தீவிரம் வேடிக்கை வேறுபாடு

காட்சியை வழிப்பறி செய்வது எப்படி?




11ஆவது நிழல்சாலை

பாதங்கள் வழியாகச் சிரமங்களும் அவஸ்தைகளும் நழுவ
எதிர்ப்படுகிற மனிதர்களில்
எத்தனை பேர் காதல் வயப்பட்டிருப்பார்கள்
முந்தைய இரவில் மனைவியை அடித்தவனின் எண்ணம்
முதுகெலும்புக்குள் இப்போது எப்படி அலையும்
வாழைப்பூவின் பிசினிலிருந்து ஒருவனுக்கும்
வாழைத்தண்டின் நாரிலிருந்து ஒருவனுக்கும்
இந்தக் காலை புறப்படுகிறதே
நேற்றிரவு நிறைவு பெறாத பெண்மையும்
நிறைவுபடுத்தாத ஆண்மையும்
இந்தப் பகலில் எந்த மிருகத்தின் உருவத்தில் நடக்கும்
காதலிக்காகத் தசைகளைப் பெருக்குகிறவனின் உலகம்
பிரிவுக்குப் பின் இந்தச் சாலையை
எப்படி எதிர்கொள்ளும்
கொலைகாரனும் கொலைசெய்யப்பட்டவனும்
ஓடிய திசையினை அறிந்தவன் யார்
குடிகாரனின் வார்த்தைகள் சிதறிக்கிடக்கிற இடத்தில்
பவளமல்லிகளும் கிடக்கின்றன
இந்தச் சாலையை கட்டமைத்தவர்கள்
யாரேனும் இதனூடே நடந்து செல்வார்களா
கொடுங்கனவுகள் பற்றி
நண்பர்கள் பேசிச்செல்வார்களா
முதுமையின் வியர்வையும் இளமையின் வியர்வையும்
வேறுவேறான இசையுடன்
என்னைக் கடந்து போகின்றன
பெண்களின் தளிர் உடல்கள்
எல்லாப் பாடலிலும் ஊடுருவுகின்றன
என் விரலிடுக்கு வழிநடத்தும்
நாய்க்குட்டியின் கண்களில்
உணரப்பட்ட வாசனைகளின் குவியல்
காதுகளில் தொடர்ச்சியற்று விழும் உரையாடல்கள்
வாழ்வின் இறுக்கத்தை சற்று முடிச்சிடுவதும் அவிழ்ப்பதுமாய்
புரியவேயில்லை
11ஆவது நிழச்சாலையில்
என் தனிமையும் பயணிக்கிறது.

இந்த கவிதை தற்செயலாக சமீபத்தில் படித்த தேன்மொழி தாஸின் கவிதை. மிகச் சிறந்த கவிதைகளுக்கு உதாரணமாகத் திகழும் சக்தி கொண்ட கவிதை இது. ஒரு சாலையை கவிதையின் முன்பாக இவ்வளவு துல்லியமாகத் திறப்பது என்பது எளிதான காரியமில்லை. அதற்கு ஒரு சிறப்பு மனம் அவசியம். அது இந்த கவிதையில் வசப்பட்டிருக்கிறது. நவீன வாழ்வின் முன்பாக அச்சு அசலாக இந்த கவிதை திறக்கிறது. நவீன வாழ்வின் மீதான தனிமை சாலையில் கொட்டப்படுவது போன்றதொரு உணர்வு எனக்கு ஏற்பட்டது. இது போல எண்பதுகளில் நண்பர்களின் அறையையும் வீட்டையும் இணைக்க இயலாமை பற்றிய சமயவேலின் கவிதை ஒன்று உண்டு. தேன்மொழி தாஸின் இந்த கவிதையில் நவீன வாழ்வின் அபத்தமும் பனி மூட்டமும் சாலைவழியாகத் திறக்கிறது; அல்லது திறக்க முற்படுகிறது. சரியான உவமானம் போல விரலிடுக்கு நாய் வருகிறது. விரலிடுக்கு என்பது நாய்க்குட்டியின் வழிகாட்டுதலாக மாறிப் போயிருக்கும் போதாமை. கொண்டிருக்கும் பெருவாழ்வு.

