தீவிரம் வேடிக்கை வேறுபாடு - 12

 கமலாம்மா








அரிதாகச் சிலரே தங்களுடைய தேவதைத்தன்மையைத்  தவிர்த்து பிறவற்றை
பிறருக்கு வெளிப்படுத்தாத தன்மையைப் பெறுகிறார்கள்.அதற்கு மிகவும் மனத்
துணிச்சலும் ,வாழ்க்கை மீதான நிதானமான பார்வையும் தேவை.ஆழ்  சமுத்திரம்
போலும் சலனமின்மை அவசியம்.  நான் அவ்வாறாக உணர்ந்த ஒருசிலரில் கமலாம்மா
ஒருவர்.அவர் நிச்சயமாக தேவ பிரகாசம். அவரை கடைசியாக ஒரு பொது
நிகழ்ச்சியொன்றில் பார்த்தேன்.பல வருடங்கள் இருக்கும் .இப்போது நண்பர்
ஒருவர் அவருடைய புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்.ஸ்ரீனிவாசன்
நடராசன்.அவரின் தன்மையை வெளிப்படுத்தும் புகைப்படங்கள். எவ்வளவோ
நினைவலைகள்.

சுராவின் மறுபக்கம் கமலாம்மா. அவருடைய மன அலைவரிசையில் அவ்வளவு
தூரத்திற்கு நெருங்கிக் கைகோர்த்திருந்தவர் கமலாம்மா.பெரிய ஆளுமைகளின்
துணையாக அமைவது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் சிரமங்கள்
நிறைந்ததுதான்.நான்கு தலைமுறை எழுத்தாளர்கள் வந்து தங்கி உரையாடி
மீண்டும் கூடும் வண்ணம்  வேகமாக இயங்கிக் கொண்டிருந்த ஒரு வீட்டை
நிர்வாகம் செய்தவர் அவர்.எட்டு வருடங்கள் அந்த வீட்டோடு நெருங்கிய உறவு
கொண்டிருந்த நான் ஒருபோதும் முகமலர்ச்சியற்றோ ,நிதானமற்றோ கமலாம்மாவை
கண்டதில்லை.பொதுவாக இப்படியிருக்க வாய்ப்புகளே கிடையாது.அப்படிதான்
இருக்க வேண்டும் என்கிற அவசியமுமில்லை.ஒரு வீடு என்பது எவ்வளவோ பணிகளை
கலங்கலைக் கொண்டதுதுதான்.வீடு என்பதே லௌகீகத்தின் அனைத்து போராட்டங்களும்
நிரம்பியதுதான்  . வீட்டை நிர்வகிப்பது என்பது களைக்குச்சியின் உயரத்தில்
நின்று களை கூத்தாடுவது போல.வீட்டின் ஆண்,அல்லது பெண் யாரேனும் ஒருவர்
இதனைப் புரிந்து கொள்ள வில்லையெனில் வீடு நடுங்கத்  தொடங்கி
விடும்.அப்படியானதொரு அமைப்பு அது. அதிலும் எழுத்தாளனின் ,கலைஞனின் வீடு
விசித்திரமானது .சொல்லிக் கொண்டு வருவோரும் இருப்பார்கள்.திடீரென
வருவோரும் உண்டு.வருவோருக்கு முதலில் ஒரு காப்பி கிடைக்கும்.காப்பி
என்றால் அது காப்பி போல இராது.காப்பியாகவே இருக்கும் .அது வரும்போதே
கமலாம்மாவின் முகமலர்ச்சியையும் அகமலர்ச்சியையும் ஒருவர் உணர
முடியும்.அப்படி ஒருவர் உணர்வாரேயெனில் இந்த முகமலர்ச்சியும்
அகமலர்ச்சியும் ஒருபோதும் நீங்காதவர் கமலாம்மா என்பது தெரிந்து விடும்.
களைப்புற்று நோயுற்று நான் அவரைக் கண்டதேயில்லை.எப்போதும் குளித்து
விட்டு வருகிற போது இருக்கிற மனநிலையில் சதா இருக்கிறவராகவே அவர் எனது
மனதில் பதிவாகியிருக்கிறார்.ஏராளமான வேலைகளை செய்து கொண்டே இருக்கும்
போதும் கூட ஏராளமான வேலைகளை செய்து கொண்டிருப்பவரைப் போல ஒருபோதும் அவர்
தோன்றுவதில்லை.எல்லாவற்றிற்கும் மேலாக அவர் சுராவிடம் மிகுந்த நிறைவை
அடைந்திருந்தார்.அவர் யார் என்பதையும் உள்ளூர அவர் அறிந்து
கொண்டிருந்ததாகவே நான் கருதுகிறேன்.பல எழுத்தாளர்களின் ,கலைஞர்களின்
வீட்டில் அவர்கள் யார் என்பதை   துணையாக இருப்பவர்களால் அறிய
இயலுவதில்லை.தஸ்தேவெஸ்கி ,மார்க்ஸ் போன்றோருக்கு இப்படியமைந்திருக்கிறது.

