யுத்தத்தின் உடல் அறிதல் BOX

யுத்தத்தின் உடல் அறிதல்
BOX பெட்டி கதைப் புத்தகம் ஷோபாசக்தியின் நாவலை முன்வைத்து...

1
ஷோபா இதுநாள்வரையில் அமைப்புகளின் வதைப்பண்பு கொண்ட பிறிதொரு முகத்தை தெரிவிப்பவராக இருந்தார்.தேசிய இன அரசாங்கங்களின் அமைப்புகளில் இடம்பெறும் வதைகளுக்கு இணையாக இன விடுதலை அமைப்புகளின் மனிதவதைகளையும் அவரது படைப்புகள் முன்வைத்தன.ஒன்றுக்கொன்று இரண்டு தரப்புகளும் சளைத்தவை அல்ல என்பதைக் கலைஞனின் கண்கொண்டு காண வைத்தவை ஷோபாவின் படைப்புகள் .நாம் ஏற்றுக் கொண்டிருக்கிற நம்பிக்கைகளின் உள்ளேயும் இந்த வதையின் வீக்கமும் சாட்சியங்களும் துர்நாற்றங்களும் வீசிய போது நமக்கு ஒரு திகைப்பு உண்டானது.அப்படி இருக்க முடியுமா ? நமது லட்சியங்கள் புனிதமானவை அல்லவா? உன்னதம் அல்லவா ? அப்படியானால் மனிதவதையும் அடங்கியதுதானா நமது உன்னத லட்சியங்கள் ! இப்படியான கேள்விகள் அனைத்தையும் கடந்து ஷோபாவின் படைப்புகள் நமது கனவுகளின் உள்ளிருந்த உன்னதங்கள் அழுகி நாற்றமடிப்பவைதான் என்பதைக் கண்டடைந்தன .ஈவிரக்கமற்று உண்மைகளைக் கண்டடைந்த விதத்தில் அவரிடமும் ஏமாற்றத்தின் தொனி ஆரம்பகாலங்களில் வெளிப்பட்டன.உன்னத லட்சியங்களை நம்புவோருக்கு ஏற்படும் சங்கடங்கள் அவருக்கும் இருந்தவைதான்.ஒரு தேசிய இன அரசாங்கத்தின் இத்தகைய இருள்பகுதிகளில் பதற்றத்திற்கு இடமில்லை.அது பட்டவர்த்தனமாக வெளியில் அறிமுகம்
கொண்டது. உள்ளும் புறமும் அப்பட்டமாகத் தெரிந்தது. அந்த இருள்பகுதிதான் உன்னத லட்சியத்தை மற்றொரு தரப்பு ஏற்றெடுக்க நியாயத்தை வழங்கியது.கிடைத்த நியாயத்தின் பேரில் கண்டடைந்த உன்னத லட்சியங்களுக்குள்ளும் அதே வகையான துர்நாற்றம் என்பது ஷோபாவின் பொருள்.திகைப்பு.அது எதிர்தரப்பின் மனிதவதையை மட்டுமே சுட்டி நின்றுருக்குமேயானால் நமது நம்பிக்கைகளில் ஒரு சிறு பழுதும் ஏற்பட்டிருக்காது. பொது பிரக்ஞய் பாதுகாக்கப்பட்டிருக்கும். அது இருவேறுவிதமான தரப்புகளுக்கிடையில் உள்ள வேறுபாடாக கணக்கில் கொள்ளப்பட்டிருக்கும்.நமக்கும் எதிரிக்கும் வேறுபாடற்ற இடம் அவரது படைப்புகளில் ஒரேவிதமானதாகத் துலங்கி எழுச்சியடைவதே அகநெருக்கடியாக உருமாறுகிறது. இருவரின் குரூர முகத்தின் ரேகைகளும் ஒன்றுபோல இருப்பதால்தான் இடர்பாடு ஏற்படுகிறது.இவற்றை நியாயம் செய்ய எத்தகையை புனித தர்க்கமும் நம்மிடம் இல்லாதொழிகிறது.அல்லது நம்மிடம் இருந்த புனித தர்க்கங்களை ஷோபாவின் படைப்புகள் கைப்பற்றி நம்மை நிராயுதபாணிகளாக உருமாற்றுகின்றன.

கொரில்லாவில் வடிவரீதியாகவும் ,உள்ளடக்கம் வழியாகவும் உண்மையின் பிரதேசத்தில் சுடுமணலில் நிற்கும் போது ஷோபாவிடம் ஏமாற்றத்தின் ரேகைகள் தெரிந்தன.அதனால் உண்டான வருத்தங்களும் இருந்தன.நம்பிக்கையிலிருந்து தோன்றும் வருத்தங்கள் அவை.நம்பியவன் கழுத்தை அறுக்கும்போது உண்டாகிற வடுக்கள்.விடுதலைக் குழுக்கள் நிலவுடமை மனோபாவத்தைப் பிரதிபலிக்கின்ற குற்றக்குழுக்களின் துணையுடன் களத்தில் நிற்பதையும் அவர் படைப்புகளில் கண்டுபிடித்தார்.அந்தக் குற்றக்குழுக்களே உன்னத லட்சியங்களை , கனவைப் பராமரிக்கிற பொறுப்பில் ஷோபாவின் படைப்புகளில் இருந்தார்கள்.இருந்து வருகிறார்கள்.லட்சியங்கள் ஏற்றெடுத்திருக்கும் கனவுகளின் தளம் மினுமினுப்பாகவும் ,அதற்கு எதிர்நிலையில் அவை பொதிந்து வைத்திருந்த சாக்கடைகளும் இருள் பிரதேசமும் கசங்கி இணையும் ஒரு வடிவத்தையும் மொழியையும் ஷோபா தனது படைப்புகளில் கண்டடைந்தார். பொதுமனிதர்களின் இடம் இவரது படைப்புகளில் இந்த கோரமான இரு தரப்புகளுக்கும் வெளியே பரிதாபமாக நின்று கொண்டிருக்கிறது.ஏற்றப்படும் இரு தரப்பு புனிதங்களுக்கு வெளியே தானியத்திற்கு ஏங்கும் பறவையைப் போல அவர்கள் காத்திருக்கிறார்கள்.
