எழுத்தாளன் என்பவன் வெற்றுக்கதை சொல்லியில்லை.

                    எழுத்தாளன் என்பவன் வெற்றுக்கதை சொல்லியில்லை.


உள்ளடக்கமும் , கதை சொல்லுதலும் வேறு வேறு காரியங்கள்.கதையடைகிற உருமாற்றமே உள்ளடக்கம்.
எழுத்தாளனைக் கதை சொல்லியென இங்கே பலரும் கருதுகிறார்கள்.நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். எழுத்தாளன் உங்களிடம் கதை சொல்வது ,கதைக்கு அப்பால் உள்ள ஒரு உள்ளடக்கத்தைப் பற்றி உங்களோடு தொடர்பு கொள்வதற்குத்தானே அன்றி கதையை மட்டும் சொல்லிவிட்டு கடந்து செல்வதற்காக அல்ல.இந்த உள்ளடக்கம் ஒரு எழுத்தாளனிலிருந்து மற்றொருவருக்கு மாறுபட்டது.சில சமயங்களில் முற்றிலும் மாறுபட்டது.எதிரெதிர் நிலைகளிலும் கூட உள்ளடக்கம் அமைய முடியும்.எழுத்தாளனை content writer என்று புரிந்து கொண்டால் அதிக சிக்கல் ஏற்படாது.கதை சொல்ல எல்லா கிழவிகளுக்கும் தெரியும்.ஊர் கிழவி சொல்லுகிற கதைகளும் ஒரு எழுத்தாளன் முயலுகிற உள்ளடக்கப் பாய்ச்சலும் வேறு வேறானவை.தமிழில் உருவான அதிமுக்கியமான எல்லா எழுத்தாளர்களும் content writer தானே அன்றி வெற்றுக் கதைசொல்லிகள் இல்லை. புதுமைப்பித்தன்,மௌனி ,சுந்தர ராமசாமி,எம்.வி .வெங்கட்ராம் ,வண்ணநிலவன் ,அழகிரிசாமி ,ஜானகி ராமன் யாரை வேண்டுமானாலும் நோக்கிப் பாருங்கள் இது உண்மையென்பது விளங்கும்.
உள்ளடக்கத்தின் தரிசனம் என்பது ஒருபோதும் எழுதுகிறவனின் தன்னிலையை சுவரொட்டியாக்குவதில்லை.தன்னிலையைக் கரைக்கும் இடத்திற்கு சிறந்த உள்ளடக்கம் இடமாற்றம் பெற்று விடும்.
எழுத்தாளர்கள் கதைகள்தான் சொல்வார்கள் ஆனால் கதை சொல்வதற்காக மட்டும் இல்லை.அல்லது கதையை மட்டும் சொல்வதற்காக இல்லை.ஊர் கிழவி கதை சொல்கிறாள் ,அவள் கதை சொல்வதற்காக மட்டும்தான் கதை சொல்கிறாள்.இதுதான் வேறுபாடு .
ப்ரன்ஸ் காப்காவின் " உருமாற்றம் " கதையையோ,பியோதர் டாஸ்டாவெஸ்கியின் " அருவருப்பான விவகாரம் " கதையையோ ,டால்ஸ்டாயின் " நடனத்திற்குப் பிறகு ... " கதையையோ,டி.ஹெச் .லாரன்ஸின் "கிறிதாந்தாமப் பூக்கள் " கதையையோ இல்லையெனில் செகாவின் " ஆறாவது வார்டு" ," நாய்க்கார சீமாட்டி "கதைகளை யோசித்துப் பாருங்கள்.இல்லை இது போன்ற மேலான கதைகளை யோசித்துப் பாருங்கள் ,கதையின் சுவாரஸ்யத்திற்காக மட்டுமே அவை சொல்லப்பட்டிருக்கவில்லை.ஆழ்ந்த தரிசனங்கள் அக்கதைகளில் உண்டு.ஆழ்ந்த தரிசனங்களை எட்டுவது வரையில் அந்த கதைகள் வளர்ந்து கொண்டே செல்லும் .
டால்ஸ்டாயும் லாரன்சும் கதைகளில் தரிசனம் கைகூடுவது வரையில் நகர்ந்து நகர்ந்து சென்று கொண்டே இருப்பார்கள்.அகப்பட்ட மறுகணத்தில் அவர்கள் தரிசனத்தை நம்மில் இறக்கி வைத்து விட்டு நீங்கிச் செல்வதை அவர்களுடைய படைப்புகளில் காண முடியும்
உள்ளடக்கமும் கதை சொல்லுதலும் வேறு வேறு என்பதை எப்போது ஒருவர் உணர்கிறாரோ அப்போதிலிருந்து அவருக்கு விமர்சனக் குரல்கள் எங்கிருந்து வருகின்றன என்பதனை தெளிவுற தெரிந்து கொள்ள முடியும்.உள்ளடக்கமற்ற வெற்றுக்கதைகளை மனவெளியிலிருந்து அவை அப்புறப்படுத்துகின்றன.உள்ளடக்கமற்ற கதைகள் உள்ளடக்கத்தை ஏங்குபவை.உள்ளடக்கமற்ற பல கதைகளில் எழுதுகிறவன் ஏறியமர்ந்ததும் அவை எழுந்து நடமாடத் தொடங்குவது இதனால்தான்.உறங்கும் கதைகளும் கலைஞன் கைப்பட்டவுடன் உயிர்கொண்டு நெளியும்.கதைகளுக்கு ஆழ்ந்த உள்ளடக்கங்களைத் தருவதும் ,ஏற்றுவதும் எழுகிறவனின் வேலை .உள்ளடக்கமற்ற கதைகளை உறங்கும் கதைகள் என்றும் சொல்லலாம்.
கவபட்டா, எட்கர் கிரட் போன்றோர் கதைகளே சொல்லாமல் அல்லது கதைகளில் அதிக நோக்கமில்லாமல் நேரடியாக உள்ளடக்கத்திற்குள் பாய்ந்து விட முயல்வதை கவனிக்கிறீர்களா? கதை சொல்வான் எழுத்தாளன் ஆனால் ஒருபோதும் கதை சொல்வதற்காக மட்டுமே அவன் கதை சொல்வதில்லை.

"ஓம் சக்தி ஓம் பராசக்தி "- வேலாயுதம் பொன்னுசாமி

"ஓம் சக்தி ஓம் பராசக்தி "கட்டுரை நூல் பற்றிய
வேலாயுதம் பொன்னுசாமி எழுதியிருக்கும் பீம ராஜா விருதிற்கான  குறிப்பு :


ஓம் சக்தி ஓம் பராசக்தி - லக்ஷ்மி மணிவண்ணன்
அங்கதத்தின் துடிகொண்டாடும் எழுத்து

தமிழ் இலக்கியப்பரப்பில்  கவிஞராக கால் பதித்த லக்ஷ்மி மணிவண்ணன் சிறுகதை ,கவிதை,நாவல் ஆசிரியர் ,விமர்சகர் , உரைநடை எழுத்து , "சிலேட் " இதழ்  ஆசிரியர் ,எழுத்தாளர்கள் தங்கி எழுத்துப் பணியை மேற்கொள்ள "நிழற்தாங்கல்" அமைப்பு என பல தளங்களின் செயல்பாட்டாளர் .

இலக்கியத்தை யந்திரத்தனமான பிரதிபலிப்பாக பார்க்காது ,பண்பாட்டு விளைச்சலாகப் பார்க்கக் கூடியவராகவும் ,பண்பாட்டு உருவாக்கத்துக்கு காரணமான தெய்வம் ,பொருளாதாரம்,அரசியல்,உளவியல் போன்ற கருப்பொருட்களுடன் கருத்துநிலை கூறுகளின் வலிமையையும் நன்குணர்ந்தவராக எழுத்தின் மூலம் அறிய முடிகிறது.

தன கருத்து நிலையில் இருந்து சமூகத்தை ,இலக்கியத்தை பார்ப்பது ,விமர்சிப்பது ,படைப்பது என்ற இவரின் பதிவுகளில் தற்போதைய உரைநடை எழுத்தாக வந்துள்ளது."ஓம் சக்தி ஓம் பராசக்தி " இப்புத்தகத்தின் தடமறியும் பிரயத்தனத்தில் உள்நுழையும் போது பரிதவித்து அலையும் இரத்தக் காட்டேரி ,சிற்றெறும்பின் ஊர் தடம் ,கருநாகத்தின் நெகிழ் வளைப்பாதை ,சிறுநதியின் சலனம் படிந்த வழி தடங்களின் அழகியலையும் தமிழ்ச் சூழலில் உறைந்திருக்கும் பண்பாட்டு பனிப்பாறைகளை உடைத்தெறியும் மூர்க்கத்தையும் பார்க்க முடிகிறது.

பொது கருத்துக்களை  கவிதையின் பாடுபொருளாக்கும் கவிஞர்களையும் ,பிரக்ஞய் அற்று வாசிப்பவர்களை சாடும் லக்ஷ்மி மணிவண்ணன் ., பெண்தான் இச்சமூகத்தின் ஆதார கனவாகவும் , அக உந்துதலாகவும் இருக்கிறாள் என்ற அவதானிப்பை முன்வைப்பது ,அக்கா மாதேவி ஆன்மாவை முன்வைத்த ஆன்மீக நோக்கின் ,நவீன பார்வையின் நீட்சியாக பார்க்க முடிகிறது.

முரண்பாடுகளுக்கு இடையிலான இணைவுகளை கண்டடைவதையும் ,வாசிப்பின் அறிதலைக் கடந்து வாசிப்பின் உணர்தலை முன் வைக்கிறார்.சொல்ல வரும் கருத்தைப் படிமமாக்கி பின் அதைச் சுற்றி புனைவைக் கட்டும் எழுத்தில் துடி கொண்டாடுகிறது அங்கதம் .

"அறிய அறிய போதாமையில் உழல வேண்டுமென்பது நவீன மனிதனின் செயற்கை அழிவின் விதி "  தாய்மை கனிய மடு உருக கன்றுகள் இன்று அவசியமில்லை " , "சாதாரண மக்கள் என்று சொல்லப்படும் மனிதர்களின் பல நூற்றாண்டு அனுபவங்கள் நவீன விஞ்ஞானத்தின் முன்பாக அர்த்தமிழந்து போனது போலவே மனிதர்களும் அவசியமற்றவர்களாகிறார்கள்" இப்படியாக தொடருகிறது பல பதிவுகள்..பிரக்ஞயற்று வலிந்து இடதுசாரிகளை விமர்சிக்கும் பதிவுகளும் தொடர்கிறது.எந்த அர்த்தத்தில் சொற்களை பயன்படுத்தியிருக்கிறார் என்பதை உறுதிப்படுத்தாமல் பிரதியை கடந்து செல்வது ஆபத்தாக முடியும் .

நேர்மறையைச் சொல்ல எதிர்மறை வார்த்தைகளையும் ,எதிர்மறையைச் சொல்ல நேர்மறை வார்த்தைகளையும் பயன்படுத்தும் ,கலைத்துப் போடும் யுக்தியையும் உரைநடையை புனைவெழுத்தாக எழுதி பார்க்கும் வக்ரோக்தியையும் தமிழில் தொடர்ந்து பதிவாக்கும் எழுத்தாளர் லக்ஷ்மி மணிவண்ணன் என்று உறுதிபட சொல்ல முடியும்.சிந்தனையை ,மொழியை தன்னிச்சையாக இயங்க விட்டு திசைவழி எண்திசையும் திரிந்தலையும் ஊழி போன்றது லக்ஷ்மி மணிவண்ணனின் எழுத்து.

தான் கடந்ததும் கடக்க முடியாததுமான வாழ்வியல் நிகழ்வுகள் மற்றும் அனுபவங்களை ஆன்மீக தளத்தில் நின்று நோக்கி ; எழுதாமல் இருக்க முடியாது என்ற மனோ நிர்பந்தத்தில் எழுதி தீர்ப்பது, எழுதிக் கடப்பது , என்ற பித்தத்தின் நிறமும் ,வாசனையும் எழுத்தாகி ஆன்மீக சமத்துவத்திற்கான குரலாக உருக் கொண்டதிந்த பிரதி.  

கலை சோறு போடுமா ?

கலை சோறு போடுமா ?

கலைஞர்களை நோக்கி தமிழ்ச் சமூகம் திரும்பத்திரும்ப கேட்கும் கேள்வி  கலை சோறு போடுமா ? என்ன செய்கிறீர்கள்  நீங்கள் ? என்கிற கேள்வி தொடர்பானது அது .இந்த வயது வரையில் இந்த கேள்விக்கு விடைகாண முடியவில்லை . என்னதான் செய்து கொண்டிருக்கிறோம் நாம் ? நாம் செய்பவற்றின் அர்த்தம் எப்போதேனும் விளங்குமா? தெரியவில்லை .ஒரு நல்ல சட்டையை போட்டு விட்டு வந்தால் யார் எடுத்துத் தந்தார்கள் ? என கேட்கும் நண்பர்கள் கூடவே இருக்கிறார்கள்.தமிழ்ச் சமூகம் பிற செயல்களைச் செய்யாமல் கலையின் வேலையை மட்டும் செய்து கொண்டு வாழ்பவர்களை சந்தேகிக்கிறது.அப்படி இருப்பதைக் காண அச்சப்படுகிறது . எப்படி முடியும்? அப்படி வாழமுடியாது என்கிற பாடத்தை தானே உறுதியாக நம்பிக் கொண்டிருக்கிறோம்?

இளைஞர்களுக்கு உறுதியாக நான் சொல்லிக் கொள்வது ,நீங்கள் பிடிவாதமாக கலையின் மனம் கொண்டு தீவிரப்படுவீர்களேயானால் வாழமுடியும் . நம்பிக்கையை மட்டும் விடாமலிருக்கவேண்டும் . விக்கிரமாத்தியன் நம்பி ,கோணங்கி ,நான் உட்பட சிலர் உதாரணங்கள் தமிழ் சூழலில் உண்டு.

நான் நாளிதழ்களில் செய்தி ஆசிரியரிலிருந்து , கட்டிட வேலையில் கையாள்,கழிவறை துப்புரவுத் தொழிலாளி , தொழிற்சாலைகளில் பெரிய எந்திரங்களில் போர்மன் வேலை , மும்பையில் எனது கல்லூரி வாழ்க்கை முடித்து சில காலம் கணக்காளராக ,தமிழ் சினிமாவில் ஸ்கிரிப்ட் ரைட்டராக , இணைய தளங்களில் உதவி ஆசிரியராக , இப்படி எத்தனையோ வேலைகளை செய்து பார்த்து விட்டேன் . வியாபாரத்தில் விட்ட சொத்துக்களின் இன்றைய பொருள் மதிப்பு ஒன்றரை கோடிக்கு அதிகம் .ஒன்றரை ஏக்கர் நஞ்சை நிலத்தை வியாபாரம் அடித்து சென்றது . பின்னர் அதுபோல ஒரு மடங்குக்குக் குடித்து அழித்திருப்பேன்.என்னோடு உடன் சேர்ந்து குடித்து செத்தவர்கள் மட்டும் இருபத்திரண்டு பேர்.கொலை,தற்கொலை ,மன வியாதி,மின்கம்பத்தில் ஏறி மாய்த்துக்கொண்டவன் என.இவை மிகையின் கொட்டு மேளச் சத்தத்திற்காக சொல்பவை அல்ல .

சமீபத்தில் ஒரு எலிக்குஞ்சு எங்களோடெல்லாம் சேர்ந்து நீங்கள் குடிக்க மாட்டீர்களா எனக் கேட்டதற்கு "இறந்து விடுவாய் என பதில் சொன்னேன் " . நாங்கள் செய்த காரியங்களுக்கு இப்போது எப்படி உயிரோடிருக்கிறோம் என்பதே தெரியவில்லை.எனது சுயசரிதை தமிழில் எழுதப்பட வேண்டுமாயின் தள்ளாத முதுமை வந்து சேரவேண்டும் . தள்ளாத முதுமையிடம்தான் அது மசியும்.செய்த காரியங்கள் ஒன்றுமே விளங்கவில்லை.நாம் செய்ய வேண்டிய வேலைகளை மட்டும்தான் செய்யவேண்டும் என்பதை தெரிந்து கொள்வதற்குள் நடுவயது வந்து விட்டது . கலைஞன் எவ்வளவு போராட்டங்கள் இருந்தாலும் கூட செய்ய வேண்டிய வேலைகளை தொடர்ந்து செய்து கொண்டே இருக்க வேண்டியதுதான் .எல்லோரும் புறா பிடிக்கச் செல்கிறார்கள் என்பதற்காக அவனும் உடன் செல்லவேண்டியதில்லை . எனது நாற்பது வயதில்தான் கடமையைச் செய் ,பலனை எதிர்பாராதே எனும் கீதை வாக்கியத்தின் பொருள் என்ன எனபது விளங்கிற்று .ஊழ்வினை விரட்டும் போது புகை ரதத்திலிருந்து குதித்து விடக்கூடாது . படைப்பில் கடுத்த வண்ணத்தைப் பலமாக அடர்த்தி ஏற்றவேண்டும் . செய்த வேலைகளில் கழிவறை துப்புரவு வேலை மட்டுமே ,குறைந்த நேரத்தில் அதிக சம்பளம் கொண்ட வேலையாகவும் ,மனதுக்கு ஆறுதல் தருகிற வேலையாகவும் அமைந்தது .

"கவிதை சோறு போடுமா ? ,இலக்கியம் வாழவைக்குமா ? கலை வேலைக்காகுமா ? சிறு வயது முதற்கொண்டு இன்றுவரையில் எதிர்கொண்டுவரும் கேள்விகள் இவை .இக்கேள்விகளுக்கு இன்றுவரையில் என்னைப் பின்தொடர்வதில் சலிக்கவும் இல்லை . குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகிக் கொண்டிருக்கிறார்கள் . பேரன் பேத்திகள் கண்டாலும் இந்த கேள்விகள் என்னிடம் நிலுவையில்தான் இருந்து கொண்டிருக்கும் போல .ஏழாவது வகுப்பு படிக்கும்போது ,லெனின் சங்கர் என்னை தமிழ்நாடு கலை இலக்கிய பெரு மன்றத்திற்கு அழைத்துச் சென்றான்.குடும்ப அநீதிகளில் அல்லாடிக் கொண்டிருந்த என்னை நெறிக்குக் கொண்டுவந்த வழிகாட்டி, முதல் குரு எல்லாம் அவன்தான் .எட்டாவது படிக்கும்போது வீட்டைவிட்டு வெளியேற முயன்றேன் .சிறு வயதில் அப்பா தொடங்கி வைத்த கேள்விகள் இவை .பின்தொடர்ந்தவர்கள் உறவினர்கள் .அவர்களிடமிருந்தெல்லாம் தப்பித்தேன் . அவையெல்லாம் ஒன்றுமே எளிமையான காரியங்கள் இல்லை .

எப்படித்தான் தப்பித்தாலும் ,எங்குதான் சென்றாலும் அங்கே ஒருவர் இந்த கேள்விகளைக் கேட்பதற்கென்றே இருந்து கொண்டே இருக்கிறார் .அப்பாக்கள் தொடங்கி வைக்கிற கேள்விகள் , கொடுக்கிற சாபங்கள் அவ்வளவு எளிமையானவை அல்ல .கடக்கக் கடுமையானவை . சாகும்வரையில் பின்தொடர்பவை .நீங்கள் ஒரு நல்ல தந்தையாக இருக்க விரும்புபவர் எனில் தயவு செய்து குழந்தைகளைச் சபிக்காமலிருங்கள்.

ஒரு நல்ல உடை உடுக்க முடியாது ! நல்ல உணவு உண்ண முடியாது ! . குடும்பத்தோடு ஒரு நல்ல சொகுசுப்பயணம் செல்ல முடியாது . எப்படி வாழ்கிறீர்கள் ? என அதிசய வெறுப்புடன் கேட்க அங்கே ஒருவர் வந்துவிடுகிறார்.நாம் இடம் கொடுத்தால் அப்பா தொடங்கி வைத்த அனைத்து கேள்விகளையும் நம்மிடம் கேட்டுவிட்டுத் தான் அவர் நகர்ந்து செல்வார்.

அறிந்தவரையில் தத்தா ,பாட்டிகளிடம் இக்கேள்விகள் இல்லை அவர்களுக்கு எப்படியிருந்தாலும் சரிதான் .இருக்கவேண்டும் அவ்வளவுதான் .அதற்கு மேல் ஒன்றும் இல்லை .அள்ளி முடித்து அமுதூட்ட ,வாரி அணைத்துக்கொள்ள ....

வயல் வெளிகளில் எலிகளும்,தவளைகளும் செத்து மிதப்பதைக் கண்டு அஞ்சி நடுங்கியவர்கள் அவர்கள்.அவற்றையெல்லாம் அபசகுனமாய்ப் பார்த்தவர்கள் ! விஷம் வைத்தவர்கள் இவர்கள் .

அப்பைய்யா கட்டியணைக்கும் போதுள்ள உடல் வாசனையும்,அப்பம்மையின் மடியில் புரளும் மணமும் என்னிடம் தீருவதே இல்லை .அது தீர்ந்தால் போய்ச் சேர வேண்டியதுதான் . இக்கேள்விகளுக்கு இடையூறாக அவர்களும் பின் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறார்கள் . அவர்கள்தான் இந்த ஜென்மத்திற்கான சத்து . எனது எளிமை,பேரலங்காரம் ,அபூர்வம் எல்லாம் . அவர்களது கோபமும் ,கவலைகளும் எனது உள்ளீடு .தீரா அன்பும் அதுதான் . அவர்களின் வாசனையற்ற சிறு பொருளும் என்னிடம் இல்லை .

நவீன அப்பாக்களும் அம்மாக்களும் அஞ்சிப் பிறந்தவர்கள் .தனிமனித அச்சம் அவர்கள் கொண்டது . இக்கேள்விகளும் இந்த அச்சத்திலிருந்து பிறப்பவைதாம்.தானென்றும்,தனதென்றும் கொண்டவர்கள் .

இக்கேள்விகளை எனது கவிதைகளும்,புனைவெழுத்துக்களும் எதிர்கொண்டவிதமே எனது வாழ்க்கை .இக்கேள்விகளின் கொடுவாள் கூர்முனையை , எனது எழுத்துக்கள் ஓடித்தெறிந்தன .உதாசீனம் செய்தன. வெளிப்படுத்துதலில் சகல சுதந்திரத்தையும் பயனுறுத்தி முடுக்கி திக்கு முக்காடச் செய்தன . ரத்தம் சொட்டாமல் கூடாத காரியம்தான் அது .ரத்தம் சொட்டித்தான் கூடவும் செய்தது . இக்கேள்விகளுக்கான சமாதானத்தை ஒருபோதும் எனது படைப்புகள் தருவதே இல்லை . அவற்றை நிலை குலையச் செய்கின்றன.இக்கேள்விகளின் மீது எனது படைப்புகள் நிகழ்த்தும் அச்சமே , என் மீதான அச்சமாகவும் இருக்கிறது .

ராமகிருஷ்ண பரமஹம்சர் தலைமுடியால் தேய்த்து கழிப்பறைகளைச் சுத்தம் செய்த போது கண்ட திகைப்பும் அச்சமும் அது .உண்மையில் இக்கேள்விகள் எனது படைப்புகளின் பேரன்பை ஸ்பரிசிக்க இயலாத தொலைவில் இருப்பவை .நெருங்கினால் கபாலம் நொறுங்கி விடக் கூடியவையும் கூட .

painting  - karthik  meka  

கைப்பிடியரிசியிலொரு மஹா காரியம்.

கைப்பிடியரிசியிலொரு மஹா காரியம்.

