திடீரென ஒருநாளில் நாங்கள் பயங்கரவாதிகள் ஆக்கப்பட்டோம்

 கவிதைகள்

1

உனக்கு எவ்வளவு பெரிய தோள்கள்
நீ விரும்பியவாறெல்லாம் உன்மீது படர்ந்தேறும் காடுகள்
மயங்கும் மஞ்சு
உடலெங்கும் வெண்ணூற்றுச் சுனை
எவ்வளவு ரகசிய மிருகங்கள் ?
எவ்வளவு அர்த்தம் செறிந்த கர்வம் ?
மாமலையே போற்றி போற்றி
எனினும் உன்னை நான் அதிசயித்துப் பார்த்தால் தான்
நீ மாமலை
இல்லையெனில் ஒன்றுமில்லை
கர்வத்தில்
நினைவு
கொண்டிரு
வற்றாயிருப்பே

2

திடீரென ஒருநாளில் நாங்கள் பயங்கரவாதிகள் ஆக்கப்பட்டோம்
சமூக விரோதிகள் என்று பட்டம் சூட்டப்பட்டோம்
எப்போதும் போலவே எங்களுடைய வேலையைத்தான்
செய்து கொண்டிருந்தோம்
நிலங்களில் பயிரிட்டோம்
மீன் பிடிக்க கடலுக்குள்
சென்றோம்
திரும்பி வந்து பார்க்கும் போது
பயங்கரவாதிகள்
ஆக்கப்பட்டிருந்தோம்
துப்பாக்கிகள்
எங்களைக் குறி வைத்து
சுட்டன
போர் விமானங்கள் எங்களை சுற்றி
வட்டமிட்டன
போர் எங்கள் மீது
தொடங்கப்பட்டது

எங்களுக்கு முன்னரே கடல்களில் மீனும்
நிலத்தில் தாவரங்களும்
நாங்கள் பயங்கரவாதிகள்
ஆக்கப்பட்டதை
தெரிந்து வைத்திருந்தன போலும்
உங்கள் ஆயத்தப் பணிகள் ஏற்கனவே
தொடங்கியிருந்தன

நாங்கள் பயங்கரவாதிகள் ஆக்கப்பட்டதை
கண்முன்னால் நாங்களே
பார்த்துக் கொண்டு நின்றோம்
ஏற்கனவே பயங்கரவாதிகள் ஆக்கப்பட்டவர்கள்
அனைவரும் எப்படி பயங்கரவாதிகள்
ஆக்கப்பட்டிருப்பார்கள்
என்பதும் விளங்கியது

பயங்கரவாதிகள் ஆக்கப்பட்டபின்னரும்
எங்கள் வீடுகளில்
குழந்தைகள் பழையது போலவே
விளையாடிக் கொண்டிருக்கின்றன
எப்படி பயங்கரவாதிகள் ஆக்கப்பட்டோம் என்பதனை
அறியாத
குழந்தைகள்

போருக்கு வருவதற்கு முன்பாக எங்களை
பயங்கரவாதிகள் ஆக்கிவிட்டு வந்திருக்கிறீர்கள்
இப்போது போர்
உங்களுக்கு
மிக
எளிதானதாக
இருக்கிறது

இந்த நிலம் அந்நிய நிலமாக
ஆயிற்று என்பதை
பௌர்ணமியின் இறுக்கம்
பகிரங்கம்
ஆக்குகிறது

நாங்கள்
பயங்கரவாதிகள்தான் என்பதனை
மெல்ல உணரத் தொடங்குகிறோம்

துப்பாக்கியில் தோட்டாக்களுக்குப் பதிலாக
பயங்கரவாதிகள் என்ற ஒற்றை சொல்லை போட்டு
குறி பார்த்து
சுடத் தொடங்குகிறீர்கள்

எங்கள் ஆடைகள் பயங்கரவாத
ஆடைகள் ஆயிற்று
எங்கள் நிலா முற்றம்
பயங்கரவாத முற்றமாயிற்று
எங்கள் குழந்தைகள்
பயங்கரவாதிகளின் குழந்தைகள்
ஆனார்கள்
எங்கள் ஆடுகள்
பயங்கரவாத ஆடுகள்
ஆயிற்று
எங்கள் மாடுகள்
பயங்கரவாத மாடுகள் ஆயின

எங்கள் குலசாமிகள்
அத்தனையும்
ஒற்றைச் சொல்லில்
பயங்கரவாத சாமிகள்
ஆயிற்றே

3

ஒவ்வொரு கொலையின் போதும்
நானும் இணைந்துதான் கொலையில் பங்கெடுக்கிறேனோ என்கிற பிரேமையில்
கைகளை நன்றாக
அலம்புகிறேன்

குருதி முகத்தில் சிதறுகிறது

இதனைப் பார்த்து இருவர் பரிகசிக்கிறார்கள்
கொலையுண்டவனும் பரிகசிக்கிறான்
கொலை செய்தவனும்
பரிகசிக்கிறான்

கொலையுண்டவன் கைகளை அலம்பியதற்காகவும்
கொலை செய்தவன்
அவன் செய்த கொலைக்காக
எனது முகத்தில் படரும்
குருதியின்
தடத்திற்காகவும்

இந்த இருவரும்தான்
இங்கே எல்லாருமாக இருந்து
கொலைகளை
சமபங்கு வைத்து
எடுத்து கொள்கிறார்கள்

நானோ என்னைப் போன்றிருக்கும்
மூன்றாவது நபரின் கரம்
எப்போது வந்து நீளும் என
காத்திருக்கிறேன்

4

மருத்துவமனை தரை
அவ்வளவு வாளிப்பு
சுவர்களில் கலை ஒழுங்கு
நவீன ஓவியங்கள்
விரிப்புகளில் வேலைப்பாடுகள்

சுத்தத்தின் சிப்பந்திகள்
தொடர்ந்து நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்

காகிதத்தை பயத்தில் நழுவவிட்டால்
அக்கணமே காணாமல் போய்விடுகிறது
அது மேலும் பயத்தை உண்டாக்குகிறது
தண்ணீர் சிந்தினால் ஓடிவந்து
தேவதைகள் எடுத்தகற்றிச் செல்கிறார்கள்
நான்
சிந்திய தண்ணீரை தேடியபடி நிற்கிறேன்

தண்ணீர் ஹைஜீனிக்
பால் ஹைஜீனிக்
கடிக்கும் கொசுக்கள் ஹைஜீனிக்
டாய்லட் ஹைஜீனிக்

இவ்வளவு ஹைஜீனிக்
அவ்வளவு பதற்றம்

ஒரு பெருங்கறை போலும் நின்று கொண்டிருக்கும்
என்னை நோக்கி
மஞ்சள் பனியன் அணிந்திருக்கும் மருத்துவமனை
துப்பாக்கியை நீட்டிக் கொண்டிருப்பது போல இருக்கிறது
எனக்கு

5

எனது தனிமையை நான் வளர்க்கவில்லை
வேரில் விஷம் ஊற்றி வளர்ந்தது அது
சிறிதாக இருக்கையில் என்ன மரம் இது ?
என்று கேட்டார்கள்
பப்பாளியாக இருக்குமோ !
என்று பதில் சொன்னேன்
அதுபோல இல்லையே
இலைகள் வேறு தினுசு
பூக்கள் வேறு வகை
நிறமோ பச்சையில்லை
என்றார்கள்

பின்னர் இப்போது வளர்ந்து விட்டது அரசமரம் போலும் .
அரசமரம் இல்லையே
என்றேன் நான்
இரவில் கூடடையும் பறவைகள்
கருணை கசிந்து
பயந்த வண்ணம் அமர்ந்திருக்கின்றன
அவற்றுக்கு இது என்ன மரம் என்று தெரிந்திருக்கலாம் ,
எனக்கோ அந்த பறவைகள் எந்த பறவைகள்
என்பதின்னும்
தெரியவில்லை

இரவானால் உடல் முழுதும்
வந்தமர்ந்து கொள்ளுமிந்த
பறவைகளை

இத்தனைக்கும்
எல்லோருக்கும் மத்தியில்
அமர்ந்திருக்கிறது
வாகனத்தில் செல்கிறது
வண்டியோட்டுகிறது
தூங்குகிறது
பல் துலக்குகிறது
எல்லோரையும் போன்றே
இந்த
சிறு துளிக்காடு

6

மழைவீதியில் முதல்முறை சென்று வந்தேன்
குதிக்கும் துளிகளை கண்கள் பார்த்தனவே அன்றி
நான் காணவில்லை
எப்படி மழைவீதியை தவறவிட்டோம் என்றெண்ணி
மறுமுறை சென்றேன்
குதிக்கும் மழைத்துளிகளை அப்போது பார்த்தேன்
மழை நின்று போயிருந்தது

நின்று போயிருந்த மழையில்
நினைந்து ஊறும் ஒற்றைத்துளியில்
என்னைக் கூர்ந்து
கொல்வது போலும் பார்க்கிறது
மழைவீதியின்
சரக்கொன்றை

7

தனதுடலின் சமூகத்தை
பொதுவில் உடைக்கிறாள்
வேசி

இவள்

வேசியின் வழியில் அல்லாது
குடும்பப் பெண்ணின் ரூபத்தில்
தனது உடலில் ஒட்டி கொண்டிருக்கும் சமூகத்தை
மழைத்துளியை சாரலடிப்பது போல
பூவுதிர்க்கும் பெண்
தனதுலகத்தில் கால் பாவி
நடந்து வந்து கொண்டிருந்தாள்

தனதுலகத்தில் ஒளிரும்
அந்தியின் விளக்குகள்
தனதுலகத்தில் உடன் நடந்து வரும் தன் நிழல்
தனதுலகத்தில்
தன் கால் கொண்டு
நடந்து வந்து கொண்டிருந்தாள்

எப்படியுடைந்தது உனதுடலில் சமூகம் ?
எப்படி முளைத்தன
உனதுடலில் சிறகுகள் ?
எப்படி கண்டடைந்தாய்
உனது
சோடியம் விளக்கை ?

பொதுவில் நின்றுன் உடலை
உடைக்காது
ரகசியமாய் உடைக்க
எங்கு கற்றாய் ?

