தூரம் சென்று நீ திரும்பு

தூரம் சென்று நீ திரும்பு

1

என்னுடைய ஊரே
அதற்குள்
வேறொரு இடத்தில் வாழ்கிறேன்
தூரம் சென்று திரும்பியதால்
கிடைத்தது அது

என்னுடைய வீடே
அகத்தில்
இருக்கிறேன்
தூரம் சென்று திரும்பியதால்
வாய்த்தது இது

என்னுடைய உடலில்
நான்
வாழ்கிறேன்
மரணம் சென்று திரும்பியதால்
அமைந்தது இது

ஏதுவாகவேனும் இருக்கட்டும்
தூரம் சென்று நீ திரும்பு

2

அம்மா எனக்குள் ஒரு
பௌர்ணமி நிலவைப் போட்டாள்
அது உடலின் கடிகாரம் ஆனது

அப்பா அதனை கசப்பால் கசந்து
ஒளிரவும்
வைத்தார்
சுழலத் தொடங்கியது

ஆசான் அதன் மேல் நெய்யை ஊற்றினார்
ஏற்கனவே இருந்த நெய்யுடன்
இணைந்த நெய்யும்
வாழ்வு முழுவதும்
பற்றியெரிகிறது

இருந்தாலும் இறுதியில்
எரிக்கத்தான்
செய்கிறார்கள்
ஒன்றுமில்லாததென்று

3

துயரத்தை நோண்டிக் கொண்டேயிருக்காதீர்கள்
அதுவொரு ஆதி மிருகம்
ஆமைக்கு ஓட்டை அதுதான் கொடுத்தது

ஏசுவை சிலுவையில் அடித்தது மேரியின் கையில்
குழந்தையும் ஆனது கடையக்கடைய
பாற்கடல் ஆனது

அது எல்லோரும் ஆதி மிருகமாவதையே விரும்புகிறது

அது மிகவும் தொன்மையான ரசம்
தன் கண்ணீரிலேயே பரசவமுண்டாக்கும்
தன் ரசம்

ஒரு துளி பருக ஒரு பல் முளைக்கும்
சிறு துளி செழித்து
உறுமல் கேட்கும்
ரத்தம் கேட்கும்

திருஷ்டிப் பொட்டிட்டு அடக்கமாய் வைக்க
அது கிடந்து சிரிக்கும்

#####

4

என் பேர் மகிழ்ச்சி

1

மகிழ்ச்சியை யார் கொடுத்தாலும்
வாங்கிச் சாப்பிட்டு விடுகிறேன்
எனக்கு எந்த வேறுபாடுகளும் இல்லை

2

மகிழ்ச்சியை தானம் செய்பவர்
எந்த ஊரில் இருந்தாலும் சொல்லுங்கள்
ஏராளம் சேகரித்துக் கொண்டிருக்கிறேன்

3

மகிழ்ச்சியில் இருப்பவன்
தானாகவே கைநீட்டித் தருகிறான்

4

நீர் மட்டும் ஊற்றினேன்
தானாக வளருகிறது
மரம்

5

என் பேர் மகிழ்ச்சி
ஆதலால் யாதொன்றும் குற்றமில்லை

6

திருவிழாக் கடையில்
எல்லாவற்றையும்
தொலைத்து விட்ட குழந்தை
மகிழ்ச்சியை மட்டும்
எடுத்துக் கொண்டு
ஓடுகிறது

7

துக்கத்தோடு செல்பவனை
கடவுள்
திருப்பி அனுப்பி விடுகிறார்

8

கிளையை வெட்டினாலும்
மரம்
மகிழ்ச்சியுடன்தான்
மீண்டும்
தளிர்க்கிறது

9

மகிழ்ச்சியைத் தவற விட்டவன்
அனைத்தையும்
தவற விடுகிறான்

10

எத்தனையோ தற்செயல்களை
தாண்டித்தாண்டித்தான்
நானும்
மகிழ்ச்சியின் மடியில்
வந்து
விழுந்தது

மகிழ்ச்சியை யார் கொடுத்தாலும்
வாங்கிச் சாப்பிட்டு விடுகிறேன்
எனக்கு எந்த வேறுபாடுகளும் இல்லை

#####
5

உன் அந்தரங்கம் எனக்கு தெரியும்
எப்படியென்றால் எப்படி
என் அந்தரங்கம் எனக்குத் தெரிவது போலத்தானே
அதுவும் ...

