திடீரென ஒருநாளில் நாங்கள் பயங்கரவாதிகள் ஆக்கப்பட்டோம்

 கவிதைகள்

1

உனக்கு எவ்வளவு பெரிய தோள்கள்
நீ விரும்பியவாறெல்லாம் உன்மீது படர்ந்தேறும் காடுகள்
மயங்கும் மஞ்சு
உடலெங்கும் வெண்ணூற்றுச் சுனை
எவ்வளவு ரகசிய மிருகங்கள் ?
எவ்வளவு அர்த்தம் செறிந்த கர்வம் ?
மாமலையே போற்றி போற்றி
எனினும் உன்னை நான் அதிசயித்துப் பார்த்தால் தான்
நீ மாமலை
இல்லையெனில் ஒன்றுமில்லை
கர்வத்தில்
நினைவு
கொண்டிரு
வற்றாயிருப்பே

2

திடீரென ஒருநாளில் நாங்கள் பயங்கரவாதிகள் ஆக்கப்பட்டோம்
சமூக விரோதிகள் என்று பட்டம் சூட்டப்பட்டோம்
எப்போதும் போலவே எங்களுடைய வேலையைத்தான்
செய்து கொண்டிருந்தோம்
நிலங்களில் பயிரிட்டோம்
மீன் பிடிக்க கடலுக்குள்
சென்றோம்
திரும்பி வந்து பார்க்கும் போது
பயங்கரவாதிகள்
ஆக்கப்பட்டிருந்தோம்
துப்பாக்கிகள்
எங்களைக் குறி வைத்து
சுட்டன
போர் விமானங்கள் எங்களை சுற்றி
வட்டமிட்டன
போர் எங்கள் மீது
தொடங்கப்பட்டது

எங்களுக்கு முன்னரே கடல்களில் மீனும்
நிலத்தில் தாவரங்களும்
நாங்கள் பயங்கரவாதிகள்
ஆக்கப்பட்டதை
தெரிந்து வைத்திருந்தன போலும்
உங்கள் ஆயத்தப் பணிகள் ஏற்கனவே
தொடங்கியிருந்தன

நாங்கள் பயங்கரவாதிகள் ஆக்கப்பட்டதை
கண்முன்னால் நாங்களே
பார்த்துக் கொண்டு நின்றோம்
ஏற்கனவே பயங்கரவாதிகள் ஆக்கப்பட்டவர்கள்
அனைவரும் எப்படி பயங்கரவாதிகள்
ஆக்கப்பட்டிருப்பார்கள்
என்பதும் விளங்கியது

பயங்கரவாதிகள் ஆக்கப்பட்டபின்னரும்
எங்கள் வீடுகளில்
குழந்தைகள் பழையது போலவே
விளையாடிக் கொண்டிருக்கின்றன
எப்படி பயங்கரவாதிகள் ஆக்கப்பட்டோம் என்பதனை
அறியாத
குழந்தைகள்

போருக்கு வருவதற்கு முன்பாக எங்களை
பயங்கரவாதிகள் ஆக்கிவிட்டு வந்திருக்கிறீர்கள்
இப்போது போர்
உங்களுக்கு
மிக
எளிதானதாக
இருக்கிறது

இந்த நிலம் அந்நிய நிலமாக
ஆயிற்று என்பதை
பௌர்ணமியின் இறுக்கம்
பகிரங்கம்
ஆக்குகிறது

நாங்கள்
பயங்கரவாதிகள்தான் என்பதனை
மெல்ல உணரத் தொடங்குகிறோம்

துப்பாக்கியில் தோட்டாக்களுக்குப் பதிலாக
பயங்கரவாதிகள் என்ற ஒற்றை சொல்லை போட்டு
குறி பார்த்து
சுடத் தொடங்குகிறீர்கள்

எங்கள் ஆடைகள் பயங்கரவாத
ஆடைகள் ஆயிற்று
எங்கள் நிலா முற்றம்
பயங்கரவாத முற்றமாயிற்று
எங்கள் குழந்தைகள்
பயங்கரவாதிகளின் குழந்தைகள்
ஆனார்கள்
எங்கள் ஆடுகள்
பயங்கரவாத ஆடுகள்
ஆயிற்று
எங்கள் மாடுகள்
பயங்கரவாத மாடுகள் ஆயின

எங்கள் குலசாமிகள்
அத்தனையும்
ஒற்றைச் சொல்லில்
பயங்கரவாத சாமிகள்
ஆயிற்றே

3

ஒவ்வொரு கொலையின் போதும்
நானும் இணைந்துதான் கொலையில் பங்கெடுக்கிறேனோ என்கிற பிரேமையில்
கைகளை நன்றாக
அலம்புகிறேன்

குருதி முகத்தில் சிதறுகிறது

இதனைப் பார்த்து இருவர் பரிகசிக்கிறார்கள்
கொலையுண்டவனும் பரிகசிக்கிறான்
கொலை செய்தவனும்
பரிகசிக்கிறான்

கொலையுண்டவன் கைகளை அலம்பியதற்காகவும்
கொலை செய்தவன்
அவன் செய்த கொலைக்காக
எனது முகத்தில் படரும்
குருதியின்
தடத்திற்காகவும்

இந்த இருவரும்தான்
இங்கே எல்லாருமாக இருந்து
கொலைகளை
சமபங்கு வைத்து
எடுத்து கொள்கிறார்கள்

நானோ என்னைப் போன்றிருக்கும்
மூன்றாவது நபரின் கரம்
எப்போது வந்து நீளும் என
காத்திருக்கிறேன்

4

மருத்துவமனை தரை
அவ்வளவு வாளிப்பு
சுவர்களில் கலை ஒழுங்கு
நவீன ஓவியங்கள்
விரிப்புகளில் வேலைப்பாடுகள்

