R .S .S இயக்கம் துணை ராணுவப்படையா என்ன ?

R .S .S இயக்கம் துணை ராணுவப்படையா என்ன ?

சென்னையில் ஜல்லிக்கட்டுக்கு தடைவிதித்து தடியடி நடத்திய கையோடு R .S .S பேரணி நடத்தியிருக்கிறது.அதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை.ஆனால் ஜல்லிக்கட்டு போராட்டத்தை அடுத்து சென்னை மெரினா கடற்கரையில் 144 தடை அமலில் இருக்கும் காலத்தில் சென்னையில் இந்த பிரம்மாண்ட பேரணி நடைபெற்றிருப்பதுதான் வியப்பை தருகிறது.

வழக்கமாகவே எந்த அரசு அதிகாரத்திற்கு வருகிறதோ அந்த காலங்களில் அந்த அரசுகளின் கடைநிலைக் குழுக்கள் கால்களை கொஞ்சம் அகட்டிவைத்து  வேகமாக ஆட்டி நடப்பது வழக்கம்.இந்த கடைநிலைக் குழுக்கள்தான் பலசமயங்களில் அதிகாரத்தின் மூளையாக ,அதிகாரத்தை இயக்குபவர்களாக இருப்பார்கள்.இது அனைத்து விதமான கட்சிகளுக்கும் பொருந்தும்.தி.மு.க வந்தால் வட்டச் செயலாளரின் வயிறு பெருப்பதை போல .அ .தி.மு.கவில் புரோக்கர்கள் சட்டைக் காலரை கொஞ்சம் தூக்கி விட்டுக் கொண்டு அலைவார்கள்.கேரளாவில் பிரணராயின் கம்யூனிஸ்ட்கள் வந்ததிலிருந்து கட்சி மாபியாக்கள் தலை தூக்கியிருப்பதாகச் சொல்கிறார்கள். இதெல்லாமே வழக்கமான நடபடிகள்தாம் .வழக்கமாக காணும் அனுபவிக்கும் காட்சிகள்தான்.

ஆனால் பாருங்கள் பா.ஜ.கவின் ஆட்சியொன்றும் தமிழ்நாட்டில் நடைபெறவில்லை. ஆட்சி நடைபெற்றால்தான் பேரணி நடைபெற வேண்டும் என்பதில்லை . ஒரு பிரச்சனையின் தடைக்காலத்தில் இவ்வளவு கௌரவமாக அனுமதித்து அழைத்துச் செல்கிறார்களே அதுதான் விளங்கவில்லை.சில கலவரங்களுக்குப் பின்னர் போலீஸ் மார்ச் நடைபெறுவதுண்டு.நிலைமை கட்டுக்குள் இருக்கிறது என்று பிரகடனம் செய்யவும் ,மக்களை பீதிக்குள்ளாக்குவதையும் நோக்கம் கொண்டவை அவை.தொழில் பாதுகாப்புப் படையினருக்கும் இந்த ஜோலி உண்டு.மார்ச் முடித்துவிட்டு முந்தின நாள் சுட்டுக் போட்ட புரோட்டாக்களை ஒதுங்கிய கடைகளில் உட்கார்ந்து சவைத்துக் கொண்டிருப்பார்கள்.

இதுபோல இந்த பேரணியின் கோலாகலத்தைக் கண்ட போது R.S.S இயக்கத்தை ஆட்சியாளர்கள் எப்போது துணை ராணுவப் படையாக்கினார்கள் ? என வியந்தேன்.ஜல்லிக்கட்டின் மனோபாவத்திற்கு நேரெதிரான மனோபாவம் கொண்ட உங்களுடைய பேரணி அதே சாலையில் வலம் வரும் போது நீங்கள் எவ்வாறு நினைத்து புல்லரிப்பிற்குள்ளானீர்கள் ? ஒரு பன்னீரையோ,சந்தனத்தையோ,களபத்தையோ  சாதித்துவிட்டதால் உங்கள் அகண்டபாரத குகை கோஷத்தில் ஒரு சிலிர்ப்பு ஏற்பட்டிருக்க கூடும்தானே ?

பா.ஜ.க ஆட்சிக்கு வந்த தொடக்கத்திலேயே கேரளா பவன் வரையில் போலீஸ் அதிகார துணையுடன் கம்பு சுற்றினீர்கள்.இப்படி கம்பு சுற்றக் கூடாது என்பதை அறிவதற்கே காலம் பிடித்தது .வடமாநிலங்களில் தலித்துகளின் மீதான தாக்குதல்களில் மோடி என்னைத் தாக்குங்கள் தலித்துகளைத் தாக்காதீர்கள் என்று செல்லக் குழந்தைகளிடம் கெஞ்சுவது போன்று உங்களிடம் இரைஞ்சினார். பிற கட்சிகளிடம் உள்ள கூறு கொண்ட உருபடிகளின் அளவிற்கு கூட உங்களிடம் உருப்படியானவர்கள் குறைவு.

ஒரு குரல் தவிர்த்து பிற குரல் அறியாதவர்கள் நீங்கள்.நீங்கள் சார்ந்திருக்கும் சாதிகள் தவிர்த்து பிற சமூகங்களும் சாதிகளும் கூட இந்தியாவில் வாழ்கிறார்கள் என்கிற உண்மைகளைக் கூட உங்களில் பலர் அறியமாட்டீர்கள்.ஓர்மைக்  குறைவும் அதிகம்.அஞ்சிய கலாச்சார தன்னிலை உங்களுடையது.அதிகாரத்தைக் காட்டினால் மக்கள் அஞ்சுவார்கள் என நீங்கள் நினைத்தால் அது உங்களுக்குத்தான் பொருந்தும் அல்லாது மக்களுக்குப் பொருந்தாது .எத்தனைவிதமான கம்பு சுழற்றல்களையெல்லாம் பார்த்துக் கொண்டிருப்பவர்கள் இந்த மக்கள் ?

இந்தியா முழுமையும் பிளவு அரசியலால் சாதித்து  விடமுடியும் என நீங்கள் நம்பிக்கை கொண்டிருப்பதை  உங்கள் அன்றாட நடவடிக்கைள் உணர்த்துகின்றன.பிளவு அரசியலை ,மாநிலங்களில் தூண்டி அதிகாரத்தை கைப்பற்ற நினைத்தால் நீங்கள் வருகிற காலங்களில் மண் தின்பது உறுதி. சகல தரப்பு மக்களும் ஏற்றுக் கொள்ளும்படியான ஒரு தலைவனையேனும் முதலில் சாதிக்கப் பாருங்கள்.அது எவ்வளவு கடுமையானது தமிழ்நாட்டில் என்பது விளங்கும்.

இணக்கத்தை கற்று கொள்ள இப்போது நீங்கள் தொடங்கினால் கூட உங்களுக்கு இன்னும் நிறைய காலம் பிடிக்கும். இந்தியனாக இருப்பது பற்றியெல்லாம் நீங்கள் யாருக்கும் பாடம் நடத்தாதீர்கள்.உங்களிடம் போதனைகள் கேட்கிற நிலையில் இங்கே யாருமே கிடையாது

தடியால் அடித்து யாரையும் இந்தியனாகவும் ஆக்கமுடியாது .தமிழனாகவும் மாற்ற முடியாது. ஆதிக்கம் பிரயோகித்து உங்களை ஜனநாயக பூர்வமானவர்கள் என்று நம்ப வைக்கவும் முடியாது.

பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்பதை கருடன் நினைவில்தானே கொண்டிருக்கும் இல்லையா ?

காந்தியிடமிருந்து உண்மையைக் கற்றல் ...


காந்தியிடமிருந்து உண்மையைக் கற்றல்  ...

காந்தியைப் புரிந்து கொள்ளுதல் என்பது நம்மிடம் நாம் கொண்டுள்ள கற்பனைகள் ,மிகையுணர்ச்சிகள் ,விருப்பங்கள் ஆகியவற்றை அறிந்து அவற்றில் கட்டுப்பாட்டில் இருந்து விலகுவதற்கான ஒரு வழிமுறை .அது உண்மையை நேர்கொண்டு முன்னடக்க உதவும்.காந்தியை புரிந்து கொள்ளுந்தொறும் அதில் புரிந்து கொள்பவர்களுக்குத் தான் லாபமேயொழிய வேறொன்றும் இல்லை.உண்மைக்கும் நமது விருப்பங்களுக்கும் இடைப்பட்ட வேறுபாடு என்ன என்பது காந்தியை புரிந்து கொள்ளும் காரியம் விளக்கித் தரும்.பொய்யிலிருந்து விடுவிக்கும்.

உண்மையைப் பற்றி "அவ்வாறே பேசுதல்" என்றே பலரும் அர்த்தம் கொண்டுள்ளோம்.அதுவல்ல.திருவள்ளுவர் உண்மை பற்றி பேசும் போது நீ மறைப்பதும் கூட உண்மைத்தன்மை பெற முடியும் என்று கூறுவதை புரிந்து கொள்ள முடியுமேயானால் , காந்தி உண்மையென்று எதனைக் குறிப்பிடுகிறார் என்பதும் விளங்கும்.உண்மையென்பது ஆழமான அர்த்தம். பல சமயங்களும் உண்மை பற்றி விவாதித்திருக்கின்றன.அதனை ஸ்தூல உருவாக எட்டியவர் காந்தி.முயன்றால் நம்மிலும் நடைமுறையில் எட்டச் செய்து விடுபவரும் காந்திதான்.

பொய் பேசுதல் என்பது பெரும்பாலும் நாம் பேசிக் கொண்டிருக்கும் அனைத்துமே பொய் தான்.ஒவ்வொரு விஷயங்கள் சார்ந்தும் பொதுவாக நமது விருப்பங்களை முன்வைக்கும் பழக்கம் நம்மிலிருந்து விடுபடாதவரையில் பொய் அகலாது.நாம் ஒவ்வொருவருமே விருப்பங்களை மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறோம்.அன்றாட செய்திகளில் தொடக்கி ,காமம்,காதல் எல்லாவிதமான விஷயங்களிலும் நமது விருப்பங்களையே பேசிக் கொண்டிருக்கிறோம்.உண்மைக்கும் நமது விருப்பங்களுக்கும் இடையில் பெரிய இடைவெளி உண்டு.விருப்பங்களால் நம் அவற்றை நிரப்புவோம்.விருப்பங்களால் ஒன்றை நிரப்புவதற்குப் பெயர்தான் பொய் என்பது.விருப்பங்களும் உண்மையும் வேறு வேறு என்பதை நம்மால் கண்டுணரும் சக்தி  கிடைக்குமேயானால் உண்மை மட்டும் நம்மிடம் துலக்கம் அடைவது மட்டுமல்ல,தரிசனங்களும் சேர்ந்து துலங்கும்.தரிசனம் என்பது உண்மையை நெருங்கும் இயக்கம்.விருப்பங்களை பேசுவதற்கு ,பொய் பேசுவதற்கு விடை கொடுத்தால் தரிசனம் வாய்க்கும்.தரிசனம் மற்றபடி நெருங்கவே இயலாத மாயவித்தையெல்லாம் ஒன்றுமில்லை.

ஒருசமயம் எனது நண்பன் ஒருவன் அவனுடைய காதலி நிராகரித்து விட்டுச் சென்றதும் என்னிடம் வந்த பிளாக் மேஜிக் பேரில் உங்களுக்கு நம்பிக்கையுண்டா ? என்று கேட்டான்.அவன் அவளுக்கு யாரோ அந்த மேஜிக்கை அவளிடம் செய்து விட்டுப் போய்விட்டார்கள் என்று நம்பினான்.அப்படி மட்டுமே இருக்க வேண்டும் என்று விரும்பினான்.   அவனுடைய காதலி நிராகரித்து சென்றதை அவனுடைய மனம் ஒப்புக் கொள்ள மறுக்கிறது என்பதுதான் விஷயம்.அந்த நிராகரிப்பின் மீது ஏதேனும் போர்வையைப் போர்த்த முடியுமா ? என்று அவனுடைய மனம் சிந்திக்கிறது.உண்மையை தவிர எதனைச் சொன்னாலும் நம்புவதற்கு அது காத்திருக்கிறது.உண்மையை மட்டும் என்னிடம் திறந்து விடாதீர்கள் என்று பிறரிடம் கெஞ்சுகிறது.இதுதான் பொய் காட்டும் ஜாலம்.ஒருவேளை இவன் அவளை முன் கூட்டியே நிராகரித்திருந்தால் இவனுக்கு ஒரு பிரச்சனையுமே ஏற்பட்டிருக்காது.நிராகரிப்பை அவன் மனம் ஏற்கவில்லை.இதுதான் பொய் என்பது.மற்றபடி ஒன்றை அப்படியே சொன்னால் அதன் பேர் உண்மையும் அல்ல.ஒன்றை மாற்றிச் சொன்னால் அதன் பேர் பொய்யுமல்ல.நாம் கொள்ளுகிற விருப்பங்களில் இருந்து மனத்தைத் துண்டிக்க வேண்டும்.அதில் எஞ்சுவதே உண்மை.

நாம் எல்லோருமே இறந்து விடுவோம் என்பது நமக்கு எல்லோருக்குமே நன்கு தெரியும்.எது நமக்கு நடக்கவே நடக்காது என்று கருதுகிறோமோ அது நடந்தே தீரும் முந்திக்கூட்டி நடக்கும்.வியாதியிலிருந்து,விபத்து வரையில் .உறவு முறிவதிலிருந்து ,பிரிவு வரையில்.எது நடக்கவே நடக்காது நமக்கு என்று கருதுகிறோமோ அந்த விஷயத்தின் பேரில் நமக்கு உரிமையும் உடைமையும் கடுமையாக இருக்கும்.இதுவே போதும் அலட்சியம் வந்து கண்களை மறைக்க ,எல்லாமே வந்து சேர .உறவு என்பது பரஸ்பரம் ஈர்ப்பு கெடாமல் வைத்திருக்கும் ஒரு செயல்.ஈர்ப்பு கெட்டால் நாசம்தான் ,ஈர்ப்பு கெட்ட பின் உறவு தொடர காரணங்களேனும் வலுவாக வேண்டும்.இல்லையெனில் உடைந்து தூளாகும்.ஈர்ப்பு கெடாமல் வைத்திருப்பது என்பது ஒரு தீவிர நிலை.நாம் உடையவே மாட்டோம் என்று கருதுபவர்கள் உடைந்து நொறுங்குவது உடைமையின் மமதையால்தான்.மகன்தானே,மகள்தானே கேட்க  மாட்டார்களா ? என்று நினைப்போம்.கேட்கமாட்டார்கள் என்பதே உண்மை .ஈர்ப்பு கெட்டால் கேட்க மாட்டார்கள்.    

எனக்கு மனதிற்கு விருப்பமான பெண்களைக் காட்டிலும் அதிகமாக காந்தியைப் பிடிக்கும் என்பதை அறிந்த நண்பர்கள் என்னிடம் "காந்தியிடம் எனக்கு முரண்பாடு உண்டு " என்று பேசத் தொடங்குவார்கள்.

"நல்லது.அப்படியானால் நீங்கள் காந்தியை புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என்று நான் எடுத்துக் கொள்ளலாமா ? "என்று திருப்பிக் கேட்பேன் .புரிந்து கொண்ட பின்னர்தானே முரண்பாடு எழவேண்டும் ?

அவர்களில் பெரும்பாலோரிடத்தில் இந்த கேள்விக்கு பதில் இருப்பதில்லை.பொருளும் இருப்பதில்லை.இந்த கேள்வி என்ன சொல்கிறது என்று புரிவதும் இல்லை.இதுதான் காந்தியின் பேரில் இங்கே கட்டப்பட்டுள்ள ஆகப்பெரிய முரண்பாடு.

காந்தியிடம் கற்பது சுவாரஸ்யமான விஷயம்.நானும் பல அறிஞர்கள் மூலமாக தாமதமாக அறிந்து கொண்டதுதான் இது.இப்போது காந்தியிடம் எனக்கு ஏற்பட்டிருப்பது understanding  .புரிதல்.அது காந்தியைப் பற்றிய புரிதல் மட்டுமல்ல என்னைப்பற்றிய புரிதல்.என்னைப்பற்றிய understanding  அது. 