ஏராளம் கேள்விகளோடு
எதிரில் வந்த என்னை
இடித்து நின்றாள்
தன் உலகத்தில் தான் நடந்து வந்த
பிரக்ஞய்யுடன்

எனதுலகத்திலிருந்து நானும்
அவளுலகத்திலிருந்து அவளும் பார்த்த
நிலா
ஒன்றுபோலவேயிருந்தது

சேர்ந்து பார்க்கிறோம்
இரண்டு உலகத்திலிருந்து
முதல்
முறையாக
ஒரே நிலவை

இதுவரையில் பிறிதொரு நிலாவை
பார்த்துக் கொண்டிருந்தவள்
இவள்
என்றது
நிலா

8

அந்த மலை
உடம்பெல்லாம் புண்
மேற்கே வேதரத்னம் சாலை
வடக்கே புறம்போக்கு
தெற்கே
தூர்ந்த குளம்
கிழக்கில் சூரியன்
என்பதற்கு நடுவில்
தன் மேன்மை விட்டிறங்கி
இடம்பெயர்ந்து
வந்து
அமர்ந்து கொள்ளும் நாள்
இன்னும் வெகு தொலைவில்
இல்லைகவிஞர் கண்டராதித்தனுக்கு நல்வாழ்த்துகள்

குமரகுருபரன் - விஷ்ணுபுரம் விருது பெறும் கவிஞர் கண்டராதித்தனுக்கு நல்வாழ்த்துகள் 

எளிமையில் தன்மாற்றம் அடைந்த கவிஞன் கண்டராதித்தன்

"நீண்ட காலமாக ஒருவித விறைப்புத் தன்மையுடனேயே இருப்பவர்களைக் காணும் போது அச்சம் தோன்றி நிற்கிறது "

கண்டராதித்தன் கவிதைகள் ,சீதமண்டலம் ஆகிய இரண்டு கவிதைத் தொகுப்புகளைக் கடந்து கண்டராதித்தனின் திருச்சாழல் கவிதைத் தொகுப்பு வெளிவந்த போது அதன் முன்னுரையில் அவர் எழுதியிருந்த ஒரு வாசகம் இது.அந்த தொகுப்பில் மிகுந்த எளிமையுடன் வாசகனின் முன்பாக நின்று கொண்டிருந்தார்.எளிமையெனில் கவித்துவத்தின் மெருகு கூடிய எளிமை.முற்றிலும் அனுபவங்களின் முன்பாக நிர்வாண நிலையில் நிற்க தயாராக இருக்கிறேன் என அறைகூவல் விடுப்பது போன்ற எளிமை.தன்னையே உதறி அசையில் உலர வைத்திருப்பது போலும் எளிமை. அனுபவத்தின் ஞானம் அவர் கவிதைகளில் சாறு ஏறியிருந்தது.எளிமை அனுபவம் கவித்துவம் இம்முன்றும் சரியான விகிதத்தில் வெளிப்பட்டது, ஆச்சரியமூட்டியது. .

90 - களின் பிற்பகுதி என நினைவு விக்ரமாதித்யன் நம்பியுடன் கண்டராதித்தனைக் காண சென்றிருந்தோம் .அப்போது சுயவதையிலும் , வன்முறை மனோபாவத்திலும் சிக்குண்டவராக அவர் இருந்தார்.அதன் பேரில் மயக்கம் கொண்டவராகவும் கூட .அப்போது பெரும்பாலும் பின்னர் எழுத வந்த எங்களை போன்ற பல கவிகளும் அவ்வாறுதான் இருந்தோம்.அந்த பண்பு காலத்தின் பரிசு போல எங்களை ஒட்டிக் கொண்டு நின்றது.அவருடைய ஸ்டியோவில் ஏராளமான தொலைபேசிகளை அவர் உடைத்து பாதுகாத்து வைத்திருந்தார்.அப்போது அலைபேசிகள் அதிகம் இல்லை.எல்லாம் லேண்ட் லைன் தொலைபேசிகள்.அவற்றை எங்களிடம் எடுத்துக் காட்டினார்.புண்களை எடுத்து பிறருக்கு காட்டுவது போல காட்டிக் கொண்டிருந்தார். எனக்கு கோபம் வந்தால் இவற்றையெல்லாம் உடைத்து விடுவேன் என்று கூறினார்.கோபம் வருகிறது உடைக்கிறீர்கள் சரிதான்;அவற்றை எடுத்து ஒருவர் எதற்காக பாதுகாக்க வேண்டும் ? அவர் உடைத்து வைத்திருந்தது பற்றி கூட எனக்கொன்றும் இல்லை.இப்படி எல்லா புண்களையும் எடுத்து காட்டுகிறாரே இவர் என்று சங்கடமாக இருந்தது.மேலும் இவரை வந்து பார்க்கக் கூடாது என்று மனதிற்குள் முடிவு செய்திருந்தேன்.அப்படி முடிவு செய்தாலே மீண்டும் மீண்டும் சந்திக்க நேரும் போலிருக்கிறது. கண்டராதித்தன் கவிதைகள் வெளிவந்த காலத்தில் தொலைபேசி உடைத்தவன் அப்படியே அந்த கவிதைகளிலும் அமர்ந்திருந்தான்.சீதமண்டலத்தில் அவன் குழம்பிய நிலையில் இருந்தான்.அவன் தன்மாற்றம் அடைந்து நின்றது திருச்சாழல் கவிதைத் தொகுப்பில் . திருச்சாழலில் கண்டராதித்தனிடம் காணமுடிந்த தன்மாற்றம் மிகவும் விஷேசமானது. செவ்வியல்
தன்மையையும், புதுமையையும் அவர் இத்தொகுப்பில் அடைந்திருந்தார்.ஞானப் பூங்கோதைக்கு வயது நாற்பது,சாவைத் தள்ளும் சிறுமி,சோமன் சாதாரணம் ,அம்சம் ,மகளின் கண்ணீர்,அரச கட்டளை போன்ற கவிதைகள் அதற்கு உதாரணங்கள்.

சாவைத் தள்ளும் சிறுமி

தாளை வேகமாகத்
தள்ளிக் கொண்டிருந்த
சிறுமியிடம் கொஞ்சம்
மெதுவாகத் தள்ளக் கூடாதா என்றேன்
ஏன் நாளைத்
தள்ளுவது போல
இருக்கிறதா என்கிறாள்

நாளைத் தள்ளுவது
போலிருந்தால்
உங்களுக்காக ஒருமுறை
நிறுத்தட்டுமா என்கிறாள்
என்ன நிறுத்தத் சொல்லட்டுமா ?

நாளிற்கும்
தாளிற்குமிடையில்
சிந்தும் மலர்களை
நேரடியாக உங்கள்
சவக்குழியின் மீது
விழுவது போன்ற ஏற்பாடு .

அது என்னுடையது.

###

யூமா வாசுகி உட்பட முந்தைய தலைமுறை கவிஞர்களிடம் இருந்து காலம் எங்களிடம் வேறுவிதமாகத் திறந்திருந்தது.யவனிகா ஸ்ரீராம்,ஷங்கர் ராமசுப்ரமணியன் ,ஸ்ரீநேசன் , கண்டராதித்தன் ,பாலை நிலவன் ,பிரான்சிஸ் கிருபா என புதிய தலைமுறை எழுதத் தொடங்கியிருந்தது.முகுந்த் நாகராஜன்,பெருந்தேவி இருவரும் பின்னால் வருகிறார்கள்.ராணி திலக் தனதர்த்தங்களை கவிதையில் கண்டடைவதற்குப் பதிலாக வடிவங்களில் கவர்ச்சி செய்தார்.சபரிநாதனை இத்தலைமுறையின் மாதிரியாக கொள்ளத் தகுந்த தொடர்ச்சி எனலாம். யூமா வாசுகி சமகாலம்தான் ஆனால் அவர் முந்தைய தலைமுறை மனநிலையில் நின்றவர்.

எங்களிடம் பொது குணாம்சமாக அதிருப்தியும் ஆயாசமும் உண்டு.எங்களுக்கு முந்தைய தலைமுறை கவிஞர்கள் வரையில் அவர்களுக்கென்று சிறு அர்த்தங்களையேனும் வைத்திருந்தார்கள்.அவர்களின் தனிமை,துயரம் , காமம் ,ஆனந்தம் அனைத்திற்கும் தங்கள் அளவில் சிறிய அர்த்தங்களேனும் இருந்தன.ஆனால் காலம் எங்களிடம் வந்து தோன்றுகிற போது நாங்கள் அனைத்து அர்த்தங்களையும் சுத்தமாக இழந்திருந்தோம்.உடல் உள்ளீடற்றுப் போயிருந்தது. எங்களுக்கும் எங்கள் எதிரிகளுக்குமிடையே உள்ள அனைத்து வேறுபாடுகளும் அழிக்கப்பட்டிருந்தன . கொலையுண்டவனுக்கும் ,கொலையாளிக்கும் இடையில் உள்ள வேறுபாடுகள் அழிந்திருந்தன.வாழ்க்கை குலைவுற்றுக் கிடந்தது. காலம் அபத்தத்தின் ருசியை எங்களிடம் முழுமையாக அள்ளிப் பருகச் சொன்னது.முந்தைய தலைமுறை தங்களிடம் கொண்டிருந்தது கசப்பின் சுவை கொண்ட அபத்தத்தை எனில்; எங்களிடம் அது சுவையற்ற கோலத்தில் வந்து நின்றது.இதிலிருந்து எங்களுக்கான அர்த்தங்களை மீட்க வேண்டும் என்றிருந்தது வேலை.இதில் பெண்ணிய கவிஞர்களும் ,தலித் கவிஞர்களும் கொள்கைகளை வரையறை செய்து கொண்டு சாய்ந்து நின்றார்கள்.ஏற்று எடுக்க வேண்டியிருந்த சவாலை அவர்கள் அவற்றிடம் மறைத்துக் கொண்டார்கள் எனலாம்.

கண்டராதித்தனின் ஒருபகுதி செவ்வியல் தன்மை நிரம்பிய புதிய கவிதைகளால் ஆனது எனில் மறுபகுதி அனுபவங்களின் சாறும் எள்ளலும் நிரம்பிய சிறிய கவிதைகள்.இந்த கவிதைகளில் அவருடைய அனுபவ ஞானம் நின்று சுடர் விடுவதைக் காண முடியும்.இந்த குறுங்கவிதைகள் பிற சமகாலக் கவிகளிலிருந்து இவரைத் தனித்து அடையாளம் காட்டுகின்றன.குஞ்சுண்ணியின் தன்மையை போன்ற ,ஞான வாக்குகளை போன்ற அதேசமயத்தில் அதனினும் மேலானதாக இக்கவிதைகள் அமைகின்றன .

