நாளை வந்துருச்சுப்பா எழும்பு

நாளை வந்துருச்சுப்பா எழும்பு



அம்மன் இன்று புன்னகை பூத்தாள்
நேற்று புன் முறுவல்
அதன் முன்பு மென் நகை
அதன் முன்பு கோபம்
அதன் முன்பு தாபம்
அதன் முன்பு சோகம்
அதன் முன்பு காதல்
அதன் முன்பு வாய்விட்டுச் சிரித்தாள்

தினந்தோறும் நானும்
பார்த்து வருகிறேன்

அம்மன் ஒருபோதும் ஒருபோல
இருந்தததில்லை
கல்லென்றாலும் காணும் கண்களில்
வேறொன்று செய்கிறாள்
நீல வேணி

2

காலைப் பொன்நிறத்தின் சாரல்
மின்மினிகள்
ஒழுகுவது போலும்
நிலம் நோக்கி
இறங்குகிறது
மழையைப் பார்க்க வேண்டுமெனில்
முதலில்
மழை என்ற சொல்லை
மறக்க வேண்டியிருக்கிறது
அல்லாமல் காணும் மழை
மழை என்கிற அர்த்தம்

மழை
அதற்கு வெளியில்
பெய்து கொண்டிருப்பது

3

இன்று காலையில்
ஆகஸ்ட் மாதத்திற்கு முப்பத்தியொரு நாட்கள்
என தெரிந்து கொண்டேன்
இருந்தாலும்
எத்தனை நாட்களுக்கு இது வரும்
என்பது தெரியாது
தமிழ் மாதத்தில் முப்பத்திரண்டு நாட்கள் கூட
இருக்கின்றன
முன்பெல்லாம் மூட்டை மடக்கி பள்ளம் மேடு
என அறியும் வழி
ஒன்றினைத் தெரிந்து
வைத்திருந்தேன்
எப்படியோ
அது கை நழுவிப் போய்விட்டது

எதிர்பாராமல் ஒருமுறை வாரத்திற்கு
எத்தனை நாட்கள்
எனக் கேட்டு ஒருவர்
பொது இடத்தில் அவமானப்படுத்திவிட்டார்

எனக்கு மூன்று நாட்களைத் தெரியும்
நேற்று இன்று நாளை

திடீரென எத்தனை மாநிலங்கள்
என்று கேட்டு விடுகிறார்கள்
மாவட்டங்களைக் கேட்கிறார்கள்
சிலசமயம்
குறளில் எத்தனை குறள்
என்று கேட்கிறார்கள்

நேற்று ஒருவர்
நள்ளிரவில் எழுப்பி
தமிழில் எத்தனை
எழுத்துக்கள்
எனக் கேட்கிறார்

ஆண்டிற்கு எத்தனை நாட்கள் என அதிரடியாகக் கேட்டு
தலைகுனியச் செய்கிறவர்களும்
இருக்கிறார்கள்

எண்களில் பத்து தெரியும்
ஒன்றாம் வாய்ப்பாடு அத்துப்படி

இந்த வாழ்க்கையை வாழ்வது
எவ்வளவு கடினம்
பாருங்கள்

4

ஒரு நாளில் அனைத்தும் குழம்பி
விட்டது
ஆட்டின் போட வேண்டிய இடத்தில்
ஆங்க்ரி
ஆங்க்ரி போட வேண்டிய இடத்தில்
ஆட்டின்
விருப்பத்தின் இடத்தில் சோகம்
சோகத்தின்
இடத்தில்
விருப்பம்

ஒன்றுமாகிவிடவில்லை
ஒன்றிற்கும்

தேவரீர் என்னை ஆசிர்வதிக்க
இவ்வளவு தாமதமா ?

5

நாலுநாலு பேராகப்
போய்க்கொண்டிருப்போம்
நாலுநாலு பேராக
வந்து
கொண்டுமிருப்பார்கள்

வேறொன்றும் இல்லை
என்றும்
தள்ளி விட முடியாது
வைத்துக் கொள்ளவும் முடியாது

நான்கு திசை வழியாகவும் உள்ளேயும்
வரலாம்
வெளியேறவும் செய்யலாம்

6

நாலு நாலுபேராக வந்து
நாலுநாலு பேராக சென்று

நாலுபேர் வந்தார்கள் நாலுபேர் சென்றார்கள்
என அறிந்து முடிப்பதற்குள்
நாலுபேர்
வந்து விடுகிறார்கள்

நாலுபேரைக் குறை சொல்லி
நாலுபேரை நிறை சொல்லி
முடிப்பதற்குள்
நாலுபேர்
வந்து விடுகிறார்கள்

நான்குபேரை சுத்தமாக
அறிந்து கொள்வதற்குள்
நாலுபேர் வந்து விடுகிறார்கள்

இவ்வளவு சிறிய பயணத்திற்கு
எவ்வளவு பெரிய
போட்டி ?

