தூய்மைவாதத்தின் மீதான மக்கள் கவர்ச்சி

பாசிசத்தின்,தூய்மைவாதத்தின் மீதான மக்கள் கவர்ச்சி
ஓராண்டோ ஒன்றரை ஆண்டோ இருக்கும் இந்த கட்டுரையை எழுதி.தி இந்து நாளிதழில் வேறொரு தலைப்பில் இது வெளி வந்தது .நிறுவனங்களின் இறுக்கத்தின் காரணமாகவோ அல்லது அரசின் செவி கேளாத்தன்மை காரணமாகவோ மக்களிடம் பாசிசத்தின் மீதான கவர்ச்சி ஏற்பட்டிருப்பதை உணர்கிறேன் .அமர்த்தியா சென்னும் இது போன்ற தன்மை கொண்ட ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.ஏகதேசம் அவரும் இந்த கட்டுரையிலிருப்பதைப் போன்ற கருத்தையே முன்வைக்கிறார். அரசின் செவிகேளா தன்மை காரணமாக தூய்மையை இலக்காகக் கொண்ட தனிமனித ஆளுமைகள் அவதார புருஷர்களைப் போன்று தோன்றி தங்களின் தரப்பில் நீதியை நிலை நிறுத்த வேண்டுமென மக்கள் விரும்புகிறார்கள்.ஆனால் இத்தகைய நீதியை நிலை நாட்டவருகிற தனிமனித ஆளுமைகளும்,தூய்மைவாதிகளும் தான் சகலத்தையும் சுதந்திரத்தையும் முடக்கக் கூடிய பாசிசத்தை நோக்கி மக்களை நகர்த்தக் கூடிவர்கள் என்பதை அவர்கள் அறிவதில்லை.அறிய வைக்கவேண்டிய அறிவுஜீவிகளும் இங்கே தொழில் படவில்லை என்பதே வேதனைக்குரியது.இன்றைய தினத்திலும் இதற்கு இருக்கும் பொருத்தப்பாடை முன்னிட்டு இந்த கட்டுரையைப் பதிகிறேன் .அரசின் செயல்படாதன்மை பாசிசத்திற்கு அழைத்து செல்லும்.ஆனால் அது இப்போதிருப்பதைக் காட்டிலும் மிகவும் பயங்கரமானதாக இருக்கும்
ஓரப்பார்வை
-------------------
எல்லாவற்றையும் தூய்மைப்படுத்த வேண்டும் என்கிற குரலை இப்பொழுதெல்லாம் தேனீர்க்கடை தொடங்கி பிரயாணங்களில் பொதுயிடங்களில் என்று சாதாரணமாகக் கேட்க முடிகிறது. இக்குரல் அறிந்து பேசுகிறதா இல்லை அறியாமல் பேசுகிறதா! அன்றாட வாழ்வில் தூய்மைப் படுத்தப்படாத அமைப்புகளின் அனைத்து சலுகைகளையும் அனுபவித்த வண்ணம்தான் முச்சந்ததிகளில் தூய்மைப்படுத்தும் கோரிக்கைகளை இக்குரல் முன்மொழிகின்றது. “வெளிநாடுகளில் இப்படியில்லை. இங்கே பாருங்கள் இந்தச் சாதாரண விஷயங்களுக்கெல்லாம்கூட காசு கேட்கிறார்கள்! காசு தராமல் ஒரு காரியமும் நடைபெறுவதில்லை இப்படி, இங்கு எதுவும் சுத்தமாக இல்லை” என அங்கலாய்கிறார்கள். தங்களுடைய அன்றாட உரிமைகள் காசு தராமல் சிபாரிசு இல்லாமல் கிடைக்க வேண்டும் என்கிற எண்ணத்தைப் பிழை என்று சொல்வதற்கில்லை. ஆனால் காசு கொடுக்கும் போதும் சரி கிடைக்கும் போதும் சரி இரண்டு நிலைகளிலும் இந்தப் பிரக்ஞை செயல்படுகிறதா என்று தெரியவில்லை. பிரக்ஞை அற்ற நிலையில் திரைப்படப்பாடல்களை முணுமுணுப்பதைப் போல ஒருவேளை எவரோ கூற, எவரோ கேட்டு, எவரோ பின்பற்றுவதை போன்ற வினோத பழக்கத்தின் மயக்கம் தானா இக்குரல்?
டாஸ்மாக் பார்களின் முன்னால் சசிபெருமாள் குடிகாரர்களின் கால்களில் விழுந்து கெஞ்சுவதைக் காட்சிகளில் பார்க்கும் போதெல்லாம் சங்கடமாய் இருக்கிறது. மகனின் கால்களில் அப்பா விழுவதைப் போன்ற சங்கடம். வீட்டு சாராயத்தையும் , கள் வகைகளையும், அரிசி பீர் பண்டங்களையும், மதுக்கஷாயத்தையும் துப்புரவு செய்துவிட்டு டாஸ்மாக் இன்று தமிழ்ச்சமூகத்தின் வயிறாக ஊதிப் பெருத்திருக்கிறது. டாஸ்மாக்கை மூடுங்கள் என்று சொல்லும் அதே சமயத்தில் ஒழித்தகற்றப்பட்ட வீட்டுப் பண்டங்களை முதலில் திருப்பிக் கொடுத்துவிடுங்கள் என கேட்க வேண்டாமா? பெப்சியை விரட்டவேண்டும் என்பது சரிதான் அதற்கு முன்னர் பூச்சு மருந்து கலக்காத இளநீரைத் திரும்பப் பெற வேண்டாமா?
காவல்நிலையங்கள், வங்கிகள், கிராம நிர்வாக அலுவலகங்கள், கிராமப் பஞ்சாயத்துக்களுக்குச் செல்ல சுற்றுப்புறங்களிலிருப்பவர்கள் துணைக்கு அழைப்பார்கள். அவர்களுக்கு அங்கே ஏதேனும் சின்ன விஷயங்கள்தான் ஆக வேண்டியிருக்கும். அதற்கென்று துணைக்கு ஒரு ஆள் அவசியமேயில்லை. பரிச்சயமற்ற இடங்களில் தேனீர் அருந்துவதற்கும், சிறுநீர் கழிப்பதற்கெல்லாம்கூட துணைக்கு ஆள் தேவைப்படுகிறார்கள். துணைக்கு ஆளில்லாமல் இருந்தால் பல சமயங்களில் காரியங்கள் செவ்வனே நடந்துவிடக்கூடியவையும்கூட. காரியங்களைக் காட்டிலும் பிற விஷயங்களில் நமக்கு ஆர்வம் அதிகம். நம்மைச் சமன் செய்து கொள்வதற்கும், தன்னம்பிக்கை இழக்காமலிருப்பதற்கும் காரியங்களுக்குத் தொடர்பற்ற எவ்வளவோ விஷயங்கள் தேவைப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. நேரடியாக காரியத்தை எதிர்கொள்வதற்குப் பதிலாக ஆள் தேடுவதில் சுவாரஸ்யம் அதன் வழியாகவே சிக்கிக் கொள்கிறார்கள். சிக்கலாக்கிக் கொள்கிறார்கள். எனினும் அவ்வழியைத்தான் வெகுமக்கள் தேர்வு செய்கிறார்கள். அதுதான் வசதி என்று நம்புகிறார்கள். வெகுமக்கள் தேர்வு செய்யும் விஷயங்கள் எளிமையானவை அல்ல. எளிதில் துலங்க மறுப்பவை அவை.
உறவு முறைகளற்ற ஓரிடத்தில் ஒரு போதும் சுலபமாக, தனித்திருக்க முடிவதில்லை. உறவு முறைகளை ஏற்படுத்திக் கொள்ளாமல் எதையும் எதிர் கொள்ள முடிவதில்லை. பகிர்தலற்ற இடங்களில் காசு கொடுத்து உறவைப் பெற விரும்புகிறோம். பகிர்தல் சாத்தியமற்ற இடத்தில் காசுதான் எந்திரத்தில் எண்ணெய் போல் செயல்படுகிறது. இது நமது அடிப்படைப்பண்பு. காலங்காலமாகக் கற்று வந்தது. கோயில் குளங்களுக்கு நாம் செல்லும் விதம், சுற்றுலாக்களுக்குச் செல்லும் விதம் போன்றவை இதைத்தான் உணர்த்துகிறது. பின்னர் விருப்பத்தின் குறைபாடுகளைத்தான் புலம்பவும் செய்கிறோம். அடிப்படைப் பண்புகளையெல்லாம் ஒழித்தகற்றி விடவேண்டும் என்கிற ஒரு அவசியமும் இல்லை. அவை நமது சாராம்சத்தின் ரகசியங்கள்.
உங்களுக்குத் தரகர்கள் தேவைப்படும் சமயங்களில் விலை மலிவான தரகர்களை ஒருபோதும் ஏற்பாடு செய்யாதீர்கள் என்றே நண்பர்களுக்குச் சிபாரிசு செய்கிறேன். மலிவான தரகர்கள் உங்களைத் தலைசுற்றச் செய்துவிடுவார்கள். இரண்டு குழப்பம் ஒன்று சேர்ந்தால் மகா குழப்பம்தான். ஏதேனும் ஒன்று தெளிவாகயிருந்தாகவேண்டும். கடுந்தெளிவும் கடும் ஆபத்து. அமைப்பின் எந்தப் பகுதியில் சுண்டவேண்டும் என்பதை நன்கறிந்தவரே நல்ல தரகர். வீணான அலைச்சல்களுக்கு அவர் வாய்ப்பை ஏற்படுத்துவதில்லை. காவல் நிலையங்களுக்கு செல்லும்போது மலிவான தரகன் கண்கூடாகவே உபத்திரவமாக மாறுவதைக் காண்பீர்கள். அவன் வேண்டாத தகவல்களையெல்லாம் சொல்லி மழுங்கடித்து விடுவான். அப்போது சந்தர்ப்பம் உங்களுக்கு எதிராகக்கூட மாறிவிடும். காசு கொடுப்பது என்பது உத்தி. அது வசப்படவேண்டும். எப்படி கொடுப்பது, எதைக் கொடுப்பது, எவ்வளவு கொடுப்பது என்று தெரியவேண்டும். எதில் பசித்திருக்கிறார்களோ அதைக் கொடுப்பதே தானம். வீணே நீட்டினால் வில்லங்கமாகிவிடும். பூடம் மாறி சாமியாடுவதைப் போல. காசு வாங்கும் ஆண் அதிகாரிகளுக்கும் பெண் அதிகாரிகளுக்குமிடையில்கூட வேறுபாடுகள் இருக்கின்றன. பெண் அதிகாரிகள் தயங்குவதில்லை. ஆண் அதிகாரிகளின் அளவுக்கு கலங்குவதுமில்லை. கூச்சப்படுவதுமில்லை. பெறுவதும் பதவியின், அதிகாரத்தின் ஒரு பகுதிதான் என்பதில் அவர்கள் தெளிவாய் இருக்கிறார்கள் கொடுக்கும்போது தவறுதலாக ஓரிரு இதழ்கள் குறைந்து போனாலும் கூட பெண் அதிகாரிகளிடம் செல்லுபடியாகாது. காரியம் நடைபெறவில்லையே என மறுமுறை நீங்கள் முதலிலிருந்தே தொடங்கும்போதுதான் ஓரிரு இதழ்கள் குறைந்துபோன விஷயம் உங்களுக்கு தெரியவரும் அரிதாகத்தான் சிலர் சரிபார்த்தவுடனேயே முகத்துக்கு நேராக தெரியப்படுத்துபவர்கள்.
காசைப் பெற்றுக் கொள்வதில் பல தினுசுகள் உள்ளன. “நானாகக் கேட்பதில்லை, தருவதை வாங்கிக் கொள்வேன்” என ஒருவர் கூறிவிட்டாரெனில் அவரைத்தான் பொருத்தமானவராகத் தேர்வு செய்வேன். அவர் கூறுவது பொய் என்பது தெரியும் அவ்விடத்தின் நிர்ணயிக்கப்பட்ட தொகையை அறிந்தவர் அவர் தான். நிர்ணயிக்கப்பட்ட தொகையைத்தான் அங்கே ஒருவர் கொடுக்கவோ பெறவோ முடியும். முதலிலேயே இவரைச் சென்றடைவது நமது அதிர்ஷடத்தைப் பொறுத்தது இவர்தான் நமக்கு சூட்சுமத்தின் வாசற்கதவைத் திறக்கிறார். சிலர் இப்படி வெளிப்படுத்தாமல் போக்கு காட்டிக் கொண்டே போவார்கள். ஒரு சிக்கலை அவிழ்த்தால் வேறு ஒரு முடிச்சு விழும். அவர்களைக் கையாளும் வழிமுறை வேறு. இவர்கள் இப்படியிருந்து கோட்டைக் கொத்தளங்களெல்லாம் ஒன்றும் வாங்கி விடுவதில்லை. வசிப்பதற்கு வசதியான ஒரு வீட்டைக் கட்டி முடிப்பதே பெரும்பாடு. சமூக மதிப்பும் கிடையாது. ஐநூறு ரூபாயைக் கொடுத்தவன் பத்துபேரிடம் சொல்வானெனில் நூறு ரூபாய் கொடுத்தவன் நூறு பேரிடம் சொல்வான். இவர்களைக் காட்டித்தர ஆர்வக் கோளாறில் சில இளைஞர்கள் தொழில் நுட்பத் திறமை கொண்டு முன்வந்து விடுகிறார்கள். காட்டிக் கொடுப்பதால் அவர்கள் குடும்பத்தோடு நிர்மூலமாகிவிடுகிறார்கள். துக்கம் தாழாமல் குடும்பத்தோடுத் தூக்கிட்டு செத்தவர்கள் எல்லாம்கூட இருக்கிறார்கள். இவர்களொன்றும் நாட்டையே கூறு போட்டு விற்கும் கொள்ளைக்காரர்கள் கிடையாது. நமது சித்தப்பா பெரியப்பா மாமன் மச்சினன் போல நமது ஆட்கள் தான். நம்மை அன்றாட வாழ்வின் அபத்தமான தருணங்களில் இருந்து காப்பாற்றும் ஈரப்பசை இவர்கள். வெள்ளைக்காரன் காலத்திலிருந்தே அரசாங்கம் “இவர்களுக்குக் கிடைக்கும்” என்ற நம்பிக்கையோடு பல பதவிகளுக்கு குறைந்த ஊதியம் வழங்கி வருகிறது. பொறுப்பும் பதவியும் பெரிதாக இருக்கும் நிலைமை மோசமாக இருக்கும். கிராம நிர்வாக அதிகாரிகளில் பலர் ஓய்வு காலத்தில் பென்ஷன் கூட வாங்க முடியாத அளவுக்கு அரசாங்கம் காத்திருந்து தண்டித்து விடுகிறது கடைநிலை செய்தியாளனின் நிலையும் இதுதான் வழியில்லாமல் அவன் வட்டார அதிகாரத் தரகனாகி விடுகிறான். இவனில்லாமல் ஒரு நாளிதழ் இல்லை. பெருஞ்செய்திகளுக்காக நாளிதழைப் பிரயோகிப்பவர்கள் குறைவு. தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை அறிவதில் மக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால் ஒரு வட்டாரச் செய்தியாளளின் நிலை இன்று எப்படியிருக்கிறது? இப்படித்தான் பல தொழில்கள் பதவிகள். எல்லாவற்றையும் தூய்மைப்படுத்தும்போது அல்லது சீரமைக்கும்போது சில பறவையினங்கள் விலங்கினங்கள் அழிந்துவிடக்கூடும் அவை ஏதேனும் ஒருவிதத்தில் உங்களைத் தற்காத்துக் கொண்டிருந்தவையாகக்கூட இருக்கலாம்.
பல சமயங்களில் எந்தத் துறையானலும் சரி காசு வாங்குகிற ஆண் சிப்பந்திகள் ஓரளவுக்கு லகுவாக இருக்கிறார்கள். காசு சென்று சேர்ந்தவுடன் அதிகாரத்தின் சிரசிலிருந்து உடனடியாக இறங்கி விடுகிறார்கள். அவர்களுக்கு வாழ்க்கையின் வளைவு நெளிவுகள் தெரிகின்றன. அழும் குரலுக்கு செவி சாய்க்கத் தெரிகிறது. கறாறாயிருப்பவர்களுக்கு அதிகாரம் தரும் போதை மட்டுமே இலக்கு. இதனை வெகுமக்கள் நன்கறிந்து வைத்திருக்கிறார்கள். அதிகாரப் பசியைத் தவிர்த்து பிற எல்லாவித பசியையும் குணப்படுத்த மக்கள் தயார்தான். சிறிய தொகையைக்கூட பெற்றுக்கொள்ளாமல் ஒருவர் கற்பைக் காப்பாற்றுகிறார் எனில் ஒன்றில் அவர் பின்னாட்களில் “வாங்கவிருக்கிற பெருந்தொகைக்குப்” பயிற்சி எடுப்பவராக இருக்க வேண்டும். அல்லது அளவுக்கதிகமான அதிகாரப் பசியில் துன்புறுபவர்களாக இருக்க வேண்டும். பொதுவாகவே நாம் அதிகார பசி நிறைந்தவர்கள். நான்கு பேருக்கு நாம் தொண்டூழியம் செய்வதைப் போல நாற்பது பேர் நமக்கு அடிமையாயிருக்க எண்ணுபவர்கள். பதவியின் அதிகாரத்தைக் காட்டிலும் அதிக பசி. அதனால்தான் பதவியின் அதிகாரத்தில் பொலிவு கூடி நடப்பவர்கள் இறங்கியதும் வெற்றுத் தோடாகிவிடுகிறார்கள். சிலருக்கு ஒபாமா அளவுக்கு அதிகாரத்தைக் கொடுத்தாலும் கூட பற்றாது அவ்வளவு வெற்றிடம் இருக்கும். அவர்களின் கைகளில் சிக்காமலிருக்கவேண்டும். சுண்டக் காய்ச்சி விடுபவர்கள் அவர்கள். மாறாக “பெறும் ஆண்களோடு” இணைந்து குடிக்கும் சந்தர்ப்பம் உங்களுக்கு ஏற்பாடுமாயின் அவர்கள் படும் துன்பங்களைக் கூறி கதறி அழுவதைப் பார்க்க முடியும். முற்றிலுமாக கற்பைக் காப்பாற்றி வருபவர்களிடம் இரண்டு வித அதிகாரங்கள் சேர்ந்துவிடுகின்றன. பதவி ஒரு அதிகாரமெனில் ஒழுகும் கற்பு மற்றொரு அதிகாரம். அவர்களிடம் எப்போதும் நமது அன்றாட உரிமைகளும் கோரிக்கைகளும் குற்றவாளிகளின் தன்மையை அடைந்துவிடுகின்றன. மாறாக “பெறுகிறவர்” எளிதாக குறறவுணர்வை அடைந்து விடுகின்றார். காரியங்களைச் செய்து முடிப்பது வரையில் அவரால் விடுபடமுடிவதில்லை. வெகுமக்கள் காசு பெறாத கற்பு நிறைந்த அதிகாரத்தைப் போற்றுகிறார்கள் என்பது உண்மைதான். பேருண்மை என்னவெனில் அவர்கள் அதனை விரும்புவதில்லை. ஏனெனில் தூய்மை என்பது அறிவிலும், தூய்மையின்மை என்பது இருதயத்திலும் தங்கள் வசிப்பிடத்தைக் கொண்டிருக்கின்றன. போற்றுதலுக்குரியவற்றிலிருந்து உடனடியாக விலகி விடுவதே நமது உளவியல். போற்றுதலுக்குரியவற்றுக்கு உடனடியாக மதிப்பு தந்து சடங்காக்கி விட்டு விலகிச் சென்று விடுபவர்கள் மக்கள். போற்றுதலென்பது நமக்குக்கொரு சடங்கு. போற்றுதலுக்குரியவற்றுக்கு நுக்கு மக்களின் அன்றாட வாழ்வோடு இசைவு கிடையாது. யோசித்துப் பாருங்கள் கண்ணகிதான் நமது மதிப்பிற்குரியவள். அதனாலேயே வணங்குதலுக்குரியவளும்கூட சந்தேகமேயில்லை. ஆனால் மாதவிதான் எப்போதும் நேசித்தலுக்குரியவளாக இருக்கிறாள். ஏராளமான குழந்தைகளுக்கு மாதவி எனப் பெயர் சூட்டுகிறோம். கண்ணகி என்று ஓரிருவர் தான் உண்டு

