எதையேனும் விட்டால் எதுவேனும் வருகிறது

 எதையேனும் விட்டால் எதுவேனும் வருகிறது

அடிப்படைப் பண்புகளில் ஒவ்வொன்றைக் கைவிடும்போதும் அதற்கே இணையான அதனினும் மேலான ஒன்று வந்து சேருகிறது.குடியும் காமமும் வேறல்ல.பொய்யும் களவும் வேறல்ல.சுயநலனும் ஊழலும் வேறல்ல.இவை ஒட்டிப் பிறந்தவை உடன் பிறந்தவை

கவிஞர் ஷங்கர்ராம்சுப்ரமணியனும் நானும் தெருவில் ஒன்றாகச் சுற்றித் திரிந்த காலங்கள் உண்டு.தெருவில் என்னோடு அதிகம் சுற்றித் திரிந்த நபர் அவர்தாம்.வயிற்றுப் பசிக்காக திருஷ்டித் தேங்காயை எடுத்து உண்ணும் பழக்கம் எனக்கு போதாத காலங்களிலும் கூட இருந்ததில்லை.பசிக்கு உணவு தான் சாப்பிட்டாக வேண்டும்.இரந்தென்றாலும் உண்பதே நல்லது.எடுத்தென்றாலும் உண்பதே நல்லது.பறித்தென்றாலும் உண்பதே நல்லது.பசிக்கு அன்னம்.திருஷ்டித் தேங்காய் அல்ல.

திருவல்லிகேணியின் இரவுத் தெருக்களில் அலைந்து கொண்டிருந்த போது ஒருமுறை அவர் சொன்னார்.திருஷ்டித் தேங்காயை எடுத்து தின்னவே கூடாது.அது மிகவும் ஆபத்து என்று.சத்திய வாக்கு அது.வயிற்றுக்கு எடுத்து கொள்ளத் தகாத பொருட்களில் அது ஒன்று.நான் ஆமாம் என்று சொன்னேன்.சென்னையில் வணிகர்கள் நிறையபேர் திருஷ்டித் தேங்காய் உடைத்து கடை சாற்றுவது வழக்கம்.தின்றால் அந்த திருஷ்டியெல்லாம் வயிற்றுக்குள் புகுந்து கொள்ளும் என்பதற்காக இதனைச் சொல்லவில்லை.அப்படியாயின் அதுவும் உண்மையே.ஆனால் கெட்டவன் கெட்டுத் தெருவில் நிற்பவனின் வயிற்றுக்குள் சென்று திருஷ்டி என்னதான் செய்து விடும் ? அதனைகாட்டிலும் திருஷ்டி தேங்காய்க்கு ஒரு ஜீவ ரசம் உண்டு.வினோத தித்திப்பு.உண்டால் மேனியெல்லாம் கூடும் வனப்பு.அது பின்னர் தொடர்ந்து எடுப்பவனை விடுவதில்லை.

இரண்டு முறி திருஷ்டித் தேங்காய் ஒரு நாளைக்கு ஒரு உடலுக்குப் போதுமானது.பின்னர் கிடைத்தால் அதிகம்.உபரி.போகம்.திருஷ்டித் தேங்காயால் வனப்பு உபரி.விந்து ஆற்றல் அதிகரிக்கும்.அதே அளவிற்கு பித்தம் தலைக்கேறும் பதார்த்தம் அது.திருஷ்டித் தேங்காயாக அல்லாத சாதாரண தேங்காய்க்கு இந்த கூட்டு இல்லை.சாரணத் தேங்காய் தினமும் தின்னமுடியாது.தின்னவும் மாட்டோம்.தேங்காய் அது இயல்பிலேயே மரணம் வெல்லும் தன்மை கொண்டது.பால் ஊற்றுவது என்பதே தேங்காய்ப்பால் ஊற்றுவதுதான்.தேங்காய்ப் பாலில் ஒருவரின் உடல்நிலை தேறி வரவில்லை எனில் பின்னர் தேறாது.அதற்குதான் இறுதியாக பால் கொடுத்துப் பார்ப்பது.திருஷ்டித் தேங்காய் தின்பவனை ஓடிச் சென்று பற்றிக் கொள்ளும்.ஒவ்வொரு மாலையிலும் அவனை எழுப்பி அழைத்துச் சென்று தின்ன வைக்கும்.ருசி கொடுக்கும்,ஏற்கனவே தென்னையை பேய்விருட்ச்சம் என்றும் சொல்வதுண்டு.அந்த ருசியில் மாட்டிக் கொண்டவன் பல காலம் தெருவிலேயே சுற்றிக் கொண்டிருப்பான்.கரையேற முடியாது.உடல் நன்றாக இருக்கும் காமம் எரிக்கும் விழிகள் உண்டாகும்.அரை பித்து நிலையில் சுற்றவைக்கும் திருஷ்டித் தேங்காய்.

தெருவில் நிற்கையிலும் சோறு தின்றவன்,விரைவிலேயே இந்த சுற்றிலிருந்து வெளியேறிவிடுவான்.வீடு சென்றடைவான்.தெருவில் நின்றாலும் விட்டால் வீடு வரும்.வீடடைய முடியும்.

