்லூரிகளே உள்ளன.மொத்தமாகப் பார்த்தால் 600 இடங்கள் வரும்.ஆனால் தமிழ் நாட்டின் நிலை அதுவல்ல.சுமார் 4000 இடங்களை இழக்கும்.
அகில இந்திய தேர்வுகள் என்பவை எளிமையாகச் சொன்னால் பணக்காரர்களுக்குரியவை.ஆறேழு ஆண்டுகள் பத்து லட்சத்திற்கும் அதிகமான பணம் செலவழித்து பயிற்சி மையங்களில் எட்டாம் வகுப்பு நிலையில் இருந்தே பயிற்சியை தொடங்குபவர்களுக்குரியது.அவை அனைத்துமே நகரங்கள்,பெரு நகரங்கள் சார்ந்த பயிற்சி மையங்கள்.நேரடியாக பயிற்சி மையங்களின் துணையின்றி இந்த தேர்வுகளில் பங்கேற்கிற திறன் வாய்ந்த மாணவர்களால் அகில இந்திய தேர்வுகளில் எழுபது சதமானம் தொடங்கி எண்பது சதமானம் வரையிலே மதிப்பெண்கள் பெற முடியும்.உண்மையில் இந்த மாணவர்களே திறன் வாய்ந்தவர்கள்.ஆனால் இந்த தேர்வுகளின் வழியே இவர்கள் நிராகரிக்கப்பட்டு விடுவார்கள்.பதிலாக பயிற்சி மையங்களில் பணம் செலவு செய்கிற மாணவர்களுக்கு அனைத்து கதவுகளும் திறக்கப்பட்டிருக்கும்.அவர்கள் இந்த வழியிலும் செல்லலாம் இல்லையெனில் அவர்களுக்கு தனியார் கல்லூரிகளிலும் இடம் திறந்தே இருக்கும்.இத்தகைய தேர்வுகள் மூலம் அரசாங்கம் திறன் வாய்ந்த ஏழை மாணவர்களை நிராகரிக்கும்.இது முழுக்க முழுக்க வர்க்கம் சம்பந்தப்பட்ட பிரச்சனை.ஏழை மாணவர்களை எங்கும் அண்ட விடக்கூடாது என்பதன் சூழ்ச்சிகளே இந்த தேர்வுகள்.இந்த தேர்வுகளின் பலன் தெரிந்தோருக்கு இதனை விளங்குவதில் சிரமம் இருக்காது.
உதாரணமாக ஜிப்மர் அகில இந்திய தேர்வை எடுத்துக் கொள்ளுங்கள்.99 சதமானம் அதற்கும் மேல் மதிப்பெண் பெற்றுத் தேறுகிறவர்களே 3000 த்துக்கும் அதிகமாக வருகிறார்கள். இவர்கள் அனைவருமே பயிற்சி மையங்களில் இருந்து வருகிறவர்கள்.ஜிப்மரில் உள்ள இடங்கள் மொத்தம் 200 .இந்த மூவாயிரத்தில் பிறப்படுத்தப்பட்ட ,மிகவும் பிற்படுத்தப்பட்ட ,தலித் மாணவர்களும் அடக்கம்.நேரடியாக இந்த தேர்வுகளில் கலந்து கொள்கிற திறன் வாய்ந்த மாணவர்களால் இங்கும் எழுபது சதமானத்திலிருந்து, எண்பது சதமானம் வரையில் மட்டுமே மதிப்பெண் பெறமுடியும்.அப்படியானால் இந்த தேர்வுகள் அப்பட்டமாக ஏழை மாணவர்களுக்கு எதிரானவை என்பது விளங்குகிறதா ? ஏழைகளை வடிகட்டி விடுவதுதான் அரசாங்கத்தின் தற்போதைய நோக்கம்.இது மீண்டும் நம்மை பழைய கால முறைகளை நோக்கி நகர்த்த துடிப்பவை.
இத்தகைய தேர்வுச் சூழல்கள் ஏற்படாதவரையில் ஒரு கிராமத்தில் இருக்கும் ஏழை மாணவனுக்கும் உயர் தொழிநுட்ப படிப்புகளிலும்,மருத்துவம் போன்ற படிப்புகளிலும் பயின்று சமநிலை நோக்கி முன்னேறி விட முடியும் வாய்ப்பு இருந்தது.அந்த வாய்ப்பை பலவந்தமாக அவனிடமிருந்து பறிப்பதற்கு இப்போதைய அராசாங்கங்கள் முயல்கின்றன.இந்த சதி இன்னும் பலருக்கும் விளங்கவில்லை .