நாடார்களின் முத்தாரம்மை வழிபாடு

நாடார்களின் முத்தாரம்மை வழிபாடு



 

குமரிமாவட்ட நாடார்கள் முத்தாரம்மன் கோயில்கள் வழியாகவே ஊர் நிர்வாகம் என்கிற அமைப்பைக் கண்டடைந்தார்கள்.ஏகதேசமாக ஊர் நிர்வாகமும் முத்தாரம்மன் வழிபாடும் ஒரே சமயத்தில் நாடார்களிடம் தோற்றம் கொண்டவை.எதுவானாலும் ஊர் கூடி முடிவெடுப்பது என்கிற முறை உருவானது.ஊர் முடிவுகளுக்கு அனைவரும் கட்டுப்படுவது என்று ஆனது.தனிமுடிவுகளுக்கும் கூடி எடுக்கிற முடிவுகளுக்கும் அதிசயிக்கத் தக்கவிதத்தில் எவ்வளவு வேறுபாடுகள் உண்டென்பதை எகதேசம் அனைத்து நாடார்களும் அறிந்து கொண்டார்கள்

வேறு மாவட்டங்களில் கடைபிடிக்கப்பட்ட நாட்டாமை முறைகளுக்கும் இதற்கும் தொடர்பில்லை.ஒருவிதத்தில் சொன்னால் நாட்டாமை முறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பு இது என்று சொல்லலாம்.பணம் ,அதிகாரம் போன்றவற்றின் செல்வாக்கிலிருந்து விடுபட்டு, மக்களில் பெரும்பான்மையினரின் விருப்பபடி ஊர் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டார்கள்.

தொல்குடிச் சடங்குகள் மட்டுமே ஒரு சமுகத்திற்கு போதுமானதல்ல என்கிற கூட்டுணர்ச்சியின் விளைவாக அடுத்த கட்டத்திற்குள் நாடார்கள் நகர்ந்தார்கள். ஊர் அம்மன் கோயில்கள் உருவாக்கம் அதற்கு வழி செய்தது.

தொல்குடிச் சடங்குகளின் தொடர்ச்சியாக ,அதனைக் கைவிடாமலும் அதே சமயத்தில் சைவ உணவு வழிபாடாகவும் அம்மன் வழிபாடு அமைந்தது.முத்தாரம்மன் ஆலயங்களில் பலி ஏற்பில்லை.தொல்குடிச் சடங்குகளால் மட்டுமே தங்களைக் காத்துக் கொள்ளுதல் இயலாது என்பதைக் கண்கூடாக அறிந்து கொண்ட பின்னரே அம்மன் வழிபாடு நாடார்களிடம் தன்னெழுச்சியாக உருவானது.

அம்மன் கோயில்களில் பூசை செய்வதற்கென்று புரோகிதர்கள் இல்லை.அம்மன் வழிபாடு என்பது சமூகச் சடங்குகளுக்குரியது .ஊர் நிர்வாகம் ஒன்று கூடவும்,ஒருமித்த கருத்தை,செயலை உருவாக்கும் நிமித்தமானது.பழையவற்றை மறுத்தலும் இல்லை.புதியவற்றை விடுதலும் இல்லை.அதற்கு முந்தைய தொல்குடி சடங்கு முறைகள் முழுவதுமாக பழையவற்றால் ஆனவை

ஏராளம் அம்மன் ஆலயங்கள்.நுட்பமான வேலைப்பாடுகள் ,சுவரோவியங்கள் கொண்ட அம்மன் ஆலயங்கள் என குமரிமாவட்டம் முழுவதிலும் தோற்றம் கண்டன.பல நூறாண்டுகளாக திருவிதாகூர் அரசு உருவாக்கிய ஆலயங்களைக் காட்டிலும் ,முன்னூறு ஆண்டுகளுக்குள் உருவான அம்மன் ஆலயங்கள் அதிகமானவை. சுவரோவியங்களின் வண்ணங்களுக்கும் ,வண்ணங்கள் குன்றாதிருக்கவும் முலிகைச் சாறு பயன்படுத்தபட்டது. ஊர் வைத்தியர்கள் இந்த சாறு செய்து தந்தார்கள்.ஆசாரிகள்,விவசாயிகள்,வைத்தியர்கள்,கொத்தனார்கள்,வில்லிசைக் கலைஞர்கள்,மாட்டுவண்டி ஒட்டுனர்கள்,சிறு வியாபாரிகள் என்று சமுகம் விரிவடைந்தது.

