தீவிரம் வேடிக்கை வேறுபாடு

வாக்காளர்கள் வாக்களிக்க
பணம் வாங்குகிறார்கள் என்னும் ஊடகமாயைகழிந்த இருபது வருடங்களில் தமிழ்நாட்டில் நடந்த தேர்தல்களின் களப்பணியில் நேரடியாக இருந்த அனுபவம் எனக்குண்டு. தி.மு.க., அ.தி.மு.க., தே.மு.தி.க., என பல கட்சிகளுக்கும் கடைசி நேர பரப்புரை உட்பட பூத் முகவர்களை நியமிப்பது வரையில் உள்ள பணிகளை நன்கறிவேன். முன் நின்று செய்திருக்கிறேன்.

கட்சிகளின் நிமித்தம் செய்கிற வேலையில்லை இது. வேட்பாளர்களின் நிமித்தம். அவர்கள் நண்பர்களாகவோ தெரிந்தவர்களாகவோ இருந்து அழைக்கும் போது மறுக்க இயலாமல் செய்கிற பணி இது. எனவே, எந்த கட்சியும் எனது அடையாளமல்ல. கழிந்த தேர்தலில் சுப. உதயகுமாருக்காக நின்றது அணுவுலை எதிர்ப்பின் பொருட்டு. தி.மு.க. நண்பர்கள், “நீங்கள் ஆம் ஆத்மியாக மாறியாச்சா?” எனக் கேட்டு துளைத்து எடுத்தார்கள். காரணம் உதயகுமாருக்காக களத்தில் பணியாற்றிய போது நான் தி.மு.க.வின் எங்கள் பகுதியின் வட்டச் செயலாளர். அதுவும் ஊரிலுள்ள நண்பர் ஒருவரின் வற்புறுத்தலுக்காகத் இருப்பதுதானே தானே ஒளிய வேறு காரணங்களுக்காக இல்லை. நாங்கள் ஆம் ஆத்மியின் உறுப்பினராகவோ பொறுப்பாளர்களாகவோ இணையாமல்தான் உதயகுமாருக்கும் வேலை செய்தோம்.

இந்த முன்னுரை, வட்டச் செயலாளர் என்பவன்தான் கட்சியின் கடைசி நுரை; அவன் அறியாமல் எந்த கட்சியும் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கவோ பரிமாற்றம் செய்யவோ இயலாது. என்பதை விளக்குவதற்காகத்தான். எனது களஅனுபவத்தில் எந்த கட்சியும் வாக்காளர்கள் அத்தனை பேருக்கும் பணம் கொடுத்ததே இல்லை. கண்டதும் இல்லை. பின் ஏன் இந்த மாயை ஊடகத்தால் உருவாக்கப்படுகிறது?

இரண்டு காரணங்களை உங்களுக்குச் சொல்கிறேன். ஒன்று: இந்த நாட்டில் நடைபெறுகிற அனைத்து ஊழல்களிலும் வாக்காளர்களையும் இணைப்பது இந்த பொய்க் கருத்துருவாக்கத்தின் நோக்கம். வாக்காளர்களையும் அடித்தட்டு மக்கள் அனைவரையும், அவர்களும் கறைபடிந்தவர்களே என, ஊழலில் அவர்களையும் பலவந்தப்படுத்த இந்த போலிக் கருத்துருவாக்கம் பயன்படுகிறது.

இரண்டு: நமது நாட்டில் நடைபெறும் பணபரிவர்த்தனை முறைக்கு இன்னும் சீரான முறைப்படுத்தப்பட்ட ஒரு வடிவம் கிடையாது. கிராமங்களில் என்றில்லை சிறுநகரங்கள், நகரங்கள் உட்பட இதுதான் நிலை. வங்கிகளைச் சாராத பணப்பரிவர்த்தனைகள் இன்னும் சிறு வணிகத்தின் உயிர்நாடியாக விளங்குகிறது. இதனைக் குறிவைத்தடிக்க தேர்தல் கமிஷன் இந்த கருத்தாக்க உருவாக்கத்தை பயன்படுத்திக் கொள்கிறது. தேர்தல் காலங்களில் தேர்தல் கமிஷனின் அத்துமீறல்கள் அனைத்தையும் சாதகமாக்கும் போலிக் கருத்தாக்கம் இது. தேர்தலின் போது சிறு வணிகர்கள் இழக்கும் பணம், பறிமுதல் செய்யப்படும் பணம் பெரும்பாலும் திரும்புவதில்லை. சிறுவணிகர்கள் முறையான ஆவணங்களைக் கொண்டிருப்பதில்லை என்பதை சாதகமாக்கிக்கொள்ளும் தேர்தல் கமிஷன், இவர்களுடன் டார்கெட் நிர்ணயித்து ஒவ்வொரு தேர்தலிலும் முன்னோக்கிப் பாய்ந்து கொண்டிருக்கிறது. இந்த எழுதப்படாத விதிமீறலும் அடங்கியதே பொதுத்தேர்தல் எனும் அளவிற்கு இது சாதாரணமாகி விட்டது. இந்த கருத்தாக்கம் அவர்களுக்கு பெரிதும் உதவக் கூடியது.

அப்படியானால் வேட்பாளர்கள் பணம் செலவு செய்வதில்லையா எனக் கேட்டால் செலவு செய்கிறார்கள். அவை சில ஊர்களுக்குக் கலையரங்களுக்கு , படிப்பகங்களுக்கு என மக்கள் இந்த தேர்தலை முன்வைத்து பெற்றுக்கொள்பவையே அன்றி ஒவ்வொரு ஓட்டிற்கும் இவ்வளவு பணம் என கணக்கு கிடையாது. சில மினுக்கி வேட்பாளர்கள் சில சிறுபகுதிகளில் உள்ள வாக்குகளை பெற, கடைசி நேர வாக்குப்பதிவின் போது சில பண முயற்சிகளைச் செய்து பார்ப்பதுண்டு. ஒவ்வொரு வாக்கிற்கும் இவ்வளவென மக்கள் பணம் பெறுகிறார்கள் என்பதை போன்ற சிந்தை மக்களைத் திட்டமிட்டு இழிவு செய்யும் நோக்கமுடையதே அன்றி உண்மையல்ல. அப்படி மக்கள் வாக்களித்து விடுவார்கள் என்பது போல ஒருவர் கற்பனை செய்வாரேயாயின் அவர் மக்களைப் பற்றி யோசிப்பதை நிறுத்திவிட்டு நேரடியாக சுடுகாட்டில் தூங்கச் செல்வது நல்லது என்றே சொல்வேன். மக்களின் வாக்களிக்கும் தீர்மானங்கள் உறுதியான, ஆனால் சூக்குமமான காரணங்கள் நிறைந்தவை. மக்கள் யார் என்றே அறியாத மத்திய தர வர்க்க போலி அறிவுஜீவிகளின் ஜீரணமாகா மூளையில் தடிக்கும் கருத்தாக்கம் இது.