நிழற்தாங்கல் அறக்கட்டளையை செயல்படுத்தத் தொடங்கி விட்டோம்.முதலில் ஐந்துபேரை தங்க வைக்கும் முயற்சிகளை எடுத்து வருகிறோம்.மூன்று பேர் எங்கள் இணைப்பில் ஏற்கனவே இருக்கிறார்கள்.முதலில் இன்னும் இரண்டுபேரை இணைத்துக் கொள்ள முடியும்.எழுதவும் ,படிக்கவும் அவர்கள் இதனை உபயோகிக்க முடியும்.மது அருந்தவும் ,புகைபிடிக்கவும் கண்டிப்பாக அனுமதியில்லை.சொந்தமாக ஒரு இடத்திற்கு செல்வது வரையில் இந்த பழக்கங்கள் கொண்டவர்கள் தங்க முயலவேண்டாம்.நிச்சயமாக வெளியேற்றி விடுவோம்.இது தவிர்த்து யாதொரு நிபந்தனைகளும் கிடையாது.உடன் வாழும் சமூகத்தினை கண்டிப்பாக தற்போது கணக்கில் கொண்டாக வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறோம்.பின்னாட்களில் "ஒடேஷா" போன்றதொரு அமைப்பாக நிழற்தாங்கலை உருமாற்றுவதே இலக்கு.

எங்கள் செயலில் நம்பிக்கை கொண்டோர் தங்களை சிரமப்படுத்திக் கொள்ளாத விதத்திலும் எங்களோடு இணைந்து பங்காற்ற முடியும்.தினமும் நீங்கள் சமையல் செய்யும் முன்பாக கைப்பிடியரிசியை எடுத்து ஒரு தனி பையில் போட்டு வைத்து ,நாளடைவில் பை  நிரம்பியதும் அதனை எங்களுக்கு அனுப்பி வைக்கலாம்.உங்கள் பங்களிப்பும் இந்த எண்ணத்தில் ஈடேற இது ஒரு வழி.

எழுதுவதற்கான மேஜைகள் 5 ,நாற்காலிகள் 5ம் ,போர்வைகள் ,தலையணைகள் போன்றவையும்  எங்களுக்கு உடனடி தேவைகளாக உள்ளன . பயன்படுத்தப்பட்ட எந்த பொருளையும் நாங்கள் ஏற்க மாட்டோம்.வாய்ப்புள்ளவர்கள் இவற்றில் ஏதேனும் முடிந்தவற்றைச் செய்து தரலாம்.

நிழற்தாங்கலுக்கான  ஒருமாத வாடகைத் தொகையை செலுத்த விரும்புவோர் செலுத்தலாம்.பிறந்த நாட்களிலோ ,ஏதும் விஷேச நாட்களிலோ எங்களுடன் இருந்து ஒருவேளை உணவருந்த விரும்புவோர் அந்த மாதத்திற்கான மளிகை செலவுகளை ஏற்றுக் கொண்டு எங்களுடன் இணைந்து கொள்ளலாம்.மாதம் ஒருவர் மட்டுமே எங்களுடன் இந்த வாய்ப்பினை பகிர்ந்து கொள்ள முடியும். மாதம்தோறும்  சிறு தொகையை எங்களுக்கு காணிக்கை செய்யலாம்.எங்களோடு உறுப்பினராகவும் இணையலாம்.

மாதம் ஒருமுறை திரையிடலோ  அல்லது கவிதை,இலக்கியம்,அறிவு பற்றிய உரையாடல்களோ எங்கள் அமைப்பில் நிகழும்.ஏதேனும் செல்வந்தன் / ள்  எங்களுக்கு திரையிடலுக்கான கருவிகளை வாங்கித் தர முன்வந்தால் எங்கள் வாடகை பிணி அகலும்.இப்போது வரையில் திரையிடல்களுக்கு வாடகைக்கு கருவிகளையே பயன்படுத்தி வருகிறோம்.

எல்லாவற்றிற்கும் மேலாக கைப்பிடி அரிசியில் காரியத்தைத் தொடங்குகிறோம்.பல்லோரும்  இணைந்தால் எல்லாமே எளிதுதான்.கையில் வைத்துக் கொண்டு இது போன்ற பொதுக்காரியங்களை செய்ய முடியாது.கச்சைக்கட்டி களத்தில் இறங்கினால் காரியம் செய்துவிடலாம்.

தொடர்பு எண் - 9362682373

"ஓம் சக்தி ஓம் பராசக்தி "கட்டுரை நூலுக்கு பீமராஜா விருது


"ஓம் சக்தி ஓம் பராசக்தி "கட்டுரை நூலுக்கு பீமராஜா விருது


24  - 12  -2016  வருகிற சனிக்கிழமை மாலை 5  மணிக்கு ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள ஆனந்தா மண்டபத்தில்  நடைபெறுகிற விழாவில் வைத்துத் தருகிறார்கள்.ஒட்டியுள்ள நண்பர்கள் வந்து சேருங்கள்.விருதினை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சு.வெங்கடேசன் வழங்குகிறார்.

M .V .பீம ராஜா - ஜானகியம்மாள் அறக்கட்டளையின்
ஆனந்தாஸ் பீம ராஜா இலக்கிய விருது இந்த ஆண்டில் என்னுடைய "ஓம் சக்தி ஓம் பராசக்தி "கட்டுரை நூலுக்கும் ,நண்பர் ராமாநுஜத்தின் "சந்நியாசமும் தீண்டாமையும் " கட்டுரை நூலுக்கும் கிடைத்திருக்கிறது.

ராமானுஜம் டி.ஆர் .நாகராஜின் " THE  FLAMING  FEET " என்னும் ஆங்கிலத்தில் எழுத்தப்பட்ட நூலை  தமிழில் மொழிபெயர்த்தவர்.இவர் எழுதிய தற்கொலையைக் கொண்டாடுவோம் என்கிற கட்டுரை நூலும் மிகவும் முக்கியமானதொரு அரசியல் நூல்.மௌன வதம் என்கிற நாவலையும் தமிழுக்கு மொழிபெயர்த்திருக்கிறார்.சிறந்த அறிஞர்.

"ஓம் சக்தி ஓம் பராசக்தி "கட்டுரை நூல் பத்தியாக "அம்ருதா " மாத இதழில் எழுதத் தொடங்கி பின்னர் "குமுதம்  தீராநதி "மாத இதழில்  நிறைவு பெற்ற கட்டுரைகள் அடங்கிய நூல் .கயல் கவின் பதிப்பகம் வெளியீடு.

இந்த இரண்டு நூல்களுமே வாசகர்களால் படிக்கப்பட்டு உரிய முறையில் தேர்வு செய்யப்பட்டிருப்பதில் பெருமகிழ்ச்சி .நூல்களுக்கும் விருதிற்கும் இடையில் வாசிப்பு தவிர்த்து வேறு எந்தவிதமான பரிமாற்றமும் ஊடுருவலும் இல்லாததில் மன நிறைவு.

"ஓம் சக்தி ஓம் பராசக்தி " நூலுக்கு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் சு.வெங்கடேசன் கையால் விருது பெற வேண்டியிருந்திருக்கிறது பாருங்கள்.விதி என்பது எப்போதும் முரண் நகையும் வேடிக்கையுந்தான் போலும்.

நண்பர்கள் முருகன் மகேந்திரன் ,வேலாயுதம் பொன்னுச்சாமி  மற்றும் இந்த நூலை நான் எழுதக்  காரணமாக இருந்த எனது நண்பர் தளவாய் சுந்தரம் ஆகியோருக்கு எனது நன்றி.

காலகாலமுமாகத் தழைக்க இந்த அறக்கட்டளைக்கு  என்னுடைய வாழ்த்துக்கள்.
இப்போது போலவே எப்போதும் வாசிப்பை அடிப்படையாகக் கொண்டு மட்டுமே விருது வழங்குங்கள்.அது மட்டுமே காலத்தில் நிற்கும்.வாழ்க வளமுடன்  

மார்கழித் தொகுப்பு ஏழு கவிதைகள்

மார்கழித் தொகுப்பு ஏழு கவிதைகள்

1

அந்தச் சிறுவன்
நேற்று முன்தினம் இரவை தூக்கமின்மையில்
கடந்து கனரக லாரியில்
இங்கு வந்து கொட்டப்பட்டவன்
துரத்தப்பட்ட இரவு முகமெங்கும் அப்பியிருக்கிறது.

கொண்டைவாழையிலையை உங்கள் முன்னால் போட்டு
நீர் தெளிகிறான்
பாம்பு கொத்தியது போலே துடித்து
"தண்ணியை இப்படியா ஊற்றுவார்கள் ?"
எனக் கேட்டு அவன்
அம்மையைத் திட்டுகிறீர்கள்

சாம்பாருக்கு நேரமாகிவிட்டதென
அவன் அப்பனைக் கேள்விகேட்கிறீர்கள்
சாப்பிட்டு முடிவதற்குள் சகோதர சகோதரிகள்
அத்தனைபேரையும் சாகடித்து விட்டுத்தான் எழும்புகிறீர்கள்

நீங்கள் உண்ட சோறு
அவனுக்கு வழங்கிய முதல் ஆயுதப் பயிற்சிக்கு
நன்றி கூற
உங்களை இப்போது பின்தொடரத் தொடங்குகிறது
துரத்தப்பட்ட அவனது இரவு.

2

மழைமுடிந்த நகரம் சொட்டுகள் வடிய
தனது இரவைத் தொடங்குகிறது
புத்தொளிர்வை அது இருள் வானத்தின் உச்சியிலே
கொண்டு எட்டுகிறது.

வாடகைப் பாடசாலையிலிருந்து குழந்தையை
அழைத்து வரும் தகப்பன் காய்ச்சல் மீண்டு எழுந்தவனின்
மனத்தால் வாகனத்தை ஒட்டிச் செல்கிறான்
பள்ளங்களை வேகத்தால் நிரப்பித் தடுமாறும் வாகனத்தில்
அச்சத்தின் தோற்றம்

மழையை தன்னுடன் எடுத்த வண்ணம்
பேருந்தேறும்தாதி
பேருந்துப் பாடலுக்கு புதுவண்ணம் பூசுகிறாள்

புரோட்டாக்கடை எண்ணெய் எரிந்து பேருந்தை வழிமறித்து
உள் ஏறி பின் இருக்கை வழியே  இறங்குகிறது.

குதூகலம் அடங்கிய சுற்றுலாப் பயணியொருவன்
மழையை உடையில் கசக்கிப் பிழிகிறான்.

வேற்றூருக்குக் கிளம்புகிற ரயில் ஊளையிட்டு
தன்னையொரு கனவுலகவாசி என்றறிவிக்கிறது.

மழை தான் சம்பவித்ததற்கு
நன்றிகூறிச் சிரிக்கிறது
ஒரு தாவரம் தன்னை எடுத்துக் கொண்டத்தைப் போன்று எடுத்து
உடைக்குள்ளிருந்து முகம்காட்டும்
பச்சைப்பால் குழந்தையிடம்

3  

உடலொரு கண்ணாடியாகத் தோன்றும்
புலர் காலை
நலிவுற்றால் நலிவடையும் புறத்தோற்றம்
கிளர்ந்தால் கிளர்ச்சியடையும் தாவர விஷேசம்

காமமுறும்போது முட்டி நெரித்து வெளிக்கீறி எழுகின்றன
கடலோசை தரும் பூவரசம் பூக்கள்.

எங்கே அடங்கியிருந்தனவோ
ரத்தத்தில் இந்த பாரஸ்ட் பிளேம் சிவப்பு

கொதிப்படங்க மூடும்
இந்தத்திரை அத்தனையும்

வானத்தில் நீந்துகிற கிருஷ்ண பருந்து தான்
அடிக்கடலில் நீஞ்சும்
திமிங்கலம்

4

விளக்கென்ன செய்யும்
எரியும்
ஒளி பார்வைக்குள்ளிருந்தால்தான் தெரியும்

இல்லாதபோதும் இருக்குமிந்த ஒளி
இல்லாதபோதும் எரிந்து கொண்டிருப்பதை இருப்பில்
காணவேண்டும் கண்கள்

கண்கள் உனதுமில்லை எனதுமில்லை
சரளைக்கல் போலுருண்டு
அடுத்தடுத்த ஒளியில் நிலைக்கும் சிறுதுளிப் பிரயாசை

நீ செய்ய வேண்டியது வேறொன்றுமில்லை
சரளைக் கற்களை காட்சியில்
ஓங்கியெறி
தீபஜோதி விளங்க
பனிப்புகை மூட்டம் அடங்க
பின் காட்சியை எடுத்து
கண்களில்
வை

காட்சி
எப்போதும் இருப்பிற்கும் இன்மைக்கும் இடையில்
நின்று எரிந்து கொண்டிருந்தால்
அதன் பேரை சுடரென்றும் சொல்லலாம்
மலரென்றும் கொள்ளலாம்

ஓம் நமச்சிவாயா

5

நீ என்னைப் பார்த்து விட்டாயா
எனக் கேட்ட கடலிடம்
நீங்கள் என்னைக் கண்டு கொண்டீர்களே
அந்த கணத்தில் மட்டும் என்று பதில் கூறினேன்.

நீயென்னை உணர்ந்தாயா எனக் கேட்ட தாவரங்களிடம்
நீங்கள் இப்படி உணர்ந்தீர்களே
அப்போது மட்டும் என்று பதில் சொன்னேன்.

உடல் திறக்கச் செல்லும் விரைவுப் பயணத்தில்
கீ கீயென்றுரைக்கும் மைனா
என்னுடலுக்குள்ளிருந்து வெளியில் பறந்து முன் செல்கிறது
மலைத் தொடர்களில் பனிப்புகை கடக்க
எனது தேவதை விஸ்வரூபம் கொள்கிறாள்

என் உடலே கேளே
நீயென்னை உணர்ந்தாயா என்று !
கடலும் மாமலையும் ,மரமும் சாட்சி
நீ திறந்து மொட்டவிழ்த்த இடத்தில்தானே
சாட்சிக்குருவிகள் கடந்து செல்கின்றன.

நான் என்ன சொல்கிறேன் புரிகிறதா ?
நான் என்னை மட்டுமே சொல்கிறேன்.

6

பெருஞ்சாலையின் கோபுர தரிசனம்.

ஒரு பெரிய சாலையின்
கிளை முறுக்கில் திரும்பி ,குளக்கரை கடந்து
அம்மன் கோவில் முற்றத்தில் இருந்தது
உங்கள் பழைய வீடு.
கோபுர வாசல்
அருகில் அவர் வீடு

மற்றொருவர் மணல் தேரி மேட்டில்
சாலையின் மற்றொரு தொடுப்பில்
மாடுகள் நிறைந்த வீட்டில் இருந்தார்.

கடலுள் சாடிய பெரிய சாலை மலைப்பாதைக்கும்
செல்கிறது
கடற்கரை குருசு
வழியனுப்பி வைக்க
பனிமய மாதா
ஆண்டாளாகக் காட்சியளிக்கிறாள்
படர் பனி அகம் சூடி

குளக்கரையில் வளைந்து செல்லும் சாலைகளும்
பெரிய சாலைக்குத் தொடுப்பில் உள்ளன.
வளைந்து செல்லும் சாலைகள் காட்டிய நளினம்
இன்னும் மறைந்து விடவில்லை.
பெரியசாலைகளின் தெப்பத்தில் மரக் கிளைக்கனிபோல
தொங்கும் கிராமங்களும்
வயது பூர்த்தியான புலர் சூரியகுமாரனும்
நண்பர்கள்

பெரிய சாலையில் திமிரும் மார்கழிப் பனி
கிளைச் சாலைகளில் நீண்டு புகைநீட்டி தன் விந்து சிந்துகிறது இப்பொழுதில்
பெருஞ்சாலையின் கோபுர தரிசனம்.

அப்போதைய மார்கழி
கிளைச் சாலைகள் பொங்கி வந்திணைந்த
பெரியசாலைகளை
தாமரைத் தடாக விழிகளில் வைத்திருந்தாள் ...

இப்போது யாருமே தொடர்புக்கு அப்பாலில்லை
நெடுஞ்சாலையை நிறைத்து
நனைகின்றன
முற்றத்துக் கோலங்களெல்லாம்

இட்ட கோலங்கள் அத்தனையையும் எடுத்துச் சுருட்டி
கொண்டோடுகிற நெடுஞ்சாலையோரத்தில்
இல்லாத பெட்டிக்கடையில்
இருந்து அமுது புசிப்பவள்
என் தேவதை

மேம்பாலம் வழியாக அவள் தலைமீது
சற்றே திகைத்து
பின் மீண்டும் ஏறியமர்ந்திருந்து இணைக்கிறதிந்த
நெடுஞ்சாலை
எனது தேவதை கல்கொண்டெறிந்து விடக்கூடுமோ
எனப் பயந்து

7

இல்லாதபோதும் இருப்பது

மரணத்திற்குப் பிந்தைய சூரியன்
அஸ்தமனமாகிக் கொண்டிருந்தான்
சாலையில் வேகம் கடந்த பேருந்தின் ஜன்னலோரத்திலிருந்து
அதனை நான் பார்த்துக் கொண்டிருந்தேன்.

அமைதியாக மிகவும் அமைதியாக மலைகளின்
தோளிலிருந்து
மனம் விட்டு
இறங்கிக் கொண்டிருந்தான் அவன் .

மரணத்திற்கு முந்தைய சூரிய அஸ்தமனம் எவ்வாறிருந்ததோ
அவ்வாறு
ஒரு துளி மாற்றமும் இல்லை
அஸ்தமனம் கடந்து மலைகள் முழுவதுமாக செவ்வொளியை
விழுங்கி முடிகின்றன.

மரணத்திற்கு முந்தைய சூரியனுக்கும்
பிந்தைய சூரியனுக்கும்
இடையில் பயணித்துக் கொண்டிருக்கிறேன்
பேருந்தின் ஹாரன் ஒலி எனக்கு சொல்லிக் கொடுத்த
போதம் இதுதான் நண்பா ...

இருப்பிற்கு
இருவேறு சூரிய அஸ்தமனங்கள்
உண்டு
ஒன்று பார்த்துக் கொண்டிருப்பது
மற்றொன்று இல்லாதபோதும் இருப்பது.

ஏற்பாடு செய்த திருமணங்கள் மோடியால் நிறுத்தி வைக்கப்படவில்லை

ஏற்பாடு செய்த  திருமணங்கள் மோடியால் நிறுத்தி வைக்கப்படவில்லை

[ அம்பலம் இணைய இதழுக்கு என்று நண்பர் எழிலன் மோடியின் பணமதிப்பிழப்பு பற்றி என்னிடம் அவசரமாக ஒரு கட்டுரை வேண்டுமென இரு வாரங்களுக்கு முன்னர் கேட்டார்.கட்டுரை எழுதி அனுப்பிய பின்னர் என்னைப்பற்றிய குறிப்புகளும் வேண்டும் அனுப்புங்கள் என்றார் .அதன் பின்னர் புகைப்படங்கள் அனுப்பப் சொன்னார்.அனுப்பிவைத்தேன். இப்போது அதனை வெளியிட இயலாது மன்னித்துக்கொள்ளுங்கள் என்று பதில் அனுப்பியிருக்கிறார்.வெளியிட இயலாததால் எனக்கொன்றும் இல்லை.சுமார் இருபதினாயிரம் பேர் என்னுடைய பதிவுகளை படிப்பதாக இணையம் சொல்கிறது பிளாக் ,முகநூல் உட்பட.எனவே  வெளியிடப்படாததில் எனக்கு இடர்பாடு ஏதுமில்லை.வாசகர்கள் அதனை வேறு வழிகளில் படித்து விடுவார்கள்.

ஆனால் இவர்கள் ,எழிலன் போன்ற ஊடக  நண்பர்கள்  தங்களை ஜனநாயகவாதிகளாகவும் ,மாற்று கருத்துக்களை ஆராதிப்பவர்களாகவும் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருப்பவர்கள்.தாங்கள் கொண்டிருக்கும் கருத்துகளுக்குத் துணையான கருத்துக்களைக் கொண்ட கட்டுரைகளைத்தான் இவர்கள் பிறரிடம் கேட்கிறார்கள்.பிறவற்றிற்கு இவர்களிடத்தே இடம் கிடையாது. அப்படி மேலும் மேலும் ஜனநாயகவாதிகளாக
பீற்றிக் கொண்டலையாதீர்கள் என்று நான் இவர்களுக்கு சொல்லிக் கொள்கிறேன். ]- லக்ஷ்மி  மணிவண்ணன்

[ கவிஞர் ,பத்திரிக்கையாளர்.சிலேட் சிற்றிதழின் ஆசிரியர்.கவிதைத்
தொகுப்புகள்,சிறுகதை நூல்கள் ,நாவல் ,கட்டுரைத் தொகுதிகள் என இதுவரையில்பதினோரு நூல்கள் வெளி வந்துள்ளன.

கட்டுரைத் தொகுதிகளில் "குழந்தைகளுக்குச் சாத்தான்  ; பெரியவர்களுக்கு
கடவுள் " ஆனந்த விகடன் விருது பெற்றது."ஓம் சக்தி ஓம் பராசக்தி " கட்டுரை
நூல் குமுதம் தீராநதி,அம்ருதா ஆகிய இதழ்களில் எழுதிய பத்தி கட்டுரைகளின் தொகுப்பு .இந்த ஆண்டின் சிறந்த கட்டுரை நூலுக்கான பீமராஜா விருது பெற்ற நூல் இது .

சமீபத்தில் வெளியான இதுவரையிலான ஒட்டுமொத்த கவிதைகளின் தொகுப்பு நூல் "கேட்பவரே" படிகம்  நவீன கவிதைகளுக்கான இதழின் சிறந்த கவிதை தொகுப்பு வரிசையில் வெளிவந்துள்ளது.

மலையாளம்,ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இவரது படைப்புகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

நாகர்கோவிலில் வசிக்கிறார். ]


ஏற்பாடு செய்த  திருமணங்கள் மோடியால் நிறுத்தி வைக்கப்படவில்லை

#

மோடியின் "  செல்லாது" அறிவிப்பு வந்ததிலிருந்து எங்கள் ஊர்பக்கமுள்ள
பணக்காரர்கள் படும் துன்பத்தைக் காண எனக்கு உண்மையாகவே மகிழ்ச்சியாக உள்ளது.எந்த மதிப்பீடுகள் என்னை சிறுவயதிலிருந்து அவமானத்திற்கும் இகழ்ச்சிக்கும் உட்படுத்தி வந்ததோ ,அந்த மதிப்பீடுகளின் உடமையாளர்கள் நெருக்கடிக்குள்ளாகிறார்கள் என்பதிலிருந்து என்னை வந்தடைந்த மகிழ்ச்சி இது.நாளையே இவர்கள் தரப்பு மற்றொரு மார்க்கத்தைக் கண்டடைந்து மேலும் வேகம் கூட்டுமாக இருக்கலாம்.ஆனாலும் என்னுடைய இன்றைய மகிழ்ச்சி பொய்யில்லை.நிதர்சனம்.மோடியின் பணமதிப்பு இழப்பு பற்றிய அறிவிப்பை நான் இந்த கண்ணோட்டத்தில் மட்டும்தான் பார்க்கிறேன்.பொருளாதார மேதைகளின் கண்ணோட்டங்கள் எதுவும் எனக்கு அவசியமில்லை.என்னைச் சுற்றிலும் மோடியின்
இந்த அறிவிப்பு மகிழ்ச்சியாக சுற்றுகிறது.கண்கொள்ளாக் காட்சிகள் பலவற்றை தினமும் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

எனது குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்கள் உட்பட பண முதலைகள்,நிலக்கிழார்கள் இப்போது திவங்குகிறார்கள் .மட்டுமல்லாமல் பணத்தை மட்டுமே மதிப்பீடாகக் கொண்டியங்கிய சமூக மனதில் முதன்முறையாக ஒரு சிறு கீறல் ஏற்பட்டிருக்கிறது. பணத்தை முதன்மைப்படுத்தி அதனையே ,அதனை மட்டுமே சமூக
அந்தஸ்தாகவும் , ஒரேயொரு வாழ்க்கைமுறையாகவும் ஸ்தாபிதமும் கற்பிதமும் கொண்டு அகங்காரம் ஊதி பெருத்து வாழ்ந்தவர்கள் அவர்கள்.அவர்களின் அகந்தையும் தன்னகங்காரமும் அழிந்து தேம்பியழுவதை தினமும் பார்த்துக் கொண்டே இருக்கிறேன்.இதனைக் காண எனக்கு பெருமகிழ்ச்சியாக உள்ளது.

