நிழற்தாங்கலில் "ஜெயமோகனுடன் ஒரு நாள் " மார்ச் 26 ஞாயிறு

நிழற்தாங்கலில் "ஜெயமோகனுடன் ஒரு நாள் "
மார்ச் 26 ஞாயிறு

நாகர்கோயில் "நிழற்தாங்கல் படைப்பிற்கான வெளியின்" சிறப்பு நிகழ்வாக மார்ச் 26 ஞாயிறு "ஜெயமோகனுடன் ஒரு நாள் " சந்திப்பு நடைபெற உள்ளது.காலை அமர்வு 8 மணிக்கு கவிஞர் பா.தேவேந்திரபூபதி Devendhira Poopathy Bhaskarasethupathy கவிதைகள் வாசித்து இந்நிகழ்வைத் தொடங்கி வைப்பார்.மதிய உணவு இடைவேளைக்குப் பின்னர் என்னுடைய Lakshmi Manivannan சில கவிதைகள் வாசிப்புடன் மதிய அமர்வு தொடங்கும்.

நாங்கள் ஏற்பாடு செய்த சில நிகழ்வுகளில் ஜெயமோகனுடன் சரியாக உரையாட இயலவில்லை என்கிற குறை வாசகர்களுக்கும் ,சக படைப்பாளிகளுக்கும் உள்ளது.அவர்கள் பலமுறை இதுகுறித்துத் எங்களிடம் தெரிவித்து விட்டார்கள்.அக்குறையை அகற்றும் விதமாகவும் நிழற்தாங்கல் இந்நிகழ்வை ஏற்பாடு செய்து வருகிறது.

ஆசை பலமடங்கு இருப்பினும் கூட ஐம்பது பேருக்கும் அதிகமாக இப்போது இந்நிகழ்வில் பங்கேற்பாளர்களை அனுமதிக்கும் சூழ்நிலை இல்லை.ஐம்பது பேருக்கு உரிய ஏற்பாடுகளை செய்து வருகிறோம்.இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்கு கட்டணங்கள் ஏதும் கிடையாது.வருகை தர விரும்புபவர்கள் காலையுணவை முடித்து விட்டு வாருங்கள்.மதியம் சிறப்பான சைவ உணவிற்கு நாங்கள் ஏற்பாடு செய்திருக்கிறோம்.அதுபோல இருவேளைகள் தேநீருக்கும் ஏற்பாடு செய்திருக்கிறோம்.வருகை தர விரும்புபவர்கள் தங்கள் வருகையை முன்கூட்டி எங்களுக்கு உறுதி செய்து தெரிவிக்க இயலுமேயானால் ஏற்பாடுகளை கூடுமானவரையில் குறைவின்றி செய்ய அது எங்களுக்கு உதவியாக இருக்கும்.

இலக்கியம் ,கலை,தத்துவம் ,அறிவு ,பின்நவீனத்துவம் என்று எது பற்றி வேண்டுமாயினும் இந்நிகழ்வில் ஜெயமோகனுடன் மனம் திறந்து உரையாடலாம்.

ஜெயமோகனுக்கும் எனக்குமான உறவு தொண்ணூறுகளில் தொடங்கியது.இருவருக்கும் மையமாக அப்போது சுந்தர ராமசாமி வாழ்ந்த காலம் அது.இப்போது நினைத்துப் பார்க்கையில் ஒருவருக்கொருவர் ஆச்சரியபடத்தக்க வகையில் அப்போது நிறைய கால அவகாசம் இருந்தது.அது ஒரு சூக்குமமான இணைப்புதானோ என்னமோ ? சுராவை சந்திக்காமல் இருந்திருந்தால் என்னைப் பொறுத்தவரையில் தடம் தெரியாமல் அழிந்திருப்பேன் என்பதே உண்மை.

சாராம்சமாக தலைகீழாக உள்ளிறங்கியிருப்பவர் அவர்.தெய்வம்தான் இந்த வாய்ப்புகளை சூது செய்திற்றோ என்கிற ஐயம் எப்போதும் எனக்கு உண்டு.அவரோடு நெருங்கியிருந்த காலங்கள் எட்டு வருடங்கள்.ஜெயமோகனுக்கு இன்னும் அதிகம் இருக்கும்.அவரோடு இணைந்திருந்த காலங்களில் அவர் கூற்றுகளில் பலதும் எனக்கு விளங்கவில்லை என்பதே உண்மை .ஆனால் அவை எதுவுமே மனதிலிருந்து விட்டுப் போயிருக்கவில்லை.பௌதீகமாக அவரை இழந்த பிறகுதான் அவர் எனக்கு அர்த்தமாகத் தொடங்கினார்.ஜெயமோகனுக்கும் அவருக்கும் வாழுங்காலத்தின் எங்கள் சந்திப்பின் தொடக்க காலத்திலிருந்தே புரிந்து கொள்ளுதலில் இடைவெளிகள் இருந்ததில்லை.ஜெயமோகன் அவரோடொப்பம் அவர் யார் என்பதை கணிசமாக புரிந்து கொண்டிருந்தார்.

எம். கோவிந்தன்,பி.கே.பாலகிருஷ்ணன்,டி.டி . கோசாம்பி போன்றோர் விஷயங்களில் இருவருடைய பார்வைகளிலும் அதிக இடைவெளிகள் கிடையாது.ஜெயமோகன் என்னுடைய மனவேகத்திற்கும் முப்பது வருடங்களுக்கும் அதிகமான தொலைவில் சிந்திப்பவராகவே அப்போதும் இருந்தார்.இப்போதும் இருக்கிறார். சுராவை அவர் கடந்து செல்லும் போது சுராவின் நிழல் உறுதியாக என்னில் கட்டியாக பற்றிற்று.சுராவை என்னிலிருந்து கழற்றுவது அவ்வளவு எளிதான காரியமல்ல.

சுராவின் போதாமைகள் குறித்து பேச்சு வரும்போதும் அதன் நீட்சியாகத் தான் ஜெயமோகனைப் பார்க்கிறேன்.அதன் பிரம்மாண்டமானதொரு நீட்சி.கழிந்த சந்திப்பில் சுரா நம்மை காப்பாற்றியிருக்கிறார் என்று ஜெயமோகன் சொன்னதைக் கேட்க நெகிழ்ச்சியாக இருந்தது.அதுதான் உண்மை .எல்லோரையும் போல கெட்டி இறுக்கமடைந்தோ,சமய சார்புகளிலோ மோதிவிடாமல் ,மோதிக் சிதறாமல் படைப்புப் பார்வைகளில் நின்று அவர் எங்களை பாதுகாத்திருக்கிறார்.

ஜெயமோகனைப் பொறுத்தவரையில் ஆரம்பத்திலிருந்து இன்றுவரையில் அவர் என்னுடைய பார்வைகளில் ,கண்ணோட்டங்களில் புதிதாக சிலவற்றை திறந்து விடுபவராகவே இருந்து வருகிறார்.ஒவ்வொரு சந்திப்பிலும் அது நிகழ்கிறது.என்னை எந்த இடத்தில் திறக்கிறார் என்பது எனக்குத் தெரிவதை போன்றே அவருக்கும் தெரிந்திருக்கும் என்றே நம்புகிறேன்.அதனாலோ நேரடி தொடர்பினாலோ மட்டுமல்ல.உடன் வாழும் காலத்திலேயே அவர் டால்ஸ்டாய் .தாஸ்தெவெஸ்கி போன்றதொரு அபூர்வமாக அவர் உருவெடுத்திருக்கிறார்.அவருடைய பெறுமதிகள் அனைத்துமே அதனால் ஆனவை.பலருக்கும் அவர் நம்முடன் உடனிருப்பதால் அவர் இருப்பின் ரூபம் கண்மறைக்கிறது.

ஜெயமோகனுடன் சந்திப்பது எல்லோருக்கும் எப்போதும் உத்வேகமளிப்பதாகவே இருக்கும்.எதிர்மையாகத் தோன்றுவோருக்கும் கூட உத்வேகமளிக்கும் .அந்த உத்வேகம் குறுக்கும் நெடுக்குமாக நம்மை படைப்பின் திசை நோக்கி உந்தக் கூடியது.

வாருங்கள் சந்திப்போம் .
வருகையை அறியத் தாருங்கள்

நிழற்தாங்கல் படைப்பிற்கான வெளி
7 / 131 E பறக்கை @ போஸ்ட் ,நாகர்கோயில்
குமரி மாவட்டம்

தொடர்பு எண் - 9362682373

மின்னஞ்சல் - slatepublications @gmail .com

படைப்பாளியின் இருத்தல் சு.வேணுகோபால்.

படைப்பாளியின் இருத்தல் சு.வேணுகோபால்.


எழுத்தாளர் சு .வேணுகோபால்  நாகர்கோவிலில் நடைபெற்ற "அனக்கம்" கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.நெடுநாட்களுக்குப் பிறகு அரசியல் வாடையற்ற படைப்பாளியின் மாறுபட்ட கண்ணோட்டத்தை மட்டுமே வெளிப்படுத்திய உரையாக அது இருந்தது.இதுதான் இங்கே பற்றாக்குறையாகவும் இருப்பது.

ஒரு பொது அரங்கில் இது போன்ற உரையைக் கேட்டு வெகு நாட்களாயிற்று.படைப்புக் கண்ணோட்டம் அற்ற நாலாந்தரமான நபர்கள் பெரும்பாலும் தங்கள் குறுகிய கால அரசியல் கருத்துக்களால் சூழலை முடக்குகிறார்கள்.படைப்புக் கண்ணோட்டம் அற்றவர்களுக்கு அரசியல் கருத்துக்கள் புகலிடங்களாக அமைந்து விடுகின்றன.அவற்றுக்கும் படைப்புக் கண்ணோட்டத்திற்கும் தொடர்பேதும் கிடையாது என்பதை வாழ்வு முழுதும் அவர்கள் அறிவதுமில்லை.

படைப்பாளி இந்த அரசியல் தற்காலிகத்தில் சற்று மங்கி தெரிந்தாலும் கூட அவனுடைய கண்ணோட்டமே ஜீவனுள்ளது என்பதை உணர்த்தியது அவருடைய  உரை.தன் படைப்பின் தருணங்கள் எவ்வாறு உருக்கொள்கின்றன என்பவற்றை அவர் ஒரு குழந்தையைப் போல விவரித்த விதம் வசீகரிப்பு மிக்கதாக இருந்தது .

சமகாலத்தில் சில படைப்பாளிகளின் மீது ஏனோ சரியாகக் கவனம் குவிவதில்லை.ஆனால் பின்னாட்களில் சமகாலத்தில் மறையும் அதன் இருப்பு எவ்வளவு முக்கியமானது என்பது புலப்படும்.இப்படியான படைப்பாளிகளுக்குத் தமிழில் நிறைய முன் உதாரணங்கள் உண்டு.அது போன்ற ஒரு இருப்பு சு.வேணுகோபாலுடையது . அரசியல் சூறாவழிகளில் அடித்துச் செல்லப்படாமல் கரையேறும் வழியறிந்தவர்.இவரைப் போன்றவர்கள் பொறாமை கொள்ளும் அளவிற்கு பாக்கியம் நிறைந்தவர்கள்.அவரை படித்து அறிந்த, உணர்ந்த வாசகர் ஒருவர்  அரங்கில் அமர்ந்து அவரிடம் கேள்விகளை நெருக்கமுற முன்வைத்ததே அவர் எழுத்தின் பாக்கியம். காலம் படைப்பாளிக்குச் செய்யும் பரிகாரம் இதுதான்.

இளைஞர்கள் இவரிடமிருந்து கற்க பல விஷயங்கள் உண்டு.அவற்றில் முதன்மையானது எழுத்தின் மீதான தீராத வைராக்கியம்.கனவு.அவரை பத்துப்பதினைந்து வருடங்களுக்கு முன்பு பார்த்தது.முன்னைக் காட்டிலும் அபாரமான கூருணர்ச்சி , தெளிவு ,உந்துதல் .காண மகிழ்ச்சியாக இருந்தது. சந்தோசம்

இந்து விரோத மனப்பான்மை

இந்து விரோத மனப்பான்மை

இந்து மதம் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள்,வழிபாடுகள் போன்றவற்றைப் பற்றிய விமர்சனங்கள் எழும்போது இங்குள்ள முற்போக்கு முகமுடியணிந்த கிறிஸ்தவர்களும் ,முஸ்லீம்களும் கூட்டு சேர்ந்து தாக்குகிறார்கள்.அந்த இனிய தருணங்களுக்காகக் காத்திருக்கிறார்கள். அதற்காகத்தான் அவர்கள் முற்போக்குகளாக இருக்கிறார்களோ ? என சந்தேகிக்கும் அளவிற்கு.எனக்கு  இந்து சமயம் சார்ந்த நிறுவனங்களில் விமரிசனம் இல்லாமல் இல்லை.ஆனால் கிறிஸ்தவர்கள்,முஸ்லீம்கள் ஆகியோரிடம் இருந்து இத்தகைய சந்தர்ப்பங்களில் வெளிப்படும் காழ்ப்புணர்ச்சி நெருடலாக இருக்கிறது.நிறுவனங்களில் ஏற்படும் சிக்கல்கள் ,இடர்பாடுகள் எல்லா மதம் சார்ந்த நிறுவனங்களிலும் உண்டு.இஸ்லாமிய ,கிறிஸ்தவ நிறுவனச் சிக்கல்கள் வரும்போது இந்துக்கள் இவ்வளவு தூரத்திற்கு தங்கள் முற்போக்கு அங்கியுடன் வந்து மோதுவது குறைவு என்றே கருதுகிறேன்.

