ஐந்து முதலைகளின் கதை - சரவணன் சந்திரன்

ஐந்து முதலைகளின் கதை - சரவணன் சந்திரன்

புதிதாக எழுத வருபவர்களில் நம்பிக்கையை ஏற்படுத்துபவர்கள் மிக மிகக் குறைவு.ஏன் இப்படி என்பதை விளங்கிக் கொள்ள இயலவில்லை.புதிய தலைமுறை எழுத்தில் இயங்க வரும்போது எழுத்து இன்னும் அதிக வேகமும்   ,புதுமையும்  அடைய வேண்டாமா ? உண்மையாகவே எனக்கு முந்தைய தலைமுறையினரை வாசிப்பதில் இருக்கிற ஆர்வம் பிந்தைய தலைமுறையினரை வாசிக்கையில் ஏற்படுவதில்லை.முழுமையான ஈடுபாடு என்பது புதியவர்களிடம் வற்றிப் போயிருப்பதுவும் ஒரு காரணம் .முழுமையான ஈடுபாடு இல்லையெனில் கத்தரிக்காய் வியாபாரம் கூட கைவசப்படாது .எழுத்து எப்படி வசப்படும் ?

புதியவர்கள் சீசன் வியாபாரம் போல எழுத்தை அணுகுகிறார்களோ என்று தோன்றுகிறது.அப்படியானால் அப்படியணுகுவதற்கு தோதான துறைதானா எழுத்து ? புனைகதைகளை பொறுத்தவரையில் முன்னவர்கள் என்ன செய்திருக்கிறார்கள் என்பதனை அறிந்து வைத்திருத்தல் அத்தியாவசியமானது .அதிலிருந்து சில அடிதூரமெனும் முன்னோக்கி நகர நம்மிடம் என்ன இருக்கிறது என்கிற கேள்வி புனைகதை எழுத்தாளனுக்கு இன்றியமையாதது .இந்த நிலையை பின்னணியாகக் கொண்டு யோசிக்கும் போது அரிதாக ஒருசிலர் நம்பிக்கையை ஏற்படுத்துகிறார்கள்.அந்தவகையில் சரவணன் சந்திரனின் எழுத்துக்கள் குறிப்பிடத் தகுந்தவை.வெகுஜன எழுத்திற்கும் ,தீவிர எழுத்திற்கும் இடைப்பட்ட ஒரு தளத்தில் சரவணன் சந்திரனின் எழுத்துக்கள் அமைந்துள்ளன.ஒரு பட்டுக்கோட்டை பிரபாகரும் , பால் சக்கரியாவும் சமவிகிதத்தில் கலந்த கலவை போல இவர் எழுத்துக்கள் இருக்கின்றன.இவரால் பட்டுக்கோட்டை பிரபாகராக இருப்பதையும் தவிர்க்க இயலவில்லை.அது போல இவரால் பால் சக்கரியாவையும் கைவிட முடியவில்லை.இப்படிச் சொல்வதால் பட்டுக்கோட்டை பிரபாகராலும்,பால் சக்கரியாவாலும்  தாக்கத்திற்கு  உள்ளான எழுத்து இவருடையது என்று  அர்த்தமில்லை.இவருடைய எழுத்தின் வகைமையை புரிந்து கொள்வதற்கு வசதியாக மட்டுமே இந்த இருவரின்   பெயர்களையும்  சொல்லிச் செல்கிறேன்.

முந்தைய தலைமுறையினர் வாழ்ந்த காலத்தில் வெகுஜன எழுத்திற்கும் ,தீவிர எழுத்திற்கும் இடைப்பட்ட வேறுபாடு மிகவும் தெளிவாக இருந்தது .ஏனெனில் அப்போது வெகுஜன எழுத்து உக்கிரமாக தமிழில் இருந்தது.மக்கள் அதன் பக்கமாக நின்றார்கள்.வாசகர்களே தீவிர எழுத்தின் பக்கம் இருந்தார்கள்.ஆனால் இப்போது தமிழில் ஒருகாலத்தில் புகழுடம்பெய்தியிருந்த வெகுஜன எழுத்து துப்புரவாக அழிந்து போய்விட்டது.அப்போது பேன்  பார்த்தவர்கள் தொடங்கி புனுகு எடுத்தவர்கள் வரையில் எவரையுமே வாசகர்கள் இப்போது நினைவில் கொண்டிருக்கவில்லை.இப்படி முழுமையாக ஒரு மொழியில் வெகுஜன எழுத்து இறந்து போய்விடுவது நல்லதல்ல என்பதே எனது எண்ணம்.தீவிர எழுத்திற்கும் ,வெகுஜன எழுத்திற்கும் இடைப்பட்ட வேறுபாட்டை சுட்டிக்  காட்டவேனும் அது ஒரு மொழியில் உயிர் வாழ்வதே நல்லது.அப்படியல்லாது   வெகுஜன எழுத்து முற்றிலுமாக தூர்ந்து போயிருக்கும் நிலையில் இப்படி இரண்டிற்கும் இடைப்பட்ட ஒரு எழுத்து வகைமை உருவாகிறதோ என்றும் எண்ணத் தோன்றுகிறது.