இரண்டு மாதங்களுக்கொருமுறை இரண்டு லட்சம் தேங்காய்கள் அறுவடை செய்கிற ஒரு அம்மா எனது நெருங்கிய உறவினர்தான் ,மோடிக்கு எதிராக தெருவில் இறங்கி பிரச்சாரம் செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்.தூக்கமில்லை.பத்து ரூபாய் வைத்துக் கணக்கிட்டாலும் கூட மாத வருமானம் அவருக்கு பத்துலட்சம் ரூபாய். இன்று நேற்று அல்ல காலம்காலமாக அவர் பெற்று வருகிற வருமானம்
அது. அவர் தனது தோப்பில் வேலை செய்கிற அடிமைகளிடம்,பிற சாதிகளிடமும் அகங்காரம் தொனிக்க நடக்கும் மமதையைத் தந்தது இந்த
வருமானம்தான்.அதுதவிர்த்து ஆணவத்திற்கும், அவர் கொண்டியங்கும்
தன்னகங்காரத்திற்கும் வேறு காரணங்கள் எதுவுமே கிடையாது. அதன்பேரில்
தற்போது ஒரு பரிசீலனை வந்திருக்கிறது என்பதைத்தான் அவரால் தாங்க
முடியவில்லை.இத்தனைகாலம் கேட்பாரற்ற மகாராணியாகத் திகழ்ந்தவருக்கு இப்போது ஒரு பரிசீலனை செய்து கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது. போவோர் வருவோர் அனைவரிடமும் இதே பேச்சுத்தான் அம்மையாருக்கு .இதுநாள் வரையில் அரசியல் பிரவேசம் எதுமே வாழ்வில் இல்லாதிருந்தவர்.மோடியின் செல்லாது அறிவிப்பு அவரை அரசியல் நோக்கி நகர்த்தியிருக்கிறது.அவரைப் பொறுத்தவரையில் இப்போதைய அவரது அரசியல் பிரவேசம் தான் அவருக்கு மிகவும் நேர்மையானது.வாழ்வில் முதன்முறையாக அவர் நெருக்கடிக்குள்ளாகி அரசியல்ரீதியில் போராடியாக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்.இதுநாள் வரையில் மோடியின் தீவிர ஆதரவாளர் அவர்.அவர் எந்த காரணத்திற்காக மோடியை இதுவரையில் ஆதரித்தாரோ அந்த காரணத்திற்காகத் தான் நான் அவரை எதிர்த்தேன்.இப்போது எந்த காரணத்திற்காக மோடியை அவர் எதிர்க்கிறாரோ அந்த காரணத்திற்காகத் தான் மோடியை இந்த விஷயத்தில் முழுமையாக ஆதரிக்கிறேன்.மிகவும் எளிமையாகப் புரிந்து கொள்வதெனில் இதுதான் விஷயம்.சமாச்சாரம் .

இதுபோல என்னைச் சுற்றியிருக்கும் மூன்று நான்கு தலைமுறைப் பணக்காரர்கள் எனது குடும்பத்தில் மட்டும் நூறுபேருக்கும் அதிகம்.எனது ஒரு உறவினர் மருத்துவர்.  இரண்டிரண்டு கிலோமீட்டர் சுற்றளவுப் பரப்புள்ள நான்கைந்து குட்டிக்கிராமங்களின் உடமஸ்தர்  .அவ்வளவு சொத்து. எனக்கு ரேஷன் கடைகளில் உள்ள அத்தனை சலுகைகளும் இதுநாள்வரையில் அவருக்கும் உண்டு. அவர் தோட்டத்தில் இரவும் தங்கியிருந்து வேலை செய்கிற கூலித் தொழிலாளியின் சம்பளம் தினத்திற்கு எண்பது ரூபாய் . இப்போது கூலித்  தொழிலாளிகளின் கணக்கை பயன்படுத்தி ஏதேனும் செய்ய இயலுமா என முயற்சிப்பதை தொழிலாளிகள்  தேநீர்க் கடைகளிகளில் அம்பலம் செய்கிறார்கள்  . இந்த நிலை எனக்கு மிகுந்த
கிளர்ச்சியையும் உற்சாகத்தையும்  ஏற்படுத்துகிறது. ஒரு கூலித்
தொழிலாளியின் வாழ்க்கை தன்னிலும் ,தான் நம்பி வாழும் மதிப்பீடுகளைக்
காட்டிலும் தரம் உயர்ந்ததுதானோ என்கிற ஐயம் அவர் மனதில் இப்போதுதான்
லேசாக முளை பிடித்திருக்கிறது.

மக்களைக் கொன்றும் சம்பாரித்த மருத்துவர்கள் அனைவருமே எங்கள்
மாவட்டத்தில் நெருக்கடியான மனநிலையில் இருப்பதாகக் கேள்விப்
படுகிறேன்.சிலர் தொகையைக் குறைப்பு செய்திருக்கிறார்கள்.வாங்கும் தொகையை எதுவரினும் குறைப்பு செய்ய முடியாது என்று விடாப்பிடியாக இருந்து மனநெருக்கடியில் இருப்பவர்களும் உண்டு.மன நெருக்கடி அடைந்திருப்பவர்களில் மனநல மருத்துவர்களும் அடக்கம்.இவர்களின் மருத்துவமனைகளில் தாதியர்களாக கேரளாவிலிருந்தும்  பிற இடங்களில் இருந்தும் கொட்டப்படுகிற பெண்குழந்தைகளுக்கு மாத வருமானம் இன்றுவரையில் நாலாயிரத்து ஐநூறுக்கும் குறைவு.எந்த உத்திரவாதங்களும் கிடையாது.காசோலையில் சம்பளம் வழங்கப்படுவதில்லை.அந்த குழந்தைகளுக்கு அந்ததந்த மருத்துவமனைகள்
தயாரித்து வழங்குகிற தரமற்ற உணவுகளை இன்றுவரையில் எந்த அரசியல்வாதியும் தின்று பார்த்ததில்லை.தின்று பார்த்தால் மனிதர்கள் உண்ண இப்படியும் உணவுப் பண்டங்கள் இருக்கிறதா என்பது விளங்கும்.

மனநல மருத்துவர்கள் பெரும்பாலோர் ஸ்டாப் நர்ஸ்களை பணியில் வைத்துக் கொள்வதில்லை.ஸ்டாப் நர்ஸ்களை பணியில் வைத்துக் கொண்டால் மட்டுமே உள்நோயாளிகளை இரவு நேரங்களில் மருத்துவமனைகளில்  அனுமதிக்க முடியும்.உள்
நோயாளிகளை இருபத்துநான்கு மணிநேரம் இயங்கும் மனநல மருத்துவமனைகளில் அனுமதிக்க வேண்டுமாயின் இரண்டு ஸ்டாப் நர்ஸ்கள் அத்தியாவசியம்.ஸ்டாப் நர்ஸ்கள் குறைந்தபட்சம் இருபத்தியையாயிரத்திற்கு குறைவான ஊதியத்திற்கு
கிடைக்க மாட்டார்கள்.எனவே அவர்கள் அனைவருமே மது அடிமைகள் மறுவாழ்வு என்கிற அஸ்திரம் ஒன்றினைக் கையில் வைத்திருப்பார்கள்.கேட்பாரும் கேள்வியுமற்று உடனடி அனுமதி இவர்களுக்கு கிடைக்க ;இந்த குறுக்கு யுக்தி
ஒரு வழிமுறையைத் திறந்து தரும் .இருந்தாலும் ஆண் நோயாளிகளை இரவிலும் அனுமதிப்பதற்கு மட்டுமே இந்த அனுமதியும் உதவும்.உங்கள் குடும்பத்திலோ ,வட்டத்திலோ மனநல மருத்துவ உதவிக்கு அவசரமாக தேவையேற்படுகிற ஒரு பெண்நோயாளியை நீங்கள் இரவில் அனுமதிக்கும் தேவை ஏற்படுமேயாயின் நீங்கள் இவர்களிடம் சேர்ப்பிக்க முடியாது.வேறுஏதேனும் மருத்துவமனைகளில்
அனுமதித்து இரவைக் கழிக்க பரிந்துரைப்பார்கள்.  காரணம் இவர்களிடம்
ஸ்டாப் நர்ஸ்கள் இல்லாததால் இரவில் பெண்களை  அனுமதிக்க சட்டம் இடம் தராது மட்டுமல்ல,நோயாளிக்கு  ஏதேனும் இடர்பாடு ஏற்பட்டால் ஸ்டாப் நர்ஸ் அப்போது யார் ? என்கிற கேள்வி எழும்.இன்னும் ஒவ்வொரு நோயாளிகளிடமும் பணத்தை தாங்களே வசூலிக்கிற ,தாதியர்களையோ கணக்கர்களையோ வைத்துக் கொள்ளாத பல மனநல
மருத்துவர்களை நீங்கள் அனுபவத்தில் எல்லா ஊர்களிலும் பார்க்க முடியும்.பல மனநல மருத்துவர்கள் சல்லித்தனங்கள் நிறைந்தவர்கள்.

தங்களுக்கு பெரும் உபரியாகவும் ,வரியில்லா பணமாகவும் வந்து சேருபவற்றில் இருந்து கூட ஸ்டாப் நர்ஸ்களை நியமிக்க விருப்பமற்றவர்கள்
இவர்கள்.இவர்களைக் குற்றம் சுமத்த இதனைச் சொல்லவில்லை.இப்படியான உபரி வருமான புத்தி ஒன்று இங்கே பல இடங்களும் செயல்பட்டுக்
கொண்டிருக்கிறது.இவர்களில் பெரும்பாலோர் இதுவும் போதாதென்று
இப்போதெல்லாமமருந்துதொழிற்பேட்டைகளைவைத்திருக்கிறார்கள்.உங்களுக்கு இவர்கள் எழுதிக் கொடுத்து ;அவர்கள் மருத்துவமனைகளிலேயே விற்கும் மருந்துகளை நீங்கள் உலகமே அழிந்தாலும் கூட பிற மருந்தகங்களில் வாங்கவே முடியாது.இதன் தாத்பரியம் வேறொன்றுமில்லை.இவர்களின் ரீபேக்கிங் இண்டஸ்ரிகளில் இருந்து உங்கள் கைகளை வந்தடைபவை இவை.ரீபேக்கிங்
இண்டஸ்ரிகளின் வேலை ஏற்கனவே இருக்கும் கம்பெனி மருந்துகளை பிரித்து புதிய அட்டைகளில் விலை கூட்டியடைப்பது.உதாரணமாக ஒரு பாராசிட்டமால் மாத்திரை என்றே வைத்துக் கொள்ளுங்கள்.அதன் விலை ஒரு ரூபாய். அது புதிய கூட்டில் அடைக்கப்படும்போது அதன் விலை ஐந்தாகவோ ,ஆறாகவோ மாறிவிடும்.பொதியில் புதிய கம்பெனி ஒன்றின் பெயர் அச்சிடப்பட்டிருக்கும்.புதிய பெயர் அச்சிடப்பட்டிருக்கும்.மருந்து ஒன்றுதான்.விலை அதிகம். அதன் அலுவலகம்
மதுரையிலோ,திண்டுக்கல்லிலோ ,திருநெல்வேலியிலோ என்று
குறிப்பிடப்பட்டிருக்கும்.அப்படி அலுவலகங்கள் எதுமே கிடையாது."உங்களிடம் மட்டுமே கிடைக்கிற மருந்துகள் உலகத்தின் ஒரு பகுதியிலும் கிடைப்பதில்லையே ஏன் ?" என்று எப்போதாவது ஒரு மருத்துவனையேனும் கேட்டுப் பார்த்திருக்கிறோமா ? ஏன் இப்படி துணிகிறார்கள் ? பிறரை விடுங்கள். மருத்துவனும் ,ஆசிரியனும் இந்த சமூகத்தில் எப்போதிலிருந்து சட்டவிரோதமாகத் துணிந்தார்கள் ?

இவையெல்லாமே இனி சரியாகிவிடுமா? என்று நிரந்தர மோடியெதிர்ப்பாளர் ஒருவர் கேள்வியெழுப்பலாம் .தாதியருக்கு இனி முறையான சம்பளம் கிடைத்து விடுமா? பணமதிப்பில் ஏற்பட்டிருக்கும் பலமான அடி ஒரு பரிசீலனையை சமூகத்தின் ஏற்படுத்தியிருப்பதை உணர்கிறேன்.இது தாற்காலிகமாகக் கூட இருக்கலாம்.ஆனால் இதுவரையில் இல்லாதது.  பணமதிப்பு கீழிறங்கும்போது எனது மதிப்பும்,உயிர்மதிப்பும்  தாற்காலிகமாகவேனும் சற்று உயர்கிறது என்பதுதான் அவருக்கான எனது பதில் .இத்தைகைய பண மதிப்பிழப்பை ரஷ்யா உட்பட
கையாண்டு பார்த்த உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஏற்பட்ட அவலங்கள்
இந்தியாவில் ஏற்படவில்லை  என்பது மட்டுமல்ல ஏற்படவும் செய்யாது என்பதை நினைவில் கொண்டே இவற்றைச் சொல்கிறேன்  .

எங்கள் ஊரில் பத்திரப்பதிவுகள் செத்த நிலைக்குத்
தள்ளப்பட்டிருக்கின்றன.புதிய கல்வித் தந்தைகள்,மருத்துவர்கள் இணைந்து
எங்கள் மாவட்டத்தில்  தரகர்களாக தொழில்பட்ட நிலவிற்பனைத் தொழில் இது. பாகப் பிரிவினைகள் ,இஷ்ட தானங்கள் தவிர்த்து பிற அனைத்து விதமான வியாபாரமும் படுத்திருக்கிறது.கழிந்த  பதினைந்து வருடங்களில் இருபது மடங்கு உயர்ந்திருந்த வியாபாரம் இது.பணத்தின் சமூக மதிப்பை கோடிகளுக்கு மாற்றிய தொழில் இது.திடீர்  கல்வித்தந்தைகளும் ,மருத்துவர்களும் இணைந்தே இந்த தொழிலில்  ஈடுபட்டார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.அது இனி முன்னைப்போல மீளாது என்கிறார்கள்.அதில் முதலீடு கட்டியவர்கள் செய்வதறியாமல் சாய்ந்து கிடக்கிறார்கள்.

பதினைந்து வருடங்களுக்கு முன்னர் எனக்கிருந்த லட்ச ரூபாய் மதிப்புள்ள
நிலத்தின் இன்றைய  மதிப்பு  இரண்டு கோடி.பதினைந்து வருடங்களுக்கு முன்னர் இரண்டு லட்சத்திற்கு விற்றவை நான்கு கோடிகளாக முன்னிற்பது எவ்வளவு ஏக்கம் நிறைந்தது ? பதினைந்து வருடங்களுக்கு முன்னர் ஒன்றரை ஏக்கர் நஞ்சையை இரண்டு லட்சம் ரூபாய்க்கு ஊரில் விற்றேன்.அதன் இன்றைய நாளின் மதிப்பை கேள்விப்பட்ட நாளில் உண்மையாகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன்.எவ்வளவுபேர் இங்கே சொந்த விவசாயநிலங்களை அற்ப தொகைகளில் இப்படி இழந்து பின்னர் வாடிப் போனவர்கள்?.நிலமதிப்பு சரிபாதியாக இறங்கும் நிலை உடனடியாக இருப்பதாகச் சொல்கிறார்கள் இங்குள்ள அனுபவஸ்தர்கள்.அப்படி சாத்தியமானால் இரண்டு சென்று வாங்கி வீடுகட்ட நினைப்பவனின் கனவில் இப்போதைய நிலை மறைமுகமாக ஒரு முதலீடு ஆகிறது.அவனுக்கு இப்போதைய நிலையில் ஒரு இழப்பும் இல்லை.அவன் மதிப்பு
கூடுதலாக்கப்பட்டிருக்கிறது.வரதட்சணை விலை குறைந்திருக்கிறது.அதுவும் ஊரில் பல கோடிகளுக்கு நகர்ந்திருந்த புனித வியாபாரம்.ஒரு ஏழை அவன் கனவின் மீதான முதலீடு இந்த மோடியின் நடவடிக்கை.ஒரே ஏழைக்கு ஒரு
சென்று நிலத்தை வாங்கும் தைரியம் ஏற்பட்டால் கூட அதற்காக மோடிக்கு நன்றி சொல்லியாக வேண்டும்.அவன் தன பெண்குழந்தைக்கான வரதட்சணைக்காக இனி பாதியளவிற்கு சம்பாதித்தால் போதும்.

எங்கள் பகுதியை சேர்ந்த மல்ட்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள் சிலவற்றில் பணத்தை எரித்ததாகவும் பின்னர் கொஞ்சத்தை  ஊழியர்களுக்கு கொடுத்ததாகவும் மக்கள் பேசிக்கொண்டார்கள் .இவற்றின் உண்மை நிலவரம் என்ன என்பது முக்கியமல்ல.இப்போது உருவாகிற வதந்திகள் அனைத்துமே எனக்கு தனிப்பட்ட  சுவாரஸ்யமூட்டுகின்றன.எங்கள் ஊர் பண்ணைகளில் அப்பாவிப்பண்ணைகள் பணத்தையும் நகைகளையும் பாதுகாக்க எடுக்கும் முயற்சிகளாக நிறைய கதைகள் உருவாகிவிட்டன.அவை பல தொல்கதைகளுக்கு நிகராக உள்ளன. மக்கள் இக்கதைகளை
திகில் கதைகளின் பாவங்களோடு ஆர்வத்துடன் சொல்கிறார்கள்.எங்கள் பகுதியில் முளைத்த திடீர்க் கல்வித்தந்தை கதைகதையாக தேநீர் கடைகளில் இருந்து  வீடுகளுக்கும் சென்று சேர்ந்து கொண்டிருக்கிறார்.எங்களுக்கு
மதுக் கஷாயக் கடைகளில் நிரந்தரக் கணக்கு இருந்த பத்தாண்டுகளுக்கு முன்னர் ;மது கஷாய லோட் மேனாக அறிமுகமானவர் திடீர் கல்வித்தந்தை.ஐநூறு கோடிக்குச் சொத்தும் ,இரண்டாயிரத்து ஐநூறு குழந்தைகள் படிக்கும் தனியார் பள்ளியையும் அவர் இந்த பத்தாண்டுகளில் உண்டாக்கியிருக்கிறார்.ஊழியர்களின் பி.எப் கணக்கு உட்பட சகலத்திலும் கலப்படம் செய்யும் கல்வித்தந்தை அவர்.

மல்ட்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளின் பணம் எரிகிறது என
கேள்விப்படுகிறேன்.பிணம் எரிகின்ற மகிழ்ச்சியெனக்கு . பெரிய
மகிழ்ச்சி.எனது நண்பர்கள் சிலர் வீடுகளைக் கூட அவர்களிடம் பறிகொடுத்து
மனைவிமார்களை விதவையாக்கிச் சென்றார்கள்.அவர்கள்  சார்பாக  எனக்கு
மகிழ்ச்சியன்றி வேறு என்ன  ஏற்பட முடியும்? ஒருவருடைய பிணத்தை அறுபது நாட்களுக்குப் பிறகு ஒரு தனியார் எலும்புமுறிவு  மருத்துவமனையில் இருந்து போராடிப் பெற்றோம். வீட்டையெல்லாம் விற்று எல்லாப்பணத்தையும் கொடுத்த பின்னரும் இரண்டு லட்சம் கட்டிவிட்டு பிணத்தை எடுத்துக் கொள்ளச் சொன்னார்கள்."பிணத்தை எடுத்துக் கொள்".என்று போராடிய பின்னர் கொடுத்தார்கள் வேறு வழியின்றி .ஆறேழு வருடங்களுக்கு முந்தைய அனுபவம் இது.சமீபகாலங்களில் எனில் இதுவும்கூட இயலாது.விட்டுவிட்டுச் செல்லுங்கள்
" பிணத்தை எடுத்துக் கொள்கிறோம்" என்று சொல்லியிருப்பார்கள்.

மற்றபடி மோடியின் இந்த நடவடிக்கையை எதிர்ப்பவர்களை ஐந்துவிதமாகப்
பார்க்கிறேன்.நிரந்தர மோடி எதிர்ப்பாளர்கள் முதல் வகை .அவர்களுக்கு
இருக்கும் மோடி எதிர்ப்புத்தன்மை முற்றிலும் நியாயமற்றது என்னும் எண்ணம் எனக்கில்லை.ஆனால் ஏற்கனவே மோடியை எதிர்ப்பதற்கு காரணமாக உள்ள காரணங்களை வைத்து மட்டுமேதான் அவரை எல்லாவிஷயங்களிலும் மதிப்பிட வேண்டுமா என்பதே
அவர்களை நோக்கிய என்னுடைய கேள்வி.அப்படி பார்க்கப் போனால் இங்கே
தவறுகளுக்கு ஒருபோதும் உடந்தையாக நில்லாத ஒரு தலைவன் கூட கிடையாது என்பதே நிதர்சனம்.அறுபது வருடங்களில் காங்கிரஸ் கட்சி நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆற்றியிருக்கும் அநீதிகளைக் கருத்தில் கொண்டால் அவர்களை ஒருபோதும் வீட்டு நடைகளிலேயே ஏற்ற முடியாது.ஒரு அநீதியை நியாயப்படுத்த இன்னொரு அநீதியை காரணமாக்க இயலாது.ஆனால் இவ்விஷயத்தில் காங்கிரஸ் கட்சியின் உள்கிடப்பின் அரசியல் நல்லதல்ல  .