மனம் செய்யச் சொல்வதை
ஏற்கையில்
நான் மறுக்கிறேன்

இந்த அழுக்குத் துணிகளை துவைக்க வேண்டாம்
என்பதற்கு
எவ்வளவு காரணங்களை பிட்டுத் தருகிறதிந்த
மனம்

வழியில் விழுந்தவனை
விட்டுச் செல்வதற்கும்
அவ்வளவு
கற்பித்தது
மனம்

நான்
அவனை தூக்கி எடுக்கிறேன்
நீ
தூரத்தே நின்று
திரும்பிப் பார்க்கிறாய்

அதனால் தான் அதனால் தான் ...

6

மேனி ஊறும் ஊறும்

1

எனக்கொரு மேனி கிடைத்தது
மேனிக்கு நிறைய உறுப்புகள்
ஒவ்வொரு உறுப்பிற்கும் ஒவ்வொன்று தெரிகிறது
என் மேனி என்பதற்கு இதில் என்ன இருக்கிறது ?
மேனியால் பெருஞ்சொரூபம்
கண்டேனே அல்லாமல்

என் மேனி என நினைத்துக் கொண்டிருப்பதெல்லாம்
இனி வரும்
மேனியே

2

மேனியால் உண்டேன் உறங்கினேன்
ஆன பிற எல்லாம் சுகித்தேன்
த்தித்தித்தேன்
இவையெல்லாம் போக வேறொன்றும்
அறிந்தேன்
அப்படியாயிற்று இது
வேறொன்று அறிந்த மேனி

3

மேனி வந்த வழி வேறு
வேறொன்றை மேனி கண்ட வழி வேறு

4

மேனி ஒரு கண்

5

மேனி இல்லையானால்
என்ன தெரிந்திருக்கும் ?

6

வேறொன்றுக்குள் இந்த மேனி
நுழைந்து
மேனியில் இல்லாத
வேறொன்றைக் கண்டது

7

மேனியெல்லாம் தேமல்
இந்த கடற் காற்று
கடற்காற்றின் மேனியிலே
கருணா மூர்த்தி

8

மாமழை இந்த மேனியில்
விழுவது
அதிசயம்
அல்லவா

9

மரத்திற்கும் எனக்கும் என்ன வேறுபாடு
அது எப்போதும் அறிந்து கொண்டிருப்பதை
நான்
எப்போதாவது
அறிகிறேன்
அவ்வளவுதான்

10

எனது எண்ணத்திற்குள்
எவ்வளவு
பறவை
சப்தங்கள்

மேனி எரிகையில் பறவை சப்தங்களுக்கு
ஒன்றும் ஆகாது
அவை மீண்டும்
பறவைகளாகும்

11

வேறொன்றைத் தொழுது செல்லவே
இந்த வழி வந்திருக்கிறேன்

அது வேறெங்கோ இல்லை
உன்னிடத்திலும்
உண்டு

உன்னிடத்தில் உண்டென்றால்
என்னிடத்தில் இருக்காதா

12

மேனி ஊறும்
ஊறும்
ஊறிக் கொண்டேயிருக்கும்

#####

7

நேற்றை போல இன்றில்லை
அதைவிடவும்
மிகவும்
நன்றாக இருக்கிறது

#####

8

முதல்நாள் காலையில் இரண்டு கிருஷ்ண பருந்துகள்
பதினோரு மணிக்கு
இரண்டு
மாலை நான்கு மணிக்கு இரண்டு
மொத்தம் ஆறு கிருஷ்ண பருந்துகள்
என கணக்கு போட்டு வைத்திருந்தேன்

பத்துநாட்கள் ஆயிற்று
மொத்தம் இரண்டே கிருஷ்ண பருந்துகள் தான் என்பதை அறிய

அவை
கீழே ஒரு மனிதன்
என்பதை
அறிந்து கொள்வதற்கும்

#####

9
அவர் மரணம் அடைந்தார்
பேருந்துகள் வழக்கம் போல ஓடுகின்றன
இவர் ஒருமுறை காலமானார்
எல்லோரும் அலுவலகங்களுக்கு சென்றார்கள்
பிரமுகர் முக்தியடைந்தார்
குழந்தைகள்
மூன்றாம் நேரத்து உணவை உண்ணத் தொடங்கினார்கள்
ஞானி இறந்து தொலைத்தார்
அன்றாடம் அன்றாடமாகவே இருந்தது
எதுவும்
முடிவடையவில்லை

இதனை இருந்து பார்ப்பதற்கு
இறந்தவர்களுக்குத்தான் வாய்க்கவில்லை
அவர்கள் பாவம்
என்னவெல்லாம் நினைத்திருந்தார்களோ

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"