பல உயர் படிப்புகள் ஏழை மாணவர்கள் எட்டித் தொடவே முடியாத விலைகளில் தனியார் நிறுவனங்களின் வசம் நேரடியாக மத்திய அரசாங்கத்தால் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன.இதற்கு தகுதி என்ற மேலங்கி போட்டு மறைத்து விட முடியும் என்று அரசாங்கம் உறுதியாக நம்புகிறது .அதற்கு நீதி மன்றங்கள் உதவி செய்கின்றன.இனி வருங்காலங்களில் ஒரு மாணவன் எந்த கிராமத்தில் எந்த இடத்தில் படிக்கிறான் என்பதை வைத்து அவன் தலைவிதி எப்படியிருக்கும் ? என்பதை என்னைப் போன்ற ஒரு சாதாரணனால் கூட சொல்லிவிட முடியும் என்கிற நிலை நோக்கி நாம் முன்னகர்ந்து கொண்டிருக்கிறோம்.
ஏறக்குறைய ஐம்பதினாயிரம் மாணவர்கள் தமிழ்நாடு அரசின் அறிவிப்பை நம்பி மருத்துவப் படிப்பிற்கு 85 % சதமானம் உள் ஒதுக்கீட்டின் அடிப்படையில் சேர முடியும் என்கிற ஆசையில் விண்ணப்பித்திருக்கிறார்கள்.ஆனால் இந்த மாணவர்கள் அத்தனை பேரின் தார்மீக நியாங்களுக்கும் செவி சாய்க்காது ,உரிமைகள் பற்றிய கவலை இன்றி ஒரு சி.பி.எஸ்.ஈ மாணவனின் மனுவின் அடிப்படையில் நீதிமன்றத்தால் மாநில அரசாங்கத்தின் அரசாணையை தடை செய்து உத்தரவு பிறப்பிக்க முடிகிறதென்றால் நீதிபதிகள் ,நீதி மன்றங்கள் தற்போது அடைந்து வருகிற மேட்டிமை மனோபாவத்தைப் புரிந்து கொள்ளுங்கள்.மாநில அரசாங்கம் இந்த விஷயத்தில் மாநில பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களின் தரப்பு என்கிற நினைவே நீதி மன்றத்திற்கு துளியும் இல்லை
கல்வியை மாநிலங்களின் கையில் இருந்து மத்திய அரசாங்கம் பிடுங்குவதே இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரான செயல்.அவர்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் இவர்கள் ஒழுகி வருகிறார்கள் என்கிற பிரச்சனை அல்ல.இது.யார் ஒழுகி வந்தாலும்,பழகி வந்தாலும் கல்வியை ,உரிமைகளை வீட்டுக் கொடுக்க வேண்டிய அவசியங்கள் கிடையாது.மத்திய தீவிரவாத தடுப்பு மையத்தை ஜெயலலிதா போன்ற ஒரு சிலர்தான் எதிர்த்தார்கள் .எல்லோரும் ஏற்றுக் கொண்டுவிட்டால் விஷத்தை அப்படியே தின்று விடுவீர்களா என்னா ? கல்வியை முழுவதுமாக மாநில அரசாங்கங்கள் தங்கள் பிடிக்குள் கொண்டுவர வேண்டும்.இந்தியை எதிர்ப்பதெல்லாம் சுலபம்.இவற்றை சாதிப்பதுதான் கடினம்.தமிழ் நாட்டின் சட்ட வல்லுநர்கள் மீண்டும் ஒரு புரட்சி போல முன்னின்று இந்த உரிமைகளை மீட்காவிட்டால் மிகவும் பின்னகர்ந்து போவோம் என்பதில் சந்தேகமே வேண்டாம்.
ஏழைகளின் கரத்தில் இருந்து கல்வி பறிக்கப்படுகிறது.அதற்கு எதிரான போர் ஏழைகளிடமிருந்து தொடங்கபடுதல் காலத்தின் முன் நிற்கும் தேவை.அனைத்தையும் மத்தியில் கொண்டு போய் குவிப்பதற்கு இங்கே தேவையில்லாமல் ஒரு மாநில அரசாங்கம் எதற்கு ?

