"பிரணவ் ஸ்கேன் சென்றர்" மற்றும் சில கவிதைகள்

 பிரணவ் ஸ்கேன் சென்றர்

ஸ்கேன் சென்றரில் மரணத்தின் முன்பாகக் காத்திருக்கும் முகங்கள்
அனைத்தையும் தெரிவித்து விடுகின்றன
போதும் போதும் எவ்வளவு பார்த்தாயிற்று ?
இவ்வளவு விரைவாகவா ?
முடிந்து விடுமோ ?
இதற்காகத்தானா ?
இன்னும் கொஞ்சம் வாழ்ந்திருக்கலாமோ ?
பாதி கூட முடியவில்லையே ?
நிறைய வலி இருக்குமோ ?
சரியாகத்தான் போராடியிருக்கிறேன் ?
எவ்வளவு தவறுகள் ?
அகங்காரத்திற்கு ஒரு தலையணை தரக் கூடாதா ?
ஒவ்வொரு முகத்திலும்
தனித்தனி மொழி
ஸ்கேனிங் தொடங்குவதற்கு முன்னரே
முகங்கள்
அனைத்தையும் பேசி விடுகின்றன
எந்திரம் ஒவ்வொரு முகத்தையும் கூண்டுக்குள்
மெல்ல நகர்த்தி அழைத்துச் செல்கிறது
முகங்கள் பெற்றிருக்கும்
உடல்களுக்காக

#


2

குழந்தையை அழைத்து

கடைவீதிக்கு வந்த அப்பன்
முதலில் இல்லாததை கேட்டான்
ஆனால் என்னிடம்
அது இருந்தது
இருக்கிறது என்றேன்
இருந்ததில் இல்லாததைக் கேட்டான்
ஒவ்வொன்றாக எடுத்து
முன் வைத்தேன்
எல்லாமே இருந்தது
இருப்பதில் இல்லாதது ஒன்றுண்டா
என்றான் மீண்டும்
உண்டு என்றேன்
இருப்பதில் இல்லாத ஒன்று
வைத்துக் கொள்ளச் சொல்லி
குழந்தையைத் திருப்பித் தந்தேன்
பேரம் பேசும் போது
என் தோளின் மீதெறி நின்று
தந்தையைக்
கவனித்துக் கொண்டிருந்த
குழந்தையை


#

3


முதலாளியைக் கவிழ்த்து

வேலைக்கு வந்தவன்
உரிமையாளராக நின்று கொண்டிருக்கிறான்
அவன் தரப்பு சரியாகக் கூட
இருக்கலாம்
என்றாலும்
பட்டறையில் அவனைக் காண்பதில்
சங்கடம் உண்டு
2
அண்ணனின் அகால மரணம்
அண்ணிக்கு அடைக்கலம் செய்தவன்
பெரிய முற்போக்குதான் சந்தேகமில்லை
மாபெரும் தயாளனே மாறுபாடில்லை
என்றாலும்
பஜாரில் ஜோடி கலகலத்துச் செல்கையில்
எங்கோ மறைவிலிருந்து பார்க்கும் அண்ணன்
திடுக்கிடுவது போல
காண்போர் உள்ளம்
திடுக்கிடுகிறது
அவன் சொந்த தம்பியாக அல்லாமல்
வேறொருவனாக
இருந்திருக்கக் கூடாதா?
என்பதே
அந்த
திடுக்கிடல்
வேறொன்றுமில்லை

#

4

ஆளில்லா வீதிக்கு

காவலுக்கு நிற்கிறாள் போலிஸ்காரி
மழைச்சாரல் விழத் தொடங்குகிறது
மழைக்கு காவல் நிற்கிறாள் போலிஸ்காரி
சாலைபெருகி நீர் உருளுகிறது
உருளும் நீருக்குக் காவல் செய்கிறாள் போலிஸ்காரி
பணி முடிந்து வீட்டிற்குச் செல்கிறாள்
ஒரு நாளும் இல்லாமல் அவள்
எடுத்து வந்திருந்த
ஆளில்லாத வீதிக்கு
வீட்டில்
அமர இடம் கொடுக்கிறாள்
போலிஸ்காரி
பணிக்குத் திரும்புகிறாள் போலிஸ்காரி
மறுநாளில்
அவளை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது
ஆளில்லா வீதி
நாற்காலியில் அமர்கிறாள்
நேற்றைய மழையை கோடுகிழித்து
வரையத் தொடங்குகின்றன
கால்கள்
ஆளில்லாத வீதியில்
ஆட்கள் இல்லை
அவ்வளவுதான் விஷயம்