காட்டை வெட்டிச் செய்த விவசாயம் ஒருபுறம் .ஓட்டுவீடுகள் கட்டிக் கொள்ள பெற்ற அனுமதியின் தொடர்ச்சியாக புதிதாக ஏராளமான நாலுகெட்டு வீடுகள் வந்தன.காடு திருத்தி செய்யப்பட்ட ஒவ்வொரு தோப்புகளுக்கு மத்தியிலும் ஒரு பெரிய நாலுகெட்டு வீடு உருவாயிற்று.தோப்புகள் ,அதற்கு மத்தியில் ஓட்டு வீடுகள் .இந்து நாடார்கள் குடியிருப்புகள் எங்குமே நகரக் குடியிருப்புகளின் வடிவம் கொண்டவை அல்ல.இன்றுவரையில் இல்லை.அவை தோப்புகள்,தோட்டங்களாக கொல்லைகளாக அமைந்தவை.

வீட்டிள்ளவர்கள் போக அன்னியர்கள் ,உறவினர்கள் இருபதுபேருக்கும் அதிகமாக தங்கும் வண்ணம் அமைக்கப்பட்ட நாலுகெட்டு வீடுகள் இவை.பல வீடுகளில் போர்தொழில் ரகசியமாக நடைபெறுவது போல ஜன நடமாட்டம். சொந்தமாக கிணறுகள் ஒவ்வொரு வீட்டிலும் இருந்தது,அதில் எப்போதும் யாரேனும் ஒருவர் நீரிறைத்துக் கொண்டு நிற்கும் சப்தம்.குளிக்கும், நீர் ஒழுகிப் பாயும் அனக்கங்கள்.நள்ளிரவுகளில் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து இந்த நீரிறைக்கும் சப்தம் இல்லாமலாகும்.

காலையில் அதிபுலரியிலேயே மீண்டும் நீரிறைக்கும் சப்தம் மெதுவாக எழும்பத் தொடங்கி விரைவு படத் தொடங்கும்.இரண்டு கிலோமீட்டர் தொலைவிற்குள் ஒரு வீட்டில் சதா இயங்கும் ஏற்றமிறைக்கும் துலாக் கிணறுகள் இருந்தன.இந்து நாடார்கள் வீடுகளில் திண்ணைகள் இல்லாத வீடுகள் குறைவு.மாறாக புதிதாக உருவான கிறிஸ்தவர்கள் வீடுகளில் திண்ணைகள் அரிது.அவை முன்பக்கமிருந்தே மூடியிருப்பது போன்ற அமைப்பு கொண்டது.வீட்டை வைத்தே அவர்கள் யார் என்பதை அறிந்து கொள்ளமுடியும்.கிறிஸ்தவர்கள் ஆரம்பம் முதலே ஒரு ரகசிய சமூகமாகவே இருந்துவரத் தொடங்கினார்கள்.

நாலுகெட்டு வீடுகள் உருவானபிறகு முன்னைப் போல மாடம்பி மாரும்,நாயர் படைகளும் வீடு கேறி வர முடியவில்லை.வீடு என்பது மிக முக்கியமானது,அதுவொரு அதிகாரம்,எழுச்சி என்கிற எண்ணம் இப்போதுவரையில் நாடார்களிடம் இருக்கிறது.அது இப்போது உருவான எண்ணமில்லை.எப்போதோ சில தலைமுறைகளுக்கு முன்பாக திடீர்திடீரென கொளுத்தப்பட்ட வடலிக்கூரைகளின் தீஜுவாலைகளின் நிழலில் இருந்து உதயமானது.வீடு உருவான பின்னரே பலமுள்ளவன் ,பலமில்லாதவனின் பொருட்களை எதுவென்றாலும் எடுத்துக் கொள்ள முடியும் என்கிற முறை மாறிற்று

