இந்தியாவில் இடதுசாரிகள் வீழ்ச்சியடையக் கூடாது

இந்தியாவில் இடதுசாரிகள் வீழ்ச்சியடையக் கூடாது

அவர்கள் அதிகாரத்தில் இருக்கத் தேவையில்லை.இருக்கலாம் இல்லாமல் போகலாம்,அது பிரச்சனையில்லை. கருத்தியல் ரீதியில் அவர்கள் வீழ்ச்சியடையக் கூடாது.மக்களை புரிந்து கொள்வதில் பிழை செய்யக் கூடாது.அப்படி ஏற்படும் பிழைகள் இந்தியாவில் காங்கிரசை வீழ்த்தும். வடிகட்டிய இடதுசாரித்தனத்தை கொண்டதுதான் இந்தியாவில் காங்கிரஸ் கட்சி.நேருவிடம் இருந்து இது உருவாகிறது,இந்திரா காந்தியிடம் தொடர்கிறது.நரசிம்ம ராவ் ,மன்மோகன் என அதற்கு நெடிய மரபு இருக்கிறது.முக்கியமான காங்கிரஸ் தலைவர்கள் பலர் பேசுகிற குரல் கொஞ்சம் வடிகட்டிய இடதுசாரி குரல் அவ்வளவுதான் .எனவே இடதுசாரிகள் இந்தியாவில் ஜீவனை விட்டால் காங்கிரசும் உடன் சேர்ந்து மரிக்கும் .இந்தியாவில் காங்கிரஸ் கட்சி துவழக் கூடாது .அதற்காகவேனும் இடதுசாரிகள் இன்றியமையாதவர்கள்.உலகளாவிய விதத்தில் இடதுசாரிகளை காங்கிரஸ் உள்வாங்கிய விதமே அவர்களில் பெரும்பாலானோரை மக்களை நோக்கி சிந்திப்பவர்களாக வைத்திருக்கிறது.

கொஞ்சம் ஆழ்ந்து கவனிப்பீர்களேயாயின் உங்களுக்கு ஒரு விஷயம் புலப்படும்.மம்தா வங்கத்தில் இடதுசாரிகளுக்கு எதிரானவரே.ஆனால் மம்தாவிடம் வெளிப்படும் அனைத்து விஷயங்களும் இடதுசாரித் தன்மை கொண்டவை.கேரளத்தில் இடது தலைவர்களானாலும் காங்கிரஸ் தலைவர்களானாலும் அவர்களிடம் இருப்பது இடதுசாரி பண்புகளே.ஏன் இவற்றைச் சொல்கிறேனெனில் இந்தியாவைப் பொறுத்தவரையில் இப்பண்பு அழியக்கூடாதது.ஏனெனில் இவர்களிடம் மட்டுமே பாரபட்சத்திற்கு எதிரான குணம் இருக்கிறது.மிகப்பெரிய ஜனத்திரள் கொண்ட இந்தியா போன்றதொரு தேசத்தில் பாரபட்சங்களுக்கு எதிரான குணம் என்பது மிகவும் முக்கியமானது .

பாரபட்சத்தை அரசியல் கருத்தியலாக ஏற்று கொள்வது மிகவும் துரதிர்ஷ்டவசமானது .மனிதன் பாரபட்சமானவன் தான்.சமமற்றவனே.மற்றொன்றை விஞ்சுவதற்காக அவன் சதா போராடிக் கொண்டிருப்பவன்.நானும் அவனும் ஒன்றில்லை என்பதற்காக போராடுகிறவன்.அதற்காக அரசமைப்பின் கருத்தியலாக அது ஏற்கப்படக் கூடாது.ஒருவேளை சிறிய நவீனமடையாத சிறிய நாடுகளுக்கு பாரபட்சம் பொருந்தக் கூடும்.அப்போதும் அது நவீனமடைதலுக்கு முந்தைய காலகட்டத்தில் வாழும் நாடு என்றே கொள்ளப்படும்.