சுரா வீட்டிற்கு வந்து சேர்பவர்களிடம் வந்து சேர்ந்தவுடன் டாய்லட் போக
வேண்டுமா ? என கேட்கும் சுபாவம் கொண்டவர்.நான் இப்பழக்கத்தை கற்றுக்
கொண்டது அவரிடமிருந்துதான்.பிற எல்லாமே இரண்டாவதாக .எங்கிருந்தோ வருகிற
பலருக்கும் இது அவசியமாகவே இருக்கும்.சிலர் கேட்கத் தயங்கி அடக்கிக்
கொண்டிருப்பார்கள்.அந்த வீட்டை பற்றி சாதி சந்தேகம் கேட்பவர்கள் எல்லாம்
தமிழ் சூழலில் இன்றுவரையில் இருக்கிறார்கள்.அந்த வீட்டின் எல்லா அறைகளும்
எனக்கு நன்கு தெரியும் .அந்த வீட்டில் மதியம் யாரெல்லாம் இருக்கிறார்களோ
, அவர்கள் ஒருங்கே அமர்ந்து சாப்பிடுவதுதான் வழக்கம். அப்படி
சாப்பிடாதவர்கள் யாரேனும் இருப்பார்களா என்பது எனக்குத் தெரியாது.இது
இயல்பாக நடைபெறுகிற காரியம்.எழுதுகிறவனை,அதிலும் நம்பிக்கையூட்டும் படி
எழுதுகிறவனை அந்த வீடு ஏற்றுக் கொள்ள தயங்கியதே இல்லை. கமலாம்மா உணவு
பரிமாறுவதில் உள்ள செய் நேர்த்தி சுராவின் உரைநடையில்  காணும் செய்
நேர்த்திக்கு சமம்.

சுராவின் இழப்பு நேர்ந்தவுடன் ; தனக்கு என்ன தோன்றியது என்பதை பற்றி
,பின்னர்  கமலாம்மா எழுதியிருந்த பக்கங்களை மனம் கலங்கப்
படித்தேன்.கமலாம்மா அது தவிர்த்து வேறு எதுவுமே எழுதியிருக்க
இயலாது.புதுமைப்பித்தன் கடிதங்களில் சுரா கண்டடைந்ததெல்லாமே கமலாம்மா
மீது ; தான் கொண்டிருந்த பெருங்காதலைத் தான் என்று இப்போது எனக்குத்
தோன்றுகிறது எனக்கு .சுராவிடம் மிகையோ ,ரொமெண்டிசமோ துளியும்
கிடையாது.அக்கறைகளை செயலில் வைத்திருப்பவர் அவர்.அந்த வீட்டிற்கு மோசமான
நடத்தைத் குழந்தைகள் என்றால்  ஜி.நாகராஜனும் அதன் பின்னர் நானுமாகத்தான்
இருந்திருப்போம் என்று நினைக்கிறேன்.ஒருபோதும் அந்த வீடு எங்களைத்
தட்டிக் கேட்டதில்லை.