7

நாலுபேர் இருக்கிறார்கள் என்று
நம்பித்தான் எல்லாவற்றையும்
செய்ய வேண்டியிருக்கிறது
நம்புவதற்கு நாலுபேர்
சந்தேகிக்க நாலுபேர்
நட்பாயிருக்க நாலுபேர்
பகைக்க நாலுபேர்
அன்பாயிருக்க நாலுபேர்

பாடையிலும் நாலுபேர்

நாலுபேருக்கு அதிகம்
எதிலும்
இல்லை

8

கொலையுண்டவனுக்கு
நான்குபேர் என்றால்
கொலை செய்தவனுக்கும்
நான்குபேர்

உடைத்தவனுக்கும் நான்குபேர்
வைத்தவனுக்கும்
நான்குபேர்

9

நாலுபேர் உள்ளே வந்தால்
நாலுபேர் வெளியேறிவிடுகிறார்கள்
நாலுபேர் வெளியேறினால்
நாலுபேர் உள்ளே வருகிறார்கள்
ரொம்பவும் சின்ன அறைதான் போலிருக்கிறது
இந்த இருதயம்

10

யாரையோ எதிர்க்கிறீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள்
அது யாருக்கோ பிடிக்கிறது
எதிர்க்கவில்லையெனில் அதுவும்
யாருக்கோ
பிடிக்கிறது

அன்பு செலுத்துகிறீர்கள் எனில்
யாருக்கோ பிடிக்கிறது
யாருக்கோ
பிடிப்பதில்லை

இந்த யாருக்கோவை உங்களுக்கு
ஒருபோதும் தெரியாது என வைத்துக் கொள்ளுங்கள்
யாருக்கோவை அக்கறையின்றி பேசிக் கொண்டிருக்கிறீர்கள்
எனில்
இறைவனுக்கு
உங்களை
பிடித்து விடுகிறது

11

இன்மையின் நடமாட்டம்

1

இரண்டு தாவர புதர்களுக்கு நடுவே வெற்றிடம்
இரண்டு பச்சைக் கிளிகள் இங்கும் அங்கும் பறந்து
வெற்றிடத்தில்
பச்சைக் கோடுகளை
வரைந்து கொண்டிருந்தன
வெற்றிடம் முழுதும் பச்சையான பின்
அவையிரண்டும் கூடக்கூடும்
என நினைத்தவண்ணம்
திரும்பி விட்டேன்
வெற்றிடத்தின் பச்சைக்கு
நான் எவ்வளவு சிறிய அர்த்தத்தை
வழங்குகிறேன் ?

2

அழிந்த கவிதையொன்றை மீட்க
சிகிரெட் பிடிக்குமாறு உத்தரவிட்டது கவிதை
வேறொரு கவிதை பிறந்து வந்தது
அழிந்த கவிதையெழுதிய
மற்றொரு கவிதை

3

பைத்தியக்காரத்தனத்தை இழந்த கவிதை
முடிவில்
தன்னையும் இழந்தது

4

மீன்வாசனை வீசும் இடத்தில்
சந்தித்த
பெண்
நினைவில்
மீன் வாசம்
வீசுகிறாள்

5

இறங்கியிறங்கி படிக்கட்டு வழியே
பெருங்குளத்தில்
முடியும் தெருவுடையவளுக்கு
பிருஷ்டம் தாண்டி
வளரும்
கூந்தல்

6

பழைய வீடு
படிக்கட்டேறினால்
ஒரு உடல் மீது
மோதுவது போலும் இருக்கிறது
யாருமில்லாத
வீடு

7

எப்போதும் அந்த குளத்தில்
யாரேனும் குளித்துக் கொண்டே இருக்கிறார்கள்
இல்லாத போது
அந்த குளம்
இன்மையில்
இருக்கிறது

எப்போதும் அந்த தெருவில் நடமாட்டம்
இல்லாத போது
இன்மையின் நடமாட்டம்

8

நள்ளிரவுக் குளத்தில்
விழுந்து கிடந்தது பௌர்ணமி
எடுக்க குனிந்தவனை
அந்த குளம் அதன் பின்
மறக்கவேயில்லை