வினைப்பதிவுதான் அந்த நறுமணம் குன்றா மாலை

வினைப்பதிவுதான் அந்த நறுமணம் குன்றா மாலை

நானொன்றும் புதிதாகச் சொல்வதில்லை

வினையை ஒரு கட்டத்தில் நிறுத்தக் கற்றுக் கொள்ளவேண்டும்.இது மிகவும் எளிமையானது.எல்லா வினைகளும் பதிவாகும்.பதிவு ; நாம் கூறுகிற நியாயங்களைக் காரணங்களை பொருட்படுத்துவதில்லை.அது உள்ளது உள்ளவாறு பதிவாகும்.இப்படித்தான் பதிவாக வேண்டும் என்று நாம் அதன் மீது எந்த செல்வாக்கையும் பயன்படுத்தவே முடியாது.அறிவின் செல்வாக்கையோ,அறத்தின் செல்வாக்கையோ ,செய்த பேருபகாரங்களின் செல்வாக்கையோ,திருப்பணிகளின் செல்வாக்கையோ,அருங்கொடைகளின் செல்வாக்கையோ  எதையுமே அதன் மீது செலுத்த முடியாது.இவற்றின் மூலம் கொஞ்சம் அதன் ஆங்காரம் தணிக்கலாம் அவ்வளவுதான்.வினையை நிறுத்திக் கொள்வோமெனில் அதன் வேகம் தணிந்து பதிவுகள் செல்வாக்கை இழக்கும்.அது புதுத்தன்மை  பெறும்.

வினையை நிறுத்திக்  கொள்ளுதல் என்பதற்கு செயல்பாட்டை நிறுத்திக் கொள்ளுதல் என்று பொருள் கிடையாது.தேவையற்ற வினைகளின் ஓட்டத்தைக் காரியங்களில் இருந்து பொறுப்பை விலக்கிக் கொள்ளுதல் அது.அதன் மூலம் தேவையான காரியங்களின் செயல் ஓர்மைக்குள் வரும்.தேவையான செயல்கள் துரிதமாகும்.

நாம் பொதுவாகவே தேவையற்ற அனைத்திற்கும் பொறுப்பேற்று எதிர்வினை செய்து கொண்டேயிருப்பவர்கள்.தன் முனைப்பும் ,அங்காரமும் தணியும் போது இந்த குணங்கள் அடங்கும். நான்  பெருவாரியான எனது காலங்களை  தேவையற்ற காரியங்களுக்கு பொறுப்பேற்றுக் கொள்வதிலேயே விரயம் செய்தவன்.தெருவில் இருவர் கட்டிப் பிடித்து உருண்டு கொண்டிருந்தால்  நின்று விடுவேன்.நமக்கு இதில் ஏதேனும் பொறுப்பு உண்டா ? என்று கேட்டுக் கொள்வதே இல்லை.பொறுப்பு உண்டா இல்லையா  என்பதை எப்படியறிவது ? நடக்கும் காரியத்தை மேம்படுத்துவதற்கு அந்த சந்தர்ப்பத்தில் நம்மிடம் ஒரு காரியம் கைவசம் இருக்கிறது என்றால் நிச்சயமாக கடந்து செல்லக் கூடாது.அப்படியில்லையெனில் அங்கே நிற்கவே கூடாது.விஷயம் இவ்வளவுதான்.நாம் நிற்பதன் மூலம் நடக்கும் காரியம் மேலும் சுருள்வதற்கே வாய்ப்பிருக்கிறது என்றால் திரும்பியே பார்க்கக் கூடாது,போய்விட வேண்டும்.ஒரு விபத்து .நீங்கள் நின்றால் நிச்சயம் பலனுண்டு என்றால் கடந்து சென்றால் பாவம்.அதே சமயம் அங்கே ஏற்கனவே இருக்கிறவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்னும் நிலை இருக்கும் போது சென்று மூக்கை நுழைக்கக் கூடாது.எல்லா விஷயங்களிலும் போய்   சிக்கிக் கொள்வதென்பது நமது அகங்காரத்தால் விளைவது.நேடிக் கொள்வது.எந்தெந்த செயல்களில் நமது மனநிறைவும் மகிழ்ச்சியும் அதிகமாகிறதோ அவையே  உரிய செயல்கள்.மன நிறைவு தருகிற மகிழ்ச்சியே மகிழ்ச்சி.