ஒரு தொகுதியின் வாக்காளர்கள் எத்தனை பேர்? அவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 100 ரூபாய் என்று வைத்துக்கொண்டாலே என்ன தொகை வரும் என்பதை லேசாகக் கணக்கிட்டுப் பாருங்கள். அதுவே ஆயிரம், இரண்டாயிரம் என கொடுக்கும் தொகை அதிகம் எனக் கொண்டால் என்ன வரும் என்று கணக்கிடுங்கள். அவ்வளவு முடக்கி முதலைப் பெரும் வழியுள்ள தொழிலா அரசியல்? நான் சொல்வதிலுள்ள உண்மைநிலையும் நடைமுறையும் விளங்கும்.

ஒரு கல்யாணம் நடைபெறுகிறது அல்லது ஊரில் திருவிழா என்று வைத்துக்காள்ளுங்கள். பந்தி பரிமாறுகிறார்கள், சாப்பாடு போடுகிறார்கள். மாப்பிள்ளை தெரிந்த நாலு பேருக்குப் பீர் வாங்கி ஊத்துகிறான். சாமியே சில நேரங்களில் ஆவேசப்பட்டு படைப்பிலிருந்து சாராயத்தை எடுத்து சில சில்லறைகளுக்கு எடுத்துக் கொடுத்து விடுகிறது என வைத்துக்கொள்வோம். இந்த சோத்திற்காகவும் இந்த சாராயத்தின் பொருட்டும்தான் ஊரே கூடிற்று என்று சொல்ல முடியுமா? சொல்வோமா?அப்படித்தான் இதுவும்.

திருவிழா தன்மையை ஏற்படுத்துகிற வேட்பாளர்களும் இருக்கிறார்கள். இதனை வைத்து வாக்கிற்கு மக்கள் பணம் பெறுகிறார்கள் என்று சொல்வதும் புரிந்துகொள்வதும் மிகையானது என்பது மட்டுமல்ல மக்களை இழிவுபடுத்தும் ஜனநாயக கேவலம். மக்கள் தேர்தல்களில் ஒரு போதும் பணத்தின் பொருட்டு வாக்களிப்பதில்லை. பணத்தை, பந்திகளை அதிகமாகத் துருத்துவதாலேயே மக்கள் எதிராக போய்விடுவதற்கான வாய்ப்பே அதிகம் .

நீங்கள் உங்கள் கல்யாணத்தில் ஆட்டுக்கறி விருந்து போட்டால் எவ்வளவு பேர் வருவார்களோ , அதே அளவிற்குதான் தயிர்சாதம் போட்டாலும் வருவார்கள். வந்து திட்டுவார்கள் என்பது வேறு விஷயம். நீங்கள் ஆட்டுக்கறி விருந்து வைப்பவரா இல்லை ரசச்சோறு போடுபவரா என்பது உங்கள் தன்மையைப் பொறுத்து உள்ள விஷயமே அன்றி மக்கள் கூடுவதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை. மக்கள் சிறப்புக் காரணங்கள் இல்லாமல் பக்திக்கும் சரி, பங்கேற்பிற்கும் சரி, பாடைக்கே ஆனாலும் சரி கூடுவதில்லை
தோல்விக்கு பொறுப்பேற்கும் குணம் நமது அரசியல்வாதிகள் ஒருவரிடமும் கிடையாது. தோல்வியின் போது மக்களை முட்டாளாகவோ, கறைபடிந்து விட்டார்கள் என்றோ கீழிறக்கும் குணம் கொண்டவர்கள் அவர்கள். தோல்வியின் போது, மக்கள் சரியாக சிந்தித்திருக்கிறார்கள் எனக் கருதும் ஒரு யோக்கியன்கூட அமையப் பெறாத ஊர் இது. மக்கள் சிந்திக்கத் தெரியாதவர்கள் என்பதிலிருந்தே இந்த ஊடக மாயையும் பெருத்து வளர்கிறது. மக்கள் சுயேட்சையான சிந்தனை நிரம்பியவர்கள், தெளிவு கொண்டவர்கள் என்பதை தோல்வியிலும் வெற்றியிலும் ஒப்புக்கொள்ளும் அறிவுநிலைகளும் இப்போதில்லை.

(அம்ருதா, ஜூன் 2016 இதழில் வெளியானது)

தீவிரம் வேடிக்கை வேறுபாடு

மூன்று கண்டைனர் லாரிகள்
கட்டுக் கதைகளால் பரவும் ஊடக வன்முறைமூன்று கண்டைனர் லாரிகள் என்பது மிகவும் வெளிப்படையானதொரு உருவத்தோற்றம். அது நம்முன்னே கொண்டு நிறுத்தப்பட்டுள்ளது. இதில் ஒரு மாயமும் இல்லை. யாரும் இல்லை என மறுக்கயியலாத தோற்றம் இது. நீங்கள் நம்புகிறீர்களா இல்லையா? என்னும் கேள்விக்கே இங்கு இடமில்லை. ஏனெனில், அது முன்பாகக் கொண்டு வந்து நிறுத்தப்பட்டு விட்டது. கட்டுக்கட்டாகப் பணம் அதனுள் இருக்கிறது. அது சிதறாது. மக்கள் அதனுள் நுழைந்து ஒருநேர தேநீருக்கான காசைக்கூட எடுக்க முடியாது. அது கவிழப் போவதில்லை. ஒளியூட்டப்பட்ட கண்காணிப்பு லென்ஸ் பலமுனைகளில் இருந்தும் பார்த்துக் கொண்டிருக்கும் திறந்த அரங்கில் அது நின்று கொண்டிருக்கிறது.
சமீபத்தில் நான் பார்த்த காட்சிகளிலேயே அதி நுட்பமான காட்சி இதுதான். ஆர்வம் ஊட்டும் காட்சியும் கிளர்த்தும் காட்சியும் இதுதான். இந்த காட்சியை வழிப்பறி செய்வது எப்படி என்று நேற்று முதலாக யோசித்துக் கொண்டிருக்கிறேன். இதுதான் கதை.

