லக்ஷ்மி மணிவண்ணன் கவிதைகள்
1
ஒரு சிறிய கடவுள்
எல்லாவற்றிலும் இருக்கிறார்
ஒவ்வொரு சிறியவற்றிலும் இருக்கிறார்
இருந்து தலை அசைக்கிறார்
சிறிய அளவுக்கு ஒவ்வொரு பெரியவற்றிலும் இருக்கிறார்
அமர்ந்து
சவாரி செய்கிறார்
அவரிடத்தே பாரபட்சமெல்லாம்
ஏதுமில்லை
அவரால் முடிந்தது
ஒரு சிறிய அளவுக்கு
எல்லாவற்றிலும் இருப்பது
2
ஒருவரை நேசிப்பதற்கு
நல்லவர் கெட்டவர் என்பதொன்றும் தேவையில்லை
ஒருவரை வெறுப்பதற்கும்
நல்லவர் கெட்டவர் என்பதொன்றும்
தேவையில்லை
எதனால் நேசிக்கிறோம்
எதனால் வெறுக்கிறோம் என்பதற்கு
எந்த துல்லியமுமில்லை
நேசிப்பவருக்குள் நேசிக்கும் சமயத்தில் நேசம் இருக்கிறது
அவ்வளவுதான்
அதற்கு முன்னும் பின்னும்
நேசம்
கனிவதற்கு
முன்னும் பின்னும்
கனிந்த நேரத்தில்
சரியாக வந்தவன் காக்கப்படுகிறான்
அமையாத நேரத்தில் வந்து
அமர்ந்தவன்
அல்லல் படுகிறான்
3
ஒரு தர்க்கம் உங்களுக்குள் உருவாகும் போது
எவரேனும் ஒருவரிடம்
பேசிக் காட்டுகிறீர்கள்
அந்த ஒருவர் வேறு யாருமில்லை
நீங்கள் தான்
அது உருவாதபோது ஏற்பட்ட இடர்
அப்போதே தீர்க்கப்பட்டு
விடுகிறது
அதற்காகத்தான்
இப்படி வெளிப்படுகிறீர்கள்
உங்களிடம் மட்டுமல்ல
உங்களைச் சுற்றியுள்ள அனைவரிடமும்
புல்பூண்டுகளிடமும்
செள் செத்தைகளிடமும்
நஞ்சுகளிடமும்
தீர்க்கப்பட்டு விடுகிறது
ஒரு இதழ் அதிகமாயிற்றென்று
எல்லோரும்
எடுத்துக் கொள்கிறார்கள்
ஒரு பல் முளைத்திற்றென்று
எல்லோரும்
எடுத்துக் கொள்கிறார்கள்
இப்போது ஏற்கனவே இருந்த இடர்
வலுவிழந்து
வலுவான ஒரு இடரை
உருவாக்குகிறது
வலுவான இடரின் மீது
அடுத்த சொல் முளைக்க வேண்டும்
இப்போது நீங்கள் மீண்டும்
உங்கள் முன்னே அமர்ந்து
உரையாடியாக வேண்டும்
தவத்தில் சொல்
மலராக
வந்து விழும் வரை
4
இரண்டு எலிகள் இரண்டு வழிகள்
தினமும் இரவில் நாலாபுறங்களிலிருந்தும்
இரண்டு எலிகள்
எங்கள் வீட்டுக்குள் நுழைகின்றன
சுற்றிச் சுற்றி நரி விளையாடுவார்கள்
சோபாவில் அமர்ந்து
மாட்டுத்தீவனம்
சாப்பிடுவார்கள்
டயனிங் டேபிளில் கொய்யாப்பழங்கள்
காலையில் எலிப்புளுக்கைகள்
விரைந்து கிடக்கும்
எப்படியெல்லாமோ அடைத்துப் பார்த்தாயிற்று
இரண்டு வழிகளில் வெளியேறுகிறார்கள் என்பதை
காத்திருந்து பார்த்தேன்
மாடித் தென்னையில் தாவிக் குதித்து கீழிறங்கி
செல்கிறார்கள் என்பதை
கேபிள் வயர் வழியே ஆகாயத்தில்
நீந்திக் கடக்கிறார்கள் என்பதை
ஆக என் வீட்டுக்குள்ளிருந்து
பிரபஞ்சத்திற்குள்
குதிக்க
இரண்டு வழிகள் இருக்கின்றன
என்பதை
கீழ் நோக்கி ஒன்று
மேல் நோக்கி ஒன்று
5
ரொம்ப நேரத்திற்கெல்லாம் நான் யாரையும் எதிர்பார்க்கவில்லை
துண்டு துண்டாக
கொஞ்சம் அழகாய் இருந்தால் போதுமானது
சில கணங்கள் தெய்வமாயிருந்தால் சந்தோஷம்
போகிற போக்கில் இயல்பாய் இருந்தால்
அந்தந்த இடத்தில்
அவ்வளவு சரியாக இருந்து கொள்கிறேன்
ஒரு பைத்தியக்காரனுக்கு துணிந்து நீ