சில அபூர்வமான கவிதைகளே சமகாலத்தைத் திறக்கும் சக்தி கொண்டவையாக மாற்றம் கொள்கின்றன. ஓங்கி ஒரு திறப்பைச் செய்துவிட்டு மறைபவை. மலைசாமியின் ‘ஒதுங்கிய தெருவிலும் சோடியம் விளக்கு’ என்னும் கவிதையும் இதனை ஒத்தது. மலைச்சாமி அதன் பிறகு என்னவானார் என்பதே தெரியவில்லை. என்னவானாலும் அதனால் இடர்பாடில்லை. நவீனத்திற்குப் பின்பான தமிழ் கவிதை உருவாக்கத்தில் அரும்பங்கு ஆற்றிவிட்டுத்தான் சென்றிருக்கிறார். அவர் முன்னின்று திறந்த இடத்தை உளியாலும் சுத்தியலும் பின்வந்த கவிகள் கொட்டோ கொட்டென்று கொட்டிக் கொண்டிருக்கிறோம். அவ்வளவுதான். காலத்தின் கதவைத் திறப்பவர்கள் பலரை காலம் மறதியில் வைத்துப் பாதுகாக்கும்.

இந்த ‘11ஆவது நிழல்சாலை’ என்னும் கவிதை எளிமையாகத்தான் இருக்கிறது. ஆனால், இது நவீனத்திற்குப் பிறகான கவிதையாக உருமாறியிருக்கிறது. இதில் வருகிற எல்லா விஷயங்களுமே எளிதாக விளங்கக் கூடியவைதான். மொத்த கவிதையும் படித்த பின்னர் புதிருக்குள் இடப்படுகிறோம்! இந்த மாயத்தை அமுதூட்டும் கவிதை இது. நான் தற்செயலாகப் படித்ததனால் மட்டுமல்ல இத்தகைய கவிதைகளே தற்செயல் நிகழ்வுகள்தான். எங்கிருந்தேனும் பீறிவிட்டழும். அந்த சப்தம் சமகால பிரக்ஞையை நமக்குள் உருவாக்கும். பலர் நம்மில் இந்த சமகால பிரக்ஞையை, நாம் எற்றடுத்த இடத்தை மனம் விட்டுச் சொல்ல தயாராக இருப்பதில்லை. அதனை ரகசியம் காக்க முயல்வோம். இந்த முயற்சியே நமது மூச்சுக் காற்றை தொடர்ந்து இறுக்கப் போகும் சுருக்குக் கயிறு என்பது பலருக்கும் தெரிவதில்லை. சுவாசம் இலகுவான இடத்தை திறந்து சொல்லிவிட வேண்டும். விக்கிரமாதித்தன் என்னைத் திறந்தார். ஞானக்கூத்தனுக்கு நான் கடன்பட்டிருக்கிறேன். தேவதச்சன் என்னை வழிமொழிந்திருக்கிறார் என்பதை எல்லாம் மறைக்கத் தேவையில்லை. திறந்தார், கடன்பட்டிருக்கிறேன், வழிமொழிந்தார் என்று சொல்வதல்லாமே அகவுலகைத் திறந்ததைப் பற்றி சொல்லபடுபவை. அன்றி தனிப்பட்ட முறையில் என்னிடம் மட்டும் ஒரு சாவியை அவர்கள் ஒப்படைத்துவிட்டுச் செல்லவில்லை. திறந்தவனை அவனோ, அவளோ யாராக இருப்பினும் மறைக்கக்கூடாது. குருதட்சணை என்பது அகத்தைத் திறந்தவனை ஒப்புக்கொள்வதுதான். மறைக்க மறைக்க அகம் மூடுண்டு செல்லும். கடவுள் வந்தாலும் திறக்க முடியாத படி.