எழுத்தாளர்களின் மனைவிமார்களின் மனோவோட்டம் பற்றி ஜே.ஜே.சில
குறிப்புகளில் ஓரிடம் வரும்.நண்பர்களின் மனைவிமார்கள் ஆரம்பத்தில்
எழுத்தாளர்களிடம் காட்டுகிற விரோத மனோபாவத்தை கடுமையாக எதிர்க்கிற
எழுத்தாளர்கள் ; நாள்போக்கில் அந்த விரோதத்தை பிரதிபலிக்கிறவர்களாக
மாறிவிடுகிறார்கள் என்று .அப்படி மாறாத வீடு அவர்களுடையது.சுரா தவறாக
ஏதும் செய்கிறார் என்று தோன்றினாலும் கூட  அது நிச்சயம் சரியாகத் தான்
இருக்கும் என்று உறுதியான நம்பிக்கை கொண்டவர் கமலாம்மா.அவருடைய
நம்பிக்கைதான் உண்மை .மிக உயர்ந்த வாழ்க்கை அவர்களுடையது .வாழ்வு
முழுவதும் செய்தது நல்லறம்.

சுராவின் உடலின் முன்பாகவோ பின்னரோ சரியாக நினைவில் இல்லை. உங்களை போன்ற
நண்பர்கள் அவரை பிரியாமல் இருந்திருந்தால் அவர் இன்னும் கூடுதல் காலம்
வாழ்ந்திருப்பார் என்று கமலாம்மா சொன்னது நடுங்கும் வாக்கியமாக என்னுடைய
மனதில் இருந்து கொண்டிருக்கிறது. சுரா என்னை பற்றி எல்லாம் அல்லது
நண்பர்களை பற்றியெல்லாம் என்ன மதிப்பீடு கொண்டிருந்தார் என்பதனை விளங்கச்
செய்து கொண்டிருக்கும் வாக்கியம் அது.  கமலாம்மாவிடமும் மிகையை நான்
கண்டதில்லை.இந்த வாக்கியத்தையும் கூட அப்போதைய கடுமையான சூழ்நிலையிலும்
அவர் ஓரளவிற்கு நிதானத்தோடுதான் சொன்னார்.நான் நிதானமிழந்திருந்தேன்.

எல்லாமே சரியாகத்தான் நடந்தது என்று எடுத்துக் கொண்டாலும் கூட
,கமலாம்மாவைக் கடந்து செல்லும் துணிவை சுரா பெற்றிருக்கக் கூடாது.

நேற்று எழுத நினைத்திருந்தேன்.இன்று எழுதுகிறேன்.அந்த அம்மையின் காலடி
சரணம் .அறிந்தோ ,அறியாமலோ தவறு செய்திருந்தால் மன்னிப்பீர்களேயாக.

2

சாதியுணர்ச்சி என்னும் உள்வட்ட சக்தி




சாதியுணர்ச்சி என்பது அதன் உள்வட்டத்தில் தேங்கி நிற்கிற வினோதமானதொரு
காமம்.நமது கூட்டுப் பெருக்கில் நமக்கு கிடக்கிற சில்லிப்பு இருக்கிறதே
அதுதான் சாதியுணர்ச்சிக்கு அடிப்படை.தனியே இருக்கும் போது , நாம் ஒரு
மனிதனாகவும் நாலுபேர் தொங்கிப் பிடிக்கக் கிடைத்தால் நாம் வேறொரு
மனிதனாகவும் இருக்கிறோம்.சாதிகளில் மட்டும் என்றில்லை அமைப்புகளில்
,நிறுவனங்களில் ,கட்சிகளில் ,சாதியெதிர்ப்புக் கூட்டங்களில் கூட இதன்
தன்மை உண்டு.ஒருமித்த கொள்கை கொண்டோர் பிறரை கூட்டு சேர்ந்திருக்கும்
போது தாக்குவதற்குத் துணை நிற்பதும் இதே உணர்ச்சிதான் அடிப்படை.தனியே
இருக்கும் போது ஒருவன் எவ்வாறு நடந்து கொள்வானோ, அது போலவே கூட்டமாக
இருக்கும் போதும் நடந்து கொள்வானோ ;அப்போது முதற்கொண்டுதான் நாகரீக
மனிதனாகிறான்.அது தான் சார்ந்த கூட்டமாகவும் கூட இருக்கலாம். இல்லாமல்
இருப்பதெல்லாம் பொய்யுருக்கள் .