எனக்கு சிறுவயது முதலே பாரபட்சம் எவ்வளவு பெரிய அநீதி என்பது தெரியும்.எல்லாவிதமான குற்றங்களிலும் நான் பாரபட்சத்தையே பிரதானமான குற்றமாகக் கருதுவேன்.பிற குற்றங்களில் மன்னிப்பதற்கோ,ஏற்பதற்கோ வாய்ப்புள்ள ஒரு பகுதி இருந்து கொண்டுதானிருக்கிறது.ஆனால் பாரபட்சம் என்னும் குற்றம் அளவில் மிகப்பெரியது.மிகக்கொடியது.

இடதுசாரிகளுடன் எவ்வளவோ முரண்கள் எனக்கு இருக்கின்றன.ஆனால் அவர்களிடம் நான் கண்ட போற்றுதலுக்குரிய பண்புகள் ஆதர்சமானவை.இப்போதும் வற்றாதவை .சிறு வயதிலேயே இடதுசாரிகளுடனான தொடர்பு எனக்கு ஏற்பட்டு விட்டது.மாநில அளவில் நடைபெறுகிற பெரிய நிகழ்வுகளில் இந்திய அளவில் பெரிய தலைவர்கள் பங்கெடுப்பார்கள்.எல்லோரும் சாப்பாட்டு கூடத்திற்கு ஒன்றாக வரிசையில் நின்று கொண்டிருப்போம்.இந்த பண்பு மிகுந்த கவர்ச்சியை அவர்களிடம் சிறு வயதிலேயே எனக்கு ஏற்படுத்தியது.பாடங்கள் ,பேதங்கள் இவையெல்லாம் இருக்கட்டும் .எனக்கு பிரதானமானதாக இருந்தது இந்த பண்பே.இப்போது பிறரிடமும் இப்பண்புகள் உருவாகியிருக்கலாம்.ஆனால் அது இடதுசாரிகளிடம் இருந்து உருவாகி வந்தது.நான் புரிந்து கொண்டது "இந்த வரிசை "என்கிற ஒன்று நம்முடைய மனங்களில் உருவாகாதவரையில் நாம் நவீனமடையவில்லை என்பதே .