NEET நுழைவுத் தேர்வு ஒரு அநீதி முறைகேடுகளுக்கான புதிய சாத்தியம்

 NEET நுழைவுத் தேர்வு ஒரு அநீதி  முறைகேடுகளுக்கான புதிய சாத்தியம்

நீட் NEET நுழைவுத் தேர்வு ஒரு அநீதி, முறைகேடுகளுக்கான புதிய சாத்தியம்
நம்மிடம் இல்லாத ஒன்றைச் சுட்டி அதுவே தகுதிக்கான அடிப்படை என்கிற ஒரு தரப்பினர் வரலாறு நெடுகிலும் பயின்று வந்திருக்கிறார்கள்.எப்போதுமே மக்களுக்கு,ஏழைகளுக்கு எதிரான தரப்பினராக இருப்பவர்கள் மேற்கொண்டு வரும் அடிப்படை மனோபாவம் இது.தங்களிடம் அதிகாரத்தை கொண்டு நிறுத்தி அனைத்தையும் அபகரிக்கும் நோக்கம் கொண்ட தரப்பு இது.இந்த மனோபாவம் கொண்டவர்களும் அவர்கள்தம் தரப்பினரும் சமீபகாலங்களில் அதிக அழுத்தம் பெற்று வருவதை அனைத்து துறைகளிலும் பார்க்க முடிகிறது.மருத்துவப் படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வும் இத்தகைய ஒன்று.
இந்தியாவின் மாநிலங்களில் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விதமான பாட போதனைகள் உள்ளன.குறிப்பாக கேரளாவின் கல்வி முறைக்கும் தமிழ்நாட்டின் கல்வி முறைக்கும் சம்பந்தம் இல்லை.இது போன்றே மாநிலத்திற்கு மாநிலம் கல்வியில் வேறுபாடுகள் அதிகம்.மாநில சுய உரிமைகள் சார்ந்த விஷயங்கள் இவை.ஒரு மாநிலத்திற்குப் பொருந்துகிற நடைமுறைகள் பிறிதொரு மாநில நடைமுறைக்கு ஒத்துவருவதில்லை.இதுவே ஒரு நல்ல நடைமுறையும் கூட.
தமிழ்நாட்டு மாணவர்களை பொறுத்தவரையில் தமிழ்நாடு அரசின் பாடத்திட்டங்களில் பயில்பவர்களே பெருவாரியானவர்கள்.கிராமத்து ஏழை மாணவர்கள் பயிலும் பாடத்திட்டம் இது.மாணவர்கள் பயிலாத பாட திட்டத்திலிருந்து கேள்வித்தாளை உருவாக்கி அதில் மாணவர்கள் தேர்ச்சி பெற்றால்தான் மருத்துவப் படிப்பில் மாணவர்கள் சேர முடியும் என்கிற நிலையை இந்த நீட் நுழைவுத் தேர்வு ஏற்படுத்தியுள்ளது .குழந்தைப்பருவம் முதற்கொண்டு இவர்கள் பயின்று வரும் பாடத்திட்டம் ஒன்றாகவும் தேர்வுகள் முற்றிலும் இதற்குத் தொடர்பற்ற மற்றொரு பாடத்திட்டமாகவும் அமைவது என்பது மிகப் பெரிய சமூக அநீதி.குறிப்பாக கிராமப்புறங்களைச் சார்ந்த ஏழை மாணவர்களுக்கு எதிரான சூழ்ச்சியே இந்த நீட் நுழைவுத் தேர்வு.
நீ கற்காத பாடத்திலிருந்து கேள்விகள் கேட்போம்; போட்டிக்கு வா ! என்று அழைக்கிறார்கள்.காரணம் கேட்டால் நீ கற்கின்ற பாடம் தகுதியற்றது என்கிறார்கள்.ஆதியிலிருந்தே இந்த தரப்பினர் இதே குரலில்தான் பேசி வருகிறார்கள்.ஆதியிலிருந்தே கல்வியில் இருந்த ஏற்றத் தாழ்விற்கு ,நீதியின்மைக்கு காரணமாக இருந்த குரல் இது. கற்பது ஒன்று போட்டி அதற்கு வெளியிலிருந்து.அதாவது எதிராளி கற்று வைத்திருக்கும் முறையிலிருந்து. இதுவே இந்த நீட் நுழைவுத் தேர்வின் பிரதானமான குளறுபடி.
இந்த குளறுபடியைக் களைய முதலில் எது தகுதி என்பதனை கூடி முடிவு செய்யுங்கள்.பின்னர் அதனை தெளிவு செய்யுங்கள். தகுதி என்பது என்ன ? அதற்கு பாடத்திட்டங்களில் என்னென்ன செய்ய வேண்டும் ? என்பதனை விளக்குங்கள்.ஒருவேளை நீங்கள் ஏழைகளும் கிராமத்து மாணவர்களும் எங்கெல்லாம் பங்கேற்கிறார்களோ எல்லாமே தகுதி குன்றியவை என்று கூட சொல்லக் கூடும் .அப்படியானால் அதனையும் தெளிவுபடுத்துங்கள்.எங்களைப் போன்ற சிறுமூளைகளுக்கு உங்களை புரிந்து கொள்ள வசதியாக இருக்கும். .
இந்தியா முழுமையும் ஒருவிதமான பாடத்திட்டத்தை போதிப்பது சாத்தியம்தானா ? ஒருவேளை சாத்தியம் என்றால் அதனை நீதியென்று ஏற்கலாமா ? மாநிலங்கள் அதனை ஒத்துக் கொள்கின்றனவா ? எல்லாவற்றையும் விளக்குங்கள்.
இந்திய அடிப்படை அரசியல் சாசனங்களுக்கு எதிராக நீதிமன்றங்களைத் தூண்டி கொள்கை முடிவுகளை எடுப்பது கோழைத்தனமும் அநீதியும் நிறைந்த வழிமுறைகள்.இந்தியாவில் நீதிமன்றங்கள் அரசின் மறைமுகமான அங்கமாக மாறிவருகின்றன.பல நீதிபதிகளின் நிலை என்பதே ஏட்டு முற்றி போலீஸ் என்பதுதான் இங்கே.அவர்களில் பலர் அவ்வப்போது உதிர்க்கும் பொன்மொழிகள் அவர்கள் இந்தியாவில் தான் உள்ளார்களா என்பதை கேள்வி கேட்கும்படி மட்டுமல்ல பலசமயங்களில் நாணி வெட்கமடைய வைக்கின்றன. பல்லாயிரக்கணக்கில் குவிந்து கிடைக்கும் பொதுநல வழக்குகளில் இருந்து தேவைகளுக்கேற்ப ; கிளி துண்டு எடுப்பது போல அரசு சில வழக்குகளை பொறுக்கியெடுத்து நீதிபதிகளின் வாக்குமூலங்களில் ஏறியமர்ந்து கொள்வது இந்தியாவில் சமீப காலங்களில் அரசின் ஒரு வாடிக்கையாகி வருகிறது.அரசியல் விதிகளின் படி உருவாக்க இயலாதவற்றை இப்படி மறைமுகமாக நீதிமன்றம் மூலமாக நிறுவ முயலும் போக்கு ஆபத்து நிறைந்தது. கல்வி போன்ற விஷயங்களில் ஏற்றத்தாழ்வுகளை வாய்ப்பளிக்கும் விஷயங்களை ஊக்கப்படுத்துவது என்பது சமூகத்தை நேரடியாக ஊனப்படுத்தும் செயல் .
அடுத்த குளறுபடி நீட் நுழைவுத் தேர்வு விஷயத்தில் உள்ளே புகுந்து விளையாடுகிற ஊழல் .லட்சக்கணக்கில் நடைபெறுகிற ஊழல்.எந்தவிதமான மருத்துவ கல்லூரிகளில் குழந்தைகளை சேர்க்க விரும்புகிறீர்களோ அதற்கேற்ப நீட்டில் மதிப்பெண் பெற்றுத் தருகிறோம் என்று கூறி சந்தையில் ஏராளமான புரோக்கர்கள் வந்து விலை பேசிக் கொண்டு நிற்கிறார்கள்.முப்பது லட்சம் தொடங்கி ஒரு கோடி வரையில் விற்பனை பேரத்தில் இழுப்படுகிறது .உங்களுக்கு தனியார் மருத்துவக் கல்லூரிகள் விருப்பமெனில் அதற்கு ஏற்ப .அரசு கல்லூரிகள் எனில் அதற்கு ஏற்ப விலைகளில் நீட்டின் தகுதியை விற்பனையில் சாத்தியமாக்கியிருக்கும் புரோக்கர்கள் கடந்த ஆண்டில் அந்ததந்த பகுதிகளில் விற்ற புள்ளிவிபரங்களையும் கைகளில் வைத்திருக்கிறார்கள்.தகுதியின் விலையை புரோக்கர்கள் கைவசமாக்கியிருப்பதுதான் உங்களின் தகுதிச் சாதனையா ?
இதுவரையில் படித்து மதிப்பெண் பெற்றுவிடுகிற மாணவர்களுக்கு மருத்துவத்தில் விலையற்ற படிப்பு பற்றிய ஒரு சிறிய உத்திரவாதம் நம் கண்முன்னர் இருந்தது.அது நீட் மூலமாக நம் கண்முன்னரே காணாமல் போய் கொண்டிருக்கிறது.நீட்டுக்கான பயிற்சி வகுப்பு நடத்துபவர்களின் கொள்ளை ஒருபுறம் எனில் புரோக்கர்களின் பண வேட்டை இன்னொரு புறம் என ஏழை மாணவர்களை இந்த அமைப்பு துப்புரவாக இல்லாமலாழிக்கப் பார்க்கிறது.ஏழை மாணவர்களை இல்லாமல் ஆக்குவதுதான் இந்த நீட் தேர்வின் நோக்கம்.கோடிக்கணக்கில் பணம் வைத்திருப்போரின் குழந்தைகள் ,ஏழைக்குழந்தைகளிடமிருந்து பறிக்கப்படும் மருத்துவப்படிப்பிற்கான இடங்களில் புரோக்கர்கள் வழியே சென்றடைந்து உட்கார்ந்து கொள்வதற்கான சதுரங்க விளையாட்டு இந்த நீட் நுழைவுத் தேர்வு .
ஏற்கனவே பணம் வைத்திருப்போரின் குழந்தைகளுக்கு நிறைய தனியார் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. நீட் மூலமாக ஏழை மாணவர்களின் அனைத்து இடங்களையும் இந்த தேர்வு வசதி படைத்தவர்களுக்கு திறந்து கொடுக்கிறது.இது மிகப் பெரிய கொடூரம்.
தமிழ்நாட்டில் இந்த ஆண்டில் எந்த முறை பின்பற்ற படவுள்ளது என்கிற குழப்பம் இதுவரையில் நீங்கவில்லை.இரண்டுக்கும் இடைப்பட்ட படிக்கும் மனநிலையே வேறுபட்டது.அவர்கள் புதிய நிலைக்கு மாறவேண்டுமாயின் அவர்களுக்கு ஆரம்பம் முதற்கொண்டே பயிற்சி அவசியம்.இப்படியான இரட்டை நிலைப்பாடு என்பது அவர்களை பைத்தியக்காரத்தனத்திற்கு இட்டுச் செல்கிற வழி.
தமிழ்நாட்டுத் தலைவர்களுக்கோ தங்கள் வயிற்றுக்கு சோறு வந்து கிடைக்கிறதா என்பதுதான் பிரதான அக்கறையெல்லாம்.

படிகத்தின் இரண்டு கவிதைத் தொகுதிகள்

படிகத்தின்  இரண்டு  கவிதைத் தொகுதிகள்

1

 ' ஈனில் "
ஜன்னலுக்கு வெளியில் அது வளர்ந்து கொண்டிருக்கிறது

நவீன கவிதைகள் தொகை நூல் - தொகுப்பாசிரியர் : ரோஸ் ஆன்றா

குட்டி ரேவதி ,சுகிர்தராணி ,மாலதி மைத்ரி ,மு.சத்யா ,சல்மா ,சுந்தர ராமசாமி ,யவனிகா ஸ்ரீராம்,என்.டி.ராஜ்குமார் ,கைலாஷ் சிவன்,பாலை நிலவன் ,ராணி திலக் ஆகிய பதினோரு தமிழ் கவிஞர்களின் கவிதைகளைக் கொண்ட தொகை நூல் இந்த "ஈனில் " என்ற ஜன்னலுக்கு வெளியில் அது வளர்ந்து கொண்டிருக்கிறது.

ஒரு புதிய கவிதை வாசகனுக்கு இந்த ஒவ்வொரு கவிஞரின் உலகத்தோடும் இணைப்பை ஏற்படுத்திக் கொள்ள உதவும் வண்ணம் இந்த தொகை நூல் உருவாக்கப்பட்டுள்ளது .கவிஞர்களின் சுமார் ஐந்துக்கும் மேற்பட்ட கவிதைகள் இந்த தொகை நூலில் இடம்பெற்றுள்ளன.இது இந்த தொகை நூலை சிறப்பு பெற வைக்கிறது.ஒவ்வொரு கவிஞரின் உலகையும் வாசகன் தன்னுள் திறக்க இந்த "ஈனில் " தொகை நூல் உதவும்

புதிய கவிதை வாசகனுக்கு "ஈனில்" தொகை நூல் புதிய திறப்பு

விலை - ரூ 100

2

'சாயல் எனப்படுவது யாதெனின் "
விக்ரமாதித்யன்
விக்ரமாதித்யன் தமிழின் மூத்த கவிஞர்.சமூகத்தின் பொது உண்மைகளைக் கவிதையால் கலவரம் செய்தவர்.அவற்றின் பாசாங்குகளை வானளாவ கவிதைகளில் குவித்தவர்.பொது உண்மைகளின் பிற அனைத்து பக்கங்களையும் தன் கவிதைகளில் திறக்கும் முகாந்திரம் அமைத்துத் தந்தவர்.பிற உண்மைகள் அவர் உடலில் ஏறி அமர்ந்து கொண்டதும் இதனாலேயே நடந்தது.அகமெங்கும் பிற உண்மைகளால் ஆனவை விக்ரமாதித்யனின் கவிதைகள்.
வாழ்க்கைக்கும் கவிதைக்கும் இடைவெளிகள் ஏதுமற்றவர்.திரிகூடராசப்ப கவிராயரைப் போல,பாரதி போல இவரும் இவர் ஒருவரே.ஈடுசெய்யவே இயலாதவர்.சமகாலத்தில் அல்ல மரபிலிருந்து நீண்டு மரபுகளை உடைத்து வெளியேறி வந்தவர் விக்ரமாதித்யன். இவரைப்போல இனியொருவர் என்பதே இவர் விஷயத்தில் இல்லை. தமிழில் இதுவும் நடந்தது என்று சொன்னால் விக்ரமாதித்யனும் ஆகப்பெரியதொரு கவிதா நிகழ்வு,கலகத்தின் அசல் வைரம் .தமிழுக்கு புத்தம் புதியதொரு அருங்கொடை
'சாயல் எனப்படுவது யாதெனின் " என்னும் இந்த தொகுப்பிலுள்ள கவிதைகளும் இதற்குச் சான்று .
விக்ரமாதித்யனின் புதிய கவிதைகளை தொகுப்பாகக் கொண்டுவருவதை கிடைத்தற்கரிய பாக்கியம் என்றே படிகம் கருதுகிறது.
[தொகுப்பிலிருந்து ]

அட்டை வடிவமைப்பு - ஓவியர் மணிவண்ணன்

படிகம் வெளியீடு ; விலை - ரூ 125

தொடர்புக்கு ;
படிகம்
நவீன கவிதைக்கான இதழ்
4 - 184 தெற்குத் தெரு ,
மாடத்தட்டுவிளை ,வில்லுக்குறி - 629 180
தொடர்பு எண் - 98408 48681

மக்கள் மீது தொடுக்கப்படும் அரசின் யுத்தம்

மக்கள் மீது தொடுக்கப்படும் அரசின் யுத்தம்

தன்னெழுச்சி கொண்ட மக்கள் போராட்டங்களின் உளவியல் எளிமையானது அல்ல.தன்னெழுச்சியான மக்கள் போராட்டங்கள் தாங்கள் விரும்பிய வண்ணம் நடைபெறவில்லை என்கிற அதிருப்தியின் தரப்புகள் மூடியிருப்பவை.எந்த ஒரு தரப்பையும் நிறைவு செய்வது இத்தகைய போராட்டங்களின் பணி அல்ல.தன்னோடு இணைகிற அத்தனை தரப்புகளையும் தன்னில் கரைக்கவே இத்தகைய போராட்டங்கள் முயற்சிக்கும்.தன்னில் இணைகிற தரப்புகளை கண்காணிப்பதோ   ,பரிசோதனை செய்வதோ இயலாத காரியங்கள் .

ஜல்லிக்கட்டு போராட்டத்தைப் பொறுத்தவரையில் மேட்டிமையின் குரல்கள் பொது உளவியலின் மீது நடத்திய தாக்குதலில் இருந்து அது கிளர்ந்தது.கிளர்ந்ததன் ஒரு காரணம் மட்டுமே தான் இத்தகைய போராட்டங்களுக்கு மூலமாக இருக்கும் என்றும் சொல்வதற்கில்லை.எளிமையில் வைத்து இதனை யூகிப்போர் சொல்லும்  அதிருப்திகளும் ; அரசு முடிவில் செய்வதை ஒப்ப ; தீய சக்திகள் போராட்டத்தில் உள் புகுந்து விட்டன  என்பதை  ஒப்ப ஒரு சார்பானவை.

அதே சமயம் இத்தகைய  போராட்டங்களை விளங்கி  ஒரேயொரு கண்ணோட்டம் மட்டும்தான் இருந்தாக வேண்டும்  என எவரையும் நிர்பந்திக்க இயலாது .ஜல்லிக்கட்டைப் பொறுத்தவரையில் அதன் மீது செலுத்தப்பட்ட தலித் கண்ணோட்டம் மிகவும் முக்கியமானது.இந்த பிரச்சனையில் நியாயம்  பேசும் கண்மூடித்தனமாக   தரப்புகளுக்கு அகநெருக்கடியை ஏற்படுத்திய , புறந்தள்ள முடியாத ஒரேயொரு கண்ணோட்டம் இது மட்டுமே.தன்னெழுச்சிப் போராட்டங்களில் உருவாகும் கண்ணோட்டங்களுக்கு இதன் தன்மை எளிமையானது இல்லை என்கிற விழிப்பு இருக்கிறதா ? என்பது முக்கியமானது.அரசியல் சக்திகள் இத்தகைய போராட்டங்களை தங்கள் கையகப்படுத்த நினைப்பதும் இதன் ஒரு பகுதியே.சிலசயங்களில் இத்தகைய தன்னெழுச்சி மிக்க போராட்டங்களில் இருந்து புதிய தலைமைகளும் தலைவர்களும் உருவாவதும் உண்டு.

அரசியல் போராட்டங்களை அரசு எதிர்கொள்கிற விதத்திற்கும் ,இத்தகைய போராட்டங்களை அரசு எதிர்கொள்கிற விதத்திற்கும் இடையில் பெரிய வேறுபாடுகள் உள்ளன.தன்னெழுச்சியான இத்தகைய போராட்டங்களை அரசு அஞ்சுகிறது.இதன் உளவியல் தாக்கத்தின் மீது அது போர் தொடுக்க விரும்புகிறது.கடந்த இருபது ஆண்டு கால இந்தியாவில் அரசு அடைந்திருக்கும் இறுக்கத்தையும் ,ஜனநாயக விரோத தன்மையையும் அரசு மக்கள் மீது தொடுக்கிற போர்களில் இருந்து அறியலாம்.இந்த குரூரமான போரை இந்திய அரசுகள் அரசியல் கட்சிகள் பங்கெடுக்கும் போராட்டங்களில் அதிகம் பலவந்தம் செய்வதில்லை.மக்கள் மீது போர் தொடுக்கும் அரசின் இந்த முறைமை மிகவும் அபாயகரமானது.ஒரு ஜனநாயக நாட்டில் இப்போக்கு நீண்டு கொண்டே  செய்வது நல்லதல்ல.இந்த முறைமை முற்றுப் பெறவேண்டிய ஒன்று.

இதற்கு அரசு எந்தவிதத்திலும் ,எந்த விஷயத்திலும்,எந்த பிரச்சனையிலும்  தனது தரப்பில் பின்வாங்க விரும்பவில்லை என்பதே  காரணம்.

மக்களின் முன்பாக அரசு பின்வாங்க வேண்டும் .மக்களிடம் பின்வாங்குதல் நல்ல அரசின் குணம்.மாறாக மக்களின் மீது அவதூறு செய்வதும் போர் தொடுப்பதும் ஆகாத காரியங்கள் .மெல்ல மெல்ல அழிந்தே ஆக வேண்டிய அரசின் செயல்பாடுகள் இவை.

தை தைக் கவிதைகள்

தை தைக் கவிதைகள்  1
கலங்கிக் கிடந்த மன ஆழத்திலிருந்து
ஒரு பறவையை உருவியெடுத்தேன்
கலங்கியிருக்கும் போதும் அது உள்ளேதானிருந்தது என்பதைத்
தெளிய வைத்து
அதன் மடியிடுக்கில் எனது ஒரு ஆசையை சொருகி விட்டேன்
ஆறாம் இறகென அதனை அது எடுத்துக் கொண்டோடியது

கலக்கம் கொஞ்சம் தெளியலாயிற்று

காணுமிடம் அத்தனையிலும் ஆசையை சொருகிக் கொண்டே செல்லச் செல்ல
ஆசையாய் ஜொலிக்கிறது ஆகாசம்
தாவரத்தின் கொண்டையில் சூரியனாக
குழந்தையின் கையில் நீர்ச்செம்பாக
பிட்டத்தில் சொருகிக் கொண்ட ஆசை பூமலர்,புது மலர் கொத்தாக

துள்ளித் தெளிகிறது
கலங்கித் தெளிகிறது
வைகுண்டத்தில்
என் பறவை.
பறவைக்கு ஒரு துளி ஆசை என்பதுதான் முழுப் பெயர்

2

கடல் பார்க்க வந்தேன்
பார்த்துக் கொண்டிருக்கிறேன்

மலைகள் காண்பதென் தொழில்
பழகிக் கொண்டிருக்கிறேன்

பார்த்து முடிந்தால் பழகி உணர்ந்தால்
பணி முடியும்

பறவைகளின் பேச்சு பிடிபட்டுக் கொண்டிருக்கிறது
பாதிப் பாதி செய்கையில் கலந்து கொள்கிறோம்
காகங்கள் வந்து கைச்சோறு எடுக்கின்றன

வேறு என்னென்னவோ செய்கிறேனே
எல்லாமிதன் பொருட்டே
புணர்தலும் இதன் பொருட்டே
புசித்தலும்
கவிதை வடித்தலும்
எல்லாம் இதன் பொருட்டே

உங்களை பார்க்கத்தான் வந்தேனென
எண்ணியிருந்தால்...
உங்களைத் தான்
சற்றே எண்ணத்தை
மாற்றிக் கொள்ளுங்கள்

3

என்னிடமிருந்து எதையெடுத்துக் கொண்டீர்களோ
அது உங்களுடையதாகிறது.

