சாகித்ய அகாதமி சர்ச்சைகள் - லக்ஷ்மி மணிவண்ணன்

சாகித்ய அகாதமி சர்ச்சைகள்
ஒருபோதும் தீராத சர்ச்சைகளை தொடர்வதில் சாகித்ய அகாதமி முதலிடத்தைப் பெற்றுவிடும் என்றே தோன்றுகிறது.
தான் வாழும் காலத்தில் சாகித்ய அகாதமி சர்ச்சைகளில் தொடர்ந்து மோதிக் கொண்டிருந்தவர்களில் ஒருவர் சுந்தர ராமசாமி. அந்த அமைப்பின் மீது அவர் இரண்டு பராதுகளை மிகக் கடுமையாக முன்வைத்தார். ஒன்று, சாகித்ய அகாதமியின் விருதுகள் வழங்கப்படும் பின்னணியின் வெளிப்படைத் தன்மை குறித்தது; மற்றொன்று, இரண்டாம் தரமான எழுத்தாளர்களுக்கேனும் உரிய முறையில் அவ்விருது சென்றடைய வேண்டும் என்கிற அக்கறை குறித்தது. மோசமான படைப்புகளை விருதுகள் சென்றடைவது, இந்திய மற்றும் உலக அரங்கில் தமிழுக்கு தலைகுனிவை ஏற்படுத்தும் எனும் கருத்தை அவர் தொடர்ந்து முன்வைத்தார்.
படைப்பில் மோசம் என்பது அதன் தன்மை மற்றும் தீவிரம் சார்ந்ததேயன்றி ஒருபோதும் நல்லொழுக்கம் சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல. அதன் வெளிப்படைத்தன்மை திறந்திருக்க வேண்டும் என்கிற சுந்தர ராமசாமியின் கவலை சிறப்பிற்குரியதாகும். இன்றைய தேதி வரையில் அது திறக்கப்படவும் இல்லை. ஒரு மோசமான படைப்பைத் தேர்ந்தெடுக்கும் பின்னணி வெளிப்படையாகத் தெரியும் பட்சத்தில் தேர்ந்தெடுப்பவர்களின் முக, அக லெட்சணங்களையும் சேர்த்து நாம் கண்டுணர்ந்துவிட முடியும். முன்றாம் தரமான எழுத்தாளர்களுக்கு சாகித்ய அகாதமி விருதுகளும் பரிசுகளும் சென்றடையும் போது, தமிழ்நாட்டில் படைப்பாளிகள் சர்ச்சைகளில் ஈடுபடுவது ஒரு மரபு போலாகி வருகிறது. அவை குண மதிப்பில் சீர்கேடு அடைவதும் அப்போதுதான். இரண்டாம் தரமானவர்கள் அங்கீகாரம் பெறும்போது பெரிய அளவில் சலசலப்புகள் ஏற்படுவதில்லை. முதல் தரமானவர்களை ஒருபோதும் இவை நெருங்குவதே இல்லை. முதல் தரமானவர்கள் பேரில் இத்தகைய அமைப்புகள் கொண்டுள்ள அச்சம் நிரந்தரமானதாக உள்ளது.
பொதுவாகவே நோபல் பரிசு உட்பட .உலகளாவிய பல பரிசுகளும்கூட இன்று சர்ச்சைகளுக்கும் விமர்சனங்களுக்கும் உள்ளாக்கப்படுகின்றன. புக்கர் விருது பெற்ற அருந்ததி ராயைக் காட்டிலும் மிகச் சிறந்த எழுத்தாளர்கள், இந்தியா முழுவதிலுமுள்ள பிராந்திய மொழிகளில் இரண்டு தலை முறைகளாக வாழ்ந்து வருகிறார்கள். எனவே பரிசுகளை, விருதுகளை, அங்கீகாரங்களைப் பெறுவது மட்டும்தான் ஒரு கவிஞனுக்குரிய, எழுத்தாளனுக்குரிய தகுதிச் சான்றிதழ் என்று கருதுவதற்கில்லை. சார்த்தர் நோபல் பரிசையே நிராகரித்தார்.
இவையெல்லாம் ஒருபுறம் எப்போதுமே இருப்பவை என்றாலும்கூட, தற்போது சாகித்ய அகாதமி போன்ற நிறுவனங்கள் அடைந்திருப்பது சீரழிவுகளின் உச்சநிலை. அதில் அவை வெகுவேகமாய் வேறு இருக்கின்றன. இவற்றிற்கு வெகு அப்பால் இருப்பவர்களுக்கு மட்டுமே இவை புனிதம் பூசப்பட்ட தனது தோலை மினுமினுக்கி காட்டமுடியும். மற்றபடி உள் இறைச்சி அழுகி நாற்றமெடுக்கத் தொடங்கிவிட்டது .
பணம், புகழ், அதிகாரம் ஆகியவற்றை எவ்விதத் தகுதியுமின்றி பெற விளைபவர்களின் - கல்குவாரி, மணல் குவாரி மனோபாவத்துடன் அணுகுபவர்களின் - எண்ணிக்கை சமூகம், அரசியல், பண்பாடு என எல்லா தளங்களிலும் வேகம் பிடிக்கிறது.
பலகீனமான எழுத்தாளர்கள் இவ்வகைப் பரிசுகளைப் பெற்றே தீருவது என்பதில் லட்சிய உறுதி கொண்டிருக்கிறார்கள். இவற்றிக்காக அவர்கள் வாழ்நாள் முழுதும் பின்தொடரவும் உழைக்கவும் மரணிக்கவும் தயார். அதனால்தான் இப்போது மூன்றாம் தர எழுத்தாளனையும் கடந்து இவை சிலசமயங்களில் வழிப்போக்கர்களின் கரங்களையும் சென்றடைகின்றன. கலை இலக்கியத்திற்குத் தொடர்பற்றவர்களுக்கு, குறைந்தபட்ச வைராக்கியத்தையும் இழந்து விருதுகள், அங்கீகாரங்கள் போய்ச் சேருகின்றன. பொதுவாகவே எழுத்தாளர்களைக் காட்டிலும் அவர்களது பக்கத்து வீட்டுக்காரர்களே இந்த அமைப்புகளை அணுகுவதில் திறமை கொண்டிருகிறார்கள். பெறுமதிகளை அவர்கள் பெற்ற பிறகு சிலசமயம் படைப்பாளிகள், கலைஞர்கள் மீது கழிவிரக்கம் காட்டி, உங்களை இந்த அமைப்புகளிடம் அறிமுகப்படுத்தட்டுமா? எனக் கேட்கிறார்கள்! விஷயங்கள் அந்த நிலைக்கு உறங்குகின்றன.
சுந்தர ராமசாமி போன்றவர்கள் இவ்வகை அமைப்புகளின்மீது தாக்கத்தை ஏற்படுத்தி மேம்படுத்தி விடமுடியும் என நம்பியவர்கள். இன்றைய நிலவரமோ நம்புவதற்கும் வாய்ப்பற்ற தொலைவுக்கு சென்று கொண்டிருக்கிறது. அவசர சிகிச்சை பிரிவில் இருக்குமானால்கூட முயற்சி எடுப்பதில் அர்த்தம் இருக்கிறது. சவக் கூடத்திற்கு மாற்றப்பட்ட பிறகு காவல் காத்து என்ன செய்ய? இன்று கல்வியாளர்கள் தொடங்கி, சாதியவாதிகள் வரையில் உள்ளே சென்றமர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
தங்களிடம் உள்ள அதிகாரத்தை சாதியவாதிகளுக்குக் கடத்துபவர்கள் கல்வியாளர்கள்தாம் என்பதில் சந்தேகமே வேண்டாம். சொந்த சாதி நலன்களுக்காக மட்டுமே உழைப்பவர்களையும், தன் சாதியில் பிறந்தவர்கள் என்கிற காரணத்திற்காக மட்டுமே பெருமக்களை குறியீடாக்கிக் கொண்டாடுபவர்களையும் சாதியவாதிகள் என்றுதான் குறிப்பிடவேண்டும். இவ்வமைப்புகளில் திருமண வேலைகளெல்லாம் பட்டாசு, வெடிச்சத்தம், வானவேடிக்கை என்று அமர்க்களம்தான். மணமக்கள்தான் கிடையாது. நமது அமைப்புகள் உள்ளடக்க குறைபாடுகளால் நிரப்பபட்டவை. அதுபற்றி யாருக்கும் ஒருகுறையும் இல்லை. குறைகூறி தூரத்திலேனும் தென்படும் வாய்ப்புகளை ஏன் இழக்க வேண்டும்?
நம்முடைய ஜனநாயகத்தன்மை என்பது அளவற்ற சாதுர்யமும் மோசடியும் நிறைந்தது. இவற்றில் விலகி இவற்றைக் காப்பாற்றியே தீரவேண்டும் என்று எவரேனும் விரும்புவார்களேயானால் கலை இலக்கியத்தில் தொடர்புடையவர்களின் திசைவழியை நோக்கி முதலில் இவ்வமைப்புகள் திரும்ப வகை செய்யவேண்டும். தயவு தாட்ஷணியம் ஏதுமின்றி தனி நபர்களிடம் முடங்காமல் அடிப்படையான ஜனநாயகப் பண்புகளை பேண நிர்பந்திக்க வேண்டும். சமகால கலைஇலக்கியத் தொடர்பற்ற கல்வியாளர்களின் கரங்களிலோ, தனி நபர்களின் அதிகாரத்திலோ இவற்றை வீழ்த்தக்கூடாது. தனிப்பட்ட நபர்களின் கரங்களில் இவை ஒப்படைக்கப்படும்போது, இவை குடும்பத்தன்மை அடைவதையும் சாதியப்பண்பு மெருகேறுவதையும் தவிர்க்கவே இயலாது.
சாகித்ய அகாதமி என்றில்லை, அவற்றுக்கு ஆள் தேர்வு செய்து அனுப்பும் முற்போக்கு அமைப்புகளும் அரை நூற்றாண்டு காலமாக தகுதியற்றவர்களின் கைகளில் சிக்குண்டு கிடக்கின்றன. முற்போக்கிகள் மாவட்ட ரீதியாக பண்பாட்டு அமைப்புகளின் பொறுப்பாளிகள் பட்டியலை ஒப்படைக்கத் தயார் எனில் கசப்பு நிரம்பிய உண்மை விளங்கிவிடும். தமிழ்நாட்டில் பலகாலமாக கட்சிக்காரர்கள், தொழிற்சங்கவாதிகள் படைப்பாளிகளைக் கடுமையாக ஒடுக்கி வருகிறார்கள். உண்மைகள் வெளிப்பட்டுவிடக் கூடாது என்பதில் குறியாய், கைப்பற்றி வைத்திருப்பவர்கள் அரண் காக்கிறார்கள். தமிழ்நாட்டில் படைப்பாளிகளை ஒடுக்குவதை இங்கே முறைப்படுத்தி வைத்திருப்பவர்கள் முற்போக்கிகள்தான். உண்மைகளைக் கூறத் துணியும் படைப்பாளிகளை சூத்திரங்களாலும் முத்திரைகளாலும் கூடித் தாக்க பெரும் கோஷ்டியே தயார் நிலையில் இருக்கிறது. பொதுச் சூழ்நிலை அறிந்த அல்லது பொதுச் சூழ்நிலையோடு சிறிது உறவேனும் கொண்டிருந்த தொ.மு .சி. ரகுநாதன், தி.க.சி. போன்ற முன்னோர்களின் தகுதி பெற்றவர்கள்கூட இன்று பதவிகளில் இல்லை. அதனால்தான் பேசுகிற படைப்பாளிகளிடம் இவ்வமைப்புகள் பேரச்சம் கொள்கின்றன. உலகெங்கும் இல்லாத அவலநிலை இது. அவல நிலை என்று உணரப்படாத அவல நிலையும்கூட. எப்போதேனும் இவர்கள் கரிசனத்தில் இவர்களது அரங்குகளில் உரையாற்றும்போது தர்ம சங்கடமாய் இருப்பதற்கு, சமகால கலை இலக்கியத்தோடு இவர்கள் தொடர்பற்றுத் தனித் தீவில் வசிப்பதுதான் காரணம்.
ஊழல் என்பது இன்று அரசியலோடு மட்டும் தொடர்புடைய ஒன்றல்ல. அது பண்பாட்டு நிறுவனங்கள் வரை ஊடுருவி இருக்கிறது. ஆய்வுகளை விற்கும் கல்வியாளர்கள், சம்பள அடிப்படை மதிப்புரையாளர்கள் எல்லோருமே கூட்டாளிகள். செம்மொழி பயில்வான்கள் எல்லோரையும் மிஞ்சிவிடக் கூடியவர்கள். கல்வியாளர்கள் எல்லாவற்றிலும் சம்பந்தப்படுகிறார்கள். நாம் வாழும் காலத்தின் அறச் சீர்கேடு கல்வியாளர்களோடும் தொடர்புடையது. கேரளத்தில் இளங்கலைக்குச் செல்லும் ஒரு மாணவன் நவீன இலக்கியத்தில் இரண்டு பாடங்களில் கண்டிப்பாகத் தேர்ச்சி பெற்றாக வேண்டும். நமது செம்மொழி ஆய்வுகள் சங்க இலக்கியத்தையே தாண்டவில்லை. நவீன இலக்கியம், கலை, அறிவு ஆகியவற்றின் ஆய்வுகளுக்கு அங்கே அனுமதி இல்லை.
தமிழ் நாட்டில் கண்ணுக்கெட்டிய காலம் தொடங்கி சொற்பொழிவாளர்களைத்தான் வெகு மக்கள் எழுத்தாளர்கள், கவிஞர்கள் என நம்பிக் கொண்டிருக்கிறார்கள். எழுத்தாளர்களும் கவிஞர்களும் கலைஞர்களும் பிரசங்கிகள் இல்லை என்பது பொது மக்களிடம் தெளிய இன்னும் ஒரு நூறு ஆண்டுகள் செலவாகும் போலிருக்கிறது.
பிரசங்கிகளைப் பற்றி குறைபட ஏதும் இல்லை. அவர்கள் எழுத்தாளர்களாகும் தன்முனைப்பைத்தான் விளங்க முடியவில்லை? ஏன் அவர்கள் ஒரு மருத்துவராகவோ பொறியாளராகவோ விஞ்ஞானியாகவோ தன்முனைப்பு கொள்வதில்லை? தமிழில் விலை மலிந்த தரப்பில் அவர்களுக்கு ஏன் இந்த ஆர்வம்?
தமிழ்நாட்டில் நவீன கவிதைகள் பேரில் கவனம் உருவாகியிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் சாகித்ய அகாதமி நவீன கவிஞர்களுக்கு விருது வழங்க முன்வருவதன் மூலமாக அது தரவிட்டிருக்கும் சமகாலத் தன்மையை மீட்க முடியும்.தமிழில் நவீன கவிதைகள் உலகத் தரத்திற்கு குன்றாதவை.
[ ஓராண்டிற்கு முன்னர் தமிழ் இந்துவில் வெளிவந்த கட்டுரை ]

நிழல் உருவங்கள் - சிறுகதை

நிழல் உருவங்கள்

தபால் தலைகள் சேகரிக்க ஆரம்பித்த காலத்திலிருந்தே செந்தில்குமாரை எனக்குத் தெரியும். இருபது வருடகால பழக்கம் எனக்கும் அவனுக்கும் உண்டு. அதிகமான முக்கியத்துவம் கொடுத்துத் தபால்தலைகளைச் சேகரிப்பான். கலாச்சாரப் புரட்சியை தபால்தலைகள் நடத்திவிடும் என்று அதை கவனிக்கிறவர்களுக்குத் தோன்றும். அவன் முனைப்போடு தபால்தலைகள் சேகரிப்பதில் எனக்கு எரிச்சல் உண்டு. இந்த தபால்தலைகளும் வேலாயுதம்பிள்ளை வாத்தியாரும், எனக்கும் அவனுக்குமான பொது எதிரிகளாக அந்தச் சமயங்களில் தோன்றினார்கள். வேலாயுதம்பிள்ளை வாத்தியாருக்கு எதனாலோ என்னையும் அவனையும் சேர்த்து பார்க்கவேப் பிடிக்காது. ‍அதிலும் என்மேல் அவருக்குக் கூடுதலான கோபம் உண்டு. வரலாறு புவியியல் பாடத்தில் கேள்விகள் கேட்டு வரிசையாக இருக்கையிலிருந்து எழுப்பி அடிக்கும்போது எனக்கு அவர் பிரம்பில் கொடுக்கிற அழுத்தம் அவனைவிடக் கூடுதலாயிருக்கும். அவர் பயன்படுத்துகிற பிரம்புகள் வடசேரி சந்தையில் வாங்கப்பட்டு, அவரது வீட்டில் மஞ்சள் பூசி அவித்து கொண்டுவரப்படுபவை. அவரது வகுப்பில் நானும் அவனும் ஒரே வரிசையில் நெருக்கமாய் உட்கார்ந்திருக்கக்கூடாது என்ற அவரது வகுப்பில் நானும் அவனும் ஒரே வரிசையில் நெருக்கமாய் உட்கார்ந்திருக்கக்கூடாது என்ற அவரது கட்டளை பிசுபிசுத்துப் போகும்படி நாங்கள் ஒரே வரிசையிலேயே உட்கார்ந்திருந்ததும், பிசுபிசுத்துப் போனதற்குக் கூடுதல் காரணம் நான் என்று அவர் நம்பியதும் என்னிடம் அவர் கொண்டிருந்த தனிப்பட்ட வன்மத்திற்குக் காரணமாயிருக்கலாம். அப்படியொரு நம்பிக்கைக்கு எந்த வழியில் அவரால் வரமுடிந்தது என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. பழுப்பேறிப்போன எனது சட்டையோ, என் முகத்தில் நிழலாய் படர்ந்து விரிந்து கொண்டிருந்த பயமோ, என் கண்களில் தெரிந்த ஒடுக்கமுறையின் இழையோ, இவையெல்லாமான கலவையோ, அவர் தெருவில் தினமும் பார்க்கிற ‍தெருநாயோ  அல்லது எல்லைகளை மீறிப் பாய்கிற அவரது வளர்ந்த மகன்களில் ஒருத்தனை நினைவூட்டும்படியாய் இருந்திருக்கலாம். இவற்றைத் தவிர்த்து அவர் காட்டிய வன்மத்திற்கான காரணம் என்னவாயிருக்கும் என்பதை எனக்கு யூகிக் முடியவில்லை.இதுபோலவே தபால்தலைகள் எனக்குக் கொடுத்த இடையூறுகளும்.எனக்கும் அவனுக்குமான உறவை பலமுறை அவை அறுத்துப் போட்டன. எனக்கும் அவனுக்கும் பொதுவான நேரங்களை சுருங்க வைத்தன. தபால்தலைகளை சேகரிக்க முடியாதவர்கள் எந்த பயனுமற்ற விறகுகட்டைகள் என்று அவனுக்குள்ளிருந்த எண்ணம் என்னைக் கீழ்த்தரமான பிராணியாக அவனுக்கு படம்பிடித்துக் கொண்டிருந்தது. அவனது சேகரிப்பில் 'அ'வரிசையில் மூன்றாவது இருநூறாம் பக்க நோட்டு காணாமல் போனபோது அவனுக்கு என்மீது சந்தேகம் ஏற்பட்டது. ஒருவாரம் வரைக்கும் முக்கியமான எதிரியிடம் நடந்து கொள்வதுபோல என்னிடம் நடந்து ‍கொண்டான்  . அவன் எதிரிகளை எவ்வளவு வன்மத்தோடு தாக்கக்கூடியவன் என்பதை அந்த சமயத்தில் எனக்கு உணரமுடிந்தது. வார முடிவில் இந்தப் புகைச்சல் விரிந்ததில் பள்ளிக்கூடம் விட்ட பிறகு நாங்கள், நாலரை மணிக்கு விளையாட்டு மைதானத்தில் சண்டை போட்டு, அதன்பிறகு ஒரு வாரத்தில் சமாதானப்பட்டுக் கொண்டோம். இதற்கு இடைப்பட்ட நாட்களில் அவன் தொலைத்த சேகரிப்பு நோட்டு கிடைத்திருந்தது என்பது முக்கியமான விஷயம்.

சேகரிப்பு சமயங்களில், அதை ஒட்டி ஒழுங்குப்படுத்துகிற சமயங்களில், அந்த நடவடிக்கைபற்றி யாருடனாவது பிரஸ்தாபப்பட்டுக் கொள்கிற சமயங்களில் அவன் என்னை சாமர்த்தியமாக தவிர்ப்பதாக உணர்ந்தேன்.நான், அவனோடுள்ள சந்தர்ப்பங்களை அவனது இந்தப் பணிக்கு இடையூறானதாகவ‍ே இருக்கும் என்று நம்பினான். அவனது காரியத்தைப் பிரஸ்தாபித்துக் கொள்கிற இடங்களில் நானிருப்பது அவனுக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தியது. விழுந்துவிழுந்து சேகரிப்பது, ஒழுங்குபடுத்துவது, வகைப்படுத்தியவற்றைத் தடித்தடியான இருநூறாம் பக்க நோட்டுகளில் ஒட்டுவது இவற்றுக்கே அவனது நேரத்தில் அதிகத்தை எடுத்துக் கொள்ள வேண்டியிருந்ததால் எனக்கும் அவனுக்கும் பொதுவான நேரம் சிறுத்துக்கொண்டிருந்தது. இதனால், அவனது இந்த பணிக்கு ஒத்துழைக்கப் பலமுறை என்னை தயார்படுத்த முயற்சித்தேன். ஒன்றிரண்டு சந்தர்ப்பங்களில் என் கைக்குக் கிடைத்த தபால்தலைகளைப் பத்திரப்படுத்தி ஞாபகமாக அவனிடம் கொண்டு கொடுத்தபோது, அவற்றை அவன் மிகுந்த ஏளனத்துக்குட்படுத்தினான். அவனது சேகரிப்புகளோடு நான் கொடுத்தவற்றை ஒப்பிட்டால் இவை வெறும் அற்ப ஜென்மங்கள்தான் என்றாலும் அவனது ஏளனம் மனச்சோர்வை எனக்கு ஏற்படுத்தியது. அவனுக்கான எனது உழைப்பை‍யேனும் அவன் கவனத்தில் ‍எடுத்திருக்கலாம். ஆனால் என்னை தவிர்ப்பதிலேயே அவன் குறியாக இருந்தான். அந்த ஏளனத்துக்குப் பின்பும் நான் சேகரிப்பதில் இல்லாவிட்டாலும், ஒழுங்குப்படுத்துவது, வகைப்படுத்தி ஓட்டுவது போன்ற அவனது பணிகளில் என்னை ஈடுபடுத்திக்கொள்கிற மனநிலையிலேயே இருந்தேன். அது எனக்கு அவனை முன்னிட்டு செய்ய இயலக் கூடிய காரியம்தான். ஆனால், இது சம்மந்தமாக எனது எந்த உதவியும் அவனுக்குத் தேவைப்படாதது மட்டுமல்ல, அசெளகரியத்தைத் தரக்கூடியதாகவும் அமைந்திருந்தது. வேலாயுதம்பிள்ளை வாத்தியாரால் எனக்கும் அவனுக்குமான நேரத்தில், சனி ஞாயிறு தவிர்த்த தினங்களில், கூடிப்போனால் நாற்பத்தைந்து நிமிடங்களை மட்டுமே தட்டிப்பிடுங்க முடியும், இந்த தபால்தலை சேகரிப்பு தினசரி எனக்கும் அவனுக்குமான நேரத்தில் சில மணிநேரங்களைத் தின்று கொண்டிருந்தது. அதில் அவனுக்கிருந்த அலாதியான மகிழ்ச்சியும், மகிழ்ச்சிக்கு நேர் எதிர்நிலையில் எனக்கு உருவான அசுவாரசியமும் ஒருத்தருக்கொருத்தர் புரிந்து கொள்ள முடியாதததாகப் போய்க்கொண்டிருந்தது.