பொது இடங்கள் பொது வரிசைகள் பொது  மருத்துவமனைகள் எல்லாயிடங்களிலும் தொடர்ந்து நம்முடைய சகிப்பின்மையை கவனித்து கொண்டே வருகிறேன்.வரிசையை குறுக்கிடுபவர்களே இங்கே அதிகம்.வரிசையில் நிற்க முடியாது என்பதற்காகவே பலர் தனியார் மருத்துவமனைகளைத் தேர்வு செய்கிறார்கள்.அங்கே ஆகும் தாமதம் காத்திருப்பு என்பதாக மனம் உணருகிறது. அதில் இழிவு கிடையாது ஏனெனில் அது காத்திருப்பு. ஆனால் பொது வரிசை என்பது பொது புத்தியில் மிகவும் இழிவானது.பிராமணர்கள் ஓரளவிற்கு வரிசைக்கு ஒத்துழைப்பார்கள்.வெள்ளாளர்கள் வரிசையில் நிற்கும் காலத்தை விட பத்து மடங்கு காலம் அதிகமானாலும் பரவாயில்லை குறுக்கு வழிகளை முயற்சித்துக் கொண்டேயிருப்பார்கள்."வரிசையில் நிக்கும் குறைச்சல் இல்ல அங்க அவன் இருக்காம்லா "என்பது அவர்களின் பேச்சு வழக்கு.பிற்படுத்தப்பட்ட  சாதிகளை சேர்ந்தவர்கள் ,தலித்துகள் மோசமான விதத்தில் வரிசையைக் கசக்கக் கூடியவர்கள்.அவர்களுக்கு அப்போதுதான் உலகம் முழுவதும் கெட்டுப் போய்விட்டது நினைவிற்கு வரும்.இன்னும் சிறிது நேரத்தில் உலகம் அழிந்து விடும் என்று கண்டுபிடித்து சொல்வார்கள்.பொது வரிசைகளில் காரியங்கள் மிகவும் எளிமையானவை.வரிசைகள் எடுத்துக் கொள்ளும் காலம் கூட மிகவும் சொற்பம்தான்.ஆனால் வரிசையைக் கசப்பவர்களை ,குறுக்கிடுபவர்களை ,உடைப்பவர்களை சமாளிப்பதே கடினமானது.  பொது மருத்துவமனை வரிசைகளில் சுய அனுதாபத்தைப் பெருக்கிய வண்ணம் ,கழிவிரக்கத்தை கையிலேந்திக் கொண்டு ஒருத்தி பெரும்பாலும் வந்தே தீருவாள்  .மிகவும் கடினமான பெண் அவள்.வழிவிட்டு ஒதுங்கி விடுதல் நன்மை.அவர்களில் பலர் தமிழில் பெண் கவிகளாகும் தகுதி கொண்டவர்கள்."நான் யாரென்று தெரியுமா ?" என்கிற ஒருத்தனும் இந்த வரிசைகளில் உண்டு.அவன் தமிழ் கவிஞன் .விட்டுவிட வேண்டும். ஒரு வரிசை முணுமுணுப்பில்லாமல் இனிமையாக நகருகிறதென்றால் நிச்சயமாக அதனை நாகரீகமானவர்கள் இருக்குமிடம் என்று கண்டு கொள்ளலாம்.இதுவரை  நான் கண்டதில்லை.நவீன இலக்கியம் படிக்க வருகிற இளைஞன் இந்த வரிசையில் தான் நின்று கொண்டிருப்பான்.ஆனால் எல்லோரும் அவனை இடித்துக் கொண்டு முன்னேறிச் சென்று கொண்டேயிருப்பார்கள்.அப்படியானால் இவர் இன்னாரே எனக் கண்டு தோழமையை ஏற்படுத்திக் கொள்ளலாம்.பழைய அரசு பள்ளிகளில் இந்த வரிசைகள் மிகவும் அழகாக பேணப்பட்டன.இப்போது குலைந்திருக்கிறது.தனியார் பள்ளிகளின் வரிசைகள் ஸம்ப்ரதாயமானவை.அமிர்தானந்த மயி பள்ளிகளில் குழந்தைகளுக்கு வரிசையை அழகாக பாடம் நடத்துகிறார்.அந்த குழந்தைகளிடம் மேம்பட்ட பண்பு வெளிப்படுகிறது.