அப்படியானால் கவிதையை எது நிமிர்த்துகிறது? செய்யுளிலிருந்து கவிதை தப்பிக்கும் இடம் எது? புலவனுக்கும் கவிஞனுக்கும் இடையில் உள்ள வேறுபாடு என்ன? இவற்றை சரிவர விளங்க முடியவில்லை. ஒருவன் எழுதுகிற சாதாரணமான ஒன்று கவிதையாவதும் இன்னொருவன் இருந்து இருந்து மெனக்கெட்டும் கவிதை தோன்றாமல் போவதும் எங்ஙனம்? காலந்தோறும் புரிபடாமல் கவிதை என்னும் மாயம் தப்பிக்கும் விந்தை இது. சமகாலத்தில் செய்யுள் இயற்றுபவர்கள் இருபதுக்கும் மேற்பட்டு இருக்கிறார்கள். அவர்களைப் பெயர்குறி அறிவித்தால் வாழ்நாள் சண்டையாகி விடும்.

மொழியென்பது வெறும் திறமையைக் குறிப்பது. அது நுட்பம் கொண்டிருக்கும். சுவாரஸ்யமான ஒன்றினைச் சொட்டிவிடும். உணர்ச்சியும் ஈர்ப்பும் கொண்டிருக்கும். மெல்லுணர்ச்சியை ஸ்திரமாக்கும். ஒரு ஒவியன் தூரிகையைச் செம்மைப்படுத்தி வைத்திருப்பது போன்றதுதான் கவிஞன் கையில் மொழி. அது கவிதையின் மீது ஏறி உட்கார வேறு எதோ ஒன்று அவசியப்படுகிறது. மொழியே கவிதையாவதில்லை. மொழியே கவிதை என்று நம்பிக்கை கொள்ளும் இடத்தில்தான் பலருக்கு சீக்கு பிடித்து விடுகிறது. மொழி ஒருபோதும் உங்களுடையது அல்ல. அது காலம் உங்கள் கையில் கொண்டு தருகிற கொடை. அதனை நிமித்தமாகப் பற்றிக் கொள்ளவேண்டியதும் கவியின் வேலைதான். அதனை ஒரு இடத்தின் மீது கொண்டு ஏற்றி வைக்கிறீர்களே அதுவே கவியின் இடம். அது என்ன என்பதும் அதில் தொழில்படும் விஞ்ஞானம் என்ன என்பதைக் கண்டறிவதும் புலவர்களுக்கு எளிமையான காரியங்களாக இல்லை. போலியாக கவிதையை எழுதிவிட இயலும் என நினைத்துப் பணியாற்றுபவர்களையே புலவர்கள் என்கிறேன். அவர்கள் மேலும் மேலும் செய்யுள் உற்பத்தியில் ஈடுபடுகிறார்கள். கவிஞர்கள் மீது அளவு கடந்த பொறாமை உணர்ச்சியும் எதிர்ப்பும் கொள்கிறார்கள் அவர்கள். எந்திரங்கொண்டும் கவிதைகளை எழுத முடியவில்லை. கவிதை எழுதுகிற எந்திரங்கள் கீழே படுத்து உருளுகின்றன. அவற்றால் எழும்ப முடியவில்லை. இணையமற்ற கணிப்பொறி எவ்வாறு ஒரு சவமோ அது போன்ற கவிஞனற்ற கவிதை முயற்சி என்பது வெறும் செய்யுள்.

ஒருகாலகட்டம் மறைந்து மறுகாலக்கட்டம் உருவாகும் போது அதில் வேலை செய்த கவிதைகள் நூற்றுக்கணக்கில் இருக்கும். ஆனால், அதில் நிலைபேறு அடையும் கவிஞர்கள் ஐந்தாறு பேர்தான் இருப்பார்கள். நவீனதமிழ் காலத்தைக் கருத்திற்க்கொண்டால் கவியாக நிலை பெற்றிருப்பவர்கள் பத்து பேருக்குள்தான் இருப்பார்கள். மிஞ்சியவர்கள் என்னவானார்கள் என்பதற்கான பதில் யாரிடமும் இல்லை. அது கவிதையின் பெறுமதி. அப்போது பயன்மதிப்பற்றவர்களாகவும் தறுதலைகளாகவும் பார்க்கப்பட்ட சிலரே பின்னாட்களில் அவதாரம் கொள்கிறார்கள். காரணம் கவிதை தான் எற்றேடுக்கும் திசையில் கவிஞனை பிரயாணம் மேற்கொள்ளச் சொல்கிறது. லௌகீகத்தின் செலவாணி என்ன என்பது பற்றி அதற்கு ஒரு கவலையும் இல்லை. கவலைகொள்ளும் செலவாணியையும் புலவனையும் அது கசந்து துப்பும்.

