அமைதி தனித்திருக்கிறது

அமைதி தனித்திருக்கிறது

1

போற்றப்படுவதெல்லாம்
வளர்வதை போலவே
தூற்றப்படுவதெல்லாமும்
வளர்கிறது

தனக்குள் தானாக

2

புறத்தில் இருந்து காரணங்கள் வந்தால்
உள்ளம் சிதைகிறது
உள்ளத்தின் காரணம்
புறத்தை அழிக்கிறது

புறத்தை அழிக்கும்
அகம் அகோரம்

3

எல்லாம் ஒரே வகை
விதவையர் ஒரே வகையாக
இருக்கிறார்கள்
விடோவர் ஒரே வகையாக
இருக்கிறார்கள்
விவாகரத்து பெறுவோர் ஒரே வகையாக இருக்கிறார்கள்
திருமணம் ஆனவர்கள் ஒரு வகை
ஆகாதவரெல்லாம் ஒரே வகை
ஆகவே முடியாதவர்கள் ஒரு வகை
முரண்படுவோர் ஒரே வகையாக
இருக்கிறார்கள்
நிம்மதியற்றோர் ஒரே வகையாக இருக்கிறார்கள்
எதிர்வாது செய்வோர் ஒரே வகையாக இருக்கிறார்கள்
சகிப்பற்றோர் ஒரே வகையாக இருக்கிறார்கள்
சண்டையிடுவோர் ஒரே வகையாக இருக்கிறார்கள்
சண்டையிடத் தூண்டுவோர் ஒரே வகையாக இருக்கிறார்கள்
சச்சரவிடுவோர் ஒரே வகையாக இருக்கிறார்கள்
பொது மண்டபம் இடிப்போர் ஒரே வகையாக இருக்கிறார்கள்

ஏன் ஒரே வகையாக இருக்கிறார்கள் என்பது
தெரியாததால்
ஒரே வகையாக
இருக்கிறார்கள்

###

அமைதி தனித்திருக்கிறது

4

அமைதிக்கும் நமக்குமிடையில் தான்
எவ்வளவு பெரிய
பேருந்து நெரிசல்

5

எது வேண்டுமென்பதை
யார் வேண்டுமானாலும்
எடுத்துக் கொள்ளலாம்

6

ஏற்பது கடினம்
மிருகத்தின் மனதிற்கு

ஏற்க ஏற்க
மிருகம்
கரைகிறது

7

எதுவும் நிகழாமல்
எதுவும் நிகழ்வதில்லை
இரண்டும் முக்கியம்

8

எதிர்த்து நீ கிளம்புகையில்
எதிரில் யார் வர வேண்டும் என்பதை
நீதான் முடிவு செய்கிறாய்

9

அறிந்து அறிந்து செல்லச் செல்ல
அம்மை அகன்று அகன்று சென்று கொண்டிருக்கிறாள்
அறிதலின் தொலைவு
அப்பால் அப்பால்
என்று
நீண்டு செல்கிறது

10

அறிதலுக்கு அப்பாலுள்ள இடத்தில்
அம்மை
அமர்ந்திருக்கிறாள்

11

கடைசி கடைசியில்
கன்னி பகவதி காலடி போற்றி

12

விட்டு விட்டு
மெல்ல கிளம்பி வந்து விடு
கடல் பார்க்கச் சென்று விடலாம்

###

யார் யாராகவோ இருந்திருக்கிறேன்

1

எழுதியிருக்க வேண்டாதவை
உண்டு
ஆனால் பாருங்கள்
அந்த வேண்டாதவற்றில் இருந்தே
வேண்டியவை
வந்திருக்கின்றன

2

என்னை யாரென்று தெரிகிறவரையில்
யார் யாராகவோ
இருந்திருக்கிறேன்

3

ஏற்றுக் கொள்வது எப்படி
என்று தெரிந்தவனுக்கு
எடுத்துக் கொள்வது
எப்படி என்றும்
தெரிகிறது

மறுப்பவனுக்கு
மறுபக்கத்தில்
இருப்பது
மரணம்

4

இரண்டில் ஒன்று நடக்கும்
யாத்திரைக்கு இலக்குகள்
இல்லை

5

பாதி யாத்திரையில்
திரும்புகிறவன்
முகமெங்கும்
குடி கொள்ளும் பேய்

6

எங்கிருந்தோ வந்த பிச்சைப்பாத்திரம்
என்னுடையது
அதற்கு நானே
ஆடை வடிவமைப்பாளன்

7

இன்றில் இருப்பதால்
இனிக்கிறது
இன்றில் இருப்பதால்
கசக்கிறது
வலிக்கிறது
இன்றில் இருப்பது
அறுசுவை