மனிதவதைகளைப் பற்றிய , அவற்றின் ஊடாட்டங்களில் மனித மனதிற்கு உள்ள ஈடுபாடுகளைக் குரூரங்களை கண்டுணர்த்திக் சொல்லிய படைப்புகள் ஏற்கனவே உலகில் உண்டு.லி விசலின் ஒரு இரவு நாவல் ஹிட்லரின் வதை முகாம் ஒன்றின் ஒருநாள் இரவில் மனிதவதையின் முன்பாக நகர்த்தப்படும் பயங்கரத்தைப் பற்றியது. .ப்ரன்ஸ் காஃப்கா நவீன அரசாங்கங்களின் அமைப்புகள் பின்பற்றும் பளிங்கான நாகரிக வதைகளின் , தண்டனை முறைகளின் உள்ளடுக்குகளை ,அதன் ஸ்துல உருவை வெளிப்படுத்தியிருக்கிறார்.ஷோபாவின் நெருக்கடி அதுவல்ல.எதிர்நிலையில் உள்ள அரசாங்கத்திற்கு இணையாக விடுதலைக் குழுக்களின் வதைமுகாம்களும் ஒரே நேரத்தில் ஒரே மாதிரியாக செயல்படும் , இயங்கும் பிரச்சனை இது.இரண்டிற்கும் இடையே ஒரு சிறிய வேறுபாடும் குணத்தில் அமைய பெறவில்லை என்பதே ஷோபாசக்தி என்னும் கலைஞனின் மைய நெருக்கடி.எதிரியும் நாமும் குணத்தில் ஒன்றாகிற புள்ளியே ஷோபா அறிய விளையும் புதிர்.அப்படியானால் எல்லா
கனவுகளும் , நாகரிகமும் இப்படி இரட்டைத் தன்மைகள் கொண்டவைதானா ? என்கிற கேள்வியை அவரது படைப்புகள் முன்வைக்கின்றன.கோபுரங்களுக்கு அடியில் சதா புழங்கும் ஜீவசமாதிகளின் உயிர் அனக்கத்தை ஷோபா உயிருடன் உலவ விடுகிறார்.மனிதக்கனவுகளின் உள்ளடுக்கில் உள்ளவை இத்தகைய பயங்கரங்கள்தாம் என்றால் கனவுகளுக்கான அர்த்தம் என்னவாக இருக்கமுடியும்? புனிதக்கனவுகளின் மேல் நாம் கட்ட முற்படும் அதிகாரம் யாருக்கானது ? நாம் அவற்றுள் ஏற்ற முயலும் பொதுப்படையான கோஷங்கள் மெய்யானவைதானா? இதற்கு பதிலொன்றும் ஷோபாசக்தி என்னும் கலைஞன் கொண்டு நடப்பவை அல்ல.ஒருவேளை இதற்கு விடை தெரிந்த புனிதர்கள் உளரேயாயின் அவர்கள் ஷோபாவிடம் சென்று மோதலாம்.புனிதக்கனவுகளின் உள்ளிருக்கும் வதைமுகாம் ஷோபாவின் ஆரம்பகால எழுத்துக்களின் உள்ளடக்கம்.

இந்த அறிதலையும் அவை மூலம் உருவான தரிசனங்களையும் தன்னகத்தே கொண்டு அவரது "தேசதுரோகி " கதைகள் பிரஞ்சு தேசத்திற்குள் நகர்கின்றன.மேற்குலகின் நாகரிகக் கேந்திரம் அது.உலகின் உன்னதமான நாகரிகங்களின் உறைவிடம்.ஆனால் ஷோபாவின் படைப்புகள் காட்டும் அனுபவங்கள் இந்த நாகரீகத்திற்குப் பொருத்தமற்று அமைப்புகளின் வதைகள் உலகம் முழுவதும் இவ்வாறுதான் இருக்கின்றனவோ என திடுக்கிடுகின்றன.இந்த கொடூர அமைப்புகள் மனிதர்களைக் கையாளும் விதத்தில் சிற்சில வேறுபாடுகள் இருப்பினும் கூட மனிதவதைகளை முன்னிட்டு வடிவம் பெற்றிருக்கும் இந்த அமைப்புகள் உலகெங்கும் உயிர்ப்புடன் ஒரேவிதமாக இருப்பதை ஷோபாவின் படைப்புகள் காண்கின்றன.நாகரிகம்,மொழி,இனம், நிறம்,உன்னத லட்சியங்கள் என்று மனித பாவனைகள் மாறுபட்டவையாகத் தோற்றம் காட்டி நின்றாலும் கூட மனிதவதை என்னும் குரூரத்தில் ஒன்றுபட்டவையாக இருப்பதில் பாவனைகளின் சாயம் ஷோபாவின் படைப்புகளில் உதிர்ந்து விழுகிறது.