இந்த உரிய செயல்கள் ஒருவருக்கு ஒருவர் மாறுபடும்.ஏனெனில் மன நிறைவுக்கு பல்வேறு மாறுவேடங்கள் உண்டு.ஒருவரிடம் இருப்பது போல  மற்றொருவரிடம் இருக்காது.ஒருவருக்கு காய்கறி நறுக்கினாலே மன நிறைவு ஏற்பட்டு விடும்.மற்றொருவருக்கோ கடலில்  இறங்கி முதலைகளுடன் சண்டையிட  வேண்டியிருக்கும் .மன நிறைவு என்பது  அகத்தில் ஏற்கனவே ஏற்பட்டிருக்கும் பள்ளங்களை பொறுத்த விஷயம். எனவே எந்த நீதி போதனைகளுக்கும் இவ்விஷயத்தில் இடமில்லை.மாதிரிகள்  இல்லை.இதனைச் செய்தால் எல்லோரும் மன நிறைவோடு இருப்பார்கள் என்று சொல்லத் தகுந்த காரியங்கள் எதுவுமே இன்னும் கண்டுபிடிக்கப் படவில்லை.ஒருவர் செய்ய விரும்பாத  காரியத்தை மற்றொருவர் செய்வதால்  அவருக்கு மன நிறைவு உண்டாகலாம்.எனவேதான்  பகவான் குற்றங்களை பார்ப்பதில்லை,குணத்தை மட்டுமே பார்க்கிறான் என்றோரு வாக்கியம் கீதையில் வருகிறது.இந்த வாக்கியம் நான் சொல்லி வருகிற செய்தியோடு முரண்படுவது போல தோன்றலாம் .நீங்கள் உங்களுக்கு மன நிறைவு தருகிற விஷயங்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால் இதில் முரண்பாடு இல்லை என்பது விளங்கி விடும்.ஒரு கணத்தில் கொலை செய்த்து விட்டு வாழ்க்கை முழுவதும் திருங்கத் திருங்க விழித்துக் கொண்டிருப்பவர்கள் இருப்பார்கள்.உண்மையில் யோசித்துப் பார்த்தால் அது அவன் வேலையில்லை,ஆனால் எப்படியோ நடந்து முடிந்திருக்கிறது.

வஞ்சமும் ,பழியுணர்ச்சியும் இருக்கும் வரையில் செல்வம் தங்குவதில்லை.அனைத்தும் தீரட்டும் என்று அது காத்துக் கிடக்கும்.அனைத்தையும் அடித்துக் கொண்டுபோய் நிறுத்தும் .

