கவிதைகள் - 16

கவிதைகள் - 16

ஏரியைக் கடந்து செல்லும் போது
ஏரியை எடுத்துச் செல்கிறேன் என்று சொல்லமாட்டேன்
சிறுவயதில் மாடுகளுடன் சேர்ந்து குளித்த
ஊருணியை
அதில்
விட்டுச் செல்கிறேன்
என்பது
ஏரிக்குத் தெரியும்

ஏரி தன்னில் நீந்தத்
தொடங்குவதை அப்போது
அறியும் அந்த
பால்ய வயதின்
ஊருணி

பிறகு
இரண்டுபேரும் முங்கிக் குளிக்கத் தொடங்குகிறார்கள்
என்னுடைய
நீலத்தில்
சின்னஞ்சிறிய குளம்
சமுத்திரமாக

2

வழக்கமாக போகும் தெருவில்
நான் எதையும் காண்பதில்லை
வழக்கமாகப் போகும் தெருவிலிருந்து
படியிறங்கி
அல்லது
படியேறி
வழக்கமற்ற தெருவுக்குள்
காலடி எடுத்து வைக்க
வழக்கமாக போகும் தெருவின்
அத்தனை காட்சிகளையும் பார்த்து விடுகிறேன்

அப்போதும் வழக்கமற்ற தெருவின் காட்சிகளைப்
பார்க்கிறேனா ?

வழக்கமற்ற பெண்
சுட்டிக் காட்டிச் செல்கிறாள்
எனக்குள் எப்போதும்
கனன்று கொண்டிருக்கும்
காதலை

அக்கரையில் இருந்து
ஊர் பார்க்கப் பிடிக்கிறது

எப்போதும் விளிம்பிலிருந்து
பார்த்து கொண்டிருக்கிறேன்
மையத்தை

வழக்கமான பேருந்தில்
நான் தூங்கிய வண்ணம் பயணிப்பது
ஏன் என்பது
இப்போது
உங்களுக்கு
விளங்கியிருக்கக் கூடும்

குழந்தை வைத்து உடைத்த
பொம்மையில்
இருக்கிறதென்
பொருள்

3

இரும்பு மனுஷியைக் காண
கூட்டிச் சென்றான் நண்பன்

இரும்பு மனிதனைப் போல
அவள் இரும்பு மனுஷி
என்ற அறிமுகத்தோடு

இரும்பு மனுஷி இரும்புக்
கோட்டைக்குள் இருந்தாள்
இரும்பு நகைகள் அணிந்திருந்தாள்
இரும்பு
மட்டுமே அவளின் உபயோகம்
இரும்பு மனிதர்களின்
ராணுவத்தில்
ஐந்தாறு இரும்புக் கோழைகள்

டாய்லெட் எப்படி போவீர்கள்
என்று இரும்பு மனுஷியைப்
பார்த்துக் கேட்டேன்
வெஸ்ட்ரன் டைப் இரும்பு டாய்லெட்
உபயோகிக்கும்
இரும்பு மனுஷி
மலம்
துரு துருவாய் போகிறதென
சொல்கிறாள்

இரும்பைச் சாப்பிட்டால்
வேறு எப்படித்தான்
அது போகும் ?

சரியாகத்தான் நடக்கிறது எல்லாம்
இரும்பு மனுஷியின்
இரும்பு வீட்டில்

பாவம் இரும்பு மனுஷி வீட்டில்
வளரும் இரும்பு நாய்க்குட்டி
இருமுவது போலும்
குரைக்கிறது

4

உத்திரம் இடிந்து நொறுங்கிய கொட்டாரம்
நா நூறு வருட புளியமரம் பேய்க் கோலம் பூண்டு 
தின்று ஜீரணிக்கும் கோட்டை மதிற் சுவர்
நீ பெரிதா நான் பெரிதா என வானெழும்பி
கேட்கிறது

பூசையற்றுப் போன பின்வாசல் பகவதி
பிறழ்வுற்றுக் கிடக்கிறாள்

மாதவிடாய் கழுவி நாறிய
ராஜகுமாரிகளின் பின் கொல்லையில்
செழித்து நிற்கும் புற்களில்
அறுத்த கடாவின் ரத்த மணம்
கொழுப்புக் கவிச்சி