வரலாறு முழுதும் தேடினாலும் ஒரு வதந்தி நம் கண் முன்னே ரூபம் கொள்ளும் இத்தகைய ருசிகரத்தைக் காணவே முடியாது. இல்லை. இது நம் கண்முன் தோன்றுவது முதல்முறை. புராண இதிகாச சாகசங்கள், சமய மத சாகசங்கள் அனைத்தும் ஒன்றுமில்லை என மூன்று கண்டைனர் லாரிகளும் போதிக்கின்றன. அணுவாயுதங்கள், உளவுத்துறை பேரங்கள் சாகசங்கள் அனைத்தைக் காட்டிலும் நுட்பம் கொண்டதாக இந்த காட்சியின் விசித்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. வதந்தியின் அதிரூபம்.
ஒரு தேநீர்க் காசுக்குக்கூட பயன்மதிப்பில்லாத, ஆனால் மக்களின் அன்றாடத்திற்குள் பிரவேசிக்கும் சக்தியை மூன்று கண்டைனர் லாரிகள் காட்சி எவ்வாறு பெறுகிறது? ஊடகங்கள் எவ்வாறு இதை திகில் படுத்துகின்றன?

பின்மதியத்திலிருந்து மக்கள் ‘சாயுங்காலத்திற்குள் யாரேனும் வந்து காசு தராவிட்டால் அதன் பின்னர் வரவாய்ப்பில்லை!’ என்று தெருக்களில் பேசத் தொடங்குகிறார்கள். அவர்களின் பேச்சினுள், ‘மூன்று கண்டைனர் லாரிகள்’ காட்சி கொண்டு வந்து நிறுத்தப்படுகிறது. விடியற்காலை இந்த ‘மூன்று கண்டைனர் லாரிகள்’ விடுபட்டிருந்தால் பணம் தங்கள் வீடு வந்து சேர்ந்திருக்கும் என்று மறுபேச்சை பேச அதனுள்ளும் ‘மூன்று கண்டைனர் லாரிகள்’ காட்சி வந்து ஓய்வெடுக்கிறது. தமிழ்நாட்டு மக்கள் இந்தக் காட்சியின் முன்பாக இப்போது பேதையாக்கப்பட்டிருப்பதைப் ஒப்ப முன்னர் எப்போதுமே நடைபெற்றதில்லை. இக்காட்சியின் முன்பாக மக்கள் நிராயுதபாணிகளாக நின்று கொண்டிருக்கிறார்கள். இந்த காட்சி எனக்கு முழுதுமாகப் புரியவில்லை என்றாலும்கூட நான் நன்றாக அந்தக் காட்சியை, அதன் நுட்பத்தை, அழகைக் கண்டுவிட்டேன். கதைத்திகில் எனக்கு.

பலே... பலே...

இந்த அதிரூபத்திற்கு வயது இன்னும் இருபத்திநான்கு மணிநேரம் கூட ஆகவில்லை. இதன் வேலைப்பாடுகளில் பங்கேற்றோர் அரசு தேர்தல் அதிகாரிகள், மர்ம ஊடக நோயாளிகள், மயக்க மருந்து வல்லுனர்கள், மற்றும் கடைநிலைப் பிச்சைப் பாத்திரங்கள்.

கண்டுபிடி கண்டுபிடி, முடிந்தால் கண்டுபிடி.

(அம்ருதா, ஜூன் 2016 இதழில் வெளியானது)

தீவிரம் வேடிக்கை வேறுபாடு

காட்சியை வழிப்பறி செய்வது எப்படி?
11ஆவது நிழல்சாலை

பாதங்கள் வழியாகச் சிரமங்களும் அவஸ்தைகளும் நழுவ
எதிர்ப்படுகிற மனிதர்களில்
எத்தனை பேர் காதல் வயப்பட்டிருப்பார்கள்
முந்தைய இரவில் மனைவியை அடித்தவனின் எண்ணம்
முதுகெலும்புக்குள் இப்போது எப்படி அலையும்
வாழைப்பூவின் பிசினிலிருந்து ஒருவனுக்கும்
வாழைத்தண்டின் நாரிலிருந்து ஒருவனுக்கும்
இந்தக் காலை புறப்படுகிறதே
நேற்றிரவு நிறைவு பெறாத பெண்மையும்
நிறைவுபடுத்தாத ஆண்மையும்
இந்தப் பகலில் எந்த மிருகத்தின் உருவத்தில் நடக்கும்
காதலிக்காகத் தசைகளைப் பெருக்குகிறவனின் உலகம்
பிரிவுக்குப் பின் இந்தச் சாலையை
எப்படி எதிர்கொள்ளும்
கொலைகாரனும் கொலைசெய்யப்பட்டவனும்
ஓடிய திசையினை அறிந்தவன் யார்
குடிகாரனின் வார்த்தைகள் சிதறிக்கிடக்கிற இடத்தில்
பவளமல்லிகளும் கிடக்கின்றன
இந்தச் சாலையை கட்டமைத்தவர்கள்
யாரேனும் இதனூடே நடந்து செல்வார்களா
கொடுங்கனவுகள் பற்றி
நண்பர்கள் பேசிச்செல்வார்களா
முதுமையின் வியர்வையும் இளமையின் வியர்வையும்
வேறுவேறான இசையுடன்
என்னைக் கடந்து போகின்றன
பெண்களின் தளிர் உடல்கள்
எல்லாப் பாடலிலும் ஊடுருவுகின்றன
என் விரலிடுக்கு வழிநடத்தும்
நாய்க்குட்டியின் கண்களில்
உணரப்பட்ட வாசனைகளின் குவியல்
காதுகளில் தொடர்ச்சியற்று விழும் உரையாடல்கள்
வாழ்வின் இறுக்கத்தை சற்று முடிச்சிடுவதும் அவிழ்ப்பதுமாய்
புரியவேயில்லை
11ஆவது நிழச்சாலையில்
என் தனிமையும் பயணிக்கிறது.

