அரசுப்பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகள் அரசுப்பள்ளியில் பயிலவேண்டும்

அரசுப்பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகள் அரசுப்பள்ளியில் பயிலவேண்டும்


இல்லையெனில் தமிழ் நாட்டில் அரசுப்பள்ளிகளை காப்பாற்றவே இயலாது. உங்கள் மதிப்பீடுகள் ,ஆர்வம் ஒரு திக்கிலும் பணி மறு திக்கிலும் இருந்தால்  நீங்கள் பணியை பாரமாகத் தான் பார்ப்பீர்கள்.ஒரே மருத்துவரை நீங்கள் சென்று அரசு மருத்துவமனையிலும் அவருடைய தனியார் கிளினிக்கில் போய் பார்ப்பதற்கும் இடையில் பெருத்த வித்தியாசங்கள் உண்டு.ஒரே மருத்துவர்தான்.ஒரே நபர்தான்.இரண்டு இடங்களிலும் இரண்டுவிதமாக சுபாவத்தில் அவர் மாறுபடுகிறார்.நீங்கள் காலையில் அதே நபரை அரசு மருத்துவமனையில் போய் பார்த்து விட்டு மாலையிலேயே தனியார் மருத்துவமனையில் சென்று பாருங்கள் புரியும். பள்ளியாசிரியர்கள் மட்டும் என்றில்லை .அரசுப் பணிபுரிவோர் அரசு சார்ந்த துறைகளில் பள்ளி ,மருத்துவம்,போக்குவரத்து இப்படி பயன்படுத்த வேண்டும் என்கிற நிலை உருவாகவேண்டும் .இல்லையெனில் சீர்கேடுகளை நாள் தோறும் புலம்பலாமே ஒழிய எந்த முடிவையும் எட்ட முடியாது.

காலையில் தனது வாடகைப் பாடசாலையில்  ஐந்து முதல் எட்டு மணி வரையில் பாடம் நடத்துகிற ஒரு ஆசிரியர் பள்ளி வகுப்பை தூங்குவதற்கான இடமாத்தான் பயன்படுத்துவார் சந்தேகமே வேண்டாம்.இரண்டு சக்திகள் கொண்ட மனிதர்கள் என்று இங்கு யாரும் இல்லை.நான் ஒரு நபரிடம் கவிதை பற்றி ஒருமணிநேரம் பேசிவிட்டேன் எனில் அடுத்து வருகிற நபரிடம் அதே உற்சாகத்துடன் பேசுவது கடினம்.அதிக பணம் கிடைக்கும் இடமாக இருந்தால் ஒருவேளை இந்த சக்தி ஏற்படலாம்.ஒருவேளை அடுத்து வருபவர் பெண் காதலியாக இருந்தால் இந்த சக்தி மீண்டும் ஏற்படலாம்.நீ கலைக்டரோ ,மந்திரியோ யாராக வேண்டுமாயினும் இருந்து விட்டுப் போ.அரசு பள்ளியில் , அரசு மருந்தகத்தில்,அரசு பேருந்தில் உன் உபயோகம் இருக்க வேண்டும் என்றோரு ஆணை இருக்குமெனில் இவையெல்லாமே ஒரே நாளில் மீண்டும் நல்ல நிலைக்குத் திரும்பிவிடும் சந்தேகமே வேண்டாம்.அரசு சம்பளம் எனில் அரசு உபயோகம் என்றிருக்க வேண்டும்.

இரண்டு வருடங்களாக ஒரு அரசு பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவராக இருந்திருக்கிறேன் .துணைத் தலைவராக இருந்த காலங்களையும் சேர்த்து கணக்கிட்டால் ஐந்து வருடங்கள் .பெண் ஆசிரியர் ஒருவர் பொதுக் கூட்டம் ஒன்றிலேயே "நாங்கள் விபச்சாரியின் குழந்தைகளுக்கும்,குடிகாரர்களின் குழந்தைகளுக்கும் பாடம் நடத்தி கடினப் படுகிறோம் தெரியுமா ?" என்று கேட்டார்.அவர் அவ்வாறு கேட்டது கூட ஆச்சரியமில்லை.பல அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கும் தாங்கள் சம்பளம் வாங்குகிற சமூகத் தொண்டில் இருக்கிறோம் என்கிற எண்ணம்தான் பொதுவாகவே இருக்கிறது  .அந்த கூட்டத்தில் பங்கேற்ற பிற உயர் அதிகாரிகளுக்கும் கூட அந்த அம்மணி பேசியதன் அபத்தத்தை உணர இயலவில்லை.அந்த அம்மணியை   தனியாக அழைத்து இதையே பள்ளி வழக்கத்திற்கும் வெளியே வைத்து நீங்கள் சொல்லியிருப்பீர்களேயாயின் செருப்பால் அடி வாங்கியிருப்பீர்கள் என்று தாங்கொணா வருத்தத்துடன் சொல்லிவிட்டுத் திரும்பினேன்.

பல ஆசிரியர்கள் முழுமையான மடையர்கள்.பணிக்கு வந்ததிற்கு பிறகு அவர்கள் தகுதியை வளர்த்துக் கொள்வதே இல்லை.அதற்கான அவசியம் அவர்களுக்கு ஏற்படுவதில்லை.நான் என்னுடைய தகுதியைத் தொடர்ந்து வளர்த்துக் கொள்ள வில்லையானால் எனக்கு இழப்பு ஏற்படும் என்று கருதினால் மட்டும்தானே எனக்கு எனது தகுதியை தக்க வைத்துக் கொள்ளும் அவசியம்   உண்டாகும் ? அரசுப் பள்ளியாசிரியர்கள் தங்களின் தகுதிக் குறைபாட்டால் தங்களுக்கு சிறிய இடையூறைக்  கூட சந்திப்பதில்லை வாழ்க்கையில்.

ஒன்பதாம் வகுப்பில் பயிலும் மாணவி ஒருவரிடம் தவறாக நடக்க முயன்ற ஆசிரியரை இடம் மாற்றம் செய்யக் கோரி ஒருவருட காலம் அலைந்தோம்.முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு கொடுக்கும் மனுக்கள் அவர் பார்வைக்கே செல்லாது.காவல் நிலையங்களில் பழைய காவலர்கள் நிலையத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது போலத்தான் ,சங்க பிரதிநிதிகள் கல்வித் துறைகளில் நிரம்பி வழிகிறார்கள்.கடைசி வரையில் அந்த ஆசிரியரை எங்களால் இடமாற்றம் செய்ய இயலவில்லை.அவர் சங்கத்தின் ஆள்.அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால் அந்த அதிகாரி போகும் இடம் எங்கும் சங்கத்தின் ஆள் மீது நடவடிக்கை எடுத்த அதிகாரி அவர் என்கிற கறை  இருந்து கொண்டே இருக்கும் என்பதுதான் நடவடிக்கை எடுக்கப்படாமைக்கான காரணம்.ஒவ்வொன்றிலும் வெளியிலிருந்து பார்க்கும் போது அதன் வெண்மையும் உள்ளே சென்று பார்த்தால் சாக்கடையும் புலப்படும்.பதவியிலிருந்து என்னை விலக்கிக் கொண்டேன்.

சமீபத்தில் எங்கள் பகுதியைச் சேர்ந்த ஒரு அரசு பள்ளியை கடந்து செல்லும் போது கண்ணீர்  திரண்டது.அந்த பள்ளியொரு கனவு லோகமாக ஒரு காலத்தில் எனக்கிருந்த பள்ளி.என்.எஸ்.எஸ் முகாம்களில் அந்த பள்ளியில் தங்கி இருந்திருக்கிறேன்.உருத்தெரியாமல் இடிந்து சரிந்து கிடக்கிறது இப்போது.சிறிய வனம் வளாகம் முழுதும் படர்ந்து ,பக்கத்தில் உள்ள கல்லறைத் தோட்டத்தைப் போன்ற கதி நிலை.சென்று சிறிது நேரம் அமர்ந்திருந்தேன்.இத்தனைக்கும் அந்த பள்ளியிருக்கும் ஊரை எங்கள் பகுதியில் குட்டி ஜப்பான் என்றழைப்பார்கள்.அந்த இடிவு ஒரு வெளியுருவம் இல்லை.இன்று நமது அகம் இன்று இருக்கும் தோற்றம்.

டம்ளர் உரிமைகள் என்பது அரசியல் கபட நாடகம்

டம்ளர் உரிமைகள் என்பது அரசியல்  கபட நாடகம்

தமிழர்களை பன்னெடுங்காலமாக ஏமாற்ற பயன்படும் கபடநாடகம்.ஒரு அடையாளம் அரசியல் அதிகாரத்தைத் திரட்டுவதற்காக மட்டும் எப்போது   முன்வைக்கப்படுகிறதோ அப்போதிலிருந்து அது தனது கபட நாடகத்தின் முதற்காட்சியை தொடங்குகிறது.பூர்வீக அடையாளங்கள் அரசியல் ரீதியாக முன்வைக்கப்பட வேண்டியவை அல்ல.இன மேலாண்மைக் குரல்கள் எந்த அரசியல் பின்னணியிலிருந்து கிளம்பும் போதும் அவை இன மையவாதத்தை நோக்கி கீழிறங்கும் தன்மை கொண்டவை.தமிழன் கொண்டுள்ள தாழ்வுணர்ச்சியை அதிகப்படுத்தவே இது உதவும்.நிதர்சனமான பிரச்சனைகளில் இருந்து பின்னகர்த்திக் கொள்ள மட்டுமே இவை உதவும்.

தீவிர தமிழ் பற்றாளர்கள் என்று தங்களை முன்னிறுத்தும் பலரை சிறு வயது முதற்கொண்டு பார்த்து வருகிறேன்.அவர்களில் பலர் தமிழ் மொழி,பண்பாடு சம்பந்தமாக குறைந்தபட்ச  அறிவைக் கூட கொண்டிருந்ததில்லை.இப்படி தீவிர தமிழ் பற்றை ஜோடிப்பவர்களில் பலர் தமிழர்கள் அல்லாதவர்களாக இருப்பதையும் கவனித்திருக்கிறேன்.ஓங்கி இருந்த இனம் என்று தொடங்கி தன் சொந்த சொந்த சாதிக்குள் வந்து சரணடைவார்கள் பலர்.தங்கள் சொந்த சாதியினர் மட்டுமே தமிழர்கள் என்று அவர்கள் பேசத் தொடங்குவதற்கு முன்னர் இடத்தை காலி செய்துவிட்டு ஓடி விடுவதே நல்லது.

தீவிர தமிழ் தேசியர் ஒருவர் நான்கு பக்கங்களுக்கு தமிழ் பற்றை எனக்கு பாடம் சொன்ன பிறகு உங்கள் இயக்கத்தில் தமிழோடு தொடர்பு கொண்ட எத்தனைபேர் இருக்கிறீர்கள் என்று கேட்டேன்.தனது மகள் ராஜ் தொலைக்காட்சியில் பணிபுரிவதாகவும் "தமிலென்றால்" உயிரை விட்டுவிடுவாள் என்றும் சொன்னார்.எழுத்துப் பிழையுடன்தான் அதனை அவர் உச்சரித்தார்.மிகையாகச் சொல்லவில்லை. அவர் எனக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்த இடம் ஒரு பொது இடம் .என்னால் எங்குமே தப்பித்து ஓடமுடியாதிருந்த இக்கட்டான ஒரு இடம்.தமிழ் தேசியர்கள் பொதுவாகவே ஒரு தொல்குடி குரங்கின மனோபாவம் கொண்டவர்கள்.கண்டாலே தப்பித்து ஓடிவிட வேண்டும்.சிலர் உளறுவது கூட அழகாக இருப்பதுண்டு.இந்த தமிழ் தேசியக் குரங்குகள் அப்படியானவை அல்ல.தன் புண்ணை தானே சுரண்டித் தின்று சாகும் வரம் படைத்தவை.இப்போது புதிதாக கம்யூனிஸ்டுகள் பேசும் தமிழ் தேசியம் இருக்கிறதே, இது கபட நாடகம் மட்டுமல்ல.தமாஷ் நாடகத்தின் லெட்டர் சீன.கம்யூனிடுகளுக்கும் தமிழுக்கும் என்ன சம்பந்தம் "தோலர்களே" !.கூடங்குளம் விஷயத்தில் பெரும்பாலும் தமிழ் தேசியர்கள் முன்வந்து மனமுவந்து  கெடுத்தார்கள்.வந்து குவிந்த மலையாள மக்களை மேடையில்  தமிழ் தேசியம் பேசி விரட்டினார்கள்.

நாங்கள் ஒருமுறை ஆர்வக் கோளாறில் குற்றாலத்தில் மேலேறி மேலேறி மேலேறிச் சென்று விட்டோம்.ஏராளமான தமிழ் குரங்குகள் .எங்களில் சிலர் உணவு வைத்தால் அவை அகலாது, பின்னர் தாக்கத் தொடங்கி விடும் என்பதறியாமல் மிருக நலம் பேணி உணவுகளை தாரை வார்க்க ஐநூறுக்கும் மேற்பட்டைவை எங்களை சூழ்ந்து விட்டன. நாங்களும் தமிழ்தான் என்று நாங்கள் மன்றாடியதை அவை நம்பத் தயாராக இல்லை.போர் தொடுக்கத் தயாராகி  விட்டன.பின்னர் அங்கிருந்த உள்ளூர்வாசிகள்தான் எங்களைக் காப்பாற்றினார்கள்.

நீங்கள் மரபிலும் ,சொந்த மொழியிலும் ,பூர்வீகத்திலும் அக்கறையும் பற்றும் கொண்டவர்கள் எனில் ஒருபோதும் உள் நோக்கி சரியமாட்டீர்கள்.பிறரில் கலப்பீர்கள்.விரிவு படுவீர்கள்.தமிழ் நாட்டின் தமிழ் பற்று சாக்கடையில் கலந்த தேன்.அதிகார சாதி வெறி.தாழ்வுணர்ச்சியின் பெருங்கூச்சல்

உரிமைகளை பேசுவது தற்கொலை செய்து கொள்வதற்காக அல்ல. பற்று என்பது இணங்குவது,அறிவது,விரிவு படுத்துவது.விரிந்தகன்று செல்லுவது.தன் புண்ணை தான் சொரிந்து தான் இறப்பது அல்ல.

நிலமும் விண்ணும் கொள்ளும் முயக்கம் போலே

நிலமும் விண்ணும் கொள்ளும் முயக்கம் போலே

பல கைகள் கிளர்ந்து எழுகிற அம்மன் பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்துகிறவளாக இருக்கிறாள் .நிலமும் விண்ணும் கொள்ளும் முயக்கம்
போலே .அது சில நிமிடங்கள் மனதை விடுவதில்லை.கட்டியாகப் பிடித்துக் கொள்கிறது.சிதம்பரம் நடராஜர் போலே கிளந்தெழும் இத்தைகைய  அம்மன் வேறு ஒரு வகை .பிரபஞ்ச காஸ்மிக் நிலை உருவகங்கள்.  கவிதையில் அடைகிற கிளர்ச்சி போன்றதொரு கிளர்ச்சியை இத்தகைய அம்மன் உருவங்களும் ஏற்படுத்துகின்றன.

பல்வேறுவிதமான நிலைகளில் உள்ள அம்மன் உருவங்கள் எல்லாமே சிலாகிப்பிற்குரியவைதான்.ஆண்டாள் ஒரு காலை உயர்த்திய வண்ணம் திருவீதி வரும் போது,தாயே எனக்கு மொழியைத் தா ,அருளைத் தா..  என கேட்பது துறந்து,கை  மறந்து  பலசமயங்களில் சரணடையவே மனம் விருப்பு கொள்கிறது.மதுரை மீனாட்சியின் கால்களில் விழாமல் ஏதேனும்
பலனுண்டா ? மாஸான அம்மன் படுத்திருக்கும் வினோதம் என்ன சொல்கிறாள் இவள்  ! என்னும் திகைப்பு கொள்ளச் செய்வது .

கழிந்த முறை மதுரை செல்லும் போது கூடல் அழகர் பெருமாள் கோவிலுக்குச் சென்றோம்.விக்ரமாதித்யன் நம்பி,அதீதன் ,ரோஸ் ஆன்றா,ரிஷி நந்தன் ஆகியோர் உடனிருந்தார்கள்.அந்த கோவிலுக்குப் போகவேண்டும் பாடல் பெற்ற ஸ்தலம் என்பதை நம்பி தான் சொன்னார்.மதுரவல்லி தாயார் அமர்ந்திருக்கும் விதம் கண்டு அப்படியே நின்றுவிட்டேன்.அவ்வளவு கம்பீரமான இருப்பு.பிரமிப்பூட்டுகிற இருப்பு.நிலமாதேவியே அச்சொரூபம்.திரும்பி வர மனமில்லை.சொரூபத்தில் இப்படி இணைகிற அம்மன்கள் நிறைய தமிழகத்தில் உள்ளனர் .கால்கள் அகட்டி அமரும் இத்தகைய சொரூபங்கள் அகத்தை ஆழப் பற்றிக் கொள்ளக் கூடியவை.கலையில் மிகப் பெரிய தாக்கங்களை ஏற்படுத்தும் குழந்தைகளின் தாய்மார்கள் பேரழகிகளாக இருந்திருக்கிறார்கள் என்னும்படியாக விக்ரமாதித்யன் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருப்பார்.அது சரிதான் என்று மரகதவல்லி தாயாரின் இருப்பு நிலை காண்போர் அறிந்து கொள்ள முடியும்.லௌகீகத்திற்கு அப்பாற்பட்ட பேரழகின் இருப்பு பூண்டிருக்கும் பேரழகு அவர் குறிப்பிடுவது.ஏன் இவ்வளவு வினோத அழகில் இருக்கிறார்கள் என்பது போல .ஓவியர் சந்ரு மாஸ்டரின் தாயாரின் புகைப்படத்தை   அண்மையில் பார்த்தேன் .அவருடைய சக்தி எங்கிருந்து அனல் மூண்டு வருகிறது என்பதைக் காண்பது போல அது இருந்தது.

அம்மன்களைப் பற்றி , காணும் ஒவ்வொரு அம்மனாக கவிதை எழுதவேண்டும் அண்ணாச்சி என்று விக்ரமாதித்யனிடம் சொன்னேன்.அவர் எழுதியிருக்கிறார் .உனக்கு முடியுமே என்றார்.முடியுமா தெரியவில்லை.சிலது எழுதி பார்த்து தோல்விதான் அடைந்திருக்கிறேன்.ஒரு விக்ரகம் உணர்த்திவிடுவதை காட்டிலும் கவிதையில் ஏதேனும் மடிப்பு அதிகம் வேண்டும்.இல்லையெனில் கவிதை விக்ரகத்தில் தாழ்வுற்றுப் போகும் ;அம்மன்களை எழுதுவது , அது கடினமான பணியென்று அவரிடம் சொன்னேன்.அப்படியொருவன் அம்மன்களின் நிலையறிந்து அதன் உள்மடிப்பு குலையாமல் எழுதிவிடுவான்   எனில் அவனே தமிழில் இனி வணங்கத்தக்க கவியாக நெடுங்காலம் இருப்பான்.