வீரலட்சுமி

வீரலட்சுமி
யோனி தைத்தடைத்த இடத்திலிருந்து
முளைத்துப் பரவியதொரு வீரலட்சுமி கோயிலில்
நகரத்து மக்கள் 
பொங்கலிட்டார்கள்
மந்திரம் ஜெபித்தார்கள்
சுற்றி வந்தார்கள்
சுற்றி வருபவர்களால்
குடை ராட்டினமாய் சுற்றிக் கொண்டிருந்தது
கோயில் .
யோனி தைக்கப்பட்ட இடங்களில் பெருகுகிற
பிற அம்மன்கள் ஜொலிக்க
சந்தனக் காப்பு ரூ 350/-
மக்கள் நெரித்த
பஜனைகள்
ஆராதனைகள்
அபிஷேகங்கள்
மணியொலிகள்
பெரிய பூட்டுடன் , விலகி நின்ற
இரும்புக் கதவின் எதிரில்
வாய் பூட்டப்பட்ட உண்டியல்குடம்
மனம் பிறழ்வான உடலாய்
சங்கிலியில் பிணைந்து கிடந்தது
சிறிய கம்பித்தூணில்.
அம்மனின் தட்டத்தில்
யாரேனும் கைவைத்து விடக் கூடும்.
நுழையக் கூடாதவர்களின் வரவைக்
கண்காணித்து நிற்கும் கண்கள்
துப்புரவுப் பணிகளை மேற்பார்வை செய்கின்றன
நகரம் இந்த முறை
நவீன பளிங்கறையின்
மணிச்சத்தத்திலிருந்து தொடங்குகிறது.
நீதிபதிகளும்
சிறைக் காவலர்களும்
பத்திரிக்கைக்காரர்களும்
மனநல மருத்துவர்களும்
பணிக்குக் கிளம்புகிறார்கள் .
கர்ப்பக் கிரகத்திலோ
யோனி தைக்கப்பட்ட அம்மன்
கால்விரித்து வேதனிக்கிறாள்
புட்டம் காட்டித் திரும்பி
உள் எழுந்து நின்று
தைக்கப்பட்ட யோனியை
வலி நிரம்பப் பிரிதெடுப்பாளாவென
ஒரு கவி அவளைச் சென்று
கண்டு வருகிறான்
[ "வீரலட்சுமி" கவிதைத்தொகுப்பிலிருந்து - 2003
குலசை முத்தாரம்மனுக்கு கருங்காளி வேடமணிந்து தசரா விரதமிருந்து வரும் பக்தர்களுக்கு இக்கவிதை சமர்ப்பணம் ]

தொடர்வண்டியில் தொங்கும் இளவரசி

தொடர்வண்டியில் தொங்கும் இளவரசி
ஆடும் கைப்பிடிகளிரண்டினிடையே
உடலைக் கோர்த்துத் தொங்கவிட்டபடி
ஆடிக் கொண்டிருக்கிறாள் 
தொடர்வண்டியில் தொங்கும் இளவரசி
நள்ளிரவில் புறப்படும் புறநகர்
தொடர்வண்டியில் உடல் தொங்காத கைப்பிடிகள்
இளவரசிகளுக்காக ஆடியபடி காத்திருக்கின்றன .
புலப்படாத இளவரசிகள் ஒருவேளை
அந்தக் கைப்பிடிகளில் உடலைக் கோர்த்திருக்கக் கூடும்
கடவுள் பயணிக்கும் நள்ளிரவில்
ஆளற்ற இருக்கைகளிலிருந்து பயணிக்கிறார்கள்
அவர்களின் காதலர்கள்.
இளவரசிகளைக் கவர்ந்திழுக்க வேண்டிய
காதலர்களின் கண்கள்
உள் திருங்கியிருக்கின்றன
கடக் கடக் ஓசையுடன்
தொங்கியபடி பயணிக்கும் இளவரசியின்
நதியில் தேய்ந்த வரி படர்ந்த வெள்ளையுடலில்
கருங்கல் சிற்பமாய்
கரிய யோனி
விலா எலும்புகள்
துருத்திய மார்பில்
சதையற்றுச் சப்பிய முலைகள்
உலர்ந்த திராட்சை
முலைக் காம்புகள்
சிற்ப யோனியை
சதைக்குறிகளால்
முட்டி நெரிக்கும் நிகழ்காலம்
தூங்கும் வேளையில்
இளவரசி பயணித்துக் கொண்டிருக்கிறாள்
தொடர்வண்டியில் பொருட்களின் அறையில்
திரிசடையோடும் ,கருத்த பாசி படர்ந்த உடலோடும்
சிற்பக்குறி வெளித்தெரிய
அவளது காதலன்
தூங்காமலிருக்கிறான்
ஆளற்ற இளவரசர்களோடு
தனிமையில் பயணிக்கும் இளவரசியின் கண்கள்
முதிய நிழலுருவங்கள் ஊடாடித் திரியும்
நீளமான பழுதடைந்த கொட்டாலைகளைக்
கனவு காண்கின்றன
கொட்டாலை முற்றத்தில்
அழகிய கோலம் ஈரமுலராமலிருக்கிறது.
[ வீரலெட்சுமி கவிதைத் தொகுப்பிலிருந்து - 2003 ]

கல்குதிரை- 26,27

தமிழ் கலாச்சாரத்தின் மெய்யான முகம் "கல்குதிரை".

தமிழ் கலாச்சாரத்தின் மெய்யான முகம் கல்குதிரை.கழிந்த முப்பதாண்டு காலமாக கல்குதிரை தொடர்ந்து சூழலில் தாக்கம் ஏற்படுத்தி வருகிற இதழ்.அதன் உச்சபட்ச சாத்தியத்தை இப்போது வந்திருக்கும் இரு இதழ்களும் கொண்டிருக்கின்றன.இன்னும் இருபது ஆண்டுகளுக்கு தமிழில் தாக்கத்தை ஏற்படுத்தப் போகிற இதழ்கள் இவை. இதற்கு மேலாகவும் இங்கொன்றும் இல்லை . இதற்கு குறைவானதும் இங்கில்லை.கல்குதிரையே மேம்பட்ட தமிழின் தரம்.குறைந்திருப்போர் இதன் உயரத்திற்கு மேலெழும்பி வரவேண்டும்.இதனினும் மேலென்போர் இதழின் புதிய முயற்சிகளுக்கு திருவருட்கொடை செய்யலாம்.

கல்குதிரையின் தற்போதைய இரண்டு இதழ்களும் தமிழின் அத்தனை பொய் முகங்கள் பேரிலும் சூடு வைத்திருக்கிறது.தடம் , படம்,பாம்படம்,காலச்சுவடு ஓலை சுவடு , உயிர்மை மறுபிறப்பு , தீராநதி வைகை போன்ற இடைநிலைப் பரிவாரங்கள் , அத்தனை பொய் முகங்கள் பேரிலும் எடுக்கப்பட்டிருக்கும் மாயா நடவடிக்கை இது.
தனி மனிதனாக நின்று ,நிறுவனங்கள் எதனுடனும் கைகோர்க்காது கோணங்கி ஆற்றிவரும் பணி வியத்தலுக்குரியது.பிறராலோ,நிறுவனங்களாலோ,பல்கலை புலங்களாலோ சாத்தியமற்றது.

