குரோதத்திற்கு இயற்பெயர் இல்லை

 குரோதத்திற்கு இயற்பெயர் இல்லை


ஏனெனில் அது உடன்பிறந்தது,ஒட்டிப் பிறந்தது.ஒடுக்க முடியாதது,எடுக்க முடியாதது,ஒன்றுமே செய்ய முடியாதது.பங்காளிப் பகைகளை ஒன்றும் இயலாமல் போவதற்கு இதுவே காரணம்.யோசித்துப்பார்த்தால் உண்மையில் அது வெளியில் இல்லை.நம்முடைய உள்ளில் இருந்து பிறந்து வெளியில் நடமாடிக் கொண்டிருக்கிறது.நமக்கு அதன் அடையாளம் தெரிவது போலவே அதற்கும் நமதடையாளம் நன்கு தெரியும்

குரோதம் பெரும்பாலும் அதனை விட்டுவிட்டு நாம் தனித்து மேலெழுவதால் மேலெழுகிறது.நாம் விட்டுவிட்டா மேலெழுந்தோம் என்று யோசித்துப்பார்த்தால் "ஆம்" என்கிற விடையே வரும்.இல்லை என்று பதில் வருமானால் அது குரோதம் அல்ல.வேறுவகைப் பகை .எதிர்கொள்ள இயலும் பகை.வெறுப்பு.குரோதத்தை எதிர்கொள்ளவே இயலாது.விட்டு அகலாமல் மேலெழுந்திருக்க முடியுமா என்றால் ,முடியாது என்பதே பதில்.அப்படியானால் என்னதான் செய்வது ? வேறுவகைப்பகைகளில் ,வெறுப்புகளில் நீங்கள் அதில் விலகிச் சென்றால் கடந்துவிடலாம்.முகம் நோக்குவதைக் கைவிடலாம்.அதை சிந்திப்பதை நிறுத்தினால் அது அணைந்து போகும்.நீங்கள் அதனைப் பற்றி சிந்திக்கின்றவரையில் அது இருக்கும்.போதுவாகவே பகையெல்லாமே நம்முடைய சிந்தையில் இருப்பதே,அதில் புகுந்தே அது வாழ்ந்து கொண்டிருக்கும்.குரோதம் அவ்வாறல்ல,அது உங்களைப்பற்றி சதா காலமும் சிந்தித்துக் கொண்டேயிருக்கும்.நாம் அதனை அறிவதில்லை.ஒரு பாம்பு உங்களைப் பற்றி சதா காலமும் ,இரை எடுக்கும்போதும்,ஓய்விலும் உறக்கத்திலும் சிந்தை செய்து கொண்டிருந்தால் என்னவாகும் ? அப்படி...

குரோதத்தில் விலகுதல் சாத்தியமில்லை.ஒருவேளை பெரிய ஞானத்திற்குப் பிறகு வசமாகலாம்.உறுதியொன்றும் கிடையாது.அந்த ஞானத்தையும் சிறுமை செய்ய அது எங்கேனும் பதுங்கியிருந்து பார்த்துக் கொண்டிருக்கலாம்.போக நெருங்கியவர்களிடம் இருந்தே குரோதம் பொங்குகிறது.அன்னையை எப்படி விலக்கிக் கொள்ள முடியும் ? மனைவியை எப்படி விலகுவது ? இப்படி நெருக்கத்தில் உண்டாகிறது.அல்லது இவ்வளவு நெருங்கி உருவான உறவுகளிடமிருந்து வருகிறது.சகோதரனை ,சகோதரியைக் கூட விலக்கிவிடலாம்.சில உறவுகள் அதற்கும் மேலே நிற்கும்.