முதலில் தனி மனிதன் தனியாக வாழ்வது எப்படி என்பதை தெரிந்து வைத்திருக்க
வேண்டும். சாய்வு கொண்ட கூட்டத்தில் மட்டும்தான் உனக்கு ஜொலிப்பு
இருக்கிறதென்றால் உனக்கின்னும் அருகதை கூடவில்லை என்று பொருள்.தனியே
வாழ்வதற்கு பயத்தை முதலில் வெல்வது எப்படி ? என்கிற பொருள் குறித்து
ஜே.கிருஷ்ணமூர்த்தி போன்ற ஞானிகள் நிறைய விவாதித்துப் பொருள்
கண்டிருக்கிறார்கள்.கூட்டத்தில் மட்டுமே பயமின்றி இருப்பது தொல்குடிகளின்
நிலை.உதாரணமாக நீங்கள் எதிரியைத் தாக்குவதற்குரிய அனைத்து சக்தியையும்
கைவசம் வைத்திருக்கும் போதும் தனியே இருப்பது போல நடந்து கொள்ள
வேண்டும்.தாக்க நேருமாயினும் கூட நீங்கள் தனியே இருந்து தாக்குவது போலவே
தாக்க வேண்டும்.

கூட்டம் திரளாமல் இருக்கும் போது நீங்கள் உங்களை பற்றி என்ன
நினைக்கிறீர்களோ அதுவே உங்களுடைய நிஜம்.களரி போன்ற வித்தைகளை கற்றுத்
தருகிற ஆசான்கள் கற்றுத் தருவதற்குத் தொடங்கும் போது ; இதையெல்லாம் நீ
கற்றுக் கொள்வது யாரையும் தாக்காமல் இருப்பது எப்படி ? என்பதை அறிந்து
கொள்வதற்குத் தானே தவிர தாக்குவதற்காக இல்லை என்பதை சொல்லித் தருவதுண்டு.

இங்கே நீங்கள் கவனித்தால் தெரியும் .தனியே இருக்கும் போது மிகவும்
சுருங்கிப் போயிருப்பவன்,நாலுபேர் கூட்டணி சேர்ந்தால் எப்படி ஊதி
பெருத்து விடுகிறார்கள் என்பதை.இதை ஏதோ வெளியாட்களுக்குச் சொல்லுவது போல
சொல்லவில்லை.நாம் இவ்வாறுதான் இருக்கிறோம்.நீங்களோ நானோ இதற்கு
விதிவிலக்கில்லை.

பின்னணியற்ற பெண் எனில் நமக்கு அவளிடம் ஈர்ப்பு கொட்டினால் அடங்கி
விடும்.பின்னணியற்ற ஆணிடம் பெண்ணுக்கும் இங்கே வசீகரம்
கிடையாது.தனியாகவெனில் அவள் எவ்வளவு கொடூரமாக துண்டாடமுடியுமோ அந்த
எல்லைவரைக்கும் சென்று துண்டாடுவாள்.எல்லா குறையையும் எடுத்து
பரப்பிவிடுவாள்.இரண்டொரு நாளில் தீர்ந்து போவார்கள்.காதல் திருமணங்கள்
அடைகிற வேதனைகள் இதன்பாற்பட்டது.பின்னணி கடுமையாக இருந்தால் மட்டும்தான்
நம்மால் அடங்க முடியும்.தனிமனிதனாக நாம் இன்னும் வாழத் தொடங்காததிலுள்ள
குறை இது.