கல்குதிரையின் அளவிற்கு தன்னைத் தகுதிப்படுத்திக் கொள்ளாத நிறுவனங்களானாலும் சரி ,தனி நபரானாலும் சரி தமிழ் பண்பாடு , கலை,இலக்கியம் பற்றி முடிவான அபிப்ராயங்கள் கொண்டிருத்தல் குறைபாடுடையதே.வாய்ப்பேச்சில் வீரரடி என்பது போலே...கல்குதிரை
ஆசிரியர் - கோணங்கி
6/1700 இந்திரா நகர் .கோவில்பட்டி -628502
தோலை பேசி - 9952546806
கல்குதிரை இரண்டு இதழ்களும் சேர்த்து விலை - 285
பக்கம் - 374

தீச்சட்டி

தீச்சட்டி
அவர்கள் இப்போது தனியே இருக்கிறார்கள்.
அவள் ஸ்கூட்டிப் பெப்பில் மார்க்கெட்டுக்கு வருகிறாள்
அவனது நள்ளிரவு போஜனம் புரோட்டா கடையில் 
தாறுமாறாக நடைபெறுகிறது.
அவன் உண்பது போலில்லை
பலவந்தம்
அவர்கள் பிரிந்து விட்டார்கள்
எனினும் அவள் ஸ்கூட்டிப் பெப்பில் அவனும் உடன் வருவது போலவே
இருக்கிறது
அது அவன் மனநிழல் .
அவனுக்குப் பிடித்தமான மீன்களை அவள் வாங்கிச் செல்கிறாள்
அவனுக்கு பிடித்தமான ஆடைகளையே உடுத்துகிறாள்.
அவன் சொற்படிதான் நடந்து கொள்கிறாள்
அவனுக்கோ அவள் சிந்தை மீற இயலாதது
இருவரும் அபூர்வமாக சந்தித்துக் கொள்கையில்
சம்பிரதாயமாகச் சிரித்துக் கொள்கிறார்கள்
வஞ்சினம் உள்ளில் சுழன்றெரிய...
யார் கொண்டு வந்து சாய்த்தது?
இந்த வஞ்சினத்தில் அவனுக்கோ அவளுக்கோ
தொடர்பேதும் இல்லை
ஒருவரையொருவர் தெரிவிக்கும்
புகார்கள் அவர்களில் நிற்க மறுத்து உதிர்ந்து விழுந்த
உதிரியரளியின்
வண்ணம்
காவு கொண்ட ஊழின் வாசல்
வஞ்சினம் தனியே அவர்கள் தனியே என்றுதான்
இருவரும் இருக்கிறார்கள் விளங்காத தனிமையில் ...
வஞ்சினமாலையை அவர்கள் கழுத்தில் எடுத்து அணிவித்தவர்கள்
கண்ணகியா,இசக்கியா,
பாஞ்சாலியா ?
ஒரு காப்பியமும் ,தீச்சட்டியும்
அவர்களுக்கிடையில் இருப்பதையறியாத நீதியின் ஒப்புதலை
நீதிமன்ற வாசலில் நின்றவண்ணம் ஓங்கி சிரித்துக் கொண்டிருக்கிறான்
துச்சாதனன்
வந்து வழிமறிப்பவன் கோவலன்
பாஞ்சாலியின் சேலையின் காலநீளம் கண்டு
மணிமேகலை தனக்கிதில் ஏதும் பொறுப்பில்லை என்று கூறி
எப்போதோ ஒதுங்கி கொண்டாள்.
நீள்கிறது சேலை
எடுத்து உடுத்திக் கொள்பவர்களுக்கு
பரிசாக வந்து பற்றுகிறது
மாய அந்தி.
மதுரை என்னும் தீச்சட்டி
எப்போதும் கையிலேந்தி யார் கையிலேனும் 
எரிந்து கொண்டே இருப்பதுதானோ ?

சிலேட் - 15

சிலேட் இதழை புதன்கிழமை முதல்
உங்கள் பகுதிகளில் உள்ள புத்தகக் கடைகளில் கிடைக்கச் செய்வோம்.
ஏற்கனவே நினைத்துக் கொண்டதற்கிணங்க திருவட்டார் நரசிம்மர் சந்நிதியில் சிலேட் -15 வைத்து இதழை இன்று வெளியிட்டோம்.சிலேட் இதழில் இந்த இதழ் முதற்கொண்டு தன்னையும் ஆசிரியராக நியமித்துக் கொண்ட சுதாகர் கமிலஸ் இதழினை வெளியிட எனது பள்ளிக்காலம் தொட்டு உடன்வரும் , உடன் நிற்கும் எனது நண்பர் தமிழ்செல்வராஜ் பெற்றுக் கொண்டார்.
சுதாகர் கமிலஸ் சுந்தர ராமசாமியின் நெருங்கிய நண்பர்.சு.ராவிடம் இருந்து நாங்கள் உத்தரவு பெற்று வெளியேற்றிக் கொண்ட காலத்தின் பின்னிருந்து அவரின் நண்பராக வெகுகாலம் பழகியவர்.மாறிவரும் காலத்தின் மீதான கூர்மையான அவதானிப்பும்,தேடலும் நிரம்பியவர்.நவீன அறிவுப்புலங்களின் பால் படைப்புப் பார்வைகளையும் புறக்கணிக்காது சிந்திக்கத் தெரிந்தவர். அவர் இனி இதழில் என்னோடு இணைந்து பணிபுரிவார்.சிலேட் இதழ் கண்ணோட்டங்களில் புத்துணர்ச்சியுடன் இருக்க அவர் பெரிது உதவி புரிவார் என்கிற நம்பிக்கை எனக்கிருக்கிறது.
சிலேட் இதழின் இரண்டாவது கால கட்டம் இது.நாங்கள் எங்கள் பிழைகளை திருத்திக் கொள்ள,பற்றுறுதிகளில் மேம்பட எங்களுக்கு நீங்கள் உதவுங்கள்.நாங்கள் தொடர்ந்து கற்க விரும்புகிற ,
கற்றவற்றைப் பரிசீலிக்க விரும்புகிற ,புதியவற்றில் நாட்டங்கொண்ட மாணவர்கள்தான் அன்றி யாதொரு கருத்துக்கோ,தரப்பிற்கோ முதலாளிகள் இல்லை .எங்களிடம் பிழைகளும் தவறுகளும் இல்லாமற்போகாது.நீங்களும் யாதொரு கருத்துக்கோ,முற்று முடிவான தரப்புகளுக்கோ முதலாளிகள் இல்லை என்பதை உணர்ந்து நமக்குள் மாணவர்களாக உரையாடுவோம் .பிழைகளை ஏற்கும் வண்ணம் சுட்டிக்காட்டுங்கள்.சந்தேகத்தின் பேரிலோ ,ஏற்கனவே கரங்களில் உள்ள நோக்கங்கள் அடிப்படையிலோ யாரும் எங்களை சிறைப்படுத்த முயலவேண்டாம்.ஏனெனில் அந்த இடத்தில் எங்களுடைய நன்மைகளும் சரி தீமையென்றாலும் சரி அமர்ந்திருக்க வில்லை.
சிலேட் இதழ் தொடர்ந்து இயங்கவேண்டும் என்னும் எண்ணம் கொண்ட பல நண்பர்களும் வாசகர்களும் உண்டு.அவர்களுக்கு எப்போதும் கடன்பட்டிருப்போம்.அதன் காரணமாகவே எங்களுடைய பற்றுறுதிகளை செம்மையாகக் காக்கவும் அழகுபடுத்தவும் முயல்வோம்.அன்பென்பது தொடர்ந்து பற்றுறுதியை தற்காத்தல் என்கிற காப்பையும் ,கவசத்தையும் அவர்களிடமிருந்தே பெறுகிறோம் என்கிற பிரக்ஞை எங்களுக்கு இருக்கிறது.
சென்னை "டிஸ்கவரி புக் பேலஸ்" ,"பனுவல்"
கோவை " விஜயா பதிப்பகம் "
சேலம் " பாலம் புக் மீட் "
பொள்ளாச்சி "எதிர் "
மதுரை "நற்றிணை பதிப்பகம் "
திருநெல்வேலி "சக்தி கலாலயம் ",சக்தி புத்தகாலயம் "
நாகர்கோவில் "படிகம் புத்தக நிலையம்" ஆகிய இடங்களில் சிலேட் இதழ்கள் வாசகர்களுக்கு வரும் புதன்கிழமை இதழ்கள் கிடைக்கும்.
இந்த இதழில் பங்காற்றிய படைப்பாளிகளுக்கும்,கவிஞர்களுக்கும் திங்கள் அன்று இதழ் தபால் செய்யப்படும்.
புத்தக விற்பனையாளர் "கலப்பை பதிப்பகம் "நண்பர் ராமசாமி வழியாகவும் சிலேட் இதழை வாசகர்கள் பெற்றுக் கொள்ளலாம்
மேலும் கிடைக்கும் இடங்களை விரிவுபடுத்திய பின்னர் தகவல்கள் உங்களுக்குத் தெரிவிக்கப்படும்.எங்களிடம் இருந்து நேரடியாக இதழ்களை பெற விரும்புபவர்களும் அணுகலாம்.ஒத்துழைப்பு தாருங்கள்.உடன் நில்லுங்கள்.
இதழினை எந்தவகையிலும் இலவசமாகப் பெற முயற்சிக்காமலிருந்தால் நீங்கள் எங்களுக்கு உதவுகிறீர்கள் என்று பொருள் கொள்வோம்.
தனி இதழ் ரூ 100 சந்தா ரூ 400

"விசாரணை" - வெற்றிமாறன்

"விசாரணை" தமிழில் நவீன சினிமாவின் தொடக்கம்.

எந்த காரியம் தமிழில் இல்லையென்று விமர்சனங்கள் வாயிலாகவும் ,ரசனை வாயிலாகவும் குறைபட்டுக் கொண்டிருக்கிறோமோ அந்த காரியம் நிகழும் போதும் அதனைக் கொண்டாடவேண்டியதும் முக்கியமானது.விசாரணை தமிழில் நவீன சினிமாவின் தொடக்கம்.இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை.
இந்த சினிமா நாயகனின் இடத்தில் அமைப்பையும் , உள்ளடக்கத்தையும் பார்வையாளனின் முன் வைக்கிறது.இது யதார்த்தத்தைப் போல பாவனை செய்யும் ஒரு நவீன சினிமா.தனது புனைவு சாத்தியங்களில் இருந்து அமைப்புகளின் கட்புலனாகாத் தன்மைக்குள் நகர முயற்சி செய்யும் சினிமா.
யதார்த்தத்திலிருந்து அமைப்பின் உட்கண்ணிகளுக்குள் பயணம் செய்வதை யதார்த்தவகை இலக்காகக் கொண்டிருப்பதில்லை.யாதார்த்தத்தைச் சித்தரிப்பதில் நிறைவடைவது அது.விசாரணை யதார்த்தவகை சித்தரிப்பிலிருந்து அமைப்பின் கட்புலனாகாத் தன்மைக்குள் பயணிக்க முயல்கிறது. அதனாலேயே அது நவீன தமிழ் சினிமாவாக உருமாறுகிறது. உட்கண்ணிகளை நோக்கி பயணம் செய்ய முயலுதல் நவீனத்தின் குணம்.இது தமிழ் சினிமாவில் சாத்தியமாகியிருப்பது எதிர்பாரா விந்தை.இதற்காகவே கொண்டாடப் படவேண்டியவர் வெற்றிமாறன் . சுயமாக நிகழும் காரியங்களைக் கொண்டாடுதலே இது போன்ற காரியங்களை மேலும் மேலும் முன்னெடுக்கத் தூண்டுதலாக அமையும்.
நிரபராதிகளின் காலம் , ஜோஸ் வாண்டலூவின் அபாயம் , காப்காவின் விசாரணை போன்ற படைப்புகளின் தாக்கம் கூடிய சினிமா வெற்றிமாறனின் இந்த விசாரணை.படைப்புகளின் தன்மையின் தாக்கம் கெடாமலும் , சுயமாகவும் இந்த சினிமாவில் மெருகேறியிருப்பது வெற்றிமாறனை சிறந்த கலைஞனாக உணரவைக்கிறது .
வெற்றிமாறன் ஒரு யாதார்த்தமான கலைஞன் இல்லை என்பதை இந்த சினிமா வழியாகக் கண்டுணர இயல்பவர்களுக்கு மட்டுமே இந்த சினிமாவின் நவீனத்தன்மை என்ன என்பது விளங்கும்.இது சத்யஜித்ரெய் வகைப்பட்ட யதார்த்தம் அல்ல.பாலு மகேந்திரா வகைப்பட்டதும் இல்லை.பாலச்சந்தர் வகைப்பட்டதும் இல்லை இந்த இருவகைப்பட்ட யதார்த்ததிலிருந்தும் விலகிச் செல்பவராக வெற்றிமாறன் இருப்பதை அவரது சிறப்பம்சமாகக் கொள்ளலாம்.
யதார்த்தத் சித்தரிப்புகளிலிருந்து தனிமனித துயரங்களுக்குள் நகர்பவர் பாலுமகேந்திரா.பாலச்சந்தர் மிகை உணர்ச்சியில் நாட்டம் கொண்டவர் .அந்த தடைகள் எதுவும் வெற்றிமாறனிடம் இல்லை.
விசாரணையின் குணம் வேறு.யதார்த்தம் என்பது ஒருவகையான வெளிப்படுத்தும் பாவனைதானே அன்றி யதார்த்தம் இவ்வகை நவீன சினிமாக்களின் நோக்கமில்லை.யதார்த்தவகை என்பது சொல்லுதலின் மேம்பட்ட வடிவமும் அல்ல.அது இன்று பலவிதங்களிலும் தடையாக மாறிவிடும் தன்மை கொண்ட பலவீனமான வெளிப்பாட்டு வடிவம்.
விசாரணையை யதார்த்தம் எனக் கருதும் பார்வையாளன் , இதனை யதார்த்தம் என நம்பும் போது ,இது உண்மையல்ல என்னும் பகுதியை தவற விடுபவன் ஆகிவிடுகிறான்.அதன் மூலம் இந்த அமைப்பிலிருந்து தன்னை விலக்கிக் கொள்ளும் புனிதத்தன்மை நோக்கி சரிகிறான்.இந்த அமைப்பின் மீதான பயம் மட்டுமே அவனைப் போய் சேர்க்கிறது.இந்த அமைப்பின் மீதான பரிசீலனையை ஏற்றெடுக்க தன்னிலையில் அடையவேண்டிய மாற்றங்களை அது கடந்து விடுகிறது.
விசாரணை படம் சொல்லுவதைப் போல இந்த அமைப்பு இவ்வாறுதான் இருக்கிறதா எனக் கேட்டால் நிச்சயமாக இவ்வாறானதாக மட்டும் இல்லை என்று சொல்லிவிட முடியும்.இல்லையெனின் இந்த அமைப்பின் சூக்குமமான இன்னொரு பகுதி இந்த சினிமாவில் மறைக்கப்பட்டிருக்கிறது என்றும் சொல்லிவிட முடியும்.
பெண் போலிஸ்சாக வரும் பெண்ணின் கருணை மட்டுமே இங்கே காட்டப்பட்டுள்ளது.பிற அனைத்தும் மறைந்து கிடக்கின்றன . மறைந்தவற்றையும் நேராக்கி அவற்றின் இருப்பையும் ஸ்திரப்படுத்த முயலும் போது அங்கே மாயத்தன்மை ஏற்பட்டு விடும்.இந்த அமைப்பு நமது சித்தப்பா,மாமன் மச்சான் மற்றும் நம்மால் நிறைந்துள்ள ஒரு வஸ்து தானே அல்லாமல் ,நமக்கு அன்னியமாக எங்கோ யவராலொ இயங்கும் பிரத்யேகமான ஒன்று அல்ல.அமைப்பு சில குணங்களை நமக்குத் தருவதைப் போல நாமும் பல குணங்களை அதற்கு தந்து கொண்டிருக்கிறோம்.ஊட்டிவிடுகிறோம்
இந்த அமைப்புகள் நமது பொது மனப்பரப்பின் பகுதிகள்தானே அன்றி வேறெதுவும் இல்லை.இதன் கொடுரமுகமும் கருணையும் இயலாமையும் தனித்தனியாக பயணப்படுவதில்லை.அப்பாவிகளை மட்டுமல்ல அதிகாரத்திற்கு வெளியிலுள்ள எல்லோரையும் காவு வாங்க காத்திருப்பதுதான். தெளிவாக காவு வாங்க இயலாமையின் போதாமைகளும் நிறைந்தது இது.இந்த பண்பு இந்த சினிமாவில் புறக்கணிக்கப்பட்டிருப்பதன் மூலமாக அமைப்பின் முகம் தீமையாக மட்டுமே உருக்கொள்ளும் தன்மையை இந்த சினிமா பெறுகிறது.தீமையில் நமக்கிருக்கும் பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறது.அபத்தத்தின் அதிக பொருளை கண்டடைய இயலாமல் இந்த சினிமா படைப்பு ரீதியில் சரியும் இடமும் இதுதான்.
விசாரணை தமிழ் சினிமா முன்வைக்கும் அமைப்பின் கருவிகளாக இயங்கும் உடல்களின் சித்தரிப்பு மிகவும் கூர்மையும் , நுட்பமும் கொண்டிருக்கிறது.சந்திரன் போன்ற , இந்த அமைப்பின் முழு பிரக்ஞையையும் உள்வாங்கிக் கொண்ட உடல் சித்தரிப்பில் அது முழுமை பெற்றிருக்கிறது.வசனங்கள் மிகச் சிறப்பாக அமைந்திருக்கின்றன .ஆடிட்டர் ,கடை முதலாளியுடன் உடன் வரும் வக்கீல் ஆகியோர் இந்த அமைப்பின் தர்க்கங்களை ஏற்றெடுக்கும் விதம் பிரமாதம்.வெற்றிமாறன் தேர்ந்த கலைஞன் என்பதற்கான உதாரணமாகத் திகழும் இடங்கள் இவை.
அதே சமயம் ஆந்திரா போலிஸ் இன்ஸ்பெக்டர் பழைய சிவாஜிகணேசன் காலத்து வில்லன்களின் தன்மையில் வந்து செல்கிறார்.சென்னைக்கு காட்சி நகரும்போது சாதாரணமாக வழக்கத்திற்கு மாறுபட்ட வெறும் சாலையை வெற்றிமாறன் காட்டுவது புதியதும்,புத்திசாலித்தனமும் கொண்டது.
விசாரணை சினிமா தமிழ் சினிமாவின் பொது இலக்கணத்திற்கு மாறானது இல்லை.புழங்கி வரும் இலக்கணத்தில் அடிப்படையிலேயே தொகுக்கப்பட்டுள்ளது.
எப்படி இருப்பினும் தமிழ் சினிமாவில் கொண்டாடப்பட வேண்டிய அடுத்த கட்டத்திற்கான பெருந்திறப்பு வெற்றிமாறனின் இந்த விசாரணை.