அன்னையின் குரோதமெனில் அது அளவிடற்கரியது.அன்னையை வணங்கிவிடுதல் வேண்டும் என்பது அன்னையின் அன்பிற்காக மட்டும் சொன்னது அன்று,அன்னையின் குரோதத்திற்காகவும் சேர்த்து சொல்லப்பட்டது.அன்னையரை சிறுபிராயத்தில் இழக்கும் குழந்தைகள் அன்னையரின் சூக்கும அருளால் வளர்பவர்கள்.அவர்களை கைவிடப்பட்டவர்களாக கருதி இன்னல் விளைவிப்பவர்கள் ; சூக்கும அன்னையின் இடருக்கு ஆளாகிறார்கள்.பெரிய இடர் இது.மரணம் வரையில் நகர்த்தக் கூடியது.உணர்ந்தவர்கள் மட்டுமே தப்பிக்க முடியும்.உணராதோர் ஏன் இப்படியாகிறது என்று நொந்த வண்ணம் இருப்பார்கள்.விஷயம் விளங்காது.துலங்கித் தெரிய வராது.ஒருவிதத்தில் அன்னையை இழக்கும் குழந்தையர் அன்னையின் அருளை மட்டுமே பெறும் சித்திபெற்றவர்கள்.அன்னையின் குரோதத்தை அவர்கள் காண்பதில்லை.இழப்பிற்கு பிறகு இழப்பற்ற நிலை.

சுஷில் குமார் பாரதியின் ஒரு சிறுகதையில் அன்னை பொங்கல் பானையில் கை நிறைய மண்ணை அள்ளிப் போடுகிறாள்.அன்னையின் குரோதம் பேய்மை கொள்ளும் கதை அது.விட்டுவிட்டான் என்பதே அவளில் வளர்ந்து நிற்கும் குரோதம் .அன்னையை விட்டுவிடாமல்,விலகாமல் திருமணம் செய்து கொள்ள ஏதேனும் வழியுண்டா என்ன ?

குரோதம் சம்பந்தபட்ட ஒருவரிடம் மட்டுமே வெளிப்படுகிறது.கூடவே இருந்தாலும் கூட பிறர் அந்த நெருப்பின் தீவிரத்தை உணர முடிவதில்லை.கணவனுக்கு எதிரானான நெருப்பை மனைவி உணர்வதில்லை.மனைவிக்கு எதிராக வந்ததை கணவனால் உணர முடிவதில்லை.மனதின் நுண்கண்ணிகளை அது அடித்து நொறுக்கும் விதத்தைப் பிறர் முழு உணர்வோடு பிறர் அடைவதில்லை.சம்பந்தப்பட்ட இருவருக்கும் அது நெடுங்குருதிப் பயணம்.ஒருவரிடம் குரோதத்தின் குருதியள்ளி வீசுகிற ஒருவர் ,அனைவரிடம் அவ்வாறு இருக்கிறாரா என்றால் இல்லை.பிறரிடம் அவர் நன்னடத்தையாளர்.அப்படியானால் நாம் ஒவ்வொருவருமே எங்கோ ஒரிடத்தில் குரோதபாவிகளாக இருக்கிறோம்,பிறரிடத்தில் நன்னடத்தையாளர்களாக இருக்கிறோம் என்பதே உண்மை.குரோதத்தின் வீரியத்தை ஒருவேளை நாம் கட்டுக்குள் கொண்டிருக்கலாம்.