நமது கவிகளுக்குப் பொதுவாக பொது விருப்பங்களுக்கு அப்பாற்பட்டு பார்வைகளோ,கண்ணோட்டங்களோ ,அவதானிப்புகளோ ,சிந்தனைகளோ இல்லை.உரைநடைகளில் பொது விருப்பங்களையே முன்வைக்கிறார்கள்.கவியின் உரைநடை என்பது முற்றிலும் வேறுவிதமானதாக இருந்தே ஆகவேண்டும்.அந்த வகையில் பார்த்தால் நவீன கவிகளில் ஷங்கர்ராமசுப்ரமணியனின் "கலை பொதுவிலிருந்தும் தனித்திருக்கும் "கட்டுரை நூல் மிகவும் நூதனமானதொரு நூல்.முருகன் என்னும் கட்டுரை மிக நல்ல கட்டுரை.ஒரு பெண்ணின் ஹை ஹீல்ஸ் பற்றிய கட்டுரை ஒன்று அதில்  உள்ளது.கவியால் மட்டுமே எழும்ப முடியும் சித்திரம் அது. தனித்த அவதானிப்புகளை கொண்ட உரைநடை அவருடையது.பிறரில் பலர் பொலிட்டிகள் மட்டைகள்.பலசரக்கு கடை தீப்பொறிகள். ஆனால் அந்த நூல் தமிழ்நாட்டில் எதனாலோ தெரியவில்லை , தமிழ் நாட்டு கவிஞர்களால் கூட அடையாளம் காணப்படவில்லை.பலசரக்குப் பொருட்களுக்கு அப்பாற்பட்ட தேவைகள் மிகவும் குறைவுதான் போல இங்கே .அந்த நூலை பிறர் ஸ்லாகித்து எழுதி  ஒரு கட்டுரை கூட இதுவரையில் படிக்கவில்லை.அந்த நூல் வெளிவந்து குறைந்தது நான்கு வருடங்கள் இருக்கும். பழைய இலக்கியங்களை பார்க்கும் போது நிச்சயம் நிலைமை இவ்வளவு மோசமில்லை என்று தான் தோன்றுகிறது. 

அப்பா

அப்பா

என்னை வேகவேகமாக எதிலேனும் கரையேற்றி விடவேண்டும் என நினைத்தார்.பின்னாட்களில் வருகிற நாட்கள் அவ்வளவு இசைவானவையாக இருக்காது என்று அவருக்குத் தோன்றியிருக்க வேண்டும் .எதிலேனும் ஒன்றில் பற்றிக்கொள்ள மாட்டானா என்பதில் அவருடைய அத்தனை முயற்சிகளும் இருந்தன.அம்மா இறந்ததை உணர்ந்த அன்றிலிருந்தே கடுமையான பாதுகாப்பின்மை என்னை உள்ளத்தில் தொற்றிக் கொண்டது.பாதுகாப்பின்மையை தூண்டும் செயல்களில் இருந்து என்னை விலக்கிக் கொள்ள கடுமையாக முயன்றேன்.அவருடைய அக்கறைகளும் எனது பாதுகாப்பின்மையை தூண்டுவதாக அமைந்தது துரதிர்ஷ்டவசமானது.அம்மாவை இழப்பது என்பது எந்த ஒரு குழந்தைக்கும் தனது சொந்த இயல்பிலிருந்து துண்டிக்கப்படுதலுக்கு ஒப்பான காரியம்

அம்மா அகன்று சென்ற அந்த தினத்தில் நாங்கள் குழந்தைகள் ; அம்மாவின் ஊரில் விளையாடிக் கொண்டிருந்தோம்.அவள் அகன்று விட்டாள் என்னும் செய்தி என்னை வந்தடைந்தது வினோத ஸ்பரிசம் மூலமாகத் தான்.அன்று என்னைத் தொட்டவர்கள் ,தூக்கி வந்திருந்தவர்கள் ,கொஞ்சியவர்கள் ,ஆறுதல் சொன்னவர்கள் எல்லோருமே மிகவும் மோசமானதொரு செய்தியை ஸ்பரிசம் மூலம் அருவெறுப்படையும் விதத்தில் உணர்த்திக் கொண்டிருந்தார்கள்.அந்த ஸ்பரிசங்களில் ஈர்ப்பு குறைந்திருந்தது ,காந்தம்  அகன்றிருந்தது .செயற்கையாக இருந்தது அனைத்துமே.பற்றை செயற்கையாக ஒருபோதும் உருவாக்க முடியாது என்று இன்றுவரையில் எனக்குள் உறைந்து போயிருக்கும் எண்ணத்திற்கு அன்றைய செயற்கையான அத்தனை தொடுதல்களும் காரணம்.செயற்கையான பற்றை என்னிடம் பிரயோகம் செய்ய முயலும் போது உடனடியாக நான் ஒதுங்கிச் செல்ல எத்தனிப்பதற்கும் ,விலகுவதற்கும் ; அது பின்னால் ஒரு மோசமான செய்தியை அழைத்து வருகிறது என்பது மட்டுமே காரணமல்ல.அம்மாவின் மரணத்தை நினைவுபடுத்துவதாக அது எனக்குள் அமைந்து விடுகிறது என்பதும் காரணம்.எனது பாதுகாப்பின்மை இன்றுவரையில் வந்து நுழைகிற இடம் இதுதான்.பாதுகாப்பின்மை எந்த இடத்தில் எனக்குள் நுழைந்ததோ அந்த இடத்தில் அப்பா என்னை அவசரமூட்டிக் கொண்டிருந்தார்.

தொடுகையாக  அம்மாவின் மரணம் வந்து சேர்ந்ததும் நாங்கள் விளையாடி கொண்டிருந்த மைதானத்தில் மஞ்சள் காட்டமாக விரிந்தது.அதனை மைதானம் என்பது சரியில்லை.கொல்லமாங்காடுகளுக்குள் வீடுகள் . மாமரங்களின் பால் வீச்சம் .மண் மேடுகள் பூசிய சுற்று வேலிகள்.இதற்குள் மரங்களுக்கும் குழந்தைகளுக்கும் இடையில் நிறைய விளையாட்டுகள் இருந்தன.கனிகளைத் தரும் மரங்கள்.அவற்றை தின்ன வேண்டியதும் பின்னர் அவற்றில் ஏறி விளையாட வேண்டியதும்தான் விளையாட்டு.அந்த மரங்களுக்கிடையில் மகா சிறுவர் உலகம் இருந்தது.ஒவ்வொரு மரத்திற்கும் ஒவ்வொரு வாசனை உண்டு.பழங்களின் ருசியும் தனித்தனி தான்.ஒன்று போல் மற்றொன்று கிடையாது.கொல்லாம்பழங்கள் மட்டும் இருபது தினுசு இருக்கும்.கொட்டிகள் தொடங்கி பனம்பழம் அளவு வரையில் .அம்மா இருப்பது வரையில் அந்த ஊரில் விஷேசமான வாசனையிருந்தது.மஞ்சள் தரித்து அந்த மைதானம் நின்ற பொழுதிலிருந்து அந்த வாசனை அகன்றது.

அப்பாவும் ஆசிரியர் .அம்மாவும் ஆசிரியர்.இருவருமே தமிழாசிரியர்கள் . சாத்தூரில் நள்ளிரவுகளில் எனக்கு பனி வலிப்பு உண்டாகும்.அம்மா  எனது முகநாடி விழுந்தடிக்கும் வண்ணமாக என்னை தோளில் போட்டுக் கொண்டு நடந்து கொண்டிருப்பார்.எப்படி அவள் விரைவாக நடந்தாலும் அப்பா முந்திச் சென்று ஏதேனும் தெருவில் மறைந்து விடுவார்.அவள் நின்று சுழன்று தேடுவாள்.பின்னர் வழக்கமான பதற்றத்துடன் மருத்துவர் வீட்டைச் சென்றடைவோம்.அப்பா முந்திச் சென்று விடுவதும் அம்மா பின்தங்கி தேடுவதும் ,இடைப்பட்ட உணர்வாகவே அப்பா எப்போதும் மனதில் பதிவாகியிருக்கிறார்.அம்மா அகன்ற பிற்பாடு அப்பாவிற்கு என்னிடத்தில் இந்த அவசரம் இருந்தது.அப்போதும் அவர்தான் முந்திச் சென்று கொண்டிருந்தார்.என்.சி.சி.; ஸ்கவுட் ,என்.எஸ்.எஸ் என எப்போதுமே பள்ளிக்காலங்களில் விரைவாகவே இருந்தேன்.ஏதேனும் ஒரு வழியிலேனும் தொற்றிக் கொள்ள வேண்டும் என அவருக்கிருந்த வேகமே அவற்றிற்கு காரணம்.

ஒரு அப்பாவாக அவருக்கிருந்த பதற்றங்கள் நியாயமானவை ,என்பதை காலம் இப்போதும் மீண்டு வந்து நிரூபிக்கிறது.எனது குழந்தைகளின் விஷயத்தில் நானும் அவரைப் போன்ற அப்பாவாகவே இருக்கிறேன் .சில சமயங்களின் நண்பனாகவும்.அப்பாவாக அப்பா இருப்பது குழந்தைகளுக்கு சிறு வயதில் தண்டனை . வளர்ந்த பின்னர் அதுவொரு பரிசு , விளங்க ஒண்ணா பற்று 

தவம் பயிலுங்கள்

                                                             தவம் பயிலுங்கள்

தவம் என்பதற்கு ஏராளமான அர்த்தங்கள் உள்ளன.நான் அவற்றையெல்லாம் சுட்டவில்லை.எளிமையாக அமர்ந்து ஒரு அரை மணிநேரமேனும்  மனதை ஒருமையில் நிறுத்துவதைச் சொல்கிறேன்.அதற்கு பாடமும் பயிற்சியும் நிச்சயம் அவசியம் .அது முறையான  பாடமாக இருத்தல் வேண்டும்.தனிநபர்களிடம் கற்றுக் கொள்ளுதல் சிறப்பாகாது.இயற்கையின் இயங்கு நிறுவனத்தை நம்மில் கற்றுக் கொள்ளும் முறையியல் அது.தகுந்த பள்ளியில் அதனை கற்பதே நல்லது

நானெல்லாம் நிறைய காலவிரயத்தை ஏற்படுத்திய பின்னர்தான் கற்க தொடங்கினேன் .அதனாலேயே இதிலும் நானொரு பின்தங்கிய மாணவன்.தொடர்ந்து பத்தாண்டு காலத்திற்கும் மேலாக தொடர்ந்தும், விட்டு விட்டும் பயில்கிறேன்.யோகமும் தவமும் எனக்கு உடல் பற்றிய தெளிவை ஏற்படுத்தியவை.வள்ளலார் உடலில் தெளிவு ஏற்படுதலே முதல் இன்பம் என்கிறார்.உடல் நம்முடையதல்ல அது இயற்கையின் ஸ்தாபனம் .புலன்கள் கொண்டு நடக்கும் ஆசைகள் மட்டுமே நம்முடையவை.உடல் என்பது  உலகைக் காணச் செய்யும்,உணர வைக்கும்  அகக்கருவி.புறத்தில் தூண்டப்ப பட்டு நிற்கும் அகக்கருவி அது.மேலை நாடுகளில் ஜப்பான் ,சீனா போன்ற நாடுகளில் தவம் சிறுவயதிலேயே தொடங்கப்படும் பழக்கம்.ஜப்பான் மொழி திரைப்படங்கள் பார்த்தவர்களுக்கு நினைவிருக்கலாம்.அவர்கள் வஜ்ராசனத்தில் அமர்ந்து உணவு உண்பார்கள்.வஜ்ராசனம் என்பது வேறொன்றும் இல்லை.குழந்தைகள் ஓடி வந்து அமரும் ஒரு நிலை.இஸ்லாமியர்களின் தொழுகை நிலை ஏகதேசம் வஜ்ராசனம்தான்.அவர்கள் அமர்ந்து தலை தாழ்த்தி முன் நெற்றி தரையில் படும் வண்ணம் செய்யும் தொழுகை யோகத்தில் மிக முக்கியமானதொரு உடல் பயிற்சி.

யோகத்திலும் ,தவத்திலும் சான்றிதழ் பெறுவதுதான் நோக்கமெனில் பிரம்மஞானத்திற்கு தகுதி உடையவன் நான்.ஆனால் எனக்குத்தானே தெரியும் ? ஒரு ஞானத்திற்கும் தகுதியற்றவன் நான் என்பது.அதனால்தான் திரும்பத்திரும்ப முதலில் இருந்தே தொடங்கி படித்துக் கொண்டிருப்பேன்.வகுப்பில் ஆசிரியர்கள் நம்மை கண்டுபிடிக்காதவர்களாக இருப்பின் மகிழ்ச்சியாக இருக்கும்.சிலர் நான்கு நிலைகள் கடந்த பின்னரும் ஏன் முதலில் இருந்தே தொடங்குகிறீர்கள் என்று கேட்பார்கள்.ஒரு நிலையையும் கடக்க முடியாதவன் என்பதை உள்ளமே நன்கறியும்.பயிற்சிக்காகத் தான் ஆரம்பம் முதலே நான் சென்று கொண்டேயிருப்பது.சிறு வயது முதலே தவமும் யோகமும் கற்றுத் தேறும் குழந்தைகள் பாக்கியம் செய்தவை.

தெய்வ நம்பிக்கையும்,தவமும் ,பயிற்சியும் சான்றோனின் சாதாரணமான இயல்பான காரியங்கள் என்று ஸ்ரீமத் பகவத்கீதை சொல்கிறது.தமிழ் மரபுகளில் தவம் திரும்பத் திரும்ப வலியுறுத்தப்படுகிறது.  தெய்வ நம்பிக்கை பேணிப் பாதுகாக்கப் பட்டிருக்கிறது.எப்படி எதற்காக இடையில் இவற்றையெல்லாம் கைவிட்டோம் என்பது விளங்கவில்லை.

தவமும் யோகமும் பயில்வதற்கு எதிராக சில தடைகள் உண்டு.ஏற்கனவே நமது மனதில் ஏற்றி வைக்கப்பட்டிருக்கும் தடைகள் முதலாவது வகையைச் சார்ந்தவை.பத்தாண்டுகளுக்கும் முன்னர் முதலாவதாக நான் வகுப்பில் இணையும் போது பேசிக் கொண்டே இருந்தேன்.ஆசிரியர்களை வகுப்பு   நடத்தவே அனுமதிக்க வில்லை.அவ்வளவு இடையூறுகளும் தடைகளும் மனதில் இருந்தன.அகந்தையால் வகுப்பை மோதிக் கொண்டே இருந்தேன்.ஆசிரியர்கள் மிகவும் சிரமப்பட்டார்கள்.இப்போது யோசித்துப் பார்க்க வேடிக்கையாக இருக்கிறது.அப்போது எவ்வளவு சிறுமைப்பட்டிருந்தேன் என்பதும் விளங்குகிறது.இப்போது மேன்மை பட்டுவிட்டேன் என்பது இதற்கு அர்த்தமில்லை.ஒவ்வொரு காலத்தையும் நாம் கடந்து செல்லும் போதும்  முன்னர் சிறைப்பட்டிருந்த விஷயங்களும், சிறுமைப்பட்டிருந்த காரியங்களும் விளங்கிக் கொண்டே போகும்.இப்போதைய சிறுமைகள் நாளை விளங்கும்.

இரண்டாவது வகையான தடை ,மயக்கம்   காரணமாக தவத்தையும் ,யோகத்தையும் கற்பவர்களுடையது.அவர்களுக்கு சாராம்சம் ஒருபோதும் விளங்காது.தவத்தையும் யோகத்தையும் மேட்டிமை என தவறாக புரிந்து ஈடுபடுபவர்கள் முற்றிலும் ஏமாந்து போவார்கள்.கற்றலில் ஒருபலனும் அவர்கள் எய்த முடிவதில்லை.ஏனெனின் அவர்கள் கொண்டிருக்கும் மயக்கம் கற்றலுக்கு எதிர்திசை வேகம்.நன்னெறி என அவர்கள் கற்பிதம் கொண்டிருப்பார்கள்.நம்மை நாம் எப்படியிருக்கிறோம் என்பதை அறிவதற்கும் , தேர்வு செய்வதற்கும் கிடைக்கும் ஒரு வாய்ப்பை தவம் ஏற்படுத்தும் அன்றி அது எந்த மந்தரவாதத்தின் மூலமாகவும் எதனையும் சரிபடுத்தாது.ஏராளமான எண்ணங்களில் கட்டுண்டு கிடக்கும் நம்மை ; மொத்தமே உன்னுடையவை ஐந்து அல்லது ஆறு எண்ணங்கள் தான் என்பதை துலக்கும்.அதில் ஏறிப் பிடித்துக் கொள் கட்டியாக என்பதை உணர்த்தும்.கொண்டு செலுத்தும்.இந்த எண்ணங்களில் எதுவாக இருந்தாலும் அதுதான் உங்களுடையவை.காமம்,காதல்,ஆசைகள் இப்படி அவை எதுவாக இருப்பினும். தவத்தில் மிஞ்சுகிற இந்த எண்ணங்களில் இது தவறு அது சரி என்றெல்லாம் கிடையாது.மிஞ்சுகிற எண்ணங்கள்தான் உனது சாட்சியம்.நீ

மிக முக்கியமாக யோகமும் தவமும் சிறுவயதிலேயே தொந்தரவுக்கு உள்ளாக்கப்படுகிற குழந்தைகளுக்கே மிகவும் அவசியம் என்னை போன்று .ஆனால் அவர்களிடத்தேயிருந்துதான் இவற்றைத் தட்டிப் பறித்து தள்ளிக் கொண்டு போய் வைத்திருக்கிறோம் .நமது ஞானிகள் எல்லோருமே சிறுவயதிலேயே தொந்தரவுக்கு உள்ளாக்கப்பட்ட குழந்தைகள்தான் என்பது எத்தனை  பேருக்குத் தெரியும் ? அல்லது சொல்லித் தந்தார்கள் ?