ஆஸ்கார் பரிந்துரைக்கு செல்லும் தமிழ் சினிமா "விசாரணை " 
வெற்றிமாறனுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.]

யுத்தத்தின் உடல் அறிதல் BOX

யுத்தத்தின் உடல் அறிதல்
BOX பெட்டி கதைப் புத்தகம் ஷோபாசக்தியின் நாவலை முன்வைத்து...

1
ஷோபா இதுநாள்வரையில் அமைப்புகளின் வதைப்பண்பு கொண்ட பிறிதொரு முகத்தை தெரிவிப்பவராக இருந்தார்.தேசிய இன அரசாங்கங்களின் அமைப்புகளில் இடம்பெறும் வதைகளுக்கு இணையாக இன விடுதலை அமைப்புகளின் மனிதவதைகளையும் அவரது படைப்புகள் முன்வைத்தன.ஒன்றுக்கொன்று இரண்டு தரப்புகளும் சளைத்தவை அல்ல என்பதைக் கலைஞனின் கண்கொண்டு காண வைத்தவை ஷோபாவின் படைப்புகள் .நாம் ஏற்றுக் கொண்டிருக்கிற நம்பிக்கைகளின் உள்ளேயும் இந்த வதையின் வீக்கமும் சாட்சியங்களும் துர்நாற்றங்களும் வீசிய போது நமக்கு ஒரு திகைப்பு உண்டானது.அப்படி இருக்க முடியுமா ? நமது லட்சியங்கள் புனிதமானவை அல்லவா? உன்னதம் அல்லவா ? அப்படியானால் மனிதவதையும் அடங்கியதுதானா நமது உன்னத லட்சியங்கள் ! இப்படியான கேள்விகள் அனைத்தையும் கடந்து ஷோபாவின் படைப்புகள் நமது கனவுகளின் உள்ளிருந்த உன்னதங்கள் அழுகி நாற்றமடிப்பவைதான் என்பதைக் கண்டடைந்தன .ஈவிரக்கமற்று உண்மைகளைக் கண்டடைந்த விதத்தில் அவரிடமும் ஏமாற்றத்தின் தொனி ஆரம்பகாலங்களில் வெளிப்பட்டன.உன்னத லட்சியங்களை நம்புவோருக்கு ஏற்படும் சங்கடங்கள் அவருக்கும் இருந்தவைதான்.ஒரு தேசிய இன அரசாங்கத்தின் இத்தகைய இருள்பகுதிகளில் பதற்றத்திற்கு இடமில்லை.அது பட்டவர்த்தனமாக வெளியில் அறிமுகம்
கொண்டது. உள்ளும் புறமும் அப்பட்டமாகத் தெரிந்தது. அந்த இருள்பகுதிதான் உன்னத லட்சியத்தை மற்றொரு தரப்பு ஏற்றெடுக்க நியாயத்தை வழங்கியது.கிடைத்த நியாயத்தின் பேரில் கண்டடைந்த உன்னத லட்சியங்களுக்குள்ளும் அதே வகையான துர்நாற்றம் என்பது ஷோபாவின் பொருள்.திகைப்பு.அது எதிர்தரப்பின் மனிதவதையை மட்டுமே சுட்டி நின்றுருக்குமேயானால் நமது நம்பிக்கைகளில் ஒரு சிறு பழுதும் ஏற்பட்டிருக்காது. பொது பிரக்ஞய் பாதுகாக்கப்பட்டிருக்கும். அது இருவேறுவிதமான தரப்புகளுக்கிடையில் உள்ள வேறுபாடாக கணக்கில் கொள்ளப்பட்டிருக்கும்.நமக்கும் எதிரிக்கும் வேறுபாடற்ற இடம் அவரது படைப்புகளில் ஒரேவிதமானதாகத் துலங்கி எழுச்சியடைவதே அகநெருக்கடியாக உருமாறுகிறது. இருவரின் குரூர முகத்தின் ரேகைகளும் ஒன்றுபோல இருப்பதால்தான் இடர்பாடு ஏற்படுகிறது.இவற்றை நியாயம் செய்ய எத்தகையை புனித தர்க்கமும் நம்மிடம் இல்லாதொழிகிறது.அல்லது நம்மிடம் இருந்த புனித தர்க்கங்களை ஷோபாவின் படைப்புகள் கைப்பற்றி நம்மை நிராயுதபாணிகளாக உருமாற்றுகின்றன.

கொரில்லாவில் வடிவரீதியாகவும் ,உள்ளடக்கம் வழியாகவும் உண்மையின் பிரதேசத்தில் சுடுமணலில் நிற்கும் போது ஷோபாவிடம் ஏமாற்றத்தின் ரேகைகள் தெரிந்தன.அதனால் உண்டான வருத்தங்களும் இருந்தன.நம்பிக்கையிலிருந்து தோன்றும் வருத்தங்கள் அவை.நம்பியவன் கழுத்தை அறுக்கும்போது உண்டாகிற வடுக்கள்.விடுதலைக் குழுக்கள் நிலவுடமை மனோபாவத்தைப் பிரதிபலிக்கின்ற குற்றக்குழுக்களின் துணையுடன் களத்தில் நிற்பதையும் அவர் படைப்புகளில் கண்டுபிடித்தார்.அந்தக் குற்றக்குழுக்களே உன்னத லட்சியங்களை , கனவைப் பராமரிக்கிற பொறுப்பில் ஷோபாவின் படைப்புகளில் இருந்தார்கள்.இருந்து வருகிறார்கள்.லட்சியங்கள் ஏற்றெடுத்திருக்கும் கனவுகளின் தளம் மினுமினுப்பாகவும் ,அதற்கு எதிர்நிலையில் அவை பொதிந்து வைத்திருந்த சாக்கடைகளும் இருள் பிரதேசமும் கசங்கி இணையும் ஒரு வடிவத்தையும் மொழியையும் ஷோபா தனது படைப்புகளில் கண்டடைந்தார். பொதுமனிதர்களின் இடம் இவரது படைப்புகளில் இந்த கோரமான இரு தரப்புகளுக்கும் வெளியே பரிதாபமாக நின்று கொண்டிருக்கிறது.ஏற்றப்படும் இரு தரப்பு புனிதங்களுக்கு வெளியே தானியத்திற்கு ஏங்கும் பறவையைப் போல அவர்கள் காத்திருக்கிறார்கள்.
மனிதவதைகளைப் பற்றிய , அவற்றின் ஊடாட்டங்களில் மனித மனதிற்கு உள்ள ஈடுபாடுகளைக் குரூரங்களை கண்டுணர்த்திக் சொல்லிய படைப்புகள் ஏற்கனவே உலகில் உண்டு.லி விசலின் ஒரு இரவு நாவல் ஹிட்லரின் வதை முகாம் ஒன்றின் ஒருநாள் இரவில் மனிதவதையின் முன்பாக நகர்த்தப்படும் பயங்கரத்தைப் பற்றியது. .ப்ரன்ஸ் காஃப்கா நவீன அரசாங்கங்களின் அமைப்புகள் பின்பற்றும் பளிங்கான நாகரிக வதைகளின் , தண்டனை முறைகளின் உள்ளடுக்குகளை ,அதன் ஸ்துல உருவை வெளிப்படுத்தியிருக்கிறார்.ஷோபாவின் நெருக்கடி அதுவல்ல.எதிர்நிலையில் உள்ள அரசாங்கத்திற்கு இணையாக விடுதலைக் குழுக்களின் வதைமுகாம்களும் ஒரே நேரத்தில் ஒரே மாதிரியாக செயல்படும் , இயங்கும் பிரச்சனை இது.இரண்டிற்கும் இடையே ஒரு சிறிய வேறுபாடும் குணத்தில் அமைய பெறவில்லை என்பதே ஷோபாசக்தி என்னும் கலைஞனின் மைய நெருக்கடி.எதிரியும் நாமும் குணத்தில் ஒன்றாகிற புள்ளியே ஷோபா அறிய விளையும் புதிர்.அப்படியானால் எல்லா
கனவுகளும் , நாகரிகமும் இப்படி இரட்டைத் தன்மைகள் கொண்டவைதானா ? என்கிற கேள்வியை அவரது படைப்புகள் முன்வைக்கின்றன.கோபுரங்களுக்கு அடியில் சதா புழங்கும் ஜீவசமாதிகளின் உயிர் அனக்கத்தை ஷோபா உயிருடன் உலவ விடுகிறார்.மனிதக்கனவுகளின் உள்ளடுக்கில் உள்ளவை இத்தகைய பயங்கரங்கள்தாம் என்றால் கனவுகளுக்கான அர்த்தம் என்னவாக இருக்கமுடியும்? புனிதக்கனவுகளின் மேல் நாம் கட்ட முற்படும் அதிகாரம் யாருக்கானது ? நாம் அவற்றுள் ஏற்ற முயலும் பொதுப்படையான கோஷங்கள் மெய்யானவைதானா? இதற்கு பதிலொன்றும் ஷோபாசக்தி என்னும் கலைஞன் கொண்டு நடப்பவை அல்ல.ஒருவேளை இதற்கு விடை தெரிந்த புனிதர்கள் உளரேயாயின் அவர்கள் ஷோபாவிடம் சென்று மோதலாம்.புனிதக்கனவுகளின் உள்ளிருக்கும் வதைமுகாம் ஷோபாவின் ஆரம்பகால எழுத்துக்களின் உள்ளடக்கம்.

