தீவிரம் வேடிக்கை வேறுபாடு - 14

1

சமூகத்தை எதிர்கொள்ளுதல்


சமூகத்தை எதிர்கொள்வது எப்படி என்று யாரும் நமக்கு கற்றுத் தருவதில்லை.அப்படி சரியாகக் கற்றுக் கொள்ளவும் இயலாது.நாமே கற்றுக் கற்று தெளிய வேண்டிய பாடம் இது.கடைசிவரையில் கற்றுக்கொண்டே இருக்க வேண்டிய பாடமும் கூட .கோட்பாடுகள் வழியே ,கொள்கைகள் வழியே ,அரசியல் சார்புநிலைகளின் வழியே இதன் பாதை துலங்குவதில்லை.வாழ்வதன் மூலமாக மட்டுமே இதன் புகைமூட்டங்கள் அகலும் .
இளைஞர்கள் பலர் சமூகத்தை எதிர்கொள்வதில் ஏற்படுகிற இடர்பாடுகளை தாங்கள் நம்பும் கோட்பாடுகளோடு தொடர்பு படுத்திவிடுகிறார்கள்.அவர்களுக்கு கோட்பாடுகளின் உள்ளடக்கமும் விளங்குவதில்லை.சமூகத்தை எதிர்கொள்ளும் வாய்ப்பும் கிடைப்பதில்லை.கோட்பாடுகளில் சமூகத்தை எதிர்கொள்ளும் பிரச்னையை ஒப்படைக்கும்போது சமூகத்தை ஒருபோதும் எதிர்கொள்ள இயலாத இடத்தை நோக்கி அவர்கள் விரைவாக முன்னகர்ந்து விடுகிறார்கள்.
தாங்கள் தேர்வு செய்யும் கோட்பாடுகளுக்குத் தக்கவாறு " நான் பெண்ணாக இருப்பதால் இந்த சமூகத்தை எதிர்கொள்ள முடியாமல் இருக்கிறேன்.இந்த சாதியில் பிறந்ததால் என்னால் இந்த சமூகத்தை எதிர்கொள்ள முடியவில்லை "என்று ஏதோ ஒருவிதத்தில் பிரச்னையை முடித்து தீர்மானகரமாக பைசல் செய்து விடுகிறார்கள்.பின்னர் நேருகிற அனைத்து இடர்பாடுகளுக்கும் அதனையே காரணமாகச் சொல்லும் பழக்கம் உருவாகிவிடுகிறது.அவர்களிடம் ஒரு காரியத்தை சொல்ல விரும்புவேனெனில் " பெண்ணாகப் பிறந்த முதல் உருப்படியும் நீங்களில்லை.அது போலவே உங்கள் சாதியில் பிறந்த முதல் மனிதரும் நீங்களில்லை " என்று சொல்வேன்.
நேரடியாக கடற்கரைகளில் சென்று மீன் வாங்குகிற பழக்கம் எனக்கும் நண்பர்களுக்கும் உண்டு.பக்கத்துக் கடற்கரையான பள்ளம் கடற்கரையில் வள்ளம் காலையில் ஆறு மணிமுதல் ஏழரை வரையில் திரும்பும்.பள்ளத்து மீன்கள் தனிச்சுவை உடையவை.அதேவகை மீனை நீங்கள் வேறு எங்கேனும் வாங்கினால் அதன் சுவை பள்ளத்தில் கிடைக்கிற மீன்களோடு ஒருபோதும் பொருந்துவதில்லை.காரணம் என்ன என்பதெல்லாம் எனக்குத் தெரியாது.சின்னமுட்டத்தில் மீன் வாங்க வேண்டுமெனில் மாலை ஏழுமணிக்கு மேல் செல்லவேண்டும்.ஆனால் அங்கும் இங்குமே சுவை மாறுபாடு அதிகம்.
பள்ளத்தில் இருந்து வரும் பெண் மீன்வியாபாரிகளில் பலரும் எனது நண்பர்கள்.கண்டதும் "பிள்ளை வந்துற்றாம்பிள்ள " என்பார்கள்.சிறுவயதிலிருந்தே என்னைக் கண்டு வரும் தாய்மார்களும் அவர்களில் உண்டு. அவர்கள் எவரானாலும் அவர்களிடம் மீன்வாங்கும்போது ஏதேனும் ஒரு செள்ளையேனும் கிள்ளி எனக்கு அதிகமாகத்தான் போடுவார்கள்.ஒருபோதும் அவர்களிடம் பேரம் பேசுவதில்லை .சிலசமயம் இவ்வளவுதான் தருவேன் என்று சொல்லுவேன் . அவ்வளவுதான் .அவர்கள் ஏற்ற விலை சரியாகத்தானிருக்கும்.தந்துவிடுவார்கள். பேரத்தில் ஈடுபடாதவன் தங்களுடைய சக்தி விரயத்தைப் பெருமளவிற்குக் குறைக்கிறான் என்பது அவர்களுக்குத் தெரியும்.
பேரம்பேசுபவர்களுக்கென்று அதிகமாகி சொல்லிக் குறைக்க ஒரு விலை உண்டு.பேரம் பேசாதவர்களை அவர்களுக்குத்
தெரியும் .அவர்களிடம் அவர்கள் சிலசமயம் நஷ்டப்படுவதும் கூட உண்டு. நீங்கள் கடற்கரையில் சென்று மீன்வாங்கிப் பார்த்தால்தான் உயிருள்ள மீன்களின் விலை என்ன என்பது விளங்கும். காலையில் அங்கே ஏலத்தில் மீன்களை வாங்கி பின்னர் ஊர் ஊராய்க் கொண்டு நடந்து விற்கிறாளே அந்த அம்மை அவளுக்குத்தான் தெரியும் சமூகத்தை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதும் ,சமூகம் என்றால் எவ்வாறான பலப்பக்கமும் திறக்கும் கத்தி அது என்பதும்.
கணவனை சிறிதிலேயே பறிகொடுத்த எனது பெரியம்மை ஒருத்தி கடைவைத்து நடத்தினாள்.என்ன ஒரு கம்பீரம் இன்னமும்.வார்த்தைகளை அவள் பிரயோகிப்பதே வினோத அழகில்தான் இருக்கும்.வாள் வீசுவது போன்ற பதத்தோடு வரும் வார்த்தைகள்.தராசு போல நிற்பவை அவை.ஆனால் வைத்திருக்கும் அன்பில் குறை தோன்றாது . ஏற இறங்கப் பார்ப்பதில் எவ்வளவோ அர்த்தங்களை சுட்டிக் காட்டிவிடுவாள்.இரண்டு குழந்தைகளையும் மடியில் கட்டிக் கொண்டு அண்ணனையும் அக்காவையும் வளர்த்தும் போதிலிருந்து பார்த்த கம்பீரம்.வாழ்க்கையை மேற்கொண்டு எதிர்த்து வாழும்போது மட்டுமே பல விஷயங்கள் கிடைக்கின்றன. கிடைத்தவை பின்னர் வழியை ஏற்படுத்துகின்றன.வாழாமல் , எதிர்கொண்டு பாராமல் இருந்தால் வழி உருவாவதில்லை.
கோட்பாடுகளின் வழியே சமூகத்தை எதிர்கொள்ளப் பழகுதல் கற்பனைக் கப்பலில் கரையேறுதல் போல.
வாழ்வில் தன்போக்கில் நின்று நிமிரும் பெண்களிடமிருந்து கற்க எவ்வளவோ பாடங்கள் இருக்கின்றன.அவர்களெல்லாம் ஒல்லிக் குச்சுகள் இல்லை.அசைக்க முடியாதவர்கள்.நமது பெண்ணியக் குடுக்கைகளுக்கு அவர்களெல்லாம் வெறும் ஒல்லிக் குச்சுகள் என்னும் எண்ணம் உண்டு. அவர்கள் அறிந்து வைத்திருக்கும் சமூகத்தின் சிறுநுனி கூட இவர்களுக்கு விளங்காது.ஒரு நாலுமுக்குச் சாலையில் ஒரு சிறிய பெட்டிக்கடையாக இருந்தாலும் கூட பரவாயில்லை.ஒரு பெண் அங்கு நின்று நிலைத்து விட்டாளெனில் அவள்தான் அந்த சுற்றுவட்டாரத்திற்கு சாமி.அது சாமானிய காரியம் இல்லை.அவள் சொல்லில் ஊர் அதிரும்.அவளுக்கு இங்கே நிலைப்பது எப்படியென்று தெரியும்.
சமூகத்தை எதிர்கொள்ளுதல் என்பது பெண்களுக்கு மட்டுமே உரிய பிரத்யேகமான பிரச்சனையும் இல்லை.அது அனைவருக்கும் உரியது. குழந்தை பருவத்தில் இருந்தே அது அனைவரிடமும் தொடங்கிவிடுகிறது. தேநீர்கடைகள் முதற்கொண்டு மால்கள் வரையில்.பள்ளியில் தொடங்கி கல்லூரிகள் என வாழ்க்கைப்பாதை முழுவதிலும் அதன் சீரடி இருக்கும். சமூகத்தை எதிர்க்கப் பழகுதலில் இருந்து அந்த பெரிய வித்தை கைகூடாது.எதிர்ப்பும் சமரசமும் இணக்கமும் தற்காப்பும் உயிருணர்ச்சியும் கலந்து முயங்கும் ரசம் அது.இவை அனைத்தும் சரிவிகிதத்தில் கலந்தால்தான் வாழ்க்கையை மோதுவது என்றால் என்ன என்பதே விளங்கும். முரட்டுத்தனமாக அகந்தை கொண்டு மட்டுமே மோதுவதால் வாழ்வு வசமாகாது.
எல்லாவிதமான இடர்பாடுகளுக்கும் மத்தியில் வாழ்ந்து விடுவதே ஸ்தாபிப்பது .நீங்கள் அத்தனை இடர்பாடுகளுக்கும் மத்தியில் வாழ்ந்துவிட்டால் நீங்கள் வாழ்ந்ததன் தடத்தில் நீங்கள் வாழ்வை எதிர்கொண்டவிதமும் ,வாழ்வு உங்களை எதிர்கொண்ட விதமும் பாடங்களாகப் பதிந்திருக்கும்.வாழ்க்கையின் மீது நீங்கள் விட்டுச் செல்லப் போகிற ஒரேயொரு தடயமும் இது மட்டும்தான். வாழ்க்கையின் சவால்களை ஏற்று வாழ்வைத் தொடங்கும்போது குறைகள் மட்டுமே தோன்றிக் கொண்டிராது.நிறைகளும் தெரியும். இனிமைகளும் பிடிபடும்.இடர்பாடுகள் இன்று நேற்று தொடங்கியவை அல்ல.மனிதன் உருவான காலத்திலிருந்தே இடர்பாடுகள் பின்தொடர்கின்றன.
நீங்கள் வாழ்ந்த இடத்திலிருந்து இடம்பெயர்ந்து புதிய இடம் ஒன்றில் ஸ்தாபித்து வாழ்ந்து பாருங்கள் .வாழ்வது என்பதே ஸ்தாபித்தல்தான்.அதற்கு ஒரு அனாதை போல வாழ்ந்து பார்க்கவேண்டும்.அப்பனின் ,பாட்டனின் எச்சத்தில் வாழ்வதெல்லாம் போதம் கெட்ட சவச்சோறு உண்பது.ருசி கெட்டது.கூட்டத்துடன் கூட்டமாக அல்ல,சுயமாக கூட்டத்துடன் ஓர்மை குன்றாது வாழ அப்போது விளங்கும் .சமூகத்தை எதிர்கொள்ளுதல் அவ்வளவுதூரம் எளிமையில்லை.ஆனால் அது தருமே வாழ்வின் ரசம் நன்கு .வாழ்வை எதிர்கொள்ளுதலும் சமூகத்தை எதிர்கொள்ளுதலும் அதுவொரு வித்தை.கணந்தோறும் உயிர்ப்புடன் நம்மை நிலைநிறுத்திக் கொள்ளவேண்டிய வித்தை.
அனாதை என்பதை உணர்ந்து எதிர்கொண்டு பழகி தானே உருவாக்கும் தனித்த வாழ்வை வாழத் தெரிந்தவனே அருமையுணர்வான்.அவன் அறிந்த பாடம் ஏடுகள் அறியாது.

