21 கவிதைகள் - லக்ஷ்மி மணிவண்ணன்

21 கவிதைகள் - லக்ஷ்மி மணிவண்ணன்




1

நானிந்த பிறவி
எடுத்தது எவ்வளவு நல்லது
எப்படியும் புத்திசாலித்தனமாக
முடித்து விடுவேன்
அல்லவா?
நானிந்த பிறவி
எடுத்தது எவ்வளவு நல்லது
என்னுடைய புத்திசாலித்தனத்தின்
அளவை அறிந்து கொண்டேன் அல்லவா?
நானிந்த பிறவி எடுத்தது
எவ்வளவு நல்லது
என்னுடைய புத்திசாலித்தனம் எதுவுமே
என்னுடையதல்ல என்பதைத்
தெரிந்து கொண்டேன்
அல்லவா !
இல்லையெனில்
தெரியாது இருந்திருப்பேன்
நானிந்தப் பிறவி எடுத்ததை
அறியாமல்
இருந்திருப்பேன்
இல்லையா?

2

எடுத்ததுதான் எடுத்தேன்
நற்பிறப்பாய்
எடுத்தேன்
கவிழ்த்ததுதான் கவிழ்த்தேன்
அப்பிறப்பைக்
கவிழ்த்தேன்
எப்பிறப்பும் எடுக்காத
நற்பிறப்பைக் கவிழ்த்தேன்

3

சந்தித் தெருவில்
நின்றாடிச் சுற்றி
பலபேரைப்பகைத்து
சிலபேரை இனித்து
சென்றுறங்கும் இடம்தேடிச்செல்கிறாள்
என்ன வயது இருக்குமோ ?
நின்றாடிச் சுற்றி சந்தித் தெருவில்
பலபேரைப் பகைத்து
சிலபேரை இனித்து
சென்றுறங்க இடம்தேடும் வயதிருக்கும்
இல்லையா?

4

இந்தச் சேவல்
ஒரு துணை உயிருக்காக வந்து சேர்ந்தது
சனிக்கிழமையில் மரித்த ஒருத்தியின்
துணை உயிராக அது
செல்லவிருக்கிறது

அவளுடைய மடியில் அமர்ந்து
அமரர் மேடைக்குள்
இறங்குகிறது

மறுநாள்
அமரர் மேடையில் ஏறி நின்று
சேவல் கூவும்
என்னுடைய கனவில்
அருகில் அவள் இரையெடுக்கிறாள்
மனிதத்தலையுடன்
கோழியுடலுடன்

5

கொஞ்சம் சரிந்தாலும்
சுற்றியுள்ள சமநிலையெல்லாம் கூடி நின்று அழுத்தும் தாக்கும்
மேலேறிக் கொல்லும்
ஓடு கொண்டு தாங்கும் ஒன்று
விஷம் கொண்டு தாங்கும் மற்றொன்று
படை கொண்டு தாங்கும் ஒன்று
கொம்பு கொண்டு தாங்கும் மற்றொன்று
நானோ
கவிதை கொண்டு தாங்கும் ஒன்று
மற்றொன்று

6

எப்படிப் பார்த்தாலும் இறுதியாக
அவளுடைய அன்பை
விரித்துத்தான் தரவேண்டும்
பிளந்து
ஊட்ட வேண்டும்
அணைத்துத்தான் காட்டவேண்டும்
இதற்கு இடையில் எத்தனை நிலைபாடுகள்
கொள்கைகள் ?
இடையூறாக எத்தனை சுவர்கள்
நாகரிகங்கள்?
எத்தனை படைகள்
பாவனைகள் ?
எத்தனை பண்பாடுகள் ?
காவல் நிலையங்கள் ?
எத்தனை காவலர்கள் ?
ஐயோ ஐயா...

7

நமக்கு எல்லோருக்குமே
எண்பது வயதுதான்
என்ன
பார்ப்பதற்கு இளமையாகத் தெரிகிறோம்
நமக்கு எல்லோருக்குமே
சின்ன வயதுதான்
என்ன
பார்ப்பதற்கு எண்பதெனத்
தெரிகிறோம்
அறிகிறோம் பிரிகிறோம்
அறிகிறோம் பிரிகிறோம்