இந்த அறிதலையும் அவை மூலம் உருவான தரிசனங்களையும் தன்னகத்தே கொண்டு அவரது "தேசதுரோகி " கதைகள் பிரஞ்சு தேசத்திற்குள் நகர்கின்றன.மேற்குலகின் நாகரிகக் கேந்திரம் அது.உலகின் உன்னதமான நாகரிகங்களின் உறைவிடம்.ஆனால் ஷோபாவின் படைப்புகள் காட்டும் அனுபவங்கள் இந்த நாகரீகத்திற்குப் பொருத்தமற்று அமைப்புகளின் வதைகள் உலகம் முழுவதும் இவ்வாறுதான் இருக்கின்றனவோ என திடுக்கிடுகின்றன.இந்த கொடூர அமைப்புகள் மனிதர்களைக் கையாளும் விதத்தில் சிற்சில வேறுபாடுகள் இருப்பினும் கூட மனிதவதைகளை முன்னிட்டு வடிவம் பெற்றிருக்கும் இந்த அமைப்புகள் உலகெங்கும் உயிர்ப்புடன் ஒரேவிதமாக இருப்பதை ஷோபாவின் படைப்புகள் காண்கின்றன.நாகரிகம்,மொழி,இனம், நிறம்,உன்னத லட்சியங்கள் என்று மனித பாவனைகள் மாறுபட்டவையாகத் தோற்றம் காட்டி நின்றாலும் கூட மனிதவதை என்னும் குரூரத்தில் ஒன்றுபட்டவையாக இருப்பதில் பாவனைகளின் சாயம் ஷோபாவின் படைப்புகளில் உதிர்ந்து விழுகிறது.
ஷோபாவின் படைப்புகளில் கூர்மையான எள்ளல் உண்டு.எள்ளல் அல்லது பகடி என்று அறிய இயலாத அளவிற்கு நுட்பமானவை அவை.அவைதான் ஷோபாவின் படைப்புலகை நகர்த்திக் செல்பவை.ஷோபா ஒரு தரப்பில் நிற்பதைத்தான் பெரும்பாலும் விரும்புகிறார்.ஷோபாவின் பகடி அதற்கு வழி விட மறுக்கிறது.வைக்கம் முகம்மது பஷீர் போன்ற உயரிய கலைஞர்களிடம் செயல்பட்ட பகடி இது.சுய பகடியும் இணை சேரும் இடங்களில் ஷோபாவின் படைப்புகள் உயரத்திற்கு எழும்புகின்றன.ஆனால் இந்த நுட்பமான எள்ளல் பெரும்பாலும் ஷோபாவின் படைப்புகளில் மறைத்து வைக்கப்படுகிறது.அதன் பார்த்தாவைக் கழற்றி வாசகன் அதன் முகத்தைத் தரிசித்துக் கொள்ளவேண்டும்.ஷோபாவின் படைப்புகளில் சில இடங்களில் இவர் ; தான் சார்ந்த தரப்பிற்கு ஆதரவாக கறாராக நிற்க வலிந்து முயற்சியெடுக்கும் போது : அவர் உருவாக்கியிருக்கும் பகடியோ ஓங்கிச் சிரித்து விடுகிறது.ஷோபா தனது படைப்புகளில் கொண்டுள்ள அழகியலும் அழகியல் என்று தன்னை முன்னிறுத்தாததொரு அழகியல்.ஷோபாவின் படைப்புகள் வடிவச் சிறப்பு கொண்டவை.தான் கண்டடைபவற்றுக்கு வடிவம் திரண்ட பின்னரே அவை நிகழுகின்றன.வடிவமும் உள்ளடக்கமும் தங்களுக்கு ஏற்ற விதத்தில் முயங்குதல் ஷோபாவின் சிறப்பியல்பு.நிகழ்த்துக்கலையை தனது உள்ளடக்க எழுச்சியாகக் கொண்டு நிற்பவை ஷோபாவின் படைப்புகள்.வழக்கமான பாரம்பரிய கலைக்கோட்பாடுகளை இவரது படைப்புகள் முற்றாக நிராகரிப்பவையும் கூட .ஒரு எதிர்நிலை அழகியல் இவரது படைப்புகளில் சாத்தியமாகிறது.
2
BOX பெட்டி கதைப் புத்தகம் நாவலில் ஷோபா ; தான் கண்டடைந்த அனுபவங்களில் இருந்து ,அவற்றையும் உள்ளடக்கி மேலுமொரு மனப்பரப்பின் அரூபமான பகுதிக்குள் நுழைந்து தன்னை தீவிரமாக்குகிறார்.யுத்தத்தின் உடல் பற்றிய சித்திரத்தை தனது கண்டுபிடிப்புகளின் மூலம் கண்டடைய BOX முயற்சி செய்கிறது.இதுவே இந்த நாவலில் பிரதானம்.மனிதவதைச் சித்திரங்கள் ஏற்கனவே ஷோபா கண்டடைந்தவைதான்.யுத்தத்தின் உடல் என்பது என்ன ? என்பதை தனது புனைவின் கண்கொண்டு ஷோபா இந்த நாவலில் பார்த்து விடுகிறார்.அதன் மூலமாக அவரில் யுத்தம் கைவிடப்படுகிறது.யுத்தத்தின் சூக்குமம் என்ன ? அது கொண்டிருக்கும் உடல் எதனாலானது என்பது ? அறியப்படாத வரையில் யுத்தம் தனது இருப்பிற்கு சாத்தியம் கொண்டிருக்கும். BOX பெட்டி கதைப் புத்தகம் நாவலில் யுத்தம் அறிந்து கொள்ளுதலின் நியதியை அடிப்படையாகக் கொண்டு தனது யுத்தத்தின் கடைசி அத்தியாயத்தில் வந்து நிற்கிறது எனலாம்.இனி வாழ்க்கைக்குள் நகரவேண்டிய இடத்தையும் ,தேவையையும் ஈழத்துப் படைப்புகளுக்கு இந்த நாவல் தந்து கண்டுபிடிப்பின் மூலமாகத் திறந்து கொடுக்கிறது.
ஷோபா ஒரு யதார்த்த கலைஞன் இல்லை.புனைவுகளை தனது படைப்பின் நிமித்தமாகக் கொண்டவர்.புனைவுகள் வழியாக ; கண்டடைந்த உண்மைகளுக்கு அருகாமையில் வாசகனை நகர்த்தி விடுகிறார். யதார்த்தம் என்று ஏற்கனவே நம்பப்படும் வடிவத்திற்கும் தரப்பிற்கும் : குறிப்பிட்ட புறவெளிகளுக்கு
அப்பால் , வரையறைகளுக்கு அப்பால் உண்மைகளை பேசும் சக்தியில்லை என்பதை ஷோபாவின் புனைவுகள் பிரகடனம் செய்பவை. யதார்த்த வடிவத்திற்கு படைப்பின் பல முனைகளையும் ஒரே நேரத்தில் தீண்டுதல் என்பது சாத்தியமில்லை.ஷோபாவின் புனைவுக்கூறுகள் மினுங்குவது அது ஒரே சமயத்தில் பல்வேறு முனைகளையும் படைப்பின் தளத்தில் வைத்து தீண்டும் விஷேஷ மொழியால் சாத்தியமாகிறது. இந்த மொழியை கோட்பாட்டு ரீதியில் உருவாக்கிவிட முடியாது . வாழ்வனுபவங்களை "நான்"ஆக்கும் முயற்சி இது.
3
"இதுவரை உலகத்தில் நடந்த எந்த யுத்தத்தைப் பற்றிய வரலாறும் உண்மையாக,நடந்தது நடந்தபடியே எழுதப்பட்டதில்லை . அந்தப் பொதுவிதிக்கு இந்த யுத்தமும் விலக்கானதில்லை ."என்கிற யுத்தத்தை குறித்த சீனாவின் பாக்ஸர் யுத்த நிருபர் ஒருவரின் வாக்கியம் BOX பெட்டி கதைப் புத்தகம் நாவலில் உபபிரதி X அத்தியாயத்தில் வருகிறது.பொதுவாகவே மனித மனதின் விருப்பங்கள் உண்மைகளை தங்களின் அகஇடுக்கில் ஒளித்து வைக்கும் வல்லமை படைத்தவை.விருப்பங்களில் இருந்து உண்மைகளை பிய்த்து எடுப்பது என்பது படைப்பின் பிரதான விதி.படைப்புகள் விருப்பங்களில் இருந்து விலகுவது இந்த பண்பினால்தான்.விருப்பங்களின் உள்ளே பல மாயசொரூபங்கள் இருக்கின்றன.அவற்றை படைப்பு கண்டடைய விளைகிறது.மனித மனம் தனது விருப்புகளை உண்மைபோல முன்வைக்க விசித்திரத்தின் எந்த எல்லைவரைக்கும் போகுமோ அந்த எல்லைவரைக்கும் படைப்பும் செல்ல வேண்டியிருக்கிறது.விருப்பம் யுத்தமாகவோ,குரூரமாகவோ இருக்க இயலுமா ? என்றால் இருக்கிறது என்பதே ஷோபாவின் கண்டுபிடிப்பு.அது ஒரு புனித உடல் கொண்டு நடிக்கிறது என்பதை அவிழ்க்க அவர் BOX பெட்டி கதைப் புத்தகம் நாவலில் முயல்கிறார்.
BOX பெட்டி கதைப் புத்தகம் நாவலின் கருமையத்தினுள் நுழைந்து சாரத்தினைக் கண்டடைய இந்த நாவலில் நான்கு வகையான திறப்புகள் உள்ளன.நாவலின் தொடக்கத்திலேயே வருகிற பெட்டி பற்றிய சித்திரம் ஒன்று இவ்வாறு வருகிறது.முதல் வகை இது.

