சாமிக்கு ஏதேனும் கொடுத்தால் மட்டும்தான் அருள் கிடைக்குமா ?

சாமிக்கு ஏதேனும் கொடுத்தால் மட்டும்தான்
அருள் கிடைக்குமா ?
என்று சிலர் அடிக்கடி கேட்கிறார்கள்.நிச்சயமாக அதில் சந்தேகமே கிடையாது.உங்களிடம் சாமிக்குக் கொடுக்கும்படியாக அப்படி என்னதான் விஷேசமாக வைத்திருக்கிறீர்கள் ? போதிய ஞானம் இருக்கிறதா ? இல்லாமை இல்லாத மனம் உண்டா ? வஞ்சம் கீழிறங்கியிருக்கிறதா ? இல்லாமைக்கு இரங்கும் வழி தெரியுமா ? அப்படி என்னதான் பெரிதாக இருக்கிறது உங்களிடம் ? பணம் தவிர்த்து உங்களிடம் ஒன்றுமே இல்லையாயின் பணத்தைத்தான் கொடுத்தாக வேண்டும் வேறு வழி கிடையாது .அம்மை அவ்வையிடம் கவியமுது இருந்தது அதனைக் கொடுத்தாள்.காரைக்கால் அம்மை ஞானத்தை கொடுத்தாள். சாமிக்கு ஆண்டாள் காமத்தைக் கொடுத்தாள் .எதுமே இல்லாதவன் இருப்பதைத் தானே கொடுக்க முடியும் ? உன்னிடம் இருப்பதெல்லாம் பணம் மட்டும்தான்.அப்படியானால் நீ அதனைத் தவிர்த்து வேறு எதனையும் தரயியலாது. ஏதேனும் கொடுத்தால் மட்டும்தான் அருள் கிடைக்குமா ? என்று கேட்கிறவனிடம் கொடுப்பதற்கு இடமற்ற வறிய மனம் மட்டுமே இருக்கிறது என்று பொருள் .பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கவச குடலங்களோடு பிறந்த கர்ணனிடம் அவனுடைய வள்ளல் தன்மையைக் கேட்டார்.அவன் அவனுடைய வள்ளல் தன்மையோடு அகந்தையைப் பொருதி வைத்திருந்தான்.அகந்தையில் பொருதி இருக்கிற அத்தனையும் கழன்று விழுகிற வரையில் அவன் கேட்டுக் கொண்டேயிருப்பான் .ஏனென்றால் அகந்தையில் பொருந்தியிருக்கிற எல்லாவிதமான ; அது நல்லவிதமான அலங்காரங்களாக இருப்பினும் சரி.தீமையின் அலங்காரங்களாக இருப்பினும் சரி அவை அனைத்துமே அகந்தையின் அற்பத்தனங்கள்தான் .அவன் கணக்கு அது.
இதில் சாமிகளுக்கென்றில்லை மனிதர்களிடம்கூட இலவசமாகக் காரியங்கள் நடக்க வேண்டுமென விருப்பம் கொள்ளாதீர்கள்.அது தீங்கின் விருப்பம்.ஒரு வித்தையை கற்றுத் தந்து விட்டு அவன் தோளில் போட்டு மினுக்கியலைந்த தோள்ப்பையை அவனிடம் அனுமதி கேட்காமல் கூட நீங்கள் எடுத்துச் சென்று விடலாம்.எதிராளிக்கு உங்களின் செய்கை முழுவதுமாக புரிய வேண்டும் என்கிற அவசியமில்லை .ஆனால் அவனுக்கு நீங்கள் கற்றுத் தந்த வித்தை அவனுக்கு பயன்படாது எனில் அது திருட்டாகி விடும்.பொன்னை வைத்து விட்டுத்தான் பூவை எடுக்க வேண்டும்.நீங்கள் சாமியைத் திருட வேண்டுமெனில் உங்களில் இருந்து இறங்கி இறங்கி சாமியில் இணைந்து விட வேண்டும்.
சாமிகள் நம்மிடம் நாம் கொண்டுவந்ததாகக் கருதுகிற அனைத்தையும் கேட்டு பிடுங்குவதற்காகத் தானே இருக்கிறார்கள்.அகந்தையின் பெருமிதங்களாக நாம் கொண்டிருக்கும் அனைத்தையும் அவர்கள் பிடுங்கியாக வேண்டுமே ? மரணம் கடைசி பற்று வரவுச் சீட்டை கிழித்தெறியும் போது நடக்கும்.மரணம் நடந்து முடிந்த பின்னரும் வாழமுடியும் என்பதையும் ,அது கடவுளுக்கு இணையானதொரு வாழ்க்கை என்பதும் உணர்ந்தோர் அறிவர்.
ஒரு கவிஞனைச் சந்திக்கிறீர்கள்.நீங்கள் கொண்டு சென்ற வெறுமை அத்தனையையும் அவன் தலையில் சுமத்தி விட்டு ஒரு புட்டி மது ஈடாகாகக் கொடுத்து அவனுடைய ஒரு புத்தகத்தை வாங்காமல் திரும்புகிறவர் நீங்கள் எனில் ; உங்களை அவனுடைய கடும் விதியும் இணைந்து அலைக்கழிக்கும் என்று பொருள் . சாமர்த்தியம் என்றுதான் நினைப்போம்.ஆனால் அதுயொரு வினையின் விபத்து.செய்யக் கூடாதது .பலசமயங்களில் சாமர்த்தியமாகக் கடந்து விட்டோம் என்று நாம் கருதுகிற பல விஷயங்கள் இந்த ரகத்தைச் சேர்ந்தவை.முப்பது வருடம் கழித்து ஒரு முட்டுச் சந்திற்குள் வந்து நிற்கையில் விளங்கி என்ன பலன் ?
எங்கள் ஊரில் எல்லாசாமிகளும் கேட்கும் .பெரிய சாமிகளை திருப்தி செய்து விட முடியும் .சிறிய சாமிகளிடம் கதையெல்லாம் விட முடியாது .கொண்டு வா மகனே கொண்டு வா அவ்வளவுதான்
ஆடு ,கிடா ,கோழி ,பன்றி அத்தனையும் கொண்டு வா.நீ சாப்பிடுவதில்லையாக இருக்கலாம் சாமிகள் சாப்பிடுவார்கள் கொண்டு போ.அமர்ந்திருந்து தலை குனிந்து சாப்பிடுகிறார்களே ; அத்தனை பயல்களும் சாமிதான் கொண்டு போ
கேள்வி கேட்காதே.

No comments:

Post a Comment

அப்பச்சி காமராஜர் ...

அப்பச்சி காமராஜர் ... காமராஜ் பற்றி "நீயா நானா " விஜய் டிவி ஷோவில் பேசுவதற்காக ஆன்டனி ஒரு வாரம் முன்னதாக அழைத்தார்.நான் வர...