எனக்கு அறிவு கிடையாது அதனால் தப்பித்தேன்

எனக்கு அறிவு கிடையாது அதனால் தப்பித்தேன்
எனக்கு ஐம்பதாவது வயது பிறந்திருக்கிறது.ஒவ்வொருவருக்கும் நாற்பத்தியைந்திற்கும் மேல் ஒரு கண்டம் வரும்.அது கடந்தால் பின்னர் கண்டம் திரும்பவும் வந்துகூட பத்தாண்டுகள் ஆகும்.அரசபணியில் இருப்பவர்களுக்கு ஓய்வில் கண்டம்.அதாவது ஓய்வு தொடங்குகையில் எப்படி? என்கிற திகைப்பிருக்கும்.சிலர் மனநல பிரச்சனைகளுக்கும் ஆளாவதுண்டு.அதுவரையில் அவர்கள் வாழ்ந்த வாழ்வு போதாது,போலியானது என்பது தெரிய வரும்.சிலர் அதனை குறுக்கு வழிகளில் கடக்காமல் நேர்வழிகளில் எதிர்கொள்ள பழகிக் கொண்டார்கள் எனில் எண்பதுவரையில் தடங்காமல் செல்லமுடியும்.
நீள் ஆயுள் மீண்டும் பிறவாமைக்கு நல்மருந்து.ஏக்கங்கள் அனைத்தும் தணிந்து சாதல் நலம்.பூரண வாழ்வு அது.அதனால் நீள் ஆயுள் வாழ்பவரேல்லாம் பூரண வாழ்வு கொண்டவர்கள் என்றோ பூரணமாக வாழ்ந்தவர்கள் என்றோ சொல்ல முடியாது.வாழ்வினை ஒரு கப்பல் பயணம் போல சாதிப்பவர்களுக்கு அது விளங்கும்.
கவிஞர் தேவதச்சன் ஒரு சமயம் " நமக்கு புறத்தில் இருப்பவர்கள் நமக்கு வயது கூடிக் கொண்டிருப்பதை பார்க்கிறார்கள் ,அகத்தில் நமக்கு வயது கூடுவதில்லை " என்று சொன்னார். அது சரியே.நம்முடன் சிறுவயதில் உடன்படித்த சம வயது நண்பர்களை காண்கையில் நமக்கு உள்ளத்தில் வயது ஏறுவதில்லை என்பதை ஸ்தூலமாக உணர முடிகிறது.
சில மாதங்களுக்கு முன்பு என்னுடன் மூன்றாம் வகுப்புவரையில் உடன்படித்த நண்பன் ஒருவனை சந்தித்தேன்.குடித்து சின்னா பின்னமாகிய உடலோடு இருந்தான்.என்னிடம் "நீ அப்படியே இருக்கியேப்பா " என்றான்.உடன் படித்தவர்கள் வயதை உணர்வதில்லை. " நீயும் அப்படியேதான் இருக்கே ..." என்று பதில் சொன்னேன்.உடன்படித்த நண்பனின் உடல் சேதாரம் நமக்குத் தெரியும். ஆனால் அது அவனுடைய வயதை நமக்குத் தருவதில்லை.உடல் அவன் இடம் கொடுத்தால் மீண்டும் மேலேறி விடும்.உள்ளம் அப்படியே தான் இருக்கும்.
ஆனாலும் உடலும் உள்ளமும் ஒருங்கே அமைந்த மனிதனே வெளியில் முதிர்ச்சியுடையவனாகத் தெரிகிறான்.வயதிற்கு ஏற்ப உடலால் விழையும் காரியங்களில் வேகம் தணியத் தெரியவேண்டும்.தெரியவில்லையெனில் மாணிக்க வாசகர் சொல்லித் தருவார்.திருவாசகம் சொல்லிப் பழகவேண்டும்.தேவையற்றவற்றை ஒதுக்க ஒதுக்க தேவையானவற்றுக்கு உடலும் மனமும் ஒப்புமைப்பட்டு இசைந்து விடும்.
எனக்கு ஒருபோதும் அறிவு இருந்ததில்லை.சுட்டுக் சுட்டு பட்டுத் தெளிந்து கொள்வது.எப்படி சோப்பு போட்டு குளிப்பது என்பதனை சொல்லித் தருவதற்கு கூட சிறுவயதில் யாரும் இருந்ததில்லை.குழந்தைகளுக்கு குற்றவுணர்ச்சியை உருவாக்காமல் சுட்டிக் காட்டுவதற்கு ஆட்கள் தேவை.அவர்கள் அம்மா அப்பாவாகவோ குருவாகவோ நண்பர்களாகவோ கூட இருக்கலாம்.பிறகு எப்படி நான் விஷயங்களைக் கற்றேன் ? தவறுகளை அடைந்து , அவற்றின் எதிர்மறையான இயல்புகளை கண்டு, முழுவதுமாக சுயபரிசீலனை செய்து விடுபட்டு விடுகிறேன்.சுயபரிசீலனை செய்து எதனை வேண்டுமாலும் மாற்றியமைத்துக் கொள்வதில் எனக்கு சிறிய தயக்கங்கள் கூட இருப்பதில்லை.
அது என்னை மாற்றுகிறது.உருமாற்றுகிறது.கற்றலை ஒருபோதும் கைவிட்டதில்லை.எப்போதும் மாணவ நிலையில் இருப்பது என்னுடைய மனம்.முன்கூட்டி எதன் மீதும் என்னுடைய அறிவை சுமத்திப் பார்ப்பதில்லை.அதன் விளைவுகளில் இருந்தே அறிகிறேன்
பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் என்னுடைய அன்பு.
வாழ்க வளமுடன்

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"