அவசரமாக பெரிய வீடுகளைக் கட்டியமர்ந்தார்கள்,தோப்புகளில் சாய்வு நாற்காலிகளைப் போட்டுக் கொண்டார்கள்.ஊர் கூடி அன்னம் சமைத்துண்டார்கள்.வணிக நெறிகளுக்குள் நுழைந்தார்கள்.முதலில் தாங்கள் உண்டாக்கிய பொருட்களை விற்கத் தொடங்கினார்கள்.உண்டாகாதவற்றை அதன் மூலம் வாங்கத் தொடங்கினார்கள்.

இத்தனைக்கும் காடுகளுக்குள்ளிருந்து வெளிவந்தவர்கள் தான்.வீடு கட்டிக் கொள்வதற்காகவே ஒருவர் முழு வாழ்நாளை பலி கொடுக்கிறார்.அடுத்த தலைமுறையில் வருபவன் அதில் அமர்ந்து கல்வி கற்கிறான்.எதுவெல்லாம் இயலாத துறைகள் என்கிறார்களோ அனைத்தையும் வென்றெடுத்து தன் மூதாதைகளின் பலிபீடத்தில் காணிக்கை செய்கிறார்கள்

2

ஒவ்வொரு தொன்மமும் ஏராளம் அகமடிப்புகளால் ஆனது.இந்த அகமடிப்புகளெல்லாம் பல்வேறு காலங்களை உள்ளடக்கியவை. நாமதன் மடியில் மெய்மறக்கிறோம்.அவை நம்மைச் சுண்டி இழுக்கின்றன.நாம் இவற்றை அண்டவேண்டியதில்லை என நினைத்தாலும் சதா அவை நம்மை அண்டியே நிற்கின்றன.அவை உயிருள்ளவை என்பதை உணர்த்திக் கொண்டே இருக்கின்றன.நம்மிடமிருக்கும் அகம் இதன் சிறு துண்டு.

இதனை வைத்து அதனை அளவிட முடிவதில்லை.நாம் அறிவதெல்லாம் நம்முடைய கற்பனைகளை மட்டுமே .இதுவொன்றே நமக்கு சாத்தியப்பட்டது.இது எவ்வளவு ஆழத்திற்கு செல்லும் ? தெரியாது.இறந்த காலத்திற்குள் எவ்வளவு செல்லும் என்பது தெரியாது,அதுபோல எதிர்காலத்திற்குள் எவ்வளவு செல்லும் என்பதும் தெரியாது.இந்த இறந்தகாலம் நிகழ்காலம் எதிர்காலம் என்பதெல்லாம் என்ன ? நாம் வகுத்துக் கொண்டிருக்கிறோம்.இப்படி யாருமே ஒரு தார்ரோடு போட்டு வைக்கவில்லை.அது எங்கிருந்தோ தொடங்கி எங்கேயோ செல்வதுபோல.அதுவொரு அலை.காலமற்ற இருப்பு.சேகரமாகி சேகரமாகி ஒரு வற்றாத இடம் நோக்கி சென்று கொண்டிருப்பது.ஆனால் அது நினைப்பது போல முன்னோக்கிய பயணம் அல்ல.ஏற்கனவே ஸ்திரமாக இருக்கும் ஒரு இடத்திற்கு ஸ்திரமற்ற இடத்திலிருந்து நகரும் விதம் அது.

முத்தாரம்மன் வழிபாடு குமரி மாவட்ட நாடார்களிடம் உருவாகும் போது அதற்கு முன்னர் அகல் ஏற்றப்பட்டிருந்த அத்தனை தொன்மங்களும் வந்து இதில் சேர்ந்து கொண்டன.இந்த இணைவு கச்சிதமானது.இதன் அசைவுகள் ஆழுள்ளத்திற்குள் நிகழக் கூடியவை.இவை எங்கே பிடித்து வைத்திருக்கின்றன என்பதை அறிவதற்கில்லை.