அமிர்தானந்தா பற்றி ,பங்காரு பற்றி இன்னும் பலரைப் பற்றி தொடர்ந்து வேற்று மதத்தினர் காட்டுகிற தாக்குதல் ஆர்வம் ஒரு நோய்க்குறி என்பதில் சந்தேகமே இல்லை.ஒவ்வொரு விதமான மத பிரிவுகளும் அதனதன் தளத்தில் சில பங்களிப்புகளை செய்து கொண்டிருப்பவை.குறைகள் எல்லா இடங்களிலுமே உண்டும்.நான் இவர்களிடம் கேட்க விரும்புகிற கேள்வி உங்கள் மத நிறுவனங்களின் சங்கதிகளில் குறைகள் எதுமே கிடையாதா ? எனில் நீங்கள் எருமை மாடுகள் என்பதே அர்த்தம்.ஏன் இந்து மதம் சார்ந்த நிறுவனங்களின் குறைகளில் இவ்வளவு தூரத்திற்கு உற்சாகம் அடைகிறீர்கள்?

 ஜக்கி போன்றவர்களை நான் முழுமையாக ஆதரிக்கிறேனா இல்லையா ... என்பது பிரச்சனையே இல்லை.ஜக்கியாகட்டும்,அமிர்தாவாகட்டும் ,பங்காருவாகட்டும் அவர்கள் ஆன்மீகத்தின் சில பண்புகளை ஜனநாயகப்படுத்தியிருக்கிறார்கள்  என்பதே உண்மை.மக்கள் ஒன்றும் முட்டாள்கள் கிடையாது.ஆன்ம ஞானத்தின் சில பகுதிகளை மக்கள் உள்ளத்தில் உணராமல் ஒருபோதும் கூடுவதில்லை.இவர்கள் பக்கமாக சாய்வதுமில்லை. யாரையும் குருவாகக் கொள்வதும் இல்லை.

பிற மத இடற்பாடுகளின் போது உற்சாகம் கொள்வது நல்ல பண்பும் இல்லை முற்போக்கும்  இல்லை.சகிப்புத் தன்மையும் இல்லை.  பிற சமயத்தைச் சார்ந்த தோழர்கள் இந்துமதத்தை மட்டுமே அடிவயிறுவரைக்கும் கண்காணித்துக் கொண்டே இருக்கிறீர்களே அதனை செய்யாதிருங்கள்.அதற்கு எந்த மனோபாவம் காரணமாக இருந்தாலும் கூட அது நல்லொழுக்கம் இல்லை.

எங்கள் பகுதிகளில் மிகுந்த இடையூறையும் ,உபத்திரவத்தையும் ஏற்படுத்திக் கொண்டிருப்பவர்கள் இந்த பெந்தைகொஸ்தே சபையின் சில பிரிவினர்தான்.மிகப் பெரிய அத்துமீறிகள் அவர்கள்.அவர்களின் சமயம் பிறரிடம் அத்துமீறுவதையும் கடமையாகவே போதிக்கிறது.அத்துமீறுவதை ஒருவர் ஏற்றுக் கொள்ளவில்லையெனில் அவரிடம்  தொடர்ந்து அத்துமீறும் மனோநிலையில் இருப்பவர்கள் அவர்கள்.அப்படித்தான் படித்து வைத்திருக்கிறார்கள்.ஆர்.சி.; சி.எஸ்.ஐ போன்ற பிற கிறிஸ்தவ பிரிவுகளில் கூட இவர்களுக்கு வல்லூறுகள் என்றே பெயர்.

ஒருமுறை சபரிமலைக்கு விரதமிருந்து மலைக்குச்  செல்ல தயாராகிக் கொண்டிருக்கிறேன்.ஒரு பெந்தகொஸ்து வீட்டிற்குள் நுழைந்தார்.உடனடியாக எனது தலையில் கைவைத்து ஜெபம் செய்யவும் முயன்றார்.ஐயா நான் வைகுண்டசாமிகளின் குடும்பத்தைச் சார்ந்தவன் ,தற்போது ஐயப்பனுக்கு மாலையணிந்து விரதமிருந்து கொண்டிருக்கிறேன்.பிறிதொரு சமயத்தில் வாருங்கள்..மேலும் எனக்கு ஜபம் செய்யும் நேரத்தில் பிறர் யாரேனும் ஒருவரை முயன்று பாருங்கள்.அது உங்களுக்கு பலன் அளிக்கக் கூடும்.அதுவே நல்லது என்றேன்.  அவர் விடவில்லை உட்கார்ந்து ஜபம் செய்யத் தொடங்கினார்.நான் வீட்டை விட்டு வெளியேறும்படியாயிற்று.அவர்களில் பலரின் வணிகம் மதம்தான் என்பதும் ,அவர்களின் யோக்கியத்தைகளும் அறிந்தவைதான்.ஆனாலும் கூட அவர்களும் ஒன்றுமில்லாமல் ஒன்றும் செய்து கொண்டிருக்கவில்லை என்பது எனக்குத் தெரியும்.மக்களை அவர்களும் ஏதோ ஒரு விதத்தில் இறைநிலையுடன் தொடர்பு கொள்ளவே உதவுகிறார்கள்.அவர்களுடைய அத்துமீறல்தான் பிரச்சனையே தவிர அவர்களையும் புறக்கணிக்க இயலாது .ஏதோவொரு விஷேசமான காரியத்தை அவர்களும் மக்களிடம் ஏற்படுத்தவே செய்கிறார்கள்.அவர்களை பற்றிய என்னுடைய எண்ணம் இது.காரணம் வேறொன்றுமில்லை.மக்கள் ஒருபோதும் காரணமற்ற விஷயங்களில் எதன் நிமித்தமும் போய் கூடுவது
கிடையாது .அதற்கான அவசியம் ஒருபோதும் மக்களுக்கு கிடையாது என்பதில் எனக்கு உறுதியான நம்பிக்கை உண்டு.

எந்த மதத்தையும் யார் வேண்டுமாயினும் விமர்சிக்கலாம்  என்பது உண்மைதான் .அதற்காக இந்து மதம் சார்ந்த விஷயங்களில் மட்டுமே விமர்சனத்தை முன்வைத்து  உங்கள் உற்சாகத்தை கட்டி எழுப்பிக் கொண்டிராதீர்கள் கிறிஸ்தவர்களே ,முஸ்லீம்களே .நெருடலாக இருக்கிறது.

உங்கள் முற்போக்கு அங்கி பல சமயங்களில் கிழிந்து தொங்குவது பற்றிய சுரணையே உங்களுக்கு இல்லை.இந்துக்களையும் சகித்துக் கொள்ளப் பழகுங்கள்.இது ஒரு நினைவூட்டல் .மனம் திரும்புங்கள்.

தமிழ்நாட்டு மாணவர்கள் பரிசோதனை எலிகளா மோடி ?

தமிழ்நாட்டு மாணவர்கள் பரிசோதனை எலிகளா மோடி ?

மார்ச் ஒன்றாம்  தேதியுடன் நீட் நுழைவுத்  தேர்விற்கான விண்ணப்பிக்கும் கால வரையறை ,கெடு  முடிகிறது.இன்னும் மீதம் இருப்பவை ஏறக்குறைய பத்து நாட்கள்.இதுவரையில் மத்திய அரசாங்கம் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு ஒரு பதிலும் சொல்லவில்லை.மாநில அரசாங்கம் சட்டசபையில் நீட் தேர்வை எதிர்த்து மசோதா  நிறைவேற்றியதுடன் அதனை முன்னோக்கிச் செலுத்த ஏதும் காரியங்கள் செய்யவில்லை.மருத்துவப்படிப்பை விரும்பும் தமிழ்நாட்டு கிராமப்புற மாணவர்களும் அவர்தம் பெற்றோரும் அடைந்திருக்கும் குழப்ப நிலைக்கு யார் பொறுப்பு ? இந்த மாணவர்களுக்கு இந்த காலம் மீண்டும் ஒருமுறை திரும்பி வருமா என்னா ?

இரண்டு விபரங்களை அறியத் தருகிறேன்.மருத்துவப் படிப்பில் சேர விரும்புகிற ஒரு தமிழ்நாட்டு மாணவன் நீட் நுழைவுத் தேர்வின் அடைப்படையில் செல்ல வேண்டுமாயின் அதற்கு அவன் படிக்க வேண்டிய ,பயிற்சி எடுக்க வேண்டிய முறை வேறு. மாநில பாடங்களில் அவன் அதிக அக்கறை செலுத்த வேண்டியதில்லை.ஐம்பது விழுக்காடு பெறுவதற்கான உழைப்பை மாநில பாடத்திட்டத்தில் செலுத்தி விட்டு நீட்டுக்கான சி.பி.எஸ் .சி பாடத்திட்டத்தை அவன் பூரண மனனம் செய்யவேண்டும்.கேள்வித்தாள்களில் பயிற்சி பெறவேண்டும் .நீட் இல்லை மாநிலத்தில் ஏற்கனவே உள்ள முறையே பின்பற்றப்படும் எனில் மாநிலபாடத் திட்டத்தில் அவன் அதிக மதிப்பெண் பெற்றே ஆகவேண்டும்.இந்த இரண்டு விதமான பாதைகளும் முற்றிலும் ஒன்றிற்கு ஒன்று முரண்பட்டவை.நீட் தேர்வா ? அல்லது மாநிலத்தில் பின்பற்றப்பட்ட நிலையா ? என்பதில் நீடித்து வருகிற குழப்பம் மருத்துவம்   பயில விரும்புகிற தமிழ்நாட்டு மாணவனுக்கு இந்த ஆண்டில் பெருத்த இடையூறாக நிற்கிறது.

நீட் கிடையாது மாநில முறையையே இனி பின்பற்றப் போகிறார்கள் என்கிற செய்திகள் கிடைக்கிற போது ஏழை மாணவர்கள் மதிப்பெண் பெறுவதற்காக உழைக்கிறார்கள்.அதுவே   "நீட் தான்"  வேறு வழியில்லை என்று திசைமாறும்போது அவர்கள் மாநில பாட திட்டத்தில் கவனம் குறைத்து சி.பி.எஸ்.சி யை கையில் எடுக்கிறார்கள்.இவ்வாறாக அவர்களை திக்கு முக்காடச்  செய்வது என்ன தன்மை என விளங்கவில்லை.எந்த ஒரு நாட்டில் மாணவர்களின் கல்வி விஷயத்தில் இப்படியான முரண்பட்ட குழப்பம் தீர்வு காணப் படாமல் நீடித்துக் கொண்டே   போகுமா ?   இந்த மாணவர்களை எல்லாம் மனிதர்கள் இனத்தில்தான் இன்னும் வைத்திருக்கிறீர்களா ? இல்லை வேறுஏதேனும் வகையில் புரிந்து
கொண்டிருக்கிறீர்களா ? பரிசோதனை எலிகளா அவர்கள் ?

இந்த இரட்டை நிலை இல்லாமல் உயர்ந்தததோ ,தாழ்ந்ததோ  பின்பற்றப்படப் போவது குறிப்பிட்ட ஒரு முறையில் மட்டும்தான் என்பதில் தெளிவு ஆரம்பத்திலிருந்தே இருக்குமேயானால் கூட அவர்கள் அதனைப் பின்பற்றி தயார்பட்டு விடுவார்கள்.

இதுவரையில் ஒரு தெளிவும் இல்லை.செயல்முறைத்  தேர்வுகள் முடிந்து விட்டன.மத்திய அரசு நீட் என்கிறது .மாநில அரசு நீட் தேர்வை எதிர்த்து சட்ட மசோதா நிறைவேற்றியிருக்கிறது.

சிக்கலான அரசியல் சூழ்நிலைகளை பயன்படுத்தி கார்பன் கைதராக்சைடு தமிழ்நாட்டில் உறிஞ்ச ஒப்புதல் வழங்கியிருக்கும் மோடி அரசிற்கு மாணவர்கள் நலனில் கண்பார்க்கத் தான் சமயமேயில்லை போலும் .