2



கவிஞனுக்கும் எழுத்தாளனுக்கும் வயது உண்டா ?
எந்த வயதில் ஒரு எழுத்தாளனையோ,கவிஞனையோ ,கலைஞனையோ சென்று சந்திக்கிறோமோ அதுவே அவனது வயதாக நம்மிடம் பதிந்து விடுகிறது.அதன் பின்னர் அவனுக்கு நம்மிடம் வயதாவதில்லை.அதில் வயது நின்றுவிடும்.முன்னரும் பின்னரும் இல்லாத ஒரு விசித்திர வயது இது.சுந்தர ராமசாமி,விக்ரமாதித்யன் ,கோணங்கி,ஜெயமோகன் ,சந்ரு மாஸ்டர் எல்லோரையும் தொண்ணுறுகளில்தான் முதன்முறையாக சந்தித்தேன்.அதன்பின்னர் அவர்களுக்கு வயதாகிவிட்டதாக எனக்கு இன்றுவரையில் நினைவில்லை.அவர்களுக்கும் வயது ஆகும் என்றும் தோன்றவில்லை.அவர்கள் என்னிடம் நுழைந்த அதே காலம் அப்படியே என்னுள் உறைந்து விட்டது .மற்றுள்ள சராசரி மனிதர்கள் எவ்வளவோ பேரைப் பார்க்கிறோம்.அவர்களுக்கு வயதாகிக் கொண்டே இருக்கிறது.என் வயதிற்கும் கீழே உள்ள பலரை வயதாகித் தாத்தாவாகக் காண்கிறேன்.கழிந்த வருடம் இளைஞனாக இருந்தவன் இந்தவருடம் பிச்சமூர்த்தியின் வயதில் தென்படுகிறான். நேர்மாறாக சந்ரு மாஸ்டரிடம் காண்பது அதே துடிப்பு.தீர்க்கமான பார்வை.ஜெயமோகன் ,கோணங்கி ஆகியோருக்கு வயதாகிக் கொண்டிருப்பதாக எனக்கு உணர்ச்சியே இல்லை.புதிதாக வந்து சேரும் இளைஞர்களை விட இளமையாக இருக்கிறார்கள். கலைஞனின் வயது என்பதும் ஒரு மாயைதான் போலும் ? அவனுடைய காலம் மிகவும் குழப்பமானது.
இளமையில் ஒரு எழுத்தாளனை சந்தித்து விடுபவர்கள் அவனை அங்கேயே வைத்துதான் காண்கிறார்கள்.இருபதுகளின் பின்பகுதியில் என்னை சந்தித்தவர்கள் அங்கு நோக்கி மட்டுமே என்னை அழைக்கிறார்கள்.அந்த வயதில் என்னை மனதில் வைத்திருக்கிறார்கள்.சுந்தர ராமசாமியை முதலில் காணும் போது அவருக்கு அறுபது வயது.அதன் பின்னர் என்னிடத்தில் அவருக்கு வயதாகவில்லை.எனக்கு அறுபது வயது வடிவம் சு.ரா
இது ஒருவிதம் எனில் சந்திக்காத எழுத்தாளர்களுக்கும் ஒரு வயது நம்மில் பதிகிறது.மௌனியை எனக்கு அறுபது வயது கடந்தவராக பிம்பம்.புதுமைப்பித்தனை சிறுவயதுப் பையன் போலத்தான் பாவிக்கிறேன்.அம்பையிடம் காண்பது விடலைத் தனத்தின் வயோதிகம்.அம்பை என்னுடைய சின்ன வயது நண்பர். பாரதி இளவயதில் மறைந்திருந்தாலும் எனக்கு அவன் ஒரு நடுவயதுக்காரனாகவே இருக்கிறான்.நடுவயதுக்காரனின் ஞானம் அவன்.
தேவதச்சனுக்கு என்ன வயதென்றே அனுமானிக்க முடியவில்லை.சிலசமயம் குழந்தையாகக் கூட இருப்பாரோ என்றும் தோன்றுகிறது.இல்லை என்றும் படுகிறது.நகுலனுக்கு என்னா வயது ஆனது ? வயதே கூடவில்லை.விக்கிரமாதித்தன் நம்பிக்கு வயதே கிடையாதா ? அவருக்கு அறுபதாம் கல்யாணம் மயிலாடுதுறையில் நடைபெற்ற போது "என்னவெல்லாம் ஏமாற்றுகிறானய்யா இந்த பித்துக்குளி ? என வேடிக்கையாக இருந்தது.அவருக்கு அறுபதாம் கல்யாணம் நடத்தி வைத்த சிவனுக்கும் இவ்வெண்ணம் ஏற்பட்டிருக்கலாம்.
அசோகமித்திரனையெல்லாம் ஒரு முதியவர் என்று என்னால் பார்க்கவே முடிந்ததில்லை.ஒருமுறை சென்னையில் அசோகமித்திரனிடம் பதினைந்து வருடங்களுக்கு முன்பு ; இலக்கிய சிந்தனைக் கூட்டத்தில் "அசோகமித்திரன் என்று அழைத்து ,நீங்கள்தான் குஜராத் கலவரங்களுக்கெல்லாம் காரணம்" என்று சும்மா களித்தேன். 18 வது அட்சக்கோட்டில் எல்லாம் பட்டவர்த்தனமாகத் தெரிகிறது என்றேன்.
"அய்யய்யோ...அய்யய்யோ "என்றார் அவர்.
உடன் வந்தவர் பதறிப் போய்விட்டார்.அவர் வயது கருதி பேசவேண்டாமா நீங்கள் ? என்றார்.
அவருக்கென்ன வயது ? அவரென்ன உங்களுக்குத் தாத்தாவா ? என்றதை கேட்டவருக்கு விளங்க இயலவில்லை.
அசோகமித்திரன் மீதெல்லாம் எனக்கிருப்பது காதல்.இரண்டு வாக்கியங்களில் பெரும்கோட்டைகளை ஸாமர்த்தியமாகத் தகர்க்க அவரிடம் கற்கவேண்டும்.கிழக்குப் பதிப்பகம் அவரது இரண்டு கட்டுரைத் தொகுதிகளை தனித்தனித் தொகுப்புகளாக வெளியிட்டபோது தொடர்ந்து அவற்றைப் படிப்பதை மட்டுமே முழுநேர வேலையாக கொண்டிருந்திருக்கிறேன்.கள்ளு குடித்த போதை இறங்கும் எழுத்து.ஒன்றைச் சுற்றி மற்றொன்றில் நகர்ந்து மையமாக வேறொன்றைச் சொல்லி அவர் காரியத்தில் கொண்டு ஆழப்பதிப்பதில் அவருக்கு நிகரில்லை.அதிகாரத்தின் மீதான வினோத பகடி நிறைந்த எழுத்து.
நம்மை சிறுவயதில் கவர்ந்த சித்தப்பாமார்கள் ,மாமன்மார், அத்தைகள் எல்லோருக்குமே வயதாகிக் கொண்டேதான் இருக்கிறது.நம்மைக் கவர்ந்த அவர்களின் அபூர்வத்தன்மைகள் அவர்கள் கைவிட்டகன்று விடுகின்றன.பின்னாட்களில் அவர்கள் நினைவில் மட்டுமே அழகாயிருக்கிறார்கள்.வறுமையென்றாலும் சரி,வாடி வதங்கினாலும் சரி ,வளமையாயிருந்தாலும் சரி எழுதுகிறவனின் விதியே வேறுவிதம்

