கொடைக்கானலில் கவிஞர் விக்ரமாதித்யனோடு உரையாடல்

கொடைக்கானலில் கவிஞர் விக்ரமாதித்யனோடு உரையாடல்

உரையாடலுக்கு வசதியாக சில கவிதைகளை கலந்து கொள்பவர்கள் படித்து விட்டு வருவது உதவியாக இருக்குமென்று சில கவிதைகளை அண்ணாச்சி விக்ரமாதித்யன் அனுப்பியுள்ளார்.இசை ,சு.வெங்குட்டுவன் ,நரன்,ஸ்ரீநேசன் ,லக்ஷ்மி மணிவண்ணன் ,கண்டராதித்தன் .பிரான்சிஸ் கிருபா , யவனிகா ஸ்ரீராம்,ஷங்கர் ராமசுப்பிரமணியன் ஆகியோரின் கவிதைகள் இவை.உரையாடலுக்கு வசதியாக இவற்றை அண்ணாச்சி தேர்வு செய்திருக்கிறார்.

சமகாலக் கவிதைகள் பற்றிய உரையாடல்###

கவிஞர்கள் தங்களின் கவிதை பற்றிய கண்ணோட்டங்களை உருவாக்கிக் கொள்ளும் முகமாக நவீன கவிதை பற்றி விக்ரமாதித்யனுடன் ஒரு உரையாடல் நிகழ்வை நடத்த இருக்கிறோம்.கொடைக்கானலில் வைத்து இந்த நிகழ்வு
பிப்ரவரி 11 ,12 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
கொடைக்கானல் சாவித்திரி ஜெமினி பங்களாவில் வைத்து இந்த நிகழ்வு.லேக் அருகில்
இரு அமர்வுகளாக இந்நிகழ்வு நடைபெறும்

11 மதியம் ஒரு அமர்வு.12 காலையில் இரண்டாவது அமர்வு

புதிய கவிஞர்களுக்கான சந்திப்பு நிகழ்வு இது.பங்கேற்க விரும்பும் கவிஞர்கள் முன் கூட்டி தகவல் தெரியப்படுத்த வேண்டும்.ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளுங்கள்

மொத்தம் இருபதுக்கும்  உட்பட்ட கவிஞர்களின் கூடுகை இது .

கண்டராதித்தனும் ,நானும்,சு.வெங்குட்டுவனும் அமர்வுகளை ஒருங்கிணைகிறோம்.யவனிகா ஸ்ரீராம்,பாலை நிலவன் ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள்.

விரும்புகிறவர்கள் 8220386795 என்கிற எனது எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்
கொடைக்கானலுக்கு முன்கூட்டியே செல்பவர்கள் நிகழ்வு ஒருங்கிணைப்பாளர் திரு செந்தில் அவர்களை 9597410134  என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்.அவர் உங்களுக்கான தங்குமிடத்தை ஏற்பாடு செய்து தருவார்.

இசையின் கவிதைகள் ###

குட்டி ஒடிசா

கோயம்புத்தூர் மாநகராட்சியின்
93  வது வார்டில்
புதிதாக உருவாகியிருக்கிற மைதானத்தில்
மட்டையாட்டம் நிகழ்கிறது
அங்கு ஒரிய மொழி ஒளி வீசுகிறது
ஆட்டத்தின் முசுக்கரத்தில் கிளம்பும் புழுதியில்
ஒரு "குட்டி ஒடிசா " எழுந்து வருகிறது
ஒரு புளியமரம் பல தலைமுறைகள் காண்பது
இன்று
அம்மரத்தடியில் அமர்ந்திருந்த ரசிகர் கூட்டம்
"மாரோ ... மாரோ .."என்று கத்துகிறது .
அந்த இடது கை ஆட்டக் காரன்
இறங்கி
ஒரு இழு இழுக்கிறான்
மகிழ்ச்சியின் கூச்சலினுடே  பறந்து செல்லும் அப்பந்து
மைதானத்தைத் தாண்டி
ஒரு மூமுதுகிழவனின் தோளில் விழுகிறது
அவன் அப்பந்தைத் தூக்கி 
அதே மகிழ்ச்சியின் கூச்சலினுடே
திரும்ப எறிகிறான்
அவனை "கணியன் பூங்குன்றன் " என்றறிக !