ஷோபாவின் படைப்புகளில் கூர்மையான எள்ளல் உண்டு.எள்ளல் அல்லது பகடி என்று அறிய இயலாத அளவிற்கு நுட்பமானவை அவை.அவைதான் ஷோபாவின் படைப்புலகை நகர்த்திக் செல்பவை.ஷோபா ஒரு தரப்பில் நிற்பதைத்தான் பெரும்பாலும் விரும்புகிறார்.ஷோபாவின் பகடி அதற்கு வழி விட மறுக்கிறது.வைக்கம் முகம்மது பஷீர் போன்ற உயரிய கலைஞர்களிடம் செயல்பட்ட பகடி இது.சுய பகடியும் இணை சேரும் இடங்களில் ஷோபாவின் படைப்புகள் உயரத்திற்கு எழும்புகின்றன.ஆனால் இந்த நுட்பமான எள்ளல் பெரும்பாலும் ஷோபாவின் படைப்புகளில் மறைத்து வைக்கப்படுகிறது.அதன் பார்த்தாவைக் கழற்றி வாசகன் அதன் முகத்தைத் தரிசித்துக் கொள்ளவேண்டும்.ஷோபாவின் படைப்புகளில் சில இடங்களில் இவர் ; தான் சார்ந்த தரப்பிற்கு ஆதரவாக கறாராக நிற்க வலிந்து முயற்சியெடுக்கும் போது : அவர் உருவாக்கியிருக்கும் பகடியோ ஓங்கிச் சிரித்து விடுகிறது.ஷோபா தனது படைப்புகளில் கொண்டுள்ள அழகியலும் அழகியல் என்று தன்னை முன்னிறுத்தாததொரு அழகியல்.ஷோபாவின் படைப்புகள் வடிவச் சிறப்பு கொண்டவை.தான் கண்டடைபவற்றுக்கு வடிவம் திரண்ட பின்னரே அவை நிகழுகின்றன.வடிவமும் உள்ளடக்கமும் தங்களுக்கு ஏற்ற விதத்தில் முயங்குதல் ஷோபாவின் சிறப்பியல்பு.நிகழ்த்துக்கலையை தனது உள்ளடக்க எழுச்சியாகக் கொண்டு நிற்பவை ஷோபாவின் படைப்புகள்.வழக்கமான பாரம்பரிய கலைக்கோட்பாடுகளை இவரது படைப்புகள் முற்றாக நிராகரிப்பவையும் கூட .ஒரு எதிர்நிலை அழகியல் இவரது படைப்புகளில் சாத்தியமாகிறது.
2
BOX பெட்டி கதைப் புத்தகம் நாவலில் ஷோபா ; தான் கண்டடைந்த அனுபவங்களில் இருந்து ,அவற்றையும் உள்ளடக்கி மேலுமொரு மனப்பரப்பின் அரூபமான பகுதிக்குள் நுழைந்து தன்னை தீவிரமாக்குகிறார்.யுத்தத்தின் உடல் பற்றிய சித்திரத்தை தனது கண்டுபிடிப்புகளின் மூலம் கண்டடைய BOX முயற்சி செய்கிறது.இதுவே இந்த நாவலில் பிரதானம்.மனிதவதைச் சித்திரங்கள் ஏற்கனவே ஷோபா கண்டடைந்தவைதான்.யுத்தத்தின் உடல் என்பது என்ன ? என்பதை தனது புனைவின் கண்கொண்டு ஷோபா இந்த நாவலில் பார்த்து விடுகிறார்.அதன் மூலமாக அவரில் யுத்தம் கைவிடப்படுகிறது.யுத்தத்தின் சூக்குமம் என்ன ? அது கொண்டிருக்கும் உடல் எதனாலானது என்பது ? அறியப்படாத வரையில் யுத்தம் தனது இருப்பிற்கு சாத்தியம் கொண்டிருக்கும். BOX பெட்டி கதைப் புத்தகம் நாவலில் யுத்தம் அறிந்து கொள்ளுதலின் நியதியை அடிப்படையாகக் கொண்டு தனது யுத்தத்தின் கடைசி அத்தியாயத்தில் வந்து நிற்கிறது எனலாம்.இனி வாழ்க்கைக்குள் நகரவேண்டிய இடத்தையும் ,தேவையையும் ஈழத்துப் படைப்புகளுக்கு இந்த நாவல் தந்து கண்டுபிடிப்பின் மூலமாகத் திறந்து கொடுக்கிறது.
ஷோபா ஒரு யதார்த்த கலைஞன் இல்லை.புனைவுகளை தனது படைப்பின் நிமித்தமாகக் கொண்டவர்.புனைவுகள் வழியாக ; கண்டடைந்த உண்மைகளுக்கு அருகாமையில் வாசகனை நகர்த்தி விடுகிறார். யதார்த்தம் என்று ஏற்கனவே நம்பப்படும் வடிவத்திற்கும் தரப்பிற்கும் : குறிப்பிட்ட புறவெளிகளுக்கு
அப்பால் , வரையறைகளுக்கு அப்பால் உண்மைகளை பேசும் சக்தியில்லை என்பதை ஷோபாவின் புனைவுகள் பிரகடனம் செய்பவை. யதார்த்த வடிவத்திற்கு படைப்பின் பல முனைகளையும் ஒரே நேரத்தில் தீண்டுதல் என்பது சாத்தியமில்லை.ஷோபாவின் புனைவுக்கூறுகள் மினுங்குவது அது ஒரே சமயத்தில் பல்வேறு முனைகளையும் படைப்பின் தளத்தில் வைத்து தீண்டும் விஷேஷ மொழியால் சாத்தியமாகிறது. இந்த மொழியை கோட்பாட்டு ரீதியில் உருவாக்கிவிட முடியாது . வாழ்வனுபவங்களை "நான்"ஆக்கும் முயற்சி இது.