நிறைய இருநூறு பக்க நோட்டுகுள் சேர்ந்து கொண்டிருந்தன. ஆரம்பத்தில் சேகரித்துப்போட்ட இருநூறு பக்க நோட்டுகளில் அவனுக்கு அதிக நாட்டம் இருக்கவில்லை என்பதை நாளாவட்டத்தில் புரிந்து வந்தேன். ஆனாலும்,அவற்றை இழந்துபோக அவன் தயாராக இல்லை. மனஇறுக்கமான பொழுதுகளில் அவற்றைத் திருப்பிப் பார்த்துவிட்டு மீண்டும் அடுக்கி வைக்கிற பழக்கம் அவனிடமுண்டு. புதிதாகச் சேகரிக்கப் போகிற தபால்தலைகளிலேயே நாட்டமும் ஈடுபாடும் உடையவனாயிருந்தான். அவனது அப்பாவும் குடும்பத்தினரில் சிலரும்கூட அவனது தபால்தலை சேகரிப்பில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டிருந்தனர். அதோடு குடும்பத்தில் உள்ளவர்கள் இவனுக்குக் கொடுக்கிற அங்கீகாரத்தின் பெரும்பகுதியில் இந்த தபால்தலைகள் முக்கிய பங்காற்றின. புதிதாக அவன் வீட்டுக்கு வருகிற விருந்தாளிகள், நண்பர்கள் எல்லோருடைய தருணங்களிலும் இந்தத் தபால்தலைகள் பங்கெடுத்துக் கொண்டன. மொத்தத்தில் அவனது சூழலுக்குள் இவை முக்கியமான வினையாற்றிக் கொண்டிருந்தன. பிரக்ஞாபூர்வமற்ற இந்த வினையை பயன்படுத்திக்கொண்டு இருநூறு பக்க நோட்டுகளும் வேகமாக வளரத் தொடங்கின. புதிதாக தபால்தலைகள் சேகரிப்பதில் இறங்குகிறவர்களுக்குக் கனவாக இருந்தான். அவன் புதிய சேகரிப்பாளர்களுக்குக் கூறிய அறிவுரைகள் உத்திகள் எல்லாம் குறிப்பெடுக்கப்பட்டன. எனக்கோ இவையெல்லாமே மாயாநிகழ்வுப்போலத் தோன்றியது. கால்களற்றுப் பறப்பதுபோலவும், ஆவி மொழியில் மந்திரங்கள் பரிமாறிக் கொள்ளப்படுவது போலவும் இருந்தன. இவை ஏற்படுத்திய அசுவார சியத்தில் அடிக்கடி மனச்சோர்வுக்குத் தள்ளப்பட்டேன். இருந்தாலும் எனக்கும் அவனுக்குமான உறவில் அத்தனை பிணைப்புகளும் அறுந்து போகாதபடி ஏதோவொரு திரவஇயக்கம் இருந்து கொண்டிருந்தது. எங்களுக்குப் பொதுவாக அமைந்த குறைந்த சந்தர்ப்பங்கள் சோர்வை மிக இலகுவில் தாண்டி, புத்துணர்ச்சியை ஏற்படுத்தியது இதற்கான காரணமாயிருக்கலாம். ஆனால் அதிர்ஷ்ட வசமாகவோ என்னவோ பனிரெண்டாம் வகுப்பு படிக்கிற கால கட்டத்தில் செந்தில்குமார் முற்றாக தபால்தலைகள் சேகரிப்பை நிறுத்திவிட்டான். இருநூறு பக்க நோட்டுகளின் வளர்ச்சி தடைபட்டது. எனக்கு மாயா உலகத்திலிருந்து அவன் தப்பிவிட்டதுபோல மகிழ்ச்சி ஏற்பட்டது.எனக்கும் அவனுக்கும் பொதுவான சமயங்களில் இனி சிக்கல்கள், பின்னல்கள் ஏற்படாதென்கிற மனநிறைவும் கூடிவந்தது. தபால்தலைகள் சேகரிப்பவர்களை பரிதாபமாகவும் ஏளனமாகவும் பார்த்தான்.

தபால்தலைகள் சேகரிப்பாளனாகிய பழைய செந்தில்குமாரை அருவருத்து ஒதுக்கித்தள்ள ஆரம்பித்தான். மறுபிறப்புக்கு ஆளானவனைப்போலக் காணப்பட்டான். பேச்சிலும் நடவடிக்கைகளிலும் கூர்மை தென்பட்டது. சேகரிப்புக்கான உபதேசங்களையும் வழிமுறைகளையும் கேட்க வருகிறவர்களிடம் வருத்தப்படுகிற அளவு நடந்துகொண்டாள். மோசமான முறையில் ஏமாற்றப்பட்டுவிட்டது போன்ற மன நிலைக்கு ஆளாகியிருந்தான். தனது பழைய காரியங்களை வெறுத்ததன் வழியே என்மீது நம்பிக்கையும், வெட்கம் கலந்த மதிப்பும் அவனுக்கு ஏற்பட்டிருந்தது. எனது பேச்சையும் நடவடிக்கைகளையும் கூர்மையாய்க் கவனித்தான். எனது சாதாரண நடவடிக்கைகள் அவனது கவனிப்புக்கு உள்ளாகியிருந்தது எனக்கு சிரமத்தைத் தந்தது. சில சமயங்களில் ஹயூமரைக்கூட தீவிர சர்ச்சைக்கு வலிந்து பிடித்திழுத்தான். பழக்கத்தின் காரணமாக என்னை எதிர்கொண்டு நெருப்புப்பொறி ஏற்படுகிற அளவு விவாதிக்காமல் இருக்க அவனுக்கு முடியவில்லை. ஆனால் ஆரம்பத்தில் ஏற்பட்ட நெருப்புப் பொய்யானவை. இந்த நெருப்பு பொறிகள் நெருப்பு பொறிகளின் மாதிரிகள் மட்டுமே. இரண்டு பக்கங்களிலும் காயத்தை ஏற்படுத்த இயலாதவை இவை. தவிர பழக்கத்தின் காரணமாக மட்டுமேதான் பொய்யான நெருப்புப் பொறிகளை உண்டுபண்ணுகிறான் என்றும் அவனை எளிமைப்படுத்திவிட முடியாது. என்மீது அவன் கொண்ட நம்பிக்கைக்கு அவனுக்குச் சாட்சியங்கள் தேவைப்பட்டன. தேவைப்பட்ட சாட்சியங்களுக்காக நெருப்புப் பொறிகளைக் கிளற வேண்டிய தேவை அவனுக்கு இருந்தது. அவன் பிறரை எதிர்கொள்கிறபோது அவன் தரப்பு விவாதங்களை என் தரப்பு விஷயங்கள் மூலமாய் அடித்து நொறுக்கிக் கொண்டிருந்ததைக் கவனிக்க நேர்ந்தபோது மன அதிர்ச்சிக்குள்ளானேன் என்றாலும், எனக்கு அவனோடுள்ள உறவு எளிமைப்பட அந்த சந்தர்ப்பங்கள் உதவின. இந்த காலகட்டத்தில்தான் அவன் குடும்பத்தினரோடு அவனுக்குள்ள உறவுகள் பலகீனப்பட்டுக் கொண்டிருந்தன. தபால்தலைகள் சேகரிப்புக்கும் குடும்ப உறவுகளுக்கும் அப்படி என்னதான் பிணைப்போ புரியவில்லை.

அப்புறமாய் இரண்டுபேரும் இணைந்தே சினிமா நடிகர்களின் படங்களை வெட்டிச் சேகரிக்க தொடங்கினோம். இதில் இருவருக்குமே சுவாரசியம் இருந்தது. ஏற்கனவே, ஒரு பழக்கத்திலிருந்து விடுபட்ட அவனுக்கு விடுதலைபெற்றது போன்ற உணர்வும் கிடைத்தது. பிரக்ஞாபூர்வமற்ற சேகரிப்புதான் என்றாலும் இரண்டு பேருக்கும் உருவான சுவாரசியம் காரணமாக இதில் ஈடுபடமுடிந்தது. அதோடு, கோபாலோடு அந்த சமயத்தில் எங்களிருவருக்கும் ஏற்பட்ட நட்பு சேகரிப்புக்குப் பயனுள்ளதாக இருந்தது.

நிறைய தமிழ் சினிமா பார்க்கிறவன் கோபால். நிறைய சினிமா இதழ்களும் வாங்குவான். அவன் சினிமா இதழ்களுக்கு வாசகர் கடிதம் எழுதுவதுகூட உண்டு. ரேவதிப்பிரியன் என்ற பெயரில் வெளியாகும் அவனது வாசகர் கடிதங்கள் அப்போது வந்த சினிமா இதழ்களில் கவனிக்கப்படக்கூடியதாக இருந்தன. அவை கவனிக்கப்படுவதற்காக முழு புத்திகூர்மையையும் ஆரம்ப நாட்களில் பயன்படுத்த வேண்டியிருந்தது. பழக்கத்தில் நுட்பங்களும் உள்அடுக்குகளும் புரிந்துவிட்டபிறகு கவனிப்பைப் பெறுவது சுலபமாக மாறியிருந்தது. அந்த இதழ்களில் அப்துல் கலாமுக்கும் அவனுக்கும் ரகசியமான போட்டியும் உண்டு. என்றாலும் கோபால் அதில் கொண்ட வெற்றி அசாதாரணமானது. அப்துல் கலாமின் புழுக்கமும் தோல்வியும் பல செவுடு வித்தைகள் அறிந்த வலிய ஆசானை கூப்பிட்டுகு கெட்டிக்கொள்கிற சாமானியனின் ‍தோல்வியைப்போல இருக்கும்.சுருக்கமாகச் சொன்னால் கோபால் அந்த இதழ்களில் வட்டார பிரபல்யஸ்தனைப்போல் காணப்பட்டான்.

சென்னையிலிருந்து 'அலைகள் காய்வதில்லை' என்ற படத்துக்காக சகல படமெடுக்கும் சாதனங்களையும் கொண்டுவந்து நாகர்கோவிலிலுள்ள ஒரு கல்லூரி வாத்தியாரிடம் ஒரு கும்பல் வழிகேட்டபோது அவர் காட்டிய ஒரே திசையாக கோபாலிருந்தான். அந்த கல்லூரி வாத்தியார் அவரது உயர்ந்த பட்ச லட்சியமே திரைப்பட சுருள் நாடாவில் பதிவதுதான் என்றாகி, அந்த வண்ணன்கனவை ஏற்கெனவே சிலப் படங்களில் எட்டியிருந்தார். திரைச்சீலையில் ஏதேனும் வயதான நபரோடு கூடவருகிற குணச்சித்திரப் பாத்திரங்கள் அருக்கு அவற்றில் கிடைத்திருந்தன. என்றாலும் குணச்சித்திர கோலம் இரண்டு நிமிடங்கள்கூட நிற்காமல் திரையில் ஓடி மறைவது அவருக்கு ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்தும். இரண்டு வார்த்தைகள் வசனம் பேசி, திரைச்சீலையில் தெரிந்த அவரது குணசித்திரகோலம் அவரது வாழ்வில் ஜீவகாவிய அனுபவமாகிவிட்டது. இந்த நிலையை எட்ட அவர் அடைந்த அவமானங்கள் தாழ்வுகள் எல்லாம் தெரிந்த நபர்களில் கோபாலும் ஒருவன். ஒருமுறை அவர் அவமானங்களால் அடைகிற மனக்கசப்புகள்பற்றி எழுதி அனைத்திந்திய வானொலி நிலையத்தில் வாசித்த கவிதையின் நான்கைந்து வரிகளை கோபால் நினைவில் வைத்திருக்கிறான். இவர் சம்பந்தப்பட்ட விஷயங்களை கோபால் சொல்ல ஆரம்பிக்கும் தருணங்களில் எங்களுக்கு ஒருவிதமான மகிழ்ச்சி உருவாகும்.பிறரது அவமானங்களில் நமக்குண்டாகிற மகிழ்ச்சியான போதையின் சூட்சுமங்கள் எனக்கு அப்போது புரிந்திருக்கவில்லை.

கோபால் அந்த சினிமாக் கும்பலைக் கூட்டிக்கொண்டு நடந்தான். அவர்கள் கொண்டு வந்த ஒவ்வொரு சாதனத்துக்கும் பொறுப்புள்ளவனாக நடந்து கொண்டான். எப்போதுமே இருந்திராத வகையில் எந்திரத்தைப்போல உழைத்தான். அந்த சமயத்தில் அவன் புதிதாக வாங்கிப் போட்டிருந்த இரண்டு ஏற்றுமதிக்கான காட்டன் சட்டைகளின் பின்புறமும் அப்போது பார்க்க முடிந்த எல்லா தருணங்களிலும் நனைந்திருந்தது. முகத்தில் பதட்டத்தோடு காணப்பட்டான். தவற விட்டுவிட்ட பஸ்ஸை துரத்தி ஓடிப் பிடிக்கமுடியாமல் நிற்பது போன்ற பதட்டம்.ஒருமுறை தாழ்வான குரலில் உடம்பை கொஞ்சம் கவனிக்கக் கூடாதா என்று கூறினேன். அந்த வார்த்தைகள் அப்போது எந்த பயனுமற்றது என்று எனக்குத் தெரிந்தும் அப்படிக் கூற நேர்ந்தது. பரிதாபங்களுக்கும், அனுதாபப்பட வேண்டியவர்களுக்கும் நம்மால் உதவி செய்ய இயலாமல் போகும்போது கூற நாம் கைகளிலேயே வைத்திருக்கும் கையேந்தி வார்த்தைகளின் மாதிரிகள் தான் இவை. இவற்றிற்கு யாரும் காது கொடுக்க முடியாது. கோபாலும் அப்படியே. கோபால் அவர்களோடேயே போய் பெரிய கதாநாயகனாகி விடவேண்டும் என்கிற அற்பமான கனவுகளைக் கொண்டவனில்லை. என்றாலும் இது அவனது எண்ணங்கொண்டிருந்தான். கண்ணப்ப நாயனாரின் குடிசைக்கு சிவன் வர நேர்ந்தால் நாயனா எப்படி நடந்து கொண்டிருப்பாரோ அப்படி நடந்து கொண்டான். அங்கு வந்த சாதனங்கள் அந்த சாதனங்களின் நூதனங்கள் பற்றியெல்லாம் கோபால் சொல்லிக் கேட்கவேண்டும். அங்கு வந்திருந்த சன்னமான மெழுகுப்பொம்மை போன்ற நடிகையோடு அவன் பேசிய விஷயங்கள் உச்சகட்டமாயிருக்கும். ஒவ்வொருமுறை அவன் அதைச் சொல்லும்போதும் அதுவே உச்சகட்டமாயிருக்கும். ஏனைய விபரங்கள், அவன் சொல்லும்போது தடுமாறி, குழம்பி, அடுக்குகள் மாறிவரும், நடிகையோடு பேசியதுபற்றிச் சொல்லும் போது அவன், அவனது வாழ்வில் மிகச் சாதாரணமாக நடக்கக்கூடிய விஷயத்தை ஈடுபாடில்லாமல் ‍சொல்வதுபோல நமக்குத் தோன்றவேண்டும் ன்று நினைத்துக் கொண்டு சொல்வான். இந்த கோபால்தான் சினிமா நடிகர்களின் படங்கள் சேகரிப்புக்கு உறுதுணையாக நின்றது. அவனது உதவி என்னும் நினைவில் நிற்கக்கூடிய ஒன்று.

சினிமா நடிகர்களின் படங்களைச் சேகரிக்கத் துவங்கிய சில மாதங்களில் செந்தில்குமார் கொஞ்சம் திசைமாறிச் செல்வதுபோல ஒருகட்டத்தில் உணர்ந்தேன். இந்த திசைமாற்றம் அடிக்கடி அவனில் நிகழ்வதையும், ஒன்றிலிருந்து மற்றொன்றுக்குத் தாவிச் செல்வதையும் நான் அர்த்தத்தோடு கவனிக்கத் துவங்கியது இந்த சமயத்தில்தான். அந்த நடிகர்களுக்கு சம்பந்தபடாத குறிப்புகளைப் படங்களுக்குக் கீழே அவன் எழுதி வைத்திருந்தது எனது சந்தேகத்தை வலுப்படுத்தியது.அந்தக் குறிப்புகளின் மொழியே எனக்குப் புலப்படவில்லை. அந்த மொழியை அறியும் ஆர்வம் எனக்கு ஏற்பட்டாலும்கூட அறிமுகமில்லாத காட்டுக்குள் அவன் அழைத்துச் செல்வதுபோல இருந்தது. சினிமா நடிகர்களின் படங்களோடு ‍அரசியல்வாதிகள், பிரபல எழுத்தாளர்கள், பிரபல்யஸ்தர்கள் என்று அவனது சேகரிப்பு விரிந்த களமாகியிருந்ததையும் அந்த கவனிப்பில் தான் உணர்ந்தேன். ‍ஏதோவொரு திசை வழியே நோக்கி நுட்பமாக அவன் பயணிப்பதுபோல் எனக்குப்பட்டது. இதற்குமேல் அவன் உருவாக்க இந்த காலகட்டம்தான் துணை புரிந்திருக்கிறது என்பதை அந்த சமகாலத்தில் எனக்குப் புரிந்துகொள்ள முடியாமற் போயிற்று. முதன்முதலில் அவன் இந்த சேகரிப்புகளை வைத்து எழுதிய கட்டுரை வெளியானபோது தான் எனக்கு சில விஷயங்கள் பிடிபடத் துவங்கியது. அவனைப்பற்றி கொண்டிருந்த மெல்லிசான ஏழ்மையான சுருக்கப்பட்ட எண்ணங்கள் சுயஅருவருப்பை எனக்குள் உண்டாக்கியது. சுய அவமானத்துக்குள்ளானேன். ஒரு காட்டாறு ஏரியைக் கடந்து செல்கிற போது, ஏரிக்கு ஏற்படுகிற நிலை போன்றது அது. இவற்றையெல்லாம் மீறி ஏதேச்சையாய் அவனைப் பார்க்க நேர்ந்தபோதுதான் நெடுநாட்களாய் அவனைப் பார்க்காமலே இருந்திருக்கிறோம் என்பது தெரிந்தது. முகத்தில் கண்ட சுருக்கங்களும் கண்களை வட்டமிட்ட கறுப்புமாய் இப்போது அவன் முகம் என்னை அவனிலிருந்து விலகவைத்தது. எனக்கும் அவனக்குமிடையில் இவை ஒரு திரையை எனக்குள் விரித்துப் போட்டியிருந்தன.