அன்பின் ஊற்றையெடுத்துக் கொண்டால் குளம் பெருகும்
இடைவெளியை எடுத்துக் கொண்டால் சுற்றிச் சுவரெழும்பும்

மீண்டும் மீண்டும் கூர்வாளினை எடுத்துக் கொள்வீரேயாயின்
உடலெங்கும் அறுத்துக் கொண்டு சாவீர்கள்

வதந்தியை எடுத்தாட் கொண்டால்
உடல் பிசித்து
மனம் கிலேசம்

ஒரு ஐஸ் பெட்டியை ,களிமண் பொம்மையை
ஒரு குட்டிச் சாத்தானை ,குழந்தையை,பறவையை என்ன
ஒரு பெருச்சாளியைக்கூட எடுக்க முடியும்
எது உங்களுக்குத் தேவைப்படுகிறதோ
அதற்கேற்றார் போலே

உங்களிடமிருந்து எடுத்துக் கொண்ட பெருச்சாளி
உங்களை போலேயிருக்குதென்று
எங்களிடம் ஏனப்பா கோபம் ?

தவற விட்ட தேவதையின் கெக்கலிச் சிரிப்புதான் இது
பராதியொன்றுமில்லை.
போய்வாருங்கள் தேவதையைத்
தவற விட்டோரே !

4

முச்சந்தியில் மூன்றுநாளாக
நின்று பார்க்கிறேன்.

அவன் பொண்டாட்டி இவன் பைக்கில் போய் கொண்டிருக்கிறாள்
இவன் பொண்டாட்டி அவன் காரில் அமர்ந்திருக்கிறாள்
அவள் ஏற்று நடப்பாள் வேறு ஒருவனோடு
இவள் விதியும் அவ்வாறே.

ஒருவரும் ஓரமைதியில் இல்லை.
ஆண்டாள் எப்படித்தான் இப்படியெல்லாம் ஓரிடம் நோக்கித் திறந்தாளோ ?

நான்காவது நாளில் அனைவரையும் இடைமறித்து நிறுத்தி
அவளை இவன் பைக்கிலும் ,இவளை அவன் காரிலும்
மாற்றியடுக்கி அனுப்பினேன்

ஐந்தாம் நாளில் வந்து நிற்கிறார்கள்
முன்னதிலும் கேவலமாக.

5

அல்லி மலர்ந்ததும் பின்
தணுத்ததுமென நீ தந்த நகரா நதிக்காட்சிகளை
கைத்தடியூன்றி கடந்து செல்கிற இப்பயணத்தில்
பனிக்காய்ச்சல் போல கடக்கின்றன பிறக்காட்சிகள் எதிர்படும் ஒளியில்

இதில் அல்லி மலர்ந்ததுதான் உண்மையா
தணுத்தது உண்மையா ?

பனிக்காய்ச்சலா
எதிர்பட்ட ஸ்படிக ஒளியா
எது உண்மை ?

பிறக்காட்சைகள் எல்லாம் பிரேமையா ?
நீ கொத்தித்தின்ற என் உள்ளுடல் காட்சியெல்லாம் மாயையா ?

6

பறந்து கொண்டிருக்கிறது கழுத்திலும் வாலிலும் கறுப்பு கொண்ட நாரை

அக்கரையிலிருந்து இக்கரைக்கு நீஞ்சிக் கடக்கும் பசுவின் முதுகில்
இளையராணியின் பல்லக்கு

நீர்ப்பரப்பில் அலையெழுப்பி நகர்ந்த வெண் கொக்கு

வான்பரப்பில் அலை எழும்பும் கருடன்
சுற்றுவட்டப்புதிர் பாதையில் பறந்து கொண்டிருக்கிறது
படித்துறையிலிருந்து கிளம்பி வந்து
வெகுநேரம் ஆனபின்னாலும்

நிழற்தாங்கல் படைப்பிற்கான வெளி திறப்பு விழா - 05 : 02 : 2017 ஞாயிறு

நிழற்தாங்கல் படைப்பிற்கான வெளி
திறப்பு விழா
படிகத்தின் இரண்டு கவிதை நூல்கள் வெளியீடு
அனைவரும் வருக

நாள்:
05 : 02 : 2017 ஞாயிறு
காலை 9 . 00 மணி முதல் மதியம் 12 . 00 வரை.
இடம்: "நிழற்தாங்கல்" படைப்பிற்கான வெளி
7 / 131 E (அரசு நடுநிலைப்பள்ளி அருகில்)
பறக்கை - 629601  ,நாகர்கோவில்
கன்னியாகுமரி மாவட்டம்
தொடர்புக்கு: 9362682373

திரு. G . தர்மராஜன் I . P . S
கன்னியாகுமரி மாவட்ட
காவல் துறை கண்காணிப்பாளர்
நிழற்தாங்கலை திறந்து வைக்கிறார்

குத்துவிளக்கு ஏற்றுதல்:
எம். சஹீலா பேகம்
பால பிரஜாபதி அடிகளார்
அருட்பணி M . C . ராஜன்

பாலிகை:
எம். பாலின் சகாய ரோஜா

ஒருங்கிணைப்பு: லக்ஷ்மி மணிவண்ணன்
ஆசிரியர் சிலேட்
வரவேற்புரை: என்.சுவாமிநாதன்
(தி இந்து தமிழ், நாகர்கோவில்)

விக்ரமாதித்யனின்
"சாயல் எனப்படுவது யாதெனின்..."
கவிதை நூல்
வெளியிடுபவர்: ஜெயமோகன்
பெற்றுக்கொள்பவர்: சரவணன் சந்திரன்
நூல் விமர்சனம்: பாலா கருப்பசாமி

ஈனில்
(11 கவிஞர்களின் தொகை நூல்)
தொகுப்பாசிரியர்: ரோஸ் ஆன்றா
வெளியிடுபவர்: கோணங்கி
பெற்றுக்கொள்பவர்: கே.என்.ஷாஜி
நூல் விமர்சனம்: லிபி ஆரண்யா

வாழ்த்துரை:
பால பிரஜாபதி அடிகளார்
அருட்பணி M . C . ராஜன்
எம். சஹீலா பேகம்

ஏற்புரை:
விக்ரமாதித்யன்
ரோஸ் ஆன்றா
("படிகம்" நவீன கவிதைக்கான இதழ்)

நன்றியுரை: க. அம்சப்ரியா

அமிழ்து போன்றோர் பனம்பழம்

அமிழ்து போன்றோர் பனம்பழம்

என்னுடைய கடுமையான காலங்கள் அவ்வப்போது வந்து வந்து செல்பவை.இனி நிம்மதியாகவும் அலப்பில்லாமலும் இருக்கப் போகிறோம் என்று தோன்றும் போது கடுமையான காலங்கள் வந்து முன்னுதிக்கும்.ராத்தங்கும்.அவற்றை எவ்வாறு  எதிர்கொள்கிறேன் என்பது அது கடந்து சென்ற பின்னர் யோசிக்க திகிலாகவும் சுவாரஸ்யமாகவும் இருப்பது.கடக்கும் போது வலிதான்.இந்த கடுமையான காலங்கள் எல்லோருடைய வாழ்விலும் வரக்கூடியவைதான்.அவரவருக்குத் தக்கபடி.நீங்கள் ஜோதிட சீகாமணிகளை போய் சந்தித்தாலும் வரும் சந்திக்காவிட்டாலும் வரும் .வாழ்வின் சுழற்சியின் நியதி இது தப்பவே முடியாது.சாமியை கும்பிட்டாலும் வரும் கும்பிடாவிட்டாலும் வரும்.தக்கபடி தக்கபடி .இந்த காலங்களில் மெய்வருத்த கூலி கிடைக்கும்.மெய் வருந்த கடவுள் இரங்குவான்.இவனைப் போட்டு படாதபாடு படுத்துகிறோமே என்று அவனுக்கு தோன்றிவிடும்.சலிக்கும்  .திருவள்ளுவர் பெருமான் தெய்வத்தாற் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்த கூலி  தரும் என்று இதைத்தான் சொல்கிறார்.இதில் "முயற்சி தன் மெய்வருத்த" என்பதே பாடம்.அது விளங்க வேண்டும்.அரசனானாலும் ஆண்டியானாலும் இதில் விதிவிலக்கில்லை.அரசன் நினைத்துக் கொள்வான் இது ஆண்டிக்கு இல்லை போலும் என்று.ஆண்டிக்கு சிலசமயங்களில் தெரிந்திருக்கலாம் அரசனுக்கும் இதே நிற்காது ; தோன்றும் என்பது.

பொதுவாக எவர் ஒருவருடைய செயல்களையும் பராது சொல்ல வாழ்வு சார்ந்தது முயற்சிப்பதில்லை.சில சமயங்களில் சொல்லியிருக்கிறேன்.சொல்லி இரண்டொரு நாட்களில் அதனை நான் செய்யும் படியாக நேர்ந்துவிடும்.இப்படி அனுபவப்பட்டு பட்டே வாழ்வின் கதிநிலை பேரில் பராது முன்வைப்பதைக் கைவிட்டேன்.இப்படி நடக்கிறானே? என்பவர்கள் ,இப்படி ஏன் நடக்கிறான் என்பதையும் சேர்த்து எடுத்துக் கொள்ளவேண்டும்.கடுமையான காலங்கள் எல்லாவற்றிலும் கடுமையான உழைப்புதான் மாமருந்தே .எல்லோருமே கைவிட்டு விட்டார்களா ? நல்லது .அனாதை போன்று எண்ணம் வந்து விட்டதா ? அது மிகவும் நல்லது.மெய் வருந்தும் போது பராசக்திக்கு பட்டினி போட துணிச்சல் குறைவு.ஆனாதையாகிவிட்டோம் என்கிற எண்ணம் வாழ்வில் அவ்வப்போது வரும்படியான வாழ்க்கை வாழ்வதே தலைசிறந்த வாழ்க்கை.அகந்தையின் அத்தனை அழுக்கையும் அது அடித்துக் கொண்டு போகும்.அனாதை ஆகிறவனின்  அருகிலேயே ஆண்டவன் எப்போதும் உடனிருக்கிறான்.எனது அனுபவம் கற்றுத் தந்த உண்மை இது.

பராசக்தி எது பற்றாக்குறையாக ஒருவருக்கு இருக்கிறதோ அதை ஈடுகட்ட இன்னொரு விதமான  பற்றாக்குறையுடன்   இணைப்பாள்.இரண்டும் சேர்ந்தால் முழுமையாகி விடும்.ஆனால் இதனைக் காணத் தெரிய வேண்டும் .இந்த அருள் அவளால் வருவது என்று அறியத்  தெரியாதவர்களை அவள் அகன்று விடுவாள்.பின்னர் குறை பேசி பலனில்லை.பற்றாக்குறை  அனைத்துமே பட்டினிதான் என்பது அவளுக்குத் தெரியும் .  பற்றாக்குறையும் மற்றொரு விதமான  பற்றாக்குறையும் இணையும் போது அமிழ்தாகிவிடும்.ஆனால் அவள் உண்டு பண்ணும் காரியத்தை புலனறியத் தெரியவேண்டும். அலட்சியத்தால் கடப்பவர்களுக்கு இது விளங்காது .அலட்சியத்தைப் போன்றதொரு பேரிடர் வேறில்லை.ஒருசமயம் கடும் பசி.காட்டில் இருக்கிறேன் ஒரு சாமியாரோடு.நாராயணா... என்றதும்  அமிழ்து போன்றோர் பனம்பழம் அப்படியருகில் ஓசையுடன் வந்து விழுந்தது  .அந்த பனம் பழம் உடலில் இறங்கி உயிரானது. அதன் இனிப்பையும் சுவையையும் சொல்லித் தரமுடியாது.நெய்விளக்குப் போல உடலை எரியச் செய்கிற சுவை.  அப்போது நான் இது எனக்கான உணவில்லையே நாராயணா ? சங்கரன்கோவில் பிரியாணியல்லோ எதிர்பார்த்தது என்றிருந்தால் பராசக்தி கைவிட்டுப் போயிருப்பாள்.

பொதுவாக எனக்கு பசி பொறுக்க முடியாது.சிறுவயதில் பட்ட பசி தந்த அனுபவங்கள் அப்படி.வீட்டில் சாப்பிட வரும்போது கழுவி மூடி இல்லையென்கிற நிலையில் வைத்திருந்தால் எனக்கு கொலைக்கோபம் உண்டாகும் . இந்த இடத்தில் பசிக்காது என்பது உறுதியாகிற இடங்கள்  மட்டுமே எனக்கு நிம்மதியானவை .ஒருமுறை ஒரு திரைப்பட இயக்குனரோடு வேலை செய்த போது என்னை இரண்டு நாட்கள் பட்டினி போட்டான்.இவ்வளவிற்கும் சோறு தவிர்த்து வேறு ஊதியம் ஏதுமற்ற வேலை அந்த பிரபல இயக்குனரிடம் நான் பணியாற்றியது.உத்திரவாதங்கள் அனைத்தையுமே காற்றில் பறந்தபோதும் கூட உடன்தானிருந்தேன்.ஏழைகளுக்குத் தருகிற உத்திரவாதங்கள் கடவுளுக்கு தருகிற உத்திரவாதங்களைப் போன்றவை.தன்னிடம் காட்டப்பட்ட உத்திரவாதக்கேடுகளை விடவும் அவன் சந்தர்ப்பம் பார்த்துத் தகித்திருப்பது ஏழைகளுக்கு கொடுக்கப்பட்ட உத்திரவாதங்கள் நலிவடையும் போதுதான். இரண்டு நாள் பட்டினிக்கு அந்த சீமான் என்னிடம் வந்து பேசிய தர்க்கம் கொலைவெறியை ஏற்படுத்தியது.பசிக்கு முன்பாக ஒரு தர்க்கமும் செல்லுபடியாகாது.நமது தர்மங்கள் அத்தனையிலும் பசிக்கு முன்பாக எது செய்தாலும் நியாயம் கண்டு விடும்.திருவள்ளுவரிலிருந்து,பாரதி வரையில் பலர் இதனைச் சொல்லியிருக்கிறார்கள்.அப்போது வேலைபார்த்த அலுவலகம் கவிஞர் கனிமொழியின் வீட்டுக்கு அருகில் இருந்தது.சி.ஐ.டி காலனியிலிருந்து மியூசிக் அகாடமி வரையில் அந்த சீமானை கத்தியை கையில் வைத்துக் கொண்டு விரட்டினேன்.பின்னர் ஒரு ஆட்டோவிற்குள் சீமான் குதித்ததால் கடவுள்  என்னை அன்று கொலையிலிருந்து காப்பாற்றினார்.இப்படி பலமுறை அவர் காப்பாற்றியிருக்கிறார்.

இப்போதைய கடுமை வேறுவிதமானது.இதுவரையில் கண்டிராதது.எல்லாமே நன்மைக்குத்தான். இதனை ஏன் சொல்ல வந்தேன் என்றால் கடுமையான காலங்களிலேயே நான் அதிகம் எழுதியிருக்கிறேன்.சமயங்களே இல்லாது வாதை செய்யும் .இனி நாம் எழுதமுடியாமல் ஆகிவிடும் என்கிற பதற்றம் இருக்கும்.நான் குறைவாக எழுதியிருப்பவற்றில் அதிகம் எழுதியது இப்படியான காலங்களில் தான்.ஒவ்வொரு நாட்களுமே எவ்வளவு முக்கியத்துவம் நிறைந்தவை என்பதை உணரச் செய்யும் காலம் இது.இப்போதும் அது போன்றதொரு நற்காலம்.எழுதிக் கொண்டிருக்கிறேன்.

மகிழ்ச்சி நிறையட்டும் பொங்கல்

பொங்கல் நல்வாழ்த்துகள்

கவிகள்,படைப்பாளிகள் ,வாசகர்கள் ,நண்பர்கள் உறவினர்கள்
அனைவருக்கும் மகிழ்ச்சி நிறையட்டும் பொங்கல்

ஒரு பண்பாட்டிற்குள்ளிருந்து கொண்டு பிற பண்பாட்டின் அம்சங்களை காட்டுமிராண்டித்தனமானது என்று சொல்வதும்   ,பொறுக்கித் தனமானது என்றெல்லாம் தீர்ப்புகள் வழங்குவதும்  , தடை செய்ய முயற்சிப்பதும்  எத்தகைய மனோபாவத்தை அடிப்டையாகக் கொண்டது என்பது விளங்கவில்லை.இந்தியா என்பது பல்வேறு பண்பாடுகளின் சங்கமம் .

பிற பண்பாடுகளின் சாரங்களை ஏற்றுக் கொள்ளாதவர்கள் ,தங்களுடையவற்றை மட்டுமே பண்பாடாக கருதி பிறவற்றை காட்டுமிராண்டித்தனமானவை என்று கருதுவார்களேயானால் இங்குள்ள ஒவ்வொருவரின் பண்பாட்டையும் இதே அளவுகோலை வைத்து காட்டுமிராண்டித்தனமானவை என்று நிரூபணம் செய்து விட முடியும் .அத்தகையதொரு சூழ்நிலையில் இங்கு எவரேனும் மிஞ்ச முடியுமா என்று தெரியவில்லை.

பண்பாட்டு மேட்டிமைத்தனங்கள் எல்லா நிலைகளிலும் அகல வேண்டியவை .அகலட்டும் .அகலும்.