3
"இதுவரை உலகத்தில் நடந்த எந்த யுத்தத்தைப் பற்றிய வரலாறும் உண்மையாக,நடந்தது நடந்தபடியே எழுதப்பட்டதில்லை . அந்தப் பொதுவிதிக்கு இந்த யுத்தமும் விலக்கானதில்லை ."என்கிற யுத்தத்தை குறித்த சீனாவின் பாக்ஸர் யுத்த நிருபர் ஒருவரின் வாக்கியம் BOX பெட்டி கதைப் புத்தகம் நாவலில் உபபிரதி X அத்தியாயத்தில் வருகிறது.பொதுவாகவே மனித மனதின் விருப்பங்கள் உண்மைகளை தங்களின் அகஇடுக்கில் ஒளித்து வைக்கும் வல்லமை படைத்தவை.விருப்பங்களில் இருந்து உண்மைகளை பிய்த்து எடுப்பது என்பது படைப்பின் பிரதான விதி.படைப்புகள் விருப்பங்களில் இருந்து விலகுவது இந்த பண்பினால்தான்.விருப்பங்களின் உள்ளே பல மாயசொரூபங்கள் இருக்கின்றன.அவற்றை படைப்பு கண்டடைய விளைகிறது.மனித மனம் தனது விருப்புகளை உண்மைபோல முன்வைக்க விசித்திரத்தின் எந்த எல்லைவரைக்கும் போகுமோ அந்த எல்லைவரைக்கும் படைப்பும் செல்ல வேண்டியிருக்கிறது.விருப்பம் யுத்தமாகவோ,குரூரமாகவோ இருக்க இயலுமா ? என்றால் இருக்கிறது என்பதே ஷோபாவின் கண்டுபிடிப்பு.அது ஒரு புனித உடல் கொண்டு நடிக்கிறது என்பதை அவிழ்க்க அவர் BOX பெட்டி கதைப் புத்தகம் நாவலில் முயல்கிறார்.
BOX பெட்டி கதைப் புத்தகம் நாவலின் கருமையத்தினுள் நுழைந்து சாரத்தினைக் கண்டடைய இந்த நாவலில் நான்கு வகையான திறப்புகள் உள்ளன.நாவலின் தொடக்கத்திலேயே வருகிற பெட்டி பற்றிய சித்திரம் ஒன்று இவ்வாறு வருகிறது.முதல் வகை இது.

"வெளியில் பெருமழை பெய்யத் தொடங்கியது .நிர்வாண இளைஞர்களின் உடல்கள் கூதலால் நடுங்கி கொண்டிருந்தன.பெட்டிக்குள்ளிருந்த ஒரு கரிய இடதுபாதத்தின் விரல்கள் குளிரேறிக் குறண்டிப்போக அந்தப் பாதம் விரல்களை சரியாகத் தரையில் ஊன்றி வைக்க நடுக்கத்துடன் முயற்சித்துக் கொண்டிருந்த போது வலது பாதம் தன்னிச்சையாக சுண்ணாம்புக் கோட்டில் ஏறியது.அந்தப் பாதத்தின் அய்ந்து விரல்கள் மீதும் நீள்கத்தி "விசுக்"என்ற சத்தத்தோடு இறங்கியது.அய்ந்து விரல்களும் அந்த அறையில் திசைக்கொன்றாகச் சிதறின.பெட்டிக்குள் நின்றிருந்த மற்றவன் தனது பாதங்களை ஒன்றின் மீது ஒன்றாக வைத்துக் கொண்டான்.வெட்டுப்பட்டவன் சரிந்து பெட்டிக்கு வெளியே விழுந்தபோது அவனது தலையிலும் தொழிலும் மார்பிலும் வயிற்றிலும் ஆணுடம்பிலும் இரும்புச் சங்கிலிகள் வீசப்பட்டன.இரத்தம் இளஞசூட்டுடன் தரையில் பீச்சியடிக்க வெட்டுப்பட்டவன் "அம்மா"என ஒரு காட்டு விலங்கு போல ஊளை எழுப்பினான்.பின்பு பற்களைக் கடித்தபடியே கைகளைத் தரையில் ஊன்றி மெதுவாக எழுந்து மறுபடியும் பெட்டிக்குள் ஆடாமல் அசையாமல் நிற்கலானான்."
பெட்டி பற்றிய ஷோபாவின் இந்த உருவகம் இந்த நாவலில் தொடர்ந்து பலரூபங்களில் வந்து கொண்டே இருக்கிறது. பெட்டிபற்றிய ஷோபா உருவாக்கும் இந்த உருவகத்தில் வழக்கம் போலவே ஷோபா தனது தரப்பு உணர்ச்சிகளை முற்றிலுமாக நீக்கம் செய்து விடுகிறார்.உணர்ச்சிகளை தன் நீக்கம் செய்யும் இந்த பண்பு ஷோபாவின் முக்கிய குணம். பெட்டி என்னும் உருவகத்தில் படைப்பின் அழுத்தத்தை சாறு ஏற்றும் நிறைய உரையாடல்கள் , வாக்கியங்கள் இந்த நாவலில் இடம்பெற்றுள்ளன.
"கார்த்திகைக்கு இயக்கங்களுடன் ஏதாவது தொடர்பிருக்கிறதா என விசாரணை அதிகாரி என்னைக் கேட்ட போது :இந்த காலத்தில் யாரோடு யாருக்கு வேண்டுமானாலும் தொடர்புகள் இருக்கக் கூடும் என நான் சொல்லுமளவிற்கு எனது ஆன்மா முற்றிலும் அப்போது இருளடைந்திருந்தது."