"எனது பூர்வீகம் இங்கில்லை" சமீபத்திய கவிதைகள்

"எனது பூர்வீகம் இங்கில்லை" சமீபத்திய கவிதைகள்

1

பத்து முகங்களில் ஒன்றை பதுங்கு குழிக்குள்
ஒளித்து வைத்தேன்.
வெண்ணை திருடிய முகத்தை அது வேவு பார்த்தது

பையில் வைத்திருந்த முகம்
கையில் வைத்திருந்த முகம் இரண்டும்
நான் சொல்லிக் கொண்டு திரிந்த என் முகம் பார்த்து சிரித்தது

பழிவாங்கலில் சிரிக்கும் முகம் அதற்கு
காரணங்கள் பேசிய முகத்துக்கு களபம் பூச
சந்தனத்தைத் தோலுரித்துக் கொண்டு வெளியேறியது பூதமுகம்

கண்ணாடி போட்டுக் கொண்டு காட்சி தருகிற
என் முகத்துக்குத் தெரியும்
கண்களே இல்லாதது பத்தாவது முகம் என்று

ஆகமொத்தம்
பத்து முகம்
பத்து முகம் மறைக்க இப்போது பதினொன்றாவது
ஒரு முகமூடி
என் சட்டை பொக்கட்டில் இருக்கிறது

சரட்டுத் திரி காட்டாமல்
போ.. போயிருந்தது
விளக்கெண்ணெய் பூசிக்கொள்
பொலிவானாலும் ஆகலாம்
உந்தன் திருமுகங்கள்.

2

நான்கு வழிச் சாலையில்
எனது மோட்டார் சைக்கிளில் கைநடுங்குவது
எனது தவறில்லை அய்யாவே

அந்த சாலையில் கீறி உள்ளே உள்ளே பாருங்கள் திறந்து ,
அங்கேயிருக்கிறது நான் செல்ல வேண்டிய சொகுசுப் பாதை ,
சுற்றிலும் செந்தெங்கிளநீர் கண்டீரோ
பூவரசில் பீப்பீயொலி கேட்டீரோ
கள்பதநீர் சுவைத்தீரோ

திருயோனித் தடம் தெரிகிறதா ?
உண்மைதான் மலர்வளைப் பாதை யோனி கொண்டு
கட்டப்பட்டவன் நான் .

இளநொங்கின் கரங்களில்
நீவிர் கண்ட கைநடுக்கம் என்னுடையதில்லை அய்யாவே
ஆங்கே பாரும்
இருமாட்டு வண்டியில் அடித்தோட்டி வேகம் கடந்து செல்கிறானே
அந்த ராஜகுமாரன்
அவனுடையதுதான்

அவனைச் சென்று கைது செய்யுங்கள்

3

இருக்கும் போதே இறந்தவன்
இறந்து போனான்
உதிர்ந்த மாலைகள் கொண்டு அவனுடைய தேர் அலங்கரிக்கப்படுகிறது.

புதிய புதிய மாலைகள்தாம் ஏனிப்படி
உடனுக்குடன் உதிர்கின்றன ?
விழாக்களுக்கு அவன் வந்து செல்லும் போது
பொது மண்டபங்கள் அவனைப் புகைப்படம் எடுப்பதில்லை

ஒருமுறை வாயிற்காவலன் ஏற்கனவே இறந்து போனவர்தானே?
எனக் கேட்டே விட்டான்.
சுய செல்பியை நிராகரித்த தெரு நிர்வாகிகள்
நீங்கள் வாழுங்காலத்தில் சுய செல்பி
கிடையாது என்பதை நினைவில் கொண்டு செயல்படுங்கள்
என்று அறிவுரை சொன்னார்கள்.

பந்தி பரிமாறியவன்
இவன் இலையை கடந்து சென்றதை
இவனும் ஏனென்று கேட்கவில்லை
அவனும் ஏனென்று சொல்லவில்லை

இவன் ஏன் இங்கு வந்து நிற்கிறான் ?
யாராவது விளக்குங்களேன் என்று கும்பிடப் போன சாமி
கேள்வி கேட்டதை விளங்காத இவன்
இறந்து கிடக்கிறான்.

எல்லாம் நடைபெறுகின்றன
ஆனால் எதுவோ நடைபெறவில்லை

இறந்தவனின் ஊர்வலம்போல இந்த ஊர்வலம் செல்லவில்லை.

எனக்கோ அவன் இன்னும் இருக்கிறானோ ?
என்னும் சந்தேகம்
வீதி வலம் வந்து கொள்ளிக்குடமுடைத்து
என்னென்னமோ என்னய்யோ சப்தமிட்டு
எரியூட்டித் திரும்பிய பின்னும்
முதலில் இருந்தே மீண்டும் வாசித்துப் பார்
என்கிறது

4

எனது பூர்வீகம் இங்கில்லை
கொன்று விடுவீர்களோ
ஒதுக்கி வைப்பீர்களோ
சேர்த்துக் கொள்ளமாட்டீர்களோ ?

வந்த இடம்தானிங்கே
செல்லுமிடம் வேறே

நாடில்லை வீடில்லை
தாய் மொழியில்லை
தந்தை வழியில்லை

பிணக்கும் இல்லை நட்பும் இல்லை
நான் சாமியும் இல்லை சைத்தானும் இல்லை

நிறமில்லை ஆனால் என் வாலில் வானவில் தோன்றும்
சில நேரம்

நிலம் எனதில்லை ஆகாயம் என்னுடையது
நீர் எனதில்லை மழை என்னுடையது

எந்த சுடுகாடும் என்னுடையதில்லை
ஆனால்
எல்லா சுடுகாடும் என்னுடையவை

சுடுகாடு என்னைப் பற்றிய எந்த அடையாளத்தையும் உங்களிடம்
கோராது

எந்த சுடுகாட்டிலும் எரியூட்டலாம்
முதலில்
கொல்ல வேண்டும் என்னை

அது இயலாது என்றெல்லாம் சொல்லமாட்டேன்
என்னிலும் பெரியோன் நீங்கள்
உங்களிலும் மேலோன் நான்

இனம் தெரியாத ஒருவனுக்கு
அருந்தத் தருகிற அமுதில்
திரும்பி பார்க்கவே இயலாத வழிப்போக்கனுக்கு
விட்டுக் கடக்கிற புன்னகையில்
தப்பிச் செல்ல முயலும் கொலையாளிக்கு
காட்டுகிற திக்கில்
ஒளிந்து
மினுமினுங்கி கிடப்பேன்
அதனால்தான்

நான் யாரென்று அவசியம் தெரிந்தாக வேண்டுமா ?
வழிநடையில் கிடக்கும் ஒருவனுக்கு பீடியை எடுத்துக் பற்ற வைத்துக்
கொடுத்துப் பார்

[ வைகுண்ட சாமிக்கு ]

5

இன்று பார்த்த மலை
இதன்முன்னம் பார்த்த மலை அன்று

இதன் முன்னம் பார்த்ததெல்லாம் இதன் முன்னம்
பார்த்தவை

பிரசவத்தின் பின்பான அடிவயிறு கோடுகளாக எழுந்து
சுனைநீரில் முடிகிறது ஒரு பக்கம்

புகைக்கம்பங்களின் உள்ளே தங்கக் கோடுகள்
நிறைந்த பின்மதியம்

தொடர்ச்சியின் பின்பக்கம் நிழல் காட்டும்
நீலம்

இவ்வளவு தெளிவாக அகத்திற்குள் இறங்குகிறது
மலையின் சுடு சாறு

ஏரியும் மலையும் நேருக்கு நேராக ஒருவரையொருவர்
நோக்கும் இடத்தில் நின்று கொண்டிருக்கிறேன்

எந்தக் கவலையும் புரண்டு வந்து
இந்தக் காட்சியை தின்னத் தகாது என்று

6

கிளைச்சாலையில் ஒதுங்கிய கிராமத்தில் வசிக்கும்
விளையாட்டு வீரன் நான்

கோலிக்குண்டுகளை எடுத்துக் கொண்டு
நாளையும் இன்று போலவே விளையாடச் செல்லவே யோசித்திருக்கிறேன்.

எனது முதுகில் நீயிட்ட லத்தியின் கோடுகள்
தீப்பட்டத் தடங்கள்
விளையாடுமிடங்களில் கரி மூட்டம்

என்னிடம் துப்பாக்கியில்லை,லத்தியில்லை
என்னிடம் ராணுவம் இல்லை போலீஸ் இல்லை
சக சில விளையாட்டு வீரர்களைத் தவிர எனக்கு வேறு எவரையும் தெரியாது

விளையாடும்போது உயரத்தில் பறந்து கொண்டிருக்கும் கிருஷ்ண பருந்து
முதுகில் என்ன காயம் என்று கேட்கும்
உன்பெயரை அவற்றுக்குச் சொல்லட்டுமா ?

கரிந்தது எப்படியென என் கடல் விசாரிக்கும்
பூவரசு இப்போதே கேட்டுக் கொண்டிருக்கிறது
தென்னைகளிடம் சோகப்படாதீர்கள் என்று சொல்லியிருக்கிறேன்

குழந்தைப் பையன் கண்ணோரம் கொண்ட காயத்துடன்
ஓடி வந்து கொண்டிருக்கிறான்
வலி பொருட்டில்லை இன்னும் சிறிது நேரத்தில்
அவனும் சேர்வான்
விளையாட்டைத் தொடர்வோம்

நீ யார் என்பது எனக்குத் தெரியும்
மிக நன்றாகத் தெரியும்
இன்று நேற்றல்ல பலகாலமாக
எனினும் பரவாயில்லை
விளையாட வருகிறாயா ?

நம்பி நீயும் வந்து இணையலாம் எங்கள் விளையாட்டில்
நிச்சயமாக நம்பு உன்னிடமிருப்பது போல
போலீஸ் இல்லை,ராணுவம் இல்லை.

உன்னிடமிருக்கும் அதிகாரத்தை எடுத்துக் கொண்டு வந்தேனும்
விளையாடிப்பார்.
விளையாட்டில் வீரன் எப்போதும் நான் தான்
நீ என்ன வேண்டுமானாலும் செய்து பார்
விளையாட்டில்
நானே ராஜா மகாராஜா

7

உன்னுடைய மூன்று சட்டைகளோடு
இதுவரையில் நான் பேசியிருக்கிறேன்

நேற்று நீயணிந்திருந்தது துள்ளல் லினன்
நேற்று அது நல்ல நம்பிக்கையுடனும் ,உற்சாகத்துடனும் இருந்தது?
ஏன் மெலிந்து போனாயென்று
துள்ளிக் கொண்டே என்னை கேட்டது ...
நெடுநாளாய் நீ இப்படி கேட்க நினைத்ததைத் தான்
அது கேட்டது என்று நினைக்கிறேன்

உன்னுடைய காட்டன் சட்டைக்கு ஒரு மீசையுண்டு
"உன்னைக் கொன்று விடுவேன்"
என என்னைச் சொல்லி உடனடியாக அது முகம் திருப்பிக் கொண்ட
நாளில்
நானோ தேவகுமாரனாயிருந்தேன்
கொலை செய்யத் தோன்றும் பேரழகு

உனது ஓட்டோ சட்டையை கொஞ்சம்
அதிக கவனம் எடுத்து கவனி
தலைகுனிந்து
தாழ்வுணர்ச்சி பெருகி அருவருப்பாக இருக்கிறேனா ?
என்று போவோர் வருவோர் அத்தனை பேரிடமும்
கேட்டுத் திரிகிறது அது

சட்டைகளோடு பேசிக்கொண்டிருப்பதில்
எனக்கு சிரமம் ஏதுமில்லை என்றாலும்
சட்டைக்குள்ளிருக்கும் உன்னோடு பேசத் தானே
எனக்கு அதிகம் விருப்பம் உண்டாகிறது
சட்டைக்குள்ளிருக்கும்
நண்பா

பா.ஜ.கவின் வியூகங்கள் முறியடிக்கப்பட வேண்டியதே தற்போதைய தேவை

பா.ஜ.கவின் வியூகங்கள் முறியடிக்கப்பட வேண்டியதே  தற்போதைய தேவை

பா.ஜ.கவின் வியூகத்திற்குள் பன்னீர்செல்வம் வெளிப்படையாகத் தெரிந்து கொண்டிருக்கும் பிம்பம் எனில் தி.மு.க மறைமுகமாக இருக்கிறது.அதிகார போட்டியில் அது வெளிப்படையாக தன்னை வைத்துக் கொள்ளத்தான் தயங்குகிறதே அன்றி பா.ஜ.கவுடன் அது பேரத்தில் ஈடுபட்டுக் கொண்டுதான் இருக்கிறது.அதிகாரத்தை ஏற்படுத்தித் தருவதற்கு உதவும் பட்சத்தில் அது பா.ஜ.கவுடன் பல சமரசங்களுக்குத் தயாராகவே உள்ளது.அ.தி.மு.கவில் உள்ள குழப்பங்களுக்கு மத்தியில் தி.மு.க அதிகாரத்தைப் பிடித்தால் தங்களுக்கு சாதகமாக இருக்கும் என்று பா.ஜ.க கருதுவதாக விகடன் செய்திகள் பேசுகின்றன.அ.தி.மு.கவில் இருந்தும் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களிடம் வந்து சேர்வார்கள் ,எனவே  தங்களுக்கு ஆட்சியமைக்கும் வாய்ப்பை வழங்க வேண்டும் என்று தி.மு.க மறைமுகமாகக் கூறிவருகிறது..தங்களால் பெரும்பான்மையை சட்டமன்றத்தில் நிரூபிக்க முடியும் என்று பா.ஜ.கவிடம்  தி.மு.க பேரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது .

பன்னீரை இப்போது பா.ஜ.கவும் சரி ,பிற அதிகாரத் தரப்புகளும் சரி சாணக்கியத்தனம் நிறைவேறிய கையோடு கைவிட்டு விட்டது போன்ற தோற்றமே  ஏற்படுகிறது. ஆளுநர் தனது கைவசத்துக்கு மாநில அரசு அதிகாரத்தை கொண்டுவந்திருப்பதும் நேற்று முதற்கொண்டு நடைபெற்று வரும் கைது நடவடிக்களிலும் எடப்பாடியை உடனடியாக அழைத்திருப்பதிலும் விளங்குகிறது.பன்னீர் செல்வம் சட்டமன்ற உறுப்பினர்களை சந்திக்க இயலாமற் போனது வெறுமனே   சட்டம் ஒழுங்கு தொடர்பான விஷயம் மட்டுமே என்று கருதுவதற்கில்லை.ஆக   நிலவரங்கள் இப்போது முற்றிலும் வேறானவை.பன்னீர்  பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பு கோரினாலும் கூட அவரால் அது சாத்தியமாகாது என்றே தோன்றுகிறது.காப்பியடிக்க வாத்தியார் அதிக உதவிகள் செய்தும் பாஸாகாத மாணவனின் நிலை இப்போது அவருடையது.சில சாணக்கியத்தனங்கள் முடிந்தவுடன்  முடிந்து போய்விட்டது அவருடைய ரோல் .

இனியுள்ள நிலவரத்தில் பெரும்பான்மையிருக்கும் பக்கத்தில் சாயவே பா.ஜ.க விரும்பும்.எனினும் குழப்பங்களில் தனக்கு தரப்பட்டுள்ள தற்போதைய நீதிமான் வேடத்தை அது கைவிடாது.எடப்பாடி பெரும்பான்மையை எட்டக்கூடாது என்கிற அதிவிருப்பம் பா.ஜ.கவிடம் மேலும் நீடிக்குமேயானால் எடப்பாடி பெரும்பான்மை அடைவதில் சில சிக்கல்கள் உருவாகும்.அப்படியொரு நிலை ஏற்படும் பட்சத்தில் பா.ஜ.கவிற்கு தற்போது உதவப் போகிறவர்கள் தி.மு.கவாக இருப்பார்கள்.உறுதியான அதிகாரத்தை எவரேனும் ஒருவர் எட்டுவது வரையில் இந்த இழுபறி நிலையில் மாற்றம் உருவாகாது.தி.மு.கவைப் பொறுத்தவரையில் இந்த அதிகார போட்டியில் வெளிப்படையாக தங்கள் முகம் வெளுத்து விடக்கூடாது என்பதிலும் ,மறைமுகமாக எவ்வளவு   வெளுத்தாலும் பரவாயில்லை என்கிற நிலையிலும்தான் இருக்கிறார்கள்.

இந்த நிலையிலும் நேற்றே எடப்பாடியை முன்னிறுத்தியதை சசிகலாவின் புத்திசாலித்தனம் என்றே கருதுகிறேன்.ஏனெனில் பா.ஜ.கவின் வீட்டுப்பாடத்தை ,வியூகத்தை ; பன்னீர் ,தி.மு.க போன்ற தரப்புகளின் சக்கர வியூகத்தை எடப்பாடியின் நுழைவு முறியடிக்கிறது.பா.ஜ.கவின் வியூகம் முறியடிக்கப்படுகிற பிற எல்லா சம்பவங்களையுமே நான் நன்மையானவை என்றே இவ்விஷயத்தில்  கருதுகிறேன்.காரணம் காங்கிரஸாக இருந்தாலும் சரி ,பா.ஜ.கவாக இருந்தாலும் சரி ,இது போன்ற அரசியல் நிலவரங்களை பயன்படுத்தி மாநில அரசுகளில் விளையாடும் போக்கு பிற எல்லாவற்றையும் காட்டிலும் அநாகரீகமானது ,தீமை நிறைந்தது.இது முறியடிக்கப்படுதல் முதன்மையானது என்பதே எனது எண்ணம் .

அ.தி.மு.க அரசமைக்கும் வாய்ப்பை குழப்பங்களால் கைவிடக்கூடாது என்பது மட்டுமல்ல,மீதமுள்ள காலங்களை தமிழ்நாட்டில் மிகுந்த சாதுர்யத்துடன் கொண்டு செலுத்தவேண்டும்.இதில் ஏற்படுகிற பிழைகள் எதுவாக இருந்தாலும் வியூகங்கள் வெற்றிபெற அரசியல் எதிரிகளுக்கு வழியமைத்துக் கொடுக்கும்.தி.மு.கவில் இருப்பது போன்ற தலைமையில் உறுதிநிலை தற்போதைய அ.தி.மு.கவில் இல்லை.மக்கள் பிரச்சனைகளில் அக்கறைகள் எடுத்துக் கொள்வதன் மூலமாக அவர்கள் அதனை ஈடு செய்ய முடியும்.

ஆட்சியமைப்பதற்கான சாதுர்யத்தை இழக்காமல் இருப்பதும் ,மீதமுள்ள காலத்தை சீராக நிறைவேற்றுவதும் மட்டுமே இப்போது  அ.தி.மு.க முன்னர் உள்ள நேரடியான சவால்கள்.புத்திசாலித்தனத்துடன் நடந்து கொள்ளுங்கள்.

காதல் என்பது சுயத்தின் தெளிந்த விழிப்பு நிலை.

காதலர் தின நல்வாழ்த்துக்கள்

காதல் என்பது சுயத்தின் தெளிந்த விழிப்பு நிலை.

அடைதல் தொடர்பான விஷயம் இல்லை .பருவத்தின் பரவசமும் இல்லை.பயமும் இல்லை.சந்தேகித்தலும் உடமை மோகமும் இல்லை.பொறுப்பெடுத்துக் கொள்ளுதலும் இல்லை.பொறுப்பெடுத்துக் கொள்ளுதலின் பெயர் அமைப்பு,
குடும்பம் .கூட்டு சேர்ந்து வாழ்தலும் இல்லை.

உணர்தலே அது.ஈடுபடுதலே அது.
அகத்தின் புற ஊற்று காதல்.புறத்தை உயிரால் ஈடு செய்தல்..

காதலே கர்மாவின் பயன் மதிப்பு.காதலின்றி உயரிய காரியங்கள் ஏதுமில்லை.

நமது சமூகம் பெரும்பாலும் காதலை பருவங்களின் பரவச உணர்வு என அர்த்தம் கொள்ளப் பார்க்கிறது.அடைதலை நோக்கி அது நகர வேண்டும் என முயற்சி செய்கிறது.அடைதலில் கொள்ளும் இடர்பாடுகளை துயரங்களை அது பாசாங்கு செய்கிறது.

இணை சேர்தலும் வசப்படலாம்.அப்படியாயின் நன்று ஒரு பறவையைப் போன்ற கதி நிலையில். .ஆனால் ஒன்றில் மட்டும் இணை சேர்தல் அல்ல காதல் .புறம் அத்தனையிலும் இணை சேர்தல் .புறஉலகின் உயிர் ஊற்றுடன் கொள்ளும் தொடர்பிலிருந்து ஒன்றைப் பற்றி கொள்ளுதலாகவும் இருக்கலாம். கலையை , கவிதையைப் பற்றிக் கொள்ளுதலைப் போல.

நமது அர்த்தங்கள் பொருட்களில் இணை சேர்தல் என்கிற கற்பிதம் கொண்டது.நபர்கள் மீது கொண்ட பற்றை காதல் என சொல்லுதல் துர்பாக்கியமானது.நபர்களில் இணை சேர்தல் அது லீலை.

காதல் ஒரு தெளிந்த பிரக்ஞை.ஆக்ரோஷம். ஆன்மீகத்தின் உயர்நிலை. வெறுப்பில் விடுபடுதல்.
பிரபஞ்சத்தின் மீதான இருப்பு கைகூடுதல்.


காக்கைச் சிறகினிலே ...

"கொள்ளேன் மனத்தில் நின் கோலம் அல்லாதன்பர் கூட்டந்தன்னை ...
விள்ளேன் பரசமயம் விரும்பேன் வியன் மூவுலகுக்கு ...
உள்ளே அனைத்திலும் / கும் புறம்பே உள்ளத்தே விளைந்த
கள்ளே களிக்கும் களியே அளிய என் கண்மணியே..."

- ஸ்ரீ அபிராமி பட்டர்

இந்த வழக்கை ஏன் இப்போது எடுக்கிறீர்கள் ; இதன் பெயர் உள்நோக்கம் இல்லையா ?

இந்த வழக்கை ஏன்  இப்போது எடுக்கிறீர்கள் ; இதன் பெயர் உள்நோக்கம் இல்லையா ?

இந்த வழக்கின் ஆவணம் ஜெயலலிதா எதிரி என்று சொல்கிறது.அவர் மறைந்து காயம் இன்னும் ஆறியபாடில்லை.அவர் விடுதலையான வழக்கும் கூட இது.பின்னர் மேல்முறையீட்டில் பேரில் தேதி   குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்ட வழக்கு . பொதுவாக தேதிக் குறிப்பிடப்படாமல் ஒத்தி  வைக்கப்படும் வழக்குகளை தேர்வு செய்வது நீதிமன்றம் மட்டுமே என்றால் ,அதனை நோயுற்ற குரங்கிடம் போய் சொல்வதே நலமானது .இப்படி தேதி குறிப்பிடாமல் முடங்கியிருக்கும் வழக்குகள் இந்தியாவில் இன்றைய தேதியில் எத்தனை இருக்கும் ?

தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படும் வழக்குகள் பொதுவாக உடனடி தீர்வுகள் எட்டமுடியாமல் காலத்தை இழுக்கும் தன்மை கொண்டவை என்பது நீதிமன்றங்களின் மறைமுக பொருள் .இந்த வழக்கோ ஜெயலலிதாவை முதல் எதிரியாகக் கருதும் வழக்கு .இதனை இந்த நேரத்தில் எடுப்பதற்கு என்ன அவசியம் வந்தது ? நீதிபதிகளும் நீதிமன்றங்களும் அரசியல் நடைமுறைகளில் அலைவரிசைக்கு ஏற்ப இந்தியாவில் மாற்றம் பெறுவது நிச்சயமாக ஒரு நல்ல அறிகுறியல்ல.இது போன்று நடைமுறைக்கு வருகிற செயல்கள் யாரை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் காவு வாங்கக் கூடியவை என்பது நினைவிருக்குமேயானால் நல்லது.எல்லா அரசியல் எதிரிகளையும் இது போல பட்டறையில் காய்ச்சி விடமுடியும்.

எனக்கிருக்கிற முக்கியமான எளிய கேள்வி.இந்த வழக்கு சசிகலா சொத்து சேர்ப்பு வழக்கல்ல.பிரதானமான எதிரி ஜெயலலிதாவை முதன்மைப்படுத்தும் வழக்கு இது.அவர் மறைந்து ஈரம்  காய்வதற்கு முன்னரே அரசியலாக்கப்படும் இந்த வழக்கின் பின்னணியின் ஆர்வம் காட்டும் பன்னீரும் ,மோடி தரப்பினரும்தான் இந்த விஷயத்தில் நோக்கமற்றிருப்பவர்களா சண்டிகளே ?

இந்த தீர்ப்பு முயற்சி எதையும் விஷேசமாக செய்து விடப்போவதில்லை.ஆனால் அரசியல் நிலவரத்தை திசை திருப்பும் ஒரு வியூகம் இதில் அடங்கியிருக்கிறது அதுதான் விஷயம்.சசிகலாவை ஏன் அ.தி.மு.கவின் தரப்பாக ஏற்கவேண்டும் என்கிற செய்தி அடங்கியிருப்பதும் இந்த விஷயத்தில்தான்.

சசிகலாவை ஏன் ஆதரிக்க வேண்டும் ?

சசிகலாவை ஏன் ஆதரிக்க வேண்டும் ?

இரண்டு காரணங்கள் பிரதானமானவை.முதலில் அ.தி.மு.க என்ற கட்சி காப்பாற்றப்பட்டாக வேண்டும்.அது வெற்றிடமாகக் கூடாது.அப்படியொரு வெற்றிடம் ஏற்படுமேயானால் அதுவே இப்போது பிளவை ஏற்படுத்துபவர்களின் ஆசையில் இருக்கிறது.அந்த வெற்றிடத்தில் தங்களைப் பொருத்திக் கொள்ள முடியும் என நினைப்பவர்களின் ஆசை பலிக்கக் கூடாது.பா.ஜ.க இப்படியொரு முயற்சியை எடுத்துக் பார்க்கிறது என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.பன்னீர் அவர்களுக்குத் தோதான ஒரு நபராக தற்போது அவர்களுக்குத் தென்படுகிறார்.பன்னீரை முதன்மைப்படுத்தி மாநில அதிகாரத்தை தங்கள் கட்டுக்குள் கொண்டுவர முடியும் என்று பா.ஜ .க கருதுகிறது.

