ஜனநாயகத்தில் இடம் கிடையாது எடப்பாடி...

ஜனநாயகத்தில் இடம் கிடையாது எடப்பாடி...


கொஞ்சம் பேர் எட்டு வழிச் சாலையை எதிர்ப்பதாக சட்டமன்றத்தில் ஒத்துக் கொண்டுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி .கொஞ்சம் பேர் அரசின் ஒரு திட்டத்தை எதிர்க்கிறார்கள் என்றால் அரசு அதனைக் கைவிடத்தான் வேண்டும்.அதுதான் உலகெமெங்கும் உள்ள நாகரிக அரசுகள் பின்பற்றுகிற நடைமுறை.ஊர் முழுதும் கூடியெல்லாம் எங்கேயும் எதையும் எதிர்ப்பதில்லை.

நாங்கள் ஒரு பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகம் வாயிலாக குழந்தைகளுக்கு பாலியல் சீண்டல் ஏற்படுத்தும் சில ஆசிரியர்களை விசாரிக்கும் பொறுப்பில் ஒருசமயம் இருந்தோம்.இரண்டே இரண்டு பெண்குழந்தைகளும் அவர் தம் பெற்றோர் மட்டுமே புகார் அளிக்க முன்வந்தவர்கள்.அதற்கு அர்த்தம் அவர்கள் மட்டுமே சீண்டலுக்கு உள்ளானவர்கள் என்பதல்ல.இரண்டு பேர் இத்தகைய காரியங்களில் துணிந்தால் பிரச்சனை முற்றி சீழ் வடிகிறது என்பதே அதற்கு அர்த்தம்.

புகாருக்குள்ளான  ஆசிரியர்களில் ஒருவர் தந்து உறவினரான காவல் ஆய்வாளர் ஒருவரை பயன்படுத்தி ஒரு குழந்தையின் மீது போலியான வழக்கொன்றை பதியவும் செய்தார்.
இத்தனைக்கும் யோசித்துப் பாருங்கள் ...ஆசிரியர் சமூகம் அளவற்ற அதிகாரம் கொண்ட சமூகமெல்லாம் ஒன்றுமில்லை.புகார் தெரிவிப்பவருக்கு எதிராக ஏராளமான அழுத்தங்கள் ஏற்படுவது நமது சமூகத்தில் வெளிப்படை.இத்தனைக்கும் தயாராக தன்னைத் தயாரித்த பின்னர்தான் இங்கே ஒரு புகார் முன்வைக்கப்படுகிறது.ஒரு ஆசிரியர் மீது ஒரு மாணவன் புகார்  முன்வைப்பது கூட இங்கே எளிமையானதல்ல.ஏன் என்று விளங்காதவர்களும் இங்கே இருக்க இயலாது.

மற்றொரு உதாரணம் சொல்கிறேன்.சிறையில் உணவு சரியாக இல்லை,சுகாதாரமாக இல்லை  என்று ; உணவு சரியாக இருக்கிறதா என்று ஆய்வு செய்யும் அதிகாரியிடம் ஒரு கைதி  சொல்ல வேண்டும் என வைத்துக் கொள்ளுங்கள்.அது சாதாரணமானது என்று நினைக்கிறீர்களா ? நான் அத்தனை சித்திரவதைகளுக்கும் தயாராக இருக்கிறேன் என்று துணிபவனால் மட்டுமே அது சாத்தியம்.இது எளிமையான காரியம்தானே என்றால் இல்லை.அவர் அதனை ஆய்வு செய்யத்தானே வத்திருக்கிறார் ? சொன்னால் என்னவென்றால் அது மிகவும் அப்பாவித்தனமானது.அப்படி ஒரு குரல் எழுமாயின் உடனடியாக "என்னய்யா வேலை பார்க்கிறீர்கள் ?"என்று கேட்டு ஒருசிலரின் மீது நடவடிக்கை எடுப்பது போல நிச்சயம் பாசாங்கியாக வேண்டும்.இந்த "என்னய்யா வேலை பார்க்கிறீர்கள் ?" என்கிற வாக்கியம் ஏராளமான அர்த்தங்களைக் கொண்டது.இப்படியொருவன் வெளிப்படையாக பேசக் கூடிய லட்சணத்தில் இருக்கிறீர்களே தகுதியற்று என்கிற அர்த்தமும் இதற்கு உண்டு.