3



நவீன ஓவியக்கலையின் கொடை சந்ரு
தமிழின் நவீன ஓவியக்கலையை விமர்சனபூர்வமான கலையியக்கமாகவும் மாற்றித் தந்தவர் சந்ரு.கலை அது தனிமனித சாதனை ஒன்றும் இல்லை அதுவொரு தொடர் இயக்கம் என்பதை மாணவர்களுக்கு தனது ஓவியக்கலையின் மூலமாகவும் பாடங்களின் மூலமாகவும் உணர்த்தியவர்.கலையை தனிமனித சாதனை என நினைத்து இயங்கியவர்களை கடுமையாக விமர்சித்தவர்.நவீன ஓவியக்கலையை விமர்சனத்தின் ஆழமான பின்புலத்தில் தனது படைப்புகளின் வழியே பரிசீலிக்க வைத்த கலைஞன் .
கலையின் மீது ஏற்றப்படுகிற புனிதத்தன்மையிலிருந்து அதனைப் பிடுங்கி எடுத்து விமர்சனத்தின் பாதையில் நகர்த்தியவர். இது கலையில் எளிய காரியம் அல்ல.ஏற்கனவே நகர்ந்து சென்று கொண்டிருக்கும் பாதையின் தயவை நிராகரித்து விட்டு புதிய போக்கின் சவாலை ஏற்றுக் கொள்ளும் துணிவைக் கோரும் செயல்பாடு இது. பரிட்சார்த்த முயற்சிகள்தான் எனது செயல்பாடு என பிரகடனம் செய்யும் சந்ரு மாஸ்டரின் மேல் கலகக்கலைஞன் என்னும் படிமம் சூழ்ந்ததிற்கு இதுவும் ஒரு காரணம்.உண்மையில் கலகம் என்கிற வஸ்து உலகில் இல்லை.இயல்புணர்ச்சிகளின் மீது நாம் கொண்டிருக்கிற வரையரைகளே , எண்ணங்களின் மீது எற்றபடுகிற சிந்தனையின் தடைகளே கலகத்தை தோற்றுவிக்கின்றன.வரையறைகளின் சகல துன்பங்களையும் தூரிகையால் கடந்த பயணம் சந்ரு எனும் கலைஞனுடையது.
நவீன ஓவியங்களின் மீது புனையப்பட்ட சகல புனிதங்களையும் தகர்த்த சந்ருவின் வாக்கியம் இது. "எல்லாம் பொம்மை போடுற வேலைதான் ,செருப்பு தைப்பதற்கு நிகரானதுதான் "என்கிற வாக்கியம்.புனிதங்களை தகர்த்தெறிந்த வேகத்தால் இந்த வாக்கியம் சந்ரு மாஸ்டரால் பிரபலம் ஆனது.புகழ் அடைந்தது.சந்ரு மாஸ்டரின் மீது மதிப்பு கொண்ட அவரது மாணவர்கள் மு.நடேஷ், வெங்கட்,மணிவண்ணன் உட்பட பல நவீன ஓவியர்களும் இந்த வாக்கியத்தை உச்சரிப்பதைக் கேட்க முடியும் .
இந்த வாக்கியத்தின் வழியே அவர் கலையின் மதிப்பை ஒருபோதும் முயற்சியின்மையின் பக்கத்தில் சொருக முயன்றதில்லை.அவ்வாறு புரிந்து கொண்டு அவரை ஒருவர் அணுகுவாரேனில் அவருக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி காத்திருக்கிறது என்றே அர்த்தம். இந்த வாக்கியத்தின் மூலம் நவீன ஓவியங்களின் மீது ஏற்றப்பட்டிருந்த வணிக நலன்களையும் எந்திரகதியையும் பாசாங்குகளையும் உடைக்க அவர் முயன்றார். அவரது மாணவர்கள் இயக்கமாக மாற்றமுற்றதில் சந்ரு மாஸ்டரின் பங்கு கணிசமானது.நவீன ஓவியங்களின் பாசாங்குகளின் மீது எவ்வளவு தூரத்திற்கு கடுமையான விமர்சனங்களை முன்வைத்தாரோ அதே அளவிற்கு தீவிரமாகவும்,ஆழமாகவும் நவீன ஓவியங்களில் ஈடுபடவும் மாணவர்களை அவர் தூண்டினார்.மரபின் சிற்பங்களிலும் கலைகளிலும் ஆழமான தொடு உணர்ச்சியும் புலமையும் கொண்டு அவற்றை மீறிச் செல்லும் சாகசத்தை அறிமுகம் செய்தவர் அவர்.
நவீன ஓவியக்கலை பற்றிய "புரிவதில்லை" என்பது போன்ற தவறனான வாசிப்புப் பழக்கம் ஒருபுறம் தமிழ்நாட்டில் நிலவுகிறது.நவீன கவிதைகளின் பேரில் வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு நிகராக ; நவீன ஓவியங்கள் பேரிலும் புறக்கணிப்பு மனோபாவம் உள்ளது. மற்றொரு புறம் அவற்றின் போலிப்பாசாங்குகளின் மீதான மயக்கம். இந்த இரு எதிரெதிர் நிலைகளுக்கு இடைப்பட்டது சந்ரு எனும் கலை மேதையின் பயணம்.ஒருமுறை அரங்கில் பேசும்போது "நீங்கள் மற்றொரு துறையில் சிறந்தவர் எனக் கருதப்பட்டு நவீன ஓவியம் என வரும்போது மலிவான ஒன்றைத் தேர்வு செய்வீர்களேயானால் உங்களுடைய ரசனை உண்மையானதல்ல" என்பதை நான் தெரிந்து கொள்வேன் என்று கூறினார்.உதாரணமாக நீங்கள் இசையில் மிகச் சிறந்த வித்வான்களில் பெயர்களைச் சொல்லிவிட்டு இலக்கியத்தில் ஒரு சீர்கேட்டின் பெயரைச் சொல்வீர்களேனில் எப்படி இருக்குமோ அப்படி. நீங்கள் தேர்வு செய்கிற சிலாகிக்கிற ஓவியம் உங்களை யாரென அவருக்குச் சொல்லிக் கொடுத்துவிடும்
அதை போன்றே நவீன ஓவியங்கள் புரிவதில்லை என்ற ஒரு குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும்போது "நாங்கள் வெளிப்படையாகத்தான் பேசிக் கொண்டிருக்கிறோம் உங்களுக்குத்தான் காது கேட்க மாட்டேன் என்கிறது ? என்றார்.
நாம் மயங்கி கிடக்கும் பல ஓவிய மேதைகளைப் பற்றி சந்ரு மாஸ்டரின் விமர்சனங்களைக் கேட்ட பிறகு புது தெளிவு ஏற்படுவது போல தோன்றும்.உன் மயக்கம் தவறானது என பின்னிருந்து ஒரு கை தலையில் குட்டுகிற உணர்வு ஏற்படும்.பிக்காசோ,டாலி உட்பட நவீன ஓவியங்களின் பிரபலங்கள் ஒருவரும் அவரது விமர்சனத்திற்கு விதிவிலக்கில்லை.
திரும்பச் செய்தலிலும்,பாவனைகளிலும் சோரம் போய்விடக்கூடாது என்பதும் நவீனம் என்கிற பெயரில் போலிக்கலை அடுக்குதலில் இருந்து வெளியேறவேண்டும் என்பதும் அவரது அடிப்படையான சிபாரிசுகள்.அவரது வகுப்பில் ஒருமணிநேரத்தை செலவு செய்து கற்கத் தயாராக இருக்கும் மாணவர்களுக்கு இது வசமாகிவிடும்.அவரது மாணவர்களாக இருப்பதற்கு ஓவியனாகவோ,கவிஞனாகவோ,கலைஞனாகவோ இருந்தே தீரவேண்டும் என்கிற விதி ஏதும் கிடையாது.மிகவும் சாதாராணமான மனத்தடைகளற்ற மனிதனாக இருப்பதே போதுமானது.
ஒருமுறை நெல்லையப்பர் கோயில் வளாகத்திற்குள் வைத்து நடைபெற்ற கலைவகுப்பு ஒன்றில் எழுத்தாளர்களும் கவிஞர்களும் பங்குபெற்றார்கள்.நெல்லையப்பர் கோயில் வளாகம் அவருக்கு தொடந்து வசீகரத்தைத் தருகிற ஒரு நிகழ்விடம்.அப்போது அவர் கவின் கலைக்கல்லூரியின் முதல்வராகப் பணியாற்றிய காலம்." இவன் ஒன்றுக்குமே லாயக்குப் படமாட்டான் என்கிற அறிமுகத்தோடு என்னிடம் பெற்றோர்களால் கைவிடப்படுகிற மாணவர்களிடம்தான் தூரிகையை விரும்பிக் கொடுப்பேன்.அவன்தான் எனக்கு முக்கியமானவன்.ஓவியக்கலையை முன்னெடுத்துச் செல்லும் சக்தி அவனிடம்தான் உண்டு என்று பேசினார்.கலையில் முழுமையோ,பூரணத்துவமோ அல்ல குறைப்பாடுதான் அதன் ஆதார சுருதி என்பதே இதன் சாரம்.குறைபாடு கொண்ட ஆன்மாவே கலையின் அளப்பெரிய சொத்து என்பதை அவர் நன்கறிந்தவர் .
மாணவர்களால் , சக கலைஞர்களால் ,நவீன ஓவிய அறிமுகம் கொண்ட படைப்பாளிகளால் செல்லமாக சந்ரு மாஸ்டர் என்றே அழைக்கப்படுபவர்.சந்ரு மாஸ்டரின்படைப்புகள்பலவகைப்பட்டவை.பரிசோதனை வகையை இதில் அதிகம் என்று சொல்லலாம்.விமர்சனக் கண்ணோட்டம் கொண்டவையும் உண்டு.சிற்றிதழ்களில் வாங்கிப் பெறப்படும் சில ஓவியங்களில் அவர் கவிதைக்கான ,கதைக்கான விமர்சங்களையும் சேர்த்து வரைந்து விடுவதும் உண்டு.சில படைப்புகள் பகடியால் சிறப்பு பெறுபவை.அவரது செய்நேர்த்தி விவரணைகளால் அமையும்போதும் அல்லது நேரடியாக அமையும்போதும் கலையின் உள்இறைச்சியை அல்லது பொருளை நோக்கி நிற்பது.இது எவ்வாறெனில் அகவுலகத்தொடும் புறவுலகதொடும் விலகி பொருளை மட்டும் கைப்பற்றுகிற கலை முயற்சி.இது வாய்க்கப் பெறுதல் மிகக் கடினம்.இதனை வரமாகப் பெற்றவர் அவர்.
ஒருமுறை மேடையில் பெருங்கூட்டம்.ஏராளமான விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன .சந்ரு மாஸ்டர் அந்த அவையில் நீல வண்ணத்தில் அலைந்து கொண்டிருந்த ஒரு சிறிய ஒளிவிந்தையில் மட்டுமே எனது முழு கவனமும் இருந்து கொண்டிருக்கிறது என்று பேசினார்.வேறு எதன் மீதும் எனது கவனம் செல்லவில்லை என்று சொன்னார்.அந்த ஒளி விந்தையைப் பற்றி அவர் சிறிது பேசத் தொடங்கியதுமே அந்த கூட்டம் ஏற்பாடு செய்யபட்டிருந்ததன் மொத்த சாராம்சத்தின் பன்முகத்தன்மைக்குள் பிரவேசிக்கத் தொடங்கியிருந்தார்.அகவுலகத்தையும் புறவுலகத்தையும் சாராம்சமான ஒரு உட்பொருளில் கொண்டு சேர்ப்பது சந்ரு மாஸ்டரின் தனித்தன்மை
தமிழில் நவீனத்துவத்தின் தாக்கம் அதிகம் கொண்ட ஓவியக் கலைஞர்களே அதிகம் பிரசித்தி பெற்றார்கள்.நவீனத்துவத்தின் விஷத்தன்மையை முறியடிக்கும் வேலையை சந்ரு மாஸ்டரின் கோடுகள் கைப்பற்றின.வண்ணங்கள் பின் நவீன மாற்றங்களுக்கும் உட்பட்டன.சந்ரு மாஸ்டரின் விசேஷமான பண்பு அவர் எப்போதும் மாணவனின் நிலையிலும் குழந்தையின் தன்மையிலும் ஒருசேர தனது படைப்புகளில் பயணிப்பவர் என்பதுதான்.
ஆதிமூலம் , ஆர்.பி.பாஸ்கரன் போன்ற படைப்பாளிகளை உள்வாங்கிக் கொள்வது போல சந்ருவோடு பயணிப்பது எளிமையானதல்ல.அதற்குக் காரணம் ஆதிமூலத்தின் வண்ணங்கள் முதலில் ஏற்படுத்துகிற சவாலுக்குப் பின்னர் ஒரே சீராகப் போய்க் கொண்டிருப்பது.பாஸ்கரனும் அவ்வாறே .சந்ரு மாஸ்டர் தனது போக்கையே ஒரு படைப்பிலிருந்து மறுபடைப்பிற்கு முற்றிலுமாக மாற்றியமைத்து விடக் கூடிய தன்மை மிகுந்தவர்.பலசமயங்களில் முன்னர் உருவாக்கிய படைப்புகளை பின்னர் உருவான படைப்புகள் மறுதலித்து விடும் கலகத்தன்மையும் கூட நிகழ்ந்து விடும்.சீரான போக்கிற்கு ஆதரவான பொது நிலை என்பது சந்ரு மாஸ்டருக்குப் பொருந்தா விதி .சீரான ஒரு திசையில் செல்ல விளையும் படைப்புகள் அல்ல இவருடையவை.ஒருவகையில் சீராகச் செல்லுதலைக் குலைக்க முயல்பவை
எல்லாவகையான படைப்பு சுதந்திரத்தையும் பரீட்சித்துப் பார்க்க விருப்புபவை சந்ரு மாஸ்டரின் படைப்புகள் .வெட்டி ஒட்டுதலில் இருந்து கலைத்து போடுவதிலிருந்து சகலத்தையும்.ஆனால் கலைத்து போடவேண்டும் என்பதற்காக வலிந்து கலைப்பவனை அல்லது உள்சரடில் இணைப்பற்றுக் கலைப்பவனையோ அவர் நிராகரித்தும் விடுவார்.கலைதலோ,இணைதலோ உள்ளிணைப்பின்றி நடைபெறுதலின் கோலமும் அவருக்கு உவப்பான ஒன்றல்ல.
ஒரு படைப்பு உருவாக்கத்தில் சந்ரு மாஸ்டர் எடுத்துக் கொள்ளும் நீண்ட பயணம் அகத்தூண்டுதல் நிகழும் வரையிலான தொடர் அனுபவம்.அதனை உள்நோக்கிய பயணம் என்றே சொல்லவேண்டும்..ஒருமுறை கானகத்தில் சருகிலையில் ஒளிந்து மறையும் ஒரு புழுவின் ஓவியத்தை கரையான் புற்றிலிருந்து தொடங்கி நீரில் முழ்கி எழும்போது கிடைத்த ஒளித்தூண்டுதலில் கண்டுபிடிப்பு செய்திருந்தார்."அதனைப் பற்றி அவர் கூறும் போது சருகிலையில் மறையும் புழுவிடம் 'நீ என்னிடமிருந்து மறைந்து கொள்வாயெனில் நானும் சற்று உன்னிடமிருந்து ஒளிந்து கொள்வேன் என்று பேசியதாகக் கூறினார்.இந்த விசித்திரம் சந்ரு என்னும் நவீனதமிழ் ஓவியமேதையிடம் எப்போதும் உடனிருப்பது. கவர்ச்சியூட்டுவது.கிளர்த்துவது.அவரை உள்வாங்குதல் என்பது நவீன ஓவியக்கலையை மட்டுமல்ல எழுத்து உட்பட பிற கலைகளின் அடுத்த காலகட்டத்திற்கான மேன்மைக்கும் பயணத்திற்கும் உதவக்கூடியது.


