அரசே திவ்யபாரதியை கைது செய்யாதே

திவ்யபாரதியை கைது செய்யும் முயற்சிக்கு என்னுடைய வன்மையான கண்டனங்கள்

ஆவணப்பட இயக்குனரும் ,வழக்கறிஞரும் ,சமூக செயல்பாட்டாளருமாகிய திவ்யபாரதியை கைது செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுவதாக அறிகிறேன்.அரசு தொடர்ந்து அவருக்கு இடையூறு ஏற்படுத்தி வருவதை உண்மையாகவே என்னால் விளங்கி கொள்ள இயலவில்லை.குற்றவாளிகள் , குற்றப் பின்னணி கொண்டோரை முன்பெல்லாம் உளவுத் துறையும் போலீசும் கவனித்துக் கொண்டிருப்பார்கள்.இப்பொது முழு வேலையாக சமூக அக்கறை கொண்டோரை ஒடுக்குவதில் இந்த அரசாங்கம் குறியாக இருக்கிறது.இதுவொரு அசாதாரணமான நிலை என்பதில் சந்தேகமே இல்லை.எனது அனுபவத்தில் கண்டிராத ஒடுக்குமுறைகள் இப்போது நடந்து வருபவை.அரசிற்கு எனது கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஏற்கனவே திவ்யபாரத்தின் "கக்கூஸ்" ஆவணப்பட திரையிடல் தமிழ்நாட்டில் மிகக் கடுமையாக ஒடுக்கப்பட்டது.இத்தனையும் மீறி அந்த ஆவணப்படம் மக்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றது.மட்டுமல்லாமல் கேரளா ,தில்லி என பல இடங்களிலும் பாராட்டப்பட்டதோடு நிறைய விருதுகளையும் பெற்றது .கேரளா அரசின் சிறந்த ஆவணப்படத்திற்கான விருதினையும் பெற்றது என நினைக்கிறேன்.இங்கே ஏன் அவர் கொடூரமாகத் துரத்தப்படுகிறார் என்பது விளங்கவில்லை.அவர் களவோ வழிபறியோ ,கொலைகளோ செய்து கொண்டிருக்கவில்லை.அவர் தனக்கு தெரிந்த விதத்தில், அவர் நேரில் காணும் அநீதிகளுக்கு எதிராகக் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.அவரைப் போன்றவர்கள் வெளிப்படுத்துகிற கண்ணோட்டங்களில் எழுபத்தைந்து சதமானத்திற்கு மேல் எனக்கு உடன்பாடற்றவைதாம்.அவர் இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ள கருத்துக்களில் நம்பிக்கை கொண்டு எல்லாவற்றையும் பார்க்கிறார்.இருக்கட்டும் ஆனால் அப்படி சிந்திப்பவர்களும்,மக்கள் மீது அக்கறை கொள்பவர்களும் இங்கே இருக்கவே கூடாது என நினைப்பதில் என்ன நியாயம் இருக்க முடியும் ? இத்தகைய போக்குகள் மிகவும் அராஜகமானவை.இவை அடுத்தவர்களுக்கு நடக்கிறது என்று மட்டும் சமாதானம் கொண்டிருக்காதீர்கள்.சிந்திப்பவர்கள் அனைவருக்கும் சேர்த்தே இவை நடைபெறுகின்றன.அரசு சிந்தனையில் பயம் கொண்டிருத்தலையே இவை உணர்த்துகின்றன.

"ஒருத்தரும் வரல " திவ்யபாரதியின் அடுத்த ஆவணப்படம்.ஓகி  புயலில் மீனவர்கள் அடைந்த துயரங்களை பற்றிய ஆவணப்படம் இது.அதன் திரையிடலுக்கு முன்பாக கைது செய்து அவரை ஒடுக்க
நினைக்கிறார்கள் ."அட அசடுகளே ...நீங்கள் இப்படி ஒடுக்கத் துடிப்பதன் மூலமாக அந்த ஆவணப்படத்திற்கு எவ்வளவு பெரிய விளம்பரத்தை ஏற்படுத்தித்  தருகிறீர்கள் ?" மற்றபடி நீங்கள் அவரை என்னதான்  செய்து விடுவீர்கள் ? அச்சுறுத்தி ,ஒடுக்கி உங்களால் என்ன செய்து விட முடியும் ? முந்நூறு பொய் வழக்குகள் பதிந்தால் கூட உங்களால் எதுவும் செய்ய இயலாது கூமுட்டைகளே ...அவருக்கான அரவணைப்பும் செல்வாக்கும் இவற்றால் மேலும் மேலும் உயரும்.ஓகி  புயலில் நீங்கள் செயலிழந்து கிடந்த விதத்தை நாடே அறியுமே ?

இரண்டுநாட்களாக அவருடைய வீட்டில் சோதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன.சோதனைகள் என்பது உபயோகத்தில் இருக்கும் வீட்டின் பொருட்களை உபயோகமற்றதாக மாற்றுகிற ஒரு வேலைதான்.உலகாளாவிய குற்றவாளிகளை தேடும் பாவனையோடு நான்கு பக்கமும் அவருடைய வீட்டைச் சுற்றி போலீஸ்கார் உள்ளே குதித்திருக்கிறார்.அதுவும் லோக்கல் போலீஸ் அல்ல.கொண்டுவந்த போலீஸ்.அரசின் நோக்கமின்றி தூண்டுதலின்றி இப்படி நடைபெறுவதில்லை.வழக்கறிஞரான அவரை கைது செய்ய  நீதிமன்றத்தில் அவர்கள் காத்திருப்பதாக கேள்விப்படுகிறேன்.

இது போன்ற அரசின் செயல்களில் யார் எந்த தரப்பாக ,எந்த கொள்கையுடையவராக இருப்பினும் மௌனம் காத்தல் கூடாது.அது நம்மிடம் இருக்கும் ஜனநாயகத்தை நம்மிடமிருந்து விரட்டும். அது நல்லதல்ல. அரசின் இத்தகைய அராஜகமான  நடவடிக்கைகளுக்கு அனைவரும் தங்களால் இயன்ற கண்டனங்களை தெரிவியுங்கள்.குரல் கொடுங்கள். 

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"