இந்த கவிதை தற்செயலாக சமீபத்தில் படித்த தேன்மொழி தாஸின் கவிதை. மிகச் சிறந்த கவிதைகளுக்கு உதாரணமாகத் திகழும் சக்தி கொண்ட கவிதை இது. ஒரு சாலையை கவிதையின் முன்பாக இவ்வளவு துல்லியமாகத் திறப்பது என்பது எளிதான காரியமில்லை. அதற்கு ஒரு சிறப்பு மனம் அவசியம். அது இந்த கவிதையில் வசப்பட்டிருக்கிறது. நவீன வாழ்வின் முன்பாக அச்சு அசலாக இந்த கவிதை திறக்கிறது. நவீன வாழ்வின் மீதான தனிமை சாலையில் கொட்டப்படுவது போன்றதொரு உணர்வு எனக்கு ஏற்பட்டது. இது போல எண்பதுகளில் நண்பர்களின் அறையையும் வீட்டையும் இணைக்க இயலாமை பற்றிய சமயவேலின் கவிதை ஒன்று உண்டு. தேன்மொழி தாஸின் இந்த கவிதையில் நவீன வாழ்வின் அபத்தமும் பனி மூட்டமும் சாலைவழியாகத் திறக்கிறது; அல்லது திறக்க முற்படுகிறது. சரியான உவமானம் போல விரலிடுக்கு நாய் வருகிறது. விரலிடுக்கு என்பது நாய்க்குட்டியின் வழிகாட்டுதலாக மாறிப் போயிருக்கும் போதாமை. கொண்டிருக்கும் பெருவாழ்வு.

சில அபூர்வமான கவிதைகளே சமகாலத்தைத் திறக்கும் சக்தி கொண்டவையாக மாற்றம் கொள்கின்றன. ஓங்கி ஒரு திறப்பைச் செய்துவிட்டு மறைபவை. மலைசாமியின் ‘ஒதுங்கிய தெருவிலும் சோடியம் விளக்கு’ என்னும் கவிதையும் இதனை ஒத்தது. மலைச்சாமி அதன் பிறகு என்னவானார் என்பதே தெரியவில்லை. என்னவானாலும் அதனால் இடர்பாடில்லை. நவீனத்திற்குப் பின்பான தமிழ் கவிதை உருவாக்கத்தில் அரும்பங்கு ஆற்றிவிட்டுத்தான் சென்றிருக்கிறார். அவர் முன்னின்று திறந்த இடத்தை உளியாலும் சுத்தியலும் பின்வந்த கவிகள் கொட்டோ கொட்டென்று கொட்டிக் கொண்டிருக்கிறோம். அவ்வளவுதான். காலத்தின் கதவைத் திறப்பவர்கள் பலரை காலம் மறதியில் வைத்துப் பாதுகாக்கும்.

இந்த ‘11ஆவது நிழல்சாலை’ என்னும் கவிதை எளிமையாகத்தான் இருக்கிறது. ஆனால், இது நவீனத்திற்குப் பிறகான கவிதையாக உருமாறியிருக்கிறது. இதில் வருகிற எல்லா விஷயங்களுமே எளிதாக விளங்கக் கூடியவைதான். மொத்த கவிதையும் படித்த பின்னர் புதிருக்குள் இடப்படுகிறோம்! இந்த மாயத்தை அமுதூட்டும் கவிதை இது. நான் தற்செயலாகப் படித்ததனால் மட்டுமல்ல இத்தகைய கவிதைகளே தற்செயல் நிகழ்வுகள்தான். எங்கிருந்தேனும் பீறிவிட்டழும். அந்த சப்தம் சமகால பிரக்ஞையை நமக்குள் உருவாக்கும். பலர் நம்மில் இந்த சமகால பிரக்ஞையை, நாம் எற்றடுத்த இடத்தை மனம் விட்டுச் சொல்ல தயாராக இருப்பதில்லை. அதனை ரகசியம் காக்க முயல்வோம். இந்த முயற்சியே நமது மூச்சுக் காற்றை தொடர்ந்து இறுக்கப் போகும் சுருக்குக் கயிறு என்பது பலருக்கும் தெரிவதில்லை. சுவாசம் இலகுவான இடத்தை திறந்து சொல்லிவிட வேண்டும். விக்கிரமாதித்தன் என்னைத் திறந்தார். ஞானக்கூத்தனுக்கு நான் கடன்பட்டிருக்கிறேன். தேவதச்சன் என்னை வழிமொழிந்திருக்கிறார் என்பதை எல்லாம் மறைக்கத் தேவையில்லை. திறந்தார், கடன்பட்டிருக்கிறேன், வழிமொழிந்தார் என்று சொல்வதல்லாமே அகவுலகைத் திறந்ததைப் பற்றி சொல்லபடுபவை. அன்றி தனிப்பட்ட முறையில் என்னிடம் மட்டும் ஒரு சாவியை அவர்கள் ஒப்படைத்துவிட்டுச் செல்லவில்லை. திறந்தவனை அவனோ, அவளோ யாராக இருப்பினும் மறைக்கக்கூடாது. குருதட்சணை என்பது அகத்தைத் திறந்தவனை ஒப்புக்கொள்வதுதான். மறைக்க மறைக்க அகம் மூடுண்டு செல்லும். கடவுள் வந்தாலும் திறக்க முடியாத படி.