4


ஆசிரியர் தினம் என்றதும் ...

வகுப்பு ஆசிரியர்களைப் பற்றி நிறைய எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.இனி குரங்குகள் தினம் என்று ஒன்று கொண்டாடப்படும்போது குரங்குகளைப் பற்றியும் நிறைய இதுபோல எழுதுவார்கள் என்பதில் நம்பிக்கை பிறக்கிறது.ஆனால் குரங்குகளைப்பற்றி எழுத இதை விட நிறைய சங்கதிகள் இருக்கும்.அவற்றிடம் நிறைய விசித்திரம் உண்டு.இந்த வகுப்பு ஆசிரியர்களிடம் நிறைய விவரக்கேடுகள்தான் அதிகம்.இதனை என்னுடைய அப்பா ,அம்மா இருவரையும் உதாரணமாகக் கொண்டும்கூட சொல்லலாம்.இருவருமே ஆசிரியர்கள் .

போகக்கூடாத தொழில் என்று கிராமங்களில் "வாக்கிரியத்தவன் வாத்தி ; போக்கத்தவன் போலிஸ் " என்று சொல்வார்கள்.இந்த கூடாத தொழிலில் கிறித்தவ பாதிரிகளையும் இணைத்துக் கொள்ளவேண்டும்.காரணம் எளிமையானதுதான்.இவர்கள் மூவரிடமும் வந்து குவிகிற மேம்போக்கான மேலாண்மை செய்ய இயலுகிற கேட்பாரற்ற அதிகாரம் தான்தோன்றித்தனமாய் வந்து சேர்வது.பின்னர் அள்ள அள்ளக் குறையாதது..இதில் அதிகம் பிரச்சனைக்குள்ளாவது பிறரைக் காட்டிலும் அவர்கள்தான்.