களையக்  களைய வந்து தொற்றும் கவலைகள் களைந்து
மகிழ்ச்சி நிறையட்டும் பொங்கல் 

ஆக்காட்டி இதழ் - நேர்காணல் - லக்ஷ்மி மணிவண்ணன்

வரலாற்றுப் பார்வைகள் எனப்படுபவை வெறுப்பிற்கானவை

நேர்காணல்: லஷ்மி மணிவண்ணன்.
தென் தமிழகத்தின் பனங்கொட்டான் விளை கிராமத்தில் 23- 11-1969-ல் பிறந்த லஷ்மி மணிவண்ணன் வெளிவந்துகொண்டிருக்கும் வலிய இலக்கியச் சிற்றிதழ் ‘சிலேட்’டினது ஆசிரியர். புனைகதை, கவிதை, பத்தி எழுத்துகள், அரசியல் கட்டுரைகள், களச் செயற்பாடுகள் எனப் பல்வேறு தளங்களில் ஓய்வின்றித் தொடர்ச்சியாக இயங்கிவருபவர். ‘சுந்தர ராமசாமியில்லாவிட்டால் என் எழுத்தும் பயணமும் வாழ்வும் இத்திசையிலிருந்திருக்காது’ என அறிவிக்கும் லஷ்மி மணிவண்ணன் இலக்கிய வெளியில் நடத்தும் பயணம் தீவிரமும் அர்ப்பணிப்பும் கொண்டது.
ஓம் சக்தி ஓம் பராசக்தி, வெள்ளைப்பல்லி விவகாரம், 36 A பள்ளம், அப்பாவின் வீட்டில் நீர் பாய்ந்து செல்லும் சுற்றுப்புறங்களிலெல்லாம் செடிகள் நிற்கும், வீரலட்சுமி, எதிர்ப்புகள் மறைந்து தோன்றும் இடம், சித்திரக்கூடம், குழந்தைகளுக்கு சாத்தான் பெரியவர்களுக்கு கடவுள், சங்கருக்குக் கதவற்ற வீடு,அப்பாவைப் புனிதப்படுத்துதல் ஆகியவை லஷ்மி மணிவண்ணனது நூல்கள்.
இந்நேர்காணல் மின்னஞ்சல் வழியே நிகழ்த்தப்பட்டது.
– ஷோபாசக்தி
12. 01.2016
***
னது சிறுவயதிலேயே அம்மா தவறி விட்டார்.எனக்கு நான்கு அல்லது ஐந்து வயதிருக்கும். சாத்தூரில் உயர்நிலைப் பள்ளியில் அம்மா தமிழாசிரியையாகப் பணிபுரிந்து கொண்டிருந்தார். அப்பா அப்போது அருகில் நடுவப்பட்டியில் தமிழாசிரியர். அம்மா என்னைப் பற்றிக் கவலை கொண்டவராகவே என் மனதில் சித்திரமாகி இருக்கிறார் .உறவினர்களும் அவ்வாறேதான் சொல்கிறார்கள்.
யாரேனும் கவலையின் பனிக்கட்டி போன்ற தன்மையை வெளிப்படுத்தும்போது இன்றுவரையில் அம்மாவின் மரணம் அளித்த கசப்புணர்ச்சியே மனதில் மேலோங்கும்.அதனை வேகமாகக் கடக்க முயல்வேன். அவரது தொடுவுணர்ச்சி எப்போதும் என்னிடம் உண்டு. அது என்ன என்பது தெரியும். அது எப்போதும் என்னுடன் பயணப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. என் உள்ளக்கிடக்கையில் அகத்தின் எல்லையாக மினுங்குவது அந்த தொடுவுணர்ச்சியின் தைலம்தான் . அதன் ரீங்காரமும் மணமும்தான் எனக்கு மனப்பதிவின் தொடக்கம்.எனக்குப் பேய் பிடித்திருப்பதாகக் கருத இடமுண்டெனில் அதற்குக் காரணமாகும் ரீங்காரமது. அவரது சில கையெழுத்துப் பிரதிகள் பலகாலம் என்னிடம் இருந்தன.அவர் எழுதிய கட்டுரைகள் அவை.
எனது சிறுவயது என்பதை, சிறு நகரத்திலிருந்து கிராமம் நோக்கித் திரும்புதல் என அர்த்தம் செய்யலாம். சாத்தூரிலிருந்து தொடங்கி எனது சொந்தக் கிராமமான பனங்கொட்டான் விளை நோக்கிக் கிளை பிரிந்து செல்லும் பாதை அது. அம்மாவுடன் இணைந்து சென்ற இரவு நேர ரயில் பயணங்கள், இரவின் மரண மினுங்கல் ஒளி ,சாத்துக்குடி வாசனை நிரம்பிய பேருந்து நிலையங்கள்,வெள்ளை நிற அலுமினியப் பேருந்துகள், இப்படியாகக் கிராமத்தில் நுழையும் பென்ஸ் பேருந்து,அவை கடக்கும் இருபக்கமும் வேலிகள் உயர்ந்த குறுஞ்சாலைகள்,எசலைகள்,கள்ளிகள் பூத்துக் குலுங்கும் கிராமம்.
கடற்கரையை ஒட்டி உள்ளிருந்த கிராமம் அது. மீன் பாரங்களை ஏற்றிச் செல்லும் பனி லாரிகள் ஊரின் குறுஞ்சாலையில் தினம் இரண்டு முறை செல்லும். ஒளி குறைந்த மின்சார விளக்குகள் கொண்ட நாலு கட்டு வீடு. நிறைய மரணங்களைக் கண்ட வீடு அது. இடை மரணங்கள்.என்னுடைய அப்பையாவைத் தவிர்த்துப் பிறர் எல்லோரிடமும் கண்களில் பாதுகாப்பின்மையின் நிழல் உண்டு.
என் அப்பையா ஜோதிடத்தில் நிபுணர். எங்கள் சுற்று வட்டாரம் முழுக்க பிறந்த குழந்தைகளுக்கு அந்தத் தலைமுறையில் பிறப்புக் குறிப்பு எழுதிக் கொடுத்தவர் அவராகத்தான் இருக்கும் . வில்லிசைக் கலைஞராய் இருந்து பின்னாட்களில் கைவிட்டவர். அப்பம்மை சீதா லெட்சுமி வைகுண்டசாமியின் குடும்பத்தில் பிறந்தவர்.
ஊரிலேயே பெரிய குடும்பம் நாங்கள்தான். நிலபுலங்கள்,நஞ்சைகள்,மாடுகள் எனச் செல்வாக்கான குடும்பம்.இப்போதும் எங்களுடைய குடும்பத்தின் பெயரைச் சொன்னால் சுற்றுவட்டாரத்திலுள்ள பழைய ஆட்களுக்குத் தெரியும்.
ஆனால் எனக்கு இளம்வயது மிகவும் கசப்புமிக்கதாக ஒரு புறமும்,கிராமிய தன்மையின் மயக்கம் மற்றொரு புறமாகவும் நினைவில் உள்ளது.
நாங்கள் சிறுவயதில் குழந்தைகளாக நீதியின்மையின் முன்பாகக் கிடந்தோம். இந்த நீதியின்மை இல்லாமையில் இருந்து உருவாகவில்லை.எல்லாமே இருந்தது. அம்மா தவறியதாலும் உருவானது. எல்லாமே இருக்கும் ஓரிடத்தில் ஏன் அநீதி நிகழவேண்டும்? பானை நிறையச் சோறிருக்கும் ஆனால் நாங்கள் ‘அலந்து’ கிடப்போம். இது ஏன் என இன்றுவரையில் எனக்கு விளங்கவில்லை. இருக்கிற இடத்தில் நாங்கள் குறைபட்டுக் கிடந்தோம். இதற்குக் குடும்பத்தில் உள்ள யாரோ ஓரிருவரைக் குறைப்படவில்லை. அதற்குப் பொறுப்பாளிகளாக அவர்களை மட்டும் கைகாட்டுதல் பொறுப்பற்றது. இது ஒரு விநோதமான நீதியின்மை. இதனை எல்லோரும் சில முணுமுணுப்புகளுடன் ஏற்றுக்கொள்ளப் பழகியிருந்தார்கள். அதிகாரம் பெற்றது எதுவோ அது செய்வதெல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ளும் பாங்கு. இந்தியாவில் நான் பார்ப்பதும் இதனைத்தான். இங்கே எதுவும் இல்லாமலோ, பற்றாக்குறையாக இருபதாகவோ நான் கருதவில்லை. மிகப் பெரிய அநீதியின் முன்பாக எல்லாம் நிறுத்தப்பட்டிருக்கின்றன என்றே நினைக்கிறேன்.
இலக்கியம் மீதான உங்களது ஆர்வம் எங்கிருந்து தொடங்கியது என்பதை அனுமானிக்க முடிகிறதா?
வெளிபடுத்தாமல் நாம் வாழ முடியாது என்பதை எனது சிறுவயது நிறையப் பாடம் நடத்திவிட்டது. பசிக்கிறது என்று பொதுவில் சொல்லி விடவேண்டும். இல்லையெனில் சோறு கிடைக்காது. எனக்குத் தீங்கிழைக்கிறார்கள் எனக் கத்தி விடவேண்டும். பொறுத்துக் கொண்டிருந்தால் சோறு கிடைக்காது. தீமை அகலாது. நான் எனது குழந்தைகளுக்குக் கூறுகின்ற ஒரேயொரு அறிவுரை நீங்கள் உங்கள் வலியையோ, துன்பத்தையோ சொல்லிவிடுங்கள் பொறுத்துக் கொள்ளாதீர்கள் என்பது மட்டும்தான்.
சிறுவயது அநீதிகளுக்கும் எங்கள் மீது நிகழ்த்தப்பட்ட தீமைகளுக்கும்,வன்முறைகளுக்கும் எதிராக முதன் முதலாக நாட்குறிப்பு எழுதத் தொடங்கினேன். ஒருவேளை நான் இறந்து போனால் அந்த தீமைக்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பது மட்டுமே அந்த நாட்குறிப்புகளின் நன்னோக்கம். வேறொன்றுமில்லை.
பிறிதொரு குழந்தைக்குக் குடும்பத்திலேயே கிடைக்கின்ற விளையாட்டுப் பொருட்கள், பிரத்தியோகப் பதார்த்தங்கள், புதுத்துணிகள், சிறப்புகள் எங்களுக்குக் கிடைக்காது.
நல்ல மீன் வீட்டில் வாங்கக் கூடாது என நினைப்பேன். நெய் மீன்களும்,விள மீன்களும் வாங்கப்படும் நாட்கள் பிறருக்குரியவை என்பதை அறிவோம்.அன்று எங்களுக்குத் தலையோ செள்ளோ மிஞ்சும். நல்ல மீன் வாங்கினால் அவை எங்கள் வயிற்றுக்கு வராது. மலிவான மீன்கள் வாங்கப்படும் நாட்களில் மட்டுமே செழிக்கச் சாப்பிடுவோம்.
மிகவும் மனத் தொந்தரவுகளுக்கு ஆட்படுத்தப்பட்ட குழந்தையாகவே வளர்ந்தேன். அம்மா இருந்தவரையில் அதீத முக்கியத்துவம் கொண்ட குழந்தை, அவள் தவறியது தொடங்கி அனுபவித்த அநீதிகள்… இவை இரண்டுமே காரணங்கள். இப்படி நாட்குறிப்பிலிருந்தே எழுத்துக்குள் நுழைந்தேன்.
நீங்கள் சுந்தர ராமசாமிக்கு மிக நெருக்கமாயிருந்தவர். உங்களது பார்வையையும் எழுத்தையும் சுந்தர ராமசாமி எந்தளவிற்கு வழிப்படுத்தியுள்ளார்?
அவர் இல்லையானால் நீங்கள் காணுகிற இப்போதைய ‘நான்’ இல்லை. தினசரிப் பத்திரிகைச் செய்தி வாசிப்பவர்கள் மத்தியில் ஒருவேளை வேறோருவிதத்தில் புகழடைந்திருப்பேன்..ஒரு கொலைகாரனாகவோ,வழிப்பறிகாரனாகவோ.
அப்பாவை வெட்டிக் கொலை செய்து விடுவது எனும் நோக்கம் கூர்மைப்பட்டுத் திரிந்த காலத்தில்தான் நான் சுந்தர ராமசாமியைச் சந்திக்கத் தொடங்கினேன். அதற்கு முன்னரே கோணங்கியிடம் பழக்கம் ஏற்பட்டுவிட்டது. என்னைச் சுந்தர ராமசாமியை போய்ப் பார்க்கச் சொன்னவர் கோணங்கிதான். நான் சொல்வது தொண்ணுாறுகளின் தொடக்ககாலம். அதிலிருந்து எட்டு வருட காலங்கள் நெருங்கிய நட்பு. அவருடைய நற்பண்புகளின் கால்பகுதியேனும் மனதில் உறைக்கப் பழகிய காலங்கள் அவை.
அவர் என் வாழ்வின் மிகவும் மதிப்பு மிக்க நினைவு.அவரைப் பற்றிய நூல் ஒன்றை எழுதுகின்ற வாய்ப்பைக் காலம் வழங்குமெனில் பகிரப் பல விஷயங்கள் உள்ளன. அபூர்வமான பறவைகள் காணாமற் போய்விடுவதைப் போல அவர் காணாமற் போய்விட்டார். அவர் மரணத்தின்போது தீவிரமான மனச்சிதைவுக்கு உள்ளானேன். அவ்வளவுக்குக் கலங்கடித்த பிறிதொரு மறைதல் என்னிடம் இல்லை.
அவரது இலக்கியப் பெறுமதி என்பது யூ.ஆர்.அனந்தமூர்த்தி ,பாதல் சர்க்கார்,பேராசிரியர் ராமானுஜம் ஆகியோரைக் காட்டிலும் சிறப்புமிக்கது. அவர் நவீன காலத்தின் சாரம். இலக்கிய இயக்கம்.
தமிழ்ச் சமூகம் அவர்மீது கொண்டிருந்த பராதிகள் அனைத்துமே வெறும் அற்பத்தனமான அவதூறுகளே அன்றி பொருட்படுத்தும்படியானவை அல்ல. இன்றும் என்னிடம் அவரிடம் சாதி, மத துவேஷங்கள் இருந்தனவா எனக் கேட்பவர்கள் இருக்கிறார்கள். இவை அகன்றால்தான் ஒருவரைப் படைப்பாளி என ஒத்துக் கொள்வேன் என்னும் நிலை ஏதுமே என்னிடம் கிடையாது. மட்டுமல்லாமல் இந்த கேள்விகளைச் சுமந்தலைவதுதான் கோளாறே. சுந்தர ராமசாமி இதற்கெல்லாம் சிறிதும் பொருத்தமற்றவர். அவரின் மனப்பரப்பிற்குள்ளேயே இவற்றிற்கு ஏதும் வேலை கொடுக்காதிருந்தவர்.இத்தகைய விசாரணைகளில் சங்கடப்பட்டு நெளிபவர். அக்கறைப்படாதிருந்தவர்.
உரிமைகளின் பொருட்டு எல்லோரும் சமமாகப் பாவிக்கப்படுதல் வேண்டும் என்பதில் அவரிடம் எத்தகைய சமரசமும் கிடையாது.அவர் ஆகச் சிறந்த முற்போக்கு.ஆனால் அவரை முற்போக்கு என யாருக்கும் அடையாளம் காணத் தெரியவில்லை.
சுந்தர ராமசாமியை முற்போக்கு என அடையாம் காண்பதற்கு என்ன தடைகள் இருந்திருக்கக் கூடும் என நினைக்கிறீர்கள். அந்தத் தடையை அவரே உருவாக்கிக்கொண்டாரா என்ன?
அவரே எப்படி அவருக்கான தடையை உருவாக்குவார்? முற்போக்காளர்கள் தன்னைத் தெரிந்துகொள்ளத் தவறுகிறார்கள் என்கின்ற ஆதங்கம் அவருடைய உரைநடைகள் முழுவதிலுமே பாடுபொருளாக இருக்கிறது. பல எழுத்தாளர்கள் முற்போக்குக் கம்பனிகளைப் பொருட்படுத்துவதே இல்லை. பொருட்படுத்திய ஒருசில தமிழ் எழுத்தாளர்களில் அவரும் ஒருவர். முற்போக்கிகள் கருத்து நிலைப்பாடுகளைத் தாண்டி வர இயலாதவர்களாக இருப்பதற்காக அவர் அவரது உரைநடைகளிலேயே நிறையக் கவலையை வெளிப்படுத்தியிருக்கிறார்.
இப்போது ஜே.ஜே: சில குறிப்புகளை எப்படி மதிப்பிடுகிறீர்கள்?
இன்று எனக்கு அது முக்கியமான நாவலாகப் படவில்லை.அவருடைய சிறுகதைகள் காலம் கடந்து வாழும் திறன் படைத்தவை. அவரது நுட்பமும்,அழகுணர்ச்சியும் சிறுகதைகளில் மட்டுமே உள்ளன. ‘புளியமரத்தின் கதை’யை அவரது நீளமான சிறுகதை என்று சொல்லலாம்.கவிதைகளைப் பொறுத்தவரையில் ‘பின் திண்ணைக் காட்சி’, ‘ஆளற்ற லெவல் கிராசிங்கில்’ , ‘மூடு பல்லக்கு’ இன்னும் இவை போன்ற ஒன்றிரண்டு கவிதைகளில் ஆசையுடன் முயற்சி செய்து பார்த்திருக்கிறாரே அல்லாமல், இப்போது மீண்டும் வாசிக்கையில் கவிதைகளில் அவர் எழுதியவை மிகச் சிறந்த அறிவுரைகளாகவும்,அபிப்பிராயங்களாகவும் சரிந்து கிடக்கின்றன. உரைநடையில் தேர்ந்த நிபுணர். ஸ்டைலிஸ்ட் . சிறுகதைகளே அவரது ஆன்மா.
ஜே.ஜே சில குறிப்புகள் நாவல் தமிழில் ஒரு வாசகனுக்குப் புதிய திறப்பாக அமைய முடியும். நவீனத்தின் மீதான திறப்பாக. தமிழ் நவீனத்துவம் பெற்ற ஒரு முழுமையான வடிவம் அல்லது வடிவ தற்சோதனை அந்த நாவல் என்று சொல்லலாம். இன்று உங்களுடைய ‘கொரில்லா’,’BOX’ உட்பட இந்த வடிவப் பரிசோதனைக்குத் தொடர்ச்சி இருக்கிறது. இதற்கு முழுக் காரணம் சுந்தர ராமசாமிதான் என்று சொல்ல முடியாது. நகுலனில் இது தோன்றுகிறது, சுராவிடம் முழுமை பெறுகிறது. என்றாலும் நவீன காலகட்டத்திற்குப் பிற்பாடு ஜே.ஜே சில குறிப்புகள் நாவலின் உள்ளடக்கம் அலுப்பூட்டுவதாக மாறி விட்டது. அது ஒருவகையான நா. பார்த்தசாரதி வகையறா நாவல்தான்.
ஒரு காலகட்டத்தில் தோன்றும் படைப்பு பிறிதொரு காலத்திலும் செல்வாக்குப் பெற இயலாமற்போகுமெனில், அர்த்தம் பெறத் தடையாக இருக்குமெனில் அதில் ஆழப்பொருளும் அகப்பொருளும் இல்லையென்றே அர்த்தம். நவீன காலத்திலேயே உருவான அப்போது மதிக்கத் தவறிய எம்.வி .வெங்கட்ராமின் ‘நித்திய கன்னி’, ‘காதுகள்’ போன்ற படைப்புகள் மீண்டும் மினுங்குகின்றன. லா.ச.ரா நவீன காலத்தின் புறக்கணிப்பையும் தாண்டி நவீன காலத்தின் பிந்தைய நிலையில் புனர்ஜென்மம் பெறுவதையும் கவனிக்க வேண்டும் .
உங்களது இன்னொரு மிக முக்கியமான நண்பர் கவிஞர் விக்கிரமாதித்தனின் ஆளுமை உங்களின் இலக்கிய வாழ்விலும் தனிப்பட்ட வாழ்விலும் எவ்வளவு தூரத்திற்குக் கலந்திருக்கிறது?
விக்கிரமாதித்தன் நம்பியின் போக்கும் என்போக்கும் வேறு வேறு.
அவர் என் மதிப்பிற்குரிய கவிஞர். ஏற்கனவே உருவான நிலைகளை பொதுவெளியில் வைத்து அவர் துகில் உரிந்திருக்கிறார் . சகல கருத்து நிலைகளையும் முகத்தில் காறி உமிழ்ந்திருக்கிறார். நிர்வாணத்திற்கு உட்படுத்தியிருக்கிறார் . அதுவே அவர் வெளிப்படையாக அடைந்த நிர்வாணமும். அதனை மறைக்க அவர் மேற்கொண்ட ஒரு முயற்சியும் கைகூடவில்லை. நரபலி மொழி விளையாட்டு எடுத்துக் கொண்ட நரபலி அவர். சகலத்தையும் கலைத்துப்போட்டிருக்கிறார். பொதுக் கருத்துக்களைத் துவம்சம் செய்திருக்கிறார்.
தமிழ்க் கவிதைகளை மதிப்பிடுவதில் அவருக்கு நிகராக ஒருவரையும் சொல்ல முடியாது.அவரது வாய்ப்பழக்கத்தில் உச்சரிக்கப்படாத ஒருவன் பிச்சமூர்த்தி காலம் தொடங்கி இன்று எழுதும் ஒருவன் வரையில் எவனும் கவியானதாக இல்லை. அந்த அளவிற்குக் கவிதையில் சிந்தனை திரண்டவர் .
அகப்பொருளற்ற கவிஞரவர். தேவதச்சனை அகப்பொருளின் கவிஞன் என்றால் விக்கிரமாதித்தன் நம்பியை அகப்பொருளற்ற கவிஞன் எனலாம். இருவேறு எதிரெதிர் துருவங்களும் தனகதியில் நிலைபெற தமிழ் மொழி சாத்தியம் கொண்டிருக்கிறது. அகப்பொருள் அற்றவர் விக்கிரமாதித்தன் . அகப்பொருள் கொண்டவரைப் போலத் தோற்றம் காட்டுபவர். அகப்பொருள் ஏதுமின்றி தமிழில் ஒரு கவி நிலைக்க முடியுமாயின் அது விக்கிரமாதித்தன் நம்பி அன்றி பிறிதொருவருக்குச் சாத்தியமில்லை.
எனது கவிதைகள் அகப்பொருட்களாலும் ஆனவை.
இன்றைய தமிழ் இலக்கியப் போக்கை எவ்வாறு மதிப்பிடுகிறீர்கள்?
நவீன காலத்தின் மதிப்புகளை விற்றுப் பிழைக்கிறார்கள். பரிசோதனையும், புதிய கண்டுபிடித்தலும் பின்னுக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன. தமிழில் நவீன காலமே இலக்கியத்தின் பொற்காலம். அவர்களின் பார்வைகளை, தரிசனங்களை இப்போதும் விற்று முதலாக்கிக் கொண்டிருக்கிறோம்.
பரிசோதனையும்,புதிய கண்டுபிடிப்பும் இல்லாதவற்றை இலக்கியம் என்று எனக்கு ஒத்துக்கொள்ள முடிவதில்லை.கண்களுக்கெட்டாதவற்றைப் படைப்பு அறியப்படுத்தவேண்டும். எனக்கு ஏற்கனவே தெரிந்த சங்கதிகளை என்னிடம் கொண்டுவந்து மூடை மூடையாகத் தட்டுவதற்கு இலக்கியம் எதற்கு?
இளைஞர்கள் பரிசோதனைகள் பேரில் கவனமற்றவர்களாக இருக்கிறார்கள்.ஏதேனும் உடனடி அறுவடைக்கு ஏற்றவற்றை பயிரிடவேண்டுமென விழிப்புக்கொண்டிருக்கிறார்கள் .சமூக சரிதைகள் வண்டி வண்டியாகக் கொண்டு கொட்டப்படுகின்றன.
கலையும், இலக்கியமும் பயனின்மையின் சார்பில் இயங்குபவை. இந்த முரண் இங்கு இப்போது வேலை செய்யவில்லை. அதற்கான நெருக்கடியிலும் இவர்கள் இன்று இல்லை. அடுத்த தலைமுறையில் பெண்கள்தான் அதிகம் எழுத வருவார்கள் என நினைக்கிறேன். அவர்கள்தான் இப்போது நெருக்கடியில் இருக்கிறார்கள்
‘காலச்சுவடு’, ‘உயிர்மை’ போன்ற இடைநிலை இதழ்களின் இடம் இன்றைய இலக்கியத்தில் என்னவாகயிருக்கிறது?
குமுதம், குங்குமத்தைக் காட்டிலும் தீமையாக நான் கருதுவது இவர்களைத்தான். பரிசோதனைகள் பேரில் ஆர்வம் சூழலில் கழன்று விழக் காரணமானவர்கள் இவர்கள். அந்த இடத்தையே இல்லாதொழித்தவர்கள்! ஒழித்தவனே காவலாளி வேடத்திலும் நடிப்பது போல, உலகமெங்கும் கலை இலக்கியக் காவலர்கள் போலத் தங்களைப் பிரபலப்படுத்தியிருக்கிறார்கள். இவர்கள் இருவரும் ஒழியாமல் தமிழில் இனிப் புதிய முயற்சிகள் எதுவும் தோன்றாது .
இவர்கள் இரண்டு தறுதலைகள் உருவாகப்போக, தமிழில் இவர்களைப் பார்த்துக் கெட்ட, ஒத்த பத்துப் பதினைந்து தறுதலைகள் உருவாகிவிட்டார்கள். இவர்களின் முகவர்கள் இன்று உலகம் முழுவதிலும் இருக்கிறார்கள். இலங்கையில், புலம்பெயர்ந்த நாடுகளில் என. இன்று இவர்களின் பிடிக்குள் சூழல் அகப்பட்டிருக்கிறது. பரிதாப நிலைக்குக் காரணம் இதுதான்.
வணிகம் பேரில் கொண்ட பாரம்பரியமான பார்வைகளால் இதனை நான் சொல்லவில்லை. தமிழ் போன்ற பழம் பெரும் மரபு கொண்ட மொழியில் வணிகமும் கலையிலக்கியப் புதிய முயற்சிகளும் ஒன்றிணைவது இயலாது.ஏனென்றால் பழம்பெரு மரபு கொண்ட மொழிகளில் மக்களின் பெருமிதம் என்பது பழம் பெருமைகளில் தேங்கி நிற்கக் கூடியது. வணிகத்தின் இணைப்புச் செல்வாக்குப் பெற புதிய முயற்சிகள் அதற்கு அவசியமில்லை. மலையாளம்,கன்னடம் எல்லாம் வேறு. அங்கே புதிய முயற்சிகளில் இருந்து மட்டும்தான் அவர்கள் தங்களின் பெருமையை நிலைநாட்ட முடியும்.
