அண்ணா சாலையில் ஒரு இடத்தில் தானே திடீர் பள்ளம் ?

அண்ணா சாலையில்  ஒரு இடத்தில் தானே திடீர் பள்ளம் ?

எங்கள் ஊரில் அப்படியல்ல.இப்படியான ஏராளமான பள்ளங்கள் அடங்கியதுதான் எங்களூர் சாலைகள்.அதனால் அண்ணா சாலையில் ஏற்பட்டிருக்கும் பள்ளம் என்னை ஏதும் செய்யவில்லை.திடீர் நோயாளிகள் சில காலம் தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் நோய்களை பீற்றிக் கொண்டலைவதை போல சென்னைவாசிகள் நிறைய பொருமுகிறார்களே என்று தோன்றியது.

கழிந்த வாரம் பையனுக்கு ஓ பி சி சான்றிதழ் வாங்க வேண்டியிருந்தது .கிராம நிர்வாக அலுவலகம் ,வருவாய் அலுவலர் அலுவலகம் பின்னர் வட்டாட்சியர் அலுவலகம் எல்லாவற்றிற்கும் செல்ல வேண்டும்.எனக்கு இந்த ஜெ,சி.பி எந்திரங்களைக் கண்டால் பெரும் பயம்.யவனிகா ஸ்ரீராமின் ஒரு கவிதையும் எனது பயத்திற்கு காரணமாக இருக்கலாம்.அவர் கவிதை பொக்லைன் எந்திரம் பற்றியது .பொக்லைனைக் காணும் போதெல்லாம் எனக்கு துர்க்கையின் அடிவயிற்றில் ஒரு வேற்று கிரகத்தின் எந்திர யானை சதா ஏறிக் கொண்டிருப்பது போல தோன்றும்.எங்கள் ஊரைப் பொறுத்தவரையில் இரண்டு கிலோமீட்டர் சுற்றளவுப் பரப்பிற்குள் குறைந்த பட்சம் நாற்பத்தியெட்டு சுடலை மாடசாமிகள் இருப்பார்கள்.எட்டு சுடலையையும் இரண்டு இசக்கியையும் கடக்காமல் நீங்கள் ஐநூறு மீட்டர் எங்களூரில் செல்ல இயலாது.அப்படியானால் மாவட்டம் முழுவதும் எத்தனை சுடலைகளும் ,இசக்கிகளும் இருப்பார்கள் என்பதைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.கணக்கு மிகை ஆகாது.அத்தனை பேரிருந்து ஆட்சி செய்கிற இடம்.இந்த இயற்கை காற்று நீர் எல்லாவற்றிற்கும் இன்றும் அவர்கள்தாம் பொறுப்பு.இது பற்றி நீட்டினால் வேறு திக்கிற்குச் சென்று விடுவோம்.

இந்த ஜெ.சி.பி எந்திரங்கள் சில சமயங்களில் சுடலைமாட சாமிகளின் எண்ணிக்கையைக் காட்டிலும் அதிகம் நின்று கொண்டிருக்கும்.ஐம்பதடியில் நிற்கும் இரண்டிற்கு நீங்கள் பயந்து ஒரு மாற்று குறுக்குத் தடம் நோக்கி முன்னேறினால் இருபத்தைந்தடியில் அங்கே இருவர் நின்று கொண்டிருப்பார்கள்.ஐம்பதடியில் பொக்லைன் .எனது பையன் சிறுவயதாக இருக்கும் போது ஒரு சமயம் குளக்கரை பாதை வழியே ஒரு கோவிலுக்குச் செல்ல முன்னேறிக் கொண்டிருந்தோம்.பாதிவழி சென்ற பின்னர் குறுக்கே சாலையை ஒரு ஜெ.சி.பி அகட்டி வாரி நூறு நூற்றைம்பதடிக்கு தொடிக் கொண்டிருந்தது.மற்றொன்று முன்னது அகலக் கிழித்த மணலையெல்லாம் சுற்றி நின்ற டிப்பர்களிலும் ,டிராக்டர்களிலும் கொண்டு கொட்டியது.கோபுர தரிசனம் போல இது வேறு வகை அடியாழ தரிசனம்.எங்கள் பகுதியில் பெயர் போன ஒரு பாராயணக்காரர் உண்டு. அவர் இக்காட்சியைக் கண்டிருப்பார் எனில் சிவனின் அடியாழக் காட்சியை  பகவான் இவ்வாறு ஜெ.சி.பி எந்திரங்களின் துணையோடுதான் நோண்டிச் சென்று பார்த்தார் .என்று பின்வரும் காலங்களில் பேசித் திரிந்திருப்பார்.

