நினைத்தார்கள் நினைத்திருந்தேன் - 62

நினைத்தார்கள் நினைத்திருந்தேன்

1

இடையில் இறந்து விடுவேன்
என்றே எல்லோரும்
நினைத்தார்கள்
நானும் அப்படித்தான் நினைத்திருந்தேன்

2

போலியான அன்பில்
வலிந்து
வழியனுப்ப
வாகனத்தில் என்னை ஏற்றிக் கொண்ட நண்பன்
வழியில் வருவோர் போவோரையெல்லாம்
திட்டி கொண்டே வந்தான்
ஏன் இந்த அளவிற்கு
என்னைத் திட்டிக் கொண்டே வருகிறாய் ?

இறக்கி விடச்
சொல்லிவிட்டேன்

3

அவன் என்னைத் திட்ட
அது என்னுள்
வந்தமர்கிறது
நான் மற்றொருவனை திட்ட
அவன் மற்றொருவரிடம்
கொண்டு சேர்கிறான்

யாரின் அகத்தளம் இது என்றே தெரியவில்லை
நடந்து முடிந்த
விபத்திற்கு

4

நல்லபடியாகப் பேசினால்
நல்லபடியாக நினைத்துக் கொள்கிறார்கள்
மற்றபடி நடத்தையில் ஒன்றுமில்லை

5

கூப்பிடும் தூரத்திலே
எல்லாமே இருக்கின்றன
துயரத்தை அழைப்பவனிடம்
துயர் வந்து சேருகிறது

என்னை எப்படி நீ அடையாளம் கொண்டு
கொண்டாய் என
அவன் கேட்கிறான்
நீதானப்பா அழைத்தாய் என
அது
திருப்பிக்
கேட்கிறது

6

தூய அன்பு
நரபலி
கேட்கும்

பலியானவன் மீதே
அன்பெனக் கதறும்

7

மதிக்கத் தெரியாதவனுக்கு
செயல் இல்லை

8

ஒரு வயல் உருவாவதற்குத் தேவையான
சோறு
உன் தட்டில் இருக்கிறது

எத்தனை பேர் சேர்ந்து இழுத்து
வந்து சேர்த்திருக்கிறார்கள்
ஒரு நேரத்திற்கான மதிய உணவை

நீ என்ன நினைத்து கொண்டு சாப்பிடுகிறாயோ

9

வார்த்தைகள்
அப்படியப்படியே முளைக்கின்றன
பொய் சொன்னால் பொய்யாக
மெய் சொன்னால் மெய்யாக

10

உண்மை என்பது
ஏராளம்
கதாபாத்திரங்களால்
ஆனது


கண்களுக்கு நன்றாகத் தெரியும்

1

எனது பாதைகளை அறிவது
கடினமானது
ஒவ்வொரு அடி முன்னோக்கி வைக்கும் போதும்
ஒவ்வொரு அடியாக
பின்னோக்கி
மூடி
மறைந்து விடுகின்றன

2

எனக்குத் தரப்பட்ட தனிமையை
அமுதமென விழுங்கினேன்

3

எடுத்ததும் ஆலோசனை
சொல்பவனின் ஆலோசனையை
எடுத்து புறத்தே
வைத்து விடுங்கள்
அதில் புளிப்பதிகம்

எடுத்ததற்கெல்லாம்
ஆலோசனை சொல்பவனை
மறுத்து விடுங்கள்
விஷமதிகம்

முடித்த காரியத்தில்
ஆலோசனை சொல்பவனிடம்
சும்மா இருந்து விடுங்கள்
பதில் பேச வஞ்சம் பெருகும்

இந்த மூன்றுபேருக்கும் பிறகு
ஒருவன் வருகிறான் பாருங்கள்
அவனிடம்
இருக்கிறது
உங்களுக்கான
ஆலோசனை
கைக்கருகில் வைத்துக் கொள்ளுங்கள்


4

ஆபத்தின் போது
கடவுள் வருவது
கண்களுக்கு
நன்றாகத் தெரியும்

5

முட்டுச் சந்திற்குள்
மாட்டிக் கொண்டால்
எழும்பிச் சாடுகிறாயா
என
பரிசோதிக்கப்படுகிறாய்
என்பது
பொருள்

