முகநூல் பதிவுகள்


தொடர்புகொள்ளுதலில் ஏற்படுகிற
புதிய தொழில்நுட்ப மாற்றங்கள்


பத்தாண்டுகளுக்கு முன்பு வரையில் அல்லது பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரையில் யாரிடம் நான் பேசிக் கொண்டிருக்கிறேன் என்கிற சிந்தனை இருந்ததில்லை. என்னை ஒத்த ஒருவனுடன் பேசிக் கொண்டிருந்தேன். எப்படி சுற்றி வளைத்துப் பேசினாலும் அந்த வாசகன் அந்த தளத்திலேயே எதிர்கொள்ளும் வண்ணம் உள்ளவனாக இருந்தான். அவனே சிறப்பானவன் என்று அதற்கு அர்த்தமில்லை. எனக்கு முந்தைய தலைமுறையினருக்கு அப்படி இல்லாதவனோடு உறவே கிடையாது. அதற்கான அவசியமும் அவர்களுக்கு இருக்கவில்லை. குறிப்பிட்ட அந்த தளத்தில் மட்டுமே எழுத்தாளர்களை, கவிகளை எதிர்கொள்ளுகிற வாசகர்கள் இருந்த காலம் அது. சுந்தர ராமசாமி அவர் எழுத்துக்களை ஒரு தமிழ் சினிமா ரசிகன் எவ்வாறு எடுத்துக் கொள்வான் என்பதை பற்றி சிந்தித்திருக்கவே மாட்டார். அதற்கான அவசியமும் ஏற்படவில்லை. ஆனால், இன்று விரும்பியோ விரும்பாமலோ பொதுமக்களின் முன்னால் நேரடியாக எழுத்தாளனும் கவியும் நின்றாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது. முந்தைய காலகட்டம் வாசகனின் முன்னால் நின்றது போல இன்று பொதுமக்களின் முன்பாக நிற்க வேண்டியுள்ளது. இந்த நிலை தவிர்க்க இயலாதது.

முந்தைய நிலையே சிறப்பானது என்று ஒரு எழுத்தாளன் சொல்வானேயாகில், அது அவன் சமகாலத் தன்மையில் அடையும் பின்னடைவையே அந்த கூற்று குறிக்கிறது. இயல்பாகவே அவனது மொழி கண்டடைய வேண்டிய தொழில்நுட்ப மாற்றத்தை அவன் இனி தவிர்க்கவே இயலாது. ஏனெனில், இன்றைய வாசகன் ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் பொதுமக்களில் இருந்து நேரடியாக உருவாகிக் கொண்டிருக்கிறான். வாசகனிலிருந்து உருவாகும் வாசகனில்லை இவன்.

பொதுமக்கள் என்னும் தரப்பு மகா குளறுபடிகள் நிரம்பியது. அது தேர்வு செய்யப்பட்ட ஒரு குறிப்பிட்ட வளாகம் அல்ல. மதில் சுவர்கள் எதுவுமே சுற்றிக் கட்டப்பட்டிருக்கவில்லை. தொழில்நுட்பம் தன்னளவில் பல குறைகள் இருப்பினும்கூட பாகுபாடுகள் அற்றது. அல்லது நாம் ஏற்கனவே கொண்டிருக்கும் பாகுபாடுகள்; அல்லது நாம் பாதுகாக்க நினைக்கும் பாகுபாடுகளும் உட்பட அதற்குள் கிடையாது. விலக்க நினைக்கும் பாகுபாடுகளும் அதற்கு இல்லை. பேதங்களும் இல்லை. அதனால் அது கரடுமுரடாக, மனம் கோணும் விதத்தில் இருப்பதை தவிர்க்கவே இயலாது. பிரமிள், ஒரு விஜய் ரசிகன் தனக்கு எதிர்வினை புரிவான்; பதில் சொல்ல வேண்டியிருக்கும் என்று கருதியிருக்கவே மாட்டார். நள்ளிரவில் ஒரு கௌண்டரோ, நாடாரோ, தேவரோ, தலித்தோ உங்களை அழைத்து சினம்கொள்வார்கள் என்று புதுமைப்பித்தன் கருதியிருப்பாரா? டாஸ்மாக் மூடியடைக்கப்பட்ட பின்னரும் ஒருமணிநேரம் போக்குவரத்து நிற்கும் வரையில் ஒரு சாதியவாதியோ, மதவாதியோ, இனப் பிரளயனோ அழைக்கக்கூடும் என்று மௌனி கருதியிருப்பாரா? தவறான புரிதலின் அடைப்படையில் தாக்குதல் நடைபெறலாம் என்பதே முந்தைய தலைமுறை அறியாதது. பொதுமக்களின் முன்பாக வந்து எழுத்து நிற்கும் போது ஏற்படும் விசித்திரம் இது. தி.ஜானகிராமன் இப்போதைய சீமான் கோஷ்டி போன்ற கோஷ்டியிடம் மாட்டிக்கொண்டு நெரிபட்டிருக்கவே மாட்டார். அப்படி ஏதும் நடைபெற்றிருக்குமேயானால் முழு பைத்திய நிலையை அடைந்து எழுதுவதை விட்டகன்று சென்றிருப்பார்கள்.