8

இணையாக
நானும் ஒரு குழந்தையும்
சவரக் கண்ணாடியின் முன்பாக
அமர்ந்திருக்கிறோம்
சவரம் நடக்கிறது
அதற்கு தலைக்கு
எனக்கு மீசைக்கு
சற்றே சிணுங்கிய அது
என்னைத் திரும்பிப் பார்த்தது
புன்னகைத்தேன் லேசாக
ரொம்ப லேசாக
தன்னை சரி செய்துகொண்டு நிமிர்ந்து
அமர்ந்தது
கண்ணாடிக்குள் பிம்பத்தைப் பார்த்து
தலையை இருபுறமும் அசைத்து
சரி செய்து கொண்டது
குழந்தையாக வந்து அமர்ந்த குழந்தை மெல்ல மெல்ல
வளர்வது கண்டேன்
மீசையை உனக்குத் தரட்டுமா என்று
செய்கையில் கேட்டேன்
சரியென புன்னகைத்தது
பெரியவராகிக் கொண்டிருந்த அது
மீண்டும் குழந்தையாக
இப்போதும் மீண்டும்
சவரம் தொடர்கிறது
அதற்கு மீசைக்கு
எனக்கு தலைக்கு

9

அப்பா
உன்னுடைய தோல் சுருங்கிய உருவம்
சதை வற்றிய வடிவம்
ஆற்றல் குறைந்த நீ
ஓங்கிக் கத்தாதே
சத்தமிடாமல் உற்றுப் பார்க்க வேண்டிய
ஒன்றிருக்கிறது
அதன்
இப்போதைய
தோற்றத்தில்
உன்னை தாங்கி நின்ற தூண்
சற்றே சாய்ந்து வருகிறது
எவ்வளவு சாய்கிறதோ
அவ்வளவுக்கு
உன்னையும் சேர்த்து இழுத்துக் கொண்டு
சாய்ந்து வருகிறது
எவ்வளவுக்கு சாய்கிறதோ
அவ்வளவுக்கு
உன் குழந்தை
நிமிர்ந்து
வருகிறது
தவழ்தலில் தொடங்கி
மாயக் கயிற்றின் விட்டம்
நிமிர நிமர
சாய சாய

10

கடையை சுத்தம் செய்து
கழித்த நீரை
சற்றே மேடான
சாலையில் இறைத்தேன்
இறைத்த நீர் ஊற்றாகி
ஒரு நதி உருவானது
நதியோடி கடல் உருவானது
ஒருதுளி நீர்
அதன் நுனியில் சிறு கண்
நதி காணவும்
கடல் சேரவும்

11

அந்த வீடு இருளுக்குள் இருக்கும்
ஒளி வீடு
ஒவ்வொரு இரவும் கடையை அடைத்துவிட்டுச் செல்லும் வழியில்
அதனைக் காண்கிறேன்
சுற்றிலும் இருள் அடர்ந்திருக்கும்
முற்றத்தில்
ஒளி முளைத்திருப்பது போல
நிற்கிறது அது
ஒளியில் முழுதும் பச்சையம் மின்னும்
முற்றத்து வாழை மரம்
முதல் நாளில் சற்றே கடந்து சென்ற பிறகே
அதனைக் கவனித்தேன்
பின் திரும்பி வந்து பார்த்தேன்
சாலையிலிருந்து
உள் ஒதுங்கிக் கிடந்தது அந்த ஒளி
ஒளிக்குக் காரணமானவள்
ஒரு பெண்ணாக இருக்கலாம்
முதியவராக இருக்கலாம்
கஞ்சா பயிலும் சிறுவனாக இருக்கலாம்
ஒருவேளை ஒரு செய்தியும் அதன் உள்ளடக்கத்தில்
இல்லாமலும் இருக்கலாம்
ஆனாலும்
ஏதேனும் செய்தி இருப்பது போல
அவ்வளவு பிறழ்கிறது
நள்ளிரவில்
அந்த ஒளி
யாருக்கோ அழைப்பு போல
யாரின் பேரிலோ கசப்பு போல
யார் பேரிலோ அன்பு போல
யார் பேரிலோ ஒன்றுமே இல்லை என்பது போல

12

பெண் குழந்தையாக இருக்கையில்
குழந்தையாக இருக்கிறாள்
கன்னியென்றானால்
வெறொன்றாகி நிற்கிறாள்
கையில் குழந்தையுடன் செல்கையில்
முகமே வேறு
சிரிப்பே வேறு
இருசக்கர வாகனத்தில் செல்கையில் சாமி
பெற்ற குழந்தை கார் ஓட்டிச் செல்ல
முன்னிருக்கையில்
அமர்ந்து
ஓரக்கண்ணால் பார்த்து
சிரித்துக் கடக்கிறாள்
நானும் பதிலுக்குச்
சிரித்துக் கொண்டேன்
மருவூர் அரசியின்
சிரிப்பு
மூகாம்பிகைத் தாயாகத்
தெரிகிறாள்