அவனுக்கு முகங்கள்தான் எல்லாம். முகங்களிலிருந்து தான் பிறரைப்பற்றிய அவனது எண்ணங்கள் துவங்குகின்றன. கோடுகள், சுருக்கங்கள், கறுப்பு வளையங்கள், சிரிப்புகள் இவற்றை நுட்பமாகத் கவனிக்க அவனுக்கு வாய்த்திருக்கிறது. ஆரம்பத்தில் தபால் தலைகள் சேகரிக்கும்போது வகைப்படுத்திப் பழக்கிக் கொண்டதாலோ என்னவோ முகங்களை பல தினுசாக வகைப்படுத்தியிருந்தான். அவனது குறிப்புகளிலிருந்து அவனது வகைப்பாட்டுக்கான அர்த்தத்துக்கு எளிதில் வரமுடியும் எப்போதுபோல இருந்தது. அந்த அர்த்தங்களில் காணக்கிடக்கிற வெளிச்சம் நம்மை தூக்கி எறிவதுபோல இருக்கும். நம் வாழ்வில் அடிப்படைக் கனவுகளை முட்டையை உடைத்து தகர்ப்பதுபோல இருக்கும். நமது முகங்களைப் பார்க்க நம்மை தூண்டுவதுபோல இருக்கும். அந்த சமயத்தில் ஒரு சாயங்காலத்தில் அவன் வகைப்படுத்தி யிருந்த முகங்களை ஒவ்வொன்றாய் எடுத்துப் பிரித்துக்காட்ட ஆரம்பித்தான். மூளைக்கு குவிக்க வேண்டியிருந்தது. அவற்றைப்பற்றி அவன் பேச ஆரம்பித்தபோது என் இருப்பில் சந்தேசம் உண்டாவதை உணர்ந்தேன். நிறமற்று வெளிறிக் கொண்டிருப்பதுபோல இருந்தது. முகங்களைக் கழற்றிப் பிரித்துக் காட்டிக்கொண்டெ போனான். அவனது நடவடிக்கையில் விஞ்ஞானிக்குரிய நுட்பமும் மந்திரவாதிக்குரிய செயல்பாடும் கலந்திருந்தன. இருபது வகைமாதிரிகளுக்குள் இந்த முகங்களை வகைப்படுத்தி விட முடியுமா என்பதில்தான் தன் சிக்கல்கள் வந்து நிற்பதாகச் சொல்லி அவன் சிரித்த சிரிப்பு இன்றும் ஞாபகத்திலிருக்கிறது. அன்று அவனது சிரிப்பு எனக்குள் ஏற்படுத்திய உணர்ச்சிக் கொந்தளிப்பில் உன் முகத்தை வேண்டுமானால் இருபத் தொன்றாக வைத்துக் கொள் என்று உள் வெறுப்‍போடு கூறினேன். அதற்கு அவன் அது ஏற்கனவே இருபதுக்குள் வந்துவிடுகிறது. அதுவல்ல எனது பிரச்சினை என்று நிதானமாகக் கூறினான். அவனது பதிமூன்றாவது வகைமாதிரி சேகரிப்பில் எனது முகத்தைப் பார்த்தேன். அதில் எனக்கேற்பட்ட துன்பத்தை விளக்க இயலாது. அதில் எழுதியிருந்த குறிப்பைப் புரிந்தவகையில் சொல்வதுகூட எனக்கு சாத்தியமில்லை. என் இரும்பைச் சிதறடித்து விடக்கூடிய குறிப்பு அது. அவனது சேகரிப்பில் ஒரு வகையான உதட்டைப் பிரிக்காத பூரிப்பு கலந்த சிரிப்பு அவனைத் துன்பத்துக்குக்குள்ளாக்குவதை உணர்ந்தேன். உணர்ச்சி வயப்பட்ட நிலையில் அந்தவகை முகங்களை விவரிக்கிறான். அதில் நிறைய நம் அரசியல்வாதிகள், பிரபல்யஸ்தர்கள், பிரபல்ய எழுத்தாளர்கள் முகங்களே நிரம்பியிருந்தன. ரயில் விபத்தொன்றில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களைப் பார்த்து ஆறுதல் சொல்கிற ஒரு இந்திய தேசிய அரசியல்வாதியின் பூரிப்பை அந்தவகை மாதிரியின் முக்கியத் தடயமாக அடையாளப்படுத்தி வைத்திருக்கிறான். மனித சிரிப்புகளிலேயே இரத்த வேட்கைக் கொண்ட சிரிப்பு அது என்பதே அவனது குறிப்புகளிலிருந்து அறிய முடிகிற விஷயமாய் இருக்கிறது. நமது சகல துன்பங்களுக்கும் காரணமான சிரிப்பு அது என்று குறிப்பிடுகிறான். உலக மனநோய்களில் பல யுத்தங்களுக்கும், ஆபாசமான மரணங்களுக்கும் காரணமான மனநோய்க்கான தடயம் அதுதான் என்பதில் அவனுக்கு உறுதியான நம்பிக்கை இருக்கிறது. எனக்குத் தெரிந்த பிரபல்ய எழுத்தாளரிடம் எனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தைச் சொல்ல நேர்ந்தபோது அவர் முகத்தில் ஏற்பட்ட வேதியல் மாற்றத்தை ஞாபகப்படுத்தக் கூடியதாய் அந்த பூரிப்பு கலந்த சிரிப்பு இருந்தது. இன்னும் இதுபோன்ற பலமுகங்கள் எனக்கு அவனது இடங்களில் நின்று செய்து கொண்டிருந்ததுபோல எனக்குத் தோன்றியது. ஒரேயொரு வாய் மட்டும் பல திசைகளில் நின்று ஒலியெழுப்புவதுபோலத் தோன்றியது. சண்டையின் தாளகதியின்போது உருவான முகபாவங்கள் ஒரேயொரு வகைமாதிரியை மட்டும் நினைவூட்டக்கூடியதாகவே இருந்தது. ராகவனின் வசைகளையும் அப்பாவின் வசைகளையும் எப்படி எனக்குப் பிரித்தறிய முடியவில்லையோ அதுபோலவே ராகவன் மனைவியின் வசைகளையும் அம்மாவின் வசைகளையும் கூட பிரித்தறிய முடியவில்லை. ஒலியின் அதிர்வுகளும் ஏற்ற இறக்கங்களும் ஒரே மாதிரியானவை. மனசின் அழுகிய நாற்றம் பொட்டிச் சரிந்த ஒலிப்போட்டி. எனக்கு செந்தில்குமாரின் பிரபல்யஸ்தரின் முகங்களை இந்த சண்டையின்போது கண்ட முகக்கோணல்கள் அடையாளங்காட்டின. ராகவன் பரம்பரை பரம்பரையாய் சம்பவங்களை ஞாபகப்படுத்தி, அவரது ஒழுங்கில் அவற்றை அடுக்கிக் கத்தினார். அப்பாவின் பொறியாளர் பதவி தனது உபகாரத்தால் பொறப்பட்டது என்றார். எங்கள் வீட்டிலுள்ள பல பொருட்களும், பேண்ட், சட்டைகள் உட்பட சந்தேகத்துள்ளாக்கப்பட்டன. அப்பா நீ வேலை வாங்கி தந்தாயா, எனக் கேட்டு அதற்கெதிரான சான்றாதாரங்களை நிறுவினார். எல்லாம் வெக்கையைக் கூட்ட முயற்சித்தனவே தவிர வெக்கை தணிந்த பாடில்லை. ஒன்றிலிருந்து இன்னொன்று, மற்றொன்று என்று தாவி  உயரம் அதிகரித்துக் கொண்டிருந்தது. எனக்கு இருளும், மின்சார விளக்குகளும் கலந்த இருளில் இந்த முகங்களின் நிழலுருவங்கள் பெரிதாய் ஆடிக் கொண்டிருந்தது பயமூட்டும்படியாய் இருந்தது.

எங்கள் வீட்டுக்கு ராகவன் வீட்டிலிருந்துதான் கழிந்த மாதம் வரைக்கும் பால் வந்தது. திடீரென ராகவன் எங்கள் வீட்டுக்குமட்டும் பாலை நிறுத்திவிட்டதும் அதன் தொடர்ச்சியில் ராகவன் முகத்தில் கண்ட இறுக்கமும் பொட்டியதில் ஏற்பட்ட சண்டை இது என்றே எளிமைப்படுத்தி சுருக்கி நினைத்துக்கொள்கிறேன். அப்பா ராகவனுக்கு ஒரு கனவு என்பதையும் புரிந்தே இருக்கிறேன். ராகவனின் நடவடிக்கைகள் பெரும்பாலும் அப்பாவை பிரதிபலிக்கக்கூடியதாகவே இருக்கும். நடை உடை பாவனைகளிலிருந்து குழந்தை வளர்ப்பிலிருந்து சகலமும் குட்டி அப்பாவைப்போல இருக்கும். இதனாலேயே ராகவனின் மகனாகிய சுரேஷ் எனது முகசாயலை அடைந்து கொண்டிருப்பதுபோல எனக்குத் தோன்றுகிறது. எனது முகசாயலை உருவமாக தினசரி பார்க்க வேண்டிவருவதில் போதையும் உள்ளூர வெறுப்பும் எனக்குள் இருக்கிறது. சண்டையையும் வயது வித்தியாசமுள்ள இரண்டு அப்பாக்கள் போட்ட சண்டை என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். அப்பாக்களின் பரஸ்பர சண்டைகளைப் பார்த்து பயப்பட ஒருவேளை எதுவுமில்லாமல் கூட இருக்கலாம். எச்சில் உமிழ்வது, துண்டை உதறுவது, சன்னல்கள் அடைப்பது, சமிக்சைகளால் மனப் புண்ணில் பழுப்பு கசிவது போன்ற போராட்ட உத்திகளைப் பார்த்து பயப்படாமல் இருக்கவும் தெரியவில்லை. நியாயமாகப் பார்த்தால் இந்த நிகழ்வில் நானும் பங்கு பெற்றிருக்கவேண்டும். புறவயமான அசைவுகளோடும், ஒலிகளோடும். செந்தில்குமாரின் சேகரிப்புகளும் அவைபற்றிய குறிப்புகளும் எனக்குள் ஆற்றியிருந்த வேதி வினைகள் என்னை மெளனமான ஓவியமாக்கிவிட்டது. சொல்லப்போனால் இது செந்தில் குமாரின் ஓவியம். இந்த மெளன ஓவியங்களுக்கான இடமென்ன? ஓவியங்களைச்சுற்றி இப்படியான முகங்களே நிறுத்தப்படுகின்றன. ஓவியங்கள் தோற்று தளர்ந்து விழுகின்றன.

கழிந்த வருடம் புத்தளம் உயர்நிலைப் பள்ளியில் நான்காம் வகுப்பில் படித்த என் நண்பனின் பையன் நீக்கப்பட்டபோது அதற்கான காரணம் அவன் எழுதிய காதல் கடிதமாய் இருந்தது. நானும் நண்பர் துரையும் பள்ளி தலைமையாசிரியரைப் பார்க்கப் போயிருந்தோம். அவரும் எனக்கு இந்த முகத்தையே நினைவுப்படுத்தினார். ராஜியை ஒழுக்ககேடான பெண் என்று சொல்லி கல்லூரியை விட்டு விலக்கிய கல்லூரி முதல்வரும் இதே முகம்தான். என் அப்பாவும் ராகவனும்தான் பல இடங்களிலும் வேறுவேறு விதமான ஆடைகளுக்குள் இருப்பதுபோல தோன்றுகிறது. இருபது முகங்களைக் காண செந்தில்குமாருக்கு ஏற்பட்டிருக்கும் இழப்புகளையும், துன்பங்களையும் யூகிக்க ஒருமுகத்தை பல இடங்களில் காண நேர்ந்தபோது எனக்கு ஏற்பட்ட மனத்துன்பங்களே காரணமாய் இருக்கின்றன.

செந்தில்குமாரின் ஓவியங்களை அடிக்கடிக் கவனிக்கிறேன். எதுவும் அதிகமாய் அவனிடம் பேசும் தேவை தற்போது குறைந்து வருகின்றது. அவனது அறை சுற்றிச் சுற்றி பல கேன்வாஸ்களில் ஓவியங்களைத் தாங்கிக் கொண்டு, ஆவியால் நிரப்பப்பட்டிருக்கிறது. முன்பு போல, அவன் ஓவியங்களில் எழுத்துக் குறிப்புகள் எதுவும் தருவதில்லை. ஓவியத்திலேயே கோடுகள் மூலம் குறிப்புகள் செய்கிறான். அவன் ஓவியங்களைப் புரிய ஆரம்பத்தில் நான் எதிர்கொண்ட நெருக்கடிகளைவிட புரிதல் ஏற்படுத்திய நெருக்கடி பலமானதாயிருக்கிறது. மொத்தத்தில் அவன் ஓவியங்கள், கோடுகள், குறிப்புகள் எல்லாம் நமக்கு ஆதிகால ஓவியமாய் பழையதாய் தீர்ந்து தூசி படிய வேண்டுமென்றே தினமும் பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறேன். அவற்றையெல்லாம் இறந்த காலத்துக்குள் தள்ளி விட்டுவிட்டு பெருமூச்சு விட வேண்டும் போல இருக்கிறது.


புகைப்படம்  - ரகுராய்

புலன்கள் அழிந்த நிழல்கள் - நெடுங்கதை

புலன்கள் அழிந்த நிழல்கள் 

என் படுக்கையைப் பார்க்கிற எவருக்கும் என் படுக்கை ஒரு நோயாளியின் படுக்கை என்கிற மாதிரியான உணர்வைக் கொடுத்துவிடும்.கடைசி காலத்தில் என் பாட்டி அவளுடைய படுக்கையை இப்படித்தான் அலங்கோலப்படுத்தி வைத்திருந்தாள். அவளது படுக்கையைப் பார்த்துக் கொண்டிருப்பதுகூட மனசை சிதறடித்துவிடும். அல்லது எரிச்சல் உண்டாக்கிவிடும். அப்படியிருக்கும் அவள் படுக்கை வயோதிகத்துக்கும் படுக்கைக்குமுள்ள சம்பந்தம்போல இருக்காது. அது அதற்கும் உள்ளே ஏதோ ஒன்று ஊடாடிக் கொண்டிருக்கும். சில நள்ளிரவுகளில் அவளது ஊளைகளும் அர்த்தப்படுத்த முடியாத ஒலிச்சிதறல்களும் அவள் படுக்கையின் அலங்கோலத்திலிருந்து கிளம்புவது போலவே எனக்குத் தோன்றும். என்னுடைய படுக்கையும் மூன்று வருடங்களாய் இப்படியாகிப் போனது உள்ளூர பெரிய துக்கத்தை உண்டாக்கியிருப்பது யாருக்கும் அநேகமாய் வெளியில் தெரியாது என்றே நினைக்கிறேன். பாட்டியின் படுக்கையோடு என்னுடைய படுக்கை ஒத்துப்போகிற மாதிரியான பல தடயங்களை மறைத்துவிட நான் மேற்கொள்கிற முயற்சிகளில் என்னை நானே தூக்கி நிறுத்திக் கொள்வது மாதிரியான மகிழ்ச்சியிருக்கிறது. ஆனாலும் இப்படியான முயற்சிகளின் முடிவு ஒவ்வொன்றும் எனக்கு சாதகமற்றதாகவும், இன்னும் அதிகமான களைப்பை உண்டு பண்ணுவதாகவும் அமைந்துவிடுகின்றன. ஒரு தடயத்தை மறைக்க முயற்சிக்கிறபோதே அடுத்த தடயம் படுக்கையின் மேல்பகுதியில் துலங்கி விடுகிறது. 

என் படுக்கையின் அடிப்பக்கத்திலுள்ள மெத்தைதான் இந்த அலங்கோலத்திற்கான ஆரம்பப் பணிகளைக் கவனித்துக் கொள்வதுபோலப்படுகிறது. அதற்குள்ளே நிறைய அரூபமான நச்சுத் தாவரங்களின் விதைகள் இருக்கின்றன. அவைகளின் உயிர் ‍எழும்போது அதன்மேல் விரிக்கப்பட்டுள்ள கம்பளியும் போர்வையும் எல்லாம் கசங்கி என் களைப்பு பன்மடங்காகிவிடுகிறது.என் உடம்பின் இரத்தம் சதை இவற்றின் ஊடே ஒரு மாயமான திரவம் சுரந்து என்னைப் படுக்கையில் ஆழ்த்தி விடுகிறது. எங்கள் வீட்டின் ஒரு மூலையில் என் அறை இருப்பதால்தான் இந்த விதைகள் வேறு யாரையும் இன்னும் தன் கொடூரமான தாக்குதலுக்கு உள்ளாக்கவில்லை என்று நினைக்கிறேன். இருந்தாலும், இந்த அறைக்குள் உள்ள அந்தரங்கம் ஓரோர் விதத்தில் வீட்டிலுள்ள எல்லோருக்கும் புரிந்திருக்கிறது. வயது வித்தியாசமின்றி இந்த அறை வீட்டிலுள்ள மற்ற எல்லோருக்குமே அசெளகரியத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. எனக்கு இந்த அசெளகரியங்களும், என் படுக்கையும் மிகப்பெரிய சவால்கள்தான். இருந்தாலும் இவற்றை சவால்கள் என்று எனக்கு எடுத்துக்கொள்ள இயலாத மாதிரி விதைகளின் உயிர்ப்பு ஒரு அரூபமான களைப்பை உண்டுபண்ணிக் கொண்டேயிருக்கிறது.

பெரும்பாலும் இந்த படுக்கையிலிருந்து பத்து பத்தரைக்குதான் எழும்ப முடிகிறது. எழும்பி எனக்கான காரியங்களைச் செய்ய ஆரம்பிக்கும்போது வீட்டின் ஏனைய அறைகள் காலியாக இருக்கும். அது ஒரு விதமான கசப்பான போதையை உண்டாக்கும். கொல்லைக்குப் போக இரண்டு மூன்று விளைகள் தாண்டிப் போவேன். ஒரு விளைக்குள் மட்டும் பத்தரை மணி சூரியன் புராண அரக்கன்போல கிடக்கும். அந்த விளையைத் தாண்டும் போதே மிகுந்த களைப்பு உண்டாகிவிடும். திரும்பி வீட்டுக்கு வந்து காலை டிபன் சாப்பிட்டு முடிக்க சுமாராக பதினொன்று முப்பது ஆகும். இதற்குள் களைப்பு இழுத்துக்கொண்டு போய் படுக்கையில் கிடத்திவிடும். இன்று காலை எழும்பும் போதும் இதே மாதிரிதான். வீட்டின் ஏனைய காலி அறைகள் விஷய மற்ற ஒரு சோர்வை ஏற்படுத்தியது. பிளாஸ்கிலிருந்து டீ விட்டுக் குடித்தேன். பிளாஸ்கிலிருந்து டீ விட்டுக் குடிப்பது என்பது எப்படியோ இருக்கிறது. ஜனங்களுக்கு எப்படித்தான் இதெல்லாம் ஒத்துப் போகிறதோ தெரியவில்லை. பிளாஸ்கிலிருந்து டீ குடித்ததும் புதிதாய் ஏதோ ஒரு நோய்க்கூறு உடலினுள் போவதுபோல இருந்தது. அனாவசியமாக சமீபத்தில் எனக்கு ஒரே ஆறுதலாயிருக்கிறவளின் ஞாபகம் வந்தது. அனாவசியமாக வந்ததென்று சொல்ல முடியாது. வாழ்க்கையின் ஒரே பிடிப்பாக இருப்பது அவள் ஞாபகம் மட்டும்தான். அவளது முகத்தைத் திரும்பத் திரும்ப ஞாபகத்துக்குக் கொண்டுவர முயற்சி எடுத்துக் கொள்கிற சிரமத்தில் ஒரு விதமான சுகம் இருக்கிறது. இந்த சுகத்துக்காகத்தான் ஒருவேளை அவள் முகத்தை ஞாபகப்படுத்த முயற்சிக்கிறேனோ என்னவோ தெரியவில்லை. சாயங்காலங்களில் குளித்து புறப்பட்டு அவளைப் போய் பார்த்து விட்டு வருவேன். வழக்கமாக சாயங்காலங்களில் பெரும் பாலும் காலை நேரத்துக்கு நேர் எதிர்மாறாக உடம்பில் புதுத்தெம்பு உண்டாகிறது. அந்தத் தெம்புக்கு ஏதேனும் ஒருவகையில் தீனி போட வேண்டும். எங்கேனும் புறப்பட வேண்டும். ஏதேனும் ஒரு குட்டி மலையையேனும் தள்ளிப்போடு என்று மனம் போடுகிற கட்டளைக்குப் பணிந்து ஒரு குன்றையேனும் தள்ளிப் போடுவதுபோல பாவ்லா காட்ட வேண்டும். இல்லையெனில் காலை வேளைகளில் உள்ள பூச்சிகள் பரவி பல பகுதிகளை அரிக்கத் தொடங்கிவிடும். கழிந்த மாதத்தில் பெரும்பாலும் சாயுங்காலமானால் சங்குத்துறை பீச்சுக்குப் போவேன். பீச்சுக்கு இறங்கிப்போகும் நடைபாதைப் படிக்கட்டில் உட்கார்ந்து இரண்டு சிகரெட்டுகள் புகைப்பேன். சில நேரங்களில் இவை இரண்டு மூன்று என்றுகூட ஆகும். இதையெல்லாம் நீங்கள் துல்லியமான கணக்காக எடுத்துக் கொள்ளக்கூடாது.நீண்ட கடற்கரையில் ஓர் ஓரத்தில் தனியாக உட்கார்ந்திருப்பது செளகரியமானது. மனது வியாபித்து விடுகிறது. மனசுக்குள் பல பேர் நடந்து போக அது வசதியாக இருக்கிறது. வெளியூரிலிருந்து காரில் வருகிறவர்களின் குழந்தைகள் குதிக்கும். அலைகளின் சுருள் நுனிகளில் அவைகள் கால்களைக் கொடுக்கும். பின்னும் குதிக்கும். அவைகள் குதிப்பதற்கும் சிரித்து கும்மாளமடிப்பதற்கும் கால்கள் நனைவதற்கும் ஏதேனும் சம்மந்தம் இருக்குமா தெரியவில்லை. அவைகள் வீடுகளில் இருந்து வரும்போதே குதிப்பது ஆனந்திப்பது போன்ற முடிவுகளோடுதான் வருகின்றன. ஆக இங்கே ஏற்கனவே எடுக்கப்பட்ட ஒத்திகைகளை நிஜமாக நிகழ்த்தாமலிருக்க அவைகளுக்கு சாத்தியமில்லை. ஒத்திகைகளோடு இந்த நிஜம் ஒத்துப் போவது போன்ற பாவனைகளோடு குதிக்கின்றன. உள்ளூர குழந்தைகள் லேசான வெறுமைக்கேனும் ஆளாகியிருக்கும் என்று நினைத்துக் கொள்வேன். பெரியவர்கள் பெரும்பாலும் சில பொதிகளைக் கையோடு எடுத்து வருகிறார்கள். குழந்தைகளை அதட்டிக் கொண்டும் கொறித்துக் கொண்டும் உட்கார்ந்திருப்பார்கள். சிலர் ஒரு எந்திரத்தைப்போல எழும்பி வேகமாகச் சென்று குழந்தைகளை அதட்டி ஏதேனும் சொல்லிவிட்டு சாவகாசமாக நடந்து வந்து உட்கார்ந்திருப்பார்கள். நல்ல ஆரோக்கியமான உணவு வகைகளால் வளர்க்கப்பட்ட அந்த குழந்தைகள் கால் நனைத்துக் ‍குதிப்பதைப் பார்க்கிற தெளிவான மடையனுக்குக்கூட திடீரென அலை நீள வரிசைகளில் இருந்து பத்துப் பதினைந்து காட்டு விலங்குகள் வந்து, குழந்தைகளைக் கொண்டு போனாலே ஒழிய, கடலுக்குள் போக இந்த குழந்தைகளுக்குக் குறைந்தபட்ச வாய்ப்புகூட இல்லை என்பதும் புரியும். பிறகு ஏன் இப்படியான எந்திரவேகத்தில் யாரோ கட்டளைப் பிறப்பித்ததுபோல போகிறார்கள் போட்டோ எடுத்துக் கொள்கிறார்கள். பெரும்பாலும் அவர்கள் போட்டோ ‍எடுக்க தேர்ந்தெடுக்கும் ‍கோணம்,கடலை, அதன் விகாசத்தை இழிவுபடுத்த திட்டமிட்டு செய்கிற சதி மாதிரி இருக்கும்.