தமிழ்நாட்டை பொறுத்தவரையில் சரியான பள்ளி என வேதாத்ரி மகரிஷியின் அறிவுத் திருக்கோவிலையே பரிந்துரை செய்வேன்.பிற பள்ளிகளின் பாடங்களையும் படித்திருக்கிறேன்.முயற்சித்திருக்கிறேன்.எனது அனுபவத்தில் சிறந்தது வாழ்க வளமுடன் அறிவுத் திருக்கோயில் மட்டுமே

பின்பற்றி பாருங்கள் 

மாபெரும் நகரத்தின் ராணி தேனி-ஆறு கவிதைகள்

மாபெரும் நகரத்தின் ராணி தேனி
-ஆறு கவிதைகள்


1
என் பிணத்தை அழைத்துக் கொண்டு
எனது கவிதைகளை காட்டித்தர
சென்று கொண்டேயிருக்கிறேன்
போகுமிடமெங்கும்
நீங்களும் இணைந்து கவிதைகளை
அடையும் போது
பிணம் எழும்பி
"ஆஹா"
என்கிறது
ஆச்சரியத்துடன்
அடுத்த கவிதையில்
தடுக்கி விழுகிறது
எனது உயிர்

2

நானின்று மலை பார்த்தேன்
சாரலில் நனையும் யோனிகள் கணக்கில்லை
யோனித்தடமெங்கும்
வழிநின்று கொண்டாடும்
தாவரங்கள்
ஊறும் சுனைகள்
சூரியனும் வந்து இணையும் போது
பெருங்காம நிர்வாணம்
கண்களில் கூச்சம்
எதற்கும் அஞ்சாமல்
நிமிர்ந்து
நிற்கிறது
மாமலை
கரையோரம் தேசிய நெடுஞ்சாலை
பதற்றத்தின்
ஹாரன் ஒலிகள்
பிரம்மச்சரிய மயில்களின்
அகம் பிளந்து கிழிக்கும்
ஹாரன் ஒலிகள்
காப்பாற்றுங்கள்
ஈஸ்வரா ...
மாமலையை
தெய்வ யோனிச்சுரப்பை
எங்களை ...
ஒதுங்கிச் செல்கிறோம்
இந்த பிரம்மச்சரிய மயில்களை
கொஞ்சம்
வழிவிடச்
சொல்லுங்கள்
அடைத்துக் கொண்டு
நிற்கிறார்கள்

3
கோவிலைக் கைவிட்டோம் அவர்கள்
எடுத்துக் கொண்டார்கள்
சூதனமாக
குளத்தைக் கைவிட்டோம் அவர்கள் 
எடுத்துக் கொண்டார்கள்
வளைத்து
தவத்தைக் கைவிட்டோம்
அவர்கள் எடுத்துக் கொண்டார்கள்
பிடுங்கி
எடுத்துக் கொண்டவனின் மடியில்
எறியமர்ந்திருக்கிறது கைவிட்ட
குழந்தை
எப்படியெடுத்துக் கொண்டான்
என்பது விளங்காமல்
கைவிட கற்று கொடுத்தவன்
ஒதுங்கியிருந்து
காட்சிகளை
பார்த்துக் கொண்டிருக்கிறான்
காய் பலா சக்கையில்
அடியமர்ந்து
வழிகிறது
தீநீர்
எடுத்ததெல்லாம் கொண்டு
அவர்கள் செய்த ராணுவ வண்டி
விரைந்து கொண்டிருக்கிறது
நமது விலாசங்கள்
தேடி

4

பெருநகரத்தின் பழைய மேம்பாலம் ஏறி இறங்குகையில்
திருநெல்வேலி சந்திப்பு
பேருந்து நிலையம்
தோன்றுகிறது
சிலயிடங்களில் வந்து மறைகிற
நாகர்கோவில் சிற்றூர்கள்
கோவில் வெளிப்பிரகாரங்களில்
நிலா வெளிச்சத்தில் நீண்டு படுத்திருப்பது
நிச்சயமாக வேறெந்த ஊரும் இல்லை
தன்மடியில் தன்தலை சாய்த்து
கிழவியின் சாயலில்
அது இந்த பெருநகரத்தின் ஒரு
தோற்றம்
விடியலில் நகரத்தைச் சுத்தம் செய்யும் பணியாளர்கள்
நேற்றைய கொடு நினைவுகளோடு
போராடிக் கொண்டிருக்கிறார்கள்
அதன் கடுஞ்சாபத்தை உதாசீனம்
செய்கிறாள்
சுட்ட இட்லிகளை நடைமேடையில் பரத்தும் செல்லியம்மன்
இந்த நகரம் விரைவாக வயோதிகம் பெற்று வருகிறதா என்பதை
பாடிகாட் முனீஸ்வரரிடம் கேட்டுத்
திரும்பிக கொண்டிருக்கிறேன்
இந்த மாபெரும் நகரத்தின் ராணி தேனி
எந்த கருவறையில்
இருக்கிறாள்
சிறுமியாக
என்கிற
கேள்வியோடும்
கூடுதலாக

5

ரயில்பெட்டிக்குள் வேகமாய் நுழைந்த பாடல்
துள்ளி வெளியேறிக் குதித்தது
படிக்கட்டில் சாய்ந்து
அதனை மீண்டும் இழுத்து பெட்டிக்குள்
போட்டேன்
பயணம்
தொடங்கியது
கொய்யாய் பெண்
அவள் ஊர்க்கதைகளைச் சுமந்து
நிலத்தின் சுவையை
பகிர்ந்துச் செல்கிறாள்
பள்ளிக்குச் சென்றிருக்க வேண்டிய சிறுவன்
கொண்டு நீட்டிய மல்லிகைப் பூக்களில்
தாயாரின் முகம்
இந்தரயில் இப்போது பகலைக் கிழித்து
ஜந்து நிலம் கடந்து
ஆறாவது நிலத்திற்குள்
பாய்ந்து
கொண்டிருக்கிறது
மணி நண்பகல் பனிரெண்டு
தூரதேசம் வருவதற்குள்
இன்னும் சிலர் பெட்டிக்குள்
நுழையக் கூடும்
அவர்களும் சில ரசானயங்களை
இப்பயணத்தில் ஏற்றுவார்கள்
கோணங்கியின் வெள்ளரிப்பெண்
இறங்குகிற நிலையத்தில்
நானொரு பாம்பாட்டியை
எதிர்பார்த்துப்
படுத்திருக்கிறேன்
பாடலை அவனிடம்
ஒப்படைக்க

6

விளக்கின் சுடர் எரிந்து கொண்டிருக்கிறது
பின்புற கண்ணாடியில் எரியும் சுடர் உயரத்தில்
சற்றே அசைகிறது
நிழல்கிறது
அதே சுடர்தான் ஆழத்தில்
நீர் பரப்பில்
தலைகீழாக
நிச்சலனம்
காற்று பூசாத நிச்சலனம்
பற்ற வைத்த காற்றின்
 சுடரில்
ஓங்கியெரிகின்றன
மொத்தம் மூன்று தீபங்கள்
எதிர்வரிசை கண்ணாடியில்
அம்மன் சிறுமியாக தோன்றுகிறாள்
பாவாடையுயர்த்தி
அவள் நேருக்கு நேராக எழும்பி நின்று
 தன் முகம்
பார்க்கிறாள் என்று நினைக்கிறேன்
தாளிருந்து
தொட்டுப் போட்டுக் கொள்ளுங்கள்
பின்னர் வாராது இப்பொழுது தோன்றிய
இம்மெய்ப் பிம்பம்
முச்சுடரில்
எரியுமிந்த
இம்மெய்ப் பிம்பம்
மூன்றும் உண்மைதானே
அம்மையே
நானுன்னை இரண்டாகப் பார்த்தேன்
சின்னவளா
பெரியவளா
யார் நீ ?

அ. மார்க்ஸ் என்னும் கிறிஸ்தவ வெறியர் ,கருத்தியல் கோமாளி

 அ. மார்க்ஸ் என்னும் கிறிஸ்தவ வெறியர் ,கருத்தியல் கோமாளி

அ.மார்க்ஸின் உள்ளடக்கம் கிறிஸ்தவத்தின் கலாச்சார ஆக்கிரமிப்பு வெறி மட்டுமே .மார்க்சிய கருத்தியல்கள் வழியாக அவர் அதனை பூசி மெழுகி கவசமாக பயன்படுத்தி வருகிறார்.தனது கிறிஸ்தவ வெறியை ஸ்தாபித்துக் கொள்ள தீவிர  இஸ்லாம் ஆதரவு நிலை போன்று தன்னை புனைவு செய்து கொள்கிறார் .அது தனக்கு ராணுவம் போன்று பயன்படும் என்பது அவருடைய கணிப்பு.உறவிற்கு அது அவருக்கு சாதகமாக தங்கள் பாதுகாப்பின்மையின் கதி நிலை காரணமாக சாய்வு கொண்டிருப்பதும் உண்மை .ஆனால் அவருடைய கருத்தியல் வேஷம் கலையும் பட்சத்தில் இஸ்லாமியர்களுக்கு அவர் துரஷ்டமானவராக மாறிவிடுவார் என்பதில் சந்தேகமே வேண்டாம் .அவருடைய இதுவரையிலான பிரதிகளைக் கொண்டு அவருடைய கிறிஸ்தவ வெறியை வெளிப்படுத்துவது மிகவும் எளிது.அவருடைய கற்பனைகள் ஊர் கோமாளிகளின் கற்பனைகளுக்கு நிகரானவை.கார்ல் மார்க்ஸின் பெயரின் பின் பகுதியை சூட்டிக் கொண்டதால் ஒருவர் மார்க்சியர் என்றெல்லாம்   ஆகிவிடாது


கருத்தியல் ரீதியாக எதிர்நிலையிலோ மாறுபட்டோ இருப்பவர்களைக் குறித்து வெற்று அவதூறுகளை எந்த எல்லை வரையில் வேண்டுமாயினும் சென்று சிந்தக் கூடியவர் அவர்.சிறுவயது பழக்கம் தொடங்கி இன்றுவரையில் ஒரு பெரிய மனிதனுக்கான லட்சணம் எதையுமே பெறவில்லை.முப்பது வருடங்களாக அவரை கவனித்து வருகிறேன்.அவருடைய கற்பனை குதிரைகள் உணவு பற்றாக்குறை கொண்டவையும் கூட.எவ்வளவு மெனக்கெட்டாலும் அவற்றால் எம்பிப் பறக்க இயலுவதில்லை.இடறிச் சரிந்து விழுகின்றன.ஒருவர் மீது புகார்களும் அவதூறுகளும் சொல்ல குறைந்த பட்ச தகவல்களெனும் அவசியம்.

பொதுவாக அவருடைய அவதூறுகளுக்கு சட்டப்படி எனில் வழக்கு நடத்தலாம்.அது ஒரு மெனக்கெடு.பெரும்பாலும் துணியமாட்டார்கள் என அவர் நினைப்பதிலிருந்தே அவருடைய  அவதூறுகள் அசாத்தியமான துணிச்சலைப் பெறுகின்றன. தொடர்ச்சியாக அவர் ஒரு அறிவாளியில்லை என்று ஆக்காட்டி இதழ் நேர்காணலில் நான் பேசியது தொடங்கி எனக்கு அவர் இந்துத்துவா பட்டம் கட்டி வருகிறார்.நான் ஒரு இந்து .ஆனால் இந்துத்துவா அல்ல.இத்தனையும் பலமுறை தெளிவு படுத்தியாயிற்று.இப்போது ஒரு படி மேலேறி ஆர்.எஸ்.எஸ் தொடர்பு கொண்டவர் என்று சொல்லியிருக்கிறார்.இப்படியொருவர் சூழலில் இயங்கி கொண்டிருக்கிற பிறர் ஒருவரைப் பற்றை குறிப்பிட குறைந்தபட்ச ஆதாரங்களேனும் ,தரவுகளேனும் அவசியம்.அ.மார்க்ஸின் அவதூறுகளுக்கு எப்பொழுதேனும் இந்த அடைப்படை நாகரிகங்கள் தேவை பட்டிருக்கிறதா என்ன ? ஆர்.எஸ்.எஸ் தொடர்பு எனக்கு இருக்குமேயானால் எனக்கு அதனை ஒத்துக் கொள்வதிலும் ,வெளிப்படையாக அறிவிப்பதிலும் யாதொரு தயக்கமோ ,அச்சமோ கிடையாது.அவரை பின்பற்றுபவர்கள் பேரிலும் அவருக்கு எந்த ஒரு மதிப்பும் கிடையாது என்பதுதான் அவருடைய பொய்களுக்கு அடிப்படை.எங்கள் ஊர் பக்கமெல்லாம் பொய் புகார்களுக்கு அடிதான் கொடுப்பார்கள்.பொய் புகாரகள் அவ்வளவு தீவிரமானவை.


ஒற்றை  இந்துத்துவ ஆதிக்க எதிர்ப்புக் கருத்தரங்க முழுமையான பேச்சுகளும்   இரண்டுமணிநேரம் பதிவு செய்யப்பட்டு இணையத்தில் வெளிப்படையாக உள்ளது.அதில் சகல விஷயங்களை பற்றியும் வெளிப்படையாக எழுத்தாளர்கள் பேசியிருக்கிறோம் .நியாயமாகப்   பார்த்தால் இந்துத்துவர்களுக்கும்,ஒற்றைப் பண்பாட்டு ஆதரவாளர்களுக்கும் தான் அது அச்சத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.ஆனால் அ.மார்க்ஸ் போன்ற கிறிஸ்தவர்களுக்கு அது குலைநடுக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறதென்றால் அதன் பொருள் என்ன ? கற்பனை   குதிரைகள் வளர்த்துவதற்கு ஒருவருக்கு ஒரு ஆயுட்காலம் போதாதே ?

நான் பல கட்சிகளில் இருந்திருக்கிறேன்.விஜய் காந்த் கட்சியில் கூட.நானும் என்.டி.ராஜ்குமாரும் இணைந்து முதல் தடவை விஜய்காந்த் தேர்தலில் நிற்கும் போது வேலை செய்திருக்கிறோம்.தி.மு.கவில் பல ஆண்டுகள் கிளை செயலாளராக இருந்திருக்கிறேன்.ஆம்.ஆத்மீ கட்சியில் மட்டுமே இணைய விரும்பவில்லை.களத்தில் பல்வேறு கட்சிகளில் இருந்தமைக்கு  எனக்கென்று பல்வேறு காரணங்கள் உண்டு. ஆம் ஆத்மீயை கூடங்குளம் எதிர்ப்பை முன்வைத்து ஆதரித்து வேலைகள் செய்தோம்.பா.ஜ .கவை  எதிர்த்து.பா.ஜ.கவிற்கு மட்டும்தான் ஒருபோதும் ஆதரவு நிலை எடுத்ததில்லை.எனக்கு நாகர்கோயிலில் ஆர்.எஸ்.எஸ்.அலுவலகம் எங்கே இருக்கிறது என்பது கூட எனக்குத் தெரியாது.பின்னர் எப்படி அரசாங்கம் கள்ள வழக்குகள் பதிகிறது என்று சதா கூக்குரலிடும் அ.மார்க்ஸ் ,எங்கள்  மீது கள்ள வழக்கு பதிகிறார் ? ஒருவேளை அவர் அதிகாரத்திற்கு வந்தால் எங்களைத் தூக்கி குண்டாஸில் போடுவாரா தெரியவில்லை.இவருடைய அருவருப்பான மனோபாவத்திற்கு முன்பாக பா.ஜ.க பரவாயில்லை என்றுதான் தோன்றுகிறது.அவர்கள் எங்களையொன்றும் இன்னும் குண்டாஸில் போட்டு விடவில்லையே !

சரி என்பாடு எப்படி வேண்டுமாயினும் இருந்து விட்டுப் போகட்டும் .எனது மனைவி தி.மு.க வாக இருப்பதற்கும் ,தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்ததற்கு என்ன சம்பந்தம்  ? பெண்ணிய ஊக்க மருந்தே பதில் கூறு

#
நேற்றைய அவருடைய பதிவு இது.ஒரு நண்பர் அனுப்பி வைத்தது.

அ. மார்க்ஸ் பதிவு,

தி.மு.க நண்பர்களுக்கு .. (2)
*************************************
முன் பதிவுத் தொடர்ச்சி

நேற்று நான் இட்ட பதிவு நினைவிருக்கலாம். அதிமுக விற்குள் மட்டுமல்ல, திமுகவிற்குள்ளும் பாஜக நுழைந்து கையகப்படுத்தும் வேலை மும்முரமாக நடக்கிறது. இன்றைய நிலையில் திமுகவில் பிளவு என்பது அதன் குடும்ப அரசியல் பிளவாகத்தான் அமையும்.ஏற்கனவே நிகழ்ந்த அழகிரி பிரிவைப் பொருத்த மட்டில் அழகிரி ஒரு அப்பாவி. அவரை வைத்து பாஜக உள்ளே நுழைய இயலவில்லை. நுழைவதில் பயனில்லை என்பது அவர்களுக்கும் தெரியும்.

ஆனால் தற்போது கனிமொழி, ராஜா போன்றோரின் டில்லி அரசியல் தொடர்புகள் அத்தனை எளிதாகப் புறக்கணிக்கத் தக்கவை அல்ல. டில்லி பத்திரிகையாளர்கள் சொல்லக் கூடிய செய்திகள் கவலை அளிக்கின்றன. சில முக்கியமான பாஜக தலைவர்களுடன் நெருக்கமான தொடர்பு பேணப்படுகிறது.

சில நாட்கள் முன் சென்னையில் நடைபெற்ற "ஒற்றை இந்துத்துவா மாநாடு" என்பதையெல்லாம் ஏதோ இந்த இலக்கியவாதிகளுக்கிடையில் நடந்த போட்டி, பொறாமை சார்ந்த இலக்கிய அக்கப்போராக நினைத்து எளிதில் புறக்கணித்துவிடாதீர்கள். இதற்குப் பின்புலமாக இருந்த லட்சுமி மணிவண்ணன், ஜெயமோகன் ஆகிய இருவருடைய இந்துத்துவத் தொடர்பு உலகறிந்த விடயம். இந்துத்துத்துவம் இன்று பல்வேறு மட்டங்களில் மிக மிக மிக நுணுக்கமாக தமிழகத்தில் வேலை செய்து வருகிறது. அந்த புராஜெக்டில் ஓர் அங்கம் இது.

லட்சுமி மணிவண்ணன் ஆர்.எஸ்,எஸ் கருத்தியல் மற்றும் தொடர்புகள் உடையவர் மட்டுமல்ல. அவர் திமுக தொடர்புடையவரும் கூட. அவரது மனைவி சமீபத்தில் நாகர்கோவிலில் நகரசபைத் தேதலில் திமுக சார்பாகப் போட்டியிட்டவர்.  தமிழச்சி தங்கபாண்டியன் போன்றோருக்கு மிக நெருக்கமானவர். இந்த ஒற்றை இந்துத்துவா இலக்கியக் கூட்டத்திலும் தமிழச்சி பேச இருந்து பின் ஏற்பட்ட எதிர்ப்புகளால் பின்வாங்கியவர். கனிமொழியும் எப்போதும் இந்த மாதிரி வலதுசாரி இலகிய வட்டத்துடன் தொடர்புடையவர் என்பதும் குறிப்பிடத் தக்கது.
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
திமுகவுக்குள் பா.ஜ.க ஊடுருவலாம் என்கிற என் பதிவு மிகுந்த
அக்கறையோடு செய்யப்பட்ட ஒன்று. திராவிடக் கடசிகள் அதன் திராவிடத் தன்மையை இழக்காமல் தொடர வேண்டும் என்ற உண்மையான அக்கறை உள்ளவன் நான்.

திராவிட அரசியலின்பால் அக்கறையோடு திமுகவை உண்மையாக நேசிக்கும் நண்பர்கள் புரிந்து கொண்டால் சரி

மடத்தனங்களின் அருமை

மடத்தனங்களின் அருமை

எப்போதும் ஒன்றிற்கும் அதிகமான மடத்தனங்களை கையில் வைத்திருப்பவர்கள் வாழ்வதை லெகுவாக்கி வைத்திருக்கிறார்கள்.காரண காரியங்களைத் தேடாமல் பிரயாணிக்கிற காரியங்களே மடத்தனங்கள்.எல்லாவற்றிலும் காரண காரியங்களை தேடித் கொண்டிருப்போருக்கு சிக்கலாகி விடும்.தடுக்கி விழுகிற போது ஓடிச் சென்று சரணடைய ஏதேனும் மடத்தனம் கையில் இருக்க வேண்டும்.சதா சந்தோஷங்களில் திளைக்கும் பலரிடம் ஏராளமான மடத்தனங்கள் கைகளில் இருப்பதை பார்த்திருக்கிறேன் .எல்லாவற்றிலும்   காரண காரியங்களை அலசிக் கொண்டே இருப்பவனுக்கு வாழ்க்கை மளிகை கடை வியாபாரம் போலாகி விடும்

மடத்தனங்களுக்கு பலமடங்கு அழகுண்டு .அதன் ரகசியமே எல்லோருக்கும் பொதுவான மடத்தனங்கள் என்று ஒன்றுமே கிடையாது என்பதில் அடங்கியிருக்கிறது.ஒவ்வொருவரும் தங்களுடைய மடத்தனங்களை தங்களேதான் கண்டடைய வேண்டும்.சம்பாதித்துக் கொள்ள வேண்டும்.ஒன்றுக்குமே உதவாது என பிறர் கருதுகிற ஒரு மரமொன்றை வளர்த்துவது தொடங்கி ,ஒரு களைத் தாவரத்தைக் கொண்டாடுவது தொடங்கி, காரணிகள் ஏதுமற்ற பயணங்கள் என்று ,பொருந்தா காதலில் ஈடுபட்டு என  எதை வேண்டுமாயினும் ஒருவர் தேர்வு செய்யலாம் .எந்த மடத்தனத்தில்  ஒருவருடைய உள்மனம் குதூகலிக்கிறதோ அதுவே அவருக்குப் பொருந்துகிற மடத்தனம்.