காட்டாற்று வெள்ளத்தின்
ஓரம் நின்று
கை கால் முகம்
கழுவிக் கொள்கிறான்
அயோக்கியன்
அவ்வளவு அயோக்கியத்தனமும்
அடித்துக் கொண்டு போனது
வெள்ளத்தில்

வெது வெதுப்பாக
நீரை விளாவி
கைகளை நனைக்கிறாய்
உன் யோக்கியதை
இரத்தத் சிவப்பாய் மாற்றுகிறது
தண்ணீரை

###

அம்மா ஓடிப்போனதை
அறியும் வயதுள்ள பிள்ளைகள்
திண்ணையிலமர்ந்தபடி
ஆள் நடமாட்டமில்லாத
தெருவை வெறித்து
வேடிக்கை பார்க்கிறார்கள்

###

நீலப் புரவியில் வந்தவன்
சொன்னான்
தோற்றுப் போனவனுக்கு
நண்பனாக இருந்தவன்
நாசூக்காய் அவனைக் கைவிட்டு
இப்பக்கம் வருகிறான்
முடிந்தால் ஓடிவிடு

###

துக்கம் நிகழ்ந்த நண்பகலது
வெய்யிலும் சோம்பலும்
மிகுந்து கிடக்க
மரவட்டையைப் போல
இந்த மத்தியானம்
தன் லட்சோப
லட்சக் கால்களுடன்
மறுநாள் மத்தியானத்திற்குள்
போனது

இந்த வகையான அனுபவ ஞானம் கொண்டு கவியுருக் கொள்ளும் குறுங்கவிதைகள் கண்டராதித்தனின் முக்கியமான இடம் எனலாம்.பிற கவிகளுக்கு சாத்தியப்படாத இடம் இது.தமிழில் உருவான புதிய தலைமுறை கவிஞர்களில் யவனிகா ஸ்ரீராமைத் தவிர்த்து பிறர் எல்லோருமே எளிமையானவர்கள்தாம்.முந்தைய தலைமுறை கவிகளிடம் இருந்த செயற்கையான மேதமையும் , புதிரும் , புகையும் இவர்களிடம் இல்லை.அன்றாட வாழ்க்கையில் இருந்து அர்த்தங்களை மீட்க முயன்றவர்கள் இவர்கள்.இவர்களில் கண்டராதித்தன் மேலும் எளிமையானவர். அற்புதங்களை நிகழ்த்தும் எளிமை கொண்ட கவிதைகள் இவருடையவை.குமரகுருபரன் , விஷ்ணுபுரம் விருது பெறும் அவருக்கு என்னுடைய நல்வாழ்த்துகள்.

எளிமை கண்டராதித்தனில் அடையும் விந்தைக்கு நற்சான்றாக ஒரு கவிதையைக் குறிப்பிடலாம் எனில் "வாரச் சந்தைக்கு காய்கறி வாங்க வந்த பெண்ணிற்கு" கவிதையைச் சொல்வேன்.அனைத்திலும் மேலானது இக்கவிதை.

###

வாரச்சந்தைக்கு காய்கறி
வாங்க வந்த பெண்ணிற்கு
நான்கைந்து பிள்ளைகள்

நாலும் நாலு திசையை
வாங்கித் தர கைகாட்டின .

அவள் கைக்குழந்தைக்கு
பொரியுருண்டை வாங்கித் தந்தாள்

பொடிகள் பின்னே வர
பொரியுருண்டை கீழே விழுந்து
பாதாளத்தில் உருண்டது

ஏமாந்த குடும்பம் எட்டிப் பார்க்க
பாதாள பைரவி மேலெழுந்து
குழந்தையின் கன்னத்தைக் கிள்ளி
நல்ல சுவை நல்ல சுவை என
நன்றி சொன்னது

போராட்டங்கள் பற்றி...

போராட்டங்கள் பற்றி...

எந்த சமுதாயம் பொருளாதாரத்தில் தங்கள் நிலை எழும்பிய பின்னரும் அரசியல் அதிகாரம் பெறுவதில் பின்னடைவு கொண்டிருக்கிறதோ ,அந்த சமுதாயமே இந்திய சமூகத்தில் போராடுகிறது.அனைத்து சமூக மக்களின் சம நிலையான அரசியல் அதிகார பங்கேற்பிற்கும் ,வளர்ச்சிக்கும் போராட்டங்கள் இந்தியாவில் தொடர்ந்து தேவையாகவே இருக்கின்றன.போராட்டங்களை இழிவுபடுத்தும் போது ,இழிவு படுத்துவோருக்கு பிற சமுதாயங்களின் நலங்கள்,வளர்ச்சி ,அரசியல் உறுதித்தன்மை ஆகியவற்றின் பேரில் நம்பிக்கையில்லை  என்பதே தெளிவாகிறது.ஐம்பது வருடங்களுக்கு முன்னர் பிற்படுத்தப்பட்டோரும் ,அதற்கு சற்று மேம்பட்ட நிலையில் இருந்த சாதியினரும் போராடினார்கள் என்றால் இப்போது தலித்,மீனவர்கள் , சிறுபான்மையோர் ஆகியோர் இந்தியாவில் போராட வேண்டியிருக்கிறது.இப்படியில்லாமல் இந்தியாவில் சமநிலை சாத்தியமில்லை என்பதே நிதர்சனம்,உண்மை நிலை. போராடும் மக்களின் அரசியல் அதிகாரத்தை வெறுப்பவர்களே தொடர்ந்து இந்தியாவில்  போராட்டங்களை இழிவுபடுத்துகிறார்கள்.

இந்தியா முழுவதிலுமுள்ள நிலை ; ஒரு சமூகம் வளர்ச்சியடையும் போது ; பிற சமூகங்கள் பல அதற்கு கீழே கீழே என்று இருக்கின்றன.போராடி அரசியல் உறுதித்தன்மையை அடைந்த சமூகங்கள் பின்னர் போராடுவதில்லை.பின்னர் அவை வளர்ச்சியுற்ற சமூகங்களுடன் இணைகின்றன.பிறரின் போராட்டங்களை இழிவுபடுத்த தொடங்குகின்றன .இன்று பிற்படுத்தப்பட்ட  சாதியினர் தங்கள் வகித்த கடந்த கால போராட்டங்களை மறந்து உயர் சாதியினருடன் அங்கம் வகிக்கிறார்கள் .இந்தியாவில் பெருவாரியான மக்கள் குழுமமான பிற்படுத்தப்பட்டவர்கள் போராட்டங்களை இழிவுபடுத்துவதன் காரணமாக அதன் சப்தம் உரத்துக் கேட்கிறது.போராட்டங்களை இழிவுபடுத்தும் குரல்களின் சமூகக் காரணிகளை ஆராய்ந்தால் இந்த உண்மை பட்டவர்த்தனமாக விளங்கும்.

ஐம்பது  வருடங்களுக்கு முன்னர் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்த இணைப்பு போராட்டமாக இருந்தாலும் சரி ,பிற போராட்டங்களாக இருப்பினும் சரி ; அதனை முன்னின்று நடத்தியவர்கள் பெரும்பாலும் நாடார் சாதியைச் சார்ந்தவர்கள்.நாஞ்சில்  நாட்டு வெள்ளாளர்களுக்கு ஆரம்ப காலங்களில் போராட வேண்டிய தேவை இருந்தது.அவர்களும் இத்தகைய போராட்டங்களில் குறைவான அளவிற்கு இணைந்திருந்தார்கள்.விவசாயக் கூலிகளாக இருந்த நாஞ்சில் நாட்டின் வெள்ளாளர்களின் ஒருபகுதியினரே ஜீவா பிரநிதித்துவம் செய்த கூலி வெள்ளாளர்கள்.அவர்களுக்கும் அன்று போராடும் தேவை இருந்தது.பிரச்சனை என்னவென்றால் தங்கள் சமூகங்களுக்கு அரசியல் உரிமைகள் ,உறுதி நிலை ஏற்பட்டபிறகு பிற சமூகங்களுக்கு அது தேவையற்றது என்றே இங்கே சகல சாதியினரும் நினைக்கிறார்கள்.

"நாங்கள் போராடும் போது எங்கே போயிருந்தீர்கள் என்று குரல் கேட்கிறதல்லவா ?" அது சாதியின் குரல்.இங்கே அப்படித்தான் இருக்கும் . இதுவொரு யதார்த்த நிலை.இதனை மறக்க தேவையில்லை.போராட்டங்களில் சாதிய உள்முகம் இருப்பதை புரிந்து கொள்ள வேண்டும்.போராடி ஒரு சமூகத்தின் அரசியல் அதிகாரத்தை உறுதிப்படுத்துகிறவனே இங்கே அந்த சமூகங்களின் மக்கள் தலைவன் ஆகிறான்.

பொதுவாக அரசியல் உரிமைகள் மற்றும் அதன் உறுதித்தன்மை ஆகியவை ஒரு நாட்டில் தானாகவே வந்து சேர வேண்டியவை.ஆனால் இந்தியாவில் அவ்வாறு நடப்பதில்லை.அப்படியானால் போராட்டங்களும் ஒரு சமூகத்தின் வளர்ச்சிப் போக்கில் ஒரு கருவியாக விளங்குவதை தடை செய்ய இயலாது.அது மிகவும் முக்கியமானதொரு செயல்.வளர்ச்சி நிலையை அடைந்த சமூகங்கள் பிற சமூகங்களின் போராட்டங்களை கொச்சைப்படுத்துவது மிகவும் துரஷ்டவசமானது.

போக மாணவர்கள் ,எழுத்தாளர்கள் போன்ற தரப்பினரும் மக்களுடன் இணைந்து போராடும் நிலை ஏற்படுகிறதென்றால்  ;அந்த அரசு ஜனநாயகத்தை இழந்து இழிநிலை அடைய தொடங்குகிறது என்பதே அர்த்தம்.அது அரசுக்குத்தான் இழிவே அன்றி போராடுபவர்களுக்கல்ல.

நமது அரசுகளை இருதயசுத்தியை நோக்கி நகர்த்த வேண்டியது மிகவும் முக்கியமான பணி.நமது எல்லோருடைய அரசியல் குரல்களும் இன்று பொய்மைகள் நிறைந்திருக்கின்றன.அவை வேறு வேறு காரணங்களுக்காக குரல்களை எழுப்புகின்றன.உண்மை சார்ந்தது பேசத் தொடங்குபவர்கள் அரசியலில் பங்கேற்பது வரையில் இந்தியாவில் தீமையை யாரும் அகற்ற இயலாது.

ஞானமும் சன்னதமும் ஒருங்கே அமையப் பெற்ற கவிஞன்

கண்டராதித்தன் -"ஞானமும் சன்னதமும் ஒருங்கே அமையப் பெற்ற கவிஞன்"  


"நீண்டகாலம் நண்பனாக இருந்து 
விரோதியானவனை வெளியூர்
வீதியில் சந்திக்க நேர்ந்தது 
பதற்றத்தில் வணக்கம் என்றேன் 
அவன் நடந்து கொண்டே 
கால்மேல் காலைப்
போட்டுக் கொண்டே போனான்."

- கண்டராதித்தன்

நவீனத்திற்குப் பிந்தைய தமிழ்க்கவிதை அடைந்திருக்கும் நெகிழ்வான பாய்ச்சலுக்கு ஒரு நற்சான்று திருச்சாழல்.இப்படி ஒரு கவிஞன் தோன்றுவதற்காகத்தான் தொடர்ந்து மொழியில் விமர்சனங்களும் கவிதை தொடர்பான குறைகளும் அல்லற்பட்டுக் கொண்டேயிருக்கின்றன . வேறு எதற்காகவும் இல்லை.கவியின் பன்மைத்தன்மையின் சுய வியாபகம் சூழ்ந்த மொழி, மனப்பரப்பின் மீது தனது பாய்ச்சலை நிகழ்த்தும்போது குறைகளுக்கு அவசியம் இல்லாமற் போகிறது.திருச்சாழல் தமிழ் கவிதைப்பரப்பில் கவிதை மீது நிகழ்ந்திருக்கும் மாயம்.பன்முகத்தன்மையும் , அனுபவமும் , பகடியும் ஒரு கவியின் மொழியில் சஞ்சரிக்கும் போது என்ன நிகழ்கிறது ? அது எவ்வண்ணம் உருமாற விளைகிறது ? என்பனவற்றை அனுபவரீதியாக நம்மை கொண்டு நெருங்கித் தேற்றும் பிரவாகம் திருச்சாழல்.ஒரு மொழியில் கவியின் பாத்திரம் என்ன என்பதை உணர்த்தும் அசல் கவியின் குரல் .