கடலைப் பார்க்க வந்திருக்கிறேன் பேர்வழி என்று வருகிறவர்கள் பெரும்பாலோருக்கு கடல் ஒரு பொருட்டாகவே இருப்பதில்லை. கடற்கரையை வீட்டுத் திண்ணையைப் போல அலுவலகத்தைப் போல கிளப்புகள் போல பார்கள் போல சமையல்கட்டுகள் போல உபயோகப்படுத்துகிறார்கள். இவர்கள் ஏன் கடற்கரையைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதை யூகிக்கவே முடியவில்லை. கடற்கரையை கடற்கரையாக நினைக்க இவர்களுக்கு முடிவதே இல்லை. வயதான தம்பதிகள் நீளமாக கடற்கரையில் நடப்பார்கள். எதையும் அதிகமாக பேசிக்கொள்வதில்லை. கடல் நிச்சயமாக அவர்களை என்னவோ செய்கிறது. ஒரு வேளை அவர்களில் கரைகிறது. கடற்கரையில் நீளங்களில் நடந்து போகும்போது திசைகளுக்கு திசை சில கனங்கள் அவர்களது பார்வைகள் மெதுவாக நின்று நின்று நகரும். கடல் அவர்கள் கண்களுக்கு ஒரு பிரகாசத்தைக் கொடுக்கிறது. சில வெளிநாட்டு ஜோடிகள் எப்போதேனும் வருவார்கள். சூரியன் மங்கும் நேரத்தில் அவர்கள் படுத்திருப்பதைப் பார்ப்பது ஒருவிதமான காமத்தை உண்டுபண்ணுகிறது. பெரும்பாலும் இங்கு வருகிற வெளிநாட்டுப் பெண்களின் விறைப்பு நம் பெண்களை பல நூற்றாண்டுகளுக்குப் பின் தள்ளுவதுபோலப்படுகிறது. அவர்களுக்கும் நம்மேல் ஒர் இழிவான பார்வை இருக்கும்போல. அதனாலேயே அவர்களோடு ஏதேனும் பேசலாமே என்று எனக்கு வருகிற எண்ணத்தையும் மறைத்துக் கொண்டு அவர்களைப் பொருட்படுத்தாததுபோல் உட்கார்ந்திருப்பேன். அவர்கள் கடலைத் திட்டமிட்டு பார்ப்பதுபோல பார்க்கிறார்கள். பார்க்கவேண்டும் என்பதுபோல பார்க்கிறார்கள் என்றே நினைக்கிறேன். கரையின் பலமுனைகளுக்கும் போய் நின்று பார்க்கிறார்கள். எந்த நாட்டுக் காரர்கள் என்றெல்லாம் சொல்லும் விரிவான அறிவு எனக்கில்லை என்றாலும் வெளியிலிருந்து வருகிறவர்கள் இப்படி முனைக்கு முனை சென்று பார்ப்பதை நிறுத்தினால் பரவாயில்லை. தனியாக வருகிற வெளி நாட்டுக்காரர்கள் வேறுவிதமாய் நடந்து கொள்கிறார்கள். இப்படி‍ யெல்லாமான காட்சிகள் எல்லாம் ஒருவிதமான எரிச்சலையும், ஆறுதலையும் ஏற்படுத்திக் கொண்டே இருக்கும்.ஒருசாட்சிதான் மிகுந்த அருவருப்பை உண்டுபண்ணுகிறது. ஐந்து ஆறு மணிக்கெல்லாம் முறுக்கேறிய உடலைத் திட்டமிட்டு உற்பத்தி செய்துகொண்ட நான்கு அல்லது ஆறுபேர் வரை வருகிறார்கள். கடற்கரையின் நீளத்தின் ஒரு பகுதியில் வெள்ளை உடைகளோடு கராத்தே பயிற்சி எடுக்கிறார்கள். கால்களை ஒரு மனிதன் எவ்வளவு உயரத்துக்குத் தூக்க முடியும் என்று கற்பனை செய்து கொள்வோமோ, அதைவிட இரண்டு மூன்று இஞ்சுகள் குறைவாக அவர்களுக்குத் தூக்க முடிகிறது. அந்த ஒவ்வொருவருமே கற்பனையான ஒரு எதிரியைத் திட்டமிட்டுக் தூக்கிக் கொண்டே முன்னேறுகிறார்கள். பின்பு ஆரம்பநிலைக்கு எதிரியை வரவழைத்து மீண்டும் தாக்குகிறார்கள். எதிரியைப் பெரும்பாலும் இவர்களது கற்பனைக்குள்ளேயே இருக்கும்படி பார்த்துக் கொள்கிறார்கள். இவர்களின் கவனங்கள் கடற்கரையில் உட்கார்ந்திருப்பவர்களிடமே இருக்கிறது. கரையில் இருப்பவர்களின் கவனங்களே அவர்களது தாளகதியை இயக்குகிறது. உடலைப் பிழிந்து எடுக்கிறார்கள். பகுதிகள் பிதுங்கி வியர்வை வெளியேற அவர்களின் எதிரி சோர்ந்து போவான்போல. சாயங்கால கடற்கரை எவ்வளவோ இலகுவாக இருக்கிறது. சூரியனை கடலிலிருந்து பிரித்து எடுக்க எடுக்க கடல் விருப்பப்படுகிற மாதிரியான இளம் பெண்ணாகி விடுகிறது. அதன் மிகுந்த நாணத்தைப் பொருட்படுத்தாமல் அவளைக் கற்பழிக்க விறைத்து நிற்கும் குறிகளைப்போல இவர்கள் நிற்பார்கள். ஆட்கள் மெதுவாகத் திரும்பத் தொடங்கியதும் இவர்கள் விறைப்பு துணிந்து ஆடைகளை உடுத்திக் கொண்டு கிளம்பு தணிந்து ஆடைகளை உடுத்திக் கொண்டு கிளம்புவார்கள். கிளம்பும்போது முகமெல்லாம் வெறுமை படர்ந்து இருக்கும்.காமமும் வெறுமையுமாய் அலைக் கழிக்கப்படுவதில் உள்ளூர அவர்களுக்கு ஒரு லயிப்பு இருக்கிறதென்று நினைக்கிறேன். இவர்களது நடவடிக்கை கடற்கரையின் பெரும்பகுதியை வன்முறைக்களமாக்கி விடுகிறது. ஏழு ஏழரைக் கெல்லாம் ஆட்கள் கரையேறத் துவங்குவார்கள். ஆட்கள் எல்லோரும் போனபின்பு இந்த கடல் என்ன மாயக் கோலமெல்லாம் போடுகிறது? போதை உண்டு பண்ணுகிற லாவகங்கள், இருட்ட இருட்ட பெரிய கண்கள் போல மாறிவிடுகிறது கடல். அப்போது மீண்டும் ஒரு சிகரெட் அந்த நேரத்தில் இருக்காது. தீப்பெட்டியில் இருந்து சில குச்சிகளைக் கிழித்துப் போடுவேன். வழக்கமாகத் தீக்குச்சிக் கிழித்து போடுவேன் என்று சொல்ல முடியாது. அதோடு தீக்குச்சி கிழித்து போடுவது என் பிரக்ஞையிலும் இருப்பதில்லை. அப்புறமாய் வீட்டுக்கு நடக்கும்போது மனசில் பூச்சிகள் பறக்க முடியாதபடி ஒரு நெருப்பு சுழன்று கொண்டிருக்கும்.

இந்த மாதம் கடல் இருந்த இடத்தில் ஒரு பெண் புகுந்துவிட்டாள். ஒரு நாளில் ஒரே ஒரு பார்வை மட்டும்தான் அவளிடமிருந்து எனக்குச் சாதகமாக கிடைக்கிறது என்றாலும் என்னுடைய இருப்பை அவள் உணர்வது அரைமணி நேரம் மிகுந்த சிரமத்தையே அவளுக்குத் தருகிறது. அதை சமாளிக்க நேர்த்தியான பல தந்திரங்கள் அவளிடமிருக்கின்றன. ஒருவேளை நான் வராமலிருந்தால்கூட இந்த நேரத்தில் இந்த இடத்தில் அவள் இந்த சிரமங்களை எதிர்கொள்ள வேண்டும்போல. அப்படி பழக்கமாகிவிட்டது அவளுக்கு. எனக்கு சிரமங்கள் ஏற்படாதவாறு ஒரு பாதுகாப்பான நிலையிலேயே நான் நின்று கொள்வேன். அவளுக்கு ஏற்படும் சிரமங்கள் மகிழ்ச்சியான சங்கடத்தைத் தருகின்றன. மொண்மையான பெண்களின் இத்தகைய சிரமங்கள் கீறிச்சிடுவது போல், தரையில் இருந்து உயரே பறப்பதுபோல், இவள் எரிச்சலை உண்டாக்குவதில்லை. உராய்வுகளை ஏற்படுத்துவதில்லை. ஒரு பெண்ணின் இத்தகைய சிரமங்கள் பற்றிய எனக்குள் உள்ள கற்பனைகளும் இவளது சிரமங்களும் சந்தித்து ஒரு உரையாடல் நடத்தினால் பரஸ்பரம் அவை தங்கள் உறவுகளைப் பரிமாறிக் கொள்ளமுடியும். அவளது சிரமங்கள் பெயிண்டிங் நுட்பங்கள் போல் தோன்றுகின்றன. அவளது பெயர் தெரிய எனக்கு விருப்பமில்லை. எனக்கும் அவளுக்குமான இந்தச் சாயங்கால உறவுக்கு பெயர் அந்த அளவு முக்கியமானதல்ல. சாயங்காலம் மட்டும் முக்கியம். அவ்வளவுதான். எனக்கான இந்த பெண் வருவதற்கு முன்னால் வேறு இரண்டு பெண்கள் வருவார்கள். அவர்கள் வந்து பதினைந்து நிமிடங்களுக்குள் அவர்கள் போகவேண்டிய பேருந்து இந்த சந்துக்கு வரும். அதில் ஏறிப்போவார்கள். நான் கவனிக்க முடிந்த பதினைந்து நாட்களுக்குள்ளாகவே அவர்களிடம் நேர்த்தியான பல ஆடைகள் இருப்பது தெரிந்தது. அவர்களைக் கவனிப்பதற்கு அந்த ஆடைகளின் நேர்த்தி பெரிதும் உதவுகிறது. இரண்டுபேருமே உணவு பிரச்சனைகள் இல்லாத குடும்பங்களால் வளர்க்கப்பட்ட உடல்களைப் பெற்றிருக்கிறார்கள். இந்த பதினைந்து நாட்களில் நானும் அவர்களது கவனத்தைப் பாதித் திருக்கிறேன். ஏதோ ஒருவிதத்தில் நான் அவர்களுக்கு சவாலாகக்கூட இருக்கிறேன் என்று சொல்ல வேண்டும். இரண்டு பேரும் பார்வைகளை என் கண்கள் நோக்கி மாற்றிக் கொண்டிருப்பது அவர்களுக்குள் போட்டி நடப்பதை எனக்கு உணர்த்துகிறது. இரண்டு பேரும் அவர்கள் போட்டிக்கு சம்மந்தம் இல்லாத ஏதோ விஷயங்களைப் பேசிக்கொண்டிருப்பதற்கு மத்தியின் என் கண்கள் அவர்களுக்கிடையில் விழிப்பு நிலையில் இருக்கின்றன. அந்த இரண்டு பெண்களில் ஒரு பெண்ணின் செய்கை அடுத்தப் பெண்ணை ஜெயிக்க சில வெளிப்படையான கிறீச்சிடல்களையும் செய்கிறது. நான் இந்தப் பெண்ணை லேசாய்த் தவிர்க்க முயற்சிப்பது அவளைச் சுருக்கி அவளது கிறீச்சிடல்களைப் பெருக்குகிறது என்றாலும், இரண்டு பேருக்குமாக என் விழிகள் மாறுவது அவர்களில் ஒருவர் தன்னை ஸ்தாபித்துக் கொள்ளுதல் என்பதற்கு மிகுந்த தடையாக உள்ளது. யாரோ ஒருவர் தன்னை ஸ்தாபித்து முடிகிற பட்சத்தில் என் கண்கள் அவர்கள் இரண்டு பேருக்குமே சாரமற்றதாக ஆகிவிடும். அதிலும் அந்த கிறீச்சிடுகிற பெண், உடல்வாகு எல்லாம் சாதாரண பல இடங்களில் அவளுக்கு மற்ற பெண்ணை எளிதில் வென்றுவிட சாதகமானதாக இருக்கக்கூடியதுதான். அதனாலேயே அவளுக்கு மிகுந்த சவாலை என் கண்கள் உண்டு பண்ணியிருக்கின்றன. எதிர்கொள்கிற ஒவ்வொரு கண்ணிலும் அவர்களுக்குள் இப்படி ஒரு சவால் இருக்கும்போல.
 
இன்று காலையில் கொல்லைப் பகுதிக்குப் போவதற்கு முன் வீட்டின் முன் வராண்டாவில் உட்கார்ந்திருந்தேன். இருப்பதற்கு விருப்பம் இல்லாமலேயே இருக்க வேண்டியிருக்கிறது. எதிரில் தார் ரோட்டில் பதினொரு மணிக்கு சூரியன் அப்பிடிக் கடப்பது களைப்பை அதிகரித்தது. ரோட்டின் புறங்களில் தென்னை மடல்களின் இருளை சூரியன் ‍எதுவும் செய்ய முடியவில்லை. இந்த மாதிரி நேரங்களின் மடல்களின் இருளைப் பார்ப்பது தணுப்பாக இருக்கும் என்றாலும் ரோட்டில் அப்பிக் கிடக்கும் சூரியன் அதைப் பார்த்துக் கொண்டிருப்பதற்கு எதிரான ஒரு மனநிலையை உண்டுபண்ணுகிறது. நடந்து கொல்லைப்பகுதிக்கு சென்று வந்ததும் களைப்பு அதன் உச்சநிலைக்கு வந்துவிடும். சூரியனின் அடங்கல் வினளதாண்டி போவதைப்பற்றி நினைக்கும்போதே உடம்பின் மேல்பாகத்தோலின் அடிப்பாகத்திலுள்ள கொழுப்பு கொதித்து உருகத் தொடங்கிவிடுகிறது.

சமையல்கட்டுக்குப் போனேன். கொஞ்சம் தண்ணீர் குடித்தேன். சில எச்சில் பாத்திரங்கள் கைகழுவும் பேஸினுக்குள் கிடக்கின்றன. உடம்பெல்லாம் புண் வந்ததுபோல். எதனாலோ அவை அப்படி கிடப்பதைப் பார்க்கப் பிடிக்கவில்லை.சில குப்புறக் கிடக்கின்றன. சில பக்கவாட்டில் சரிந்துப் பார்வையைத் தவிர்த்தும்கூட அவைகள் என்னை விட்டபாடில்லை. பிடித்திழுக்கின்றன. ஞாபகத்தின் ஒரு காட்சியாய் கட்டித் தழுவுகின்றன. என் அறைக்குள் வந்தேன். என் அறைக்குள் இருந்த களைப்பை உண்டாக்கும் இருட்டு இன்னும் தன் புது விழிப்பு நிலையில் இருந்தது. ஜன்னல்களைத் திறந்ததும் வெளிச்சம் உள்ளே நெளிந்தது. என் அறைக்குள் உள்ள இருட்டுப் பகுதியைத் துப்புரவாக வெளியேற்ற அந்த மேற்குப்பக்க ஜன்னல் காலையில் அவ்வளவாக உதவாது. காலையில் அதை திறந்ததும் அதன் வழியே வரும் வெளிச்சம் என் அறையில் இருட்டோடு ஏதோ கெஞ்சும். மிகப் பெரிய கெஞ்சலுக்குப் பிறகு ஒரு ஒப்பந்தத்திற்கு வந்து இரண்டு பேரிடமும் உள்ள பாதிப்பாதி சாராம்சங்கள் இங்கிருக்கலாம் என்று முடிவு செய்கின்றன. துணி துவைக்கலாம் என்று எனக்கிருந்த முடிவை யாரோ என் உடம்புக்குள்ளிருந்து தவிர்ப்பதுபோல உணர்ந்தேன். கொல்லைக்குப் புறப்பட்டபோது மணி பதினொன்று முப்பத்தைந்து இருக்கும்.இரண்டு விளை தாண்டும் போதே உடம்பின் முதுகுப்புறமும் இடுப்புப்பகுதியும் வலிப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. மூன்றாவது விளை தாண்டும்போது அது இன்னும் அதிகப்பட்டிருந்தது. அப்போது எனக்குப் பரிச்சயமான ஞானசெல்வம் வீட்டு நாய் விளையின் முள்வேலியின் ஓர் இடுக்கு வழியே உருவி ஒடிக் கொண்டிருந்தது. என்னைக் கண்டு அது ஓடுவதற்கான காரணம் எதுவும் எனக்குத் தெரிந்து இருக்கவில்லை. எப்போதேனும் ஒரு கல்லை இதன் மேல் விட்டெறிந்த தாகக்கூட ‍எனக்கு ஞாபகம் இல்லை. அதற்கு மனிதர்கள் பேரில் ஒட்டுமொத்தமான அபிப்பிராயம் உண்டாகியிருக்கிறதென்று தோன்றியது.
ஞானசெல்வம் வீட்டு அந்த நாய் உத்தேசமாகப் பத்து வருடங்களுக்கு முன்னால் சின்னக் குட்டியாக வந்து சேர்ந்தது. ஞானசெல்வம் வீட்டு மணி, தான் கே.ஆர்.விஜயா வீட்டில் டிரைவர் வேலை பார்ப்பதற்காகச் சொன்னதை எனக்கு நம்ப முடிந்தாலும், அந்த குட்டி நாயையும் அங்கிருந்தே கொண்டு வந்திருப்பதாகச் சொன்னதை எனக்கு நம்ப முடியவில்லை. ஊரிலுள்ள பலரும் நாய்க்குட்டியைப் பார்க்கப் போனார்கள். சில பெரியவர்களுக்கு அந்த நாய்குட்டியைப் பார்க்க விருப்பமிருந்தாலும் ஒரு நாயைப் பார்க்கப் போவது எப்படி என்ற மனத்தடை அவர்களுக்குச் சிரமமாக இருந்தது. இருந்தாலும் பல பெரியவர்கள் ஞானசெல்வம் வீட்டின் வழியாக நடக்கிற சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொண்டு பார்த்து வந்தார்கள். ஊரில் டி.வி. இல்லாத வீட்டில் உள்ள பெண்கள் தாராளமாகப் போய் பார்த்துவிட்டு வந்தார்கள். அதன் உடம்பு பூராவும் இருந்த உரோமம் அதோடு கொஞ்ச வேண்டும் என்கிற மன ஸ்பரிச உணர்வை பலருக்கும் உண்டு பண்ணியது. அதன் கண்கள் அதன் ப்ரவுன் கலர் உரோமத்துக்குள் சுறுப்பாய்த் தெரிந்தது. காதுகள் மடிந்து இறுக்கமற்று லேசாய் தளர்ந்து கிடந்தன. தனியாக அது துள்ளிக்குதித்து விளையாடிக் கொண்டிருந்தது எல்லோருக்கும் அபூர்வமாக இருந்தது. தென்னை நிழல்களின் கீழே அது குரைத்துக் கொண்டு திரிந்தது மன சந்தோசத்தை ஏற்படுத்தியது. அந்தக் குரைப்பை எல்லோரும் செல்லமாக எடுத்துக் கொண்டார்கள் என்றே சொல்ல வேண்டும். அந்த குரைப்பிலும் கான்வென்ட் பெண் பிள்ளைகள் இங்கிலீஷ் பேசுவது போன்ற த்வனி தெரிந்தது. அந்த வீட்டு வேலி வளாகத்துக்குள் அது ஒற்றைக்கு ஆட்டம் போட்டுக் கொண்டு திரிந்தது. அது வேலியை விட்டு வெளியே வருவதில்லை. அந்த வேலிக்குள் தென்னை நிழல் விழுந்துகிடக்கும் தரைதான் அதன் வளாகம். கழுத்தில் கட்டப்படாத கயிற்றின் இழுப்புக்கு உட்பட்டு அதன் காரியங்கள் நடப்பதுபோல இருக்கும். யாரேனும் பிள்ளைகள் அல்லது பார்க்க வருகிறவர்கள் அதை கையிலெடுத்து வைத்துக் கொஞ்சிக் கொண்டிருந்தால் மணி அதை கீழே விடும்படி சத்தம் போடுவான். அவனுக்குள் எல்லோரும் இப்படித் தூக்கித் தூக்கி விட்டால் நாய் நரங்கி போகும் என்கிற எண்ணம் இருந்தது எனக்கு நியாயமாகவேத் தோன்றியது. அப்படி இல்லாவிட்டால் இந்த நாய்க்குட்டியை இந்த ஜனங்களிடமிருந்து காப்பாற்ற முடியாது என்பது உண்மையே.எனவே மணியின் குரல் பலருக்குச் சங்கடத்தையும் தற்பெருமை கொண்டவனின் அகங்காரம் அது என்பது போலவும் ஏற்பட்ட மன உணர்வுகளை எல்லாம் எனக்கு நியாயமானதென்று எடுத்துக்கொள்ள முடியவில்லை. மணியோடு சில வேளைகளில் அது சைக்கிளில் போகும் போது ஏனைய ஊரில் உள்ள நாய்களின் சாயத்தை வெளிறச் செய்துவிட்டது போன்ற உணர்வை ஏற்படுத்தும். பெரும்பாலும் ஊரிலுள்ள பல நாய்களுக்கும் இது சங்கடத்தை உண்டு பண்ணியிருந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை. பலர் தங்கள் தங்கள் நாய்களின் மேல் அன்பு காட்டுவதற்கு இடைப்பட்டப் பகுதிகளை இந்த குட்டி நாய் அடைத்துக் கொண்டது. அந்த நாய்குட்டிக்கு மணி வைத்திருந்த பெயர் இப்போது எதனாலோ ஞாபகம் வைத்து கொள்ள முடியாதபடி மறந்து போனது. அது ஒரு வெளிநாட்டுக் காரியின் பெயர். இந்த குட்டி ஆண்நாய்க்கு ஏன் மணி வெளி நாட்டுப் பெண்ணின் பெயரை தேர்ந்தெடுத்தான் என்று தெரியவில்லை. ஊரில் அந்த பெயர் உச்சரிக்கப்படுகிற முறைக்கும் அந்த குட்டி நாயின் கவர்ச்சிக்கும் தொடர்புகள் உண்டா என்றும் தெரியவில்லை. ஆனால் ஊரில் அந்த பெயரின் அழுத்தத்தில் மந்திரத்துக்குண்டான சக்தி எல்லோருக்கும் தெரிந்தது. இப்போது அதன் ரூபமே மாறியிருப்பதைப் பார்க்க ஒரு விதமான மனச்சங்கடம் உண்டாகிறது. அதன் முதுகில் குத்தாய் ரோமங்கள் அடர்ந்து அடர்ந்து புண்களாய் இருக்கின்றன. அதன் கண்கள் ஏதோ ஒரு ரீதியில் தாக்குவது போல உள்ளது. சில தூக்கமற்ற ராத்திரிகளில், நினைவுகளின் போதைக் களைப்பை ராத்திரிகளில், நினைவுகளின் போதைக் களைப்பை அனுபவித்து தன் நச்சுக் காற்றை என் தூக்கமின்மையில் கரைக்கும்போது இதன் ஊளைகளைக் கேட்டிருக்கிறேன். ராத்திரிகளில் தூக்கமற்ற வேளைகளில் கேட்க முடிகிற சகலவிதமான நுட்பமான மெளன சப்தக்கூறுகளையும் இதன் ஊளை உடைத்தெறிந்து விடுகிறது. புண்களின் கனம் அந்த ஊளையில் ஊடுருவியிருக்குமோ என்னவோ. அப்போது இரவின் அலங்காரங்கள் எல்லாம் உதிர்ந்து காற்றின் சலசலப்பில் பறக்கும். காற்றற்ற ராத்திரிகளில் அலங்காரங்கள் உதிர்ந்து போட்டது போட்டபடி கிடப்பது மன இறுக்கத்தை ஏற்படுத்துகிறது. கண்டிப்பாக இந்த ஊளை வயோதிகத்தால் நோயுற்றவர்களுக்குப் பெரிய நெருக்கடியை உண்டுபண்ணும் என்பதில் சந்தேகம் இல்லை. ஊரில் வயோதிகப் படுக்கையில் இருப்பவர்களுக்கு பெரும்பிரச்சினைதான் இது வயோதிகத்தின் மனப் புண்ணுக்கு ஆளான இவர்களுக்கு இந்த ஊளை தரும் நெருக்கடியை எதிர்கொள்ளுவது நிச்சயமாக சாதாரணமாக இருக்காது. இந்த வயோதிகர்களின் தூக்கமின்மைக்கு அவர்கள் இது இல்லாவிட்டாலும் கூட ஏதேனும் காரணங்களைச் சொல்லக்கூடும். பூச்சிகளின் சத்தம் மகனின் படுக்கை அறையின் நுட்பமான ஒலி சருகு பறக்கும் சத்தம் எல்லாம் கூட அவர்களுக்கு இடையூறாய் இருக்கலாம். அதற்காக, சருகுகளைக் காற்றில் பறக்காமல் தடுப்பதற்கில்லை. ஏதேனும் ஊரும் பிராணிகள் ஓலைகளில் உண்டாக்கும் சத்தங்களை அல்லது யாரோ நடப்பது போன்ற உணர்வு ஏற்பட்டு அதன் எல்லையில் அது கலைந்து போவதை என்று எல்லாவற்றையும் தவிர்ப்பதற்கில்லை. இருந்தாலும் இந்த நாயின் ஊளையின் வழியாய் அவர்களின் மனப்புண்களைத் துளைத்துச் செல்லும் மின்கம்பி போன்ற திரவம் தரும் நெருக்கடி சாதாரணமானதில்லை. இந்த வயோதிகங்களுக்கு இந்த நாய் பேரில் உள்ள வெறுப்புக்கு வேறுவிதமான என் யூகங்களுக்கு வரவே முடியாது. காரணங்களும்கூட இருக்கலாம்.