5

சும்மா இருப்பவனை ஆறு கடந்து செல்கிறது
1
நான் சும்மா இருக்கையில்
நிகழத் தொடங்குகின்றன
கொந்தளிக்கையில்
அணைந்து விடுகின்றதத்தனையும்
2
ஊரையெல்லாம் அறிந்து
திண்ணையில் வைக்கிற
பெரியவரிடம்
உங்களை
அறிந்து கொண்டீர்களா
என்று கேட்டேன்
3
சும்மா இருக்கையில்
ஒரு நட்சத்திரம்
உள்ளிறங்கிச் செல்கிறது
4
அனைத்து சந்தடிகளும் ஆசைகள்
5
சந்தடியில் சிக்கியவன் ஆற்றினைக் கடந்து செல்கிறான்
சும்மா இருப்பவனை ஆறு கடந்து செல்கிறது
6
மனித வெடிகுண்டு
பேராசையின்
வடிவம்
7
எத்தனை அடிபட்டாலும்
கவிதையே
என்னைக் கரையேற்றுகிறது
8
வெளியூர் சென்று திரும்பி
குளிக்கிறேன்
மொத்த வெயிலும்
நீராய்
இறங்கி
பூமியில்
மறைகிறது
9
தண்ணீரில் எவ்வளவு மறைபொருட்கள் ?
10
எல்லாம் அப்பட்டமாக வெளியே புலப்படுவது போலதான் தோன்றச் செய்கிறது
மாயை
11
சும்மா இருக்கத் தெரிந்தவன்
ஒரு போதும் சும்மாவே
இருப்பதில்லை

#

6

நிறைவாக இருக்கிறான் அவ்வளவுதான்
1
மனதை எங்கு கொண்டு போய்
வைத்தாலும்
அது
அங்கிருந்து
வேலை செய்யும்
அழுக்கில் வைத்தாலும் அங்கிருந்து வேலை செய்யும்
அழகில் வைத்தாலும் அங்கிருந்து வேலை செய்யும்
நீரில் வைத்தாலும் அங்கிருந்து வேலை செய்யும்
நெருப்பில் வைத்தாலும் அங்கிருந்து வேலை செய்யும்
எங்கு அழைத்துச் சென்று எப்படி
வைக்கிறோமோ
அப்படி அப்படியே
2
நிறைவாக
இருக்கிறவனுக்கு
குறைகளே கிடையாது
என்றெல்லாம் இல்லை
நிறைவாக இருப்பவன்
நிறைவாக இருக்கிறான்
அவ்வளவுதான்
3
குழந்தையானாலும்
ஒட்டுமொத்த உலகையும்
அடைய வேண்டும் என்றே பிரயாசை கொள்கிறது
தாய்முலைக் காம்பில்
4
காண்பதையெல்லாம் வியப்பவன் யோகன்
காண்பதையெல்லாம் அடைய விழைபவன் போகன்
5
மலையேறுதலுக்கு வழி கேட்ட வண்ணம்
வந்தான் ஒருவன்
இன்னும் கொஞ்ச தூரம்தான் என்றார்கள்
முதலில் திரும்பியோர்
பாதி தூரம் கடந்திருக்கிறாய் என்றார்கள்
பகலில் திரும்பியோர்
மீதி தூரம்தான் இருக்கிறது என்றார்கள்
இரவில் திரும்பியோர்
வழி கேட்பதை நிறுத்து
வந்து விடும்
என்றது
மாமலை
6
இரண்டாவது மனைவி
யோனியை கொடுத்து விட்டு
அத்தனை பொறுப்பையும்
அவன் மீது வைத்தடித்து விட்டாள்
7
இரண்டு குழந்தையைத்தான்
வளர்க்க முடியும் என்பது தெரிய வந்ததும்
ஒரு மனைவியே உத்தமம்
என்பதும்
விளங்கி விட்டது
8
எப்படியிருந்தாலும் அதில்
பெரிதாக லாபமென்றும் கிடையாது
9
ஒவ்வொரு பொய்யாக மேலேறி சென்று
அறுபதாவது பொய்யில்
குதித்து
செத்துப் போயினான்
10
ஜீவ சமாதி என்பது
வாழ்வதை குறித்தது
11
எல்லோரிடத்திலும் நோக்கம் கற்பித்துக் கொண்டேயிருப்பவன்
ஒரு நோக்கத்தைக் கூட
நிறைவேற்றுவதில்லை.
12
உண்மை அறிமுகமற்றவனுக்கு
வழங்கும்
புன்னகையை போன்றது