மலையாளத்தில் ‘மனோரமா’ போன்ற வெகுஜன வணிக இதழ்களுக்கும் கூடப் புதிய முயற்சிகளும் ஒரு வணிகத் தேவையாக இருப்பதையொப்ப இங்கோ, ஆந்திராவிலோ எதிர்பார்க்க முடியாது. மலையாளத்தில் வைக்கம் முகம்மது பஷீரை யாரென்று எந்த வெகுஜன இதழும் அறியாமல் உயிர் வாழ முடியாது. இங்கே புதுமைப்பித்தன் பிரபலமாவதற்கே இன்னும் நூறுவருடங்களாகும்.
நாலு பேர் சேர்ந்து நட்டப்படத் தயாராக இருக்கும் எத்தனையோ காரியங்களில் அன்றாடம் ஈடுபடத்தான் செய்கிறோம். கூட்டாக ஊர்களில் சேர்ந்து சாமி கொடைகள் நடத்துகிறோம். அதுபோல இலக்கியத்தில் ஈடுபடும் சிறுகூட்டமே இன்றைய தேவை. அவர்களால் மட்டுமே புதிய முயற்சிகள் தமிழில் இனி சாத்தியம். இடைநிலை இதழ்கள் ஈமு கோழி வளர்ப்புப் பண்ணைகள்.
நம்முடைய காரியங்கள் வணிகத்திற்கு அப்பாற்பட்ட சிறு சிறு கூட்டு முயற்சிகளால் மட்டுமே உருக்கொள்ள முடியும். பயனற்ற மடத்தனமான காரியங்களில் மனம் கொண்ட சில சாத்தியப்பாடுகளின் மூலமாக.
வணிகம் பெரும் பின்னடைவையே ஏற்படுத்தும். காலச்சுவடும், உயிர்மையும் வணிகத்தை உலக முகவர்களை ஒன்று கூட்டி நிறுவனமாக்கிச் சதை திரண்ட மதம்போல மாற்றி வைத்திருக்கிறார்கள். இவர்கள் இருவருமே கலை இலக்கியத்திற்கு, புதிய முயற்சிகளுக்கு எதிரான பெருந்தீமைகள். இவர்கள் இப்போது தமிழில் பிராய்லர் கோழி வளர்ப்புப் பண்ணைகளை ஒத்த ஸ்தியை அடைந்திருக்கிறார்கள். இவற்றிடமிருந்து தற்காத்துக் கொள்வதும்,விலகுவதுமே தற்போதைய அவசரம்.
இத்தகைய இடைநிலை இதழ்களைக் களமாக்கிக் காத்திரமான படைப்புகள் வெளியாகிக் கொண்டுதானேயிருக்கின்றன. அநேக படைப்பாளிகளின் முதல் புத்தகங்களை இவர்கள்தானே பதிப்பித்து வெளியிடுகிறார்கள். நம் காலத்தின் தீவிர சிந்தனையாளர்கள் எல்லோருமே ஏதோ ஒருவகையில் இத்தகைய இதழ்களில் பங்கெடுக்கிறார்களே..என் நீங்களே கூட ‘தீராநதி’யிலும் ‘அம்ருதா’விலும் தொடர்ந்து எழுதுகிறீர்களே?
காலச்சுவடு, உயிர்மை போன்றவற்றிலும் கூட நான் எழுதலாம். காலச்சுவட்டில் நிறைய எழுதியிருக்கிறேன். அது பிரச்சனை அல்ல. அவற்றைப் பற்றிய எனது கண்ணோட்டம் என்ன என்பதுதான் பிரச்சனை. ஒரு உதாரணத்திற்காகச் சொல்கிறேன்…அணுவுலையில் வேலை செய்யும் ஒருவர் அணுவுலைகளுக்கெதிரான பார்வை கொண்டிருக்கக்கூடாது எனக் கண்டிக்க முடியுமா என்ன? நீங்கள் கேட்பது பழைய அறங்களை முன்வைத்து.
இன்று ஒருவர் சகலவிதமான எதிர்நிலைகளோடும் ஊடுபாவாமல் வாழ்தல் சாத்தியம் இல்லை. மிக மிக மட்டம் எனப் பிறர் நினைக்கக் கூடிய வெகுஜன இதழ்களிலும் எழுதியிருக்கிறேன்,பணிபுரிந்திருக்கிறேன்.
கவிதா பதிப்பகமும் காலச்சுவடும் ஒன்று அல்ல. இவர்கள் நாங்கள்தான் சக்கரவர்த்திகள் என்கிற ஒரு சொம்பைத் தூக்கிக் கொண்டலைகிறார்களே அதன் பேரில் எனக்கு மதிப்பில்லை. ஒரு மதிப்பீட்டை மறைமுகமாகவும் நேரடியாகவும் உங்கள் தலையில் சுமத்துகிறார்கள். இவர்கள் மதிப்பீட்டை அடிப்படையாகக்கொண்டு வணிகம் செய்வதாக ஏமாற்றுபவர்கள். பிற பதிப்பகங்களைப் போல அல்ல. அவர்கள் வெறும் வணிகர்கள். உயிர்மையிடம் ஏன் மேலும் மேலும் பலர் ஏமாந்துகொண்டிருக்கிறார்கள்!
மிகச் சாதாரணமான சில பதிப்பகங்கள்தான் கழிந்த பதினைந்து வருடங்களில் முக்கியமான படைப்பாளிகள், கவிஞர்களைத் தமிழில் கொண்டு வந்திருக்கிறார்கள். இவர்களும் செய்திருப்பார்கள். அதற்கும் இவர்கள் பேரில் நான் முன்வைக்கிற மதிப்பீட்டிற்கும் குற்றச்சாட்டிற்கும் ஒரு தொடர்பும் இல்லை.
நமது சுழலில் பிரசுர பாக்கியமே பெரிது என்னும் எண்ணம் கொண்டவர்களே அதிகம்.
ஈழத்துக் கவிதைகள் உரத்த குரலில் அரசியலைப் பேசுவதால் அவை உங்களைக் கவருவதில்லை என்ற பொருள்பட ஒருமுறை சொல்லியிருந்தீர்கள். போர்நிலத்தில் அது தவிர்க்க முடியாதவொன்றுதானே…ஈழத்துக் கவிதைகளைப் பாலஸ்தீனக் கவிதைகளுடன் ஒப்பிட முடியுமல்லவா?
சமகால நெருக்கடிகளுடன், சமகாலத்தன்மையைக் கவிதை அடைகிறதா இல்லையா என்பதுதான் பிரச்சனையே அன்றி அது எழுப்பும் குரலின் ஓசை எப்படி இருக்கிறது என்பது பிரச்சனையில்லை.சமகாலத்தன்மையில் தன்னிலை கரையும் கவிஞன் காரசாரமாகவும் பேசலாம், இதமூட்டவும் செய்யலாம்.
ஈழத்தின் விஷயங்களை எனக்குச் சரியாக விளங்கிக்கொள்ள இயலவில்லை. கவிதைகளில் காணக் கிடைக்கும் தன்மைகள் புரிதலுக்குப் போதுமானவையாக இல்லை. வெளிப்படையாகப் பேசுவதானால் ஓரளவிற்கு நான் தனிப்பட்ட முறையில் குலசிங்கத்துடனான நேரடியான உரையாடல்கள், சி.புஷ்பராஜாவின் ‘ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்’, மற்றும் உங்களுடைய படைப்புகள் வழியாக ஒரு சிறு வெளிச்சத்தைப் பெற்றிருக்கிறேன்.
சேரன் போன்றோரை எல்லாம் கவிஞராக எனது மனம் ஒத்துக்கொள்ளவே இல்லை. இலங்கை வைரமுத்து அவர் என்பதுதான் எனது எண்ணமாயிருக்கிறது. தளையசிங்கம் பேரில் எனக்கு மதிப்பிருக்கிறது. அனாரின் கவிதைகள் எனக்குப் பிடிக்கும். நுஹ்மான் மீது எனக்கு மதிப்பில்லை. இவர்கள் ஆகச் சிறந்த பரோவுபகாரிகளாகவும், சான்றோர்களாகவும், நற்சிந்தை கொண்ட நன்மனிதர்களாகவும் இருக்கலாம்.எனக்கு மறுப்பில்லை.அது பற்றி எனக்குத் தெரிய வேண்டிய அவசியமும் இல்லை. உலகம் முழுதுமே நன்மனிதர்களின் எண்ணிக்கை அதிகம் என்றுதான் சொல்கிறார்கள். இவை ஒரு புறம் இருக்கட்டும் .
பாலஸ்தீனக் கவிதைகளுடன் ஈழத்துக் கவிதைகளை நிச்சயமாக ஒப்பிடயிலாது. பாலஸ்தீனக் கவிதைகள் சமகாலப் பிரக்ஞை குன்றாதவை. இரண்டும் வேறு வேறு காலத்திலும் மனோபாவத்திலும் இயங்குபவை. பாலஸ்தீனக் கவிதைகள் நவீன அரசாங்கங்களின் வன்முறையிலிருந்தும், நவீன அரசாங்கங்களின் கொடூரமான முகங்களிலிருந்தும் தோற்றம் கொள்பவை. இலங்கையில் உரத்தகுரல் நவீன அரசைச் சென்றடைவதில் உள்ள பண்ணை முதலாளிகளின், நிலப் பிரபுக்களின் இன, குழு,சாதிமேலாண்மைத் தடைகளிலிருந்து உருவாகின்றனவோ என்கிற சந்தேகம் எனக்குள் இருக்கின்றது. இன்று உலகத்தின் பல இடங்களிலும் ஆயுதம் தாங்கிய யுத்தக் குழுக்களின் பின் செயற்படும் உளப்பாங்கு பல்வேறு காரணிகளாலும் அமைந்திருக்கின்றது. வணிகமும் இதில் அடக்கம். ஆயுத வணிகம். நாம் நேரடியாகக் கருதிக் கொண்டிருப்பதைப் போல நோக்கத்தை மட்டும் கொண்டு இயங்குபவை அல்ல இந்தக் குழுக்கள்.
அவற்றை ஆதரிக்கும் அல்லது நிராகரிக்கும் போக்குகள் மட்டுமே அரசியல் தன்மை கொண்டிருக்கின்றன. அவற்றின் உள்ளீடான காரணங்களும் காரணிகளும் ஒன்றிற்கொன்று தொடர்பற்றவை. இவற்றிற்கிடைப்பட்ட விந்தை என்ன என்பதை அறியும் வேலை எழுத்தாளனையும் சார்ந்தது.
யுத்தம் முடிந்த பின்னர் இனி என்ன செய்யப் போகிறோம் என்கிற மனச்சோர்விற்குப் பெண் போராளிகள் இலக்கானதாக ஸர்மிளா ஸெய்யித்தின் பதிவொன்றில் படித்தேன். எழுத்தாளன் கண்டடைய வேண்டிய முக்கியமான இடம் இது என்பது எனது எண்ணம்.
புலம் பெயர்ந்தோர் தமிழ் இலக்கியப் போக்கை எவ்வாறு மதிப்பிடுகிறீர்கள்?
தமிழ்நாட்டிலிருந்து புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் இதுவரையில் கலை- இலக்கியத்தில் ஈடுபடவே தொடங்கவில்லை. மலேஷியாவிலிருந்து ‘வல்லினம்’ போன்ற குழுக்கள் செயற்படத் தொடங்கியிருப்பதை தவிர்த்து.
இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களே தீவிர இலக்கியத்தில் அக்கறையோடு இருக்கிறார்கள். இப்போது தமிழ்நாட்டிலிருந்து புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களில் பெண்களிடத்தில் தீவிர இலக்கியத்திற்கான தாக்கம் இருப்பதை உணர முடிகிறது. அவையெல்லாம் எப்படி வடிவமுறப் போகின்றன என்பதனை யூகித்துச் சொல்ல இயலவில்லை.
இப்போது தமிழ் சினிமா மாறிவருகிறது என்கிறார்கள் எழுத்தாளர்கள். வணிகச் சினிமாவை எழுதுவதற்கென்றே ‘காட்சிப் பிழை’யென்ற பத்திரிகை அறிவுஜீவிகளால் நடத்தப்படுகிறது. இலக்கிய மேடைகளிற்கு சூப்பர் ஸ்டார்களும் அசட்டு சினிமா இயக்குனர்களும் அழைக்கப்படுகிறார்கள். நாம் வெட்கமுற வேண்டுமா?
தான் செல்கிற அனைத்துப் பாதைகளையும் நியாயப்படுத்திக் கொண்டே செல்வது நமது பொது நோய். காட்சிப்பிழையை ஒரு சினிமா இதழாகவோ, அதில் எழுதுகிறவர்களை அறிவுஜீவிகளாகவோ நான் கருதவில்லை. இந்த சீசன் வியாபார அறிவுஜீவிகளில் பெரும்பாலோர் ‘போர்டு பௌண்டேஷன்’ போன்ற உளவு நிறுவனங்களில் போய் சேர இப்படிப் பயிற்சி எடுத்துக் கொள்வது தமிழ்நாட்டில் ஐந்தாண்டுத் திட்டம் போன்றதொரு பழக்கம். இப்படியான பயிற்சி இதழ்கள் பல வருவதையும் போவதையும் பொருட்படுத்த ஏதுமில்லை. மேலும் தமிழ்நாட்டில் அறிவுஜீவிகள் என்ற தரப்பினரே இன்னும் உருவாகவில்லை வெறுப்பற்ற பார்வை கொண்ட ஒருவர் கூட.
அ.மார்க்ஸ், எம்.எஸ்.எஸ்.பாண்டியன் ,வெங்கடேஷ் சக்கரவர்த்தி ,ராஜன் குறை, பிரேம் எல்லோரையும் கவனத்தில் எடுத்துக்கொண்டே இந்தக் கூற்றைச் சொல்கிறேன். அறிவுஜீவி தமிழில் இன்னும் உருவாகவில்லை.சாம்ஸ்கி, ழான் போத்திரியா, அசீஸ் நந்தி, டி.ஆர். நாகராஜ், அமர்த்தியா சென் போன்றோரே அறிவுஜீவிகள்.
சாகித்ய அகடாமி விருதுகளைத் திருப்பிக் கொடுப்பது குறித்து உங்களது பார்வையென்ன?
பொது இடர்பாடுகள் , பொதுவான உரிமைகளின் மீதான அச்சுறுத்தல்கள் ஏற்படும்போது கூட்டாகச் சேர்ந்து எழுத்தாளர்கள், கலைஞர்கள் குரல் தரவேண்டும். அது ஒரு தார்மீக நிலைப்பாடு. நிலைப்பாட்டின் உள்ளர்த்தமும், அரசியலும் எவ்வாறு வேண்டுமாயினும் இருக்கலாம். அதனை இடர்பாட்டின் நேரத்தில் வெளிபடுத்தத் தேவையில்லை. அப்படிபட்ட நேரங்களில் நிலைப்பாட்டின் மீது அதிருப்தியை வெளிபடுத்துதல் நேர்மைக்குப் புறம்பானது.
எழுத்தாளர்களும், கலைஞர்களும் சாகித்ய அகாடமி விருதுகளை திருப்பிக் கொடுத்தது நல்ல எதிர்வினை. தமிழ்நாட்டில் இதற்கு ஆளில்லாமல் போனது வருந்தத்தக்கது. இவர்களின் சகலவிதமான முற்போக்கு முகமூடிகளும் அதிகாரத்தை மட்டுமே இலக்காக கொண்டவை என்பது தெளிவுபட்டுவிட்டது.
மணிவண்ணன் கொண்டாடும் சிறுதெய்வ வழிபாடும் பண்பாடும் உண்மையில் இந்து மதத்திற்கு வெளியேதான் இருக்கிறதா?
நானொரு இந்து. இந்து மதப் பழக்க வழக்கங்களைக் கடைப்பிடிப்பவன்.சிறு தெய்வ வழிபாடு இந்து மதத்திற்கு உட்பட்டதுதான். நான் எதை வழிபடவேண்டும், எதை நான் வழிபட்டால் அது முற்போக்கானதாகக் கருதப்படும்? போன்ற எத்தகைய உயரிய ஆலோசனைகளையும், அபிப்ராயங்களையும் மேலாண்மை செய்யும் எந்த அசரீரிகளிடமிருந்தும் கேட்பதை நான் விரும்பவில்லை.
புத்தம் இலங்கையில் அநீதி. அதற்காகப் புத்தனைக் கழுவிலேற்ற முடியுமா? ரோமன் கத்தோலிக்கத்தை முன்வைத்துத்தான் நீட்ஷே கடவுளின் இறப்பை அறிவிக்கிறார். கிறிஸ்தவத்தை தூக்கிலிடப்பட்டவனின் மாயவரலாறு என்கிறார் அவர். அதற்காக என்ன செய்வது!
இந்தியாவின் மீது கொலோனியல் யுத்தம் ஒன்று தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கிறது. காலனிய வெளியேற்றம் நடைபெற்ற நாடுகள் அத்தனையிலும் வெளியேற்றத்திற்குப் பின்னரும் பிளவையும்,வெறுப்பையும் மட்டுமே முன்னிறுத்தி நடைபெறுகின்ற யுத்தமிது. அவர்கள் எனக்கொரு வரலாற்றை அணிவிக்க விரும்புகிறார்கள். எனது முற்போக்குத்தன்மைக்குச் சான்றிதழ் தர முயல்கிறார்கள் .இவற்றை நான் வேண்டவுமில்லை, பொருட்படுத்தவுமில்லை.
வரலாறு என்பது புனைவு. அதன் நோக்கம் உங்களிடம் பிளவையும், வெறுப்பையும், சந்தேகத்தையும் மட்டுமே சாதிக்கிறதென்றால் அது மாபெரும் கலோனியல் வரலாற்றுப் புனைவு. உங்களை எந்தத் திசையில் கட்டிவைக்க வேண்டும் என்கிற நோக்கத்தோடு கட்டப்படுகிற புனைவு அது. அது கட்டும் புனைவை ஏற்றுக்கொள்ள வற்புறுத்தும் கருவிகளை என்னுடைய தன்னிலையிலிருந்து தொடர்ந்து கழற்ற முயற்சித்துக்கொண்டிருப்பவன் நான். வரலாற்றைத் துண்டித்து விட்டு எனக்கு இனிமை தரும் எல்லாவற்றிலும் கலந்து கொள்ளவே விரும்புகின்றேன். ஒவ்வொரு பொருளிலும் அதன் அதிகாரம், வரலாறு உட்பட எழுப்பப்பட்டிருக்கும் புறக்கட்டுமானங்கள் அனைத்தையும் நீக்கிவிட்டு நேரடியான மகிழ்ச்சிக்குச் செல்வதே எனது இலக்கு. அவற்றின் மீது கட்டப்பட்டிருக்கும் அதிகாரத்திற்கும் எனது தன்னிலையில் வேலையில்லை, வரலாற்றிற்கும் என்னிடம் வேலையில்லை.
எனக்கு சுடலைமாட சாமியும் ஒன்றுதான் நெல்லையப்பனும் ஒன்றுதான், அன்றாடத்தில் இடையூறை அவர்கள் ஏற்படுத்தாத வரையில். பிள்ளையாரின் நேர்மறையான, எதிர்மறையான சகல அம்சங்களையும் கழற்றிவிட்டு யோசித்துப் பாருங்கள். விந்தையான வினோத உருவம் அது. இப்படிப் பார்ப்பது சாத்தியம். இந்தச் சாத்தியம் மட்டும்தான் உங்களுடன் வரலாறு கொண்டு வந்து கொட்டியிருக்கும் சுய வெறுப்பையும் பிற வெறுப்பையும் கட்டுப்படுத்த உதவும். வரலாற்றுப் பார்வைகள் எனப்படுபவை கலவரங்களுக்கானவை, வெறுப்பிற்கானவை .
வரலாற்றின் பேரில் என் கழுத்தில் மாட்டப்படும் கொலோனியல் அடையாள அட்டைகளை மறுப்பது எனது பணியே. நான் இந்து மதத்தைச் சார்ந்தவன் என்பதில் எனக்கு ஒரு இடர்பாடுமே இல்லை. அது அசரீரிகள் அறிவிப்பது போல ஒற்றைப்படையானதும் இல்லை. அது எல்லா மதங்களையும் போலவே நன்மையையும், தீமையும் கொண்டது. வள்ளலாரும், ராமானுஜரும்,வைகுண்ட சாமியும்,சட்டம்பி சாமிகளும், ஸ்ரீ நாராயண குருவும், அய்யங்காளியும் இந்து மதத்தைச் சார்ந்தவர்கள்தான்.
உன்னிடம் நடக்கும் நல்லவற்றிற்கெல்லாம் நாங்கள் பொறுப்பு, அவலங்களுக்கெல்லாம் நீ கொண்டிருப்பவை மட்டுமே பொறுப்பு என்பது கொலோனியல் மேட்டிமைத்தனம்.
சாதிய ஏற்றத்தாழ்வும் தீண்டாமையுமற்ற இந்துமதம் சாத்தியம் என்கிறீர்களா? நடைமுறையில் சிறுதெய்வ வழிபாடோ பெருந்தெய்வ வழிபாடோ எந்த வழிபாட்டு முறையைச் சேர்ந்த இந்துக்களும் சாதிக்கும் தீண்டாமைக்கும் வெளியிலில்லையே? ஒன்றில் அவர்கள் சாதியரீதியாக ஒடுக்கப்படுகிறார்கள் அல்லது ஒடுக்குகிறார்கள். ஒரே பதிலில் புத்தரையும் அம்பேத்கரையும் பெரியாரையும் ‘தலித்துகள் இந்துகள் இல்லை’ என்ற நவீன அரசியற் குரலையும் நிராகரிக்கிறீர்களா?
சாதிய ஏற்றத் தாழ்வும் தீண்டாமையும் இந்து மதத்தின் சாராம்சங்கள் இல்லை. ஆழ்வார்களும் நாயன்மார்களும் சித்தர்களும் ஒரு சாதிக்குப் பிறந்தவர்கள் இல்லை. உலகின் எல்லா மதங்களிலும் தீமையும் உண்டு. கிறிஸ்தவர்கள் இங்கே கால்வைக்கத் தொடங்கும் போது சாதி பார்த்து ஆய்வுகள் மேற்கொண்டு கால்பதித்து சாதியை தீவிரப்படுத்தியவர்கள். சாதி எப்போதும் கொழுந்து விட்டெரிய வேண்டும் என நினைப்பவர்கள் அவர்கள். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு கிறிஸ்தவ மதப்பிரிவும் ஒவ்வொரு சாதி ஏன்?
தலித்துகள் இந்துக்கள் இல்லை என்ற குரலே தவறானது. இந்தியாவில் பெரும்பான்மையான தலித்துகள் இந்துக்கள்தான். தலித்துகள் இந்துக்கள் இல்லை என்கின்ற வாதம் பொதுவானதொரு அரசியற் குரல் அல்ல. இந்து மதத் தலைமைப் பொறுப்பே பல சமயங்களில் தலித்துகளின் கைகளில் இருந்திருக்கிறது. அய்யன்காளி மிகப் பெரிய உதாரணம். ஏற்றத் தாழ்வுகள் எந்த வடிவத்தில் இருந்தாலும், எந்த பொருளில் வந்தாலும் களையப் படவேண்டுமேயன்றி அதற்கு இந்துமதத்தை மட்டுமே பொறுப்பாக்கக் கூடாது. இத்தகைய பார்வைகள் மரபான வரலாற்றாசிரியர்கள் கட்டுவித்தவை. ஆழ்வார்களிலும் நாயன்மார்களிலும் சித்தர்களிலும் தலித்துகள் உண்டு. இவர்கள் இல்லாத இந்து மதம் எப்படி சாத்தியம்? கோவில்களையும், மடங்களையும் யாரோ சம்பந்தமில்லாதவர்கள் முடக்கி வைத்திருக்கிறார்கள் என்றால் உடைத்து உள்ளே செல்ல வேண்டியதுதான். இந்து மதக் கோவில்கள், புராணங்கள் எல்லாம் எல்லோருக்கும் உரியவைதானே அன்றி பறிமுதல் செய்து வைத்திருப்பவனிடன் ஒப்படைத்து விட்டுக் கலைந்து செல்வதற்கானவை அல்ல.
சாதிய ஏற்றத் தாழ்வுகளும், தீமைகளும் தொடர்ந்து எல்லோராலும் வேறுவேறு காரணங்களுக்காகப் பேணப்படுகின்றன. அரசியல் காரணங்கள்,கொலோனியல் ஆர்வம் ஆகியவையும் இவற்றில் அடக்கம். இந்துமதத்தைக் காரணமும் முழுப் பொறுப்பும் ஏற்குமாறு நிர்பந்திப்பது சரியான அணுகுமுறையில்லை.
எங்கே உங்களது இரண்டாவது நாவல்?
முதலில் நான் எழுதியதே நாவல் அல்ல. நாவலுக்கானதொரு முயற்சி அவ்வளவுதான். இரண்டாயிரத்திற்கு முன்னர் அது எழுதிப் பார்த்தது அவ்வளவுதான்.
தற்போது தமிழில் வெளிவரும் நாவல் எழுத்து பேரில் எனக்கு மதிப்பேதும் இல்லை. யாரிடமிருந்தாவது நாவல் எழுதப்போகிறேன் என்கிற தகவல் கிடைக்கும் போது அவர்களிடமிருந்து ஒதுங்கிக் கொள்ளலாம் என்றேபடுகிறது.
தமிழில் நாவல் எழுத்து என்பது தன்னிலையைப் பிதுக்கி பெரிதுபடுத்திக் காட்டுவதைப் போல உள்ளது. இதற்குத் துணிபவர்களைப் பதிப்பாளர்கள் ஊக்குவிக்கிறார்கள்.சிலர் சமூக சரிதைகளை அள்ளி எறிகிறார்கள் நாவல் என்கிற பெயரில்.
நானும் நாவல் எழுதுவேனாக இருக்கலாம். அதற்கான ஆசை எனக்குண்டு.ஆனால் அது இந்தப் பதிப்பக நெடியிலிருந்தோ, பரபரப்பிலிருந்தோ நிச்சயம் தொடங்காது. அது மட்டுமல்லாமல் நாவல் எழுதியே தீரவேண்டும் என்கிற கட்டாயம் ஏதும் கிடையாது. இப்போது என்னிடம் நாவல் எப்போது? என விசாரிப்பவர்கள்தான் என்னிடம் கெட்ட வார்த்தைகளால் திட்டும் வசையும் வாங்குவதில் முன்னணியில் இருக்கிறார்கள்.
தமிழில் இப்போது எழுதப்படுகிற நாவல்களில் பெரும்பாலானவை பதிப்பாளர்களால் எழுதப்படுபவையே அன்றி எழுத்தாளர்களால் எழுதப்படவில்லை. பதிப்பாளர்கள் விற்பனையின் நலம் கருதி ஆள்வைத்து வேறுவேறு பெயர்களில் நாவல் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.
ஆக்காட்டி -இதழ் 10
பெப்ரவரி 2016.