உளவியல் மருத்துவர்கள் கொடுக்கிற மாத்திரைகளை உண்டு வாழ்கிறவர்களைப் போல வாழவே கூடாது நேரடியாக.நேரடியாக வாழ்ந்து பெறுபவற்றை அளிக்க மடத்தனங்கள் வேண்டும்.நீங்கள் செய்வது மடத்தனமாக இருக்கிறதே ! என பிறர் கூறும் காரியங்களில் உள் ஆனந்தம் பெறுகிறீர்கள் எனில் அது உங்கள் சொத்து கைவிட்டு விடாதீர்கள்.உங்கள் மடத்தனங்களின் பொருள் பிறருக்கோ உங்களுக்கோ தெளிவாகக் கூடாது .அதில் நீங்கள் ஆனந்தத்தை மட்டுமே பெறவேண்டும்.தெளிவிற்கு அங்கு வேலையில்லை.ஒரு மடத்தனம் உங்களில் அர்த்தம் பெற்றுத் தெளிகிறது என்றால் அந்த மடத்தனம் வெகுவிரைவிலேயே உங்கள் கையை விட்டு அகலப் போகிறது ,விடைபெறப் போகிறது என்று பொருள்.

காரண காரிய அறிவு என்பது செய்கிற காரியத்திலிருந்து அடைகிற உருவம்.மடத்தனம் உருவம் வழங்காது.கொடுந்தனிமை நமக்கு மனமுவந்து வழங்குகிற பரவச வரங்கள் மடத்தனங்கள் .அள்ள அள்ள குறையாத செல்வங்கள்.திகட்டாத செல்வங்கள்.

எனது வாழ்க்கையில் இருபது வருடங்களுக்கும் மேலாக தீவிரமான மனச் சோர்வில் இருந்தேன்.தமிழ் நாட்டைச் சார்ந்த முக்கியமான மனநல மருத்துவர்கள் பலரை எனக்குத் தெரியும்.அவர்களிலும் பலர் மனச் சோர்வில்தான் இருந்தார்கள்.அறிவை நம்புவோர்க்கு மனச் சோர்வு நிச்சயம்.அறிவை நம்புவது மறைமுகமாக நமது அகந்தையை நாமே நம்புவதுதான்.அறிவு இல்லாமலும் முடியாது அதனை கைவிடவும் தெரிந்திருக்க வேண்டும்.பின்னாட்களில் அந்த மருத்துவர்களில் சிலர் என்னுடைய நண்பர்களாகவும் ஆனார்கள்.என்னுடைய சில உபதேசங்களைக் கருத்திற் கொண்டு மடத்தனங்களுக்கு பழகவும் செய்தார்கள்.

ஒருவராலும் என்னை சீர் செய்ய இயலாத போதுதான் நான் மடத்தனங்களுக்கு என்னை ஒப்புவித்தேன்.உயிர் பிழைத்தேன்.இப்போது என்னைக் காத்துக் கொண்டிருப்பவை எல்லாமே என்னுடைய ஆகச் சிறந்த மடத்தனங்கள்தாம் .ஏராளமான மடத்தனங்களால் நிறைந்தது இப்போதைய எனது வாழ்க்கை .ஏன் இதனைச் செய்கிறீர்கள் ? என என்னை நோக்கி கேள்வி கேட்போர் அத்தனை பேரையும் எதிர்த்து எள்ளி நகைக்கிறது இப்போதைய எனது வாழ்க்கை. ஒரு மருத்துவர் இந்த துறையிலேயே மிகவும் மூத்தவர்.பேர் பெற்றவர் .எழுத்தாளர்களுக்கு அவர் அதிகமாக மனச் சோர்விற்கு எதிரான குழிகைகளைத் தரக் கூடாது என்கிற கொள்கை வைத்திருந்தார்.அதுவொரு நல்ல கொள்கைதான்.மனச் சோர்வுதான் அவர்களை எழுதத்   தூண்டுகிறது என்கிற எண்ணம்  அவருக்குண்டு.அப்படியில்லை என்பதை மடத்தனங்களை ஆராதிக்கத் தொடங்கிய பின்னரே அறிந்து கொண்டேன்.

மடத்தனங்கள் அதிகம் உள்ளவர்களோடு எளிதில் இணங்கும் குணம் எனக்குண்டு.ஏன் போகிறோம் ? எங்கு போகிறோம் என்றால் விலகி கொள்வேன் பத்திரமாக .இதைச் செய்தால் என்ன கிடைக்கும் ? என்றோருவன் கேட்டு விட்டால் அப்புறம் அவனைத் திரும்பிக் கூட பார்ப்பதில்லை.அவன் செல்லும் திக்கும்,எனது திசையும் முற்றிலும் வேறு வேறானவை.எனது மடத்தனங்களைக் கண்காணித்து வேவு பார்த்து நோக்கம் கற்பிப்போர் எனது ஆனந்தத்தை எதிர்த்துப் போரிடுபவர்கள் என்பது இப்போது எனக்கு மிகவும் நன்றாகத் தெரியும்.  

அண்ணன்கள் என்று சொல்லிக் கொள்ள இருவர்

அண்ணன்கள் என்று சொல்லிக் கொள்ள இருவர் உண்டெனக்கு

ஒருவர் தமிழ்ச் செல்வன் ,மற்றொருவர் சி.சொக்கலிங்கம் .இடப்பக்கமும் வலப்பக்கமும் என இருவர். இருவரைப்பற்றியும் எழுதுவதற்கு பல உண்டு .சொக்கலிங்கம் லஹரியில் ஒரு பூர்வ புருஷன் .அன்றாடத்தில் தேர்தல் அதிகாரி.அப்படியிரு அவதாரங்கள் சொக்கலிங்கம்.எனக்கு பொருத்தமெல்லாம் அந்த முதல் அவதாரத்தோடுதான்.பின்னதில் நிறைய சங்கடங்கள் .முதல் அவதாரத்தின் நிறைய மகிமைகள்  தற்போது  எழுதக் கூடாதவை.முற்றும் முதுமை அதற்குத் தேவை. தமிழ்ச்செல்வனுக்கு அப்பா சண்முகத்தின் சாயல்.உள்ளும் புறமும்.உள்ளும் புறமும் இரண்டில்லாதவர் தமிழ்ச்செல்வன் .மாறுபாடுகள் வேறுபாடுகள் என எவ்வளவோ வந்தாலும் இருவரிடமும் காரியங்களில் விலக உள்ளூர ஒன்றும் கிடையாது.செயல்படும் பணியிடங்களும் பேசும் மொழியும் வேறென்பது உண்மையே தவிர ஆற்றும் செயல்களில் வேற்றுமைகள் கிடையாது."நம்மப் புள்ளைங்க " என்பது தமிழ்ச்செல்வன் எங்களை போன்றோரைக் குறிக்கும் சொல்.

தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டே இருப்பவர் தமிழ்ச்செல்வன்  .தொடர்ந்து செயல்படுபவர்கள் எவ்வளவு நம்பிக்கை  இழப்புகளையும் சேர்ந்து சந்தித்திருப்பார்கள் என்பது; அவர்கள் சொல்லாதவரையில் வெளியில் தெரியாது.ஒவ்வொரு சமயமும் இழந்த நம்பிக்கைகளின் துயரச் சாயல் ஏதுமின்றி புதிது புதிதாக போய்க்கொண்டேயிருப்பவர் அவர் .புதிய நம்பிக்கைகள் புதிய நம்பிக்கைகள் என.  சுயசரிதையை அவர் எழுதுவார் எனில் இது புனைவுத் தன்மையும் கொண்ட அரும் பொக்கிஷமாக அமையும்.சுய பகடியும் எள்ளலும் நிரம்பியவர்.அனுபவங்களை விலகி நின்று பார்க்கவும் அவரால் முடியும்.சுயசரிதையை அவர் எழுதினாலும் கூட அவரால் நடந்த வண்ணம்தான் எழுத முடியும் என நினைக்கிறேன்.இருப்பென்பதை பொதுவில் வைத்து விட்டவர் தமிழ்ச் செல்வன் .சுந்தர ராமசாமி மிகவும் எதிர்பார்த்தவர்களில் ஒருவர்.அவருடைய சக்தி பெருமளவிற்கு பொது வாழ்வில் செலவாகிக் கொண்டிருக்கிறது.தமிழ்ச்செல்வனின் "வெயிலோடு போய் ","வாளின் தனிமை " இரண்டு சிறுகதை நூல்களும் முக்கியமானவை.புதியவர்கள் அவசியம் படித்திருக்க வேண்டிய சிறுகதைத் தொகுப்புகள் அவை.

கிடாத்திருக்கையில் வழிவிட்ட அய்யனார் கோயிலில் வைத்து ஒருமுறை தமிழ்ச்செல்வனிடம் இனி நீங்கள் கொஞ்சம் இருந்து எழுதலாமே ? என்று கேட்டேன்.நேரே அவரைக் கேட்க இயலாத உட்குறும்புகள் என்னை ஏற்றி விட்டு நான் அவரைக் கேட்ட கேள்விதான் இது."நடமாடிக் கொண்டிருக்கும் வரையில்தான் இந்த வண்டி  ஓடும் என்று பதில் சொன்னார்.எனக்கு வாழ்க்கை தொடர்பான பல புரிதல்களை ஏற்படுத்திய பதில் இது.நாம் விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுக் கொண்டிருக்கும் வேலைகளை தொடரும் வரையில் தான் உயிர் இந்த உடலில் தங்கியிருக்கும்.பல காரியங்களை அலுப்புடன் செய்யும் போது அவர் அன்று கூறிய பதிலே ஊக்கமளித்துக் கொண்டிருப்பது.

தமிழ்ச்செல்வன் திருநெல்வேலி அஞ்சல் நிலையத்தில் பணி புரிந்த போது , மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையும் ,சேவியர் கல்லூரி நாட்டார் வழக்காற்றியல் துறையும் இணைந்து நடத்திய திட்டம் ஒன்றில் ; எனக்கு குறுகிய காலம் பணியிருந்தது.சாயங்காலங்களில் அவரை போய் பார்ப்பேன்.எந்த புதிய இளைஞனிடமும் பலகாலம் பழகியது போன்று அவர் பழகும் விதம் இடைவெளிகள் இல்லாதது.ஜெயமோகனின் "பின் தொடரும் நிழலின் குரல்  " நாவல் வெளிவந்திருந்த சமயம்.நானும் படித்து விட்டேன் ,அவரும் படித்திருந்தார்.நம்ம தோழர்களே நல்லா இருக்குன்னு சொல்லறாங்களேப்பா ? உள்ளதத் தான சொல்லியிருக்கார்னு " என்று அவர் குறிப்பிடும் போது ஆழ்ந்த வருத்தம் தொனிக்கும்.இந்த நாவலுக்குப்  பதில் சொல்ல கடுமையாக இருக்கிறது என்பது அப்போது அவர் மனதில் இருந்தது.

காடுமலை என சுற்றித் திரிந்த காலங்களில் அவரும் நானும் எங்கேனும் வழிபாதைகளில் சந்தித்துக் கொள்வோம்.அந்த ஊருக்குப் போறேன் என ஏதேனும் ஒரு ஊர் பெயரைக் காட்டி விட்டு கையில் பிடிகிடைக்கும் பொருளை எனது சட்டைப் பையில் வைத்து , அவசரமாகக் கடந்து செல்வார்.நான் கேட்பதில்லை ,ஆனால் அவருக்கு நம் தேவைகள் என்னவாக இருக்கும் என யூகிக்கத் தெரியும்.எங்கேனும் யாரேனும் அவருக்காக காத்துக் கொண்டிருப்பார்கள்."என்னடா இப்படியிருக்கே "  என்பது வழக்கமாக அவருக்கு என்னைக் காணும் போது சுட்டுக் கிடைக்கிற சொல்.சுட்டும் சொல்.அதில் இப்படியிருக்கீங்களேப்பா என்கிற நிழல் சொல் ஒளிந்து கொண்டு தலை தூக்கிப் பார்க்கும். ஒருபோதும் முன்பு அவர் பார்த்த நிலையில் மறுமுறையில் நான் இருந்ததில்லை.மதுரையில் அவர் ஒருமுறை காணும் போது மொட்டை போட்டிருந்தேன்.அடிக்கடி மொட்டை போட்டுக் கொள்ளும் வழக்கம் அப்போது. சமீபத்தில் ராஜபாளையத்தில் சந்தித்துக் கொண்ட போது "என்னடா இது பத்திரகாளியம்மன் கோவில் பூசாரி போல வந்துருக்க " என்றார்.

இன்று நெடுங்காலத்திற்குப் பிறகு அவரோடு தொலைபேசியில் உரையாடினேன்.எங்கள் கலைக்குடும்பத்தின் மூத்த அண்ணன் அவர்தான்.அண்ணனும் அண்ணியும் நெடுங்காலம் தங்கள் பயணத்தைக் தொடர தம்பிகளின் சார்பில் என் வணக்கம்.வாழ்த்து.

தமிழ்ச்செல்வன் ,சொக்கலிங்கம் போலெல்லாம் வரும் தலைமுறைகளில் வேலை செய்ய ஆளுண்டா தெரியவில்லை.  

நான் ஒரு இந்து

நான் ஒரு இந்து

பச்சையான இந்து.இந்துமதம் நிச்சயமாக ஒரு சார்பான சித்தாந்தங்களையோ,தத்துவங்களையோ ,வழிபாட்டு முறைகளையோ கொண்ட ஒரு மதம் அல்ல.ஏற்கத்  தெரிந்த மதம் இந்து மதம்.இந்துமதத்தின் எல்லா கிளைகளும் தனியானவை தனித்தன்மை வாய்ந்தவை.எல்லா கிளைகளும் சம முக்கியத்துவம் வாய்ந்தவை.இந்து மதத்தின் இந்த பகுதிதான் ஆகச் சிறந்தது,மற்றதெல்லாம் ஆகக் குறை என்கிற வாதங்கள் போக்கற்றவை.அப்படியேதும் கிடையாது.வேதங்களும் முக்கியம் ,வேதங்களை எதிர்ப்போரும் இங்கே முக்கியம் .இந்துமதத்தின் பிரதானமான பிரிவுகளில் இருந்தபடியே  வைதீக கழிவுகளை சாடியிருப்பவர்கள் ஞானிகள் இந்துமதத்தில் ஏராளம்பேர்.கடைசியில் வருபவர் ஸ்வாமி விவேகானந்தர்.இந்துமதம் பற்றிய கண்ணோட்டங்களை ஒருவர் பரிசீலிக்க விரும்பினால் விவேகானந்தரை நோக்கி முதலில் செல்வதே சிறப்புடைய செயல்.

எங்கள் ஊரில் ஒரு தேர்தலின் போது பா.ஜ.கவிற்கு எதிராக நாங்கள் தெருமுனைகள் தொடங்கி பொது இடங்கள் அனைத்திலும் பரப்புரையில் ஈடுபட்டிருந்தோம்.அப்போது ஒருவர் நீங்கள் நல்ல இந்துவாக இருக்கிறீர்கள் .பின்னே எதற்காக பா.ஜ.கவை எதிர்க்கிறீர்கள் ? என்று கேட்டார்.பா.ஜ.கவை எதிர்க்காமல் எனக்கு தூக்கமே வராது  என்பதற்காக நான் பா.ஜ.கவை எதிர்ப்பவன் இல்லை.ஆனால் அவரிடம் ; இந்துவாக இருப்பதால்தான் பா.ஜ.கவை எதிர்க்கிறேன் என்று பதில் சொன்னேன்.இந்துமதம் ஆரம்பித்த அரசியல் கட்சியா பா.ஜ.க என்ன ? பா.ஜ.கவிடம் உள்ள சகிப்பின்மைக்கும் இந்து மதத்திற்கும் தொடர்பே கிடையாது.இந்து மதம் சகிப்பின் தாய்மடி .இதனை உணராத ஒருவர் ஒருபோதும் இந்துமதத்தின் சாராம்சங்கள் அறிந்தவர் இல்லை.

எனக்கு ஆழ்வார்கள் எந்த அளவிற்கு முக்கியமோ அதேயளவிற்கு நாயன்மார்கள் ,சித்தர்கள்,கிளைமரபுக்களை சார்ந்த அனைவருமே முக்கியம்.இதில் அது பெரிது இது சிறிது என்பதெல்லாம் நோயுற்றோர் கொண்டியங்கும் கொள்கைகள்.நடராஜர் யார் என்று தெரியாத ஒருவனுக்கு கிருஷ்ணன் யாரெனவும் விளங்காது.எப்போதுமே நீங்கள் ஆன்மீகத்தில் ஒன்றைத் தொட்டீர்கள்  எனில் மற்றதும் துலங்கும்.அனுபவங்களில் சாதகத்தைப் பொறுத்து சிற்சில மாற்றங்கள் உண்டு.அவை மாயை உருவாக்கும் உருமாற்றம் அன்றி வேறில்லை.புனைவுகளை ,புராண பதிவுகளைத் தாண்டி கடந்து செல்லும் இடம் உண்டு.வைஷ்ணவத்திற்கும் சைவத்திற்கும் இடையிலான ஊதுபத்திகள் அனைத்தையும் இந்துமத ஞானியர் கரை கண்டு கரைத்திருக்கிறார்கள்.பத்மநாப சாமி ஒரு அனுபவம் எனில் அதைக் கொண்டு நடராஜரைப் பழிவாங்கக் கூடாது.ஒன்று கடல் மற்றொன்று மலை என்று எளிமையில் வைத்துப் புரிந்து கொண்டீர்களேயாயினும் கூட இரண்டுமே முக்கியமானவை.சுடலையும் ,இசக்கியும் இந்துமதத்தின் விஷேச அலங்காரங்கள்.இதுபெரிது அது பெரிது என்போன் வீடு பேறு  அடையமாட்டான் என்பதை எழுதி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள்.

சிறுநெறி செல்லாத் திறனளித்து அழியாது
உறுநெறி உணர்ச்சிதந்து ஒளிஉறப் புரிந்து...

- வள்ளலார்.

மதம் யாதாயிலும் செரி
மனிதன் நன்னாயிருந்தால் மதி

-ஸ்ரீ நாராயண குரு

தாழக் கிடப்பாரைத் தற்காப்பதே தர்மம்
- வைகுண்ட சாமிகள்

நாயிற் கடையாய் கிடந்த அடியார்க்குத்
தாயிற் சிறந்த தயாவான தத்துவமே

- மாணிக்க வாசகர்

நட்ட கல்லை தெய்வமென்று நாலுபுட்பம் சாத்தியே
சுற்றிவந்து மொணமொணென்று சொல்லுமந்திரம் ஏதடா

நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம்
கறிச்சுவை
அறியுமோ ?