###

இந்தியாவில் மீண்டும் பாரபட்சங்களை முன்னிறுத்துகிறது பா.ஜ.க அரசு.எல்லாவிதமான வரிசைகளை  உடைத்து நொறுக்குகிறது.இந்த அரசின் பிரதான தீமை இதுவே.மற்றபடி அவர்கள் காங்கிரசையே பின்பற்றுகிறார்கள்.வருமான வரித்துறையா ,நீதித்துறையா, பிராந்திய அரசுகளா ,தன்னாட்சி  பெற்ற அமைப்புகளா  இவையெல்லாம் நாம் உருவாக்கிவைத்திருக்கும் வரிசைகள் .இவற்றை உடைக்கக் கூடாது.எனக்குத் தெரிந்தவர்கள் அப்பா அம்மா தங்கை தமையன் குழந்தைகள் மருமக்கள் என ஒன்றாக வாழ்ந்தவர்கள்.புதிதாக அவர்களுக்கு அறிமுகமான தம்பதியினர் ஆணும் பெண்ணும் அறிமுகமான நான்கு தினங்களில் சொன்னால் நம்ப மாட்டீர்கள், அந்த குடும்பத்தை சுக்கு நூறாக உடைத்து விட்டார்கள்.பக்கத்து வீட்டில் பந்தயம் கட்டிவிட்டுச் செய்திருக்கிறார்கள். ஏராளம் பிரச்சனைகள் பிரிவினைகள்.மூத்தவர் கதறி அழுதுவிட்டார். அத்தனை சந்தோஷங்களும் நான்கே நாட்களில் தடயம் கூட இல்லாமல் போய்விட்டன .மூத்தவரோடு அவர்களை காண சென்றிருந்தேன்.இருவரும் இனிக்க இனிக்க வரவேற்றார்கள்.நீங்கள் புத்திசாலிகள் என நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் இல்லையா ? என பேச்சைத் தொடங்கினேன்.இதையெல்லாம்  செய்வது மிகவும் எளிது தெரியுமா ? என அவர்களிடம் கேட்டேன்.இப்போது உங்கள் இருவரையும் தெரிந்தே  உடைக்க  ஒருவார கால அவகாசம் போதும் தெரியுமா ? என்றேன் .கொஞ்சம் அவர்களுக்கு உறைத்தது.ஆனால் இப்படியெல்லாம் செய்யக்கூடாது என்பதே நெறி.நெறிகளை வலிந்துதான் பின்பற்றவேண்டும்.இல்லாமல் வராது.மனம் எப்போதும் நெறிகளுக்கு எதிரானதுதான்.மனதை எதிர்த்து செய்யாமல் இருக்கும் காரியங்களுக்கு பெயரே நெறி.மோடியும் அமித்ஷாவும் இந்தியாவில் இந்த தம்பதியினரைப் போன்று நடந்து வருகிறார்கள்.இறந்த காலங்களை பழிவாங்கும் நோய் நோய்களிலேயே கடுமை நிறைந்தது.குணப்படுத்த இயலாதது.பிராமணர்கள் பெரும்பான்மையினராக மோடியை ஆதரிக்கிறார்கள்,பாரபட்சங்களில் ஏறி அமர நினைக்கும் இடைநிலை சாதியினரை இந்தியா முழுதும் மோடி பாரபட்ச மனோபாவத்தால் இணைக்கிறார்.தமிழ்நாட்டின் உதாரணம் பாட்டாளி மக்கள் கட்சி.பாரபட்சங்களில் ஏறி அமர நினைக்கும் தலைமைக்கு மிகச் சிறந்த உதாரணம் அது.பிராமணர்கள் இன்று குளோபல் ஆகிவிட்டவர்கள்.கோவில்களோ குளங்களோ அவர்களை பிராந்திய நிலைக்கு இணைக்காது.அவர்களுக்கு நிலங்களில் வேலையில்லை.தொடர்பில்லை.ஒருவகையில் இஸ்லாமியர்களையும் பிராமணர்களையும் ஒரே தளத்தில் இருத்தி அணுக முடியும்.அவர்களுக்கு பிராந்திய மனத்தில் தொடர்பு கிடையாது.அவர்களுடைய வீடு மட்டுமே இந்தியாவில் இருக்கிறது.எனவே பிராந்தியர்களை ஒடுக்கும் பா.ஜ.க வை அவர்கள் முழுதுமாக ஆதரிப்பதில் அவர்களுக்கு நன்மை உண்டு.பா.ஜ.கவினரைப் போலவே பிராந்திய நலன்கள் அத்தனைக்கும் எதிராக பிராமணர்களும் குரல் கொடுக்கிறார்கள் .அவர்களின் கண்ணோட்டத்தில் பிற சமூகத்தினர் பிராந்திய எலிகள்.   

###

இந்திய விடுதலை என்பது வெள்ளைக்காரர்களிடமிருந்து சுய அதிகாரத்தை மீட்ட நிகழ்வு மட்டுமல்ல ; இந்திய பிராந்தியங்களில் யுத்தங்களாகவும் வெறுப்பாகவும் நிலவிய பாரபட்சங்கள் அனைத்திலிருந்தும் மீள்வதற்கு மக்கள் எடுத்த முயற்சியாகும்.மக்களின் இந்த முயற்சிக்கு மஹாத்மா பொருத்தமாக இருந்தார்.நவீன சமூகமாக நாம் மாறுவதற்கு காந்தி நமக்கு மிகப்பெரிய அர்த்தத்தை ஏற்படுத்தித் தந்தார். இப்போது மீண்டும் பா.ஜ.க பாரபட்சங்களை முன்னிறுத்தி பிராந்திய அச்சத்தை இந்தியாவெங்கும் ஏற்படுத்துகிறது.விடுதலையின் பொருளில் நாம் வெகுவாகக் கீழிறங்கிக் கொண்டிருக்கிறோம்.பா.ஜ.க அரசின் எதிர்மறையான தன்மை என்பது அதன் பாரபட்ச தன்மையிலேயே அடங்கியிருக்கிறது.பாரபட்சம் எதன் அடிப்படையில் வந்தாலும் அது நாம் நவீனமடைவதில் தடையை ஏற்படுத்தி விடும்.