சிற்றிதழ்களை நோக்கி மீண்டும் நற்காலம் தொடங்கட்டும்

சிற்றிதழ்களை நோக்கி மீண்டும் நற்காலம் தொடங்கட்டும்

பகுதி - 1

மிகக் குறைந்த ஊழியத்தில் ,அதிக அறுவடைகளைப் பெறவேண்டும் என்று எழுத்தாளர்களும் விரும்புவது எல்லா புறங்களிலும் தெளிவாகத்
தெரிகிறது . கவிஞர்கள் தங்களின் முதல் தொகுப்புகளுக்கே சிலை அமைக்கப் படவேண்டுமென அரும்பாடு படுகிறார்கள் . பரிசோதனைகள் பேரிலோ , சவாலான காரியங்கள் பேரிலோ ஈடுபடும் நிதானத்தை இழந்து பரிதவிக்கிறார்கள் .கத்தரிக்காய் பயிரிடுதல் தொடங்கி கோழிப்பண்ணைகள் , அணுஉலை நிர்மாணம் வரை இலக்கியத்திலும் சாத்தியம்தாம் என்பதை ஊர்கூடி கண்டுகளிக்கிறது .இவை உலகின் எல்லா ஊர்களிலும் உள்ள விஷயங்களும்தான் .வேடிக்கைகளும்தான் .அவற்றுக்கும் நமக்கும் உள்ள வேறுபாடு என்ன?அப்படி வேறுபாடுகள் ஏதேனும் இருக்கிறதா?

எல்லா பிரமுகர்களையும் இங்கே எல்லோருமே தெரிந்து வைத்திருக்கிறார்கள் .பழைய கிளி ஜோசியகாரர்களைபோல , பிரமுகர்களோடு எடுத்துக்கொண்ட படங்களும் நொடியில் கைத்திரையில் சொடுக்குகின்றன .ஆனால் கலையில் ஒரு கிளி ஜோசியக்காரனின் இடத்தை நோக்கி நகருவதுஎப்படி என்பதைத்தான் கண்டுபிடிக்கத் தெரியவில்லை . இங்கே பலரும் இன்று கலை இலக்கிய அப்துல் கலாம்களாக மாறும் எத்தனத்தில் இருந்து தாகிக்கிறார்கள். தனிமனித சாதனைகளின் வெளிப்பாடென்று கலை இலக்கியத்தைக் கருதும் போக்கு பலப்பட்டிருக்கிறது.
இவை ஏன் போருட்படுத்தத்தகுந்த கவலைகளாக மாறுகின்றன ? இத்தகைய போக்குகள் இல்லாமல் ஒரு சமுகம் உயிர் வாழமுடியுமா ? இவற்றை பொருட்படுத்தி விவாதிக்க என்ன இருக்கிறது?

மூன்று விஷயங்களை தெளிவு படுத்திகொண்டால் இந்த கவலையின் காரண காரியம் பிடிபடும் .

1 .
புதிதாக நம்பிக்கையோடு எழுத வருகிற இளைஞர்கள் கூட ,தடம் மாறி குறைந்தகால விளையாட்டுகளில் ஆர்வம் கொண்டு சிதைகிறார்கள்.விளையாட்டே இதுதான்போல என்று அவர்கள் கருதுகிறார்கள் .இலக்கியம் என்பது தொடர் அறிதல் இயக்கத்தின் மனோ விஞ்ஞானம் என்கிற அழுத்தம் அவர்களிடம் இல்லை.தனிமனித சாதனைகளின் அங்கம் என்று இன்று கருதுகிறார்கள்

2 .
இடைநிலை இதழ்களை சிற்றிதழ்கள் என கருதும் போக்கு தமிழில் உருவாக்கி இருக்கிறது .இடைநிலை இதழ்கள் பண்பாட்டு முதலாளியத்தின் மதிப்பீடுகளைக் உள்ளடக்கமாக கொண்டவை என்பதை அவர்கள் உணரவில்லை.கப்பைக் கிழங்கை,கஞ்சியை நட்சத்திர விடுதிகளுக்குக் கடத்துபவை அவை . தமிழ் நாட்டில் சொற்பொழிவாளர்களை ; எழுத்தாளர்கள்,கவிஞர்கள் என்று திராவிட இயக்கம் முன்வைத்த போலி மாயைக்கு நிகரானது இந்த பண்பாட்டு முதலாளித்துவம் .இடைநிலை இதழ்கள் தங்களை சிற்றிதழ்கள் என விளம்பரப்படுத்திக் கொண்டமையின் தீமையை இன்று எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. தொண்டு நிறுவனங்களின் சேவையை ஒத்த இலக்கிய தாகம் இவற்றின் பிரதான பண்பு .இடைநிலை இதழ்கள், சிறுபத்திரிகை இயக்கத்தை மட்டுப்படுத்தி இருப்பதில் இருந்து கவனமாக இடம் பெயரவேண்டிய மிக மிக்கியமான கால கட்டம் இது .

சிற்றிதழ்களின் தொடர் அறிதல் இயக்கத்திற்கு நேர் எதிரானவை இவை . பெரும்பத்திரிகைகளும் ,வெகுஜன ஊடகங்களும் சிற்றிதழ் இயக்கத்தை மாற்று செய்வதுபோல பாசாங்கு செய்யும் சக்தி அற்றவை .ஆனால் பண்பாட்டு முதலாளியத்தின் சாராம்சத்தை உள்ளடக்கமாகக் கொண்ட இடைநிலை இதழ்கள் அவ்வாறான பாசாங்கை வெகு நேர்த்தியாக கையாளத் தெரிந்தவை .அதனால்தான் அவை இன்று தனது சகல பாசாங்குகளும் வெளிறி அருவருப்பூட்டிய பின்னரும்  அவற்றிடம் விடைபெறுவது எங்கனம் என்பது தெரியாமால் திசை முட்டுகிறது.இருபது வருடங்களுக்கு முன்னர் தமிழில் அவை உருவாகும் காலத்திலேயே,தங்களை சிற்றிதழ்கள் என்று அழைத்துக் கொண்டதையும் பல்வேறு நூல் பெருக்கிகளை அவை ஊக்குவித்தத்தையும் கண்டறியவிடாமல் செய்தன . சிற்றிதழ்களுக்குரிய சகல பெறுமதிகளையும் அவை தங்கள் வசமாகின.பண்பாட்டு முதலாளியத்தின் இந்த கட்புலனாகா மந்திர வித்தைக்கு விடை கொடுக்க வேண்டிய தருணம் இது .பல்வேறு வகையான சிற்றிதழ்கள் சூழலில் பரிசோதனைகளை முன்வைத்து வரத் தொடங்குமானால்.இந்த மாயை அகன்று திருவிழா பெட்டிக்கடைகளைப் போன்ற தமிழ் நூல் பெருக்கிப் பதிப்பகங்களை அவற்றின் கைப்பிடித்தலில் இருந்தகற்றி ;அவற்றை ஐஸ் க்ரீம் வியாபாரத்திற்கு அனுப்பிவிடலாம்.நூல் களின் அட்டை தயாரிப்பிற்கு பயன்படுத்திய ,தொழில்நுட்பக் கருவிகளைக் கொண்டு அவர்கள் ஐஸ் க்ரீம் விற்றுப் பிழைத்துக் கொள்வார்கள் .