- சிவ வாக்கியர்

எல்லோரும் எனக்கு முக்கியம்.  இவர்கள் எல்லோரும் எனக்குச் சமம் 

கன்னியாகுமரி பகவதி தேவியலங்காரம்

1

இருநூறு வருட ஜமீன் வீடு
சாலையில் பத்தடிக்கு தாழ்ந்து கிடக்கிறது
ஆனால் ஜமீன் வீட்டு மாடுகளுக்கு ஆயிரம் வயது
அவை சமவெளியில்தான்
மேய்கின்றன
தாழவில்லை

ஒவ்வோர் ஆண்டும் மணல் அள்ளிப் போட்டு
ஜல்லியடித்து
உயரும் தார்ச்சாலைகளை
பள்ளத்துக்குள்ளிருந்து
தலைநீட்டி
எம்மாம் பெரிய ரோடு
என வியக்கும்
சின்ன ஜமீனுக்கு
இன்றைய தேதியில்
துணை
பக்கத்தில் வாழும்
பொய்முலை
இசக்கி

2

காந்திமதியம்மன் இரட்டைச் சடை பின்னல் போட்டு
நகரப்பேருந்தின் ஜன்னலோரம்
தூங்கிக் கொண்டிருக்கிறாள்
தலையசைந்து மோதி மீட்டும்
துயில்

பிறைவடிவ மல்லித் தொடர் கூந்தல்

திரையிசைப் பாடல்களுக்கு ஏன்
பாடிக் கொண்டிருக்கிறோம் ? என்னும் திசைக் குழப்பம்

உச்சி வெயிலில்
நெல்லையப்பர்
நடையடைத்திருக்கிறது

3

அபிராமி துவைத்துக் போட்ட ஆடைகள்
மேல்மாடிக் கொடியில் ஆடுவது பார்த்து
திரும்பிக்
கொண்டிருக்கும் தம்பி

நேற்றே குளியலறையில் யாருக்கும் தெரியாமல்
சோப் திருடிய திருடருடன்
சென்றிருக்கிறாள்
திரும்பி வர நாளாகும்

அபிராமிக்கு மட்டும் பின்புறம் எப்படி
கச்சிதமாய் அமைந்திருக்கிறது
என்று வியக்கும்
பேய்முலைகள் கண்ட
கவிஞா

கோடி பிரகாசக் குழந்தையை
எடுத்துக் கையில்
வைத்துக் கொள்ள விரும்பும்
ஞானக் குருவே

கோமளவல்லி நீங்கள் தொட்டதும்
இறங்கி
ஓடுகிறாள்
பாருங்கள்

மென்முலைதான்
எடுத்தால்
கற்சிலை

கற்சிலைதான்
அப்பாமல்
நின்றாலோ
ஆனந்த வல்லி
அபிராம சுந்தரி

4

கட்டிடத்தில் நுழைந்தேன்
வேலைப்பாடுகள் ,நுட்பங்கள் ,நறுமணம்
எல்லாம் உணர்ந்தேன்
பின்பு கட்டிடத்திலேயே உட்கார்ந்த போது
எதையும்
காணவில்லை

நானிலத்தின் நகரும் சமவெளி
எவ்வளவு தினுசு ?
எல்லையில்லா தூரம்
பின்பு அருகிருந்தேன்
எதையுமே
காணவில்லை

சுகந்தம்
களபம்
சாமியின்
வாசனை
சுற்றித் திரவியம் எடுப்பதற்குள்
காலியாயிற்று
குடுக்கை

அப்படியானால் முதலில் இருந்தவன்தான்
நான் என்று சொல்லலாமா
என் செல்ல மாணவர்களே ?

இரண்டாவதுதான் நீ என்பவர்கள்
துரிதமாக
வந்து சேருங்கள்
நாமினி
புதிய இடம் நோக்கிப்
புறப்படுவோம்

5

கன்னியாகுமரி பகவதி தேவியலங்காரம்

மெல்ல புலரியின் இருள்மேனி திறக்க
அம்மை நின்று கொண்டிருக்கிறாள்
கடலடி சத்தத்தின் மேலே

பாலாபிஷேகத்தில் முலையிடை வழியாக
நழுவிய
என் மனம் துயில் எழும்புகிறது
மேற்கு மலைகளில் சூரிய பிரகாசம்

நீதானே அழைத்தாயம்மா
ஏனென்று சொல்லேன் ?

மலைகள் துயில் எழ
இருள் மத்தியில் இருந்து
நுரைக்கும் கடலில்
என் மேனி மலர்வதைக் கண்டாயா ?

எத்தனை முறை தவற விட்டேன் அம்மா
சோர்வால் ஒரு முறை
அழுத்தத்தால் ,கொடும் அகந்தையால் பல முறை
துக்கத்தில் தூக்கத்தில் என என

சந்தனம் முகத்திலேறி
வைரம் ஜொலிக்க
பட்டிற்குள் சிறு முலைகள் மறைந்து கொள்ள
கண்ணாடி பிம்பத்தில் சிறுமிக்கு
மேக்கப் முடிவுறுகிறது

கருவறையிலிருந்து வெளியேறி திறந்து
கைபிடித்து
நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம்
முதல் சூரியோதயத்தை
இணைந்து

[ தேவிக்கு சமர்ப்பணம் ]

பா.ஜ.க அடுத்த முறை ஆட்சிக்கு வரக்கூடாது.

பா.ஜ.க அடுத்த முறை ஆட்சிக்கு வரக்கூடாது.

கொஞ்சம்  கொஞ்சமாக அவர்களின் அதனை வேஷங்களும் கலைந்து கொண்டிருக்கின்றன .மீண்டும் அவர்கள் ஆட்சிக்கு வந்தால் சர்வாதிகாரத்தின் உச்சநிலையை அடைவார்கள் என்பதில் சின்ன சந்தேகங்களும் வேண்டியதில்லை.அறிஞர்கள் ,பன்முகப் பார்வை கொண்டோர்கள் ஒருவர் கூட அக்கட்சியில் இல்லாதது ,அல்லது அவர்களால் இவர்களை பாதிக்க இயலாது என்பது நிரூபணம் ஆகிறது . இது  அவர்களுடைய மாபெரும் துரதிர்ஷ்டம் .வாய்ப்பு கிடைத்தால் பேன் பார்க்க தொடங்கி விடுவார்கள் என்கிற ஐயம் உண்மையாகி கொண்டிருக்கிறது

பழமைவாதம் மட்டுமே  நிறைந்த ஒரு வீட்டிற்குள் இருந்து கொண்டு,நான்கு பேர் என்ன முடிவுகள் எடுப்பார்களா ,அது போலவே மொத்த நாட்டிற்கும் அனைத்து விதமான,  இந்திய துணைக் கலாச்சாரங்கள்  அத்தனைக்கும் சேர்த்து அவர்கள் முடிவெடுக்கிறார்கள்.இதனை அவர்களுக்கு புரிய வைப்பதற்கோ ,அப்படியில்லை விஷயங்கள் என்பதனை படிப்பித்து கொடுப்பதற்கோ வாய்ப்புகள் இல்லை .காரணம் அறிவுலகத்தின் மீதும் ,பிற கலாச்சாரங்கள் மீதும் அவநம்பிக்கை மட்டுமே கொண்டவர்கள் அவர்கள் . ஒற்றைக் கலாச்சாரம் தவிர்த்து பிற எவற்றின் பேரிலும் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை  என்பதை  மீண்டும் மீண்டும் தெளிவுபடுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.தாங்கள் ஒரு மூடர் கூடம் என்பதை பகிரங்கமாக நிரூபிக்கிறார்கள்.

அரசு அமைப்புகள் அனைத்தையும் அதிகாரத்தால் கறையுண்டாகுகிறார்கள்.அது ஏற்கனவே கறை கொண்டிருந்ததுதான்.இவ்வளவிற்கு நலிவடைவது இப்போதுதான்.நீதித்துறை உட்பட உயர் அரசு அமைப்புகள் எல்லாம் முடங்கியுள்ளன.அரசு உணர்வதை செயலாக்கும் கருவிகளாக அவை அனைத்துமே மாற்றப்பட்டிருக்கின்றன.பண்பாட்டாளர்கள்,எழுத்தாளர்கள் ,கவிஞர்கள் ,கலைஞர்கள் அரசாங்கத்தால் உளவு பார்க்கப் படுகிறார்கள்.ரஷ்யாவில் ஸ்டாலின் காலத்தில் இருந்ததை போல.ஒரு அவசரகால பிரகடனத்தின் கீழ் பொதுமக்கள் வாழ்வது போன்றதொரு பிரக்ஞய் செயல்பட்டுக் கொண்டே இருக்கிறது.

தங்கள் கட்சிக்குள்ளேயே மாறுபாடு கொண்டோர் இருப்பார்கள் ஆயினும் அமைப்பு அவர்கள் மீது பாயுமளவிற்கு மோடி பதற்றத்தை ஏற்படுத்துகிறார் அரசு அமைப்புகளை பயன்படுத்தி.இசைவற்றவர்கள் மீதெல்லாம் அமைப்பு ; அவர்கள் தப்பிக்க இயலாத காரணங்களை முன்வைத்து பாய்வது என்பது முன்னெப்போதும் கண்டிராத விஷயங்கள்.இந்த பண்பு தனிமனித சர்வாதிகாரத் தன்மையை நோக்கி அரசாங்கத்தைக் கொண்டு செலுத்தக் கூடியது.சோனியாவும் ,ராகுலும் தகுதியற்றவர்களாக இருக்கலாம்.ஆனால் காங்கிரசில் தான்தோன்றித்தனமாக யவர் ஒருவரும்  முடிவுகளை எடுப்பது கடினம்.இன்னும் அங்கே   நிறைய தலைவர்கள் , அரசியல் வல்லுநர்கள் , நிபுணர்கள் இருக்கிறார்கள்.

காங்கிரஸ் எவ்வளவு தகுதி இழந்த நிலையிலும் கூட நிறைய நிபுணர்களையும் கொண்ட கட்சி.அது நிச்சயமாக மூடர் கூடம் இல்லை.

பா.ஜ.க நிறைய பாடங்கள் கற்க வேண்டியுள்ளது.ஒற்றைக் கலாச்சாரம் என்னும் அவர்களுடைய கோட்பாடு தொடர்ந்து வெளிப்பாட்டுக் கொண்டே இருக்கிறது மிக மிக வேகமாக.இது கிளர்ச்சியையும் நாசத்தையும் விளைவிக்கக் கூடியது.

காங்கிரஸ் ,இடதுசாரிகள் தங்கள் பார்வைகளில் கொண்டுள்ள கலோனியல் எச்சங்களை கைவிட்டு விட்டு , பா.ஜ.கவை அதிகாரத்தில் இருந்து இறக்குவதற்கு தங்களை முதலில் தகுதிபடுத்திக் கொள்ளவேண்டும்.

தார்மீகரீதியிலான பின்னடைவை பா.ஜ.க தொடர்ந்து அதிகாரத்தில் இருந்தால் இந்தியாவில் ஏற்படுத்தப் போவது உறுதி.

மாடு அதிகம் தின்றால் கொழுப்பு புரையேறும் என்பது உண்மைதான் ,ஆனால் தயிர் சாதம் மட்டுமே தின்று கொண்டிருந்தால் மூளை பிறழ்வு ஏற்பட்டு விடும் என்று தோன்றுகிறது.

பால்ய கால நண்பன் தேடி வந்திருந்தான்

பால்ய கால நண்பன் தேடி வந்திருந்தான்

நீ இன்னும் பால்ய காலங்களையே தேடித் கொண்டே இருக்கிறாயா ? எனக் கேட்டேன்.அவனுக்குள் இருந்த சிறுவனுக்கு நான் என்ன கேட்கிறேன் என்பது விளங்கவில்லை.பால்ய காலங்களை மீண்டும் தேடித் செல்வது நரக ஒத்திகையில் நன்றாக  ஈடுபடுவது.அந்த காலம் எங்குமே கிடைக்காது.நினைவில் வாழுகிற மிருகம் அது.பழைய காதலியை தேடித் செல்வதை ஒத்தது இந்த பயணம் .அப்படியே கண்டு பிடித்து விட்டால் இவள் ஏன் இப்படியிருக்கிறாள் என்று தோன்றும்.எல்லாமே மாறிவிட்டது என்று சொன்னான்  ஜவகர்.ஒன்றுமே மாறவில்லை நாம்தான் மாறியிருக்கிறோம் என்று சொன்னேன் நான்.காலமும் வாழ்வும் சதா நம்மைப் புரட்டிப் போட்டுக் கொண்டே இருக்கிறது. பால்யம் நினைவில் நின்றெரிதலே சுகம்.

ஏராளமான வடுக்கள்,முகம் களைத்துப் போயிருக்கிறது.வாழ்க்கை எத்தனை முறை அவனைப் புரட்டியடித்திருக்கும் ? ஆனாலும் அவனுள் வசிக்கும் சிறுவன் அப்படியே உளம் வாடாமல் இருக்கிறான்.அந்த சிறுவன் வா... நாம் சென்று பழைய விளையாட்டுகளை விளையாடுவோம் என்று அழைக்கவில்லை  .அழைக்கும் தைரியம் இப்போது அவனிடம் இல்லை.அந்த கொதிகலன் அவனுள் உடைந்து விட்டது.

ஜவகர் என்னுடைய ஆரம்ப காலக் கதைகள் சிலவற்றில் இடம் பெற்றிருக்கிறான்.அப்படியே அல்ல.என்னுடைய கதா   பாத்திரங்கள் யாருமே அப்படியே வந்து கதைகளில் உட்கார்வது கிடையாது.உடுப்புகளை மாற்றிவிடுவேன்.உறுப்புகளையும் மாற்றிவிடுவேன்.கதைகளில் வருகிறவர்கள் பிறிதொன்றாக மாறி விடக் கூடியவர்கள். அவர்களை நானே கூட அப்படியே தேடுவதில்லை.அவர்களின் ஒரு சொட்டுக்குப் பெயர் சூட்டியிருப்பேன் அவ்வளவுதான்.

கடல் நண்டுகள் பிடிப்பதில் பலே கில்லாடி ஜவகர்.கடலுக்குள் இறங்கி பாறைகளில் கையிட்டுப் பிடித்து கரைக்கு எடுத்து வருவான்.ஒருவகையில் பார்த்தால் அவன் பிடித்துக் கொண்டுவருகிற நண்டுகள்தான்   எங்கள் பால்யம்.அது அத்தனை சுவையானது ?.கடற்கரைகள் முழுக்க எங்கள் பகுதிகளில் பெரிய பெரிய தேரிக் காடுகள் .உயரம் உயரமான மணல் தேரிகள்.பெரியவர்கள் எங்களை வேறு திக்குகளில் தேடித் திரிவார்கள்.நண்டுகள் பிடிக்கக் கூடாது என்பார்கள் .எங்களுக்குள் பால்யம் தந்த ஊற்று இந்த நண்டுகள் என்பதை அவர்கள் உணர்ந்தார்கள்.நாங்களோ மீண்டும் மீண்டும் நண்டுகள் பிடித்துக் கொண்டிருந்தோம்.

ஒருமுறை கிறிஸ்மஸ் அன்று  ஜவகர் காணாமல் போய்விட்டான் .காணாமல் போனவனைக்  காட்டிலும் பிற குழந்தைகள்தான் பெரியவர்களிடம் மாட்டிக் கொண்டோம்.ஏன் நண்டு பிடிக்கப் போகக் கூடாது என்பதற்கு அவர்களுக்குத் தெளிவான காரணம்  அன்று கிடைத்திருந்தது.விடியற்காலை வரையில் கடற்கரையெல்லாம் தேடித் கொண்டே இருந்தோம்.அவனை அலைகள் இழுத்து சென்று வேறு ஒரு துருவத்தில் கொண்டு   செல்ல மீனவர்கள் மீட்டு வீட்டிற்கு அனுப்பி வைத்தார்கள் .அது போன்ற ஒரு நாளாக இருந்தது அவனோடு இன்றிருந்த நாள்.

அவன் விடைபெற்றுச் சென்ற பிறகு என்னுடைய சிறுவன் என்னுடைய மடியில் ஏறி அமர்ந்திருப்பதை உணர்ந்தேன்.அவன் கொண்டு வந்து சேர்த்த பால்யத்திற்கு நன்றி.

கேட்பவரே

கேட்பவரே

ஒரு கவிஞனோடு ,எழுத்தாளனோடு அறிமுகம் கிடைத்த மாத்திரத்திலேயே என்ன தொழில் செய்கிறீர்கள் எனக் கேட்காதீர்கள் .நீங்கள் புதிதாக அறிமுகம் ஆகிற ஒரு நபரின் பிறந்த சாதியை அறிய எந்த ஊர் ? என கேட்பதைப் போன்ற அநாகரீகம் இது.நான் ஒரு நடிகன் என வைத்துக் கொள்வோம் ,நீங்கள் எடுத்த மாத்திரத்திலேயே என்ன தொழில் செய்கிறீர்கள் என கேட்பீர்களா ? ஓவியன்,இசைக் கலைஞன் ,நடனக் கலைஞன் என்றால் இந்த கேள்வியைக் கேட்பீர்களா ? ஒரு விஞ்ஞானியை இந்த கேள்வியால் எதிர் கொண்டிருக்கிறீர்களா ? எழுதுகிறவனை என்ன தொழில் செய்கிறீர்கள் ? என கேட்கிற சமூகம் ,இனம் கேடு தெளிய இன்னும் வெகுகாலம் ஆகும்.இதில் என்ன விளக்கெண்ணெய் தமிழ் தேசியம் வேண்டிக் கிடக்கிறது ? .கடந்த ஒரு நூற்றாண்டில் மட்டும் தமிழில் என்ன நடந்திருக்கிறது என்பதை அறியத் தெரியாத  ஒருவன் , தான் ராஜராஜ சோழனின் தந்தை ,கொள்ளு பேரன் என்றெல்லாம் கூவித் திரிதல் மனகுரங்கின் சிரங்கை சொரிந்து திரிதல் போல.

அறிமுகம் தொடங்கிய மாத்திரத்திலேயே உளவறியத் தொடங்குவது ஆகாத மனநிலை.கொஞ்சம் பழக்கம் கூடிய பின்னர் உளவறியத் தொடங்குதல் அதனினும் ஆகாத மனநிலை.தமிழர்கள் பொதுவாக பெரும்பாலும் துப்பு சுல்தான்கள். நான் படித்த ,பின்பற்றிய ,பழகிய  தமிழின் எந்த முக்கிய எழுத்தாளனின் சொத்து மதிப்பும் எனக்குத் தெரியாது.சமூக மதிப்பும் எனக்கு அவசியப்பட்டதில்லை.பிரான்சிஸ் சாக்கடையில் இருந்து எழுந்து வந்தாலும் முத்தமிடுவேன்.பாலை நிலவன் மதுக்கடையை பொத்துக் கொண்டு வந்தாலும் முத்தமிடுவேன்.

பொதுவாக தரகர்களிடம்தான் தனிமனிதர்களிடம் உளவறியும் தன்மை அதிகம்.இங்கே தமிழ் சமூகம் மொத்தமுமே தரகர் மனநிலையில் இந்த கேள்விகளைக் கேட்டுத் திரிதல் பச்சை ஆபாசம். பெண்தரகர்களுக்கென்று தனித்த மனோபாவம் உண்டு.உங்களுக்குத் பெண்குழந்தை இருக்கிறதா ? என்கிற கேள்விக்கு அவனிடம் பதில் சொல்லி விட்டீர்கள் எனில் உடனேயே திருமணமாகி விட்டதா ? என்று கேட்பான்.அது தொடக்கப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தாலும் கூட.திருமணமாகி விட்டது இரண்டு நாட்கள் ஆகின்றன , என்றால் எத்தனை குழந்தைகள் ? என்பான்.அவனுக்கு கேள்விதான் முக்கியம் பதில் முக்கியமில்லை.இதுபோலத்தான் மொத்த சமூகமும் பலசமயங்களில் உள்ளது.