இரண்டாயிரத்தில் ஒரு இணைய இதழில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது, ‘ரஜினியின் பிம்ப அரசியல்’ என்றோர் கட்டுரை எழுதினேன். அது இணையத்தில் வெளிவந்ததும் ஐநூற்றுக்கும் மேலான எதிர்வினைகள். அதில் முக்கால்வாசி எதிர்வினைகள் - "உன்னைக் கொன்றுவிடுவேன்.” “வென்றுவிடுவேன்” இப்படியான - கடைநிலை தரம் கொண்டவை. எதிர்வினைகளிலேயே ஆகக் கடைசி ரகம் இவைதான். இப்படியான எதிர்வினைகளை பொருட்படுத்தும் சிறிய அளவிலான மனோபாவம்கூட அப்போதே எனக்குக் கிடையாது. ஆனால், முதன்முறையாக நாம் எழுத்தின் மூலமாக பொதுமக்கள் முன்னால் நின்று கொண்டிருக்கிறோம் என்பதை உணரச் செய்த அனுபவம் அது. நான் பொதுமக்களை வரவைத்து அதனை எழுதவில்லை; வருவார்கள் என்றும் தெரியாது. வாசக எதிர்வினைகளே எதிர்பார்த்தவை. வந்து சேர்ந்தவர்களோ பொதுமக்கள்.

இப்போதெல்லாம் தினசரி சராசரி இரண்டு பேர் வீதம் தொலைபேசியில் அழைத்துத் திட்டுகிறார்கள். எந்த உள்ளடக்கத்தின் பொருட்டுத் திட்டினாலும் திட்டுபவர்களுக்கென்று பொது குணாம்சங்கள் உள்ளன. முதல்மூச்சிலேயே தொலைபேசி அதனை நம்மிடம் தெரிவித்துவிடும். நான் அவர்களை வெட்டவெளியில் பேசிக்கொண்டிருக்குமாறு செய்துவிடுவேன்.

"ஒருவன் நீ குறிப்பிட்ட விஷயத்தை சொல்லியதிலிருந்தே தொடர்ந்து ஒருவார காலமாகக் டித்துக்கொண்டே இருக்கிறேன்; உன்னைக் கொல்லாமல் விடமாட்டேன்" என்கிறான். பொதுவெளியில் எழுத்திற்கு இப்படியெல்லாம் சாத்தியங்கள் இருக்கத்தான் செய்யும். அவன் அகத்தை கட்டிவைத்திருக்கும் விதத்தை எழுத்து உடைத்துவிடுகிறது, அவன் நினைத்தே பார்த்திராத ஒரு சந்தர்ப்பத்தில்.