3.
மதிப்பீடுகளும் ,விமர்சனமும் சுணங்கி போயுள்ள நிலையில் , ஓரளவு குறைந்தபட்ச சுரணையோடு இயங்கும் இன்றைய தமிழ்க் கவிஞனை உரைநடையிலும் ,விமர்சனங்களிலும் ஈடுபட ஊக்குவிப்பது தவிர்க்கவே இயலாத செயலாக மாற்றம் காணச் செய்யவேண்டும் . உரைநடையிலும் , விமர்சனங்களிலும் ஈடுபடும் வல்லமை இல்லாத கவிஞர்கள் உலகின் எந்த மூலையிலேனும் இருக்கிறார்களா ? தமிழில் உரைநடை எழுதத் தெரியாதவர்கள் அதன் காரணமாக கவிதையில் ஈடுபடுகிறார்கள்.இந்த துயரம் அகல வேண்டுமெனில் உரைநடையைக் கொண்டு கவிதையை மதிப்பிடும் போக்கு உருவாக்கப்படுதல் வேண்டும்.உரைநடை இயலாமையை மறைப்பதற்கான உத்தியல்ல நவீன கவிதை .

*
கழிந்த இருபது வருடங்களில் தமிழ் கலை ,இலக்கிய சூழல் சுமார் நாற்பது வருடங்களுக்கு முந்தைய இடத்திற்கு நகர்ந்திருக்கிறது .பரிசோதனை ,சுய பரிசீலனை செய்து பார்க்கும் பண்பு ஆகியவை காணாமல் போயிருக்கிறது . கவிதை.ஓவியம் இரண்டையும் தவிர்த்து பிறவற்றில் பெரும் பஞ்சம் . சிறுகதைகளே புதிதாக இல்லை . நாவல் என்கிற பெயரில் எழுதி குவிக்கப்படுகிற ; பதிப்பக பேராசைகளில் நிலபேர ஊழல்களின் மனோபாவம் வெளிப்படுகிறது .நாவல்கள் ஊர்க்கிழவிகளால் எழுத முடிகிற ,சமூக சரிதைகளாகவோ,அறிவுச் சூழ்நிலையின் சில பகுதிகளைத் திரட்டி தொகுக்கிற வேலைத் திட்டங்களாகவோ வந்து குவிகின்றன .இருபது வருடங்களில் தமிழில் நாவல்களே வரவில்லை என்பதை இங்கே ஒரு இளைஞனுக்குப் புரிவிப்பது கூட இன்று சிரமம் .

எழுத்தாளன் ஒரு கதை சொல்லி இல்லை என்பது கூட அவனுக்கு தெரியவில்லை .எழுத்தாளன் கதையைச் சொல்வது ,கதையை தவிர மற்றொன்றை சொல்வதற்கும்தான் என்று சொன்னால் இன்று அவனுக்கு வேர்த்துக் கொட்டுகிறது.கதையெனும் பாவனையை நிகழ்த்தி அவன் தனது படைப்புலகத்துடன் இணைப்பை உருவாக்குபவன்.கதைசொல்லியை எழுத்தாளன் என்று சொல்வது ,ஊர்க் கிழவிக்கு திருமண ஏற்பாடு செய்வதை ஒத்தது.எல்லா ஊர்க்கிழவிகளிடமும் சொல்வதற்கொரு கதை உண்டு . எழுத்தாளன் ஒருபோதும் துணியத் தயாராகாதவை அவை .படைப்புக்கு எதிரான ,போஸ்ட் கலோனியல் ஆயுதங்களில் ஒன்றான போர்டு பௌண்டேஷன் போன்றவற்றால் முன்வைக்கப்பட்ட மொண்ணைத் தனத்தால் ஆனவை அவை .தமிழ் அறிவுஜீவியின் காதை அறுத்தெடுத்தவர்களும் அவர்கள்தாம்.

*
இந்தப் பின்னணிதான் இன்று தமிழில் எல்லோரும் துணிந்திருக்கிற நாவல் பெருக்கிப் பழக்கம் .
தமிழ் நாட்டில் நடைப்பயிற்சியில் ஈடுபடும் எல்லோரும் கலந்து பேசி மூவாயிரம் பக்கம்,நாலாயிரம் பக்கம் என்று நாவல் எழுதும் உத்வேகத்திலும் ,செயல் திட்டத்திலும் இருக்கிறார்கள் .நடைப்பயிற்சியின்போது சர்க்கரை அளவை பிறரிடம் விசாரித்துக் கொள்வதைப் போல ;நாவலை எழுதி முடித்து விட்டீர்களா? எவ்வளவு பக்கம் வளர்ந்திருக்கிறது ? என்பதையும் விசாரிக்கத் தயங்குவதில்லை.இடைநிலை இதழ் பண்பாட்டு முதலாளிகள் ,நூல் பெருக்கி பதிப்பகங்கள் ;நடைப் பயிற்சிக்காரர்களை நம்பித்தான் கடையே அமைத்திருக்கிறார்கள் .எனவே அவர்களின் ஊக்கம் இவர்களுக்கிருக்கிறது . ஆங்கில மருத்துவர்களும்,தமிழ்ப் பதிப்பாளனும்தான் நடைப்பயிற்சிக்காரர்களின் அசையும் சொத்துக்களாகத் திகழுகிறார்கள் .

பகுதி - 2

விமர்சனம் என்பது ஊருக்கு நான்கு வார்த்தைகளைச் சொல்கிற விஷயமில்லை .தனக்கு தானே சில தெளிவுகளை ஏற்படுத்தி கொள்கிற காரியமும் தான்.நான் இத்தகைய காரியங்களை செய்ய விரும்பவில்லை ஏன் ? என்பதை வார்த்தைகளைக் கொண்டு விளங்க முயற்சிப்பது அது.இங்கே நாவல் எழுதுகிறேன் பேர்வழிகள் , எம்பித் தாவிக் கொண்டிருக்கிறார்கள் . ஆனால் ஒரு கதையும் நடக்கவில்லை மரங்கள் மொட்டையானதைத் தவிர்த்து ! சிறிய,பெரிய பக்க பேதங்கள் ஏதுமற்று . சிறிதாக எழுதியவனும்,பெரியதாக எழுதியவனும் எல்லோருமே ஒரே காரியத்தைத்தான் இருபது வருடங்களாகச் செய்து வருகிறார்கள்.நல்ல படைப்புகளின் எளிய விதியே ,வாசிப்பவனின் அகத்தை உடைத்து புதிய அகத்தை உருவாக்குவதில் அடங்கி இருக்கிறது .படைப்பில் ஏற்கனவே இருந்த அக மனிதன் மடிந்து செயலிழந்து புதிதாக உருவாகவேண்டும் . தமிழில் இப்படியொரு படைப்பு "என்னை இந்த இருபதாண்டுக்குள் வெளிவந்ததில் உருக்குலைத்து தெருவில் நிற்கவைத்தது ,மீண்டு உருவாக கால அவகாசம் தேவைப்பட்டது" என்று ஒரு வாசகனுக்கு தோன்றிய நாவல்கள் ஏதேனும் உண்டா ?

தானே உருவாக்கிய உலகத்தைக் கூட பிரதிஎடுக்கிற எழுத்தாளனை சிறந்த வாசகன் ஊக்குவிப்பதில்லை.அதிலும் தமிழ் வாசகன் குறைந்த எண்ணிக்கை எனினும் நிரம்பிய சத்து நிறைந்தவன்.தாது புஷ்ட்டி . அவன் கொண்டு பிறந்த தமிழின் நவீன மரபு அத்தகையது.அவன் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறான் இந்த நாவல் எழுதும் வேடிக்கை விநோதங்களை ? தமிழில் அச்சு எந்திரங்கள் தங்கள் உற்பத்தியைப் பெருக்கிய போது ,நாவல் என்கிற கார்ப்ரேசன் குப்பைத் தொட்டிகளைத் தினுசாக வடிவமைத்த போது, உலக அளவில் சிறுகதைகளுக்கான நோபல் வழங்கப்பட்டது.

நோபல் ஒரு தரச் சான்று அல்ல .நமது பிராந்திய மொழிகளில் நோபல் பெற்ற படைப்புகளைக் காட்டிலும் பெறுமதி கொண்ட படைப்புகள் அதிகம்.இதனை இப்போது சொல்வதே தன்னுடைய அகத்தின் தற்கால சமநிலையில் தமிழ் எழுத்தாளன் எவ்வளவு தூரம் இந்த காலத்தில் முடங்கி போய் இருந்தான் என்பதை சுட்டுவதற்குத்தான் . தற்கால தமிழ்க்கதைகளின் பெருமதி மிக்க கலைஞனான கோணங்கி . உள்ளூர் பதற்றத்தில்,"நாவல் எழுதாதவர்கள் எல்லாம் செத்து மடிந்து விடுவார்கள்போல' என்றஞ்சி; தனது சிறுகதை மொழியை முப்பெரும் நாவல்களாகப் பாய் விரித்தபோது அவரிடம் 'கோணங்கி ஐந்து பக்கத்துக்குள் ஒரு சிறுகதை எழுதிக் கொடுங்கள் "என்று பரிந்துரைத்தேன் .இன்றைய சூழல் மீதான கடும் எதிர்வினை என்பதை புரிந்து கொண்ட அவர் எழுதினார்.அவரிடம் தொற்றியிருந்த பதற்றத்தை உண்மையாகவே கலங்கினேன் .பிறரை எனக்குப் பொருட்படுத்தும் அவசியம் ஏதும் இருக்கவே இல்லை .

இனி இந்த நிலையை நீடிக்க விடக்கூடாது எனில் புதிய பரிசோதனைகள் அவசியம் என்று உணரும் வாசகன் சிற்றிதழ்களை தனது கைவசத்திற்குக் கொண்டு வரவேண்டும் . வாசகன் தொடர்பு பெறாத 2G அலைகற்றை குத்துபாட்டுப் பண்பாட்டையும்,பண்பாட்டு முதலாளியத்தின் முகங்களானசகதிக்குப்பை இடைநிலை இதழ்களின் கோர முகங்களையும் தெளியவேண்டும் .வாசகன் சூழலில் பொறுப்பெடுத்தாலே அன்றி காரியங்கள் நடைபெறாது .களைப்பிற்கு அவன் எடுத்துக் கொண்ட கால அவகாசம் போதும் என்றே தோன்றுகிறது . இல்லையெனில்  ஒரு வழிப்பாதைகளாகி விட்ட தற்காலத் தமிழ் கலை இலக்கிய சூழலை கூர்மையான வாசகனை நோக்கி மாற்றியமைப்பது,கால தாமதமாகிவிடும்.

இடைநிலை இதழ் தொழிலாளர்களுக்கு மாற்று ஏற்பாட்டை அரசுக்கு பரிந்துரைக்க இதுவே நல்ல தருணம்.இடைநிலை இதழ்களின் பண்பாட்டு உள்ளடக்கத்தை மமதையாகக் கொண்டலையும் விசுவாசிகளின் நன்னடத்தைக்கு : நோக்கியா கம்பனி கடையடைத்த போது கடைபிடித்ததை போன்று கட்டாய ஓய்வு கொடுப்பதைத் தவிர்த்து வேறுவழிகள் ஏதும் இல்லை .அவர்கள் தமிழின் இருபது வருடங்களை கூடியமட்டும் அதிகார மோப்ப சக்தியின் விசுவாசத்தால்  அவமதித்து போதாதா ?

எண்பதுகளிலிருந்து 90களின் ஆரம்ப காலம்வரையில் தமிழில் நடை பெற்ற காரியங்களின் தொடர்ச்சியிலிருந்து சகலத்தையும் தொடங்கியாக வேண்டும்.நடைபெறுகிற புத்தக விழாக்கள் மண் மூடாமல் எதையும் புதிதாகச் செய்வதற்கில்லை .

பகுதி - 3

தமிழில் படைப்பை குழந்தைப் பேற்றோடு ஒப்பிடும் ஒரு மரபு உண்டு . எல்லா கூட்டங்களிலும் படைப்பு வேதனையை பிரசவ வேதனையோடு ஒப்பிடும் ஒருவர் இருந்தே தீருவார் .அவர் இல்லையெனில் கூட்டத்திற்கு அமங்கலம்.இதனை நடைப் பயிற்சிக்காரர்கள் செவ்வனே புரிந்து வைத்திருக்கிறார்கள் .குழந்தையின் எடை முன்று கிலோவுக்குக் குறையக் கூடாது என்பதை மருத்துவ ஆலோசனையின் பேரில் கூடுமானவரையில் கடைபிடிக்கிறார்கள் . பரவாயில்லை அது அவர்கள் பாடு .

இதில் கவிஞனுக்குரிய,சிறுகதை ஆசிரியனுக்குரிய சோகம் என்னவெனில் , இந்த நடைப் பயிற்சிக்காரர்கள் விடுக்கும் கேள்விகளைத் தாங்க முடியாமல் போவதுதான் !

"நாவல் எழுதுகிறீர்களா?
எப்போது முடிப்பீர்கள் ?
எப்போது தொடங்குவீர்கள் ?
ஏனின்னும் தொடங்காமலிருக்கிறீர்கள் ?
சும்மாதானே இருக்கிறீர்கள் ஒரு நாவல் எழுத வேண்டியதுதானே?
அடுத்தது என்ன நாவலா ?எத்தனை வால்யூம் ?
உங்கள் திறமைக்கு பத்தாயிரம் பக்கம் எழுதலாமே ?
நாவல் எழுதாமல் காலத்தை ஏன் வீணடிக்கிறீர்கள் ? "

இவ்வாறெல்லாம் எதிர்த்து வருபவரிடம் கேட்டுக் கேட்டுப் பழகுபவர்கள் , தனியேயும் சில நேரம் இவற்றை புலம்பத்தொடங்கும்போது விதி விளையாடத் தொடங்குகிறது . அடுக்களையில் சென்று மனைவிமார்களிடம் இவர்கள் சொல்லப்போக , அவர்கள் இதனை உண்மையாக எடுத்துக் கொண்டு :இவர்கள் மறுமுறை நினைவுபடுத்துவதற்கான அவகாசத்தைக் கூட தராமல் முன்னூறு ,நானூறு  பக்கத்தை முடித்து விடுகிறார்கள் .அதோடு விஷயம் நிற்பதில்லை.பக்கத்து வீட்டுக்காரனின் தயவோடும் , சிபாரிசோடும்விருதுகள்,பட்டங்கள்,பெறுமதிகள்,பரிசுகள் என்று தட்டி விடுகிறார்கள் ?

ஒரு கவிதையோ,கதையோ ஒருவர் சிறப்பாக எழுதிவிட்டால் :அடி கொடுத்து வீட்டுக்கனுப்பி சங்கிலியால் கட்டிவைத்து நாவல் எழுத உத்தரவு இடுகிறவர்களும் இருக்கிறார்கள் .ஒருவர் கவிஞனாக மட்டுமே அல்லது சிறுகதை ஆசிரியனாக மட்டுமே செயல்படும் பேச்சுக்கே இங்கு
இடமில்லை .கவிஞனுக்குத் திரும்பும் திசை எங்கும் முட்டுச் சந்துகள் .எப்படி தப்பிப்பான் ?

90 களுக்குப் பிறகு தமிழ் இலக்கியத்தில் நடந்த மாற்றம் என்று கவிதை ஒன்றை மட்டுமே சொல்ல முடியும்.பிற வடிவங்களில் பதிப்புகள் பல்கிப் பெருகி இருக்கிற அளவுக்கு உள்ளடக்கத்தில் மாற்றம் ஏற்பட்டதாகச் சொல்லமுடியாது .மாற்றம் ஏதும் ஏற்படவில்லை என்று வேண்டுமானால்
சொல்லலாம் .பதிப்பின் பெருக்கத்திற்கு எதிர்திசையில் 90 களுக்குப் பிறகான காலகட்டத்தை போரிட்டு வென்றவர்கள் தமிழில் கவிஞர்கள்தாம் . பெருக்கத்திற்கு எதிராக உண்மையாகவே இவர்கள் போரிட்டார்கள் . முந்தைய தலைமுறையின் சாராம்சங்களைக் கடந்து காலத்தை நெருங்க : பெருக்கத்தில் சூழல் பழுதுபட்டிருந்த நிலையிலும், கவிஞர்கள் மேற்கொண்ட முயற்சிகளை யுத்தம் என்ற வார்த்தையிலன்றி வேறு எதன் மூலம் குறிப்பிட்டாலும் பொருந்தாது .

சமூகம் ; பொருளாதாரத்தின் சுருதியை ,விசையை வேகம் கூட்டிய இந்த காலகட்டம் தொழில்நுட்பத்தின் அசுரத்தனம்.நவீன காலத்திற்குப் பிந்தைய தமிழ்க் கவிஞர்கள் இந்த சமயத்தில் நாடோடி வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்கள்.ஆண்களானாலும் சரி, பெண்களானாலும் சரி !மேலும் மேலும் விளிம்பு நிலைக்குச் சென்றார்கள் .தப்பிப் பிழைப்பதில் நம்பிக்கை கொண்டிருந்தவர்கள் மட்டும் இவர்களோடு தொடர்பு வைத்திருந்தார்கள் . இந்த ஸ்திதி நிலையை ஏற்றுகொள்ளாமல் பொதுநிலைக்குத் திரும்பியவர்களை கவிதை கைவிட்டுச் சென்றது ! மலையாளத்தில் இந்த அலைச்சலும்,நாடோடித்தனமும் ,அனாதைநிலை விளிம்பும் நவீன காலத்தைச் சேர்ந்தவை எனில் தமிழில் பின் நவீன கவிஞனின் மீது ஏறி அமர்ந்து கொண்டவை. விதியாய் கவிந்தவை.இன்று எவர் ஒருவராக இருந்தாலும் 90 களுக்குப் பிந்தைய தமிழ்க் கவிதையில் நடந்திருக்கும் மாற்றங்களை அறிந்து கொள்ளாமல் சமகாலத்தன்மையை தமிழ் மொழியில் அடைவது என்பது சாத்தியமற்றது .

*
90 களின் பாதிக்கு பிறகு சிறுகதை ,நாவல் போன்ற வடிவங்களில் மேற்கொள்ளப்பட்டு வந்த பரிசோதனை முயற்சிகள் அனைத்தும்
கைவிடப் பட்டன .சிற்றிதழ்கள் முடங்கின .இன்று இலக்கிய பிரமுகர்களாக ,பொது மக்கள் மத்தியில் அறியப்படும் ஜெயமோகன்,
எஸ்.ராமகிருஷ்ணன் ,சாரு நிவேதிதா எல்லோரும் ஒரு காலத்தில் பரிசோதனை எழுத்துக்களை எழுதிப் பார்த்தவர்கள் தாம்.அப்போதும் மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருந்தவர் சாரு நிவேதிதாதான் .எஸ்.ராமகிருஷ்ணனின் "தாவரங்களின் உரையாடல் "என்ற சிறுகதை நூல் ஒரு நல்ல முன்னெடுப்பாக அப்போது இருந்தது .அதுபோல ஜெயமோகனின் "திசைகளின் நடுவே " ,கோணங்கியின் "பொம்மைகள் உடைபடும் நகரம் ",சுரேஷ் குமார இந்திரஜித்தின் 'அலையும் சிறகுகள்" T .கண்ணனின் "கல்வெட்டுச் சோழன் " ,தமிழ்ச் செல்வனின் 'வெயிலோடு போய்",வாளின் தனிமை "போன்று பல முன்னெடுப்புகள் .எம்.டி.முத்துக்குமாரசாமி , விமலாதித்ய மாமல்லன் , கோபி கிருஷ்ணன் ,சி.மோகன் என்றிருந்த ஒரு தீவிர நிலை .

