10 கவிதைகள்

 10 கவிதைகள்


1


பூங்கொடி மருத்துவமனையில் இருந்தாள்

மகனுக்கு சர்ஜரி
ஐந்து வயது

இதயத்தைக் கீறிப் பிளந்து
படுத்துக் கிடந்தான் பாலகன்

பூங்கொடி கருதியவர்கள்
எல்லோருமே மருத்துவமனைக்குக்
காண வந்தார்கள்
இல்லையென்று சொல்லமுடியாது
இருந்தாலும் பூங்கொடி எதிர்பார்த்த அளவிற்கு
கனியவில்லை
அவர்கள் எதிர்பார்க்காத
ஏதோ போல வந்தார்கள்
அவள் எதிர்பார்த்த
ஏதோ போல
வரவில்லை

முக்கியமாக பூங்கொடி வெறுத்து ஒதுக்கி
வழிவிட்டோடியவன்
இந்த பரிதவிப்பில்
வந்து விடுவான் என எதிர்ப்பார்த்தாள்
வரவில்லை

மொத்ததில்
பூங்கொடிக்கு சர்ஜரியில்
திருப்தியில்லை

இரண்டி வாட்டி ஆயிருச்சும்மா
இப்படில்லாம் பண்ணா அப்பா வர மாட்டாருமா
இனி தாங்க மாட்டேம்ம்மா..
என்று மெல்ல முனகினான்
பையன்

"சபாஷ்
பேச்சு வந்துருச்சு பையனுக்கு
தப்பிச்சிருவான் "
தற்செயலான தாதி
கடவுளின் பாஷையை
பேசிக்
கடக்கிறாள்


2


மழை பார்க்க வேண்டுமா

அச்சு அசலாக
மழை மட்டும் பார்க்க வேண்டும்
மழை பற்றின நினைவுகள் நீக்கி
மழை பற்றின கவிதைகள் நீக்கி
குறிப்பாக காதல் நீக்கி
மழை பற்றி
சொல்லப்பட்டனவெல்லாம்
நீக்கி நீக்கி

நின்று
மழை பார்க்க வேண்டும்

நனையக் கூடாது
நனைந்தவன் காண்பது
மழை தரும் உணர்வு
மழை
அல்ல


3


ஒரு சட்டையை எடுத்து
உதறுவது போல
உன்னை எடுத்து
உதறிப் பார்
இன்னும் இன்னும் ..
மேலும் அதிகமாக
நார் நாராகக் கிழியும் அளவிற்கு...

உனக்குள்ளிருந்து பாம்பு வரும்
கோழிகள் வரும்
புழு வரும்
நத்தைகள் ஓடும்
எறும்பு வரும்
சிங்கம் வரும்
நரியோடும்
எண்ணம் உயிரான அத்தனையும்
வரும்

அத்தனையும் சேர்ந்ததுதான் நீ
பிரிந்தால் பிரிந்து விடும்
நார் நாராக

எடுத்துக் கோர்த்துப் பார்
மீண்டும் ஒவ்வொன்றாக;
தெய்வம்
துலங்கும்


4


மனதில் எழுந்த கவிதையொன்று
எடுக்கும்முன்னே விலகிச் சென்றது
யோசித்து முயற்சித்தேன்
எவ்வளவு யோசிக்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு
விலகி
நெடுந்தூரம் சென்று விட்டது
ஒரு கனவை மீட்க முயன்று அது பின்னகருதல் போல

ஆனால் நொடியில்
அது ஏற்படுத்திய மகிழ்ச்சியின்
கதகதப்பு
நெடுநேரமாக

என்னுடைய
இனிப்பிலிருக்கிறது
தோன்றியதன் ரசம்


5


மைகுட்டிக்கு ஒரு பஞ்சு மெத்தை இருக்கிறது
படுத்துக் கொள்ளலாம்
சினந்தால் உயிர் முடிகள்
இருக்கின்றன
எதிர்க்கலாம்

நான் உன்னைப் பற்றி அருவருப்பதெல்லாம்
என்னைப் பற்றியும் தானே
எனக்குள்ளும் பஞ்சு மெத்தை இருக்கிறது
படுத்துக் கொள்ளலாம்
சினத்தால் உயிர் முடிகள்
இருக்கின்றன
எதிர்க்கலாம்


6


அன்பிரண்ட்

அறிவைக் கொண்டுதான்
அன்பிரண்ட் செய்கிறேன்
என்றாலும் சிலசமயம் பிழை நேருகிறது
அன்பாயிருப்போரும் அன்பிரண்ட் ஆகிறார்கள்
அவர்களை பிறகு மீட்டெடுக்க இயலாது
அவர்கள் நமகொரு நீந்திக் கடக்கவியலா
தீவாகி விடுகிறார்கள்
எதிரியாகும் நண்பனின் மனைவி
மெல்ல மெல்ல கடலுள் மங்கி மங்கி
தனித்தீவாகி விடுவதைப் போல

#

அன்பிரண்ட் ஆகவேண்டியவனால்
பிழையாக அன்பிரண்ட் ஆகிறவர்கள்
விசித்திரமானவர்கள்
விதி கொண்டவர்கள்

#

இனி சரிவரமாட்டான் என்பதால்
அன்பிரண்ட் ஆவதில்லை
பகைவன் என்பதால் அன்பிரண்ட் ஆவதில்லை
நான் வேறொருவருக்கு அன்பிரண்ட் ஆவதைப் போலவே
அவனும் எனக்கு அன்பிரண்ட் ஆகிறான்
எனக்கு அவன் வேறொருருவன்
அவனுக்கு நானும் வேறொருவன்