அப்படியானால் கவிதையை எது நிமிர்த்துகிறது? செய்யுளிலிருந்து கவிதை தப்பிக்கும் இடம் எது? புலவனுக்கும் கவிஞனுக்கும் இடையில் உள்ள வேறுபாடு என்ன? இவற்றை சரிவர விளங்க முடியவில்லை. ஒருவன் எழுதுகிற சாதாரணமான ஒன்று கவிதையாவதும் இன்னொருவன் இருந்து இருந்து மெனக்கெட்டும் கவிதை தோன்றாமல் போவதும் எங்ஙனம்? காலந்தோறும் புரிபடாமல் கவிதை என்னும் மாயம் தப்பிக்கும் விந்தை இது. சமகாலத்தில் செய்யுள் இயற்றுபவர்கள் இருபதுக்கும் மேற்பட்டு இருக்கிறார்கள். அவர்களைப் பெயர்குறி அறிவித்தால் வாழ்நாள் சண்டையாகி விடும்.

மொழியென்பது வெறும் திறமையைக் குறிப்பது. அது நுட்பம் கொண்டிருக்கும். சுவாரஸ்யமான ஒன்றினைச் சொட்டிவிடும். உணர்ச்சியும் ஈர்ப்பும் கொண்டிருக்கும். மெல்லுணர்ச்சியை ஸ்திரமாக்கும். ஒரு ஒவியன் தூரிகையைச் செம்மைப்படுத்தி வைத்திருப்பது போன்றதுதான் கவிஞன் கையில் மொழி. அது கவிதையின் மீது ஏறி உட்கார வேறு எதோ ஒன்று அவசியப்படுகிறது. மொழியே கவிதையாவதில்லை. மொழியே கவிதை என்று நம்பிக்கை கொள்ளும் இடத்தில்தான் பலருக்கு சீக்கு பிடித்து விடுகிறது. மொழி ஒருபோதும் உங்களுடையது அல்ல. அது காலம் உங்கள் கையில் கொண்டு தருகிற கொடை. அதனை நிமித்தமாகப் பற்றிக் கொள்ளவேண்டியதும் கவியின் வேலைதான். அதனை ஒரு இடத்தின் மீது கொண்டு ஏற்றி வைக்கிறீர்களே அதுவே கவியின் இடம். அது என்ன என்பதும் அதில் தொழில்படும் விஞ்ஞானம் என்ன என்பதைக் கண்டறிவதும் புலவர்களுக்கு எளிமையான காரியங்களாக இல்லை. போலியாக கவிதையை எழுதிவிட இயலும் என நினைத்துப் பணியாற்றுபவர்களையே புலவர்கள் என்கிறேன். அவர்கள் மேலும் மேலும் செய்யுள் உற்பத்தியில் ஈடுபடுகிறார்கள். கவிஞர்கள் மீது அளவு கடந்த பொறாமை உணர்ச்சியும் எதிர்ப்பும் கொள்கிறார்கள் அவர்கள். எந்திரங்கொண்டும் கவிதைகளை எழுத முடியவில்லை. கவிதை எழுதுகிற எந்திரங்கள் கீழே படுத்து உருளுகின்றன. அவற்றால் எழும்ப முடியவில்லை. இணையமற்ற கணிப்பொறி எவ்வாறு ஒரு சவமோ அது போன்ற கவிஞனற்ற கவிதை முயற்சி என்பது வெறும் செய்யுள்.

ஒருகாலகட்டம் மறைந்து மறுகாலக்கட்டம் உருவாகும் போது அதில் வேலை செய்த கவிதைகள் நூற்றுக்கணக்கில் இருக்கும். ஆனால், அதில் நிலைபேறு அடையும் கவிஞர்கள் ஐந்தாறு பேர்தான் இருப்பார்கள். நவீனதமிழ் காலத்தைக் கருத்திற்க்கொண்டால் கவியாக நிலை பெற்றிருப்பவர்கள் பத்து பேருக்குள்தான் இருப்பார்கள். மிஞ்சியவர்கள் என்னவானார்கள் என்பதற்கான பதில் யாரிடமும் இல்லை. அது கவிதையின் பெறுமதி. அப்போது பயன்மதிப்பற்றவர்களாகவும் தறுதலைகளாகவும் பார்க்கப்பட்ட சிலரே பின்னாட்களில் அவதாரம் கொள்கிறார்கள். காரணம் கவிதை தான் எற்றேடுக்கும் திசையில் கவிஞனை பிரயாணம் மேற்கொள்ளச் சொல்கிறது. லௌகீகத்தின் செலவாணி என்ன என்பது பற்றி அதற்கு ஒரு கவலையும் இல்லை. கவலைகொள்ளும் செலவாணியையும் புலவனையும் அது கசந்து துப்பும்.

தமிழ்க் கவி ஒருவர் என்னிடம், சமீப காலங்களில் பெண் கவிஞர்களைப் பற்றி அதிகமாக எழுதிவருகிறேன் என்பதை வைத்துக் குறைகொண்டு, “பெண் கவிஞர்களைப் பற்றிதான் அதிகம் பிரக்ஞை கொள்கிறீர்கள்!” என்று ஆதங்கமாகச் சொன்னார். அவர் சொல்லியது முக்கால் சதவிகிதம் உண்மை. எனக்கு பெண் பிரக்ஞையே அதிகம். ஆண்களிடம் எனக்குக் கூறில்லை. ஆணில்லாத பிரபஞ்சத்தைப் பற்றி எனக்கு சிறிய கவலையும் இல்லை. பெண் இல்லாத பிரபஞ்சத்தை என்னால் கற்பனை செய்யவே இயலாது. ஆனால், கவிதையைப் பொறுத்து அவ்வாறு நான் பிரிவினை கொள்கிறேன் என்று சொல்ல முடியாது.