பா.ஜ.க தமிழ்நாட்டை தங்கள் கைவசம் கொண்டுவந்தாலும் எனக்கு அதில் ஒன்றுமில்லை.ஆனால் வெறும் வெற்றிடம் நிரப்பிகளாக அவர்கள் இங்கே வந்து சேரக் கூடாது.ஜனநாயக ரீதியில் இந்த இடத்திற்கு அவர்கள் வர வேண்டுமே அல்லாது இது போன்ற குறுக்குவழிகளில் அவர்கள் வரக் கூடாது.இந்தியாவின் பல மாநிலங்களில் பா.ஜ.கவின் இந்த குயுக்தி பற்றிய விமரிசனங்கள் உள்ளன.அகிலேஷ் யாதவ் போன்றவர்களும் ஏற்கனவே இந்த குற்றச்சாட்டை சொல்லியிருக்கிறார்கள்.மாநிலங்களில் பிளவு அரசியலின் மூலமாக அவர்கள் இடம் பிடிக்க முயல்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டு தமிழ்நாட்டில் வெளிப்படையாகத் தெரிகிறது.  

பா.ஜ.க பிளவு அரசியலில் அறுவடை செய்யப் பார்ப்பது தமிழ் நாட்டில் முறியடிக்கப்பட தற்போதைய நிலையில் சசிகலாவை ஆதரிப்பது தவிர பிற வழிகள் ஏதும் கிடையாது.பின்னாட்களில் சசிகலா   பா.ஜ.கவை நோக்கியோ , அல்லது பா.ஜ.க சசிகலாவை நோக்கியோ திரும்பாது என்பதற்கு என்ன நிச்சயம் ? என்று ஒரு கேள்வியைக் கேட்கலாம்.அதிகாரத்திற்கு யார் திரும்புகிறார்களோ அவர்களை நோக்கித்தான் பா.ஜ.க இருக்கும் அதில் சந்தேகமில்லை.ஆனால் சசியை ஆதரிப்பதன் மூலமாக பா.ஜ.கவின் 'பிளவில் குயுக்தி அரசியல்"  தன்மையிலிருந்து தமிழ்நாடு தன்னை தற்காத்துக் கொள்ள முடியும் .இப்போதைய வெற்றிடத்தின் கனவு அவர்களுக்குப் பலிக்கவில்லையெனில்  இது போன்றதொரு வெற்றிடம் உருவாகி மீண்டும் அவர்கள் இப்படியொரு கனவு காண தமிழ்நாட்டில் முப்பது வருடங்கள் ஆகும்.

பன்னீர் ஏன் அ.தி.மு.கவை காப்பாற்ற மாட்டாரா என்று கேட்டால் ; பிற சக்திகளின் பின்புறத்திலிருந்து புதிதாக தனது அரசியல் கனவை எய்தியிருப்பவர்  அவர் .அ.தி.மு.க வை காப்பதல்ல அவரது பிரயாசை .பிறர் மூலம்  தனக்கு கிடைத்திருக்கும் அரசியல் கனவை நிறைவேற்றும் அதிகாரப்  போட்டியில் அவர் இப்போது பிரவேசித்திருக்கிறார்.இதில் அவர் வெற்றியடைந்தாலும் சரி ,பின்னடைந்தாலும் சரி  அவர் வேறு இடத்துக்கே மெல்ல மெல்ல  நகர்ந்தாக வேண்டும்.ஏனெனில் தற்போது அவர் கொண்டுள்ள ஆசை என்பது தன்னை தற்காத்துக் கொண்டு ,பிற ஒரு தலைமைக்கு கீழ்ப்படிந்து அதிகாரத்தில் இருக்க முடிந்தால் இருப்பதுதானே அன்றி அ.தி.மு.க வைக்   காப்பதல்ல .அது அவருக்கு அவசியமும் அல்ல.அந்த அவசியத்தை அவர் கடந்து விட்டார்.ஜெயலலிதா இறந்த போது கூட பன்னீர் இதனைக் கண்டடைந்திருக்க வில்லை.தன்னிடம் இப்படியொரு கூறு உண்டு என்பதை சமீபமாகவே மெல்ல மெல்ல  அவர் புரிந்து கொண்டிருக்கிறார்.

அப்படியானால் யார் தான் காட்சியைக் காப்பாற்றுவார் ? என்று கேட்டால் எவர் ஒருவர் கட்சி நலிவடைந்தால் தானும் சேர்ந்து நலிவடைந்து போவாரோ,உபத்திரவங்களுக்கு ஆளாவாரோ அவரில் மட்டுமே கட்சியின் இருப்பு சாத்தியப்படும்.அ.தி.மு.க இன்றுள்ள நிலையில் நலிவடையுமேயானால் சசிகலாவும் நலிவடைவார் .யோசித்துப் பார்த்தால் பிறர் ஒருவருக்கும் இந்த நெருக்கடி கிடையாது.பன்னீரின் தற்போதைய நிலவரத்தைப் பொறுத்தவரையில் கமந்தாலும் லாபம்,மலந்தாலும் லாபம்.புதிய தனது அரசியல் கனவை அதிகாரத்துடன் எட்டிப் பிடிக்க வேண்டுமாயின் அவர் தற்போதைய சதுரங்கத்தில் வெற்றி பெற்றாக வேண்டும் அவ்வளவுதான் விஷயம்.வெற்றிபெறவில்லையெனில் அது அவருடைய புதிய அரசியல் கனவிற்கு பின்னடைவை ஏற்படுத்தும்.அல்லாது எது நடந்தாலும் அவருக்குப் பாதிப்பில்லை.வெற்றியில்லை என்று தெரிந்தால் அரசியலில் பின்னகரவும் அவருக்கு வாய்ப்புண்டு.ஒருபோதும் பன்னீரின் ஆசை அரசியல் என்று எனக்குத் தோன்றியதே இல்லை.பிற ஆசைகளும் தூண்டுதலும்தான் அவரை இங்கே இருக்கச் செய்பவை.ஜெயலலிதா   மறைவிற்குப் பின்னர் பா.ஜ.க ஏற்படுத்தி வருகிற சூழ்நிலைகள் காரணமாக திடீரென கடவுளைக் கொண்டவனின் பதற்றத்தில் விட்டுவிடக்கூடாது என்று சிந்திக்கிறார்.எல்லாவிதமான சாதாரணமான மனிதனுக்கும் இது போன்ற சந்தர்ப்பங்களில் இப்படியெல்லாம் சஞ்சலம் ஏற்படுவது தவிர்க்க கூடியது அல்ல.

சசிகலாவின் விஷயம் இப்படியானதில்லை.அ.தி.மு.க விற்கு நெருக்கடி ஏற்படுமேயாயின் அது இன்றைய நிலையில் சசிகலாவுக்கு சேர்ந்து ஏற்படுகிற நெருக்கடி.அ.தி.மு.க விற்கு எதிரான மனோபாவம் கொண்ட அனைவருமே சசியை எதிர்ப்பதற்கு பன்னீர் புனிதமானவர் ,தகுதியானவர்,அல்லது சசிகலாவை விடவும் மேம்பட்டவர் என்பதல்ல அர்த்தம்.அ.தி.மு.க வீழ வேண்டும் என்பதில் இந்த கூட்டுமனங்கள் தொடுக்கப்பட்டிருக்கின்றன.

குறிப்பாகச் சொல்ல வேண்டுமேயாயின் தற்போது இப்போதைய  நிலையில் சசியை தீவிரமாக  எதிர்க்கும் ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரர் என்ன காரணங்களையெல்லாம் சொல்லி எதிர்க்கிறாரோ ,அந்த காரணங்களின் அடிப்படையில்தான் சசியை நான் ஆதரிக்கிறேன்.மற்றபடி சமூக ஊடகங்கள் தற்போதைய ஊடக  மனநிலையைப் பிரதிபலிப்பவை.நாளையே ஊடகங்களின் திசை திரும்புமாயின் அவை அனைத்தும் திரும்பி விடும்.நாளையே அந்த ஆர்.எஸ்.காரர் சசியை ஆதரிக்கும் சூழ்நிலை ஏற்படலாம்.அப்போது சசியை எதிர்க்கும் நிலையில் இருக்க வேண்டியும் வரலாம் எனக்கு.

இரண்டாவது காரணம்  காங்கிரஸ் ஆட்சியாக இருந்தாலும் சரி ,பா.ஜ.க என்றாலும் சரி  தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் முற்றிலும் கைத்தடியாகி விடமாட்டார் , மக்கள் செல்வாக்கின் அடிப்படையில் நின்று மாத்திரமே சற்று வளைக்க முடியும் என்கிற தன்மையை ஆளுமையில் கொண்டுள்ள தலைவர்கள் ; குறைபாடுடையவராயினும் அவர்கள் தலைமையில் இருப்பதே நல்லது.கைப்பாவை அரசியல் பிற மாநிலங்களுக்கு ஒத்து வருவது போல தமிழ்நாட்டிற்கு உதவாது.  பா.ஜ.க பன்னீர் இருப்பதை மிகவும் பாதுகாப்பு என்று கருதுகிறது.சசி இருப்பதுதான் அ.தி.மு.கவிற்கும் ,தமிழ்நாட்டிற்கும் பாதுகாப்பு என்று நான்  கருதுகிறேன்.வெளிப்படையாக நான் சொல்வது  இது சிறிய வேறுபாடு போல தோன்றக் கூடும்.உண்மையில் இது ஆகப்பெரிய வேறுபாடு.

பன்னீர் இப்போது மத்திய அரசாங்கத்தின் தூதுவர்.சசி நடத்துவது கட்சியை அவர்களிடமிருந்து காப்பதற்கான போர்.

பின்னிருந்து இயக்குபவனின் பெயர்தான் கடவுள்.

பின்னிருந்து இயக்குபவனின் பெயர்தான் கடவுள்.


தூய அரசியல்வாதிகள் பற்றிய கற்பனைகள் எனக்கில்லை.அப்படியொருவர் உளரேயாயின் அவரை நான் விரும்பவில்லை.அவர் பற்றிய புனித உருவங்களை உருவாக்குபவர்களின் , உள்ளீடுகளின் பூதகணங்கள் அச்சுறுத்தக் கூடியவை.ஏனெனில் அப்படியொருவர் இன்று சாத்தியமாயின் அதுபோன்ற பெரும் பொய் ஒன்றிருக்க இயலாது.இன்றைய எதிர்பார்ப்புகள் ஓரளவிற்கு ஐம்பது சதமானம் காலத்தின் தொடர்பில் இருக்கிறாரா என்பதை பற்றியதுதான்.

அப்படியொருவர் இருந்ததாக பலரும் தங்கள் நினைவில்  பேசிக் கொண்டிருக்கிறார்கள்.அவர் நினைவில் இருக்கிறார் என்பதே உண்மை.அவருக்கு கால்கள் கிடையாது. அப்படியொருவர் இருந்தால் எப்படியிருக்கும் ? .அவருக்கு கால்கள் இல்லாதிருக்கும் .அன்றாடத்துடன் தொடர்பற்ற கற்பனைகளை முன்வைக்கும் போது பெரும்பாலும் பிற உருவங்களில் ஒப்படைக்க தயாராகி விடுகிறோம்.பொறுப்பெடுக்க தயாரில்லை என்பதை உணர்த்துகிறோம்.தூய கற்பனைகளை வைத்துப் பூட்டுவதற்கு ஒரு அரசியல் உடல் தேவைப்படுகிறது.இந்த சமர்த்தான கற்பனை என்னுடைய தாத்தா நோயற்றவராக இருந்தார் என்பதைப் போன்றதுதான்.உப்பு சப்பில்லாதது.அப்படியொருவர் வாய்த்தால் நமது பொறுப்புகளை முடக்கிவிட்டு அன்றாடத்திற்குள் அவசரமாகவும் ,கவலையின்றியும் பிரவேசித்து விடமுடியும் .இந்த கற்பனையைத் ஒரு உடலில் திணிக்க காவு கேட்டுக் கொண்டேயிருக்கிறோம்.இந்த போக்கு நமக்கு மட்டும் என்றில்லை.உலகமெங்கும் இருக்கிறது.இதன் பின்னணியில்தான் கோடிகளில் புழங்கும் பி.ஆர்.ஓ கம்பெனிகள் செல்லப்பணியாற்றுகின்றன.

இப்போதைய தூய உரு என்பது மக்களிடம் என்னவாக இருக்கிறது ? என்பதைக் கண்டறிய கடுந்தவசு தேவை .இந்த கடுந்தவசின் நிறம் தெரியுமானால் அவனே சிறந்த பி.ஆர்.ஓ.கம்பெனி.எதனை எப்படி மாற்றவேண்டும்.அதிகாரத்தை எதனைக் கொண்டு அடிக்க வேண்டும் என்பதில் கடும் புலமை அவற்றுக்கு அவசியம்.ஒரு தமிழ் சினிமா எடுப்பதற்கு மக்களின் அலைவரிசையுடன் கூடிய ஒரு சிறுமூளை தேவைப்படுவதை ஒப்ப பி.ஆர்.ஓ.கம்பெனிகளுக்கு ஆயிரம் மடங்கு அவசியம்.