என்னிடம் அந்த காட்சியைப் பார்த்து என் பையன் என்னிடம் கேட்டதுதான் வினோதமானது .அவர்கள் அப்பாக்கள் அவர்களுக்கு பிள்ளைகளுக்கு மண் தோண்டி விளையாட எவ்வளவு பெரிய சாமான் வாங்கி கொடுத்திருக்கிறார்கள் பார்த்தாயா ? நீயும் இருக்கிறாயே ! இது அவன் .இப்போது அவன் வளர்ந்து பெரியவனாகி விட்டான்.எனது உயரத்தில் இருக்கிறான் என்றார் பிரான்சிஸ் கிருபா .+ 2 தேர்வு முடிந்து மேற்படிப்பிற்கான ஒரு நுழைவுத் தேர்விற்கான படிவத்தில் ஓ.பி.சி. இணைக்க வேண்டும்.அவனிடம்  இந்த காட்சியைக் காட்டிக் கொடுத்து " இவர்களின் தகப்பன் மார்கள் எவ்வளவு பணக்காரர்களாக இருப்பார்கள் என்று பார்த்துக் கொள்.மண் தோண்டி விளையாட எவ்வளவு பெரிய எந்திரங்களை வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள் பாரேன் ? என்றேன் .அவன் சிரித்துக் கொண்டான்.அவனுடைய சிரிப்பில் இவனுக்கு இன்னும் சிறிது காலத்திலேயே தள்ளாத முதுமை வந்துவிடும் என்கிற சப்தம் ஒலித்தது.

அவன் சிறுவயதில் இருந்த போது கண்ட காட்சிகள் இப்போதும் அப்படியே இந்த விஷயத்தில் இருக்கிறது.எங்கேனும் இரண்டு ஜெ.சி.பி கள் எதையாவது தோண்டிக் கிளர்த்திக் கொண்டுதானிருக்கிறது.நல்லவேளையாக இந்த காட்சிகளை என்னுடைய அப்பய்யா காணவில்லை .அவர் கடந்து சென்ற பனிலாரிகளுக்கே பயந்தவர்.ஏதோ சூது நடக்கிறது என்று .பார்த்திருப்பாரேயானால் அவருடைய விடைபெறுதல் சுகமரணமாக ஒருவேளை அமைந்திருக்க வாய்ப்பில்லை.

எங்கள் ஊரில் என்னைப் போலவே ஏராளமான சுடலைமாடன்கள் பயந்தார்கள்.பயம் பொய்யில்லை.பயந்த மறுநாட்களிலேயே போய்ச் சேர்ந்தவர்கள் அநேகம் பேர் .தெற்குக் கடற்கரைச் சாலை விஸ்தரிப்பின் போது காலையில் இருப்பார்கள்.நள்ளிரவில் அகற்றப்பட்டு விடுவார்கள்.போராட்டத்தில் இருப்பவர்களை கையும் காலையும் பிடித்திழுத்து அகற்றுவார்களே அப்படித்தான் இதுவும்.  கூட்டங் கூட்டமாக போய்ச் சேர்ந்தார்கள்.நமது மக்களின் மறதியொரு இனிமை.நேற்று இங்கொருவனும் ,இங்கொருத்தியும் இருந்தார்களே விடிந்தால் காணவில்லையே என்று ஒரு பயலும் கேட்கவில்லை.அது வரையில் காத்து ரட்சித்தவர்கள் அவர்கள் இத்தனைக்கும்.