இப்போது தமிழில் ஆண் கவிகளிடம் ஒரு பிரச்சனை இருக்கிறது. நாற்பது வயது தாண்டிவிட்டால் பணி முடிந்துவிட்டது இனி அறுவடைக்கு மட்டுமே ஏற்ற சுயம்புவாக இருக்கிறோம் என்று கருதுகிறார்கள். எனக்கு அது நடக்கவில்லை, இது நடக்கவில்லை என்று புலம்புகிறார்கள். எது நடக்க வேண்டும்? கவிதை மட்டும் உன்னில் நடந்தால் போதாதா? முதல் தொகுப்பில் கலைமாமணி, இரண்டாவதில் சாகித்ய அகாதமி, நான்கென்றால் ஞானபீடம் என்று கணக்கு கட்டுவார்கள் போல! சிலருக்கு முதலமைச்சர் பதவியின் மேல் மோஹம். அதிருப்தியின் உச்சம். இவர்கள் இன்றைய வாழ்வென்றாகி விட்டது. வேறெங்கோ சென்றிருக்க வேண்டியவர்கள் வழிதவறி இங்கு வந்து தவறுதலாக விழுந்துவிட்டார்கள் என்பது போல. நீ இருக்கும் இடம் உனக்கே நம்பிக்கை அற்றதாகவும், இருக்கக்கூடாத இடமாகவும் இருக்குமேயானால், நீ இருக்குமிடந் தேடி எந்த விமானம் வரப் போகிறது என்று காத்திருக்கிறாய் அய்யனே? ஒரு பயலுமே கவிதையின் இடந்தேடி இங்கு வந்தவர்கள் போலவே தோன்றவில்லை. எதுவுமே தங்களுக்குக் கிட்டுவதில்லை என்று புலம்புகிறார்கள். வாழ்வும் கவிதையும் ஒன்றெனவே நடக்கும் விக்ரமாதித்யனிடமெல்லாம் கூடவே பயணித்திருக்கிறேன். இத்தகைய புலம்பல்களை ஒருபோதும் கேட்டதே இல்லை. இப்போது நாற்பதைக் கடந்திருப்பவர்களின் துணையோடு, சிறுநீர் கழிக்கும் தூரம் பயணித்தாலும் நான்கு வாக்கியங்கள் குறையாமல் புலம்புகிறார்கள்.

கவிதை சிரத்தையாகவும் இல்லை; இவர்களுக்கு கவிஞன் என்பதில் சுகமும் இல்லை. புதியவர்களும் பெண்களுமே ஆசையோடு வருகிறார்கள். அவர்களிடமே கவிதையின் பேரிலான காந்த ஈர்ப்பு தென்படுகிறது. ஆண்களுக்கு இந்த காலகட்டத்தில் லௌகீக நெருக்கடிகள் தாண்டிய அக நெருக்கடிகள் இல்லையோ என்னவோ? கவிதை தவிர்த்துப் பிற எல்லாவற்றைப் பற்றியும் பேசுகிறார்கள். கூடும் அரங்குகளில் பேசுவதையும் உரையாடுவதையும் மறைக்க பழம் பாடல்களைப் பாடி ஊருக்கு ஊர் ஊத்தி மூடுகிறார்கள். இளங்கவிஞனின் வீட்டில் ஒருவாரத்திற்கும் முன்பே சென்று முகூர்த்த வேலைகள் பார்ப்பதெல்லாம், அறைகளில் உட்கார்ந்தது இந்த பழம் பாடல்களைப் பாடுவதற்காகத்தான். மூத்த கவிகளிடம் வேறு இவர்கள் கடுங்கோபத்தில் இருக்கிறார்கள். கெட்ட நல்ல வார்த்தைகளில் அவர்களைத் திட்டி மோதுகிறார்கள். பாவம் இதெல்லாம் அவர்களுக்குத் தெரியாது. ஆண்கள்தான் இப்போது அபசகுனம். தமிழ் கவிதையில் வரும் தலைமுறையில் பெண்கள்தான் அதிகம் பேர் இருப்பார்களோ என்று தோன்றுகிறது.

ராஜன் ஆத்தியப்பன், இசை போன்றோர் இந்த காலத்தின் முக்கியமான கவிகள்தான். அது போலவே ஜீனத் நஜீபா, பெருந்தேவி இருவரும் முக்கியமானவர்கள் என்பதே எனது எண்ணமாக இருக்கிறது. எழுதிப் பழகுபவர்களை என்னால் எண்ணத்தில் சேர்க்க முடியவில்லை. அதுபோல என் வாயிலிருந்து முத்து உதிர்பவர்கள் மட்டுமே கவியாக இருக்க முடியும் என்கிற நம்பிக்கையும் எனக்கில்லை. ராஜன் ஆத்தியப்பனின் சமீபத்தில் வந்த ‘கருவிகளின் ஞாயிறு’ தொகுப்பில் பல கவிதைகள் சமகாலச் சூழலில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியிருப்பவை. அத்தொகுப்பிலுள்ள எனக்குப் பிடித்தமான இரண்டு கவிதைகள் இவை.

1.
ஆண்களும் பெண்களுமாய்
விழா தீர்ந்த
முச்சந்தி வெளியில்
கசங்கிய புத்தாடையோடு
குழுமி நிற்க
ஒன்றன் பின் ஒன்றாக
நா தழைய ஓடிவந்த
நாய்களிலொன்று மற்றொன்றின்
பின்புறம் கால்களேற்றிப்
புணரத் தொடங்கியது.
கணத்திகைப்பு மீண்டு
ச்சூ ச்சூ வென விரட்ட
எல்லோர் ஆடைகளையும்
பற்றியிழுத்து அம்மணமாக்கி
அகன்றன நாய்கள்

2
சில பத்தடிகள் தாண்டி நின்றது
விரைவாக வந்த பேருந்து
நிறுத்தத்திலிருந்த இளம் பெண்கள்
பேருந்து நோக்கி ஓடுகின்றனர்
அவர்களின் உடல்களினுடே
இணைந்தோடத் தொடங்கியது
நூற்றாண்டுகளின்
பெண்ணியப் படிமங்கள்
எதிர் திசையில் விலகியோடியது
இன்றைய நவீனம்
உள்நுழைந்து இருக்கையில் அமர்ந்ததும்
மீண்டுமவர்கள்
சட்டென நாகரீக மங்கைகளானார்கள்.