எனக்குத் தெரிந்த ஒருவர் தங்கையின் பேச்சு எடுத்தாலே கொந்தளித்து விடுவார்.சமநிலை நினைத்தே பார்க்க இயலாத அளவிற்கு அழிவார்.அவருடைய தங்கை பேச்சுதான் எடுக்கப்பட வேண்டும் என்பதில்லை.வெறும் தங்கை பற்றிய பேச்சென்றாலும் அவரிடம் இருந்து வில்லங்கம் வரக்கூடும்.தங்கை ஏமாற்றிவிட்டதாக நீண்ட கதா முழக்கம் செய்வார்.கதை இனிய கதையே.அதற்கு ஏன் இப்படி தன்னழிகிறார் என்று கதை கேட்போருக்குத் தோன்றும் .அவர் காதலித்தார் காதலித்த பையனோடு பெற்றோர் சம்மதிக்காததால் போய் சேர்ந்து விட்டார்.இவ்வளவு தான் விஷயம்.ஆனால் இந்த விஷயம் பேரில் அவர் கொண்டுள்ள வன்மம் எளிமையானதல்ல.அவள் நடுத்தெருவில் நிற்பதை நான் பார்க்க வேண்டும் என்பார்.உண்மையில் அவர்கள் நன்றாக இருக்கிறார்கள்,இவர்களின் கண்களுக்கு எட்டாத தொலைவில் இருப்பதால்.இத்தனைக்கும் மாபெரும் முற்போக்கு இந்த அண்ணன்.பிரச்சனை என்னவென்றால் தங்கைக்கும் தனக்குத் தெரியாத ஒரு உலகம் இருக்கும் என்பதையே,இவரால் ஏற்றுக்கொள்ள இயலாமைதான்.பைபோலார் டிஸ்ஸாடருக்குள்ளானார்.செய்து வந்த தொழிலைக் கைவிட்டார்.இன்று தங்கைக்கு ஏற்பட வேண்டும் என நினைத்த நடுத்தெருவில் இவர் நின்று கொண்டிருக்கிறார்.உலகத்தின் அனைத்து கவிதைகளையும் ,இனிமைகளையும் அவருக்கு விளங்கச் செய்து விடலாம்,புத்திகூர்மையில் அவ்வளவு சித்தி.ஆனால் இதை மட்டும் அவரால் விளங்கிக் கொள்ளவே இயலாது.பிறருடைய தங்கைகளின் காதல் திருமணங்களை நடத்த வேண்டுமெனில் அவரை அழைக்கலாம் நிச்சயமாக வருவார்.சரிதான் என வாதிடுவார்.ஆனால் இதுவும் அதுவும் ஒன்றுதானே என்று யாருமே அவருக்கு புரிய வைக்க இயலாது.குரோதம் தர்க்கங்கள் எதுவுமே இல்லாதது.

சகோதர வழிகளிலும் இது உண்டாகும்.கணவன் மீது மனைவிக்கு உண்டாகும்.பல மனைவிகள் காரணங்கள் இல்லாமலேயே இளமையை கணவர்கள் ஏமாற்றிவிடுவதாக கருதி,குரோதம் அடைகிறார்கள்.வாழ்க்கை அவர்களால் வீணாகி விட்டதாக உணருகிறார்கள்.இதில் உண்மையில்லாமல் இல்லை.எல்லோருடைய வாழ்க்கையும் இந்த கோணத்தில் கண்டால் வீண் என்று ஆகிவிடும்.அதற்காக எழும் குரோதத்தை எப்படி எதிர்கொள்வது ?

குரோதம் எதிர்த்தால் இருமடங்காகும் பண்பு கொண்டது.ஒடுக்கினால் வீங்கும்.

நம்முடைய எழுச்சிகளில் அவற்றுக்கு செய்ய வேண்டியவற்றை பரிகாரமாகவோ ,நேரிடையாகவோ செய்வதே சிறந்தது.ஏனெனில் அதற்கு நம்மை ஒடுக்கும் ஆற்றல் உண்டு.சுற்றி நம் உடல் மீது பற்றிப்படரும் ஆற்றல் அதற்குண்டு.செய்வதால் பலனுண்டா என்றால்,முழுதாக உண்டு என்று சொல்வதற்கில்லை.தணிக்க முடியும் அவ்வளவே.

அன்னதானதிற்கு குரோதம் குறைக்கும் ஆற்றல் இருக்கிறது.அதனால் தான் என்னுடைய சொந்த சாதியில் அன்னதானம் செய்து கொண்டேயிருக்கிறார்கள்.கிராமங்களில் குரோதம் அதிகம்.ஒவ்வொரு எழுச்சியின் போதும் குரோதங்களை அழைத்து,இழுத்து வந்து அன்னதானம் செய்து கொண்டேயிருக்க வேண்டும்.ஆனால் இப்படி நினைக்காமல் செய்தால் மட்டுமே அது அன்ன தானமாகவும் அமையும்.

செய்து செய்துதான் கரைக்க முடியும்.செய்யாமல் கரையேறுதற்குரிய வழிகளே கிடையாது.

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்