வாடா மலர்

வாடா மலர்

1

அயர்ன் பாக்ஸை நோக்கி
விரைந்து வந்த சிற்றெறும்பை
அதனோடு ஒட்டியிருந்த சிறுமியின் நளினம்
கசங்காமல்
எடுத்து
தரையில்
விடுகிறான் மகன்

தன்னைச் சுற்றி சிறிது
தடுமாற்றத்துடன்
கிறங்கிய
சிற்றெறும்பு
மீண்டும்
தன் உலகிற்குள்
நுழைகிறது ,
தன்னுடைய பாய்ச்சலில் இருந்த
சிறுமியின் நளினத்தை
மகனின் கைகளில்
பரிசளித்து விட்டு

காப்பாற்றிவிட்டேன் என்று இங்கோர் கூச்சலும் இல்லை
பரிசளித்து விட்டேன்
என்றோர்
பேச்சும்
இல்லை

2

அந்த தாய்
திண்ணையின் ஓரத்தில்
சுருண்டு படுத்திருக்கிறாள்
முதலில் தனக்குள்ளிருந்த குழந்தையை
வெளியேற்றினாள்
குழந்தை விட்டு வெளியேறிய இடத்தில்
பிரகாசமாயிருக்கிறது
தாயின் முகம்
அந்த தாய் நாற்காலியில் அமர்ந்திருக்கிறாள்
மனதின் சிறுமி வெளியேறிய தடத்துடன்
பூரித்துப் போயிருக்கிறது
வெளிப்படும்
சொல்
அந்த தாய் ஓலைக்கீற்றில்
பாய் முடைந்து கொண்டிருக்கிறாள்
தனது உள்ளத்தில் இருந்த மாமியாரை
வெளியேற்றிய பின்னர்
அவளிடம்
ஒட்டிக் கொண்டிருக்கிறாள்
இப்போதைய
அன்னை
அந்த தாய் பிரகாரத்தில்
வந்து அமர்ந்திருக்கிறாள்
அனைத்தையும் வெளியேற்றிய பின்
காதலுடன்
சுடர்கிறது
அவள் நெருப்பு

3

சொல்லிக் கொள்ளும் படியாக
ஒரு வேலையும் இல்லாமல்
வந்து திரும்புகிறவனிடம்
வேறொரு மொழியில் இந்த நகரம் உரையாடத் தொடங்குகிறது

தனது ஒப்பனைகளில் ஏன் உனக்கு ஆர்வமில்லை என அது
கேட்பதில்லை

ஒளி ஆபரணங்களைப் பூட்டி
அவனை அந்தியில் வழியனுப்பும் போது
என்னைப் பரபரப்பில்லாமல் பார்த்துச் செல்பவனே நீ வாழ்க என வாழ்த்துகிறது
வாழ்த்தொலி கேட்கையில் கொண்டு வந்திருந்த கத்தியை எடுத்து ஒளித்து வைத்துக் கொண்டேன்

எனினும் சபையில் கவனிக்கப்படாத பேரரசியை ஒப்ப
எனது முதல்பார்வையில் நகரத்தின் உடல் நடுங்கியதை யாருக்கும்
தெரிவிக்கமாட்டேனென உத்திரவாதம் கூறி திரும்பிக் கொண்டிருக்கிறேன்

எப்போதும் போல ஜன்னலோரம் தானெனதிருக்கை

4

பழைய வீடு

1
வெள்ளையடித்து பூசிக் கொண்டிருந்தார்கள்
திண்ணை
நடுமுற்றம்
நாலுகெட்டு
எல்லாம் புதிதாயிற்று
பழைய வீட்டின் வெளியே வீசிற்று புது மணம்

புது மணத்துக்கு அடியில்
அப்படியே இருந்தது பழைய வீட்டின்
தொல்மணம்

2

பழைய வீட்டிற்கு
வயதும் பருவமும் பல

பதநீர்
நொங்கு
கிழங்கு
கருப்பட்டி
கற்கண்டு பருவங்கள்

3

மாமிமார் வந்து அழுதால்
எப்போதென்றாலும் உடன்சேர்ந்து பழையவீடும் அழுகிறது
மாமிமார் வந்து சிரித்தால்
கொலுசுகட்டி
குலுங்கிச் சிரிக்கிறது

4

வெள்ளையடித்தால் தீராத
ரகசியங்கள்
நான்கடியாக உயர்ந்து விட்ட
சாலைமட்டத்திற்கு
கீழே
சென்று கொண்டிருக்கின்றன