நாம் அசைந்தாலே இந்த தொன்மங்களின் தொங்கு மணிச் சதைகள் அத்தனையும் ஆடும் .தென் பிராந்தியத்தில் மக்களுக்கு தங்கள் பாரம்பரிய முறைகள் வழிவழியாகவே தெரிந்திருந்தது.ஏனெனில் முதுகில் மூதாதைகளும் அவர்களின் காடும் அமர்ந்து வருகின்றன.அது புதியதொன்றுடன் இணைந்து சரியென்று பட்டால் மாத்திரமே மனம் சரியென்று உணரும்.இல்லையெனில் இல்லைதான் ஒன்றும் செய்வதற்கில்லை. காட்டிலிருந்து உதயமானவர்களிடம் பல நூறாண்டுகால காடு இருக்கிறது.

முத்தாரம்மன் வழிபாடு நாடார்களிடம் வந்து சேர்ந்த பிற்பாடு அவர்கள் சற்றே காட்டு தெய்வங்களிடமிருந்து ஆசுவாசப்பட்டார்கள்.முத்தாரம்மன் வழிபாடு வந்த பிறகு முதல் விடுதலை ஏற்பட்டது என்பதே உண்மை.காட்டு தெய்வங்களுக்கு வைத்துக்கொடுத்தால் ,அகலிட்டால் அவை நம்மை விடாது கேட்டுக் கொண்டேயிருக்கும் என்பதை அறிந்தார்கள்.செய்யவும் வேண்டும்,அதேசமயம் காட்டிடமிருந்து கொஞ்சம் தூரம் நின்று இவற்றைச் செய்ய வேண்டும்.காட்டில் இருந்து விலகத் தெரியாவிடில் துன்பம்.காடும்,காட்டு நிலங்களும், காட்டு தெய்வங்களும் குணங்களைக் குறைக்கும்.அடிப்படை குணங்களுக்கு அருகிலேயே கொண்டு நிறுத்தும்

எது உங்களுடையதாக நிரம்பியுள்ளதோ அதிலிருந்து விலகுதலே பாடம்.அடிப்படை பண்பு நிரம்பியிருக்கும்.காடு உங்களிடம் நிரம்பி நின்றால் அதிலிருந்து விலகிவிடவேண்டும்.விலகி விலகி ஓடிவிடவேண்டும்.பனங்கிழங்கும்,பதனீரும் ,பனம்பழமும் தந்து உன்னை அதன் ருசி புரியாமல் கொல்லும்.சரிதான்.சென்றுவிடவேண்டும்.சென்று திரும்பி வந்தால் தான் பனங்கிழங்கு அமிர்தம்,பதனீர் தேவர்களின் ஞானப்பால்,பனம்பழம் பரவெளியின் தித்திப்பு என்பதெல்லாம் விளங்கும்.

தீனிப்பண்டங்களை எப்போதும் கேட்டுக் கொண்டிருப்பதை நிறுத்தினால் மட்டுமே,வடிவு பெற முடியும் .ஆனால் மூளையில் பதிந்திருக்கும் ஞானமெல்லாம் காடு தந்ததுதான் சந்தேகமே வேண்டாம்.நான் தீனிப் பண்டம் என்று சொல்வதில் பாலியல் உட்பட அடக்கம்.மிகுந்த மனசோர்வுக்குத் தள்ளப்பட்டவர்களே அதிக பாலுறவிற்கு ஏங்குகிறார்கள்.மற்றபடி புத்துணர்ச்சி பெறுவதற்கு மிதமான பாலுறவே போதுமானது.அதிக இச்சை படுக்கையை விட்டு எழும்பவே சம்மதிப்பதில்லை. கீழே கீழே என்று செல்ல வைக்கும்.ஏனெனில் உங்கள் பாலுணர்ச்சியின் ஒரு பகுதியையே நீங்கள் உங்கள் பணிகளுக்கு கொடுத்தாக வேண்டும்.உங்கள் படைப்பாற்றலுக்குக் கொடுத்தாக வேண்டும் .முழுவதும் இனிப்பு பண்டங்களையே சுற்றி வருவீர்களாயின் சிறைபட்டுக் கிடப்பீர்கள்.அடிப்படைப் பண்பு என்பது முழுவதும் தித்திப்பது.தொல் சடங்குகள் உயர் நெறிகளை ஏங்கி நில்லாமல் மாற்றம் இல்லை