ஐந்தாறு வருடங்களாக சாலைகளே இல்லாத  நகரமாக விளங்குவது எங்கள் தலைநகரம் நாகர்கோயில் மட்டும்தான்.ஒரு மழை நாள் பேருந்தில் உடன்பயணித்தவர் கெட்ட கெட்ட வார்த்தைகளை  எனது காதில் பக்கத்திலிருந்து துப்பிக் கொண்டிருந்தார்.நமக்காகத் தானே ஏதோ பெரிய ஏற்பாடு செய்கிறார்கள் பெரியவரே ? நாம் கொஞ்சம் சகித்துக் கொள்ளத்தான் வேண்டும் என்று பதில் கேட்டேன்.என்ன ஏற்பாடு செய்யப் போகிறார்கள் ! எல்லோரையும் போட்டு குழி தோண்டி மூடுவதற்கா ? என்று சுட சுட திருப்பியடித்தார் அவர்.அப்போது நான் சகித்துக் கொள்ளச் சொன்னது ரொம்பவும் அதிகம் .நான்கு கிலோமீட்டர் தூரத்தை அந்த பேருந்து மதுரைக்குச் செல்கிற நேரத்தில் கடந்தது.வெளியில் பெய்த மழையைக் காட்டிலும் பெய்த மழை அதிகம் .எல்லோரும் பேயாக நனைந்திருந்தார்கள். எனக்கு அன்றைய தினத்தில் அந்த பயணம் பிடித்திருந்தது அவ்வாறாகச் சொல்லிவிட்டேன்.பெரியவர் சொன்னது உண்மைதான் கூடங்குளம் விஷயங்களை எல்லாம் சேர்த்திணைத்துப் பார்க்கும் போது ; நாகர்கோயில் காரனுக்கு சாலைகளில் ஏன் இவ்வளவு பெரிய பாதாழங்களை ஏற்பாடு செய்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்வதில் இப்போது சிரமம் ஏதும் இருக்கவில்லை.சிறிய இடர்பாடுகள் ஏற்பட்டாலும் கூட அணுவுலையின் முதல் சுற்றளவு வளைவிற்குள் தோராயமாக ஆறுலட்சம் பேர் கூடியிருக்கிறோம்.இதில் நான்கு லட்சம் பேர் நாகர்கோவிலை சேர்ந்தவர்கள் .சுடலைமாடன்களையெல்லாம் தூக்கி விட்டு ஏன் சதா குழி தோண்டிக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு அரசாங்கத்தின் தொலை நோக்குப் பார்வைதான் காரணம்.அவர்கள் திருநெல்வேலியையும் கூட இதுபோல விஸ்தரித்து வைத்துக் கொள்வது நல்லது.பேரிடர் காலங்களில் யாரும் குறை சொல்ல வாய்ப்பு உண்டாகாது.

சாலைகளே இல்லாத நகரத்தில் வாழ்வதை இயல்பாகப் பழகிக் கொண்டோம் .தொடர்ந்து யுத்தம் நடைபெறும் நாடுகளில் யுத்தம் பழகி விடுவது மட்டுமல்ல யுத்த வதந்திகளும் ,சுவாரஸ்யங்களும் இல்லையானால் ஏதோ குறைப்படுகிறது என்று வருந்துகிறார்களே அப்படித்தான் இதுவும்.எனக்கு இப்போது சாலைகள் உள்ள ஊர்களுக்குச் செல்லும் போது அவர்களுடைய வாகனங்களை ஓட்ட நேர்ந்தால் ஒரு சுவாரஸ்யமும் இல்லை.என்னடா இது அல்வா போல ரோடு போட்டு வைத்திருக்கிறார்கள் ; இதில் வண்டியோட்டுவதற்குப் பதிலாக உமியள்ளித்  தின்னலாமே என்றுதான் படுகிறது.அதில் என்ன பெருமை இருக்கிறது ? சாலையில்லாத ஊரில் வண்டியோட்டுவதிலுள்ள சுகம் உங்கள் ஊர் அறியுமா ? எங்களூரில் உள்ள எலும்பு முறிப்பு மருத்துவர்கள்தான் இன்னும் சில காலத்தில் இந்தியாவிலேயே பெரிய செல்வந்தர்கள் ஆகப் போகிறவர்கள் ! இருக்கட்டுமே கைகளையும் கால்களையும் முறித்து கொள்ளுகிற எங்களூர் குழந்தைகளுக்கு எவ்வளவு கிளாமர் இருக்கிறது என்பதைச் சொன்னால் புரிந்து கொள்ளவா போகிறீர்கள்.என்னைக் கேட்டால் உங்கள் குடியிருப்புகளில் உள்ள நல்வாழ்வுச் சங்கங்களை அணுகி இன்பத்தின் ருசி தெரிவித்து கொஞ்சம்
கொஞ்சமாகவேனும் சாலைகளில் பழுதுண்டாக்கிக் பாருங்கள்.