போலிஸ்காரர்களைப் பொறுத்தவரையில் அவர்கள் பெரிய அதிகாரிகளாய் இருந்தாலும்கூட தொப்பியைக் கழற்றி வைத்து விட்டு வெளியே போகும்போது நானும் சாதாரண மனிதன்தான் என்பதை அனுபவபூர்வமாய் உணர்வார்கள்.இந்த வாத்திகளுக்கும் பாதிரிகளுக்கும் அது சாத்தியமே கிடையாது.போகுமிடமெல்லாம் வாத்திகள்,பாதிரிகள் என்கிற நினைவுடனேயே செல்வார்கள் . இவர்கள் அடிவாங்குவதும் அவமானப்படுவதும் இதனால்தான்.ஓய்வுகாலங்களின் அதிகாரமின்றி இவர்கள் படும் அவஸ்தை சொல்லி மாளாது.இப்போதெல்லாம் ஊருக்கு ஊர் , தெருக்குத் தெரு சாதிச்சங்கங்களை உருவாக்கியே தீருவது என சபதமெடுத்து அலைவது இந்த ஓய்வு பெற்று வற்றிய ஜீவன்கள்தான்.ஓய்வு பெற்றபின் செலவாகாத அதிகாரத்தை செல்லுபடியாக்க இவர்கள் தேடிக் கொள்கிற புகலிடம்தான் சாதி.ஊருக்கு ஊர் இதுதான் நிலைமை.நாலு சாதியினர் சேர்ந்து இணக்கமாக வாழ்கிற பொது வாழ்விடங்களில் தனிதனி சுடுகாடுகளுக்கு வழிகேட்டு நடப்பவர்களும் இவர்கள்தான்.

என்னுடன் பழகும் ஒரு பாதிரிக்கு பொது இடங்களில் எப்படி பரமாறுவது என்பதே தெரியாது.எங்கு சென்றாலும் நாம்தாம் இங்கே பாதிரி என்று நினைத்துக் கொண்டே வரும்.நான் அவ்வப்போது "ஒய் நீர் இங்கே பாதிரி இல்லை சும்மா இரும்"என நினைவுபடுத்துவேன். சிரம் சற்று இறங்கும்.இறங்கிய மாத்திரத்திலேயே நிலை மறந்து மீண்டும் எழும்பி விடும். அமாம் பாத்தீரா ! என்று ஒத்துக் கொள்ளும் அது திரும்பத் திரும்ப நினைவுபடுத்தும் வேலையை எனக்குத் தந்து கொண்டிருப்பதில் சளைப்பதே இல்லை.

ஆசிரியன் என்பவன் குரு.வழிகாட்டி .இரண்டு மூன்று நல்லகுருக்கள் அமையப் பெறாத வாழ்வு என்பது வாழ்வே இல்லை.அது நிறைவு பெறாது.குரு என்றவுடன் அவர்கள் துறவு நிலையடைந்த சந்நியாசிகள் என்பதல்ல அர்த்தம்.தனது அனுபவங்களை உங்களுடைய பாதையாக்குபவன் அவன்.அப்படி குரு இல்லாமல் பாதையை வாழ்வில் கண்டடைந்து விடமுடியுமா என்றால் நிச்சயமாக முடியாது.

ஒரு கொலைகாரன் ,பொறுக்கி சாலச்சிறந்த குருவாக இருக்க முடியும்.பார்த்திருக்கிறேன்.அவர்களிடமிருந்து ஏதோ ஒரு சமயத்தில் கிளர்ந்து உங்களுடன் வந்து விழும் வார்த்தை உங்களை ஆயுள் முழுக்க வழிநடத்த போதுமானதாய் அமைந்து விடும்.கிராமங்களில் சாமிகள் ஆடி வரும்போது பக்கிக் கொலைகாரனிடம் சென்று சாமி நான் உன்னோடுதானிருக்கிறேன் என்று வாக்கு சொல்வதை வளரும் புதியதலைமுறை புரிந்து கொள்ள இயலாமல் திக்குமுக்காடுவதைக் கண்டிருக்கிறேன்.அந்த இடத்தில் சாமிக்கே அவன்தான் குரு.கிராமத்துக்குழந்தைகள் எல்லோரையும் நல்வழிப்படுத்திக் காப்பாற்றும் ஊர்வேசைகள் குருவின் ஸ்தானத்தில் இருப்பதுண்டு . ஊரே ,நாலு ஊர் சாமிகளே அவர்கள் வாக்கிற்கு கட்டுப்பட்டிருப்பார்கள் .

நல்லகுரு அமையப் பெறாதவன் அதற்காக வாழ்வில் வாய்விட்டுக் கதறி அழும் நாளினைக் கடக்காமல் தீராது.கதறி அழும் அந்நாளில் அவர் வந்து முன் நிற்பார்.நம்முடைய சாமிகளில் பலரும் குருக்கள்தானே தவிர கர்த்தாக்கள் இல்லை.பிறவிப் பெருங்கடலை குருவின்றி கடக்க இயலாது.முயற்சி செய்து படுதோல்வி காணாதீர்கள்.இது இந்த கவியின் அனுபவ வாக்கு.

அப்பன் முருகன் குரு .அய்யன் அய்யப்பனும் குரு .கணபதி குரு . வினைப்பயன் நீங்கவேண்டுமெனில் வினாயகனிடம் முறையிடுதலை விட்டால் வழி கிடையாது. ஆதி குருசாமி சிவன்.நாராயண குரு .கர்த்தாவை அறிய குருதான் வழி காட்டுவான்.குருவற்றவன் கர்த்தாவைக் கண்டடையவே முடியாது.

குருவுக்கு உருவமில்லை.குரு ஒருபோதும் ஒரேவிதமான வேடத்தில் மீண்டும் மீண்டும் வந்து உங்கள் முன் நிற்கமாட்டான். குரு பலவேடங்களில் உங்களை வந்து சேர்வான் .உங்களுக்கு அவன் குரு என்பதைக் கண்டுகொள்ளும் புத்தி சுவாதீனம் மட்டும் வேண்டும் அவ்வளவுதான். குரு என்பது ஒருவித அலைபாய்தல் தகிப்பு. ( wandering ) தமிழ் மரபுக்கு வள்ளுவனைக் காட்டிலும் சிறந்த குருநாதன் கிடையாது.திருக்குறள் ஒவ்வொரு வயதிலும் ஒவ்வொரு விதமான ஓசையை எழுப்பி பாதையை உண்டாக்க வல்லது.

எனது வகுப்பு ஆசிரியர்களில் பெண்கள்தான் நிறைய நினைவில் இருக்கிறார்கள்.தங்களிடம் காதலைத் தெரிவித்தமைக்காக தண்டிக்கப்படும் குழந்தைகளிடம் இப்போதுவரையில் வலித்துப் போகிறேன் .அந்த ஆசிரியையிடம் காதலைத் தெரிவிக்கும் குழந்தை நானும்தான்.

தொடக்கக்கல்வி நான்கும் ஐந்தும் படித்தது நாகர்கோயில் டதி மகளிர் மேல்நிலைப் பள்ளியில்.தொடக்கக் கல்வியில் மட்டும் அங்கு ஆண் குழந்தைகளைச் சேர்ப்பார்கள்.ஐரீன் டீச்சரை நான்காம் வகுப்பில் காதலிக்கத் தொடங்கியதுதான் முதல் காதல் அனுபவம்.கடலோரக்கவிதைகள் ரேகாவை நினைவு கூறும் தோற்றம். கருணையின் மொத்த உருவம் .எப்போதும் ஏசுசாமியை நினைத்துக் கொண்டே இருக்கவேண்டும்.என்று சொல்வார்கள்.அவர்கள் அழுது பிரார்த்தனை செய்யும்போது ஏசுவே அழுவதுபோல தோன்றும்.வீட்டில் வந்ததும் முழங்காலிட்டு பிரார்த்தனை பண்ணத் தவறுவதில்லை.ஏசுசாமியிடம் பிரார்த்தனை செய்ய ஏன் அழுது வடிக்கிறார் என்பதுதான் விளங்குவதில்லை.அழுவதை நான் அப்போது கருணையுடன் பொருத்திப் பார்த்து வைத்திருந்தேன்.எங்களையெல்லாம் கண்களைத் திறக்காமல் பிரார்த்தனை செய்யச் சொல்லிவிட்டு ; தான் மட்டும் நாங்கள் குழந்தைகள் யாரேனும் கண்களைத் திறந்து பார்க்கிறோமா என்று ஒற்றைக் கண்ணால் அவர் பார்த்த காட்சியை நான் பார்த்திருக்கவே கூடாது.அந்த காட்சிதான் அந்த காதலை நான் கைவிட வாய்த்த சத்ரு .