கடவுள் நின்று நடத்திய சில கொலை வழக்குகள் உண்டு.அது போல கடவுள் முன்னின்று உடனடியாக காட்டிக் கொடுக்கும் கொலை வழக்குகளும் உண்டு.பக்கத்து சுடலைக்கு மாலை அணிவித்து விட்டு அந்த மாலையை எடுத்து பிணத்தின் மேல் வீசி எரிக்கும் பழக்கம் கொண்ட  குழு.ஒரு வெளியூரிலிருந்து வந்த அப்பாவியைக் கொன்று உறுப்பறுத்து எரித்து விட்டார்கள்.காலையில் வந்து பார்த்தால் காவ்லத் துறையினரின் கண் முன்னால் அந்த மாலை நறுமணத்துடன் எரிபடாமல் புத்தம் புதிதாக கிடந்தது.அந்த கொலை வழக்கின் தடயமே அந்த வாடாத மாலைதான்.ஒரு நாளில் குற்றவாளியைத் தூக்கி விட்டார்கள்.

வினைப்பதிவுதான் அந்த நறுமணம் குன்றா மாலை.அது வாடுவதே இல்லை.

நானொன்றும் புதிதாகச் சொல்வதில்லை

காலம் முழுக்க மோதல் கொலைகள் செய்து புகழ் பெற்ற நேர்மையான அதிகாரியொருவர்,செய்யாத சாதாரணமான பெற்றிக் கொலை வழக்கில் மீள முடியாமல் ஓய்விற்கும் முந்தைய தினத்தில் பணியில் இருந்து விலக்கப்பட்டார்.வழக்கில் கொலையுண்டவனின் மனைவி சொன்ன சாட்சி மிக கடுமையானதாக இருந்தது. அந்த சாட்சியை யாராலும் விலைக்கு வாங்கவோ ,வளைக்கவோ இயலவில்லை.ராமச்சந்திரன் நாயரின் "நான் என் வாழ்ந்தேன் என்பதற்கான சாட்சி "என்ற நூலைப் பற்றி ,நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ? என்று நான் அவரிடம் ஒருமுறைக் கேட்டபோது ,சிரித்துக் கொண்டே ராமச்சந்திரன் நாயர் ஒரு கோழை என்று பதில் சொன்னவர் அவர்.

உடலின் பாதி நோய்கள் மனம்தான் .மீதி வயோதிகம்

உடலின் பாதி நோய்கள் மனம்தான் .மீதி வயோதிகம்

எனது உடலின் பாதி நோய்கள் மனம்தான் என்பதை மிகப்பெரிய தாமதத்திற்குப் பிறகுதான் கண்டு கொண்டேன்.சிறு வயது தொடங்கி ஏதேனும் மாத்திரைகளைத் தின்று கொண்டிருக்க வேண்டும்.இல்லையெனில் எல்லாம் சரியாக இருக்காது என்றோர் எண்ணம்.இந்த பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாகப் பெருகி ஒருவேளைக்கு 100  கிராம் அளவிற்கு மிச்சர் தின்பதை போல மாத்திரைகள் பெருகி விட்டன.

தூக்கப் பிரச்சனை எனக்கு இருபதாண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்டது.அதுவரையில் அளவற்ற தூக்கம்.தூக்கப் பிரச்னையை இதுகாலம் வரையில் மாத்திரைகளைக் கொண்டே இழுத்து வந்தேன்.கழிந்த  ரமலான் தினத்தன்று எனக்கு முக்கியமாக தேவைப்படக் கூடிய தூக்க மாத்திரை கிடைக்கவில்லை.அது வழக்கமாக நான் மருந்துகள் வாங்கிற இஸ்லாமியரின் கடையில் மட்டுமே கிடைக்கும்.நகரம் முழுக்க தேடியலைந்தும் வேறு எங்குமே கிடைக்கவில்லை.தூக்கம் ஒருநாள் கெட்டால் சரியாக உணவு உண்ண முடியாது,இரண்டு நாட்கள் கெட்டால் வலிப்பு உண்டாகி விடும் என்பதே மனப்பதிவு.அப்படித்தான் நடக்கவும் செய்யும்."அப்பாவை புனிதப்படுத்துதல் "கவிதை நூலை வாசித்தவர்களுக்குத் தெரிந்திருக்கும்.பலர் அப்பாவை தாமதமாக கொலை செய்யத் தொடங்கியிருந்த காலத்தில் அப்பாவை புனிதப்படுத்த தொடங்கிய கவிதைத் தொகுப்பு அது. அந்த நூலை ஏராளமான தூக்க குளிகைகளுக்குத் தான் சமர்ப்பணம் செய்திருப்பேன்.