6

தேவதூதன்
உன்னைத் தேடிவரக் கூடாது
அதற்குள்
உன் வேலை
முடிக்கப்பட்டிருக்க வேண்டும்

7

பகவான் உன்னிடம்தான் இருக்கிறார்
உனக்குத்தான்
அவரைப் பார்க்க
நேரமில்லை

8

நன்றாக இருந்தால்
நன்றாகக் இருந்தது
என்று சொல்லிவிட வேண்டும்

9

ஆலோசனையும் கவிதையாகும்
யார் சொல்கிறார்கள் என்பதைப்
பொறுத்திருக்கிறது
அது

10

நெட்டை மனிதருக்கு ஒரு வசதி
குட்டை மனிதருக்கு
வேறொரு வசதி

11

பொதுப் பண்பு என்பது
காரியம் தானே அன்றி
நீயோ
நானோ
அல்ல

12

அழகிகளுக்கெல்லாம்
ஐந்தறிவே
ஆறாவது உடல் கொண்டவள்
காரைக்கால்
அம்மை

13

பணிய மறுத்தால்
முறியப்போகிறாய்

அடக்கம் என்பது
துணிவென்றுணர்தல்

14

எல்லா சொல்லும்
உயிர் கொண்டதுவே


மழைக்கான அறிகுறி

1

நாம் எல்லோருமே
மிகுந்த உயரத்தில் தான்
இருக்கிறோம்
பரவெளியில்
தரணி மிதக்கும்
உயரம் அது

புத்தியால்
தவறும் போதெல்லாம்
கீழே விழுகிறோம்

2

பக்தி இல்லையானால்
ஒரு பெலனும் இல்லை

3

என்னுடைய மன அழுத்தத்தை எடுத்து
என்னுடைய மன எழுச்சியிடம்
தின்னக் கொடுத்து விடுகிறேன்

4

கட்டெறும்பு ஒன்று
நேருக்கு நேராக வந்த போது
வழிவிட்டொதுங்கினேன்

5

நான் என்று நீ சொல்ல வேண்டுமானால்
நான் பொருள் விளங்கும்படி
நீ எதையேனும் செய்திருக்க
வேண்டும்
ஒரு கைப்பிடி மணலை எடுத்து
கடலுக்குள்
போட்டிருந்தால் கூட
போதும்

6

இரண்டுபேருக்குப் பகிர்ந்தளிக்கத் தெரிந்தவன்
இரண்டாயிரம் பேரென்றாலும்
உணவூட்டுவான்

7

நீ கருமியாய்
இருக்கையில் கடவுளையும்
கருமியாக்கி விடுகிறாய்
பிறகெப்படி
உனக்கருள்வான் ?

நீ தந்திரசாலி என நினைத்துச் செய்கையில்
பகவான்
மகா தந்திரசாலியாகி விடுகிறான்

வேறொருவருமில்லை
நீயே உனக்கு
அவனுடைய
கதாபாத்திரம்

8

இன்றைய நாளின் மகிழ்ச்சியின் நிமித்தம்
நான்
ஒவ்வொரு நாளும்
வாழ்கிறேன்

9

எதைக் கொன்றால் நீ இருப்பாய்
என்பதை நீ சரியாக அடைந்து விட்டால்
உன்னிடம் அதன் பிறகு
எனக்கு
பேசுவதற்கு
ஒன்றுமில்லை

10

ஒன்றுமில்லாததை
இப்படி விரித்து பகுத்துப் பேசுதற்கு
எம்மாம் பெரிய
மனிதன்

11

ஒன்றுமில்லாததற்குள்
ஏராளம் உண்டு

12

மூன்று கர்ப்பிணிகள்
நேரில் நடந்து வருவதை காணும் போது
உனக்கு என்ன தோன்றுகிறதோ
அதுவே
எனக்கும் தோன்றுகிறது