நம்முடைய வார்த்தைகளை ,உரையாடல்களை அவை சிருஷ்டித்துத் தரவேண்டும் .பல்வேறு உரையாடல்களை முன்வைத்து அதிலிருந்து நமது தேர்வு போல தோன்றக் கூடிய ஒரு உரையாடலையும் அது நம்மிலிருந்து பேசத் தொடங்க வேண்டும்  . பி.ஆர்.ஓ கம்பெனிகள் ,
ஊடகங்கள்  இவற்றையெல்லாம் இன்று பிரித்தறிவது என்பது சாதாரணமான காரியங்களில் இல்லை.பத்துப் பதினைந்து தரப்புகள் இருப்பதாக நமது உரையாடலின் முன்பாக உருவங்கள் குவிகின்றன.இவற்றில் எதனை தேர்வு செய்தாலும் அதிகாரத்திற்கு அதனால் ஒரு இடர்பாடும் கிடையாது.

இன்று இதனை விளங்கிக் கொள்ள சிறிய பரிசோதனை செய்து பாருங்கள்.நீங்கள் விரும்பும் தலைவரின் மாதிரியை முதலில் எடுத்துக் கொள்ளுங்கள்.பின்னர் எதிரியின் மாதிரியை எடுங்கள் .யோசித்துப் பார்த்தால் இரண்டுமே அவர்களுக்குச் சொந்தமானவை அல்ல விளங்கிவிடும்.சினிமா நட்சத்திரங்களை திரையில் கண்டு நாம் உருவாக்கிக் கொள்கிற உருவங்களுக்கு நிகரானவைதான் இவை.இரண்டிற்குமே நாமும் பொறுப்பில்லை ,அவர்களும் பொறுப்பில்லை.பின்னர் யார்தான் இவற்றுக்குப் பொறுப்பு என்று கேட்டால் அதுதான் மந்திரம்.சூக்குமம்.கண்ணில் நேரடியாக புலப்பட மறுக்கும் பொருள்.

எங்கள் ஊரில் ஒரு வழக்கு நடைபெற்றது.முதலில் ஒருவர் குறிப்பிட்ட சொத்து தனக்கு உடமைப்பட்டது என்று ஒரு பராதை நீதிமன்றத்தில் தாக்கல் செய்கிறார் உரிய ஆவணங்களுடன் .வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.இடையில் ஒருவர் உட்புகுந்து இல்லை ,குறிப்பிட்ட சொத்து தனக்குப் பாத்தியப்பட்டது என்று கூறி உள்ளே புகுந்து அடிக்கிறார்.வழக்கின் திசையில் புதிய வெளிச்சம் ஏற்பட்டு விட்டதாக எல்லோரும் நம்புகிறார்கள்.வழக்கு போய்க் கொண்டிருக்கிறது.முடிவில் இந்த இரண்டு தரப்புகளும் தாங்கள் வழக்காட விருப்பவில்லை .சமாதானமாக நாங்களே பிரிவினை செய்து கொள்கிறோம் என்கிறார்கள்.நீதிமன்றம் இருவரையும் மெச்சி வழக்கை சமாதானப்படுத்தி விடுகிறது.மேற்கொண்டு இதில் காரியமில்லை.வாதியும் பிரதியும் இணைந்து தங்களுக்குள் சொத்தைப் பிரித்துக் கொள்ளலாம் என்று தீர்ப்பு சொல்கிறது.நீதிமன்றத்  தீர்ப்பை அரசு உத்தரவாக எடுத்துக் கொண்டு மேற்படி சொத்தை இவர்களே கொண்டு நிலைநாட்டிய ஆவணங்களின் அடிப்படையில் அறுபத்தேழு பேருக்கு விற்பனை செய்து பத்திர பதிவும் செய்து முடிக்கிறார்கள்.இவர்கள் தங்கள் தங்கள் தரப்பில் ஆவணங்களுடன் நின்று வாதாடிய சொத்து இருவருக்கும் உரியது அல்ல.அரசுக்கு உரியது என்று தெரிய வர பின்னர் பத்தாண்டுகள் ஆயிற்று.

ஆடை நமதில்லை,உருவம் நமதில்லை.நிறம் நமதில்லை.பின்னிருந்து இயக்குபவனின் பெயர்தான் கடவுள்.   

நிழற்தாங்கல் – லக்ஷ்மி மணிவண்ணனின் புதிய முயற்சி -ஜெயமோகன்

நிழற்தாங்கல் படைப்பிற்கான வெளி

ஜெயமோகன் ,கோணங்கி,நாஞ்சில் நாடன் ,யூசுப் மற்றும் வந்திருந்து வாழ்த்திய படைப்பாளிகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி  .உறுதுணையாக இருக்கும் பால பிரஜாபதி அடிகளார்,கன்னியாகுமரி மாவட்ட கண்காணிப்பாளர் G  .தர்மராஜன் I  .P  .S ,அருட்பணி M .C .ராஜன் ஆகியோருக்கு எங்கள் வணக்கங்கள்.

நிழற்தாங்கலில்  வந்திருந்து தங்கி தங்களுடைய படைப்பு முயற்சிகளை செய்ய விரும்புபவர்கள் எங்களைத்  தொடர்பு கொள்ளுங்கள்.மது,போதை  பழக்கம் கொண்டவர்களுக்கு அனுமதியில்லை.மது ,போதை ,பழக்கத்திலிருந்து விடுபட நினைக்கும் எண்ணம் கொண்ட படைப்பாளிகளுக்கு எங்களால் உதவ முடியும்.பழக்கத்திலிருந்து விடுவித்து நிழற்தாங்கல் அவர்களை இணைத்துக் கொள்ளும்.

எங்களுடன் இந்த பணியில் உடன் நிற்கும் ,நிற்கவிருக்கிற நல்ல உள்ளங்களுக்கு எப்போதும் கடன்பட்டிருக்கிறோம்.லக்ஷ்மி சாகம்பரி ,மணி சேஷன்,ஈஸ்வரன் , கால பைரவன் ,சரவணன் சந்திரன் , ஜீனத் நஜீபா ஆகியோருக்கு எங்கள் நன்றி

தொடர்புக்கு ;

லக்ஷ்மி மணிவண்ணன் ,
செயலாளர் ,நிழற்தாங்கல் படைப்பிற்கான வெளி
C  /O  மதுசூதன பெருமாள் ,
7  / 131  E பறக்கை @ அஞ்சல்
கன்னியாகுமரி மாவட்டம் - 629002
தொலைபேசி - 9362682373

ரோஸ் ஆன்றா
பொருளாளர் , நிழற்தாங்கல் படைப்பிற்கான வெளி ,
தொடர்பு எண் - 9840848681

#

நிழற்தாங்கல் – லக்ஷ்மி மணிவண்ணனின் புதிய முயற்சி
ஜெயமோகன்


நிழற்தாங்கல் என்ற பெயருக்கு குமரிமாவட்ட வரலாற்றில் ஒரு மேலதிகப்பொருள் உண்டு. இருநூறாண்டுகளுக்கு முன் அய்யா வைகுண்டர் தன் பக்தர்களிடம் ஊர்தோறும் நிழற்தாங்கல் அமைக்க ஆணையிட்டார். அவ்வாறு அமைந்த பலநூறு நிழற்தாங்கல்கள் இன்று ஆலயங்களாக அமைந்துள்ளன.
அந்நிழற்தாங்கல்கள் பழைய சமணத் தர்மசாலைகளுக்குச் சமானமானவை. பயணிகளுக்கு உணவும் தங்குமிடமும் அளிப்பவை அவை. சமணர்களின் அறங்களில் ஒன்றுதான் நிழற்தாங்கல். அதை பிறர் பின்னர் எடுத்துக்கொண்டனர். பழைய கிராமங்களில் அது ஒரு முதன்மையான அறக்கொடையாக அமைந்திருந்தது
அய்யா வைகுண்டர் அவற்றை ஏற்படுத்தியமைக்கு காரணம் உண்டு. வழிநடை வசதி என்பது அன்று மக்களைக் கட்டுப்படுத்திய ஒரு முக்கியமான அம்சம். உயர்சாதிகளுக்கு மட்டுமே ஊர் விட்டு ஊர் செல்ல வசதி அன்றிருந்தது. அவர்கள் பிறர் இல்லங்களில் தங்கலாம், சத்திரங்களும் இருந்தன. பிற சாtதியினருக்கு உணவு, தங்குமிட வசதி இல்லாததனால் அவர்கள் வாழுமிடத்திலேயே கட்டுண்டுகிடக்க நேர்ந்தது. அவர்கள் வணிகம் செய்யும் வாய்ப்புகள் இல்லாமலாகியது. நிழற்தாங்கல்கள் அந்தச் சிறையிலிருந்து அவர்களை விடுவித்தன. அது முக்கியமான ஒரு பாய்ச்சல்.
லக்ஷ்மி மணிவண்ணன் மற்றும் அவரது நண்பர் ‘படிகம்’ ரோஸ் ஆன்றோ உருவாக்கியிருக்கும் இந்த அமைப்பு இலக்கியத்திற்கானது. வீட்டுக்கு வெளியே எங்காவது சிலநாட்கள் அமைதியாகத் தங்கியிருந்து எழுதவேண்டும் என விரும்பும் எழுத்தாளர்கள் மற்றும் ஒதுங்கி இருந்து வாசிக்கவேண்டுமென விரும்பும் இலக்கிய வாசகர்களுக்கான ஒரு இல்லம் இது. அதேசமயம் இந்நோக்கத்திற்காக மட்டுமே வருபவர்களுக்கு உரியது. ஆகவே இதை நகரில் வைக்காமல் நாகர்கோயில் அருகே உள்ள பறக்கை என்னும் சிற்றூரில் அமைத்துள்ளார்.

பறவைக்கரசனூர் என அழைக்கப்படும் [வடமொழியில் பக்‌ஷிராஜபுரம்] பறக்கை தொன்மையான மதுசூதனப்பெருமாள் ஆலயம் அமைந்த அழகிய சிற்றூர். ஆனால் தமிழகத்தின் பிறசிற்றூர்களைப்போல வறுமையும் குப்பையும் கொண்டது அல்ல. குமரிமாவட்டச் சிற்றூர்கள் மிக வசதியான மக்கள் வாழ்பவை, தூய்மையானவை.. கோயில், குளம், ஏரி ,பழையாறு என ஒரு சிறந்த சூழல் கொண்டது. நாகர்கோயிலில் இருந்து அரைமணிநேரப் பயணத்தொலைவு. புதிதாகக் கட்டப்பட்ட வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்திருக்கிறார்கள் லக்ஷ்மி மணிவண்ணனும் ரோஸ் ஆன்றோவும்.
நிழற்தாங்கலின் திறப்புவிழா சென்ற 5 ஆம்தேதி காலை பறக்கையில் நடந்தது. நிழற்தாங்கலை கன்னியாகுமரி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் திரு. G . தர்மராஜன் I .P .S . திறந்துவைத்தார்.குளச்சல் மு. யூசூப், பாலபிரஜாதிபதி அடிகளார், அருட்பணி எம்.சி.ராஜன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினார்கள்.முளைப்பாரிக்கு நீர் வார்த்து, அடுப்பில் பால் காய்ச்சியவர் திருமதி எம். பாலின் சகாய ரோஜா

பின்னர் நிகழ்ந்த இலக்கிய விழாவில் தி இந்து தமிழ் நிருபர் சுவாமிநாதன் வரவேற்புரையாற்றினார். படிகம் நவீன கவிதை வரிசையின் நான்காவது நூலாக விக்ரமாதித்யனின்“சாயல் எனப்படுவது யாதெனின்…” கவிதை நூலை நான் வெளியிட்டு உரையாற்றினேன். எழுத்தாளர் சரவணன் சந்திரன் பெற்றுக்கொண்டார்.நூல் குறித்து பாலா கருப்பசாமி விமர்சித்தார்.
படிகம் தொகை நூல் வரிசையின் முதல் நூலாகிய ஈனில் [தொகுப்பாசிரியர் : ரோஸ் ஆன்றா ] பதினொரு கவிஞர்களின் எழுபத்திநான்கு கவிதைகள் கொண்டது. அதை எழுத்தாளர் கோணங்கி வெளியிட்டார். எழுத்தாளர் நாஞ்சில் நாடன் பெற்றுக்கொண்டார்.நூல் குறித்து லிபி ஆரண்யா விமர்சித்தார்.

நாஞ்சில்நாடன், குளச்சல் மு. யூசூப், பாலபிரஜாதிபதி அடிகளார், அருட்பணி எம்.சி.ராஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். ரோஸ் ஆன்றா ஏற்புரை வழங்க க.அம்சப்பிரியா நன்றியுரை அளித்தார்.
நெடுநாட்களுக்குப்பின் கோணங்கியைச் சந்தித்தது நிறைவளித்தது. அதே சிரிப்புடன் அப்படியே இருக்கிறார். லிபி ஆரண்யா மதுரை நன்மாறனை நினைவுறுத்தும் மொழியுடன் அழகாகப் பேசினார். சரவணன் சந்திரன் கோயில்பட்டிக்காரர் என்று அறிந்தது ஓர் இனிய மகிழ்ச்சி. கோயில்பட்டி மரபு தொடர்வது ஆச்சரியமானதுதான்.