"BOX அடிச்சிற்றாங்கள் !
விடாத குடு ஆர்.பி.ஜி.அடி !
குளத்திற்கு அந்த பக்கமும் நிக்கறாங்களாடா !
அவளுக்கு காயம் ஆளைத் தூக்கு !
பள்ளிக்கூடத்துக்கு கிபீர் குத்திட்டன்...
மல்ரி பரல் அடிக்கிறான் ...அங்க அடி !
புலிகளின் தாயகம் தமிழீழத் தாயகம் !
பெரிய பள்ளன் குளத்துக் குழந்தைகளின் பாவனை விளையாட்டாக விவரிக்கப்படும் பகுதி "இருபத்து நான்காம் கதை "அத்தியாயம் யுத்தத்திற்கும் குழந்தை விளையாட்டுகளுக்கும் இடையிலான திரையை நாவலில் கழற்றி எறிகிறது.மொத்தமாக யுத்தம் குழந்தை விளையாட்டாக உருமாறும் பகுதி இது.
இருபத்தைந்தாம் கதை என்னும் அத்தியாயம் யுத்தத்தின் உருவகமாக மாற்றமடைகிறது.
"கிராம மக்கள் இப்போது இரண்டு பகுதிகளாகப் பிரிந்து விட்டார்கள் . முதற்பகுதியில் இளைஞர்கள் மட்டுமே இருந்தார்கள் .அடுத்த பகுதியில் குழந்தைகள் ,சிறுவர்கள்,முதியவர்களிருந்தார்கள் . இளைஞர்கள் அந்த கிராமத்தின் நான்கு பக்கங்களிலும் வரிசையாக நின்று பெட்டி அடித்தார்கள் .....ராணுவத்தினர் கூச்சலிட்டபடியே உள்நோக்கி நகர்ந்து பெட்டியை சுருக்கிக் கொண்டே வந்தார்கள்."
"ராணுவத்தின் அய்ந்து படையணிகள் எங்களிற்கு எதிராகப் போரிட்டுக் கொண்டிருந்தன.நாங்களும் மூர்க்கத்துடன்தான் போரிட்டோம் .காயமடைந்த போராளிகள் களப்பு வழியாக வெளியே அனுப்பப்பட்டு அதே வழியாக எங்களுக்கு உதவிகளும் உணவும் வந்து கொண்டிருந்தன.அடுத்து வந்த இரவில் அந்தக் களப்பு வழியை ராணுவத்தினர் அடைத்து விட்டார்கள்.நன்கு திட்டமிட்டு நகர்ந்த ராணுவத்தினர் எங்களை நான்கு புறமும் சூழ்ந்து BOX அடித்து விட்டார்கள்.பல அடுக்குகளாக அடிக்கப்பட்ட BOX அது."
பெட்டி பற்றி இவ்வாறாக வருகிற நிறைய விவரணைகள் உள்ளன.இந்த பெட்டி என்பது வதையை அல்லது யுத்தத்தின் வடிவத்தை பற்றிய குறிப்பானாக உள்ளது.நவீன அரசாங்கங்களாக இருப்பினும் சரி ,நிலவுடமை மனோபாவ விடுதலைக் குழுக்களாக இருக்கும் போதும் சரி .தேசிய இன ராணுவமாக இருக்கும் போதும் சரி வதையின் வடிவம் ஒரேவிதமாகவே அமைவதைக் காண முடிகிறது.வதையின் வடிவம் இந்த பெட்டியாக இருக்கிறது.பொதுமனிதன் இந்த பெட்டி முன் நிற்கும் அபத்தம் இந்த நாவல் முழுவதிலும் உண்டு.அது இந்த நாவல் உருவாக்கும் பெருந்துயரங்களுள் ஒன்று .சாதாரணமான மனிதன் பல சமயங்களில் இந்த பெட்டியின் முன்பாக நிறுத்தப்படுகிறான்.இந்த அபத்தம் எங்கு நிகழ்கிறது ஏன் நிகழ்கிறது என்பது விளங்கவில்லை.அவனுக்கு நடப்பவற்றில் ஒரு பங்கும் இல்லை.ஆனால் அபத்தம் அவனை எட்டு திசைகளில் சூழ்ந்து நிற்பதை நாவல் கண்முன் காட்டிவிடுகிறது.சந்தேகங்களுக்கு அவன் பலியாகிக் கொண்டே இருக்கிறான்.அவன் தரப்பிற்கு அங்கு இருப்பென்பதே இல்லை.
உபபிரதி IX யில் வரும் விவரணை இது . சந்தேகத்திற்குள்ளாகும் சிங்களவன் படுகொலை செய்யப்படுகிறான் .அதனை மரணதண்டனையாகக் கருதும் சாதாரணம் நடைபெறும் விவரணை இது.