அசலான ஒரு கவிஞனுக்கும் ; கவிதை எழுத முற்படுபவர்களுக்கும் அல்லது கவிதையில் பிரயாணம் மேற்கொள்பவர்களுக்கும் இடையே பெருத்த இடைவெளியும் வேறுபாடும் உண்டு.அவை என்ன என்ன ?என்பதை அறிவதற்கு இப்படி ஒரு கவிப்பிரவேசம் தேவைப்படுகிறது.இதுவே வடிவமாக அந்த வேறுபாட்டை நாம் அறிந்து கொள்ள உதவுகிறது.கவிதை எழுத முற்படுதலிலிருந்தும் பிரயாணப்படுதலிலிருந்தும்தான் கவியின் தரிசனங்களுக்கும் வந்து சேரவும் முடியும்.கண்டராதித்தன் தனது தரிசனங்களை நம்மிடம் கொண்டு வந்து சேர்த்திருக்கும் தொகுப்பு இது.

ஞானப்பூங்கோதைக்கு நாற்பது வயது,அரசகட்டளை,நீண்ட கால எதிரிகள்,வம்ச கீர்த்தி , அம்சம்,திருக்கோலம்,சோமன் சாதாரணம் போன்ற இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் நித்தியத்துவம் பெறுபவை.அமரர் பெரும்பேறு.சிறு கவிதைகளில் கண்டராதித்தனுக்கு அமையப் பெற்றிருக்கும் வல்லமையை வரம் என்கிற வார்த்தையால் அன்றி வேறு வார்த்தைகளில் சொல்லுதல் இயலாது.பின்நவீன கோலங்களால் நிறைந்த கவிதைகள் இவை.

காட்டாற்று வெள்ளத்தின்
ஓரம் நின்று 
கைகால் முகம் 
கழுவிக் கொள்கிறான் 
அயோக்கியன்
அவ்வளவு அயோக்கியத்தனமும்
அடித்துக் கொண்டு போனது வெள்ளத்தில்.
*
சந்தரப்பவாதமும் 
அயோக்கியத்தனமும்
நல்லநண்பர்கள்
வேண்டுமானால் 
இரண்டு நல்ல 
நண்பர்களை உற்றுக் 
கவனியுங்கள்
*
வாரச்சந்தைக்கு காய்கறி
வாங்க வந்த பெண்ணிற்கு
நான்கைந்து பிள்ளைகள்.
நாலும் நாலுதிசையை
வாங்கித்தர கைகாட்டின.
அவள் குழந்தைக்கு
பொரியுருண்டை வாங்கித்தந்தாள்.
பொடிசுகள் பின்னேவர
பொரியுருண்டை கீழே விழுந்து 
பாதாளத்தில் உருண்டது.
ஏமாந்த குடும்பம் எட்டிப்பார்க்க
பாதாளபைரவி மேலெழுந்து
குழந்தையின் கன்னத்தைக்கிள்ளி
நல்லசுவை நல்லசுவை என
நன்றி சொன்னது.
*
நீலப்புரவியில் வந்தவன்
சொன்னான்
தோற்றுப் போனவனுக்கு 
நண்பனாக இருந்தவன்
நாசூக்காய் அவனைக் கைவிட்டு
இந்தப்பக்கம் வருகிறான்
முடிந்தால் ஓடிவிடு .
*
இது போன்ற இவரது சிறுகவிதைகள் அனுபவங்களின் சாறு படிந்தவை
நவீனத்தின் கச்சிதமும்,அழகும்,வலியும் கொண்ட "மகளின் கண்ணீர் " அபூர்வமானதோர் நவீன கவிதை.சுய எள்ளலும் , பகடியும்,தரிசனங்களும் இவரது கவிதைகளை எழுச்சியடையச் செய்கின்றன.இத்தொகுப்பின் மூலம் கண்டராதித்தனும் , திருச்சாழலும் தமிழ்க்கவிதையின் பரப்பில் நிலையானதொரு பேறு பெறுகின்றனர் .ஒப்பீடுகளுக்கு அப்பாற்பட்ட கவிஞனின் தொகுப்பு இது.

மகளின் கண்ணீர்

நான் பொருட்படுத்தத் தேவையில்லாத 
கணத்திலொன்றுதான் அது
வாகனத்தில் வந்தவன் தவறி
என் மீது மோதியிருந்தான்
பெரும் பிழையில்லை
மன்னிக்கக் கூடியதுதான் ஆனால் 
இது பிழையென அறியாத 
குறுஞ்சினத்துடன்
பார்த்து வரக்கூடாதா என்றேன்.
ஓங்கி ஒரேயொரு குத்து 
முகத்தில் ரத்தம் வழிகிறது
கீழே கைவிரலைப் பிடித்தப்படியிருந்த 
மகள் அண்ணாந்து பார்க்கிறாள்
பிறகு சுற்றும் முற்றும் திரும்பிப் பார்க்கிறாள்
அந்த கணத்தைப் பார்த்தவர்கள் 
கடந்து கொண்டேயிருக்க 
என் மூன்றே வயதான மகள் அழக் கூடுமென
நினைத்தேன் அளவில்லை
நானிந்த நகரத்தை விட்டு அகல எத்தனித்தேன் 
காற்று சலசலக்க பேருந்து சென்றது
எனக்கோ மகளின் சாந்தம் மாளாதிருந்தது
திடீரென விழித்து முகத்தைப் பார்க்காமல் 
காயத்தை வருடினாள்
இப்போது இடதுபக்கத் தோளில் படர்கிறது
வெதுவெதுப்பான மகளின் கண்ணீர்
என் தாளாத குமிழொன்று தளும்பிக் கொண்டே 
வீடு போகிறது.


" படிகம் " நவீன கவிதைக்கான இதழ் - அக்டோபர் - 2015"

கடற்கரை கிராமங்கள் சிறை வைக்கப்பட்டுள்ளன.

கடற்கரை கிராமங்கள் சிறை வைக்கப்பட்டுள்ளன.


இன்று காலையிலேயே வழக்கத்திற்கு மாறாக கன்னியாகுமரி மாவட்டம் விடிந்தது.கடற்கரைகளில் இருந்து வர வேண்டிய பேருந்துகள் வரவில்லை.பின்னர் இடைகிராமங்கள் வரை சென்று கடற்கரைகளைத் தொட்டு விடாமல் திரும்பும் வண்ணம் மாவட்ட நிர்வாகம் போக்குவரத்தில் மாற்றம் செய்துள்ளது.காவல் வளையங்கள்.
மீறி பேருந்துகளில் ஏறுகிற கடற்கரை மக்கள் காவலர்களால் இறக்கி விடப்படுகிறார்கள்.இது என்ன வகையான ஒடுக்குமுறை என்பதே விளங்கவில்லை.ஊடகங்கள் இதனை பொருட்படுத்தாமல் இருக்கின்றன.
மணக்குடிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ள சரக்கு பெட்டக துறைமுக வேலைகளுக்கு எதிராக மக்கள் இன்று; மாவட்டத்து தலைநகரான நாகர்கோயிலுக்கு சென்று மனு கொடுக்கவிருக்கிறார்கள் என்பதனை முன்னிட்டு இந்த நடவடிக்கை.கடலோர கிராமங்களை சிறை வைக்கும் நடவடிக்கை.பொய் வழக்குகள்,தனி மனிதர்களை சிறை வைத்தல் போன்ற நடவடிக்கைகளை மிஞ்சும் விதத்தில் இந்த அரசின் கடலோர கிராமங்கள் சிறை வைப்பு நடவடிக்கை .அரசின் அடக்குமுறைகள் நாள்தோறும் புதுப்புது வடிவங்களை அடைந்து வருவதற்கு சான்று இந்த நடவடிக்கை.இது அப்பட்டமான மக்கள் விரோதம் என்பதில் யாதொரு ஐயமும் இல்லை.
இந்தியாவில் வளர்ச்சியின் பெயரால் கொண்டு கொட்டப்படும் திட்டங்கள் அனைத்துமே ;அந்த பகுதி பூர்வீக குடிமக்களை அழித்து அவர்கள் இருந்த இடத்தில் வெளியிலிருந்து வருகிற நவீன குடிகளை அமர்த்தும் காரியமாகவே உள்ளது.அடிப்படை முரணும் சிக்கலும் எழுகிற இடம் இதுவே.வந்து சேரவிருக்கிற நவீன குடிகளின் கூலியாட்களாக பூர்வீகக் குடிகள் உருமாற்றமடைகிறார்கள்.கூலியாட்களாகவேனும் உருமாறும் தகுதியை அவர்கள் பெற்றிருக்கவில்லையானால் .கேளிக்கை பொருட்களாகவேனும் மாறும் திறனை அவர்கள் கொண்டிருக்க வேண்டும்.வெளியிலிருந்து வருவோருக்கு முன்பாக நடனமாடிக் காட்ட வேண்டும்.
இந்தியா பிற வளர்ச்சியடைந்த நாடுகளின் பண்புகளை கொண்ட தேசமல்ல.பல கலாசாரம்,பல்வேறு விதமான சமூகக் காரணிகள் நிறைந்தது.இந்தியா பல்வேறு திறத்திலான தொகுப்பு மனிதர்களின் குடியிருப்புகளால் நிறைந்தது.இங்கே ஒரு குடியிருப்பை அழித்து பிறிதொரு குடியிருப்பை ஸ்தாபிக்கிற எல்லாவிதமான முயற்சிகளும் ஆதிக்க முயற்சிகளே.இப்படித்தான் தூத்துக்குடி போன்ற நகரங்கள் இப்போது நமக்கு அந்நிய நகரங்களாகியிருக்கின்றன.
இந்தியாவில் வளர்ச்சி என்ற வார்த்தை அர்த்தம் பெற வேண்டுமாயின் பூர்வீகக் குடிகளை மேம்படுத்தி ;அவர்களை நவீன குடிகளாக மலர்ச்சி செய்வதில் மட்டுமே இருக்க முடியும்.அப்படியல்லாத வளர்ச்சியென்பது வேறு வேறு காரணிகளுக்கான பாசாங்குகள்.
துறைமுகம் வந்தால் வேலை கிடைக்கும் அல்லவா ? என்று கேட்கிறார்கள்.உனக்கு வேலை கிடைப்பதற்காக நாங்கள் எதற்காக சாக வேண்டும் ? ராஜஸ்தானில் உள்ள ஒருவனுக்கு வேலைகிடைப்பதற்கு ,பிகாரில் உள்ளவனுக்கு வேலை கிடைப்பதற்கு எங்கள் தலை எதற்காக மொட்டையிடப் படவேண்டும் ?
இங்கே பூர்வீகமாக வாழும் சமூகத்தை அழித்து ;அதில் நவீன சமூகத்தை குடியமர்த்துவதை வளர்ச்சியென குறிப்பிடுவார்கள் எனில் அதனோடு வலுக்கட்டாயமாக வல்லுறவு கொள்ளுமாறு எங்களை எதற்காக நிர்பந்தம் செய்கிறீர்கள் ?
சென்னைக்கு ஒரு மணிநேரத்தில் வந்தே சேர வேண்டிய ஒரு அவசியத்திலும் எங்கள் மக்கள் இல்லை.எங்களுக்கு எதற்காக விமான நிலையம் ?
விபத்தென்னும் பெயரால் இந்த சாலைகளில் தினமும் இருபதுக்கும் மேற்பட்ட எங்கள் மக்கள் கொல்லப்படுகிறார்கள்.விபத்திற்குள்ளாபவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகம் .எலும்பு முறி மருத்துவமனைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன.டிப்பர் லாரிகள் எங்கள் குழந்தைகளை பயமுறுத்துகின்றன.
துறைமுகம் அவசியம்,அணுவுலை அவசியம் , உனக்கு வளர்ச்சி அவசியம் என்றால் அதனை உனது ஊரில் நிறுவு. யார் வந்து கேட்க போகிறார்கள் ?
எனது தலைகளின் மேலேயுனக்கு விமான பயணமா ?
உனது குறியின் வளர்ச்சி உன்னிடம் இருக்கட்டும் .என்னிடம் கொண்டு அதனை நீட்டாதே...
கிராமங்களை சிறை வைத்து நடைபெறுகிற வளர்ச்சி இங்கே யாருக்காக ?
வன்மையான கண்டனங்கள்

