முற்போக்கர்கள் பிளவுஸ் அணிந்த வரலாறு

முற்போக்கர்கள் பிளவுஸ் அணிந்த வரலாறு

கிறிஸ்தவ மதம் வேறு கிறிஸ்தவக் கருத்தாக்கம் என்பது வேறு .கிறிஸ்தவ மதம் என்பது கிறிஸ்தவராக மதம் மாறியவர்களை பராமரிக்கும் வேலையை மட்டுமே செய்யக் கூடியது.கிறிஸ்தவக் கருத்தாக்கம் என்பது அனைத்து துறைகளையும் தன்னுடைய கருவிகளால் மேலாண்மை செய்யவும் ,மூழ்கடிக்கவும் திறன் கொண்டது.இந்திய முற்போக்குகள் பெரும்பாலும் அருந்ததி ராய் உட்பட ,ரொமீலா தாப்பர் உட்பட கிறிஸ்தவக் கருத்தாக்கங்களை தங்களுடைய உள்ளடக்கமாகக் கொண்டவர்கள்.இந்திய இடதுசாரிகள்,பகுத்தறிவுவாதிகள் அனைவரும் இந்த கருத்தாக்கத்திற்குள் சிக்கியிருப்பவர்களே.அதிலும் குறைந்த பட்ச விசாரணை கூட இல்லாமல் சிக்கியிருப்பவர்கள் என்று கூறுவதே சரியானதாக இருக்கும்.இங்குள்ள அதிரடி முற்போக்குகள் பலருக்கும் இப்படித்தான் சிக்கியிருக்கிறோம் என்பது கூட விளங்குவதில்லை.
பிராங்பர்ட் மார்க்சியர்களுக்கு இந்த பிரச்சனை இல்லை.உதாரணமாக இந்தியாவில் அஜீஸ் நந்தி , டி.ஆர் .நாகராஜ் போன்றோரைக் குறிப்பிடலாம்.துரதிர்ஷ்டவசமாக அவர்கள் இங்கே மார்க்சியர்களாகவே கருதப்படுவதில்லை.அஜீஸ் நந்தி ஓரிடத்தில் வெளிப்படையாகவே இந்த குறையை சுட்டிக் காட்டுகிறார்.பெரியார் போன்ற நாலாந்தரமான எதிர்வினையாளர்கள் கிறிஸ்தவக் கருத்தாக்கங்கள் அனைத்தையும் அவ்வாறே உள்வாங்கி சந்தேகத்திற்கிடமின்றி நம்பிய மூடர்கள்
கிறிஸ்தவம் இந்தியாவில் நுழையும் ஆரம்ப காலங்களிலேயே சைவம்,வைணவம் போன்ற தத்துவார்த்த ,அறிவு சார்ந்த விவாதங்களில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருந்த பெரிய மதங்களைச் சார்ந்த மக்களிடம் தங்களுக்கு வேலையில்லை என்பதில் மிகத் தெளிவாக இருந்தது .அவற்றுக்கு எதிரான தர்க்கங்களை உருவாக்கவும் ,இழிவு செய்யவும் மாபெரும் தொழிற்பேட்டை அவசியம் என்று உணர்ந்தது.இந்திய பெருமதங்களுக்கு எதிரான பல சிறு குழுக்கள் வேலை செய்ய தொடங்கின.இந்திய முற்போக்கர்கள் தாம் இந்த தொழிற்பேட்டையை நிர்வாகம் செய்து வருபவர்கள்.இந்திய பெருமதங்களுக்கு எதிரான சிறு சிறு குழுக்களை ஒருங்கிணைத்து அதனை அரசியல் அதிகாரமாக மாற்ற இன்றளவும் அவர்கள் முயற்சி செய்து கொண்டும் இருக்கிறார்கள்.மக்களிடம் இருந்து அவர்கள் அந்நியப்பட்டுப் போனதற்கும் இது பிரதானமாக காரணம்.
கேரளமும் ,மேற்கு வங்கமும் விதிவிலக்குகள்.படைப்புப் பார்வைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டதால் கிறிஸ்தவக் கருத்தாக்கங்களில் இருந்து ஓரளவிற்கு அவர்கள் விடுதலை பெற்றார்கள்.