என்னிடம் ஊர் கேட்பவர்களை உடனேயே புரிந்து கொள்வேன்.பச்சென்று முகத்தில் அடித்தவாறு எனது சாதியைச் சொல்லிவிடுவேன்.இல்லையில்லை,இதற்காகக் கேட்கவில்லை என்று நவுசுவார்கள்.இல்லையில்லை இந்த பதிலை நான் சொல்லவில்லையானால் இன்னும் இதன் தொடர்ச்சியில் நீங்கள் கேட்கும் நான்கைந்து கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டியிருக்கும்,என் இருப்பிடத்தை வைத்து உங்கள் கேள்விக்கு  விடையறிதலும் கடினம்.உங்களுக்கு திருப்தி ஏற்படாது. எதற்கிந்த பொருள் விரயம் ? அதிலும் என்னுடைய சாதியை பற்றி பலவாறு யூகங்கள் உண்டு.என்னை இன்னார் இன்னார் இன்னார் என்றே  நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.அது நல்லதுதான்.இதையெல்லாம் அறிந்து எனக்குப் புதிதாக பெண் பார்க்கவா போகிறீர்கள் ? இல்லை எனக்கேதும் நீங்கள் நினைப்பது போன்ற தொழிலில்லையென்றால் ஏதேனும் நீங்கள் உத்தேசித்து போன்ற  தொழில் தரப் போகிறீர்களா ? எதற்கு உங்களுக்கு இந்த வீண் வேலை ?

ஏராளமான தொழில்கள் செய்திருக்கிறேன்.வேலைகள் பார்த்திருக்கிறேன்.எந்த சந்தர்ப்பத்திலும் இந்த கேள்வி எனக்கு இடையூறான கேள்வியாக இருக்கிறது.சுமார் இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாக எழுதிக் கொண்டிருக்கிறேன்.அறிமுகம் ஆனவுடன் என்ன புத்தகங்கள் எழுதியிருக்கிறீர்கள் ?என்று கேட்டால் கூட அதில் நியாயம் இருக்கிறது.துரத்தித் துரத்திக் கேட்டுக் கொண்டேயிருக்கிறார்கள் தமிழில் இந்த கேட்பவர்கள்.

என்னுடைய " கேட்பவரே " கவிதைத் தொகுப்பிலுள்ள ஒரு கவிதையின் தலைப்பு இந்த கேட்பவரே ...

கேட்பவரே
------------------

என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்
என எப்போதும் என்னை நோக்கிக் கேட்பவரே

ஆடு மேய்கிறேன்
உரியும் வெயிலில்
உங்கள் வீட்டின் புதிய கட்டிடப்பணியில்
கையாளாயிருந்தேன்
சுவர் வலிக்கக் கையுடைத்து
உங்கள் வீட்டு மின்வெளிச்சம்
நான் சரிப்படுத்தியது நான்தான்  
மேலாக

உங்கள் மேல்நாட்டுக் கழிப்பறை
உடைந்து ரத்தம் சிந்திய போது
உங்களுடைய
" ஆண்கள் பெண்கள் குழந்தைகளின் "
மல ஓட்டத்தைக்
கையுறையின் மனபாரம் ஏதுமற்று
கையாண்டு
எனது சுதந்திரத்தைப் பிரகடனப்
படுத்தியவனும்
நானே

பிச்சையும் எடுக்கிறேன்
அதில் பாதியை தானமும் செய்கிறேன்
கொள்ளளவு தெரியாமல் குடிக்கிறேன்
இதை ஒப்ப ஒரு செயலாகத் தான்
கவிதைகளையும்
எழுதிக் கொண்டிருக்கிறேன்

உங்களால் இயலாததையெல்லாம்
சதா செய்து கொண்டேயிருக்கும் எனை நோக்கி
கேட்டுக் கொண்டேயிராதீர்
கேட்பவரே


ரஜினி அரசியலுக்கு வருவதுதான் தமிழ்நாட்டுக்கு நல்லது

ரஜினி அரசியலுக்கு வருவதுதான் தமிழ்நாட்டுக்கு நல்லது

தமிழ்நாட்டின் அடுத்த முதல்வராக ரஜினி காந்த் மக்களால் தேர்வு செய்யப்படுவார் எனில் ; தமிழ்நாட்டின் அடுத்த முப்பதாண்டு காலம் தொடங்கி விடும்.தமிழ் நாட்டு மக்களால் தலைவராக ஏற்றுக் கொள்ளப்பட பிரபலமும் ,புகழும் ,மக்கள் சக்தியும் அவசியம்.வெற்று தொழில் அதிபர்கள்,வியாபாரிகள் ,கல்வியாளர்கள் அதிகாரத்தில் துணையாக பங்கு பெற முடியுமே தவிர , தானைத் தலைவனாகவோ தலைவியாகவோ ஆக முடியாது.வெற்று தொழில் அதிபர்களையும் ,வியாபாரத்தின் பின்னணியிலிருந்தும் மேலதிக அரசாங்கம் பந்தாடுவதை நாம் நேரடியாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.மக்கள் சக்தி அவர்களிடம் இல்லை என்பதே அதற்குக் காரணம்.

ப.சிதம்பரம் வரையில் வேட்டையாடப்படுகிறார் என்றால் நிலை என்ன என்பதை யூகித்துக் கொள்ளுங்கள்.ப.சிதம்பரம் சாதாரணப்பட்ட ஆளில்லை.ஆனால் சுயசாதிப் பின்னணி கூட சரியாக அமைய பெறாதவர். மக்கள் சக்தியற்றவர்.பீட்டர் அல்போன்ஸ் மட்டும்தான் அங்கே பொய் நிற்க முடிகிறது. ஆனால் அவரை வேட்டையாடுபவர்களுக்குத் தெரியும், அவருக்கும் தங்களை மீண்டும் வேட்டையாடுவதற்காக வாய்ப்புகள் மீண்டும்  வரக் கூடும் என்பது. மட்டுமில்லாமல் தமிழ்நாடு ,ஆந்திரம் போன்ற பெரிய தேசிய இனங்களைக் கொண்ட மாநிலங்களுக்கென்று பிரத்யேகமான சில பண்புகள் உள்ளன.அவற்றை என்ன என்று விசாரிப்பது இப்போதைய என்னுடைய நோக்கமல்ல.

ரசிகர்கள் மத்தியில் இன்று ஆற்றப்பட்ட  ரஜினியின் உரை மக்களின் முன்பாக பேசப்பட்ட மிகவும் நூதனமான ஒரு உரை.உள்ளடுக்குகள் நிறைந்தது.மிகவும் தெளிவான ஒரு அரசியல் உரை அது.எல்லாவிதமான தமிழ்நாட்டு அரசியல் கிளைகளையும் முன்வைத்து ஆற்றப்பட்ட உரை அது. இந்த உரையைக் கேட்டதிலிருந்து தமிழ்நாட்டின் அடுத்த முதல்வராக வரக் கூடிய ஒருவரின் சப்தம் அது என்று தோன்றிக் கொண்டே இருக்கிறது.ராமதாஸ் உட்பட,சீமான் உட்பட பிரதிநிதித்துவம் கொண்ட எல்லோரையும் கருத்திற்கொண்டு அவர்  உரை அமைந்திருந்தது . பிராமணர்களையும் அனுசரிப்பேன் என்பதின் பொருட்டே சோ.ராமசாமி அவர் பேச்சில் இடம் பெற்றார்.பிராமணர்களின் சாய்வு இல்லாமல் தமிழ்நாட்டில் காமராஜ் உட்பட எவருமே  முதல்வர்கள் ஆனதில்லை.பிராமணர்களில் அன்றாட பிராமணர்கள் ராஜாஜியை ஆதரிப்பவர்களாகவும் ,முற்போக்கு பிராமணர்கள் காமராஜை ஆதரிப்பவர்களாகவும் இருந்தார்கள். திருமாவளவன்  பேரில் ரஜினிக்கு உள்ள மதிப்பு என்பது எப்போதும் தலித்துகளுக்கு சாதகமற்றுப் போகாது என்பதை சூசகமாக வெளிப்படுத்துகிறது.இது மிகவும் குறிப்பிடத் தகுந்த விஷயம்.

தமிழ்நாட்டில் முன்னைக் காட்டிலும் சாதி பிளவுகள் கூர்மையடைந்திருக்கின்றன.தமிழ்நாட்டின் எந்த குறிப்பிட்ட சாதியிலிருந்து ஒரு தலைவன் வந்தாலும் ,அவன் தற்போது அந்த குறிப்பிட்ட சாதியின் அடையாளமாகத் தான் பார்க்கப்படுவானே அன்றி , பொதுமக்கள் தலைவனாக தமிழ்நாட்டைச் சார்ந்த ஒருவர் ஏற்கப்படுவதற்கான சாத்தியங்கள் இல்லை.ஒவ்வொருவரையாக மனம் எண்ணி யோசித்துப் பார்த்தால் இது விளங்கும்.அப்படி யாரும் இல்லை என்பதும் தெரியும்.சட்டியில் இருப்பதிலிருந்துதானே அகப்பையில் வரும்.இல்லாததை பேசுவதில் ஒரு பலன் கிடையாது.நடைமுறையிலிருந்து அனைத்து தரப்பு மக்களையும் அனுசரிக்கும் பண்பு கொண்ட ,மக்கள் சக்தி மிக்க தலைமையே தமிழ்நாட்டிற்குத் தேவை.அது ரஜினியிடம் இருக்கிறது. மேலும் தமிழ்நாட்டைச் சார்ந்தவராக அல்லாத ஒருவரையே வெகு மக்கள் தமிழ்நாட்டில் விரும்புகிறார்கள் என்பதற்கும் சமூகவியல் காரணங்கள் நிறைய உள்ளன.

மற்றபடி ரஜினி முதல்வர் ஆவதை தனிப்பட்ட முறையில் விரும்புவார்களா? என  நீங்கள்  கேள்வி எழுப்புவீர்களேயாயின் "ஆம் "என்றே பதில் சொல்வேன் நானொரு கமல் ரசிகன் என்றாலும் கூட.எல்லாம் நானோ ,நீங்களோ விரும்புவது  மட்டுமே உலகத்தில் நடக்க வேண்டுமாயின் ,தனி உலகத்தை ஏற்படுத்திக் கொண்டு குகைகளுக்குள்தான் செல்ல வேண்டியது வரும்.அரசியல் என்பது இப்போது சக்தி மிக்கதாகவும் ,அனைவரையும் அனுசரித்துப் போகும் தன்மை நிரம்பியதாகவும்  இருக்க வேண்டியது அவசியம்.அது ரஜினி ஒருவரால் மட்டுமே சாத்தியமாகும் இங்கே என்று உறுதியாக நம்புகிறேன்.குறிப்பாக மத்திய அரசாங்கத்திற்கு வீட்டிற்குள் நுழைந்து ரைடு நடத்தும் தைரியம் வரவே கூடாது.மற்றபடியுள்ள காரியங்களேயெல்லாம் வகுத்தது வகுத்தபடி நடக்கும் .எடப்பாடிக்கு பா.ஜ.க சாய்வு ஏற்படுவதற்கும் ,ரஜினிக்கு பா.ஜ.க சாய்வு ஏற்படுவதற்கும் ஏணி வைத்தாலும் எட்டாத வேறுபாடுகள் உண்டு.ரஜினியை மத்தியில் இருந்து ஓரளவிற்கு மேல் யாரும் கட்டுப்படுத்த முடியும் என்று தோன்றவில்லை.மக்கள் பின்னிருக்கும் போது கிடைக்கிற பலம் அது.

கொள்கை பேசிகள் ஐம்பது வருடத்திற்கு பழமையானவர்கள்.நிலவுடமை மனோபாவம் கொண்டவர்கள்.நிலவுடைமைவாதிகள் அனைவருமே சாதியை மேல்புறமாக எதிர்த்து கோசங்கள் எழுப்பினாலும் சாதியவாதிகளே. நேரடியாகவே இங்குள்ள நவீன தலைவர்கள் பலரை  அறிவேன்.அவர்கள் பனங்காடுகளிலிருந்தே இன்னும் வெளியேறத் தெரியாமல் பரிதவிக்கும் நரிகள் என்பதை. பழைய தலைமுறை இருபுறமும்  சாய்ந்து விட்டதுதான் அனைவருக்கும் தெரியுமே?

இரண்டு கவிகள் இரண்டு விதம் - தேன்மொழி தாஸ் - சூர்யா

இரண்டு கவிகள் இரண்டு விதம் - தேன்மொழி தாஸ் - சூர்யா

ஒரு கவிதையை ஏன் உங்களுக்கு பிடிக்காமற் போயிற்று ? எனக் கேட்டு வாசகனை வற்புறுத்த இயலாது.பிரம்பு கொண்டு அடிக்கவும் முடியாது. சிறந்த கவிதைகள் வாசகனுக்கு இயலாமற் போய் விடக்கூடிய சாத்தியங்கள் உண்டு.அதனால் சிறந்த கவிதைகள் அத்தனையும் வாசகனுக்கு அந்நியமானவை என்று முடிவு செய்ய இயலாது.பொதுவாக நல்ல கவிதைகளுக்கு தானாக வாசகனைச் சென்றடையும் கரிசனம் உண்டு கால தாமதம் ஏற்பட்டாலும் கூட.. கவிதையின் நடிப்பு காத்திருப்பது அதனையும் நோக்கித்தான்.அது சில வரைபடங்களை வரைந்து வரைந்து சமர்ப்பிப்பது அதன் வினோத நடிப்பை ஏதேனும் ஜீவி அறிந்து கொள்ளும் என்கிற தவிப்பின் அடிப்படையிலேயே.எனவே கவிதையை பொறுத்தமட்டில் உதாசீனமாக கடந்து செல்வது ஆகாத பழக்கம்.வாழ்க்கையின் எந்த துருவத்தில் இருந்தாலும் கூட கவிதை நளினம் செய்வது ,வரைந்து தன்னை வெளிப்படுத்துவது  தொடர்பின் அடிப்படையிலேயே

எண்பதுகளின் கவிஞர்கள் தங்களை மனித குலத்திற்கு விளங்காத அரூபிகளாக  நடித்துக் காட்டினார்கள் .அப்படியவர்கள் நடித்துக் காட்டியமைக்குப் பொருள் கிடையாது என்று சொல்ல முடியாது.சிவாஜி,எம்.ஜி.ஆர்.காலம் அது. ஆனால் அந்த இருள் மனோபாவம் தற்போது தமிழில் காலம் சென்று விட்டது என்று தோன்றுகிறது.அந்த மனோபாவம் நான் மட்டுமே  மேன்மையானவன் என்பதில் அடங்கியிருந்தது.இப்பொது அப்படியான ஒரு மனோபாவமும்,வெளிப்படுத்தும் முறையும் கேலிப்பொருளாகி விடும்  .

"நீயோ நானோ விஷேசமானவர்கள் ஒன்றும் கிடையாது ஆனால் நீ கண்ட விசித்திரத்தை மட்டும் சொல் பீடிகைகளை அகற்று " என்கிற வாசகர்கள் உருவாகிவிட்டார்கள்.இது ஒரு குறிப்பிடத்தகுந்த வாசக மாற்றம் என்றே கருதுகிறேன்.இந்த மாற்றத்தின் உக்கிரத்தைத் தமிழில் அடைந்திருப்பதை கண்டராதித்தனின் சமீபத்திய கவிதைகள்.சபரி நாதனின் லெகு தன்மை ஆகியவற்றினுடே விளங்க முடியும். சிவாஜி கணேசன் போலவே எல்லா காலத்திலும் நடித்துக் கொண்டிருந்தால் அது போலி நடிப்பென்றாகி விடும் .இசை,நடனம் எல்லாமே கால மாற்றம் கொள்வது போன்ற கவிதையில் ஏற்படும்  மாற்றமே இதுவும்.

எனினும் தத்துவத்தின் விசாலமான அறிவு,அனுபவ விசாலம் ,இவற்றையொட்டி கவிதை எட்டுகிற மகா தரிசனம் எல்லாம் கூடி இணையும் போது    கவிதைகள் சிறப்புப் பேறு பெறுகின்றன.சிலர் முக்கி முக்கி எழுதுகிறார்கள் ஆனால் ஒருபோதும் இவர்கள் கவிதைகள் எழுத முடியாது என்பது அவர்கள் எழுதுபவற்றை வைத்து தெரிந்து விடுகிறது.சிலருக்கு கவிதை பற்றின சகல பொருள் விளக்கமும் தெரிகிறது ,கவிதை மட்டும் வரவில்லை .அவர்களிடம் நமக்கு எடுத்துச் சொல்கிற தைரியம் ஏற்படுவதில்லை.உள்ளூர அவர்கள் மிக விரைவிலேயே இவற்றிலிருந்து விடுபட்டு விடுவார்கள் என்பதும் விளங்கி விடுகிறது.சிலர் தாங்கள் எழுதுகிற கவிதைகள் மிகவும் சிறப்பானவை என்றோரு துண்டுச் சீட்டும் இணைத்து படிக்கச் சொல்லும் போது ,துண்டுச் சீட்டைப் படித்து விட்டு விலகி ஓடி விடுகிறோம்.பைத்தியங்கள் அபாரமாக எழுதுகின்றன.அதற்காக பைத்தியங்கள் போல நடித்துக் காட்டுபவர்களையும் நம்மால் விலகிட முடியும்.ஒன்றையும் தீர்மானித்துச் சொல்ல இயலாவிட்டாலும் கூட கவிதை என்பதே பெரும் போக்கு,இயக்கம் ஒரு மொழியில் .மனவோட்டத்தின் வெளி.

அண்மையில் வாசித்தவற்றில் ஈர்ப்பை ஏற்படுத்திய கவிதைகளில்  ஒன்று தேன்மொழி தாஸின் "சூனு"  .மற்றொன்று "மரணத்தின் நடனம் " என்கிற சூர்யாவின் கவிதை.

"சூனு " விந்தையும் விசித்திரமும் ஒருங்கே அமையப்பெற்ற சிறந்த கவிதை.இப்படி எவர் ஒருவர் ஒரு மொழியில் சிலவற்றைப் படைத்து  விட்டாலும் அவர் சிறந்த கவி என்பதில் சந்தேகமே இல்லை.இவர்களே படைக்கிற மற்றொரு கவிதை ,  இதன் பக்கத்தில் வைத்தே படிக்க இயலாததாகவும் இருக்கலாம்,அப்படித்தான் இருக்கவும் செய்யும்.எல்லாமே செம்மையாக இருந்தால் அது கவிதையல்ல,செய்யுள் .தமிழ் கவிதைக்கென்று ஒரு பெருந்தொகுதி உருவானால் தேன்மொழி தாஸின்  இந்த கவிதையைத் தவிர்க்கவே முடியாது.இல்லாத கர்ப்பத்தின் மாயை காமத்தில் இழையும் மந்திரம் இந்த கவிதையில் பெரும் உயரம் நோக்கிஎழும்புகிறது.