#

7


பிரதோஷ சிவன்
1
அத்தனையும் சிவமென்றால்
சிற்றெறும்பும் சிவமன்றோ
2
உன்னை சிவமென்றுணர்ந்தால்
பின்னை
நானும் சிவம்
என்பது
தெளியும்
3
முழுதும் சிவமானால்
சோதனைகள்
இல்லை
4
சிவமல்லாதது அத்தனையும் இணைந்து
நின்று எதிர்த்தால்
எளிது
சிவம்
விஸ்வரூபக் காட்சியாகும்
5
அத்தனை சிவத்திற்கு
மத்தியில்தான்
ஆதி சிவனும்
அமர்ந்திருக்கிறான்
6
தொட்டுத் தொட்டு
சிந்தையெல்லாம் சிவமானால்
சிவனைத் தேடித் செல்லத்
தோன்றாது
7
ஆடுவதை நிறுத்த முடியாது
8
அரை நிர்வாணத்தில்
அமர்ந்திருப்பது
அரை
சிவம்
9
சுகம் அல்லாதது எல்லாம்
சிவம் அல்லாதது

#

8

பகைவன் இல்லாத மனம் காற்றைப் போலிருக்கிறது

1
எனக்குள்ளிருந்தான்
பகைவன்
அழித்தேன்
வெளியிலிருந்த பகைவரெல்லாம் அழிந்தனர்
அவனை கண்டறிய வயதில் பாதியாயிற்று
எவ்வளவு பேர்களென
ஆச்சரியமாக இருந்தது
விரைவில்
பகைவனைக் கண்டடைந்து விடு இளைஞனே
பாதி வயது
மிச்சமாகும்
மீதி வயது உனதாகும்
2
உள்ளில் இருக்கும்
பகைவனுக்கு
முதலில்
சோறு போடுவதை நிறுத்து
நான்கு நாளில்
ஓடிப்போவான்
நீருற்றுவதை நிறுத்து
இரண்டு மணிநேரத்தில்
மாறி விடுவான்
மூச்சுக்கு ஒருதரம் நினைப்பதை நிறுத்து
கணத்தில்
விலகிவிடுவான்
நீ அவனை காதலிக்கிறாய் என்பது
தெரிந்து
நானிதை
உனக்குச் சொல்கிறேன்
3
பகைவன் ஒருபோதும்
உன்னைத் தேடுவதில்லை
நீதான் சதா அவனைத் தேடித் கொண்டிருக்கிறாய்
4
எத்தனை பகைவன் எத்தனை பகைவன்
என்பதுதானே
உன் பிரச்சனை ?
அத்தனை பகைவனும்
ஒருவனே
உன்னகங்காரன்
5
பகைவன் இல்லாத மனம்
காற்றைப் போலிருக்கிறது
6
உனக்கு இரண்டு பாத்திரங்கள் உண்டு
அதிலொன்று
உன்னுடைய
பகைவனின் பாத்திரம்
7
நீ சோறு வைத்தால் மட்டுமே
எடுத்துத் தின்னும் அளவிற்கு
உன் பகைவன்
பலகீனமானவன்
8
பகைவன் பகைவன்
என நீ பயந்து கொண்டிருப்பதெல்லாம்
உன்னைப் பற்றித்தான்

#

நான் என்னை வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறேன் ?
1
வீழ்த்த நினைக்கிறோம் என்பது
வீழ்த்த நினைக்கிறவனுக்கு தெரிய வேண்டும்
அதற்குப் பெயரே
யுத்த தர்மம்
2
ஒவ்வொருவரைப் பற்றியும்
அப்படி
என்னதான் விஷேசமாகச் சொல்லிவிட முடியும் என்று
நினைக்கிறீர்கள் ?
3
என்னுடைய மனதை சவுக்கால் அடித்து
கலங்கச் செய்வது
வேறு எவரும்
கிடையாது
4
அத்தனை கதவுகளையும்
திறந்த பின்னர்
தெரிகிறது
இந்த உலகம்
வெறும் வெட்ட வெளி
என்பது
5
ஒரு துளி விஷத்தைத் தின்ற பிறகு
ஒரு துளி தேன் கிடைக்கிறது
6
துயரம்
ஆனந்தத்தின்
இருள் பிரதேசம்
7
எவ்வளவு பெரிய மரம் என்பது
தெரிய வேண்டியதில்லை
அங்கோர் குருவி
கூடு கட்டிக் கொள்வதற்கு
8
எத்தனை லிட்டர் ரத்தம் குடித்தாலும்
எல்லாம் மலமாகவே வெளியேறும்
பிறகு எதற்காக
இப்படி
கொந்தளிக்கிறாய் ?
9
ஒரு அரக்கனை வதம் புரிகையில்
அத்தனை அரக்கர்களும் மரிக்கிறார்கள்
ஒரு அரக்கி வீழும் போது
அத்தனை அரக்கியரும்
அரற்றுகிறார்கள்
10
நான் என்னை வைத்துக் கொண்டு
என்ன செய்யப் போகிறேன்
என்பதே
எனது
பிரச்சனை
11
இல்லாத இடத்திலெல்லாம்
இறைவன்
நிரம்பியிருக்கிறான்
12
பெருமாள் அதிகமாக இருக்கையில் பிரச்சனை இல்லை
குறையக் குறைய
பேராபத்து

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"