ஆறு முதல் பனிரெண்டுவரையில் சேது லட்சுமி பாய் மேல்நிலைப்பள்ளி ( S . L . B ) பள்ளி வாழ்க்கையே ஆசிரியைகளை காதலிப்பதும் காதல் போராட்டங்களும் நிறைந்ததுதான் . அது தந்த வடுகளாலும் நிறைந்தது.கவிதை ஏன் எழுதப் பழகினேன் என்றால் இவ்வாறுதான்.நாங்கள் மாணவர்கள் போட்டி போட்டுக் கொண்டு காதலித்தவர்கள் உட்பட காதலித்த ஆசிரியைகள் எல்லோரும் இன்னும் உயிரோடுதான் இருக்கிறார்கள்.ஆனால் ஒரு ஆசிரியைக்குக் கூட எங்களைக் காதலிக்கும் துணிவு இல்லாமல் போனதுதான் அன்றைய காலத்தில் எங்களின் காதல் தோல்விகளுக்கெல்லாம் காரணமே !

***************

ஆறாவது வகுப்பில் சேது லட்சுமி பாய் பள்ளியில் சேர்த்து விட்டார்கள்.ஆனால் முதலில் படித்த டதி பள்ளியைத் தொட்டு அடுத்த பள்ளிதான் அது.இடைமறிக்கும் தூரம் ஒரு காம்பௌன்ட் சுவர் மட்டுமே .இடைவேளைகளில் வெறித்தனமாக அந்த மதில் மேல் அமர்ந்து பல சாகசங்களைச் செய்து கொண்டிருப்போம்.அந்த பக்கம் சிறுமிகளுக்கான கழிப்பறை இருக்கும்.மாணவிகள் வருவதும் போவதுமாக இருப்பார்கள்.சாகசங்களில் ஈடுபடுவதெல்லாமே அவர்களுக்காகத் தான்.அதில் விஜயன் என்றொரு பையன் கராத்தே எங்கு படித்தான் என்பதெல்லாம் தெரியாது.படித்தானா என்பதும் தெரியாது.ஆனால் அவனுக்கு கராத்தே தெரியும் .மதில்மேல் நின்றுதான் அத்தனைப் பயிற்சிகளையும் செய்வான்.அந்த மதில் சுவர் வைக்கம் முஹம்மது பஷீரின் மதிலுகளுக்கு இணையானது.இப்போது மேலும் அதனை எழுப்பிக் கட்டி விட்டார்கள்.சிறைச்சாலைகளின் உயரத்திற்கு .அதில் நடக்கிற சாகசங்களை கண்காணிக்க சில வகுப்பாசிரியர்கள் நியமிக்கப்பட்டிருந்தார்கள்.அப்போது லத்திச் சார்ஜ் பள்ளிகளிலும் நடைமுறையில் இருந்த காலம்.ஆசிரியர்கள் லத்தியில் மஞ்சள் பூசி அவித்து வீட்டிலிருந்தே எடுத்து வருவார்கள்.ஆசிரியர்களுக்கும் கூட அடிமனதில் அந்த மதில்மேல் சாகசங்களில் ஈடுபடும் விருப்பம் இருக்குமாயிருக்கலாம்.ஆனால் அவர்களின் பணி வேறொன்றாயிற்றே? லத்தி சார்ஜ்களுக்குப் பயந்து ஒரு மாணவனால் கூட இந்த சாகசங்களை கைவிட முடிந்ததே இல்லை.முந்தையநாள் லத்தி சார்ஜ் நடந்த சுவடே தெரியாமல் மறுநாள் சாகசங்களில் ஈடுபட்ட வண்ணமிருப்போம்.மாணவர்கள் இதனால் கெட்டுப் போய்விட்டார்கள் என்பதெல்லாம் எதுமே கிடையாது.இந்த சாகசங்களோடு முடிந்தது எல்லாம்.பெரியவர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபடும்போது மட்டும்தான் அது அடுத்த கட்டம் அடுத்த கட்டம் எனச் தாண்டிச் செல்லும்.அவர்கள் அதனை மனதிற் கொண்டுதான் குழந்தைகளும் தாண்டிச் சென்று விடுவார்கள் என நினைப்பது.அச்சம் கொள்வது.அப்படி ஒருபோதும் கிடையாது.அவர்களுக்கு சாகசம் முடிந்த பின்னர் யாரை காதலித்தோம் என்பது கூட தெரியாது.இது இயல்பின் ஒரு play அவ்வளவுதான் அத்துடன் முடிந்தது.நாங்கள் படித்த காலத்தில்

ஊடகங்கள் இவ்வளவு கிடையாது.காமத்தின் உள்ளடக்கம் படுவேகமாக மனச்சோர்வின் பசியுடன் இப்போதிருப்பதை போல வந்து சேர பாதைகளும் கிடையாது. ஆனால் இந்த மாதிரி நிறைய play குழந்தைகளுக்கு இருந்தன.இப்போதோ வந்து சேரும் உள்ளடக்கம் அதிகம்.வெளிப்பாடுகளோ நாலா புறத்திலிருந்தும் கண்காணிக்கப்படுகின்றன .வரையறைகள் செய்யப் படுகின்றன.யோசித்துப் பார்த்தால் அது லத்தி சார்ஜ் காலமாக இருந்தாலும் கூட சுவாரஸ்யமான காலம் என்றுதான் தோன்றுகிறது 


5



எதனைக் கண்டடைந்தாய் ?


நான் இன்று ஒரு விருந்து விழாவிற்குச் சென்றிருந்தேன்.வாழும் பகுதியில் ஒரு குக்கிராமம் அது.ஒருவகையில் நகரம் இன்னும் நெருங்காத கிராமம் எனலாம்.அப்படி கிராமங்கள் உண்டா என்றால் ஏராளம்.தேசிய நெடுஞ்சாலைகளில் பயணித்து ஒரு நிறுத்தத்தை அடுத்து மற்றொரு நகரம் நகரம் என நகரும் பயணிகளுக்கு இது தெரியாமல் இருக்கலாம்.உள்ளூர் உள்ளூரில் உள்ளே என்று சென்று கொண்டேயிருந்தால் அந்த ஊரில் கொண்டு நிறுத்தும் .ஒரு வெள்ளைக்காரனைப் பார்ப்பது போல உங்களை ஒரு சிறுவன் குழந்தைக்கண்களுடன் கூர்ந்து நோக்குகிறான் என்றால், ஒரு அந்நியனிடம் கொள்ளும் ஆர்வத்துடன் ஒரு இளம்பெண் அதிசயிக்கிறாள் என்றால் ,எல்லா ஆண்களும் சொல்லி வைத்தாற்போல உங்களிடம் சீறத் தொடங்குகிறார்கள் என்றால் நீங்கள் தேடிய இடத்திற்கு வந்து சேர்ந்து விட்டீர்கள் என்று அர்த்தம்.அசல் கிராமம் அதுவே .

ஒரு ஆண் உங்களிடம் இனிப்பாக பேசிவிடுவான் ஆகில் அந்த கிராமத்தை நகரம் தீண்டிவிட்டதாக கொள்ளலாம்.அப்படி கிராமங்கள் நாம் வசிக்கும் இடத்திற்கு வெகு அருகில் கூட இருக்கலாம் .சென்று பார்க்க வேண்டும்.ஆனால் அது கடினமும் கூட.எங்கே மிதிவிழும்,எங்கே கருணை பொங்கும் ,எதற்கு எதிர்ப்பு கிளம்பும் எதுவும் யூகிக்க இயலாதவை.அவர்களோடு சேர்ந்து குடியிலோ கொண்டாட்டத்திலோ கூடிக் குலவமாட்டீர்கள் எனில் உயிருக்கு தீமை நேராது.தாஸ்தாவெஸ்கியின் அருவருப்பான விவகாரம் கதை உங்கள் நினைவிற்கு வருமானால் கடைசி நூலிழையில் கூட தப்பித்துக் கொள்ளும் வாய்ப்புண்டு.அசல் கிராமம் என்பது இன்றைய உலகளாவிய மனிதனுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடியதுதான்.தங்கள் தங்கள் குழுக்களைத் தவிர்த்து பிறருக்கு அங்கே இடமில்லை.பொது அறிவுச்சூழலில் இருக்கும் பலருக்கும் அங்கே அறிமுகம் இல்லை.அவை வேறு ஒரு உலகம் .

அதனால் தோற்றத்தில் மாறுபாடு இருக்குமா என்றால் இருக்காது.செல்வத்தில் குறையிருக்குமா என்றால் இருக்காது.பலர் பெருஞ்செல்வந்தர்கள்.விருந்திற்கு செலவிடும் பணம் அளவற்றது.நெருங்கினால் மட்டுமே அவர்கள் வேறொரு உலகத்தில் வாழ்பவர்கள் என்பதைத் தெரிந்து கொள்ள முடியும் . ஆனால் எடுத்த எடுப்பிலேயே அவர்கள் நம்மைப் போன்றோரை இவர்கள் வேறு நபர்கள் என்று உணர்ந்து விடுவார்கள்.விருந்தில் சமவயதுடைய பெண்கள் பலரும் சேலை உடுத்தியிருந்தார்கள்.அதற்கு அடுத்த இளம்பெண்களுக்கு நவீன உடைகள்.யுவதிகள் உச்சபட்ச பேஷன் ஆடைகள்.இவர்கள் செய்வதை அவர்கள் ;அவர்கள் செய்வதை இவர்கள் என்றெல்லாம் மாற்றிச் செய்யமுடியாது.