தமிழ்க் கவி ஒருவர் என்னிடம், சமீப காலங்களில் பெண் கவிஞர்களைப் பற்றி அதிகமாக எழுதிவருகிறேன் என்பதை வைத்துக் குறைகொண்டு, “பெண் கவிஞர்களைப் பற்றிதான் அதிகம் பிரக்ஞை கொள்கிறீர்கள்!” என்று ஆதங்கமாகச் சொன்னார். அவர் சொல்லியது முக்கால் சதவிகிதம் உண்மை. எனக்கு பெண் பிரக்ஞையே அதிகம். ஆண்களிடம் எனக்குக் கூறில்லை. ஆணில்லாத பிரபஞ்சத்தைப் பற்றி எனக்கு சிறிய கவலையும் இல்லை. பெண் இல்லாத பிரபஞ்சத்தை என்னால் கற்பனை செய்யவே இயலாது. ஆனால், கவிதையைப் பொறுத்து அவ்வாறு நான் பிரிவினை கொள்கிறேன் என்று சொல்ல முடியாது.

இப்போது தமிழில் ஆண் கவிகளிடம் ஒரு பிரச்சனை இருக்கிறது. நாற்பது வயது தாண்டிவிட்டால் பணி முடிந்துவிட்டது இனி அறுவடைக்கு மட்டுமே ஏற்ற சுயம்புவாக இருக்கிறோம் என்று கருதுகிறார்கள். எனக்கு அது நடக்கவில்லை, இது நடக்கவில்லை என்று புலம்புகிறார்கள். எது நடக்க வேண்டும்? கவிதை மட்டும் உன்னில் நடந்தால் போதாதா? முதல் தொகுப்பில் கலைமாமணி, இரண்டாவதில் சாகித்ய அகாதமி, நான்கென்றால் ஞானபீடம் என்று கணக்கு கட்டுவார்கள் போல! சிலருக்கு முதலமைச்சர் பதவியின் மேல் மோஹம். அதிருப்தியின் உச்சம். இவர்கள் இன்றைய வாழ்வென்றாகி விட்டது. வேறெங்கோ சென்றிருக்க வேண்டியவர்கள் வழிதவறி இங்கு வந்து தவறுதலாக விழுந்துவிட்டார்கள் என்பது போல. நீ இருக்கும் இடம் உனக்கே நம்பிக்கை அற்றதாகவும், இருக்கக்கூடாத இடமாகவும் இருக்குமேயானால், நீ இருக்குமிடந் தேடி எந்த விமானம் வரப் போகிறது என்று காத்திருக்கிறாய் அய்யனே? ஒரு பயலுமே கவிதையின் இடந்தேடி இங்கு வந்தவர்கள் போலவே தோன்றவில்லை. எதுவுமே தங்களுக்குக் கிட்டுவதில்லை என்று புலம்புகிறார்கள். வாழ்வும் கவிதையும் ஒன்றெனவே நடக்கும் விக்ரமாதித்யனிடமெல்லாம் கூடவே பயணித்திருக்கிறேன். இத்தகைய புலம்பல்களை ஒருபோதும் கேட்டதே இல்லை. இப்போது நாற்பதைக் கடந்திருப்பவர்களின் துணையோடு, சிறுநீர் கழிக்கும் தூரம் பயணித்தாலும் நான்கு வாக்கியங்கள் குறையாமல் புலம்புகிறார்கள்.

