கருணாநிதிக்கு இழைக்கப்படுகிற பாரபட்சத்தை காலம் மன்னிக்காது

கருணாநிதிக்கு இழைக்கப்படுகிற பாரபட்சத்தை காலம் மன்னிக்காது

கருணாநிதி அவர்களின் இறுதி மரியாதை ,அடக்கம்  குறித்த சர்ச்சைகள் உருவாகக் காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மிகப் பெரிய அற்பர்கள் என்பதில் சிறிய சந்தேகமும் இல்லை.மத்திய ,மாநில அரசுகள் இவ்விஷயத்தில் கீழ்த்தரமாக நடந்து கொண்டிருக்கின்றன.அம்மையார் ஜெயலலிதா மறைந்த போது ஏற்படாத சட்டச் சிக்கல்களும் ,முரண்பாடுகளும் கருணாநிதி விஷயத்தில் எப்படி ஏற்பட முடியும் ? கருணாநிதி வாழும் காலத்திலேயே , இவ்வாறு  காலம் சென்ற போதும்  ஏற்படும் வாய்ப்பு உண்டு என யூகித்திருப்பார் என்றே நினைக்கிறேன்.கருணாநிதிக்கு இடம் ஒதுக்குவதில் ஏற்படுகின்ற சர்ச்சைகளை உருவாக்கியோர் அவர் இருப்பிற்கு அதிக பட்ச நியாயத்தை வழங்குகிறார்கள்.மிகப் பெரிய தீமையை மேலும் அவர்கள் இந்த சந்தர்ப்பத்தில் ஏற்படுத்தித் தந்திருக்கிறார்கள்.பாரபட்சங்களை இறப்பில் முன்வைப்போர் ஆபத்து நிறைந்தவர்கள்.

மற்றபடி கருணாநிதி அவருடைய எத்தகைய செயல்களாலும் என்னை சிறிய அளவில் கூட பாதித்தவர் அல்ல.இலக்கியமானாலும் சரி,அரசியல் ஆனாலும் சரி .என்னுடைய நண்பர்கள் பலர் அவர் பாதித்திருப்பதாக சொல்கிறார்கள்.எழுதுகிறார்கள்.அது பற்றி எனக்கு பெரிய அபிப்ராயங்கள் ஏதுமில்லை.என்னை அவருடைய வாழ்வோ,செயல்களோ எதுவுமே கிஞ்சித்தும் பாதிக்கவில்லை என்பதை இந்த சந்தர்ப்பத்தில் முழுமையாக உணர்கிறேன்.

அவரைப்பற்றி எழுதுவதற்கு எனக்கு எதுவுமே இல்லை என்பதைத்தான் நேற்று முதல் யோசித்துக் கொண்டேயிருக்கிறேன்.ஏன் இப்படி ? இத்தனைக்கும் யாராயினும் அணுகுவதற்கு எளிமையாக இருந்த மனிதர் அவர் என்பது எனக்கு மிகவும் நன்றாகவே தெரியும்.இரண்டு முறை அவருடைய வீட்டிற்கு சென்றிருக்கிறேன்.சிறந்த காப்பி அந்த வீட்டில் எனக்கு கிடைத்திருக்கிறது.ஒருமுறை நான் சென்ற சமயத்தில் அவரும் அந்த வீட்டில் இருந்தார்.அவரை பார்க்க வேண்டும் என்கிற தூண்டுதல்  கொஞ்சம் கூட எனக்கு ஏற்பட்டதில்லை.திராவிட கருத்தியலில் எனக்கு பெரிய வேறுபாடெல்லாம் அதிகம் கிடையாது.அது நவீனமடைய வேண்டும் என்கிற எண்ணத்தை தவிர்த்து.

அவர் மறைவை ஒட்டி இவ்வளவு மக்களின் துயரையும் கண்ணீரையும் , இழப்புணர்வையும் காண அவரின் இருப்பின் முக்கியத்துவம் குறித்த என்னுடைய பார்வையில் பிழை விட்டிருக்கிறேனோ என எண்ணத் தோன்றுகிறது

கிருஷ்ண பரமாத்மா அர்ச்சுனனுக்கு பகவத்கீதையை உபதேசிக்கத் தொடங்கிய ஏகாதசி மூர்த்தத்தில் கருணாநிதி விடைபெற்றிருக்கிறார் என்று ஜோதிட ரத்னா கே.பி . வித்யாதரன் கணித்திருக்கிறார்.வைகுண்ட பதவி அடைந்திருக்கிறார் . நன்று.

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"