ஒருசமயம் எங்கள் பகுதியே எண்ணம் கொண்டாலே பயந்து நடுங்கும் ஒருவருக்கும்
எனக்கும் முரண்பாடு பகை .நானோ ஊரிலிருந்து பொது இடம் ஒன்றில் வந்து
வாழ்கிறவன்.தனியன்.அவனுக்கோ ஏராளமான குடுமிகள்.தடுக்கி விழுந்தால் நாலு
குடுமிகள் வந்து முந்துவார்கள்.ஆறுமாத காலங்களுக்கும் மேலாக பகை நகர்ந்து
ஓடிக் கொண்டிருக்கிறது.நள்ளிரவில் எங்கேனும் போய்விட்டுத் திரும்பிக்
கொண்டிருப்பேன்.வழிமறித்து மல்லுக்கு வருவார்கள்.தாங்கி கொள்ள இயலாத
சல்லித்தனங்கள்.ஒவ்வொரு எடுபிடியும் தலையின் பெயரை சொல்லித் தாக்க
வருவான்.என்ன செய்வது என்றே தெரியவில்லை.குடிப்பழக்கம் கொண்ட ரௌடியெனில்
காலையில் அவன் குடிப்பதற்கு முன்னரே சென்று பார்த்து விட்டீர்கள் எனில்
தலை தொங்கித்தான் கிடப்பான்.எனக்கு வாய்த்த எதிரியோ குடிப்பழக்கம்
இல்லாதவன்.ஸாகா செய்யக் கூடியவன் காலையில்.வீட்டுக்கு வெடிகுண்டெல்லாம்
வைத்து விடுவோம் என்று அவன் குடுமிகள் வலிபேசித் திரிந்தன.

பொறுக்க இயலவில்லை.காலையில் நேரடியாகக் கிளம்பி அவனுடைய வீட்டிற்குச்
சென்றேன்.குடுமிகள் பயிற்சியில் இருக்க தலை சட்டையில்லாமல் நின்று
கொண்டிருந்தது.அவனுக்கு வாய்ப்பு எதுவுமே வைக்காமல் " அரிவாள் நீ
வெட்டினாலும் வெட்டும் நான் வெட்டினாலும் வெட்டும்."; நாலுபேரோடு மட்டுமே
எப்போதும் சுற்றித் திரிந்து கொண்டிருக்கிற நாய் நீ ? நான் தனியாக
இருப்பவன்.உனக்கு என்ன செய்ய வேண்டும் ?" என்று கேட்டேன்.எனக்கும்
அதற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை என்று சொல்ல ,சொல்ல நடுங்கினான்.எனக்கு
இந்த அனுபவமே புதிய அறிவாக அமைந்தது.பின்னர் எப்போதென்றாலும் எனது
நண்பர்களுக்கென்றாலும் சரி ,இது போன்ற சிக்கல்கள் தோன்றினால் எதிரியை
தனியாக பார்க்கவே சொல்லித் தருகிறேன்.அவன் பக்கம் சந்திப்பின் போது
ஆட்கள் இருக்கலாம்.உங்கள் பக்கம் ஒரு சல்லிப்பயல் கூட இருக்கக் கூடாது.
மிகவும் தெளிவாகத் தான் நான் அன்று துணைக்கு ஒருவரையும் அழைத்துச்
செல்லவில்லை. அவ்வளவுதான் விஷயம்.அதன் பிறகு அவர்கள் எனது வீட்டிற்கு
குண்டு வைக்கிற கொள்கை முடிவை மாற்றிக் கொண்டார்கள்.

பேனரோடு தாக்க முற்படுபவர்களை பேனர் இல்லாமல் தனிமைப்படுத்தி எதிர்கொள்ள
வேண்டும்.துவண்டு போவார்கள். பேனரை இணைத்து விட்டீர்கள் எனில் சக்தி
கொண்டெழும்பி விடுவார்கள். கூட்டம் என்பது தாழ்வுணர்ச்சியின் காம
ஆற்றல்.நாய் ஒருபோதும் பயப்படாதவர்களை கடிப்பதில்லை.அதனால் பயத்தை
மட்டுமே கடிக்க முடியும் .நாயைக் கட்டுவது என்று சொல்வார்களே அது ஒன்றுமே
கிடையாது .சாந்தி யோகத்தில் இருக்கத் தெரிந்தவனிடம் நாயால் குரைக்கக் கூட
இயலாது.