ஒவ்வொரு பாரம்பரிய சமூகமும் தங்களுடைய சமூகவியல் பயணத்தில் பெரிய தத்துவார்த்த சமயங்களுக்குள் ,அதன் நெறிகளுக்குள் சென்றே ஆக வேண்டும் என்பது தவிர்க்கவே இயலாத விதி.அப்படியில்லாத இந்திய சமூகங்கள் ஒன்று கூட கிடையாது.அப்படி அவர்கள் தேர்வு செய்யும் மதங்கள் கிறிஸ்தவமாகவோ இஸ்லாமாகவோ கூட இருக்கலாம்.அவையும் தத்துவார்த்த தளங்கள் கொண்ட ,நீண்ட அறிவுத் தொடர்ச்சியின் விளைவில் உருவான மதங்கள் தான்.அப்படியிருக்கும் போது இந்திய சமயங்களை மக்கள் தேர்வு செய்யாமல் இருக்க வேண்டுமாயின் சமூகவியல் காரணிகளை உருவாக்கி இந்திய சமயங்கள் உடைக்கப்பட வேண்டும்.அந்த பணியை கிறிஸ்தவ தொழிற்பேட்டைகள் செய்யும்.சமூக உண்மைகளை சிதறச் செய்வதன் வாயிலாக மட்டுமே இதனை சாத்தியமாக்க முடியும்.இந்த தொழிற்பேட்டையில் பாதுகாவலர்களாக முற்போக்குகள் கண்ணுக்குத் தெரிகிற மற்றும் தெரியாத நுட்பமான பிளவுகளை ஏற்படுத்திக் கொண்டே இருப்பார்கள்.அதற்கான கருவிகளை கிறிஸ்தவக் கருத்தாக்கம் உருவாக்கித் தந்து கொண்டே இருக்கும்.ஏராளமான சொல்லாடல்கள் உருவாக்கப்படும்.
கன்னியாகுமரி மாவட்டத்திலும் ஏற்கனவே சைவம் சார்ந்தோ , அல்லது வைணவம் சார்ந்தோ தங்கள் சமூகவியல் நிலைகளை மாற்றியமைத்துக் கொண்ட மக்களிடம் பெரும்பாலும் கிறிஸ்தவத்தால் செல்வாக்கு செலுத்த முடியவில்லை.அது கடினம் என்பது அவர்களுக்கும் தெரியும்.சாதி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு ,போலியான வரலாற்று வாதங்கள் மூலம் இந்திய பெருமதங்களை சாராத மக்களிடம் தங்கள் கருவிகளை கொட்டுகிறார்கள்.ஒவ்வொரு சாதிக்கு ஒவ்வொரு கிறிஸ்தவம் என்று பாதிக்கு மேல் மக்கள் கிறிஸ்தவத்திற்கு மாறுகிறார்கள்.இந்த சந்தர்ப்பத்தில்தான் வைகுண்டசாமி வருகிறார்.அவர்களுடைய அத்தனை கருவிகளும் சோர்ந்து சரிகின்றன.வைகுண்டசாமிகளுக்கு எதிராக நூற்றுக்கணக்கில் துண்டு பிரசுரங்கள் கிறிஸ்தவர்களால் விநியோகிக்கப்படுகின்றன.அவற்றில் ஒன்றுக்கு கூட வைகுண்டசாமி பதில் சொன்னதில்லை.பொருட்படுத்தியதில்லை.அவர் இந்திய சமயங்களின் உயர் விழுமியங்களை மக்களிடம் கொண்டு சென்றார்.பாதிக்கும் மேல் மக்களை கிறிஸ்தவத்திடம் இருந்து காத்த வரலாறு இது.
"மோச முன்னுரைத்தல் " என்கிற தலைப்பில் கிறிஸ்தவக் குருக்கள் எழுதிய வைகுண்ட சாமிகளை அவதூறு செய்கிற நூல் ஒன்றும் எழுதப்பட்டது.இன்றுவரையில் வைகுண்டசாமியை இப்போது எடுத்து கொஞ்சுகிற முற்போக்குகள் கிறிஸ்தவர்களால் அவர் கடுமையான எதிர்ப்புக்குள்ளானதை பற்றி ஒரு வரி பேசி நான் கேட்டதில்லை
இந்த கிறிஸ்தவக் கருத்தாக்கத்திற்கும் முற்போக்குகளுக்கும் பகுத்தறிவுவாதிகளுக்கும் இடையிலான உறவு என்பது வெறும் கள்ள உறவு மட்டுமல்ல.இப்படியான வெளிப்படையான சமூகவியல் கண்ணோட்டங்களை அவதூறுகள் மூலம் கொலை செய்யும் பயிற்சியும் பெற்றவர்கள் இந்த மூவர் கூட்டணி.வெளிப்படையான பேச்சுக்கள்,விவாதங்கள் உருவாகி விடாமல் பிளவிலும் மோதலிலும் தொடர்ந்து குணமூட்டி வைத்திருப்பவர்கள்.