சுத்தத்தின் சிப்பந்திகள்
தொடர்ந்து நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்

காகிதத்தை பயத்தில் நழுவவிட்டால்
அக்கணமே காணாமல் போய்விடுகிறது
அது மேலும் பயத்தை உண்டாக்குகிறது
தண்ணீர் சிந்தினால் ஓடிவந்து
தேவதைகள் எடுத்தகற்றிச் செல்கிறார்கள்
நான்
சிந்திய தண்ணீரை தேடியபடி நிற்கிறேன்

தண்ணீர் ஹைஜீனிக்
பால் ஹைஜீனிக்
கடிக்கும் கொசுக்கள் ஹைஜீனிக்
டாய்லட் ஹைஜீனிக்

இவ்வளவு ஹைஜீனிக்
அவ்வளவு பதற்றம்

ஒரு பெருங்கறை போலும் நின்று கொண்டிருக்கும்
என்னை நோக்கி
மஞ்சள் பனியன் அணிந்திருக்கும் மருத்துவமனை
துப்பாக்கியை நீட்டிக் கொண்டிருப்பது போல இருக்கிறது
எனக்கு

5

எனது தனிமையை நான் வளர்க்கவில்லை
வேரில் விஷம் ஊற்றி வளர்ந்தது அது
சிறிதாக இருக்கையில் என்ன மரம் இது ?
என்று கேட்டார்கள்
பப்பாளியாக இருக்குமோ !
என்று பதில் சொன்னேன்
அதுபோல இல்லையே
இலைகள் வேறு தினுசு
பூக்கள் வேறு வகை
நிறமோ பச்சையில்லை
என்றார்கள்

பின்னர் இப்போது வளர்ந்து விட்டது அரசமரம் போலும் .
அரசமரம் இல்லையே
என்றேன் நான்
இரவில் கூடடையும் பறவைகள்
கருணை கசிந்து
பயந்த வண்ணம் அமர்ந்திருக்கின்றன
அவற்றுக்கு இது என்ன மரம் என்று தெரிந்திருக்கலாம் ,
எனக்கோ அந்த பறவைகள் எந்த பறவைகள்
என்பதின்னும்
தெரியவில்லை

இரவானால் உடல் முழுதும்
வந்தமர்ந்து கொள்ளுமிந்த
பறவைகளை

இத்தனைக்கும்
எல்லோருக்கும் மத்தியில்
அமர்ந்திருக்கிறது
வாகனத்தில் செல்கிறது
வண்டியோட்டுகிறது
தூங்குகிறது
பல் துலக்குகிறது
எல்லோரையும் போன்றே
இந்த
சிறு துளிக்காடு

6

மழைவீதியில் முதல்முறை சென்று வந்தேன்
குதிக்கும் துளிகளை கண்கள் பார்த்தனவே அன்றி
நான் காணவில்லை
எப்படி மழைவீதியை தவறவிட்டோம் என்றெண்ணி
மறுமுறை சென்றேன்
குதிக்கும் மழைத்துளிகளை அப்போது பார்த்தேன்
மழை நின்று போயிருந்தது

நின்று போயிருந்த மழையில்
நினைந்து ஊறும் ஒற்றைத்துளியில்
என்னைக் கூர்ந்து
கொல்வது போலும் பார்க்கிறது
மழைவீதியின்
சரக்கொன்றை

7

தனதுடலின் சமூகத்தை
பொதுவில் உடைக்கிறாள்
வேசி

இவள்

வேசியின் வழியில் அல்லாது
குடும்பப் பெண்ணின் ரூபத்தில்
தனது உடலில் ஒட்டி கொண்டிருக்கும் சமூகத்தை
மழைத்துளியை சாரலடிப்பது போல
பூவுதிர்க்கும் பெண்
தனதுலகத்தில் கால் பாவி
நடந்து வந்து கொண்டிருந்தாள்

தனதுலகத்தில் ஒளிரும்
அந்தியின் விளக்குகள்
தனதுலகத்தில் உடன் நடந்து வரும் தன் நிழல்
தனதுலகத்தில்
தன் கால் கொண்டு
நடந்து வந்து கொண்டிருந்தாள்

எப்படியுடைந்தது உனதுடலில் சமூகம் ?
எப்படி முளைத்தன
உனதுடலில் சிறகுகள் ?
எப்படி கண்டடைந்தாய்
உனது
சோடியம் விளக்கை ?

பொதுவில் நின்றுன் உடலை
உடைக்காது
ரகசியமாய் உடைக்க
எங்கு கற்றாய் ?

ஏராளம் கேள்விகளோடு
எதிரில் வந்த என்னை
இடித்து நின்றாள்
தன் உலகத்தில் தான் நடந்து வந்த
பிரக்ஞய்யுடன்

எனதுலகத்திலிருந்து நானும்
அவளுலகத்திலிருந்து அவளும் பார்த்த
நிலா
ஒன்றுபோலவேயிருந்தது

சேர்ந்து பார்க்கிறோம்
இரண்டு உலகத்திலிருந்து
முதல்
முறையாக
ஒரே நிலவை

இதுவரையில் பிறிதொரு நிலாவை
பார்த்துக் கொண்டிருந்தவள்
இவள்
என்றது
நிலா

8

அந்த மலை
உடம்பெல்லாம் புண்
மேற்கே வேதரத்னம் சாலை
வடக்கே புறம்போக்கு
தெற்கே
தூர்ந்த குளம்
கிழக்கில் சூரியன்
என்பதற்கு நடுவில்
தன் மேன்மை விட்டிறங்கி
இடம்பெயர்ந்து
வந்து
அமர்ந்து கொள்ளும் நாள்
இன்னும் வெகு தொலைவில்
இல்லை



Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"