13

ஏதுமற்ற இடம்
எவருமற்ற மணல் தேரி
ஏறி
நின்று பார்த்தால் கடல்
நண்டு போல அந்த திக்குகளில்
அலைந்து
தன்னிடம் திரும்பி வருகிறான்
இவன்
தென்னைகளின் நிழல்கள்
அசையும் பகல்
பகல் அளைந்து விளையாடி
திரும்பி வருகிறது
பசு
இருவரும் ஏதோவொன்றைப் உணர்ந்திருந்தார்கள்
அதிசயமான ஒன்று
அவர்களோடு சற்று நேரம் இருந்ததை
பசுவின் கண்களில்
இவன்
இவன்
கண்களில் பசு
ஏதோவொன்று கவிந்து இருவரையும்
அணைக்கிறது
மூட்டம் அகன்று மீண்டும் பிரகாசிக்கத் தொடங்கிற்று
விந்தையானதொரு நண்பகல்

14

தற்காலிகமாக இங்கே இருக்கிறேன்
தற்காலிகமாக தொழில் செய்கிறேன்
தற்காலிகமாக ஊரில் இருக்கிறேன்
தற்காலிகமாக நீர் உண்ணுகிறேன்
தற்காலிகமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
தற்காலிகத்திற்கு அப்பால் ஒரு இடமுண்டு
துள்ளிச்சாடிக்குதிக்க
அள்ளிச்சாடிக்களிக்க
அதுவரையில்
தற்காலிகத்தில்
இருக்கிறேன்
தற்காலிகமாக

15

ஒவ்வொரு நாளும் உங்கள் இறந்தகாலம் அறியா ஒருவர்
நீங்கள் விரும்பியோ விரும்பாமலோ
உங்கள் வாழ்க்கைக்குள்
நுழைந்து கொண்டே இருக்கிறார்
அறிந்த ஒருவர் அவ்வாறே
வெளியேறுகிறார்
இறந்தகாலத்தை எவ்வண்ணமேனும்
வேரிலிருந்து இழுத்துஎடுத்து
நுழைபவருக்குப் பூப்பூத்துக்
காண்பிக்க வேண்டும்
வெளியேறுபவர்க்கு
சருகுதிர்ந்து தெரிவிக்கவேண்டும்

16

தந்த தானியத்தை
அங்கு கொண்டுபோய் நட்டீர்கள்
அப்போதும் நீங்கள் அந்த தானியத்துக்கு
உடமஸ்தன் கிடையாது
விளைந்தது
அறுவடை செய்தீர்கள்
அப்போதும் நீங்களொன்றும்
தானியத்திற்கு உடமஸ்தன்
கிடையாது
வெந்த தானியத்தை
உண்டு திளைத்தீர்கள்
அப்போதும் தானியத்திற்கு நீங்களொன்றும்
உடமஸ்தன் கிடையாது
ஒவ்வொரு தானியமும்
முளை கீறும் சூரியன் உடைத்து
எப்போதும் தானியத்திற்கு நீங்களொன்றும் உடமஸ்தன் கிடையாது

17

குழந்தையை அழைத்து
கடைவீதிக்கு வந்த அப்பன்
முதலில் இல்லாததை கேட்டான்
ஆனால் என்னிடம்
அது இருந்தது
இருக்கிறது என்றேன்

இருந்ததில் இல்லாததைக் கேட்டான்
ஒவ்வொன்றாக எடுத்து
முன் வைத்தேன்
எல்லாமே இருந்தது

இருப்பதில் இல்லாதது ஒன்றுண்டா
என்றான் மீண்டும்
உண்டு என்றேன்

இருப்பதில் இல்லாத ஒன்று
வைத்துக் கொள்ளச் சொல்லி
குழந்தையைத் திருப்பித் தந்தேன்
பேரம் பேசும் போது
என் தோளின் மீதேறி நின்று
தந்தையைக்
கவனித்துக் கொண்டிருந்த
குழந்தையை


18

எட்டு மரப்பலகைகள் கொண்ட
கடை நீலவேணி அக்காவுடையது
வெற்றிலை பாக்கு ,சர்பத் ,தேன்குழல் மிட்டாய்கள்
குளிர்ந்த பானை மோர்
சுற்றுப் பீடிகள்
சுருட்டு வெம்மை

சாலை சிறுக சிறுக உயர்ந்ததில்
திண்ணை இரண்டடி பள்ளத்தில்
மாட்டிக் கொண்டது
நீலவேணி அக்கா
பாதி உயரத்தில்
நின்று தெரிகிறாள்

அவள் காலடிகள்
மூன்று தலைமுறைகளுக்கு
முந்தைய காலத்தில்
புதையுண்டிருக்கிறது

கடைக்குள் உள்ள காலம்
வெளியில் இல்லை
வெளியில் உள்ள காலத்தை
உள்ளே அனுப்ப
வழிகள் ஏதுமில்லை