மரபு என பேசத் தொடங்குவோரிடம் கொஞ்ச காலம் சமணத்திற்கு செல்லுங்கள் என அனுமதி தருவார்கள்,பிறிது குலதெய்வங்களில் பிரச்சனையில்லை என்பார்கள்.மேலாண்மை உத்தி இவையெல்லாம். அறிவின் பணி என்பதே முதலில் இதிலிருந்து விழித்துக் கொள்ளுதலே ஆகும்.அல்தூசர் போன்ற மார்க்சிய தத்துவவாதிகள் "கிறித்தவத்தின் நவீன வடிவமே பகுத்தறிவு" என்பதைக் கண்டு சொல்லியிருக்கிறார்கள்.அது குறித்தெல்லாம் இந்த நாலாந்தர கழிசடை முற்போக்குகளிடம் பேச்சு மூச்சே இருக்காது.
நான் எங்கள் ஊரிலுள்ள முற்போக்கு ஆசான் ஒருவரிடம் ஒருசமயம்
" ஐயா ...எங்களை போன்று சிறுவயதில் அநீதிகளுக்கும்,துன்புறுத்தலுக்கும் ஆளாகி தொந்தரவுக்கு ஆட்பட்ட ஆன்மாக்கள் தான் உங்களிடம் வந்து சேருகிறோம்.அப்பாவியான எதையும் நம்புகிற குணத்துடன்,நிறைய குழப்பங்களுடன்...
"எங்களிடம் சாமி கும்பிட போகாதே... என்கிறீர்கள்.ஆனால் உங்கள் வீட்டுக் குழந்தைகள் பிள்ளையாரைக் கும்பிடுகிறார்கள்,முருகனை வழிபடுகிறார்கள்,
சிவனைக் காண பிரதோஷம் தவறுவதில்லை.புரட்டாசியில் திவ்ய தேசம் எங்கிருக்கிறது என்று தேடுகிறார்கள்.நன்றாகவும் படிக்கிறார்கள் .நல்ல வேலை என வெளிநாடுகளுக்குச் செல்கிறார்கள். நல்ல அழகான பெண்களை மணமுடித்து அழகான குழந்தைகளை பெற்றெடுக்கிறார்கள்.எங்களை போன்றோரை சுவரொட்டி ஒட்டுவதற்காகத்தான் பயிற்சி கொடுத்து நிரந்தரப்பணியில் வைத்திருக்கிறீர்களா ? நீங்கள் எங்களுக்கு சொல்லிக் கொடுத்தவற்றில் உங்களுக்கு உண்மையான நம்பிக்கை இருந்திருக்குமேயானால் நீங்கள் உங்கள் வீட்டுக் குழந்தைகளிடம் இருந்தல்லவா உங்களுடைய பிரசாரத்தைத் தொடங்கியிருக்க வேண்டும் ? என்று கேட்டேன்."
யார் சொல்லித் தந்து இதனை நீ என்னிடம் கேட்கிறாய் ? என்று சாடினார்.ரத்த அழுத்தம் அதிகமாகி அவர் மனைவி அதற்கு மாத்திரையும் நீரும் அருளினார்.ஆசான் சாந்தமானார்.ஆசானிடம் இது போன்ற கேள்விகளை கேட்கக் கூடாது என்று மனைவியிடமிருந்து பதில் வந்தது
நீங்கள் குழப்பத்தில் இருக்கும் வரையில் தான் இவர்களுக்கு இருப்பு ; தெளிவாகி விட்டீர்கள் என்றால் தலைதெறிக்க ஓடிவிடுவார்கள்.
ஒரு இஸ்லாமியரோ,கிறிஸ்தவரோ இந்து பெருமதங்களை ஏற்றுக் கொள்பவராக இருந்தால் மட்டுமே அவர்கள் நல்லிணக்கம் கொண்டவர்கள்.அப்படியான நண்பர்களும் உண்டு.மற்றதெல்லாம் முற்போக்கு கிறிஸ்தவக் கருத்தாக்கத்தின் போலிகள் .
அப்படியில்லாதவர்கள் நீங்கள் தெளிவானால் உங்களை கடந்து செல்வார்கள் அனுபவத்தில் காண்பீர்கள் .சைவ சித்தாந்தமும் இஸ்லாமும் ஏறக்குறைய ஒன்றுதான் என்பது எனக்குத் தெரியும்.ஆனால் முற்போக்குகளால் இதனை ஏற்க இயலாது.அவர்களின் நோக்கம் பிளவு.முற்போக்குகளைக் கட்டுடைக்காமல் நம்மால் சமூக நல்லிணக்கத்தையும் காக்கவே இயலாது
   

Comments

Post a Comment

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"