வாசகனுக்கு இத்தகைய தருணங்களை எதிர்கொள்வதில் பயிற்சி இருக்கும். பொதுமக்களிடம் அதேவிதமாக எதிர்பார்க்க இயலாது. இதில் ஒரு சங்கடம் என்னவெனில் ஏதேனும் இக்கட்டில் இருக்கும்போது புதிய எண்ணிலிருந்து வரும் அழைப்புகளை எடுக்க இயலுவதில்லை. சிலசமயம் வாரக்கணக்கில் தொடர்ந்து நமது சிந்தையாகவே இருந்து திட்டுகிறவர்கள் எல்லாம் இருக்கிறார்கள். அவர்கள் சொந்த அப்பாவைப் போல உரிமையெடுத்துக் கொண்டிருப்பது அப்போது விளங்கும். தொலைபேசி எண்ணை இணையத்தில் பரப்பி கூட்டங்கூட்டமாக வந்து தொடர் கலவரம் ஏற்படுத்துகிறவர்கள் எல்லாம் இருக்கிறார்கள். இவர்களில் ஒருவனுக்குகூட தனது பெயரையோ முகவரியையோ முன்வைத்துப் பேசும் தைரியம்கூட இருக்காது. இவற்றுக்கெல்லாம் அஞ்சி பெருமாள் முருகனைப் போல புண்ணைப் பெரிதாக்கி உட்கார்ந்து அழுது வடிய முடியாது. பொதுமக்கள் முன்னால் எழுத்து நிற்கும்போது காலைக் கடன்களை கழிப்பது போல இவற்றைப் பழக்கமாக்கிக் கொள்ளவேண்டும், அவ்வளவுதான் விஷயம். பிரச்சனைகளை நோண்டியெடுத்து பெரிதுபடுத்த வேண்டுமெனில் இங்கே ஒவ்வொரு எழுத்தாளனும் பெரிதாக்கிக் கொண்டிருக்கலாம். உள்ளடக்கத்தில் நம்பிக்கை கொண்ட எழுத்தாளன் சிறப்பு நிலை ஏற்பட்டாலே ஒழிய இவை செய்யத் தகுந்த காரியங்கள் இல்லை. கோணங்கி கழிந்த கல்குதிரை இதழ்கள் கொண்டு வந்தபோது எண்ணை மாற்றிக் கொள்கிற அளவிற்கு முகமற்ற மிரட்டல்கள். அவர் ஓங்கி ஒரு பெரிய குசுவிட்டது போன்று கடந்து போனார். மிக நெருங்கியவர்களுக்கு வெளியே அவர் பராதியே முன்வைக்க வில்லை. இத்தனைக்கும் அவர் தூங்க இயலாத அளவிற்கு நிலைமையை ஏற்படுத்தினார்கள்.

தாக்கத் துடிப்பவனெல்லாம் தாக்குபவனும் இல்லை; தாக்குதலை தாக்குப் பிடிக்கப் போகிறவனும் இல்லை. எழுத்து அவனை தாக்கியிருக்கிறது. உள்ளூர பாதிப்படைப்பவற்றை எதிர்ப்பதென்பது இங்குள்ள பொதுமக்கள் பழக்கம். முதல் பாதிப்பில் எழுந்து நின்று எதிர்க்கும் ஒருவனே பின்னாட்களில் தீவிர வாசகனாகவும் மாறுகிறான். அப்படியும் நடக்கிறது. இது தமிழின் குலக்குணம். பிடித்துப் போயிற்றென்றால் எதிர்ப்பது, பராது சொல்வது, கேவலப்படுத்தத் துணிவது. உள்ளம் குலைந்தவன் எதிர்க்கத்தானே செய்வான்? இப்படியும் ஒருவகை உண்டு. எப்படியிருந்தாலும் வாசகன் மௌனமாகும் அளவிற்கு, ஒரு தல ரசிகன் வாந்தி பண்ணும் போது, சிரமாகத்தான் உள்ளது. வேறென்ன செய்ய முடியும்?

இந்த தொழில்நுட்ப மாற்றம் எழுத்தில், அதன் தொடர்புநிலையில் பாதிப்பை உண்டாக்கியிருக்கிறது. தொடர்பு எந்த சிக்கலான உள்ளடக்கத்தைக் கொண்டதாக இருந்தாலும் பாசாங்கற்று வெளிப்படையாக இருந்தாக வேண்டும் என்று வலியுறுத்துகிறது. அது ஆரோக்கியமானது என்பதே எனது எண்ணம்.

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"