எனது மியூஸியத்தின் தொடுவுடல்

இந்திர வெளிச்சம்


1




யாரையும் வெறுக்காமல் ஒரு தர்மம் கையிலெடுக்கப்படல்
வேண்டும்
அதனால் எல்லோரும் வெறுப்பார்கள்
நீ யார் என்பார்கள்
சைத்தான் என்பார்கள்
பின்னரும்
தர்மம்
கைவிடப்படல் ஆகாது
வெறுத்தல் தகாது
இகழ்வோனை ஒதுக்குதல் தகாது
எப்போதும் தர்மம் கைக்கொண்டிருக்கும்
கரம்
ஈஸ்வரப் பட்டத்திற்குரியது
2
தேடிய வழியில் நடந்து செல்கிறான் ஒருவன்
வந்து சேர்கிறார்கள்
வழி கேட்கிறார்கள்
விடைபெறுகிறார்கள்
இந்திரப்பாதையில் நடந்து செல்கிறான் தனியன்
தனித்து நடப்பவனுக்கே
இந்திரப்பாதையின்
வெளிச்சம்

###


 வாழாத வீடு கசக்கும்

வாழாத ஊர் கசக்கும்
கெட்ட ஊர் நரகம்
தப்பிச் சென்ற இடம் சொர்க்கம்
சொர்க்கத்தில்
மழை பார்க்கலாம்
மழைக்கு நம்மைப் பார்க்கலாம்
சொர்க்கத்தின் குடிநீருக்கு
அவ்வளவு ருசி
ஒரு அடிக்கு அந்தப்பக்கம் அது
ஒரு அடிக்கு இந்தப்பக்கம் இது
அடியெடுத்து வைப்பதுதான்
கடினம்

###

சிற்றெறும்புக்கு
எல்லாமே பண்டம்
விஷத்தேள் கொடுக்கு பண்டம்
சிலந்திவலை பண்டம்
ஜீவநீர் பண்டம்
பண்டமிலாத ஒன்றில
சிற்றெறும்பின்
நாவுக்கே
கொடுந்தேள்
ஒன்றிற்கிரை
கொடும்பாம்பு ஒன்றிற்கிரை
கொடும்பாபி
பெண்டிற்கிரை
பாபத்தின் புனுகு
பொன்னாபரணம்
பொன்னாபரணம் காண
மடச்சி
அதிர்கிறாள்
அதிர்வுற்ற நாவு
சிற்றெறும்பாகும்
பாபம் தீர்ந்தால்
நாவு அடங்கும்

###

நானுன் தோளின் மேலே போட்டிருக்கும்
கை அவ்வாறே இருக்கிறது
நீ முகம்
திரும்பி
எதிர்க்கத்
தொடங்கியதும்
நீ
ஏன்
எதிர்க்கிறாய்
என்பது
தெரிந்து
விடுகிறது
என்றாலும் தோளிலிருக்கும்
கையை நான் விலகுவதில்லை
அது அவ்வாறேயிருக்கிறது
நீ மீண்டும்
வந்து
அதனுள்
பொருந்திக் கொள்கிற வரையில்
வா வந்து பொருந்திப் பார்
நீ ஏன் எதிர்த்தாய் என்பது
இப்போது உனக்கு
மிக நன்றாக
விளங்கிவிடும்

###

எல்லோருக்கும் நல்லவன்
என்னிடம் நன்றாகவே நடப்பதில்லை
ஊருக்கே பொல்லாதவன்
எனக்கு
ஒரு பொல்லாப்பும்
கொடுப்பதில்லை

###

எனது உடலுக்குள் தான்
நானிருந்தேனா
என்றே
விளங்கவில்லை
உடலே சமாதியாக இருந்த போதில்
சமாதியின் கதவைத் திறந்து
மெல்ல மெல்ல
கைநீட்டிப்
வெளியே பார்க்கிறது
வானம்
மூடுவதற்குத்தான்
அநேக சட்டைகள்
தேவையாக இருக்கின்றன
திறந்து வெளியேற
எத்தனை எத்தனை
புரவிகள்
அருவிகள்

###

நானிதனை முதலில் ஒரு நண்பகல்
என்றே நினைத்தேன்
அது என்னை ஏதோவொரு இடத்தில்
பால்யத்தில் கொண்டிறக்கி
கைவிரித்து நின்றது
என் பால்யமே நீ என்ன நண்பகலாகவா
இருந்தாய் ? என்று கேட்டேன்
அது ஒரு இரவில் கொண்டு இறக்கியது
கசப்புடன் குண்டு பல்புகள்
மயக்கமூட்டும்
ஓட்டுவீட்டின்
இரவு அது
கழிவறை வாசம் , வீச்சம்
பருவத்தின் உதிரக்கறை
மாமிகளின் அக்காக்களின்
உரைப்பெருக்கு
நெளியத் தொடங்கிற்று
எனது ம்யூஸியத்தின்
தொடுவுடல்

###

சுற்றிச் சுற்றி
தெருவைச் சுற்றி
ஊரைச் சுற்றி
நாட்டைச் சுற்றி
எனது காலை நானே சுற்றி
வந்தடைந்து
எனது கொட்டாலை திறந்து
விளக்கேற்றி
அமர்ந்தேன்
கொட்டாலையின் குறுக்கு விட்டத்தில்
ஒற்றைக் காகம்
அகாலத்தில் நின்று கூவுகிறது
அகாலம் என்ற சொல் அகாலத்தைத் தான்
சுட்டுகிறது எனில்
அகாலம்தான்
எவ்வளவு விரிந்து கிளைவிட்டு
சுடருகிறது
சிறுவிளக்கொளியில்
நண்பகலை வாரி விழுங்கும்
அளவிற்கு
அகாலத்தில் அமர்ந்தழைக்கும்
காகத்தின் பெயர்
காகமாகவும்
இருக்கலாம்
அல்லதிந்த நண்பகலெனவும் அதனைக்
கருதலாம்
அது கரையாது அமர்ந்திருந்தால்
அறிந்திருக்காது இந்த ஒற்றைச் சுடர்
அகாலத்தை ஒரு போதும்

###


Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"