நிழற்தாங்கலை பயன்படுத்திக்கொள்ள விரும்புபவர்கள் லக்‌ஷ்மி மணிவண்ணன் [ slatepublications@gmail.com ] ரோஸ் ஆன்றோ [ padigampublications@gmail.com ] ஆகியோரை மின்னஞ்சலில் தொடர்புகொள்ளலாம்

அ .தி .மு.க என்னும் பேரியக்கம் உடைவது நல்லதல்ல.

அ .தி .மு.க என்னும் பேரியக்கம் உடைவது நல்லதல்ல.

அப்படி உடைந்தால் அது தி.மு.கவிற்கும் கூட நல்லதல்ல.இந்த இரண்டு கட்சிகளுக்கும் அதிக வயசும் ,அலுப்பும் ஆகிவிட்டது என்பது உண்மைதான்.இவை இரண்டுமே நல்ல கட்சிகள் என்கிற எண்ணமும் எனக்கு இல்லை.ஆனால் நமது ஏற்பட்ட அல்லது ஏற்பாட்டுக்கு கொண்டிருக்கும் சமூக உளவியலின் அடிப்படையிலேயே இவை உள்ளன.சட்டியில் இருப்பதுதானே அகப்பையில் வரும்  ?  ஒப்பீட்டளவில் வேறு வாய்ப்புகள் நமக்கு இல்லை என்பதே நிதர்சனம்.தவிர உள்ள கட்சிகளில் விடுதலைச் சிறுத்தைகளை தவிர்த்து பொருட்படுத்தத் தகுந்த கட்சிகளும் இல்லை.திருமாவளவன் நல்லதொரு தலைமைக்கு ஏற்றவர்தான் ஆனால் அவர் இன்று அனைத்து தரப்பினராலும் ஏற்கப்படக்கூடிய தலைவர் இல்லை.அவர் தலைமையில் இடதுசாரிகளும் இணைந்து ஒரு அணியை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகளும் தற்போது இல்லை.இடதுசாரிகள் அதற்கு இணங்கவோ , முயலவோ மாட்டார்கள்.காரணம் எளிமையானதுதான்.இடதுசாரிகள் தமிழ்நாட்டில் அரசியல் அதிகாரத்தில் எடுபிடிகளாக இருந்தே பழகி விட்டார்கள்.புதிய பழக்கங்களுக்கு அவர்கள் வந்து சேர இன்னும் ஐம்பதாண்டு காலங்கள் ஆகும் .அதற்குள் நமது பிள்ளைகள் பேரன்பேத்தி கண்டு விடுவார்கள்.மற்றபடி தி.மு.கவில் எனில் ஸ்டாலின் இருக்கிறார்.அதற்கு வெளியே யோசித்துப் பார்த்தால் தலைமைகளே இல்லை என்பது விளங்கும்.இருப்பது போல தோன்றுபவை வெறும் மாயைகளே .அ .தி.மு.க ; தி.மு.க என்கிற இந்த இரண்டு கட்சிகளையும் விமர்சிக்கும் போதும் சரி ,இவற்றின் குறைகளை பேசும் போதும் சரி ; இவற்றைக் காட்டிலும் மோசமான சக்திகள் அதிகாரத்தைக் கைப்பற்றக் கூடாது என்பதை நினைவில் கொண்டிருக்க வேண்டும்.இந்த இரண்டு இயக்கங்கள் பேரிலும் ,இதன் தலைமைகள் பேரிலும் எப்போதும் எனக்கிருப்பது ஒவ்வாமைதான் .ஆனால் மேற்சொன்ன நினைவு எனக்குண்டு.அகில இந்தியக் கட்சிகளின் தமிழ்நாட்டு பிரதிநிதிகள் இவர்களைக் காட்டிலும் பல மடங்கு கேவலமானவர்கள் என்பது மட்டுமல்ல.தங்களிடம் அதிகாரம் ஏதுமற்றவர்கள் அவர்கள்.

சிறிய தேசிய இன வரலாறு கொண்ட மாநிலங்களுக்கு தேசியக் கட்சிகளின் தொந்தி உதவும்.கேரளா ,கர்னாடகா போல.அவை எப்போதும் தேசியக் கட்சிகளைத்தான் நம்பவும் செய்யும் .தமிழ்நாட்டின் அல்லது ஆந்திரா போன்ற மாநிலங்களின் கதிநிலை அவ்வாறானதல்ல  .தேசியக் கட்சிகளின் தொந்திகளையும் மீறிய அரசியல் தேவைகளைக் கொண்டவை இத்தகைய மாநிலங்கள்.பல குணங்கள் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுவதற்குமே சமூக உளவியல் ரீதியிலான காரணங்கள் உண்டு.பெரிய தேசிய இனங்களில் எளிமை செல்லுபடியாகாது.சிறிய தேசிய இனங்களிடம் எளிமை மட்டுமே செல்லுபடியாகும்.அதனால்தான் நமக்கு எம்.ஜி.ஆர் போன்ற பெரிய ஆடம்பரம் வாய்த்தது.ஆந்திராவில் இதற்கு இணையான என்.டி.ஆர். என்னும் ஆடம்பரம்.கேரளாவில் தமிழ்நாட்டு நிலவரங்களை ஒருபோதும் அரசியல் தலைவர்களிலிருந்து சாதாரண குடியானவர்கள் வரையில் விளங்கி கொள்ள இயலாமைக்கு இது பிரதான காரணம் .அவர்களுக்கு இவையெல்லாம் மேஜிக் போல இருக்கிறது.ஆனால் நமது சமூக முன்னேற்றம் மற்றும் நாம் அடைந்துள்ள ஜனநாயகத்தன்மை ஆகியவற்றை அடைய அவர்களுக்கு இன்னும் நெடுங்காலம் ஆகும். அவர்களின் சமூக நீதியுணர்வு நம்மைவிடவும் பலமடங்கு பின்தங்கியிருப்பது.

நாம் அரசியலில் கீழிறங்கிப் போய்விட்டது  போல ஒரு தோற்றம் ஏற்பட்டுள்ளது.உண்மையில் அது வெறும் தோற்றம் மட்டுமே ஆகும்.நலவாழ்வு அரசின் பணி எம்.ஜி.ஆர் காலத்திலேயே முக்கால் பாகம் நிறைவடைந்து விட்டது.நலவாழ்வு அரசின் நமது கடைசி பிரதிநிதி எம்.ஜி.ஆர் தான்.அடுத்து உடனடியாகவே அரசியலும் தொழில் துறையாக மாற்றமடைந்த இடத்திற்குள் நகர்ந்தோம்.இவையெல்லாமே பாதைகள் .வண்டியோட்டுனர்களிடம் மற்றும் குற்றம் காண்பதற்கில்லை .இந்த பாதை  அல்லது நாம் முன்னகர   நினைக்கிற  பாதை இவ்வாறுதான் நம்மை வழிநடத்திச் செல்லும் .இவை நாம் அமைத்துக் கொண்ட ஏற்பாடுகள்தான்.இப்போது தொழித்துறை அரசியல் அலுப்புண்டாக்கியிருக்கும் இடத்தில் வந்து நிற்கிறோம்.இனி அரசியலையும் ஒரு தொழில்துறையாகக் கருதுகிற அனைத்து கட்சிகளும் சுயபரிசீலனை செய்து கொள்ள வேண்டும்.மக்கள் அடுத்த கட்டத்திற்குள் செல்லும் மனோபாவத்திற்குள் வந்து சேர்ந்திருக்கிறார்கள்.இது ஒரு சமூகத்தின்  இயக்கம் .சமூகம் எடுத்து வைக்கிற அடுத்தபடியான அடி.அரசியல் தன்மையில்  மாற்றம் ஏற்பட வேண்டிய காலகட்டம் இது.இரண்டு நீண்ட காலகட்டங்களைத் தாண்டி அடுத்த காலகட்டத்தின் வாயிலில் நிற்கிறோம்.அதனாலேயே நாம் கடந்து வந்த பாதைகள் அத்தனையும் தவறென்று ஆகாது.அந்த பாதைகள் வழியாகத் தான் இந்த இடத்தில் இப்போது வந்து நிற்கிறோம்.

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டதிலிருந்தே ஏராளமான சூதாட்ட காய்கள் நகரத் தொடங்கி விட்டன.குறுக்குவழிகளில் அதிகாரத்தை அடைய விரும்புகிற எண்ணற்ற சதுரங்கக் காய்கள். இவை தவிர்க்க இயலாதவை.ஆனால் இதுவரையில் அ.தி.மு.க உடையக் கூடாது என்கிற எண்ணத்தில் சசிகலா வெற்றி பெற்றிருக்கிறார் என்றே கருதுகிறேன்.இது பெரிய சாதுர்யம்தாம்.நாம் இன்னும் அ.தி.மு.க என்னும் உருவத்தைப் பார்த்துக் கொண்டுதானிருக்கிறோம்.அதற்கு அவர் ஒருவரே காரணம்.அவர் தனது சாதுர்யத்தை இழந்திருப்பாரே ஆனால் இப்போதுவரையில் நாம் பார்த்துக் கொண்டிருக்கிற அ.தி.மு.கவின் உருவம் எப்போதோ சிதைந்திருக்கும்.அ.தி.மு.க வும் அரசியலைத் தொழில் துறையாக்கிய கட்சிதான்.அதில் உள்ளவர்களின் விருப்பங்களும் ஆசைகளும் அதற்கு அப்பாற்பட்டவை  அல்ல.இந்த நிலையில் கட்சியின் நிலைத்த தன்மை சசிகலாவையே சார்ந்திருந்தது.அவர் மட்டுமே அக்கட்சி உடைவதற்கு எதிரான மனநிலையில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.அதுவே தற்போது முக்கியமான விஷயம்.எண்ணற்ற நரித் தந்திரங்களைக் கடந்து அவர் இன்னும் கட்சியின் நிலையை காப்பதில் உறுதியுடன் இருக்கிறார்.எல்லாமே கைவிட்டுப் போனாலும் கூட அவர் இந்த நிலையில் உறுதியுடன் இருப்பார் என்றுதான் கருதுகிறேன்.மற்றபடி அவர் மீது  இப்போது தாமதமாக வைக்கப்படுகிற புகார்கள் அனைத்துமே ஆரம்பம் முதலாகவே அவரை தந்திரத்துடன் பின்தொடர்பவைதான்.அவற்றை நீர்க்க செய்வதில் இவ்விஷயத்தில் அவர் கடுமையாகப் போராடியிருக்கிறார்.அவற்றுக்கான அர்த்தங்கள் கட்சியைக் காப்பது என்கிற ஒற்றைக் குறிக்கோளை மட்டுமே கொண்டிருக்கின்றது . இப்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடியை எதிர்த்தும் போராடுவார் என்றுதான் நினைக்கிறேன்.ஏற்கனவே இவ்விஷயத்தில் அவர் கடந்த நெருக்கடிகளுடன் ஒப்பிடும்போது இது சிறியது.அவர் உயிருக்கு வந்த நெருக்கடிகளையெல்லாம் எப்போதோ இவ்விஷயத்தில் தாண்டிவிட்டார்.இப்போதைய நெருக்கடியும் அவர் எதிர்பாராத ஒன்றாக இராது.இதே வகையில் எதிர்பாராமல் இருந்திருப்பாரேயானாலும் கூட வேறு வகையில் எதிர்பார்த்திருப்பார்.இத்தனையும் தாண்டினால் அவர் நிச்சயமாக அ.தி.மு.கவின் தலைமைக்கு முழுதகுதியும் படைத்தவராவார்.
 

இதில் ஒருவேளை அவர் தோல்வியுற்று  தந்திரங்கள் வெல்லுமாயின் கூட மக்கள் செல்வாக்குடன் மீண்டும்  அசுர பலத்துடன் வருவார் என்பதில் எனக்கு எந்த விதமான சந்தேகமும் இல்லை.அ.தி.மு.க என்னும் இயக்கம் அவ்வளவு எளிதில் இந்த தந்திரங்களால் அழியும் என்று நான் நம்பவில்லை.அதன் பின்னால்   கண்ணுக்குப் புலப்படாத பற்றுறுதி  உண்டு.  அ.தி.மு.க உடையக் கூடாது என்கிற எண்ணம் இப்போது சசிகலா  ஒருவரிடம் மட்டும்தான் தெளிவாகவும் தீவிரமாகவும் செயல்படுகிறது.தற்போது புகைமூட்டங்களும் குழப்பங்களும் இருந்தாலும் கூட கட்சியின்  பற்றுறுதிக்கு அதன் மனோபாவத்திற்கு இப்போது யார் துணை நிற்கிறார்கள்,எதிரில் இருக்கிறார்கள் என்பது விளங்காமல் இராது. மற்றவையெல்லாம்  இந்த நோக்கத்திற்குப் பிற்பாடுதான் .

ஓ ... வேலைக்காரியா வரட்டுமே !