3

எங்கள் பகுதிகளில் முத்தாரம்மனுக்கு பங்குனியில் கொடைவரும்.கோயில்கள் அத்தனையிலும் கொடை நடக்கும்.ஒன்று முடிந்தால் ஒன்று,ஒன்று முடிந்தால் ஒன்று என முத்தாரம்மை ஒரு நடையில் ஏறியிறங்கி மற்றொன்று என அலைந்து திரிவாள்.

நான்கு குறைப்பிள்ளைகளைப் பெற்ற தாய்,நான்கின் நடைகளுக்கும் ஏறி இறங்குவது போல .சித்திரை வரையில் இது தொடரும்

முத்தாரம்மையிடம் தாய்மையே அதிகம்.பிற தன்மைகள் உண்டு.ஆனால் ஓங்கி நிற்பது தாய்மையே.தன் குழந்தையர்களின் பொருட்டு மன்னிப்பு கேட்கும் தாயின் அவஸ்தை நிரம்பியவள்.காப்பது மட்டுமே இலக்கு,எப்படியிருந்தாலும் காப்பதொன்றே குறி.

உன் குழந்தையர் இன்னின்ன மாதிரி இருக்கிறார்களே ! நீ சொல்லி விளக்குவதில்லையா ?என்று நாராயணனே ,சிவனே வந்து கேட்டாலும் என்ன செய்வது சாமி..குழந்தைகள் அப்படித்தான் இருக்கிறார்கள் என்று இரஞ்சுவாள்.பெருந்தெய்வங்களுக்கும் ஒரு தாயின் உண்மையான இரஞ்சுதலுக்கு முன்பாகப் பேச்சில்லை.தாய்மை அவ்வளவு குணம் கொண்டது.

ஊரே கொடையில் சுட்டுக் கிடக்கும்.மங்கி இருள் சூழ்ந்து நெடு நேரம் ஆனபின்னாலும் தரை மணல் கொதிக்கும்.மாலை வேளை ஊருணிகள் வென்னீர் குளியலுக்கு ஒப்பானவை.நள்ளிரவில் அனல்காற்று குறைந்து அதனால் இதம் உருவாகும் என்றாலும் காற்றின் அசைவே இராது.இப்படியான கோடையில் அவள் எல்லா ஊர் மக்களையும் அரவணைக்க வேண்டும்.அதனையும் நேருக்கு நேராக வந்து செய்ய வேண்டும்.தன்மை குறைவான ,குணக் கோளாறுகள் நிரம்பிய மக்களுக்கு தொண்டாற்றுவது எனில் அது எளிமையான காரியமாக இருக்க முடியுமா என்ன ?

முத்தாரம்மையின் கோட்டைகள் பெரும்பாலும் குளிர் அமைப்பு கொண்டவை.மர அளிகளின் பின்புறத்தே மூன்று பீடங்கள் கொண்டவள் அவள்.ஒருபக்கம் மாரியம்மை,மறுபுறம் மஹாவிஷ்ணு.பெருமாள் சாமி என்று அவர் அறியப்படுகிற ஊர்களும் இருக்கின்றன.இப்போது நேரடியாக அய்யா வைகுண்டர் என்றே அறியப்படுகிற ஊர்களும் இருக்கின்றன.தவிர சுடலை ,செங்கிடாகாரன் என பலரும் இருப்பார்கள்.முத்தாரம்மன் கோயிலில் இசக்கி இல்லை.ஓடு வேய்ந்த நீள் கொட்டாலை இருக்கும்.மிகவும் அழகான அமைப்புகள் இவை.ஒவ்வொரு இடத்திலும் சிற்சில மாறுபாடுகள் உண்டு என்றாலும் பொதுவான அமைப்பு மிகவும் அழகானது.தண்மை நிரம்பியது.