இரண்டாவது வகை இடதுசாரிகள்.அவர்கள் முன்வைக்கும்
புள்ளிவிபரங்கள்,எதிர்கால யூகங்கள் ஜோதிடங்கள் எவற்றின் பேரிலும் எனக்கு நம்பிக்கையில்லை.போலிக் புள்ளிவிபரங்களை பலவிஷயங்களிலும் தொடர்ந்து சாதித்து வருபவர்கள் . தங்களின் தரப்பிற்காக பொய்யில்
துணிபவர்கள்.இறப்பின்,தற்கொலைகளின் புள்ளிவிபரங்களை இன்று எவர்
பாக்கட்டில் வேண்டுமாயினும் வாய்கிற சந்தர்ப்பங்களில்  கொட்ட முடியும்
என்பது இங்கே எவரும் அறியாததல்ல.ஜெயலலிதா அம்மையார் கர்னாடகச்  சிறையில் விடுதலைப் போரில் ஈடுபட்டிருந்தபோது  ஊருக்கு ஊர் தற்செயலாக சுயசாவு செய்து கொண்டவர்களை இந்த பட்டியலில் இணைத்தோம்.கிராமங்களில் அந்தந்த குடும்ப நலம்கருதி மக்கள் அரசியல்வாதிகளுடன் இணைந்து ஆற்றுகின்ற காரியங்கள் இவை.அதனால் தற்கொலைகள் அனைத்துமே இவ்வாறானவை என்று சொல்ல
வரவில்லை.இப்படியான சாவு புள்ளிவிபரங்கள் திடமானவை அல்ல. இடதுசாரிகளை நம்ப முடியும் என்று தோன்றக் கூடிய சிறிய காரியங்களைக் கூட அவர்கள் சமீபகாலங்களில் செய்யவில்லை.ரஷ்யாவின் கார்ப்பரேட்டுகள் எனில் அவர்கள் உள்ளூரிலேயே ஆதரிக்கக் கூடியவர்கள்தான்.கூடங்குளம் அணுஉலைகளை அவ்வாறுதான் ஆதரித்தார்கள். அவர்களுக்கு காரியங்களைக் காட்டிலும் யார் செய்கிறார்கள்
என்பதே பிரச்சனை.அவர்களை இவ்விஷயத்தில் நம்புவதற்கு ஏதுமில்லை.இந்த திட்டத்தை மோடி அறிவிப்பதற்கு சற்றைக்கு முன்னர்தான் ஜப்பானோடு அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறார்.அது பற்றிய ஒரு கருத்தைக் கூட தமிழ்நாட்டுக் கம்யூனிஸ்டுகள்  இதுவரையில் தெரிவிக்கவில்லை.இவர்களின் மக்கள் நல வேட்கை அதிகாரமற்றவனின் வெற்று நாடகம்.வருடக்கணக்கில் நடந்த ஒரு முக்கியமான மக்கள் போராட்டத்தில் மக்களுக்கு எதிராக இருந்தவர்கள்.அச்சுத்தானந்தனை களியக்காவிளையிலிருந்தே திருப்பி ஊருக்கு அனுப்பியவர்கள்.

மூன்றாவது வகையினர் பெருமுதலாளிகளையும் அதாவது கார்ப்பரேட்ஸ்யும் சாமானியனையும் சேர்த்து குழம்பமடைகிறவர்கள்.இதனை ஜோடித்து உருவாக்கியவர்களில் பலர் கடைநிலை இடதுசாரிகள்தான்.கார்ப்பரேட் தரப்பு என்பது அரசாங்கத்தின் பெரிய அங்கமாக உருமாறி உலகெங்கும் கால்நூற்றாண்டுகளுக்கும் மேல் ஆகப் போகிறது.அது உலகெங்கும் உறுதிப்பட்டே கால்நூற்றாண்டுகளுக்கும் மேலாகிறது என்கிற விஷயம் கூட தெரியாமலா இன்று
இவர்கள் வாழ்க்கை நடத்துகிறார்கள் ? ரஷ்ய ,சீனா உட்பட நிலைமை
இதுதான்.மேற்குவங்கமும்,கேரளமும் கூட இவற்றிலிருந்து விலக்கு பெற்றவை ஒன்றும்  அல்ல.தொழில்துறைகள் முழுவதுமாக பெருநிறுவனங்களைச் சார்ந்தவையாக
மாறிவிட்டன.பெருநிறுவனங்கள் இன்று அரசின் முக்கிய அங்கம் .அவற்றின்
ஏற்றத்திலும் சரி தாழ்விலும் அரசாங்கம் முக்கிய பங்கெடுப்பது என்பது
இந்தியாவில் மட்டுமே நடைபெறுகிற காரியங்கள் இல்லை.ரஷ்யாவிலும்
,சீனாவிலும் இதுதான் நிலை.பெருநிறுவனங்களை சாமானியனோடு ஒப்பிட்டு
இந்தியாவிலுள்ள கம்யூனிஸ்டுகள் மேடைகளில் மட்டுமொரு கருத்தியல் பாசாங்கு செய்கிறார்கள் . டாடா விழும்போது டாட்டா குழுமத்துடன் உள்ள அத்தனை மக்கள் இணைப்பும் இணைந்துதான் விழும் .டாடாவையோ ,ரிலையன்ஸையோ அல்லது இதுபோன்ற பிற நிறுவனங்களையோ சாமானியனுடன்  ஒப்பிட்டு பேசுவது  வெற்றுக் குழப்பத்தை
ஏற்படுத்துவதற்குத்தானே அன்றி அவற்றில் காரியமில்லை.டாடாவிற்கோ பிற நிறுவனங்களுக்கோ  ஏற்படுகிற இழப்பு   என்பது தனிநபர் இழப்பு
அல்ல.நாட்டின் இழப்பையும் உள்ளடக்கியது அது. அப்படியொருவர் விஷயங்களை புரிந்து கொண்டிருப்பார் எனில் அவர் தனது பாடத்தை ஆராய்ந்து கொள்ளவேண்டும்.இங்கே ஏற்கனேவே வருமான வரியை செலுத்திக் கொண்டிருக்கிற ஒரு தரப்பு உயிருடன் இருந்து கொண்டிருக்கிறது.இப்போது நடைபெறுகிற சங்கதிகள்
அனைத்து தரப்பினரையும் அதன் வளையத்திற்குள் கொண்டுவர
முயற்சிக்கின்றன.கார்ப்பரேட்டுகளில் பணிபுரியும் , அதிகபட்ச ஊதியம்
பெறும் ஊழியர்களில் பலர் தங்கள் மூன்றுமாத கால சம்பளத்தை வரியாகக்
கட்டுபவர்களாகத்தான் இருப்பார்கள்.அதுபோல அரசாங்கப் பணியாளர்களும்
ஏற்கனவே இந்த வளையத்திற்குள் இருப்பவர்கள்.அவர்களில் உயர் அதிகாரிகள் பெறுகிற லஞ்சம் மட்டுமே இதுவரையில் இந்த  வளையத்திற்குள் இல்லை.

இவர்களிலேயே இவ்விஷயத்தை மக்களுக்கெதிரானதாக மாற்ற முயலும் தி.மு.க போன்ற கட்சிகள் கார்ப்பரேட்ஸ்க்கு எதிரானவர்கள் இல்லை.இவர்கள் அம்பானியையும் சாமானியனையும் ஒன்றாகக் கருதுவது போல மக்களிடம் ஒரு முகத்தை காட்டுவது முழுமையான பாசாங்கு.கனிமொழி , ராஜா போன்றோர் முன்வைக்கும் பாதுகாப்பு வாதங்கள்  பெருமுதலாளிகளின் வாதங்கள்தான். .ராஜா தன் தரப்பிற்கு முன்வைத்திருக்கும் வாதங்கள் அனைத்துமே கார்ப்பரேட் வாதங்கள் தான் என்பது நினைவில் இருந்தால் நல்லது .இல்லையெனில் இந்த விஷயத்தை வைத்து
மட்டுமே வைத்து  வாதிடுவது போல அது ஆகாது.தங்களுக்கு  எதிராக தாங்களே வாதிடுவது போலாகி விடும்.சாம்ஸ்கி .அமர்த்தியா சென் போன்ற நிபுணர்களின் வாதங்கள் எதுவுமே இவர்களுக்கு உதவாது.அவர்கள் முற்றிலுமாக இந்த கார்ப்பரேட் தரப்பு அரசு அதிகாரத்தையே
ஐயங்கொள்பவர்கள்.மறுப்பவர்கள்.அவர்களும் இவர்களும் ஒன்று அல்ல. தி.மு.க கார்பட்ரேட்ஸ்க்கு துணை நிற்கும் உதவும் கட்சி.கார்ப்பரேட் பெருமூலதன அரசாங்கத்தை ஜனநாயகமாகக் கருதும் நிலஉடமைப் பண்பு கொண்ட கட்சியும் கூட.

நான்காவது வகை இந்த இக்கட்டில் உண்மையாகவே மாட்டிக் கொள்வோம் என்று கருதுகிற பல கட்சிகளை சேர்ந்த  வருமான மறைப்பில் இதுநாள் வரையில் காலங்கடத்திய புதிய உள்ளூர் செல்வந்தர்கள் .இப்படி பாதிப்படைந்தவர்கள் அல்லது பாதிக்கப்படுவோம் என்று கருதுகிறவர்கள் அனைத்து கட்சிகளிலும் இருக்கிறார்கள்  .கட்சிக்காரர்களாகவும் பெரும்பாலும்  இவர்கள்தான் இருக்கிறார்கள்.இவர்களில் பல கட்சிகளிலும் எனக்கு நண்பர்களாக இருப்பவர்களும் உண்டு.இவர்களில் பா.ஜ.கவினரும்  உண்டு. கழிந்த இருபது வருடகால தமிழ்நாட்டு  அரசியலில் முறைகேடாக பணம் வளர்த்தவர்கள் தரப்பில் , கல்விநிலையங்கள்,தனியார் தொலைக்காட்சிகள்  இதில் சிறப்பிடம் பெறுபவை. கல்குவாரிகள் மணல் மாபியாக்கள் ,கந்து வட்டிக்காரர்கள் ,நிலத்தரகர்கள் இவர்கள் மட்டுமே அரசியலில் ஜொலிக்க முடியும் என்கிற நிலை ஏற்பட்டது என்பது எதோ மறைமுகமாக நிகழ்ந்ததல்ல .பொதுமக்கள் அறிய அனைவர் முன்னிலையில் நடந்தது.குறிப்பிட்ட வரம்பிற்கு அப்பால் பணம் சம்பாதித்து விட்டாலே அதனைப் பாதுகாக்க  ஏதேனும் அரசியல் கட்சியில் இருந்தாக வேண்டும் என்கிற
நிர்பந்தம் ஏற்பட்டு தமிழ்நாட்டில்  நிறைய காலம் ஆயிற்று .மணல்
மாபியாக்கள் கல்விக்கூடங்கள்,தொலைக்காட்சிகள் நடத்துகிறார்கள்
.முற்போக்கர்கள் அவர்களுக்கு ஊழியம் செய்கிறார்கள். இவ்வகையினர்  கவலை  கொள்வதில் அவர்களுக்கு அர்த்தம்   இருக்கவே செய்கிறது. தி.மு.க;
அ.தி.மு.க என இரண்டு தமிழ்நாட்டுக் கட்சிகளுமே தங்களுடைய சட்டமன்ற
,நாடாளுமன்ற பதவிகளை பல கோடிகளில் விற்பனை செய்யத்தொடங்கி பல்லாண்டுகள் கடந்ததை மக்கள் அறிவார்கள்.இவர்களால் இப்போது மக்களை வைத்தும் பரிமாற்றம் செய்ய இயலவில்லை.கான்டராக்ட் கமிஷன் தொகைகளை புதிய பணத்தில் கேட்கும் அரசியல்வாதிகள் நிலைகுலைந்து போயிருக்கிறார்கள். மக்களை வைத்து அனைத்து காரியங்களையும் சாதித்துப் பழகியவர்கள் இந்த விஷயத்தில் அது பலிக்கவில்லை என்பதால் மக்களின் பிரச்சனையாக இதனை மாற்ற முயற்சிக்கிறார்கள் .நமது தோல்மினுக்கீ தமிழ்நாட்டு போதமற்ற அறிவுஜீவிகள் ,பத்திரிகையாளர்கள் இவர்களுக்குத் துணை.

ஐந்தாவது தரப்பினர் நடைமுறை உருவாக்கியிருக்கும் சிரமங்களில் இருந்து
இந்த விஷயத்தைப் பார்ப்பவர்கள்.அப்பா வெளியூரில் இருக்கிறார் ,நான்
இங்கிருந்து அவருக்கு அனுப்பி வைத்தால் தான் அம்மா சாப்பிடமுடியும் என்ன செய்வதென்று தெரியவில்லை என்கிற  ரீதியில் பத்திற்கும் மேற்பட்ட நடைமுறை சிரமங்கள் மோடியின் இந்த "செல்லாது " அறிவிப்பால்
ஏற்பட்டிருக்கின்றன.கணக்கு வைத்திருப்பவர்களில் பெரும்பான்மையோர்
சேமிப்புக் கணக்குதான் வைத்திருக்கிறார்கள்.தொழில் கணக்குகளையும்
அதில்தான் பற்று வைத்துக் கொள்கிறார்கள்.அரசும் ,வங்கியும் அதில்
வைக்கப்படும் அனைத்தும்  வருமானமே என சொல்லிக் கொண்டிருக்கிறது.பலருடைய கணக்குகளில் அதில் பதிவாகும் பணத்தில் பத்து சதமானம் கூட வருமானமாகாது.இந்த தரப்பினரின் கவலைகள் ஏற்புடையாகவே உள்ளன.இவர்கள் முன்தீர்மானங்களின் அடிப்படையில் பேசவில்லை . நடைமுறையிலிருந்து பேசுகிறார்கள்.வருமான வரியின் தன்மையும் ,செலுத்தும் தன்மையும் குழப்பமற்றதாக எளிமையானதாக இருக்கவேண்டும் என்கிற கருத்தும் ஏற்புடையதே .வரியின் அளவு குறையும் பட்சத்தில் மறைக்கும் அவசியமும் குறையும்.

மற்றபடி எங்கள் ஊரில் ஒரு திருமணமண்டபத்தில் கூட ஏற்பாடு செய்த
திருமணங்கள் மோடியால் நிறுத்தி வைக்கப்படவில்லை.முன்னரே வரதட்சணை பேசி முடிக்கப்பட்ட நிச்சயதார்த்தங்களில் கூட வரதட்சிணை பாதியாக சில இடங்களில் குறைக்கப்பட்டிருக்கிறது. பல காலங்களுக்கு முன்னர் வரதட்சனைகளுக்கு எதிராக நீங்கள் பேசிக் கொண்டிருந்தது போல எனக்கு நினைவிருக்கிறது தோழர்களே ! அது நடைமுறையாகிறது இப்போது.மோடிக்கு நன்றி.

படைப்பின் அர்த்தம் - படைப்பென்பது மூன்றாம் மொழி


படைப்பின் அர்த்தம் - படைப்பென்பது மூன்றாம் மொழி

ஒவ்வொரு மனிதனின் முன்னரும் மூன்று வகையான மொழி
முன்னின்று கொண்டிருக்கிறது.சமூக மொழி இதில் பிரதானமானது.அதனை எவ்வாறு கையாள வேண்டும் என்பதை ஒவ்வொருவரும் சிறுவயது முதலே கற்கத் தொடங்குகிறோம்.இதனை ஒருவிதத்தில் மக்கள் மொழி எனலாம்.இதுவும் பல்வேறு வகைப்பட்டவைதான் எனினும் சிறுவயதுமுதலே நாமெல்லோரும் கற்றுத் தேறுவது இந்த மொழியைத்தான்.இதற்கு முற்போக்கு பிற்போக்கு என்கிற உடல்பாகங்கள் கிடையாது.அன்றாடத் தேவைகளுக்கு என்னென்ன அவசியங்கள் எல்லாம் உண்டோ அவற்றை நோக்கி அது முன்னேற முயற்சித்த வண்ணம் தயங்கிக் கிடக்கும்.அந்நியமான அனைத்தையும் சந்தேகித்தல் அதன் பொதுக்குணம்.அந்நியமானவையென்றால் அது தனக்குப் புறம்பான பிற அனைத்து உருப்படிகளையும்  சந்தேகிக்கும் .பிற சாதியை,மதத்தை ,மொழியை ,பிற பண்பாட்டை என அனைத்தையும் சந்தேகிக்கும்.இப்படியில்லாத சமூக மன அமைப்பு கொண்ட சமூகங்கள் உலகின் எந்த பாகத்திலும் கிடையாது.தான் சார்ந்துள்ளவை மட்டுமே உயர்வானவை என்று நிரூபிக்க விரும்பாத சமூகங்களே கிடையாது.ஆனால் அன்றாடத் தேவைகளுக்கு ஏற்ப இது தன்னிலையை மேம்படுத்திக்   கொண்டுமிருக்கும்.இதனை முதல் மொழி எனலாம்.

இந்த முதல் மொழி தன்னை அடுத்து அறிமுகம் கொள்வது அந்த சமூகத்தில் இயங்குகிற அரசியல் மொழியோடு.ஒரு சமூகத்தில் அரசியல் மொழியை அதனுடைய இரண்டாவது மொழியென வரையறுக்கலாம்.ஒவ்வொரு சமுகமும் அதிகாரம் நோக்கி முந்திச் செல்ல அரசியல் மொழி அவசியம்.அரசியல் மொழியும் பிறவற்றிற்கு எதிராகவே தன்னைத் திரட்ட முயலும் .பிறவற்றின் இருப்பிற்கே இடமில்லை என அது கதறும் இடத்தில்தான் அதன் அதிகாரம் திரளுகிறது.எனவே பிறவற்றை அழிக்கும் மூர்க்கம் இவற்றிடம் உண்டு.அதிகாரம் நோக்கிய பிரயாணம் தவிர்த்து பிற எதனையுமே இது கணக்கில் கொள்வதில்லை.படைப்பின் தரப்பிற்கு முற்றிலும் முரணான தரப்பு இந்த இரண்டாம் மொழி.

எந்த ஒரு சமூகமாக இருப்பினும் அதன் மூன்றாவது மொழியாக இருப்பது படைப்பு மொழிதான்.அது ஒரு கவிதையாகவோ , ஒவியமாகவோ , நாட்டியமாகவோ,சினிமாவாகவோ ,நிகழ்த்து கலைகளாகவோ,எழுத்தாகவோ இருக்கலாம்.படைப்பென்பது மூன்றாம் மொழி.பிற தரப்புகள் அனைத்தையும் கருத்தில் கொண்டாக வேண்டிய தேவையை தன்னகத்தே கொண்டியங்கும் தரப்பு இது.சமூக மொழியையும் ,அரசியல் மொழியையும் இது கூடுமானவரையில் மோதுகிறது.அல்லது மோதுவது போல தோன்றுகிறது.எப்போதும் பிறிதொன்றையும் இணைத்துப் பேச  விரும்புகிறது.இதுதான் எல்லாம் என்று அரசியல் அதிகாரம் வரையறை செய்யும் போது அப்படியில்லையே ! இன்னும் சிலவற்றை அதில் சேர்க்க வேண்டியிருக்கிறதே என்று படைப்பு சொல்லிவிடும்.கூடுதலாக்கவோ ,குறைக்கவோ செய்யும்.ஏறுமுகம் என்றால் இறங்கு முகம் காட்டும்,இறக்குமுகமாயின் ஏறுமுகம் ஏறும் .ஆறுமுகம் என்றாலோ அதிகமுகம் கொள்ளும்.ஒரு முகமே என்று சாதித்தால் ஒன்பது முகமல்லோ என்று சொல்லும். சமூக தன்னிலைகளின் அச்சத்தை அது பொருட்படுத்துவதில்லை.சமூக தன்னிலைகளும் ,அரசியல் தன்னிலைகளும் படைப்பில் அஞ்ச இதுவே பொதுவான காரணம்.

இதில் எது பூரணமான தரப்பு என்பதற்கெல்லாம் சான்றுகள் ஏதுமில்லை.ஒன்றிலேயே இருக்கலாம்.இரண்டில் இருக்கலாம் .ஆனால் படைப்பின் தரப்பு தன்னிலையில் ஒட்டாதவரையில் அங்கிருக்கும் வெற்றிடம் ஒன்று அப்படியேதான் இருக்கும்.அரசியலைக் கொண்டோ,அதிகாரத்தைக் கொண்டோ, மதத்தை,சாதியை எதைக் கொண்டும் அது நிறைவேறாது .இந்த மூன்றாம் மொழி இதன் காரணமாகவே முக்கியத்துவமுடையதாகிறது.ஒருவர் சமூக மொழியில் மட்டுமே பழக்கம் உடையவர் எனில் அவர் ஒரு பலசரக்கு கடை வைத்துப் பிழைப்பதில் ஒரு இடர்பாடும் ஏற்படாது.இரண்டாவது மொழியும் அறிமுகமாகும் போது அதிகாரமும் இணைந்த இன்னொரு சமுகமும்  அறிமுகம் கிட்டும்.கும்பலின் கிளர்ச்சியது.  வெற்று பிரபலஸ்தம்  ஆக இந்த இரண்டாம் மொழி வழி உண்டாக்கும்.அரசியல் மொழியும் இணைபெறுதல் பெறுவணிக அதிகாரம்.

மூன்றாம் மொழி அறிதலின் தீவிர விதியை உள்ளடக்கியது.தன்னிலையின் அலங்காரம்.அழகு.
மூன்றாந்தன்னிலையின் புறப்பொருட்சொத்து.

ஒவ்வொருவரும் ஒரே மொழியில் புழங்கும் இந்த மூன்று மொழிகளின் உட்புறத்தில்தான் அமர்ந்திருக்கிறோம் கண்ணம்மா ...
அரசியல் பிச்சை மட்டுமேனடி என் செல்லம்மா ...
முக்கண்ணோ மூவாயிரம் உண்டுமே
கண்ணே கலைமானே ...

புகைப்படம் - ரகுராய் 

"நிழற்தாங்கல்" - அழைப்பு


"நிழற்தாங்கல்"
புறக்கணிக்கப்படும் படைப்பாளிகளுக்கான வெளி   -   அழைப்பு

புறக்கணிப்பிற்குள்ளாகும் கவிஞர்கள் ,எழுத்தாளர்கள் ,கலைஞர்களுக்கான உறைவிடம் நிழற்தாங்கல்.சமூகத்தாலும் குடும்பத்தாலும் புறக்கணிப்பிற்குள்ளாகும் கவிஞர்கள் தங்குவதற்கும் செயலாற்றுவதற்கும் உரிய ஏற்பாட்டை ஏற்படுத்துவதற்கான நிழற்தாங்கல் அறக்கட்டளையின் முதல் ஆலோசனைக்கு கூட்டம் திருநெல்வேலியில் வருகின்ற 11  - 12  - 2016  ஞாயிறு அன்று நடைபெற உள்ளது.

திருநெல்வேலி டவுணில் உள்ள சக்தி கலைக்களத்தில் வைத்து இந்த கூட்டம் காலை மணி பத்து முதல் இரண்டு வரையில் நடைபெறும்.
அருட்பணி ராஜன் கூட்டத்திற்கு தலைமை தாங்குகிறார்.
கவிஞர்கள்  லக்ஷ்மி மணிவண்ணன் , விக்ரமாதித்யன் ஆகியோர் உரையாற்றுகிறார்கள்.

கூட்டத்தின் நிறைவாக எழுத்தாளர் ஷோபா சக்தி நடித்து கென்ஸ் திரைப்படவிழாவில் விருது பெற்ற தீபன் திரைப்படம் திரையிடப்பட
உள்ளது.அதனைத் தொடர்ந்து எழுத்தாளர் ஷோபா சக்தியுடன் திரைப்படம் குறித்த கலந்துரையாடல் நடைபெறும்.

நிழற்தாங்கல்


அன்புடன் அழைக்கிறோம்.