உங்களைச் சுற்றிலும் அமைதி நிலவட்டும்

உங்களைச் சுற்றிலும் அமைதி நிலவட்டும்

பாலகுமாரன் உதவி இயக்குனர்களைப் பற்றி ஏதோ  தவறுதலாகச் சொல்லிவிட்டார் என்று ; சேரன் தலைமையில் ஒரு சமயம் பாலகுமாரன் வீடு  நோக்கிப் படையெடுத்துச் சென்றார்கள்.அப்போது சேரனை நோக்கி கண்ணீரோடு இருகை கூப்பித் தொழுது மன்னிப்பு கேட்கிற அவருடைய  புகைப்படம் ஒன்று பத்திரிகைகளில் வெளியாகியிருந்தது.அந்த புகைப்படம் என்னை அந்த நேரத்தில் மிகவும் கதிகலங்கச் செய்தது.ஒரு எழுத்தாளன் அப்படி நிற்கும் நிலையை ஒருபோதும் ஏற்படுத்தக் கூடாது .சேரனுக்கும் பின்னர் அதுபோல பொதுவில் கதிகலங்கி கண்ணீரோடு நிற்கும் சந்தர்ப்பம் வந்தது.இரண்டினையும் இந்த சந்தர்ப்பத்தில் தொடர்புபடுத்தவில்லை . ஆனால் இச்சந்தர்ப்பத்தில் நினைவுக்கு  தவிர்க்க இயலவில்லை . மறைய மறுத்து...அந்த புகைப்படமும் எனது மனதில் பதிந்திருக்கிறது.எழுதுகிறவனுக்கு இது போன்ற தண்டனைகளை சமூகம் ஒருபோதும் தரக்கூடாது.அது நிச்சயமாக நல்லதல்ல என்று நினைப்பவன் நான் .

அவருடைய பக்தியெழுத்துக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.எந்த பிரபல இதழிலோ, சாதாரண பக்தி அல்லது ஜோதிட இதழ்களிலோ கட்டுரைகள் வெளியாகியிருந்தாலும் கூட அவற்றில் ஒன்றிரெண்டு வரிகளில்  மேலான தளத்திற்கு வாசகனை கொண்டு செலுத்த பாலகுமாரன் தவறியதில்லை.இந்த வகைப்பட்ட எழுத்துக்கள் வழியாகவே எனக்கு அவரை அறிமுகம்.யோகி ராம் சூரத்குமாரை நெருங்கியுணர்ந்தவர்.அவருடைய பூஜையறையில் அவரே விரிந்திருந்தார்.

விக்ரமாதித்யன் நம்பி ஒருமுறை என்னை பாலகுமாரன் வீட்டிற்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்பு.பூஜையில் தன்னையிழந்த மனமற்ற நிலையில் உருகி அமர்ந்திருந்தார்.அந்த முன்னறையில் நறுமணப் புகை மூட்டம்.அம்மைகள் அருகிலிருந்தார்கள். அப்போது என்னுடைய "எதிர்ப்புகள் மறைந்து தோன்றும் இடம் " கவிதைத் தொகுப்பு சந்தியாப் பதிப்பக வெளியீடாக வந்திருந்த சமயம்.நம்பி அதனை அவருக்குத் தருமாறு சொல்ல பாலகுமாரன் கையில் கொடுத்தேன்.ஒரு மகானிடம் தருகிறோம் என்கிற பக்தியுடன் கொடுத்தேன்.பூஜையிலிருந்தே ஐநூறு ரூபாய் எடுத்து கையில் கொடுத்து சிறந்த கவியாக வருவாய் என்று கூறி வாழ்த்தினார்.இந்த பணம் உன்னை எந்த நிலையிலும் பசிநேராமல் காக்கும்.என்னுடைய குரு உனக்கு இதனைத் தருவதாக நினைத்து எடுத்துக் கொள் என்றார் .அந்த பணத்திற்கு ஒரு சக்தியிருப்பதை இப்போது வரையில் உணர்கிறேன்.அது பசி காக்கிறது. அது எங்கோவொரு வற்றாயிருப்பிலிருந்து என்னை வந்தடைந்தது.அது ஒருபோதும் என்னிடம் தீருவதேயில்லை.குரு நேரடியாக பணத்தை கையில் கொடுப்பது அனாதைகளுக்கு மட்டுமே என்பதை இங்கே எத்தனை பேர் அறிவார்கள் ?

எல்லோரும் வந்து சேர வேண்டிய இடத்திற்கு சற்று முந்திச் சென்றிருக்கிறீர்கள் .நன்று      

ஊட்டி காவிய முகாம் மூன்று நாட்கள்

ஊட்டி காவிய முகாம் மூன்று நாட்கள்

"பெருவனத்திடம் விடைபெற்று திரும்புகிறேன்
வனம்
விட மனமின்றி
காட்டுமாட்டின் ரூபத்தில்
பனிப்புகை மூட்டமாய்
பின்தொடர்ந்து வருகிறது
சிறுபொட்டாய் எனை எடுத்து
அதற்கொரு திலகமிட்டேன்
நாளைய புலரி திலகமிட்ட வண்ணம் உதிக்கும்
இவ்வனத்தில்
வனம் முளைக்கும்
என் முற்றத்தில்
திலகமும் வனமும்
இருவேறிடங்களில்
இருந்தாலும் "


விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் கழிந்த மூன்று தினங்களில் ஊட்டியில் ஏற்பாடு செய்திருந்த காவிய முகாமில் முழுமையாகப் பங்கேற்றேன்.இப்போது நடைபெறுவது 25 ஆவது முகாம் என்று சொன்னார்கள்.சில காலங்களுக்கு முன்பிருந்தே பங்கேற்றிருக்கலாம் என்கிற எண்ணம்; இப்போது கலந்து கொண்ட போது தோன்றியது.அவ்வளவிற்குச் சிறப்பு. எவ்வளவோ காலங்களை வீண் விரயம் செய்திருக்கிறேன்.செய்திருக்க வேண்டியவற்றைச் செய்யவில்லை.இனியேனும் சில காரியங்களை செய்ய வேண்டும் என்கிற தூண்டுதலை இந்த முகாம் எனக்குள் ஏற்படுத்தியிருக்கிறது.இந்த உளத் தூண்டுதல் எனக்கு மிகவும் முக்கியமானது.
ஒரு மிகப் பெரிய படைப்பாளியின் இருப்பு எப்போதும் இலக்கிய இயக்கங்களுக்கு ;அது தனது சாரத்தில் தகுதி கொள்வதற்கு மிகவும் தேவைப்படுகிறது.படைப்பாளிகள் மையமாக இல்லாமல் பெரும் இலக்கிய இயக்கமோ ,இலக்கிய இதழ்களோ சாத்தியமற்றது.ஒரு இலக்கிய இயக்கத்தில் எந்த படைப்பாளி மையமாக இருக்கிறார் என்பதனை வைத்தே அதற்கான வீச்சு உருவாகும்.சாதாரணமானவர்கள் தங்களின் மட்டத்திற்கு பிறரையும் கொண்டு வந்து விடுவார்கள்.தங்களின் மட்டத்திற்கு மேல் உள்ளவர்களை சிதைத்து விடுவார்கள்.அகந்தையை மட்டுமே எடுத்துக் கொண்டு நடக்கும் பாத்திரங்களாக பிறரை சமைத்து விடுவார்கள்.
சு.ரா இரண்டாயிரம் வரையில் இலக்கிய இயக்கமாகவும் இருந்தார்.என்னை போன்றோரின் பயணம் அவரில் சுடர் ஏற்றப்பட்டது.அவர் உருவாக்கிய பல அமர்வுகள் அறிவை விரிவு செய்து கொள்ள உதவியவை.அது எந்த பண்புகளால் சாத்தியமாகும் என்பதனை உணர்த்தியவை.சுமார் இருபது வருடங்களுக்குப் பிறகு அது போன்றதொரு இடத்தில் இருந்த மேன்மையை இந்த ஊட்டி காவிய முகாமில் கண்டேன்.ஜெயமோகன் என்னும் அரிய கலைஞனால் அது உருவம் பெற்றிருக்கிறது.ஜெயமோகனின் இருப்பும் அவருடைய பரந்து பட்ட விரிவான அறிவும்,படைப்புக் கண்ணோட்டமும் அதனை அவர் பிறருடன் பகிர்ந்து கொள்ளும் விதமும் ;பல படைப்பாளிகள் இந்த இயக்கத்திலிருந்து உருவாவதற்கு துணை செய்யும் என்பதில் எனக்கு சிறிய ஐயமும் இல்லை.இது இக்காலத்தின் அருங்காரியம்.
தமிழ் சூழலில் படைப்பு கண்ணோட்டங்கள் என்பவை யாவை என்பதனை தனது இளம் வயதிலேயே அறிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் குறைவு.அல்லது பொதுவாக அது கிடையாது என்றும் கூட சொல்லலாம்.அரசியல் கண்ணோட்டங்களின் தடித்தனங்களில் இருந்து அவன் மீளும் போது, அவனுடைய படைப்பாற்றலை அவன் பெரும்பாலும் இழந்திருப்பான்.பெரும்பாலோர் எளிய காரியங்களின் பக்கமாகத் திரும்புவதற்கு இதுவே காரணமாக அமைந்து விடுகிறது.இலக்கியம் வாழ்வின் சாத்தியத்திலும் படைப்பிலும் ஏற்றெடுக்க வேண்டிய கனவு மிகப் பெரியது.எளிய காரியங்களில் அது நிறைவெய்த கூடாது.படைப்புக் கண்ணோட்டங்களின் திக்கு வேறுவகையானது என்பதனை இளம் வயதிலேயே ,படைப்பாற்றல் மிதமிஞ்சியிருக்கும் போதே எழுத்தாளன் அறிந்து கொள்வானாயின் அவனுக்கு மித மிஞ்சிய காலம் சேமிப்பாகிறது.கனவுகளை அவன் மெல்ல அடியெடுத்து நெருங்க இது அவனுக்கு பெரிய அளவில் உதவி செய்யும்.ஆனால் இந்த படியில் அவன் காலடியெடுத்து வைக்க முன்முடிவுகளிலும் அகந்தையிலும் கீழிறங்கி வருகிற தீரம் அவசியம்.தனது செயல் என்ன என்பதனை முதலில் உணர்வதற்கான வாய்ப்பை இது போன்ற இலக்கிய முகாம்களே எழுத்தாளனுக்கு ஏற்படுத்தித் தரும்.
தமிழ் நாட்டில் கழிந்த இருபது வருட காலங்களாக ; வெற்றுக் கேளிக்கைகள் பொதுவில் இலக்கிய பாவனை செய்து காலம் கடத்தியிருக்கின்றன .எழுத்தாளனின் பேரிருப்பற்ற வெற்றகந்தையின் பாவனைகள் இவை.இவற்றிலிருந்து சில்லறை சாதனங்களைத் தவிர்த்து உருப்படிகள் உருவானதாக எனக்கு நம்பிக்கையில்லை.ஏராளமான சில்லறைகளால் தமிழின் படைப்பியக்கம் உண்மையாகவே முடங்கியிருக்கிறது எனலாம்.தமிழில் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் போன்ற செயல்பாடுகளே சோர்வை அகற்றிக் கொள்ள உதவக் கூடியவை.கேளிக்கை அரங்குகளால் ஏராளமான வெற்றகந்தைகள் மதம் கொண்டு அலைதல் மட்டுமே மீதமானது.காரியங்கள் இல்லை.
இந்த முகாமில் என்னை கவர்ந்த முக்கியமான விஷயம் , புத்தகங்கள் குறித்த ,உள்ளடக்கம் குறித்த நேர்மையான உரையாடல்கள்.ஒருவர் ஒரு நூலைப் பற்றி பேசும் போது,அரங்கில் உண்மையாகவே அதனை நேர்த்தியுடன் கற்ற ,பத்து இளைஞர்கள் புதிய செய்திகளை பகிர்ந்து கொள்கிறார்கள். அவர்கள் மனதின் கோணல்களில் சரியாமல் உள்ளடக்கத்தில் நின்று பேசுகிறார்கள்.இதனை காணவே ஆனந்தமாக உள்ளது.படிக்காமல் உளறும், அகந்தையை துருத்திக் காட்டும் ஒரு இளைஞனைக் கூட நான் இந்த அரங்கில் காணவில்லை.பெண்குழந்தைகள்,பெண்கள் இவ்வளவு தூரத்திற்கு படைப்பின் நுட்பங்களை கண்டு உரையாடுதலைக் காண ஆச்சரியமாக உள்ளது.பொதுவாக தமிழ் நாட்டில் நான் காண்பவை இந்த பண்புகளுக்கு நேர் தலை கீழானவை.நூல்களை படிப்பதற்கு முன்னரே மனதின் அனைத்து விதமான சிறுமைகளையும் பொதுவில் கொட்டுவதையே பல காலமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.மனதின் அற்பத்தனங்கள் வெளியில் கசியாமல் ,கழிவிரக்கமும் ,பொய்மையும் சிந்தப்படாமல் உள்ளடக்கத்தைப் பற்றி உரையாடுதல் என்பது இலக்கியத்தை பற்றி பேசுதற்கு தலையாய குணம் .இதனை இந்த மூன்று நாட்களும் பேசிய அனைத்து இளைஞர்களிடமும் பார்த்தேன்.இந்த குணத்தை அவர்களிடம் வெளிப்படச் செய்வதில் ஜெயமோகன் கொண்டிருக்கும் தாக்கத்தையும் புறக்கணிப்பதற்கில்லை.
நாஞ்சில் நாடன் நடத்திய கம்பராமாயண வகுப்பு மரபிலக்கியங்களை படிக்கத் தேவையில்லை என்னும் திமிர் கொண்டு நடப்போர்க்கு மிகவும் பயனுள்ளது. பலரும் பாடல்களை பாடும்போது பாடல்களின் சிறப்புகள் மனதில் பாடமாகி விடுகின்றன.செவ்விலக்கியங்களைப் பயில இது சிறந்த முறை.திருக்குறள் வகுப்பும் இது போன்றே.
இந்திய சிந்தனை முறைகள் பற்றிய அறிமுகம் மிகவும் சிறப்பானது.உள்ளடக்கத்தை அவர் ஆழ்ந்து அறிந்து பின்னர் அறிமுகம் செய்தார்.அது புதிய திறப்பாக அமைந்தது.அவர் இதுவரையில் அறிமுகம் இல்லாதவராகவும் ,புதியவராகவும் இருந்தார்.அவர் பெயர் எனது நினைவில் இன்னும் பதியவில்லை.அவருக்கு என்னுடைய வாழ்த்துகள்.
சந்ரு மாஸ்டரின் ஓவியங்கள் பற்றிய உரையை புரிந்து கொள்வதில் இருந்த சிரமத்திற்கு ஓவியங்கள் பற்றிய அறிதலும் உறவும் பொதுவாக நமக்கு இல்லாததே காரணம் என்று நான் நினைக்கிறேன்.தமிழின் சமகால ஓவியங்கள் ஓவியர்கள் ஒருவரைப் பற்றி கூட இங்கே அறிமுகம் ஏற்படவில்லை. அவர் கூறும் கலை பற்றிய புரிதல்களை எனக்கு விளங்கிக் கொள்ள இரண்டு ஆண்டுகளுக்கும் அதிகமாக தேவைப்பட்டன.அவருடன் உடனிருந்து அவற்றைக் கற்றேன் என்பதே உண்மை.அவருடைய உரையை புரிந்து கொள்ளுதலில் அதனால் எனக்கு எத்தகைய பிரச்சனைகளும் ஏற்படவில்லை.
கவிதைகள் ,நாவல் ,சிறுகதைகள் என நிறைய உரையாடல்கள். கள்ளுண்ட போதை.முன்முடிவுகளை மட்டுமே கொண்டிருந்தால் அதனையே கட்டிப் பிடித்துக் கொண்டு சாக வேண்டியதுதான் வேறென்ன சொல்ல ?

ஊழில் விலகுதல்

ஊழில் விலகுதல் அத்தனைக்கு எளிமையான காரியமில்லை அது.கடுமையான பிரயத்தனம் உள்ளும் புறமும் இருந்தால் சாத்தியமாகும் காரியம் இது. இருவேறு மனிதர்களாக நாம் இருக்கிறோம் எண்ணம் செயல்கள் வழியே ஊழைப் பின் தொடர்வோராக மட்டுமே இருப்பவர்கள் முதல் வகை.பெரும்பாலும் இவர்களே அதிகம்.எங்கு கொண்டு விட்டாலும் திரும்பி நினைவின் திண்ணையில் வந்து படுத்திருக்கும் நாயைப் போல இவர்கள் ஊழில் புரள்வோர். ஊழில் மட்டுமே புரண்டு கொண்டிருக்கிறோம் என்பதை அறியாதவர்கள் இவர்கள். ஊழில் விலகத் தெரிந்தவன் தன்னைச் சுற்றி அனைத்தையும் புதுப்பித்துக் கொண்டேயிருக்கிறான்.
யோகம் ஒரு வழிமுறை.படைப்பு மற்றொரு வழிமுறை . குப்பைகளை விலக்குவதற்கு இவையிரண்டும் கற்றுத் தருவதால் இவை ஊழை விலக்குவதற்கும் உதவுகின்றன. பிறவழிகள் இருக்கலாம் எனக்குத் தெரியவில்லை.பின்னாட்களில் உங்களுக்கு உபயோகப்படுவேன் என்கிற பாவனையோடே குப்பைகள் நம்மைப் பற்றிப் பிணிக்கின்றன.உண்மையில் தற்போது உதவாத எதுவுமே பின்னாட்களில் உதவாது .குப்பை இந்த பண்பு கொண்டு நம்மைப் பிணித்து ஊழில் கொண்டிணைக்கிறது.
ஊழில் நம்மைப் பற்றி பிணைக்கும் இரண்டு மிருகங்கள் நாயும் பன்றியும்.எவற்றில் நீங்கள் விலக வேண்டுமோ அவற்றில் கொண்டிணைப்பதில் கை தெரிந்தவை இந்த இரண்டு மிருகங்களும்.எவ்வளவு தூரத்திற்கு விலகி பயணிக்கிறீர்களோ அவ்வளவு நல்லது.நாயே ஊழின் தவக் கோலந்தான்.நாய் தன்னிலையை அதன் சொரூபத்திற்கு எளிதாகவே மாற்றும் தன்மை கொண்டது.நாய் பிரியர்களாக விலகி நடந்தால் பிரச்சனை இல்லை.தங்களில் வலிந்து ஏவிக் கொண்டே இருக்கக் கூடாது.அதில் கசிந்து உருகுதல் தன்னை நோக்கி ஏவுதலே அன்றி வேறில்லை.உங்கள் வினைப்பயனின் நெடுங்காலத்தை நாய் அறியும் தன்மை கொண்டது.ஊழின் மிருகம்.பன்றியும் குறைவில்லை.நாயும் பன்றியும் பொதுவாகவே நாம் வாழும் காலத்தில் மட்டும் வாழும் பிராணிகள் அல்ல.நெடிய காலத்தின் மீது படுத்துறங்கும் தன்மை கொண்டவை.எதிருணர்ச்சி நிரம்பியவை. பன்றியை இஷ்டப்பட்டீர்கள் எனில் அது உங்களை பன்றியாக்கி விடும்.
புதுப்பிப்பது எப்படியென தெரிய வேண்டும்.உள்ளிலும் வெளியிலும் முழுதுமாக நீங்கள் மாறிவிடுதலையே அது குறிக்கிறது.அப்படியே இருந்து பொருகுகளை சொரிந்து சுகம் காண்பதை சுட்டவில்லை . உங்கள் புராதன முகத்துடன் தொடர்பிலும் இருக்க வேண்டும்.அதே சமயத்தில் அதன் குரல்களை உங்களில் எதிரொலிக்க விடக் கூடாது.ஒவ்வொன்றையும் நீங்கள் உருமாற்றம் செய்து விட வேண்டும்.உங்கள் சொந்த பாரம்பரியத்தில் இருந்து ஒன்றைக் கூட நீங்கள் அது போன்றே பயன்படுத்தக் கூடாது.
தொல்குடி தான் நமது எல்லோருடைய உண்மையும்.அது நம்மில் நவீன தன்மை அடைய வேண்டும்.பழைய சாமானாக இருக்க கூடாது.முடியுமா என்றால் முடியும்.
குடியெச்சங்களை சேகரித்துக் கொண்டேயிருந்தால் அதன் இடத்திற்கு உங்களை அழைத்துச் சென்றடைந்து விடும் . முயற்சியில் இருப்போருக்கு நான் என்ன சொல்கிறேன் என்பது விளங்கும்.
முயற்சியில் இருக்கும் போது அத்தனை பேய்களும் எழுந்து வந்து உன்னைக் கொன்று விடுவேன் என்று கத்தும் .நீங்கள் பின்னோக்கிப் பார்க்கவே கூடாது.புதுப்பித்துக் கொண்டேயிருக்க வேண்டும்.