"அன்றிரவு முகாம் அமைந்திருந்த வீட்டு வரவேற்பறைக்கு ,சிறை வைக்கப்பட்டிருந்த கோழிக்குஞ்சு வியாபாரிகளின் ஒருவர் அழைத்து வரப்பட்டார்.அவரிடம் நேதாஜி விசாரணை நடத்தத் தொடங்கினான்.அந்த கோழிக்குஞ்சு வியாபாரியைப் போட்டு நேதாஜி அடித்து நொறுக்கினான்.அவன் அடித்துக் களைத்தபோது தன்னுடைய உதவியாளனை அடிக்குமாறு உத்தரவிட்டான்.உதவியாளன் சரியான வாடல்.நுளம்பு மாதிரி இருப்பான்.அவன் அப்படியே பறந்து வந்து
'ஏனடா சிங்களவா தமிழீழத்துக்குள்ள வந்தனீ ? 'என்று கேட்டுக்கொண்டே கோழிக்குஞ்சு வியாபாரியின் தலையைப் பிடித்துச் சுவற்றோடு மோதினான்.ஒரே அடியில் தலை இரண்டாகப் பிளந்து சுவரில் இரத்தம் பீச்சியடித்தது ,அடுத்த நிமிடத்தில் கோழிக்குஞ்சு வியாபாரி இறந்து விட்டார்.
காலையில் கார்த்திகைக்குக் கடுமையான காய்ச்சல் அடிக்கத் தொடங்கி விட்டது .'ஆஸ்பத்திரிக்கு போறியா?' என நேதாஜி கேட்டான்.கார்த்திகை பாயில் குந்தியவாறே தனது கைகளைக் காச்சலால் நடுங்கும் தனது உடலிற்குக் குறுக்காகக் கட்டியபடி
நேதாஜியிடம் கேட்டான் :
நீங்க செய்யுறது தலைமைக்குத் தெரியுமா?
ராத்திரி நடந்தது கொலை ...
அது மரண தண்டனை ....
நிலவுடமை மனோபாவக் குற்றக்குழுக்கள் ஷோபாவின் படைப்புகளில் நிறைய வருகிறார்கள்.அவர்கள் தங்கள் தார்மீகத்திற்கு புனித பாவனை மேற்கொள்கிறார்கள்.இலங்கையில் இருதரப்புகளின் யுத்தமும் நவீன அரசாங்கங்களை சென்றடைவதற்கிடைப்பட்ட காலத்தின் கலவர மனநிலையை புனித லட்சியங்களின் உள்ளே மறைத்துக் கொள்கின்றன என்கிற சித்திரமே ஷோபாவின் படைப்புகளில் இருந்து வந்தடைகிறது.யுத்தத்தைப் பற்றிய புனிதக்கற்பனைகளை உடைத்து நொறுக்குபவையாக நிலவுடமை மனோபாவ குற்றக்குழுக்களின் ஆதிக்கம் அமைப்புகளின் வன்முறைக்கு நிகராக ஷோபாவில் படைப்புகளில் இடம் பெறுகிறது .குற்றக்குழுக்களின் முன்பாக ,முழுமையாக மனிதன் சிறைப்பட்டிருக்கும் தோற்றம் இது.இதுபோல விசாரணையின் போது மாடிப்படிகளில் இருந்து கீழ் நோக்கியும் ,மேல் நோக்கியும் முகமும் தலையும் சிதையும் அமைப்பின் வதை ,அமைப்பின் வன்முறையை பட்டவர்த்தனமாக்குகிறது.
4
பல்வேறு வகையான பெண்கள் இடம்பெற்றுள்ள நாவல் இது .இந்த பெண்கள் மறைமுகமாக அரசின் ,அமைப்பின்,விடுதலைக் குழுக்களின் ; அவற்றின் பிரதான மனோபாவத்தின் நுண்ணிய வகைமாதிரிகளைக் கொண்டவர்களாக ஏதோவொரு விதத்தில் இருக்கிறார்கள்.அமைப்பின் ,அரசின்,விடுதலையின் மாதிரிஅகமாக இவர்கள் வெளிப்படுகிறார்கள்.நிலவுடைமைக்கால குற்றக்குழுக்களுக்கு இசைவான மனம் கொண்ட பெண்கள் இவர்கள்.அமைப்பிலும் ,அரசிலும் ,விடுதலைக் குழுக்களிலும் பெண்களின் பாலியல் பிரதான பங்குவகிப்பதை நாவலின் பல பகுதிகள் புகைமூட்டமாக சித்தரிக்கின்றன.நிலவுடமை கால பெண்களின் மனோபாவம் நவீனமடைவதற்கிடைப்பட்ட இடத்தில் கொண்டு இந்த நாவலில் நிலை நிறுத்தப்படுகிறார்கள் . நிலவுடைமைக்கால குற்றமனோபாவத்தைப்பற்றி பேசும்போது நவீன அரசாங்கங்களின் தண்டனை அமைப்புகளிலும் ,விசாரணை அமைப்புகளிலும்,குற்றக்குழுக்களிலும்,நிலவுடமை மனோபாவக் குற்றக்குழுக்களை உள்ளடக்கமாகக் கொண்ட விடுதலைக்குழுக்களிலும் அவை இன்றும் உலகளாவிய அளவில் பங்கு வகிப்பதைக் கணக்கில் கொண்டே அணுகவேண்டும்.
பாலியல் ,அரசு,வதை,தண்டனை முறைகள் பற்றியும் இவற்றில் ஒன்றிற்கு மற்றொன்றில் இருக்கும் தொடர்பு பற்றியும் தீவிரமான உரையாடல்களுக்கு விவாதங்களுக்கு இடமளிக்கும் நாவல் இது.அதற்கான தன்னிச்சையான பிரதியாகவும் இந்த நாவல் விளங்குவது இந்த நாவலின் தனிச்சிறப்புகளில் ஒன்று. அதற்கு தனித்த ஒரு வாசிப்பும் ,கண்டுபிடித்தலும் அவசியம்.நிலவுடைமைக்கால குற்றக்குழுக்களின் நீட்சியாக அரசு அமைப்புகளின் பாலியல் செயற்பாடுகளைக் குறிப்புறுத்தும் நாவலும் ஆகிறது BOX.