நிழற்தாங்கல் அறக்கட்டளையின் முதல் ஆலோசனைக் கூட்டம்
தீபன் திரையிடலுடன்...
நண்பர்கள் ,ஈடுபாடு கொண்டோர் திருநெல்வேலிக்கு 
11- 12 - 2016 ஞாயிற்றுக்கிழமை
வாருங்கள்
தலைமை : Fr . ராஜன்
வாழ்த்துரை : கவிஞர் விக்ரமாதித்யன்
இடம் - சக்தி கலைக்களம் ,ராமையா ஆர்கேட்,54 - A வடக்கு மவுண்ட் ரோட் ,[போத்திஸ் பின்புறம் ]
நயினார் குளம் சாலை ,திருநெல்வேலி டவுன்
தொடர்பு எண் - 9362682373
தீபன் திரையிடலுக்குப் பின்னர்
ஷோபா சக்தியோடு திரைப்படம் குறித்த
உரையாடல்

ஒரு அன்னையின் மரணம்

                                                   ஒரு அன்னையின் மரணம்அன்னையாக தன்னை உருவாக்கப்படுத்திக் கொள்ளவே ஜெயலலிதா விரும்பினார்.மக்களும் அவ்வாறே அவரை உருவகம் செய்து கொண்டனர்.கடுமையான தனிப்பட்ட தாக்குதல்கள் ,அவதூறுகள் ,பாலியல் வசைகள் ,அவமானங்கள் இவற்றைக் கடந்து மக்கள் அவரை அன்னையாகவே பாவித்தனர்.பிறர் அளவிற்கு அவர் வஞ்சகம் செய்யமாட்டார் என்கிற எண்ணம் கொண்டிருந்தனர்.கழிந்த தேர்தலில் அவர் கொண்ட வெற்றி என்பது கடவுளின்  விதியை மீறிய வெற்றியாகவே இருந்தது. அவரைப்பற்றிய வசைகளை மக்கள் கேட்டார்கள் ஆனால் சொன்னவர்களைப் புறந்தள்ளி அவர்கள் அன்னையின் பக்கமாக நிற்கவே விரும்பினார்கள்.

ஜெயலலிதாவை முன்னிட்டு ஒரு விஷயத்தைக் கவனித்திருக்கிறேன்.இந்தியாவின் மத்திய அரசாங்கம் அது காங்கிரஸாக இருப்பினும் சரி தற்போதைய பா.ஜ.கவாக இருப்பினும் தமிழ்நாட்டில் இடையூறாக அவர்கள்  கருதுகிற  தலைவர் ஜெயலலிதா மட்டுமே.பிறர் அனைவரையும் அதிகாரத்தால் ,பிறவற்றால் எளிதில் அடிமைப்படுத்தி விடமுடியும் என்பது அவர்களுக்குத் தெரியும் .ஜெயலலிதாவிடம் அவர்களுக்கு  இருந்த இந்த அச்ச உணர்வு பிற தமிழ்நாட்டுத் தலைவர்கள் எவரிடமும் கிடையாது.கழிந்த காங்கிரஸ் ஆட்சியில் அவர்கள் தமிழ்நாட்டில் கொண்டுவர விரும்பிய , தீவிரவாதத் தடுப்பு மையத்தை அவர் எதிர்த்த விதம் அதற்கு அருமையானதொரு சான்று.மத்திய அரசு திணிக்கும் விஷயங்களை மக்கள் ஏற்கும் விதத்தில் எதிர்க்க அவரிடம் நிச்சயமாக ஒரு மாயாஜாலம் கையில் இருந்தது.

தற்போது பா.ஜ.கவை கீழ்மட்டத்திலிருந்தே மோதி எதிர்த்துக் கொண்டிருந்தவர் ஜெயலலிதா மட்டுமே.மற்றவர்கள் பேசிக்கொண்டிருப்பதெல்லாம் வெற்று வாய்ப்பேச்சுகள். ஒவ்வொரு ஊரிலும் பா.ஜ.கவை அவர் கட்சியின் தொண்டர்கள் ,சட்டமன்ற உறுப்பினர்கள் மோதினார்கள்.வெளிப்படையாகவும் ,பகிரங்கமாகவும் மோதினார்கள்.அவர்கள் கொள்கைகள் ஏதும் பேசி பா.ஜ.கவை எதிர்க்கவில்லை.அடிமட்ட அரசியல்காரியங்களை முன்வைத்து எதிர்த்தார்கள்.பா.ஜ.க தமிழ்நாட்டில் கண் திருங்கி முழித்தது ஜெயலலிதாவிடம் மட்டும்தான்.பா.ஜ.கவினர் கலந்து கொள்ளும் பொது கூட்டங்களில் கூட அ.தி.மு.கவினர் கலந்து கொள்வதில்லை என்கிற அளவிற்கு.பா .ஜ.க வும் தமிழ்நாட்டில் ஜெயலலிதாவை மட்டுமே தடையாகக் கருதியது.மக்களை இதற்கு எப்படி பழக்கினார் என்பது இப்போதுவரையில் எனக்கு புதிராக உள்ளது.தேநீர்க் கடைகளில் பா.ஜ.கவினருக்கு நெத்தியடி கொடுப்பவர்கள் அ.தி.மு.க தொண்டர்களாக இருந்தனர்.

இங்கே ஜெயலலிதாவின் மறைவை எல்லோரும் அதாவது பிற கட்சிகள் அனைத்துமே ஒருமித்து விரும்பியது போல எனக்குத் தோன்றுகிறது. அது ஏன் என்பது ஆராயப்பட வேண்டியது.அவரிடமிருந்த மக்கள் செல்வாக்கு பிறருக்கு இடையூறாக மாறிவிட்டிருந்திருக்கலாம்.பா.ஜ.க இந்த விருப்பத்தில் கொஞ்சம் கூடுதல் உற்சாகம் அடைந்தது போல எனக்கொரு எண்ணம்.அவர் விட்டுச் செல்கிற இடத்தில் தாங்கள் முளைவிடலாம் தமிழ்நாட்டில் என்று அவர்களுக்கு ஒரு கணக்கு இருக்கலாம்.அவர் இருப்பதுவரையில் அதற்கான வாய்ப்பு கிடையாது என்கிற தெளிவிலும் அவர்கள் இருந்திருக்கலாம்.ஆனால் இந்த கணக்கு தவறானது.தமிழ்நாட்டு மக்கள் நம்புவதற்கு உரிய உருவகம் கொண்ட தலைவர்கள் எவரும் பா.ஜ.கவில் தமிழ்நாட்டில் கிடையாது.

அவமானங்களில் இருந்து உதித்து வந்தவர் ஜெயலலிதா.மக்கள் அவருடைய இந்த இடத்தில்தான் கூடவே இணைந்து நின்றார்கள்.இந்த மன அலைவரிசையின் இணைப்பு மக்களிடம் அவரை ஒட்டி வைத்திருந்தது. இது பிறருக்கு கடைசிவரையில் விளங்காமல் மேலும் மேலும் அவமானப்படுத்த முடியுமா ? என்றே வேலை செய்தனர்.ஜெயலதிதாவை அவமானப்படுத்த பலரும் பேசிய பேச்சுக்கள் அனைவரும் அணிந்திருந்த முற்போக்குக் கொள்கை அங்கியைக் கழட்டி நிர்வாணமாக்கியது. காஞ்சி சங்கர மடத்தைக் கைவைக்க இங்கே வேறு ஒருவருக்கும் தைரியம் கிடையாது.அதில் ஒரு பிராமண எதிர்ப்பும் வெளிப்பட்டது.அவர் பிராமணராக இருந்தே ஏன் பிராமண எதிர்ப்பு கொள்ளவேண்டும்  வேண்டும் என்று ஒருவர் கேட்கலாம் ? ஒரு தலைவனின் ஆளுமை உருவாக்கத்தில் இத்தகைய பண்புகள் மிகவும் சூக்குமமானவை.அதேசமயத்தில் ஆன்மீகத்தை அவர் புறந்தள்ளவில்லை.பிராமணத்  தலைமைகள் புனிதர்கள் ஒன்றும் கிடையாது என்பதை அவர் தனது வாழ்விலிருந்தே  புரிந்து கொண்டிருந்தார் என்றே தோன்றுகிறது.

கடைசியில் அவர் உடல்நலிவின் காரணமாக அல்லல்பட்டது மிகுந்த வருத்தத்திற்குரியது.மிகுந்த பூடகத்தன்மையை அது அடைந்தது.மக்களிடம் குழப்பத்தையும் தெளிவின்மையையும் ஏற்படுத்தியது.என்ன நடக்கிறது என்பதை யாராலும் புரிந்து கொள்ள முடியவில்லை.எந்தத் தலைவனுக்கும் தமிழ்நாட்டில் இப்படியொரு நிலை ஏற்படாமல் இனி  கடவுள்தான் காக்கவேண்டும்.

போய் வாருங்கள் அன்னையே அம்மையே ...உங்களை அம்மையே என்று அழைக்க பலசமயங்களில் நான்  விரும்பியதுண்டு.தமிழ் மக்களின் மனதில் அம்மையாக நெடுங்காலம் வாழ்வீர்கள். உங்களுக்கு என்னுடைய கண்ணீர் அஞ்சலி

ஓம் சாந்தி சாந்தி சாந்தி 

"நோ நோ NO No ... நேநோ " சாரு

"நோ நோ NO No ... நேநோ "
சாரு என்ற வேடிக்கை மனிதர்


"அவர் பரிதாபத்துக்குரியவர். தெருவில் மட்டுமே கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருப்பவனுக்கு அந்தத் தெருவில் விளையாடுபவர்கள்தான் நாயகர்கள். உலக அளவில் ஆடுபவன் பற்றி அவனுக்குத் தெரிய நியாயமில்லை. என்னுடைய கர்னாடக முரசு, நேநோ, the joker was here, நட்சத்திரங்களிடமிருந்து செய்தி கொண்டு வந்தவர்கள் போன்ற சிறுகதைகளின் வாசலைக் கூட அவரால் திறக்க முடியாது. தமிழில் எழுதிய முன்னோடிகளைத் தொடர்ந்து வாசிப்பதன் பயனாக இங்கே உள்ள எல்கேஜி வாண்டுகளுக்குக் கூட அபாரமான தமிழை வெகு எளிதாக எழுதி விட முடிகிறது. அப்படி எழுதத் தெரிந்தவர் அந்த நண்பர். மற்றபடி தமிழின் பத்தாம்பசலித்தனத்தைத் தாண்டி அவரால் யோசிக்கக் கூட முடியுமா என்பது சந்தேகமே. உதாரணமாக, சிங்கப்பூர் இளங்கோவன் பேசும் ஒரு வார்த்தையின் அர்த்தத்தைக் கூட அந்த அன்பரால் புரிந்து கொள்வது கடினம். சினிமா தியேட்டரில் தேசிய கீதம் பாடுவது பற்றிய இளங்கோவனின் காமெண்ட்டைப் பார்க்கவும். இது போன்ற நண்பர்களெல்லாம் நம்மோடு ரெண்டாம் வகுப்பு படித்த பையன்களோடும் பெண் பிள்ளைகளோடும் ஒப்பிடப்பட வேண்டியவர்கள். பாவம்."

- சாரு நிவேதிதா

மேற்படி சாரு நிவேதிதா வேறொரு நண்பரின் கல்வெட்டில் என்னைப்பற்றி  பொதிந்தவை .அவரை தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் இருந்து அறிவேன்.அவர் பொதிந்த இந்த கம்மெண்ட்  அவருடைய நூல் ஒன்றிற்கு எழுதிய என்னுடைய கட்டுரைக்கானது.சென்னையில் அவருடைய "நேநோ"  சிறுகதைத் தொகுப்பிற்கு புக்பாய்ண்ட் அரங்கில்  03  - 07  - 1999 - ல் அவர் ஏற்பாடு செய்திருந்த வெளியீட்டு விழாவில் , அவர் அழைப்பை ஏற்றுக் சென்று படித்த கட்டுரை அது. அம்ருதா வெளியீடாக வந்த என்னுடைய " குழந்தைகளுக்குச் சாத்தான் : குழந்தைகளுக்கு கடவுள் " கட்டுரை நூலில் இந்த கட்டுரையின் முழு வடிவம் இடம் பெற்றுருக்கிறது.காலச்சுவடு இதழ்  எண் - ல் 2000  வெளியான கட்டுரையும் கூட .

இரண்டு  வருடங்களுக்கு முன்னர் எனது முகநூல் பக்கத்தில் அந்த கட்டுரையின் ஒரு பகுதியை போட்டிருந்தேன்.அது மீண்டும் முகநூலில் மிதந்து வர பகிர்ந்திருக்கிறேன்.அவ்வளவுதான் விஷயம்.அதற்கு மீண்டும் ஒரு முறை எதிர்வினையாற்றியிருக்கிறார் சாரு நிவேதிதா .முதல் எதிர்வினை அவர் புத்தகம் வெளியிட்ட அதே நாளில் நடந்தது. மிகவும் சுவாரஸ்யமான அனுபவம் அது.அவர் மிகவும் வெகுளியான மனிதர்.கிண்டல் செய்வதையும் ,நிராகரிப்பதையும் கூட அவருக்கு சொல்லிப்புரிய வைக்க பிறிதொரு நபர் தேவை.இதில் சிரமம் என்னவெனில் புரியாத ஒருவனைத்தான் அவர் உடன் கொண்டலைவார்.எனவே நம்மில் வருகிற எவரேனும் ஒருவர்தான் கிண்டல் செய்கிறார்கள் சாரு என்று அவருக்குச் சொல்லவேண்டும்.அப்போது பெரும்பாலும் எங்களில் பலருக்கு கிண்டலுக்குரிய ஆளாகத்தான் அவரிருந்தார்.அரை டவ்சரில் இலக்கியக் கூட்டங்களில் சுற்றிவருவதே உலகளாவிய இலக்கியத் தகுதி பெறுவதற்கான முன்னேற்பாடு என்னும் எண்ணம் உண்மையாகவே அவருக்கு அப்போதே உண்டு.

ஒரு முறை எங்கள் ஊர்பக்கமுள்ள ஆரல்வாய்மொழிக்கு ஒரு திருமண அழைப்பிற்கு அவருடைய  நண்பரின் அழைப்பின் பேரில் வந்திருக்கிறார்.ஆரல்வாய்மொழி ஊர் மக்களுக்கு சாருநிவேதிதா பிரென்ச் சொசைட்டியில் பிறந்திருக்க வேண்டியவர் என்பது தெரியாதது மட்டுமல்ல , அவர் ஒரு எழுத்தாளர் என்பதும் தெரியாமல் போனதால் சாப்பிடாமல் கிளம்பிவிட்டார் உங்கள் வீட்டிற்கு ஏதும் வந்தாரா ? என்று நண்பர் என்னை தொலைபேசியில் கேட்டார்.இல்லையே ! உண்மையாகவே எனது வீட்டிற்கு அவருக்கு வழி தெரியாது.பக்கத்திலேயே தேடித் பாருங்கள் இத்தாலியன் பேக்கரியில் கேக் சாப்பிட்டுக் கொண்டிருப்பார் என்று சொன்னேன்.  உண்மையாகவே வெளிநாடுகளில் பிறந்திருக்கவேண்டிய ஒரு சிலரில் அவரும் ஒருவர் என்பது அவருடன் பழக்கம் இருந்த தொண்ணூறுகளின் பின்பகுதியிலேயே உணர்ந்திருக்கிறேன்.அவருக்கும் அந்த கவலை இன்றளவும் உண்டு. அவரைபோன்றவர்களும் வெளிநாடுகளில் வாழத்தான் செய்கிறார்கள்.பாரிசில் இவர் பிறப்பை வைத்துக் கொள்வதற்குப் பதிலாக இறைவன் பூக்கடைப் பாரிசில் கொண்டு நட்டு வைத்துவிட்டான்.கோவை சரளாவின் என்னைய திருவண்ணாமையில் கேடாக அமெரிக்காவில் கேட்டாக டைப் வசனத்தை யார் உச்சரிக்கும் போதும் உடனடியாக ஞாபகத்திற்கு வருபவர் சாரு நிவேதிதாத்தான்.அப்படியே பொருந்த துள்ளாத துடிக்க இருக்கிறார்.ரஷ்யாவில்  இப்படியானவர்களை பற்றிய தாஸ்தெவெஸ்கியின் ஒரு பிரபலமான சொற்பொழிவு உண்டு.  தமிழிலும் அது மொழிபெயர்க்கப்பட்டு வந்திருக்கிறது.மிகச் சிறந்த சொற்பொழிவு அது.

எக்சில் இதழில் அவர் எழுதிய கோணல்பக்கங்கள் எனக்குப் பிடித்திருந்தது.ஒரு முறை எழுத்தாளர்களை நடிகர்களோடு ஒப்பிட்டு ஒரு பட்டியல் போட்டிருந்தார்.அது சுவராஸ்யமாக இருந்தது.பிரபஞ்சனை ஜெமினி கணேசன் என்றும் பொன்னீலனை நாகேஸ்வர ராவ் என்றும்  அவர் எழுதியதாக நினைவு .அதில் தன்னை கமல் ஹாசன் என்று சொல்லியிருந்தார்.பிற எல்லாமே சரிதான் சாரு ஆனால் நீங்கள் கமல் ஹாசன் என்றதுதான் தவறு.நீங்கள் கார்த்திக் என்பது ஏன் உங்களுக்கு இவ்வளவு வளர்ந்த பிறகும் தெரியவில்லை என்றேன்.கொதித்துப் போனார்.சாமியாடிக் கொண்டே வந்தார் நாங்கள் செல்லவிருந்த மதுக்கடைநோக்கி .கார்த்திக் ஒரு இடியட் அவனை அப்படி என்னோடு ஒப்பிடலாம் ? என்று கூறி அழாத குறைதான்.இவ்வளவிற்கு வெகுளி அவர். சும்மா வாய்யா...  ஊரையெல்லாம் கலாய்க்கிற   உனக்கு உன்னைக் கலாய்த்தால் ஏன் பொத்துக் கொண்டு வருகிறது என்று கூறி அழைத்துச் சென்றோம்.

சொல்ல வேண்டிய விஷயத்தைச் சொல்லிவிடுகிறேன்.நேநோ சிறுகதைத் தொகுதியை சென்னையில் அவர் வெளியிட உத்தேசித்திருந்த போது நான் ஒரு மாலை நாளிதழில் செய்தியாசிரியராக நாகர்கோவிலில் இருந்தேன்.ஒரு நாளைக்கு இரண்டு மூன்று தடவைகள் அவரிடமிருந்து தொலைபேசி வரும்.நேநோ வெளியீட்டு விழாவில் கட்டுரை படிக்கக் கேட்டு.முதலில் வேண்டாம் சாரு உங்களுக்கு அது உவப்பாக  இராது.வேறு எவரையேனும் அழையுங்கள் அதுதான் சரியாக இருக்கும் என்றேன்.இல்லை எதிராகவே இருந்தாலும் பரவாயில்லை நீங்கள் வாருங்கள் என பல முறை கேட்டு சென்னைக்கான டிக்கட்டும் எடுத்து அனுப்பினார்.அவருடைய வீட்டுக்குப் போய் சேர்ந்தேன்.அப்போதே அவரிடம் ஒரு பெரிய நாய் இருந்தது.நாய் வளர்பவர்களிடம் நாயின் பெருமைகள் கேட்பது எனக்கு மிக்க கடினம்.கோழி வாங்கி அதனை தக்காளி அரிந்து போட்டு ஒருவித சமையல் செய்தார்.மாலையில் இந்த கூட்டம் .கட்டுரையெல்லாம் படித்து கூட்டம் நிறைவு பெற விருந்து உதயமானது.விருந்தில் எவனோ சதிகாரன் ஒருவன் எனது கட்டுரை அவருக்கு எதிரான கட்டுரை மட்டுமல்ல அவரை அது நிராகரிக்கிறது என்பதையும் பொருள் விளங்க அவருக்குப் போட்டுக் கொடுத்து விட்டான்.விருந்து திரு திருவென கண்முழித்தது.எனது வீட்டில் என் கையால் கறிவிருந்து சாப்பிட்டுவிட்டு  எனக்கெதிராக எனது மேடையிலேயே பேசுவாயா ? என சாரு பொங்க ,அது வெறும் சர்க்கரைப் பொங்கல் என்பதால் எழுந்து பக்கத்துக்கு கடையில் போய் குடித்தோம்.இந்த சல்லித்தனத்தை ஒருபோதும் எழுத நினைத்ததில்லை. சில நண்பர்கள் வட்டாரங்களில் சொல்லிச் சிரித்திருக்கிறோம் அவ்வளவுதான்.அவரை சொல்லி சிரிக்க இதுபோல எத்தனையோ விஷயங்கள் உண்டு.

திரும்பிச்   செல்ல வேண்டிய டிக்கட்டை அவர் பின்னர் தரவும் இல்லை . அதனால் நான் திரும்பிப் போகாமலும் இல்லை.திருமணத்தை நிறுத்த சீப்பை ஒளித்து வைப்பது போல.

ஆனால் இன்னும் இரண்டாம் வகுப்புப் படிக்கிற பையன்களையே கட்டுரை படிக்க அழைக்கிறீர்களே  சாரு ... மூணு கழுதை வயசான பிறகும். பாவமும் பரிதாபமும் நீங்களா நானா ? பையன்களா ? "நோ நோ NO No ... நேநோ "

வைதீகமான பெருநகரத்து அந்நியனின் கதைகள்,நேநோ ...