கோடைகாலக் கவிதைகள்

எட்டு மரப்பலகைகள் கொண்ட
கடை நீலவேணி அக்காவுடையது
வெற்றிலை பாக்கு ,சர்பத் ,தேன்குழல் மிட்டாய்கள்
குளிர்ந்த பானை மோர்
சுற்றுப் பீடிகள்
சுருட்டு வெம்மை

சாலை சிறுக சிறுக உயர்ந்ததில்
திண்ணை இரண்டடி பள்ளத்தில்
மாட்டிக் கொண்டது
நீலவேணி அக்கா
பாதி உயரத்தில்
நின்று தெரிகிறாள்
அவள் காலடிகள்
மூன்று தலைமுறைகளுக்கு
முந்தைய காலத்தில்
புதையுண்டிருக்கிறது

கடைக்குள் உள்ள காலம்
வெளியில் இல்லை

வெளியில் உள்ள காலத்தை
உள்ளே அனுப்ப
வழிகள் ஏதுமில்லை

நீலவேணி அக்காவாக இருக்கும் போது
அந்த கடைக்குள்
நுழைந்தாள்
அவள் முழு உயரம் அறிந்திருந்த
காலம் அது

இந்த பக்கம் இருந்தால்
அந்த பக்கத்திற்குள் நுழைய முடியாது
அந்தப் பக்கமிருந்தாலோ
இந்த பக்கத்திற்கு
வாசல்கள் இல்லை

இருவேறு காலங்களுக்கு மத்தியில்
வெறுமனே
எட்டு பலகைகள்

2

இருபது வருடங்களுக்குப் பிறகு
நண்பனை
சந்தித்தேன்
ஹலோ என்றேன்
ஹலோ என்றான்
அடையாளம் தெரியாமல்
நகர்ந்தான்
அடையாளம் தெரியாமல் நகர்வது எவ்வளவு சுகமாயிருக்கிறது ?

நகர்ந்தவன் பின் திரும்பி
உங்கள் குரலை எங்கோ
கேட்டிருக்கிறேன்
என்றான்
உலகில் ஏழுபேரின் குரல்கள் ஒன்று போலவே இருக்குமோ என்னவோ
என பதில் கூறி
சுகத்தை எடுத்தபடி
திரும்பிவிட்டேன்

3

எங்கேனும் பாலியல் பலாத்காரம் நடந்தால்
எனது குறி உள்ளே உள்ளே நுழைந்து ஒளிந்து கொள்கிறது
தண்டனைச் செய்திகள் வருகையில் முகத்தை மூடிக் கொண்டு
உட்கார்ந்து உடல் நடுங்கி அழுகிறது
எந்த புழுப்பூச்சிக்கும் பின்னர் நெடுங்காலம்
அசைந்தே கொடுப்பதில்லை
பின்னர் சமாதானப்படுத்தி குணப்படுத்தி
தெருவுக்கு அழைத்து செல்கையில்
பக்கத்துக்கு வீட்டு பெண்ணியவாதியை காண நேர்ந்தால்
தலைதெறிக்க நெடுந்தூரம்
எனது உடலை விட்டு நீங்கி
ஓடிவிடுகிறது

அவர்கள் உன்னை வெட்டமாட்டார்கள்
சும்மா பேச்சுக்குத்தான் சொல்கிறார்கள் என்று
எவ்வளவோ நானும்
பேசிப் பார்த்து விட்டேன்.

4

பிரணவ் ஸ்கேன் சென்றர்

ஸ்கேன் சென்றரில் மரணத்தின் முன்பாகக் காத்திருக்கும் முகங்கள்
அனைத்தையும் தெரிவித்து விடுகின்றன
போதும் போதும் எவ்வளவு பார்த்தாயிற்று ?
இவ்வளவு விரைவாகவா ?
முடிந்து விடுமோ ?
இதற்காகத்தானா ?
இன்னும் கொஞ்சம் வாழ்ந்திருக்கலாமோ ?
பாதி கூட முடியவில்லையே ?
நிறைய வலி இருக்குமோ ?
சரியாகத்தான் போராடியிருக்கிறேன் ?
எவ்வளவு தவறுகள் ?
அகங்காரத்திற்கு ஒரு தலையணை தரக் கூடாதா ?
ஒவ்வொரு முகத்திலும்
தனித்தனி மொழி

ஸ்கேனிங் தொடங்குவதற்கு முன்னரே
முகங்கள்
அனைத்தையும் பேசி விடுகின்றன

எந்திரம் ஒவ்வொரு முகத்தையும் கூண்டுக்குள்
மெல்ல நகர்த்தி அழைத்துச் செல்கிறது
முகங்கள் பெற்றிருக்கும்
உடல்களுக்காக

5

என்னைப் பற்றிய என்னுடைய
கதாபாத்திரம் ஒன்று
தத்தித்தளும்பி தள்ளாடி
எனது அறைக்குள்
வந்து சேர்ந்தது

நான் உங்களைப் பற்றிய கதாபாத்திரம்
வந்திருக்கிறேன் என்றது
ஓ அப்படியா ?
என்ன பிரச்சனை என்று
அதனிடம் கேட்டேன்

முடியவில்லை
அதுவென்று சொல்கிறார்கள்
இதுவென்று சொல்கிறார்கள்
எதுவென்றே விளங்கவில்லை

ஓ அப்படியா ? என்று
முதல் ஆப்பிளை ஒருபுறம் கடித்து
மறுபுறத்தை
புசிக்கக் கொடுத்தேன்

பசித்து முடித்து
என்னே ருசி என்று கூறிய வண்ணம்
அறையை வெளியேறியது
பாம்பின் சட்டை போலும்
உதிர்த்துச் சென்ற
என்னுடைய
கதாபாத்திரத்தை எடுத்து
குப்பைக் கூடையில்
போட்டேன்
பின்னர்
பல் துலக்கத் தொடங்கினேன்

இப்படியாக என் பின் மதியம்
தேனிலவானது

6

வெகுநாட்களுக்குப் பிறகு
ஐந்தாம் வகுப்பிலேயே எல்லோருக்கும்
தந்தையை போன்று
நடந்து திரியும் பால்ய நண்பனைப் பார்த்தேன்

எப்போதும் யாரைக் கண்டாலும்
உடனடியாக
தந்தையாகிறவன் அவன்

அவன் எப்படி குழந்தையிலேயே
எல்லோருக்கும்
அப்பாவானான்
என்கிற
வரலாற்றை
அறிய மாட்டேன்.

ஆனால் சிறுவயது அப்பாவானதே
அவன் பிரச்சனை என்பது தெரியும்

நீ இப்போது எத்தனை குழந்தைகளுக்கு
தந்தை என்று கேட்டேன்

விபத்தில் கால்
முறிந்து விட்டது மக்கா ...
என்றவன்
துணியை ஒதுக்கி
ஒளிந்திருந்த கால்களைக் நீட்டினான்
தந்தையாக இல்லாத
ஒரு தருணம் கிடைத்தது

அதனை எடுத்துக் கொண்டேன்
தந்தையாக அவன் எனக்குள் இருக்கும்
சிலைக்கு பக்கத்தில்
இதனை வைத்தேன்
வெள்ளந்தியாக
சிரிக்கிறது
தானொரு தந்தையாக
இல்லாதது
குறித்து
இச்சிலை

ஒடிந்தது உனது தந்தைக்குத்தான் மக்கா
உனக்கல்ல
ஓய்வெடு
சரியாகும்


அதிகமாக புத்தகங்களை படிக்காதீர்கள்

அதிகமாக புத்தகங்களை படிக்காதீர்கள்

அதிகமாக புத்தகங்களை படிக்காதீர்கள்.அதிகமாக உண்ணும் உணவும் , அதிகமான புத்தகங்களை வாசிக்கும் பழக்கமும் ஜீரணமாவதில்லை.புத்தக வாசிப்பு இயல்பானதாக இருக்க வேண்டும்.உங்களை ஒரு புத்தகம் தேடிக் கொண்டிருக்கும்.அந்த புத்தகத்தை நீங்கள் சென்று சேர வேண்டும்.புத்தகங்களில் வியப்புணர்ச்சி கொள்பவர்கள் மிக விரைவாகவே வாசிக்கும் பழக்கத்திலிருந்து வெளியேறி விடுவார்கள்.காரியத்திற்காக வாசிக்கிறவர்களும் வெளியேறுவர்.புத்தகப் பழக்கமே இல்லாத ஜீவராசிகளை எழுச்சி கொள்ளச் செய்வதற்காகவும் நான் இதனைச் சொல்லவில்லை.

அதிகம் புத்தகம் படிப்பதால் அறிவு வளர்ந்து விடும் என்பது தலை சிறந்த மூட நம்பிக்கைகளுள் ஒன்று.அதிகமாக சிறந்த சினிமா பார்ப்பவர்கள் சிறந்த திரைப்படங்களை எடுத்து விடுவார்கள் என்பதனைப் போன்ற மூட நம்பிக்கை இது.இது உண்மையானால் திரையரங்குகளில் படங்களை ப்ராஜெக்ட் செய்பவர்கள் எவ்வளவு திரைப்படங்களை தந்திருக்க வேண்டும் ? உங்களுக்குள் இல்லாத ஒன்றை புத்தகங்கள் ஒருபோதும் தருவதில்லை.மொழி வடிவமற்ற நிலையில் உங்களுக்குள் உள்ளடக்கம் ஏற்கனவே இருக்குமேயாயின் புத்தகம் அதனை உயிர்ப்பிக்கும்.