சேலை கட்டிய பெண்கள் அதனை எவ்வளவு சிறப்போடு கட்ட முடியுமோ அவ்வளவு சிறப்போடு கட்டியிருந்தார்கள்.ஆனால் இடுப்புப் பகுதியில் மட்டும் சிறப்பாக சேலையிலிருந்து ஒரு இழையை எடுத்து மூடி வைத்திருந்தார்கள்.சொல்லி வைத்தாற்போல பலரும் இப்படி செய்திருந்தார்கள்.எனக்கு அது என்னமோ தெரியவில்லை இடைஞ்சலாக இருந்தது.சிறந்த உடல் கட்டுமானம் ,அழகு ,ஆரோக்கியம் எல்லாமே இந்த பண்பால் குலைவது போலும் இருந்தது . கிராமங்களில் பல்வேறு பழக்க வழக்கங்கள் , புரிதல்கள்,அறிதல் முறைகள் எல்லாமே குறியீடுகளால் ஆனவைதான்.கிராமத்து ஆண்களின் மனநிலையென்பது இளைஞர்களில் இருந்து முதியவர்கள் வரையில் பெண்களை பண்டமாக பாவித்து வெறி கொண்ட மனநிலையில் பறித்துத் துண்ணும் தூண்டுதல் பெற்றிருக்கிறது.பொள்ளாச்சி குற்றங்களில் இந்த அம்சத்தையே கண்டோம்.ஆனால் புலப்படவில்லை.அவர்கள் நவீனமாக ஆடையணிக்கிறார்கள் ,நவீன ரக வாகனங்களில் வருகிறார்கள் என்பதால் இந்த போதம் ஏற்படவில்லை.சமவயது பெண்களெல்லாம் அவ்வாறு ஆடை அணிந்திருப்பது ஒருவகையான குறியீடு.அவர்களின் பார்வைகளில் இருந்து இத்தகைய குறியீடுகள் விலக்கி விடுகின்றன.குழுக் குறியீடுகள் அற்ற நிலையில் குழுவில் உள்ள ஒருவர் இருந்தாலும் சரி ,அந்நியர்களாக இருந்தாலும் சரி ,கிழவிகள் ஆனாலும் சரி பறித்துத் துண்ணுவதற்கு தயாராகி விடுவார்கள்.கிராமங்களில் இருந்து கிளம்பி மும்பை சென்று வேலை பார்த்து ஓய்வு நாளில் ஷுகு பீச்சில் கட்டமிட்டு கபடி விளையாடுகிறார்கள் பாருங்கள் அது கபடி அல்ல,துண்ணுவதற்கு தோது பார்க்கும் லீலை. தோது படாததால் அவர்கள் திரும்பி விடுகிறார்கள்.நகரங்கள் வகை வேறு.அங்கே செட்யூஸ் பண்ணத் தொடங்குவார்கள்.பின்னர் துண்ணுவார்கள்.செட்யூஸ் பண்ணாமல் துண்ணும் வகை நகரங்களில் குறைவு.பொதுவாக நம்முடைய சமூகம் கலந்து கட்டிய சமூகமே.கிராமத்திற்குள் நகரம்,நகரத்திற்குள் குக்கிராம வகை என எல்லாம் கலந்து கட்டியது.எனவே எப்போதும் பறித்துத் துண்ணத் துடிக்கும் ஒரு மிருகத்துக்கு அருகிலேயே ஒரு துண்ணாத மிருகமும் நின்று கொண்டிருக்கிறது.

நான் இதனை முன்னிட்டு என்ன சொல்ல வருகிறேன் என்றால் பொதுவாக இங்கேயிருப்போரில் பெரும்பாலோர் பொது வரைமுறைகளை ஏற்றுக் கொள்வதை பற்றியே பேசிக் கொண்டிருக்கிறோம்.இந்த ஆடைகளை அணியக் கூடாதா ? அந்த ஆடையை அணிந்தால் என்ன வந்துவிடும் என்றெல்லாம் கர்ஜிக்கிறோம்.மலைவாழ் மக்கள் மத்தியில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவரின் அனுபவம் படித்தேன்.அவர் அங்கு சென்று உடுத்துவதற்காக பழைய ஆடைகளை சேகரித்து வைத்திருக்கிறார்,இதனைக் கண்டுபிடிப்பதற்கு அவருக்கு ஆறு மாத காலம் தேவைப்பட்டிருக்கிறது.அந்த கிராமத்தில் பணிபுரிய வேண்டும் என்பதே அவருடைய லட்சியம்.அப்படியில்லாதவனால் ஆடை குறித்த இந்த விஷயத்தை கண்டுபிடித்திருக்க முடியாது . புல்லட் புரூப்க்கு ஆதரவாகவே கர்ஜித்து வாழ்நாள் முடிந்து போயிருக்கும்.பழைய ஆடைகள் அணிந்த பிறகுதான் அந்த ஊர் அவருக்கு இணங்கியிருக்கிறது,குழந்தைகள் பாடம் சொல்லித்தர ஒத்துழைத்திருக்கிறார்கள்.இல்லையென்றால் அவன் யாரோ அந்நியன்.அவர்களை பொறுத்த வரையில் கிராமத்தைப் பறிக்க வந்தவன்.

எழுத்தாளர்களின் வேலை என்பது கவிஞர்களின் வேலையென்பது பேராசிரியர்களின் கட்டுரைகளை ,தரமான கட்டுரைகளை எழுதுவதல்ல.அவற்றை பழகிய ஒரு நாய் கூட எழுதிவிடும்.எழுத்தின் தரப்பிலிருந்து அப்படி செய்பவர்களை , அப்படியெழுதுபவர்களை நான் சிறுமதியாளர்கள்,தாழ்வுணர்ச்சியாளர்கள் என்றே எடுத்துக் கொள்கிறேன்.வாசகனாக ஒரு எழுத்தாளனிடம் எதிர்பார்ப்பது ; நீ இந்த வாழ்விலிருந்து எதனைக் கண்டடைந்தாய் என்பதனை அறியத்தானேயொழிய உன்னிடம் எத்தனை புல்லட் புரூப்கள் உள்ளன என்பதை அறிவதற்கு அல்ல. மலைவாழ் கிராமத்திற்கு பாடம் நடத்தச் செல்லும் ஆசிரியன் கண்டடைவதை ஒப்ப அவன் ஏதேனும் புதிதாகச் சொல்ல வேண்டும்.மேற்கோள் பாசாங்கெல்லாம் செய்யவே கூடாது.செய்தால் நாயும் மதியாது.நாயும் மதிக்கத் தேவையில்லை என்று மீறி செய்தால் அதில் மேலதிக பொருள் இருக்க வேண்டும்.

6

தொடர்பு கொள்ளுதலில் ஏற்படுகிற புதிய தொழில்நுட்ப மாற்றங்கள்.