"வெளியில் பெருமழை பெய்யத் தொடங்கியது .நிர்வாண இளைஞர்களின் உடல்கள் கூதலால் நடுங்கி கொண்டிருந்தன.பெட்டிக்குள்ளிருந்த ஒரு கரிய இடதுபாதத்தின் விரல்கள் குளிரேறிக் குறண்டிப்போக அந்தப் பாதம் விரல்களை சரியாகத் தரையில் ஊன்றி வைக்க நடுக்கத்துடன் முயற்சித்துக் கொண்டிருந்த போது வலது பாதம் தன்னிச்சையாக சுண்ணாம்புக் கோட்டில் ஏறியது.அந்தப் பாதத்தின் அய்ந்து விரல்கள் மீதும் நீள்கத்தி "விசுக்"என்ற சத்தத்தோடு இறங்கியது.அய்ந்து விரல்களும் அந்த அறையில் திசைக்கொன்றாகச் சிதறின.பெட்டிக்குள் நின்றிருந்த மற்றவன் தனது பாதங்களை ஒன்றின் மீது ஒன்றாக வைத்துக் கொண்டான்.வெட்டுப்பட்டவன் சரிந்து பெட்டிக்கு வெளியே விழுந்தபோது அவனது தலையிலும் தொழிலும் மார்பிலும் வயிற்றிலும் ஆணுடம்பிலும் இரும்புச் சங்கிலிகள் வீசப்பட்டன.இரத்தம் இளஞசூட்டுடன் தரையில் பீச்சியடிக்க வெட்டுப்பட்டவன் "அம்மா"என ஒரு காட்டு விலங்கு போல ஊளை எழுப்பினான்.பின்பு பற்களைக் கடித்தபடியே கைகளைத் தரையில் ஊன்றி மெதுவாக எழுந்து மறுபடியும் பெட்டிக்குள் ஆடாமல் அசையாமல் நிற்கலானான்."
பெட்டி பற்றிய ஷோபாவின் இந்த உருவகம் இந்த நாவலில் தொடர்ந்து பலரூபங்களில் வந்து கொண்டே இருக்கிறது. பெட்டிபற்றிய ஷோபா உருவாக்கும் இந்த உருவகத்தில் வழக்கம் போலவே ஷோபா தனது தரப்பு உணர்ச்சிகளை முற்றிலுமாக நீக்கம் செய்து விடுகிறார்.உணர்ச்சிகளை தன் நீக்கம் செய்யும் இந்த பண்பு ஷோபாவின் முக்கிய குணம். பெட்டி என்னும் உருவகத்தில் படைப்பின் அழுத்தத்தை சாறு ஏற்றும் நிறைய உரையாடல்கள் , வாக்கியங்கள் இந்த நாவலில் இடம்பெற்றுள்ளன.
"கார்த்திகைக்கு இயக்கங்களுடன் ஏதாவது தொடர்பிருக்கிறதா என விசாரணை அதிகாரி என்னைக் கேட்ட போது :இந்த காலத்தில் யாரோடு யாருக்கு வேண்டுமானாலும் தொடர்புகள் இருக்கக் கூடும் என நான் சொல்லுமளவிற்கு எனது ஆன்மா முற்றிலும் அப்போது இருளடைந்திருந்தது."
"BOX அடிச்சிற்றாங்கள் !
விடாத குடு ஆர்.பி.ஜி.அடி !
குளத்திற்கு அந்த பக்கமும் நிக்கறாங்களாடா !
அவளுக்கு காயம் ஆளைத் தூக்கு !
பள்ளிக்கூடத்துக்கு கிபீர் குத்திட்டன்...
மல்ரி பரல் அடிக்கிறான் ...அங்க அடி !
புலிகளின் தாயகம் தமிழீழத் தாயகம் !
பெரிய பள்ளன் குளத்துக் குழந்தைகளின் பாவனை விளையாட்டாக விவரிக்கப்படும் பகுதி "இருபத்து நான்காம் கதை "அத்தியாயம் யுத்தத்திற்கும் குழந்தை விளையாட்டுகளுக்கும் இடையிலான திரையை நாவலில் கழற்றி எறிகிறது.மொத்தமாக யுத்தம் குழந்தை விளையாட்டாக உருமாறும் பகுதி இது.
இருபத்தைந்தாம் கதை என்னும் அத்தியாயம் யுத்தத்தின் உருவகமாக மாற்றமடைகிறது.
"கிராம மக்கள் இப்போது இரண்டு பகுதிகளாகப் பிரிந்து விட்டார்கள் . முதற்பகுதியில் இளைஞர்கள் மட்டுமே இருந்தார்கள் .அடுத்த பகுதியில் குழந்தைகள் ,சிறுவர்கள்,முதியவர்களிருந்தார்கள் . இளைஞர்கள் அந்த கிராமத்தின் நான்கு பக்கங்களிலும் வரிசையாக நின்று பெட்டி அடித்தார்கள் .....ராணுவத்தினர் கூச்சலிட்டபடியே உள்நோக்கி நகர்ந்து பெட்டியை சுருக்கிக் கொண்டே வந்தார்கள்."
"ராணுவத்தின் அய்ந்து படையணிகள் எங்களிற்கு எதிராகப் போரிட்டுக் கொண்டிருந்தன.நாங்களும் மூர்க்கத்துடன்தான் போரிட்டோம் .காயமடைந்த போராளிகள் களப்பு வழியாக வெளியே அனுப்பப்பட்டு அதே வழியாக எங்களுக்கு உதவிகளும் உணவும் வந்து கொண்டிருந்தன.அடுத்து வந்த இரவில் அந்தக் களப்பு வழியை ராணுவத்தினர் அடைத்து விட்டார்கள்.நன்கு திட்டமிட்டு நகர்ந்த ராணுவத்தினர் எங்களை நான்கு புறமும் சூழ்ந்து BOX அடித்து விட்டார்கள்.பல அடுக்குகளாக அடிக்கப்பட்ட BOX அது."
பெட்டி பற்றி இவ்வாறாக வருகிற நிறைய விவரணைகள் உள்ளன.இந்த பெட்டி என்பது வதையை அல்லது யுத்தத்தின் வடிவத்தை பற்றிய குறிப்பானாக உள்ளது.நவீன அரசாங்கங்களாக இருப்பினும் சரி ,நிலவுடமை மனோபாவ விடுதலைக் குழுக்களாக இருக்கும் போதும் சரி .தேசிய இன ராணுவமாக இருக்கும் போதும் சரி வதையின் வடிவம் ஒரேவிதமாகவே அமைவதைக் காண முடிகிறது.வதையின் வடிவம் இந்த பெட்டியாக இருக்கிறது.பொதுமனிதன் இந்த பெட்டி முன் நிற்கும் அபத்தம் இந்த நாவல் முழுவதிலும் உண்டு.அது இந்த நாவல் உருவாக்கும் பெருந்துயரங்களுள் ஒன்று .சாதாரணமான மனிதன் பல சமயங்களில் இந்த பெட்டியின் முன்பாக நிறுத்தப்படுகிறான்.இந்த அபத்தம் எங்கு நிகழ்கிறது ஏன் நிகழ்கிறது என்பது விளங்கவில்லை.அவனுக்கு நடப்பவற்றில் ஒரு பங்கும் இல்லை.ஆனால் அபத்தம் அவனை எட்டு திசைகளில் சூழ்ந்து நிற்பதை நாவல் கண்முன் காட்டிவிடுகிறது.சந்தேகங்களுக்கு அவன் பலியாகிக் கொண்டே இருக்கிறான்.அவன் தரப்பிற்கு அங்கு இருப்பென்பதே இல்லை.
உபபிரதி IX யில் வரும் விவரணை இது . சந்தேகத்திற்குள்ளாகும் சிங்களவன் படுகொலை செய்யப்படுகிறான் .அதனை மரணதண்டனையாகக் கருதும் சாதாரணம் நடைபெறும் விவரணை இது.
"அன்றிரவு முகாம் அமைந்திருந்த வீட்டு வரவேற்பறைக்கு ,சிறை வைக்கப்பட்டிருந்த கோழிக்குஞ்சு வியாபாரிகளின் ஒருவர் அழைத்து வரப்பட்டார்.அவரிடம் நேதாஜி விசாரணை நடத்தத் தொடங்கினான்.அந்த கோழிக்குஞ்சு வியாபாரியைப் போட்டு நேதாஜி அடித்து நொறுக்கினான்.அவன் அடித்துக் களைத்தபோது தன்னுடைய உதவியாளனை அடிக்குமாறு உத்தரவிட்டான்.உதவியாளன் சரியான வாடல்.நுளம்பு மாதிரி இருப்பான்.அவன் அப்படியே பறந்து வந்து
'ஏனடா சிங்களவா தமிழீழத்துக்குள்ள வந்தனீ ? 'என்று கேட்டுக்கொண்டே கோழிக்குஞ்சு வியாபாரியின் தலையைப் பிடித்துச் சுவற்றோடு மோதினான்.ஒரே அடியில் தலை இரண்டாகப் பிளந்து சுவரில் இரத்தம் பீச்சியடித்தது ,அடுத்த நிமிடத்தில் கோழிக்குஞ்சு வியாபாரி இறந்து விட்டார்.
காலையில் கார்த்திகைக்குக் கடுமையான காய்ச்சல் அடிக்கத் தொடங்கி விட்டது .'ஆஸ்பத்திரிக்கு போறியா?' என நேதாஜி கேட்டான்.கார்த்திகை பாயில் குந்தியவாறே தனது கைகளைக் காச்சலால் நடுங்கும் தனது உடலிற்குக் குறுக்காகக் கட்டியபடி
நேதாஜியிடம் கேட்டான் :
நீங்க செய்யுறது தலைமைக்குத் தெரியுமா?
ராத்திரி நடந்தது கொலை ...
அது மரண தண்டனை ....
நிலவுடமை மனோபாவக் குற்றக்குழுக்கள் ஷோபாவின் படைப்புகளில் நிறைய வருகிறார்கள்.அவர்கள் தங்கள் தார்மீகத்திற்கு புனித பாவனை மேற்கொள்கிறார்கள்.இலங்கையில் இருதரப்புகளின் யுத்தமும் நவீன அரசாங்கங்களை சென்றடைவதற்கிடைப்பட்ட காலத்தின் கலவர மனநிலையை புனித லட்சியங்களின் உள்ளே மறைத்துக் கொள்கின்றன என்கிற சித்திரமே ஷோபாவின் படைப்புகளில் இருந்து வந்தடைகிறது.யுத்தத்தைப் பற்றிய புனிதக்கற்பனைகளை உடைத்து நொறுக்குபவையாக நிலவுடமை மனோபாவ குற்றக்குழுக்களின் ஆதிக்கம் அமைப்புகளின் வன்முறைக்கு நிகராக ஷோபாவில் படைப்புகளில் இடம் பெறுகிறது .குற்றக்குழுக்களின் முன்பாக ,முழுமையாக மனிதன் சிறைப்பட்டிருக்கும் தோற்றம் இது.இதுபோல விசாரணையின் போது மாடிப்படிகளில் இருந்து கீழ் நோக்கியும் ,மேல் நோக்கியும் முகமும் தலையும் சிதையும் அமைப்பின் வதை ,அமைப்பின் வன்முறையை பட்டவர்த்தனமாக்குகிறது.
4
பல்வேறு வகையான பெண்கள் இடம்பெற்றுள்ள நாவல் இது .இந்த பெண்கள் மறைமுகமாக அரசின் ,அமைப்பின்,விடுதலைக் குழுக்களின் ; அவற்றின் பிரதான மனோபாவத்தின் நுண்ணிய வகைமாதிரிகளைக் கொண்டவர்களாக ஏதோவொரு விதத்தில் இருக்கிறார்கள்.அமைப்பின் ,அரசின்,விடுதலையின் மாதிரிஅகமாக இவர்கள் வெளிப்படுகிறார்கள்.நிலவுடைமைக்கால குற்றக்குழுக்களுக்கு இசைவான மனம் கொண்ட பெண்கள் இவர்கள்.அமைப்பிலும் ,அரசிலும் ,விடுதலைக் குழுக்களிலும் பெண்களின் பாலியல் பிரதான பங்குவகிப்பதை நாவலின் பல பகுதிகள் புகைமூட்டமாக சித்தரிக்கின்றன.நிலவுடமை கால பெண்களின் மனோபாவம் நவீனமடைவதற்கிடைப்பட்ட இடத்தில் கொண்டு இந்த நாவலில் நிலை நிறுத்தப்படுகிறார்கள் . நிலவுடைமைக்கால குற்றமனோபாவத்தைப்பற்றி பேசும்போது நவீன அரசாங்கங்களின் தண்டனை அமைப்புகளிலும் ,விசாரணை அமைப்புகளிலும்,குற்றக்குழுக்களிலும்,நிலவுடமை மனோபாவக் குற்றக்குழுக்களை உள்ளடக்கமாகக் கொண்ட விடுதலைக்குழுக்களிலும் அவை இன்றும் உலகளாவிய அளவில் பங்கு வகிப்பதைக் கணக்கில் கொண்டே அணுகவேண்டும்.
பாலியல் ,அரசு,வதை,தண்டனை முறைகள் பற்றியும் இவற்றில் ஒன்றிற்கு மற்றொன்றில் இருக்கும் தொடர்பு பற்றியும் தீவிரமான உரையாடல்களுக்கு விவாதங்களுக்கு இடமளிக்கும் நாவல் இது.அதற்கான தன்னிச்சையான பிரதியாகவும் இந்த நாவல் விளங்குவது இந்த நாவலின் தனிச்சிறப்புகளில் ஒன்று. அதற்கு தனித்த ஒரு வாசிப்பும் ,கண்டுபிடித்தலும் அவசியம்.நிலவுடைமைக்கால குற்றக்குழுக்களின் நீட்சியாக அரசு அமைப்புகளின் பாலியல் செயற்பாடுகளைக் குறிப்புறுத்தும் நாவலும் ஆகிறது BOX.
"அமையாள் கிழவி அப்படியே ஒருகையால் தனது நெற்றியைப் பொத்தியவாறும் மறுகையால் தனது நிர்வாணத்தைப் பொத்தியவாறும் சரிந்து நிலத்தில் விழுந்தார்.எல்லாப் பெண்களுமாகச் சேர்ந்து அமையாள் கிழவியைக் குளத்து நீருக்குள் தூக்கிப் போட்டார்கள்.அமையாள் கிழவியின் சொருகிக் கிடந்த கண்களிற்குள் வெட்கம் உறைந்திருந்தது."அமையாள் கிழவி ஒரு உருவகமாக இந்த நாவலில் இடம் பெறுபவர்.
"இடம் தெரியவில்லை .நேரம் தெரியவில்லை.நாட்கள் தெரியவில்லை.அந்த அறைக்குள் ஏழு பெண்கள் முழுநேரமும் நிர்வாணமாக அடைக்கப்பட்டிருந்தோம் .எங்களது கைகளிலும் கால்களிலும் விலங்குகள் பூட்டப்பட்டிருந்தன.ராணுவ அதிகாரிகள் எங்களை வன்புணர்ச்சி செய்தபோது கால்களிலிருந்த விலங்குகள் மட்டுமே விலக்கப்பட்டன .கைகளிலிருந்த விலங்குகள் அப்படியேதானிருந்தன.
ஒவ்வொருமுறை நான் வன்புணரப்பட்டபோதும் ஓர் ஏளனப் பார்வையுடன் நான் அதை எதிர்கொண்டேன் .அவர்கள் எனது உடலிற்குள் நுழைந்தபோது எனது ஆன்மா என்னிலிருந்து வெளியேறிப் பரிசுத்தமாகயிருந்தது .ஒவ்வொரு வன்புணர்வு முடிந்ததன் பினாகவும் மறுபடியும் ஆன்மா எனக்குள் புகுந்தபோது நான் நிம்மதியடைந்தேன்."
அமிதாகலாவின் உரைமொழிப்பதிவு இது.
இது இந்த விவரணைக்காக மட்டுமே இந்த நாவலில் இடம் பெறவில்லை.யுத்தத்தின் புதிரை அவிழ்க்கும் பொறியொன்று இந்த சித்திரத்தில் உள்ளது.பாலியல் விடுப்பில் உள்ள இந்த புனிதமேற்றலுக்கும் யுத்தத்தின் புனிதத்தன்மைக்கும் இடையில் ஒரு பொருத்தப்பாடும் கலவியும் இருக்கிறது.பாலியல் அத்துமீறலைகள் அவசியமான யுத்தத்தின் பண்டமாக நாவலில் விரிந்து கிடக்கிறது.யுத்தத்தின் பாலியல் செயல்பாடுகள் நாவலில் முன்வைக்கப்படுகின்றன.யுத்தத்திற்கும் பாலியல் அத்துமீறல்களுக்கும் இடையிலான இணைப்பைப் பற்றிய பொது அறிதல்முறைகள் போதாமையில் இருப்பதை இந்த நாவலில் விளங்க முடிகிறது.அவை வழக்கமான தனது தட்டைத் தன்மையிலிருந்து விலகி ஷோபாவின் இந்த நாவலில் புதிய ஒரு கண்ணோட்டத்தை நோக்கி நகர்கின்றன.
BOX பெட்டி கதைப்புத்தகம் நாவலில் பாலியல் விடுதி பற்றிய சித்திரம் ஒன்று வருகிறது .அது புனைவு என்றே இந்த நாவலும் அதனை வாசகனுக்குச் சொல்கிறது .அனால் இந்த நாவலின் முக்கிய சரடு உருக்கொள்ளுகிற மையம் கொள்ளும் சித்திரம் இது.பொதுமனதின் மீது அதிர்ச்சியை ஏற்படுத்துவதல்ல இதன் நோக்கம்.அகத்திற்குள் ஒதுங்கியிருக்கும் பேய்களை அறிதலின் முன்பாகக் கோருகின்ற ஈவிரக்கமற்ற இடம் இது.யுத்தத்தை விடுதலை செய்யும் அறிதலை ஏற்படுத்தும் படைப்பின் கண்டுபிடித்தலுக்கு ஈவிரக்கமற்ற மனதின் பேயைக் காட்டுவது அவசியமாக இருக்கிறது என்பதே கசக்கும் உண்மை.படைப்பை ஈவிரக்கத்துடன் இருக்கும்படி கோர எந்த விஞ்ஞானத்திற்கும் சரி,புனித நெறிகளுக்கும் சரி எந்த அருகதையும் கிடையாது.எப்படியேனும் மறைபொருளை வெளிகொண்டுவருதலே சிறந்த படைப்புகளின் வேலை.
"துரை ! நாங்கள் போகவிருக்கும் பாலியல் விடுதி மிக மிக இரகசியமானதும் பாதுக்காப்பு அதிகமானதுமான விடுதியாகும்.உள்ளூர் செல்வந்தர்களிற்கு மட்டுமல்லாமல் மேற்குலக ஆண்களிற்கும் இந்த விடுதியே முதலாவது தேர்வாகயிருக்கிறது.இந்த விடுதியில் இருக்கும் அனைத்துப் பெண்களும் சிறுமிகளும் தமிழ் ராணுவமான புலிகள் இயக்கத்திலிருந்து முக்கியமான தளபதிகளும் போராளிகளும்.
இந்தச் சரக்குகள் வீரமும் தன்னகங்காரமும் உடலுறுதியும் மிக்கவர்கள்.அப்படியான பெண்களை உங்களுக்கு கீழ் மல்லாத்துவதும் அவர்களது குதங்களிற்குள் உங்களது விறைத்த குறியைச் செலுத்துவதும் அகங்காரம் இருந்த அந்த வாய்களிற்குள் உங்களது விந்தைப் பீச்சிவிடுவதும் உண்மையிலேயே கிளர்ச்சியானது துரை.அந்த அடிமைப் புலிகள் உங்களை முழுமையான ஆண்மகனாக உணர வைப்பார்கள்."
5
யுத்தம் உடலின் மீது புனிதத்திரைகளால் போர்த்தப்பட்டிருப்பதை பற்றி பேசுகிற மிக முக்கியமான பிரதி ஷோபாசக்தியின் BOX பெட்டி கதைப்புத்தகம் நாவல்.யுத்தம் பற்றிய பாரம்பரியமான புனிதப்பார்வைகளில் அது பெருத்த இடைஞ்சலை , இடைவெளியை இந்த நாவல் ஏற்படுத்துகிறது.இந்த நாவலில் வாசிப்பிற்கான பலவகையான சாத்தியங்கள் உள்ளன.எனது வாசிப்பு என்பது அதில் ஒரு சிறிய பகுதி மட்டுமே .பேசுவதற்கும் விவாதிப்பதற்கும் ,நமது மனப்பரப்பில் புதிய ஒரு ஒளிக்கீற்றை தீபம்போலேற்றுகிறது இந்த BOX கதைப்புத்தகம்.
கார்த்திகை,பெரிய பள்ளன் குளம்,அமையாள் கிழவி ஆகியோர் மட்டுமின்றி பலவிஷயங்கள் இந்த நாவலில் குறியீட்டுத் தன்மை பெறுகின்றன.இவை வலிந்து பெறப்படும் குறியீட்டுத் தன்மைகளாக அன்றி சிறப்பு பெறுபவை.இவற்றிற்கென ஒரு உள்ளூர் வரலாறு நிச்சயமாக இருக்கும்.அவை புனைவுரு கொள்ளும்போது சாரங்களே எஞ்சுகின்றன.நாவல் ஏற்படுத்துகிற ஆன்மீக சாரங்கள்.அதுவே இந்த நாவலின் கதி.மனிதனின் ஆன்மீகத்திற்குப் பொறுப்பேற்கும் நாவல் இது. உலக சமூகத்தின் முன்பாகவும் ,உலகளாவிய யுத்தங்களின் முன்பாகவும் தமிழ்ச் சமூகத்திலிருந்து பார்வைகளை தரிசனங்களை முன்வைத்திருக்கும் முக்கியமான நாவல் BOX . உலகத்தின் உன்னத நாவல்கள் பலவற்றிற்கு இணையானது.ஆனால் இந்த உன்னதம் அமர்ந்திருக்கும் இடமோ ஆழ்ந்த துயரத்தால் நிரம்பியிருக்கிறது.
பதிமூன்றாம் கதை
----------------------------
"பெரிய பள்ளன் குளத்துக் கிராமத்தின் பெண்கள் ,ஆண்கள் ,குழந்தைகளிற்குள் முக்கால்வாசிப் பேர்களும் தங்களது உடலில் ஏதாவது அவயங்களை இழந்திருந்தார்கள்.கையில்லாதவர்கள்,கால்களிலாதவர்கள்,கண்களை இழந்திருந்தவர்கள்,உடலிலே அறவே ஆறாத பெரும் புண்களைக் கொண்டிருந்தவர்கள் ,உடலிலிருந்து தொடர்ச்சியாக செம்மஞ்சள் நிறத்தில் சீழ் வடிந்து கொண்டே இருப்பவர்கள்,இரவுகளில் கனவுகளில் வீறிட்டு அலறுபவர்கள்,மன நோயாளிகள்,அமையாள் கிழவியைப் போல ஓயாமல் அழுது கொண்டிருப்பவர்கள் போன்றவர்களது கிராமமாக அது இருந்தது ."
இந்த குறியீட்டுக் கிராமத்தின் மீது ஷோபாசக்தி நகர்த்திக் கொண்டேயிருக்கும் நிலாவெளிச்சமாக இருக்கிறது இந்த நாவல்.பெருங்கலைஞனின் கண்களே இந்த துயரம் மிக்க நகரும் நிலவு. ....
BOX கதைப் புத்தகம்
ஷோபாசக்தி
முதற்பதிப்பு : ஜூலை 2015
வெளியீடு :கறுப்புப் பிரதிகள்
பி 55 ,பப்பு மஸ்தான் தர்கா,லாயிட்ஸ் சாலை,
சென்னை - 600 005 பேச - 9444272500
மின்னஞ்சல் : Karuppuprathigal @gmail .com
விலை ரூ 200 /-
கல்குதிரை
ஆசிரியர் - கோணங்கி
6/1700 ,இந்திரா நகர் ,கோவில்பட்டி - 628502
மின்னஞ்சல் - kalkuthirai @gmail .com
அலைபேசி - 9952546806
விலை - ரூ 145 + 145