என்னைப் பொறுத்தவரையில் நிர்ப்பந்தம் தராத நூல்களை வாசிப்பதில்லை.நண்பர்கள் தருகிற அவர்களுடைய நூல்களை வாசிப்பது நிர்பந்தத்தில் வராது.கரகோஷம் செய்து ஓங்கி நிறுத்தப்படும் புத்தகங்களை நான் திரும்பிப் பார்ப்பது கூட கிடையாது.மன அமைதியில் இருந்தே கொந்தளிக்கும் நூல்களானாலும் அணுகுவேன்.தற்போது தமிழில் பெரும்பாலும் மதிப்புரைகளின் காலம் இல்லை.சக நண்பர்களிடமிருந்தே நிர்பந்திக்கிற நூல்களை பற்றி அறிய வேண்டும்.அவர்கள் ஒரு விஷயத்தை எவ்வாறு அணுகுவார்கள் ,வெளிப்படுத்துவார்கள் என்பதிலிருந்தே எனது படிக்க வேண்டிய நூல்களை தேர்வு செய்து கொள்வேன்.சிலர் எல்லாவற்றையுமே நூறு மடங்கு பெரிதுபடுத்திச் சொல்பவர்கள் என வைத்துக் கொள்ளுங்கள்,அந்த புத்தகத்தை நூறு கொண்டு வகுத்து விடுவேன்.பின்னரும் ஐம்பது சதமானம் தேறி விடுவதற்கான உத்திரவாதம் உண்டெனில் தேடத்  தொடங்குவேன்.தமிழிலிருந்து நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்படும் நூல்களின் அருகில் கூட நான் செல்வதில்லை.அப்படி பரிந்துரைக்கப்படுகிற இடங்களில் இருந்து ஐநூறு கிலோமீட்டர் தூரம் எனக்கு இருக்குமாறு பார்த்துக் கொள்வேன்.

சு.சமுத்திரம் பற்றிய பேச்சு ஒருமுறை எழும்போது சுந்தர ராமசாமி  ஒரு கருத்தைச் சொன்னார்.அது நல்ல கருத்துதான்.மோசமான எழுத்தாளர்களாக இருப்பவர்களே ஆயினும் ; அவர்களுடையதில் சிறந்தது என்று ஒன்று இருக்கும்.அதனைப் படித்து வைத்திருக்க வேண்டும் என்பதே அந்த கருத்து.சு.சமுத்திரத்தை நான் வாசித்ததே இல்லை.சிறந்த கருத்துகளையெல்லாம் பராமரிக்க வேண்டியது பெரியவர்களின் பொறுப்பு என்பதை நான் அறிய மாட்டேனா என்ன ?

தாஸ்தாவெஸ்கியின்  அனைத்து புத்தகங்களையும் ஆங்கிலப் பதிப்புகள்  என்னுடைய கல்லூரி முடிந்த காலத்தில் வாங்கினேன்.புனைவுகளை ஆங்கிலத்தில் படிக்க எனக்கு வராது.வீடு மாறும் போது கவனமாக அவற்றை மட்டும் எடுத்துக் கொள்வேன்.அவை இல்லையெனில் கால் ஒடிந்து போல இருக்கும்.இத்தனைக்கும் புத்தக சேகரிப்பாளன் கிடையாது.இன்றும் எழுதும் மேஜையில் இருப்பது அவருடைய ஆங்கில புத்தகங்கள் தான்.தமிழில் படித்த பிறகு அவற்றை வாசிக்க முயன்றிருக்கிறேன்.ஏற்கனவே வாசித்து விட்டோம்,பிறகு ஏன் மெனக்கெட வேண்டும் என்று தோன்றி விடும்.எவ்வளவு சிக்கலான கட்டுரைகளாக இருப்பினும் ஆங்கிலத்தில் படிப்பதில் எனக்கு யாதொரு பிரச்சனையும் கிடையாது.தாஸ்தாவெஸ்கியின் குற்றமும் தண்டனையும் நூலை சுசிலா அவர்களின் மொழிபெயர்ப்பிலேயே முதன் முறையாகப் படித்தேன்.கட்டுரைகளை பொறுத்தவரையில் ரொமேன்டிக் பெல்லோஸ்சின்  தாறுமாறான தமிழ்  மொழிபெயர்ப்புகளை படித்து வீணாகப் போவதைக் காட்டிலும் மூலத்துக்கு சென்று விடுதலே நலம்  .ஆங்கிலத்தில் புனைவுகளை வாசிப்பவர்கள் எனக்கு ஆச்சரியமானவர்கள்.விக்ரமாதித்தன் நம்பி குறிப்பிடுகிற அனைத்து நூல்களையும் படித்து விட வேண்டும்.ஜெயமோகனின் கண்ணீரை பின் தொடர்தல் நூலில் மிகச் சிறந்த நூற்பட்டியல் உண்டு.சி.மோகனின் காலம் கலை கலைஞன் நூலும் இது போலவே.அவருடைய கதை மொழிபெயர்ப்புகள் சுயேட்சையானவை.

டிரண்டியான நூல்களை வாசிப்பவர்களும் உருப்படமாட்டார்கள்;எழுதுவோரும் அவ்வாறே.

உங்களுடைய புத்தக வரிசையில் பிறர் உங்களிடமிருந்து அறிந்து கொள்ளும்படியான பத்து புத்தகங்கள் உங்களுக்கென பிரத்யேகமாக  இருக்குமேயானால் நீங்கள் சரியானவர்.நாநூறு புத்தகங்கள் தமிழில் படிக்க வேண்டியவை.பின்னர் அமைவது உங்கள் யோகம் போல.இந்த நாநூறு புத்தகங்களையும் குறுகிய காலத்தில் வாசிக்க அமைவது சிறப்பு.பின்னர் உள்ளவற்றை அவை அழைத்துச் சென்று காட்டித் தரும். 

தமிழில் முன்னுதாரணமற்ற படைப்பாளி ஜெயமோகன்

தமிழில் முன்னுதாரணமற்ற படைப்பாளி ஜெயமோகன்

நவீனத்துவத்தின் எல்லைகளை ராட்சஷ பலத்துடன்  அவர் கடந்து சென்றிருக்கிறார்.இது ஒரு விஷேச நிகழ்வு . அதற்குரிய பாதைகள் ஏற்கனவே இங்கு அமைக்கப்பட்டிருக்கவில்லை.சில தெறிப்புகள் மட்டுமே இருந்தன.தானாகவே அவர் அப்பாதைகளை உருவாக்கிய வண்ணம் படைப்பு வெளியை அதிகப்படுத்தியிருக்கிறார்.இதனை வெறி கொண்ட சாகசத்தால் சமைத்திருக்கிறார்.வரும் தலைமுறை படைப்பாளி அதனை வெட்டியோ,ஒட்டியோ அதில் கடக்க முடியும் .அவருடைய கண்ணோட்டங்களை ஏற்று வெட்டியோ ஒட்டியோ பயணிக்க அவனுக்கும் வெறி கொண்ட பலம் தேவை.எளிய இலக்கிய காரியங்களை அவருடைய இயக்கமும் எழுத்தும் புறக்கணிக்கின்றன.படைப்பாளி மிக பெரிய கனவுகளைக்  காண்பவனாக உருக்கொள்வதற்கான அரிய முன்னோட்டம் இது.உண்மை அடையும் படைப்பு ரூபம்  .இதனை எய்த வெளிப்படைத்தன்மையும் திறந்த அகமும் அவருக்கு பேருதவி செய்திருக்கின்றன.

அவருடைய பிறந்த நாளான இன்று அவருக்கு என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.அவரும் குழந்தைகளும் ,வாழ்க்கைத் துணையும் உடல் நலம் , நீள் ஆயுள் ,நிறை செல்வம் ,உயர் புகழ் ,மெஞ்ஞானம் பெற்று மேலோங்கி வாழ்க வளமுடன்

படைப்புகளின் இயக்கத்திலிருந்தே ,தொடர் சிந்தனையிலிருந்தே அவர் தரிசனங்களை கண்டடைகிறார் .மெய்மை அமர்ந்திருக்கும் இடம் அவருக்கு இவ்வாறாக புலப்படுகிறது.இது மெய்மை, தானே இழுத்துச் சென்று கொண்டு விடுகிற இடம் .உண்மையை காணும் போது அதற்கு எதிராக ஒரு நிலைப்பாடு எடுக்க ஆசைப்பட்டால் இயலவே இயலாது.நபகோவ் ,லாரன்ஸ் போன்றோரை சிறிய எழுத்தாளர்கள் என்று கண்டடைவதற்கான படைப்பு வெளியை அவருடைய இயங்கு தளமே அவருக்கு  அளிக்கிறது.ஆலன் ராப் கிரியே என்னும் ஜெர்மானிய எழுத்தாளன் தாஸ்தெவெஸ்கியை
வெறும் விவரிப்பாளன் அவர் என்கிறான்.எனக்கோ அவர் பிதாமகன் .என்ன செய்வது ? ஆனால் காப்கா ,காம்யூ போன்றோருடன் ஆரம்ப காலங்களில் எனக்கிருந்த சூடு இப்போது சுத்தமாக இல்லை.அவர்கள் எனக்குள் வற்றி விட்டார்கள்.காப்கா வெறும் நோயாளி என்றே இப்போது எனக்குத் தோன்றுகிறது.காலப்போக்கில் இயக்கமே இதனை அறியத் தருகிறது. ஒரு பெரிய படைப்பாளியை நிராகரிக்கும் போது ,நிராகரிக்கிற படைப்பாளியின் படைப்புகளின் வழியே சென்று காண வேண்டும்.

இன்று ஒரு வாசகன் அவரை நெருக்கமாக புரிந்து கொள்வான் எனில் அதனையே ஒரு தகுதி எனக் கொள்ளலாம் .பெரும் படைப்பாளிகளின் படைப்புலகத்தின் வாசலை திறந்து காண்பது அடைப்படை தகுதி . முரண்பாடுகளின் இடத்தில் அது மையம் கொள்வதில்லை.ஏற்பின் இடத்தில் அது அமர்ந்திருக்கிறது.

அவருடைய படைப்புக் கண்ணோட்டங்கள் புறந்தள்ள இயலாதவை.அவை அவரிலிருந்து உருக்கொள்கின்றனவே அன்றி அவர் உருவாக்குவதல்ல.அவருடைய கண்ணோட்டங்கள் அதனாலேயே வாசகனின் பகுதியாகி விடுகின்றன.அதனை இணைத்துக் கொண்டுதான் அவன் மேலும் சிந்திக்க முடியும்.ஏற்பின்றி இது சாத்தியமற்றது.அவர் எதற்கும் ஆதரவாகவும் இல்லை,எதிராகவும்  இல்லை.அவர் கண்டடைபவற்றை காட்டித் தருகிறார்.

ஜெயமோகனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

திடீரென ஒருநாளில் நாங்கள் பயங்கரவாதிகள் ஆக்கப்பட்டோம்

 கவிதைகள் 1 உனக்கு எவ்வளவு பெரிய தோள்கள் நீ விரும்பியவாறெல்லாம் உன்மீது படர்ந்தேறும் காடுகள் மயங்கும் மஞ்சு உடலெங்கும் வெண்ணூற்றுச...