தமிழ் கலகக்காரனின் கதைகள்
லக்ஷ்மி மணிவண்ணன்

( சென்னை புக் பாயிண்ட் அரங்கில் 03-07-99 அன்று நடைபெற்ற சாரு நிவேதிதாவின்  "நேநோ" சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டு விழாவில் படிக்கப்பட்ட கட்டுரை)

சாரு நிவேதிதா பற்றி தமிழில் பல்வேறுபட்ட புனைவுகள் உள்ளன. கலகக்காரன் ,எதிர் கலாச்சாரவாதி ,வன்முறைக்கு எதிரான தந்தை என்றும் : ஆபாசமான எழுத்தாளன் , கலை இலக்கியம் என்ற பெயரில் ஆபாசமான பாலியல் கதைகள் எழுதக் கூடியவர் என்றும் அவரைப் பற்றிய பிம்பங்கள் வளர்கின்றன .பொதுவாகவே தமிழில் எழுத்தாளர்கள் பற்றி வளரும் புனைவுகளுக்கும் அவர்களது எழுத்துக்களுக்கும் உள்ள தொடர்பு பலகீனமானது ,தெளிவற்றது .பிம்பங்கள் பெரும்பாலும் குடும்ப அரசியல் மொழியின் உதவியுடன் மிருகத்தைப் போல வளர்க்கப்படுகின்றன .
வெகுஜன குடும்ப அரசியல் மொழி தனது புனைவுகளைக் கட்டமைத்து வருகிறது . இத்தகைய புனைவுகளுக்குள்ளிருந்து எழுத்தாளன் தொடர்ந்து தப்பித்துக் கொள்ளவேண்டியது அவனது செயல்பாட்டில் முக்கியமானது . தொடர்ந்து மனதை விழிப்புடன் வைத்துக் கொள்வதன் மூலம் அவன் தன்னைப் பற்றிய புனைவுகளைத் தாண்டிச் செல்ல முடியும் .
தமிழில் கலைஞர்களும் ,எழுத்தாளர்களும் குடும்ப அரசியல் மொழி உருவாக்கும் புனைவுகளுக்குள் சுருங்கி விடுகிறார்கள் .சாருவைப் பொறுத்தவரையில் தன்னைப் பற்றிய புனைவுகளை ,செல்லப் பிராணிகளைப் போல வளர்க்க பிரியப்படுகிறார் என்பது: சிறு பத்திரிகைகளில் அவர் எழுதியுள்ள கதைகளைப் படிக்கிறபோது தெரிகிறது என்றாலும் அக்கதைகளைச் சற்று கவனமாகப் படிக்கிற வாசகன் -சாருவைப் பற்றிய புனைவுகளுக்கும் ,அவரது கதைகளுக்கும் தொடர்பில்லை என்பதை மிக எளிதாகவே உணர்ந்து கொள்ள முடியும் .
"நேநோ"என்ற சாருவின் சிறுகதைத் தொகுப்பில் மொத்தம் 25 கதைகள் உள்ளன . இவற்றை வாசகன் தனது வசதிக்கு ஏற்றபடி சாருவின் மீட்சி வகைக் கதைகள், கணையாழி வகைக் கதைகள் ,தினமலர் வகைக் கதைகள் என்று பொதுவாகப் பிரித்துக் கொள்ளலாம் .இந்தப் பிரிவினை கதைகளின் தோற்றம் சம்பந்தப்பட்ட விஷயம் தானே தவிர ,கதைகளின் உலகம் சம்பந்தப்பட்டது அல்ல .
இந்தத் தொகுப்பில் " டீ " என்கிற கணையாழி வகைக் கதை ஒன்று மீட்சியில் வெளியாகியுள்ளது .அதுபோல " நட்சத்திரங்களிடமிருந்து செய்தி கொண்டு வந்தவர்களும் பிணந்தின்னிகளும் " என்கிற மீட்சி வகைக் கதை முன்றிலில் வெளிவந்துள்ளது ."என் முதல் ஆங்கிலக் கடிதம் " என்கிற கணையாழி ரகக் கதை சில காரணங்களை முன்னிட்டு தினமலரில் வெளியாகியுள்ளது . இதுபோல "கண்ணி நுண் சிறு தாம்பு "என்கிற தினமலர் ரகக் கதை கணையாழியில் வெளிவந்துள்ளது .
தொகுப்பில் இந்தவகைகளுக்குள் சிக்காமல் தனித்து விடப்பட்ட கதைகளாக இரண்டு கதைகளைச் சொல்லலாம் .சுபமங்களாவில் வெளியாகியுள்ள மணிரத்னத்தின் சமீபத்திய திரைப்படங்களை நினைவுபடுத்தும் "பிளாக் நம்பர் : 27 திர்லோக்புரி " என்கிற கதை ஒன்று.அதேபோல தினமணிக் கதிரில் வெளியாகியுள்ள " நாகமணி " என்கிற கதை மற்றொன்று.சாருவின் கதைகளை முன்னிட்டுப் பத்திரிக்கைகளைப் பார்க்கிறபோது அவை ஒன்றை ஒன்று சில புள்ளிகளில் அனுசரித்துக் கொள்ளும் தன்மைகள் கொண்டிருப்பதையும் ,அல்லது ஒன்றாகவே இணங்கக் கூடிய உறவுகள் கொண்ட வகைமாதிரிகள்தான் அவை என்பதையும் உணரமுடிகிறது .
சாருவின் கதைகள் பல வகை மாதிரிகளுக்குள் வரும்போதும் கூட அவை அனைத்தையும் ஒரே வகையானவை என்றே சொல்லவேண்டும் .தீவிர எழுத்தில் அவரது சமகால எழுத்தாளர்களுடன் ஒப்பிடும்போது ,சாருவின் பங்களிப்பு மிகவும் சாதாரணமானது என்பதுதான் என் எண்ணம் .
மொழியில் சாரு அடைந்துள்ள மந்தத்தன்மையை இத்தொகுப்பிலுள்ள கதைகள் தெரியப்படுத்துகின்றன .அ-நேர்கோட்டுத் தன்மை கொண்ட கதைகளைப்போல் வெளித் தோற்றத்தை ஏற்படுத்தக்கூடிய இந்தக் கதைகளின் உட்பரப்பு நேர்கோட்டுத் தன்மை கொண்டதாக உள்ளது . உட்பரப்பிற்குத் தொடர்பற்ற வெளித்தோற்றத்தின் மூலம் மொழியில் வீழும் கதைகளாக சாருவின் கதைகளை உணர்கிறேன் .
சாருவின் மனம் வைதீகமான பெருநகரத்து அன்னியனால் நிரம்பியது என்பதை இவரது எழுத்தைப் படிக்கும் வாசகன் உணர்ந்து கொள்ளமுடியும் . இந்த வைதீகமான பெருநகரத்து அந்நியனை சாருவின் எழுத்தில் சகல பகுதிகளிலும் உணரமுடியும் .
தன்னுடன் மானசீகமான உறவு உள்ளவர்களாக பார்பரா, அத்தை,நடிகை சுஷ்மா போன்ற பெண்களை குழந்தையைப் போன்று பாவிக்கும் இந்த அந்நியனுக்கு ,நாப்கின் -யோனி -மாதவிடாய் -போன்றவையும் ,பாலியல் பழக்கவழக்கங்களும் பெரும் அதிர்ச்சியைத் தருகின்றன .ஒவ்வொருவரின் வீட்டுக் கொல்லைப் புறத்திலும் உள்ள ரகசிய கதவு காற்றில் அசைந்த படியே உள்ளது .இத்தகைய ஒரு பாலியல் சூழலில் சாருவின் கதை வாசகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக பொதுவாகக் கருதப்படுகின்றது .?
எனது வாசிப்பில் இந்த பெருநகரத்து அந்நியனுக்கு வாழ்வின் ஒருபகுதி பெரும் அதிர்ச்சியூட்டுகிறது என்றே தோன்றுகிறது .இதற்குக் காரணம் சாருவின் மனதில் செயல்படக் கூடிய இரட்டைத்தன்மை . ஒரு பக்கத்தில் குழந்தை ,தெய்வம் .மறுபுறம் பிசாசும் ,அருவருப்பும் .இவை இரண்டும் ஒன்றிணையாமல் தனித்தனியே சாருவின் உலகில் செயல்படுகிறது .
இது ஜி .நாகராஜனின் எழுத்துக்கு முற்றிலும் எதிரான ஒரு உலகம் . ஜி.நாகராஜன் தெய்வங்களும் ,பிசாசுகளும் அற்ற உலகத்துக்குள் அல்லது தெய்வத்தையும் பிசாசையும் ஒன்றாக்கும் உலகத்துக்குள் மூடிக் கிடக்கும் இருளுக்குள் தன் மொழியை நகர்த்திச் செல்கிறார் .ஆனால் சாருவின் கதைகளில் காண்பது வெளிச்சத்தில் நின்றபடி பிசாசுகளையும் அருவருப்பையும் நினைத்து கோபத்திலும் பயத்திலும் சோர்ந்து அலறும் வைதீகமான பெருநகரத்து அந்நியனை .
சாருவின் நாவல் ஒன்றில் இவரைப் பற்றி எழுதப்பட்டுள்ள குறிப்பு "இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் முற்றிலும் சிதறுண்டுபோன தமிழ் மனம் சாரு நிவேதிதாவினுடையது "என்று பேசுகிறது .இந்தச் சிறுகதைகளை வாசித்துப் பார்க்கிறபோது இந்த வாக்கியம் சாருவை முன்னிட்டு முற்றிலும் பிழையான ஒரு வாக்கியம் என்றே தோன்றுகிறது .
தமிழில் நகுலனுக்கு இந்த வாக்கியம் ஒருவேளை பொருந்தக்கூடும் . முற்றிலுமாக தர்க்கங்கள் சிதறுண்டு போன நிலையில் நகுலனின் மனவெளி
திசை சிதைந்து நெருப்பு நாயாக மொழியில் அலைகிறது .நகுலனால் அந்தவெளியைப் படைப்புரீதியிலான விழிப்பு நிலையாக உருவாக்க இயலவில்லை என்றாலும் கூட சிதறுண்ட மனதின் வெளியைப் படைத்தது அவரது பங்களிப்பு .தமிழில் நகுலன் உருவாக்கி இருக்கும் வெளி முக்கியமான கலைஞனுக்கு அதிகபட்ச சாத்தியப்பாடுகளை வழங்கக்கூடும் .சாருவிடம் அ -நேர்கோட்டுத் தன்மை தோற்றமாக மட்டுமே தெரிகிறது .
சாரு நிவேதிதாவின் இந்தச் சிறுகதைகளை கோபி கிருஷ்ணனின் சிறுகதைகளோடு ஓரளவுக்கு மேலோட்டமாக தொடர்புபடுத்திப் பேச முடியும் .அதற்கு காரணம் வைதீகமான பெருநகரத்து அந்நியனின் கதைகள் என்று சாருவின் கதைகளை நினைவுபடுத்திக் கொள்ளும்போது ,கோபியின் கதைகளை காலத்தில்
பின்தங்கிப் போன ,கிராமத்தின் மனசாட்சியை இறுகப்பற்றியபடி தோற்றுக்கொண்டிருக்கும் அந்நியனின் கதைகள் என்று சொல்லத்
தோன்றுகிறது .மனசாட்சியைப் பெருமிதத்தோடு கட்டித் தழுவியபடி தோற்றுக்கொண்டிருக்கும் கோபியின் கோலம் வருத்தத்தை ஏற்படுத்தக் கூடியது.அது ஒருவிதத்தில் உறவையும் ஏற்படுத்தக் கூடியது . ஒருவிதத்தில் யோசித்துப் பார்கிறபோது கோபியின் மனசாட்சி எனது தாத்தாவினுடையது .எனக்கு தாத்தாவோடு உள்ள முரண்பட்ட உறவு கோபியுடன் சாத்தியப்பட்டிருக்கிறது . சாருவுடன் சாத்தியப்படவே இல்லை .
சாருவின் கதைகளில் எனக்கு வருத்தமோ ,துன்பமோ இல்லை .தேவை இல்லாமல் துன்பப்படுகிற ஆன்மா என்கிற எரிச்சலே உள்ளது .இதற்குக் காரணம் சாரு எனது காலத்தின் சக பயணியாக செயல்படுகிறார் என்பதாகும் .நானும் ,அவரும் வெவ்வேறு விதமான விழிப்பு நிலையோடு ஒரே ரயிலில் பயணம் செல்பவர்களாக இருக்கிறோம் ஒரே பெட்டி ,பக்கத்து இருக்கை.
சக பயணி மூல நோயாளிகளை மட்டுமே பார்த்துக் கொண்டு வருபவனாக இருக்கிறான் . அருவருப்படைகிறான் .கோபப்படுகிறான் .தோள்களை அழுத்தித் தொட்டு அதை எனக்குக் காட்டித் தருபவனாக இருக்கிறான் . வெதுவெதுப்பான ஈரமாய் வேட்டிகளில் விரியும் ரத்தக்கறையைப் பார்த்து அவன் அடைந்த மன உணர்வை நானும் அடையவேண்டும் என்று விரும்புகிறான் . குசுக்களின் சத்தம் அவனது விழிப்புணர்ச்சியில் பேரொலியாகக் கேட்கிறது .நான்கைந்து ஸ்டேஷன்கள் கடந்த பிறகு " குசுச் சத்தம் கேட்டால் என்னைய்யா ? "என்று கேட்க வேண்டி வருகிறது .
இன்றைய வாழ்வில் தத்துவங்களுக்கும் ,எழுத்தாளனுக்கும் ,கலைக்கும் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய சவால்களில் ஒன்று ,முந்தைய காலகட்டங்களில் பெரும்
புகழோடும் ,விலை மதிப்போடும் இருந்த மாய எதிரி அரூபமாகி விட்டான் என்பதும் - எளிய எண்ணங்களால் நமது சுட்டு விரல் காட்டக் கூடிய எந்தத் திசையிலும் அவன் இல்லை என்பதும் ஆகும் .
பழக்கத்தின் காரணமாக மட்டுமே சுட்டு விரல்கள் மனப்பிறழ்வு அடைந்து திசைகளை வெறித்துக் காட்டுகின்றன .எதிரிகள் அற்றவர்களாக வாழ வேண்டியவர்களாக இன்றைய மனிதர்களின் இருப்பு சிக்கலாகிவிட்டது . கடவுளும் ,மாய எதிரியும் இணைந்து ஒருவராகி அரூப ரகசியங்களின் புதிர்களில் வேகமாகச் சென்று ஒளிந்து கொள்கிறார்கள் .
மனிதனுக்குக் கலை ,தத்துவம்,விஞ்ஞானம் ,மதம் என்று எல்லா தர்க்கங்களின் வாசல்களும் அடைக்கப்பட்டு விட்டன .இந்நிலையில் எழுத்தாளன் அல்லது கலைஞன் தனது நுட்பமான மொழியசைவின் மூலம் ரகசியங்களை நோக்கிப் பயணிக்க வேண்டியிருக்கிறது .எதிரியற்ற வெளியில் ஆவேசங்களும் கோபங்களும் செயல்களை இழந்துவிடுகின்றன . ஆனால் சாருவின் மொழி தவளையைப் போன்று ஒரு புள்ளியிலிருந்து இன்னொரு புள்ளிக்கு ஆவேசத்தோடும் ,கோபத்தோடும் துள்ளிக் கடக்கிறது . அது தனது துள்ளலில் கடந்து விடுவது ரகசியங்களையும் ,நுட்பங்களையும் , கடவுளின் இருத்தலையும் ஆகும் .உள்ளடுக்கின் சாரங்களைக் காணும் வெளியைக் கவனமற்றுக் கடக்கும் மொழியால் "நாகமணி " உட்பட அனைத்துக் கதைகளும் இந்தத் தொகுப்பில் திராணியற்ற விறைப்புத் தன்மையோடு உள்ளன .இத்தகைய மொழி மூலம் சாருவால் ஒரே கதையை மட்டுமே எழுத முடிகிறது .
சாருவின் மீட்சி வகைக் கதைகளில் தன்னைப் பற்றிய புனைவை நிகழ்த்திக் காட்டுவதில் ஆர்வமாக உள்ளார் .பார்பரா ,சுஷ்மா,அத்தை இவையெல்லாம் ஒரேவகைப்பட்ட கற்பனைகள் .அதிலும் பார்பரா வரும் கதை சாருவின் மனம் பெண்களின் உடலை முன்னிட்டு எத்தகைய வரிசையில் கட்டப்பட்டுள்ளது என்பதைத் தெரியப்படுத்துகிறது .
மொத்தத்தில் இந்தத் தொகுப்பை சாருவுக்கு என்ன முக்கியத்துவம் என்பதை யோசித்துப் பார்க்கும்போது அதிர்ச்சியோடும் ,பயத்தோடும் நடுங்கி கொண்டே உட்கார்ந்திருக்கும் சாருவின் கதைகள் எடுத்துக் கொள்ளும் சுதந்திரமே அது என்று மட்டுமே சொல்லத் தோன்றுகிறது .இது தமிழில் புதியதில்லை .சாருவின் கதைகளின் சுதந்திரம் நிகழ்த்தி முடித்த நாடக போன்று செயலற்றுக் கிடக்கின்றது .இந்த சுதந்திரத்தை பயன்படுத்தி கொண்டு சாரு என்ன செய்திருக்கிறார் என்பதற்கு பதிலேதும் இல்லை .
ஆனால் சாருவின் இயக்கம் மூலம் நிகழ்ந்திருப்பது ,இன்னொரு எழுத்தாளன் தனக்கு சாதகமாக எடுத்துக் கொள்வதற்கான சுதந்திரம் மட்டுமே ?


குறிப்பு :

(ஒரு புத்தக வெளியீடு நிகழ்விலேயே அந்த புத்தகத்தையும் , படைப்பாளியையும் முற்றிலும் நிராகரிப்பதற்கான ஒரு சூழல் தமிழ்நாட்டில் இருந்திருப்பதை யோசித்துப் பார்க்க ,ஆச்சரியமாகத்தான் உள்ளது .இப்போது இது சாத்தியம்தானா ? )

சாகித்ய அகாதமி சர்ச்சைகள் - லக்ஷ்மி மணிவண்ணன்

சாகித்ய அகாதமி சர்ச்சைகள்
ஒருபோதும் தீராத சர்ச்சைகளை தொடர்வதில் சாகித்ய அகாதமி முதலிடத்தைப் பெற்றுவிடும் என்றே தோன்றுகிறது.
தான் வாழும் காலத்தில் சாகித்ய அகாதமி சர்ச்சைகளில் தொடர்ந்து மோதிக் கொண்டிருந்தவர்களில் ஒருவர் சுந்தர ராமசாமி. அந்த அமைப்பின் மீது அவர் இரண்டு பராதுகளை மிகக் கடுமையாக முன்வைத்தார். ஒன்று, சாகித்ய அகாதமியின் விருதுகள் வழங்கப்படும் பின்னணியின் வெளிப்படைத் தன்மை குறித்தது; மற்றொன்று, இரண்டாம் தரமான எழுத்தாளர்களுக்கேனும் உரிய முறையில் அவ்விருது சென்றடைய வேண்டும் என்கிற அக்கறை குறித்தது. மோசமான படைப்புகளை விருதுகள் சென்றடைவது, இந்திய மற்றும் உலக அரங்கில் தமிழுக்கு தலைகுனிவை ஏற்படுத்தும் எனும் கருத்தை அவர் தொடர்ந்து முன்வைத்தார்.
படைப்பில் மோசம் என்பது அதன் தன்மை மற்றும் தீவிரம் சார்ந்ததேயன்றி ஒருபோதும் நல்லொழுக்கம் சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல. அதன் வெளிப்படைத்தன்மை திறந்திருக்க வேண்டும் என்கிற சுந்தர ராமசாமியின் கவலை சிறப்பிற்குரியதாகும். இன்றைய தேதி வரையில் அது திறக்கப்படவும் இல்லை. ஒரு மோசமான படைப்பைத் தேர்ந்தெடுக்கும் பின்னணி வெளிப்படையாகத் தெரியும் பட்சத்தில் தேர்ந்தெடுப்பவர்களின் முக, அக லெட்சணங்களையும் சேர்த்து நாம் கண்டுணர்ந்துவிட முடியும். முன்றாம் தரமான எழுத்தாளர்களுக்கு சாகித்ய அகாதமி விருதுகளும் பரிசுகளும் சென்றடையும் போது, தமிழ்நாட்டில் படைப்பாளிகள் சர்ச்சைகளில் ஈடுபடுவது ஒரு மரபு போலாகி வருகிறது. அவை குண மதிப்பில் சீர்கேடு அடைவதும் அப்போதுதான். இரண்டாம் தரமானவர்கள் அங்கீகாரம் பெறும்போது பெரிய அளவில் சலசலப்புகள் ஏற்படுவதில்லை. முதல் தரமானவர்களை ஒருபோதும் இவை நெருங்குவதே இல்லை. முதல் தரமானவர்கள் பேரில் இத்தகைய அமைப்புகள் கொண்டுள்ள அச்சம் நிரந்தரமானதாக உள்ளது.
பொதுவாகவே நோபல் பரிசு உட்பட .உலகளாவிய பல பரிசுகளும்கூட இன்று சர்ச்சைகளுக்கும் விமர்சனங்களுக்கும் உள்ளாக்கப்படுகின்றன. புக்கர் விருது பெற்ற அருந்ததி ராயைக் காட்டிலும் மிகச் சிறந்த எழுத்தாளர்கள், இந்தியா முழுவதிலுமுள்ள பிராந்திய மொழிகளில் இரண்டு தலை முறைகளாக வாழ்ந்து வருகிறார்கள். எனவே பரிசுகளை, விருதுகளை, அங்கீகாரங்களைப் பெறுவது மட்டும்தான் ஒரு கவிஞனுக்குரிய, எழுத்தாளனுக்குரிய தகுதிச் சான்றிதழ் என்று கருதுவதற்கில்லை. சார்த்தர் நோபல் பரிசையே நிராகரித்தார்.
இவையெல்லாம் ஒருபுறம் எப்போதுமே இருப்பவை என்றாலும்கூட, தற்போது சாகித்ய அகாதமி போன்ற நிறுவனங்கள் அடைந்திருப்பது சீரழிவுகளின் உச்சநிலை. அதில் அவை வெகுவேகமாய் வேறு இருக்கின்றன. இவற்றிற்கு வெகு அப்பால் இருப்பவர்களுக்கு மட்டுமே இவை புனிதம் பூசப்பட்ட தனது தோலை மினுமினுக்கி காட்டமுடியும். மற்றபடி உள் இறைச்சி அழுகி நாற்றமெடுக்கத் தொடங்கிவிட்டது .
பணம், புகழ், அதிகாரம் ஆகியவற்றை எவ்விதத் தகுதியுமின்றி பெற விளைபவர்களின் - கல்குவாரி, மணல் குவாரி மனோபாவத்துடன் அணுகுபவர்களின் - எண்ணிக்கை சமூகம், அரசியல், பண்பாடு என எல்லா தளங்களிலும் வேகம் பிடிக்கிறது.
பலகீனமான எழுத்தாளர்கள் இவ்வகைப் பரிசுகளைப் பெற்றே தீருவது என்பதில் லட்சிய உறுதி கொண்டிருக்கிறார்கள். இவற்றிக்காக அவர்கள் வாழ்நாள் முழுதும் பின்தொடரவும் உழைக்கவும் மரணிக்கவும் தயார். அதனால்தான் இப்போது மூன்றாம் தர எழுத்தாளனையும் கடந்து இவை சிலசமயங்களில் வழிப்போக்கர்களின் கரங்களையும் சென்றடைகின்றன. கலை இலக்கியத்திற்குத் தொடர்பற்றவர்களுக்கு, குறைந்தபட்ச வைராக்கியத்தையும் இழந்து விருதுகள், அங்கீகாரங்கள் போய்ச் சேருகின்றன. பொதுவாகவே எழுத்தாளர்களைக் காட்டிலும் அவர்களது பக்கத்து வீட்டுக்காரர்களே இந்த அமைப்புகளை அணுகுவதில் திறமை கொண்டிருகிறார்கள். பெறுமதிகளை அவர்கள் பெற்ற பிறகு சிலசமயம் படைப்பாளிகள், கலைஞர்கள் மீது கழிவிரக்கம் காட்டி, உங்களை இந்த அமைப்புகளிடம் அறிமுகப்படுத்தட்டுமா? எனக் கேட்கிறார்கள்! விஷயங்கள் அந்த நிலைக்கு உறங்குகின்றன.
சுந்தர ராமசாமி போன்றவர்கள் இவ்வகை அமைப்புகளின்மீது தாக்கத்தை ஏற்படுத்தி மேம்படுத்தி விடமுடியும் என நம்பியவர்கள். இன்றைய நிலவரமோ நம்புவதற்கும் வாய்ப்பற்ற தொலைவுக்கு சென்று கொண்டிருக்கிறது. அவசர சிகிச்சை பிரிவில் இருக்குமானால்கூட முயற்சி எடுப்பதில் அர்த்தம் இருக்கிறது. சவக் கூடத்திற்கு மாற்றப்பட்ட பிறகு காவல் காத்து என்ன செய்ய? இன்று கல்வியாளர்கள் தொடங்கி, சாதியவாதிகள் வரையில் உள்ளே சென்றமர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
தங்களிடம் உள்ள அதிகாரத்தை சாதியவாதிகளுக்குக் கடத்துபவர்கள் கல்வியாளர்கள்தாம் என்பதில் சந்தேகமே வேண்டாம். சொந்த சாதி நலன்களுக்காக மட்டுமே உழைப்பவர்களையும், தன் சாதியில் பிறந்தவர்கள் என்கிற காரணத்திற்காக மட்டுமே பெருமக்களை குறியீடாக்கிக் கொண்டாடுபவர்களையும் சாதியவாதிகள் என்றுதான் குறிப்பிடவேண்டும். இவ்வமைப்புகளில் திருமண வேலைகளெல்லாம் பட்டாசு, வெடிச்சத்தம், வானவேடிக்கை என்று அமர்க்களம்தான். மணமக்கள்தான் கிடையாது. நமது அமைப்புகள் உள்ளடக்க குறைபாடுகளால் நிரப்பபட்டவை. அதுபற்றி யாருக்கும் ஒருகுறையும் இல்லை. குறைகூறி தூரத்திலேனும் தென்படும் வாய்ப்புகளை ஏன் இழக்க வேண்டும்?
நம்முடைய ஜனநாயகத்தன்மை என்பது அளவற்ற சாதுர்யமும் மோசடியும் நிறைந்தது. இவற்றில் விலகி இவற்றைக் காப்பாற்றியே தீரவேண்டும் என்று எவரேனும் விரும்புவார்களேயானால் கலை இலக்கியத்தில் தொடர்புடையவர்களின் திசைவழியை நோக்கி முதலில் இவ்வமைப்புகள் திரும்ப வகை செய்யவேண்டும். தயவு தாட்ஷணியம் ஏதுமின்றி தனி நபர்களிடம் முடங்காமல் அடிப்படையான ஜனநாயகப் பண்புகளை பேண நிர்பந்திக்க வேண்டும். சமகால கலைஇலக்கியத் தொடர்பற்ற கல்வியாளர்களின் கரங்களிலோ, தனி நபர்களின் அதிகாரத்திலோ இவற்றை வீழ்த்தக்கூடாது. தனிப்பட்ட நபர்களின் கரங்களில் இவை ஒப்படைக்கப்படும்போது, இவை குடும்பத்தன்மை அடைவதையும் சாதியப்பண்பு மெருகேறுவதையும் தவிர்க்கவே இயலாது.
சாகித்ய அகாதமி என்றில்லை, அவற்றுக்கு ஆள் தேர்வு செய்து அனுப்பும் முற்போக்கு அமைப்புகளும் அரை நூற்றாண்டு காலமாக தகுதியற்றவர்களின் கைகளில் சிக்குண்டு கிடக்கின்றன. முற்போக்கிகள் மாவட்ட ரீதியாக பண்பாட்டு அமைப்புகளின் பொறுப்பாளிகள் பட்டியலை ஒப்படைக்கத் தயார் எனில் கசப்பு நிரம்பிய உண்மை விளங்கிவிடும். தமிழ்நாட்டில் பலகாலமாக கட்சிக்காரர்கள், தொழிற்சங்கவாதிகள் படைப்பாளிகளைக் கடுமையாக ஒடுக்கி வருகிறார்கள். உண்மைகள் வெளிப்பட்டுவிடக் கூடாது என்பதில் குறியாய், கைப்பற்றி வைத்திருப்பவர்கள் அரண் காக்கிறார்கள். தமிழ்நாட்டில் படைப்பாளிகளை ஒடுக்குவதை இங்கே முறைப்படுத்தி வைத்திருப்பவர்கள் முற்போக்கிகள்தான். உண்மைகளைக் கூறத் துணியும் படைப்பாளிகளை சூத்திரங்களாலும் முத்திரைகளாலும் கூடித் தாக்க பெரும் கோஷ்டியே தயார் நிலையில் இருக்கிறது. பொதுச் சூழ்நிலை அறிந்த அல்லது பொதுச் சூழ்நிலையோடு சிறிது உறவேனும் கொண்டிருந்த தொ.மு .சி. ரகுநாதன், தி.க.சி. போன்ற முன்னோர்களின் தகுதி பெற்றவர்கள்கூட இன்று பதவிகளில் இல்லை. அதனால்தான் பேசுகிற படைப்பாளிகளிடம் இவ்வமைப்புகள் பேரச்சம் கொள்கின்றன. உலகெங்கும் இல்லாத அவலநிலை இது. அவல நிலை என்று உணரப்படாத அவல நிலையும்கூட. எப்போதேனும் இவர்கள் கரிசனத்தில் இவர்களது அரங்குகளில் உரையாற்றும்போது தர்ம சங்கடமாய் இருப்பதற்கு, சமகால கலை இலக்கியத்தோடு இவர்கள் தொடர்பற்றுத் தனித் தீவில் வசிப்பதுதான் காரணம்.
ஊழல் என்பது இன்று அரசியலோடு மட்டும் தொடர்புடைய ஒன்றல்ல. அது பண்பாட்டு நிறுவனங்கள் வரை ஊடுருவி இருக்கிறது. ஆய்வுகளை விற்கும் கல்வியாளர்கள், சம்பள அடிப்படை மதிப்புரையாளர்கள் எல்லோருமே கூட்டாளிகள். செம்மொழி பயில்வான்கள் எல்லோரையும் மிஞ்சிவிடக் கூடியவர்கள். கல்வியாளர்கள் எல்லாவற்றிலும் சம்பந்தப்படுகிறார்கள். நாம் வாழும் காலத்தின் அறச் சீர்கேடு கல்வியாளர்களோடும் தொடர்புடையது. கேரளத்தில் இளங்கலைக்குச் செல்லும் ஒரு மாணவன் நவீன இலக்கியத்தில் இரண்டு பாடங்களில் கண்டிப்பாகத் தேர்ச்சி பெற்றாக வேண்டும். நமது செம்மொழி ஆய்வுகள் சங்க இலக்கியத்தையே தாண்டவில்லை. நவீன இலக்கியம், கலை, அறிவு ஆகியவற்றின் ஆய்வுகளுக்கு அங்கே அனுமதி இல்லை.
தமிழ் நாட்டில் கண்ணுக்கெட்டிய காலம் தொடங்கி சொற்பொழிவாளர்களைத்தான் வெகு மக்கள் எழுத்தாளர்கள், கவிஞர்கள் என நம்பிக் கொண்டிருக்கிறார்கள். எழுத்தாளர்களும் கவிஞர்களும் கலைஞர்களும் பிரசங்கிகள் இல்லை என்பது பொது மக்களிடம் தெளிய இன்னும் ஒரு நூறு ஆண்டுகள் செலவாகும் போலிருக்கிறது.
பிரசங்கிகளைப் பற்றி குறைபட ஏதும் இல்லை. அவர்கள் எழுத்தாளர்களாகும் தன்முனைப்பைத்தான் விளங்க முடியவில்லை? ஏன் அவர்கள் ஒரு மருத்துவராகவோ பொறியாளராகவோ விஞ்ஞானியாகவோ தன்முனைப்பு கொள்வதில்லை? தமிழில் விலை மலிந்த தரப்பில் அவர்களுக்கு ஏன் இந்த ஆர்வம்?
தமிழ்நாட்டில் நவீன கவிதைகள் பேரில் கவனம் உருவாகியிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் சாகித்ய அகாதமி நவீன கவிஞர்களுக்கு விருது வழங்க முன்வருவதன் மூலமாக அது தரவிட்டிருக்கும் சமகாலத் தன்மையை மீட்க முடியும்.தமிழில் நவீன கவிதைகள் உலகத் தரத்திற்கு குன்றாதவை.
[ ஓராண்டிற்கு முன்னர் தமிழ் இந்துவில் வெளிவந்த கட்டுரை ]