பொதுவாகவே நமது நாட்டில் ஒரு திட்டம் வருகிற போது மேலிருந்து கீழாக அது வருகிறது.ஒரு விஷயத்தை நீங்கள் நிறைவேற்றுவது என்று  முடிவெடுத்து விட்டீர்கள் எனில் என்னிடம் எதற்காக கருத்து கேட்க வருகிறீர்கள் ? பின்னர் அனைத்திற்கும் பொய்யான ஆதாரங்களைத் திரட்டுகிறார்கள்.அதற்குரிய அதிகாரிகளை பணியிலமர்த்துகிறார்கள்.இது போன்ற காரியங்களை சாதிப்பதற்கென்றே செமயான அதிகாரிகளும் காலம் காலமாக உண்டு.இதுவும் எவரும் அறியாதவை ஒன்றுமில்லை.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கூடங்குளம் அணுஉலைகள் முதற்கட்ட ஆய்வின் போது ;இருபது கிலோமீட்டர் சுற்றளவுப் பரப்பளவிற்குள் தோராயமாக ஆறு லட்சம் பேர் வாசிக்கக் கூடிய வாழக் கூடிய இடத்தை பற்றி " இங்கே இந்த பகுதியில் மக்கள் யாருமே இல்லை என்று அறிக்கையெழுதியிருக்கிறான் செமயான அதிகாரியொருவன்.பொதுவாகவே கன்னியாகுமரி மாவட்டம் எழுபது கிலோமீட்டர் சுற்றளவு பரப்பிற்குள் இருபது லட்சம் பேரை உள்ளடக்கியது.இதனை ஒரு ரெசிடென்ஷியல் மாவட்டம் என்று சொல்வதே சரி.ஆய்வறிக்கை எப்படி வருகிறது பாருங்கள்.

சேலம் சாலைக்கு அரசு வைத்திருக்கும் பெயரே அது மிஷன் போல செய்து முடிக்கப்பட வேண்டியது என்கிற அர்த்தத்தைத் தருகிறது.அரசுகள் கவித்துவ பெயர்களை சூடி வரும் திட்டங்கள் எல்லாமே மிகவும் மோசமானவை.அதிகாரத்தின் ஒட்டு மொத்த திமிரையும் உள்ளடக்கியவை.ராஜீவ் காந்தி வழக்கை விசாரித்த உளவு அமைப்பின் பெயர் மல்லிகை.எவ்வளவு மணம் ? சம்மந்தமில்லாத பலரையும் துளைத்தெடுத்த அமைப்பு அது.இந்திய அரசு அணு வெடிப்பு சோதனைக்கு புத்தர் சிரித்தார் என பெயரிட்டது.இது போல பல உதாரணங்கள் உண்டு.இப்போது சேலம் சாலைக்குப் பச்சை.பச்சை என்பதற்கு எங்களூரில் வேறொரு பொருளும் உண்டு.கவித்துவ அதிகாரிகளுக்கு அந்த பொருள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று நினைக்கிறேன்

இந்த சாலைக்கு இதுவரையில் இல்லாத கெடுபிடிகள்.யாரேனும் எதிர்த்தால் என்ன வேண்டுமானாலும் செய்வோம் என்கிற அளவிற்கு ஒடுக்குமுறை . அத்தனையையும் தாண்டி இவ்வளவு எதிர்ப்பு இருக்கிறதென்றால் மக்கள் கொதித்துப் போயிருக்கிறார்கள் என்றர்த்தம்.

இந்த எடப்பாடி ,பன்னீர் செல்வம் போன்ற கதாபாத்திரங்கள் தன்னிச்சையாக எதையும் செய்யும் திராணி கொண்டவை அல்ல.பின்னால் ஆட்கள் இருந்து கையசைத்தால் எதையும் செய்யத் துணியும் ஷைத்தான்கள்.தமிழ்நாடு இப்போது ஷைத்தான்களின் கரங்களில் நர்த்தனம் ஆடிக் கொண்டிருக்கிறது என்பதை "பேத்தட்டிக்"என்றே சொல்ல வேண்டும்.மளிகை வியாபாரிகள்,நில தரகர்கள் ,டீமாஸ்டர்கள் ஆட்சி நடத்த , அரசியல் பேச;  நிலம்  முழுதும் தீய சக்திகளின் முடை நாற்றம்.

நாகரீகமடைந்த நாடுகளில் இத்தகைய திட்டங்களை அகற்ற இருபது புகார்கள் போதுமானவை.ஒன்றை சொல்லிக் கொள்கிறேன்.
மக்களின் எதிர்ப்பை மீறி கடவுளுக்கு விருந்து வைப்பதற்கு கூட ஜனநாயகத்தில் இடம் கிடையாது எடப்பாடி ...

Comments

Popular posts from this blog

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"