#

அன்பிரண்ட் ஆகிறவன்
என்னுடைய கூட்டுக்கு வெளியில்
நழுவி விழுகிறான்
பிரபஞ்சன்
தன் மடியில் அவனைத்
தாங்கிக்
கொள்கிறது
இருதயம் கொண்டு
ஏந்திக் கொள்கிறது

#

இறைவா
அவன் அதிலிருந்து மேலும்
நழுவி விழாதிருக்கட்டும்
சிறுவுலகை இழந்தவன் பேருலகில்
நிலைக்கட்டும்


7


ஒரு புதிய கோயிலில்
ஒரு புதிய பெண்மணி
நடமாடுகிறாள்
அன்னத்தை எடுத்து வைக்கிறாள்
விளக்கைப் பூசி எடுக்கிறாள்
உம்பான் பெரையின்
சூட்டு மணம்
பள்ளியறையை நிறைக்கிறது

பழைய கோயிலில்
பழைய பெண் நடமாடுகிறாள்
புதிய குரல்களை
எச்சரிக்கை செய்கிறாள்
என்ன செய்யக் கூடாது என
உபதேசிக்கிறாள்
சிடுசிடுக்கிறாள்
வடுச்சொற்கள்.
சாமி கருவறையில்
திரும்பிக் கொள்கிறார்
மடப்பள்ளியின்
நெய்யரிசியில்
பூஞ்சை மணம்

புதியவளுக்கு வயது எண்பது
என்றாலும் மணக்கோலம்
நளினம்
பழையவள் பால்ச்சிறுமி
ஆனாலும் மாமியாரின்
திடுக்கு

கோயிலில் என்றில்லை
காலம் எப்போதுமே
மிகவும் குழப்பமானது

எந்த வயதிற்கு எந்த காலம் என்று
விளங்குவதேயில்லை

பழைய சாமி
புதியவள்
எப்போது தோன்றுவாள்
என்று பார்த்துக் கொண்டேயிருக்கிறார்
போற்றி நடையை பூட்டிச்
சாற்றுவது வரையில்


8


பச்சை நிறத்தில் ஒரு பறவை
ஒளிகீற்றுபோலே நுழைந்து
வானுக்கு உயர்கிறது
பார்த்துக் கொண்டு நிற்கிறேன்
அந்தப்பக்கத்தில் ஒரு பெண் நிற்கிறாள்
அதனால் காண்கிறேன் என நினைக்கிறீர்கள்
சரிதான்
பச்சை நிற ஒளிக்கீற்று
பெண்ணாக இருக்கலாகாதா என்ன ?
அவளுக்குக் கிளிப்பச்சை
இருக்கலாகாதா என்ன ?

குழந்தையின் சிரிப்பிலொரு
தெய்வம்
உற்றுக் காண்கிறது என்னை
குழந்தையின் தாய் மீது மையல் என்கிறீர்கள்
இருக்காதா பின்னே
இப்படி உற்றுக் காணும் தெய்வத்தின் புறத்தில்
காதல் கசிந்து உருகாதா என்ன ?

பகவானின் சந்நிதியில்
சர்க்கரைப் பொங்கலுக்காய்
நிற்கிறேன் என்கிறீர்கள்
தேனோடு தினையாக தித்திக்கச் செய்வோன்
மேனி இனிக்க ஒளிரானோ என்ன ?


9


என்னுடைய கடமைகள்
ஏற்கனவே நிர்மாணிக்கப்பட்டிருக்கின்றன
எடுத்துச் செய்வது மட்டுமே நான்

செய்யாமல் விட்டால் பங்கம்
செய்து தீர்த்தால் பணிவிடை

அத்தனை தடையையும் அகற்றிப் பார்த்தால்
எடுத்துச் செய்வது அதனுள் காணும்


10


குழந்தையின் உற்சாகத்திற்கு
எவ்வளவு காரணங்கள் சொல்கிறீர்கள் ?
அது உங்களைக் கேட்கிறதா என்ன ...

கடலின் தாளத்திற்கு எவ்வளவு நோக்கங்கள்
கற்பிக்கிறீர்கள்
அது உங்களை அனுசரிக்குமா என்ன ...

###

ஒரு அலை மடங்கி மறு அலை
ஒரு தாளம்.
அதன் பின்னே
மற்றொரு தாளம்

ஒரு தாளம் உருவாக்குகிறது ஒரு அலையை
அலையின் பின்னே மற்றொரு அலை
பொங்கி வருகிறது

###

முதியவர் காணும் கடலுக்கு
வேறொரு அர்த்தம்

###

எவ்வளவு தூரத்திற்குப் போக முடியுமோ போ
ஆழ்கடல் மீனுக்கும் உனக்கும் ஒரு வேறுபாடு உண்டென்பதை கண்டுகொள்ள
ஆழ்கடல் மீனுக்கும் உனக்கும் ஒரு வேறுபாடும் கிடையாது என்பதையும் சேர்த்து அறிய
எவ்வளவு தூரத்திற்குப் போக முடியுமோ போ

###

ஆழ்கடல் சென்றால் தெரியும்
ஆழ்கடல் அலையொரு
மெல்லசைவுக் கோடு

###

உற்சாகத்திற்கு பெண் என்றும் பெயர் உண்டு
உற்சாகத்திற்கு மரம் என்றும் பெயர் உண்டு
உற்சாகத்திற்கு கடல் என்றும் பெயருண்டு
நமச்சிவாயம் என்ற பெயரும் உண்டு

###

உற்சாகத்தை
நீயடைந்தால் நீ நமச்சிவாயம்
நானடைந்தால் நான்
நமச்சிவாயம்




Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"