காலம் பகிரங்கமாக கீறப்பட்ட
உடலாய் வெயிலடிக்கும்
கொட்டாரத்தின்
முற்றத்தில்
கோலமிட்டு
மலரிட்டுச் சென்றிருப்பவள்
கொட்டாரத்திற்கு
வெளியில் வசிப்பவளாக
இருக்கலாம்
நான் அவளை கொட்டாரத்தினுள்
இருப்பவளாக
விரும்புகிறேன்
வயததிக
பால்ச் சிறுமியாக

அவள் வாள் வைத்து வரைந்த
கோலம்போலும் இருக்கிறது
அது

[ வேலுத்தம்பி தளவாய்க்கு ]

5

நான் அந்த ஊருக்குப் போய் வந்தான்
நான்
இந்த ஊருக்குப் போய் வந்தான்
எந்த ஊருக்குப் போய் வந்தாலும்
தன் சொந்த ஊரில்தான்
இருந்து கொண்டிருக்கிறான்
இந்த
நான்

அவருடன் செல்கையில்
அவர் காட்டித் தந்தார்
இவருடன் செல்கையில்
இவர் காட்டித் தந்தார்
எல்லோருடன் செல்கையில்
புயல்வேகத்தில் படிவிட்டிறங்கி
எல்லோருடனும் சேர்த்தேறி
அமர்ந்து கொண்டது
அவருக்கும் தெரியவில்லை
இவருக்கும் புரியவில்லை

இந்த நானை எடுத்துக் கொண்டுதான்
பெருமழையில்
ரயில் பயணத்திலும் போய்க் கொண்டிருந்தான்
தன் மாயவுலகை
தானே தாண்டித் தாண்டி செல்கிறது
இந்த நான் பயணிக்கும்
சொந்த ரயில்

6

ஒரு கவிஞன் பலசமயங்களில் கவிஞன் அல்லாதவனாகவும் இருக்கிறான்
ஒருகவிஞன் பலசமயங்களில் கவிஞனாகவும் இருக்கிறான்
ஒருகவிஞன் பலசமயங்களில் காட்டுப்பூச்சியாகவும் இருக்கிறான்
எப்போதோ
சிலசமயங்களில்
எப்போதோ
தவறவிட்ட
இலந்தைப் பழமாகவும் இருக்கிறான்
ஒருபெரும்
விபத்துக்கு நிகராக
ஒரு முதுபெரும் பேருந்து
ஏறி மிதித்துச் சென்ற
ஒரு நாய் போல

அது குரைக்கும் சப்தம்
எழும்பும் காட்சியை
புதுவேலை செய்பவனாகவும் இருக்கிறான்
ஒரு பிரம்ம முகூர்த்தத்தில்

7

எனக்கு ஸ்தல புராணம் கிடையாது
வரலாறும் இல்லை
உளவியலுக்கு வேலை இல்லை
பாரம்பரியம் கிடையாது

நியாபகத்தை
வெட்டி விட்டு விட்டேன்

நித்தத்தில் வலித்து
விரிந்த மலர்
எனதுடல்
சரித்திரம் தேடாதே
வந்து பார்
ஆனால்
தொடாதே

நீ தொட்டு எடுத்துக் கொள்ள
என்னிடம்
ஏதும் கிடையாது



உள்ளும் புறமுமாக
வந்து செல்கிறது அலை
உள்ளும் புறமுமாக
அசைகிறது கடல்

உள்ளத்தில் கடல் வந்து நிரம்ப
புறத்தில்
கிடந்தது புரள்கிறது
இந்த மாலை

நினைவுகளில்
மணல் ஊரல்

கடலுக்கும் எனக்கும் இடையில்
எழும்பி நிற்கும் பாலத்தில்
அமர்ந்து
இருவருமே பேசிக் கொள்ளவில்லை

கடல் வெளியிலிருக்கிறதென்று
தோன்றும் 
மாயை



பச்சை பக்கட்
சிவப்புக் குடம்
நீல தூக்குவாளி
ஆரஞ்சு நிறத்தில்
பிளாஸ்டிக் வாரியல்
நடுவில் உயர்ந்து நிற்கிறது

சைக்கிளின் பின்புறத்தில்
வண்ணமயமாக கட்டியிழுத்து
வந்து கொண்டிருக்கிறான்
இன்றைய நாளின்
வீதி வியாபாரி
மனமெல்லாம் நிறைந்து நிற்கிறாள்
இளைய மகள்
கனவில் வலித்து
மிதிபட்டு வந்து கொண்டிருக்கிறது
சைக்கிள்