கொடைகளின் ஒரு பகுதி சண்டைதான்.கடந்த பத்தாண்டுகளில் இது குறைந்திருக்கிறது.மற்றபடி எதற்கென்றில்லாமல் சண்டையிட்டுக் கொண்டிருப்பார்கள்.ஒருவகையில் மனஸ்தாபங்கள் அத்தனையையும் வெளியில் தள்ளி பூட்டி கதவடைத்துக் கொள்வதற்கும் சேர்த்தே கொடை.கூட்டமாக வாழும்போது நிறை குறைகள் நிறைய வந்து சேரும்.அவனை வீழ்த்தவேண்டும்,இவனை பாடம் கற்பிக்க வேண்டும் என

மனிதன் விலகுவதற்கு வருங்காலங்களில் தான் படித்தான்.பத்து வயது வரையில் பால் குடித்தவன் தாயை எப்படி விலகுவான் ? பத்து வயதுவரை என்றால் அவளை கொல்லும் அளவிற்கு உடல் வளர்ந்திருக்கும்.அவள் விலக்கி எறிந்தால் மீண்டும் மீண்டும் முலையில் வந்து ஒட்டிக் கொள்வான்.எப்படி பிரிப்பது ? நீ வேறு அவள் வேறு என்பதை எப்படி அறிய வைப்பது ?பகுதி விலங்காய் இருக்கும் பிள்ளைகள் இவர்கள்.பதினாறில் திருமணம் முடித்து இரண்டு தலைப்பிள்ளைகளோடு முத்தாரம்மையின் முன்பாக வந்து நிற்பாள்.தாக்கும் குணம் ஒன்றே அவளிடம் முந்தி நிற்கும். யாரைத் தாக்க நினைக்கிறாள் என்ற தெளிவு இராது.சமயங்களில் அவள் முத்தாரம்மையையும் தாக்குவாள்.

இப்படி பல நூறாண்டுகள் கல்லடி பட்டு தெளிந்து ,ஓடையில் விழுந்து எழுந்து தேறி இப்போது வாகனமேறி வலம் வருபவளே முகப் பொலிவு பூணும் முத்தாரம்மை,முன்னர் காலங்களில் அவள் மீது வியர்வைப் பிசுக்கு.அண்டி நாற்றம்.பத நீர் அடுப்பின் வாசம்.பிள்ளைகளுக்காக எல்லா துயரமும் அடைந்து ,அதனை துயரமாகக் கருதாது காத்து கரைசேர்ப்பித்தவள் அவள்.அப்படி யாராலையாவது இயலுமா?முடிந்திருக்கிறது.இத்தனைக்கும் அடித்தட்டில் இருந்து வருகிறாள் .ஒரு குழந்தையை அவள் விரட்டியதில்லை.கொன்றதில்லை.கொல்லத் துணிந்தோரிடம் கெஞ்சிக் கூத்தாடியேனும் மீட்பாள்.பிள்ளைகள் அவளுக்கு கருப்பட்டி போல.எது செய்தாலும் இனிப்பே.தித்திப்பே.

நாடார் சமுகத்தில் இரண்டு தலைமுறைக்கு முன்பு பிறந்த தாய்மார்கள் என்றில்லை.எல்லாபெண்டிருமே முத்தாரம்மையின் குணத்தையே கொண்டிருந்தார்கள்.சிறு குழந்தைக்கும் முத்தாரம்மையின் குணம்.கற்பிலும் முத்தாரம்மையின் கற்பு.அது வினோதமானது,ஆச்சரியமூட்டுவது.நவீன மனிதன் நம்ப கடினமானது.