அப்பாவாக மாறுதல்

அப்பாவாக மாறுதல்

வயதாக வயதாக என்னவாக மாறுகிறோம் என்பதை பொறுத்தே நாம் யார் என்பதும் விளங்குகிறது.உண்மையின் படிமமாக.  சிறுவயதில் பேசிய பல புரட்சிகள் அப்பாவில்  வந்து முற்றுரு பெறுகிறது.அப்பா என்பவர் நடைமுறை என்பதைக் கற்றுணர்த்துகிறது காலம் .அப்பாவைத் தாண்டும் சாத்தியம் உண்டா?

சிறுவயதில் தனது அப்பாவைக் கடுமையாக வெறுத்த ஒரு நண்பரிடம் அப்பா தோன்றுவதைக் கண்டபோது ஆச்சரியப்பட்டேன்.கஷ்டமாகவும் இருந்தது. அவ்வளவிற்கு அழகிய குணங்கள் நிரம்பியவாராக இருந்து  பின்னர் அப்பாவாகக் காணுதல் என்பது கடினம் .அப்பாவிடம் புகாராக அவர் எழுப்பிய அத்தனை குணங்களும் ஒவ்வொன்றாக அவர் மீது வந்து வேகமாக ஒட்டிக் கொண்டிருப்பதைப் பார்த்தேன்.இப்படியே போனால் அவர் விரைவிலேயே தாத்தாவாகிப் பின் பூட்டாவாகி விடுவாரோ என்று தோன்றுமளவிற்கு வேகம். 

அப்பாவை எதிர்ப்பதற்காகத் தான் புரட்சிப்படைகளில்  இருந்தார். சமூகப் போராட்டங்களில் பங்கெடுத்தார்.மார்க்சியம் படித்தார்.பக்தீன் வரையில் அறிவார். எல்லாம் ஆனார்.இப்போது அப்பாவின் உரு வெளிப்பட அப்பா வெளிச்சத்தில் இருக்கிறார்.அவரைக் காணவில்லை.எல்லாம் உரிந்து உரிந்து அப்பாவாக கடைசியில் மாறிவிட்டார்.கார்ல்மார்க்சும் ஒரு அப்பாதான் என்பதனை அவர் அறிவதற்கு பெண்குழந்தைகளைக் கல்யாணம் செய்து கொடுக்கும் அளவிற்கு வயதும் ,காலமும் அவசியப்பட்டிருக்கிறது.அப்பா என்பது ஒரு நபர் இல்லை போலும்.அப்பாவும் கூட அப்பாவை  வெறுத்தவராக இருந்திருக்கலாமோ? .அப்பாவை நேசித்துக் கொண்டே அப்பாவாக உறுமாறாமல் இருக்கமுடியும் என்பது வெற்றுக் கனவா?.அப்பாவை முழுமையான தீமை என்பதற்கில்லை.அவர் வாழ்க்கையை எதிர்கொண்டிருக்கும் விதத்தின் பெயரே நமக்கு அப்பவாகத்  தோற்றம் காட்டுகிறது.அவர் குறையொன்றுமில்லை என்றாலும் அவரிலிருந்து விலகவேண்டும்.இல்லையெனில் கற்ற பாடங்கள் நம்மிடம் வெறுமனே தோற்றப்பிழையாகி விடும்  

அப்பாவாக மாறுவதென்றால் சிலர் வயோதிகம் நெருங்க நெருங்க அப்பாவின் உருவத்தை அப்படியே உரித்து வைத்தது போல அடைவார்கள்.அப்பாவின் உருவ அழகு என்னவாக இருந்தது என்பதைக் காண அவர்களுடைய சிறுவயது புகைப்படங்களை பார்த்தாலே போதுமானது.அதுவல்ல.அப்பாவாக மாறுதல் என்பது வேறு தளம்.அப்பாவின் குணாதிசயங்களை சென்று சேர்தல்.நமது கற்பனைகள் அகன்று   வாழ்வின் நடைமுறையில் கால்கள்   பாவும் போது அப்பா வந்து உதிக்கிறார்.

எனக்கும் அப்பாவிற்குமான பிரச்சனைகள் வேறு திறத்திலானவை.அப்பாவிற்கு குழந்தைகளில் என்மீதே விருப்பம் அதிகம் . அதன்  காரணமாகவே என்னைப்பற்றிய பாதுகாப்பின்மையும் அதிகம்.விருப்பத்தால் விலகியிருத்தல்தான் இருவருக்கும் வாய்த்தது. அப்பாவை கொலை செய்ய நினைத்திருக்கிறேன்.ஆனால் அவர் பேரில் அன்பு அதிகம்.அவரை வாழ்க்கை மீண்டும் மீண்டும் எதிர்க்க வைக்கிறதே என்பதே எனது பிரச்சனை.அவர் அவமானத்தால் நின்று தலைகுனியும் இடங்களில் என்னால் ஏதும் செய்யா இயலாமற் போகும் கொடுமையை வாழ்க்கை கொண்டிருக்கிறது.நாம் தடுக்க முற்பட்டால் நியாயம் தவறிப்  போகும் இடத்தில் அவர் காலத்தில் தன்னை நிலைநிறுத்தி வைத்திருக்கிறார்.அப்படி நேர்வது என்பது மகா அவஸ்தை.   மிகுந்த அன்பிற்குரிய ஒருவரை தொடர்ந்து எதிர்த்தே ஆகவேண்டிய வாழ்க்கைக்கு தள்ளப்பட்டிருந்தால் நான் என்ன சொல்கிறேன் என்பது புரிய உங்களுக்குச் சுலபம்.அப்பா சில நம்பிக்கைகளைக் கொண்டிருந்தார்.அதன்படி வாழவில்லையெனில் வாழ முடியாது என்பதே அவரது பாடம்.அவர் வாழ்ந்த விதத்திலிருந்து அவர் கற்றுக் கொடுக்கும் பாடமாக அது இருந்த போதிலும் கூட அதில் பொருத்திக் கொள்ளல் ஆகாது.ஆனால் அந்த கல்வி நல்லதுதான்.படித்துப் பின் தூரத்தே ஏறிய வேண்டிய  பாடத்தின் நற்பெயரே அப்பா என்பது. 

எப்படியிருப்பினும் முழுவதுமாக அப்பாவாக மாறுதல் என்பதுதான் உங்கள்  வயோதிகம்.நடைமுறைகள் தருகிற அழுத்தங்களிலிருந்து முன்னதுக்குள் தாவுதல் அது.அப்பாவைத் துண்டித்துக் கொண்டு வாழ்வை புதிய பாதையில் எதிர் கொள்வதே வாழ்க்கை.அவரது எச்சத்தை ஏற்றுக் கொள்கிற நிலை என்பது வெறும் பழக்கம்.அதற்கு வாழ வேண்டிய அவசியமில்லை.அதில் புதிய படைப்பூக்கம்   ஏதுமில்லை.குருவின் தலை கழன்று விழுகிற இடத்திலிருந்தே செயல் தொடங்குகிறது.அதற்கு கடுமையான வலிமை அவசியம்.