கவிதை சிரத்தையாகவும் இல்லை; இவர்களுக்கு கவிஞன் என்பதில் சுகமும் இல்லை. புதியவர்களும் பெண்களுமே ஆசையோடு வருகிறார்கள். அவர்களிடமே கவிதையின் பேரிலான காந்த ஈர்ப்பு தென்படுகிறது. ஆண்களுக்கு இந்த காலகட்டத்தில் லௌகீக நெருக்கடிகள் தாண்டிய அக நெருக்கடிகள் இல்லையோ என்னவோ? கவிதை தவிர்த்துப் பிற எல்லாவற்றைப் பற்றியும் பேசுகிறார்கள். கூடும் அரங்குகளில் பேசுவதையும் உரையாடுவதையும் மறைக்க பழம் பாடல்களைப் பாடி ஊருக்கு ஊர் ஊத்தி மூடுகிறார்கள். இளங்கவிஞனின் வீட்டில் ஒருவாரத்திற்கும் முன்பே சென்று முகூர்த்த வேலைகள் பார்ப்பதெல்லாம், அறைகளில் உட்கார்ந்தது இந்த பழம் பாடல்களைப் பாடுவதற்காகத்தான். மூத்த கவிகளிடம் வேறு இவர்கள் கடுங்கோபத்தில் இருக்கிறார்கள். கெட்ட நல்ல வார்த்தைகளில் அவர்களைத் திட்டி மோதுகிறார்கள். பாவம் இதெல்லாம் அவர்களுக்குத் தெரியாது. ஆண்கள்தான் இப்போது அபசகுனம். தமிழ் கவிதையில் வரும் தலைமுறையில் பெண்கள்தான் அதிகம் பேர் இருப்பார்களோ என்று தோன்றுகிறது.

ராஜன் ஆத்தியப்பன், இசை போன்றோர் இந்த காலத்தின் முக்கியமான கவிகள்தான். அது போலவே ஜீனத் நஜீபா, பெருந்தேவி இருவரும் முக்கியமானவர்கள் என்பதே எனது எண்ணமாக இருக்கிறது. எழுதிப் பழகுபவர்களை என்னால் எண்ணத்தில் சேர்க்க முடியவில்லை. அதுபோல என் வாயிலிருந்து முத்து உதிர்பவர்கள் மட்டுமே கவியாக இருக்க முடியும் என்கிற நம்பிக்கையும் எனக்கில்லை. ராஜன் ஆத்தியப்பனின் சமீபத்தில் வந்த ‘கருவிகளின் ஞாயிறு’ தொகுப்பில் பல கவிதைகள் சமகாலச் சூழலில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியிருப்பவை. அத்தொகுப்பிலுள்ள எனக்குப் பிடித்தமான இரண்டு கவிதைகள் இவை.

1.
ஆண்களும் பெண்களுமாய்
விழா தீர்ந்த
முச்சந்தி வெளியில்
கசங்கிய புத்தாடையோடு
குழுமி நிற்க
ஒன்றன் பின் ஒன்றாக
நா தழைய ஓடிவந்த
நாய்களிலொன்று மற்றொன்றின்
பின்புறம் கால்களேற்றிப்
புணரத் தொடங்கியது.
கணத்திகைப்பு மீண்டு
ச்சூ ச்சூ வென விரட்ட
எல்லோர் ஆடைகளையும்
பற்றியிழுத்து அம்மணமாக்கி
அகன்றன நாய்கள்

2
சில பத்தடிகள் தாண்டி நின்றது
விரைவாக வந்த பேருந்து
நிறுத்தத்திலிருந்த இளம் பெண்கள்
பேருந்து நோக்கி ஓடுகின்றனர்
அவர்களின் உடல்களினுடே
இணைந்தோடத் தொடங்கியது
நூற்றாண்டுகளின்
பெண்ணியப் படிமங்கள்
எதிர் திசையில் விலகியோடியது
இன்றைய நவீனம்
உள்நுழைந்து இருக்கையில் அமர்ந்ததும்
மீண்டுமவர்கள்
சட்டென நாகரீக மங்கைகளானார்கள்.

(அம்ருதா, ஜூன் 2016 இதழில் வெளியானது)

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"