முத்தமிட்டு திரும்புகையில்
சிறிது நேரத்திற்கு
தெய்வமாயிருந்தாய் என்பதை
அருகமர்ந்து
சொல்லித் தருகிறேன்
தேவியாய் இருக்கையில் வா
வந்தமர்
பணிவிடை செய்கிறேன்
ஒட்டுமொத்தம் எனக்கு
தேவைப்படாது
சிறுதுண்டு
நீ தெய்வமாய் எழுந்த
சிறுதுண்டு
6
வெட்ட வெளியில்
கொஞ்சம் தண்ணீர் தெளித்து
இரண்டு சுடுசெங்கல்கள் நட்டு
ஐந்து மலர்களை வைத்தால் போதும்
நிலத்தின் தெய்வம் அப்படி எழும்பி நிற்கிறது
ஞானம் வேண்டியதில்லை
கைகூப்பித் தொழுவதற்கு இரண்டு கரங்கள் மட்டும் இருந்தால்
போதுமானது
ஏன்
நானோ நீயோ கூட
தேவையில்லை
அதற்கு
அவ்வளவு எளிமை
அவ்வளவு பகட்டு
அவ்வளவு அழகு
7
ஒருவர் இறந்துபோனால்
மீதமுள்ள உலகம் அப்படியே இருக்கிறது
ஒருமாற்றமும் இல்லை
மீதமுள்ள உலகம்
அப்படியேதான் இருக்கும்
என்பதை
கொஞ்சம் முன்னதாக
அவர் தெரிந்திருந்தால்
மீதமுள்ள உலகத்தில்
அவர் நீடித்திருக்கவும் கூடும்
இன்னும் சிறிது நாட்கள்
மாதங்கள்
ஆண்டுகள்
மொத்தத்தில்
மீதமுள்ள உலகத்தில்
இருப்பவர் நாம் இல்லையா
பல்லியின் வால் போல
இழந்த உலகின் ஒருபகுதிதான்
இந்த மீதமுள்ள உலகம் இல்லையா
8
நீங்கள் பெரிய ஆள்தான்
சந்தேகமில்லை
ஆனால்
நான் பெரியாள்
நான் பெரியாள்
பெரிய ஆளாய் இருக்கத் தெரியாமல்
சின்ன ஆளாய் இருக்கிறீர்கள்
பார்த்துக் கொள்ளுங்கள்
9
அப்பா அறியாத மகள் உண்டு மகளிடம்
மகள் அறியாத அன்னை உண்டு
அன்னையிடம்
ஒன்று வெளிவரும் போது
மற்றது மூழ்கும்
ஒன்று மூழ்கும்
அப்படி ஒரு நதி
நாம் நீந்திக் கொண்டிருப்பது
பகுதி நீரில்
பகுதி தோன்றுவதும்
தெய்வம் தானே
இல்லையா?
10
தனக்கு ஒவ்வாதவர்களைப் பார்த்து தெருவில் இறங்கி
மனம் குரைக்கத் தொடங்கியது
திருப்பி அழைத்து வந்து
அதன் நாற்காலியில்
அமர வைத்தேன்
இளிக்கத் தொடங்கியது
திருப்பி அழைத்து வந்து
அதன் நாற்காலியில்
அமர வைத்தேன்
இச்சை இனாமென்று ஓடும் அதனை
திருப்பித் திருப்பி அழைத்து வந்து
அதன் நாற்காலியில்
அமர வைத்தேன்
ஒருபோதும் நாற்காலியில்
நானிருந்தேனில்லை.
11
சிறு பிராயத்தில்
காலம் நீளமாக இருந்தது
அப்பைய்யா நீளமாக இருந்தார்
சாமிகள் நீளமாக இருந்தார்கள்
நினைவுகள் நீளமாக இருந்தன
நாழி கிணறு
உயரமாக
தெரிந்தது
முதிர்ந்த பிறகு
எல்லாம் குட்டையாகி விட்டன
இன்பமும் குட்டை
துன்பமும் குட்டை
உயரமும் குட்டை
கசந்தாலும் நீளம் தூய்மையாக இருந்தது
இப்போது
இனிப்புக் குட்டையில்
நிலா விழுகையில்
உள்ளிருந்து எழுவதோ
பேய்
12
நேற்றைய நாளுக்குள்
புக விருப்பம் கொண்ட குருவி
நெடுநேரமாக ஜன்னலைத் தட்டிக்கொண்டிருக்கிறது
அலகில் ரத்தம்
உள்ளத்தில் பதற்றம்
வாவென
ஜன்னலைத் திறந்தேன்
கம்பியில் கால்கள் உதைத்து
வேண்டாமெனக் கூறி
திரும்பி இன்றைக்குள்
பறந்தது
இன்று எவ்வளவு
விரிந்தது என பார்த்துக் கொண்டிருக்கிறேன்
விரித்து விரித்து
செல்கிறது
அது
நிலவு விழுந்து பேயாய் கிளம்புகிறதென்பது எவ்வளவு கசப்பான உண்மை!
ReplyDelete