சுடலைமணிக்கு இந்த நாய்பேரில் மிகுந்த வெறுப்பு இருக்கிறது. சுடலைமணி இந்த நாயை காணும் சமயங்களில் கல்லெடுத்து விரட்டி விரட்டி எறிவது அவரது நாற்பத்தைந்து வயதுக்கு பொருந்துகிற மாதிரியாய் இருக்காது. ஊரில் இந்த நாயைக் கல்லால் அடிக்கிற வேறு பல நாற்பத்தைந்து வயதுக்காரர்கள் இருக்கிறார்கள் என்றாலும், சுடலைமணியின் கல்வீச்சில் தெரிகிற வெறுப்பை ஏனையவர்களின் கல்வீச்சில் காண முடிவதில்லை. சுடலைமணியின் காம்பவுண்டுக்குள் எப்போதேனும் இந்த நாயைக் காண முடிந்தால் சுடலைமணியின் மொத்த உயிரும் ஏதோ ஒரு ரீதியில் அதிர்கிறது. அதைக்கொன்றால் மட்டுமே அவர் நிம்மதியாக இருக்கமுடியும் என்கிற நிலைக்கு வந்துவிட்டார் என்ற‍ே தோன்றுகிறது. பலமுறை அவர் இந்த நாயைக் கொல்ல எடுத்துக் கொண்ட முயற்சிகள் கடைசி சமயத்தில் செல்லுபடி ஆகாமல் போனது அவருக்கு உள்ளூர நாய் பேரில் அவர் கொண்டுள்ள வெறுப்புபற்றி ஏதேனும் பேசலாம் என்று எனக்குப் பலமுறை தோன்றியிருக்கிறது என்றாலும், அவர் அதை எப்படி எடுத்துக்கொள்வார் என்று எனக்குள் உள்ள தயக்கம் காரணமாகக் கேட்க முடியவில்லை. இப்படி என்னுடையது மாதிரியான தயக்கங்கள்தான் அவர் தன்னை ஸ்தாபித்துக்கொள்ள சாதகமாக இருக்கிறது என்று நினைக்கிறேன். இந்தத் தயக்கம் லேசாய் பொட்டித் தெறிக்குமானால்கூட அவர் உள்ளூர நிலைகுலைந்து போகிற மாதிரியாய் ஆகிவிடக்கூடும். அதன்மூலம் அவர் அந்த நாய்‍ பேரில் கொண்டுள்ள வெறுப்புக்கு அவர் தயாரித்து வைத்திருக்கிற நியாயங்கள் எல்லாம் குப்புற சரிந்துவிடக்கூடும். என்றாலும் எனக்கும் அவருக்குமான உறவுக்கு இடைப்பட்ட எனக்கும் அவருக்குமான உறவுகள் இடைப்பட்ட வெற்றிடத்தை நிரப்பிக் கொண்டுள்ள இந்த தயக்கம் பொட்டிப் போவதால் இன்னும் அதிகமாய் ஏற்படுகிற பிளவு எந்த வகையிலும் என்கு சாதகமானதல்ல.வேலை எதுவும் இல்லாமல் ஊரில் தனியனாய் அறுத்துவிடப்பட்டுள்ள என்னைப் போன்ற ஒருத்தனுக்கு தன்மேல் புதிதாய் பாய்கிற வெறுப்பு மனநிலைக்கு ஆரோக்கிய குறைவையே ஏற்படுத்தும். இப்படி கணக்கு பார்க்கப் பார்க்க தயக்கத்தின் கூர்மை இறுகிக் கெண்டேதான் போகிறது. ஆக சுடலைமணியிடம் கேட்பதென்பது தற்பொழுதுள்ள நிலையில் எனக்கு சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது. 

சுடலைமணி சராசரிக்கும் சற்று அதிக உயரம் கொண்டவர். சத்தம் போட்டு பேசுகிற சுபாவம். அந்த அதிகப்படியான சத்தத்தில் உள்ள த்வனி தன் ஸ்தாபிதத்துக்கு எடுத்துக் கொள்கிற முயற்சியாய்த் தோன்றும். எந்த இடத்திலும் தன்னை ஸ்தாபித்துக் கெள்ளும் வலு சுடலைமணியின் சரீரத்துக்குள் கண்டிப்பாய் இருக்கும் என்று நம்புவது யாருக்கும் பெரும்பாலும் சிரமமாக இருக்காது. நிச்சயமாக ஏதோ வசியத்தை அந்த சரீரம் பெற்றிருப்பதை சுடலைமணியின் முகம் உடலின் மதமதப்பு எல்லாம் நிறுவிக் கொண்டேயிருக்கும். முகத்தின் அடியாழத்தில் லேசாய் மங்கிப் போய்த் தெரியும் நிழல் சுடலைமணியின் ஆரம்பகால வறுமையை லேசாய் நினைவுபடுத்தும்.முகத்தில் தன் ஆரம்பகால வறுமைக்கு சுடலைமணியின் சரீரம் தக்க வைத்திருக்கும் ஒரேயொரு தடயம் அதுதான் வைத்திருக்கும் ஒரேயொரு தடயம் அதுதான் என்றும்கூட சொல்லமுடியும். ஆனால் இதையெல்லாம் மீறி சுடலைமணியை உள்ளூர ஏதோ ஒருவித வினோத பயம் ஆட்கொண்டுள்ளது என்கிற மாதிரியான எண்ணம் சுடலைமணியின் பரபரப்பில் ஒட்டிக் கொண்டிருக்கும். இந்த பரபரப்பால் சுடலைமணி பல இடங்களில் தடுமாறுவதை உண்டுபண்ணும் மாயப் பரபரப்புக்கான காரணம் எது என்றும் தெரியவில்லை. பயம் திடீரென்று தாக்குகிற சமயங்களில் சுடலைமணியின் மொத்த சரீரம் காப்பாற்றி வருகிற ஆகிருதிகள் எல்லாம் இறங்கி சாரமற்று சுடலைமணி கொந்தளித்துப் போவார். அவரது கற்பனைகயின் வழியே வந்து பாயும் கொந்தளிப்பு சில சமயங்களில் எதிர்கொள்ள முடியாதபடி பொய்யின் வலு கூடிப்பெருத்திருக்கும். இப்படியான சுடலைமணியின் கற்பனைக் குதிரை சுடலைமணியின் மனைவி, குழந்தை மீதும்கூட பாய்ந்திருக்கிறது. கற்பனைக் குதிரையின் சாகஸத்திலும், அதன் நேர்த்தியிலும் சுடலைமணியின் மனைவி பலமடங்கு தளர்ந்து போவாள். தளர்ந்து போனபின் குதிரை ஜெயத்தை வெளிப்படையாக அறிவிக்கும். சுடலைமணி தன் ஆரம்பகாலத்தை மூடி மறைக்க ‍எடுத்துக்கொள்கிற முயற்சிகளும் அசாதாரணமானவை.இவற்றைக் கடந்தும் அவை வெளியே மிதக்க ஆரம்பிக்கும்போதுதான் சுடலைமணியின் கால்கள் நடுங்குகின்றன. பாதங்களைப் பூமியில் நிலைகொள்ள வைக்க முடியாமல் போகிறது. சுடலைமணிக்கு டவுணில் பல உயரதிகாரிகளோடு தொடர்பு உண்டு. அவர்களோடுள்ள உறவுக்கு சுடலைமணி கொடுக்கிற விலைகளும் அசாதாரணமானவை. சில அதிகாரிகளுக்குப் பெண்களை ஏற்பாடு செய்யும் தரகும் சுடலை மணிக்கு உண்டு என்று சொல்கிறார்கள். அப்படியிருந்தாலும் எனக்கு அது அதிர்ச்சியான அல்லது ஆச்சரியமான விஷயம் அல்ல. தன்னை உள்ளூர மறைத்துக்கொள்ள சுடலைமணி இப்படியெல்லாம் விலையுயர்ந்த சாயங்களைப் பூசிக்கொள்ள வேண்டியிருக்கிறது. இப்படியான சாயங்களின் வழியாகத்தான் சுடலைமணியின் கால்கள் பாவுகின்றன. உயர் அதிகாரிகளோடு இவர் கொண்டுள்ள இந்த தொடர்புக்கும் விசுவாசத்திற்கும் நேர் எதிர்மாறானவை அவர் ஊரில் கீழ்நிலையில் உள்ளவர்களோடு‍ கொண்டுள்ள தொடர்பு. அந்தத் தொடர்பில் அவர் கொண்டுள்ள வன்முறையின் அடர்த்தி மொத்தமும் தான் அந்த நாய்மேல் பாய்வதுபோல என் காட்சியில் படுகிறது. 

பூத்தங்கம் பற்றியும் இந்த இடத்தில் நான் ஏதேனும் சொல்ல முடியும். இந்த நாய் குட்டியாக இருந்தபோது அதன் பேரில் மிகுந்த செல்வம் காட்டியவள் பூத்தங்கம். அந்த நாய் மீது காட்டிய செல்லத்தின் மூலம் மன ஸ்பரிச உணர்வுக்கு ஆளான ஜனக்கூட்டத்தில் ஒருத்தி என்றும்கூடச் சொல்லலாம். எனக்கு அவள் அந்த குட்டி நாளை கையில் எடுத்து வைத்துக் கொஞ்சிக் ‍கொண்டிருக்கும் சில காட்சிகள் மனவெறுமைக் கூடுகிற சமயங்களில் ஞாபகத்துக்கு வரக்கூடியவையாகவும், அதன் இயற்கைக்கு எதிரான தன்மை மூலமாய் அந்த காட்சி உறைந்து எனக்கு மன இறுக்கத்தை ஏற்படுத்துவதையும் அந்த காலகட்டத்தில் கவனித்திருக்கிறேன். இப்போது அந்த காட்சி என் வெறுமையில் இணைகிற கணங்களில் மிகுந்த களைப்பை ஏற்படுத்திவிடுகிறது. பாதியுடல் அறுக்கப்பட்டு புண்ணாகிப்போன ஒரு தரிசுப் பாறையின் வெயில் தகிக்கும் சாய்ந்த பரப்பில், ஒரு குத்தாய் சில பூச்செடிகள் நிற்பதுபோல இருக்கலாம் அது. பூத்தங்கம் அந்த நாயைக் கொஞ்சுவது எனக்கு உயிர்ப்புக்கு எதிரானதுபோல இருந்தாலும் அது இப்போது முக்கியமானதல்ல. பூத்தங்கத்துக்கு இப்போது அந்த நாய் பேரில் ஏற்பட்டிருக்கும் சரிவுதான் முக்கியம். இப்படியேன் ஒரேயடியாக சரிவு நிகழ்கிறது என்பதில் எனக்குள் அதிர்ச்சி கலந்த புதிர் தேங்கி நிற்கிறது. பூத்தங்கம் அந்த நாயைப்பற்றி பெரும்பாலோரோடு பேசும்போதும் பராதிகள் சொல்கிறாள். ஒருவேளை இந்த நாய்பற்றிய பராதிகளைப் பிரச்சாரம் செய்யத்தான் எல்லோரிடமும் பேச்சு ஆரம்பிக்கிறாளோ என்னவோ. ஞானசெல்வம் வீட்டு நாய்பேரில் அவளுக்கு உள்ள ‍வெறுப்பு அதன் அடர்த்தி குறையாமல் ஞானசெல்வம் பேரிலும் மணி பேரிலும்கூட இருக்கிறது. ஞானசெல்வத்தை கூதறத் தேவடியாள் என்கற ‍பெயரில்தான் அடையாளப்படுத்துகிறாள். புதிதாக யாரெனும் அவளோடு பேசவேண்டி வந்தாலும் அவள் ஞானசெல்வத்தை அல்லது அந்த நாய் வீட்டுக்கார அம்மாளைத்தான் இப்படிக் கூப்பிடுகிறாள் என்பதைத் தெரிவிக்கும்படியான இணைப்புகள் அவள் பேச்சில் இருக்கும் மணி புற காரணங்களால் பிடிக்காமல் ரீதியான பெண்கள் எல்லோருக்கும் அல்லது பாலியல் ரீதியான பெண் தொட்டிகளுக்கும் (அவளுக்குப் பிடிக்காமல் போகிறவர்கள் எல்லோரும் அவளைப் பொறுத்த வரையில் இப்படித்தான்) மணிக்கும் தொடர்பு உண்டு என்பதும் அவள் பிரச்சாரத்தின் ஒரு பகுதி. பல பெண்கள் பூத்தங்கத்திடம் நடத்துகிற உரையாடல்களின் ரஸானுபவம் இதுதான் என்பது தனிப்பட்ட என் அனுமானம். அவர்களிடம் பெரும்பாலும் இவளது பிரச்சாரம் தோற்றுப்போய் இந்த ரஸானுபவம் மட்டுமே மிஞ்சுகிறது என்றும் படுகிறது எனக்கு. ஞானசெல்வம் வீட்டுக்கு பக்கமாகப் போகவேண்டி வருகிற சந்தர்ப்பங்களில் பூத்தங்கம் இந்த வீடு சம்பந்தமாக எதையோத் திட்டியபடியே நடந்து செல்கிறாள். எல்லாம் ஒரு விதத்தில் வினோதமாகவே இருக்கிறது. நான் பூத்தங்கத்துக்கும் இந்த நாய்க்கும் இந்த வீட்டுக்கும் என்று இணைப்புகளில் உருவாக்குகிற காரணங்கள் எல்லாம் யூகங்களாகச் சரிகின்றன. என் யூகங்களைத் தாண்டிய ரகசியங்கள் ஏதோ இருக்கிறது என்று தோன்றுகிற தெனக்கு. இப்படியான சிக்கல் மிகுந்த ரகசியங்களை, முடிச்சுகளை உற்பத்தி ‍‍செய்வதில் கடவுளுக்கு என்னதான் சந்தோசமோ சந்தோசமோ தெரியவில்லை. 

ஞானசெல்வத்தின் வீடு இப்போது ஒட்டுக்கூரையின் நடுமுதுகு ஒடிந்து கிடக்கிறது. கூரையின் பல பகுதிகளில் பணிகள் முறிந்து உள்ளேயிருக்கும் கரும் அடர்த்தி வெளியே தெரிகிறது. கூரையின் ஒருபகுதி 
ஓடுகள் பணிகள் பாழ்பட்டிருப்பது ஒரு கோணத்தில் அடுக்களைப் பகுதியை வெளியே தெரியப்படுத்துகிற விதமாய் இருக்கும். அதற்குள் ஏதோ மூச்சதைவுபோலத் தெரிவது என் மனோபாவத்தின் விசும்பாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். அந்தப் பகுதிவழியாய் குளுமையான இருட்டு உள்ளேயிருப்பது தெரிகிறது. பக்கத்தில் உள்ள சில மாமரங்களுக்கு தன்னிச்சையானப் போக்கு உருவாகி ஞானசெல்வம் வீட்டு வளாகத்துக்குள் காட்டின் இயல்புத் தன்மை கூடி வருகிறது. பக்கத்தில் கிடக்கும் பாழுங்கிணறு ஒரு காலத்தோடு நின்றுபோன புகைப்படம்போல் இருக்கும். காலத்தில் பின்தங்கிப் போயும்கூட அதோடு ஒட்டிக் கொண்டிருக்கும் வினோதத்துக்கு ஒரு தீங்கும் நேர்ந்துவிடவில்லை. இரண்டடி விட்டம் கொண்ட முப்பதடி ஆழக் கிணறு அல்லது குழி என்று அதைச் சொல்லலாம். சின்ன வயதில் எனக்குள் இந்த கிணற்றின் வினோதம் கவித்துவமாய் இருந்தது. என் வயதையொத்த பல சின்னப் பிள்ளைகளுக்கும்கூட இப்படி இருந்திருக்கலாம். அந்த கிணற்றின் இரண்டடி விட்டம் பூமியைப்‍ பொத்துக் கொண்டு இரண்டடி உயரத்துக்கு மேலே நிற்கும். அதனுள்ளே பார்ப்பது ஒரு ரகசியத்தைப் பார்ப்பது போலத்தான். அந்த கிணற்றின் ஆழமெல்லாம் குளிர்ந்த இருள் நிரம்பி, அடியில் கண்ணின் கருவிழி மட்டும் அசையும். இந்த வீட்டில் விசேஷங்கள் நடக்கும் சமயங்களில் இந்த கிணற்றைச்சுற்றி நான்கைந்து கமுகுமரங்கள் நிற்பது எனக்கு முக்கியமானதாக இருந்திருக்கிறது. இப்போது பார்வையில் அந்த கமுகுகள் இல்லை. அவை நின்ற இடங்களில் ஒரு வெறுமையே தென்படுகிறது. 

ஞானசெல்வம் வீட்டிற்கு, ரோட்டிற்குத் தெற்குப் பக்கமாய் சுடலைமணி வீட்டு முற்றம் தாண்டி பின்னும் நாலைந்து விளைகள் தாண்டிப்போக வேண்டும். போகிற வழிகளெல்லாமே தென்னை நிழல்கள் விழுந்திருக்கும். நிழல்களின் ஊடே லேஸ் ஸேஸாய் சூரியன் பயந்து உட்கார்ந்திருக்கும். பாதைக்கு ஒருபக்கத்தில் வேலியோரமாய் மாமரங்கள் சில இருந்தன. இப்போதும் இருக்கின்றன. அந்த மாமரங்கள் மறைக்கும் இடுக்குகள் வழியே துரைராஜ் பெரும்பாலான நேரங்களிலும் தெரியும். இந்த பகுதிகளிலெல்லாம் பல வினோதமான வினளயாட்டுகள் விளையாடியிருக்கிறோம். ஞானசெல்வம் வீட்டு வளாகம் அடர்ந்த குள்ளமான தென்னைகளின் சுகம் கொண்டது. 

இந்த வளாகத்துக்குள்தான் இப்போது பெரும்பாலான சமயங்களிலும் இந்த நாய் எங்கேனும் ஒளிந்திருக்கும். அது ஒளிந்துகொள்கிற மாதிரியாக இந்த வளாகமும் நிறைய மாறியிருக்கிறது. முன்பு இந்த நாய் குட்டியாக இருந்தபோது அதற்கு ஒரு நிமிடம்கூட மறைந்து கொள்ள இடம் இல்லாததுபோல எப்போதும் கண்ணில் படும். இப்போது அது கண்ணில் படுவதே அபூர்வம் என்றாகிவிட்டது. இதேபோல ஊரில் ஏறிபடுகிற சில தெருநாய்கள் உள்ளன. அவைகளை எப்போதும் பார்க்கவும் முடிகிறது. இதற்கு மட்டும்தான் ரகசிய ரகசியமான அறைகள் ஆக ஒழிந்துகொள்ள வசமாய் அது மாறி இருக்கிறது. இந்த நாயைப்போல அவை களைத்துப்போனதாகவும் தெரியவில்லை. இது ரொம்ப களைத்துப்போய் இருக்கிறது. முகத்தில் சாதகமற்ற இறுக்கம் உண்டாகியிருக்கிறது. மனிதர்களற்ற விளை நோக்கி ஓடித்திரியும் அதன் ஒவ்வொரு கணத்திலுமுள்ள சந்தேகமும் பயமும் மீண்டும் மீண்டும் மனிதர்களற்ற பகுதிகளை நோக்கிப் போகும்படியாய் செய்திருக்கிறது.ஜெவஹர் தவிர மற்றெல்லோரிடமும் உறவு அறுந்து போனது மட்டுமல்லாமல் அதிகப்படியான விரோதம் இந்த நாய்க்கு வளர்ந்திருக்கிறது என்றும் நினைக்கிறேன். அது மனிதர்களுக்கு பயந்து ஓடுவதற்கும் தாக்குவதற்கும் பெரிய வித்தியாசம் உண்டென்று எனக்குத் தோன்றவில்லை. அது மனிதர்களை விட்டு விலகி ஓடுவதே தாக்குவதற்கான முன்னேற்பாடு அல்லது தாக்குவதற்கு மாறான ஒரு ஏற்பாடு என்றே நான் நினைக்கிறேன். அது இனி தன்னை எறிந்தவர்களை, புண்படுத்தியவர்களை என்று பார்த்து தாக்குவதும் சாத்தியமில்லை. என்னையும் தாக்கலாம். என்னைக் கண்டு ஒடும் போதும் எனக்கு இப்படியான எண்ணமே ஏற்படுகிறது. இரவில் லேசான அசைவுகளையும் குரைத்துத் தாக்குகிறது என்றே நினைக்கிறேன். அதன் வயிற்றுக்குள்ளிருந்து எக்கி வெளிவரும் குரைப்பின் வழியாய் அதன் எதிரியின் அசைவுகளின் வலு தெரியும், எப்படியாயினும் கொல்வது எனக்கு நியாயமாகப்படவில்லை. அதனைக் கொல்வதன்மூலம் எட்டுகிற நிரந்தரம் பேரில் எனக்கு நம்பிக்கை இல்லை. அந்த நாயின் பாயத்தையும் அச்சத்தையும் போக்கும் வகையில் நம்மை நாம் மாற்றிக் கொள்ள வேண்டும். அதுதவிர மாற்று வழிகளேதும் இல்லை என்றே எனக்குப்படுகிறது. பெரும்பாலோருக்கு அதைக் கொல்ல வேண்டும் என்கிறதில் இருக்கிற தீவிரம் எனக்குத் தருகிற அச்சத்தைக் காட்டிலும், இந்த நாய் உண்டாக்குகிற அச்சம், எனக்கு எதிர் கொள்ளும்படியானதாகவே இருக்கிறது.