அம்மன் வாகனத்தில் வருகிறாளென்று
எழுந்து நின்று
கும்பிட்டு விட்டேன்

10 

ஆட்டம் தொடங்க
இன்னும் அரைநாள்
அவகாசம்

இப்படி பல்வேறு தாடிக்காரர்கள்
வந்த வண்ணமும் சென்ற வண்ணமும்
இருக்கிறார்கள்

செவலை தாடிக்காரர் இருவர்
அரைகுறையாகப் புரிந்தும் புரியாமலும்
லோடு ஆட்டோவில் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்

சாலைப்பழுதில் ஏறி இறங்குகையில்
சரிந்து மோதிக் கொள்கின்றன
கொம்புகள்

ஊருக்குப் புறத்தே
தற்காலிக பிளக்ஸ் பேனருக்கு
இந்த பக்கம் சவுக்கில்
வெள்ளை தாடிக்காரர்
உரசிக் கொண்டு நிற்கிறார்
கருப்பு தாடிக்காரர்
குறி விறைக்க எழுச்சியடைகிறார்
செவலை தாடிக்காரர்
சிறுநீர் ஒழுகல்

நாளை விடியுமென்று
பல கணக்குகள் வைத்திருக்கும்
கருப்ப சாமி
சுற்றிச் சுற்றி வருகிறான்

நான்குபேருக்கும்
பதற்றம் ஒன்றே

மூன்றுபேர் தப்பப் போவதில்லை
என்பது எல்லோரும் அறிந்ததுதான்
கருப்பசாமி
தப்பித்து விடுவாரா ?
இந்த கருணை
விளையாட்டில்

11

எல்லோரும் அறிவாளிகளாக இருக்கும்
இந்த ஊரில் என்னதான் செய்யமுடியும் சொல்லுங்கள்

பயிர் விளைவதில்லை
தொழில் நடப்பதில்லை
தோட்டம் செழிப்பதில்லை
அலுப்பின் ஆபாச
மேகமூட்டம்

வினோதம் இல்லை
விளையாட்டும் இல்லை
எல்லோரும் அறிவாளிகளாக இருக்கும்
இந்த ஊர் எப்படி விளங்கும் சொல்லுங்கள் ?

முதலில் எல்லோரும் அறிவாளிகளாக இருக்கும்
ஊரை விட்டு
எல்லோரும் கிரிமினல்களாக இருக்கும்
ஊருக்கு சென்று விட வேண்டும்
அது குழந்தையின் ஊராக
இருக்கக்
கடவது

சந்தோசம் ,நிம்மதி இரண்டையும்
கற்றுத் தேர்ந்தால்
மடையனின் ஊர் வாசல் கதவு
திறக்கும்

அங்கு சென்றால்
அறிவாளிகளின் ஊரைத்
தலை முழுகிவிடலாம்

பின்னர் இந்த அறிவாளிகளின்
ஊருக்குத் திரும்பும் போது
நம்மை யாருக்கும் அடையாளம் தெரியாது
புல்லாங்குழலால்
கண்ணன் வீட்டில் தேநீர்
அருந்தலாம்
இயேசுவின் காட்டில்
செவலை ஆட்டுடன்
தீயை மேயலாம்

தர்க்கத்தை வெட்டி விறகெரிக்க
சூபி
வந்துதிப்பான்
நமக்குள்ளிருக்கும் நண்பன்
நமக்காக

எல்லோரும் அறிவாளிகளாக இருக்கும் ஊரில்
டெங்கி
வேகமாகப் பரவிக் கொண்டிருக்கிறது
எச்சரிக்கை

12 

முதலில் இரண்டு டீ போடுங்கள்
இல்லை மூன்றாகப் போடுங்கள்
மற்றொருவர் வருகிறார்

ஐந்து டீ பின் ஆறானது
ஏழானது எட்டாவது
எட்டு பத்தானது
அந்தோன் சேகவ் தொடங்கி
கோணங்கி
ஜெயமோகன்
ஷோபா சக்தி
பினராய் விஜயன்
எடப்பாடி
தெருவெல்லாம் துள்ளிக் குத்தித்த டீ
மோடி

யாரும் டீ க்கு பணம் தர வேண்டாம்
என்று கூறி
கடைக்காரருக்கு குறிப்பால் உணர்த்தும்
நண்பன்
ஓங்கிய குரலில்