நிழல் உருவங்கள் - சிறுகதை

நிழல் உருவங்கள்

தபால் தலைகள் சேகரிக்க ஆரம்பித்த காலத்திலிருந்தே செந்தில்குமாரை எனக்குத் தெரியும். இருபது வருடகால பழக்கம் எனக்கும் அவனுக்கும் உண்டு. அதிகமான முக்கியத்துவம் கொடுத்துத் தபால்தலைகளைச் சேகரிப்பான். கலாச்சாரப் புரட்சியை தபால்தலைகள் நடத்திவிடும் என்று அதை கவனிக்கிறவர்களுக்குத் தோன்றும். அவன் முனைப்போடு தபால்தலைகள் சேகரிப்பதில் எனக்கு எரிச்சல் உண்டு. இந்த தபால்தலைகளும் வேலாயுதம்பிள்ளை வாத்தியாரும், எனக்கும் அவனுக்குமான பொது எதிரிகளாக அந்தச் சமயங்களில் தோன்றினார்கள். வேலாயுதம்பிள்ளை வாத்தியாருக்கு எதனாலோ என்னையும் அவனையும் சேர்த்து பார்க்கவேப் பிடிக்காது. ‍அதிலும் என்மேல் அவருக்குக் கூடுதலான கோபம் உண்டு. வரலாறு புவியியல் பாடத்தில் கேள்விகள் கேட்டு வரிசையாக இருக்கையிலிருந்து எழுப்பி அடிக்கும்போது எனக்கு அவர் பிரம்பில் கொடுக்கிற அழுத்தம் அவனைவிடக் கூடுதலாயிருக்கும். அவர் பயன்படுத்துகிற பிரம்புகள் வடசேரி சந்தையில் வாங்கப்பட்டு, அவரது வீட்டில் மஞ்சள் பூசி அவித்து கொண்டுவரப்படுபவை. அவரது வகுப்பில் நானும் அவனும் ஒரே வரிசையில் நெருக்கமாய் உட்கார்ந்திருக்கக்கூடாது என்ற அவரது வகுப்பில் நானும் அவனும் ஒரே வரிசையில் நெருக்கமாய் உட்கார்ந்திருக்கக்கூடாது என்ற அவரது கட்டளை பிசுபிசுத்துப் போகும்படி நாங்கள் ஒரே வரிசையிலேயே உட்கார்ந்திருந்ததும், பிசுபிசுத்துப் போனதற்குக் கூடுதல் காரணம் நான் என்று அவர் நம்பியதும் என்னிடம் அவர் கொண்டிருந்த தனிப்பட்ட வன்மத்திற்குக் காரணமாயிருக்கலாம். அப்படியொரு நம்பிக்கைக்கு எந்த வழியில் அவரால் வரமுடிந்தது என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. பழுப்பேறிப்போன எனது சட்டையோ, என் முகத்தில் நிழலாய் படர்ந்து விரிந்து கொண்டிருந்த பயமோ, என் கண்களில் தெரிந்த ஒடுக்கமுறையின் இழையோ, இவையெல்லாமான கலவையோ, அவர் தெருவில் தினமும் பார்க்கிற ‍தெருநாயோ  அல்லது எல்லைகளை மீறிப் பாய்கிற அவரது வளர்ந்த மகன்களில் ஒருத்தனை நினைவூட்டும்படியாய் இருந்திருக்கலாம். இவற்றைத் தவிர்த்து அவர் காட்டிய வன்மத்திற்கான காரணம் என்னவாயிருக்கும் என்பதை எனக்கு யூகிக் முடியவில்லை.இதுபோலவே தபால்தலைகள் எனக்குக் கொடுத்த இடையூறுகளும்.எனக்கும் அவனுக்குமான உறவை பலமுறை அவை அறுத்துப் போட்டன. எனக்கும் அவனுக்கும் பொதுவான நேரங்களை சுருங்க வைத்தன. தபால்தலைகளை சேகரிக்க முடியாதவர்கள் எந்த பயனுமற்ற விறகுகட்டைகள் என்று அவனுக்குள்ளிருந்த எண்ணம் என்னைக் கீழ்த்தரமான பிராணியாக அவனுக்கு படம்பிடித்துக் கொண்டிருந்தது. அவனது சேகரிப்பில் 'அ'வரிசையில் மூன்றாவது இருநூறாம் பக்க நோட்டு காணாமல் போனபோது அவனுக்கு என்மீது சந்தேகம் ஏற்பட்டது. ஒருவாரம் வரைக்கும் முக்கியமான எதிரியிடம் நடந்து கொள்வதுபோல என்னிடம் நடந்து ‍கொண்டான்  . அவன் எதிரிகளை எவ்வளவு வன்மத்தோடு தாக்கக்கூடியவன் என்பதை அந்த சமயத்தில் எனக்கு உணரமுடிந்தது. வார முடிவில் இந்தப் புகைச்சல் விரிந்ததில் பள்ளிக்கூடம் விட்ட பிறகு நாங்கள், நாலரை மணிக்கு விளையாட்டு மைதானத்தில் சண்டை போட்டு, அதன்பிறகு ஒரு வாரத்தில் சமாதானப்பட்டுக் கொண்டோம். இதற்கு இடைப்பட்ட நாட்களில் அவன் தொலைத்த சேகரிப்பு நோட்டு கிடைத்திருந்தது என்பது முக்கியமான விஷயம்.

சேகரிப்பு சமயங்களில், அதை ஒட்டி ஒழுங்குப்படுத்துகிற சமயங்களில், அந்த நடவடிக்கைபற்றி யாருடனாவது பிரஸ்தாபப்பட்டுக் கொள்கிற சமயங்களில் அவன் என்னை சாமர்த்தியமாக தவிர்ப்பதாக உணர்ந்தேன்.நான், அவனோடுள்ள சந்தர்ப்பங்களை அவனது இந்தப் பணிக்கு இடையூறானதாகவ‍ே இருக்கும் என்று நம்பினான். அவனது காரியத்தைப் பிரஸ்தாபித்துக் கொள்கிற இடங்களில் நானிருப்பது அவனுக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தியது. விழுந்துவிழுந்து சேகரிப்பது, ஒழுங்குபடுத்துவது, வகைப்படுத்தியவற்றைத் தடித்தடியான இருநூறாம் பக்க நோட்டுகளில் ஒட்டுவது இவற்றுக்கே அவனது நேரத்தில் அதிகத்தை எடுத்துக் கொள்ள வேண்டியிருந்ததால் எனக்கும் அவனுக்கும் பொதுவான நேரம் சிறுத்துக்கொண்டிருந்தது. இதனால், அவனது இந்த பணிக்கு ஒத்துழைக்கப் பலமுறை என்னை தயார்படுத்த முயற்சித்தேன். ஒன்றிரண்டு சந்தர்ப்பங்களில் என் கைக்குக் கிடைத்த தபால்தலைகளைப் பத்திரப்படுத்தி ஞாபகமாக அவனிடம் கொண்டு கொடுத்தபோது, அவற்றை அவன் மிகுந்த ஏளனத்துக்குட்படுத்தினான். அவனது சேகரிப்புகளோடு நான் கொடுத்தவற்றை ஒப்பிட்டால் இவை வெறும் அற்ப ஜென்மங்கள்தான் என்றாலும் அவனது ஏளனம் மனச்சோர்வை எனக்கு ஏற்படுத்தியது. அவனுக்கான எனது உழைப்பை‍யேனும் அவன் கவனத்தில் ‍எடுத்திருக்கலாம். ஆனால் என்னை தவிர்ப்பதிலேயே அவன் குறியாக இருந்தான். அந்த ஏளனத்துக்குப் பின்பும் நான் சேகரிப்பதில் இல்லாவிட்டாலும், ஒழுங்குப்படுத்துவது, வகைப்படுத்தி ஓட்டுவது போன்ற அவனது பணிகளில் என்னை ஈடுபடுத்திக்கொள்கிற மனநிலையிலேயே இருந்தேன். அது எனக்கு அவனை முன்னிட்டு செய்ய இயலக் கூடிய காரியம்தான். ஆனால், இது சம்மந்தமாக எனது எந்த உதவியும் அவனுக்குத் தேவைப்படாதது மட்டுமல்ல, அசெளகரியத்தைத் தரக்கூடியதாகவும் அமைந்திருந்தது. வேலாயுதம்பிள்ளை வாத்தியாரால் எனக்கும் அவனுக்குமான நேரத்தில், சனி ஞாயிறு தவிர்த்த தினங்களில், கூடிப்போனால் நாற்பத்தைந்து நிமிடங்களை மட்டுமே தட்டிப்பிடுங்க முடியும், இந்த தபால்தலை சேகரிப்பு தினசரி எனக்கும் அவனுக்குமான நேரத்தில் சில மணிநேரங்களைத் தின்று கொண்டிருந்தது. அதில் அவனுக்கிருந்த அலாதியான மகிழ்ச்சியும், மகிழ்ச்சிக்கு நேர் எதிர்நிலையில் எனக்கு உருவான அசுவாரசியமும் ஒருத்தருக்கொருத்தர் புரிந்து கொள்ள முடியாதததாகப் போய்க்கொண்டிருந்தது.

நிறைய இருநூறு பக்க நோட்டுகுள் சேர்ந்து கொண்டிருந்தன. ஆரம்பத்தில் சேகரித்துப்போட்ட இருநூறு பக்க நோட்டுகளில் அவனுக்கு அதிக நாட்டம் இருக்கவில்லை என்பதை நாளாவட்டத்தில் புரிந்து வந்தேன். ஆனாலும்,அவற்றை இழந்துபோக அவன் தயாராக இல்லை. மனஇறுக்கமான பொழுதுகளில் அவற்றைத் திருப்பிப் பார்த்துவிட்டு மீண்டும் அடுக்கி வைக்கிற பழக்கம் அவனிடமுண்டு. புதிதாகச் சேகரிக்கப் போகிற தபால்தலைகளிலேயே நாட்டமும் ஈடுபாடும் உடையவனாயிருந்தான். அவனது அப்பாவும் குடும்பத்தினரில் சிலரும்கூட அவனது தபால்தலை சேகரிப்பில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டிருந்தனர். அதோடு குடும்பத்தில் உள்ளவர்கள் இவனுக்குக் கொடுக்கிற அங்கீகாரத்தின் பெரும்பகுதியில் இந்த தபால்தலைகள் முக்கிய பங்காற்றின. புதிதாக அவன் வீட்டுக்கு வருகிற விருந்தாளிகள், நண்பர்கள் எல்லோருடைய தருணங்களிலும் இந்தத் தபால்தலைகள் பங்கெடுத்துக் கொண்டன. மொத்தத்தில் அவனது சூழலுக்குள் இவை முக்கியமான வினையாற்றிக் கொண்டிருந்தன. பிரக்ஞாபூர்வமற்ற இந்த வினையை பயன்படுத்திக்கொண்டு இருநூறு பக்க நோட்டுகளும் வேகமாக வளரத் தொடங்கின. புதிதாக தபால்தலைகள் சேகரிப்பதில் இறங்குகிறவர்களுக்குக் கனவாக இருந்தான். அவன் புதிய சேகரிப்பாளர்களுக்குக் கூறிய அறிவுரைகள் உத்திகள் எல்லாம் குறிப்பெடுக்கப்பட்டன. எனக்கோ இவையெல்லாமே மாயாநிகழ்வுப்போலத் தோன்றியது. கால்களற்றுப் பறப்பதுபோலவும், ஆவி மொழியில் மந்திரங்கள் பரிமாறிக் கொள்ளப்படுவது போலவும் இருந்தன. இவை ஏற்படுத்திய அசுவார சியத்தில் அடிக்கடி மனச்சோர்வுக்குத் தள்ளப்பட்டேன். இருந்தாலும் எனக்கும் அவனுக்குமான உறவில் அத்தனை பிணைப்புகளும் அறுந்து போகாதபடி ஏதோவொரு திரவஇயக்கம் இருந்து கொண்டிருந்தது. எங்களுக்குப் பொதுவாக அமைந்த குறைந்த சந்தர்ப்பங்கள் சோர்வை மிக இலகுவில் தாண்டி, புத்துணர்ச்சியை ஏற்படுத்தியது இதற்கான காரணமாயிருக்கலாம். ஆனால் அதிர்ஷ்ட வசமாகவோ என்னவோ பனிரெண்டாம் வகுப்பு படிக்கிற கால கட்டத்தில் செந்தில்குமார் முற்றாக தபால்தலைகள் சேகரிப்பை நிறுத்திவிட்டான். இருநூறு பக்க நோட்டுகளின் வளர்ச்சி தடைபட்டது. எனக்கு மாயா உலகத்திலிருந்து அவன் தப்பிவிட்டதுபோல மகிழ்ச்சி ஏற்பட்டது.எனக்கும் அவனுக்கும் பொதுவான சமயங்களில் இனி சிக்கல்கள், பின்னல்கள் ஏற்படாதென்கிற மனநிறைவும் கூடிவந்தது. தபால்தலைகள் சேகரிப்பவர்களை பரிதாபமாகவும் ஏளனமாகவும் பார்த்தான்.

தபால்தலைகள் சேகரிப்பாளனாகிய பழைய செந்தில்குமாரை அருவருத்து ஒதுக்கித்தள்ள ஆரம்பித்தான். மறுபிறப்புக்கு ஆளானவனைப்போலக் காணப்பட்டான். பேச்சிலும் நடவடிக்கைகளிலும் கூர்மை தென்பட்டது. சேகரிப்புக்கான உபதேசங்களையும் வழிமுறைகளையும் கேட்க வருகிறவர்களிடம் வருத்தப்படுகிற அளவு நடந்துகொண்டாள். மோசமான முறையில் ஏமாற்றப்பட்டுவிட்டது போன்ற மன நிலைக்கு ஆளாகியிருந்தான். தனது பழைய காரியங்களை வெறுத்ததன் வழியே என்மீது நம்பிக்கையும், வெட்கம் கலந்த மதிப்பும் அவனுக்கு ஏற்பட்டிருந்தது. எனது பேச்சையும் நடவடிக்கைகளையும் கூர்மையாய்க் கவனித்தான். எனது சாதாரண நடவடிக்கைகள் அவனது கவனிப்புக்கு உள்ளாகியிருந்தது எனக்கு சிரமத்தைத் தந்தது. சில சமயங்களில் ஹயூமரைக்கூட தீவிர சர்ச்சைக்கு வலிந்து பிடித்திழுத்தான். பழக்கத்தின் காரணமாக என்னை எதிர்கொண்டு நெருப்புப்பொறி ஏற்படுகிற அளவு விவாதிக்காமல் இருக்க அவனுக்கு முடியவில்லை. ஆனால் ஆரம்பத்தில் ஏற்பட்ட நெருப்புப் பொய்யானவை. இந்த நெருப்பு பொறிகள் நெருப்பு பொறிகளின் மாதிரிகள் மட்டுமே. இரண்டு பக்கங்களிலும் காயத்தை ஏற்படுத்த இயலாதவை இவை. தவிர பழக்கத்தின் காரணமாக மட்டுமேதான் பொய்யான நெருப்புப் பொறிகளை உண்டுபண்ணுகிறான் என்றும் அவனை எளிமைப்படுத்திவிட முடியாது. என்மீது அவன் கொண்ட நம்பிக்கைக்கு அவனுக்குச் சாட்சியங்கள் தேவைப்பட்டன. தேவைப்பட்ட சாட்சியங்களுக்காக நெருப்புப் பொறிகளைக் கிளற வேண்டிய தேவை அவனுக்கு இருந்தது. அவன் பிறரை எதிர்கொள்கிறபோது அவன் தரப்பு விவாதங்களை என் தரப்பு விஷயங்கள் மூலமாய் அடித்து நொறுக்கிக் கொண்டிருந்ததைக் கவனிக்க நேர்ந்தபோது மன அதிர்ச்சிக்குள்ளானேன் என்றாலும், எனக்கு அவனோடுள்ள உறவு எளிமைப்பட அந்த சந்தர்ப்பங்கள் உதவின. இந்த காலகட்டத்தில்தான் அவன் குடும்பத்தினரோடு அவனுக்குள்ள உறவுகள் பலகீனப்பட்டுக் கொண்டிருந்தன. தபால்தலைகள் சேகரிப்புக்கும் குடும்ப உறவுகளுக்கும் அப்படி என்னதான் பிணைப்போ புரியவில்லை.

அப்புறமாய் இரண்டுபேரும் இணைந்தே சினிமா நடிகர்களின் படங்களை வெட்டிச் சேகரிக்க தொடங்கினோம். இதில் இருவருக்குமே சுவாரசியம் இருந்தது. ஏற்கனவே, ஒரு பழக்கத்திலிருந்து விடுபட்ட அவனுக்கு விடுதலைபெற்றது போன்ற உணர்வும் கிடைத்தது. பிரக்ஞாபூர்வமற்ற சேகரிப்புதான் என்றாலும் இரண்டு பேருக்கும் உருவான சுவாரசியம் காரணமாக இதில் ஈடுபடமுடிந்தது. அதோடு, கோபாலோடு அந்த சமயத்தில் எங்களிருவருக்கும் ஏற்பட்ட நட்பு சேகரிப்புக்குப் பயனுள்ளதாக இருந்தது.

