எவ்வளவு ஆச்சரியமானவை

எவ்வளவு ஆச்சரியமானவை

1

அவளைத் தொடுவது ஒன்றும் பெரிய
காரியமல்ல
அவள் வளர்க்கும் அத்தனை பேய்களுக்கும்
சேர்த்து நீ
பொறுப்பெடுக்க
வேண்டும்

2

ஆதியிலே தொடங்கி
அவள் மீது
ஏறி அமர்ந்து வருகிற பேய்கள்
அவை
சுலபத்தில் அடங்காது

3

கண்கள்
ஆயிரம்
ஒளியாண்டுகளை அறியும்

4

அவளுடைய வயிறு
ஆதி நட்சத்திரமும்
ஆதி மிருகமும்
இணைந்தது

5

சாந்தமாயிரு
அது ஒன்றே
உனக்கு
அருளப்பட்டது

6

நான் இருக்கிறேன்
எனது குழந்தைகள் இருக்கிறார்கள்
உறவுகள் நட்புகள்
இருக்கிறார்கள்
காகங்கள் இருக்கின்றன
எல்லாவற்றையும் காண
கண்கள் இருக்கின்றன
இவையெல்லாம்
எவ்வளவு ஆச்சரியமானவை

7

கிடந்து துயிலும் நாய்
பதட்டத்தின் திசைகளில் எல்லாம்
கண்களைத்
திருப்புகிறது

8

இப்பொழுதில் வாழ்பவனை
இறந்த காலத்தில் வாழ்பவன்
பார்த்துக் கொண்டிருக்கிறான்
எதிர்காலத்தில் இருப்பவன்
பொறாமைப்படுகிறான்

9

எதையும் சரிப்படுத்த இயலாது
வேண்டுமானால்
நீ சரியாக
இரு

10

தேங்கிய நீர்
ஓடும் நீரை
விஷமாக்கும்

11

ஏன் மாயா

அவனை அறிந்து கொண்டேன் என
இவனை அறிந்து கொண்டேன் என
தன்னை அறிந்து கொண்டானா
இந்த
தான்

ஏன் மாயா
ஊர் முழுதும்
ஓராயிரம் மனம்
சுபாவங்களைப் புதைத்து வைக்க
காப்பியம் தேவை
காப்பியத்தைப் புதைக்க
மாமிசம் தேவை

ஏன் மாயா
பேரழகியை மீன் சந்தையில்
சந்தித்தது
அவளது தப்பா
எனது தவறா
ஞாபகமெங்கும்
மீன் நாற்றம்

ஏன் மாயா
தோல் பதனிடும்
ஆலையில்
மாட்டிச் சீரழிகிறான்
மனிதன்

ஏன் மாயா
பிசிறும் போது வெளியேற
வாசல் திறந்திருக்கிறது
கண்டறியத் தெரிந்தவனுக்கு

சும்மாயிருக்கும் சிந்தையில்
நூறு ஓட்டைகள்

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்