சரவணன் சந்திரனின் ஐந்து முதலைகளின் கதை உள்ளடக்கத்தைப் பொறுத்தவரையில் நவீனகாலத்திற்குப் பிறகான சமகால வாழ்வின் பேராசைகளின் நாடியை அதன் துடிப்பு கெடாமல் தாவிப் பற்ற முயலும் ஒரு நாவல்.இந்த நாவலின் பிரதானமான சிறப்பு என்று இந்தப் பண்பைச் சொல்லலாம்.சமகால வாழ்வின் விர்த்திகேடுகளின் மடியில் இந்த நாவல் புழங்குகிறது.இதுபோல நவீனத்திற்கு பின்னான வாழ்வின் பேராசைகளின் ஸ்தியை பாலைநிலவனின் சிறுகதைகள் பற்ற முயல்வதையும் இங்கே நினையூட்ட முடியும்.பாலை நிலவனின் சிறுகதைகளின் இவ்வளவு தெளிவாக அந்த வாழ்வு வடிவம் பெற்றுத் துலங்குவதில்லை.ஆனால் புகைமூட்டமாக இந்த வாழ்வின் நாடியை அவரும் தொட முயற்சி செய்கிறார்.எனினும் சரவணன் சந்திரனின் எழுத்தில் பாலை நிலவனின் கதைகளில் இருப்பது போன்ற இந்த வாழ்வின் மீதான எதிர்நிலை புகார் எதுவும் இல்லை.சரவணன் சந்திரனின் எழுத்திற்கு உணர்ச்சிகரமான புகார்கள் வாழ்வின் மீது இல்லை என்பது நிறைவை ,சிறப்பை ஏற்படுத்தக் கூடிய விஷயமும் கூட

சரவணன் சந்திரனின் சிக்கல் அவருடைய அவசரத்தில் ஏற்படுகிறது.நாவலில் எங்கெல்லாம் மிகச் சிறந்த உருமாற்றங்கள் எழுத்தில் நிகழ்வதற்கான வாய்ப்புகள் ஏற்படுகிறதோ அந்த இடங்களை கைவிட்டு அவர் மிகவும் கீழிறங்கிவிடுகிறார்.இந்த இடத்தில் இருந்து ஒரு பறத்தல் நாவலுக்கு புதிதாக சாத்தியமாகிறது என்று வாசகன் உணருந்தருவாயில் உடனடியாக அவருள் இருந்தியங்கும் பட்டுக்கோட்டை பிரபாகர் வெளியே வந்து வேலையைக் காட்டத்   தொடங்கி விடுகிறார்.ஐந்து முதலைகளின் கதைகள் நாவலில் இதற்கு உதாரணமாகச் சொல்ல பல்வேறு இடங்கள் உள்ளன.மடிப்புகள் உருவாக வேண்டிய இடங்களை எழுத்தாளன் தனது அவசரத்தால் கடந்து சென்று விடுவது துரதிர்ஷ்ட மானதொரு நிலை.இப்படி இவர் தவற  விட்டு ஓடுகிற இடங்களில் பொறுப்புணர்ச்சியுடன் நடந்து கொள்ள இந்த நாவலில் இவருக்கு சாத்தியமாகியிருக்குமெனில் ஐந்து முதலைகளின் கதை நாவல் வேறு ஒரு கிரகத்திற்கு மேலெழும்பியிருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.அவ்வளவு தீவிர சாத்தியப்பாடுகள் கொண்ட உள்ளடக்கம் இந்த நாவல்.மற்றபடி ஒரு வெகுஜன வாசகனுக்குக் கிறக்கத்தை ஏற்படுத்தக் கூடிய மயக்கும் வாக்கியங்கள் இந்த நாவல் முழுதும் பின்தொடர்ந்து வருகின்றன.என்றாலும் மடிப்புகளை எழுத்தில் அனுமதிப்பதும் ,அவை திறக்க எழுதுகிறவன்  தன்னில் இடம் தருதலும் மட்டுமே காலத்தில் ஒரு புனைவை கொண்டு செலுத்துகிற விஷயங்கள் என்பதை சரவணன் சந்திரன் ஏற்றெடுக்க வேண்டும்.அவருடைய புனைவுகளின் அவசரம் மங்கும் இடத்தில் அந்த விநோதப் பறவை எழுந்து பறக்கக் காத்திருக்கிறது அவருடைய எழுத்தில்.

வாழ்த்துகள் 

No comments:

Post a Comment

நினைத்தார்கள் நினைத்திருந்தேன் - 62

நினைத்தார்கள் நினைத்திருந்தேன் 1 இடையில் இறந்து விடுவேன் என்றே எல்லோரும் நினைத்தார்கள் நானும் அப்படித்தான் நினைத்திருந்தேன் 2 ...