சூனு
~~~~~
இரும்புக் கதவொன்றில் உனது பிஞ்சுக் கை அசைந்து கொண்டேயிருக்கிறது
சூனு
யாரும் நம்புவதில்லை
எனக்குள் நீ வளர்வதை வாழ்வதை
சோப்புக் கரைசலால் குமிழ் படைக்க
மூச்சுக் காற்றை ஊதுவது போல்
நீ கதவு திறப்பதை
அம்மா என அழைத்தபடி ஓடிவருவதை
பூக்களால் கன்னத்தில் ஒத்தடமிடுவதை
மணல்களை எனக்கான மாத்திரைகள் என்பதை
இரவை ஊஞ்சலாக்குவதை
எனது கண்களை தசமபாகமாக சிதறவிடுவதை
நித்திரைகளைப் புன்னகையாக்குவதை
நிலத்தின் ஆழத்தை எடுத்து
நீ எனக்குப் பொட்டு வைப்பதை

உனது அப்பாவின் பெயரை ஆன்மாவின் தண்டில் எழுதுவதை
மனதிற்குள்ளும் நஞ்சுக்கொடி வழியாகத்தான் உனக்கு உயிர் தருகிறேன் என்பதை
யாரும் நம்புவதில்லை சூனு


சூர்யா எழுதத் தொடங்கிய குறுகிய காலத்திலேயே உயரங்களை சென்றடையும் சில கவிதைகளை எழுதியாயிற்று.குழப்பமான திகட்டல்  ,சஞ்சலம் இவற்றையடிப்படையாகக் கொண்டு எழுதப்படுகின்ற சூர்யாவின் சில கவிதைகள் பிரமாண்டமான வீச்சு கொள்கின்றன.தொகுப்பாக கவிதைகள் வெளிவராத நிலையிலேயே வாசகர்களிடம் பாதிப்பை ஏற்படுத்தும் தன்மை கொண்டவையாக சூர்யாவின் கவிதைகள் உள்ளன.அழுகுணர்ச்சியை நரம்பு வழியே புறமுதுகிலேற்றும் தன்மை இவருடைய "திரு நகத்தழகி " போன்ற சில கவிதைகளில் நூதன வடிவம் பெறுகின்றன.மரணத்தின் நடனம் கவிதையில் ஏராளமான உள் மடிப்புகள்  இயல்பாகவும்,எளிமையாகவும் சிரசிலேறியிருத்தல் விஷேசம்.

தமிழின் உலகத் தரம் இந்த கவிதைகள்.சிந்தை கவிதையானால் சித்திரமும் கவிதையாகும் .

மரணத்தின் நடனம்
-------------------
ஒரு அகதியாக எனை கற்பனை செய்து கொண்டபோது
ஒரு அகதி முகாம் தென்படத் தொடங்கியது
முகாமுக்கு வெளியே பார்த்தேன்
சுதந்திரம் தென்படத் தொடங்கியது
சுதந்திரத்துக்கு வெளியே பார்த்தேன்
போர்விமானங்கள் தென்படத் தொடங்கின
விமானங்களுக்கு வெளியே பார்த்தேன்
பிணங்கள் தென்படத் தொடங்கின
பிணங்களுக்கு வெளியே பார்த்தேன்
ஒரு ம்ருகமனிதன் தெரியத் தொடங்கினான்
அந்த ம்ருகமனிதனுக்கு வெளியே பார்த்தேன்
எண்ணிலடங்கா ஆண்குறிகளுடைய மரணத்தின் நடனம் தெரிந்தது
அந்த மரணத்திற்கு வெளியே பார்த்தேன்
அமைதி மட்டுமே தெரிந்தது
ஆம்
அமைதி மட்டுமே தெரிந்தது

தீவிரவாதி என்பார்கள் - கவிதைகள்

 தீவிரவாதி என்பார்கள் - கவிதைகள்
-----------------------------------------------------------

அவள் சிரிக்கும் போது
இப்பொழுதிலிருந்துதான் சிரிக்கிறாள்
ஒரு பூ விரிவதைப் போல
ஒரு சூரிய அஸ்தமனத்தை ஒப்ப
ஒரு நதியில் மூழ்கி எழுவது பயின்று

அழும்போதுதான் எந்த நூற்றாண்டிலிருந்து கொண்டு
அழுகிறாள் என்று தெரியவில்லை
பயமாக இருக்கிறது

ஏழுகடல் தாண்டும் சித்தன்
எந்த நூற்றாண்டிற்குச் சென்று
சமாதானம் சொல்வது ?

2

எனது குயில்கள் கூவத் தொடங்கும் போது
மாலை இப்போது ஆறு மணி
இந்த மொத்த நாளிலிருந்து
எனக்கு கிடைத்த பிரபஞ்சத் துண்டு.

நாளின் அசதி நீரில் கழிய

போருக்குச் சென்று திரும்பியது போலும்
காணாதிருந்த கண்களில்
ஒரு பச்சைக் கிளி
கொண்டு நிரப்புகிறது
காட்சிகளின் பெரும் ஊற்றை

3

கைப்பிடியளவு கடல்தான் இந்த உடல்
என்ற ஒருவனை கடலில் கரைத்து விட்டுத் திரும்பினோம்
அப்படியானால்
எத்தனை கைப்பிடியளவு கடலாக இருக்கும்
இந்த கடல் ?

ஒவ்வொரு கைப்பிடியிலும் கடலளவு
நிறைந்திருக்கும் காமம் என்றால்
கைப்பிடியளவும் தீராக்
கடல்தானோ ?

கரைந்து சென்றவன் விட்டுச்
சென்ற அனுபவ எச்சம் மௌனம் பேசா
மணலுறுத்தல்
இன்றைய காட்சியெங்கும்

4

தென்காசி

ஒரு மடியில் மற்றொரு மடி
மற்றொரு மடியில் பிறிதொரு மடியென நீண்டு செல்லுகிற வீடுகள்
எல்லாமடிகளும் கால் நீட்டிப் படுத்திருக்கும் தெரு
கழிவு வாய்க்கால்கள் தெருவிற்குப் பின்புறத்தே
ஒளிந்து தெரியும் மஹா கோபுரம்

ஒரு மடியில் மற்றொரு மடி
மற்றொரு மடியில் பிறிதொரு மடியென படிந்த
ஓட்டுக் கூரை வீடற்ற வீடு

கவிஞனின் மடியில் படுத்துறங்க
இந்த நகரத்தில் வியாபாரிகள் அகன்ற பிறகு
வரும் இரவு
கோபுரத்திற்குப் பின்னே பவுர்ணமியில்
உதித்து வெளியேறுகிறான்
விக்ரமாதித்யன்

இப்போது இந்த நகரம்
அவனுடையதாயிற்றே

[ விக்ரமாதித்யனுக்கு ]

5

ஒரு மாபெரும் சர்வாதிகாரி எனக்குள்ளமர்ந்து
பொட்டல் வெளியில்
பயணிக்கையில்
இந்த நிலமெங்கும் என் சாம்பலை தானியங்களைப் போல தூவுங்கள் என கத்துகிறான்
அவன் கவித்துவத்திற்கு கைத்தட்டல்கள் சேருகின்றன

கொஞ்சம் பொறுக்கமாட்டானா இந்த பிச்சைக்காரன் ?
தானியமாய் தூவுவது இருக்கட்டும்
களவுபோய்விட்ட எனது தானியங்களை கைவசமாக்குங்கள் முதலில்
பிறகு பேச்சுவார்த்தையை வைத்துக் கொள்ளலாம் என்கிறான்

நாடோடிக்கு அந்திச் சூரியனின் ரெத்தக்கலங்கலில்
குருதியின் வெப்பம் பூக்க அம்மன் பிரச்சனமாகிறாள்

சூபி பத்துதலைகளை வேடிக்கை
பார்த்தாயிற்று
பத்துதலைகளும் இல்லையானால் யாதடா மனுஷா நீ
என்றொரு சாதுவைக் கடக்க
எல்லார் முகத்திலும் வந்து
ஒடுங்கிற்று பத்து முகம்

அன்பின் முகத்தை மட்டுமே தாளம் செய்தவன் முதுகில்
ஒங்கி மிதித்தவன் வழிப்பறிக்காரன்

அப்படியானால் சர்வாதிகாரிக்கும் மீதம் இருப்பது
ஒன்பது முகங்களா
மிஸ்டர் சாப்ளின் ?

6

பனிரெண்டு தினங்களில்

நான்கு பேர் இறந்து போய்விட்டதாகச் சொன்னார்கள்
நானறியவில்லை

புயல்மழைச் செய்திகள் நாற்பது
கடந்ததாம்

நின்றவர் பறந்ததும் பறந்தவர்
வந்ததும்
நானறியவில்லை

புதிதாக பாலம் திறந்திருக்கிறார்கள்
புரோட்டா கடையிருந்தயிடத்தில்
கல்யாண மண்டபம்

ஒரு நூறுபேருக்கு கல்யாணம்
முடிந்திருக்கிறது
பத்து நூறுபேர் பட்டதாரியாகியிருக்கிறார்கள்
எங்கள் நகரத்தில்

எண் கணித ஜோதிடத்திற்கொரு நிபுணர்
வந்திருக்கிறார்
நரம்பியல் மருத்துவர் இருவர் புதியவர்
பாலாலயத்திலிருந்து சாமி
வீதிவலம் புறப்பட்டுச் சென்றிருக்கிறார்

இன்னும் ஏராளம் நடந்து விட்டது என்கிறார்கள்
நானேதும் அறியவில்லை
அவர்களோடொப்பம் நானும் வசித்தலைவது
 இதேயூர்தானென்றாலும்

7

மசால் வண்டிக்காரனின் மகள்

"அப்பா வண்டிய மாத்துப்பா" என்ற போது
மகள் பெரியவளாகிவிட்டாள் என்பதை அப்போதுதான்
கவனித்தான் மசால் வண்டிக்காரன்

"நீ தேவைப்பட்டால் வாடகைக் கார் அமர்த்தி
சென்று வா மகளே"
என்கிற பதிலில் அவன் கோபம் கொள்ளவில்லை.
இயல்பாகச் சொன்னான்

அழுக்கடைந்த தனது டி.வி.எஸ்.50 இருபுறமும்
மசால் பாக்கட்டுகள் சுமந்து இந்த நகரத்தின் சந்து பொந்தெல்லாம்
சுற்றித் திரும்பும்
அழுக்கடைந்தது அதன் புறம் மட்டும்தான்
இன்ஜினுக்கு இருப்பதோ மகளின்
இருதயத் துடிப்புதான்

பின்னிருக்கையில் இருந்து
"நான் அவனிடம் பேசவில்லை" என்னும் தொனியோடு
காதலனுடன் பேசிக் கொண்டு வந்தவளை
வேண்டுமானால் வண்டியை ஓரமாக நிறுத்துகிறேன்
"பேசி முடித்த பின் செல்லலாம் மகளே"
என்றவன் சொன்னபோது
எங்கோ உள்ளுக்குள் பட்ட அடியின் வலி

அவள்
உணரத் தகாது என்பதுதான் அவன் விருப்பம்
அவளும் உணரவில்லை
நன்று

அப்பாவுக்கு எதுவுமே புரியாது என்பதில்தான் என்னே ஒரு சந்தோசம்
 மசால் வண்டிக்காரனின் மகளுக்கு

8

பிரான்சிஸ் கிருபாவின் ஊரில்
தொடுவானம் தரையில் வந்து விழுகிறது
சூரிய அஸ்தமனம் தரையில் தெரிகிறது

உதயமும் இவ்வாறே இருக்கக் கூடும்
கைக்கெட்டும் தூரத்தில் வானம்
இடுகாடும் இருக்கிறது சுடுகாடும் இருக்கிறது
குறையொன்றும் இல்லை

உனைக் கொன்றுவிடுவேன் என்கிற
பகிரங்க வெயில்

எல்லாவற்றையும் தாண்டி
எட்டு பெட்டிகளைக் கொண்ட ரயில்
ஊருக்குப் புறத்தே செல்கையில் கைகாட்டி விட்டு
வீடு திரும்பினேன்

பத்தினிப்பாறை என்பது இவ்வூரின் மேலே
வந்து விழுகிற எவ்வளவு
கடுமையான வன்சொல்

9

சொல்லிக் கொள்ளும் படியாக
ஒரு வேலையும் இல்லாமல்
வந்து திரும்புகிறவனிடம்
வேறொரு மொழியில் இந்த நகரம் உரையாடத் தொடங்குகிறது

தனது ஒப்பனைகளில் ஏன் உனக்கு ஆர்வமில்லை என அது
கேட்பதில்லை

ஒளி ஆபரணங்களைப் பூட்டி
அவனை அந்தியில் வழியனுப்பும் போது
என்னைப் பரபரப்பில்லாமல் பார்த்துச் செல்பவனே நீ வாழ்க என வாழ்த்துகிறது
வாழ்த்தொலி கேட்கையில் கொண்டு வந்திருந்த கத்தியை எடுத்து ஒளித்து வைத்துக் கொண்டேன்

எனினும் சபையில் கவனிக்கப்படாத பேரரசியை ஒப்ப
எனது முதல்பார்வையில் நகரத்தின் உடல் நடுங்கியதை யாருக்கும்
தெரிவிக்கமாட்டேனென உத்திரவாதம் கூறி திரும்பிக் கொண்டிருக்கிறேன்

எப்போதும் போல ஜன்னலோரம் தானெனதிருக்கை

10

சொல்லிக் கொள்ளும் படியாக
ஒரு வேலையும் இல்லாமல்
வந்து திரும்புகிறவனிடம்
வேறொரு மொழியில் இந்த நகரம் உரையாடத் தொடங்குகிறது

தனது ஒப்பனைகளில் ஏன் உனக்கு ஆர்வமில்லை என அது
கேட்பதில்லை

ஒளி ஆபரணங்களைப் பூட்டி
அவனை அந்தியில் வழியனுப்பும் போது
என்னைப் பரபரப்பில்லாமல் பார்த்துச் செல்பவனே நீ வாழ்க என வாழ்த்துகிறது
வாழ்த்தொலி கேட்கையில் கொண்டு வந்திருந்த கத்தியை எடுத்து ஒளித்து வைத்துக் கொண்டேன்

எனினும் சபையில் கவனிக்கப்படாத பேரரசியை ஒப்ப
எனது முதல்பார்வையில் நகரத்தின் உடல் நடுங்கியதை யாருக்கும்
தெரிவிக்கமாட்டேனென உத்திரவாதம் கூறி திரும்பிக் கொண்டிருக்கிறேன்

எப்போதும் போல ஜன்னலோரம் தானெனதிருக்கை

11

ஒரு நாள்தான்
இடைவெளி போலும்

சாலையில் விழுந்த பர்ஸை எடுத்துக் கொண்டு
நிமிர்ந்து நோக்கும் விஜய லெட்சுமி

தளர்ந்த தன் முகம் திருப்பி
வண்டியில் காலுதைத்துக் கிளம்புகிறாள்

ஒருநாளுக்கு அப்புறம் நாணயத்தின்
மறுபக்கத்தை கவிழ்த்தி
என்னுடன் பாட்டம் விளையாடிய
விஜய லெட்சுமியை
 அவளிடம் கைநீட்டுகிறேன்

அடையாளம் காண இயலாத
விஜய லெட்சுமியின் வண்டி விரைந்து
முன்னேறிக் கொண்டிருக்கிறது பணிக்களைப்பில்

சிறுமியை என்ன செய்வது என்று தெரியாது
அறைக்கு அழைத்து வந்து விட்டேன்

சாலையில் தொப்பென்று விழுந்தது
 அவள் பர்ஸ் மட்டுமல்ல
ஒருநாள் முன்பக்கம் இருந்த அவள்
சிறுமியும்
சேர்ந்துதானே

தங்கள் சிறுமியை தொலைத்தோரே
வந்து பெற்றுச் செல்லுங்கள்

ஒருநாள் அளவிற்குத்தான் தூரம் இருவருக்கும்
ஆனால் எவ்வளவு மகா தூரத்தில் இருக்கிறார்கள் இருவரும்


12

எனது அறை திறந்துதான் இருக்கிறது
எப்போதும் போலவே

எப்போது வேண்டுமாயினும் நீங்கள் வரலாம்

நீங்கள் யார் என்று கேட்க மாட்டேன்
ஊர் பெயர் அவசியமற்றது
உங்கள் பாலினம் என்ன ? தேவையில்லை

முதலில் கண்ட கனவில் திறக்கப்பட்டதிந்த கதவு
எட்டு பாழிகள் இருந்தன

நீங்கள் உங்கள் பெருமைகளை எடுத்து வந்தால்
இங்கே உங்களுக்கு சோர்வு தட்டக் கூடும்

திறக்கப்பட்ட எட்டு பாழிகள் வழியே
தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன்
தெருக்கள் சாலைகள் வீடுகள் கேந்திரங்கள்
கிளிகள் சிட்டுக் குருவிகள் என
எனக்கு ஒன்பது கண்கள் தெரியுமா ?
எட்டாவது பாழியிலிருந்து உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பது
எனது முதிர்ந்த ஆண்குறி
என்னுடைய மூன்றாவது கண்

எட்டு கண்களுடன் நீங்களும் வந்திணைந்தால்
நாம் ஒன்பதாவது கண் வழியே ஒன்றாகக் காண்போம்
நதிகளையும் ,மாமலைகளையும் ,தொடுவானத்தையும்

தேகம் இதில் முதல் கண்
தேக்கமற்றது இரண்டாவது கண்
பரலோகம் ஒரு கண்
பார்க்க இயலாதைவை இரண்டு கண்கள்
பார்க்க இயலாதவற்றைக் காணும் கண்கள் இரண்டு

நெற்றிக்கண் என்கிறார்களே
அது எப்போதும் கனவு பார்ப்பது எனக்கு

திறந்துதான் இருக்கிறேன்
உள்ளே வரலாம்
இல்லாத அறைக் கதவை தட்டுவதற்குப் பதிலாக
"சாப்பிட்டு விட்டீர்களா ?" என்று கேட்டு விட்டு வாருங்கள்
இல்லையெனிலும் எப்போதும் உங்களுக்கான உணவை
எடுத்துதான் வைத்திருக்கிறேன்
உடலின் அப்பம் போல

நீங்கள் திரும்பிச் செல்கையில் என்னிடம்
சொல்லத் தேவையில்லை

இரண்டு கண்களோடு மட்டும் இந்த அறைக்குள் உட்புகுந்தால்
கருக்கரிவாள் இன்னும் பதமாகத் தானிருக்கிறது
இரண்டு கண்கள் கொண்ட தலைகளை கொய்த்தெடுக்க
அது தயாராக இருக்கக் கூடும்
ஜாக்கிரதை

13

நீ வெளியேறிச் செல்லும் போது
ஒரு கொக்கு சாலையில் குறுக்கே பறந்து சென்றால் நீ
பாக்கியவான்

ஒரு செம்பருந்தைக் காணாமல் திரும்புவதை ஒருபோதும்
பயணமென்று கூறாதே

கூட்டமாக பறவைகள் நீலத்தின் உயரத்தில்
வரிசையாக நகரும் போது அப்படியே நின்று விடு

மரங்களில் இருந்து சப்தத்தில் விடற்கும்
சிறகுகள் மீண்டும் அமரும் வரையில் காத்திரு
செம்மறிகளை தொட்டுப் பார்த்து
பீதியுண்டாக்காதே

எதையும் தொட்டுப் பார்க்க விழையாதே
அது சம்சாரியின் வேலை

இரண்டு மைனாக்கள்
உனக்குக் காத்திருக்கும்
பேசிப் பழகி விடு.

நீ பேசுவது அவற்றுக்கும்
அவற்றின் மொழி உனக்கும்
எட்டும் போது பெரும்பாலும்
காக்கைகள்
உன் கையில் வந்து அமரத் தொடங்கி விடும்

இத்தனையும் செய்து விட்டு
வீடு திரும்பும் போது எங்கே போயிருந்ததாய் ?
என்று கேட்பார்கள்
சும்மா இங்கே தான் இருந்தேன் என்று
சொல் தைரியமாக
தவறில்லை

கொஞ்சம் அசதியாக இப்படித்தான் செய்கிறேன் என்றால்
கொலைமுயற்சி செய்வாளுன்
 மனைவி
ஈவிரக்கமின்றி
மறைத்து விடு

வெளியே விஷயம் தெரிய வேண்டாம்
தீவிரவாதி என்பார்கள்

கமலாம்மா

கமலாம்மா