8

ஆறு படைவீடு முருகனுக்கு
என்னைத் தாண்டித்தான்
நீங்கள் உள்ளே செல்லமுடியும்
அடிவாரம்
என் வாசல்

9

அழுகுரல் வரும் திசை
என்னுடையதல்ல

10

என்னுடைய இன்றை
யார்
கொடுத்தாலும்
எது நிறைத்தாலும்
அப்படியே அங்கே
சரணடைந்து
கிடக்கிறேன்

###

தென்னையின் மடல் ஒன்றிலிருந்து
எழுந்த காகத்தின் நிழல்
நிறைய மடல்களைக் கடந்து
சென்று கொண்டிருந்ததைப் பார்த்தேன்
காகத்திலிருந்து மறைந்து
காகம் தனியே அது தனியே

வெகுதூரத்திற்கு அப்பால்
காகத்தில்
இணைந்தது
இருவேறு பறவைகள் போலும்

ஏறியிறங்கி மடல்களில்
தாவி செல்கையில்
வெறும் நிழலென்றே
நினைத்திருப்பார்கள்
தன்னுடலையும் எடுத்து கொண்டே
அது பறந்து சென்றது

நிழலுக்கு உண்டு
ஒரு தன்னுடம்பு

பறவையின் நிழலொரு
தனிப்பறவை

###

எங்கு தான் போனாள் ?

1

காமத்திற்காக ஏங்கும் போது நிச்சயமாக
நானொரு நபருக்காக ஏங்கவில்லை
காமத்திற்காக
ஏங்குகிறேன்
காதலுக்காக ஏங்கும் போது நிச்சயமாக
நானொரு நபருக்காக ஏங்கவில்லை
காதலுக்காக
ஏங்குகிறேன்

ஒரு நபருக்காக ஏங்கும் போதும் இப்படியே
நிச்சயம் நானந்த நபருக்காக ஏங்கவில்லை

2

டெடிபியர் பொம்மையை
கையில் அணைத்துக் கொண்டு
முகத்தைக் கோணி வளைந்து நடக்கும்
இரண்டு வயது பையனுக்கு
யாருடனும்
பிணக்கு
இல்லை

3

ஒரு நாளில்
இருசக்கர வாகனத்தில்
விரையும் இருவருக்கு
கோபமின்றி சுட்டிக் காட்டுகிற அளவிற்கு
கருணை உண்டு என்னிடம்

அதே நாளில் மூன்றாவது நபர் எனில்
" டேய் சைடு ஸ்டாண்ட் எட்ர்ரா "
என்று
சொல்லி விடுகிறேன்

பின்னால் வந்தவனைக் காட்டிலும்
முதலிருவர்
பாக்கியவான்கள்

கருணை இருக்கும் நேரத்தில்
சரியாக
வருகிறார்கள்

4

நான் ரொம்ப நாளாக
வானத்தில் புகையெழுப்பிக் கரையும்
புட்டவியும்
சமையல்கட்டுகளைத்
தேடித் கொண்டேயிருந்திருக்கிறேன்
என்பதை
சற்றைக்குமுன் கணத்தில்
கண்டு கொண்டேன்

அவை இப்போது இல்லவே இல்லை
என்பதனையும்

5

பாசி படர்ந்த மதிற்சுவர்
பதநீர் அடுப்பில்
சுகித்துத் திரிந்தவள்
முடிவில்
எங்கு போனாள் ?

சிட்டுக்குருவியாயிற்றோ அவர் உயிர் ?
தேன்துளை மலராயிற்றோ
அவள்
வடிவம் ?

###

நேற்று நானிருந்த விதத்தில் நீ

1

நேற்று நானிருந்த விதத்தில் நீ
இருக்கிறாய் என்பதற்காக மட்டும்
சுட்டி காட்டவில்லை
நேற்றைய என்னுடைய நானை
உனக்குச்
சுட்டிக் காட்டுகிறேன்
எச்சரிக்கிறேன்
அதே குவளையைத் தொடாதே
அதே முகத்தை அணியாதே
அதே உணவை உண்ணாதே
அதே நோயை
விரும்பாதே

என்னிடம் என்னை சுட்டி காட்டுவதுதான் இது
பதறுவதற்கு
ஒன்றுமில்லை

2

கடல் அருகில் குழந்தை
ஆச்சரியங்கள் அற்று விளையாடிக் கொண்டிருக்கிறது
கடல் வேறு
தான் வேறு
என்று இன்னும்
பிரித்துக் கொள்ளாத
குழந்தை

பிரித்துக் கொள்ளாததால்
குழந்தை

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"