உடலிலிருந்து ஆயுதத்தைக் கழற்றுதல்

உடலிலிருந்து ஆயுதத்தைக் கழற்றுதல்
பத்தாண்டுகளுக்கு முன்புவரையில் கையில் எப்போதும் என்னிடம் கத்தி இருக்கும்.அது உடலின் எந்த பகுதியில் ஒளித்து வைக்கப்பட்டிருந்தாலும் நினைத்த மாத்திரத்தில் கையில் மினுங்கும் விதத்தில் வித்தை சிறுவயதில் களரியாகப் பாடம் பயின்றது.சிறுவயதில் படிக்கும் வித்தைகள் எல்லாம் பின்னர் கைவிட்டு விட்டாலும் கூட, சிறுவயதில் பயிற்சியாக ஒட்டிக் கொள்பவை உடலின் பழக்கமாக நீங்கள் எவ்வளவு உயரிய மயக்க மருந்துகள் உண்டாலும் பொறுக்காது எழும்பவே செய்யும் .எங்கள் ஊரைப் பொறுத்தவரையில் எதேச்சையாகக் கூட நாற்பதிற்கும் குறைவான வயது கொண்டவர்களிடம் மோதி பார்க்காத துணியலாம்.அறுபதுக்கும் மேற்பட்டவர்களிடம் துணியவே
கூடாது .அவர்களின் உடல் பழக்கத்தில் களரியும் வர்மமும் ஒட்டிக் கொண்டிருக்க வாய்ப்புண்டு.ஒருமுறை நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் தாக்க முயன்ற பொடியனை கூடுமானவரையில் வேண்டாம் என்று சொல்லி முடிவில் மென்னியைக் கழற்றிய பெரியவரின் வயது எழுபதுக்கும் மேலிருக்கும்.கண்ணால் கண்டவர்கள் விருதோட்டம் பிடித்தார்கள். பழைய
தலைமுறையினருக்கு இங்கே வித்தைகள்தான் பேஷன்.
கத்தியை எடுத்துச் செல்ல முடியாத இடங்களில் அது ஒரு திருக்கோட்டமாகவோ ,பிளேடாகவோ வைத்திருப்பேன்..திருக்கூட்டம் என்று ஸ்குருடிரைவரைத்தான் குறிப்பிடுகிறேன்.நண்பர்கள் சிலர் எனது பயணப்பைகளில் தற்செயலாகக் கண்டடைந்த ஆயுதங்கள் குறித்து கேள்விகள் கூட கேட்டிருக்கிறார்கள்.கிறுக்கு சிரசில் நின்றாட்டம் காட்டியபோது ,ஊருராய்ச் சுற்றியலைந்த காலங்களில் பிளேடுக்கு மாறினேன்.சில காலம் கத்தியின் பயன்பாட்டில் இருந்தது சிறிய ரைனால்ஸ் பேனா.ரைனால்ஸ் பேனாவை வைத்தே கூட கொலைமுயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறேன்.முடியும்.பல்குத்த உதவுவது போல.
ஆயுதங்களை நமது உடலின் பகுதிகளில் பதுக்குவது அல்லது தாக்கும் ஆயுதங்களை உடலின் ஒரு பகுதியாக்குவது ,தனது உடலை ஆயுதத்தின் முன்பாக நிறுத்துவதற்கு ஒப்பானதுதான்.உடலை மட்டுமல்ல நமது அகந்தையையும் கத்தி முனையில் நிப்பாட்டி வைத்திருப்பது.ஆயுதம் வைத்துக் கொள்வது பாதுகாப்பிற்கு என்று நாம் ஜோடித்துக் கொள்வது நமக்கு நாம் செய்தது கொள்ளும் மோசடி.ஒருபோதும் அது பாதுகாக்காது.சிக்கலாக்கிக் கொண்டேயிருக்கும்.புதிய புதிய சிக்கல்களைத் தோன்றத் செய்யும்.ஆயுதத்தை உடலாக்குவதன் மூலமாக முதலில் நாம் இழப்பது பாதுக்காப்பைத்தான்.ஏனெனில் ஆயுதங்களுக்கென்று சுயேட்சையான ஒரு வேலைத் திட்டம் இருக்கிறது.அதன் வேலைத் திட்டத்தில் சென்று மாட்டிக் கொள்ளக் கூடாது . ஆயுதங்களுக்கென்று விதியின் தனித்த ஒரு காமச் செய்லபாடொன்று இருக்கிறது.மேலாக ஒரு சிறப்பு மோப்ப சக்தியும் .ஆயுதங்களை எடுத்த பின்னர் அது எப்போதும் உங்கள் அகந்தையின் நுனியில் வந்து தெறிக்கப் பார்த்துக் கொண்டே இருக்கும்.
உங்களையும் எதிரிகளையும் தொடந்து கண்காணிக்கும்.எதிரியைக் காட்டிலும் தன்னைத் தானே அதிகம் கண்காணிக்கும்.சந்தேகத்தையும் ,பயத்தையும் தொடர்ந்து உருவாக்கி அது தன்னைப் போர்த்திக் கொள்ளும் .கத்தியில் போர்த்தப்படும் பண்புகள் அகத்தின் உள்ளிறைச்சியாக மாறிவிடும்.நான் கொண்டிருந்த கத்தியில் இந்த பண்புகள் படுத்துத் துயில்வதை விழித்துக் கண்டு பத்து வருடங்கள் ஆகின்றன.அதனை எப்போது எனது உடலுக்கப்பால் எடுத்து எறிந்தேனோ அதன் பிறகே காந்தியின் அருமை என்ன என்பது புரியத் தொடங்கியது.உடலிலிருந்து ஆயுதம் எப்போது கழன்று கீழே விழுகிறதோ அப்போதிலிருந்துதான் உடல் துலங்கும்.உடலென்பது இசைக்கோலம்,உடலென்பது அவதானிப்பின் பள்ளியறை என்பது தெளிவுபடும்.உடலென்பது பிரபஞ்சத்தை பார்க்கும் ,உணரும் வாய்ப்பை உங்களுக்குத் தருகிற ஏற்பாட்டைச் செய்கிற ஓரிடம்.ஆயுதத்தை விடுவது என்பது உடலிலிருந்தும் உணர்வில் இருந்தும் ஆயுதத்தைக் கைவிடுதலாக இருக்கவேண்டும்.அச்சத்திற்கும் ஆயுதத்திற்கும் இடையிலான தொடர்புகள் அப்போது விளங்கிவிடும் .
கத்தியென்றால் எல்லா கத்தியையும் அது குறிக்காது.ஒரு பனையேறி வைத்திருக்கும் பாளையரிவாள் எடுத்து ஒருவரின் தலையை சீவவேண்டும் என்கிற அவசியமெல்லாம் இல்லை.கழுத்தின் அருகில் கொண்டு சென்றாலே போதும் தலை கழன்று தரையில் விழும் .ஆனால் ஒரு பனையேறிக்கு ஒருபோதும் இந்த எதிர்சிந்தை கிடையாது.மரம்வெட்டி சதா கொண்டலையும் அரிவாளுக்கும் இந்த எதிர் சிந்தை இல்லை.
எனக்கு ஒரு நண்பர் உண்டு .உரையாடல்களில் ஒரு வார்த்தையைத் துவங்கவும் அந்த வார்த்தையை மடக்கி அந்த வார்த்தையிலிருந்தே எதிர்வினையைத் தொடக்கி விடுவார்.அது சுழன்று சுழன்று தானே படியும் புழுதி போலிருக்கும்.வாக்கியம் செல்லத் தொடங்கும் திசைக்கும் அவர் எதிர்வினைக்கும் ஒரு பொருத்தப்பாடுமே இராது.அவரது எதிர்வினைகள் தனக்குத் தானே எப்போதும் துள்ளிக் கொண்டிருப்பவை.நீங்கள் என்ன பேசப் போகிறீர்கள்,சொல்ல வரும் செய்தி என்ன ? எதுவும் அவருக்குத் தேவையில்லை.அவரிடம் ஆயுதமிருந்தால் அதனை அவர் எவ்வாறு கையாள்வார் என்று பலமுறை யோசித்திருக்கிறேன்.உங்கள் முனைப்பிலிருந்தே அவரது எதிர்வினைகள் வலை பின்னத் தொடங்கிவிடும்.அவர் எதிர்வினை புரியாமலிருக்க வேண்டுமெனில் உங்களிடம் முனைப்பேதும் தென்படாத தவநிலை வேண்டும்.சவங்களிடம் மட்டுமே அவரிடம் எதிர் வினையில்லை.
பிளேடு கையில் பதுங்கும் காலங்கள் தீவிரமானவை .விளிம்பு நிலையின் பள்ளத்தாக்கில் சரிந்து விழ வாழ்க்கைக் காத்திருக்கும் சந்தர்ப்பங்களில் அது கையை வந்தடைவது துரதிர்டமானது.தனதுடலை தானே கீறிக் கொண்டலைவதற்கும்,அது கைவசத்தில் இருப்பதற்கும் பெரிய வேறுபாடுகள் எதுவும் கிடையாது. முதலில் நீங்கள் எடுக்க தொடங்கிய மவுசான ,அழகிய பெண்தன்மை கொண்ட கத்தியிடமிருந்து சரிந்து சரிந்தும் கடைசியில் இந்த பிளேடுக்கு வந்து சேரலாம்.பிளேட்டில் தொடங்கி அழகிய பெண்தன்மைக்கு வந்து சேரும் பளிங்குப் பாதைகளும் உள்ளன. உடலாயுதத்தை விதி முடிவு செய்வதை பொறுத்தது அது.
இந்த பாதுகாப்பின்மை உள்ளில் ஊற்றூரும் கருமுளை எங்கிருக்கிறது ? பிறரது ஆசையும் காமமும் அக்கறையும் அற்று வளரும் குழந்தைகளே பெரும்பாலும் பாதுகாப்பின்மையின் பெரும்பள்ளத்தில் விழுகிறார்கள்.சிறுவயதில் எப்போதுமே எனக்கு என்னை எல்லோரும் அபாயத்தில் நிற்க வைத்து விட்டுச் சென்று விடுவார்கள் என்று தோன்றிக் கொண்டே இருக்கும்.நம்மைக் கைவிட்டு விடுவார்கள் என்று தோன்றும் .அம்மா சிறுவயதில் விடைபெற்றுக் கொண்டது மட்டுமே இதற்கு காரணமில்லை.பின்னர் என்னைப் பராமரித்தவர்கள் அத்தனை பேரிடமும் எனது சிறு பிராயம் கண்டுணர்ந்த அக்கறையின்மையும் ,ஆசையின்மையும் தோல்போல மேனியில் தடித்தது.ஆசையின்றி அக்கறையை செயற்கையாக்குபவர்களை அகமனம் உதைத்து வெளியேற்றியது.தன்னை எப்போதும் தான்தான் காப்பாற்றியாக வேண்டும் என்கிற சுய முனைப்பு .தற்காப்பின் கையில் வந்தடையும் தெய்வங்கள் நியமிக்கும் கத்தி.கத்தியை கையில் கொண்டு தருவது தெய்வங்கள்தான்.தெய்வங்கள் பாதுகாப்பின்மையை கொண்டு சேர்க்கும் குழந்தைகளே தலைமைப் பண்பிற்கும்,கண்டுபிடித்தலுக்கும் தகுதியாகிறார்கள்.ஆனால் கத்தியை கலையாகவோ,வேறு பெறுமதியாகவோ,இசைக் கோலமாகவோ உருமாற்றுவதில்தான் கீர்த்தியும் அடங்கியிருக்கிறது.புறக்கணிப்பில் மிளிரும் காந்தம் அதுவாக வேண்டும்.உடலாயுதம் இறக்கி வைக்கப்பட வேண்டும்.உடலிலிருந்து ஆயுதத்தை இறக்கி வைத்ததும் எதிரி பலகீனமடைந்து ஒரு கணத்தில் வயோதிகம் அடைவது கண்ணால் காணுமளவிற்குத் தெரியும் தெய்வங்களை விஞ்சும் சவால் கொண்ட வேலை இது.தெய்வத்தால் ஆகாதெனினும் என்பது போல , எனினும் கூட .

மேலாளர் வேலை

மேலாளர்  வேலை 

ஓட்டுப்புரை ரயில் நிலையத்தின்
மோட்டார் பம்பு அறையின் முன்பாக தெரிந்தோ
தெரியாமலோ
மாட்டிக் கொண்டு குதிரையின் மேலேறி
அமர்ந்திருக்கிறார்
அந்த சிமெண்ட் அய்யனார்

கீழிருக்க பயந்து மேலொடுங்கி இருப்பது போலே
குதிரையில் அவர் தோற்றம்
அவர் குளித்து பலகாலமிருக்கும்

உடனிருந்த ஒட்டுண்டி சாமிகள் தாங்கள்
அகன்று சென்ற தடயம்
விடாமல்
அகன்று விட்டார்கள்

அம்மையை மட்டும் பிரிவில் பறித்து
இடுப்பில் வைத்த வண்ணம்
குதிரையிலேறி அமர்ந்திருக்கிறார்
பதினெட்டுப்பட்டியை சுற்றி அரசாண்டு
காவல் காத்த அய்யனார்.
முதிய வேம்பின் பின்மதியம் துணை

கழுத்தைத் திருக்கி
மங்களூர் எக்ஸ்பிரஸ்  கிழக்கு நோக்கிச் செல்லும் போது
கிழக்கு நோக்கியும்
குருவாயூர் மேற்கில் நகரும் போது
மேற்கு நோக்கியும்
கடைசி பெட்டி வரையில் பார்த்துக் கொண்டிருக்கிறார்
ஏனென்பதெல்லாம் எனக்குத் தெரியாது.

உடல்வலிக்கு பாராசிட்டமால் மாத்திரையும்
இரண்டுநாள் தூக்கத்திற்கு தூக்கக் குளிகையும்
கொடுத்து விட்டு வந்தேன் .

தூக்கக் குளிகையை வைத்து
நானென்ன செய்ய ? எனக் கேட்டவரை
நீண்டகாலம் நானும் இதைத்தானே செய்து
கொண்டிருக்கிறேன் மனுஷா -
ஓய்வெடுத்தால் எல்லாம் சரியாகும் -
என ஓங்கித் திட்டினேன்.

அப்படியா தெய்வமே -
என என்னிடம்  சன்னமாகச் சொல்லிய
குதிரைவீரன் அய்யனாருக்கு
இப்போது ஆளில்லாக் கழிவறையின்
மேலாளர் வேலை.
சிலேட் - 15 
அக்டோபர் -2016
காலாண்டு இதழ்

பக்கம் 180
தனி இதழ் விலை . ரூ 100
ஆண்டு சந்தா ரூ 400
[ வெளிநாட்டு சந்தா வேறுபடும் ]


மோதல் கொலை போல இது ஒரு தற்கொலைக் கொலை ! ?

மோதல் கொலை போல இது ஒரு தற்கொலைக் கொலை !
ராம்குமார் தற்கொலை செய்து கொண்டதாக வரும் செய்தி பெரும் அதிர்ச்சியை தருகிறது.அரசியல் அதிகார அணுகுமுறைகள் கேவலமான நிலையை தமிழ்நாட்டில் அடைந்திருப்பதற்கு ராம்குமார் தற்கொலை ஒரு பெரிய சாட்சி.தமிழ்நாட்டில் ஆளத் தகுதி கொண்ட தலைவர்களே இல்லை என்பது காலம் செல்லச் செல்ல நிரூபணம் ஆகிக் கொண்டே வருகிறது.அதிகார அமைப்புகளை அரசாங்கத்தினர் அகந்தையின் கொடூர கரங்களால் வதம் செய்து வைத்திருக்கிறார்கள்.இதுபோன்ற நிகழ்வுகளுக்கு இந்த அரசாங்கம் முந்தைய அரசாங்கம் என்கிற பாகுபாடுகள் எல்லாம் இல்லை .அமைப்புகளின் மீதான ; அரசியல் சார்பு நிலைகளைத் தாண்டிய பரிசீலனையே தற்போதைய அவசியம். அரசு அமைப்புகளின் மலிவான ,மோசமான நடத்தைகளில் நாம் எல்லோருமே திறன்பட பழகிவிட்டோம் என்பதை உறுதிப்படுத்துகிற காரியம் இது.போலி வழக்குகள்,போலி மோதல் படுகொலைகள் இவற்றையெல்லாம் தாண்டி சிறையில் தற்கொலைக் கொலை என்னும் புதிய தொழில்நுட்பத்திற்கு நகர்ந்திருக்கிறோம்.
உண்மையாகவே அரசியலுக்கு அப்பாற்பட்ட இந்த தமிழ் சமூகத்தின் பெரியவர்கள் ,
சமூக நலம் விரும்பிகள் அரசியல் சார்பின்றி இத்தகைய அவலங்களை ; எதிர்காலத்திலும் அமைப்புகள் நிகழ்த்த இயலாத வண்ணம் ; தடுத்து நிறுத்த ஏதேனும் ஏற்பாடுகளை செய்வதற்கும் தேவைப்பட்டால் சில தியாகங்களையும் துணிவதற்கும் முன்வராவிட்டால் தமிழ் நாட்டின் அரசியல் அதிகாரமும் அமைப்பும் மிகவும் கீழான நிலைக்குச் சென்றுவிடும் என்பதில் சந்தேகமே இல்லை.தமிழ் நாட்டின் அரசியல் அதிகாரமும் , அமைப்பும் ஏதோ விபரீதமான கேவலங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்கள் , துணிகிறார்கள் என்பது அச்சத்தை உருவாக்குகிறது. இதுபோன்ற நிகழ்வுகள் தமிழ்நாட்டின் சுயமரியாதைக்கு இழுக்கு. அமைப்பின் வன்மம் இந்த தற்கொலைக் கொலை.வழக்குகளின் உண்மைத் தன்மையை எதிர்கொள்ள இயலாத இதுபோன்ற பயங்கரமான வழிமுறைகள் ஜனநாயகத்திற்கு பேராபத்து.
அந்த பையன் திருச்சியைத் தாண்டி செல்லும்போதே போலீசார் கொன்றுவிடுவார்களோ என்று பயந்ததின் உள்ளுணர்வு உண்மையென்றாகி விட்டது.இது தமிழ்நாட்டின் பரிதாபகரமானதொரு நிலை.நீதியை இடைநிறுத்ததில் தற்கொலைக் கொலை செய்வது என்பது கொடூரத்தின் உச்சம் . தமிழ்நாடு அரசாங்கத்திற்கு எனது கடுமையான கண்டனங்கள்.சிறைச் சாலைகள் அரசு பயங்கரவாதத்திற்கான கூடாரங்கள் இல்லை.
ராம்குமாரின் தந்தைக்கும் தாய்க்கும் சகோதரிக்கும் எனது ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலி
ராம்குமாரின் ஆன்மாவிற்கு என்னுடைய கவிதாஞ்சலி
#
"ரஸ்கோல்நிக்கொவ் மீண்டும் மீண்டும்
பராமரிப்பிற்கு வந்து செல்கிறார்
எவனோ ஒருவன் சுற்றி வளைத்து
கைது செய்யப்படும் போது
எவனோ ஒருவன் தூக்கிலிடப்படும் போது
எவனோ ஒருவன் தப்பி ஊர் தாண்டி ஊர்
துரத்தப்படும் போது
எவனோ ஒருவன் பரிபூரணக் கண்காணிப்பின் முன்பாக
நிற்க வைக்கப்படும் போது
வலிப்பு நோயின் கூர்மையான கொப்புளங்கள்
கொதிக்கத் தொடங்குகின்றன
மருந்து மாத்திரைகள் எடுத்து
எனதுடலில் பதுங்கி
மீண்டும் தஸ்தேயேவெஸ்கி
துயில் கொள்ளும் வரையில்"
[ராம்குமாரின் ஆன்மாவிற்கு சமர்ப்பணம் ]

அப்பச்சி காமராஜர் ...

அப்பச்சி காமராஜர் ... காமராஜ் பற்றி "நீயா நானா " விஜய் டிவி ஷோவில் பேசுவதற்காக ஆன்டனி ஒரு வாரம் முன்னதாக அழைத்தார்.நான் வர...