நீலவேணி அக்காவாக இருக்கும் போது
அந்த கடைக்குள்
நுழைந்தாள்
அவள் முழு உயரம் அறிந்திருந்த
காலம் அது

இந்த பக்கம் இருந்தால்
அந்த பக்கத்திற்குள் நுழைய முடியாது
அந்தப் பக்கமிருந்தாலோ
இந்த பக்கத்திற்கு
வாசல்கள் இல்லை
இருவேறு காலங்களுக்கு மத்தியில்
வெறுமனே
எட்டு பலகைகள்


19


நானொரு கடை நடத்திக் கொண்டிருக்கிறேன்
காலையில் பொருட்களையெல்லாம்
எடுத்து திண்ணையில்
வைப்பேன்
வருவதற்கு முன்பாக
சில மூப்புகள்
அமர்ந்து பேசிக் கொண்டிருப்பார்கள்
வம்பு
பால்யம்
நேற்று இன்று
எல்லாம்

மாலையில் விற்றதுபோக
விற்காததுபோக
அனைத்தையும்
உள்ளே
எடுத்து வைத்துவிடுவேன்

அதன்பின்னர்
நான்கைந்து நாய்கள்
அந்த திண்ணையை
எடுத்துக் கொள்வார்கள்
அந்த கடை அவர்களுடையது
என்றுதான்
அவர்கள் நினைக்கிறார்கள்

நாய்கள் வராதவொரு நாளில்
ஒரு குரங்கு
வந்திருந்தது என கேள்விப்பட்டேன்
விருந்தினராக
வந்தது அது

எல்லாவற்றுக்கும் சேர்த்துத்தான்
நான் வாடகை
செலுத்திக் கொண்டிருக்கிறேன்
இரவில் சில பறவைகள்
கூரையில் வந்தமர்ந்து செல்லுமாயின்
நான் தருகிற வாடகைக்கு
கணக்கு சரியாக 
இருக்கும்

20

ஒரு காலத்தில் உன்னைப் போலவே
இருந்திருக்கிறேன்
முதலமைச்சருக்கு ஆலோசனை
சொல்லியிருக்கிறேன்
ப்ரதான் மந்த்ரியை எதிர்த்திருக்கிறேன்
சாதுக்களிடம் சண்டையிட்டிருக்கிறேன்
தெய்வங்களையெல்லாம்
நிந்தித்திருக்கிறேன்
போவோர் வருவோரையெல்லாம்
தாக்கியிருக்கிறேன்
அடியாரை அடித்திருக்கிறேன்
உடன் ஒருவன் இருந்தால் போதும்
சாமியைத் தோள் எட்டி
மிதித்திருக்கிறேன்
எதற்கும் முயற்சித்ததில்லை
எல்லாவற்றுக்கும் ஆசைப்பட்டிருக்கிறேன்
ஒரு காலத்திய
கலகக்கடவுள் நானிருந்த இடத்தில்
நீ வந்து முளைத்திருக்கிறாய்

அப்படியே உனக்கு என் வாலிப முகம்
அதே ஆற்றல்
அதனால்தான் எனக்கு பயமாக இருக்கிறது

முற்போக்கு கலகமுகம் கழுவி
வீட்டு நெல்லி மரத்திற்கு
தண்ணீர் விடுவதிலிருந்தே தொடங்கி
முதலில் இருந்து
புறப்பட்டு களத்திற்கு வந்து சேர
நான்கு கடல் தூரம் இருக்கிறது
தாங்குவாயா தம்பி?

21

என்னுடைய அப்பைய்யா

என் வழியாகத்தான்
பறவைக்குரல்களைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்
எதன் குரல் எதுவென அவர் பிரித்துக் கொள்வார்
அவருக்கு அது தெரியும்
என்னுடைய அப்பம்மை பொங்கி எழும்
கடல் நாதம் காண்பது என் வழியாகவே...
அறிந்து கொண்டிருக்கிறாள்
அது கேட்பதல்ல
காண்பது
என்னுடைய தெய்வங்கள்
என்னுடைய நாவிலிருந்து
பதனீரின் கருப்பட்டியின் ருசியை
எடுத்துக் கொள்கின்றன
என்னுடைய மூச்சை இழுத்து எடுத்து
அமரர் மேடைக்குள்
அனுப்பிக் கொண்டிருக்கிறேன்
என்னுடைய அன்னை
சுவாசித்துக் கொண்டிருக்கிறாள்
ஒரு காலத்திற்குள்ளிருந்து வேறொரு காலத்திற்குள்
தானியங்களை நீட்டும்
நீள் அலகு என்னுடையது

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"