அந்த நாய் நான்கைந்து விளைகள் தாண்டி எனக்கும் அதற்குமான இடைவெளியைத் துரிதமாக அதிகப்படுத்தி பின் என் பார்வையிலிருந்து விடுபட்டதை அறிந்தேன். அதன் துரிதத்தில் ஒட்டிக் கொண்டிருந்த தடுமாற்றம் தான் என் மனச்சங்கடத்தை மேலும் அதிகப்படுத்தியது. ஏதேனும் ஒரு வாய்ப்பில் சமரசம் செய்து நட்பை அதோடு ஏற்படுத்தி அதற்கு முடிகிற பணிவிடைகள் செய்ய மனசில் ஏக்கம் விரிந்தது. அதில் மெய்யாக உள்ள தடைகளை யோசிக்க யோசிக்க அந்த ஏக்கம் அறுந்து என் எதிர்காலம் பற்றியதாக மாறி, எனக்குத் தெரிந்த நண்பர் ஒருத்தரைப் பார்த்து உடனடியாக ஏதேனும் பேசவேண்டும் என்கிற எண்ணம் வந்தது. அவரை அப்போது பார்ப்பதும் உடனடியாகப் பேசுவதும் சாத்தியமில்லை. எனக்கும் அவருக்குமிடையில் உள்ள ஒருமணி நேர இடைவெளிக்கு மத்தியில் என் உடல் இருக்கிறது. ஒருவித ஏக்கம் திரண்டு காமமாகி மீண்டும் வெறுமையில் கலந்து களைப்பு விழிப்பு நிலைக்கு வந்தது. மார்புக் கச்சைகளின் இறுக்கத்தில் வெளியே பீறிட்ட பால் இறுகி மீண்டும் ரத்தத்தில் கலந்து சுரம் இழந்ததுபோல.

ஜெவஹருக்கு இந்த நாயோடு இப்படியொரு சமரசம் சாத்தியப்பட்டிருக்கிறது. அல்லது இயல்பாகவே கூடி வந்திருக்கிறது. சென்னையிலிருந்து ஊருக்கு வரும் போதெல்லாம் இந்த நாயை பழைய நண்பனைப் பார்ப்பதுபோலப் பார்க்கிறான். எந்தத் தடையுமற்று அவன் அதோடு பேசிக்கொள்கிறான். அதன் புண்களுக்கு மருந்து போடுகிறான். இரவில் பத்து மணிக்குப்பிறகு பஞ்சாயத்து தண்ணி டாங்க் பக்கத்து மேட்டில் அந்த நாயோடு அவனைத் தெருவில் பார்த்திருக்கிறேன். அவன் வரும் காலங்களில் அந்நாயும் ஊளை போடுவதில்லை என்பது என் மனுமானம். அவன் அந்த நாயோடு பேசுவதையும்கூட அரைகுறையாகக் கேட்டிருக்கிறேன். அதை சுத்தமான தமிழ் என்று சொல்வதற்கில்லை. அவனை உரசிக்கொண்டு அது நிற்கும். உரசிக் கொள்வதில் அதற்கு ஒரு தைரியக் குறைவு அல்லது ஒரு தயக்கம் இருப்பது போலவும் இருக்கும். கூச்சம் என்றுகூட அதைச் சொல்லலாம். இந்த நாய்க்கு இப்படியான ஒரு உறவு இருப்பது எனக்கு மகிழ்ச்சியாயிருக்கிறது. ஜெவஹர் மேல் நான் கொண்டுள்ள மதிப்புக்கு அவனது இந்த நாய் உறவும் காரணம் என்பது அவனுக்குப் புரியுமா என்று தெரியவில்லை. ஜெவஹர் சென்னையில் ஒரு மோசமான உத்தியோகத்தில்தான் இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். அவனது கஷ்டங்களை ஊற்றி நிரப்பியிருப்பது போலிருக்கிறது அவனது தோற்றம். ஆறு மாதத்துக்கொருமுறை அவன் ஊருக்கு வருவான். ஆனால் நிச்சயம் ஏதும் கிடையாது. அப்படி அவன் வருகிறபோது அவனிடம் ஒன்றிரண்டு வார்த்தை பேசுவதும் பரஸ்பரம் ஆத்மார்த்தமாய் சிரித்துக் கொள்வதும் எனக்கு அர்த்தம் கொண்டதாக இருக்கும்.அதிகம் பேசிக்கொள்ளாமலும் செளகரியக் குறைகளை விசாரித்தறிந்து கொள்ளாமலும் அதைத் தாண்டிப் புரிந்துக்கொள்ள அவனுக்கு என்னோடும் எனக்கு அவனோடும் முடிகிறது. எனக்கும் ஜெவஹருக்கும் பொதுவான அம்சங்களும் உண்டு. ஜவஹருக்கு மிகப்பெரிய எதிரி அவனது அண்ணன் குணசேகரன்தான். குணசேகரன் ஊரில் இருக்கும்போது ஜெவஹரும் ஊருக்கு வந்தால், வந்து ஒன்றிரண்டு நாட்களில் குணசேகரனுக்கும் ஜவஹருக்கும் இடையே உள்ள வெறுப்பு பொட்டித் தெறிக்கும். அதில் மிகவும் களைப்படைந்து சோர்ந்தும் போவான் இவன். இப்படியான நாளில் மிச்சப்பகுதியில் எங்கேனும் புறப்பட்டுப் போய்விடுவான். இவனது வெறுப்பு பொட்டித்தெறிக்கும் சமயங்களில் இவன் பயன்படுத்தும் வார்த்தைகளில் உண்டாகும் தடுமாற்றம் புதிய மொழியாக இருக்கும். அவனுக்கு என்ன செய்கிறான் என்பதும் பெரும்பாலும் அப்போது தெரிவதில்லை. ஒரு பெரிய கூட்டத்தைத் தனியாய் நின்று தாக்குகிறவனின் ஆவேசம் போலவும் தடுமாற்றம் போலவும் தோன்றும். ஜெவஹருக்கும் குணசேகரனுக்குமிடையில் இப்படியான வாக்குவாதங்கள் நடக்கும்போது, குணசேகரன் பாதுகாப்பு மிகுந்த இடத்திலிருந்து நிதானமாக எதிரியைத் தாக்குவதைப் போலவும், ‍ பாதுகாப்பாற்ற நிலையில் நின்று ஆவேசமாகத் தாக்குவதைப் போலவும் எளிதாகவே உணரமுடியும். குணசேகரனுக்கு அவனது நியாயங்களை வரிசையாக அடுக்கிச் சொல்ல முடிவதுபோல ஜெவஹருக்கு முடிவதில்லை. ஆவேசத்தால் நியாயங்களை உணர்வுகளாகக் கலைந்துப் போய்விடுவான். பெரும்பாலும் இதன் மூலமாக ஊரில் ஜெவஹர் பக்கம் விரைவாக சரிந்து வீழ்ச்சிக்கு வந்து விடுகிறது. இந்த வீழ்ச்சியோ ஜெயமோ கூட அவன் நோக்கமில்லை என்பதுபோல எங்கேனும் புறப்பட்டுப்போவான். அது ஒருவகையில் குணசேகரன் வெற்றிபெற வாய்ப்பாக இருந்த அத்தனை சாதகங்களையும் புறக்கணிப்பது போலத்தான் என்று எனக்குத் தோன்றும். குணசேகரன் ஜெயத்தை நோக்கமாக கொண்டு நகர்ந்து ஒரு கொடியைப் பறக்கவிட்டதும் அவன் ஜெவஹரின் சோர்வுக்கு எதிரான ஒரு விறைப்பைப் பெறுகிறான். அந்த கொடிமரத்தை வேரோடு சாய்க்கவேண்டும் என்கிற தீவிர ஆசை எனக்கேற்பட்டதும் ஜெவஹர் அப்படிப் புறப்பட்டுப் போவதால், நிஜமாக அந்த கொடி சாய்ந்து தரையில் சாக்கடை நீர் பாடிய வீழ்ந்து பரவுகிறது என்கிற ஒரு கற்பனை விரிப்பில் ஜெவஹரின் உதாசீனம் என்னை முடக்கும். ஆனால் ஜெவஹரின் உதாசீனம் குணசேகரனை ஏதேனும் ஒரு அளவிலேனும் உள்ளூரப் பாதித்திருக்குமா என்றும் தெரியமுடியாது. உள்ளூர லேசாக அது பாதிக்கிறது என்று கற்பனை செய்து கொள்வதுதான் எனக்குப் பாதுகாப்பாக உள்ளது. 

குணசேகரன் ஒரு காலம் வரைக்கும் அன்பையாவுக்கு விசுவாசமான பிள்ளை அவனது ஒழுக்கத்தையும், அன்பையாவுக்கு விசுவாசமாக நடந்து கொள்வதையும் பல தகப்பன்மார்கள் பல பிள்ளைகளுக்கு சிபாரிசு செய்திருக்கிறார்கள். அவன் பேரில் ஊரிலுள்ள பெண் பிள்ளைகளுக்கு ரகசிய காதலும், ரகசிய வெறுப்பும், வெளிப்படையான மதிப்பும் இருந்தது. பெண் பிள்ளைகளுக்கு ஜெவஹர் பேரில் இருந்த உறவு இதற்கு நேர் தலை கீழானது என்பதையும் பின்னாட்களில் நான் உணர்ந்திருக்கிறேன். அவர்களுக்கு ஜெவஹர் பேரில் ரகசியமான மதிப்பும், வெளிப்படையான வெறுப்பும், வெளிப்படையான காதலும் இருந்தது என்று சொல்ல வேண்டும். அன்பையா தன் கனவுகளையெல்லாம் குணசேகரனுக்கு ஊற்றி தன் உழைப்பால் தேய்ந்து போகப்போக, குணசேகரன் அவரின் உழைப்பின் வேகத்துக்கு பக்கம்வரை செல்கிற அளவு ஈடுகொடுத்தான். அன்பையாவின் கனவின் 95 சதவீதமாய் குணசேகரன் விரிந்து நின்றபோது ஜெவஹர் தொடர்ந்து சிவப்பு மதிப்பெண்களையே பெற்றுக் கொண்டிருந்ததால், அன்பையாவால் எப்படித் தாங்கிக் கொள்ள முடியும்? ஜெவஹர் பீடி குடித்ததைக் கண்டு பிடித்துத் தண்டனை வழங்கினார். அவன் சினிமாவுக்குப் போவதைக் கண்டுபிடித்தார். குணசேகரனின் நண்பர்கள் பரிசுத்த ஆவிகளாகவும், ஜெவஹரின் நண்பர்கள் சாத்தான் தோற்றமும் கொள்ள ஆரம்பித்தார்கள். ஏதோ காரணங்களால் ஜெவஹர் படிப்பையும் இடையிலேயே நிறுத்திவிட்டு அன்பையாவோடு வேலைக்குப் போக வேண்டிவந்தது. அன்பையாவுக்கு வேலைக்குப் போக வேண்டி வந்தது. அன்பையாவுக்கு தன் மேல் உள்ள சுயவெறுப்பெல்லாம் மொத்தமாய் ஜெவஹர் மேல் சரிய இது முக்கியமான காரணமாக இருந்திருக்க வேண்டும். இதற்கு மாறாய் தன் கனவை தன் உழைப்பின் மூலமாய் செய்து முடித்த உற்சாகம் குணசேகரன் வழியாய் திரண்டு வழிந்தது. குணசேகரனுக்கு மிகப் பெரிய இடத்திலிருந்து சகல செளபாக்கியங்களோடும் ஒரு வேலைபார்க்கிற பெண் செளபாக்கியவதியானபோது அவர் மனம் எப்படி யிருந்திருக்குமென்பதை எனக்கு சொல்லத் தெரியவில்லை. அன்பையா தன் வாழ்வின் உச்சத்தில் சிறகடித்த நாட்களாகத்தான் அவை இருக்க வேண்டும். அந்த செளபாக்கிய நிகழ்ச்சியிலும்கூட தன் சுய அருவருப்பை ‍ஜெவஹர் வழியாய் அவர் அடைந்து இடையிடையே லேசான வருத்தத்துக்கு ஆளாகி இருக்க வேண்டும் என்றே நான் நினைக்கிறேன். அந்த நிகழ்ச்சிலும்கூட ‍ஜெவஹரிடம் அவருக்குண்டான மனக்கசப்பு வெளிப்படையாகப் பல இடங்களில் தெரிந்து கொண்டேயிருந்தது. பின்னாட்களில் குணசேகரன் இவரைக் கவனிக்காமல் விட்டுவிட்ட போதும், மிகுந்த அவமானங்களுக்கு ஆளாக்கிய போதும்தான் தன் கனவுகளுக்குள் தனக்குத் தெரியாமல் ஒளிந்திருந்த பூதத்தை தாமதமாக அவர் கண்டு பிடித்தார் என்பது வேறு விஷயம். அப்போது காலத்தோடு சேர்ந்து இந்த ஏமாற்றமும் உடலைத் தீவிரமாகத் தின்னத் தொடங்கியிருந்தது. இப்போது ஜவஹர் பேரில் அவருக்கு ரகசியமான பரிவு உண்டாயிருக்கிறது என்றாலும் பழக்கம் காரணமாக அந்தப்பிரிவை ஜெவஹர் பேரில் வெளிப்படுத்திக் கொள்ளமுடியாமல் அவர் சிக்கித் தவிப்பதை நான் கவனித்திருக்கிறேன்.‍ெஜவஹருக்கும் அவரிடம் கிலாய்ப்பெல்லாம் தணிந்து போயிருந்தாலும்கூட பழைய காலங்களைக் கடந்து அவனால் முழுக்கப் புதுப்பிக்க முடியாமல் போனது. இப்படியெல்லாமான ஞாபகங்களும் ஒரு விதமான அலுப்பை உண்டு பண்ணுகின்றன. அந்த அலுப்பில் தன்னிலை சார்ந்த இரக்கமும். அலுப்பூட்டும் இன்பமும் இருக்கிறதை உணர்கிறேன். என்றாலும் இவைதான் என் களைப்புக்கான காரணம் என்றும் சொல்வதற்கில்லை. ஒருவித நிச்சயமற்ற தன்மை அலுப்பாகி களைப்பில் இழுத்துக் கொண்டு விடுவதற்கு இடைப்பட்ட மனநிலைதான் வலியை உண்டுபண்ணுகிறது. இரண்டு மலைகளுக்கு இடைப்பட்ட தூரத்தை அந்த ரத்தில் நடந்து கடப்பது போன்ற துக்கம் அது. அதன் நகர்தலில் துவண்டு படுக்கையில் விழும்போது உறுப்புகளின் கனத்தைக் கடக்க முயன்று வெறுமனே கிடப்பேன். சில சமயங்களில் மின்விசிறி நோக்கிப் பார்வை செலுத்துவது கஷ்டமாக இருக்கும். அப்படியிருக்கும் சமயங்களில் சன்னலையோ வேறு ஏதேனுமொன்றையோகூடப் பார்க்கக்கூடாமல் போகும். மத்தியான வேளையில் தூங்குவேன். அதைத் தூக்கம் என்று சொல்வதற்கில்லை. தூக்கத்தின் பலவீனமான மந்தநிலை அது. சொப்பனங்களை உருவாக்கும் சக்தி இந்த மந்த நிலைக்கு அதிகம் இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். எனது சொப்பனங்கள் உண்டாக்குகிற வலிக்கும் நிஜத்தில் உண்டாகும் வலிக்கும் இடைப்பட்ட தூரம் மிகவும் சின்னதாக இருக்கிறது. சில சமயங்களில் சொப்பனங்கள் உண்டாக்கும் இன்பங்களும் துன்பங்களும் நிஜத்தைப் பொய்யாக்கி விடுகிறது. அது அலாதியான ஒரு ஜெயம் என்பதுபோல மனதில் கவிகிறது என்றாலும் இந்தக் கவிதல் எனக்கு விருப்பமான ஒன்றல்ல. அதிலிருந்து மீள வேண்டும். மனதின் அந்தரங்கமான ஓர் உறுப்பை இது பலவந்தமாக உடைத்தெறிவதில் ஏற்படுகிற துக்கத்தில் பீறி அழ வேண்டும்போல இருக்கிறது. 
இதை எழுதத் தொடங்கிய நாளுக்கும் இரண்டு நாட்களுக்கு முன்பு என் நெருங்கின உறவினர் ஒருவரது வீட்டை அந்த வீட்டில் யாருமில்லாத சமயத்தில் பக்கத்து ஊர்காரர்கள் கலவரத்தோடு அடித்து நொறுக்கினார்கள். வெயிலின் ராட்சசத்தனம் அன்று சுரம் இறங்கி தென்னைகள் லெகுவாகி இருந்தன. தென்னந்தோப்புகளின் அடர்த்தி குன்றிய பகுதிகள் மஞ்சளாகத் தெரிந்தன. காற்றின் சத்தம் இடையிடையே மழைவரும் போன்ற உணர்வை ஏற்படுத்தியது. நான் அவர்கள் இடித்து நொறுக்குவதைப் பார்த்துக்கொண்டு நின்றேன். அந்தக் காட்சியில் மிதமான போதையை மனம் உணர்ந்தது. மனச்சங்கடமும் ‍போதையுமாய் மனம் அலைக்கழியத் தொடங்கியது. மங்கலான ஒளியும் தென்னைகளும் அன்று போதைக்கும் சங்கடத்துக்கும் உறுதுணையாய் இருந்தன. அவர்கள் இடிப்பதை நின்ற இடத்திலேயே நின்று பார்த்துக் கொண்டிருந்தேன். அது ஒரு ஓட்டு வீடு. ஓடுகள் சரிந்து விழும்போது உண்டான ஒலி பயங்கர அலறலாய் இருந்தது. சுவர்கள் மறிக்கப்பட்டன. முயல்குட்டிகளாக விழுந்து மறிந்தன மண் சுவர்கள். ஓடுகளை இழந்த கூரைப்பகுதி நார் நாராய் தெரிந்தது. பின்பு ஓலத்தோடு எழுந்த ஆவேச வெறியில் கூரையின் நார்பாகங்கள் ஒடிந்து எறியப்பட்டன. அப்போது எழுந்த ஓலமும் இடித்தவர்களின் ஊளைகளும் கோஷங்களும் அதிலிருந்த உத்வேகமும் திருவிழாக்கடைகளில் தெரிகிற உற்சாகம்போல இருந்தது. ஒருமணி ரேத்திற்குள் என்று நினைக்கிறேன். அவர்கள் வெறுமையை அடைந்தபோது தாறுமாறாய் கிழிக்கப்பட்ட சேலையாகியிருந்தது வீடு. அதன்பிறகும் என்னுடைய போதை தணியாமல் நான் நின்று கொண்டிருந்தேன். அந்தக் காட்சியின் போதை சிலமணி நேரங்களாய் மனதில் அப்படியே இருந்தது. அதில் எனக்கிருந்த போதை எனக்கு மிகுந்த வெறுப்பைத் தந்தது. திரும்பி இரண்டு சிகரெட்களோடு சில விளைகள் தாண்டிப் போனபோது விளைகள் காடாய்க் கிடந்தன. சிலமணி நேரங்கள் ஆகியும் போதை தணியாமலிருப்பதை ஏதேச்சையாய்க் கவனித்தேன். சில மணிநேரங்களாய் அங்கேயே இருந்திருக்கிறேன் என்பது பிரக்‍ஞையில் புதிதான ஒன்றை ஏற்படுத்தியது. சுற்றிச்சுற்றி மரங்களின் தோற்றமும், மந்தமான வெளிச்சமும் போதையை உணர்வுப்படுத்திக் கொண்டேயிருந்தன. சில இடைவெளி கலந்த தென்னைகளின் மஞ்சளான தோற்றம் ஒருவிதமான காமத்தை அன்று ஏற்படுத்திய அளவில் அதற்கு முன்பு ஏற்படுத்தியதில்லை. என் தனிமையை உணர முடியாதபடியான கோலத்தை அவை அடைந்திருந்தன. நான்கு பக்கமுமாக பிரக்ஞை பூர்வமாகத் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தேன். என் போதையை அவ‍ை உண்டுகளித்து ஜீரணித்துக் கொண்டிருந்தன. மூன்று பக்கங்களிலும் அடர்த்தியான தென்னைகளின் ஊடே ஒன்றிரண்டு மாமரங்களின் அடர்ந்த சருகுகள் நிழலற்ற பூமியில் அன்று நிரம்பியிருந்தன. என் போதையும் சங்கடமும் சமநிலைக்கு வந்தபோதுதான் நான் அவ்விடத்திலிருந்து எழுந்திருந்தேன் என்று நினைக்கிறேன். காட்டைவிட்டு எழுந்து வரும்போது மீண்டும் போதை அப்படியே நின்றிருப்பதுபோல இருந்தது. களைப்பாகவும் இருந்தது.