நாம் தொடர்ந்து கூட்டமாக மட்டுமே வாழப் பழகி வைத்திருக்கும்
சமூகம்.தனிமனித வாழ்வு என்பது என்ன என்பதனை அறிந்து கொள்ளாதவரையில்
சாதியை நம்மால் கடக்கவே இயலாது என்பதுதான் உண்மை.ஏனெனில் நம்முடைய காமம்
சேகரமாகியிருக்கும் இடம் அது. இதற்கு மதத்தையும் பிசாசுகளையும் காரணம்
காட்டுவதால் ஒரு பலன் கிடையாது.மேலும் மேலும் சாதிகளை உருவாக்கிக்
கொண்டுதான் இருப்போம்.கொள்கைகளும் கோஜங்களும் புதிய புதிய சாதிகளாக.

3

கொஞ்சம் கொஞ்சமாக நல்ல பிராமணன் ஆகிவிட வேண்டும்






பிராமணன் ஆதல் என்பது பிராமணன் என்னும் சாதியாக ஆவது அல்ல.நல்ல முஸ்லீம்
ஒரு பிராமணன்தான்.நல்ல பவுத்தன் ஒரு பிராமணனே .பிராமணன் ஆதல் என்பது ஒரு
விசேஷமான இடத்திற்கு வாழுமிடத்திலிருந்தே சென்று சேருவதைக்
குறிப்பது.உடல் கொண்டு அனுபவம் கொண்டு வாழாமல் அந்த இடத்திற்கு வந்து சேர
இயலாது. உடலும் அனுபவமும் கொண்டு சேர்க்கும் பாதைகள். இசை ஞானி
இளையராஜாவை பலரும் அவருடைய ஆன்மீக நகர்தலை குறித்து விமர்சனங்கள்
எழுப்பும் போது உண்மையாகவே சங்கடப்பட்டிருக்கிறேன்.ஒருகாலகட்டத்தின்
இசையை முழுவதுமாக தன்வயப்படுத்திய ஒரு மேதை அனுபவம் கொண்டு அடைந்த இடம் ;
தவறாக இருக்கும் என்று எந்த கருத்தின் ,கொள்கையின் ,அறிவின் அடிப்படையில்
கருதுகிறார்கள் ?.அவர் இன்றிருக்கும் இடத்திற்கு நாளை நீங்களும் வந்து
சேருவதுதான் நல்லது என்பதை அனுபவத்தால் கண்ட பின்னர்தான் விளங்க இயலும்.

இசையையும் ,மொழியையும் தன்வசப்படுத்தும் ஒருவன் பிராமணன் ஆகாமல் இருக்க
இயலுமா என்ன ? ஜேசுதாஸ் சபரிமலையில் மடியுருகி நிற்கிறாரே அந்த பரவசமான
இடத்திற்கு இன்றில்லையாயினும் என்றேனும் ஒருவன் வாழ்க்கையில் வந்து
சேராமல் இயலாது.அந்த இடம் என்ன என்பதை ஒருவன் அறிந்து பின்னர் ஏதேனும்
மாறுபட்டுச் சொல்கிறான் எனில் அவனிடம் பயில மேலும் கூடுதலாக ஏதேனும்
இருக்கலாம் .அறியாதவனின் பழிச்சொல் அறியாமை அன்றி வேறொன்றும்
இல்லை.பிராமணன் ஆகுமிடத்தில் பரமானந்தம் நிறைந்திருக்கிறது.அது முழுதுமாக
ஒருவருக்கு வசப்பட்டு விடும் என்று எனக்கு நம்பிக்கையில்லை.அனுபவத்தில்
கண்ட ஞானியரைக் கண்டே இதனைச் சொல்கிறேன். கொஞ்சம் கொஞ்சம் துளித் துளியாக
அவ்வப்போது வசப்பட்டாலும் கூட போதுமானது என்றே சொல்வேன்.கிராமங்களில்
பிறப்பால் பிராமணர்கள் அல்லாத சாதாரண மனிதர்கள் பலருக்கு இந்த தன்மைகள்
வசப்பட்டிருப்பதைக் கண்டிருக்கிறேன்.வசப்பட்ட கிழவிகளிடம் வசீகரம்
கொண்டிருக்கிறேன்.அப்படிப் பட்டோரைக் காண ; என்னிடம் எழுகிற தாயே என்னும்
ஒலியில் கன்றின் சாயல் தொனிக்கும் .அந்த அன்னையரை கண்ணசைவிலேயே
கண்டறியும் ஞானம் உண்டெனக்கு.

