தீவிரம் வேடிக்கை வேறுபாடு

மூன்று கண்டைனர் லாரிகள்
கட்டுக் கதைகளால் பரவும் ஊடக வன்முறைமூன்று கண்டைனர் லாரிகள் என்பது மிகவும் வெளிப்படையானதொரு உருவத்தோற்றம். அது நம்முன்னே கொண்டு நிறுத்தப்பட்டுள்ளது. இதில் ஒரு மாயமும் இல்லை. யாரும் இல்லை என மறுக்கயியலாத தோற்றம் இது. நீங்கள் நம்புகிறீர்களா இல்லையா? என்னும் கேள்விக்கே இங்கு இடமில்லை. ஏனெனில், அது முன்பாகக் கொண்டு வந்து நிறுத்தப்பட்டு விட்டது. கட்டுக்கட்டாகப் பணம் அதனுள் இருக்கிறது. அது சிதறாது. மக்கள் அதனுள் நுழைந்து ஒருநேர தேநீருக்கான காசைக்கூட எடுக்க முடியாது. அது கவிழப் போவதில்லை. ஒளியூட்டப்பட்ட கண்காணிப்பு லென்ஸ் பலமுனைகளில் இருந்தும் பார்த்துக் கொண்டிருக்கும் திறந்த அரங்கில் அது நின்று கொண்டிருக்கிறது.
சமீபத்தில் நான் பார்த்த காட்சிகளிலேயே அதி நுட்பமான காட்சி இதுதான். ஆர்வம் ஊட்டும் காட்சியும் கிளர்த்தும் காட்சியும் இதுதான். இந்த காட்சியை வழிப்பறி செய்வது எப்படி என்று நேற்று முதலாக யோசித்துக் கொண்டிருக்கிறேன். இதுதான் கதை.

வரலாறு முழுதும் தேடினாலும் ஒரு வதந்தி நம் கண் முன்னே ரூபம் கொள்ளும் இத்தகைய ருசிகரத்தைக் காணவே முடியாது. இல்லை. இது நம் கண்முன் தோன்றுவது முதல்முறை. புராண இதிகாச சாகசங்கள், சமய மத சாகசங்கள் அனைத்தும் ஒன்றுமில்லை என மூன்று கண்டைனர் லாரிகளும் போதிக்கின்றன. அணுவாயுதங்கள், உளவுத்துறை பேரங்கள் சாகசங்கள் அனைத்தைக் காட்டிலும் நுட்பம் கொண்டதாக இந்த காட்சியின் விசித்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. வதந்தியின் அதிரூபம்.
ஒரு தேநீர்க் காசுக்குக்கூட பயன்மதிப்பில்லாத, ஆனால் மக்களின் அன்றாடத்திற்குள் பிரவேசிக்கும் சக்தியை மூன்று கண்டைனர் லாரிகள் காட்சி எவ்வாறு பெறுகிறது? ஊடகங்கள் எவ்வாறு இதை திகில் படுத்துகின்றன?

பின்மதியத்திலிருந்து மக்கள் ‘சாயுங்காலத்திற்குள் யாரேனும் வந்து காசு தராவிட்டால் அதன் பின்னர் வரவாய்ப்பில்லை!’ என்று தெருக்களில் பேசத் தொடங்குகிறார்கள். அவர்களின் பேச்சினுள், ‘மூன்று கண்டைனர் லாரிகள்’ காட்சி கொண்டு வந்து நிறுத்தப்படுகிறது. விடியற்காலை இந்த ‘மூன்று கண்டைனர் லாரிகள்’ விடுபட்டிருந்தால் பணம் தங்கள் வீடு வந்து சேர்ந்திருக்கும் என்று மறுபேச்சை பேச அதனுள்ளும் ‘மூன்று கண்டைனர் லாரிகள்’ காட்சி வந்து ஓய்வெடுக்கிறது. தமிழ்நாட்டு மக்கள் இந்தக் காட்சியின் முன்பாக இப்போது பேதையாக்கப்பட்டிருப்பதைப் ஒப்ப முன்னர் எப்போதுமே நடைபெற்றதில்லை. இக்காட்சியின் முன்பாக மக்கள் நிராயுதபாணிகளாக நின்று கொண்டிருக்கிறார்கள். இந்த காட்சி எனக்கு முழுதுமாகப் புரியவில்லை என்றாலும்கூட நான் நன்றாக அந்தக் காட்சியை, அதன் நுட்பத்தை, அழகைக் கண்டுவிட்டேன். கதைத்திகில் எனக்கு.

பலே... பலே...

இந்த அதிரூபத்திற்கு வயது இன்னும் இருபத்திநான்கு மணிநேரம் கூட ஆகவில்லை. இதன் வேலைப்பாடுகளில் பங்கேற்றோர் அரசு தேர்தல் அதிகாரிகள், மர்ம ஊடக நோயாளிகள், மயக்க மருந்து வல்லுனர்கள், மற்றும் கடைநிலைப் பிச்சைப் பாத்திரங்கள்.

கண்டுபிடி கண்டுபிடி, முடிந்தால் கண்டுபிடி.

(அம்ருதா, ஜூன் 2016 இதழில் வெளியானது)

No comments:

Post a Comment

அப்பச்சி காமராஜர் ...

அப்பச்சி காமராஜர் ... காமராஜ் பற்றி "நீயா நானா " விஜய் டிவி ஷோவில் பேசுவதற்காக ஆன்டனி ஒரு வாரம் முன்னதாக அழைத்தார்.நான் வர...