நான் பொதுவாக இந்திய விடுதலையை மூன்று அடிப்படைவிதங்களில் பொருள் படுத்திக் கொள்வதுண்டு.முதலாவது நாம் இன்று அடைந்திருக்கும் பெரும்பான்மையான நன்மைகள் சுதந்திர இந்தியாவால் நாம் அடைந்தவையே.கல்வி ,சுகாதாரம் ,போக்குவரத்து இவையெல்லாம் சுதந்திர இந்தியாவால் நாம் பெற்ற பலன்கள்.பாரபட்சங்களை கைவிட்ட காரணத்தாலேயே இவையெல்லாம் சாத்தியமாயின.சுகாதாரத்தில் மிகவும் முன்னேறியிருக்கிறோம்.அறுபது வயது என்பது நாற்பதாண்டுகளுக்கு முன்பு வரையில் ஆகப் பெருங்கிழவியின் வயதாக இருந்தது .கிராமங்களில் ஒவ்வோர் ஆண்டும் சுகாதாரமின்மையால் நடைபெறும் மரணங்கள் நாற்பது வருடங்களில் வெகுவாக குறைந்திருக்கிறது.அல்லது இல்லை.அடிப்படை கல்வியறிவு பெறாதவர்கள் இல்லை.போக்குவரத்து கண் கூடாக நம்மில் தலைகீழ் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.வேலைவாய்ப்பை ,பொருளாதாரத்தை ,வாழ்வின் தன்மையை அது மாற்றியிருக்கிறது.இவையெல்லாம் நான் எனது கண்களாலேயே கண்ட மாற்றங்கள். அதை முன்வைத்தே நாற்பது வருடங்கள் என்று குறிப்பிட்டுச் செல்கிறேன்.உணவின்மை என்பது நான் அறிந்த கிராமங்கள் எதிலும் இல்லை.இன்று ஒரு கிராமத்திற்கு சென்று காலுக்குச் செருப்புமில்லை கால் வயிற்றுச் சோறுமில்லை என்று ஒருவர் பாடினால் அது புரட்சிப் பாடல் இல்லை.பழம்பாடல்.சாதாரண உடல் வேலைகள் மூலமாக மட்டுமே மாதம் இருபதினாயிரம் ஈட்டுகின்ற தலைமுறை உருவாகியிருக்கிறது.நமது விடுதலையால் பாரபட்ச நீக்கத்தால் ஏற்பட்ட முக்கியமான மாற்றம் இது.அப்பட்டமான திறந்த உண்மையிது.இதில் ஒருவர் மாறுபடுவாரேயானால் அவரிடம் எனக்கு உரையாடுவதற்கு ஒன்றுமே கிடையாது.அவர் பிறிது ஏதோ நோக்கம் கொண்டவர் என விலகிச் சென்று விடுவேன். இவையெல்லாம் கடந்த கால காங்கிரஸ் ஆட்சிகளால் விளைந்தவை.அதனை இந்தியாவில் மேலும் முன்னெடுத்துச்       செல்வதற்காகத் தான் நமக்கு புதிய கட்சிகளும் கருத்துக்களும் தேவையே அல்லாமல்,அதனினும் கீழிறங்குவதற்காக அல்ல.அப்படியென்றால் அதற்கு காங்கிரஸே உத்தமம். 

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"