பரிசோதனை முயற்சிகளின் தீவிரத்தில் ஈடுபடுகிறவர்கள் பெருக்கிக் காட்ட இயலாதவர்கள் என்பதல்ல அர்த்தம்.அறிதலின் தீவிரம் ஒரு சுகானுபவம்.அதை வாய்க்கப் பெற்றவர்கள் பெருக்குவதில் ஈடுபடுவது கடினம் .இன்று சுகானுபவம் என்றால் அதனை கெட்ட வார்த்தையாகப் பார்க்குமளவுக்குக் கேடு . அறிதலின் தீவிரம் உண்மையாகவே ஒரு பரவசநிலை வாசகர்களுக்குமே ?அப்போது வாசகர்கள் எல்லாம் நிமிர்ந்து நடந்தார்கள் .

எழுத்தில் சவால்களை நோக்கிச் செல்லவேண்டியதில்லை , உற்பத்தியைப் பெருக்கினால் போதும்,தனிமனித சாதனையை சொரூபப்படுத்தினால் போதும் என்று இரண்டாயிரத்தில்தான் முடிவு செய்தவர்கள் வந்து சேர்ந்தார்கள் .வாசகர்களின் செல்வாக்கிலிருந்து கைமாறி பொதுமக்களின் செல்வாக்கிற்கு சூழல் சரியத் தொடங்கியதும் இதே கால கட்டம்தான்.நான்குவழிச் சாலைகளை ஒத்த நாவல் பெருக்கிகளும் தைரியம்
பெற்றார்கள் .இடைநிலை இதழ்கள் பண்பாட்டு முதலாளியத்தை வேகம் பிடித்தன.அதுவரையில் மலிவான உற்பத்தியை பெருகியவர்கள் எவருமே மதிக்கப்பட்டதில்லை .இன்று ரோடு கான்றாக்டர்கள்தான் சூடு பிடிக்கிறார்கள் ?

தமிழில் நவீன காலகட்டத்தில் எழுதப்பட்ட நாவல்களோடு ஒப்பிட்டு ஒருவர் இரண்டாயிரத்திற்குப் பிறகு நாவலே தமிழில் எழுதப்படவில்லை எனக் கூறினால் இன்று பொதுமக்கள் நம்பமாட்டார்கள் . இது வெறும் அதிர்ச்சி மதிப்பீட்டிற்காகச் சொல்லப்படுவதாய் அவர்கள் கருதக்கூடும் .தமிழில் நவீன காலகட்டத்தில் தமிழ்ச் சிறுகதை வளத்தையும்,நாவல் அடைந்த உன்னத இலக்குகளையும் அறிந்த வாசகனுக்கு இதில் அதிர்ச்சி ஏதும் ஏற்படாது .
எம்.வி.வெங்கட்ராமின் "நித்யகன்னி",லா.ச.ராவின் "அபிதா",வண்ண நிலவனின் "கடல்புறத்தில்",ஜி.நாகராஜனின் "குறத்தி முடுக்கு " , தி.ஜானகிராமனின் "அம்மா வந்தாள் ',அசோகமித்திரனின் "கரைந்த நிழல்கள்',"18 வது அட்சகோடு ",போன்ற படைப்புகளை வெற்றிகொண்ட வாசகனுக்கு இது விளங்கும்.சம்பத்,நகுலன்,பிரமிள் போன்றோரின் தகிப்புகள் சாட்சிகள்.சிறுகதைகளுக்கும் ,நாவல்களுக்கும் தமிழின் நவீன காலம் ஒரு பொற்காலம் .
மௌனியும்,புதுமைப்பித்தனும் மட்டுமல்ல ; பிரமிள்,அழகிரிசாமி , சுந்தர ராமசாமி ,கிருஷ்ணன் நம்பி,ஜி.நாகராஜன் ,நா.முத்துசாமி இன்னும் பலர் தமிழ்ச் சிறுகதையில் ஏற்றெடுத்த தூரங்கள் அதிகம்.இந்த முன்னெடுப்பும்,பாய்ச்சலும் தமிழ் நவீனத்துவத்தைத்  தாண்டி நாம் வெகுதூரம் செல்ல துணை செய்திருக்கவேண்டும்.அடைந்திருப்பதோ வறுமையின் தாங்கொணா துயரம் .

புதுமைப்பித்தனும்,மௌனியும் ஏன் நாவல் எழுதிப் பெருக்கவில்லை ? மௌனி ஏன் இருபத்திரெண்டே கதைகளில் நிறுத்திக்கொண்டார் ?ஏன் அவர்கள் தங்களைப் பெருக்கி காட்டவில்லை? நா.முத்துசாமி ஏன் பெருக்கிப் பெருக்கி ஓடவில்லை ? செய்ததைத் திரும்பிச் செய்வதோ,பல்கிப் பெருக்குவதோ எழுத்தாளனின் வேலை இல்லை.சிறந்த எழுத்தாளன்:தான் உருப்படியாய் செய்த காரியத்தைக் கூட திரும்பச் செய்ய முயலமாட்டான் .
இன்றளவும் மிகப் பெரிய படைப்பு மேதைகளாகத் திகழும் தாஸ்தேவெஸ்கியும் ,பிரன்ஸ் காப்காவும் வாழ்நாளெல்லாம் தங்கள் படைப்புகளின் தன்மையை சந்தேகித்தார்கள் .குறைபட்டுக் கொண்டார்கள் . காப்கா பிரசுரத்திற்கே முன்வரவில்லை .போர்ஹே தனது மடத்தனத்தின் மீதும்,மூட நம்பிக்கைகள் மீது கவலை கொண்டிருந்தார் .எழுதுகிறவனுக்கு எப்போதும் குறிக்கோளாக இருக்க வேண்டியது கூர்மையான வாசகனே
அன்றி ,பொதுமக்கள் செல்வாக்கைத் திரட்டிக் கொண்டுவந்து அவன் வாசகனை மிரட்டக்கூடாது.

தமிழ் நவீனத்தின் சிறப்புகளைக் கற்க விரும்பும் மாணவனுக்கு இரண்டு எளிய நூல்களை சிபாரிசு செய்ய முடியும். அவை இலக்கியம் பயில விரும்பும் மாணவனுக்கு அடிப்படை வழிகாட்டி நூல்களாக உதவக்கூடும்.அவை நவீன தமிழ் இலக்கியம் முறையாகப் பயிலும் மாணவர்களுக்கு பல்கலைக் கழகங்கள் பாடநூலாக வைக்கத் தகுதி கொண்ட நூல்களும் கூட . ஜெயமோகனின்"கண்ணீரை பின்தொடர்தல்",சி.மோகனின் "காலம் கலை கலைஞன் "ஆகிய இரண்டு நூல்களுமே அவை.தவிர பிற அநேகம் .முதலில் இவை

எண்பதுகளின் தொடக்கம் தொட்டு 90 களின் முற்பகுதிவரையில் தமிழ் படைப்புலகம் சிறப்பான மனநிலையில் இருந்த காலம் .தமிழ்ச் சிறுகதையில் அரிய சாதனைகளை நிகழ்த்திச் சென்றிருந்த முந்தைய தலைமுறைக்குப் பின்னர்,அவ்வளத்தின் பேரில் மதிப்பும்,புதிய வழித்தடங்களைத் தேடும் ஆர்வமும் முனைப்பு பெற்றிருந்த காலம் .படைப்பின் மதிப்பைத் தவிர்த்து பிற பெறுமதிகளின் வழியே படைப்பை நிலை நிறுத்திவிட முடியும் என்கிற நம்பிக்கை தோன்றியிராத காலம் .

வெற்றியை நோக்கி என்கிற தடுமாற்றம்,கரவு,பரபரப்பு ஏதும் மனப்பரப்பில் லெட்சியம் பெற்றிருக்கவில்லை .ஒரு சிறுகதை ஆசிரியனென்றால் :அவன் ஏற்கனவே உள்ள வளங்களைத் தெரிந்து புதிய முயற்சியில் புதிய பாதிப்பை ஏற்படுத்துபவனாக இருக்கவேண்டும்.அறிதல் முறையில் புதிய திசையை நோக்கி சில அங்குலமேனும் நகர்ந்திருக்கவேண்டும்.இதுவே அப்போதைய இலக்கிய தகுதி .வாசகர்களும்,பதிப்பாளர்களும் கூட இதில்தான் ஆர்வம் கண்டார்கள்.அந்த காலகட்டத்தில் வந்த எல்லாவகைச் சிற்றிதழ்களும் இதற்கு சாட்சி .படைப்பென்றால் ஏற்கனவே அடைந்துள்ள அறிதலில் இருந்து மேலும் சில தொலைவைக் கடக்கவேண்டும்.புதிய கண்டுபிடிப்பு நிகழவேண்டும்.இதுதான் நியதி.

படைப்பின் குணாம்சத்தை உணர்ந்த விமர்சனக் குரல்கள் இதைத்தான் அப்போது வேறு வேறு பாஷைகளில் பேசிக் கொண்டிருந்தன.ஒரு இளைஞன் வடிவத்திலும் ,பொருளிலும் புதுமையை நிகழ்த்தவில்லை எனில் அவன் பேரிலோ,அவள் பேரிலோ கவர்ச்சி கொள்வதற்கான ஒரு முகாந்திரமும் இல்லை .அந்த கடந்து வந்த பாதையைப் பின்பற்றி நடப்பதே தமிழுக்கு அழகு .மொழிக்கு நல்லது .பண்பாட்டுக்கு ஊட்டம் .

கவிதை எனது கர்மா

கவிதை எனது கர்மா
என்னிடம் கவிதையில் ஈடுபாடு கிடையாது என்று கூறுகிறவர்கள் உண்டு.அதில் பாதகம் ஏதுமில்லை.கவிதையில் ஈடுபாடு கொண்டவர்கள் மட்டுமே என்னிடம் பழகவும் பேசவும் முடியும் என்றெல்லாம் கிடையாது.அப்படி ஒரு அவசியமும் இல்லை.கவிதையில் ஈடுபாடில்லாமல் வாழ முடியாது என்பதும் இல்லை.ஈடுபாடு இன்றி சராசரித்தனத்துடன் நிறைவாகவே வாழ முடியும்.எனக்கு நேரடிப்பழக்கத்தில் இருக்கும் பலர் கலை ,
கவிதை , இலக்கிய பரிச்சயமற்றவர்கள்தான்.
கவிதையில் ஈடுபாடு கிடையாது என்பதைப் பெருமைப்பட கூறுகிறவர்களைப் பார்க்கத்தான் பரிதாபமாக இருக்கும் . அதற்குக் காரணம் கவிதையில் ஈடுபாடு இல்லையென்பதில் பெருமைப்பட ஏதும் கிடையாது என்பதனால்தான்.என்னிடம் உள்ள நுண்ணுறுப்பு ஒன்று பழுதுபட்டு விட்டது என்பதில் ஒருவருக்கு என்ன பெருமிதம் இருக்கமுடியும்? கண்ணை இழந்து விட்டேன் ,நாசி கெட்டுவிட்டது என்பது பெருமையா ? நாக்கில் சுவை தெரியவில்லை என்றால் நோய் தீவிரப்பட்டு விட்டது என்று அர்த்தம்.ஆறு மாதங்களுக்கொருமுறையேனும் இப்படி என்னிடம் குறுக்கிடுபவர்களை சந்திக்கிறேன்.இன்றும் ஒருவர் !
இந்த கவிதை தெரியாத ,அதன் பேரில் ஈடுபாடில்லாத பெருமிதத்தை என்னிடம் பகிர்பவர்களுக்கு கவிதையின் லௌகீக செல்வாக்கின்மை ஏற்படுத்துகிற அச்சவுணர்வு மேலோங்கி இருப்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது.ஈடுபாடிருப்பதாக ஒத்துக்கொண்டால் லௌகீகம் சறுக்கி விடுமோ எனும் அச்சம் அது.மேலும் கவியாக வாழ்தலில் உள்ள எனது இருப்பை அவர் ஒத்துக் கொள்ளவில்லை என்பதையும் சேர்த்தே
தெரிவிக்கிறார்கள். அப்படி இருக்க முடியாது ,இருக்கவும் கூடாது என்று நினைக்கிறார்கள் .வாழ்தலுக்கான அத்தகைய கோணமே அவர்களிடம் இல்லை.பிறகு ஏன் இவன் எப்போதும் நம் முன்பாக தென்படுகிறான் என்பதே அவர்களின் கேள்வி.
வாழ்தல் பற்றிய அவர்களின் புரிதலில் கவிஞனாக வாழ்தல் என்பதற்கு இடமில்லை.அதுதான் அவர்கள் பிரச்சனை.கவிஞனாகவே வாழ முடியும் என்கிற நம்பிக்கை இங்கே கவிதை எழுதுகிற பலருக்குமே கூட கிடையாது என்பதே பரிதாபமானது.எப்படி வாழ்கிறீர்கள் ? என்கிற அறியா புதிருடன் என்னை கேள்வி கேட்டு துளைப்பவர்கள் இவர்கள்தான்.
ஒருமுறை வீட்டுக்கு வந்த பெண் கவிஞை திரும்பிச் செல்லும் போது ' சோத்துக்கு என்ன செய்கிறீர்கள் ? என எனது மனைவியிடம் கேட்டுச் சென்றார். நாங்களும் ஊரிலுள்ள எல்லோரையும் போல சோறுதான் சாப்பிடுகிறோம் என்பதை அவரால் நம்ப முடியவில்லை.நம்பிக்கையை விடுங்கள் .நாங்கள் சோறு சாப்பிடுவதை அவரால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.நான் அப்போது அவர் உருவாகி வந்த முற்போக்குச் சிந்தனைப்பள்ளியை யோசித்துப் பார்த்தேன்.கூடாரத்தின் ஆசான்களில் ஒவ்வொருவரின் நம்பிக்கையையும் அசை போட்டுப் பார்த்தேன்.ஒருவருக்கும் கூட இந்த நம்பிக்கை கிடையாது என்பது தெளிவு.
நான் வாழ்கிற வாழ்க்கை என்பது கடவுளுக்கும் எனக்குமான நேரடித் தொடர்பில் நிகழ்வது .அது அவ்வளவு எளிதில் விளங்காது.எனக்கு ஒரு வேளைப் பட்டினியை இந்த வாழ்வு உருவாக்கும் எனில் அதில் சங்கடப்பட வேண்டியவள் பத்திரகாளிதானே தவிர ,பராசக்திதானே தவிர நானல்ல .எனக்கு லௌகீக மேன்மையுடென்றாலும் அதில் பெருமை கடவுளுக்குதான். சிறுமை என்றால் சீரழிவும் அவர்களுக்குத்தான் எனக்கொன்றுமில்லை.சுகம் எனில் பாராட்டு பெறுவதும் சீரழிவெனில் வசை வாங்குவதும் கர்த்தாதானே அன்றி நானல்ல.கவிதை எனது கர்மா.ஆத்திகர்களும்,நாத்திகர்களும் இருவருமே நாத்திகர்களாக இருக்கும் சூழலில் இவ்வாக்கைப் புரிந்து கொள்ளும் போதம் உண்டா? நான் அறியேன்.
கவிஞனாக மட்டுமே வாழ முடியும் .கவிதையின் பிரதேசத்திற்குள் நுழைகிறவன் அல்லது நுழைகிறவள் இந்த நம்பிக்கையை ஏற்றெடுக்க வேண்டும்.இதனை ஏற்றெடுக்க முடியாதெனில் வேறுபாதைகளுக்குச் சென்று விடவேண்டும்.யாதொரு நிர்பந்தமும் கிடையாது.
விக்கிரமாதித்யன் நம்பி வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.நம்பி அடையாத துன்பங்களையும் ஒருவர் அடைந்திருக்க முடியாது இன்பங்களையும் ஒருவர் அடைந்திருக்க முடியாது.இரண்டும் சமமே .கவிதையை ஏற்றேடுத்தால் அதுதான் பின்னர் பாதை அமைக்குமே ஒழிய யாரும் தீர்மானிக்க முடியாது.ஒரு கவிஞனுக்கு நேர்ந்தவைதான் எல்லா கவிஞனுக்கும் நேரும் என்றும் கிடையாது.அப்படி நேர்வதே இல்லை.ஒருவனுக்கு நேர்வது அந்த ஒருவனுக்கு நேர்ந்தது அவ்வளவுதான்.விக்கிரமாதித்யன் நம்பி சாக்கடையில் கிடந்தாலும் கவிதான்,ஸ்டார் ஹோட்டலில் இருந்தாலும் கவிதான்.

அனுபவத்தில் இரண்டு காரியங்களை எனக்கு உறுதியாகச் சொல்ல முடியும்.நான்கு கவிதைகளை ஒருவன் உருவாக்கி விட்டாலே அவன் எத்தகைய வெம்போக்கிரியாக இருப்பினும் சரி இல்லாத அழகையெல்லாம் உடனடியாகப் பெற்று விடுகிறான்.கொலைகாரனா? வழிப்பறியா? சூதாடியா? தெருத் தேவடியாளா? எதுவும் வேலை செய்வதில்லை.வேலை செய்வதில்லை என்பது மட்டுமல்ல செய்கிற வெம்போக்கிரித்தனங்களையும் சேர்த்தே கவிதை அழகு படுத்திவிடுகிறது.போக்கிரித்தனங்களுக்கு தனியே அழகில்லை , அதனை ஒரு கவிஞன் ஏற்றெடுக்கும் போது அவை உயிர்பெற்று விடும்.பிற சமயங்களில் அது சமூக மதிப்பிலே தங்கும்.மலையாளக் கவி அய்யப்பன் குடித்த கள்ளும் சாராயமும் அழகு பெற்றதைப் போல , உயிர் பெற்றதைப் போல.விக்கிரமாதித்தன் நம்பியின் அத்தனை சூதும் அழகு பெறுவதை ஒப்ப.
இரண்டாவது விஷயம் ஒருவர் எந்த துறை சார்ந்த மேன்மையில் இருப்பவாராக இருப்பினும் சரி கவிதையில் தொடர்பில்லையெனில் அவர் குறைபாடுடையவரே.இது விதி.மாற்ற இயலா விதி.பிரபஞ்ச கணிதம்.அவர் ஆன்மீக செல்வந்தராக இருக்கலாம், தொழில் மேதையாக ,விஞ்ஞானியாக இருக்கலாம்,அரசியல் வல்லுனராக இருக்கலாம்,ஏன் எழுத்தாளராகக் கூட இருக்கலாம்.எந்த துறை சார்ந்தவராக இருப்பினும் கவிதையின் நெடி அறியாதவராயின் அவரது குறைபாடும், அழகின்மையும் அவரைச் சுற்றிலுமுள்ள சகல இடங்களிலும் ஒலித்துக் கொண்டே இருக்கும்.கவிதையில் தொடர்பற்ற எந்த துறை சார்ந்த நிபுணனும் ஒருநாழிகைக்குப் பின்னர் பேசும் வார்த்தைகள் அபத்தமாக உலர ,உளறத் தொடங்கி விடும் என்பதே உண்மை.மனோவிஞ்ஞானிக்கும் இது பொருந்தும். அதுவே கவிதை எனும் கறுத்த மசியின் உள்ளடக்கக் கூறு . வேறொன்றுமில்லை.

அப்பச்சி காமராஜர் ...

அப்பச்சி காமராஜர் ... காமராஜ் பற்றி "நீயா நானா " விஜய் டிவி ஷோவில் பேசுவதற்காக ஆன்டனி ஒரு வாரம் முன்னதாக அழைத்தார்.நான் வர...