ரமலான் அன்று வழியின்றி தூக்க மாத்திரையின்றி இருபதாண்டுகளுக்குப் பின்னர்  படுத்தேன்.ஆனால் என்ன விஷயம் ! நன்றாகத் தூங்கி விட்டேன் .காலையில் விழிக்கும் போது தாங்கவே முடியாத ஆச்சரியம்.மறுநாளிலிருந்து மாத்திரைகளை நான் தேடவில்லை.எல்லாம் சரியாகாது தான் போய் கொண்டிருக்கிறது.நமது மனபதிவுகள் எல்லாவற்றையும் , எல்லா மாயைகளையும் உண்மை என்றே நம்பும் இடத்திற்கு கொண்டு வந்து விடுகின்றன.

மிகவும் முக்கியமான மருந்துகளை நீங்கள் எடுக்கத் தொடங்கிய பின்னர் படிப்படியாக அதன் அளவை குறைத்து வந்தாலும் கூட ; ஒரு குறிப்பிட்ட படிக்கும் கீழே குறைக்க முடியாது என்கிற விதமாகவே பெரும்பாலான ஆங்கில மருந்துகளின் மில்லி கிராம் அமைக்கபட்டிருக்கும் .தேவைப்படாத போதும் கூட பழக்கத்தை நீங்கள் அந்த மில்லி கிராமிற்கு கீழே இறக்கவே முடியாது.ஆனால் அந்த சந்தர்ப்பத்திற்கு கீழே விழுந்து தப்பிப்பதை ஒரு இலக்காக வைத்துக் கொள்வதே நல்லது.

எனக்குத் தெரிந்த ஆயுர்வேத மருத்துவர் ஒருவர் நிபுணர்.தெரிசனங்கோப்பு மகாதேவ ஐயர்.பதினொன்றாம் வகுப்பு படிக்கும் போது அப்பா என்னை அவரிடம் அழைத்துச் சென்றார்.தொடர்ந்து தீராத தலைவலியில் ஆங்கில மருந்துகள் பலனளிக்காதது மட்டுமல்ல,எதிர்விளைவுகளை என்னிடம் தொடங்கியிருந்த காலம் அது.இப்போது இருப்பவரின் தகப்பனார்தான் அப்போது வைத்தியர்.மூன்று மாதங்களில் எனக்கு குணமாயிற்று .அதன் பின்னர் இதுவரையில் எனக்கு அந்த இடர்பாடு   ஏற்பட்டதே இல்லை.மகாதேவ ஐயரிடம் ஒரு விஷேசம் என்னவெனில் மனதிற்கும் நோய்க்கும் இடைப்பட்ட தொடர்பை ஆச்சரியப்படும் விதத்தில் சொல்லிக் கொண்டே போவார்.சமீபத்தில் ஒரு நண்பரை அழைத்துச் சென்றிருந்தேன். மனைவியோடு முரண்பாடு ,வயிற்றில் ஜீரணக் கோளாறு ,நரம்பியல் உஷ்ணம் என்று சொல்லிக் கொண்டே போனார்.அதனைத் தொடர்ந்து என்னென்ன மருந்துகள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்கிற குறிப்புகள் வாய்ப்பாடமாக   அவரிடமிருந்து வந்து கொண்டே இருக்கும்.

முரண்பாட்டைப்  போக்க வழியில்லையெனில் மருந்தை உணவாக்கிக் கொள்ள வேண்டியதுதான்.வேறு என்ன செய்ய முடியும் ?

அப்பச்சி காமராஜர் ...

அப்பச்சி காமராஜர் ... காமராஜ் பற்றி "நீயா நானா " விஜய் டிவி ஷோவில் பேசுவதற்காக ஆன்டனி ஒரு வாரம் முன்னதாக அழைத்தார்.நான் வர...