5

பழைய வீட்டைப் புதுப்பிக்க
ஒரு வழிதான் உண்டு
சுவடே தெரியாமல்
இடித்துவிடுவது

###

5


தென்னையின் மடல் ஒன்றிலிருந்து
எழுந்த காகத்தின் நிழல்
நிறைய மடல்களைக் கடந்து
சென்று கொண்டிருந்ததைப் பார்த்தேன்
காகத்திலிருந்து மறைந்து
காகம் தனியே அது தனியே

வெகுதூரத்திற்கு அப்பால்
காகத்தில்
இணைந்தது
இருவேறு பறவைகள் போலும்

ஏறியிறங்கி மடல்களில்
தாவி செல்கையில்
வெறும் நிழலென்றே
நினைத்திருப்பார்கள்
தன்னுடலையும் எடுத்து கொண்டே
அது பறந்து சென்றது

நிழலுக்கு உண்டு
ஒரு தன்னுடம்பு

பறவையின் நிழலொரு
தனிப்பறவை

6

உண்மையில் ஒரு மரணம் ஒரு மலர் உதிர்வது போலும் கூட இல்லை
பழம் கனிந்து இறங்குவது போலும் கூட இல்லை
மயிலிறகின் கனமும் அதற்கு இல்லை
எந்த எடையும்
இல்லை
தங்குதடையின்றி
தானாய் காத்திருந்து
நிறைவேறுகிறது

ஒன்றுமில்லாத ஒன்று
நிறைவேறுதல் போல

அஸ்தமனம்
நிகழ்வது போல

7

குட்டியான மீன் சந்தை

ஒவ்வொரு மீனுடனும் வந்து சேர்ந்த மணல்
நாளடைவில்
சேகரமாகி
சிறிய கடல்முற்றம் போலாயிற்று
மீன் சந்தை

விரைந்து வந்த மீன்மணத்தை நிறுத்தி
இறங்கிப் பார்த்தேன்
அலையடித்துக் கொண்டிருந்தது
கடல்

8

நடுவயதுத்தாயும் மகளும்
சாலையைக் கடக்கிறார்கள்

தாய்க்கு நான்கு இஞ்ச் உயரம் மகள்

தாயிடம் காணமல் போகும்
ஒன்றினையெடுத்து
கால அலங்காரம்
செய்து வைத்தது போலே
இருக்கிறாள்
மகள்

மகள் ஒருமகளுடன் மீண்டும்
இதே சாலையைக் கடப்பார்கள்
பிறிதொரு நாளில்

நான்கு இஞ்ச் உயரம் அதிகம்
கொஞ்சம் கூடுதல் முகப்பொலிவு
கட்டுமானம்
கால அலங்காரம் செய்து
வைத்தது போலே
மகளுக்கு
இன்னொரு மகள்

இப்படியாக
இஞ்ச் இஞ்சாக
வளர்ந்து கொண்டிருக்கிறது
வாடா மலர்

9

குழந்தை மண்ணைத் தின்றது
வாய் திறந்து பிரபஞ்சம் கண்ட தாய்க்கு
அவதார புருஷன் பிறக்கிறான்

கடற்கரையில்
காத்திருக்கும் தாய்
அவன் அவதார புருஷனே என
அறிந்து விடுகிறாள்
அறிந்த பின்னரே
அவன் உனக்கும் எனக்கும்
இனி தொடர்பேதுமில்லை என்று
மறுமொழி சொல்கிறான்

அவதார புருஷனாக அன்னையிடமிருந்து
எவ்வளவு தூரம்
செல்ல வேண்டியிருக்கிறது ?

அருகில் குழந்தை
அந்நியப்பட்டு பிறக்கிறான்
அவதாரம்

10

அதோ என் சித்தப்பா
இப்போது விலகிச் சென்று விட்டார்

நீயும் விலகு
இன்னும் இடைவெளி தேவை

அதோ என் மாமா
இன்னும் விலகு
இடைவெளி தேவை

அப்பா இல்லை என்பது போலவே
போய்க்கொண்டிருக்கிறாரே
அவர் தான் அப்பா



அவள் என் மனைவி
அவன் என் கணவன்
அவர்கள் என் குழந்தைகள்
விலகு எனக்கும் உனக்குமே
இப்போது
இடைவெளி தேவை

எனக்கு யாருமே இல்லை அண்ணா
விலகு
இப்போது
உனக்கும் உனக்குமே
இடைவெளி
தேவை

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"