அண்ணாச்சி விக்ரமாதித்யன் இலக்கிய பெறுமதியை தகுதிஅல்லாதவர்கள் வேண்டுகையில் எதனையேனும் இழந்திருக்கிறாயா ? என்று கேட்பார்.ஒரு ஆப்பீசரிடம் அப்படிக் கேட்டார்.எதனை இழந்திருக்கிறாய் ? கவிதையின் பெருமைக்கு போட்டியிடுகிறாய் என்று,அவரால் இவ்வாறாக கேட்கப்படாத புரவலர்களே இருக்க மாட்டார்கள்.பழகிய நீதிபதி ஒருவரிடம் ,
நீதிபதிகளுக்கான கவிதையார்வம் கொண்ட நீதிபதி அவர். க.நா.சுவை படிக்கவில்லையானால் இலக்கிய அபிப்ராயம் சொல்லாதே என்று சொல்லிவிட்டார்.குடிபோதையில் அவர் எனக்கு போன் செய்து புலம்பினார்.எதை இழந்தாய் என்று கேட்கிறார்.க.நா.சு தெரியவில்லையென்றால் பேசக் கூடாதா ? என்று கேட்டார்.உண்மையில் லௌகீகர்களை இந்த கேள்வி புண்ணுண்டாக்கிவிடும்.

எதனை இழந்தாய்? என்று கேட்டு விட்டார் ,நான் பெற்றவற்றையெல்லாம் அப்படியானால் இழக்கவா வேண்டும் என்றார் ? நான் அப்படியில்லை நீங்களும் பேசலாம் எலுமிச்சை கனிகள்பற்றி அவரிலும் அதிகமாகக் கூட பேசலாம்,சட்டம் பற்றி நீங்கள் பேசினால் அவரால் ஒன்றுமே கேட்க முடியாது.சும்மா இருப்பார்.அவரால் ஆடவே முடியாது.ஆனால் அவர் சொல்வது போல ; இலக்கியம் பற்றிப் பேசக் கூடாது.பேசினால் நல்ல வேளை கைலாஷ் சிவனும் இருந்திருந்தால் நீதிபதி என்றுகூட பாராமல் அடிதடி அல்லவா நடந்திருக்கும் ,என்று அவருக்கு நீதி சொன்னேன்.

இன்றைய விக்ரமாதித்யனின் உயரம் இழந்தவற்றால் உருவான உயரம்.இருந்து பார்க்க அவரைக் கேலி செய்தவர்கள் ஒருவர் கூட உயிருடன் இல்லை.இழக்காமல் பெறுவதற்குரிய பேறுகளே இல்லை.கவிஞன் விதிவிலக்கு கவிதையின் நிமித்தம் அனைத்திற்கும் துணிபவன் அவன்,ஆனால் அதன்பொருட்டு இழப்பவனவற்றையும் அவன் அறிவான்.

குடியை கைவிட்டால் சில பேறுகள் உடனடியாக வந்து கைகூடும்.பொய் நிற்கும்.குடி எவ்வளவு அருவருப்பான சுயநலம் என்பது காட்சியாகும்.விளங்கும்.சுயநலக்குடிக்கு நிகரான இன்பம் வேறுவகையில் கைகூடும்.குடி உருவாக்கும் இன்பம் அதிக சோர்வூட்டுவது,ஒருமணி நேரம் இருந்து 23 மணி நேரத்தை நோய்க்குள்ளாக்குவது.உடல் வியாதி பாதி எனில் மனோ நரகங்கள் மீதி.இந்த தற்காலிக மயக்கங்கள் அனைத்தும் மறுபக்கத்தில் பல மடங்கு சோர்வை உண்டாக்குபவை.காமமும் இவ்வாறே.குடிக்கு ஒப்பான சோர்வை தறிகெட்ட காமம் ஏற்படுத்துகிறது.அல்லது தறிகெட்ட சோர்வே தறிகேட்ட காம உணர்வைக் கேட்கிறது.தறி கெட்ட காமத்தில் உழல்பவர்கள் தம்பதிகளாகவே இருந்தாலும் தரித்திரம் சூழப் பெற்றிருப்பார்கள்.ஏதும் விளங்காது.நில்லாது.எப்போது பக்குவம் உண்டாகிறதோ அப்போதே ருசியுண்டாகும்.தறி கெட்ட காமம் காமத்திற்காக அன்று,வேறுவேறு காரணங்களுக்காக தூண்டப்படுகிறது.ஆணவத்தின் நிமித்தமும் தூண்டபடுவதுண்டு.

வெண்முரசில் அம்பை பருவத்தில் ஆடி பார்க்கும் காட்சி வரும்.இளம்பெண்கள் திரும்பத் திரும்ப பிற ஆண்களிடம் ஆடி பார்க்கிறார்கள்.தறிகெட்ட ஆண் ,அடையும் பெண்கள் எல்லோரிலும் தன்னை ஆடி பார்த்துக் கொள்கிறான்.

பொய்யை விடுபோதும் நம்மை ஒரு மகத்துவம் வந்தடைகிறது.வாங்கிய கடனை வாக்கு குன்றாமல் திருப்பினால் ஒரு மகத்துவம் வந்து சேருகிறது.அடிப்படைப் பண்புகளில் எதைக் கைவிட்டாலும் ,கைவிட்ட இடத்தில் வந்து ஒட்டிக் கொள்ள ஒரு மகத்துவம் காத்திருக்கிறது.சந்தேகிப்பதைக் கைவிட்டால் நம்பிக்கையின் மகத்துவத்தை அறிய முடியும்.மகா உன்னதமானதிந்த மகத்துவம்.எதையெனும் கைவிடவேண்டும்.அது வந்து நம்மைப் பற்றிக் கொள்வதற்கு.அதுவே அதன் ரகசியம்.

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"