(அம்ருதா, ஜூன் 2016 இதழில் வெளியானது)

முகநூல் பதிவுகள்


தொடர்புகொள்ளுதலில் ஏற்படுகிற
புதிய தொழில்நுட்ப மாற்றங்கள்


பத்தாண்டுகளுக்கு முன்பு வரையில் அல்லது பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரையில் யாரிடம் நான் பேசிக் கொண்டிருக்கிறேன் என்கிற சிந்தனை இருந்ததில்லை. என்னை ஒத்த ஒருவனுடன் பேசிக் கொண்டிருந்தேன். எப்படி சுற்றி வளைத்துப் பேசினாலும் அந்த வாசகன் அந்த தளத்திலேயே எதிர்கொள்ளும் வண்ணம் உள்ளவனாக இருந்தான். அவனே சிறப்பானவன் என்று அதற்கு அர்த்தமில்லை. எனக்கு முந்தைய தலைமுறையினருக்கு அப்படி இல்லாதவனோடு உறவே கிடையாது. அதற்கான அவசியமும் அவர்களுக்கு இருக்கவில்லை. குறிப்பிட்ட அந்த தளத்தில் மட்டுமே எழுத்தாளர்களை, கவிகளை எதிர்கொள்ளுகிற வாசகர்கள் இருந்த காலம் அது. சுந்தர ராமசாமி அவர் எழுத்துக்களை ஒரு தமிழ் சினிமா ரசிகன் எவ்வாறு எடுத்துக் கொள்வான் என்பதை பற்றி சிந்தித்திருக்கவே மாட்டார். அதற்கான அவசியமும் ஏற்படவில்லை. ஆனால், இன்று விரும்பியோ விரும்பாமலோ பொதுமக்களின் முன்னால் நேரடியாக எழுத்தாளனும் கவியும் நின்றாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது. முந்தைய காலகட்டம் வாசகனின் முன்னால் நின்றது போல இன்று பொதுமக்களின் முன்பாக நிற்க வேண்டியுள்ளது. இந்த நிலை தவிர்க்க இயலாதது.

முந்தைய நிலையே சிறப்பானது என்று ஒரு எழுத்தாளன் சொல்வானேயாகில், அது அவன் சமகாலத் தன்மையில் அடையும் பின்னடைவையே அந்த கூற்று குறிக்கிறது. இயல்பாகவே அவனது மொழி கண்டடைய வேண்டிய தொழில்நுட்ப மாற்றத்தை அவன் இனி தவிர்க்கவே இயலாது. ஏனெனில், இன்றைய வாசகன் ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் பொதுமக்களில் இருந்து நேரடியாக உருவாகிக் கொண்டிருக்கிறான். வாசகனிலிருந்து உருவாகும் வாசகனில்லை இவன்.

பொதுமக்கள் என்னும் தரப்பு மகா குளறுபடிகள் நிரம்பியது. அது தேர்வு செய்யப்பட்ட ஒரு குறிப்பிட்ட வளாகம் அல்ல. மதில் சுவர்கள் எதுவுமே சுற்றிக் கட்டப்பட்டிருக்கவில்லை. தொழில்நுட்பம் தன்னளவில் பல குறைகள் இருப்பினும்கூட பாகுபாடுகள் அற்றது. அல்லது நாம் ஏற்கனவே கொண்டிருக்கும் பாகுபாடுகள்; அல்லது நாம் பாதுகாக்க நினைக்கும் பாகுபாடுகளும் உட்பட அதற்குள் கிடையாது. விலக்க நினைக்கும் பாகுபாடுகளும் அதற்கு இல்லை. பேதங்களும் இல்லை. அதனால் அது கரடுமுரடாக, மனம் கோணும் விதத்தில் இருப்பதை தவிர்க்கவே இயலாது. பிரமிள், ஒரு விஜய் ரசிகன் தனக்கு எதிர்வினை புரிவான்; பதில் சொல்ல வேண்டியிருக்கும் என்று கருதியிருக்கவே மாட்டார். நள்ளிரவில் ஒரு கௌண்டரோ, நாடாரோ, தேவரோ, தலித்தோ உங்களை அழைத்து சினம்கொள்வார்கள் என்று புதுமைப்பித்தன் கருதியிருப்பாரா? டாஸ்மாக் மூடியடைக்கப்பட்ட பின்னரும் ஒருமணிநேரம் போக்குவரத்து நிற்கும் வரையில் ஒரு சாதியவாதியோ, மதவாதியோ, இனப் பிரளயனோ அழைக்கக்கூடும் என்று மௌனி கருதியிருப்பாரா? தவறான புரிதலின் அடைப்படையில் தாக்குதல் நடைபெறலாம் என்பதே முந்தைய தலைமுறை அறியாதது. பொதுமக்களின் முன்பாக வந்து எழுத்து நிற்கும் போது ஏற்படும் விசித்திரம் இது. தி.ஜானகிராமன் இப்போதைய சீமான் கோஷ்டி போன்ற கோஷ்டியிடம் மாட்டிக்கொண்டு நெரிபட்டிருக்கவே மாட்டார். அப்படி ஏதும் நடைபெற்றிருக்குமேயானால் முழு பைத்திய நிலையை அடைந்து எழுதுவதை விட்டகன்று சென்றிருப்பார்கள்.

இரண்டாயிரத்தில் ஒரு இணைய இதழில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது, ‘ரஜினியின் பிம்ப அரசியல்’ என்றோர் கட்டுரை எழுதினேன். அது இணையத்தில் வெளிவந்ததும் ஐநூற்றுக்கும் மேலான எதிர்வினைகள். அதில் முக்கால்வாசி எதிர்வினைகள் - "உன்னைக் கொன்றுவிடுவேன்.” “வென்றுவிடுவேன்” இப்படியான - கடைநிலை தரம் கொண்டவை. எதிர்வினைகளிலேயே ஆகக் கடைசி ரகம் இவைதான். இப்படியான எதிர்வினைகளை பொருட்படுத்தும் சிறிய அளவிலான மனோபாவம்கூட அப்போதே எனக்குக் கிடையாது. ஆனால், முதன்முறையாக நாம் எழுத்தின் மூலமாக பொதுமக்கள் முன்னால் நின்று கொண்டிருக்கிறோம் என்பதை உணரச் செய்த அனுபவம் அது. நான் பொதுமக்களை வரவைத்து அதனை எழுதவில்லை; வருவார்கள் என்றும் தெரியாது. வாசக எதிர்வினைகளே எதிர்பார்த்தவை. வந்து சேர்ந்தவர்களோ பொதுமக்கள்.