4

பெரும்பாலும் நாடார்கள் கண்டடைந்த சமய நெறிகள் காட்டிலிருந்து பெற்ற ஞானத்தின் நீட்சியாக எழக் கூடியவை.கீழிருந்து மேலாக எழக் கூடியவை.மண்ணிலிருந்து வானம் நோக்கி.பெருந்தெய்வங்களும் பெரு நெறிகளும் பின்னர் வந்து இதில் இணையும் .

அதில் எந்த நெறி வேண்டுமாயினும் வரலாம்.சிவனாக,விஷ்ணுவாக ,அய்யா வைகுண்டராக யார் வேண்டுமாயினும் வரலாம்.கிறிஸ்தவமும் மேல் நெறியாகவே வந்தது.அப்படி வருவதற்காகவே அது இந்து உயர் நெறிகளைத் தாக்கிற்று. எப்படியிருப்பினும்
உயர்நெறி காட்டிலிருந்தே பெற்ற ஞானத்துடன் சரியாக பொருந்த வேண்டும்.இல்லையெனின் முழு ஏற்பிற்கு வாய்ப்பில்லை.

வணங்கும் தெய்வம் ஒரு பண்பைத் தரும்.முத்தாரம்மை இரண்டு தலைமுறைகளுக்கு முன்பாக தனது தாய்மைப் பண்பை,அதாவது பெருந்தாய்மை என்னும் பண்பை தனது பெண்டிர் அனைவருக்கும் தந்தாள்.கூட்டுக் குடும்பங்கள் அவள் கருணை மிகுந்த வயிற்றால் பாதுகாக்கப் பட்டன.சோறு இல்லை என்ற வார்த்தை அவளிடமிருந்து வராது.எத்தனைபேர் வந்தாலும் சரி தான்.இருக்கச் சொல்லிவிட்டுப் பொங்கி வடித்து விடுவாள்.அதற்கும் அவசியம் இருக்காது .இருக்கும்,எப்படியேனும் இருக்கும்.பழையதில் புதிது,புதியதில் பழையது இப்படி கலந்து உடனடியாக கொடுக்க முத்தாரம்மையிடம் எப்போதும் இருக்கும்.வைத்திருப்பாள்.அவள் மீண்டும் அடுப்பு கூட்டி அண்டை பற்ற வைத்து,பேசிக் கொண்டிருப்பதற்குள் வடிக்கிறாள் என்றால் அதற்கு முன்பாக ஒருபெருங்கூட்டம் வந்து சென்றிருக்கிறார்கள் என்று பொருள்.

முத்தாரம்மை வந்திருக்கவில்லையானால் நாடார் குலமே அழிந்திருக்கும். இருந்திருக்காது.உடைந்திருக்கும்.அண்ணன் தம்பி பகை மூண்டு தன்படை வெட்டிச் செத்துப் போயிருப்பார்கள்.அடித்தட்டிலிருந்து எழுந்து கைபிடித்து எழுந்து வர வேண்டிய சாதியில் முத்தாரம்மை இல்லையென்றால் என்னவாகும் ?

கூட்டுக் குடும்பங்களுக்கு ,அதன் நெறிகளுக்கு சோறூட்டியவள் முத்தாரம்மை.முதலில் சீர்திருத்த கிறிஸ்தவ பெண்களிடம் தான்,அவள் இல்லாமலானாள்.அவர்கள் அவளை தங்களில் சூடிக் கொள்வதை விரும்பவும் இல்லை.அவர்களில் சுய நலன்களை முன் வைத்துக் கேள்வி கேட்கும் ஒரு பெண் தோன்றினாள்.குடும்பங்களுக்குள் கலகம் தோற்றுவித்த பெண்.இப்போது அந்த அம்மை ,முத்தாரம்மை யாரிடமும் இல்லை.ஏன் முத்தாரம்மையிடமே கூட இப்போது அந்த அம்மை இல்லை.காலம் சென்றதும் மாயம் ஆனாள்


Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்