ஜெயாவும் செளந்திரபாண்டியனும் - சிறுகதை

ஜெயாவும் செளந்திரபாண்டியனும்

எண்பத்தொன்பது தொண்ணூர்ல எனக்கு கேர்ல் ப்ரண்டா இருந்தது ஜெயா. ஜெயாவுக்கு அப்ப இருபத்திமூணு இல்லன்னா இருவத்தி நாலு வயசா இருந்திருக்கும். எனக்கு இருபத்தியேழு வயசு நடந்திட்டிருந்தது. ஜெயாவுக்கு கே.என். ஹாஸ்பிட்டல்ல நர்ஸ் வேலை. ரொம்ப குரூரமாக தெரியற மென்மையான மனசு அவளுக்கு. அது எனக்குப் பிடித்திருந்தது. அந்த நாட்கள்ல நான் தூங்குன நேரமும் ஜெயாவோட பேசிட்டிருந்த நேரமும்தான் அதிகம். எவ்வளவோ பேசியிருக்கோம். என்னவெல்லாமோ பேசியிருக்கோம். நெஜமாவே மனசு திறந்து சொல்றதா இருந்தா அது உண்மையான ப்ரண்ட்ஷிப்தான், காதல் இல்லைன்னு என்னால உறுதியா சொல்ல முடியாது. ஆரோக்கியமான நட்பில் இருந்துதான் ஆரோக்கியமான காதல் உருவாக முடியும். அப்படீன்னு பல தடவ ஜெயாகிட்ட சொல்லியிருக்கேன். ஜெயாவும் அத ஆமோசிச்சிருக்கா. ஆனாலும் ஜெயாவும் நானும் ஒருத்தர ஒருத்தர் காதலிக்கிறோம் அப்படீன்னெல்லாம் எந்தத் தீர்மானமும் எடுத்துக்கிட்டதில்ல.

அவளுக்கு ஹாஸ்பிட்டல்ல நைட்ஷிப்ட் வரும்போது ஆரம்பத்தில் கொஞ்சநாள் நானும் ஹாஸ்பிட்டல்ல அவளோட முழிச்சிருந்திட்டு பகல்ல வீட்ல போய் தூங்குவேன். ரொம்ப சந்தோசமான தூக்கமும் முழிப்பும் அப்ப. (ஹாஸ்பிட்டல்ல இதை வச்சிட்டு அவளுக்கு சில பிரச்சனைகள் வர ஆரம்பிச்ச பிறகு ஹாஸ்பிட்டல் வரைக்கும் கொண்டு போய் விட்டுட்டு திரும்பிடுவேன்) ஹாஸ்பிட்டல்ல நானும் அவளும் பேசிட்டிருக்கும்போது ஜெயாவோட தோழி மோரின் சிலநேரம் எங்களோட இருந்து பேசிட்டிருப்பா. நானும் மோரினும் சேர்ந்து ஜெயாவ தொடர்ச்சியா விவாதத்துல தோற்கடிச்சிட்டேயிருப்போம். செக்ஸ் பத்தியெல்லாம் கூட பேசியிருக்கோம். ஒருநாள் பேசிட்டிருக்கும்போது திடீர்னு மாஸ்டர்பேஷன் பண்ணுவீங்களான்னு கேட்டுட்டா ஜெயா, மோரின் பக்கத்துல இருக்கும் போதே எனக்குச் சூன்னு ஆகிப்போச்சு. வேர்த்துட்டேன். எப்படி தலையசைக்கறதுன்னே தெரியல. என்னவோ எப்படியோ ஆமா, சரி எதுவுமில்லாத ஒரு தலையசைப்பு அசைச்சிட்டு சாமுவேல் கம்பெனி ப்ரெண்ட்ஸ்களோட ஒருதடவ நாங்க பேசிட்டிருந்ததைச் சொன்னேன்.

தாமஸ், சாமுவேல், பன்னீர், நான் எல்லாம் பேசிட்டிருக்கும்போது தாமஸூக்கும் பன்னீருக்கும் பெரிய டிஸ்கஷன். தாமஸ் உலகத்துல மாஸ்டர்பேஷன் பண்ணாத யாருமே இருக்கவே முடியாதுன்னு திட்டவட்டமாச் சொன்னான். பன்னீர் எடன அப்படின்னா விவேகானந்தர், இப்படித்தானான்னு பெரிய பெரிய ஆளுகளையெல்லாம் துணைக்கிழுத்திட்டு கேட்டான். தாமஸ் கொஞ்சங்கூட கூச்சமே இல்லாம ஸ்ரீராமனுங்கூட இங்க வாழ்ந்திருந்தான்னா மாஸ்டர் பேஷன் பழக்கம் உள்ளவனாத்தான் இருந்திருப்பான் அப்படீன்னுட்டான். எனக்கு என்னமோபோல ஆகிப்போச்சு. ஸ்ரீராமனை இந்த விஷயத்துல இழுத்திட்டது சரியாப்படல. இருந்தாலும் தாமஸ் சொல்றது உண்மையாயிருக்க வாய்ப்பு நிறைய அப்படீன்னு தோணிச்சு. அதோட பன்னீர் ஸ்ரீராமன்கிட்ட இந்தப் பழக்கம் இருந்திருக்குமாயிருக்கலாம் ஆனா என்கிட்ட இல்லன்னு முத்தாரம்மன் மேல சத்தியமடிச்சிக் சொன்னத என்னால் துளிகூட நம்ப முடியல. (முத்தாரம்மா, பன்னீருக்கு ஒண்ணும் ஆயிடக்கூடாதுன்னு நான் தனிப்பட்ட முறையில் வேண்டிக்கிட்டேன்) இதுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கிற மாதிரியா சாமுவேல் பேச ஆரம்பிச்சான். பன்னீர் சொல்கிறதிலயும் நியாயம் இருக்கு. எங்க அண்ணாச்சிகூட சொல்லியிருக்காரு தொண்ணித் தொன்பது பெர்சென்ட் பேருட்ட இந்த பழக்கமிருக்கு. மிச்சம் ஒரு பெர்சென்ட் இந்த பழக்கம் வச்சுக்கிட்டே இல்லன்னு மறுத்துருவாங்க அப்படின்னான்.பன்னீர் அப்ப எழும்பிப் போனவன்தான், அப்புறமா சாமுவேல் இருக்கிற எந்தக் கூட்டத்திலேயும் பன்னீர் கலந்துகிட்டதேயில்லை. இந்த விஷயத்தை அவங்ககிட்ட அப்ப தோணியதுபோல வேறெதோ ஒருவகையில் சொல்லி முடிச்சதும், ஓ ஒன்னு சிரிச்சாங்க. எனக்கும் திருப்பி அதே கேள்வியை ஜெயாகிட்ட கேக்கணும்னாலும் அப்ப கேட்க தைரியம் இல்லாமல் போச்சு. 

நானும் ஜெயாவும் ரொம்ப அன்னியோன்யமா இருந்‍தோம். சினிமா பார்த்தோம். தொடையில் மாறி மாறி கிள்ளிக்கிட்டோம். திருநெல்வேலி மதுரைன்னு பஸ்ஸிலேயே போயிட்டு அப்படியே அடுத்த பஸ்ஸூல திரும்பினோம். பாதி சாப்பிட்டு முடிச்சபிறகு சாப்பாடு, இட்சி, தோசை, பூரி, சப்பாத்தி, சூப், ஐஸ்கிரீம், எல்லாத்தையும் மாத்திக்கிட்டோம். ஜட்டி, பிரா, ஜம்பா, சட்டை, பேன்ட், சேலை இதையெல்லாந்தான் எங்களால் மாத்திக்க முடியல்ல. அதுக்கான தேவையும் ஏற்படல. அந்த சமயத்தில் நான் புதுசா எடுத்து தைத்த சட்டைகள்ல எல்லாத்திலயுமே பாக்கட் பக்கத்தில் 'Mamo, Mano'-ன்னு எம்பேரு எம்ராய்டா பண்ணப்பட்டிருக்கும். அது ஜெயாவோட கை வண்ணம்தான். எங்க நட்பில, எங்க பேச்சில, காத்திருப்பில, ஏமாற்றத்தில, ஊர் சுற்றுறதுல எல்லாம் எனக்கு சுகமிருந்தது. யாராவது பேஷ்ண்ட்கிட்ட இருந்து அவ 555 சிகரெட்,ஃபாரின் சிகரெட் எனக்காக வாங்கிக் கொண்டு வரும்போதும், நான் ஜெயாவுக்காக ஹேர்பின் பல தினுசில் வளையல் போலவுள்ள எதாவது நொங்கு நொங்குணிவாங்கித் தரும்போதும் எங்களுக்குள்ள பேரானந்தம் குறிப்பா, எனக்குள்ள பேரானந்தம், அருவியில குதிச்சு செத்தாலும் ஏற்படாது. 

அறிவுள்ள, சுதந்திரமான ஒரு பெண்ணோட பழகிறது எவ்வளவு சந்தோசமான காரியம் அப்படீங்கறதை ஜெயாவோட என் காலத்தைச் செலவிட்ட ஒவ்வொரு கணத்தையும் வச்சுச் சொல்லமுடியும். எல்லாம் அப்படியே ரொம்பப் பத்திரமா இருக்கு. ஆஸ்பத்திரியைப் பார்க்கும் போதெல்லாம் ஜெயா ஞாபகம்தான் வருது. ஆஸ்பத்திரிக்கு ஏன் போகணும்? கால்ல ஒரு முள்ளு தச்சா கூட டெட்டால் லோஷன் கலந்த அவ ஞாபகம்தான் வருது. ரெண்டு காரியம் அவளைப்பத்தி சொல்லியிருக்கேன். அதை வச்சிட்டு நீங்கள் அவளைப் புரிஞ்சிக்க முடியாமலும் போகலாம். 

காரியம் 1 
ஜெயா கவிதைகள்ல அதிக ஈடுபாடுள்ளவ. ஈடுபாடுள்ளவளப்போல காட்டிக்கிறதாகவும் சிலருக்குத் தோணலாம். வேறு மொழிக் கவிதைகள் ‍எல்லாம்கூட அவளுக்கு ரொம்ப ஸ்நேகம். கவிதைகள் பற்றிப் பேசியே எங்களுடைய பல பொழுதுகளை நாசம் பண்ணியிருக்கா. அப்படியொரு மோசமான இரவில் அவ கமலாதாஸ் கவிதை ஒண்ணுபத்தி ஆஸ்பத்திரிக்கு எதிர்தரப்பில் இருந்த ஆற்று மணல்ல இருந்து பேசிட்டிருக்கும்போது ஜெயாவுக்கு போன் வந்தது. ஜெயா போய் போன் அட்டன்ட் செய்திட்டு திரும்பவும் வந்து உட்கார்ந்து தொடர்ந்து பேசிட்டிருந்தா. 

குறிப்பு: அவை அன்னைக்கு பேசிட்டிருக்கும்போது பயன்படுத்திய கவிஞர்களின் பெயர்களை கீழே தந்திருக்கேன். 
கமலாதாஸ் (மாதவிக்குட்டின்னும் இடையிடையே சொன்னாள்)
பசுவய்யா
தேவதேவன் 
வைரமுத்து
பிரம்மராஜன்
இன்குலாப்
தமிழன்பன்
குஞ்சுண்ணி 
ஆத்மாநாம் 
அரைமணிநேரம் கழிச்சி ஜெயா உனக்கு என்ன போன்னு கேட்டேன். எங்க சிஸ்டர் ஒண்ணு சுகமில்லாம இருந்தது இறந்து போச்சாம். இப்ப போனா வழக்கமான சடங்குகள், வழக்கமான பொய்யான அழுகை, நானும் அழணும். அந்த சடங்குகள் எல்லாத்திலயும் கலந்துக்கிடணும். அதனால நாளைக்கு காலையில்தான் எல்லாம் முடிஞ்சதுக்கப்புறமா போறதுன்னு முடிவு பண்ணியிருக்கேன். எனக்கும் அழுகையிருக்கு மனோ! ஆனா அது கூட்டத்துக்கு சனங்களுக்கு தெரிய வேண்டிய அவசியம் இல்ல. வெளிப்படையாச் சொன்னா உனக்குக்கூட தெரிய வேண்டிய அவசியமில்ல. அப்படீன்னா, நான் இதை இப்ப சொல்றது அப்ப எனக்கும் அவளுக்கும், நாங்க உட்கார்ந்திருந்த ஆற்றுமணல் மீது விழுந்து கிடந்த டியூப்லைட் வெளிச்சத்துக்கும் இடையில் நிலவிய இறுக்கமான சூழலை உங்களுக்குப் புரியவைக்குமான்னு எனக்குப் புரியவில்லை. ஒருமணி நேரத்துக்கும் மேல அப்புறமா ரெண்டு பேரும் எதுவும் பேசிக்க முடியாமலும், நேரே முகம் பார்க்க முடியாமலுமிருந்தோம். டியூப்லைட் வெளிச்சம் மட்டும் ஏதோ எங்களுக்கிடையில் பேச முயற்சி எடுத்து தொடர்ச்சியா தோத்தக்கிட்டேயிருந்தது. அவ வழக்கமான சடங்குகளுக்காகப் பயந்து போனதா சொன்னது பொய்யாக எனக்குப் பட்டுது. அவளுக்கு கொஞ்சம் கூட சலனமே ஏற்படல அப்ப. தங்கச்சி இறந்த சலனம் ஏற்படாத சோகத்தை என்கிட்ட மறைக்கத்தான் அவ சொல்லிய விளக்கமெல்லாம், அப்படித்தான் பட்டுது. அவளுடைய விளக்கத்தோட போலித்தனத்தை நான் புரிஞ்சுகிட்டத அவ புரிஞ்சுகிட்ட பிறகுதான் அந்த மெளனம் எங்களுக்கிடையில் வந்திருக்கக்கூடும். இந்த மெளனம் மட்டும் தான் அப்ப அவ இயல்பைப் பாதிச்சதே தவிர அவ தங்கச்சி இறந்தது இல்ல. அப்புறமா நாலுநாள் அவளை நான் பார்க்கவே இல்ல. நாலாவதுநாள் அவகிட்ட இருந்து எனக்கு வந்த கடிதத்தின் ஒரு பகுதி இது. 
"சொந்த பந்தங்களில் எனக்குத் துளியும் நம்பிக்கையில்லை. அறிவுபூர்வமான நாளைய உலகத்தில் ரெத்த பந்தம் கேள்விக்குரியதாகவும், கேலிக்குரியதாகவும் ஆகிவிடும் என்பதை நம்புவது மனோ, உனக்கு சாத்தியமேயில்லை. கணவன், மனைவி உறவுகள் இங்கே ரத்த பந்தத்தாலா தீர்மானிக்கப்படுகின்றன? அதுதானே இங்கே முதல் தரமான உறவுநிலை. அண்ணன், தம்பி, தாய், தந்தை எல்லாம் பிற்பாடுதானே. மனோ, நீ சாதாரண சினிமாக்களிலேயே இறுதி யாத்திரை, சவ அடக்க காட்சிகள் வரும்போது அழுதுவிடுமளவுக்கு பலகீனமான மனம் கொண்டவன். இந்த பலகீனமான மனத்தின் பின்னணி தெரியுமா உனக்கு? நீ நேசித்த ஜீவனின் மரணத்துக்காக அழுத சூழலை ஞாபகப்படுத்தி ஞாபகப்படுத்தி எந்த தருணத்திலும் அழத்தயாராக இருக்கிறாய். அந்த சூழலை சினிமாவில் ஏற்படுத்தி தந்தாலும் சரி, நிஜ வாழ்வில் ஏற்பட்டாலும் அழுவதற்கு நீ தயாராக இருக்கிறாய்.அழுகைக்கு இங்கே வேறென்ன அர்த்த முண்டு. எனக்கு அப்படியொரு தயார் நிலை இல்லை. என் தங்கச்சியின் மரணம் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட மரணம். அதற்கு நான், சாதாரண நியாயமான குமாஸ்தா அப்பா, நவீன இலக்கிய கிறுக்கன் என் அண்ணன், ஒரு வகையில் நீ எல்லோரும்தான் காரணம். எனவேதான் அதில் அதிர்ச்சியடைய எனக்கு ஏதும் இல்லை. 

சரி, எனக்கா நீ அதிர்ச்சியடைந்தது போலித்தனம் இல்லையா? பொய் இல்லையா? நீ எப்படி எனக்காக அதிர்ச்சியடைய முடியும்? நீ நடந்து கொண்டது என்னைப் பொறுத்தவரை ஆபாசமானது. எனக்காக அதிர்ச்சி அடைவதுபோல நீ காட்டிக்கொள்வதன் மூலமாக என் நம்பிக்கையைப் பெற, என் தங்கச்சியின் சாவை நீ பயன்படுத்த முயற்சி செய்கிறாய்? ரெண்டாவது விஷயம் எனக்கு எவ்வித அதிர்ச்சியும் ஏற்படாத பொழுதில் நீ என் பொருட்டு அதிர்ச்சி அடைந்ததாகக் காட்டிக் கொண்டதால் நீ படுதோல்வியடைந்தாய். இந்த உன் முயற்சி கோரமானதில்லையா? ரொம்பவும் சராசரியான பையன் பஸ் ஸ்டாண்டில் நின்று என்னை டாவடிப்பதற்கும் நீ நடந்து கொண்டதற்கும் என்ன வித்தியாசம்?"

காரியம் 2 
வழக்கம்போல ஒருநாள் நானும் ஜெயாவும் திருநெல்வேலிபோக T.T.C பஸ்ஸில் ஏறினோம். வழக்கமாகவே திருநெல்வேலி போணும்னா நாகர்கோவில்ல இருந்து ஏதாவது T.T.C பஸ்ஸீல போறதுதான். அதுதான் செளகரியம் எங்களுக்கு. பக்கத்துல யாரோட கவனிப்போ, உற்று நோக்குதலோ இல்லாம பேசிக்கிட்டு, போகமுடியும். அப்படி T.T.C பஸ் கிடைக்காத பட்சத்தில் திருநெல்வேலி போறதில்லை. டிரெயின்லயும் இந்த உற்று நோக்குதல் இல்லாம போகமுடியும். ஏன்னா, நாகர்கோவில் திருநெல்வேலி டிரையின்ல வழக்கமா அதிக கூட்டம் வர்றதில்ல. உற்று நோக்குதல் மிகப் பெரிய கொடூரம், அதோட உற்றுநோக்கப்படுகிறோம் என்கிற நிலையில் நடந்துக்கறதுதான் மிகப் பெரிய கொடூரம். எல்லா கோணல்களுக்கும் இதுதான் காரணம் இல்லையா! நாம் தப்பா இருக்கோமோங்கிற பதட்டத்தை உற்று நோக்குதல் கூட்டுது. நிதானமிழக்கிறோம். எப்பவுமே கேமராவுக்கு முன்னால நிற்கிற ஒரு நிலையை இது ஏற்படுத்துகிறது. இன்னைக்கு உள்ள மத்தியதர வர்க்கத்து சனங்களின் பிரச்சனையில் இதுவும் ஒண்ணுன்னு நெனக்கிறேன். கவனிக்கப்படுகிறோம் என்கிற நிலைய ஏற்படுத்தி பக்கத்தில் திரும்பிப் பார்க்க முடியாம சூட்கேஸ் தூக்கிட்டு நேரா நடக்கிற மனிதன் பரிதாபமானவன். இந்த மனிதன்தான் பதட்டப்படறான். ஒரு நன்னாரி சர்பத்தக்கூட இவனால் சுதந்திரமா உறிஞ்சிக் குடிக்க முடியாமல் போச்சு. முட்டு மடக்கி உட்கார முடியாதவன், தொட்டு தொட்டு நக்கறான். சட்டையில் கொட்டிக்கறான். என்னென்னமோ செய்யறான். இவ்வளவு சிரமமும் இவனுக்கு ஏற்பட்டதே கவனிப்பு தான். இது எங்க ஊர் வயல்ல வேலை செய்யறவங்கிட்ட இல்ல. பனையேறுகிறவன்கிட்ட இல்ல. கக்கூஸ் அள்ளுறதா நினைச்சுக்கிட்டு அள்ளுறதில்லை. இந்த கலர் டி.வி. பார்க்கிற வர்க்கத்துக்குத்தான் இந்த சோகமெல்லாம். கவனிக்கப்படாம இருக்கிறதில் உள்ள சுகம் ஜெயாவோட சுத்தின காலங்களில் நான் உணர்ந்தது. கவனிக்கப்படாமலிருக்கிற சுகம் ரொம்ப அலாதியானது. பெரும்பாலும் திருநெல்வேலிக்கு பஸ்ல போக நானும் ஜெயாவும் பிளான் பண்ணினா 11 மணிக்கெல்லாம் T.T.C பஸ் ஸ்டாண்டுக்கு வந்திருவோம். ஒண்ணேமுக்கால் மணி நேரம் பயணம். வசந்தத்திலயோ பரணியிலேயோ சாப்பாடு. அப்புறமா திரும்பவும் ஒண்ணே முக்கால்.
 
அண்ணைக்கும் இதே ப்ளான்தான். பஸ்ஸில் மீனாட்சிபுரம் பஸ் ஸ்டாண்ட்ல இருந்து ஏறினதும் நான் டிக்கட் எடுகுகறேன் மனோ அப்படீன்னா ஜெயா. சரின்னேன். ஆரல்வாய்மொழி தாண்டனதுக்கு அப்புறமாத்தான் கண்டக்டர் எங்க பக்கமா வந்ததா ஞாபகம். ஜெயா இருபது ரூபாய் கண்டக்டர்கிட்ட குடுத்திட்டு திருநெல்வேலிங்கறதுக்குப் பதிலா ஒரு இண்டியா டுடே, ஒரு ஆனந்தவிகடன், ஒரு குமுதம் அப்படீன்னு ரொம்ப சீரியஸா கேட்டா. எனக்கு அதிர்ச்சியாகப் போச்சு. நான் என்னைய சுதாரிச்சிட்டு ரெண்டு திருநெல்வேலின்னு கேட்டேன். கண்டக்டர் ரெண்‍டோ மூணோ வாக்கியங்கள்ல திட்டிட்டு டிக்கட் தந்தான். பின் சீட்ல இருந்த இரண்டு பேர் கண்டக்டர்க்கு ஒத்தாசையா சிரிச்சாங்க. நான் திருநெல்வேலின்னு உச்சரித்த பிறகுதான் ஜெயா நிலைமையப் புரிஞ்சுகிட்டது. ரொம்பவும் ஷேம் ஆயிட்டு. குருவிபோல என் நெஞ்சில் முகத்தை மறச்சுகிட்டா. கொஞ்சதூரம் போனதுக்கு அப்புறமா லேசா ரெண்டு சொட்டு கண்ணீர் என் சட்டை வழியா உடம்பைத் தொட்டபிறகு, இது ரொம்ப சகஜம் ஜெயா, இதுவ அவமானப்பட எதுவும் இல்லை அப்படீன்னேன். இது கற்பனைபோலகூட உங்களுக்குத் தோணலாம். அதுக்கான வாய்ப்பு இந்த சம்பவத்திலயும் என் பலகீனமான மொழியிலயும் இருக்கு. ஆனால் நாம நம்ப முடியாத சம்பவங்கள் சில நிஜமா இருக்கு. என்ன செய்ய? ஒருசமயம் 80 வயசுல ஒரு கிழவர் விறகு வெட்டிட்டிருந்ததைப் பார்த்தேன். பக்கத்துல முப்பது முப்பத்தைஞ்சி வயசில ஒருத்தர் மேஸ்திரி வேலை பார்த்திட்டிருந்தான். இது எனக்கு அதிர்ச்சியா இருந்தது. நான் பார்க்காம இதை யாராவது சொல்லியிருந்தா நான் நம்பியிருக்கவே மாட்டேன். அது போலத் தான் இதுவும். உங்களுக்குத் நேரணும். 