பத்தாண்டுகளுக்கு முன்பு வரையில் அல்லது பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரையில் யாரிடம் நான் பேசிக் கொண்டிருக்கிறேன் என்கிற சிந்தனை இருந்ததில்லை .என்னை ஒத்த ஒருவனுடன் பேசிக் கொண்டிருந்தேன்.எப்படி சுற்றி வளைத்துப் பேசினாலும் அந்த வாசகன் அந்த தளத்திலேயே எதிர்கொள்ளும் வண்ணம் உள்ளவனாக இருந்தான்.அவனே சிறப்பானவன் என்று அதற்கு அர்த்தமில்லை. எனக்கு முந்தைய தலைமுறையினருக்கு அப்படி இல்லாதவனோடு உறவே கிடையாது .அதற்கான அவசியமும் அவர்களுக்கு இருக்கவில்லை.குறிப்பிட்ட அந்த தளத்தில் மட்டுமே எழுத்தாளர்களை,கவிகளை எதிர்கொள்ளுகிற வாசகர்கள் இருந்த காலம் அது.சுந்தர ராமசாமி அவர் எழுத்துக்களை ஒரு தமிழ் சினிமா ரசிகன் எவ்வாறு எடுத்துக் கொள்வான் என்பதை பற்றி சிந்தித்திருக்கவே மாட்டார்.அதற்கான அவசியமும் ஏற்படவில்லை.ஆனால் இன்று விரும்பியோ,விரும்பாமலோ பொதுமக்களின் முன்னால் நேரடியாக எழுத்தாளனும்,கவியும் நின்றாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விட்டது.முந்தைய காலகட்டம் வாசகனின் முன்னால் நின்றது போல இன்று பொதுமக்களின் முன்பாக நிற்க வேண்டியுள்ளது.இந்த நிலை தவிர்க்க இயலாதது.முந்தைய நிலையே சிறப்பானது என்று ஒரு எழுத்தாளன் சொல்வானேயாகில் அது அவன் சமகாலத் தன்மையில் அடையும் பின்னடைவையே அந்த கூற்று குறிக்கிறது .இயல்பாகவே அவனது மொழி கண்டடைய வேண்டிய தொழில் நுட்ப மாற்றத்தை அவன் இனி தவிர்க்கவே இயலாது.ஏனெனில் இன்றைய வாசகன் ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் பொதுமக்களில் இருந்து நேரடியாக உருவாகிக் கொண்டிருக்கிறான்.வாசகனிலிருந்து உருவாகும் வாசகனில்லை இவன்.
பொது மக்கள் என்னும் தரப்பு மகா குளறுபடிகள் நிரம்பியது.அது தேர்வு செய்யப்பட்ட ஒரு குறிப்பிட்ட வளாகம் அல்ல.மதில் சுவர்கள் எதுவுமே சுற்றிக் கட்டப்பட்டிருக்கவில்லை.தொழில் நுட்பம் தன்னளவில் பல குறைகள் இருப்பினும் கூட பாகுபாடுகள் அற்றது.அல்லது நாம் ஏற்கனவே கொண்டிருக்கும் பாகுபாடுகள் ; அல்லது நாம் பாதுகாக்க நினைக்கும் பாகுபாடுகளும் உட்பட அதற்குள் கிடையாது.விலக்க நினைக்கும் பாகுபாடுகளும் அதற்கு இல்லை.பேதங்களும் இல்லை . அதனால் அது கரடு முரடாக , மனம் கோணும் விதத்தில் இருப்பதை தவிர்க்கவே இயலாது.
பிரமிள் ஒரு விஜய் ரசிகன் தனக்கு எதிர்வினை புரிவான் பதில் சொல்ல வேண்டியிருக்கும் என்று கருதியிருக்கவே மாட்டார்.நள்ளிரவில் ஒரு கௌண்டரோ ,நாடாரோ,தேவரோ , தலித்தோ உங்களை அழைத்து சினம் கொள்வார்கள் என்று புதுமைப்பித்தன் கருதியிருப்பாரா ? டாஸ்மாக் மூடியடைக்கப்பட்ட பின்னரும் ஒருமணிநேரம் போக்குவரத்து நிற்கும் வரையில் ஒரு சாதியவாதியோ,மதவாதியோ ,இனப் பிரளயனோ அழைக்கக்கூடும் என்று மௌனி கருதியிருப்பாரா ? தவறான புரிதலின் அடைப்படையில் தாக்குதல் நடைபெறலாம் என்பதே முந்தைய தலைமுறை அறியாதது.பொதுமக்களின் முன்பாக வந்து எழுத்து நிற்கும் போது ஏற்படும் விசித்திரம் இது.ஜானகி ராமன் இப்போதைய சீமான் கோஷ்டி போன்ற கோஷ்டியிடம் மாட்டிக் கொண்டு நெரிபட்டிருக்கவே மாட்டார்.அப்படி ஏதும் நடைபெற்றிருக்குமேயானால் முழு பைத்திய நிலையை அடைந்து எழுதுவதை விட்டகன்று சென்றிருப்பார்கள்.
இரண்டாயிரத்தில் ஒரு இணைய இதழில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது "ரஜினியின் பிம்ப அரசியல் " என்றோர் கட்டுரை எழுதினேன். அது இணையத்தில் வெளிவந்ததும் ஐநூற்றுக்கும் மேலான எதிர்வினைகள் .அதில் முக்கால்வாசி எதிர்வினைகள் "உன்னைக் கொன்றுவிடுவேன்.வென்று விடுவேன் இப்படியான கடைநிலை தரம் கொண்டவை.எதிர்வினைகளிலேயே ஆகக் கடைசி ரகம் இவைதான் " . இப்படியான எதிர்வினைகளை பொருட்படுத்தும் சிறிய அளவிலான மனோபாவம் கூட அப்போதே எனக்குக் கிடையாது .ஆனால் முதன்முறையாக நாம் எழுத்தின் மூலமாக பொதுமக்கள் முன்னால் நின்று கொண்டிருக்கிறோம் என்பதை உணரச் செய்த அனுபவம் அது.நான் பொதுமக்களை வரவைத்து அதனை எழுதவில்லை.வருவார்கள் என்றும் தெரியாது.வாசக எதிர்வினைகளே எதிர்பார்த்தவை.வந்து சேர்ந்தவர்களோ பொதுமக்கள்.
இப்போதெல்லாம் தினசரி சராசரி இரண்டுபேர் வீதம் தொலைபேசியில் அழைத்துத் திட்டுகிறார்கள்.எந்த உள்ளடக்கத்தின் பொருட்டுத் திட்டினாலும் திட்டுபவர்களுக்கென்று பொது குணாம்சங்கள் உள்ளன .முதல்மூச்சிலேயே தொலைபேசி அதனை நம்மிடம் தெரிவித்து விடும் .நான் அவர்களை வெட்டவெளியில் பேசிக்கொண்டிருக்குமாறு செய்துவிடுவேன்.
"ஒருவன் நீ குறிப்பிட்ட விஷயத்தை சொல்லியதிலிருந்தே தொடர்ந்து ஒருவார காலமாகக் குடித்துக் கொண்டே இருக்கிறேன்,உன்னைக் கொல்லாமல் விடமாட்டேன்" என்கிறான் . பொதுவெளியில் எழுத்திற்கு இப்படியெல்லாம் சாத்தியங்கள் இருக்கத்தான் செய்யும்.அவன் அகத்தை கட்டிவைத்திருக்கும் விதத்தை எழுத்து உடைத்து விடுகிறது அவன் நினைத்தே பார்த்திராத ஒரு சந்தர்ப்பத்தில் .வாசகனுக்கு இத்தகைய தருணங்களை எதிர்கொள்வதில் பயிற்சி இருக்கும்.பொதுமக்களிடம் அதேவிதமாக எதிர்பார்க்க இயலாது.
இதில் ஒரு சங்கடம் என்னவெனில் ஏதேனும் இக்கட்டில் இருக்கும்போது புதிய எண்ணிலிருந்து வரும் அழைப்புகளை எடுக்க இயலுவதில்லை.சிலசமயம் வாரக் கணக்கில் தொடர்ந்து நமது சிந்தையாகவே இருந்து திட்டுகிறவர்கள் எல்லாம் இருக்கிறார்கள்.அவர்கள் சொந்த அப்பாவைப் போல உரிமையெடுத்துக் கொண்டிருப்பது அப்போது விளங்கும்.தொலைபேசி எண்ணை இணையத்தில் பரப்பி கூட்டங்கூட்டமாக வந்து தொடர் கலவரம் ஏற்படுத்துகிறவர்கள் எல்லாம் இருக்கிறார்கள். இவர்களில் ஒருவனுக்கு கூட தனது பெயரையோ,முகவரியையோ முன்வைத்துப் பேசும் தைரியம் கூட இருக்காது.இவற்றுக்கெல்லாம் அஞ்சி பெருமாள் முருகனைப் போல புண்ணைப் பெரிதாக்கி உட்கார்ந்து அழுது வடிய முடியாது.பொதுமக்கள் முன்னால் எழுத்து நிற்கும்போது காலைக்கடன்களை கழிப்பது போல இவற்றைப் பழக்கமாக்கிக் கொள்ளவேண்டும் அவ்வளவுதான் விஷயம்.பிரச்சனைகளை நோண்டியெடுத்து பெரிதுபடுத்த வேண்டுமெனில் இங்கே ஒவ்வொரு எழுத்தாளனும் பெரிதாக்கிக் கொண்டிருக்கலாம்.உள்ளடக்கத்தில் நம்பிக்கை கொண்ட எழுத்தாளன் சிறப்பு நிலை ஏற்பட்டாலே ஒழிய இவை செய்யத் தகுந்த காரியங்கள் இல்லை.கோணங்கி கழிந்த கல்குதிரை இதழ்கள் கொண்டு வந்தபோது எண்ணை மாற்றிக் கொள்கிற அளவிற்கு முகமற்ற மிரட்டல்கள் .அவர் ஓங்கி ஒரு பெரிய குசுவிட்டது போன்று கடந்து போனார். மிக நெருங்கியவர்களுக்கு வெளியே அவர் பராதியே முன்வைக்க வில்லை.இத்தனைக்கும் அவர் தூங்க இயலாத அளவிற்கு நிலைமையை ஏற்படுத்தினார்கள்.
தாக்கத் துடிப்பவனெல்லாம் தாக்குபவனும் இல்லை.தாக்குதலை தாக்குப் பிடிக்கப் போகிறவனும் இல்லை.எழுத்து அவனை தாக்கியிருக்கிறது.உள்ளூர பாதிப்படைப்பவற்றை எதிர்ப்பதென்பது இங்குள்ள பொதுமக்கள் பழக்கம்.முதல் பாதிப்பில் எழுந்து நின்று எதிர்க்கும் ஒருவனே பின்னாட்களில் தீவிர வாசகனாகவும் மாறுகிறான்.அப்படியும் நடக்கிறது. இது தமிழின் குலக்குணம்.பிடித்துப் போயிற்றென்றால் எதிர்ப்பது,பராது சொல்வது ,கேவலப்படுத்தத் துணிவது.உள்ளம் குலைந்தவன் எதிர்க்கத்தானே செய்வான் ?.இப்படியும் ஒருவகை உண்டு.எப்படியிருந்தாலும் வாசகன் மௌனமாகும் அளவிற்கு ஒரு தல ரசிகன் வாந்தி பண்ணும் போது சிரமாகத்தான் உள்ளது.வேறென்ன செய்ய முடியும்?
இந்த தொழில் நுட்பமாற்றம் எழுத்தில் , அதன் தொடர்பு நிலையில் பாதிப்பை உண்டாக்கியிருக்கிறது.தொடர்பு எந்த சிக்கலான உள்ளடக்கத்தைக் கொண்டதாக இருந்தாலும் பாசாங்கற்று வெளிப்படையாக இருந்தாக வேண்டும் என்று வலியுறுத்துகிறது. அது ஆரோக்கியமானது என்பதே எனது எண்ணம்.

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"