"அமையாள் கிழவி அப்படியே ஒருகையால் தனது நெற்றியைப் பொத்தியவாறும் மறுகையால் தனது நிர்வாணத்தைப் பொத்தியவாறும் சரிந்து நிலத்தில் விழுந்தார்.எல்லாப் பெண்களுமாகச் சேர்ந்து அமையாள் கிழவியைக் குளத்து நீருக்குள் தூக்கிப் போட்டார்கள்.அமையாள் கிழவியின் சொருகிக் கிடந்த கண்களிற்குள் வெட்கம் உறைந்திருந்தது."அமையாள் கிழவி ஒரு உருவகமாக இந்த நாவலில் இடம் பெறுபவர்.
"இடம் தெரியவில்லை .நேரம் தெரியவில்லை.நாட்கள் தெரியவில்லை.அந்த அறைக்குள் ஏழு பெண்கள் முழுநேரமும் நிர்வாணமாக அடைக்கப்பட்டிருந்தோம் .எங்களது கைகளிலும் கால்களிலும் விலங்குகள் பூட்டப்பட்டிருந்தன.ராணுவ அதிகாரிகள் எங்களை வன்புணர்ச்சி செய்தபோது கால்களிலிருந்த விலங்குகள் மட்டுமே விலக்கப்பட்டன .கைகளிலிருந்த விலங்குகள் அப்படியேதானிருந்தன.
ஒவ்வொருமுறை நான் வன்புணரப்பட்டபோதும் ஓர் ஏளனப் பார்வையுடன் நான் அதை எதிர்கொண்டேன் .அவர்கள் எனது உடலிற்குள் நுழைந்தபோது எனது ஆன்மா என்னிலிருந்து வெளியேறிப் பரிசுத்தமாகயிருந்தது .ஒவ்வொரு வன்புணர்வு முடிந்ததன் பினாகவும் மறுபடியும் ஆன்மா எனக்குள் புகுந்தபோது நான் நிம்மதியடைந்தேன்."
அமிதாகலாவின் உரைமொழிப்பதிவு இது.
இது இந்த விவரணைக்காக மட்டுமே இந்த நாவலில் இடம் பெறவில்லை.யுத்தத்தின் புதிரை அவிழ்க்கும் பொறியொன்று இந்த சித்திரத்தில் உள்ளது.பாலியல் விடுப்பில் உள்ள இந்த புனிதமேற்றலுக்கும் யுத்தத்தின் புனிதத்தன்மைக்கும் இடையில் ஒரு பொருத்தப்பாடும் கலவியும் இருக்கிறது.பாலியல் அத்துமீறலைகள் அவசியமான யுத்தத்தின் பண்டமாக நாவலில் விரிந்து கிடக்கிறது.யுத்தத்தின் பாலியல் செயல்பாடுகள் நாவலில் முன்வைக்கப்படுகின்றன.யுத்தத்திற்கும் பாலியல் அத்துமீறல்களுக்கும் இடையிலான இணைப்பைப் பற்றிய பொது அறிதல்முறைகள் போதாமையில் இருப்பதை இந்த நாவலில் விளங்க முடிகிறது.அவை வழக்கமான தனது தட்டைத் தன்மையிலிருந்து விலகி ஷோபாவின் இந்த நாவலில் புதிய ஒரு கண்ணோட்டத்தை நோக்கி நகர்கின்றன.
BOX பெட்டி கதைப்புத்தகம் நாவலில் பாலியல் விடுதி பற்றிய சித்திரம் ஒன்று வருகிறது .அது புனைவு என்றே இந்த நாவலும் அதனை வாசகனுக்குச் சொல்கிறது .அனால் இந்த நாவலின் முக்கிய சரடு உருக்கொள்ளுகிற மையம் கொள்ளும் சித்திரம் இது.பொதுமனதின் மீது அதிர்ச்சியை ஏற்படுத்துவதல்ல இதன் நோக்கம்.அகத்திற்குள் ஒதுங்கியிருக்கும் பேய்களை அறிதலின் முன்பாகக் கோருகின்ற ஈவிரக்கமற்ற இடம் இது.யுத்தத்தை விடுதலை செய்யும் அறிதலை ஏற்படுத்தும் படைப்பின் கண்டுபிடித்தலுக்கு ஈவிரக்கமற்ற மனதின் பேயைக் காட்டுவது அவசியமாக இருக்கிறது என்பதே கசக்கும் உண்மை.படைப்பை ஈவிரக்கத்துடன் இருக்கும்படி கோர எந்த விஞ்ஞானத்திற்கும் சரி,புனித நெறிகளுக்கும் சரி எந்த அருகதையும் கிடையாது.எப்படியேனும் மறைபொருளை வெளிகொண்டுவருதலே சிறந்த படைப்புகளின் வேலை.
"துரை ! நாங்கள் போகவிருக்கும் பாலியல் விடுதி மிக மிக இரகசியமானதும் பாதுக்காப்பு அதிகமானதுமான விடுதியாகும்.உள்ளூர் செல்வந்தர்களிற்கு மட்டுமல்லாமல் மேற்குலக ஆண்களிற்கும் இந்த விடுதியே முதலாவது தேர்வாகயிருக்கிறது.இந்த விடுதியில் இருக்கும் அனைத்துப் பெண்களும் சிறுமிகளும் தமிழ் ராணுவமான புலிகள் இயக்கத்திலிருந்து முக்கியமான தளபதிகளும் போராளிகளும்.