ஓ ...  வேலைக்காரியா வரட்டுமே !எதிராளிக்கு வாக்கு சேகரிப்பது எப்படி ?
சசிகலா வரும் தேர்தலில் வெற்றி பெற பரப்புரை தொடக்கி விட்டது.

சசிகலா ஒரு வேலைக்காரியா ? அப்படியானால் அதுதானே நல்லது.மக்களுக்கு வேலை செய்வதற்குத்தானே இங்கே ஆட்களும் அதிகாரமும் வேண்டும் ? வேலைக்காரி என்று திட்டும்போது மக்கள் இப்படி மாற்றி சிந்திப்பார்கள் என்பது கூடவா உங்களுக்கெல்லாம் தெரியவில்லை ?

எதிராளிக்கு வாக்கு சேகரிப்பது எப்படி என்பதை இவர்களிடம்தான் கற்க வேண்டும் ? பாலியல் வசைகள் ,வேலைக்காரி பட்டங்கள் என்று சசிகலாவுக்கு ஆதரவாக மக்களிடம் வாக்கு சேகரிக்கும் பணி இனிதே தொடங்கியிருக்கிறது.இப்படியே போனால் தமிழ் நாட்டில்  அடுத்தடுத்து வருகிற இரண்டு தேர்தல்களை சசிகலா அடைத்து நிற்பார் என்பதில் சந்தேகமே இல்லை.கீழிருந்து வருகிறார்கள் என்கிற கோணத்திலோ அல்லது தகுதியற்று வருகிறார்கள் என்கிற கோணத்திலோ விமர்சனங்கள் வருமாயின் மக்கள் அந்த தரப்பே தங்களுக்குகந்தது என்று தேர்வு செய்வார்கள்.மக்களுக்கு எல்லோருடைய தகுதிகளும் தெரியும். பொதுவாக இது போன்ற ஒரு அணுகுமுறையை சாதாரணமானவர்கள் சொல்லும் போது அதில் காரியமில்லை.ஸ்டாலின் போன்றவர்கள் இதனை வெளிப்படுத்தும் போதும் அதில் பிறழ்வே வந்து விழுகிறது.

மோடிக்கு எதிராக "டீ"விற்றவன் என்கிற விளம்பரத்தை மார்க்சிஸ்டுகள் பரப்பிய போது ,அவர்கள் அதனை என்ன நினைவில் செய்தார்கள் என்றே விளங்கவில்லை.ஆனால் மோடியின் பி.ஆர்.ஓ கம்பனி இந்த மக்கள் பண்டத்தை  சிறப்பாகக் கையாண்டு அதனையே குப்புற கவிழ்த்தி மக்கள் செல்வாக்காக மாற்றினார்கள்.ஒரு மனிதனை கீழிறக்க சொல்லப்படும் அனைத்துமே மக்களிடம் மேலுயர்த்தவே வழி வகுக்கும்.கீழிறக்க பேசப்படும் பிறழ் மொழிகள் மூலம் இவன்தான் மேலுயர வேண்டியவன் என்பதனை மக்கள் கற்கிறார்கள். ஒருவகையில் எதிராளிக்கு வாக்கு சேகரிப்பது எப்படி என்பது இது போலத்தான்.பி.ஆர்.ஓ.கம்பெனிகளுக்குத் தெரிந்த இந்த ரகசியங்கள் கூட வெகுமக்கள் தலைவர்களுக்கு தெரியாமல் இருப்பதைத்தான் விளங்க இயலவில்லை.

ஜெயலலிதாவை தெருக்களில் ரசம் சொட்ட எதிராளிகள் திட்டுவதிலிருந்துதான் மக்கள் அவர் பக்கம் ஏன்   நிற்க வேண்டும் என்பதை முடிவு செய்தார்கள் . ஒவ்வொரு கூட்டத்திலும் பத்து கேவலமான காரணங்கள் சொல்லித் திட்டும் போது நூறு நூறு வாக்குகளாக சேகரமாகி விடுகின்றன.மக்கள் எங்களுடைய பேச்சுகளுக்குக் கை தட்டினார்களே என்றால் தட்டினார்கள்.ரசித்தார்கள்.ரசம் சொட்டும் அனைத்தையும் மக்கள் ரசிப்பார்கள்.அதில் சந்தேகமில்லை.ஆனால் அதிலிருந்துதானே அதற்கு நேரெதிரான நிலைப்பாடு எடுக்கவும் மக்கள் கற்று வைத்திருக்கிறார்கள்.எதிராளிகளிடமிருந்து மக்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டியவரை அறியும் வழியறிந்தவர்கள்.

சசிகலாவை எதிர்ப்பது என்பது ஒருவருடைய உரிமை.அதில் ஒன்றுமில்லை.வேலைக்காரி போன்ற பதங்கள் எதிராளிக்கான பரப்புரைகள்.வேலைக்காரி என்று திட்டும் போது வேலைக்காரிக்கு அதனால் ஒன்றுமில்லை.டீ மாஸ்டர் என்றால் உண்மையில் டீ மாஸ்டருக்கு ஒன்றுமில்லை .நீங்கள் ஒரு டீ மாஸ்டர் அதிகாரத்திற்கு வருவதையோ,ஒரு வேலைக்காரி ஆட்சியில் அமர்வதையோ விரும்பவில்லை என்பதை வெளிப்படுத்துகிறீர்கள்.உங்களிடம் இருக்கும் இந்த எண்ணம் மக்களை உங்களிடமிருந்து துண்டிக்கும். உங்களின் இந்த எண்ணத்திற்கு எதிராக மக்கள் முடிவு செய்கிறார்கள்.ஒரு டீ மாஸ்டர் வந்தால் என்ன ? ஒரு வேலைக்காரியா வரட்டுமே ! அவர் ஒருவேளை எங்களை உணர்ந்து ஆட்சி செய்யலாமில்லையா ? நீங்கள் டீ மாஸ்டர் இல்லை சரிதான்.ஆனால் இதைக்காட்டிலும் கேவலமாகத் தானே ஆட்சி நடத்தினீர்கள்? நீங்கள் ஜமீன் என்றே வைத்துக் கொள்வோம் .ஏன் பிறகு கேவலமாக நடந்து கொண்டீர்கள் ? உங்கள் ஆட்சிகள் மகா கேவலமாகத் தானே இருந்தது ?

நிழற்தாங்கல் விருதுகள் - 2017

நிழற்தாங்கல் விருதுகள் - 2017

இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தமிழில் கலையிலக்கியத் துறைகளில் வாழ்நாள் சாதனைகள் புரிந்த அரிய ஆளுமைகளுக்கு நிழற்தாங்கல் விருது வழங்க முடிவு செய்திருக்கிறோம்.நிழற்தாங்கல் விருதுகள் - 2017 கவிதை ,புனைகதை ,பிற கலைவடிவங்கள் என மூன்று விருதுகளை உள்ளடக்கியது.பிற கலை வடிவங்கள் ஓவியம்,நடனம்,இசை ,சினிமா ,நாடகம் ஆகியவற்றையும் கருத்தில் கொண்டது.மூன்று விருதுகளும் ஒரே சமயத்தில் "நிழற்தாங்கல் விருதுகள் - 2017 "  கலையிலக்கிய  விழாவில் வழங்கப்படும்.

துறை சார்ந்த நிபுணர்கள் தங்கள் பரிந்துரைகளை உரிய காரணங்களுடன் எங்களுக்கு அனுப்பி வைக்கலாம்.

எங்கள் செயல்களில் நம்பிக்கை கொண்டோர் எப்போதும் போல எங்களுக்கு துணை நில்லுங்கள்,பங்கேற்பு செய்யுங்கள் .எல்லோரும் இணைந்தால்தான் ஏதேனும் செய்ய இயலும் .

தொடர்புக்கு -

லக்ஷ்மி மணிவண்ணன் ,
C / O மதுசூதன பெருமாள் ,
செயலாளர் ,"நிழற்தாங்கல் படைப்பிற்கான வெளி" ,
7  / 131 E பறக்கை @ அஞ்சல்
கன்னியாகுமரி மாவட்டம்
629002
தொடர்பு எண் - 9362682373

கோணங்கி ,நாஞ்சில்நாடன்,ஜெயமோகன் மற்றும் பல படைப்பாளிகளுடன்

சந்திப்போம் வாருங்கள்
கோணங்கி ,நாஞ்சில்நாடன்,ஜெயமோகன் மற்றும் பல படைப்பாளிகளுடன்

"நிழற்தாங்கல் திறப்பு விழா
படிகம் நூல்கள் வெளியீட்டு விழா"

இடம் - பறக்கை
[அரசு நடுநிலைப்பள்ளி அருகில்,
நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து மணக்குடி செல்லும் பேருந்தில் 15 நிமிடம்
பறக்கைக்கு தனியே மினி பஸ் உண்டு.]
கன்னியாகுமரி மாவட்டம்

காலை 9 மணி முதல் 12 மணிவரை
தொடர்பு எண் - 9362682373

நீட் எதிர்ப்பு மசோதாவிற்காக பன்னீர்செல்வம் அவர்களுக்குப் பாராட்டுக்கள்

நீட் எதிர்ப்பு மசோதாவிற்காக பன்னீர்செல்வம் அவர்களுக்குப் பாராட்டுக்கள்

நிறைய வாய்ப்பேச்சில் பேசிக் கொண்டிருப்பதைக்  காட்டிலும் சாமர்த்தியமாக செயல்களில் ஈடுபடுவது சிறந்தது.ஒரு சாதாரணனின் தன்னடக்கத்துடன் பன்னீர் செல்வம் சில காரியங்களை முன்னெடுப்பது தமிழ்நாட்டிற்கு புதிய வகை.

நாம் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் சாதுர்யமாக சில காரியங்களை சாதிப்பதை ஒப்ப மத்திய அரசிடம் காரியங்களை சாதிக்க முயல்கிறார் . பொதுவாக குறைபாடு என பலர் கருதுகிற அவருடைய சுபாவத்தில் ,இந்த தன்மை இப்போது சாமர்த்தியமாக மினுங்குகிறது.

NEET  CBSE என்றுதான் இந்த தேர்விற்கான  விண்ணப்படிவமே உள்ளது.அப்படியானால் இது CBSE  மாணவர்களுக்கு மட்டுமே உரிய தேர்வுதானே ? ஸ்டேட் போர்டில் பயிலும் மாணவர்கள் மருத்துவப் படிப்பிறகு தகுதியற்றவர்களா ? என்பதை முதலில் இந்த தகுதி பேசும் அறிஞர்கள் விளக்கட்டும்.

நீட் தேர்வை எதிர்த்து தமிழ்நாடு அரசு சட்டசபையில்  கொண்டு வந்துள்ள மசோதாவை அனைவரும் ஒருங்கிணைந்து சாத்தியமாக்க வேண்டும்.கல்வி , உயர்கல்வி ஆகியவை
மாநிலங்களில்   இருந்து துண்டிக்கப்படுவதும் , மத்திய அரசாங்கத்திற்கு தாரை வார்க்கப் படுவதும் கூடாது.மாநிலங்களின் சுயேட்சைத் தன்மை விஷயங்களில் கல்விக்கு பிரதானமான பங்கு உண்டு.மாநிலங்களுக்கு மாநிலம் கல்வி ,பண்பாடு போன்றவற்றில் உள்ள வித்தியாசங்களைக் களைந்து எல்லாவற்றையும் சீருடைக்குள் கொண்டுவரக் கூடாது.

இந்தியா பல்வேறு பண்பாடுகளும் வேறுபாடுகளும் நிறைந்த பிரதேசம்.அதனாலேயே அழகு பெறுவது.எல்லாவற்றையும் சீருடைப்படுத்தி ஒருநிறமாக்குவது ஒருபோதும் நல்லதல்ல  . இந்நினைவு அகலாமலிருப்பதே பேறுடைத்து.ஒவ்வொரு மாநிலங்களும் தங்களுக்கென தனித்தன்மைகள் கொண்டவை.கல்வி , தொழிநுட்பம் என்றாலும் சரி ,மருத்துவமானாலும் சரி பண்பாட்டுடன் உறுதியான தொடர்பு கொண்டது .

இது போன்ற பொதுவான பிரச்சனைகளில் ஒருங்கிணைவோம் என்பது உணர்த்தப்பட வேண்டும்.அதுவே தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்கு நல்லது.

ஒருபோதும் சமூக நீதிக்கோ ,ஏழைகளுக்கோ இடையூறு ஏற்படுத்தும் நல்வரங்களேயானாலும் நமக்கு அவை  அவசியமில்லை.  ஓடி ஒழுகும் பேருந்தானாலும் பரவாயில்லை.முதலில் அது எல்லா ஊருக்கும் செல்லத் தொடங்க வேண்டும்.
அப்புறமான விஷயத்தை அப்புறம் பார்க்கலாம்.

அப்பச்சி காமராஜர் ...

அப்பச்சி காமராஜர் ... காமராஜ் பற்றி "நீயா நானா " விஜய் டிவி ஷோவில் பேசுவதற்காக ஆன்டனி ஒரு வாரம் முன்னதாக அழைத்தார்.நான் வர...