கள் வேறு கலயம் வேறு அல்லவா ?




எல்லாரிடமும்
அடிவாங்கி உதைவாங்கி
முடிவில்
பந்து போலாகிவிட்டார்
நான்
சொல்கிற
விற்பனை பிரதிநிதி
அங்கு உதைத்தால் அங்கு ஓடவேண்டும்
இங்கு உதைத்தால் இங்கு ஓடவேண்டும்
நான் உதைத்தால் இங்கும் அங்கும் ஓடவேண்டும்
அவ்வளவு நெகிழும்
தன்மை
கூடி வந்திற்று
சில இடைவெளிகளில்
நின்று
மேலும் கீழுமாக
துள்ளி ஆடுகிறார் பாருங்கள்
அது மட்டும்
அவரே ஆடுவதுதான்

#

கடற்கரையில்
தென்னைகளின் மறைவினூடாக
கடந்து செல்கையில்
சைட் அடிப்பது போல
கடல் பார்த்து வந்தேன்
இந்த கண்களால் தானே
அது
நிகழ்ந்தது ?
உடல் திளைத்து தித்தித்தது
இன்றைய கடல் தேவலோகத்துக் கடல்
கண்டது தேவலோகத்துக் கண்கள்
சின்னசிறிய குறு முலைபோல
கடல் அலை எழும்பிச் சாட
சின்னஞ்சிறிய கண்களால்
நிகழ்ந்தது
ஒரு
அற்புதம்
தேவலோகம்
எங்கேயோ அல்ல
இங்கேதான்
இருப்பு

#

குழந்தையை அழைத்து
கடைவீதிக்கு வந்த அப்பன்
முதலில் இல்லாததை கேட்டான்
ஆனால் என்னிடம்
அது இருந்தது
இருக்கிறது என்றேன்
இருந்ததில் இல்லாததைக் கேட்டான்
ஒவ்வொன்றாக எடுத்து
முன் வைத்தேன்
எல்லாமே இருந்தது
இருப்பதில் இல்லாதது ஒன்றுண்டா
என்றான் மீண்டும்
உண்டு என்றேன்
இருப்பதில் இல்லாத ஒன்று
வைத்துக் கொள்ளச் சொல்லி
குழந்தையைத் திருப்பித் தந்தேன்
பேரம் பேசும் போது
என் தோளின் மீதெறி நின்று
தந்தையைக்
கவனித்துக் கொண்டிருந்த
குழந்தையை

#

வழக்கத்திற்கு மாறான ஒன்றும்
இந்தக் கடை வீதியில் இல்லை
வழக்கத்தைக் காட்டிலும்
குறைவே
என்றாலும் நெடுநாட்களுக்குப் பிறகு
பார்த்துக் கொண்டிருக்கிறேன்
எவ்வளவு பேரழகு
மயங்கும் இளவெயில்
அதனுள் அடங்கும்
மனித நடமாட்டம்

என்னுடைய வீதிதான்
இதில்தான் நாட்பகலாக
புழங்குகிறேன்
இப்பொழுது வினோதமாக இருக்கிறது

என்னுடையது போலுமில்லையோ
இது ?


 #

என்னுடைய பாவத்தை

நேரடியாக பார்த்தவன்
கடந்து செல்கிறான்
ஒருகணம் மீண்டும் அந்த பாவத்தை
என் முகத்தில் தேடுகிறான்
அதனைப் பழிக்க நினைக்கிறான்
வடிவமுறா சொற்களால் அதனைத்
திரட்ட முயல்கிறான்
அடியாழத்தில் இருக்கும் அது
புழுவென
மேற்பரப்பிற்கு
மீண்டும் ஒருமுறை எழுந்து
தேனாய் இனிக்கிறது

#

ஆளில்லா வீதிக்கு
காவலுக்கு நிற்கிறாள் போலிஸ்காரி
மழைச்சாரல் விழத் தொடங்குகிறது
மழைக்கு காவல் நிற்கிறாள் போலிஸ்காரி
சாலைபெருகி நீர் உருளுகிறது
உருளும் நீருக்குக் காவல் செய்கிறாள் போலிஸ்காரி
பணி முடிந்து வீட்டிற்குச் செல்கிறாள்
ஒரு நாளும் இல்லாமல் அவள்
எடுத்து வந்திருந்த
ஆளில்லாத வீதிக்கு
வீட்டில்
அமர இடம் கொடுக்கிறாள்
போலிஸ்காரி
பணிக்குத் திரும்புகிறாள் போலிஸ்காரி
மறுநாளில்
அவளை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது
ஆளில்லா வீதி
நாற்காலியில் அமர்கிறாள்
நேற்றைய மழையை கோடுகிழித்து
வரையத் தொடங்குகின்றன
கால்கள்
ஆளில்லாத வீதியில்
ஆட்கள் இல்லை
அவ்வளவுதான் விஷயம்

#

அவளிடம் கண்ட தெய்வம்
எங்கிருந்தது?
அவளிடம் அல்லாது அது புறத்திலும் பெருக வாய்ப்புண்டா?
அதனை எப்படி அழைப்பது?
அவளைத் தழுவித் தழுவி அடைவது அல்லாது பிறிதொரு மார்க்கம் அதற்கு உண்டா?
தழுவாத பொழுதில் அது எங்கிருக்கும்?
அது நீங்கிப் போன பின்
அவள் நிற்பது
அது விட்டுச் செல்லும் வெற்றிடமா
இல்லை
வடுவா?
பெண்ணிடம் இருந்து தெய்வத்தை
எடுத்து கொள்வதை
அவள் எப்படி புரிந்து கொள்வாள்?
கலயம் வேறு
கள் வேறு
அல்லவா?


Comments

  1. சிறந்த கவிதைகள் ...அண்ணா..குறிப்பாக இரண்டாவது கவிதையை மிகவும் ரசித்தேன்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"