தட்டுங்கள் திறக்கப்படும் என்கிற கூற்று புலப்படுவதற்கு ஒரு மனிதனுக்கு
எவ்வளவு கால அவகாசம் தேவைப்படும் ? என்பதை அறுதியிட்டுச் சொல்ல
இயலாது.எனக்கு வசப்பட்டு விட்டது என்று அறிவித்தாலே அவருக்கு வசமாகவில்லை
என்பதுதான் அர்த்தம்.நெருங்கி நெருங்கிச் செல்ல முடியும் அவ்வளவுதான்
.உள்ளிலும் வெளியிலும் நிறைந்திருக்கும் ஒன்றோடு இணைப்பு
வலுப்படுந்தோறும் வசமாகும் .கவிஞனாக எனக்கு வசப்படுவதற்கு எவ்வளவு
இடையூறுகள் இருக்கின்றன என்பது மட்டுமே தெரியும்.அதற்கும் அதிக கூடுதல்
நான் அறியாதது.

சித்தர் ஒருவரை திருச்செந்தூர் அருகில் பார்க்கச்
சென்றிருந்தேன்.பதினைந்து வருடங்களுக்கு முன்னர். அப்போது திமிரை மட்டுமே
சொத்தென கொண்டு நடந்த காலம்.இப்போதும் என்ன முன்னேறி விட்டது ? இப்போதும்
அதுதான் நிலை.என்றாலும் முன்னதுக்கு இது பரவாயில்லை.உயிரைத் தவிர்த்து
அவரிடம் ஒன்றுமே இருக்கவில்லை.துளையிட்டு ஊடுருவும் கண்கள்.இப்போதும்
நினைவில் இருக்கிறது.அன்னையின் கண்களை போன்ற கருணையும் கொண்ட
கண்கள்."உள்ளுக்குள் எதுவும் யாருக்கும் சரியாகாது.நீ எங்கே உடைந்தாயோ ?
அங்கே குணப்படவேண்டும்.அதுவரையில் போராடிக் கொண்டேதான் இருக்க முடியும்
.அதுதான் இயற்கையின் நியதி" என்றார்.அவர் என்னை நிர்வாணமாகப் பார்த்துக்
கொண்டிருக்கிறார் என்று தோன்றியது எனக்கு.அவருடன் விடைபெற்றுத் திரும்பி
விட்டேன்.இருந்திருந்தால் முன்னது பின்னது இரண்டையும் சொல்லிவிடுவார்
என்று பயமாக இருந்தது.அப்போது அதனைத் தாங்குகிற மனவலிமையிலும் நான்
இல்லை.