அனைவர் வாயிலும் தேநீர் சுவையை
எடுத்தகன்று பைக்கில் கடந்து
செல்கிறான்

வென்னீராயிற்றுச்
சுவை
தெருவில் மரித்த டீயின்
அமைதி

13

அன்னபூர்ணா கபே
கோமதியம்மாள் நடத்தியது
நெய் தோசை
பால் ஆப்பம்
என இருந்த போது
அவளை இளவரசியென்றுதான் சொல்வார்கள்
அவள் கை காப்பி சாமி பிரசாதம்

அன்னபூர்ணாவில்
புரோட்டா கறி கிடைத்தபோது
கோமதியம்மாள் கண்களை சுற்றி
கருவளையம் வந்தது

எதிர்த்த பால்பாண்டி கடையில்
புரோட்டாவை நிறுத்திவிட்டு
நெய் தோசைக்கும்
பால் ஆப்பத்திற்கும்
மாற்றினாள்
பால்பாண்டி மனைவி
வரலெட்சுமி

வரலெட்சுமி போட்டுத் தருகிற காப்பியில்
கோமதியம்மாளின் முகம் தெரிகிறது என்கிறார்கள்
கஸ்டமர்கள்

நேருக்கு நேராக
வரலட்சுமியை பார்த்த கோமதியம்மாள்
பார்த்தாயா...
உன்னை போல நானிருக்கிறேன்
என்னைப் போல நீயிருக்கிறாய்
தோற்றம்தான் வேறே என்று
செல்லம் கிள்ளிச் சென்றாள்

கிள்ளிய இடத்தில்
பூத்துக் குலுங்கிற்று
மல்லிச்சரம்

14 

குற்றத்தின் பெயர் காரணம்

நீங்கள் அவர் மீதுதான்
குற்றம் சொல்கிறீர்கள்
நீங்கள் தண்டிக்க நினைப்பதும்
அவரைத்தான்
குற்றத்தில் என் பங்கு ஏதுமில்லை
இனிமேலும் கூட எனக்கு அதனைச் செய்யும்
உத்தேசமுமில்லை

அவர் இல்லாமற் போனால்
நீங்கள் நிம்மதியடைவீர்கள் என்பதும்
விளங்குகிறது

உங்கள் பராது முழுதும்
அவர் மீதுதான்
என்மீதில்லை

நீங்கள் அவர் மீதுதான்
குற்றம் சொல்கிறீர்கள்
ஆனால் பாருங்கள்
எனது உடல் முழுவதும்
பதற்றத்தில்
நடுங்குகிறது

என் மீது சொல்லப்படாத புகாரை
என் மீது வைக்கப்பட்ட புகார் போல
நீங்கள்
சொல்லிக் கொண்டே
இருக்கிறீர்கள்
எதிரே நின்று

உங்கள் உடல் நடுங்கும்
நீங்கள் செய்யாத குற்றத்திற்கு
என்ன பெயர்
சுட்டுவீர்களோ
அதுதானே
நீங்கள் சுட்டும் குற்றத்திற்கும்
பெயராக இருக்க முடியும் !

எனக்கு உங்கள் குற்றச்சாட்டு
நட்சத்திரத்தை பற்றியதென
ஒருநாள்
வரக்கூடும்

அப்போதும் நீங்கள்
குற்றம் சொல்வீர்கள்
எனதுடல் நடுங்காத
குற்றத்தை

15

விதைக்குள்ளிருந்து வெளியேறிய விருட்சமாக
நீங்கள் வெளியேறியதையும்
பின்னே
விதைக்குள் நுழைந்தடங்கிய
விருட்சமாக
நீங்கள்
உருமாறியதையும்
சாட்சியாக உடனிருந்து
சந்தர்ப்பத்தில்
பார்த்துவிட்டேன்
காட்சிகளே

உடலை உதறினால்
எத்தனையெத்தனை காட்சிகள்
உதிர்கின்றன
இந்த மரத்தில் ?

16

நினைவும் உடலும்
தனித்தனியே பிளவுண்ட போது
நினைவு என்ன நினைத்திருக்கும் ?
நான் கண்ட காட்சிகள் என்று பேணப்பட்ட
காட்சிகள் உடலின்றி
தனித்திருந்திருக்கும்

உடலை உதறிய காட்சிகள் அவை
காட்சிகளை உதறிய உடல் இது

நினைவை நோக்கி உடலும்
உடலை நோக்கி நினைவும்
காட்சிகளில் பற்றியெரிய
நானெழும்பி
சுடரானேன்
உதறிய உடலை எட்டிப்பிடித்த
நான் என்பது நான்தானா
இல்லை வலியில் இணைந்து
முகம் காட்டும்
திருநீற்றுக் காட்சிகளா ?

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"