இந்தச் சரக்குகள் வீரமும் தன்னகங்காரமும் உடலுறுதியும் மிக்கவர்கள்.அப்படியான பெண்களை உங்களுக்கு கீழ் மல்லாத்துவதும் அவர்களது குதங்களிற்குள் உங்களது விறைத்த குறியைச் செலுத்துவதும் அகங்காரம் இருந்த அந்த வாய்களிற்குள் உங்களது விந்தைப் பீச்சிவிடுவதும் உண்மையிலேயே கிளர்ச்சியானது துரை.அந்த அடிமைப் புலிகள் உங்களை முழுமையான ஆண்மகனாக உணர வைப்பார்கள்."
5
யுத்தம் உடலின் மீது புனிதத்திரைகளால் போர்த்தப்பட்டிருப்பதை பற்றி பேசுகிற மிக முக்கியமான பிரதி ஷோபாசக்தியின் BOX பெட்டி கதைப்புத்தகம் நாவல்.யுத்தம் பற்றிய பாரம்பரியமான புனிதப்பார்வைகளில் அது பெருத்த இடைஞ்சலை , இடைவெளியை இந்த நாவல் ஏற்படுத்துகிறது.இந்த நாவலில் வாசிப்பிற்கான பலவகையான சாத்தியங்கள் உள்ளன.எனது வாசிப்பு என்பது அதில் ஒரு சிறிய பகுதி மட்டுமே .பேசுவதற்கும் விவாதிப்பதற்கும் ,நமது மனப்பரப்பில் புதிய ஒரு ஒளிக்கீற்றை தீபம்போலேற்றுகிறது இந்த BOX கதைப்புத்தகம்.
கார்த்திகை,பெரிய பள்ளன் குளம்,அமையாள் கிழவி ஆகியோர் மட்டுமின்றி பலவிஷயங்கள் இந்த நாவலில் குறியீட்டுத் தன்மை பெறுகின்றன.இவை வலிந்து பெறப்படும் குறியீட்டுத் தன்மைகளாக அன்றி சிறப்பு பெறுபவை.இவற்றிற்கென ஒரு உள்ளூர் வரலாறு நிச்சயமாக இருக்கும்.அவை புனைவுரு கொள்ளும்போது சாரங்களே எஞ்சுகின்றன.நாவல் ஏற்படுத்துகிற ஆன்மீக சாரங்கள்.அதுவே இந்த நாவலின் கதி.மனிதனின் ஆன்மீகத்திற்குப் பொறுப்பேற்கும் நாவல் இது. உலக சமூகத்தின் முன்பாகவும் ,உலகளாவிய யுத்தங்களின் முன்பாகவும் தமிழ்ச் சமூகத்திலிருந்து பார்வைகளை தரிசனங்களை முன்வைத்திருக்கும் முக்கியமான நாவல் BOX . உலகத்தின் உன்னத நாவல்கள் பலவற்றிற்கு இணையானது.ஆனால் இந்த உன்னதம் அமர்ந்திருக்கும் இடமோ ஆழ்ந்த துயரத்தால் நிரம்பியிருக்கிறது.
பதிமூன்றாம் கதை
----------------------------
"பெரிய பள்ளன் குளத்துக் கிராமத்தின் பெண்கள் ,ஆண்கள் ,குழந்தைகளிற்குள் முக்கால்வாசிப் பேர்களும் தங்களது உடலில் ஏதாவது அவயங்களை இழந்திருந்தார்கள்.கையில்லாதவர்கள்,கால்களிலாதவர்கள்,கண்களை இழந்திருந்தவர்கள்,உடலிலே அறவே ஆறாத பெரும் புண்களைக் கொண்டிருந்தவர்கள் ,உடலிலிருந்து தொடர்ச்சியாக செம்மஞ்சள் நிறத்தில் சீழ் வடிந்து கொண்டே இருப்பவர்கள்,இரவுகளில் கனவுகளில் வீறிட்டு அலறுபவர்கள்,மன நோயாளிகள்,அமையாள் கிழவியைப் போல ஓயாமல் அழுது கொண்டிருப்பவர்கள் போன்றவர்களது கிராமமாக அது இருந்தது ."
இந்த குறியீட்டுக் கிராமத்தின் மீது ஷோபாசக்தி நகர்த்திக் கொண்டேயிருக்கும் நிலாவெளிச்சமாக இருக்கிறது இந்த நாவல்.பெருங்கலைஞனின் கண்களே இந்த துயரம் மிக்க நகரும் நிலவு. ....
BOX கதைப் புத்தகம்
ஷோபாசக்தி
முதற்பதிப்பு : ஜூலை 2015
வெளியீடு :கறுப்புப் பிரதிகள்
பி 55 ,பப்பு மஸ்தான் தர்கா,லாயிட்ஸ் சாலை,
சென்னை - 600 005 பேச - 9444272500
மின்னஞ்சல் : Karuppuprathigal @gmail .com
விலை ரூ 200 /-
கல்குதிரை
ஆசிரியர் - கோணங்கி
6/1700 ,இந்திரா நகர் ,கோவில்பட்டி - 628502
மின்னஞ்சல் - kalkuthirai @gmail .com
அலைபேசி - 9952546806
விலை - ரூ 145 + 145

No comments:

Post a Comment

அப்பச்சி காமராஜர் ...

அப்பச்சி காமராஜர் ... காமராஜ் பற்றி "நீயா நானா " விஜய் டிவி ஷோவில் பேசுவதற்காக ஆன்டனி ஒரு வாரம் முன்னதாக அழைத்தார்.நான் வர...