சற்றைக்கும் முன்பாக கால இடைவெளிக்கு பின்னர் விக்ரமாதித்யனிடம்
பேசினேன்.அவரிடம் எவ்வளவோ பேசியிருக்கிறேன்.அவரோடுதான் அதிகம்
சுற்றியிருக்கிறேன்.மிகவும் மோசமான பருவத்தில் அவர் என்னை ஜோதிடர்
வித்யாதரனிடன் அழைத்துச் சென்றிருக்கிறார்.அறைக்குள் நுழைந்ததுமே என்னை
நோக்கிய வித்யாதரன் நீங்கள் ரிஷபமா ? சிம்மமா ? என்றார்.ரிஷபம் என்றேன்
.இப்போதைக்கு நீங்கள் இருவரும் சேர்ந்து சுற்றிக் கொண்டிருங்கள் ,வேறு
எதுவும் தற்போதைக்குச் சொல்வதற்கில்லை என்று பதில் கூறி முடித்து
விட்டார்.அவர் கூறுவதற்கு முன்னரும் பின்னரும் சேர்ந்து சுற்றிக்
கொண்டுதானிருந்தோம்.தேனியில் வீடுவீடாகச் சென்று ஜோதிடம் பார்க்கணுமா
ஜோதிடம் எனக் கூவி ஜோதிடம் பார்த்துக் குடித்துத்
திரிந்திருக்கிறோம்.கூவுவது என் வேலை ஜோதிடம் சொல்லுதல் அவர் வேலை.கோயில்
நடைகளில் உணவு.





இன்று பேசும் போது ஒருகாரியம் பிடிபட்டது.அவரிடம் பேசும் போது ஏதோ ஒன்று
நம்மிடம் குணப்படுகிறது.குணக்கோளாறுகள் அத்தனை பேரும் சரக்குடன் ஏன்
அவருக்காகக் காத்திருக்கிறார்கள் ? அவர் ஒரு கவி என்பதால் மட்டுமல்ல.அவர்
ஒரு பிராமணனும் கூட .சைவப் பிள்ளைமார் என்று அவர் கூவித் தீர்வது ஒரு
மாறுவேடம். அவர் ஒரு சாக்கடை சாமியல்லவா ? என்று எவரேனும்
கேட்கலாம்.சாக்கடைச் சாமிதான் ஆனால் அவருள் ஒரு பிராமணன் வசிப்பதை அதனால்
தட்டிவிட முடியுமா என்ன ? மாயம்மா இருக்கிறாள்தானே ! உருவத்தால்
பிறப்பால் ஆவது ஒன்றுமில்லை.நாளைக்கே விக்ரமாதித்யனைக் காணச் சென்று விட
வேண்டும் என்கிற கொதி உண்டாகிவிட்டது.அவர் ஏதோ ஒன்றினை உள்ளத்தில்
கொத்திச் சரிபடுத்துகிறார்.எப்படியென்று எனக்குத் தெரியாது.

கோவில் கோபுரங்களுக்கு இணையான அனுபவத்தை மசூதி அமைப்புகள் எனக்கு
ஏற்படுத்துகின்றன.அனந்தபுரத்தில் ஏற்படுகிற அதே பரவசம் எனக்கு எல்லா
மசூதி அமைப்புகளைக் காணும் போதும் உண்டு.சுடலையின் ,வாதைகளின் வெட்ட
வெளியமைப்புகளிடமும் இதே அனுபவம் எனக்கு உண்டு.அதில் கிடையாது ,இதில்
கிடையாது என்பதெல்லாம் ஒற்றை நம்பிக்கையில் இருந்து புறங்கூறல் .
அனுபவத்தில் அது உண்மையல்ல.இதனையெல்லாம் யாரும் வேடிக்கையாகச் செய்து
வைக்கவில்லை.காணும் போது காட்சிகள் திறக்கும்.

சமீபத்தில் நான் சந்தித்த தமிழ் அறிஞர் ஒருவர் எல்லோரும் பிராமணனாக
முயற்சிக்கிறார்கள் என்று கவலை தெரிவித்தார்.எல்லோரும் பிராமணனாவதுதானே
நல்லது.பிராமணனுக்கு சாதியில்லை.மதமில்லை.நிறுவனம்
இல்லை.பேதமில்லை.கொள்கையில்லை.இலட்சியங்கள் கிடையாது.எல்லோரும் பிராமணன்
ஆவதுதானே நல்லது இல்லையா ? மாணிக்க வாசகரைப் போல ,நம்மாழ்வாரை ஒப்ப ,
பெரியார் பீரப்பாவைப் போல

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"