2

18ஆம் பெருக்கு : பாடிவீடு

வாராது காண்  மழை வெள்ளம்
வடிந்த மணல் பரப்பில் உயிர்க்கும் மெல்ல
ஒற்றிய பெண்களின் சிந்திய
திலகம்
பழங்கால ஆயுத வடிவ
கற்கள் மீது
உறைந்து குருதிக்கறையாகும்
நிலை குத்திய கண்களோடு
விரிசடை கீழ்
சந்ததிக்கு உரைக்கும் அருஞ்சொற்கள்
அருளி
சூடம் சப்பி மலையேறுவாள்
துண்டித்த ஆடுகளின் குரலில் ஏதேதோ பாவனையில்
அகழும் பள்ளங்களில் ஊறும்
ஊற்று ரத்தம்
தோய போவதில்லை - இனி
அவள் மோவாய்க்குழியில்
அருகருகே கூப்பிய கரங்களில்
தெய்வமாகின்றனர் வீட்டுப்பெண்கள்
ஆண்கள் தேவாங்கைப் போல நொய்ந்து கிடக்க
சந்திரகாளி புடவைக்காரி
மெல்ல சாந்தத்தைக் கொண்டையிடுகிறாள்
ஆக்ரோசமடைந்து துவைத்த துணிபோல
துவண்டு கிடைக்கும்
ஒருவர் கோலிசோடாவை உடைத்துத் தருகின்றார்
நுரைத்து சுழிந்து வழிகிறது
ஆறு புரட்டாத கற்களில் .

( மிடற்றுதல் - குளறுதல் )


3

கொடும்பாவி

நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன்
தள்ளு முள்ளு வரிசையில் கடவுளிடம்
வாங்கி வந்த வரத்தை
தரிசு நிலத்தில் வைத்து அழகு பார்த்துக் கொண்டு
ஒரு கண்ணாடி செய்யக் கூடிய காரியமல்லவா அது
பளபளக்கும் கற்களில் ஆரோகணித்திருக்கும்
கசங்கிய பிம்பம்
அர்த்தமற்ற சிரிப்பில்
புனிதப் பயணவழி நிழல் மரங்கள்
ஒரு மன சாட்சியாய்த் தோன்றுகிறது
வீடுகள் தனி தேச சிறைச்சாலைகளை
போன்று கலையிழந்து கிடக்க
நிலமெங்கும் வெயில் முளைத்துள்ளது
வெயிலை அறுவடை செய்து "கொடும்பாவி " கட்டி
மாரடித்து இழுத்துச் செல்கின்றனர்
சிறைவாசிகள்
உய்ய விழையும் மனதோடு
சாலைகளை வெறித்துக் கிடக்கிறேன்
வெயில் காய்ந்து கொண்டு

4

அப்பாவானவர்

தென்னை மரங்கள்
ஒவ்வொன்றாய்
காய்ந்து உதிருகின்றன
தன் தலையை உதிர்த்துவிட்டு
ஒரு முண்டத்தைப் போல
நின்று கொண்டிருக்கிறது
இதன் காய்கள் நன்குபெருக்க 
சிலிக்கன் ஜெல் ஊசி வேறு
எப்போதும் நிலத்தைப் பார்ப்பது
மோசமான அரசு மருத்துவமனையின்
கட்டில்களை ஞாபகப்படுத்துகிறது
காய்ந்த மரத்தின்
கடைசிப்  பயனாக
அதன் ருசி மிக்கக் குருத்துச் சோறு
வாய்கரிசியைச் சமைப்பது போல
வேட்டையில்  சிக்கிய 
முள்ளம்பன்றி இறைச்சி இருக்கும்
இந்த மாலைவரையும் கூட
வெள்ளி நைட்ரேட் வாங்கப்போன
அப்பாவானவர்
நகரத்திலிருந்து திரும்பவில்லை
கடைவீதிகளில்
ஷோகேஸ் பொம்மைகளைக் கண்டு
இனம் தடுமாறி நிற்கக்கூடும் யாரேனும் கண்ணுற்றால்
தயை செய்து
அப்பாவானவரைத் திருப்பி அனுப்புங்கள்

[ பிற கவிதைகளை நாளை பதிவேற்றுகிறேன் ]

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"