13

அப்பட்டமான வெய்யில்
மழைக்கான
அறிகுறி

14

பனைமரம் அளவிற்கு
உயரமேனும்
வளர வேண்டும்
இல்லையானால்
சராசரி

15

சராசரியென்றாலும்
சராசரிக்குண்டானதெல்லாம்
கிடைக்கத்தான்
செய்யும்

16

பத்திரகாளி யாரையும்
பட்டினி போடுவதில்லை
கிடந்தால்தான் உண்டு


மொத்த உலகமும் மாபெரும் போதை

1

கர்த்தரோ
சீயோனிலிருந்து
அழைக்கிறார்

ஆதி சிவன்
கைலாயத்திலிருந்து
அழைக்கிறார்

மகா விஷ்ணு
வைகுண்டத்திலிருந்து
அழைக்கிறார்

அண்டை வீட்டுக்காரன்
மட்டுமே
அருகிலிருந்து கொண்டு
அழைக்கிறான்

2

உண்மையில்
அண்டை வீட்டுக்காரன் உங்களிலிருந்து
வெகுதூரத்திலேயே
இருக்கிறான்

வெகுதூரத்திலிருப்பதை
வெகுதூரத்தில் இருந்து அறிந்து கொண்டால்
அவன்
அண்டை வீட்டுக்காரன்

அண்டை வீட்டுக்காரனெல்லாம்
அண்டை வீட்டுக்காரனல்ல

3

வெகுதூரம் என்பதே
மிகவும் பக்கம்

4

பக்கத்தில் இருப்பதெல்லாம்
பக்கத்தில் இருப்பதில்லை

5

தரப்படுவது அத்தனையும்
ஆசிர்வதிக்கப்பட்டே தரப்படுகிறது
நாம்தான் தரப்படாத அத்தனையையும்
ஆசிர்வதிக்கப்பட்டதாகக்
கருதுகிறோம்

6

ஏளனம் செய்தவனை
நிச்சயமாக
மீண்டும் சந்திக்க வேண்டியதிருக்கும்

7

திருவள்ளுவன்
அனைவரிலும் பெரியவன்
நான்
மாணிக்க வாசகரிலும்
சிறியவன்

8

முருகன் சுற்றி வந்ததும் சரிதான்
விநாயகன் சுற்றி வந்ததும் சரிதான்

9

குறைத்து மதிப்பிட்டால் நீயே
குறைபாடுடையவன்

10

அருகாமையில் சென்று பார்
எது சாதாரணமாகத் தோன்றுகிறதோ
அது
அமிர்தம்

11

மொத்தமாக
கூட்டிக் கழித்துப் பார்க்க
நீ யாரென்பது
தெரிந்து விடும்

12

தென்னாடுடைய சிவனுக்கும்
அன்னபூரணி அவசியம்

13

எங்கெங்கும் சென்றாலும்
எங்கேயும் செல்வதில்லை

அகம் திறக்காதவனுக்கு
போதி மரம் கிடையாது

14

மொத்த உலகமும்
மாபெரும்
போதை


வைகுண்டப்பதவி

1

எங்கே நின்றாலும்
சரி தவறு என
சப்தமிட்டுக் கொண்டேயிருக்கிற
மனமது
குப்பை

2

குழம்பிய மனம்
காலம்
பிடிக்கும்

குழம்பிய மனம்
குட்டையில்
உருளும்

3

வைகுண்டப்பதவி
வாழ்வதில்
உள்ளது

4

எடுத்துக் கொள்ளத்
தெரியாதவன்
ஏமாற்றமடைகிறான்

5

எப்படி வாழ்வது
எனத் தெரியாதவனுக்கு
வாழவும் தெரியாது

6

அடியாரை இகழ்தல்
ஆயிரம்
பசுவைக் கொல்லுதல்
அடியார் என்பதில்
யவனிகாவும்
அடங்குவார்

7

சொல்லித் தருவதற்கெல்லாம்
ஒன்றும்
இல்லை

தன் முனைப்பில்
நிற்பவனுக்கு
ஏதும்
ஏறாது

8

விலங்கைக் கரைக்க
வேதம்
தேவை

painting - kesav venkataragavan

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"