அவன் இன்மையின் பேரிருப்பை
எடுக்கத் துணிந்தான்

12

பாண்டம் எதனால் நிரம்புகிறது

1

பாண்டம் எதனால் நிரம்புகிறது
தன்னையே போட்டுப் பார்த்தாலும்
தன் பாண்டம்
நிரம்பாது

2

குறை
இருந்த இடத்திலேயே
இருக்கும்

3

பாத்திரம் பாதி நிரம்பியிருந்தால்
பாதியே
அதன் கொள்ளளவு
மீதி நிரம்பாது

4

மிச்சம் இருக்கும் வரையில்
மறுபிறப்பு

5

மீண்டும் மீண்டும் பிறப்பவன்
மிச்சமுள்ளவன்

6

ஒருத்தியெடுத்து
பிரித்து வெளிப்படுத்தினாள்
பிரித்து பிரித்து
பார்த்துக் கொண்டேயிருக்கிறது
மனக் குரங்கு

7

இந்த நிலவை நேற்று நான்
பார்த்ததில்லை
இந்த தண்ணீரை நேற்று நான்
குடித்ததில்லை

8

யாதும் ஊரே என்றவன்
எவ்வளவு பெரியவன்

9

இங்கேயிருக்க முடியுமானால்
உன்னால்
எங்கேயும் இருக்க முடியும்

10

இருப்பது என்பது இருப்பது
தேனில்
இருப்பது
தித்திப்பது

11

தித்திக்கத் தெரியாதவனுடன்
தொலைதூரம் செல்லாதே
திக்கே தெரியாதவனுடன்
சிறுபொழுதும் சேராதே

12

வள்ளலார் மூப்பா வைகுண்ட சாமி மூப்பா
நாராயண குரு மூப்பா நாராயணன் மூப்பா
கிடந்து அல்லாடும் பேதையர்
உலகம்

13

தனக்கு ஒவ்வாதவர்களைப் பார்த்து தெருவில் இறங்கி
மனம் குரைக்கத் தொடங்கியது
திருப்பி அழைத்து வந்து
அதன் நாற்காலியில்
அமர வைத்தேன்

தனக்கு இசைவானவர்களை நோக்கி
இளிக்கத் தொடங்கியது
திருப்பி அழைத்து வந்து
அதன் நாற்காலியில்
அமர வைத்தேன்

இச்சை இனாமென்று ஓடும் அதனை

திருப்பித் திருப்பி அழைத்து வந்து
அதன் நாற்காலியில்
அமர வைத்தேன்

ஒருபோதும் நாற்காலியில்
நானிருந்தேனில்லை.

14

இந்தக்காலம் இந்தக்காலம்
என்கிறார்களே
இந்தக்காலம்
இன்னும்
எத்தனை காலத்திற்கு
இருக்கும் ?

15 

இன்று காலையில்
நீண்ட நாட்களுக்குப் பிறகு
ஒரு செய்தித்தாளையெடுத்து முழுவதுமாகப்
படித்தேன்

மடித்து வைத்ததும்
பல்லாண்டு பழைய பேப்பர் அது
என்று சொன்னாள் மனைவி

ராசி பலன் உட்பட எல்லாமே
சரியாகத் தான் போட்டிருந்தார்கள்
அரசியல் செய்திகள் அருமை
குற்றச்செய்திகள் இனிமை
வட்டாரச் செய்திகள் அருமையோ அருமை
தலையங்கம்
சுடச் சுட

நீண்ட நாட்களுக்குப் பிறகு
பல்லாண்டுகளுக்கு முந்தைய பாதையில்
இன்றைய காலைநடையும்
சென்று வந்ததை
யாரிடம் சொல்வது ?

"நாளை வந்துருச்சுப்பா
எழும்பு"
என்றெழுப்பிய மகள்
வளர்ந்து
முன்னிற்கிறாள்

16

எல்லா இடங்களிலும்
நான் யாரு தெரியுமாலே என
கேட்ட வண்ணம்
நிற்கிறான் பாருங்கள் ஒருத்தன்
அவனை
எனக்குத் தெரியாது
உங்களுக்குத்
தெரியுமா ?

பரவாயில்லை
அவனை
அவனுக்காவது
தெரியுமா ?









Comments

  1. உங்கள் கவிதைகளும் எழுத்துக்களும் மிக நன்று.இவை அதிகமான வாசகர்களுக்கு சென்று அடையவேண்டும்.

    அன்புடன்,
    சு.செல்வராஜ்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"