மார்க்சியம் ஒரு அடிப்படை பாடம்

மார்க்சியம் ஒரு அடிப்படை பாடம்

அறிவு தளங்களில் பங்காற்ற விரும்புவோருக்கு மார்க்சியம் ஒரு அடிப்படை பாடமாக இருப்பதே நல்லது.தத்துவங்களைப் பயில விரும்புவோருக்கு  அதுவே சிறந்த தொடக்க கல்வியாக இருக்க முடியும்.அதிலிருந்து பிற தத்துவங்களுடன் உறவு பெற்றவர்களே சிறந்த நடத்தை கொண்டவர்களாக இருக்கிறார்கள் .  பின்னர் மார்க்சியத்தைக் கைவிட நேரலாம் ,நேர வேண்டும் எனினும் அது மூலபாடமாக உள்நின்று இயங்கும் தன்மையும் சாராம்சமும் கொண்டிருக்கும்.

விவாதங்களில் ஈடுபடுபவர்கள் அவர்கள் எத்தகைய தத்துவ முறைகளை பின்பற்றினாலும் சரி,மார்க்சியத்தை தொடக்க கல்வியாகப் பெற்றிருந்தவர் எனில் அவருடன் உரையாடுவது எளிமையானதாக இருக்கிறது.இல்லையெனில்  சிறிது நேரத்திலேயே அவர் தனது குடும்ப நம்பிக்கைகளை பற்றி இறுகப் பேசுபவராக மாற்றமடைந்து விடுகிறார்.அந்த விதத்தில் மார்க்சியம் அதில் விலகுபவர்களுக்கும் கூட பங்களிப்பு செய்யும் தத்துவம்.

பிற தத்துவங்களுக்கு அத்தகைய வலிமை இல்லையா என்றால் உண்டு.ஆனால் தத்துவங்கள் குடும்ப நம்பிக்கைகளாக வந்து சேருகிற போது மிகுந்த இறுக்கத்தை அடைந்து விடுகிறது.மார்க்சியத்தையும் குடும்ப நம்பிக்கையாக பாவிப்பவர்களிடமும் இந்த சிக்கல் உண்டு.பல தத்துவங்கள் மார்க்சியத்திற்கு பிறகு புதிய அர்த்தங்களைப் பெறுகின்றன.ஒரு சைவ சித்தாந்தியை எடுத்துக் கொள்ளுங்கள்,அல்லது ஒரு அத்வைதியை எடுத்துக் கொள்ளுங்கள் ,அவர்கள் மார்க்சியத்தை அடிப்படையாக கற்றவர்கள் எனில் அவர்கள் பேசுகிற அத்வைதமும் சரி ,சைவ சித்தாந்தமும் சரி அல்லது வேறு எந்த விதமான தத்துவங்களாக இருப்பினும் சரி அவற்றில் புதிய பொருள் விளங்கத் தருகிறார்கள்.இல்லையெனும் போது அவர்கள் பேசுவது வெறும் குடும்ப நம்பிக்கைகளின் மொழியில் சிதைவுற்று விடுகிறது.பின்நவீன சிந்தனைகளில் பலவற்றிற்கு மார்க்சியம் பொருட்படுத்தத் தகுந்ததாகத் திகழ்வதற்கு மார்க்சியத்தின் இந்த பண்பை குறிப்பிட்டுச் சொல்லலாம் . மார்க்சியம் உலகலாவிய நவீன சிந்தனை உருவாக்கிய தத்துவம் என்பதே இதற்குக் காரணம் .

பொது மேடைகளிலேயே பேசுபவர்களை கவனித்துப் பாருங்கள்.ஒருவர் உளறுகிறார் என்று படுகிறது.ஒருவர் முழு நேர்மையுடன் தனது அனுபவத்தை பகிரும் போது கூட அது முழு  அழகு பெற தவறி விடுகிறது.நாம் அதனைப் பொருட்படுத்தாது கடந்து விடுகிறோம்.அனுபவமோ ,தத்துவமோ ,வரலாறோ ,சமூகவிலோ ,இனவரவியலோ எதுவாக இருப்பினும் அது மற்றொன்றுடன் கலந்து புதிய பொருளை ஏற்படுத்தினால் மட்டுமே அதற்கு அழகு பிறக்கும்.கோசாம்பி வரலாற்றில் செய்திருக்கும் மாயம் இதனால் நிகழ்ந்தது

வைணவத்தை எனது பக்கத்து வீட்டுக் காரார் பேசி கொன்றுவிடுகிறார் .அதே சமயத்தில் வேளுக்குடி கிருஷ்ணன் பேச புதுமையாக உள்ளது ஏன் ? மார்க்சியம் ஒரு இடையீட்டுக் கருவி.பிறருடன் தொடர்பு கொள்ளாதவரையில் ,பிறவற்றுடன் தொடர்பு ஏற்படாதவரையில் நம் அந்தரங்க மொழிக்கும் , குடும்பக்  கண்ணோட்டத்திற்கும் பொருளில்லை என்பதை அது சாரமேற்றும் தத்துவம்.வேளுக்குடி கிருஷ்ணன் மார்க்சிய   அறிஞரெல்லாம் இல்லை.அவரிடம் அது தொனிக்க பொலிவு பெறுகிறார்.மார்க்சியத்தின் சாரத்தை ஏதோஒரு விதத்தில் அவர் வைணவத்துடன் கலந்து விடுகிறார்.அதனாலும் அவர் அழகு பெறுகிறார்.பிறரில் இருந்து தனித்து அறியப்படுகிறார்.பிறர் பேசுவதற்கும் அவர் பேசுவதற்கும் இடையில் வேறுபாடு வெளிப்டையாகத் தெரிகிறது.மனிதனின் நவீன மனம் உருவானவிதத்தில் மார்க்சியத்தின் பங்களிப்பை ஒரு போதும் மறுக்கவே இயலாது.

நான் பொதுவாக அடிப்படைவாதிகள் மட்டுமே பேசக் கூடிய விஷயங்களை படைப்பாளிகளோ ,பின்நவீன சிந்தனையாளர்களோ பேசும் போது அது என்னவாக மாறுகிறது என்று பார்ப்பேன்.அடிப்படைவாதிகள் பேசுகிற விதத்தில் அது பெரும்பாலும் இருப்பதில்லை.வேறொன்றாகிவிடுகிறது.மற்றொன்றுடன் கலந்து வெளிப்படும் அனுபவம் உண்மையாகிவிடும் தன்மை கொண்டது.கலக்காமல் வெளிப்படுவது வெறும்  குடும்ப அறிவு .மோதி  பெறுவதே அறிவு.பிறவற்றுடன் சிந்தனையில் ,வாழ்வில் ,அகத்தில் மோதி அவற்றைப் பெற வேண்டும்.

இவையெல்லாம் ஏன் தொழில் சார்ந்த மார்க்சியர்களுக்கு நடப்பதில்லை என்றால் பிற ஒன்றையும் கலப்பதற்கு அவர்கள் சம்மதிப்பதில்லை என்பதே காரணம்.மார்க்சியத்தை அவர்கள் குடும்ப நம்பிக்கையாக மாற்றி வைத்திருக்கிறார்கள்.எனவே தான் அவர்கள் கண்களில் எதுமே உதயமாவதில்லை.

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"