நிறைய தமிழ் சினிமா பார்க்கிறவன் கோபால். நிறைய சினிமா இதழ்களும் வாங்குவான். அவன் சினிமா இதழ்களுக்கு வாசகர் கடிதம் எழுதுவதுகூட உண்டு. ரேவதிப்பிரியன் என்ற பெயரில் வெளியாகும் அவனது வாசகர் கடிதங்கள் அப்போது வந்த சினிமா இதழ்களில் கவனிக்கப்படக்கூடியதாக இருந்தன. அவை கவனிக்கப்படுவதற்காக முழு புத்திகூர்மையையும் ஆரம்ப நாட்களில் பயன்படுத்த வேண்டியிருந்தது. பழக்கத்தில் நுட்பங்களும் உள்அடுக்குகளும் புரிந்துவிட்டபிறகு கவனிப்பைப் பெறுவது சுலபமாக மாறியிருந்தது. அந்த இதழ்களில் அப்துல் கலாமுக்கும் அவனுக்கும் ரகசியமான போட்டியும் உண்டு. என்றாலும் கோபால் அதில் கொண்ட வெற்றி அசாதாரணமானது. அப்துல் கலாமின் புழுக்கமும் தோல்வியும் பல செவுடு வித்தைகள் அறிந்த வலிய ஆசானை கூப்பிட்டுகு கெட்டிக்கொள்கிற சாமானியனின் ‍தோல்வியைப்போல இருக்கும்.சுருக்கமாகச் சொன்னால் கோபால் அந்த இதழ்களில் வட்டார பிரபல்யஸ்தனைப்போல் காணப்பட்டான்.

சென்னையிலிருந்து 'அலைகள் காய்வதில்லை' என்ற படத்துக்காக சகல படமெடுக்கும் சாதனங்களையும் கொண்டுவந்து நாகர்கோவிலிலுள்ள ஒரு கல்லூரி வாத்தியாரிடம் ஒரு கும்பல் வழிகேட்டபோது அவர் காட்டிய ஒரே திசையாக கோபாலிருந்தான். அந்த கல்லூரி வாத்தியார் அவரது உயர்ந்த பட்ச லட்சியமே திரைப்பட சுருள் நாடாவில் பதிவதுதான் என்றாகி, அந்த வண்ணன்கனவை ஏற்கெனவே சிலப் படங்களில் எட்டியிருந்தார். திரைச்சீலையில் ஏதேனும் வயதான நபரோடு கூடவருகிற குணச்சித்திரப் பாத்திரங்கள் அருக்கு அவற்றில் கிடைத்திருந்தன. என்றாலும் குணச்சித்திர கோலம் இரண்டு நிமிடங்கள்கூட நிற்காமல் திரையில் ஓடி மறைவது அவருக்கு ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்தும். இரண்டு வார்த்தைகள் வசனம் பேசி, திரைச்சீலையில் தெரிந்த அவரது குணசித்திரகோலம் அவரது வாழ்வில் ஜீவகாவிய அனுபவமாகிவிட்டது. இந்த நிலையை எட்ட அவர் அடைந்த அவமானங்கள் தாழ்வுகள் எல்லாம் தெரிந்த நபர்களில் கோபாலும் ஒருவன். ஒருமுறை அவர் அவமானங்களால் அடைகிற மனக்கசப்புகள்பற்றி எழுதி அனைத்திந்திய வானொலி நிலையத்தில் வாசித்த கவிதையின் நான்கைந்து வரிகளை கோபால் நினைவில் வைத்திருக்கிறான். இவர் சம்பந்தப்பட்ட விஷயங்களை கோபால் சொல்ல ஆரம்பிக்கும் தருணங்களில் எங்களுக்கு ஒருவிதமான மகிழ்ச்சி உருவாகும்.பிறரது அவமானங்களில் நமக்குண்டாகிற மகிழ்ச்சியான போதையின் சூட்சுமங்கள் எனக்கு அப்போது புரிந்திருக்கவில்லை.

கோபால் அந்த சினிமாக் கும்பலைக் கூட்டிக்கொண்டு நடந்தான். அவர்கள் கொண்டு வந்த ஒவ்வொரு சாதனத்துக்கும் பொறுப்புள்ளவனாக நடந்து கொண்டான். எப்போதுமே இருந்திராத வகையில் எந்திரத்தைப்போல உழைத்தான். அந்த சமயத்தில் அவன் புதிதாக வாங்கிப் போட்டிருந்த இரண்டு ஏற்றுமதிக்கான காட்டன் சட்டைகளின் பின்புறமும் அப்போது பார்க்க முடிந்த எல்லா தருணங்களிலும் நனைந்திருந்தது. முகத்தில் பதட்டத்தோடு காணப்பட்டான். தவற விட்டுவிட்ட பஸ்ஸை துரத்தி ஓடிப் பிடிக்கமுடியாமல் நிற்பது போன்ற பதட்டம்.ஒருமுறை தாழ்வான குரலில் உடம்பை கொஞ்சம் கவனிக்கக் கூடாதா என்று கூறினேன். அந்த வார்த்தைகள் அப்போது எந்த பயனுமற்றது என்று எனக்குத் தெரிந்தும் அப்படிக் கூற நேர்ந்தது. பரிதாபங்களுக்கும், அனுதாபப்பட வேண்டியவர்களுக்கும் நம்மால் உதவி செய்ய இயலாமல் போகும்போது கூற நாம் கைகளிலேயே வைத்திருக்கும் கையேந்தி வார்த்தைகளின் மாதிரிகள் தான் இவை. இவற்றிற்கு யாரும் காது கொடுக்க முடியாது. கோபாலும் அப்படியே. கோபால் அவர்களோடேயே போய் பெரிய கதாநாயகனாகி விடவேண்டும் என்கிற அற்பமான கனவுகளைக் கொண்டவனில்லை. என்றாலும் இது அவனது எண்ணங்கொண்டிருந்தான். கண்ணப்ப நாயனாரின் குடிசைக்கு சிவன் வர நேர்ந்தால் நாயனா எப்படி நடந்து கொண்டிருப்பாரோ அப்படி நடந்து கொண்டான். அங்கு வந்த சாதனங்கள் அந்த சாதனங்களின் நூதனங்கள் பற்றியெல்லாம் கோபால் சொல்லிக் கேட்கவேண்டும். அங்கு வந்திருந்த சன்னமான மெழுகுப்பொம்மை போன்ற நடிகையோடு அவன் பேசிய விஷயங்கள் உச்சகட்டமாயிருக்கும். ஒவ்வொருமுறை அவன் அதைச் சொல்லும்போதும் அதுவே உச்சகட்டமாயிருக்கும். ஏனைய விபரங்கள், அவன் சொல்லும்போது தடுமாறி, குழம்பி, அடுக்குகள் மாறிவரும், நடிகையோடு பேசியதுபற்றிச் சொல்லும் போது அவன், அவனது வாழ்வில் மிகச் சாதாரணமாக நடக்கக்கூடிய விஷயத்தை ஈடுபாடில்லாமல் ‍சொல்வதுபோல நமக்குத் தோன்றவேண்டும் ன்று நினைத்துக் கொண்டு சொல்வான். இந்த கோபால்தான் சினிமா நடிகர்களின் படங்கள் சேகரிப்புக்கு உறுதுணையாக நின்றது. அவனது உதவி என்னும் நினைவில் நிற்கக்கூடிய ஒன்று.

சினிமா நடிகர்களின் படங்களைச் சேகரிக்கத் துவங்கிய சில மாதங்களில் செந்தில்குமார் கொஞ்சம் திசைமாறிச் செல்வதுபோல ஒருகட்டத்தில் உணர்ந்தேன். இந்த திசைமாற்றம் அடிக்கடி அவனில் நிகழ்வதையும், ஒன்றிலிருந்து மற்றொன்றுக்குத் தாவிச் செல்வதையும் நான் அர்த்தத்தோடு கவனிக்கத் துவங்கியது இந்த சமயத்தில்தான். அந்த நடிகர்களுக்கு சம்பந்தபடாத குறிப்புகளைப் படங்களுக்குக் கீழே அவன் எழுதி வைத்திருந்தது எனது சந்தேகத்தை வலுப்படுத்தியது.அந்தக் குறிப்புகளின் மொழியே எனக்குப் புலப்படவில்லை. அந்த மொழியை அறியும் ஆர்வம் எனக்கு ஏற்பட்டாலும்கூட அறிமுகமில்லாத காட்டுக்குள் அவன் அழைத்துச் செல்வதுபோல இருந்தது. சினிமா நடிகர்களின் படங்களோடு ‍அரசியல்வாதிகள், பிரபல எழுத்தாளர்கள், பிரபல்யஸ்தர்கள் என்று அவனது சேகரிப்பு விரிந்த களமாகியிருந்ததையும் அந்த கவனிப்பில் தான் உணர்ந்தேன். ‍ஏதோவொரு திசை வழியே நோக்கி நுட்பமாக அவன் பயணிப்பதுபோல் எனக்குப்பட்டது. இதற்குமேல் அவன் உருவாக்க இந்த காலகட்டம்தான் துணை புரிந்திருக்கிறது என்பதை அந்த சமகாலத்தில் எனக்குப் புரிந்துகொள்ள முடியாமற் போயிற்று. முதன்முதலில் அவன் இந்த சேகரிப்புகளை வைத்து எழுதிய கட்டுரை வெளியானபோது தான் எனக்கு சில விஷயங்கள் பிடிபடத் துவங்கியது. அவனைப்பற்றி கொண்டிருந்த மெல்லிசான ஏழ்மையான சுருக்கப்பட்ட எண்ணங்கள் சுயஅருவருப்பை எனக்குள் உண்டாக்கியது. சுய அவமானத்துக்குள்ளானேன். ஒரு காட்டாறு ஏரியைக் கடந்து செல்கிற போது, ஏரிக்கு ஏற்படுகிற நிலை போன்றது அது. இவற்றையெல்லாம் மீறி ஏதேச்சையாய் அவனைப் பார்க்க நேர்ந்தபோதுதான் நெடுநாட்களாய் அவனைப் பார்க்காமலே இருந்திருக்கிறோம் என்பது தெரிந்தது. முகத்தில் கண்ட சுருக்கங்களும் கண்களை வட்டமிட்ட கறுப்புமாய் இப்போது அவன் முகம் என்னை அவனிலிருந்து விலகவைத்தது. எனக்கும் அவனக்குமிடையில் இவை ஒரு திரையை எனக்குள் விரித்துப் போட்டியிருந்தன.

அவனுக்கு முகங்கள்தான் எல்லாம். முகங்களிலிருந்து தான் பிறரைப்பற்றிய அவனது எண்ணங்கள் துவங்குகின்றன. கோடுகள், சுருக்கங்கள், கறுப்பு வளையங்கள், சிரிப்புகள் இவற்றை நுட்பமாகத் கவனிக்க அவனுக்கு வாய்த்திருக்கிறது. ஆரம்பத்தில் தபால் தலைகள் சேகரிக்கும்போது வகைப்படுத்திப் பழக்கிக் கொண்டதாலோ என்னவோ முகங்களை பல தினுசாக வகைப்படுத்தியிருந்தான். அவனது குறிப்புகளிலிருந்து அவனது வகைப்பாட்டுக்கான அர்த்தத்துக்கு எளிதில் வரமுடியும் எப்போதுபோல இருந்தது. அந்த அர்த்தங்களில் காணக்கிடக்கிற வெளிச்சம் நம்மை தூக்கி எறிவதுபோல இருக்கும். நம் வாழ்வில் அடிப்படைக் கனவுகளை முட்டையை உடைத்து தகர்ப்பதுபோல இருக்கும். நமது முகங்களைப் பார்க்க நம்மை தூண்டுவதுபோல இருக்கும். அந்த சமயத்தில் ஒரு சாயங்காலத்தில் அவன் வகைப்படுத்தி யிருந்த முகங்களை ஒவ்வொன்றாய் எடுத்துப் பிரித்துக்காட்ட ஆரம்பித்தான். மூளைக்கு குவிக்க வேண்டியிருந்தது. அவற்றைப்பற்றி அவன் பேச ஆரம்பித்தபோது என் இருப்பில் சந்தேசம் உண்டாவதை உணர்ந்தேன். நிறமற்று வெளிறிக் கொண்டிருப்பதுபோல இருந்தது. முகங்களைக் கழற்றிப் பிரித்துக் காட்டிக்கொண்டெ போனான். அவனது நடவடிக்கையில் விஞ்ஞானிக்குரிய நுட்பமும் மந்திரவாதிக்குரிய செயல்பாடும் கலந்திருந்தன. இருபது வகைமாதிரிகளுக்குள் இந்த முகங்களை வகைப்படுத்தி விட முடியுமா என்பதில்தான் தன் சிக்கல்கள் வந்து நிற்பதாகச் சொல்லி அவன் சிரித்த சிரிப்பு இன்றும் ஞாபகத்திலிருக்கிறது. அன்று அவனது சிரிப்பு எனக்குள் ஏற்படுத்திய உணர்ச்சிக் கொந்தளிப்பில் உன் முகத்தை வேண்டுமானால் இருபத் தொன்றாக வைத்துக் கொள் என்று உள் வெறுப்‍போடு கூறினேன். அதற்கு அவன் அது ஏற்கனவே இருபதுக்குள் வந்துவிடுகிறது. அதுவல்ல எனது பிரச்சினை என்று நிதானமாகக் கூறினான். அவனது பதிமூன்றாவது வகைமாதிரி சேகரிப்பில் எனது முகத்தைப் பார்த்தேன். அதில் எனக்கேற்பட்ட துன்பத்தை விளக்க இயலாது. அதில் எழுதியிருந்த குறிப்பைப் புரிந்தவகையில் சொல்வதுகூட எனக்கு சாத்தியமில்லை. என் இரும்பைச் சிதறடித்து விடக்கூடிய குறிப்பு அது. அவனது சேகரிப்பில் ஒரு வகையான உதட்டைப் பிரிக்காத பூரிப்பு கலந்த சிரிப்பு அவனைத் துன்பத்துக்குக்குள்ளாக்குவதை உணர்ந்தேன். உணர்ச்சி வயப்பட்ட நிலையில் அந்தவகை முகங்களை விவரிக்கிறான். அதில் நிறைய நம் அரசியல்வாதிகள், பிரபல்யஸ்தர்கள், பிரபல்ய எழுத்தாளர்கள் முகங்களே நிரம்பியிருந்தன. ரயில் விபத்தொன்றில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களைப் பார்த்து ஆறுதல் சொல்கிற ஒரு இந்திய தேசிய அரசியல்வாதியின் பூரிப்பை அந்தவகை மாதிரியின் முக்கியத் தடயமாக அடையாளப்படுத்தி வைத்திருக்கிறான். மனித சிரிப்புகளிலேயே இரத்த வேட்கைக் கொண்ட சிரிப்பு அது என்பதே அவனது குறிப்புகளிலிருந்து அறிய முடிகிற விஷயமாய் இருக்கிறது. நமது சகல துன்பங்களுக்கும் காரணமான சிரிப்பு அது என்று குறிப்பிடுகிறான். உலக மனநோய்களில் பல யுத்தங்களுக்கும், ஆபாசமான மரணங்களுக்கும் காரணமான மனநோய்க்கான தடயம் அதுதான் என்பதில் அவனுக்கு உறுதியான நம்பிக்கை இருக்கிறது. எனக்குத் தெரிந்த பிரபல்ய எழுத்தாளரிடம் எனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தைச் சொல்ல நேர்ந்தபோது அவர் முகத்தில் ஏற்பட்ட வேதியல் மாற்றத்தை ஞாபகப்படுத்தக் கூடியதாய் அந்த பூரிப்பு கலந்த சிரிப்பு இருந்தது. இன்னும் இதுபோன்ற பலமுகங்கள் எனக்கு அவனது இடங்களில் நின்று செய்து கொண்டிருந்ததுபோல எனக்குத் தோன்றியது. ஒரேயொரு வாய் மட்டும் பல திசைகளில் நின்று ஒலியெழுப்புவதுபோலத் தோன்றியது. சண்டையின் தாளகதியின்போது உருவான முகபாவங்கள் ஒரேயொரு வகைமாதிரியை மட்டும் நினைவூட்டக்கூடியதாகவே இருந்தது. ராகவனின் வசைகளையும் அப்பாவின் வசைகளையும் எப்படி எனக்குப் பிரித்தறிய முடியவில்லையோ அதுபோலவே ராகவன் மனைவியின் வசைகளையும் அம்மாவின் வசைகளையும் கூட பிரித்தறிய முடியவில்லை. ஒலியின் அதிர்வுகளும் ஏற்ற இறக்கங்களும் ஒரே மாதிரியானவை. மனசின் அழுகிய நாற்றம் பொட்டிச் சரிந்த ஒலிப்போட்டி. எனக்கு செந்தில்குமாரின் பிரபல்யஸ்தரின் முகங்களை இந்த சண்டையின்போது கண்ட முகக்கோணல்கள் அடையாளங்காட்டின. ராகவன் பரம்பரை பரம்பரையாய் சம்பவங்களை ஞாபகப்படுத்தி, அவரது ஒழுங்கில் அவற்றை அடுக்கிக் கத்தினார். அப்பாவின் பொறியாளர் பதவி தனது உபகாரத்தால் பொறப்பட்டது என்றார். எங்கள் வீட்டிலுள்ள பல பொருட்களும், பேண்ட், சட்டைகள் உட்பட சந்தேகத்துள்ளாக்கப்பட்டன. அப்பா நீ வேலை வாங்கி தந்தாயா, எனக் கேட்டு அதற்கெதிரான சான்றாதாரங்களை நிறுவினார். எல்லாம் வெக்கையைக் கூட்ட முயற்சித்தனவே தவிர வெக்கை தணிந்த பாடில்லை. ஒன்றிலிருந்து இன்னொன்று, மற்றொன்று என்று தாவி  உயரம் அதிகரித்துக் கொண்டிருந்தது. எனக்கு இருளும், மின்சார விளக்குகளும் கலந்த இருளில் இந்த முகங்களின் நிழலுருவங்கள் பெரிதாய் ஆடிக் கொண்டிருந்தது பயமூட்டும்படியாய் இருந்தது.

எங்கள் வீட்டுக்கு ராகவன் வீட்டிலிருந்துதான் கழிந்த மாதம் வரைக்கும் பால் வந்தது. திடீரென ராகவன் எங்கள் வீட்டுக்குமட்டும் பாலை நிறுத்திவிட்டதும் அதன் தொடர்ச்சியில் ராகவன் முகத்தில் கண்ட இறுக்கமும் பொட்டியதில் ஏற்பட்ட சண்டை இது என்றே எளிமைப்படுத்தி சுருக்கி நினைத்துக்கொள்கிறேன். அப்பா ராகவனுக்கு ஒரு கனவு என்பதையும் புரிந்தே இருக்கிறேன். ராகவனின் நடவடிக்கைகள் பெரும்பாலும் அப்பாவை பிரதிபலிக்கக்கூடியதாகவே இருக்கும். நடை உடை பாவனைகளிலிருந்து குழந்தை வளர்ப்பிலிருந்து சகலமும் குட்டி அப்பாவைப்போல இருக்கும். இதனாலேயே ராகவனின் மகனாகிய சுரேஷ் எனது முகசாயலை அடைந்து கொண்டிருப்பதுபோல எனக்குத் தோன்றுகிறது. எனது முகசாயலை உருவமாக தினசரி பார்க்க வேண்டிவருவதில் போதையும் உள்ளூர வெறுப்பும் எனக்குள் இருக்கிறது. சண்டையையும் வயது வித்தியாசமுள்ள இரண்டு அப்பாக்கள் போட்ட சண்டை என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். அப்பாக்களின் பரஸ்பர சண்டைகளைப் பார்த்து பயப்பட ஒருவேளை எதுவுமில்லாமல் கூட இருக்கலாம். எச்சில் உமிழ்வது, துண்டை உதறுவது, சன்னல்கள் அடைப்பது, சமிக்சைகளால் மனப் புண்ணில் பழுப்பு கசிவது போன்ற போராட்ட உத்திகளைப் பார்த்து பயப்படாமல் இருக்கவும் தெரியவில்லை. நியாயமாகப் பார்த்தால் இந்த நிகழ்வில் நானும் பங்கு பெற்றிருக்கவேண்டும். புறவயமான அசைவுகளோடும், ஒலிகளோடும். செந்தில்குமாரின் சேகரிப்புகளும் அவைபற்றிய குறிப்புகளும் எனக்குள் ஆற்றியிருந்த வேதி வினைகள் என்னை மெளனமான ஓவியமாக்கிவிட்டது. சொல்லப்போனால் இது செந்தில் குமாரின் ஓவியம். இந்த மெளன ஓவியங்களுக்கான இடமென்ன? ஓவியங்களைச்சுற்றி இப்படியான முகங்களே நிறுத்தப்படுகின்றன. ஓவியங்கள் தோற்று தளர்ந்து விழுகின்றன.

கழிந்த வருடம் புத்தளம் உயர்நிலைப் பள்ளியில் நான்காம் வகுப்பில் படித்த என் நண்பனின் பையன் நீக்கப்பட்டபோது அதற்கான காரணம் அவன் எழுதிய காதல் கடிதமாய் இருந்தது. நானும் நண்பர் துரையும் பள்ளி தலைமையாசிரியரைப் பார்க்கப் போயிருந்தோம். அவரும் எனக்கு இந்த முகத்தையே நினைவுப்படுத்தினார். ராஜியை ஒழுக்ககேடான பெண் என்று சொல்லி கல்லூரியை விட்டு விலக்கிய கல்லூரி முதல்வரும் இதே முகம்தான். என் அப்பாவும் ராகவனும்தான் பல இடங்களிலும் வேறுவேறு விதமான ஆடைகளுக்குள் இருப்பதுபோல தோன்றுகிறது. இருபது முகங்களைக் காண செந்தில்குமாருக்கு ஏற்பட்டிருக்கும் இழப்புகளையும், துன்பங்களையும் யூகிக்க ஒருமுகத்தை பல இடங்களில் காண நேர்ந்தபோது எனக்கு ஏற்பட்ட மனத்துன்பங்களே காரணமாய் இருக்கின்றன.

செந்தில்குமாரின் ஓவியங்களை அடிக்கடிக் கவனிக்கிறேன். எதுவும் அதிகமாய் அவனிடம் பேசும் தேவை தற்போது குறைந்து வருகின்றது. அவனது அறை சுற்றிச் சுற்றி பல கேன்வாஸ்களில் ஓவியங்களைத் தாங்கிக் கொண்டு, ஆவியால் நிரப்பப்பட்டிருக்கிறது. முன்பு போல, அவன் ஓவியங்களில் எழுத்துக் குறிப்புகள் எதுவும் தருவதில்லை. ஓவியத்திலேயே கோடுகள் மூலம் குறிப்புகள் செய்கிறான். அவன் ஓவியங்களைப் புரிய ஆரம்பத்தில் நான் எதிர்கொண்ட நெருக்கடிகளைவிட புரிதல் ஏற்படுத்திய நெருக்கடி பலமானதாயிருக்கிறது. மொத்தத்தில் அவன் ஓவியங்கள், கோடுகள், குறிப்புகள் எல்லாம் நமக்கு ஆதிகால ஓவியமாய் பழையதாய் தீர்ந்து தூசி படிய வேண்டுமென்றே தினமும் பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறேன். அவற்றையெல்லாம் இறந்த காலத்துக்குள் தள்ளி விட்டுவிட்டு பெருமூச்சு விட வேண்டும் போல இருக்கிறது.


புகைப்படம்  - ரகுராய்

அப்பச்சி காமராஜர் ...

அப்பச்சி காமராஜர் ... காமராஜ் பற்றி "நீயா நானா " விஜய் டிவி ஷோவில் பேசுவதற்காக ஆன்டனி ஒரு வாரம் முன்னதாக அழைத்தார்.நான் வர...