வீரலெட்சுமி கவிதை தொகுப்பிலிருந்து மூன்று கவிதைகள்

வீரலெட்சுமி கவிதை தொகுப்பிலிருந்து மூன்று கவிதைகள்

1
உற்சாகமற்ற பழைய பியேட் கார்

தொலைதூர பயணங்கள் ஏதும்
செய்ததில்லை இதுவரை
நகர விடுதிகள்
நடன அரங்குகள்
இசை விழாக்கள்
வைபவ நிகழ்வுகள்
என்று சென்றிருக்கிறது
அது

எண்ணையில் கழுவப்பட்ட
பழுதடைந்த சுவர்க்கடிகாரத்தின்
உள்ளுறுப்பு மட்டும் தனியே இயங்கிக்
கொண்டிருப்பது போல
அதன் இயந்திரங்கள் இன்றுவரையில்
நுட்பமாகத் தொழில்படுகின்றன 

தினசரி கழுவப்பட்ட பிறகும்
காலத்தின் நீங்காத தூசுப்படலம்
போர்த்தியிருக்கிறது
வெளித்தோற்றம்

நினைவின் பயணமாய்
காரின் பின்னிருக்கை
இடது ஓரத்திலமர்ந்து பயணம் செய்கிறாள்
யுவதி

நகரத்தில் குளிக்க இயலாத வேசியின்
மனமும் , விழாக்களின் சங்கீதமும் இணைந்து
நகரும் யுவதியின் கார்
தனிமையால் பூட்டியடைக்கப்பட்டுள்ளது

யுவதி ,உற்சாகமற்ற 
பியேட் காரிலிருந்து
நடன அரங்கிற்குச் செல்கிறாள்
இசை விழாக்களில் பங்கு கொள்கிறாள்
வைபவங்களை ஊடறுக்கிறாள்

வெளியே புதிய வாகனங்களுக்கு நடுவே
நகரம் பற்றிய வரைபடமாய்
நிற்கிறது பியேட் கார்

மேலும்
வயதான ஓட்டுனரிடம் பெருகும்
சுருட்டு வாசனையில் கட்டப்பட்டுள்ளது
அது

தன்னைச் சுற்றிக் கவிந்த
தனிமையின் திரவத்தால்
கூட்டங்களில்
தோற்றங்களைத் தீண்டுகின்றன
யுவதியின் கண்கள்

உற்சாகமற்ற பியேட் காரில்
பயணம் செய்யும் கடைசி யுவதியாக
கடவுள் அவளை முடிவு செய்து கொள்ளட்டும்
சருகுகள் பெருகுகிற தனது ஓய்வறையில்
புறாக்களின் எச்சம் வீச
கார் மரித்துக் கிடக்கட்டும்
சுருட்டு வாசனைக் கிழவன்
திறந்தவெளிச் சாராயக்கடையின் கதைசொல்லியாய்
நகரத்தில் அலையட்டும்

வெளிறிய பியேட் கார்
இப்படியாய் பயணிக்கும் வெகுகாலம்
ஆனால் அதுவோ இப்போது
இயங்கிக் கொண்டிருக்கும் போதும் கூட
நிற்க வைக்கப்பட்டிருப்பது போல்
தோற்றமளிக்கிறது
சருகுகள் படர்ந்த ,புறாக்களின் எச்சம்
வீசும் தரையில்

2

கணவன்

"அடுத்தது காட்டும் பளிங்கு போல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம்" - குறள்

யானையின் பின்புறம் காட்டி
நடக்கும் பெண்
அவள் குழந்தைகளை
வாடகைப் பாடசாலையில் விட்டுத் திரும்புகிறாள்
காலம் சாயும் தளர்வான நடை
அவளுடையது

உருவம் காட்டும் கண்ணாடிகள்
வெளியுருவத்தில் தெரியாதவற்றையும்
காட்டத் துவங்கி விட்டன
கண்ணாடியின் உள்ளடுக்குகளை
தனது உடல் மூலம் பரிசோதிப்பது அல்லது
தனது உடலின் உள்ளடுக்குகளை வைத்து
கண்ணாடியைப் பரிசோதிப்பது
எதுவும் தளர்வான நடையைச்
சரி செய்யவில்லை
வண்ணமிழந்து வரும் கனவுகளும்
உள் தோன்ற மறுக்கின்றன

உடலே கவசமான
சிறுகல்லாய் திரண்டு
உள்ளுக்குள் சிற்பமாய்
இறுகிய கணவனை
திருமண நாளன்று உணர்ந்தாள்

குலம் பார்த்து சாஸ்திரம் பார்த்து
ஊர் வசீகரித்த ஆசைக் கணவன் அல்லது
காதலித்துப் பின் தொடர்ந்த
உள் முடிய கணவன்

சிற்பங்களை மிருகத் தோலால் மூடித்
தைத்தால் வரும் சுருக்கங்கள்
கருங்கற்களை
தோலால் தைப்பதை விடவும் வருத்தமளிக்கின்றன

சாயங்காலம்
கனத்து வர
யானையின் பின்புறம் காட்டி நடப்பது
யாருக்கோ தெரிந்திருக்கிறது
என்பதனையும் உணர்ந்து
நடக்கிறாள் பெண்

3

மரப்பாச்சிகள்

இரண்டாம் பருவத்தில்
காதலிக்கும் பெண்
கணவனைச் சுமந்தபடி காதலித்துக்
கொண்டிருக்கிறாள்
இதுவே காதலிக்க ஏற்ற பருவம்
என்பது வெளிப்படையானது
விடலைப் பருவக் காதலில்
காதலுமில்லை
காமத்தின் ருசியுமில்லை
என்பது தெளிவாயிற்று

காதலிக்கும் பருவத்தின்
புள்ளிகளை இணைத்து
குழந்தைகள் வரையும் கோலங்கள்
தளர்ந்த புட்டங்களில் சுருக்கங்களை
ஏற்படுத்திவிட்டன
குழந்தைகளின்
பாதியளவுக்கு மண்ணில் புதையுண்ட
மரப்பாச்சிகள்
மழை முடிந்த தனிமையில்
உயிர்கொண்டு எழுகின்றன
உடலுக்குள்ளிருந்து
முளைப்பது போல

கணவனின் சைக்கிள் பின்னிருக்கையில்
அல்லது இருசக்கர வாகனத்தின் பின்னிருக்கையில்
அமர்ந்து வெளியடித்துச் செல்கையில்
இரண்டாம் பருவத்தின் கதவுகளைத் திறந்து
வைக்கிறாள்

முதல் பருவத்து காதலுக்கான
தடைகள் விவாதிக்கப்படுபவை
வெளிப்டையானவை
தொலைக்காட்சி அறிவிப்பாளர்கள்
ஒத்துக்கொள்பவை
இரண்டாம் பருவத்துக் காதலில்
காதலனும் காத்திருப்பதில்லை
கடிதம் தருவதில்லை
காற்றில் புழுதிபோல அவன்
பறந்து கொண்டிருக்கிறான்

நிமிர்ந்து முகம் பார்க்க இயலாத
காதலன் யாரென்றும் தெரியவில்லை

  - லக்ஷ்மி மணிவண்ணன் 

No comments:

Post a Comment

அந்த குழந்தைக்கு வயது ஐம்பது

அந்த குழந்தைக்கு வயது ஐம்பது ( 18  கவிதைகளின் தொகுப்பு ) 1 அவளிடம் அம்மனைப் போல இருக்கிறாய் என்று சொன்னபோது உண்மையாகவே அம்மனைப் போ...