கவிதைக்கு இரண்டு ரூபாய் என்று விலை

 என் பணி செய்வது...


என்னுடைய கவிதைகளை நானே தொகுத்து சின்ன சின்ன தொகுப்புகளாக நானே வெளியிட்டு விடுவது என முடிவு செய்திருக்கிறேன்.

கவிதைகளைப் பொறுத்தவரையில் கடந்த ஐந்து வருடங்களில் ஏராளமாக எழுதியிருக்கிறேன்.பின்னுக்கு கிளறிச் செல்லச்செல்ல ஏராளம் புறப்பட்டு வருகின்றன.பல கவிதைகள் மனதில் மறந்தவை.யாரோ எழுதியவை என்பது போல வாசிக்க ...ஓ நீ தான் எழுதினாயா ..என்பது போலும் இருக்கின்றன.முற்றிலும் வேறொரு மனம் கொண்டு எழுதபட்டவையாக இவை உள்ளன.கடந்த கால முன்தொகுப்புகளில் இருந்து இவை முற்றிலும் வேறுபட்டு இருக்கின்றன.ஆனால் முன்தொகுப்புகளின் வழியே ,அவற்றின் மீது ஏறி அமர்ந்தே இன்று இந்த இடத்திற்கு வந்து சேர்ந்திருக்கிறேன்.அவற்றின் முதுகில் ஏறாமல் இவ்விடத்திற்கு வந்து சேர்ந்திருக்க நியாயமில்லை.

ஐம்பது ஐம்பது கவிதைகளாக பின்னிருந்து தொகுத்து வெளியிட வேண்டும்.அதுவே எளிமையானது.ஐநூற்றுக்கும் அதிகமாக எழுதியிருப்பேன் என நினைக்கிறேன்.பின்னால் செல்லச் செல்ல குகை போல நீண்டு செல்கிறது.ஞானக்கூத்தன், ஒரு கவிஞன் இருநூற்றம்பது கவிதைகளுக்கு மேல் எழுத முடியாது என்று சொல்லியிருப்பார்.அது என்ன கணக்கு என்று தெரியவில்லை.ஒருவேளை ஒவ்வொரு கவிஞனிடத்திலும் தேறுபவற்றைக் கணக்கில் கொண்டு சொல்லியிருப்பாரோ என்னவோ ? எப்படியிருந்தாலும் இப்போது நானெழுதியிருப்பவை; ஐம்பது கவிதைகள் வீதம் ஒரு தொகுப்பு என வைத்துக் கொண்டாலும் பத்து தொகுப்புகளுக்கும் அதிகம் வரும்.ரொம்ப அதிகம் பிச்சுப்பிடுங்கி பேன் எடுக்கத் தேவையில்லை.விக்ரமாதித்யன் ஒருமுறை கவிதையை திருத்தி எழுதுவீர்களா? என கேட்டமைக்கு ,அதற்கு நேரம் கிடைத்தால் ,அடுத்த கவிதையை எழுதிவிடுவேனே! என்றார்.என் தற்போதைய பதிலும் அதுவே.கவிதை அமையாதவர்களின் பணி பேன் எடுப்பது..

கிளறிக் கிளறி ஒவ்வொன்றாக எடுத்துச் சேர்க்க வேண்டும்.அதுவே இப்போது என் பணி

மலினமான காகிதத்தில்,மலிவான அட்டையில் எளிமையாக இந்த தொகுப்புகள் வர வேண்டும் என்பதே என் தற்போதைய மனதின் விருப்பம்.படித்து பிடிக்கவில்லையெனின் நிலக்கடலை பொட்டலம் கட்டிய காகிதம் போல கசக்கி வீசிவிட்டுச் சென்றுவிடவேண்டும்.தேறுமாயின் உங்களுடனே தங்கும்.எறிய முடியாது.தமிழ் நாட்டில் தற்போது லே அவுட் ஆர்டிஸ்ட்கள் அதிகரித்து விட்டார்கள்.நானும் நிறைய புத்தகங்களுக்கு வடிவமைத்திருக்கிறேன்.சிறந்த புத்தகங்களுக்கும் கூட.அப்போது நல்ல புத்தகங்களுக்கு மட்டுமே நல்ல வடிவமைப்பு இருந்த காலம்.இப்போது மோசமான புத்தகங்கள் அனைத்தும் நல்ல வடிவமைப்பில்,டிஜிட்டல் போர்டுகள் போல வெளிவருகின்றன.இப்போது அது தேவையில்லை என்று தோன்றுகிறது.இப்போது சாணி மணமே அவசியம்.எளிமையுடன் செய்வதற்கு அருகிலேயே எளிய அச்சகமும் இருக்கிறது.காரியம் எளிது.மேலும் இந்த பணிகள் செய்து முடிப்பது,அடுத்த பணிக்குள் தடங்கலின்றி செல்ல வழிவகுக்கும்

ஆனால் கவிதைக்கு இரண்டு ரூபாய் என்று விலை

முன்னூறு பிரதிகளே அச்சிடுவேன்.முன்கூட்டி விழைவோர் முன்கூட்டி கணக்கில் பணம் செலுத்தி விட்டுக் காத்திருக்கலாம்.காத்திருப்பதில் சம்மதம் என்றால் பத்து தொகுப்புகளுக்கும் சேர்த்து பணம் செலுத்தி விட்டும் காத்திருக்கலாம்.ஒவ்வொன்றாக முகவரிக்கு வரும்.எப்படியென்றாலும் நன்றே

வாழ்க வளமுடன்


ஒரு தொகுப்புக்கு என பணம் அனுப்ப விரும்புவோர் ரூ 100 கணக்கில் செலுத்திவிட்டு முகவரியை மின்னஞ்சலில் அறியத் தாருங்கள்.10 தொகுதிகளும் வேண்டும் என நினைப்பவர்கள் ரூ 1000 கணக்கில் செலுத்திய பின்னர் முகவரியை தெரியப்படுத்துங்கள்


கணக்கு விபரம்.


Lakshmi Manivannan

Ac No - 183100050300648

tamilnad mercantile bank ltd

IFSC-TMBL0000183


மின்னஞ்சல் முகவரி - slatepublications@gmail.com

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"