மகனுக்கான ஓ.பி.சி .சான்றிதழ் அலைச்சல் எனக்கு இரண்டு விதமான ஆச்சரியங்களை ஏற்படுத்தியது.கிராம நிர்வாக அலுவலர் ,வருவாய் ஆய்வாளர் உட்பட தாசில்தார் ஒருவருமே ஒரு நயா பைசா வாங்கவில்லை. இப்படி எல்லோரும் ஒரு நாளில்  சொல்லாமல் கொள்ளாமல் திருந்திவிட்டால் தாங்க ஒண்ணாத குற்றவுணர்ச்சி எனக்கு ஏற்படுகிறது என்று நான் மகனிடம் சொன்னேன் .இந்த அலுவலகங்களில் எனக்கு இந்த அனுபவம் காண்பது இதுதான் முதல் தடவை.ஒருவேளை என்னை கிண்டல் செய்வதற்காக இப்படி செய்கிறார்களோ என்று கூட தோன்றியது.சான்றிதழும் ஒரேநாளில் பெற்று விட்டேன்.ஒருவேளை ஒரேநாளில் இத்தனையலுவலகங்களுக்கும் வந்து நூற்றைம்பது கிலோ மீட்டர் வண்டியோட்டி சாதிக்க நம்ம மாவட்டத்திலேயே நீ முயற்சிக்கிறாயா ? உனக்கு இன்று சங்கு தாண்டி ! என்று அவர்கள் உள்ளுக்குள் சிரித்திருக்கலாம்.அவர்களுக்குக் வழக்கமாக கொடுத்திருக்க வேண்டியதைக் காட்டிலும் பத்து மடங்கு செலவு .விலா எலும்புகளில் அலுமினிய பானைகள் நொறுங்குவது போன்ற சப்தமும் உடலுக்குள் தீக்குச்சி கொளுத்திப் போடுவது போன்ற வலியும்.முதல் இரண்டு நாட்களில் வைகுண்ட ராஜன் கலக்கி மணல் அள்ளும் கடற்கரைகள் ரத்தாகி சிவப்பில் இரண்டரை கிலோ மீட்டர் வரையில் கலங்கியிருக்குமே அந்த வண்ணத்தில் மூக்கிலிருந்தும் வாயிலிருந்தும் நீர் ஒழுக்கிக் கொண்டிருந்தது.விழுங்கினால்  அதில் என் தாய்மண்ணின் சுவை இருப்பதும் தெரிந்தது.மா,பலா ,வாழை ஆகியவற்றின் சுவைதான் கொஞ்சம் புளிப்பு மட்டும் அதிகம் .பச்சைத் தண்ணீர் குடித்தாலும்  தொண்டையில் ஊசி குத்தல்.

வழக்கமாக நான் செல்கிற உள்ளூர்  வைத்தியரிடம் செல்லவில்லை.ஆறேழு வருடங்கள் ஆயிற்று இன்னும் உன் உடம்புக்குப் பழகலையா என்று சொல்லி திட்டுவார்  .அவர் எனது உடலின் பொறியாளர்.

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"