அரிதாகச் சிலரே தங்களுடைய தேவதைத்தன்மையைத்  தவிர்த்து பிறவற்றை பிறருக்கு வெளிப்படுத்தாத தன்மையைப் பெறுகிறார்கள்.அதற்கு மிகவும் மனத் துணிச்சலும் ,வாழ்க்கை மீதான நிதானமான பார்வையும் தேவை.ஆழ்  சமுத்திரம் போலும் சலனமின்மை அவசியம்.  நான் அவ்வாறாக உணர்ந்த ஒருசிலரில் கமலாம்மா ஒருவர்.அவர் நிச்சயமாக தேவ பிரகாசம். அவரை கடைசியாக ஒரு பொது நிகழ்ச்சியொன்றில் பார்த்தேன்.பல வருடங்கள் இருக்கும் .இப்போது நண்பர் ஒருவர் அவருடைய புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்.ஸ்ரீனிவாசன் நடராசன்.அவரின் தன்மையை வெளிப்படுத்தும் புகைப்படங்கள். எவ்வளவோ நினைவலைகள்.

சுராவின் மறுபக்கம் கமலாம்மா. அவருடைய மன அலைவரிசையில் அவ்வளவு தூரத்திற்கு நெருங்கிக் கைகோர்த்திருந்தவர் கமலாம்மா.பெரிய ஆளுமைகளின் துணையாக அமைவது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் சிரமங்கள் நிறைந்ததுதான்.நான்கு தலைமுறை எழுத்தாளர்கள் வந்து தங்கி உரையாடி மீண்டும் கூடும் வண்ணம்  வேகமாக இயங்கிக் கொண்டிருந்த ஒரு வீட்டை நிர்வாகம் செய்தவர் அவர்.எட்டு வருடங்கள் அந்த வீட்டோடு நெருங்கிய உறவு கொண்டிருந்த நான் ஒருபோதும் முகமலர்ச்சியற்றோ ,நிதானமற்றோ கமலாம்மாவை  கண்டதில்லை.பொதுவாக இப்படியிருக்க வாய்ப்புகளே கிடையாது.அப்படிதான் இருக்க வேண்டும் என்கிற அவசியமுமில்லை.ஒரு வீடு என்பது எவ்வளவோ பணிகளை கலங்கலைக் கொண்டதுதுதான்.வீடு என்பதே லௌகீகத்தின் அனைத்து போராட்டங்களும் நிரம்பியதுதான்  . வீட்டை நிர்வகிப்பது என்பது களைக்குச்சியின் உயரத்தில் நின்று களை கூத்தாடுவது போல.வீட்டின் ஆண்,அல்லது பெண் யாரேனும் ஒருவர் இதனைப் புரிந்து கொள்ள வில்லையெனில் வீடு நடுங்கத்  தொடங்கி  விடும்.அப்படியானதொரு அமைப்பு அது. அதிலும் எழுத்தாளனின் ,கலைஞனின் வீடு விசித்திரமானது .சொல்லிக் கொண்டு வருவோரும் இருப்பார்கள்.திடீரென வருவோரும் உண்டு.வருவோருக்கு முதலில் ஒரு காப்பி கிடைக்கும்.காப்பி என்றால் அது காப்பி போல இராது.காப்பியாகவே இருக்கும் .அது வரும்போதே கமலாம்மாவின் முகமலர்ச்சியையும் அகமலர்ச்சியையும் ஒருவர் உணர முடியும்.அப்படி ஒருவர் உணர்வாரேயெனில் இந்த முகமலர்ச்சியும் அகமலர்ச்சியும் ஒருபோதும் நீங்காதவர் கமலாம்மா என்பது தெரிந்து விடும். களைப்புற்று நோயுற்று நான் அவரைக் கண்டதேயில்லை.எப்போதும் குளித்து விட்டு வருகிற போது இருக்கிற மனநிலையில் சதா இருக்கிறவராகவே அவர் எனது மனதில் பதிவாகியிருக்கிறார்.ஏராளமான வேலைகளை செய்து கொண்டே இருக்கும் போதும் கூட ஏராளமான வேலைகளை செய்து கொண்டிருப்பவரைப் போல ஒருபோதும் அவர் தோன்றுவதில்லை.எல்லாவற்றிற்கும் மேலாக அவர் சுராவிடம் மிகுந்த நிறைவை அடைந்திருந்தார்.அவர் யார் என்பதையும் உள்ளூர அவர் அறிந்து கொண்டிருந்ததாகவே நான் கருதுகிறேன்.பல எழுத்தாளர்களின் ,கலைஞர்களின் வீட்டில் அவர்கள் யார் என்பதை   துணையாக இருப்பவர்களால் அறிய  இயலுவதில்லை.தஸ்தேவெஸ்கி ,மார்க்ஸ் போன்றோருக்கு இப்படியமைந்திருக்கிறது.  

சுரா வீட்டிற்கு வந்து சேர்பவர்களிடம் வந்து சேர்ந்தவுடன் டாய்லட் போக வேண்டுமா ? என கேட்கும் சுபாவம் கொண்டவர்.நான் இப்பழக்கத்தை கற்றுக் கொண்டது அவரிடமிருந்துதான்.பிற எல்லாமே இரண்டாவதாக .எங்கிருந்தோ வருகிற பலருக்கும் இது அவசியமாகவே இருக்கும்.சிலர் கேட்கத் தயங்கி அடக்கிக் கொண்டிருப்பார்கள்.அந்த வீட்டை பற்றி சாதி சந்தேகம் கேட்பவர்கள் எல்லாம் தமிழ் சூழலில் இன்றுவரையில் இருக்கிறார்கள்.அந்த வீட்டின் எல்லா அறைகளும் எனக்கு நன்கு தெரியும் .அந்த வீட்டில் மதியம் யாரெல்லாம் இருக்கிறார்களோ , அவர்கள் ஒருங்கே அமர்ந்து சாப்பிடுவதுதான் வழக்கம். அப்படி சாப்பிடாதவர்கள் யாரேனும் இருப்பார்களா என்பது எனக்குத் தெரியாது.இது இயல்பாக நடைபெறுகிற காரியம்.எழுதுகிறவனை,அதிலும் நம்பிக்கையூட்டும் படி எழுதுகிறவனை அந்த வீடு ஏற்றுக் கொள்ள தயங்கியதே இல்லை. கமலாம்மா உணவு பரிமாறுவதில் உள்ள செய் நேர்த்தி சுராவின் உரைநடையில்  காணும் செய் நேர்த்திக்கு சமம்.

சுராவின் இழப்பு நேர்ந்தவுடன் ; தனக்கு என்ன தோன்றியது என்பதை பற்றி ,பின்னர்  கமலாம்மா எழுதியிருந்த பக்கங்களை மனம் கலங்கப் படித்தேன்.கமலாம்மா அது தவிர்த்து வேறு எதுவுமே எழுதியிருக்க இயலாது.புதுமைப்பித்தன் கடிதங்களில் சுரா கண்டடைந்ததெல்லாமே கமலாம்மா மீது ; தான் கொண்டிருந்த பெருங்காதலைத் தான் என்று இப்போது எனக்குத்  தோன்றுகிறது எனக்கு .சுராவிடம் மிகையோ ,ரொமெண்டிசமோ துளியும் கிடையாது.அக்கறைகளை செயலில் வைத்திருப்பவர் அவர்.அந்த வீட்டிற்கு மோசமான நடத்தைத் குழந்தைகள் என்றால்  ஜி.நாகராஜனும் அதன் பின்னர் நானுமாகத்தான் இருந்திருப்போம் என்று நினைக்கிறேன்.ஒருபோதும் அந்த வீடு எங்களைத் தட்டிக் கேட்டதில்லை.

எழுத்தாளர்களின் மனைவிமார்களின் மனோவோட்டம் பற்றி ஜே.ஜே.சில குறிப்புகளில் ஓரிடம் வரும்.நண்பர்களின் மனைவிமார்கள் ஆரம்பத்தில்  எழுத்தாளர்களிடம் காட்டுகிற விரோத மனோபாவத்தை கடுமையாக எதிர்க்கிற எழுத்தாளர்கள் ; நாள்போக்கில் அந்த விரோதத்தை பிரதிபலிக்கிறவர்களாக மாறிவிடுகிறார்கள் என்று .அப்படி மாறாத வீடு அவர்களுடையது.சுரா தவறாக ஏதும் செய்கிறார் என்று தோன்றினாலும் கூட  அது நிச்சயம் சரியாகத் தான் இருக்கும் என்று உறுதியான நம்பிக்கை கொண்டவர் கமலாம்மா.அவருடைய நம்பிக்கைதான் உண்மை .மிக உயர்ந்த வாழ்க்கை அவர்களுடையது .வாழ்வு முழுவதும் செய்தது நல்லறம்.

சுராவின் உடலின் முன்பாகவோ பின்னரோ சரியாக நினைவில் இல்லை. உங்களை போன்ற நண்பர்கள் அவரை பிரியாமல் இருந்திருந்தால் அவர் இன்னும் கூடுதல் காலம் வாழ்ந்திருப்பார் என்று கமலாம்மா சொன்னது நடுங்கும் வாக்கியமாக என்னுடைய மனதில் இருந்து கொண்டிருக்கிறது. சுரா என்னை பற்றி எல்லாம் அல்லது நண்பர்களை பற்றியெல்லாம் என்ன மதிப்பீடு கொண்டிருந்தார் என்பதனை விளங்கச் செய்து கொண்டிருக்கும் வாக்கியம் அது.  கமலாம்மாவிடமும் மிகையை நான் கண்டதில்லை.இந்த வாக்கியத்தையும் கூட அப்போதைய கடுமையான சூழ்நிலையிலும்  அவர் ஓரளவிற்கு நிதானத்தோடுதான் சொன்னார்.நான் நிதானமிழந்திருந்தேன்.

எல்லாமே சரியாகத்தான் நடந்தது என்று எடுத்துக் கொண்டாலும் கூட ,கமலாம்மாவைக் கடந்து செல்லும் துணிவை சுரா பெற்றிருக்கக் கூடாது.

நேற்று எழுத நினைத்திருந்தேன்.இன்று எழுதுகிறேன்.அந்த அம்மையின் காலடி சரணம் .அறிந்தோ ,அறியாமலோ தவறு செய்திருந்தால் மன்னிப்பீர்களேயாக.

சாதியுணர்ச்சி என்னும் உள்வட்ட சக்தி

சாதியுணர்ச்சி என்னும் உள்வட்ட சக்தி

சாதியுணர்ச்சி என்பது அதன் உள்வட்டத்தில் தேங்கி நிற்கிற வினோதமானதொரு காமம்.நமது கூட்டுப் பெருக்கில் நமக்கு கிடக்கிற சில்லிப்பு இருக்கிறதே அதுதான் சாதியுணர்ச்சிக்கு அடிப்படை.தனியே இருக்கும் போது , நாம் ஒரு மனிதனாகவும் நாலுபேர் தொங்கிப் பிடிக்கக் கிடைத்தால் நாம் வேறொரு மனிதனாகவும் இருக்கிறோம்.சாதிகளில் மட்டும் என்றில்லை அமைப்புகளில் ,நிறுவனங்களில் ,கட்சிகளில் ,சாதியெதிர்ப்புக் கூட்டங்களில் கூட இதன் தன்மை உண்டு.ஒருமித்த கொள்கை கொண்டோர் பிறரை கூட்டு சேர்ந்திருக்கும் போது தாக்குவதற்குத் துணை நிற்பதும் இதே உணர்ச்சிதான்.தனியே இருக்கும் போது ஒருவன் எவ்வாறு நடந்து கொள்வானோ அது போலவே கூட்டமாக  இருக்கும் போதும் நடந்து கொள்வானோ அப்போது முதற்கொண்டுதான் நாகரீக மனிதனாகிறான்.அது தான் சார்ந்த கூட்டமாகவும் கூட இருக்கலாம். இல்லாமல் இருப்பதெல்லாம் பொய்யுருக்கள் .

முதலில் தனி மனிதன் தனியாக வாழ்வது எப்படி என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.  சாய்வு கொண்ட கூட்டத்தில் மட்டும்தான் உனக்கு ஜொலிப்பு இருக்கிறதென்றால் உனக்கின்னும் அருகதை கூடவில்லை என்று பொருள்.தனியே வாழ்வதற்கு பயத்தை முதலில் வெல்வது எப்படி ? என்கிற பொருள் குறித்து ஜே.கிருஷ்ணமூர்த்தி போன்ற ஞானிகள் நிறைய விவாதித்துப் பொருள் கண்டிருக்கிறார்கள்.கூட்டத்தில் மட்டுமே பயமின்றி இருப்பது தொல்குடிகளின் நிலை.உதாரணமாக நீங்கள் எதிரியைத் தாக்குவதற்குரிய அனைத்து சக்தியையும் கைவசம் வைத்திருக்கும் போதும் தனியே இருப்பது போல நடந்து கொள்ள வேண்டும்.தாக்க நேருமாயினும் கூட நீங்கள் தனியே இருந்து தாக்குவது போலவே தாக்க வேண்டும். கூட்டம் திரளாமல் இருக்கும் போது நீங்கள் உங்களை பற்றி என்ன நினைக்கிறீர்களோ அதுவே உங்களுடைய நிஜம்.களரி போன்ற வித்தைகளை கற்றுத் தருகிற ஆசான்கள் கற்றுத் தருவதற்குத் தொடங்கும் போது ; இதையெல்லாம் நீ கற்றுக் கொள்வது யாரையும் தாக்காமல் இருப்பது எப்படி ? என்பதை அறிந்து கொள்வதற்குத் தானே தவிர தாக்குவதற்காக இல்லை என்பதை சொல்லித் தருவதுண்டு.

இங்கே நீங்கள் கவனித்தால் தெரியும் .தனியே இருக்கும் போது மிகவும் சுருங்கிப் போயிருப்பவன்,நாலுபேர் கூட்டணி சேர்ந்தால் எப்படி ஊதி  பெருத்து விடுகிறார்கள் என்பதை.இதை ஏதோ வெளியாட்களுக்குச் சொல்லுவது போல சொல்லவில்லை.நாம் இவ்வாறுதான்  இருக்கிறோம்.நீங்களோ நானோ இதற்கு விதிவிலக்கில்லை.

பின்னணியற்ற பெண் எனில் நமக்கு அவளிடம் ஈர்ப்பு கொட்டினால் அடங்கி விடும்.பின்னணியற்ற ஆணிடம் பெண்ணுக்கும் இங்கே வசீகரம் கிடையாது.தனியாகவெனில் அவள் எவ்வளவு கொடூரமாக துண்டாடமுடியுமோ அந்த எல்லைவரைக்கும் சென்று  துண்டாடுவாள்.எல்லா குறையையும் எடுத்து பரப்பிவிடுவாள்.இரண்டொரு  நாளில் தீர்ந்து போவார்கள்.காதல் திருமணங்கள் அடைகிற வேதனைகள் இதன்பாற்பட்டது.பின்னணி கடுமையாக இருந்தால் மட்டும்தான் நம்மால் அடங்க முடியும்.தனிமனிதனாக நாம் இன்னும் வாழத் தொடங்காததிலுள்ள குறை இது.

ஒருசமயம் எங்கள் பகுதியே  எண்ணம் கொண்டாலே பயந்து நடுங்கும் ஒருவருக்கும் எனக்கும் முரண்பாடு பகை .நானோ ஊரிலிருந்து பொது இடம் ஒன்றில் வந்து வாழ்கிறவன்.தனியன்.அவனுக்கோ ஏராளமான குடுமிகள்.தடுக்கி விழுந்தால் நாலு குடுமிகள் வந்து முந்துவார்கள்.ஆறுமாத காலங்களுக்கும் மேலாக பகை நகர்ந்து ஓடிக் கொண்டிருக்கிறது.நள்ளிரவில் எங்கேனும் போய்விட்டது திரும்பிக் கொண்டிருப்பேன்.வழிமறித்து மல்லுக்கு வருவார்கள்.தாங்கி கொள்ள இயலாத சல்லித்தனங்கள்.ஒவ்வொரு எடுபிடியும் தலையின் பெயரை சொல்லித் தாக்க வருவான்.என்ன செய்வது என்றே தெரியவில்லை.குடிப்பழக்கம் கொண்ட ரௌடியெனில் காலையில் அவன் குடிப்பதற்கு முன்னரே சென்று பார்த்து விட்டீர்கள் எனில் தலை தொங்கித்தான் கிடப்பான்.எனக்கு வாய்த்த எதிரியோ குடிப்பழக்கம் இல்லாதவன்.ஸாகா செய்யக் கூடியவன் காலையில்.வீட்டுக்கு வெடிகுண்டெல்லாம் வைத்து விடுவோம் என்று அவன் குடுமிகள் வலிபேசித் திரிந்தன.

பொறுக்க இயலவில்லை.காலையில் நேரடியாகக் கிளம்பி அவனுடைய வீட்டிற்குச் சென்றேன்.குடுமிகள் பயிற்சியில் இருக்க தலை சட்டையில்லாமல் நின்று கொண்டிருந்தது.அவனுக்கு வாய்ப்பு எதுவுமே வைக்காமல் " அரிவாள் நீ வெட்டினாலும் வெட்டும் நான் வெட்டினாலும் வெட்டும்."; நாலுபேரோடு மட்டுமே எப்போதும் சுற்றித் திரிந்து கொண்டிருக்கிற நாய் நீ ? நான் தனியாக இருப்பவன்.உனக்கு என்ன செய்ய வேண்டும் ? என்று கேட்டேன்.எனக்கும் அதற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை என்று சொல்ல நடுங்கினான்.எனக்கு இந்த அனுபவமே புதிய அறிவாக அமைந்தது.பின்னர் எப்போதென்றாலும்   எனது நண்பர்களுக்கென்றாலும் சரி ,இது போன்ற சிக்கல்கள் தோன்றினால் எதிரியை தனியாக பார்க்கவே சொல்லித் தருகிறேன்.அவன் பக்கம் சந்திப்பின் போது ஆட்கள் இருக்கலாம்.உங்கள் பக்கம் ஒரு சல்லிப்பயல் கூட இருக்கக் கூடாது.  மிகவும் தெளிவாகத் தான் நான் அன்று துணைக்கு ஒருவரையும் அழைத்துச் செல்லவில்லை. அவ்வளவுதான் விஷயம்.அதன் பிறகு அவர்கள் எனது வீட்டிற்கு குண்டு வைக்கிற கொள்கை முடிவை மாற்றிக் கொண்டார்கள்.

பேனரோடு தாக்க முற்படுபவர்களை பேனர் இல்லாமல் தனிமைப்படுத்தி எதிர்கொள்ள வேண்டும்.துவண்டு போவார்கள். பேனரை இணைத்து விட்டீர்கள் எனில் சக்தி கொண்டெழும்பி விடுவார்கள்.  .கூட்டம் என்பது தாழ்வுணர்ச்சியின் காம ஆற்றல்.நாய் ஒருபோதும் பயப்படாதவர்களை கடிப்பதில்லை.அதனால் பயத்தை மட்டுமே கடிக்க முடியும் .நாயைக் கட்டுவது என்று சொல்வார்களே அது ஒன்றுமே கிடையாது .சாந்தி யோகத்தில் இருக்கத் தெரிந்தவனிடம் நாயால் குரைக்கக் கூட இயலாது.

நாம் தொடர்ந்து கூட்டமாக மட்டுமே வாழப் பழகி வைத்திருக்கும் சமூகம்.தனிமனித வாழ்வு என்பது என்ன என்பதனை அறிந்து கொள்ளாதவரையில் சாதியை நம்மால் கடக்கவே இயலாது என்பதுதான் உண்மை.ஏனெனில் நம்முடைய காமம் சேகரமாகியிருக்கும் இடம் அது. இதற்கு மதத்தையும் பிசாசுகளையும் காரணம் காட்டுவதால் ஒரு பலன் கிடையாது.மேலும் மேலும் சாதிகளை உருவாக்கிக் கொண்டுதான் இருப்போம்.கொள்கைகளும் கோஜங்களும் புதிய புதிய சாதிகளாக.

அரசுப்பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகள் அரசுப்பள்ளியில் பயிலவேண்டும்

அரசுப்பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகள் அரசுப்பள்ளியில் பயிலவேண்டும் இல்லையெனில் தமிழ் நாட்டில் அரசுப்பள்ளிகளை காப்பாற்றவே இயலாது. உங்கள்...