இப்போதெல்லாம் தினசரி சராசரி இரண்டு பேர் வீதம் தொலைபேசியில் அழைத்துத் திட்டுகிறார்கள். எந்த உள்ளடக்கத்தின் பொருட்டுத் திட்டினாலும் திட்டுபவர்களுக்கென்று பொது குணாம்சங்கள் உள்ளன. முதல்மூச்சிலேயே தொலைபேசி அதனை நம்மிடம் தெரிவித்துவிடும். நான் அவர்களை வெட்டவெளியில் பேசிக்கொண்டிருக்குமாறு செய்துவிடுவேன்.

"ஒருவன் நீ குறிப்பிட்ட விஷயத்தை சொல்லியதிலிருந்தே தொடர்ந்து ஒருவார காலமாகக் டித்துக்கொண்டே இருக்கிறேன்; உன்னைக் கொல்லாமல் விடமாட்டேன்" என்கிறான். பொதுவெளியில் எழுத்திற்கு இப்படியெல்லாம் சாத்தியங்கள் இருக்கத்தான் செய்யும். அவன் அகத்தை கட்டிவைத்திருக்கும் விதத்தை எழுத்து உடைத்துவிடுகிறது, அவன் நினைத்தே பார்த்திராத ஒரு சந்தர்ப்பத்தில்.

வாசகனுக்கு இத்தகைய தருணங்களை எதிர்கொள்வதில் பயிற்சி இருக்கும். பொதுமக்களிடம் அதேவிதமாக எதிர்பார்க்க இயலாது. இதில் ஒரு சங்கடம் என்னவெனில் ஏதேனும் இக்கட்டில் இருக்கும்போது புதிய எண்ணிலிருந்து வரும் அழைப்புகளை எடுக்க இயலுவதில்லை. சிலசமயம் வாரக்கணக்கில் தொடர்ந்து நமது சிந்தையாகவே இருந்து திட்டுகிறவர்கள் எல்லாம் இருக்கிறார்கள். அவர்கள் சொந்த அப்பாவைப் போல உரிமையெடுத்துக் கொண்டிருப்பது அப்போது விளங்கும். தொலைபேசி எண்ணை இணையத்தில் பரப்பி கூட்டங்கூட்டமாக வந்து தொடர் கலவரம் ஏற்படுத்துகிறவர்கள் எல்லாம் இருக்கிறார்கள். இவர்களில் ஒருவனுக்குகூட தனது பெயரையோ முகவரியையோ முன்வைத்துப் பேசும் தைரியம்கூட இருக்காது. இவற்றுக்கெல்லாம் அஞ்சி பெருமாள் முருகனைப் போல புண்ணைப் பெரிதாக்கி உட்கார்ந்து அழுது வடிய முடியாது. பொதுமக்கள் முன்னால் எழுத்து நிற்கும்போது காலைக் கடன்களை கழிப்பது போல இவற்றைப் பழக்கமாக்கிக் கொள்ளவேண்டும், அவ்வளவுதான் விஷயம். பிரச்சனைகளை நோண்டியெடுத்து பெரிதுபடுத்த வேண்டுமெனில் இங்கே ஒவ்வொரு எழுத்தாளனும் பெரிதாக்கிக் கொண்டிருக்கலாம். உள்ளடக்கத்தில் நம்பிக்கை கொண்ட எழுத்தாளன் சிறப்பு நிலை ஏற்பட்டாலே ஒழிய இவை செய்யத் தகுந்த காரியங்கள் இல்லை. கோணங்கி கழிந்த கல்குதிரை இதழ்கள் கொண்டு வந்தபோது எண்ணை மாற்றிக் கொள்கிற அளவிற்கு முகமற்ற மிரட்டல்கள். அவர் ஓங்கி ஒரு பெரிய குசுவிட்டது போன்று கடந்து போனார். மிக நெருங்கியவர்களுக்கு வெளியே அவர் பராதியே முன்வைக்க வில்லை. இத்தனைக்கும் அவர் தூங்க இயலாத அளவிற்கு நிலைமையை ஏற்படுத்தினார்கள்.

தாக்கத் துடிப்பவனெல்லாம் தாக்குபவனும் இல்லை; தாக்குதலை தாக்குப் பிடிக்கப் போகிறவனும் இல்லை. எழுத்து அவனை தாக்கியிருக்கிறது. உள்ளூர பாதிப்படைப்பவற்றை எதிர்ப்பதென்பது இங்குள்ள பொதுமக்கள் பழக்கம். முதல் பாதிப்பில் எழுந்து நின்று எதிர்க்கும் ஒருவனே பின்னாட்களில் தீவிர வாசகனாகவும் மாறுகிறான். அப்படியும் நடக்கிறது. இது தமிழின் குலக்குணம். பிடித்துப் போயிற்றென்றால் எதிர்ப்பது, பராது சொல்வது, கேவலப்படுத்தத் துணிவது. உள்ளம் குலைந்தவன் எதிர்க்கத்தானே செய்வான்? இப்படியும் ஒருவகை உண்டு. எப்படியிருந்தாலும் வாசகன் மௌனமாகும் அளவிற்கு, ஒரு தல ரசிகன் வாந்தி பண்ணும் போது, சிரமாகத்தான் உள்ளது. வேறென்ன செய்ய முடியும்?

இந்த தொழில்நுட்ப மாற்றம் எழுத்தில், அதன் தொடர்புநிலையில் பாதிப்பை உண்டாக்கியிருக்கிறது. தொடர்பு எந்த சிக்கலான உள்ளடக்கத்தைக் கொண்டதாக இருந்தாலும் பாசாங்கற்று வெளிப்படையாக இருந்தாக வேண்டும் என்று வலியுறுத்துகிறது. அது ஆரோக்கியமானது என்பதே எனது எண்ணம்.

அப்பச்சி காமராஜர் ...

அப்பச்சி காமராஜர் ... காமராஜ் பற்றி "நீயா நானா " விஜய் டிவி ஷோவில் பேசுவதற்காக ஆன்டனி ஒரு வாரம் முன்னதாக அழைத்தார்.நான் வர...