இது மாதிரியா எனக்கும் ஒரு சம்பவம் நடந்திருக்கு. ஆனந்த செவ்வாய் கிழமைகள்ல நான் பார்க்கிறதுண்டு. ஒருநாள் ஏதேச்சையாக புதன்கிழமை பாத்து கொஞ்சநேரம் பேசிட்டிருந்திட்டு பஸ் ஸ்டாண்ட் வரும்போது நான் வழக்கமா முடிவெட்ற கடை திறந்திருந்தது. ஒருநபர் மூலம் பழக்கப்பட்டிருந்த விஷயத்தால நாள் குழம்பிப் போச்சு. நான் புதனை செவ்வாய்னே முடிவு பண்ணிட்டேன். அந்த சூழல் டைம் எல்லாமே எனக்கு செவ்வாய்கிழமைக்கான தயார் நிலைக்கு மாறியிருந்தது. செவ்வாய்கிழமைகளில் இல்லாத முடிவெட்டும் கடை மட்டும் இந்த சூழலை மறுத்ததில் எனக்குக் குழப்பம். கடையில் ஏறி ஏன் லீவ் நாள்ல கடை திறந்து வச்சிருக்கீங்கன்னு கேட்டேன். எல்லோரும் புதன்னு சொன்னதும் சிரிச்சிகிட்டதும்தான் என்னை நிலைக்குக் கொண்டு வந்தது. அப்புறமா முடிவெட்டப் போகும்போது வழக்கமா பேசிக்கிட்டே முடிவெட்டுறவன் என்கிட்ட பேசறதையே விட்டுட்டு ஒழுங்கா முடியை மட்டுமே வெட்டினான்கறதும் சவுகரியமாகத்தான் இருந்தது. டவுன் சர்குலர்ல டிக்கட் ‍எடுக்கும்போது பன்னீரும் ஒருதடவை ரெண்டு பஸ் ஸ்டாண்ட், ஒரு ப்ளைன் கோல்டு ப்ளாக்னு கேட்டு, அசடு வழிஞ்சு சிரிச்சு சமாளிச்சு அவதிப்பட்டிருக்கான். என்கூட வரும்போது ஜெயாவுக்கு முகத்தை நேரா நிமித்தவே முடியாமப் போச்சு. இதை யாரு கவனிச்சாங்க;கவனிக்கல்ல அப்படிங்கறதே அவளுக்கு தெரியாததால அவளுக்கு யாரையும் எதிர்கொள்ள முடியல்ல. நான் என்னன்னவோ சொல்லிப் பார்த்தேன். நீ எவ்வளவு தைரியமானவ; ஏன் சுத்தியுள்ள சமூகத்துக்குப் பயப்படணும்னுகூட கேட்டேன். வள்ளியூர்ல இறங்கிருவோம் மனோ அப்படீன்னு பத்தாயிரம் ரூபா கடன் கேக்கிறதுபோல சொன்னா. வள்ளியூர்ல இறங்கினோம். ரெண்டுபேரும் டீ குடிச்சிட்டு எதுவுமே பேசிக்காம வள்ளியூர்ல இருந்து அன்னக்கி மட்டும் P.T.C-யில் திரும்பினோம். இந்த ரெண்டு காரியங்கள வச்சிட்டு ஜெயாவ உங்களால புரிய முடியுமா? தெரியல்ல. எனக்கு அவள புரிய முடிந்தது. தீர்க்கமா, மீக நீளமா. இந்த விஷயங்கள், ஜெயாவோட சம்மந்தப்பட்ட ஏனைய காரியங்கள் எல்லாம் அப்படியே மனசில தேங்கி அசையாதக் காட்சிகள் போல நிக்குது. இந்த இறந்த காலத்தில் வாழுவதில் எனக்கு எந்தவிதமான சிரமங்களுமேயில்ல. இறந்தகாலம் என் நிகழ்காலமா இருக்கு. அசையாத பிம்பங்கள், தீர்மானிக்கப்பட்ட காட்சிகள் வரலாற்றுத் தடயங்கள் மாதிரி கல்லு கல்லா, பழைய மரக்கதவுகளா, சிதைஞ்ச கோபுரங்களா, ஆனா புதுசா எப்படியோ இருக்கு. பழைய கோபுரத்து மணிகள் இப்ப சத்தங்கள் உண்டு பண்றதில்ல. ஆனா அசையுது. பழைய சிற்பங்கள்ல மழையோ, வெயிலோ, காத்தோ எதுவுமில்ல. அச்சடிச்சது போலவுள்ள பாதுகாப்போட இருக்கு. பச்சையம் மாறாத மரங்கள் சருகுகள், பூக்கள் கருகாத மரங்கள் சுத்திச்சுத்தி. மனசெல்லாம் சந்தோசம் பனிக்கட்டிபோல உறிஞ்சி போயிருக்கு. உறைந்த நிலை சந்தோசங்கள் மனச என்னவோ செய்யுது. பனிக்கட்டிக்குள் சிக்கிக் கொண்ட மீன்கள் இன்னும் செத்துப் போகவேயில்லை. ‍எப்பவாவது ஒளி பீசுசியடிச்சி வெப்பம் நேர்ந்தா இந்த மீன்களுக்கு இன்னும் துடிப்பு வரக்கூடும். துடுப்பு அசையக்கூடும். சில கல்வெட்டுகள் தூசி பாஞ்சி வாசிக்க முடியல்ல. ஞாபகம் ஒரு ரசம் போன கண்ணாடி. மங்கல் மங்கலாகவும் மங்கலிம்லாமலும். 

இறந்தகாலத்துக்கும் நிகழ்காலத்துக்கும் என்ன பெரிய வித்தியாசம் உண்டுன்னா இறந்தகாலம் சப்தம் செய்யறதில்ல. ஒலியுண்டாக்கறதில்ல. கிழிந்த காலண்டர், கடிந்த பேனா, துருப்பிடித்த இரும்பு, இரசாயன மாற்றமடைந்த பாறைத்துணுக்குகள், அசையாத மரங்கள் எல்லாமே இறந்தகாலத்தில் ஒலியுண்டாக்காத ஞாபகம். ஒலியுண்டாக்காத எல்லா பொருட்களும், ஜீவராசிகளும் எனக்கு ஜெயாவ ஞாபகப்படுத்துதுது. சாய்ந்தரம்போல ஒரு நிமிஷம் கண்ண மூடினாகூட ஜெயாவோட பிம்பம், மங்கிப்போய் தெரியும். சில நேரம் மங்கல் சிரிப்பு, சில நேரம் மங்கல் மெளனம், சில நேரம் மங்கல் புன்னகை. என்னுடைய தனிமை வெளிச்சம் பூசப்பட்ட மங்கல். ஜெயாவுக்கு இனி நான் ஹேர்பின் வாங்கிக் கொடுக்க முடியாமற் போகலாம். ‍ஜெயாவ விட்டுட்டு ரொம்ப தூரத்துக்கு நான் விரட்டப்படுறதும், நெருக்கறதுமா இருக்கேன். ஜெயா காலம், காலத்தோட யாரு போலியா வாழ முடியும். ஜெயாவோட ஞாபகங்கள் என் தியான நிலை. 
ஜெயாவ நான் எப்படி பார்க்க முடியாம போச்சு அப்படீங்கறது உங்களுக்குத் தெரியாது இல்லையா? மிஸ்டர் செளந்தரபாண்டியன்தான் முதல்மதலா ஜெயாவுக்கும் எனக்குமுள்ள பழக்கத்தை ஜெயா வீட்டுக்கு எடுத்துக்கொண்டு போனது. செளந்தர பாண்டியன என்னால புரிய முடிஞ்சதேயில்ல. செளந்தரபாண்டியன் ஏன் இந்த விஷயத்த ஜெயா வீட்டுக்குத் தெரியப்படுத்தணும்? ஜெயாவோட அண்ணன் ஜெயாவ அடிச்சிருக்கான். ஜெயாவோட அம்மா ஜெயாவோட தங்கச்சி இறந்தசமயம் சிந்தின கண்ணீரைக் காட்டிலும் கூடுதலா சிந்தியிருக்காங்க. ஜெயா ஹாஸ்பிட்டல் வர்றது தடை செய்யப்பட்டது. நான்கு அறைகள், ஊர் குளம், திருச்செந்தூர் உவரி விசாகம், ஊர் அம்மன்கோவில் கொடை இப்படியாகிப் போச்சு அவள் சுதந்திரம். எனக்கு எதுவும் செய்ய முடியல்ல. இதை எல்லாத்தையும்விட செளந்தரபாண்டியன நீங்க புரிஞ்சுக்க முயற்சி பண்ணுவது அவசியம். செளந்திரபாண்டியன பற்றி கீழே குறிப்பிட்டிருக்கேன். அவ்வளவுதான் எனக்கு சொல்லவுள்ள விஷயம். 
 
 பெயர்  : எஸ். செளந்திரபாண்டியன் 
 வயது  : 29 
 கல்வித் தகுதி : (எம்.காம்)
 மதம், வகுப்பு : இந்து, பிற்படுத்தப்பட்ட வகுப்பு 
 தகப்பனார் பெயர் : அ. சிவனணைந்த 
  பெருமாள் நாடார் 
 முகவரி : 21பி, 'சிவனகம்', சாலை ஜங்ஷன்,
  மாலையணிந்தான் குடியிருப்பு, 
  புத்தளம் அஞ்சல் - 629 602.

மிஸ்டர் செளந்திரபாண்டியன் ஆறு அண்ணன் தம்பிகளில் ஆறாவதா பிறந்தவர். அவங்க மூத்த அண்ணன் பி.இ. இஞ்சினியர். அடுத்த அண்ணன் காலேஜ் புரபசர் (எக்னாமிக்ஸ் டிப்பார்ட்மென்ட்) அப்புறமா ஒருத்தர் நாகர்கோவில்லவுள்ள பிரபலமான சர்ஜன் செளந்திர பாண்டியன் அக்காவ எட்டு லட்சரூபாய் சீதனங் கொடுத்து அகஸ்தீஸ்வரத்துல பி.இ. இஞ்சினியருக்குக் கட்டிக்கொடுத்த சமயத்தில் ஊர்ல நடந்த விசேஷம் அம்மன்கொடை பரபரப்பை முந்தியது. எம்.எஸ் விஸ்வநாதன் கச்சேரி. மூணுநாள் திரைப்படம் (16 எம்.எம்) ஊர் அமர்க்களப்பட்டது. கெளரவம், பட்டிக்காடா பட்டணமா, நல்லவனுக்கு நல்லவன் ஆகியவை திரையிடப்பட்டன. கெளரவம், பட்டிக்காடா பட்டணமா ரெண்டும் அவங்க அண்ணன்மார்களின் ரசனையின் பேரிலும், நல்லவனுக்கு நல்லவன் செளந்திரபாண்டியன் ரசனையின்பேரிலும் திரையிடப்பட்டன. எங்க ஊர் சாப்பட்டுப் பந்தியில் போளி பரி மாறப்பட்ட முதல் கல்யாண நிகழ்ச்சியும் அதுதான். முருகேசன் ‍போளிய குளுந்த பப்படம்னு நினைச்சி பருப்பு சோத்துல பிச்சிப்போட்டு பிசஞ்சி சாப்பிட்டு முகஞ்சுழிச்சதுகூட எனக்கு ஞாபகமிருக்கு. அப்புறமா செளந்தரபாண்டியனோட ஒரு அண்ணன் எம்.ஏ.தமிழ் படிச்சுட்டு தோப்புகள கவனிக்கறது;ஊர்ல பட்டிமன்றம் போட வர்றவங்களுக்கு வரவேற்புரை அல்லது நன்றியுரை சொல்றது இப்படியிருக்காரு. செளந்தர பாண்டியனுக்கு கடைசியா சிவனணைஞ்ச பெருமாள் விதிச்சவிதி கோட்டத்துல இரும்புக் கடை. 
செளந்தரப்பாண்டியன் 22-25 வயதுக்குள் இருக்கும் போது பார்த்த வேலைகள் ஸ்பீக்கர் செட், டியூஷன் ஹோம். ஸ்பீக்கர்செட் கொஞ்சநாளையில் அவுங்க குடும்பத்தாரால் தடை செய்யப்பட்டது. ஸ்பீக்கர்செட் தடை செய்யப்பட்ட புத்துணர்ச்சியோடு பாண்டியன் டியூஷன் ஹோம் என்கிற ஓலைக்குடிசை சிவனணைஞ்சான் தோப்புக்குள்ள உதயமானது. ஆரம்பத்துல மூணு பேர் சேர்ந்து ஸ்கூல் பிள்ளைகளுக்கு டியூசன் சொல்லிக் கொடுத்தாங்க. அதுல செளந்தரபாண்டியன் பொம்பளப் பிள்ளைங்க படிக்காம வந்தா வெறித்தனமா அடிக்கறதாகவும், பொம்பளப் பிள்ளைகள செளந்தர பாண்டியனுக்குப் படிக்காதுன்னும், ஆம்பிளபிள்ளைகள் பேர்லதான் செளந்தர பாண்டியனுக்கு அபிமான முன்னும் டியூஷன் படிக்கற பசங்க பேசிக்கிட்டாங்க. அப்புறமா ஒருமாசம் கழிச்சி ஓம்பதாங்கிளாஸ் படிச்ச சிறுமி டியூஷன் முடிஞ்சி அழுதுகிட்டே வந்து, படிக்காததுக்காக செளந்தரபாண்டியன் சார் என் உடுப்பையெல்லாம் கழற்றி மடியிலே வச்சி என்னென்னலாமோ செய்திட்டாருன்னு அவங்க அம்மா அப்பாகிட்ட சொல்ல, கொஞ்ச விசாலமா விசாரிச்சதில் பாண்டியன் டியூஷன்‍ஹோமில் பல பெண் பிள்ளைகளுக்கும் அது போலவுள்ள தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது என்பது தெரியவந்தது. அன்றிரவே பாண்டியன் டியூஷன் ஹோம் தீ வைக்கப்பட்டது. அப்புறமா செளந்தர பாண்டியனைப் பற்றி நான் கேள்விப்பட்ட ஒன்றிரண்டு விஷயங்கள் இன்னும் உறுதியா நம்பும்படியாக இல்லை. இருந்தாலும் சொல்றேன். கோட்டார் கூழக்கடை பக்கத்திலே ஒரு சமயம் செளந்தரபாண்டியனை நொறுங்க அடிச்சிருக்காங்க. அப்பதான் வேலப்பன் என்கிட்ட "லே மக்கா, மற்றவன் கூழக்கடை பக்கத்துலே எட்டுமணிக்குப்போல் வெளிக்கிருக்கப் போன பொம்பளையள்வள உத்துப் பார்த்திருக்கான். இருட்டுல முண்டமா தெரியக் கூடாதுங்கறதுக்காக வேட்டியையும் சட்டையையும் உரிஞ்சி ஒரு தென்னம்பிள்ளை கொண்டையில சொருவி வச்சிற்று பார்த்திருக்கான். பொம்ளையள்வ என்னவோ அனங்குவேன்னு பாக்க முண்டமா இவன் ஓடியிருக்கான். கையோட புடுச்சுப்புட்டாவ. அடின்னா நீசத்தனமான அடியாம். புறவு கூழக்கட தேங்காயாவாரி தங்கசாமிதான் பாவம்பாத்து சமாளிச்சி பயலுக்கு வேட்டியும் முண்டும் எடுத்துக் கொடுத்து வசமா கூட்டிட்டு வந்து பஸ் ஏத்திவச்சிருக்கான்னு சொன்னான். இப்படி உத்துப் பாக்கறது அவனுக்குத் தொடர்ச்சியா பழக்கமோ என்னவோ தெரியல்ல. ஒருசமயம் ஊருக்குப் புறத்தவுள்ள மூக்குப்புறியாரு திண்டுலயும் செளந்தரபாண்டியன் இதுபோல மாட்டி அடி வாங்கினதா ஊர்ல குமரேசன் உட்பட எல்லாரும் பேசறாங்க.ஆனா செளந்தரபாண்டியன்கிறது இதுமட்டும்தானா அப்படின்னா அதுவுமில்லை. செளந்தரபாண்டியன் நிறைய நல்ல காரியங்களன்னு நம்பப்படற காரியங்களையெல்லாம் செய்யறாரு. ஊர் பையன்களுக்கு டவுண் ஸ்கூல் காலேஜ்ல எல்லாம் அட்மிஷன் வாங்கி கொடுக்கிறது. ஊர் அம்மன் கோயில் கொடைக்கு வரி எழுதறது எல்லாத்திலேயும் உற்சாகமா நிற்கிறது. ஊர்ல இந்து இளைஞர் மன்றம் தொடங்கினது. யாருக்கு வேணும்னாலும் கம்யூனிட்டி சர்டிபிகேட் வாங்கிக் கொடுக்கிறது இப்படி, தற்சமயம்கூட செளந்தர பாண்டியன் வியாபாரிகள் சங்கத் தலைவர், ரோட்டராக்ட் மெம்பர். ஒருசமயம் ஊர்ல இன்னொரு பஸ்கேட்டு மறியல் பண்ணணுனதுல ரொம்ப முக்கியமான ஆள் செளந்தரபாண்டியன். 

இதனாலதான் செளந்தரபாண்டியன என்னால புரிஞ்சுக்க முடியாம போச்சு. ஜெயாவுக்கும் எனக்கும் மத்தியில் செளந்திரபாண்டியன் நுழைஞ்சதையும் கூட நான் சொல்லணும். என் ஊர்க்காரருங்கறதுனாலயும், என் வயச ஒத்தவருங்கறதுனாலயும் செளந்தரபாண்டியன் எனக்கு ஏற்கனவே பரிச்சயம், பழக்கம்.பின்ன ரொம்ப பேசிக்கிறதில்ல. பாக்கறது, சிரிக்கறது, சிரிக்கறதுபோல காட்டறது இப்படி. செளந்தர பாண்டியன் எனக்கு சில உதவிகளும் செய்திருக்காரு. அதனால் அவர்மேல் மரியாதைபோல ஒண்ணும்கூட இருந்திருக்க வேண்டும் அல்லது இருந்திருக்கலாம்.

ஜெயாவும் நானும் சக்கரவர்த்தி மினில படம் பார்க்க போகும்போது எனக்கும் ஜெயாவுக்கும் மத்தியில அவரு அறிமுகமானாரு. ஜெயாவை அறிமுகம் பண்ணினேன். டிக்கட்ட அட்ஜஸ்ட்பண்ணி மாத்தி வாங்கி, எங்க பக்கத்திலே உக்காந்தாரு. வாழ்த்துக்கள் சொன்னாரு. மனோ உங்களுக்குப் பொருத்தமான ஆளு அப்படீன்னு ஜெயாகிட்ட சொன்னாரு. அய்யய்யோ இப்படியெல்லாம் பொய் சொல்லி மனோகிட்ட என்ன மாட்டி விட்டுடாதீங்க அப்படீன்னு ஜெயா சொன்னா. இன்னும் என்னென்னமோ பேசினோம். உங்களுக்கு என்ன ஹெல்ப் தேவைப்பட்டாலும் நான் செய்யறேன்னார். செளந்தரபாண்டியன் இடைவேளையில் எங்களுக்கு ஐஸ்கிரீம் வாங்கித் தந்தார். எனக்கு அப்ப டீ தான் தேவையா இருந்தது. ஜெயாவுக்கு ஐஸ்கிரீம் இருக்கட்டுமேன்னு தோணுச்சி. சரீன்னு ஐஸ்கிரீமே வாங்கச் சம்மதிச்சேன். அவரு உதவிபண்றது எனக்கந்த சமயத்திலே நெருக்கடியா இருந்தது. 
அப்புறம் ஜெயாவிடம் ரெண்டுதடவை செளந்திரபாண்டியன் மூவ் பண்ணியிருக்கிறார். ஒருசமயம் ரொம்ப சின்சியரா ஜெயாவ சினிமாவுக்குக் கூப்பிட்டிருக்கார். மனோவோட மட்டும்தான் போவீங்களோன்னு செல்லக் கோபம் காட்டியிருக்கிறார். ஜெயா அப்புறம் பார்க்கலாம்னு சொல்லியிருக்கா. இன்னொரு தடவை ஜெயாவுக்கு நான் உங்களை லவ் பண்றேன்னும், நீங்க இல்லாட்டா செத்துப் போயிருவேன்னும் லெட்டர் எழுதியிருந்தார். அவருடைய குடும்ப படோடோபங்களையும் எனது குடும்பத்தின் சீரழிவையும்கூட அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார். எப்படியிருந்தாலும் கூட ஈத்தாமொழி போய் அறிமுகமேயில்லாத ஜெயா வீட்டுல இதையெல்லாம் சொல்ல எப்படி இவருக்கு முடிஞ்சதுன்னு எனக்கு ஆச்சரியமா இருக்கு. செளந்தரபாண்டியனோட மேனரிசம் அப்படின்னு சொல்ல எனக்கு எதுவுமில்ல. அவரோட டிரஸ் பெரும்பாலும் சஃபாரி, பெல்ஸ் சஃபாரி இல்லாவிட்டா இன் பண்ணி அகலமான பெல்ட். ஒருதலைராகம் பீரியேட்ல உள்ளது. அவர் முகத்துக்கு பொருத்தமே இல்லாத காதுக்கு மேல தூக்கிட்டு நிக்கிற ஒரு ஸ்டைல் ப்ரேம் கூலிங்கிளாஸ். கையில் இந்தியா டூடே, த ஹிண்டு இரண்டில் ஏதாவது ஒண்ணு. ஒரு புளிச்ச சிரி.

ஓவியம்  - செல்வம் 

அப்பச்சி காமராஜர் ...

அப்பச்சி காமராஜர் ... காமராஜ் பற்றி "நீயா நானா " விஜய் டிவி ஷோவில் பேசுவதற்காக ஆன்டனி ஒரு வாரம் முன்னதாக அழைத்தார்.நான் வர...